Tuesday, August 23, 2016

த்வைபாயனர் சம்மதிக்கிறார்!

இதைக் கேட்ட த்வைபாயனர் அதிர்ச்சி அடைந்தார். மஹாராணி சத்யவதிக்கோ தலை சுற்றியது. ஆசாரிய விபூதி சொன்னதன் உட்பொருளைப் புரிந்து கொள்ளவே சிரமப்பட்டாள் அவள். இன்னமும் அவளால் அவர் என்ன சொன்னார் என்பதைப் புரிந்து கொள்ள முடியவில்லை. தன் நெற்றியில் கையை வைத்துக் கொண்டாள். யோசித்த வண்ணம், “ ஆசாரியரே, நீங்கள் சொன்னதை முதலில் நான் சரியாகப் புரிந்து கொள்ளவேண்டும். புரிந்து கொள்ள முயல்கிறேன். த்வைபாயனன் காசி இளவரசிகளுடன் கூடி அவர்களுக்கு நியோக முறையில் குழந்தைகள் பெற உதவ வேண்டும் என்றா சொல்கிறீர்கள்? இதை குரு வம்சத்தின் எந்தப் பிரிவைச் சேர்ந்த தலைவர்களும் மற்றோரும் ஒப்புக் கொள்ள மாட்டார்கள். ஏனெனில் குரு வம்சத்து ரத்தம் அந்தக் குழந்தைகளிடம் இருக்காது. ஆரிய புத்திரர் மஹாராஜா ஷாந்தனுவின் வாரிசாக எவரும் ஏற்க மாட்டார்கள். அப்படி இருக்கையில் அவர்கள் அரியணை ஏறுவது எப்படி முடியும்? அவர்கள் அரியணை ஏறுவதற்கு யார் பொறுப்பேற்பார்கள்?” என்று கேட்டாள்.

உடனே காங்கேயர், “தாயே, நான் அதற்குப் பொறுப்பேற்கிறேன். உங்களுக்கு நான் வாக்குறுதி கொடுக்கிறேன், ஹஸ்தினாபுரத்தின் அரியணையில் காசி தேசத்து இளவரசிகளுக்குப் பிறக்கப் போகும் ஆண் வாரிசோ அது எவருடையதாக இருந்தாலும் அமருவதற்கு நான் என்னாலான உதவிகளைச் செய்வேன். இப்போது போல் பாதுகாத்து வருவேன். த்வைபாயனன் மூலம் பிறக்கும் அந்தப் பிள்ளைகளுக்கு என்னாலான உதவிகளைச் செய்வேன்.” என்றார்.

“அப்போது த்வைபாயனன் இதற்கு ஒப்புக் கொண்டு விட்டானா?” மஹாராணி கேட்டாள். “இல்லை, தாயே, இல்லை, நான் அதற்கு ஒப்புக்கொள்ளவே இல்லை!” என்று அவசரமாகப் பதில் அளித்தார் த்வைபாயனர்.

“அது ஒரு பக்கம் இருக்கட்டும்! இந்த விஷயத்தில் முக்கியமாகத் தன் கருத்தைச் சொல்லவேண்டியவள் ஜாபாலி புத்திரியான வாடிகா தான். அவள் கருத்து என்ன? ஜாபாலியின் மகளே! நீ இதற்கு ஒப்புக் கொள்கிறாயா?” என்று மஹாராணி சத்யவதியே அவளிடம் கேட்டாள். வாடிகாவோ மிகவும் அடக்கத்துடனும், மரியாதையுடனும், “நான் இதற்கு ஒப்புக் கொள்ளும் முன்னர் இதைக் குறித்து நிறையச் சிந்திக்க வேண்டும். சிந்தித்து முடிவு சொல்கிறேன்.” என்றாள்.

“ஆஹா, அதெல்லாம் சரி! குரு வம்சத்தினரின் கருத்து என்ன? த்வைபாயனர் மூலம் பிறக்கப்போகும் குழந்தைகள் குரு வம்சத்தின் பாரம்பரியமான அரியணையில் அமர்ந்து ஆட்சி செலுத்த அவர்கள் ஒப்புக் கொள்கின்றனரா? அவர்களுக்கு இது சம்மதமா?” ராணி மீண்டும் கேட்டாள். அப்போது மஹாபஹூ கூறினார்: “தேவி, நானும் என் தம்பி சுகேதுவும் ஒரு விஷயத்தின் ஒத்துப் போகிறோம். என் மகனோ அல்லது சுகேதுவின் மகனோ இந்த ஹஸ்தினாபுரத்தின் அரியணையில் ஏறி ஆட்சி செய்தால் ஹஸ்தினாபுரத்தில் ஓர் உள்நாட்டுப் போர் ஆரம்பிக்கும். தாயாதிச் சண்டையில் குரு வம்சம் அழியும். நம் குடும்பத்தாரின் கண்களுக்கு நம்முடைய இந்த முடிவு இயற்கைக்கு ஒவ்வாததாகவும், எவராலும் ஏற்க முடியாததாகவும் இருக்கலாம். ஆனால் நாங்கள் சிறுவர்களாக இருந்தபோதிலிருந்தே மாட்சிமை பொருந்திய ஷாந்தனு மஹாராஜாவுடன் சேர்ந்தே வளர்ந்து வந்திருக்கிறோம். குருகுலத்தில் படித்திருக்கிறோம். அந்தக் கால கட்டத்தில் நாங்கள் அனைவரும் ஓர் புனிதமான ஒப்பந்தம் செய்து கொண்டோம். உறுதி எடுத்துக் கொண்டோம். மஹாராஜா ஷாந்தனுவிற்கு ஹஸ்தினாபுரத்தை ஆட்சி செய்வதிலும், வல்லமை மிக்கதொரு சாம்ராஜ்யமாக உருவெடுக்கவும் எங்களால் இயன்ற உதவிகளைச் செய்வதாக ஒப்புக் கொண்டு வாக்குக் கொடுத்தோம். உலகிலேயே வல்லமை பொருந்திய நாடாகத் திகழ வேண்டும் என்று விரும்பினோம். அதற்காகப் பிரச்னைகள் வந்தபோதெல்லாம் மஹாராஜா ஷாந்தனுவுடன் தோளோடு தோள் கோர்த்துக் கொண்டு உதவிகள் செய்து வந்திருக்கிறோம். எங்கள் அத்தகைய விசுவாசத்திலிருந்து நாங்கள் அன்றும் இன்றும் என்றும் பின்வாங்க மாட்டோம். மஹாராஜா பித்ருலோகத்தை அடைந்து விட்டார் என்பதற்காகக் குரு வம்சத்திற்கோ, இந்த ஹஸ்தினாபுரத்தின் பாரம்பரியமான அரியணைக்கோ தீங்கு விளைவிக்க மாட்டோம்!”

அப்போது ஆசாரிய விபூதி, “மஹாபஹூ அவர்களே! மற்றக் குரு வம்சத் தலைவர்கள் அனைவரும் இதற்கு ஒத்துக் கொள்வார்களா?” என்று வினவினார். “ஆம், ஐயா! நாங்கள் இருவரும் ஒப்புக் கொண்டால் எங்கள் மக்களும் ஒப்புக் கொள்வார்கள். அவர்கள் ஒத்துக் கொண்டால் மற்றவரும் உடன்படுவார்கள்!” என்றார். “அவர்கள் எங்களை எதிர்த்தால், நாங்கள் அவர்களை விலக்கி விடுவோம்!” என்றார் சுகேது தீர்மானமாக. இதை எல்லாம் பார்த்துக் கொண்டும் கேட்டுக் கொண்டும் இருந்த காங்கேயருக்கு த்வைபாயனரின் மௌனம் வருத்தத்தை உண்டாக்கியது. ஆகவே வருத்தத்துடன் அவர் த்வைபாயனரை நோக்கி, “பாலமுனி, இனி இது உங்கள் கைகளில் தான் இருக்கிறது!” என்றார். மிகவும் கோபம் அடைந்த த்வைபாயனர் கடுகடுப்புடன், “நான் நாளைக்கு என் முடிவை உங்களுக்குத் தெரியப்படுத்துகிறேன்.” என்றார். பிரமிஷ்டர் அவர் குரலின் தொனியைக் கவனித்துவிட்டுத் தன் கண்களின் மேல் கைகளை வைத்த வண்ணம் த்வைபாயனரையே கூர்ந்து கவனித்தார். பின்னர் அனைவரையும் பார்த்துத் தான் பேச விரும்புவதாகத் தெரிவித்தார்.

உடனே அங்கே ஓர் அமைதி நிலவியது. இந்த வயதான ஸ்ரோத்திரியர் இன்னும் எதைச் சொல்லி அனைவரையும் திகைப்பிலும் ஆச்சரியத்திலும் ஆழ்த்தப் போகிறாரோ என்னும் எதிர்பார்ப்பில் அனைவரும் இருந்தனர். அவர் த்வைபாயனரைப் பார்த்து, “இதோ பார், பராசர புத்திரனே! பால முனி! நாளை என்பதெல்லாம் இல்லை! இந்த விஷயத்திற்கு இப்போதே இங்கேயே ஓர் முடிவு கட்டியாக வேண்டும். உடனே!” என்று தீர்மானமாகத் தெரிவித்தார். சற்று நேரம் நிறுத்தியவர் பின்னர் தொடர்ந்து, “இதோ பார், பாலமுனி, கடவுள் அதிசயத்துக்கு மேல் அதிசயமாக நிகழ்த்தி இருக்கிறார். அவர் பராசர முனிவருக்கு ஓர் ஆசீர்வதிக்கப்பட்ட சிறந்த மகனை அளித்திருக்கிறார். ஆரியவர்த்தத்திலேயே சிறந்த மிகச் சிறந்த ஸ்ரோத்திரியனாக நான்கு வேதமும் முழுமையும் கற்றவனாக அவன் திகழ்கிறான். தர்மக்ஷேத்திரத்தைப் புனர் நிர்மாணம் செய்ததில் அவன் பங்கு மிகப் பெரியது. இறைவனின் ஆசீர்வாதங்களாலே இவை நடந்தது. அது மட்டுமா? இறைவனின் ஆசீர்வாதங்களால் தான் மீனவப் பெண்ணான த்வைபாயனைன் தாய் மச்சகந்தி ஹஸ்தினாபுரத்தின் சக்கரவர்த்தியை மணந்து கொண்டு மஹாராணியாக ஆக முடிந்தது. ராணி சத்யவதியாக ஆக முடிந்தது.”

“இந்த அதிசயங்கள் அதோடு முடிந்து விடவில்லையே! இனி என்றுமே ஒருவருக்கொருவர் பார்க்கவோ, பேசவோ முடியாது என்று நினைத்துக் கொண்டிருந்த இந்தத் தாயும் அவள் மூத்தமகனான பாலமுனியும் கடவுள் அருளாலேயே மீண்டும் ஒன்று சேர்ந்திருக்கின்றனர். சக்கரவர்த்தி ஷாந்தனுவைப் போன்றதொரு புரவலன் த்வைபாயனனுக்குக் கிடைத்ததும் கடவுள் அருளாலேயே! அவ்வளவு ஏன்? அவன் வெறும் புரவலன் மட்டுமில்லை! அவனும் த்வைபாயனனுக்கு ஓர் தந்தையே!” என்று முடித்தார் பிரமிஷ்டர்.

பின்னர் சற்று மௌனமாக இருந்தவர் மீண்டும் தன் கரகரத்த தொண்டையைச் சரி செய்து கொண்டு பேச ஆரம்பித்தார். “நாங்கள் ஸ்ரோத்திரியர்கள் அனைவரும், குரு வம்சத்தலைவர்கள், ஆரிய வர்த்தம் மற்றும் தர்மம் அனைத்துமே இப்போது ஓர் இனம் காண முடியாத கலக்கத்திலும் பிரச்னைகளிலும் ஆழ்ந்துள்ளது. குரு வம்சத்தினர் பிரிந்து விட்டாரெனில் பேரழிவு ஏற்படும். எப்படியான பேச்சுக்களாலும், வாத விவாதங்களாலும் அதைச் சரி செய்ய முடியாது. நீ ஒருவன் தான் அவர்களைக் காப்பாற்ற முடியும்!” என்றார்.

“நாம் அனைத்தையும் இப்போது புரிந்து கொள்ளவேண்டும். கடைசியாகப் புரிந்து கொள்ளவேண்டும். நீ நியோக முறையில் விந்து தானம் செய்ய ஒப்புக் கொள்கிறாயா இல்லையா? இப்போது மீண்டும் யோசித்துக் கொண்டோ, பேசிக் கொண்டோ விவாதங்களில் ஈடுபட்டோ செலவு செய்ய நேரம் அதிகம் இல்லை; நாம் ஏற்கெனவே நிறையப் பேசி முடித்தாகி விட்டது. மேலும் வெட்டிப்பேச்சுக்கள் பேசிக் கொண்டு இருப்பதினால் எந்த வேலையும் நடக்கப் போவதில்லை!”

“நாம் இப்போதே முடிவு எடுத்தாக வேண்டும். இங்கேயே! இப்போதே!” என்று திட்டவட்டமாகக் கூறினார் பிரமிஷ்டர். பின்னர் தன் குரலை உயர்த்தி, “நீ நியோக முறையில் காசி இளவரசிகளுக்குக் குழந்தை பெற்றுக்கொள்ள உதவுவாயா? மாட்டாயா? இதன் மூலம் நீ குரு வம்சத்தினரை மட்டுமல்ல, இந்த நாட்டையும் அதன் மூலம் இந்த சாம்ராஜ்யம் புத்துயிர் பெறவும் உதவ முடியும். இல்லை எனில் உன்னுடைய இந்த அகந்தையினாலும் இறுமாப்பினாலும் குரு வம்சத்தினரை ஒருவருக்கொருவர் தாயதிச் சண்டையினால் அழிந்து போகச் செய்யப் போகிறாயா? அதோடு தர்மம் தழைக்க வேண்டும். நீ இந்தக் காரியத்தைச் செய்தால் தான் தர்மம் தழைக்கும். அதன் பின்னர் பிரம்மதேஜஸாவது! க்ஷத்திரிய தேஜஸாவது! இரண்டும் ஒன்றாக ஆவதாவது! எதுவும் நடவாது!”

சற்றே நிமிர்ந்து உட்கார்ந்த அந்த முதியவர் மீண்டும் ஓர் தீர்மானமான குரலில் பேசினார். “ இந்த விருப்பம் உன் தாயாலோ இளவர்சன் காங்கேயனாலோ அல்லது வாடிகாவினாலோ ஏற்படவில்லை! ஏற்படவும் முடியாது. ஏன் உன்னால் கூட இதை முடிவு செய்ய முடியாது! இது கடவுளரால் ஏற்படுத்தப்பட்ட முடிவு! அவர்கள் தான் இந்த நியோக முறையில் குழந்தைகள் பெறவேண்டும் என்று விரும்புகின்றனர். இது உனக்குப் பிடிக்கிறதோ இல்லையோ! இது இப்படித் தான் நடக்கவேண்டும் என்பது ஏற்கெனவே கடவுளரால் தீர்மானிக்கப்பட்டு விட்டது!” என்றார். மீண்டும் தன் நீண்ட பேச்சினால் களைத்த பிரமிஷ்டர் சற்று நிதானித்துக் கொண்டு தன்னை ஆசுவாசம் செய்து கொண்டு மீண்டும் தொடர்ந்தார். “த்வைபாயனா! எனக்கு நேரிடையாகப் பதிலைக் கொடு! நீ இந்தச் சடங்கை ஏற்றுக் கொண்டு செய்யப் போகிறாயா? அல்லது மறுக்கப் போகிறாயா?” அவர் குரல் இப்போது த்வைபாயனரை மிரட்டுவது போல் இருந்தது. அவர் ராஜகுருவாக இருந்தபோது அனைவரையும் ஆட்டி வைத்த அந்த அதிகாரக் குரல் அவரிடம் இப்போது திரும்பி விட்டது.

த்வைபாயனர் தன் தலையைக் குனிந்து கொண்டார். பின்னர் பணிவுடன், “மரியாதைக்குரிய ஆசாரியரே, உங்கள் கட்டளைக்கு நான் கீழ்ப்படிகிறேன்.” என்றார்.

1 comment:

ஸ்ரீராம். said...

மஹாபஹூவின் மனப்பாங்கு அசாத்தியமானது, நேர்மையானது.

ப்ரமிஷ்டரின் வயது மூத்த அனுபவ வரிகள் உடனடித் தீர்வுக்கு வழி ஏற்படுத்துகின்றன. என்ன ஒரு தீர்க்கமான அலசல். முன்ஷிஜி அருமையாக வடிவமைத்திருக்கிறார்.