Sunday, August 28, 2016

சுகரைக் காணவில்லை!

ஒரு வழியாக ஷ்ரௌத்த சத்ரா முடிவடைந்தது. த்வைபாயனர் என்னும் வேத வியாசர் அடுத்த பனிரண்டு வருடங்களுக்காக ஓர் திட்டத்தைத் தயாரித்து விட்டார். ஆரியவர்த்தத்தில் உள்ள அனைத்து ஆசிரமங்களுக்கும் செல்வது என்றும் எங்கெல்லாம் வேதங்களில் சந்தேகங்கள் இருக்கிறதோ அங்கெல்லாம் அவற்றிற்குத் தெளிவைக் கொடுப்பதும், அங்குள்ள மாணாக்கர்களை வேதங்களில் நிபுணர்களாக ஆக்குவதும், நேர்மையான சாத்விகமான வாழ்க்கையை வாழப் பழக்குவதும், இந்த ஆசிரமங்கள் அவை உள்ள நாடுகளில் பிரக்கியாதி பெற்றுத் திகழ உதவுவதுமாக அவர் திட்டங்கள் பரந்து பட்டு விரிந்திருந்தது. மழை நாட்களில் மட்டும் அதிகம் அலைய முடியாது என்பதால் அப்போது தர்மக்ஷேத்திரம் திரும்பி அங்கே தங்கிக் கொள்ளலாம் என்றும் முடிவு செய்தார். (இது தான் இப்போதும் சாதுர்மாஸ்ய விரதம் என்னும் பெயரில் மழைக்காலங்களில் ரிஷி, முனிவர்கள் எங்கும் சுற்றாமல் ஓரிடத்தில் தங்கி விரதங்கள் அனுஷ்டிப்பதாக மாறி இருக்க வேண்டும்.) தன்னுடன் பத்து சீடர்களை அழைத்துக் கொண்ட த்வைபாயனர் மற்ற வேலைகளுக்காகவும் சிலரைத் தம்முடன் சேர்த்துக் கொண்டார். வழியிலும் சிலர் சேர்ந்தார்கள். அவர் பிரயாணம் தொடங்கி ஒவ்வொரு ஆசிரமமாகச் செல்ல ஆரம்பித்தது.

கங்கை, சரஸ்வதி, யமுனைக்கரைகளின் இரு பக்கமும் அவற்றின் உற்பத்தி ஸ்தானத்திலிருந்து கடலில் கலக்கும் இடம் வரையிலும் வியாசர் தம் பயணத்தைச் செய்தார். ஆசிரமங்கள் பலவற்றுக்கும் சென்றனர். ஹரித்வார் என்றழைக்கப்பட்ட இடத்திலிருந்து காசி தேசம் வரையிலும் பயணம் செய்தனர். ஆங்காங்கே இருந்த குடியிருப்புகளுக்கும் சென்று அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்தனர். உள்நாட்டுத் தலைவர்களும் அவர்களை வரவேற்றுத் தக்க மரியாதை செய்தனர். எங்கெல்லாம் வியாசர் சென்றாரோ அங்கெல்லாம் அவர் அனைத்டு ஸ்ரோத்திரியர்களாலும் ஆசாரியருக்கு உரிய மரியாதைகளுடன் வரவேற்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார். அவருடைய ஆசிகளால் தங்கள் தற்கால வாழ்க்கையில் மகிழ்ச்சி நிலவும் என்பதோடு அடுத்த ஜன்மங்களுக்கும் அந்த ஆசிகள் தொடர்ந்து வரும் என்று எண்ணினார்கள் அனைவரும்.

ஆசிரமங்களில் தங்கி இருக்கையில் திரும்பத் திரும்ப வேதங்களை ஓதிக் கண்டறிந்து அவற்றில் விடுபட்டவைகளையும் தவறுகளையும் சரி செய்தார்கள். எது முன்னால் வரும், எது பின்னால் வரவேண்டும் என்பதையும் கண்டறிந்து வரிசைப்படுத்தி உச்சரிப்புகளை ஒழுங்கு படுத்திச் சின்ன ஏற்ற இறக்கங்களைக் கூடச் சரியாகச் சொல்லும்படி கற்பித்தார்கள். அதைத் தவிரவும் அனைவருக்கும் ஓர் முன்னுதாரணமாகத் தவ வாழ்க்கையை முழு மனதுடன் ஏற்று வாழ்ந்தார்கள். தங்களுக்குள்ளாகத் தாமே நியமித்துக் கொண்ட எளிமையான வாழ்க்கை முறையுடன் வாழத் தொடங்கினார்கள். ஒவ்வொரு ஆசிரமத்திலும் பயிற்சிகளைப் பெற வரும் பிரமசாரிகள் தங்கள் உபநயனம் என்னும் மறுபிறப்பின் போது எத்தகைய சபதங்களையும் உறுதிமொழிகளையும் எடுத்துக் கொள்கின்றனரோ அவற்றை முழுமையாகக் கடைப்பிடிக்க உதவிகளைச் செய்தார்கள். காயத்திரி மந்திரத்தை முழு மனதுடன் ஓதி சூரிய பகவானைத் தங்கள் நல்வாழ்வுக்கும் உலக க்ஷேமத்துக்குமாகப் பிரார்த்தித்துக் கொண்டார்கள். “மூவுலகையும் படைக்கக் காரணமாக இருந்த அந்த ஒளிக்கடவுளை நாங்கள் தியானிக்கிறோம். மேலான உள்ளுறை உண்மையை உணர்ந்து எங்கள் ஞானம் மேம்பட அந்த ஒளிக்கடவுள் உதவட்டும்!” என்ற பொதுவான பொருளில் தியானிக்கப்படும் அந்த மந்திரங்கள் அங்கே முழு புரிதலோடு அனைவராலும் ஒருங்கே உச்சரிக்கப்பட்டன. அவற்றின் ஒலி அளவைக் கொண்டே இந்த மந்திரம் இயற்றப்பட்டதாகவும் அதனால் காயத்ரி மந்திரம் என்னும் பெயர் பெற்றதாகவும் இதை விஸ்வாமித்திரரே கண்டறிந்தார் என்றும் சொல்லப்படுகிறது.

அக்கம்பக்கம் உள்ள கிராமவாசிகள் பலருக்கும் புனித அக்னியை வளர்ப்பது குறித்தும் அதை அணையாமல் பாதுகாப்பது குறித்தும் கற்பித்தனர். மந்திர வித்தைகள் மூலம் கிராமவாசிகளுக்கு வந்த பல்வேறு நோய்களைக் கண்டறிந்து மூலிகைப் பால் கொடுத்து குணப்படுத்தினார்கள். பெண்களிடம் குடும்பத்தைச் சரிவரப் பராமரிக்கவில்லை எனில் உலகில் துன்பங்கள் மிகுந்து விடும் என்பதை எடுத்துச் சொல்லி அவரவர் குடும்பத்தை அவரவர் சரிவரப் பேணிப் பாதுகாக்கவும் குழந்தைகளை நல்லொழுக்கத்தோடு வளர்க்கவும் எடுத்துச் சொன்னார்கள். உலக க்ஷேமமே குடும்பங்களின் க்ஷேமங்களில் அடங்கி இருப்பதால் ஒவ்வொரு குடும்பமும் சந்தோஷமாக இருந்தாலே சமூகம், நகரம், நாடு, உலகம் என்று ஆனந்த அலை பரவும் என்பதை எடுத்துச் சொன்னார்கள். வேத வியாசர் செல்லும் ஆசிரமங்கள் அனைத்துமே அதன் பின்னர் முக்கியத்துவம் பெறத் தொடங்கிற்று.

காலம் ஓடியது. வியாசருக்கும் வாடிகாவுக்கும் பிறந்த ஒரே பிள்ளையான சுகர் என்னும் பிள்ளைக்கு எட்டு வயது ஆகி விட்டது. ஆகவே வேத வியாசர் தன் அருமைப்பிள்ளைக்கு உபநயனம் செய்வித்தார். அவனுக்குப் பனிரண்டு வயது ஆனதும் கோதுலி ஆசிரமத்துக்குக் கல்வி கற்க அனுப்பி வைக்கப்பட்டான். த்வைபாயனர் என்னும் வியாசருக்கே குருவாக இருந்த ஆசாரிய கௌதமர் அங்கே இன்னும் இருந்து வந்ததால் அவரிடம் கல்வி கற்க சுகர் அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் வாடிகாவுக்கோ தன் அருமை மகனைப் பிரிய மனமே இல்லை. முழு மனதோடு அவன் கோதுலி செல்வதை வெறுத்தாள். ஆனால் த்வைபாயனருக்கோ தங்களை விட்டுத் தொலை தூரம் செல்வதால் மகனுக்கு தன்னம்பிக்கையும் வாழ்க்கையை எதிர்கொள்ள வேண்டிய தைரியமும் ஏற்படும் என்றும் வாழ்க்கைப் பிரச்னைகளை நேருக்கு நேர் சந்திக்கும் மன உறுதியும் ஏற்படும் என்று நம்பினார்.

ஆனால் வாடிகாவுக்கோ சிறிதும் விருப்பமில்லை. தன் மகனைக் குறித்து அவளுக்கு உள்ளூர கர்வம் இருந்து வந்தது. அவன் அவளைப் போல் வெண்மை நிறத்துடன் இருந்தான். ஆனால் அவன் முகம் என்னமோ த்வைபாயனரின் முகம் போலத் தான் இருந்தது. அவனுடைய ஞாபக சக்தியோ அபாரமானதாய்த் தனிச் சிறப்புடன் இருந்தது. எவராலும் பின்பற்ற முடியாததொரு அபூர்வமான பாங்குடன் வேதங்களை உச்சரித்துப் பழகி இருந்தான். ஆகவே அவன் கோதுலிக்குச் சென்று அங்கேயும் சிறப்பாகக் கற்றதில் எந்தவிதமான பிரச்னைகளும் இருக்கவில்லை. ஆனால் இங்கே தனிமையில் வாடிய வாடிகாவோ மகன் திரும்பி வரும் நாளை எதிர்பார்த்துக் காத்திருந்தாள். எப்போது பனிரண்டு வருடங்கள் முடியும்! மகனின் பிரமசரியம் எப்போது பூர்த்தியாகும்! என்று காத்திருந்தாள். மகன் வந்ததும் அவள் ஏற்கெனவே தேர்ந்தெடுத்திருந்த மணமகளோடு மகனுக்குத் திருமணம் செய்விக்கவும் விரும்பினாள். ஆனால் அவள் மகன் வரும் வழியாகக் காணவில்லை. வரவே இல்லை. ஒரு வருடம் மேலும் ஆயிற்று. வாடிகாவுக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. அப்போது தான் ஓர் அதிர்ச்சியான தகவல் அவளை வந்தடைந்தது. கோதுலியிலிருந்து வந்த ஒரு சில ஸ்ரோத்திரியர்கள் இதைக் குறித்துக் கூறினார்கள். சுகர் தன்னை எவராலும் கண்டுபிடிக்க முடியாததொரு இடத்துக்குச் சென்று விட்டார் என்றும் தன்னை எவரும் கண்டறிய முயலவேண்டாம் என்றும் சொல்லிவிட்டதாகவும் இந்த உலக வாழ்க்கையைத் துறந்து சந்நியாசியாக ஆகிவிட்டதாகவும் கோதுலியிலிருந்து வந்த பலரும் கூறக் கேட்டாள் வாடிகா. வாடிகாவின் மன அமைதி பூரணமாகச் சென்றுவிட்டது. அமைதியற்ற மனோநிலையில் இருந்த அவள் ஹஸ்தினாபுரம் சென்று ராஜமாதாவிடம் இதைக் குறித்துக் கலந்து ஆலோசிக்க விரும்பினாள். இதைத் தெரிந்து கொண்ட ராஜமாதாவும் உடனடியாக அரண்மனைப் பல்லக்கை வாடிகாவுக்காக அனுப்பி வைக்க ஹஸ்தினாபுரம் சென்ற வாடிகா மனக் குழப்பத்திலும் வருத்தத்திலும் ஆழ்ந்து இருந்தாள்.

2 comments:

ஸ்ரீராம். said...

தொடர்கிறேன்.

வல்லிசிம்ஹன் said...

சுகர் பிறந்து வளர்ந்து சன்னியாசமும் வாங்கிக் கொண்டாச்சு. காலம் சீக்கிரம் ஓடிவிட்டது.