ருக்மிணியின் மனம் நெகிழ்ந்தது. தன் விளையாட்டை மூட்டை கட்டி வைத்துவிட்டு, “இதோ பார், அண்ணி, நான் உன்னை என் மூத்த தமக்கை போலவே கருதி வ்ந்திருக்கிறேன். உன்னை மிகவும் நேசிக்கிறேன். நீ தான் எப்போதுமே என்னிடம் கோபமாகவும், குறை கண்டு பிடித்துக்கொண்டுமே இருக்கிறாய்!” என்றாள். “ஓஓ, உன் அதிகப் பிரசங்கித்தனமான நடவடிக்கைகள் என்னை அவ்விதம் தூண்டிவிட்டன. “ என்றாள் சுவ்ரதா. “ம்ம்ம்ம்?? அப்படியா?? என்னை நான் காப்பாற்றிக்கொள்ளவேண்டும் அல்லவா?” மீண்டும் கிண்டலாய் ஆரம்பித்த ருக்மிணி தன்னைச் சுதாரித்துக்கொண்டு, “அண்ணி, நீ எப்போதுமே ருக்மிக்குச் சாதகமாய்ப் பேசிக்கொண்டு என்னை ஒதுக்கிவிட்டதோடு, எனக்கு எதிராயும் இருந்தாய்!” என்று ஆழ்ந்த வருத்தத்தோடு கூறினாள். “அதை அவ்வாறு எண்ணாதே! நான் அவ்விதம் குறுக்கிடவில்லை எனில் உன் அண்ணன் உன்னிடம் மிக மோசமாய் நடந்து கொண்டிருப்பான். உனக்கு அவனைப் பற்றித் தெரியாதா என்ன?” என்றாள். சுவ்ரதாவின் குரலில் இருந்தே அவள் ஆத்திரமும், ருக்மியிடம் அவள் கொண்டிருந்த கசப்பும் தெரிய வந்தது.
ருக்மிணி கொஞ்சம் ஆச்சரியத்தோடே சுவ்ரதாவின் இந்த மாற்றத்தைக் கவனித்துக்கொண்டாள். “உண்மைதான் அண்ணி, நீ இல்லை எனில் ருக்மி என்னை உண்டு இல்லை என்று ஒரு வழி பண்ணி இருப்பான். என்ன இருந்தாலும், நீயும் நானும் எல்லாவிதத்திலும் ஒன்றாய்த் தான் இருக்கிறோம்.” என்று தன் கட்சிக்கு அவள் ஆதரவைத் தேடிக்கொண்டாள் ருக்மிணி. இதற்குப் பதிலாய் சுவ்ரதாவின் கண்கள் கண்ணீரைப் பொழிந்தன. அவள் துக்கத்தைப் புரிந்து கொண்ட ருக்மிணி, “உன் இடத்தில் அந்த மகத நாட்டுப் பெண் வந்து அமர விடுவேனா நான்?? பார்ப்போமே அதையும்! அவள் ஒரு அசிங்கமான, விகாரமான மனைவியாய்த் தான் இருக்க முடியும்! சீச்சீ! இந்த மகத நாட்டுக்காரங்க எல்லாருமே காட்டுமிராண்டிகள். இருந்திருந்து ருக்மிக்கு உன்னைப் போன்றதொரு சகலவிதத்திலும் உயர்ந்த மனைவி கிடைத்ததே தப்போனு நினைக்கிறேன். உனக்கு அவன் சிறிதும் பொருத்தமில்லை அண்ணி!” ருக்மிணியின் குரலில் மட்டுமில்லாமல் கண்களும் சுவ்ரதாவின் மேல் அன்பை வர்ஷித்தன. அவள் குரலும் மிகவும் மென்மையாகவும், மிருதுவாகவும், இனிமை பொங்கவும் அன்பு தெரியும்படியும் ஒலித்தது.
“ஓ, ருக்மிணி, உன் அண்ணனை அந்தச் சக்கரவர்த்தியின் பேத்தியைத் திருமணம் செய்து கொள்வதிலிருந்து தடுக்க உன்னால் முடியுமா என்ன?? முடியாது ருக்மிணி, முடியாது. உன் அண்ணன் எவ்வளவு ஆவலோடு இருக்கிறான், பார்த்தாயல்லவா?”
“மனதைத் தளர விடாதே அண்ணி. சீக்கிரம் இதற்கு ஒரு வழி கண்டு பிடிக்கலாம். “ ருக்மிணி, சாதுரியமாகப் பேசினாள். ஆனால் அவள் மனதில் ஏற்கெனவே ஒரு திட்டத்தைப் போட்டுவிட்டாள். அதை நிறைவேற்ற அவளுக்கு இப்போது ஒரு துணை வேண்டும். உதவி செய்பவர் தேவை. இந்நிலையில் இருக்கும் அண்ணியை விடவும் சிறந்த துணை வேறு எவராயிருக்க முடியும்?
ஆனால் சுவ்ரதாவோ மிகுந்த மனக்கசப்போடு, “ம்ஹும், எந்த வழியையும் கண்டுபிடிக்க முடியாது. நிச்சயமாய்த் தெரியும் எனக்கு. உன் அண்ணன் ஒரு மாபெரும் சக்கரவர்த்தியின் குடும்பத்துக்கு மாப்பிள்ளையாகப் போகப் போகும் இந்த அரிய சந்தர்ப்பத்தை ஒரு நாளும் தவற விடமாட்டார்.”
“ஆஹா, அண்ணி, என்னை என்னவென நினைத்துவிட்டாய்?? என்னால் முடியும். என் அண்ணன் மகத நாட்டு மாப்பிள்ளையாவது அவ்வளவு சுலபம் இல்லை. நான் சிசுபாலனைத் திருமணம் செய்து கொண்டால் அல்லவோ அவன் மகத நாட்டு மாப்பிள்ளையாக முடியும்?? சிசுபாலன் என்னைத் திருமணம் செய்து கொள்ளவில்லை எனில்??? உனக்குப் போட்டியாக இன்னொருத்தி உன் வாழ்வில் குறுக்கிட மாட்டாள்.”
“இது என்ன விந்தை?? சேதி நாட்டுக்கு அரசியாகப் பிடிக்கவில்லையா உனக்கு?” உண்மையான ஆச்சரியத்தோடு கேட்டாள் சுவ்ரதா.
“உன்னைச் சந்தோஷப் படுத்த, உனக்காக நான் எதை வேண்டுமானாலும் செய்வேன் அண்ணி. அதைப் புரிந்து கொள், “ இவ்வாறு கூறிக்கொண்டே அண்ணியைத் தழுவிக்கொண்டாள் ருக்மிணி. அவள் அன்பும், ஆதரவும் அந்த அணைப்பில் தெரிந்தது. மேலும் கூறினாள்,” நான் ஒரு திட்டத்தை வைத்திருக்கிறேன். “
“அற்புதம், ருக்மிணி, அற்புதம், நீ அதிசயமான பெண்! உன்னை என் எதிரி என நினைத்தது என் முட்டாள் தனமே.”
ருக்மிணியின் மனதுக்குள்ளே அவள் பேசிய வேகத்தை விடவும் வேகமாய் எண்ணங்கள் ஓடின. கிருஷ்ணன் உயிருடன் இருப்பது அவளுக்கு மகிழ்ச்சியை அளித்தாலும், அந்த உயிரைக் கொடுத்தது அவள் அண்ணன் ருக்மியும், அவன் நண்பர்களும் என்பது அவள் மனதைப் புண்ணாக்கியது. அது அவளுக்குச் சிறிதும் மகிழ்வை அளிக்கவில்லை. ஒரு நீண்ட பெருமூச்சு விட்டாள். இந்த ஆண்களே இப்படித்தான். எந்த விஷயத்தில், எப்படி, எவ்விதம் ஏமாற்றுவார்கள் எனத் தெரிவதில்லை. எல்லாருமே ஒரே மாதிரியானவர்களே. கிருஷ்ணன் மட்டும் எப்படித் தனித்திருப்பான்?? எல்லா ஆண்களையும் போல் அவனும் என்னை ஏமாற்றிவிட்டான். ருக்மிணிக்கு வருத்தம் மேலோங்கியது.
மறுநாள் அவள் தன் வழக்கப்படி தன் அருமைத் தாத்தாவும், அருமை நண்பரும் ஆன கைசிகனைக் காண அவர் அரண்மனைக்குச் சென்றாள். அங்கே அவளுக்கு ஆச்சரியம் காத்திருந்தது. கைசிகனோடு பேசிக்கொண்டிருந்தவரை அவள் இதற்கு முன்னர் கண்டதில்லை. மிகவும் அந்தரங்கமான பேச்சு வார்த்தைகள் என்றும் தெரிந்து கொண்டாள். அவளைக் கண்டதுமே கைசிகனின் முகம் பிரகாசமடைந்தது. சந்தோஷமாய்ச் சிரித்தவண்ணம் அவளைத் தன் அருகே வந்து அமரச் சொன்னார் கைசிகன். புதிய மனிதர் பார்க்கக் கம்பீரமாய்க் காட்சி அளித்தாலும் இளவயதினராகவே இருந்தார். ருக்மிணிக்குத் தன் வணக்கங்களைச் சமர்ப்பித்தார். “ருக்மிணி, இவர் யார் தெரியுமா?” கைசிகன் கேட்டார். ருக்மிணி தெரியாதெனத் தலையசைத்தாள். “இவர் ஆசார்ய ஸ்வேதகேது. குரு சாந்தீபனியின் முதன்மைச் சீடர் ஆவார். மேலும் அவந்தி நாட்டின் இளவரசர்கள் ஆன விந்தனுக்கும், அநுவிந்தனுக்கும் பாடம் கற்பித்தார். அநுவிந்தனின் நெருங்கிய நட்புக்கு உரியவர். “
“ஓஹோ!” ருக்மிணியின் குரலில் ஒரு விசித்திரம் தென்பட்டது.
கொஞ்சம் கபடமாய்ச் சிரித்துக்கொண்டே கைசிகன், “இவன் உத்தவனின் நண்பனும் கூட!” என்று இழுத்தவண்ணம் கூறியவர், ருக்மிணியின் முகத்தைக் கூர்ந்து பார்த்துக்கொண்டே, “மேலும், மேலும்…….. கிருஷ்ண வாசுதேவனுக்கும் நெருங்கிய நண்பர்!” என்று முடித்தார்.
“ஓ” ருக்மிணி இப்போது கொஞ்சம் கவனமாய்க் கேட்க ஆரம்பித்தாள்.
இவர் கரவீரபுரத்திலிருந்து கிருஷ்ண வாசுதேவன் அனுப்பி வந்திருக்கிறார்.”
“கிருஷ்ண வாசுதேவர் எப்படி இருக்கிறார்?” ருக்மிணியால் தன்னைக் கட்டுப்படுத்திக்கொள்ள இயலவில்லை. இப்போது கைசிகனுக்குச் சிரிப்பை அடக்க முடியவில்லை. பெரிதாய்ச் சிரித்துக்கொண்டே தன் பேத்தியைப் பார்த்து, பயமுறுத்துவது போல் சுட்டுவிரலை ஆட்டியவண்ணம், “விதர்ப்ப தேசத்தின் ராஜகுமாரி , அதுவும் திருமணமாகாத ஓர் இளம்பெண், ஒரு மாட்டிடையனைப் பற்றி இவ்விதம் கவலைப்படுவதும், விசாரிப்பதும் அழகா? சரியா? அல்ல, அல்ல!” என்றான்.
“ஓஓ, பாட்டனாரே, என்னைக் கேலி செய்வதை நிறுத்துங்களேன்!” பாதி கொஞ்சலாகவும், மீதி கெஞ்சலாகவும் வேண்டினாள் ருக்மிணி. “நான் கிருஷ்ண வாசுதேவனைப் பற்றி எல்லாச் செய்திகளையும் கேட்டுத் தெரிந்து கொள்கிறேனே!” என்றாள்.
அதன் பேரில் ஸ்வேதகேது கோமந்தக மலையில் கிருஷ்ணன் கழித்த நாட்களையும், ஜராசந்தனும், அவன் ஆட்களும் கிருஷ்ணனை வேட்டையாட வந்தபோது நடந்த நிகழ்ச்சிகளையும், கடைசியில் கண்ணனால் மன்னிக்கப்பட்டு, உயிர்ப்பிச்சை அளிக்கப் பட்டு ஜராசந்தன் தப்ப வைக்கப் பட்டதையும், இதற்கு தாமகோஷன் மறைமுகக் காரணமாய் அமைந்ததையும் விளக்கமாய்க் கூறினான். அதன் பின்னர் கரவீரபுரத்து நிகழ்வுகளையும் ஸ்ரீகாலவன் கொல்லப் பட்டதையும், அனைத்து ஆசாரியர்கள், ரிஷி, முனிவர்கள் விடுவிக்கப் பட்டு கரவீரபுரத்தில் நல்லாட்சி நிறுவப் பட்டதையும் கூறினான். கைசிகனிடம் இதை எல்லாம் தெரிவிக்க வேண்டிக் கண்ணனால் தான் அனுப்பப் பட்டதாயும் கூறினான்.
ஆஹா, கதைகளிலும், காவியங்களிலும் வர்ணிக்கப் படும் வீரம் மிகுந்த கதாநாயகனுக்கு ஒப்பானதொரு சாகசத்தையும், வீரத்தையும் கண்ணன் அநாயாசமாயும், எந்தவிதமான ஆர்ப்பாட்டங்களும் ஆரவாரமும் இல்லாமல் காட்டி இருக்கிறானே! ருக்மிணியின் கண்கள் விரிந்தன. அவள் வியப்பு மாறவே இல்லை. அவள் இதயம் வெற்றி கீதத்தைப் பாட ஆரம்பித்தது.
கடைசியில் அவளுடைய கதாநாயகன் உண்மையிலேயே ஒரு பெரிய மாவீரன் மட்டுமல்லாமல் அதிசயிக்கத் தக்க நிகழ்ச்சிகளை அநாயாசமாய் நடத்தி வைக்கும் வல்லமையும் பெற்றிருக்கிறான். அவனைக் கடவுளா என எல்லாரும் சந்தேகிக்கின்றனரே! அவன் கடவுளே தான். இவ்வுலகில் உள்ள மக்களுக்கு வாழ்க்கையைப் பற்றியும், வாழவேண்டிய நெறிமுறைகள் பற்றியும் எடுத்துரைக்கப் பிறந்திருக்கிறான். ஷாயிபாவை அவன் எவ்விதம் சமாளித்தான் என்பதையும், கண்ணனின் பெருந்தன்மையான போக்கையும் அறிந்த ருக்மிணிக்குக் கண்களில் இருந்து கண்ணீர் வருவதைத் தடுக்க முடியவில்லை.
கைசிகனோ, எந்தக் கதையிலும், காவியத்திலும் இப்படிப்பட்ட நிகழ்ச்சிகளைத் தான் படித்ததுமில்லை, கண்டதுமில்லை, கேட்டதுமில்லை என்றதோடு, “எவராலும் வெல்லமுடியாது என்று பெருமை அடித்துக்கொண்டிருந்த ஜராசந்தன் , இரு இளைஞர்களிடம், அதுவும் எந்தவிதமான பாதுகாப்பும், துணையும், ஆயுதபலங்களும் இல்லாதவர்களிடம் தோற்றுப் போய் உயிர்ப் பிச்சை அளிக்கப் பட்டு ஓடி வந்திருக்கின்றான்.
ஆஹா, இது ஆர்யவர்த்தத்துக்கே பெருமை அளிக்கக் கூடியதொரு செயலன்றோ?? சரித்திரத்தில் என்றென்றும் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப் படவேண்டிய சாகசமன்றோ? ஜராசந்தன் முப்பது வருடங்களுக்கும் மேல் கட்டிய இந்த சாம்ராஜ்யம், ஒரே நாளில் மண்ணோடு மண்ணாகி விட்டது. கேள் ருக்மிணி, நீ பிறக்கும் முன்னர் ஜராசந்தனால் நம் படைகளும், நாடும் நாசமாக்கப் பட்டது. நம் அருமை விதர்ப்பம் ஒரு அடிமை நாட்டைப் போல் நடத்தப்பட்டது. நானும், என் குடிமக்களும் ஜராசந்தனின் மகத சாம்ராஜ்யத்தின் அடிமைகள் என்பதைச் சொல்லாமல் சொன்னான். என் மனம் நொந்து போய் நான் அரியணையை விட்டுக்கீழே இறங்கி, உன் தகப்பனிடம் ஆட்சியை ஒப்படைத்தேன். இன்று தான் என் மனம் நிம்மதி அடைந்தது. என்னுடைய அவமானத்துக்குப் பழிவாங்கப் பட்டது. உத்தவன் சொல்வது போல், நினைப்பது போல் அந்தக் கிருஷ்ண வாசுதேவன் சாதாரண மனிதனே அல்ல. நிச்சயமாய்க் கடவுளே தான் அவன்!”
“ஷாயிபாவை எப்படி வசப்படுத்தினான் என்பதை என்னால் மறக்கவே முடியவில்லை. “ ஸ்வேதகேது கூறினான். “ஓ, அவன் கடவுள் தான், முட்டாள்தனமாய் நான் நம்பிக்கொண்டிருந்த ஸ்ரீகாலவனைப் போன்ற கடவுள் அல்ல, உண்மையாகவே கிருஷ்ண வாசுதேவன் கடவுள் தான். ஆனால் அவனுக்குத் தான் அது தெரியவில்லை. “
“ம்ம்ம்ம்ம்ம்ம், என்ன இருந்தென்ன?? அவன் ஒரு அரசனாகவோ, அல்லது ஒரு நாட்டின் இளவரசனாகவோ இருந்திருக்கலாம் என்றே நான் நினைக்கிறேன். அவன் அவ்வாறு இருந்திருக்கவேண்டும் என என் மனம் விரும்புகிறது!” நீண்டதொரு பெருமூச்சுடன் ருக்மிணி கூறினாள்.
“ஆமாம், ஆமாம், அப்போது தானே அவன் உன்னுடைய சுயம்வரத்துக்கு அழைக்கப் படுவான்!” கைசிகன் ஒரு சிரிப்போடு கூறினான். “குழந்தாய், அந்த மாடு மேய்க்கும் இடைச்சிறுவனைப் பற்றியெல்லாம் நினைக்காதே! நீ ஒரு அரசகுமாரி. உனக்குத் தகுந்த மணமகனாக இன்னொரு அரசனோ, அல்லது இளவரசனோ தான் இருக்க முடியும்.”
ருக்மிணியின் மனம் வேதனை அடைந்தது. தன் உணர்வுகளை வெளிக்காட்டாமல் இருக்கப் பாடுபட்டாள். கஷ்டப் பட்டு சம்பாஷணையை வேறு திக்கில் திருப்பினாள். “ஆசாரியரே, இன்னொரு முறை ருக்மியை கிருஷ்ண வாசுதேவன் போரில் நடத்திய விதம் பற்றிக் கூறுங்கள். நான் எல்லாவற்றையும் அவனிடம் கூறுகிறேன்.” என்றாள். ருக்மிணி பேசும்போதே கனவுலகிலிருந்து பேசுவது போல் தோன்றினாள். அவள் கண்ணெதிரே கண்ணனின் அந்தக் கருநீல நிற வடிவம் தோன்றியது. ஒரு போர்வீரனைப் போல் உடை தரித்திருந்தான். ருக்மியை அடக்குகிறான்; ஜராசந்தனைக் காப்பாற்றித் தப்பி ஓட வைக்கிறான்; ஸ்ரீகாலவனைக் கொன்று அழிக்கிறான்; ரிஷி, முனிவர்களைக் காக்கிறான்; ஷாயிபாவைச் சமாதானம் செய்து தன் தாயிடம் அனுப்பி வைக்கிறான். என்றாலும் ஷாயிபாவை நினைக்கும்போதே ருக்மிணியின் மனதில் அவள் மேல் பொறாமை தோன்றியது.
தினந்தோறும் அவளால் கண்ணனைப் பார்க்க முடியும். அவனுடைய மந்தகாசச் சிரிப்பைக் காணமுடியும். கண்ணனோடு பேசமுடியும். ஆனால் எனக்கு?? என்னால் அவனைக் காண முடியாது, அவன் சிரிப்பைப் ப்பார்க்க முடியும். என்றாலும் நான் அவனைத் தினமும் காண்கிறேனே. இரவும், பகலும், ஒவ்வொரு நிமிடமும் அவன் என்னோடு இருப்பதை உணர்கிறேன். ம்ஹும், அவன் ஒரு இடைச்சிறுவனாமே! இருந்திருந்து ஷூரர்களின் தலைவனான வசுதேவனின் குமாரன் என்று வேண்டுமானால் சொல்லிக்கொள்ளலாம். ஆனால் நான் ஒரு நாட்டின் அரசகுமாரி. அவன் எவ்வளவு அற்புதமானவனாக இருந்தாலும், வீரனாக இருந்தாலும், அன்புள்ளம் படைத்தவனாக இருந்தாலும், நான் ஒரு அரசனின் குமாரி. அவனை நான் மணந்து கொள்வது பற்றிக் கனவு கூடக் காண முடியாதே! மேலும் என்னைத் தான் என் சம்மதம் கேட்காமலேயே சேதிநாட்டு இளவரசன் சிசுபாலனுக்கு என நிச்சயம் செய்திருக்கிறார்களே! ம்ம்ம்ம்., அவள் திருமணம் செய்துகொள்ளவென சுயம்வரம் ஏற்பாடு செய்யப் போகின்றனர். ஆனால் அதில் அரசகுமாரர்களும், அரசர்களும் மட்டுமே அதுவும் ஜராசந்தனால் தேர்ந்தெடுக்கப் பட்டவர்கள் மட்டுமே கலந்து கொள்வார்கள்.
பின் என்ன?? ஜராசந்தன் இஷ்டப் படியே ஒரு நாடகம் நடந்து முடியும். சிசுபாலனால் குறிப்பிடப் பட்டதொரு வீரச் செயல் ஏதேனும் நடத்தி முடிக்கப் பட்டு அனைவரும் ஆச்சரியமடைவார்கள். வேறு யாரும் அதை வெல்ல முடியாதபடிக்கு ஜராசந்தன் பார்த்துக்கொள்வான். அனைத்து அரசர்களும், அரசகுமாரர்களும் அதற்கு ஒத்து இசைந்து போவார்கள். சிசுபாலன் வெற்றி பெற்றதாய் அறிவிக்கப் பட்டு அவளைக் குதிரைச் சந்தையில் பிடித்த பெண்குதிரையாக நினைத்துக்கொண்டு அழைத்துச் சென்றுவிடுவான். “சீச்சீ, நான் ஏன் ஒரு அரசகுமாரியாகப் பிறந்தேன்?? நானும் ஓர் இடைச்சிறுமியாக இருந்திருந்தால் எவ்வளவு நன்றாயிருக்கும்??” மனம் நொந்தாள் ருக்மிணி.
ஜராசந்தனும் மற்ற அரசர்கள், அரசகுமாரர்கள் அனைவரும் சென்றுவிட்டனர். ஆனால் ஸ்வேதகேது மட்டும் குண்டினாபுரத்திலேயே தங்கினான்.
கைசிகன் குண்டினாபுரத்தில் படைத்தலைவர்களை ஸ்வேதகேதுவிடம் ஆயுதப் பயிற்சி எடுத்துக்கொள்ள வைத்தார். சாந்தீபனி போன்ற தேர்ந்த ஒரு குருவின் முதன்மைச் சீடனான ஸ்வேதகேதுவின் பயிற்சி தன் நாட்டு வீரர்களுக்கு அவசியம் என்பதை உணர்ந்தார். பீஷ்மகனும், ருக்மியும் கூட இதற்கு ஆக்ஷேபணை தெரிவிக்கவில்லை. ருக்மிணி ஆசாரியன் ஸ்வேதகேதுவை தன் அண்ணியான சுவ்ரதாவுக்கு அறிமுகம் செய்து வைத்தாள். ஸ்வேதகேதுவின் மூலம் நடந்த விஷயங்களை அறிந்து கொண்ட சுவ்ரதாவால் அவளை அடக்கிக் கொள்ள முடியவில்லை. ஒரு நாள் ருக்மி தன் வீர தீரப் பிரதாபங்களை அவளிடம் நூற்றி எட்டாவது முறையாக சொல்லிக் கொண்டிருந்தபோது, அவள் பட்டென்று தன் கணவனைப் பார்த்து, அவன் பொய் சொல்வதைத் தான் அறிந்து விட்டதாயும், உண்மையில் கிருஷ்ணனால் அவர்கள் உயிர் பிழைத்து வந்ததையும், கிருஷ்ணனுக்கு அவர்கள் அனைவருமே கடமைப்பட்டிருப்பதையும் சுட்டிக் காட்டவே, ருக்மிக்குக் கோபம் மேலோங்கியது. இருவருக்கும் மாபெரும் வாக்குவாதம் நடந்தது.
சுவ்ரதா சளைக்கவில்லை. கிருஷ்ணனிடம் நன்றி பாராட்டாத ருக்மி அவன் எதிரியான ஜராசந்தனின் பேத்தியை மணக்க இருப்பதைத் தன்னால் ஒத்துக்கொள்ள முடியாது என்று சொன்னாள். அவள் கேள்விகளும், அவளின் தீர்மானங்களும் சாட்டையடியாக விழுந்தன ருக்மிக்கு. ருக்மி இனி அவளுடன் தான் எப்போதுமே பேசப் போவதில்லை என்று கோபமாய்க் கூறிவிட்டு வெளியே செல்ல சுவ்ரதாவும் அதை ஆமோதித்தாள். தானும் ருக்மியிடம் பேச இஷ்டப் படவில்லை என்று அறிவித்தாள்.
மெல்ல மெல்ல அனைவருக்கும் நடந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் பரவ ஆரம்பித்தன. கோமந்தக மலையில் நடந்ததும், கரவீர புரத்தில் நடந்ததும், அங்கே இருந்த சில வியாபாரிகள், புனித யாத்ரீகர்கள், ஊருக்கு ஊர் சென்று பாடம் கற்பிக்கும் ஆசிரியப் பெருமக்கள், சிற்றரசர்களின் தூதுவர்கள், ஊர் சுற்றிப் பார்க்கச் சென்று மேற்கண்ட நிகழ்ச்சிகளில் அவர்களையும் அறியாமல் பங்கு பெற்றவர்கள் என ஒவ்வொருவராய் கண்ணனின் சாகசங்களை எல்லாம் ஒரு கதை போல் எடுத்துச் சொன்னார்கள். உண்மையாகவே வாசுதேவன் உதயமாகிவிட்டான். இவன் அந்தப் பரவாசுதேவன் அல்லாமல் வேறு எவரும் இல்லை. பல கொடுமைகளுக்கும் ஆளான யாதவர்களை மீட்டுவிட்டான்.; காட்டுவாசிகளான கருட இனத்தவர்களைத் தன் வசப்படுத்திக்கொண்டுவிட்டான்; எல்லாவற்றுக்கும் மேல் கடலரசனையே தன் உத்தரவுக்கு அடி பணிய வைத்தான்; கோமந்தக மலைத் தொடர்களை இதன் மூலம் காப்பாற்றினான்; எவராலும் வெல்லமுடியாதவன் எனப் பெயர் பெற்ற ஜராசந்தனைத் தன் உயிருக்குப் பயந்து ஓட வைத்தான்; கரவீரபுரத்தின் கொடுங்கோல் அரசனான ஸ்ரீகாலவ வாசுதேவனை அழித்துவிட்டு, அவனால் கொடுமையான நரகம் போன்ற சிறையில் தள்ளப் பட்டிருந்த ஆசாரியர்களை விடுவித்துவிட்டான். ஒவ்வொருத்தர் வாய் மூலமும் பரவிய இந்தச் செய்திகளானது, நாளாக, நாளாக கூட இன்னமும் சில அதிசயங்களைச் சேர்த்துக்கொண்டு காட்டுத் தீயைப் போல நகரங்களுக்கும், நாடுகளுக்கும், ரிஷிகளின் ஆசிரமங்களிலும் பேசப்பட்டு மதுரா வரைக்கும் சென்றது. இதைப் போன்ற நூற்றுக்கணக்கான விதங்களில் இந்தக் கதை பேசப்பட்டுக் குண்டினாபுரத்தின் பட்டத்து இளவரசன் கண்ணனிடம் தோற்றான் என்ற செய்தி குண்டினாபுரத்தின் மக்கள் வாய் மூலம் எங்கும் பேசப்பட்டது.
குண்டினாபுரத்தின் அரண்மனைக்கும், அந்தப்புரத்துக்கும் இந்தச் செய்தி கிட்ட ருக்மிணி சந்தோஷத்தில் என்ன செய்வது எனப் புரியாமல் ஆடிப்பாடினாள். அவள் மனம் இப்போது ஒரு காவிய நாயகனிடமோ, ஒரு அரசனிடமோ செல்லவில்லை. அனைவராலும் கடவுளாய் மதிக்கப் படும் ஒருவனிடம் சென்றுவிட்டது. ஸ்வேதகேதுவைத் திரும்பத் திரும்பக் கண்ணனின் அற்புத சாகசங்களைக் கூற வைத்துக் கேட்ட அவள், தான் மட்டுமல்லாமல் கண்ணனின் நண்பர்களும் அவனை மிகவும் நேசிப்பதை உணர்ந்தாள்.
ருக்மிணிக்கு மீண்டும் தான் அரசகுமாரியாய்ப் பிறந்திருப்பதை எண்ணி எண்ணி மனம் வேதனைப்பட்டது. இந்தத் திரிவக்ரை எவ்வளவு சுலபமாய்க் கண்ணனோடு பேச முடிகிறது. நானும் அவளைப் போன்றதொரு சாமானியப் பெண்ணாய் இருந்தால்?? ம்ம்ம்??? ஓர் இடைப்பெண்ணாய் இருந்தால்??? அவளை அறியாமலேயே அரண்மனைக்கு அருகே இருந்த கோசாலையில் அவள் பார்வை பதிந்தது. அங்கிருந்த பசுக்களிடம், ஓர் இடைப்பெண், அதுவும் இடையனுக்கு நிச்சயிக்கப் பட்ட மணப்பெண் எப்படி நடந்து கொள்வாள்? என்று கேட்டாள் ருக்மிணி.
ருக்மிணியின் மனச் சஞ்சலங்களை அறியாதவன் போலவே ருக்மி சிசுபாலனைக் கண்டு சுயம்வரத்திற்கு அழைக்கத் தானே நேரில் சென்றான். ருக்மிணிக்கு அவன் செல்லும் காரணம் தெரியும். அவன் திரும்பியதுமே அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசர்களுக்கும், அரசகுமாரர்களுக்கும், சுயம்வரத்தில் பங்கு பெற அழைப்புச் சென்றது. சுயம்வரம் எந்த மாதத்தில் பெளர்ணமி திதியும் மிருகசீர்ஷ நக்ஷத்திரமும் சேரும் நாள் வருமோ அன்றைய தினமாய்ப் பார்த்து நிச்சயிக்கப் பட்டிருந்தது. ருக்மிணிக்குத் திடீரென ஒரு யோசனை தோன்றியது. மிகவும் துணிச்சலாயும், திறமையுடனும் அந்தத் திட்டத்தைப் பற்றி யோசித்தாள் ருக்மிணி.
ருக்மி திரும்பியதும், அவனை படைத்தலைவர்களும், அமைச்சர்களும், மற்ற ஊர்ப் பெரியவர்களும், தன் தகப்பனும் நிறைந்த சபையில் அவமதித்தாள் ருக்மிணி. தன் அண்ணனை ஒரு கோழை என்றும், ஜராசந்தனின் கைகளில் உருட்டப் படும் பகடைக்காய் எனவும் பரிகசித்தாள். தன்னைச் சேதி நாட்டு அரசகுமாரனுக்குப் பேசியதன் மூலம், தனக்கு ஆதாயமாக ஜராசந்தனின் பேத்தியை மணந்து கொள்ள ருக்மி பேரம் பேசி முடித்திருப்பதாயும், தன் திருமணத்தை ஒரு வியாபாரமாக்கி விட்டதாயும் குறை கூறினாள். புயலைப் போல் அந்த சபையில் பிரவேசித்த ருக்மிணி அனைத்தையும் கூறிவிட்டு எரிமலையைப் போல் பொங்கினாள். கண்ணீரும் விட்டாள். பின்னர் தன்னை சிசுபாலனை மணந்து கொள்ளும்படி ருக்மி வற்புறுத்தினால் தற்கொலை செய்து கொள்வதாய்ப் பயமுறுத்தினாள். ஆனால் அவள் குரலில் உறுதி தெரிந்தது. மேலும் ஸ்வேதகேதுவிடம் பேசி ஆலோசனைகள் கேட்டுக்கொண்டு, அந்தப்புரத்தின் ஒரு பாகத்தின் தன்னைத் தானே சிறைப்படுத்திக்கொண்டு தனிமையில் இருந்தாள். எவரையும் காண மறுத்தாள்.
ம்ம்ம்ம், நான் ஒரு இடைச்சிறுமியாக இருந்திருந்தால் கண்ணனை மணந்துகொண்டு நானும் ஒரு கடவுளாக ஆகியிருப்பேனே?? எப்படி முடியும்?? கடவுளே எப்படி??” சில நாட்கள் கழித்து ஸ்வேதகேது ஏற்கெனவே தனக்கென நிச்சயிக்கப்பட்ட ஷாயிபாவைத் தான் திருமணம் செய்து கொள்ளப் போவதாய்ச் சொல்லிவிட்டு மதுராவுக்குக் கிளம்பினான். ஆனால் இதில் பாதி உண்மைதான் இருந்தது. என்னதான் ஷாயிபாவை ஸ்வேதகேதுவால் மறக்க முடியவில்லை என்றாலும் தயக்கமும் இருந்தது அவனுக்கு. மேலும் இங்கே, ருக்மியின் திட்டமும், அதை எதிர்த்து ருக்மிணியின் பிடிவாதமும் முதலில் குண்டினாபுரம் முழுதும் பரவிப் பின்னர் விதர்ப்ப நாடு முழுவதும் இதே பேச்சு. இளவரசன் ருக்மி தன் அருமைத் தங்கையை சிசுபாலனைத் திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்துகிறானாமே?? அதுவும் அவன் ஜராசந்தனின் பேத்தியை மணக்கவேண்டும் என்பதற்காகவாம். ருக்மிணிக்குப் பிடிக்கவில்லையாம் இது, அதனால் ருக்மி அவளைச் சிறையில் தள்ளி விட்டானாம். ஏற்கெனவே கைசிகனின் ஆட்சியில் ஜராசந்தனின் கொடுமைகளை அநுபவித்திருந்த விதர்ப்ப மக்களுக்கு அவன் பேரில் அப்படி ஒன்றும் மதிப்போ, பயமோ இல்லை. ஆகவே ருக்மி இப்போது செய்வதை அவர்களால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. இந்தப் பிரசாரத்தால் மனம் நொந்த ருக்மி தான் தன் தங்கையைச் சிறையில் தள்ளவில்லை என்று மக்களிடம் பிரசாரம் செய்வதற்கெனத் தனியாக ஆட்களை நியமிக்கவேண்டி வந்தது.