Monday, August 29, 2016

குனிகர் கிளம்பி விட்டார்!

வாடிகாவைத் தன் மாளிகை வாசலுக்கே சென்று வரவேற்றாள் ராஜமாதா. வாடிகாவும் தன் மாமியாரின் கால்களில் விழுந்து வணங்கினாள். ராணிமாதா அவளைத் தூக்கி அணைத்து உச்சி முகர்ந்து ஆசிகள் கூறினாள். அவள் தொட்டவிதமே வாடிகாவின் மனதுக்கு ஆறுதலாக இருந்தது. வயது ஆகி விட்டிருந்தாலும், அடுத்தடுத்துப் பல்வேறு பிரச்னைகளைச் சந்தித்து வந்திருந்த போதும், ராஜமாதாவின் அழகு குறையவே இல்லை. வயதும், இயல்பான கம்பீரமும் மேலும் அவளுக்கு அழகையே கொடுத்தது. அனைவரையும் அன்புடனும், கருணையுடனும் அவள் நடத்தி வந்த காரணத்தால் அனைவருமே அவள் இதயத்தில் தாங்கள் பங்கு கொண்டிருப்பதாக உணர்ந்தார்கள். இப்போது வாடிகாவைக் கட்டி அணைத்துக் கொண்ட ராஜமாதா அவளைப் பாதுகாப்பவள் போல் அவள் தோள்களைச் சுற்றித் தன் கரத்தைப் போட்டுக் கொண்டாள். அவள் தினமும் மதியப் பொழுதைக் கழிக்கும் அறைக்கு அவளை அழைத்துச் சென்றாள். செல்லும்போதே, “வாடிகா, என்ன விஷயம்?” என்றும் கேட்டாள்.
“சுகன் திரும்பி வரவே இல்லை, அம்மா! அவனுடைய குருகுல வாசம் போன வருடமே முடிந்து விட்டது. போன வருடம் முழுவதும் அவனுக்காக நான் காத்திருந்தேன். திரும்பி வந்து தனக்கென ஓர் இல்லறத்தை ஏற்படுத்திக் கொள்வான் என்றும் நினைத்திருந்தேன். ஆனால் ஒவ்வொரு காரணங்களையும் ஒவ்வொரு முறையும் சொல்லிக் கொண்டு அவன் திரும்பவே இல்லை! இப்போது கோதுலியிலிருந்து வந்திருப்பவர்கள் தெரிவிக்கும் செய்தி என்னவெனில் சுகனுக்கு இல்லறம் ஏற்பதில் விருப்பம் இல்லை; அவன் இவ்வுலக வாழ்க்கையைத் துறந்து சந்நியாசியாகப் போகப் போகிறானாம்!” என்று துக்கம் தொண்டையை அடைக்கக் கூறினாள் வாடிகா. “இதை எல்லாம் உனக்கு யார் சொன்னது?” என்று ராஜமாதா கேட்டாள். “அங்கிருந்து வந்த சில ஸ்ரோத்திரியர்கள் தான் கூறினர். அவர்கள் கோதுலியில் படிப்பை முடித்துக் கொண்டு தர்மக்ஷேத்திரம் வந்திருக்கின்றனர்.” என்றாள் வாடிகா.

“அப்படியா? ஆனால் அவன் உனக்குச் சொல்லி அனுப்பி இருக்கிறானா? தர்மக்ஷேத்திரத்துக்குத் தன்னால் வர முடியவில்லை என்பதை அவன் உன்னிடம் தெரிவிக்கும்படி சொல்லி அனுப்பி இருக்கிறானா?”

“இல்லை, அம்மா! நான் தான் அவனுக்குப் பல செய்திகளை அடுத்தடுத்து அனுப்பினேன். அவற்றில் எதற்கும் பதிலே இல்லை! அவன் வரவும் இல்லை! அவனுடைய பதில் இதுவாகத் தான் இருந்திருக்கவேண்டும்: “அம்மா, நீ கவலைப்படாதே! மனம் வெறுத்துப் போகாதே! சரியான நேரத்தில் நான் வந்து சேருவேன்!” இப்படித் தான் அவன் பதில் கொடுத்திருக்க வேண்டும். அம்மா, நான் என்ன செய்வேன்? சுகன் திரும்பி வரவில்லை என்றாலோ அவன் இவ்வுலகைத் துறந்து சந்நியாச ஆசிரமம் மேற்கொண்டாலோ அதன் மூலம் பேராபத்து ஏற்படும். பேரிடர் சம்பவிக்கும்!” என்றாள் வாடிகா.

“ஹூம்! எல்லாம் இந்தக் கெட்ட கிரஹங்களின் வேலை! நம் குடும்பத்தில் அனைவரின் வாழ்க்கையையும் அந்த கிரஹங்களே ஆக்கிரமித்துக் கொண்டு கெடுதலையே செய்து வருகின்றன. இப்போது பார்! இங்கே ஒரு பேரன் பிறவிக்குருடாகப் பிறந்திருக்கிறான். இன்னொருவனோ ரத்தசோகை பிடித்தவனாக பலஹீனமானவனாக எப்போது வேண்டுமானாலும் மரணம் சம்பவிக்கும் என்று தோன்றும்படியாகப் பிறந்துள்ளான். எல்லாம் நன்கு அமைந்த இந்தப் பேரனோ உலகைத் துறப்பேன் என்கிறான்! என் அதிர்ஷ்டத்தை என்ன சொல்வது!:” என்றாள் ராஜமாதா துக்கத்துடன். அதற்கு வாடிகா, “தாயே, விரைவில் அவன் திரும்பி வர ஏதேனும் ஏற்பாடு செய்யுங்கள். இங்கு மட்டும் அவன் வந்துவிட்டால் போதும். அவனுக்குத் தக்கதொரு இல்வாழ்க்கையை நாம் அமைத்துக் கொடுத்துவிடலாம். ஒரு நல்ல மனைவி இல்லாமல் அவளுடன் சேர்ந்து இல்லறத்தை நல்லறமாக நடத்தாமல் அவன் வாழ்க்கை எப்படிப் பூர்த்தி அடையும்!” என்றும் கூறினாள் வாடிகா.

“ஆம், மகளே, நீ கூறுவது உண்மைதான். உன் கருத்துகளோடு நான் ஒத்துப் போகிறேன். விரைவில் த்வைபாயனனைக் கண்டு பிடிப்போம். ஆசிரமங்களுக்குச் சுற்றுப் பயணம் சென்றிருக்கும் அவனைக் கூப்பிட்டு சுகனைக் குறித்துச் சொல்லி விரைவில் அவனைக் கொண்டு சுகனுக்கு அறிவுரைகள் கூறச் செய்வோம். த்வைபாயனன் சுகனைச் சம்மதிக்க வைப்பான். ஹஸ்தினாபுரத்துக்கே வரவழைப்போம். ஒரு முறை இங்கே அவன் வந்துவிட்டான் எனில் பின்னர் அவனால் சந்நியாச வாழ்க்கைக்குத் திரும்ப முடியாது. இத்தகைய முட்டாள் தனமான முடிவெடுத்ததற்காக அவன் வருந்துவான். அவனை இல்லறத்துக்குச் சம்மதிக்க வைப்பது மிக எளிது! அது சரி! த்வைபாயனன் இப்போது எங்கே இருப்பான் என்பதைக் குறித்து நீ ஏதும் அறிவாயா?” என்று கேட்டாள் ராணிமாதா!

“எங்கிருக்கிறார் என்பதை அறியேன், தாயே! ஆனால் சில நாட்கள் முன்னர் வந்த செய்தியின்படி, முனிவர் ஹஸ்தினாபுரம் திரும்புகிறார் என்றும் திரும்பும் வழியில் கோதுலிக்குச் சென்று சாம்பல் பிரதேசம் சென்று அவர் தந்தை பங்குமுனியை எரித்த இடத்துக்குச் சென்று தன் வணக்கங்களைத் தெரிவித்துக் கொண்டு வருவதாகச் செய்தி வந்துள்ளது.”

ராஜமாதா வாடிகாவின் கண்ணீரைத் துடைத்து விட்டாள். “அழாதே, குழந்தாய்! வாடிகா! அழாதே! விரைவில் த்வைபாயனனைக் கண்டு பிடிப்போம். அவன் வரும்போதே சுகன் எங்கிருக்கிறான் என்பதைப் பார்த்து அவனையும் கூட அழைத்துவரும்படி சொல்லுவோம். சுகனின் விருப்பத்தைக் குறித்து த்வைபாயனனிடம் கூறி சுகன் மனதை மாற்றி இல்லறத்தில் ஈடுபடத் தயார் செய்யுமாறும் கூறுவோம். தாவி, உடனே சென்று மந்திரி குனிகரை அழைத்து வா! த்வைபாயனன் எங்கிருப்பான் என்பதை அவர் கண்டு பிடித்து அவனிடம் செல்லுவார்.” என்றாள்.

“அம்மா, அம்மா, என் மனதில் மகிழ்ச்சியே இல்லை! நான் மிகச் சிறந்த கணவனை அடைந்தும் அவரோடு சேர்ந்து வாழமுடியவில்லை. அவர் என்னை விட்டுப் பிரிந்து விடுகிறார். அதே போல் என் மகனும் மிகச் சிறந்தவன்! புத்திசாலி, பெரிய ஞானி! பார்க்கவும் அழகாக இருக்கிறான். அனைவரிடமும் அன்பு செலுத்துவான். ஆனால் இத்தனை எல்லாம் இருந்தும் அவனுக்கு இவ்வுலக வாழ்க்கையில் ருசி இல்லாமல் போய்விட்டதே!” என்று மனம் நொந்து போய் அழுதாள் வாடிகா! “கவலைப்படாதே, வாடிகா! அனைத்தையும் சரி செய்து விடலாம்!” என்றாள் ராணிமாதா. அதற்குள் மந்திரி குனிகர் வந்து விட்டார்.

“குனிகா, இங்கே வா! இப்படி அமர்!” என்று கட்டளையிட்ட ராஜமாதா வாடிகாவைப் பார்த்து, “அழாதே வாடிகா! குனிகன் மிகத் திறமை சாலி. சமயோசிதமாகச் செயல்படுவான். அவனிடம் ஓர் விஷயத்தை ஒப்படைத்து விட்டால் பின்னர் அதைக் குறித்து நாம் கவலைப்பட வேண்டாம். எத்தகைய இக்கட்டாக இருந்தாலும் அதை எளிதில் தீர்த்துவிடுவான்! ” என்றாள் ராணிமாதா! குனிகர் தன் கைகளைக் கூப்பி ராணிமாதாவை வணங்கியவண்ணம், “என்னிடம் எத்தகைய காரியத்துக்கு சமயோசிதத்தையும் திறமையையும் எதிர்பார்க்கிறீர்கள் ராணிமாதா? உங்கள் மன விருப்பம் போல் வேலையை முடித்துக் கொடுத்துவிட்டு உங்கள் ஆசிகளுக்குக் காத்திருப்பேன்!” என்று மிகவும் வணக்கத்துடனும் ராஜதந்திரத்துடனும் கூறினார். ராஜமாதா அப்போதுள்ள சூழ்நிலையைக் குனிகருக்கு விரிவாக எடுத்துக் கூறினாள். “அந்தப் பையன் இங்கே வர மறுத்தான் எனில் அடுத்து நாம் செய்ய வேண்டியது என்ன?” என்றும் வினவினாள்.

“நீங்கள் எதற்கும் கவலைப்பட வேண்டாம், ராணிமாதா! உங்களை நீங்களே துன்பத்தில் ஆழ்த்திக்கொள்ள வேண்டாம்.” என்றார் குனிகர். பின்னர் தொடர்ந்து, “அவன் இளைஞன். எளிதில் உணர்ச்சி வசப்படக்கூடியவன். அவனை வேறு யாரோ இத்தகைய தகவல்களைச் சொல்லி ஆசை காட்டி அழைத்துச் சென்றிருக்கலாம். உங்கள் அனுமதி கிடைத்ததும், நான் காங்கேயரிடமும் அனுமதி பெற்று ஓர் படகைத் தக்க மனிதர்களுடன் ஏற்பாடு செய்து கொண்டு கோதுலிக்குக் கிளம்பிச் செல்கிறேன்.” என்றார்.

“ஆம், குனிகா! காங்கேயனிடம் சொல்! இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதையும் அவனிடம் சொல்! அதிலும் நீயே நேரில் சென்று முனிவரையும் சுகனையும் பார்த்துப் பேசி வரவேண்டும் என்பது மிக முக்கியம் என்பதையும் காங்கேயனுக்கு உணர்த்து! எவ்வளவு விரைவில் செல்ல முடியுமோ அவ்வளவு விரைவாகச் செல்ல வேண்டும் என்பதையும் கூறு.” என்ற ராஜமாதா, வாடிகாவிடம் திரும்பி, “வாடிகா! உன் மனதைத் தளர விடாதே! நான் எல்லா விஷயங்களையும் விரைவில் சரியாக்குகிறேன். சில சமயங்களில் சிறிய விஷயங்களுக்குக் கூட நாம் பெரிய ஆபத்து வந்துவிட்டதாக நினைத்துப் பதறுகிறோம்! இதுவும் அப்படி ஒன்று தான். கவலைப்படாதே!” என்றாள்.

2 comments:

ஸ்ரீராம். said...

.

பித்தனின் வாக்கு said...

அந்தக் காலத்துலேயே பசங்க வீட்டை விட்டு ஓடிப் போயிருக்காங்க.