Monday, March 31, 2014

துரியோதனன் போடும் கணக்கு!

இருண்டு கிடந்த தன் வாழ்க்கையில் இனி என்றும் ஒளிமயம் என நினைத்தான் துரியோதனன்.  அவன் மனதுக்கும் உடலுக்கும் திருப்தி அளிக்கும் வகையில் அவன் உடலை நன்கு உருவி விட்டுப் பிடித்துவிட்டுக் கொண்டிருந்தனர். அவன் பிறந்ததில் இருந்து இத்தனை ஆண்டுகளாக அவன் மெளனமாக ஒரு வேதனையை அனுபவித்துக் கொண்டிருந்தான்.   கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்னும் ஒரு கோட்டைக்குள்ளாகச் சிறைப்பட்டிருந்தான்.  அங்கே அவனுக்கு இழைக்கப்பட்ட அநீதிகள் தான் எத்தனை! தன்னைச் சுற்றிலும் தீய கிரஹங்கள் சூழ்ந்து கொண்டு கெடுதலைச் செய்து கொண்டிருந்தன.  எவராலும் கணிக்க முடியா செல்வாக்கைக் கொண்ட, இத்தனை வயது ஆகியும் இன்னமும் தன் செல்வாக்கும், அதிகாரமும் அழிவற்றதாகக் கொண்டிருக்கும் அந்தக் கிழவி, வியாசனின் தாய், மாட்சிமை பொருந்திய அன்னையார் சத்யவதி அவர்களாலும், பிதாமஹர் பீஷ்மராலும் அவர்கள் அனைவரும் வளர்க்கப்பட்டிருக்கின்றனர் தான்.  இல்லை என்று சொல்ல முடியாது.


அவன் பிறக்கும் முன்பே அவர்கள் இந்தப் பொறுப்பை ஏற்க முடிவு செய்திருக்கின்றனர்.  ஆனால் அதற்காக அவர்கள் செய்யும் அநியாயங்களை எல்லாம் இன்னும் எத்தனை நாட்கள் பொறுப்பது?  தன்னுடைய கொள்ளுப்பாட்டியார் மாட்சிமை பொருந்திய சத்யவதி அம்மையாரை முக்கியமான ஒரு சில அரசாங்க நிகழ்ச்சிகளில் மட்டுமே துரியோதனன் நன்கு பார்த்திருக்கிறான்.  அந்த அம்மையார் வெளியே செல்வதில்லை; அனைவரையும் பார்ப்பதும் இல்லை.  குறிப்பிட்ட சிலர் மட்டும் அவரைச் சென்று பார்க்கிறார்கள்.  ஆனாலும் அந்த அம்மையார் அந்தச் சின்னஞ்சிறு மாளிகையில் இருந்து கொண்டே சூத்திரக் கயிறைப் பிடித்து ஹஸ்தினாபுரத்து அரண்மனையின் ஆட்களை மட்டுமல்ல ஆட்சிப் பீடத்தையும் ஆட்டி வைக்கிறாள்.  அவளுக்கு எப்படி இத்தனை அதிகாரம்??  அவளால் தனக்கு எத்தனை கேடுகள் விளைந்திருக்கின்றன!

ஒவ்வொரு முறையும் சரியாக ஒரு வேலையைச் செய்து முடிக்க துரியோதனன் நினைத்தால் அது அப்படி முடியாது.  யாரேனும், எங்கிருந்தாவது சதியோ சூழ்ச்சியோ செய்து அவன் செய்வது அனைத்தும் தவறானது என அனைவரையும் நினைக்க வைத்துவிடுவார்கள்.  இது தான் கடந்த காலங்களில் நிகழ்ந்தவை.  இனி இப்படி நடக்க துரியோதனன் விட மாட்டான்.  அவனுடைய அனைத்து ஏமாற்றங்களும் அவன் தந்தை பிறவிக் குருடாகப் பிறந்ததில் இருந்தே ஆரம்பித்து விட்டது.  ஆரியர்களின் புராதனமான கோட்பாடுகள், நியதிகளின் படி பிறவிக் குருடான திருதராஷ்டிரன் மூத்த மகனாகப் பிறந்திருந்தாலும் அரியணை ஏற முடியாது.  ஏறக் கூடாது.  ஆகவே அவனுக்கு மறுக்கப்பட்டதன் காரணத்தால் துரியோதனனுக்கும் நியாயமாக அவனுக்குக் கிடைத்திருக்க வேண்டிய அரச பதவி மறுக்கப்பட்டு விட்டது.  அவனிடம் என்ன தகுதி தான் இல்லை?  ஒரு அரசனுக்கு வேண்டிய அனைத்து குணநலன்கள் மட்டுமில்லாமல், வீரம், கம்பீரம் அனைத்தும் நிரம்பியவனாய் அவன் இருக்கையில் அவனுக்கு அரச பதவி கிடையாது  என்பதை நினைத்துக் கூடப் பார்க்க முடியவில்லை.   ஆனால்,,,, ஆனால் அவன் இளமையில் இதை எல்லாம் நினைத்துக் கூடப்பார்க்கவில்லை.  தந்தை குருடராக இருந்தால் என்ன?  வேறு யாரும் இல்லை என்பதால் அடுத்துத் தான் யுவராஜாவாக ஆகிவிடுவோம் என்றே நம்பிக் கொண்டிருந்தான்.

அவனுடைய அந்த ஆசையிலும் ஒரு நாள் மண் விழுந்தது.  அந்த வியாசன் எங்கிருந்தோ இந்த ஐந்து சகோதரர்களையும் பாண்டவர்கள் என்னும் பெயர் சொல்லி ஹஸ்தினாபுரத்துக்கு அழைத்து வந்து விட்டார்.  இங்கே அறிமுகமும் செய்தார்.  கூட அவன் சின்னம்மா குந்தி தேவியும் இருந்தார்கள்.  இன்னொரு சின்னமா மாத்ரி அவன் சிற்றப்பன் பாண்டுவோடு உடன்கட்டை ஏறிவிட்டார்களாம்.  கூடவே இந்த ஐந்து சகோதரர்களையும் அழைத்துச் சென்றிருக்கக் கூடாதோ!  அவர்கள் வந்ததும், தாத்தா பீஷ்மருக்குத் தான் என்ன சந்தோஷம்! அளவு கடந்த சந்தோஷம்.  அதைவிட அதிகம் சந்தோஷப்பட்டது அந்த மாட்சிமை பொருந்திய மஹாராணி சத்யவதி அம்மையார் தான்.  இந்தப் புதுப் பேரன்களைப் பார்த்ததும் அவர்களுக்கு எங்களை எல்லாம் மறந்தே போய் விட்டது.  அதுதான் போகட்டும் என்றால் பாண்டவர்களின் மூத்த சகோதரன் யுதிஷ்டிரன் தான் யுவராஜா பதவிக்குப் பொருத்தமானவன் என்று முடிவும் செய்து அவனுக்கு யுவராஜப் பட்டாபிஷேஹமும் பண்ணி விட்டார்களே!  அநியாயம், அநியாயம்!

அந்தப் பிள்ளைகள் பிறந்த விதம் குறித்துப் பல்வேறு பேச்சுக்கள் நிலவி வந்தாலும் அனைவருமே அவனை அவன் சிற்றப்பன் பாண்டுவின் புத்திரர்கள் என்றே ஏற்றுக் கொண்டுவிட்டனர்.  ஆனால் ஒரு விஷயம் மறுக்கவே இயலாது.  அந்தப் பாண்டவர்கள் அனைவரும் எத்தனை அழகாக, கம்பீரமாக, முகத்தில் ஒளி வீச, புத்திசாலிகளாக இருந்தனர்; ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் புத்திசாலிகள் தான்.  மறுக்கவே முடியாது.  அவர்கள் இப்படி எல்லாம் இருந்தால் நான் மட்டும் என்ன குறைந்தா போய்விட்டேன்!  அவர்களுக்கு ஈடு கொடுக்கக் கூடிய அளவுக்கு மேல் வீரம், கம்பீரம், புத்திசாலித்தனம் எல்லாம் என்னிடமும் இருக்கத் தான் செய்கிறது.  ஆனால், அந்தப் பாண்டவர்கள் ஹஸ்தினாபுரத்து மக்களுக்கும், அரசவையினருக்கும், படைவீரர்களுக்கும் செல்லப் பிள்ளைகளாகவன்றோ இருந்தனர்!  ஏன் அவன் தாயான காந்தாரிக்குக் கூடப் பாண்டவர்களிடம் சொல்லவொண்ணா அன்பும், பாசமும் இருக்கத் தானே செய்தது.  அப்புறம் பாட்டனார் பீஷ்மரையும், கொள்ளுப்பாட்டியார் சத்யவதி தேவிக்கும் கேட்பானேன்!  அவர்கள் வெளிப்படையாகவே பாண்டவர்களின் பக்கமே துணை நின்றனர்.  அவர்களுக்கு ஆதரவாகவே செயல்பட்டனர்.

இவர்கள் ஐந்து பேரிலும் பீமனைக் கண்டால் தான் துரியோதனனுக்கு சுத்தமாகப் பிடிக்காது.  அவனைக் கண்டாலே வெறுப்பு வரும்.  'என் வாழ்க்கையையே நாசம் செய்யவென்று பிறந்திருக்கிறான்.  என் வாழ்வின் மிகப் பெரிய சாபம் அவன் தான்.  எவ்வளவு முயற்சிகள் செய்து பார்த்தும் அவனை வெல்ல என்னால் முடியவில்லை. ' துரியோதனனும் அவனை வெல்ல ஒவ்வொரு முறையும் முயன்றும் அந்த பீமன்  எப்படியோ ஏதேதோ தந்திரங்கள் செய்து ஒவ்வொரு முறையும் அவனை அவமானப்படுத்தும் வகையில் ஏதேனும் செய்து விட்டு அவனே வென்றதாகக் காட்டிக் கொள்வான். ஹூம், இந்த ஐந்து சகோதரர்களுக்கும் ஹஸ்தினாபுரத்தில் என்ன வேலை! எதுவுமே இல்லை.  அவர்கள் இருக்க வேண்டிய இடம் ஹஸ்தினாபுரமும் இல்லை. இது சர்வ நிச்சயம்.  


கேவலம், கேவலம், அவர்கள் ஐவருமே அவன் சிற்றப்பன் பாண்டுவின் மூலம் பிறந்த குழந்தைகள் அல்ல என்று அரண்மனை வளாகமே தங்களுக்குள்ளாகப் பேசிக் கொள்கிறார்கள்.  அவர்கள் ஹஸ்தினாபுரம் வந்த நாளில் இருந்து துரியோதனன் இது குறித்து அறிவான்.    ஆமாம், ஆமாம், அவர்கள் பாண்டுவின் புத்திரர்கள் அல்ல. அதை துரியோதனன்  நன்கறிவான்.   அவர்கள் ஐவரையும் அவர்கள் இருக்கும் உயர்ந்த இடத்திலிருந்து அகற்றுவது ஒன்று தான் தர்மம்.  அது தான் நியாயம், நீதி.  சரியான முறை.  ஆனால்….ஆனால்….. அவர்களை அகற்ற முயலும்போதெல்லாம் துரியோதனன் தோல்வியையே அடைந்தான்.    நீதியையும், நியாயத்தையும், தர்மத்தையும் நிலை நாட்ட விரும்பிய துரியோதனன் ஒவ்வொரு முறை அவர்களை அகற்ற முயலும்போதெல்லாம் தவறாகவே போய்க் கொண்டிருந்தது.

ஆனால் ஒரு விஷயத்தில் “நான் அதிர்ஷ்டக்காரனே!” என துரியோதனன் நினைத்தான்.  அதை வாய்விட்டும் சொல்லிக் கொண்டான்.  ‘தேரோட்டி மகன் என்று அனைவராலும் அறியப்படும் கர்ணன், எத்தனை மாபெரும் வீரன், அதோடு அவன் முக விலாசமும் இந்தப் பாண்டவர்களைப் போலவே கம்பீரம், இளமை, அழகு, ஒளி பொருந்தியதாகக் காண்கிறது அல்லவா?  இந்த மக்களுக்கு அது தானே பிடிக்கும்!  அத்தகைய அழகும், கம்பீரமும் வாய்ந்த வீரத்தில் அந்த அர்ஜுனனுக்கு நிகரானவனாகக் கருதப்படும் கர்ணன் என் ஆருயிர் நண்பன் அல்லவோ!  அதோடு மட்டுமா!  மாபெரும் வில்லாளியும் துரோணாசாரியாரின் ஒரே மகனும் பிரம்மாஸ்திரப் பிரயோகம் தெரிந்தவனும் ஆன அஸ்வத்தாமா என் நண்பன் அல்லவோ!  இதனால் துரோணர் கூட எனக்குக் கட்டுப்பட்டவர் ஆகிவிடுகிறாரே!  என் மாமா ஷகுனியைப் போன்றதொரு ராஜதந்திரியைக் காணத் தான் முடியுமா!   இந்த ஹஸ்தினாபுரத்து ராஜசபையின் அனைத்து ராஜ தந்திரிகளின் அறிவை எல்லாம் ஒன்று சேர்த்தால் கூட ஷகுனி மாமாவின் ராஜ தந்திரத்துக்கு ஈடு, இணையாகுமா!  என் அருமைச் சகோதரன் துஷ்சாசனன், அவன் மட்டும் எதில் குறைந்தவன்!  நான்  சொன்னால் உடனே அதைச் செய்து முடிப்பான்.  எப்போதும் என் ஆணைகளை எதிர்பார்த்துக் காத்திருப்பான்.  நான் காலால் இட்ட வேலைகளைத் தலையால் செய்து முடிப்பான்.  வேறென்ன வேண்டும் எனக்கு!’

முதலில் எல்லாம் இந்த ஐந்து சகோதரர்களையும் அழித்து முடிக்க எவ்வளவோ முயற்சிகள் செய்தும் எதுவும் நடக்கவில்லை.  நீண்ட நாட்கள் அப்படியே போய் யுதிஷ்டிரன் யுவராஜாவாகக் கூட ஆகிவிட்டான்.  அந்தச் சமயத்தில் தான் ஒரு முறை கங்கையில் ஒரு நீச்சல் போட்டியில் அந்தப் பொல்லாத பீமனைக் கழுத்தை நெரித்துத் தண்ணீரில் அமுக்கிக் கொல்ல ஒரு வாய்ப்புக் கிடைத்தது.  அப்படியே செய்தும் விட்டான்.  ஆனால் அனைவரும் ஆச்சரியப்படும்படியாக அந்தப் பொல்லாதவன் உயிருடன் வந்துவிட்டான். முன்னை விட பலமும், வலிமையும் வாய்ந்து திடகாத்திரனாகவும் தென்பட்டான்.  அவனைக் கண்டதும் அனைவருக்கும் ஏற்பட்ட மகிழ்ச்சி! ம்ஹூம், துரியோதனனால் அதை மறக்கவே முடியாது.  யுதிஷ்டிரன் யுவராஜாவாக ஆன பின்னர் கடைசிக் கடைசியாக அவர்கள் அனைவரையும் கொல்ல ஒரு வாய்ப்புக் கிடைத்தது.  ஏகமாகப் பணம், நகைகள், ரத்தினங்கள் என்று கொடுத்து ஒரு கொலைப்பட்டாளத்தையே ஏற்பாடு செய்திருந்தான் துரியோதனன்.   'ஆனால் அந்த விதுரன், துறவி போல் வேஷம் போடுபவன், ஹூம், அவனும் எனக்குச் சிற்றப்பனாம்!  அந்த வேஷக்காரனுக்கு எப்படியோ மூக்கில் வேர்த்து விட்டது.  நான் போட்ட திட்டத்தைக் கண்டறிந்து அந்தக் கிழவன் பீஷ்மனிடம் போய்ச் சொல்லிவிட்டான்.   அந்தக் கிழவன் தலையிட்டு, இந்தப்பாண்டவர்களை வாரணாவதத்துக்கு நாடு கடத்தியதோடு முடிந்து போயிற்று அந்த விஷயம். '

துரியோதனன் பெருமூச்செறிந்தான்.




Saturday, March 29, 2014

சுயம்வர ஏற்பாடுகளில் காம்பில்யம்!

இந்திரனின் அமராவதி நகருக்கொப்பானதொரு புத்தம்புதிய அழகிய நகரம் கங்கைக்கரையில் நிர்மாணிக்கப்பட்டிருந்தது.  சுயம்வரத்திற்கு வரும் விருந்தினர் தங்கவென அழகான மாளிகைகள் தாற்காலிகமாக ஏற்படுத்தப்பட்டன.  அதைத் தவிரவும், கூடாரங்கள், உத்தியானவனங்கள் அதனூடே அழகிய பர்ணசாலைகள், குடிசைகள், என்றும் காணப்பட்டன. ஆங்காங்கே பல தேசத்து அரசர்களின் கொடிகளும் கொடிக்கம்பங்களில் ஏற்றப்பட்டுக் காற்றில் சடசடத்துக் கொண்டிருந்தன.  வானவில்லின் வர்ணங்களைப் போன்ற வண்ண, வண்ணக் கொடிகளைப் பார்த்தால் அங்கே ஏதோ இந்திரஜாலம் , மகேந்திர ஜாலம் போல் வர்ண ஜாலங்கள் நிகழ்கின்றனவோ என நினைக்கத் தோன்றியது.


மன்னர்கள் பயணம் செய்து வந்த பல்வேறு வகையான ரதங்கள், அவற்றில் கட்டப்பட்டிருந்த குதிரைகள், இன்னும் சில மன்னர்கள் வந்த யானைகள். அவற்றின் பாகர்கள், மன்னர்களுக்கென விசேஷமாக அலங்கரிக்கப்பட்ட மாட்டு வண்டிகளில் வந்த சிறப்பான உணவு வகைகள், அவர்கள் உடுத்தும் பட்டுப் பட்டாடைகளைத் தாங்கிய வண்டிகள் என அந்தப் புதிய நகரமோ கோலாகலத்தில் ஆழ்ந்திருந்தது.   வந்திருந்த ஒரு சிலர் ஆங்காங்கே வீரநடை போட்டுக் கொண்டிருக்க இன்னும் சிலர் கங்கைக்கரையின் மணலில் படுத்து ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தனர்.  வந்திருந்த பெரும்பாலான அரசர்கள் தங்கள் சொந்த சமையலறையைஅங்கே ஏற்படுத்திக் கொண்டனர்.  இதன் மூலம் தங்களுடன் வந்திருந்த வீரர்கள், வேலையாட்களுக்கு மட்டுமில்லாமல் அக்கம்பக்கத்து ஏழைகள் மற்றும் உண்ண உணவு கிடைக்காத பிராமணர்களுக்கும் உணவிடலாம் என்னும் எண்ணம் தான் காரணம்.

ஆங்காங்கே பொருட்கள் விற்பவர்கள், காய், கனிகள் விற்பவர்கள், பூக்கள் விற்பவர்கள், அலங்காரப் பொருட்கள் விற்பவர்கள் எனப் பலரும் கூடாரங்களை அமைத்துத் தங்கள் பொருட்களை விற்பனைக்கு விளம்பரமும் செய்தனர்.  கொஞ்சம் தள்ளி ஓர் ஓரமாக மாமிசம் விற்கும் கடைகளும், மீன்கள் விற்கும் கடைகளும் கூடக் காணப்பட்டன.  கூட்டத்தை வசீகரிக்கவும், அங்குள்ள மக்களுக்குப் பொழுதுபோக்கவும், ஆங்காங்கே உள்ளூர் மல்யுத்த வீரர்களும், கழைக்கூத்தாடிகளும் பற்பல வேடிக்கை விநோதங்களைக் காட்டி மகிழ்வித்தனர்.  ஜோசியர்கள் ஆங்காங்கே மன்னர்களின் கூடாரங்களுக்கு வெளியே மன்னர்களின் தரிசனத்துக்குக் காத்து நின்றனர்.  இவர்களைத் தவிரவும் ஒரு சில தபஸ்விகளும், படித்த அந்தணர்களும் நெற்றியில் விபூதிப் பட்டையைப் பூசிக் கொண்டு மன்னர்களுக்கும், இளவரசர்களுக்கும் இன்னும் மற்றப் பொதுமக்களுக்கும் தங்கள் ஆசிகளை வழங்கிக் கொண்டிருந்தனர்.

அதோ, அந்தக் கூடாரத்தின் மேலே சர்ப்பக் கொடி பறக்கிறதே.  இது யாருடைய கூடாரம்?  கூடாரம் அலங்கரிக்கப்பட்டிருந்த முறையையும், வெளியே நின்று காவல் காத்துக் கொண்டிருந்தவர்களையும் பார்த்தால் ஏதோ சாம்ராஜ்யச் சக்கரவர்த்தியாக இருக்கலாமோ?  உள்ளே போய்த் தான் பார்ப்போமே! உள்ளே சென்றால் ஆஹா, அங்கிருந்த ஒரு பாயின் மேல் துரியோதனன் அன்றோ படுத்திருக்கிறான்!  அவன் உடலில் மல்யுத்தக் கச்சை மட்டுமே அணிந்திருந்தான்.  இது என்ன?  யாருடனாவது மல்யுத்தப் போட்டிக்குத் தயாராகிறானோ?  ம்ஹூம், இல்லை. இல்லை.  இதோ இந்த ஆட்கள் அவன் உடலில் ஏதோ எண்ணெயைத் தடவி உடலைப் பிடித்து விடுகின்றனர்.   ஆம், அங்கே துரியோதனன் தனக்கு நெருக்கமான இரு மல்யுத்த வீரர்களைக் கொண்டு தன் உடலில் எண்ணெய் தடவிப் பிடித்துவிடுமாறு ஏற்பாடுகள் செய்திருந்தான்.  அவர்கள் அதைக் கவனமாகச் செய்து கொண்டிருந்தனர். போட்டி குறித்த சரியான தகவல் இன்னமும் தெரியவில்லை.  ஆனால் எதற்கும் முன்னேற்பாடாக ஒருவேளை மல்யுத்தப் போட்டி எனில் தயாராகத் தன் உடல் இருக்க வேண்டியவற்றை துரியோதனன் செய்து கொண்டிருந்தான். கதாயுதப் போட்டி என்றாலும் அவன் தயாரே!  ஒரே நிமிடம் முன் கூட்டிச் சொன்னால் போதும்.  வில் வித்தைப் போட்டி என்றாலும் துரியோதனன் தயாராகவே வந்திருந்தான்.

பார்க்க மிகவும் சாந்தமாகத் தன் உடலைக் காட்டிக் கொண்டு படுத்திருந்த துரியோதனன் மனதிற்குள்ளாக மிகவும் கொந்தளித்துக் கொண்டிருந்தான். இன்னும் இரு நாட்களுக்குள்ளாக நடைபெறப் போகும் சுயம்வரத்தைக் குறித்து யோசித்துக் கொண்டிருந்தான்.  அவன் சற்றும் பொறுமையின்றி அந்த நாள் எப்போது வரும், எப்போது தான் திரெளபதியை அடைவோம் என நினைத்து நினைத்து உள்ளூரத் துடித்துக் கொண்டிருந்தான்.  அவனுடைய எதிர்காலமே அவன் திரெளபதியை சுயம்வரத்தில் வெல்வதில் தான் அடங்கியுள்ளது என நினைத்தான்.  காம்பில்யத்திலோ குரு வம்சத்து இளவலை சுயம்வரத்தின் போது எதிர்பார்க்கவே இல்லை.  தங்கள் அழைப்பை குரு வம்சத்தினர் ஏற்றுக் கொண்டு யுவராஜாவையே அனுப்பி வைப்பார்கள் என நினைக்கவும் இல்லை. துருபதன் வழக்கம்போலவே அமைதியாக இருந்தான்.  ஆனாலும் துரியோதனனை வரவேற்றதில் எவ்விதக் குறையும் வைக்கவில்லை.  அவன் கலகலப்பாக இல்லை என்பதும் புரிந்து கொள்ளக் கூடியதே.  அவனுடைய முதல் எதிரியான குரு துரோணாசாரியார் தான் இந்தக் குரு வம்சத்து இளவரசர்களின் குரு, வழிகாட்டி என்பதோடு அவர்களின் படைத் தளபதியும் கூட.  ஆகவே அவன் சாதாரணமாக இருப்பதை ஏற்க வேண்டியது தான். அவர்கள் வரும்போது பெரிய அளவில் மக்கள் கூட்டமாய்க் கூடி அவர்கள் அனைவரும் எப்படி இருக்கின்றனர் என்பதைக் கூர்ந்து கவனித்ததைக் கண்டான்.  குரு வம்சத்தினர் இந்த சுயம்வரத்திற்கு வந்திருப்பதே பெரிய அளவில் பேசப்படும் என எதிர்பார்த்த துரியோதனன் தன் பெயரை அவர்கள் அனைவரும் பயத்தோடும், ஆச்சரியத்தோடும் மெல்லக் கூறிக் கிசுகிசுப்பதையும் உணர்ந்தான்.  அவன் வேண்டியதும் அதுவே. அவன் வருகை குறிப்பிடத் தக்க அளவில் பேசப்பட வேண்டும்.  அவன் இருப்பை அனைவரும் உணர வேண்டும்.

அங்கு வந்த மன்னர்களின் படைகளிலும், கூட வந்த மனிதர்களிலும் துரியோதனனோடு வந்தவர்களே அதிகமாக இருந்தனர்.  அவனுடன் அவன் சகோதரர்கள் மட்டும் கிட்டத்தட்ட முப்பதுபேர் வந்திருந்தார்கள்.  அதோடு கூட காந்தார இளவரசன் ஆன அவன் மாமன் ஷகுனியும் தன் படைகளோடு வந்திருந்தான்.  அவன் நெருங்கிய நண்பனும் அங்க தேசத்து மன்னனுமான கர்ணன் தன் அழகான ரதத்தில் சூரியனைப் போல் தன் முகமும் கண்களும் ஜொலிக்கவந்தான்.  அவன் முகத்தையும், அதில் தெரிந்த ஒளியையும் கண்ட மக்கள் வியந்தனர். அவன் அழகும், கம்பீரமும் பார்க்கவே அவன் மாபெரும் வீரன் எனத் தெரிந்தது.  பெரிய மனிதர்களுக்கே உரிய பெருந்தன்மையான நடத்தையால் அனைவரையும் கவர்ந்தான்.  ஆகவே இவன் தேரோட்டியின் மகனா என அனைவரும் வியந்து ஆச்சரியத்தோடு அவனைப் பார்த்தனர்.


இவ்வளவு பேர் போதாதா என்னும்படிக்கு துரோணரின் மகன் அஸ்வத்தாமா தன் எடுத்துக் கட்டிய கூந்தலோடு, தோளில் வில்லும், அம்பும் தாங்கி ஒரு பிராமணனுக்குரிய கோலத்தோடு வந்தான்.  துருபதனின் முக்கிய எதிரியான துரோணரின் மகன் அவன்  என அனைவருக்கும் தெரிந்ததும் முதலில் திடுக்கிட்டனர்.  ஆனால் அஸ்வத்தாமா எதையும் லக்ஷியம் செய்யாமல் இருந்தான்.  தங்களைக் கட்டுப்படுத்திக்கொள்ள இயலாத மக்கள் ஒரு பிராமண ஆசாரியர் போர்ப்படைத் தலைவர் ஆக இருப்பதையும் அந்த  பிராமண ஆசாரியரின் ஒரே மகனும் இப்படியே இருக்கிறான் என்பதையும்  கண்டு வியந்து மற்றவரிடம் அதைக் குறித்துப் பேசிக் கொண்டனர்.  ஒருவர் மற்றொருவருக்குச் சொல்லி மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து அஸ்வத்தாமாவைப் பார்த்துச் சென்றனர்.  ஆனால் அஸ்வத்தாமாவின் கர்வமும், அகங்காரமும் கொண்ட போக்கு அவர்களை வெறுக்கச் செய்தது. இவனை யார் இங்கே கூப்பிட்டார்கள் என்னும் பொருள் தொனிக்கும் வண்ணம் அவர்கள் பேசிக் கொண்டதை அஸ்வத்தாமா ஒருவேளை கவனித்திருக்கலாம். ஆனாலும் அவன் காட்டிக்கொள்ளவில்லை.


Wednesday, March 26, 2014

க(அ)ண்ணன் காட்டிய வழியம்மா!

“சொல், பானுமதி, அதிலும் அந்த மனைவி உன்னை விட எல்லாவற்றிலும் உயர்ந்தவளாக வேறு இருப்பாள். உன்னுடைய இடத்தை அவள் பிடித்துக்கொள்வாள். “ என்றான் கண்ணன்.  பானுமதி வாயைத் திறப்பதற்குள்ளாக, ஷகுனி குறுக்கே புகுந்து, “இது ஒன்றும் பானுமதியை மட்டம் செய்வதற்கோ, அல்லது அவள் இடத்திற்கு திரெளபதியைக் கொண்டு வருவதற்கோ அல்ல வாசுதேவா!  நீ அறியாததா?  அரசகுலத்தினரின் திருமண நோக்கங்கள் முழுக்க முழுக்க ராஜரீக செயல்களையும், ராஜரீக செயல்களின் விளைவுகளையும் சார்ந்தது என்பது நீ அறியாத ஒன்றா?  அரசாங்கத்தின் நிலையான தன்மைக்காகவும், அதன் வலிமையை மேலும் பலப்படுத்தவும் இம்மாதிரித் திருமணங்கள் அரச குடும்பத்தினரிடையே சகஜம் தானே!” என்று தன் கட்சிக்கு வலு சேர்த்தான் ஷகுனி.

“நான் நன்கறிவேன் காந்தார இளவரசே, அரசர்கள், அரச குல இளவரசர்கள் ஆகியவர்களின் மனப்போக்கையும் அவர்கள் திருமணங்களைச் செய்து கொள்வதில் காட்டும் காரணங்களும் நான் நன்கறிந்தவையே. நான் ஒரு அரசனாக இல்லாதபோதும் இதை நன்கறிந்தே வைத்திருக்கிறேன்.” என்றான் கிருஷ்ணன்.  “ஆனால், காந்தார இளவரசே, என்ன தான் வலிமை வாய்ந்ததொரு ராஜ்யத்தின் ராஜகுமாரியாக இருந்தாலும் அவள் தான் மணப்பவனை விரும்ப வேண்டும் அல்லவா?  நானாக இருந்தால் என்னை விரும்புபவளைத் தான் மணப்பேன்.  அரசாங்கச் சதுரங்க விளையாட்டின் ஒரு பொம்மையாக இருக்கப் போகும் ராணியாக அல்ல. அரசியல் சதுரங்கத்தில் என் மனைவி வெட்டுப்படுவதை நான் விரும்புவதில்லை.” என்றான் கிருஷ்ணன்.

“ஆஹா, ஆஹா, நீ முற்றிலும் வித்தியாசமானவன் வாசுதேவா!  உன் மாட்சிமை நாங்கள் அறியாததா?  நீ அருமையானவன்.  அற்புதமானவன். திரெளபதியை மணந்து கொள்ள உனக்குக் கிடைத்த வாய்ப்பை நீ உதறித்தள்ளிவிட்டாய் என்பதை நாங்கள் அனைவருமே அறிவோம்.  இப்படி ஒரு மகத்தான தியாகத்தை உன்னை அன்றி வேறு யாரால் செய்ய இயலும்?” முகஸ்துதி செய்யும் தன் வழக்கத்தை விடாமல் கண்ணனையும் முகஸ்துதி செய்து பேசினான் ஷகுனி.

“திரெளபதியை என் கணவர், ஆர்யபுத்திரர், துரியோதனன் வென்று மணமுடிக்கவில்லை எனில் எனக்கு மிகவும் துக்கம் ஏற்படும். என் மனதில் மகிழ்ச்சி இருக்காது.  நான் என் கணவரின் மன மகிழ்ச்சிக்காக எதையும் செய்யத் தயாராக இருக்கிறேன். அவர் சந்தோஷமே என் சந்தோஷம். அண்ணா, என் அருமை அண்ணா, தயவு செய்து என்னை துக்கத்தில் ஆழ்த்தி விடாதீர்கள்.” என்று கெஞ்சினாள் பானுமதி. “எனக்கு அது தெரியாதா, நான் அறிவேன் பானுமதி!  உன்னை மகிழ்ச்சியாக வைத்திருக்க நான் எது வேண்டுமானாலும் செய்வேன். “விவரிக்க இயலா ஓர் உணர்வு கிருஷ்ணனின் குரலில் தொனித்தது.  அதிலிருந்து அவன் என்ன பொருளில் மேற்கண்ட வார்த்தைகளைச் சொல்கிறன் என்பது புரிந்து கொள்ள இயலவில்லை. அதற்குள் மீண்டும் ஷகுனி இடையே புகுந்து, “ஆமாம், ஆமாம், பானுமதி, நீ கவலைப்படாதே!  உனக்காகக் கிருஷ்ண வாசுதேவன் எதையும் செய்வான். உன்னை சந்தோஷமாக வைத்திருக்க அவன் உதவி செய்வான்.  யுவராஜாவுக்காக திரெளபதியை ஜெயிக்கவும் அவன் உதவுவதாக வாக்களிப்பான். “ என்று முடித்தான்.

கண்ணன் உடனடியாக ஷகுனியைப் பார்த்து, “தயவு செய்து என்னைத் தவறாக நினைக்காதீர்கள் காந்தார இளவரசரே!  என்னால் ஒரு வாக்குறுதியையும் இப்போது அளிக்க இயலாது.  அதிலும் பாஞ்சால இளவரசியை யுவராஜா துரியோதனனுக்குப் பெற்றுத் தருவதாக என்னால் உறுதி கூற இயலாது. என்னால் முடிந்தது எல்லாம் துரியோதனனின் தகுதிகளைக் குறித்து அங்கே தெரிவிப்பது ஒன்று மட்டுமே.”

“நீ மட்டும் அதை வற்புறுத்திச் சொன்னால் பாஞ்சால இளவரசி கட்டாயமாக துரியோதனனைத் தேர்ந்தெடுப்பாள்.” என்று ஷகுனி இடை மறித்தான். “சுயம்வரத்தில் திரெளபதியால் தேர்வு செய்து கொள்ள அனுமதி கிட்டவில்லை எனில், வழக்கம் போல் ஏற்கெனவே தேர்ந்தெடுக்கப்பட்டவனுக்கு மாலையிட வேண்டும் என்று நிர்ப்பந்தம் இருந்தால் தவிர,” என்ற கிருஷ்ணன் மேலும் ,” ஒரு வேளை சுயம்வரத்தில் போட்டி ஏதேனும் இருந்தால்??? அப்போது துரியோதனன் அதை வென்றே ஆகவேண்டும்.” என்று முடித்தான்.  “ஓஹோ, அப்படியா?  அப்படி எனில் சுயம்வரத்தில் போட்டித் தேர்வு வைக்கப் போகிறார்களா?  உறுதி தானா?” என்று ஷகுனி கேட்டான்.  “துருபதன் என்ன செய்யப் போகிறான் என்பது எவராலும் அறிய முடியா ஒன்று.” என்றான் கிருஷ்ணன்.

“துரியோதனன் எவராலும் தவிர்க்க இயலாத ஒரு மாபெரும் வீரன். ஆயுதப் பயிற்சிகளில் சிறந்தவன். அப்படிப் போட்டி என்று இருந்தால் அவனே நிச்சயமாக அதில் வெல்வான்.” ஷகுனி தீர்மானமாகச் சொன்னான்.   “போட்டி என ஒன்றிருந்தால், துரியோதனன் அதில் ஜெயிப்பான் என நானும் நம்புகிறேன்.” என்றான் கிருஷ்ணன்.

“ஆனால், அண்ணா, உங்களால் முடிந்ததை நீங்கள் செய்வீர்கள் தானே?” மிகவும் பரிதாபமாகக் கேட்டாள் பானுமதி. அவள் நிலையைப் பார்க்கவே சகிக்கவில்லை.  இதைச் சொல்கையில் ஓரக் கண்களால் ஷகுனியைப் பார்த்துக் கொண்டாள்.  ஏனெனில் ஷகுனியின் கண்கள் அவளையே நோட்டம் விட்டுக் கொண்டிருந்தன.  பானுமதியின் மேல் ஷகுனிக்கு நம்பிக்கை இல்லை என்பதை அந்தக் கண்கள் காட்டிக் கொடுத்தன.  பானுமதி தன் உள்ளத்து உணர்வுகளுக்கெல்லாம் ஒரு சவுக்கடி கொடுத்து அவற்றைக் கொன்று புதைத்துவிட்டுத் தான் இவற்றுக்குத் தயாராக வந்திருக்கிறாள் என்பதையும் ஷகுனி எவ்வாறோ அறிந்திருந்தான்.  ஆகவே அவள் கொஞ்சம் வேதனை கலந்த பயத்துடன், கண்ணனிடம், “எனக்குச் சத்தியம் செய்து கொடு சகோதரா, உன்னால் முடிந்ததைச் செய்வேன் என்று சத்தியம் செய்!” என்று கூறிக்கொண்டே தன் கரங்களை நீட்டினாள்.

“என் அருமைத்தங்கையே, என்னால் முடிந்ததைச் செய்கிறேன்.  கவலைப்படாதே!” என அவளுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் சிரித்த வண்ணம் கண்ணன் கூறினான்.  பின்னர்  மேலும் அவளிடம், “காந்தார இளவரசர் தான் என்னிடம் சந்தேகம் கொண்டிருக்கிறார்.   நான் உனக்கு உதவுவேனா, மாட்டேனா என்பதே சந்தேகமாக இருக்கிறது அவருக்கு.  நான் உனக்கு ஒரு உறுதிமொழி கொடுக்கிறேன் பானுமதி.  துரியோதனன் காம்பில்யத்துக்கு வந்ததும் நானே அவனை திரெளபதியைப் பார்க்க நேரில் அழைத்துச் செல்கிறேன்.  இது போதுமா?  இப்போது உனக்குத் திருப்தியா?   ஆனால் ஒரு விஷயம் இப்போதே சொல்லி விடுகிறேன்.  இந்தத் திருமணத்திற்காகப் போட்டி ஏதேனும் ஏற்பாடு செய்திருந்தார்களானால், துரியோதனன் அதில் தேர்ச்சி பெற்றால் தான் திரெளபதியை மணக்கலாம். அதற்கு நான் பொறுப்பல்ல!” என்றான் கண்ணன்.

ஷகுனி சிரித்தான்.  தன்னுடைய அபாரமான வாக்கு வன்மையில் அவனுக்கு மிகுந்த நம்பிக்கை இருந்தது.  தான் சொன்னால் அந்த இனிமையான சொற்களில் மயங்காதவர் எவர் என்னும் எண்ணம் கொண்ட அவன், கண்ணனிடம், “நீ மட்டும் என்னை அவளிடம் அழைத்துப் போய்விடு வாசுதேவா!  பிறகு பார்!  அதோடு யுவராஜா துரியோதனனையும், அவன் வீரத்தையும் குறித்தும் நீ திரெளபதியிடம் சிறப்பாகப் பேசி விடு.  அதன் பின்னர் எல்லாம் சரியாகிவிடும்.  அந்தப் பெண் திரெளபதி தானாகவே துரியோதனனைத் தேர்ந்தெடுத்துவிடுவாள்.  பானுமதி, உனக்கு நல்லதொரு அண்ணன் கிடைத்துள்ளான்.  மிகவும் அன்பானவனாகவும், பெருந்தன்மை உள்ளவனாகவும், நேர்மையானவனாகவும் உள்ளான்.  இப்படி ஒரு அண்ணன்கிடைக்க நீ கொடுத்து வைத்திருக்கிறாய். துரியோதனனுக்கும் மிகவும் நல்ல நண்பனாக அமைவான்.  இவனை விட நல்ல நண்பர்கள் துரியோதனனுக்கும் கிடைக்க மாட்டார்கள்.  வாசுதேவா, உன் தங்கையின் வாழ்க்கை இப்போது உன் கைகளில்.  அவள் சந்தோஷம் உன் கைகளில்!” என்றான் ஷகுனி.

“காந்தார இளவரசரே, பானுமதியின் சந்தோஷத்தைக் குறித்து துரியோதனனுக்குத் தான் முதலில் அக்கறை இருக்க வேண்டும்.  அவளை நான் தங்கையாக வரித்ததால் ஒரு அண்ணனாக எனக்கும் அந்தக் கடமை உண்டு.  “ ஷகுனியிடம் பேசினாலும் கண்ணன் கண்கள் பானுமதியையே அன்போடும், பாசத்தோடும் உன்னை நான் காப்பாற்றுகிறேன் என்னும் வாக்குறுதியோடும் பார்த்து ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்தன.  “இது உன் பெருந்தன்மையைக் காட்டுகிறது வாசுதேவா,” என்றபடியே கிளம்பத் தயாராக எழுந்து நின்றான் ஷகுனி.  பின்னர் கண்ணனுக்குத் தன் வணக்கங்களைத் தெரிவித்து விட்டுத் தன் மனைவியும், பானுமதியும் பின் தொடர அங்கிருந்து வெளியேறினான்.  அவர்கள் செல்கையில் பானுமதி மட்டும் கொஞ்சம் நின்று கண்ணனைத் திரும்பிப் பார்த்தாள்.  அவள் கண்கள் கண்ணீரால் நிறைந்திருந்தன.   அவளையே பார்த்துக் கொண்டிருந்த கண்ணன், சற்று தூரம் அவர்கள் சென்றதும், “அருமைத் தங்காய், நான் இப்போதெல்லாம் அனைத்தையும் மறந்து விடுகிறேன்.  அதிலும் நன்றிக்கடனைச் செலுத்துவதில் மறக்கலாமா?  இங்கே வா, உனக்காக ஒரு பரிசு வைத்திருக்கிறேன்.” என்று பானுமதியை அழைத்தான்.  பானுமதி ஓட்டமாய் ஓடி வந்தாள்.

கண்ணன் தன் கைகளில் போட்டிருந்த ஆபரணம் ஒன்றைக் கழட்டினான். சற்றே முன்னால் வந்து பானுமதியின் கைகளைப் பிடித்த வண்ணம் அதைப் போட்டுவிடக் குனிந்தான்.  குனிந்து அதை முடுக்கும்போது, அவள் காதுகளுக்கு மட்டுமே கேட்கும் மெல்லிய குரலில், “கவலைப்படாதே, நான் துரியோதனன் திரெளபதியை மணக்க முடியாவண்ணம் பார்த்துக் கொள்வேன்.  அவள் அவனுக்குக் கிடைக்கவே மாட்டாள்.” என்றான்.  இதைச் சொல்லிய வண்ணம் கங்கணத்தைப் போட்டு முடித்த கண்ணன் தலை நிமிர்ந்து பானுமதியைப் பார்த்தான்.  அவள் முகமே சந்தோஷத்தால் விகசித்துக் கிடந்தது.  அவள் கண்கள் முழுவதும் நன்றி வழிய கண்ணனைப் பார்த்தாள்.   பின் திரும்பிச் சென்றுகொண்டிருந்த ஷகுனியைப்போய்ச் சேர்ந்தாள்.

இரண்டு நாட்களில் பெளர்ணமி வந்தது.  அன்று பலராமன் ஒரு மாபெரும் படையோடு வந்து கண்ணனோடு சேர்ந்து கொண்டான்.  அவனுடன் யாதவத் தலைவர்கள் மட்டுமில்லாமல் நாகர்களின் தலைவர்கள், வீரர்கள் என வந்து சேர்ந்திருந்தனர்.  புஷ்கரத்தைப் போரிட்டுக் கைப்பற்றும் ஆவலில் வந்திருந்தனர்.  ஆனால் இங்கே வந்தாலோ, செகிதனா அங்கே வழக்கம் போல் ஆட்சி செய்து கொண்டிருக்கிறான்.  கிருஷ்ணனோ துரோணரின் விருந்தோம்பலில் திளைத்துக் கொண்டிருந்தான்.  இதை எல்லாம் பார்த்தவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.  என்றாலும் எந்தப் பக்கமும் ரத்தம் சிந்தாமல் கண்ணன் அடைந்த வெற்றி இருபுறமும் கொண்டாடப் பட்டது. எங்கும் ஒரே ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் தான்! ஒருவரை ஒருவர் கட்டி அணைத்து முகமன்கள் கூறிக் கொண்டு ஆடுவதும், வாத்தியங்களை முழக்குவதுமாக அங்கே கோலாகலமாக இருந்தது.  வீரதீர சாகசக் கதைகளைக் கூறும் நாட்டுப் பாடல்களைப் பாடுவோர் அவற்றைப் பாடி மகிழ்விக்க, மாலை வேளைகளில் நாட்டியங்களும் நடந்தன.   இரண்டு நாட்களுக்கெல்லாம் யாதவ அதிரதர்களோடும், பலராமனோடும்,இளவரசன் மணிமானுடைய படை வீரர்களோடும், கிருஷ்ணன் காம்பில்யத்தை நோக்கிக் கிளம்பினான்.  யாதவப் படைகளுக்கு பலராமனும், நாகர்களின் படைகளுக்கு மணிமானும் தலைமை வகித்தனர்.  அனைவரும் திரெளபதியின் சுயம்வரத்தில் கலந்து கொள்ளச் சென்றனர்.  அவர்கள் விடை பெற்றுச் செல்வதைப் பார்த்துக் கொண்டிருந்த துரோணாசாரியாருக்கு இந்த எளிமையான, குழந்தை போலிருக்கும் இளைஞன் கைகளில் தான் ஆர்யவர்த்தத்தின் எதிர்காலமே இருக்கிறது என்பது தெள்ளத் தெளிவாகப் புரிந்தது.

Tuesday, March 25, 2014

மஞ்சுவின் சந்தேகங்களுக்கு என்னுடைய பதில்!

//துரியோதனன் ஏற்கனவே பானுமதியை மணந்திருந்தும் திரௌபதியை சுயம்வரத்தில் வெல்ல முயற்சிப்பது ஏன்?//

துரியோதனன் பானுமதிக்கு முன்பே அவள் அக்காவை மணந்தவன். அவள் இறக்கவே பானுமதியை இரண்டாம் தாரமாகத் திருமணம் செய்து கொண்டான். ஆக துரியோதனனின் பெண்ணாசையும் இங்கே ஒரு முக்கியக் காரணம்.

அடுத்ததாக பானுமதி ஒரு அரசனின் மகள் தான்.  சக்கரவர்த்தியின் மகள் அல்ல.  சாமானிய ஒரு அரசன் மகளுக்கும், பெரும்புகழும், பாரம்பரியமும் வாய்ந்த சக்கரவர்த்தியின் மகளுக்கும் வேறுபாடுகள் உள்ளன அல்லவா! அதோடு ஆர்யவர்த்தம் என்றழைக்கப்பட்ட வடமாநிலப் பகுதிகளில் பெரிய அரசாக ஹஸ்தினாபுரத்துக் குரு வம்சத்தினரின் ராஜ்ஜியமும், பாஞ்சாலமும் தான் இருந்தது.  மகதம் பெரிய ராஜ்யம் தான் என்றாலும் அது கிழக்கு நாடாக இருந்ததால் ஆர்யவர்த்தத்தில் சேரவில்லை. ஒருசாம்ராஜ்யத்தின் இளவரசியை மணந்தால் தான் பின்னால் ஹஸ்தினாபுரத்து மன்னனாகையில் பலவிதங்களீலும் அனுசரணை கிடைக்கும் என்னும் ராஜரீகமான முடிவுகளும் இதில் ஒரு காரணமாக உள்ளது.

//துருபதன் துரோணாச்சாரியார் இருவரும் நண்பர்களாக இருந்து பகைவர்களாகிவிட்டனர்.. அந்த நிலையில் துரியோதனன் துரோணரின் மாணாக்கன்.. அவன் திரௌபதியை திருமணம் செய்ய சுயம்வரத்தில் கலந்துக்கொள்வதை துரோணர் தடுக்க நினைப்பது ஏன்?//

துரோணர் அங்கே முக்கியப் படைத் தளபதி என்பதோடு அல்லாமல் ஹஸ்தினாபுரத்தின் இளவல்கள் உட்பட அனைவருக்கும் ஆயுதப் பயிற்சி அளித்து வந்தார். முக்கிய முடிவுகள் அவரைக் கேட்டே எடுக்கப்பட்டன. மன்னனுக்கும், யுவராஜாவுக்கும் உள்ள அதிகாரம் அவருக்கும் இருந்தது. மேலும் குரு என்பதால் தனிப்பட்ட மரியாதையையும் பெற்றார். ராஜபோக வாழ்க்கை.  அவர் ஒரு காலத்தில் சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்டவர். அப்போது தான் துருபதனிடம் சென்று யாசிக்க நேர்ந்தது.  துருபதனும் அவர் யாசித்ததால் பொருள், பொன் என்று தருவதாகவும் நாட்டை எல்லாம் கொடுக்க முடியாது. சின்ன வயசில் விளையாட்டுத் தனமாகச் சொன்னதை எல்லாம் உண்மையாக்க இயலாது.  என் நாடு, என் மக்கள் அவர்கள் என்னை நம்பி இருக்கிறார்கள்.  இந்த நாட்டுக்கென ஒரு பாரம்பரியம் உள்ளது.  நாட்டைப் பிரித்து துரோணருக்குக் கொடுப்பதன் மூலம் அந்தப் பாரம்பரியத்தை உடைக்க முடியாது என்று சொல்லிவிடுகிறான்.  தீராப் பகை மூள்கிறது.  பகைவனை முழுசாக வெறுக்கிறார் துரோணர்.  அவன் மேலே வரக்கூடாது என எண்ணுகிறார்.  அப்படிப்பட்டவர் தன் சீடன் பகைவன் மகளைத் திருமணம் செய்து வந்தால் எப்படிப் பொறுப்பார்?  அதுவும் தினம் தினம் அரச மாளிகைக்கு வரும்பொதெல்லாம் பகைவன் மகளையும் பார்க்க நேரிடும்.  அவள் யுவராஜாவின் மனைவி என்ற வகையில் அவளுக்கு மரியாதை செலுத்த வேண்டும்.  துருபதனையும், அவன் மக்களையும் வைத்துப் பார்த்தால் அவர்கள் சுதந்திரமான மனப்போக்குள்ளவர்கள்.  ஆகையால் அவர்களை இவரால் அடக்கி ஆள முடியாது.    பகைவன் துருபதனோடு கெளரவர்கள் பெண் எடுத்து சம்பந்தம் செய்து கொண்டால் இவர் பகை நீடிக்க விடாமல் கெளரவர்கள் பார்த்துக் கொள்வார்கள்.  அப்போது இவர் நோக்கம் நிறைவேறாமல் போய்விடும். துருபதனை நாட்டை விட்டே ஓட்டவேண்டும் என்னும் அவர் நோக்கம் நிறைவேறாமல் போய்விட்டால்?  அதான் காரணம்


கண்ணனிடம் ஆலோசனைக்காகவோ அல்லது சாதிக்கவோ உதவிக்கேட்டு வரலாம் என்ற சந்தேகம் துரோணருக்கு ஏன் வந்தது?

பதிவுகளிலேயே இது குறித்து முன்பே வருகிறது.  துரோணரோடு பானுமதியின் சந்திப்பும், பானுமதி, துரியோதனன் பேச்சும், பின்னர் பானுமதிக்கு துரியோதனன் புஷ்கரம் செல்ல அனுமதி கொடுக்கும் காரணமும் ஏற்கெனவே வந்துவிட்டது.  துரோணர் இவற்றை எல்லாம் அறிந்தவரே என்பதால் நேரடியாகத் தெரியாவிட்டாலும் அவருடைய வயதுக்கும், புத்திசாலித் தனத்துக்கும் ஊகிக்க முடியுமே!  பானுமதியும் தான் கூட வந்திருக்கிறாள்.  வேறு என்ன காரணம் இருக்க முடியும்?


எல்லாம் அறிந்த கண்ணன் கண்டிப்பாக தர்மம் பிறழமாட்டான் என்ற நம்பிக்கை துரோணருக்கு ஏன் இல்லாமல் போய்விட்டது?

இந்தக் கதைப்படி கண்ணன் ஒரு சாமானிய மானுடன் தான். நம்மெல்லாரையும் போல.  அவன் நிகழ்த்திய அற்புதங்களை தர்க்க ரீதியாக ஆராய்ந்து சொல்லி வருகிறார் முன்ஷிஜி. ஆகவே அதை மனதில் வைத்துக் கொண்டும் படிக்க வேண்டும்.  அதோடு கண்ணனை இந்தக் கதைப்படி இப்போது தான் பார்க்கிறார் துரோணர். முன்னர் ஹஸ்தினாபுரம் சென்றபோது பார்க்கவில்லை.  அவனைக் குறித்த செவிவழிச் செய்திகள் தான் அவருக்குத் தெரியும். கண்ணன் நேரடியாகப் பாண்டவர்களுக்கு அத்தை வழி சகோதரனும் ஆவான்.  ஆகவே அவன் சார்புடையவனாக இருக்கலாம் என்ற எண்ணம் எல்லாருக்குமே வரும் தான்.  இங்கே துரோணருக்கோ பாண்டவர்கள் இறந்துவிட்டார்கள் என்று மட்டுமே தெரிந்திருந்தாலும் கெளரவர்களுக்குக் கண்ணன் உதவுவானோ என்ற எண்ணமும் இல்லாமல் போகவில்லை. யாதவர்களும், கெளரவர்களும் சேர்ந்திருந்தால் மாபெரும் பலமுள்ள ஒரு சாம்ராஜ்யம் உருவாகலாம் என்ற எண்ணமும் இருக்கலாம். ஆனால் கெளரவரகளின் நடத்தை துரோணருக்கே அதிருப்தியைத் தந்ததால் கண்ணன் அதை ஆதரிப்பானா என்ற நியாயமான சந்தேகம் அவருக்கு வந்தது. ஆகவே ஒரு கால் கண்ணன் தர்மத்துக்கு முரணாக நடப்பானோ என நினைத்திருக்கலாம்.

Monday, March 24, 2014

பானுமதியின் கலக்கமும், கிருஷ்ணனின் சந்தேகமும்!

அடுத்த நாள் காலை!  காசிராஜனும் மகளும், துரியோதனனின் மனைவியுமான பானுமதி கண்ணனின் கூடாரத்துக்கு விஜயம் செய்தாள்.  தனியாக அல்ல! ஷகுனியும், ஷகுனியின் மனைவியும் உடன் இருக்க வந்த பானுமதி இளைத்துப் போய் உடல், முகமெல்லாம் வெளுத்துப் போய்க் காணப்பட்டாள். அந்நிலையிலும் அவளிடம் இருந்த நளினமான எழில் கண்ணன் மனதில் பதிந்தது.  அவள் ஏதோ தயக்கமாக, கலக்கமாகவும் இருந்தாள் எனத் தெரிந்து கொண்டான் கண்ணன்.  நொடிக்கு ஒரு முறை ஷகுனியைத் தன் பயந்த கண்களால் மருட்சியுடன் பார்த்துக் கொண்டிருந்தாள். இதைக் கண்டு கண்ணனுக்கு உள்ளூர வியப்பு ஏற்பட்டது.  முல்லைக்கொடியைப் போன்று துவண்டு இருந்த அவள் இன்னமும் வளைந்து கிருஷ்ணன் காலைத் தொட்டுத் தன் கண்களிலும் உச்சந்தலையிலும் ஒற்றிக் கொண்டாள்.  பல நாட்கள் சென்று தன் மூத்த அண்ணனைப் பார்க்கும் ஒரு சகோதரி எப்படி வணங்குவாளோ அப்படியே அவள் நடந்து கொண்டதைக் கண்ணன் கவனித்துக் கொண்டான்.   எப்போதும் போல் தன் வளவள குரலில், பேசின ஷகுனி, “இளவரசி பானுமதி உன்னைப் பார்க்கவேண்டியே வந்துள்ளாள் வாசுதேவா.  நீ அவளையும் ஒரு சகோதரியாக ஏற்றுக் கொண்டது தெரியும்.  அதோடு நீ எப்போதும் அவளிடம் நல்லமுறையிலேயே நடந்தும் வருகிறாய்!” என்று சொன்ன ஷகுனி தன் கால்களை ஒன்றன்மேல் ஒன்றாகப் போட்ட வண்ணம் அருகிலிருந்த ஓர் ஆசனத்தில் நன்றாகச் சாய்ந்து அமர்ந்தான்.  “அது மட்டுமா?  யாதவர்களிலேயே தலை சிறந்த வீரனான ஒருவனால் தங்கையாக வரிக்கப்பட எவர் தான் விரும்ப மாட்டார்கள்?” என்று கண்ணனை முகத்துதியும் செய்தான்.  அவன் இச்சகமாகப் பேசுவதைக் கண்ணன் நன்கு புரிந்து கொண்டான்.

கிருஷ்ணன் அவள் பக்கம் திரும்பி, “யுவராஜா துரியோதனன் எப்படி இருக்கிறார்?” என்று கேட்டான்.  ஷகுனியைத் திரும்பிப் பார்த்த பானுமதி மிகுந்த தயக்கத்துடன் கிருஷ்ணனை நேருக்கு நேர் ஒரு நொடி பார்த்துவிட்டு உடனே தன் தலையைக் குனிந்து கொண்டாள். அவள் குறிப்பாக உணர்த்தும் செய்தியைப் புரிந்து கொள்ள யோசித்தான் கிருஷ்ணன். “ஆர்யபுத்திரர் நன்றாகவே இருக்கிறார்!”மெல்லிய குரலில் கூறினாள் பானுமதி.  “தன் ஆசிகளை உங்களுக்கு அனுப்பி இருக்கிறார்!” ஷகுனியைத் திரும்பிப் பார்த்துத் தான் இதுவரை சரியாக நடந்திருக்கிறோமா என்பதை அவன் பார்வையின் மூலம் தெரிந்து கொள்ள முயன்றாள். பின்னர் மீண்டும் கண்ணனிடம்,”ஆர்யபுத்திரர் மிகவும் நல்லவர்;  அவர் தான் என்னை இங்கே உங்களைச் சந்திக்கச் சொல்லி அனுப்பி வைத்திருக்கிறார்.  என் அண்ணன் கிருஷ்ண வாசுதேவரை இதனால் தான் நான் சந்திக்க முடிந்தது.”

“ஆ, அது அவரின் உயர்ந்த குணத்தைக் காட்டுகிறது!” என்றான் கிருஷ்ணன்.  உடனடியாகச் சற்றும் தாமதிக்காமல் அதை ஆமோதித்த ஷகுனி, “உன்னிடம் துரியோதனன் மிகுந்த மரியாதையும், பாசமும் கொண்டிருக்கிறான் வாசுதேவா!  பார்க்கப் போனால் இங்கே உன்னை வரவேற்கவும், விருந்துபசாரம் பண்ணவும் அவனே நேரில் வந்திருக்க வேண்டும்.  ஆனால் அங்கே ராஜரிக காரியங்களில்  மிகவும் மும்முரமாக ஆழ்ந்து போயிருக்கிறான். பானுமதியிடம் உனக்காக ஒரு செய்தியைக் கொடுத்தனுப்பி இருக்கிறான். இதோ இப்போது அவளே உன்னிடம் சொல்வாள்!” என்றான் ஷகுனி.   இதன் மூலம் பானுமதி தான் வந்த காரியத்தை நினைவோடும், துணிவோடும் செய்ய ஓர் அடித்தளம் அமைத்தும் கொடுத்தான் ஷகுனி.  ஆனாலும் பானுமதியின் கைகள், நடுங்கின.  அவளால் பேச முடியவில்லை.  உதடுகளும்  நடுங்கின. அவள் மகிழ்ச்சியுடனோ அல்லது சுயவிருப்பத்துடனோ இங்கு வரவில்லை என்பதையும், அவளுக்கு ஏதோ போதிக்கப்பட்டு அனுப்பப் பட்டிருக்கிறாள் என்பதையும், அதைச் சொல்ல முடியாமல் அவள் தவிப்பதையும் கண்ணன் நன்கு புரிந்து கொண்டான்.

அவளிடம் சமாதானமாகப் பேசினான் கண்ணன்.  ஒரு குழந்தையைக் கேட்பது போல் அவளைப் பார்த்து, “பானுமதி, தங்காய், பயப்படாதே, உனக்கு என்ன சொல்ல வேண்டுமோ, அல்லது என்ன கேட்க வேண்டுமோ அதை வெளிப்படையாக என்னிடம் சொல் அல்லது கேள்!  தயக்கமோ, வெட்கமோ வேண்டாம்!” என்றான்.  பானுமதி மிகவும் முயற்சி செய்து பேச ஆரம்பித்தாள். ஆனாலும் அவள் குரல் நன்கு கேட்காமல் மெதுவாகவே ஒலித்தது. “ஆர்யபுத்திரர் திரெளபதியை வென்று மணமுடிக்க உங்கள் உதவியை நாடுகிறார்.” என்று ஒருவாறு சொல்லி முடித்தாள்.  இதற்கு மேல் பானுமதியை தர்மசங்கடத்தில் ஆழ்த்தக் கூடாது என முடிவெடுத்த கண்ணன், உடனே ஷகுனியின் பால் திரும்பி, “ மாட்சிமை பொருந்திய காந்தார இளவரசே, இவ்விஷயத்தில் நான் என்ன செய்ய முடியும் என நினைக்கிறீர்கள்? சுயம்வரம் என்றால் அது சுயம்வரம் தான்.  அந்தப் பெண் தானே தனக்கு இஷ்டமான ஒருவனைப் போட்டி மூலம் தேர்ந்தெடுக்கப் போகிறாள்.  போட்டியில் வென்றவருக்கே அவள் மாலையிடுவாள்.  மணமகனைத் தேர்ந்தெடுப்பது முழுக்க முழுக்க இளவரசி திரெளபதியின் கைகளில் தான் இருக்கிறது.”  என்றான்.

“ஆனால், வாசுதேவா, நான் கேள்விப்பட்டது என்னவெனில்…… பாஞ்சால அரசன் துருபதனும், அவன் மகள் திரெளபதியும் உன்னிடம் மிகவும் மரியாதையும், பாசமும் வைத்திருக்கிறார்கள் என்றல்லவோ பேசிக் கொள்கின்றனர்!  நீ துரியோதனனின் கோரிக்கைக்குக் கொஞ்சம் அழுத்தம் கொடுத்து எடுத்துச் சொன்னாயானால் போதும், விஷயம் முடிந்தது. அவனுடைய நோக்கத்தில் அவன் வெற்றி பெற்றவன் ஆகிறான்.  இல்லையா பானுமதி?  இம்மாதிரி ஒன்று நடந்து விட்டால் போதுமே!  குரு வம்சத்தினருக்கும், பாஞ்சால வம்சத்தினருக்கும் இருந்து வரும் நீண்ட நாள் பகைமை ஒன்றுமில்லாமல் ஆகிவிடும்.  எல்லாம் பழைய கதையாகிவிடும்.” என்று சொல்லிவிட்டுத் தனக்குத் தானே சிரித்துக் கொண்டான் ஷகுனி! பதில் சொல்லச் சற்று அவகாசம் எடுத்துக் கொண்ட கண்ணன், “உங்கள் கோரிக்கையின் மூலம் நான் பெரிதும் தர்மசங்கடத்தில் ஆழ்ந்திருக்கிறேன். விநோதமான, புதுமையான கோரிக்கை, இல்லையா காந்தார இளவரசரே!   ஒரு தரம் பேசுகையில் பானுமதி தான் என்னுடைய தங்கை என்றும், என்னைத் தன் மூத்த அண்ணனாய்க் கருதுவதாகவும் சொல்லிவிட்டு, உடனே அடுத்தபடியாக துரியோதனன் மணந்து கொள்ள இன்னொரு மனைவி வேண்டும் எனவும் அவளை துரியோதனன் அடைய நான் ஒத்துழைக்க வேண்டும் என்றும் சொல்கிறாள்.  அதிலும் இந்த மனைவி மட்டும் துரியோதனனை மணந்தால் பானுமதி இருக்கும் இடமே தெரியாது!  அவள் இவளை வென்று விடுவாள்! அவள் ஆட்சி தான் நடக்கும்!” என்றான் கண்ணன்.  பின்னர் தன் வசீகரச் சிரிப்போடு பானுமதியைப் பார்த்து, “பானுமதி, நான் இப்போது என்ன செய்ய வேண்டும்?” என்று அன்போடு கேட்டான்.

மீண்டும் பானுமதி தலையோடு கால் நடுங்கினாள்.  அவள் பேச ஆரம்பிக்கையில் உதடுகளும் நடுங்கின.  “ஆர்யபுத்திரரின் விருப்பமே என் விருப்பம்.  திரெளபதியை மணக்கவேண்டும் என்பது அவர் விருப்பம்.  அதோடு மட்டுமல்ல, இவரை விடத் தக்க மணாளனை அந்த துருபதனால் தேடிக் கொடுக்க முடியுமா? குருவம்சத்து யுவராஜாவைக் காட்டிலும் உயர்ந்தவர் ஒருவர் உண்டோ?  நான் அவளை என் சொந்த சகோதரியைப்போல் வரவேற்று நட்புப் பாராட்டுவேன்.” இதைச் சொன்னாலும் பானுமதிக்குக் குரல் மேலெழும்பவே இல்லை.  இவளால் ஒரு போதும் பொய்யே சொல்ல முடியாது என நினைத்துக் கொண்டான் கண்ணன்.  “ஏற்கெனவே காசி தேசத்து ராஜகுமாரியான நீ மனைவியாக இருக்கையில் உன்னை விடவும் எல்லாவற்றிலும் உயர்ந்த ஒரு மணமகளை ஏன் துரியோதனன் விரும்புகிறான்?  அதுவும் நீ துரியோதனனுக்குப் பாத பூஜை செய்பவள் ஆயிற்றே.  அவனிடம் மாறாக்காதலும், பக்தியும் கொண்டவள் ஆயிற்றே! இவ்வளவு அழகான, இளமையான, பணிவான, அன்பான மனைவி இருக்கையில் இன்னொரு மனைவி ஏன்?” என்று கேட்டான் கிருஷ்ணன்.


Friday, March 21, 2014

ஆசாரியர்களில் சிறந்தவர் துரோணரே!

“உங்களிடமிருந்து அதைத் தெரிந்து கொள்ளத் தான் நான் வந்திருக்கிறேன், ஆசாரியரே!” கிருஷ்ணன் சற்றும் தாமதிக்காமல் பதில் கூறினான்.  ஆனால் அதை நான் பார்க்கும்போதும், உணரும்போதும் அதன் இருப்பைப் புரிந்து கொள்கிறேன்.  துருபதனிடம் உங்களுக்கு இருந்த வெறுப்பு எவ்வளவு அதிகம் என்பது எனக்குத் தெரியும்.  அப்படி இருந்தும், நீங்கள் அவன் மகனை உங்கள் மாணவனாக ஆக்கிக் கொண்டிருக்கிறீர்கள்.  நீங்கள் ஒரு புனிதமான பிராமணர் என்பது இதிலிருந்து தெரிய வருகிறது அல்லவா?  அதோடு மட்டுமா? துரியோதனன் உங்கள் அன்புக்கும், பாசத்துக்கும் உகந்த சீடன் என்பது அனைவரும் அறிந்ததே! அப்படி இருந்தும், நீங்கள் அவன் விருப்பத்தையும் மீறிப் புஷ்கரத்தை ஒப்படைக்க இங்கே நேரில் வந்துள்ளீர்கள்.  இவற்றிலிருந்து எல்லாம் தர்மம் என்ற ஒன்று இருப்பது எனக்கு நன்கு புலனாகிறது ஆசாரியரே!”

ஆசாரியரின் மனமாகிய சூரியன் சந்தேக மேகத்திலிருந்து வெளி வந்து பிரகாசித்தது.  சற்றும் சந்தேகம் கலக்காமல் ஆசாரியரின் மனதில் கண்ணன் பால் மாசு, மருவற்ற அன்பும்,மரியாதையும் பெருக்கெடுத்து ஓடியது.  கண்ணனின் இந்த வெளிப்படையான பேச்சைத் தன் மனதுக்குள் அவர் மிகவும் பாராட்டினார். ஆனாலும் சிரித்துக் கொண்டே, “வாசுதேவா, உனக்கு யாரை எவ்வாறு முகஸ்துதி செய்ய வேண்டும் என்பது நன்கு புரிந்திருக்கிறது. ஆனால் ஒரு விஷயம், உன்னை  நான் எச்சரிக்கிறேன்.  துருபதன் ஒருநாளும் என் சிநேகிதன் ஆக முடியாது.  அவனை என் சிநேகிதனாக நான் நினைக்க மாட்டேன்.  அது என்னுடைய தர்மம் அல்ல. “ என்றார்.

“ஆனால், ஆசாரியரே, நீங்கள் துரியோதனன் சுயம்வரத்தில் கலந்து கொண்டு திரெளபதியை வெல்ல அனுமதி கொடுத்துள்ளீர்கள்.  அப்படி நடந்தால் குரு வம்சத்தின் ராணியின் தந்தையை , பாஞ்சாலத்து அரசனை நீங்கள் மதித்துத் தான் ஆக வேண்டும்.  அவனோடு நட்புப் பாராட்டியே ஆக வேண்டும்.”

துரோணருக்குச் சீற்றம் மிகுந்தது. தன் புருவங்களை நெரித்துக் கொண்டே கண்ணனைப் பார்த்தார்.  கண்ணனைத் தவிர்த்து வேறு யாராக இருந்தாலும், எத்தனை உயர்ந்த இடத்தில் இருந்தாலும் அவர் இப்படிப் பொறுத்துக் கொண்டு இருக்க மாட்டார்.  ஆனால் கண்ணனின் நேர்மையான வெளிப்படையான பேச்சும், அவனுடைய வசீகரமான குரலும், உடல் மொழியும் சேர்ந்து கொண்டு அவன் செய்யும் பிரகடனங்களில் எந்தவிதக் குற்றங்களையும் கண்டு பிடிக்க முடியாமல் செய்தது.  சற்று நேரம் தாமதித்த அவர், பின்னர் பேச ஆரம்பித்தார்.  தன் மனதுக்குள் தீர்மானித்துக் கொண்டு திட்டமிட்டே பேச ஆரம்பித்தார்.

“வாசுதேவா, துரியோதனன் இந்த சுயம்வரத்தில் கலந்து கொள்வதில் எனக்குச் சிறிதும் உடன்பாடு இல்லை.  அவன் இதில் கலந்து கொள்வதன் மூலம் தன்னைத் தானே தாழ்த்திக் கொள்கிறான்.  என்னுடைய மாணாக்கர்களில் ஒருவன் இப்படி என் எதிரியின் மகளுக்காக நடத்தப்படும் சுயம்வரத்தில் கலந்து கொள்வதை உண்மையில் நான் எதிர்பார்க்கவில்லை.  அவ்வளவு ஏன்? துருபதனே குரு வம்சத்து இளவரசர்கள் சுயம்வரத்தில் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்த்திருக்க மாட்டான்.  ஆனால் என்ன காரணத்துக்காகவோ, துரியோதனன், துருபதனின் மகளை மணப்பதில் தீவிரம் காட்டுகிறான். அவளை மணந்து கொண்டே ஆகவேண்டும் என நினைக்கிறான்.  அவளை எவ்வகையிலேனும் சுயம்வரத்தில் வென்று மணக்க நினைக்கிறான்.  என்ன விலை கொடுத்தானும் இந்த சுயம்வரத்தில் வெல்ல நினைக்கிறான். “ மனம் முழுக்கக் கசப்புடன் பேசினார் துரோணர்.  கிருஷ்ணனின் மன ஓட்டங்களையும், அவன் மன ஆழத்திலிருக்கும் எண்ணங்களையும் தோண்டித் துருவிப் பார்ப்பது போல் தன் கண்களைச் சுருக்கிய வண்ணம் சற்று நேரம் அவனையே உற்றுப் பார்த்த துரோணர், “வாசுதேவா, ஒருவேளை துரியோதனனுக்காக திரெளபதியை சுயம்வரத்தில் வென்று தர வேண்டி உனக்கு வேண்டுகோள் விடுக்கப்படலாம்.  உன்னைக் கேட்டாலும் கேட்பார்கள்.” என்றார்.

இந்தப் பேச்சுக்குக் கண்ணன் நேரிடையாக பதில் சொல்வதைத் தவிர்த்தான். “ஆசாரியரே, நீங்கள் ஏன் திரெளபதியின் சுயம்வரத்திற்கும், அவளைக் குரு வம்சத்தினர் மணப்பதற்கும் எதிர்ப்பு தெரிவிக்கிறீர்கள்?  உங்கள் எதிரி துருபதன் தானே?  அவன் மகள் அல்லவே!  திரெளபதி மற்ற எல்லா ராஜகுமாரிகளையும் போல் சுயம்வரத்தின் மூலம் தன் கணவனைத் தேர்ந்தெடுக்க உரிமை பெற்றிருக்கிறாள்.  அதோடு திருமணம் ஆகிவிட்டால் அவள் தன் கணவனுக்கே தன் சேவைகளைச் செய்து வருவாள், மற்ற எல்லா ராஜகுமாரிகளையும் போல அவளும் நடந்து கொள்வாள் . ஒருக்காலும் தன் தகப்பனுக்காகப் பணிவிடைகள் செய்வதோ, தகப்பனுக்கு உதவிகள் செய்வதோ இருக்காது.  அவள் கணவனுக்கு அடங்கியே நடப்பாள்.”

“ஹா, வாசுதேவா, உனக்கு துருபதனையும் தெரியவில்லை;  அவன் குடும்பத்தினரையும் தெரியவில்லை. அவர்கள் அனைவருக்குமே உள்ளார்ந்த கர்வம் உண்டு;  அதோடு பழி வாங்கும் உணர்ச்சி அவர்கள் ரத்தத்திலேயே இருக்கிறது.  அப்படி ஒரு வேளை அந்த இளவரசி திரெளபதி ஹஸ்தினாபுரத்துக்கு மருமகளாக வந்தாளெனில் குரு வம்சத்தினரிடம் எனக்கு எந்த வேலையும் இல்லை.”திட்டவட்டமாகக் கூறினார் துரோணர்.

“ஓ, ஆசாரியரே, பாஞ்சால இளவரசி குரு வம்சத்தினரின் மாளிகைக்கு வருவதால் உங்கள் நிலைமை ஒன்றும் சீர் கெட்டுப் போய்விடாது.  எவ்வித மாறுதலும் ஏற்படாது.  இது நிச்சயம், ஆசாரியரே, நிச்சயம்.”

“வாசுதேவா, ஹஸ்தினாபுரத்தில் என்னுடைய நிலைமை குறித்தோ, என் அலுவல்கள் குறித்தோ மற்றவர்கள் தீர்மானிக்க வேண்டாம்;  அது எனக்குப் பிடிக்காது.  நான் அதை மற்றவர்களிடம் விடவும் மாட்டேன்.  துருபதனின் மகள் திரெளபதி ஹஸ்தினாபுரத்தின் மருமகளாக வந்தால் அந்தக் கணமே நான் ஹஸ்தினாபுரத்தை விட்டுச் சென்றுவிடுவேன்.  “ துரோணரின் குரலில் ஒரு விரக்தி தொனித்தாலும் கடுமை அதிகமாகத் தெரிந்தது.  கண்ணன் இத்தனை நேரம் பாசத்துடனும், பிரியத்துடனும் பேசிய துரோணரின் குரலில் ஏற்பட்ட மாற்றங்களை உற்றுக் கவனித்தான்.  இப்போது அந்தப் பிரியமோ, பாசமோ அவர் குரலில் தென்படவில்லை என்பதை உணர்ந்து கொஞ்சம் நிதானித்தான்;  யோசித்தான். பின்னர் அவரிடம், “ஆசாரியர்களில் சிறந்தவரே, தாங்கள் என்ன முடிவு எடுக்கிறீர்களோ அது நிச்சயம் சரியான முடிவாகத் தான் இருக்கும்.” என்றான்.

எந்தவித முகபாவத்தையும் காட்டாமல் இறுக்கமாக முகத்தை வைத்துக் கொண்டிருந்தார் துரோணர்.  இந்த விஷயத்தை மேற்கொண்டு விவாதித்துப் பேசும் அளவுக்கு அவர் மனம் தயாராக இல்லை.  “போகட்டும், துரியோதனன் தன்னால் ஆன முயற்சிகளைச் செய்து திரெளபதியை வெல்லப் போகிறான். என்ன நடக்கப் போகிறது என்பதை இனி தான் பார்க்க வேண்டும்.  ஒருவேளை உன்னுடைய உதவியோடு அவன் திரெளபதியை வெல்லலாம்.”

கண்ணன் சிரித்தான்.  “ஆசாரியரே, நீங்கள் நினைப்பது போல் துருபதனிடமோ, அவன் மக்களிடமோ, முக்கியமாக இளவரசி திரெளபதியிடமோ  எனக்கு அவ்வளவு செல்வாக்கெல்லாம் இல்லை!” என்றான்.”வாசுதேவா, என் மாணாக்கர்களில் ஒருவனுக்குத் தன் மகளை மனைவியாக அளிக்க துருபதனுக்குச் சொல்ல முடியாத ஆக்ஷேபணை இருக்கும் அல்லவா?  அவன் அதை வெளிப்படையாகச்  சொல்ல முடியாத ஒரு இக்கட்டாக நினைக்கலாம் அல்லவா?” துரோணர் கேட்டார்.  “தெரியவில்லை, ஆசாரியரே, துரியோதனன் சுயம்வரத்திற்கு வருவதாக ஒத்துக் கொண்டது அனைவர் மனதிலும் பற்பல மாற்றங்களை ஏற்படுத்தி இருக்கும்.  ஒவ்வொருவரும் போடும் கணக்குகள் மாறுபடலாம்.  எது எப்படி மாறும் என்பதை இப்போதே கணிக்க இயலாது. அதை என்னாலும் இப்போது சொல்ல முடியவில்லை!” என்றான் கண்ணன்.

“ஆஹா, நீ இருந்தும் கூடவா!” துரோணர் பொருள் பொதிந்த சிரிப்பொன்றை உதிர்த்தார்.  “ஆசாரியரே, எனக்குச் சரியென்று மனதில் படுவதைத் தான் நான் செய்வேன்;  செய்கிறேன்.  ஆனால் இது சரியா, தவறா என நிர்ணயிப்பது அந்த மஹாதேவன் ஒருவனுக்குத் தான் தெரியுமே அன்றி நமக்கெல்லாம் தெரியாது. எல்லாவற்றையும் அவன் தான் நிர்ணயிப்பான்.” இதைச் சொன்ன கிருஷ்ணன் கொஞ்சம் மெளனத்தில் ஆழ்ந்தான்.  பின்னர் தனக்குத் தானே பேசிக் கொள்வது போல, “சக்கரவர்த்தி பரதனின் குலத்தில் வந்த குரு வம்சத்தினரின் குடும்பம் ஒருக்காலும் தர்மத்திலிருந்து பிறழ்ந்து செல்லாது.  அதுவும் அந்தக் குலத்துக்கு ஆசாரியராக நீர் இருக்கையில் தர்மத்தின் பாதையிலேயே செல்லும்.  நீரன்றோ அவர்களின் படைகளை வழிநடத்துகிறீர்கள்.  பிராமணோத்தமரான உமக்குத் தெரியாததா!” என்று சொன்னான்.  துரோணரின் மனதில் மகிழ்ச்சி பொங்கியதை அவர் முகத்திலிருந்து ஊகிக்க முடிந்தது.  இவ்வளவு பிரமாதமான, அற்புதமான புகழுரையைக் கேட்டு அவர் முகம் புன்னகையில் மலர்ந்தது.  அதைத் தன்னுள்ளேயே தக்க வைத்துக்கொள்ள அவர் விரும்பினார்.  உண்மை, உண்மை.  துரோணர் ஒரு பிரசித்தி பெற்ற ஆயுதப் பயிற்சிகள் பெற்ற குருவாக இருப்பதால் எல்லாரையும் அடக்கி ஆள முடிகிறது.  அரச குலத்தவரையும் கூட!  யுவராஜா துரியோதனனையும்! இது குருவம்சத்தினரிடம் தான் செல்வாக்குடன் இருப்பதால் அன்றோ நடக்கிறது. வெளிப்படையாக துரோணர், “நான் என்னால் முடிந்ததைச் செய்கிறேன்.” என்று பதில் கூறினார்.   அவர் மனதுக்குள்ளே தன்னை விடச் சிறந்த ஆசாரியர் இருக்க முடியாது என்னும் எண்ணம் மேலோங்கினாலும், அதை வெளிப்படையாகக் காட்டிக் கொள்ளாமல் தான் விநயமாகப் பேசுவதாய்க் காட்டிக் கொண்டார்.  உண்மையில் துரோணாசாரியார் சிறந்தவர்களுக்கெல்லாம் சிறந்தவர் அன்றோ! இது தான் அவர் மனதில் நினைத்துக் கொண்டது.  அவர் முகம் மேலும் புன்னகையில் விரிந்தது.

தர்மத்தைத் தாங்கும் தூண் யார்?

துரோணருக்குக் கிருஷ்ணன் தன்னைப் பற்றிப் புகழ்ந்து சொன்னது மனதில் மகிழ்ச்சியையே தந்தாலும் வெளிக்காட்டிக்கொள்ளாமல் எச்சரிக்கையுடனேயே இருந்தார்.  ஒரு புன்னகையை மட்டும் பதிலாகச் சிந்திய துரோணர், “ஆஹா, இப்படி ஒரு நம்பிக்கை என்னிடம் இருப்பதால் தான் நீ ஷிகண்டினையும் என்னிடம் அனுப்பி வைத்தாயா, வாசுதேவா?” என்று கேட்டார்.  “நான் அப்படிச் செய்யவில்லை எனில், இது வேறுவிதமாக மாறி இருக்கும் ஆசாரியரே! ஷிகண்டின் எப்படி இருக்கிறான்?” எனக் கிருஷ்ணன் கேட்டான்.

“ஸ்தூனகர்ணன் என்னும் யக்ஷனின் பாதுகாப்பில், அவனுடைய மருத்துவக் கவனிப்பில் ஷிகண்டின் இருக்கிறான்.  ஓ, விரைவில் அவன் முழு மனிதனாக, ஆண்மகனாக ஆகி வெளிப்படுவான் கிருஷ்ணா!” என்றார் துரோணர்.  இதைக் கொஞ்சம் கர்வத்துடனேயே சொன்ன துரோணருக்கு மீண்டும் அவருடைய இயல்பான சந்தேகம் தலையெடுக்கக் கிருஷ்ணனிடம், “ நீ ஏன் துருபதனின் பிள்ளையை என்னிடம் அனுப்பினாய் வாசுதேவா?  நான் அவனை ஏற்றுக்கொள்வேன் என எப்படி நினைத்தாய்?  துருபதன் என்னுடைய முதன்மையான எதிரி என்பதை நீ நன்கறிவாய்!” என்று கேட்டார்.

“ஆசாரியரே, நீர் சாதாரண பிராமணன் அல்ல.  அந்த சாக்ஷாத் பரசுராமரின் சீடப் பரம்பரையின் முக்கியச் சீடர் ஆவீர்.  பரசுராமரின் சீடன் என்பது சாமானியத் தகுதி வாய்ந்ததா?  அது மட்டுமல்ல ஆசாரியரே, விரோதியோ, நண்பனோ, உமக்கு அது முக்கியமல்ல.  ஒரு சீடனுக்குள்ள பணிவோடும், விநயத்தோடும் உம்மிடம் யார் அணுகினாலும் நீர் அவர்களைத் தள்ள மாட்டீர்கள் என்பதை நான் புரிந்து கொண்டிருந்தேன். “துரோணரை உள்ளூர முகத்துதியே செய்தான் கிருஷ்ணன். “ஆஹா, மனித மனத்தின் பலங்களையும், பலவீனங்களையும் நீ நன்கு அறிந்திருக்கிறாய் கிருஷ்ணா!  ஒரு பலவீனமான மனதுடையவனின் மனதோடு எப்படி ப் பழக வேண்டும் என்பதை உன்னிடமிருந்தே அறிந்து கொள்ள வேண்டும். “ இதைச் சொல்கையில் துரோணர் தன் சந்தேகங்களை அறவே விட்டு விட்டு முழுமனதோடு ஆனந்தம் அடைந்தார்.  அவர் குரு பரசுராமர் சாமானியரா?  இந்த பூமியிலேயே சிறந்த குரு ஆவாரே!  அவரோடு என்னை ஒப்பிட்டு அல்லவோ இவன் பேசுகிறான்!  இவனுக்குத் தான் நம் குருவை வைத்து நம்மிடமும் எவ்வளவு மரியாதை! ம்ஹூம், இன்னமும் இவனிடம் சந்தேகம் கொள்ளலாகாது.  அப்படி ஒரு சிக்கலை ஏற்படுத்திக் கொள்ளக் கூடாது.

“இல்லை, ஆசாரியரே, நான் மனிதனின் நல்ல குணங்களையும், அவர்களின் நேர்மையான உள்ளுணர்வுகளையும் மதிக்கிறேன், அவற்றையே நம்புகிறேன்.  அப்படி நம்பியதில் இன்று வரை எனக்கு ஏமாற்றம் ஏற்பட்டதே இல்லை.  ஷிகண்டினைக் குறித்து, அவனை உம்மிடம் நான் தான் அனுப்பினேன்;  ஆனால் இப்போது அவன் எனக்குத் திரும்ப வேண்டும்.”

“அவனுடைய மருத்துவம் இன்னமும் முழுமையாக முடியவில்லையே வாசுதேவா!  இந்நிலையில் அவன் மிகவும் பலஹீனனாக அல்லவோ இருப்பான்!  இப்போது அவனை அழைத்துச் செல்வது சரியில்லை!” என்றார் துரோணர்.

“ஓ, அதனால் பரவாயில்லை ஆசாரியரே,  அவன் சுயம்வரத்துக்குள்ளாகக் காம்பில்யம் வந்தடைந்தால் போதுமானது.  உத்தவன் இங்கே தங்கி அவனை அழைத்துக் கொண்டு காம்பில்யம் வருவான்.  அவனுக்கு வேண்டிய அனைத்து வசதிகளையும் உத்தவன் செய்து கொடுப்பான்.”

“உனக்கு திரெளபதியின் சுயம்வரத்தில் ஏன் இவ்வளவு ஆர்வம் வாசுதேவா? துருபதனுக்கு உதவி செய்வதிலும் ஏன் இவ்வளவு ஆர்வம்?” ஆசாரியருக்கு மீண்டும் சந்தேகம் தோன்றிவிட்டதோ என்னும்படி இருந்தது அவர் குரல். கிருஷ்ணன் அவரிடம்  “துருபதன், உண்மையிலேயே நல்ல மனிதன்; நல்ல அரசன்.  அவர் மனதில் உள்ள அந்த கசப்பு உணர்ச்சி மட்டும் மறைந்து விட்டால்!!  தர்மத்தின் தூணாக நின்று இந்த ஆர்யவர்த்தத்தைக் காத்து நிற்பார்!” என்றான்.

கிருஷ்ணன் சொன்னதைக் கேட்டுச் சிரித்த துரோணர், “என்னுடைய வெறுப்பையும், விரோதத்தையும் கைவிட்டுவிட்டால் நானும் அப்படி இன்னொரு தர்மத்தின் தூணாக ஆகிவிடுவேன் அல்லவா?” என்று கேட்டார். “ஆசாரியரே,   ஒற்றைத் தூணில் தர்மத்தால் எங்கனம் நிற்க இயலும்?” இதைச் சொல்கையில் கிருஷ்ணனும் தன் மனம் விட்டுச் சிரித்தான்.  “வாசுதேவ கிருஷ்ணா!  நீ தர்மத்தைக் குறித்து அடிக்கடி, அதிகமாகவும் பேசுகிறாய்!  உனக்கு அதைக் குறித்து என்ன தெரியும்?  தர்மம் என்றால் என்ன வாசுதேவா?”  துரோணர் கேட்டார்.

Tuesday, March 18, 2014

தந்திரமான துரோணரும், மந்திரக்காரக் கிருஷ்ணனும்!

“வாசுதேவா, உன்னைக் கண்டதால் என் கண்கள் புண்ணியம் செய்தன.  நானும் புண்ணியம் செய்தவனாகிவிட்டேன்!” என்றார் துரோணர்.  ஒரு கணம் தன்னையும், தன் நிலைமையையும் மறந்து கிருஷ்ணனைப் பார்த்த சந்தோஷத்தில் துரோணர் இப்படிக் கூறினாலும் புத்தி நுட்பமும், தந்திரமும் நிறைந்த அவர் சட்டெனத் தன்னைச் சமாளித்துக் கொண்டு தன்னுடைய வழக்கமான எச்சரிக்கை உணர்வுடன் கூடிய ஆயத்த நிலைக்கு மாறிக் கொண்டுவிட்டார்.  வெற்றி அடைந்ததிலும், துரோணரை அழைத்து வந்ததிலும் மகிழ்ந்து கொண்டிருந்த உத்தவன், கண்ணன் காலடிகளில் வீழ்ந்து தன் வணக்கத்தைத் தெரிவித்துக் கொண்டான்.  அவனைத் தூக்கித் தன்னோடு அணைத்துக் கொண்ட கண்ணன், “உத்தவா, ஒரு அதிசயத்தையே நிகழ்த்திவிட்டாய்!” என அவன் காதுகளுக்கு மட்டுமே கேட்கும்படி கிசுகிசுத்தான்.  “நான் செய்தது எதுவுமில்லை, வாசுதேவா!  உன் பெயர், அது ஒன்று மட்டுமே அதிசயங்களை விளைவிக்க வல்லது.  அதனால் இது நடந்தது.” என்று பணிவோடு பதிலளித்தான் உத்தவன்.

மூன்றாவது ரதத்தில் இருந்து சொகுசாக வாழ்க்கையை இன்றளவும் வாழ்ந்து அனுபவித்துக் கொண்டிருக்கும் ஷகுனி கீழே இறங்கினான்.  அவன் இறங்கி வெளியே வருவதே ஏதோ மாபெரும் பந்து ஒன்று உருண்டு வருவது போல் காட்சி தந்தது.  வெளியே வந்த ஷகுனி தன் வழக்கமான வளவளப்புப் பாணியில் கிருஷ்ணனைப்பார்த்து வரவேற்பு மொழிகளைக் கூறினான். விளக்கெண்ணைச் சிரிப்போடு அவன் பேசியது:” மாட்சிமை பொருந்திய யாதவர்களே, என் பணிவான வணக்கம் அனைவருக்கும். துரியோதனன் சார்பாக நான் வந்துள்ளேன்.  அதோடு அவனிடமிருந்து ஒரு செய்தியையும் உங்களுக்கு எடுத்து வந்திருக்கிறேன்.  துரியோதனன் வயதில் மூத்தவன் ஆகையால் உங்கள் அனைவருக்கும் தன் ஆசிகளைத் தெரிவித்திருக்கிறான்.” அனைவரையும் பார்த்துத் தன் வசமாக்கும் புன்னகை ஒன்றைப் புரிந்த வண்ணம் ஷகுனி மேலும் தெரிவிப்பான்:” மாட்சிமை பொருந்திய குரு வம்சத்து இளவல் தன் படைகளின் மூலம் வென்று அடைந்த ஒன்றை கிருஷ்ண வாசுதேவனின் அதீதமான விவேகத்துக்கும், ஞானத்துக்கும், நல்லெண்ணத்துக்கும் காணிக்கையாகத் திருப்பிக் கொடுப்பதில் சந்தோஷம் அடைகிறான்.” என்று முடித்தான்.

கிருஷ்ணன் முகத்தில் மிகப் பெரிய புன்முறுவல் விரிந்தது.  “குரு வம்சத்து இளவல் துரியோதனனின் பெருந்தன்மை குறித்து நான் அறியாதது அல்ல! அவர் நலமாகத் தானே இருக்கிறார்?” என்று வினவினான் கிருஷ்ணன். இதற்குள்ளாகத் தன் விருந்தோம்பலுக்கான ஆயத்தங்களை துரோணர் ஆரம்பித்துவிட்டார்.  அவர் படைகளை நடத்திச் செல்வதிலும், அவற்றைச் செலுத்தி வெற்றி பெறுவதிலும் இப்படி ஈடு இணையற்று இருந்தாரோ அதே போல் விருந்தோம்பலிலும் தனக்கு நிகரில்லை என்று சொல்லும்படியான ஏற்பாடுகளைச் செய்திருந்தார்.  கிருஷ்ணனும், மற்ற முக்கியமான வீரர்களுக்கும் கூடாரங்கள் அடித்துத் தரப்பட்டன.  மற்ற அதிரதர்கள் அவரவர் ரதங்களை அங்கிருந்த மரங்களோடு சேர்த்துக் கட்டிவிட்டு, குதிரைகளையும் மரங்களில் பிணைத்து ஓய்வெடுக்க விட்டுத் தாங்களும் ரதங்களுக்கு அருகேயே தங்கினார்கள்.  கிருஷ்ணனோடு கூட வந்திருந்த மற்ற யாதவத் தலைவர்களுக்குக் கொஞ்சம் ஏமாற்றம் தான்.  அவர்கள் இங்கே ஒரு மாபெரும் யுத்தத்தை எதிர்நோக்கி வந்திருந்தனர்.  கத்தி முனையிலேயே புஷ்கரம் கைகளுக்கு வந்து சேரும் என நினைத்திருந்தனர்.  ஆனால் இப்போது உத்தவன் செய்துவிட்டு வந்திருக்கும் காரியத்தினால் அவர்கள் மேன்மேலும் ஆச்சரியம் அடைந்தனர்.  வலிமை மிக்க யாதவர்களோடு பொருத வேண்டாம் என்றே துரோணர் இந்த யுத்தத்தைத் தவிர்த்திருக்கிறார் என்றும் நினைத்தனர். அதில் மகிழ்ச்சியும் அடைந்தனர்.

கண்ணனின் கூடாரத்தில் துரோணர் கண்ணனோடு அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்.  அவனுடைய வசீகரமான குரலும், பேசும்போது ஏற்பட்ட அவன் உடல் மொழியாலும் கவரப்பட்டிருந்த துரோணர் இமைக்காமல் அவனையே பார்த்துக் கொண்டிருந்தாலும்,  அவர் உள்மனதில் இரு வேறு தனிப்பட்ட எண்ணங்கள் நீரோட்டமாக ஓடிக் கொண்டிருந்தன.   இவ்வளவு இளம் வயதிலேயே இத்தனை வலிமை மிக்கவனாக, அனைவரையும் தன் பேச்சுக்குச் செவி சாய்ப்பவர்களாக ஆக்கி வைப்பவன் ஆன இந்த வாசுதேவ கிருஷ்ணனின் நம்பிக்கையையும், விசுவாசத்தையும் எப்படிப் பெறுவது என்பது அதில் ஒன்று. அனைவரிடமும் தனித்தனியாகச் சிறப்புக் கவனிப்பை அவன் கொடுப்பதும், பெறுவதும் இது வரை அவர் கண்டிராத ஒன்று.  இப்படி அனைவரையும் வசீகரிக்கும் ஒருவனை வெல்ல வேண்டுமே! இன்னொன்று தாங்கள் பேசிக் கொண்டிருக்கையில் தன்னையும் அறியாமல் பேச்சு வேறு திசையில் திரும்பித் தன்னுடைய சொந்த ஆசைகள், எதிர்பார்ப்புகள் வெளிப்பட்டுப் பேச்சுக்குத் தலையீடாக ஆகிவிடக் கூடாதே என்று கொஞ்சம் எச்சரிக்கை உணர்வோடு தான் பேசினார்.  கிருஷ்ணனின் மயக்கும் உருவமும், அவனுடைய விசித்திர விநோதமான திறமைகளும் அவரை எந்த நிலைக்குக் கொண்டு செல்லுமோ என்ற கவலையும் அவருக்கு ஏற்பட்டது.

தன்னால் இயன்ற அளவுக்குக் கிருஷ்ணனைப் பார்த்து வசீகரமாகச் சிரித்தார் துரோணர்.  “வாசுதேவா, நீ தன்னந்தனியாக இந்தப் புஷ்கரத்தை நோக்கி எவ்விதப் பெரிய படைகளும் இல்லாமல் குரு வம்சத்தினரை எதிர்கொள்ள வந்தது எப்படி?  நாங்கள் போரில்லாமல் அமைதியாகப் புஷ்கரத்தை உன்னிடம் ஒப்படைப்போம் என நீ எதிர்பார்த்திருந்தாயா?” என்று சந்தேகம் பொங்கக் கேட்டார்.

“அது என்னுடைய ரகசியம் ஆசாரியரே!  ஆனால் நீங்கள் விரும்பினால் நான் உங்களுடன் அதைப் பகிர்ந்து கொள்கிறேன்.” என்றான் கிருஷ்ணன் சிரித்த வண்ணம்.  “அது சரி, கிருஷ்ணா, நாங்கள் உன்னுடன் போருக்கு ஆயத்தமாக இருந்திருந்தால்??? என்ன செய்திருக்க முடியும் உன்னால்?” துரோணர் விடாமல் கேட்டார்.

“ஆசாரியரே, புஷ்கரத்தைக் கைப்பற்றச் சிறந்த வழி துரியோதனனைத் தனியாக எதிர்கொள்வது ஒன்றே ஆகும்.  இதை நான் நன்கு அறிவேன்.  இந்தச் சின்னச் சின்ன விஷயத்துக்காகக் குரு வம்சப் படைகளும், யாதவப் படைகளும் நேருக்கு நேர் நின்று பொருதுவது விரும்பத்தக்கது அன்று.  அது நன்மையையும் விளைவிக்காது.”

துரோணர்  கிருஷ்ணன் இவ்வளவு நுண்ணறிவோடு யோசித்து முடிவெடுத்திருப்பதை நினைத்து உள்ளூர வியந்தார். “துரியோதனன் போர் செய்வதை விட்டுவிட்டு உன்னுடன் மட்டும் போட்டிக்கு வருவான் என நீ ஏன் நினைத்தாய் கிருஷ்ணா?”

கிருஷ்ணன் புன்னகை புரிந்த வண்ணம், “ஆசாரியரே, அவன் உங்கள் மாணவன்.  இந்தச் சின்ன விஷயத்துக்காக அவன் போர் விதிகளுக்குப் புறம்பாக எல்லாம் நடக்க மாட்டான்.  ஒரு அதிரதி இன்னொருவனோடு தன்னந்தனியாகவே போரிட்டாகவேண்டும் என்பதை அவன் நன்கறிவான், அல்லவா?”

“அப்படி எனில் அவனை வென்றுவிடுவோம் என நீ நினைத்தாயோ?”

“ஆசாரியர்களில் சிறந்தவரே, நான் எதையும் எதிர்பார்க்கவும் இல்லை;  அதே சமயம் இந்தப் போட்டிக்குப் பயப்படவும் இல்லை.  தயாராகவே வந்தேன். என்னுடைய கடமையைச் சரிவரச் செய்ய வேண்டும் என்பதே என் ஒரே எண்ணம்.  நான் செய்கிற காரியங்களின் விளைவுகள் நன்மையோ, கெடுதலோ என்பதைக் குறித்தெல்லாம் நான் நினைத்துக் கொண்டு அதற்காகக் கவலைப்பட்டுக் கொண்டிருந்தால், நான் ஒரு கணம் கூட உயிரோடு இருக்க முடியாது. என் கடமையைச் செய்ய வேண்டும் என்பதே என் ஒரே குறிக்கோள். “

“இப்படி எல்லாம் கண்மூடித்தனமாக ஒருவர் கடமையை நிறைவேற்றலாமா?  நீ அதை ஏன் நினைத்துப்பார்க்கவே இல்லை வாசுதேவா?”

“நம்பிக்கை ஆசாரியரே, நம்பிக்கை.  அது மிக முக்கியமானது.  நம்பிக்கை உள்ளவர்கள் தங்கள் கடமைகளைக் கண்மூடித்தனமாகச் செய்ய மாட்டார்கள். எனக்கு உங்களிடமும், பாட்டனார் பீஷ்மரிடமும் நம்பிக்கை இருக்கிறது; இருந்தது.  அதனால் தான் நான் ஹஸ்தினாபுரத்துக்கு உத்தவனை அனுப்பி வைத்தேன்.  என் நம்பிக்கை பொய்க்கவில்லை என்பதைப் பாருங்கள் ஆசாரியரே!”  துரோணரின் மனதில் சிறிதளவு சந்தேகம் இருந்தால் கூட அவற்றையும் அகற்றும் நோக்கில் வெளிப்படையாகக் கிருஷ்ணன் பேசினான்.

Sunday, March 16, 2014

துரோணர் அதிசயித்தார்!

கண்ணன் இதைச் சொல்லிவிட்டுத் தன் படைவீரர்களிடம் இருந்து தான் மட்டும் பிரிந்து  தன் சொந்த மெய்க்காப்பாளன் மட்டும் துணை வர, ரதத்தைக் கோட்டையை நோக்கிச் செலுத்தினான்.  துரியோதனனோ, துரோணரோ யாராக இருந்தாலும் அவனைத் தனியே எதிர்கொள்ள நினைத்தால் அவ்விதமே எதிர் கொள்ளட்டும். இந்த சவாலை அவன் எதிர்கொண்டே ஆகவேண்டும். ஆரியர்களின் வழக்கப்படி ஒரு வீரன், இன்னொரு வீரனை எதிர்கொள்ள நினைத்து, அதை அவன் மட்டுமே எதிர்கொள்ள வேண்டும் என நினைத்தால் அந்த வீரன் அதை ஒப்புக் கொண்டே ஆகவேண்டும்.  இது தான் வீரத்துக்கு அடையாளம்.  அதிலும் எதிர்கொள்ள நினைப்பவன் ஒரு அதிரதியாக இருந்துவிட்டால் நிச்சயமாய் அவன் தன்னந்தனியே தன் எதிரியை எதிர்கொண்டு போரிட்டே ஆகவேண்டும். வெற்றியோ, தோல்வியோ எதுவாக இருந்தாலும் இதை மறுதலிப்பது ஒரு ஆரியனுக்கு அழகல்ல.    கிருஷ்ணன் இதை எல்லாம் நினைத்து அசைபோட்டுக்கொண்டே கோட்டைக்கு அருகே வந்துவிட்டான்.


ஆனால் என்ன ஆச்சரியம்?? அங்கே யுத்தம் நடக்கப்போவதற்கான அறிகுறிகள் எதையும் காணோமே!  கோட்டையின் கொத்தளங்களில் படை வீரர்கள் வில்லும், அம்புமாகக் காவல் காத்துக் கொண்டு, இவர்கள் படையின் திக்கை நோக்கி அம்புகளைச் செலுத்தத் தயாராக நிற்கவில்லை.  சொல்லப் போனால் எந்தக் காவலும் இல்லாமல் ஒரு வில்லாளியோ, ஒரு காவலாளியோ இல்லாமல் இருந்ததோடு, பளபளவெனப் பட்டாடைகளாலும், மலர் மாலைகளாலும் , வாசனைத் திரவியங்களாலும் தங்களை அலங்கரித்துக் கொண்ட பொதுமக்களே  கொத்தளங்களில் நின்று கொண்டிருந்தனர். அவர்களும் கிருஷ்ணன் வரவுக்கே காத்திருப்பதாகப் பட்டது.  ஏனெனில் அவனைக் கண்டதுமே அவர்கள், “கிருஷ்ண வாசுதேவனுக்கு ஜெய மங்களம்!” என்னும் கோஷத்தைச் செய்து அவனை வரவேற்றார்கள்.  சற்று தூரத்திலேயே தன் ரதத்தை நிறுத்திய கிருஷ்ணன் ஆச்சரியத்தில் ஆழ்ந்தான்.  கிருஷ்ணன் தன் பாஞ்சஜன்யத்தை எடுத்துத் தான் நட்பு முறையில் வந்திருப்பதைத் தெரிவிக்கும் வகையில் ஒலித்தான்.

கண்ணனின் நட்பு முறையிலான சங்கின் ஒலியைக் கேட்டதுமே கோட்டைக் கதவுகள் திறந்தன.  மூன்று ரதங்கள் கிருஷ்ணனை எதிர்கொண்டன.  தன் ரதத்தில் நின்று கொண்டிருந்த கிருஷ்ணன் முன்னால் வந்த ரதத்தின் கொடியில் தங்க நூல்களால் நெய்யப்பட்ட நீர்ப்பானையின் சின்னத்தைக் கண்டான்.  இது ஆசாரியர் துரோணரின் சொந்த அடையாளச் சின்னம்.  குரு வம்சத்தினருக்கு  ஆயுதப் பயிற்சி கொடுக்கும் தலைமைத் தளபதியும் குருவம்சப் படைகளுக்குத் தலைவரும் ஆவார்.  அடுத்தது யாதவக் கொடியாகத் தெரிந்தது. ஆம், அது உத்தவனின் கொடி. கிருஷ்ணனின் கண்கள் கண்ணீரால் நிறைந்தன. ஆஹா, இந்த உத்தவன் என்னவெல்லாம் அதிசயங்களைச் செய்கிறான்! இவனை சகோதரனாகவும், நண்பனாகவும் அடைய நான் பெற்ற பேறுதான் என்னே!  இதோ இப்போதும் ஹஸ்தினாபுரத்தில் ஒரு அதிசயத்தை நிகழ்த்தி துரோணரை இங்கே அழைத்து வந்துள்ளான்.  மூன்றாவது ரதம் சகுனியின் காந்தார நாட்டுக் கொடியின் சின்னத்தோடு காணப்பட்டது.  அப்படி எனில் மாமா ஷகுனியும் வந்திருக்கிறாரா?

கிருஷ்ணனைத் தொடர்ந்து வந்த பாதுகாப்பாளர்களில் தலைமை வகித்து வந்த கடன், சற்று தூரத்தில் துரோணரும், உத்தவனும் சேர்ந்து வருவதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தான்.   வில்லில் அம்பை ஏற்றி நாணைச் செலுத்தத் தயாராக நின்ற கடனைப் பார்த்துச் சிரித்த கிருஷ்ணன், “கடா, உன் வில்லின் நாணைத் தளர்த்துவாய்! புஷ்கரம் எவ்வித சேதமும் இல்லாமல், நீ வில்லையும் அம்புகளையும் உபயோகிக்காமல் செகிதானாவிடம் போய்ச் சேரப் போகிறது.” என்று சொல்லிவிட்டுத் தன் மந்திரச் சிரிப்பை உதிர்த்தான்.  கடனுக்கு இங்கே என்ன நடக்கிறது என்றே சுத்தமாய்ப் புரியவில்லை.  “இப்போது அவர்கள் நம்மோடு போர் புரியவென வரவில்லையா பிரபுவே!  நாம் என்ன செய்ய வேண்டும்?” என்று குழப்பத்தோடு கேட்டான்.

“இல்லை கடா, இப்போது இங்கே போர் இல்லை.  குரு வம்சத்தினரின் பிதாமஹர் ஆன பீஷ்மர் ஒரு தவறைச் சரி செய்திருக்கிறார்.  செகிதானாவுக்குப் புஷ்கரத்தைத் திரும்பக் கொடுத்திருக்கிறார்.   இது தான் நியாயம், இது தான் தர்மம்.  நீ சென்று செகிதானா, சாருதேஷ்னா இன்னும் மற்றவர்கள் அனைவரையும் அழைத்துக் கொண்டு வா.” என்று அவனை அனுப்பினான். மூன்று ரதங்களும் சற்று தூரத்திலேயே நின்றன.  முதல் ரதத்தில் இருந்து விலை உயர்ந்த பட்டாடைகளைத் தரித்த துரோணர் வெளிப்பட்டார்.  அவர் முகம் ஆணையிடும் தோற்றத்தில் காணப்பட்டது.  கண்கள் வெற்றியில் பளபளத்தன.  கிருஷ்ணனைப் பார்த்து அவர் சிரித்த சிரிப்பிலும் வெற்றியின் அறிகுறி தெரிந்தது.  “மாட்சிமை பொருந்திய வாசுதேவா, உன்னுடைய வில்லின் நாணை ஏற்றாமல் அம்புகளைச் செலுத்தாமல் நீ புஷ்கரத்தை எடுத்துக் கொள்ளலாம்.  ஏன் எடுத்துக் கொண்டு விட்டாய்.  இது உன்னால் மட்டுமே முடியும் கிருஷ்ணா!  பாட்டனார் பிதாமஹர் பீஷ்மரும், மஹாராஜா திருதராஷ்டிரரும் உன்னையும் செகிதானாவையும் வரவேற்க வேண்டியே என்னை இங்கே அனுப்பியுள்ளார்கள்.” என்றார்.

கிருஷ்ணனும் தன் ரதத்திலிருந்து இறங்கினான்.  கிருஷ்ணனிடம் இயல்பாகவே உள்ள விநயத்துடனும், பணிவுடனும், அவன் அந்த பிராமண ஆசாரியரைப் பார்த்துத் தன் கைகளைக் கூப்பிய வண்ணம் சாஷ்டாங்கமாக நமஸ்கரிக்கக் குனிந்தான்.  ஆனால் அவனைத் தடுத்து நிறுத்தினார் துரோணர். அவனைத் தன்னோடு சேர்த்து அணைத்துக் கொன்டார்.  பல வருடங்களாக கிருஷ்ண வாசுதேவனின் பெயரைக் கேட்டிருக்கிறார் அவர்; அவனைப் பற்றிப் பல விதங்களில் நினைத்திருக்கிறார்.  அவனைப் பார்க்க வேண்டி இத்தனை நாட்களாய்க் காத்திருந்திருக்கிறார்.  ஆனால்,,,, ஆனால் இது என்ன?  அவர் பார்ப்பது?  கிருஷ்ண வாசுதேவன் என்னும் பெயருக்கு உள்ள இந்த உருவம், கருணையின் மறு உருவாகவன்றோ இருக்கிறது.  சிறு பிள்ளை போல் குழந்தைத் தனமாகச் சிரித்துக் கொண்டு, தெளிவாகத் தெரியும் நேர்மையுடன், சொல்லொணா வியப்பை அன்றோ அளிக்கிறது!!  இவனைப் பார்க்கையிலேயே அன்பின் மறு வடிவாக, கருணையின் மொத்த உருவாக, அவனிடம் உள்ள அனைத்துச் சிறப்புக்களையும் தன் ஒரு தோற்றத்திலேயே பரிபூரணமாய் எடுத்துக் காட்டிக் கொண்டு….. துரோணர் நிச்சயமாய் இப்படி ஒரு இளம்பிள்ளையைக் கருணையின் மொத்த உருவாய் எதிர்பார்க்கவே இல்லை.


Thursday, March 13, 2014

கண்ணன் விரைந்தான்!

தர்மம் கிருஷ்ணனைத் தொடர்ந்து வந்து ஈர்த்தது. அது அவனை அவசரப் படுத்தவும் செய்தது.  கிருஷ்ணனும் அவசரத்திலே இருந்தான்.  சாத்யகியின் படைகளுக்குத் தலைமை வகித்த கிருஷ்ணன் அந்தப் படையின் ரத சாரதிகளைத் தலை போகும் அவசரத்தில் விரட்டினான்.  அதைத் தவிர குதிரை வீரர்கள், ரதங்களின் மாற்றுக் குதிரைகள், காலாட்படையினர், உணவுப் பொருட்கள், ஆயுதங்கள் தாங்கிய வண்டிகள், மருத்துவ உதவிகள், மருத்துவர்கள், பணியாளர்கள் என ஒரு பெரிய கூட்டமே கிருஷ்ணனைத் தொடர்ந்து மாட்டு வண்டிகளிலும், குதிரை பூட்டிய ரதங்களிலும், கால்நடையாகவும் வந்து கொண்டிருந்தனர்.  கிருஷ்ணன் கிளம்பிய மூன்றாம் நாள் கடன், கிருஷ்ணனின் ரதப் படைத்தலைவன், மஹாரதி, தன் படை வீரர்களோடு கிருஷ்ணனை வந்து சேர்ந்து கொண்டான்.  கிருஷ்ணன் துவாரகையை விட்டுச் சென்ற பின்னர் நடந்தவைகளைக் குறித்துச் சுருக்கமாக அதே சமயம் தெளிவாகக் கிருஷ்ணனுக்கு எடுத்துச் சொன்னான்.  பலராமன் தன் போதை கலந்த தூக்க மயக்கத்தில் இருந்து முழுமையாக விடுபட்டு அனைத்து யாதவர்கள், அதிரதர்களுக்குத் தலைமை வகித்துப் புஷ்கரத்தை மீட்கக் கிளம்ப முடிவெடுத்திருப்பதைக் கூறினான்.  சாத்யகி கொல்லப்படவில்லை;  மாறாக சத்ராஜித்தின் ஒரே மகள் சத்யபாமா அவனைக் காப்பாற்றி உக்ரசேனரிடம் ஒப்படைத்திருக்கிறாள்.  சாத்யகி இப்போது பலராமனுடன் கிளம்பும் படைகளோடு சேர்ந்து வந்து கொண்டிருக்கிறான். இந்த திடீர் மாற்றங்களை ஏற்றுக் கொண்டு சத்ராஜித்தும், சாகசங்களை நிகழ்த்தக் கிளம்பும் யாதவர்களுக்கு வேண்டிய உதவிகளைச் செய்ய ஆரம்பித்துவிட்டான்.  இதைக் கேட்டுக் கொண்ட கண்ணன் முறுவல் செய்தான்.


அவர்கள் சென்று கொண்டிருந்த அந்தப் பிரதேசம் மக்கள் தொகை குறைவாக உள்ளதாகும்.  அந்தப் பிரதேசத்தின் சொற்ப மக்களுக்கும், அந்த மக்கள் வசிக்கும் கிராமத் தலைவர்களுக்கும் கிருஷ்ணனின் வரவைக் குறித்து அறிவிக்கக் குதிரை வீரர்கள் முன்னதாகச் சென்றிருந்தனர்.  “கிருஷ்ண வாசுதேவன்” “கோவிந்தன்” என்னும் பெயர்களே ஒரு மாய, மந்திரச் சொல்லாக அந்த மக்களுக்கு ஆகி விட்டிருந்தது.  அவனைப் பார்க்கவும், வழிபடவும் காத்திருந்த அந்த மக்கள் இந்தச் செய்தியைக் கேட்டதும் மகிழ்ச்சிக் கடலில் ஆழ்ந்தனர்.  இந்த வழியாகச் செல்லும் கண்ணனைப் பார்க்காமல் தவற விடுவதில்லை என்னும் எண்ணத்தோடு அவனுக்காக ஊரை அலங்கரித்து வரவேற்புக் கொடுக்கச் சித்தமானார்கள்.  கொட்டு மேளங்களும், பறைகளும் முழங்க, எக்காளங்கள் ஊத, சங்குகள் ஒலிக்கக் கிருஷ்ணனுக்குக் கண்டவர் வியக்கும் வரவேற்பை அளித்து மகிழ்ந்தனர்.

சால்வ மன்னனின் பிரதேசத்தைச் சூழ்ந்து சென்றது அந்தப் பாதை.  ஒரு காலத்தில் சால்வன் மிக மோசமானதொரு எதிரியாகவே இருந்து வந்தான்; இப்போது கிருஷ்ணனால் வெல்லப்பட்டிருக்கிறான். அந்த அதிர்ச்சியான நிகழ்வில் இருந்து அவன் இன்னமும் விடுபடவே இல்லை;  எனினும் இப்போது கிருஷ்ணனை வரவேற்க வேண்டி. தன் வீரர்களை அனுப்பிக் கிருஷ்ணனுக்கு ஆடம்பரமானதொரு விருந்தோம்பலை அளித்தான்.  தவிர்க்க இயலாமல் அதில் பங்கெடுத்த கிருஷ்ணன் இரவு மட்டும் அங்கே தங்கிக் காலையில் விடைபெற்றுக் கிளம்பி விட்டான்.  அவனுக்கு எவ்வளவு விரைவில் முடியுமோ அவ்வளவு விரைவில் புஷ்கரம் சென்று அடைய வேண்டும் என்று இருந்தது.  அக்ரவனத்தில் ஏற்பட்ட சந்திப்பு ஒரு ஏமாற்றமாகவும், வெறும் நடிப்பாகவும் இருந்தது.  அதைக் குறித்து அனைவரும் பேசிக் கொண்டனர். உண்மையில் ஒரு ரகசியச் செய்தியைக் கண்ணன் கிருதவர்மா மூலம் ஏற்கெனவே அனுப்பி இருந்தான்.  யாதவத் தலைவர்களும், நாகர்களின் தலைவன் மணிமானும்  புஷ்கரத்தில் இருந்து இரண்டு நாட்கள் பயணத்தில் உள்ள ஒரு குறிப்பிட்ட இடத்தில் சந்தித்துக் கொள்ள வேண்டும் என்றும், அங்கே தான் திடீர்த் தாக்குதல் நடத்த வேண்டும் என முடிவு ஆகி இருந்தது. ஆனால் அவர்கள் கண்ணன்  குறிப்பிட்ட நாளில்  வராமல் முன் கூட்டியே வரப் போவது குறித்து அறிந்திருக்கவில்லை.

ஆகவே கண்ணன் இப்போது மீண்டும் சாருதேஷ்னா, கிருதவர்மா, மற்றும் அக்ரவனத்தில் காத்திருக்கும் மணிமான் ஆகியோருக்குத் தான் முன் கூட்டியே வந்து கொண்டிருக்கும் செய்தியைத் தெரியப்படுத்தினான்.  அதோடு இல்லாமல் அனைவரும் எவ்வளவு விரைவில் முடியுமோ அவ்வளவு விரைவில் கிருஷ்ணனோடு வந்து சேர்ந்து கொள்ளுமாறும் செய்தி அனுப்பினான்.  இந்தச் செய்தியைத் தாங்கிச் சென்ற கடன் செய்தியை அளித்ததும், அனைவருமே உற்சாகம் அடைந்தனர்.  இனி தாமதிக்கப் பொழுது இல்லை. எவ்வளவு சீக்கிரம் இயலுமோ அவ்வளவு விரைவில் கிருஷ்ணன் இருக்குமிடம் சென்று அவனுடன் சேர்ந்து கொள்ள வேண்டும்.  ஆனால் உத்தவன் இன்னமும் ஹஸ்தினாபுரத்திலிருந்து செய்தி ஒன்றும் எடுத்து வரவில்லை தான்;   அவனுக்காகக் காத்திருக்க இயலாது.  இதோ, கண்ணன் வந்துவிட்டான். ஆகவே விரைவில் அவனைச் சென்று அடைய வேண்டும் தங்கள் படைகளை விரட்டிக் கொண்டு அவர்கள் சந்திக்க நிச்சயித்திருந்த இடத்திற்கு விரைந்து சென்றனர் அனைவரும். அங்கே போனால் என்ன ஆச்சரியம்!  அவர்கள் செல்வதற்கு இரண்டு நாட்கள் முன்னராகவே கிருஷ்ணன் அங்கே வந்து சேர்ந்திருந்தான்.

மறுநாள் ஒற்றர் படை கொண்டு வந்த செய்திகளின் மூலம் துரோணரே தலைமை வகித்துப் படைகளை நடத்திக் கொண்டு புஷ்கரத்திற்கு வந்திருப்பதாகத் தெரிய வந்தது.  ஆனால் குரு வம்சத்து இளவரசர்கள் எவரேனும் அவருடன் வந்திருக்கிறார்களா என்பது குறித்து அந்த ஒற்றர்களுக்கு நிச்சயமாய்த் தெரியவில்லை.  அனைவரும் இதைக் கேட்டதும், தங்கள் மீசைகளை முறுக்கிக் கொண்டும், தோள்பட்டையில் கைகளால் தட்டிக் கொண்டும், ஆயுதப் பயிற்சிகளைச் செய்ய ஆரம்பித்தும் தங்கள் பங்குக்கு வீரத்தைக் காட்டினார்கள்.   மூன்றாம் நாள் அதிகாலையில் மாபெரும் ஏரிக்கரையில் அமைந்திருந்த புஷ்கரத்தின் கோட்டை அவர்கள் கண்களில் பட்டது.  ஏரியைச் சுற்றிலும் சின்னச் சின்ன கிராமங்கள் தென்பட்டன.  அதன் குடிமக்களுக்குக் கிருஷ்ண வாசுதேவன், பற்பல சாகசங்களையும் அதிசயங்களையும் நிகழ்த்திக் கொண்டிருப்பவன் இங்கே வந்து கொண்டிருக்கிறான் என்னும் செய்தி கிடைத்தது.  கிராமத்துக் குடிமக்கள் அனைவரும் அவனுடைய தரிசனம் கிடைக்க வேண்டிக் கைகளில் கிடைத்த மலர்கள், பழங்கள், தேன் போன்றவற்றை எடுத்துக் கொண்டு அவனுக்குச் சமர்ப்பித்து அவனிடம் ஆசிகள் பெற ஓடோடி வந்தனர்.

யாதவர்கள் அங்கே கூடாரங்கள் அமைத்துத் தங்கினார்கள்.  கிருஷ்ணன் இது தன் சொந்தப் போர் எனவும் இதைத் தான் மட்டுமே கவனித்துக் கொள்வதாகவும் கூறி விட்டான்.  ஆனால் செகிதனா தான் சேர்ந்து கொள்வதாகக் கிருஷ்ணனிடம் எவ்வளவோ கெஞ்சிப் பார்த்தும் கிருஷ்ணன் பிடிவாதமாக மறுத்துவிட்டான்.  “இல்லை செகிதனா, நான் தான் உன்னை இந்தப் புஷ்கரத்தின் காவலனாக நியமித்து நாங்கள் இவ்வழியே செல்லும்போதெல்லாம் எங்களுக்கு உணவு அளிக்கவும், பாதுகாப்புக் கொடுக்கவும் ஏற்பாடுகள் செய்தேன்.  ஆனால் நீ புஷ்கரத்தை விட்டு விரட்டி அடிக்கப்பட்டாய்!  அப்போது உன்னிடம் நான் உனக்குத் திரும்பப் புஷ்கரத்தைப் பெற்றுத் தருவதாக வாக்களித்தேன்.  அந்த வாக்குறுதியை நான் நிறைவேற்ற வேண்டாமா?”

“ஒருவேளை என்னால் இயலவில்லை எனில், நீ இங்கே வந்திருக்கும் யாதவப் படைகளுடன் சேர்ந்து கொண்டு உன் வீரத்தையும், போர்ப்பயிற்சியையும் இந்தக் குரு வம்சத்தினரிடம் காட்டுவாய்.  ஒருவேளை  அப்போது பெரிய அண்ணன் பலராமனும் சேர்ந்து கொள்ளலாம்.  ஆனால் அது குரு வம்சத்தினருக்கும், யாதவருக்கும் இடையில் நடைபெறும் ஒரு பொதுவான யுத்தமாக மாறிவிடக் கூடிய வாய்ப்புகள் இருக்கிறது.  நான் அதை விரும்பவில்லை.  தனிப்பட்ட முறையில் துரியோதனனுக்கு ஒரு பாடம் கற்பிக்கவே விரும்புகிறேன்.” என்று சொன்ன கிருஷ்ணன் செகிதனாவின் தோள்களைத் தட்டிக் கொடுத்து அவனை ஆசுவாசம் செய்தான்.


Tuesday, March 11, 2014

கண்ணனை அடைந்தே தீருவேன்!

சத்யபாமாவின் அகந்தையையும், தற்பெருமையையும் நினைக்க நினைக்க சாத்யகிக்கு உள்ளூரச் சிரிப்புப் பொங்கிக் கொண்டு வந்தது.  ருக்மிணியை விட, ஷாய்ப்யாவை விடவும் இவள் கிருஷ்ணனுக்குச் சிறந்த மனைவியாக ஆகிவிடுவாளாமா?  என்றாலும் தன்னைக் கட்டுப் படுத்திக் கொண்டான்.  அவளிடம், “இன்னமும் நீ அவனை மணக்க விரும்புகிறாயா?  அவனை மணக்க முடியும் என்றும் நினைக்கிறாயா?” என்று கேட்டான்.  திரும்பி அவனைப் பார்த்த அந்த இளம்பெண்ணின் முகம் சிவந்து தழல் போல் ஜொலித்தது.  சாத்யகியிடம், “ஏன் கூடாது?” என்று ஆவேசமாகக் கேட்டாள்.
“கோவிந்தன் ஒருக்காலும் உன்னைத் திருமணம் செய்து கொள்ளமாட்டான்!” திட்டவட்டமாகப் பதிலளித்தான் சாத்யகி.

“அது என் சொந்த விஷயம்.  அது ஒரு புறம் இருக்கட்டும்.  ஆனால் இவற்றுக்கு நடுவில் நான் கிருஷ்ண வாசுதேவன் யாதவர்களுக்கு மட்டுமின்றி ஆர்யவர்த்தம் முழுமைக்கும் ஒரு ரக்ஷகனாக, பாதுகாவலனாக இருக்க விரும்புகிறேன்.  ஆர்யவர்த்தத்தை அவன் கட்டுக்குள் கொண்டு வர விரும்புகிறேன்.  மக்கள் அனைவராலும் அவன் ஒரு கடவுளாக வணங்கப்பட வேண்டும்.  அதன் பின்னர், என்றாவது ஒரு நாள், ஆம் என்றாவது ஒரு நாள் அவன் என்னுடையவனாக ஆகி விடுவான்.  எனக்கு மட்டுமே உரியவனாக!  நான் அவனுக்கு இவ்வுலகின் அனைத்து சந்தோஷங்களையும் காட்டிக் கொடுப்பேன்.  அவனை மகிழ்ச்சி என்னும் ஊற்றில் முழுக்காட்டுவேன்.  அவ்வளவு ஏன்?  விருந்தாவனத்தின் கோபியரிடம் இருக்கையில் கூட கோவிந்தன் இவ்வளவு ஆனந்தத்தைக் கண்டிருக்க மாட்டான் என்று அனைவரும் பேசும்படி அவனை ஆனந்த முழுக்காட்டுவேன்.  விருந்தாவனத்து கோபியரை விட, ராதையை விட இந்த பாமா சளைத்தவள் இல்லை என நிரூபிப்பேன்.”  கண்கள் கனவுகளில் மிதக்க எதிர்காலத்தைக் கனவு கண்டபடி மிக மெல்லிய குரலில் ரகசியம் பேசுபவளைப் போல் மென்மையாகவும், மிருதுவான குரலிலும் கூறினாள் பாமா.  அவள் முகம் சிவந்து அந்த அறையின் ரத்தினங்களோடு போட்டி போட்டுக் கொண்டு ஜொலித்தது.  அவள் இரு கண்களுமே ஒரு ரத்தினம் போல் பளபளத்தது. “ உனக்குத் தெரியுமா சாத்யகி, அவனை ஒவ்வொரு முறை பார்க்கையிலும் என் இதயம் படபடக்கிறது.  என் வாய்க்குள் வந்துவிடுமோ என்னும் அளவுக்கு மேலெழும்பிக் குதிக்கிறது.  மிக மோசமாக, மிக அதிகமாக வேகமாகப் படபடக்கிறது.”

சாத்யகிக்கு இப்போது தான் சத்யபாமாவின் நோக்கம் புரிந்தது.  இவ்வளவு உறுதியுடனும், திடத்துடனும் கோவிந்தனைக் காதலிக்கும் இந்தப் பெண்ணின் மன உறுதியைக் கண்டு மனதுக்குள்ளே வியந்து பாராட்டினான்.  அவனை அவள் கடத்தி வந்ததன் முழுக்காரணமும் புரிய எதுவுமே பேசமுடியாமல் வாயடைத்து நின்றான்.   அப்போது திடீரென சத்யபாமாவின் நடத்தை மாறியது.  கொஞ்சம் கடுமையாக அவனைப் பார்த்து, “சாத்யகி, இன்னமும் ஒரு முட்டாளைப் போல் அங்கேயே உட்கார்ந்திருக்கிறாயே?   எழுந்து என்னுடன் வா.  எல்லா விதங்களிலும் தயார்ப்படுத்தப்பட்ட ஒரு ரதத்தைத் தயார் செய்து  உனக்கு நான் அளிக்கிறேன்.  என் சகோதரன் அதற்கேற்ற வலிமையான, விரைவாக ஓடும் குதிரைகளை உனக்காக எங்கள் குதிரை லாயத்திலிருந்து திருடித் தருவான்.  அதோடு மட்டுமல்ல சாத்யகி, என் சகோதரனின் சொந்த ரத சாரதியே உன்னைக் கிருஷ்ண வாசுதேவன் இருக்குமிடம் அழைத்துச் செல்வான்.  கிளம்பு.  தயாராகு.  அதற்கு முன்னர் இந்தப் பழங்களையாவது உண்டு கொள்.  நீ என்னுடன் கிளம்புவதற்கு முன்னால் தேவையான உணவை எடுத்துக் கொண்டு கிளம்பு.”

“சத்யபாமா, நீ அற்புதமானவள்.  என்னால் இதை மறக்கவே முடியாது!”  என்றான் சாத்யகி.

“ஓஹோ, சாத்யகி, ஆண்கள் வெகு விரைவில் எல்லாவற்றையும் மறந்துவிடுவார்கள்.  நீ மட்டும் நான் கிருஷ்ண வாசுதேவனை மணக்க உதவி செய்ய வேண்டும் என்பதையாவது நினைவில் வைத்துக் கொள்.  கிருஷ்ணனை என் பக்கம் கொண்டு வர நான் உன் உதவியைத் தான் நம்பி இருக்கிறேன்.”

“பைத்தியக்காரத் தனம்!” என்றான் சாத்யகி.

“ஆஹா, ஆஹா, அப்படியே இருக்கட்டும் சாத்யகி.  ஒரு பைத்தியக்காரப் பெண்மணி  தான் விரும்பும் மனிதனைக் கணவனாக அடையப் போகிறாள்.  அவ்வளவு தான்!  ஒரு புத்திசாலிப் பெண் அனைவராலும் விரும்பப்படும் ஒருவனைக் கணவனாக அடைவாள்.  நல்லவேளையாக நான் பிழைத்தேன்.  உன் தந்தை என்னை உன் மனைவியாக்க மறுத்தாரோ, நான் பிழைத்தேனோ!  இல்லை எனில் என்னாவது?”  சத்யபாமா தன் கிண்டல் பேச்சை விடவில்லை.  துணிவாக இதைச் சொல்லிவிட்டுத் தன் வழக்கப்படி கலகலவெனச் சிரித்தாள்.   ஆனால் சாத்யகி அதை ரசிக்கும் மனநிலையில் இல்லை.  யோசனையில் ஆழ்ந்தான்.

“சத்யபாமா,  நான் இப்படியே எவ்வாறு வெளியே செல்வது?  இப்படியே வெளியே சென்றால் எல்லாரும் நான் கிருஷ்ணனை ஏமாற்றிவிட்டுத் தப்பித்துக் கொள்ள மறைந்திருந்தேன் என்று பேசுவார்களே!  யாதவ குலமே என்னைக் கண்டு சிரிக்குமே!  என் கடமையை நான் மறந்தேன் என்பார்களே!  கிருஷ்ணனிடம் சென்று நான் நடந்ததை விவரித்தால் ஒருவேளை அவன் புரிந்து கொள்ளலாம்.  ஆனால் மற்றவர்கள்?? மற்றவர்கள் எவரும் நான் சொல்லப் போகும் இந்தக் கதையைப் புரிந்து கொள்ள மாட்டார்கள் பாமா!  சத்ராஜித்தின் மகள் சத்யபாமாவால் நான் கடத்தப்பட்டுப் பின்னர் அவளாலேயே விடுவிக்கப்பட்டேன் என்றால் நம்புபவர்கள் யார்?  இந்த விசித்திரமான கதையை எவர் நம்புவார்கள்?”

“நீ சிறிதும் நம்பிக்கை இல்லாத கோழை சாத்யகி!”   இதைச் சொல்கையிலேயே ஏதோ யோசனையில் ஆழ்ந்த பாமாவின் நெற்றிப் புருவம் மேலுயர்ந்து கண்கள் யோசனையில் ஆழ்ந்தன. இந்நிலையில் அவளைப் பார்க்கையிலேயே அவள் அழகு சாத்யகியைக் கவர்ந்தது.   ஆனால் பாமா உடனே அவன் பக்கம் திரும்பி, “நீ எதுவும் பேச வேண்டாம் சாத்யகி.  என்னை நம்பு.  எல்லாவற்றையும் நானே சரியாக்கி விடுகிறேன்.  என்னை நம்புகிறாய் அல்லவா?” என்று கேட்டாள்.  “ஆனால் நான் கோவிந்தனிடமும் பொய்யைச் சொல்ல முடியுமா?  என் படைவீரர்களோடு நான் ஏன் சேர்ந்து கிளம்ப வரமுடியாமல் போயிற்று என்பதை அவனிடம் நான் விளக்கியே ஆக வேண்டும்.  என் வீரர்கள் எனக்காகக் காத்திருப்பார்களே!’

“உன் வீரர்கள் உனக்காகக் காத்திருக்கவெல்லாம் இல்லை.  கிருஷ்ணன் தானே தலைமை வகித்து அவர்களை நடத்திச் சென்று விட்டான்.  இப்போது அவன் வெகு தூரம் சென்றிருப்பான்.  புஷ்கரத்தை நோக்கி விரைந்து கொண்டிருப்பான்.  “ சத்யபாமா இப்போதும் யோசனையில் இருக்கிறாள் என்பதை அவள் முகம் காட்டியது.  சாத்யகிக்குத் தூக்கிவாரிப்போட்டது!  அதிர்ச்சியோடு, “என்ன?”  என்றான்.  “ஆமாம், சாத்யகி, உன்னைக் காணவில்லை என்றதுமே,  கண்ணன் சிறிதும் தாமதிக்காமல் உன் படைக்குத் தான் பொறுப்பேற்றுக் கொண்டு உடனடியாக துவாரகையை விட்டுச் சென்று விட்டான்.”
“பின்னர் இதை விட வேறென்ன காரணம் வேண்டும்?  நான் நடந்ததை எல்லாம் மாட்சிமை பொருந்திய உக்ரசேன மன்னருக்கும், வசுதேவருக்கும் தெரிவித்தே ஆக வேண்டும்.  கோவிந்தனை நான் ஏமாற்றவில்லை என்பதை அவர்கள் அறிந்தே ஆக வேண்டும்.”

“உன் பேச்சுக்கள் அலுப்பைத் தருகின்றன சாத்யகி. “  சட்டென்று எழுந்த அவள் ஏதோ முடிவுக்கு வந்தவள் போல மீண்டும் அவனைப் பார்த்து, “என்னுடன் வா, நானும் உன்னுடன் கூட வந்து அவர்களிடம் நடந்ததை என் மூலமாகவே தெரிவிக்கிறேன்.  ஏன் உன்னைக் கடத்தினேன் என்பதையும் எவ்வாறு கடத்தினேன் என்பதையும் சொல்லி விடுகிறேன்.   ஆனால் ஒரு விஷயம் உனக்குத் தெரியுமா?  இன்று காலையிலிருந்து எல்லாமும் மாறி விட்டது.  ஆம், அனைத்தும் மாறி விட்டது.  அதன் காரணம் பெரிய அண்ணன் பலராமன்.  அவர் பொறுப்பை எடுத்துக் கொண்டு விட்டார்.  கோவிந்தனின் இந்தத் துணிகர சாகச முயற்சியில் தன் பங்கையும் கொடுக்கப் போகிறார்.  அதற்காக அதிரதர்களுக்கு அவர் அழைப்பு விடுத்துள்ளார்.  கிருஷ்ணனைத் தேடிக் கொண்டு வட தேசம் சென்று அவனுடைய அனைத்து முயற்சிகளுக்கும் உதவி செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டிருக்கிறார்.  அவன் யாருக்கெல்லாம் உறுதிமொழி கொடுத்தானோ அவர்களுக்கெல்லாம் அது நிறைவேற்றப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளார்.”

“ஆஹா, உண்மையாகவா?  எத்தனை அற்புதம், அற்புதம்!”

“நான் உண்மையை மட்டுமே பேசுகிறேன் சாத்யகி.  திரெளபதியின் சுயம்வரத்திலும் எல்லா அதிரதர்களும் கலந்து கொள்ளப் போகின்றனர்.   உனக்கும் வாய்ப்புக் கிடைக்கும்.  பாஞ்சால தேசத்தின் மன்னனுக்கு மருமகனாகப் போகும் பேறு உனக்குக் கிட்ட இன்னமும் வாய்ப்புகள் இருக்கின்றன.  நான் நிராகரித்த ஒருவனைக் கணவனாகத் தேர்ந்தெடுக்கப் போகும் பாஞ்சால இளவரசியின் துரதிர்ஷ்டத்தைப் பார்த்து நான் களிப்பில் கூத்தாடலாம்.   ஆஹா, அப்படி மட்டும் நடந்தால்!  நானே எல்லாரிலும் உயர்ந்தவளாக இருப்பேன்.  சரி, சரி, விரைவில் என்னுடன் கிளம்பி வா!”

“இங்கிருந்து நாம் எங்கே செல்லப் போகிறோம்?”

“முதலில் பலராமனிடம் செல்வோம்.   அவர் இன்று காலை என் தந்தையை அழைத்து , சாத்யகி இருக்குமிடம் இன்று மாலை முடிவதற்குள்ளாகத் தெரியவில்லை எனில், என் தந்தையை, யாதவ குல துரோகி எனப் பட்டம் சூட்டுவதாகப் பயமுறுத்தி உள்ளார்.   நான் நல்ல பெண் இல்லையா?  என் தந்தையை இந்த இக்கட்டிலிருந்து காக்க வேண்டாமா?  பாவம் அப்பா, அவருடைய ஒரே மகள் எவ்வளவு துஷ்டை என்பதை அவர் அறிந்திருக்கவே இல்லை.” சிரித்த பாமா, மேலும் தொடர்ந்து, “ அந்த துஷ்டப் பெண் சில சமயம் அவருக்கு உதவவும் செய்வாள்.  வா சாத்யகி, நாம் பெரிய அண்ணன் பலராமனிடம் செல்வோம்.  ஆனால் ஒன்று, என் விஷயம், என் ரகசியம் ரகசியமாகவே இருக்கட்டும்.  நான் கோவிந்தனை முழுமையாக எனக்கே எனக்கு என்று  இருக்க விரும்புகிறேன்.  எவரிடமும் எந்தவித வார்த்தையும் கூறக் கூடாது.  கோவிந்தனிடம் கூட, எதையும் காட்டிக் கொள்ளக் கூடாது.  ஜாக்கிரதை!” என்று எச்சரித்தாள்.

அப்போது சாத்யகிக்குத் திடீரென கிருஷ்ணனின் அதிசய வேலை இங்கே எவ்விதம் நடந்திருக்கிறது என்பது புரிய வர ஆச்சரியத்தில் ஆழ்ந்தான்.  சாத்யகியை நிச்சயமாக ஜயசேனனின் ஆட்கள் கொன்றே போட்டிருக்கலாம்.  அல்லது அவனை இன்னமும் அடைத்து வைத்து அபகீர்த்தி உண்டாக்கி இருக்கலாம்.  இவை இரண்டில் இருந்தும், இந்த அழகான பெண் மூலம் கிருஷ்ணன் தன்னைக் காப்பாற்றி இருக்கிறான்.  இதற்குக் காரணம் கிருஷ்ணன் மேல் அவள் கொண்ட காதல்  கிருஷ்ணனே அறியாமல் இவள் கொண்ட காதல் தன்னைச் சாவிலிருந்தும், அபகீர்த்தியிலிருந்தும் காத்துள்ளது.





Monday, March 10, 2014

கண்ணனுக்கு ஏற்ற மனைவி நான் ஒருத்தியே!

சாத்யகிக்கு என்ன சொல்லுவது என்றே  தெரியவில்லை.  கிட்டத்தட்ட அவன் ஊமையாகி விட்டான்.  இந்தப் பெண்ணைப் பாராட்டுவதா  அல்லது இவள் என்னைக் கடத்தியது குறித்து வெறுப்பதா என்றே தெரியவில்லையே!   இப்படி எல்லாம் நினைத்துக் குழம்பிய வண்ணம் , “ இந்த ஆபத்தை விளைவிக்கக் கூடிய துணிகரமுயற்சிகளில் நீ எங்களுக்கு உதவவா நினைக்கிறாய்?  சத்யா,என்னால் நம்பவே முடியவில்லையே!  அதற்காகவா என்னைக்கடத்தினாய்?  ஏன்? சத்யா, ஏன் என்னைக் கடத்தினாய்?  உன்னை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை, பெண்ணே!”  என்றான் சாத்யகி!

“பெண்கள் ஒரு புதிர் சாத்யகி.  எவராலும் புரிந்து கொள்ள முடியாத புதிர்!  யாராலும் அவர்களைப் புரிந்து கொள்ள முயற்சி கூடச் செய்ய இயலாது. “  தன்னுடைய சுபாவமான அலக்ஷியம் தொனிக்கக் கூறினாள் சத்யபாமா.  “அவ்வளவு ஏன், சாத்யகி, எல்லாம் வல்ல அந்த மஹாதேவன், சாக்ஷாத் சங்கரன் கூட  பார்வதி தேவியின் சாதுர்யப் பேச்சால் மயங்கி விடவில்லையா?”

“அது சரி, பெண்ணே, எங்களுடைய இந்த சாகசங்களில் நீ கலந்து கொள்வதால் உனக்கு என்ன பயன்?நீ இங்கே என்ன செய்யப் போகிறாய்?”

சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்ட பாமா, தன் குரலைத் தழைத்துக் கொண்டாள்.  ரகசியம் பேசும் குரலில் அவனை நெருங்கி, “ இதை உன்னுடன் வைத்துக் கொள்.  நான் இப்போது சொல்லப் போவது ரகசியமானது.  எனக்கு இதைக் காப்பாற்றுவதாக உறுதி கூறு!  நான் உனக்குச் சொல்லுகிறேன். ஏனெனில் எதிரிகளின் கூடாரத்திலும் எனக்கு ஒரு நண்பனாவது இருக்க வேண்டும் அல்லவா?”  அவள் கண்கள், முகம் முழுவதும் குறும்பில் கூத்தாடியது.  சாத்யகியின் ஆர்வம் அதிகரித்தது.  “ ஓ, சரி, சத்யா, நான் கட்டாயம் இந்த ரகசியத்தைக் காப்பாற்றுவேன். “என உறுதி மொழி கொடுத்தான்.

“இதோ பார் சாத்யகி, கிருஷ்ண வாசுதேவனிடம் கூடக் கூறக்கூடாது. சரியா?”

கொஞ்சம் யோசித்த சாத்யகி, “ சரி, உண்மையிலேயே உனக்குக் கிருஷ்ண வாசுதேவனைக் காக்க வேண்டும்;  அவனுக்கு உதவ வேண்டும் என்னும் எண்ணம் இருப்பது உண்மையானால்;  அதன் மூலம் நானும் திருப்தி அடைய முடியும் எனில்,  உன் உதவி கிருஷ்ண வாசுதேவனுக்கு நேர்மையாகக் கிட்டும் எனில், நான் இந்த ரகசியத்தைக் காப்பாற்றுகிறேன்.”  என்றான்.

“ஓ, நான் கிருஷ்ண வாசுதேவனுக்கு  உண்மையாகவே உதவ விரும்புகிறேன்.  இல்லை எனில் இவ்வளவு சிரமம் எடுத்துத் துணிகரமாக நான் உன்னைக் காரணமே இல்லாமலா கடத்துவேன்?”  மீண்டும் அதே அலக்ஷியம் குரலில்.  கேலியும் மிகுந்திருந்தது.  பல்லைக் கடித்துப் பொறுத்துக் கொண்டான் சாத்யகி.

“எங்களிடம், எங்கள் முயற்சிகளிடம் என்ன ஆர்வம் உனக்கு?  சொல் என்னிடம்!” என்றான்.

“ஓஹோ, சாத்யகி,  இந்த நாங்கள், எங்கள் என்பதை எல்லாம் விட்டு விடு.  நான் உன்னிடம் ஆர்வம் கொள்ளவில்லை.  என் ஆர்வம் எல்லாம் கோவிந்தனின் துணிகரச் செயல்களிடம் தான்.  அவனிடம் தான் ஆர்வம் கொண்டிருக்கிறேன்.  உன்னிடம் அல்ல. “

“அப்படியா? சத்ராஜித்தின் மகளே,  கோவிந்தனிடம் என்ன ஆர்வம் உனக்கு?  அவனிடம் என்ன மயக்கம்?  என்ன வேண்டும் அவனிடமிருந்து?  எதற்காக அவனிடம் உன் கருத்தைச் செலுத்தி இருக்கிறாய்?”

பாமாவின் கண்கள் எங்கோ தூரத்தில் நிலை கொண்டன.  கனவு காண்பவளைப் போல் அரைக்கண் மூடிய வண்ணம் பார்வையைத் தொலை தூரத்தில் செலுத்திய வண்ணம்  அவள் பேச ஆரம்பித்தாள்.  அவள் குரல் மிக மிக மிருதுவாகவும், மெல்லியதாகவும், ரகசியம் பேசும்படியாகக் காணப்பட்டது. ஆனால் சொல்ல வேண்டிய விஷயத்தைத் தெளிவாக உறுதியாக, நன்கு புரியும்படியாகப்பேச ஆரம்பித்தாள்.  அவள் கனவுகளில் மிதக்கிறாள்  என்பதும், நீண்ட நாட்களாகத் தன் மனதில் புதைந்து கிடந்த ஒரு விஷயத்தைப் பகிர்ந்து கொள்கிறாள் என்பதையும் சாத்யகியால் புரிந்து கொள்ள முடிந்தது.

“நான் குழந்தையாக இருந்த போதிலிருந்தே என் தகப்பனாரும், இன்னும் என் உறவினர் சிலருக்கும் கிருஷ்ண வாசுதேவனை அறவே பிடிக்காது.  அவர்களுக்கு எவ்வளவு அவனைப் பிடிக்காதோ அத்தனைக்கு எனக்கு அவனை மிகவும் பிடித்தது.  அவனை நான்  மிகவும் விரும்பினேன்.  ஆகவே என் நிலைமை என் வீட்டவரை எதிர்க்க வேண்டிய நிலையில் இருந்தது.  மெல்ல மெல்ல நான் வளர்ந்து ஒரு பருவப் பெண்ணானதும், என் குறிக்கோள் அவனை மணந்து கொள்வதாகத் தான் இருந்தது.  ஆனால்….ஆனால்….  அவனோ  முதலில் ருக்மிணியையும், பின்னர் ஷாய்ப்யாவையும் மணந்து கொண்டான்.  அன்றிலிருந்து எனக்கு ருக்மிணியும், ஷாய்ப்யாவும் எதிரிகள் ஆகிவிட்டார்கள்.  நான் அவர்களை வெறுக்கிறேன்.  அவர்களிடம் மிகவும் கோபமும் கொண்டிருக்கிறேன்.  ஹூம்,  அந்த இரு சாமானியப் பெண்களாலும், என்னளவுக்குக் கிருஷ்ணனை நேசிக்க முடியுமா?  சந்தேகமே!   நான் அவனைக் கல்யாணம் செய்து கொண்டு மனைவியானால் இந்த உலகையே அவன் காலடியில் கொண்டு வருவேன்.  நான் என்னவெல்லாம்   அவனுக்குக்கொடுக்கவென வைத்திருக்கிறேனோ அவற்றில் கால் பங்கையாவது அந்த கர்வம் கொண்ட விதர்ப்ப நாட்டு இளவரசியாலும்,  அந்த ஷாய்ப்யாவாலும் கொடுக்க முடியுமா?  முதலில் அவனை மணந்து கொள்ளவே இவர்களுக்குத் தகுதி கிடையாது.  நான் மட்டும் கிருஷ்ணனை மணந்தால்!!! ஒரு சொர்க்கத்தையே அவனால் காண முடியும்!”

சாத்யகி புன்முறுவல் பூத்தான்.

Sunday, March 9, 2014

நான் தான் உன்னைக் கடத்தினேன்!

“முட்டாள் சாத்யகி, நான் உன்னை ஜெயசேனனிடம் இருந்தும்  அவன் கூட்டத்தாரிடமிருந்தும் காப்பாற்றவே விரும்பினேன். ஏனெனில் ஜெயசேனன் உன்னைக் கொல்வதற்கு இருந்தான்.  அதற்காகவே உன்னுடைய நடவடிக்கைகளை நோட்டம் பார்க்க வேண்டி உன்னிடம் நண்பனைப் போல் வலிய வந்து பேசினான்.  நீ உன் படை வீரர்களிடம் சேர்வதற்காகக்காலை செல்கையில் உன்னை எப்படியேனும் தொடர்ந்து வந்து உன்னைக்கொன்றிருப்பான்.  அவர்கள் திட்டம் என்னவென அறிந்த பின்னர் அவர்கள் உன்னைத் தொடுமுன்னர் உன்னை நான் அப்புறப்படுத்தி மறைத்து வைக்க விரும்பினேன்.   இல்லை எனில் அவர்கள் இந்தப் பாவகரமான திட்டத்தைச் செயல்படுத்தி இருப்பார்கள்.”

“பொய், முழுப் பொய்!  உன் இஷ்டத்துக்குப் பொய்களை மேன்மேலும் கூறிக்கொண்டு போகாதே! என்னைக் காப்பாற்ற வேண்டி கடத்தினாளாம்!  யாரிடம் பொய் சொல்கிறாய்!  ஏ, பெண்ணே, உனக்கு என் மீது அப்படி என்ன அக்கறை?  ம்ம்ஹூம், அக்கறை எல்லாம் எதுவும் இல்லை, எனக்குப் புரிந்து விட்டது.  நான் என் படை வீரர்களுடன் கோவிந்தனுக்கு உதவியாகச் செல்வது உனக்குப் பிடிக்கவில்லை. அதைத் தடுத்து நிறுத்தவே இப்படி ஒரு  நாடகம் ஆடி இருக்கிறாய்!”

அவன் கூறியதைக் கேட்டு எந்தவிதக் கவலையும் படாமல் சத்யபாமா கலகலவெனச் சிரித்தாள்.  “மீண்டும், மீண்டும் நீ தவறாகவே யூகங்கள் செய்கிறாய், சாத்யகி!  நான் உன்னைக் கடத்தினேன். அது தான் உண்மை. உன் உயிரைக் காப்பாற்றினேன்.  ஏனெனில் நீ கிருஷ்ண வாசுதேவனின் நண்பன்.  கிருஷ்ண வாசுதேவனின்  நன்மைக்காக நீ பிழைத்திருக்க வேண்டும்;  உன் உதவிகள் தொடர்ந்து அவனுக்குக்கிடைக்க வேண்டும் என்பதே என் விருப்பம்.”

தன்னைத் தானே கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொண்டு அமைதியுடன் சொல்லும் அவளை விரிந்த கண்களோடு ஆச்சரியம் அகலாமல் பார்த்தான் சாத்யகி. ஆனால் அவளோ அவன் பார்வையையோ, ஆச்சரியத்தையோ லக்ஷியமே செய்யவில்லை.  மேலும் தொடர்ந்தாள்: “இதோ பார் சாத்யகி, நான் உன்னைக் கடத்தி இங்கே கொண்டு வரவில்லை எனில் நீ கட்டாயம் கொல்லப்பட்டிருப்பாய்.  அல்லது மிக மோசமாகக் காயங்கள் அடைந்து மரணப்படுக்கையில் இருப்பாய். அந்தக் குழுவினர் அவ்வளவு பொல்லாதவர்கள்.    கிருஷ்ணனின் பக்கமே இருந்து அவனுக்கு உதவிகள் செய்ய வேண்டும் நீ என்றே நான் விரும்புகிறேன்.  அதிலும் இப்போது கிருஷ்ணன்  மிகப் பெரிய ஆபத்து விளைவிக்கக்கூடிய துணிகரச்செயல்களில் தன் கவனத்தைச் செலுத்தி வருகிறான். இப்போது தான் அவனுக்கு உற்ற நண்பர்கள் உதவியும்,உற்றார், உறவினர் உதவியும் தேவை.  இந்தச் சமயத்தில் அவனைத் தனிமையில் வாட விடுவதை நான் சிறிதும் விரும்பவில்லை.”  இதைச் சொல்கையில் அவள் குரலில் இனம் புரியாத ஏக்கமா, கவலையா, ஏதோ ஒன்று இருந்தது.    சாத்யகியின் கோபம் தணிந்தது.  கட்டாயம் இதில் உண்மை இருந்தாக வேண்டும்.  சத்யபாமா உண்மையைத் தான் சொல்கிறாள்.

  சாத்யகி படை வீரர்களுக்குத் தலைமை வகிக்கச் செல்கையில் ஜெயசேனன் அவன் குழுவினருடன் அவனை அவர்கள் திட்டப்படி தாக்கி இருந்தால் அவன் ஒருவேளை இப்போது அவர்கள் கட்டுப்பாடில் இருக்கலாம்;  அல்லது மரண காயப்பட்டிருக்கலாம்;  அல்லது ஒருவேளை இறந்தே போயிருக்கலாம். ஆனால் சாத்யகிக்கு இது தான் புரியவில்லை.  சத்ராஜித் கிருஷ்ணனை முழுதும் எதிர்ப்பவன்.  அப்படி ஒரு எதிரியின் பெண்ணுக்குக்  கிருஷ்ணனின் தோழனைக் காக்க வேண்டும் என்ற எண்ணம் எப்படி வந்திருக்கும்?  ஏன் வந்தது?

“நீ கிருஷ்ணனுக்கு உதவ விரும்பினாயா?சத்யபாமா, உன்னை எப்படி நம்புவது?  நான் நம்பமாட்டேன்!” என்றான் சாத்யகி.  அவனுக்கு மீண்டும் தான் காண்பதெல்லாம் கனவோ என்னும் எண்ணம் ஏற்பட்டிருந்தது.  “ஹா, ஹா, பின் நான் ஏன் உன்னைக் கடத்தினேன்?  உன்னைக் கடத்தி இங்கே கொண்டு வந்து என் முன்னால் உன்னை நிறுத்தி மிகவும் அழகுடனும், வடிவுடனும் இருப்பதாக நீ நினைக்கும் உன் முகத்தைப் பார்த்து ரசிக்கவா?  அதிலும் உன் தந்தை மிக மோசமாக,மிக அசிங்கமாக என் தந்தையின் வேண்டுகோளை நிராகரித்த பின்னரா? “ கிண்டலாகக்கேட்டாள் சத்யபாமா.

“ஆனால் உனக்குக் கிருஷ்ணனிடம் என்ன  ஈர்ப்பு?  அவனிடம் எதற்காக நீ கவனம் செலுத்துகிறாய்? அவன் வேலைகளிலும், அவன் வெற்றியிலும் உனக்கு என்ன ஆவல்?  என்ன ஆர்வம் உனக்கு?  உன் தந்தையோ கிருஷ்ணனின் ஒவ்வொரு வேலைகளிலும் குற்றம் கண்டு பிடிப்பதோடு இல்லாமல்  அது நடைபெறாமல் இருக்கப் பாடுபடுகிறார்.  அவனை எதிர்த்து வெறுப்பேற்ற விரும்புகிறார்.   ஆனால் நீ அவனுக்கு உதவப்போகிறதாய்ச் சொல்கிறாய்!  “  சாத்யகிக்கு இது புரியாத புதிராக இருந்தது.   பாமா மீண்டும் உற்சாகம் குன்றாமல் சிரித்தாள்.

“ஒரு கடமை தவறாத பெண்ணாக என் தந்தையின் ஒவ்வொரு நடவடிக்கையும் , அவரின் திட்டங்களும் தோற்க வேண்டும் என நான் வேலை செய்கிறேன்.  அதையே விரும்புகிறேன்.  அவரை வெறுப்பேற்ற விரும்புகிறேன்.  கிருதவர்மன் உங்களுக்குக் குதிரைகள், ரதங்கள், பொற்காசுகள் கொடுத்திருப்பாரே!  அவர் என்ன அப்படிப் பெரிய பணக்காரரா ? இல்லையே!  இவை எல்லாம் அவரின் சொந்தச் சொத்தா?  அவரே கொடுத்ததா? இல்லை எனில் அவருடைய தொழில் கூட்டாளியிடமிருந்து வந்ததா?   கிருதவர்மன் என் தாயின் சகோதரி மகன் என்பதை மறக்காதே சாத்யகி!  நீ வெறும் குழந்தை! சூது, வாது தெரியாத, புரியாத குழந்தை! உன்னால் பெண்களையோ அவர்கள் மனம் வேலை செய்யும் விதத்தையோ புரிந்து கொள்வது இயலாது.”

சாத்யகி தள்ளாடினான். “பாமா, அப்படி எனில் கிருதவர்மாவுக்குக் குதிரைகள், ரதங்கள், பொற்காசுகளை நீதான் கொடுத்து எங்களிடம் சேர்ப்பிக்கச் சொன்னாயா?”

பாமா மீண்டும் சிரித்தாள்:”நான் நேரிடையாகக்கொடுக்கவில்லை; அவை என் தந்தையின் சொத்துக்கள். நான் அவற்றை அவரிடமிருந்து திருடினேன்.”  சற்றும் கவலையின்றித் தயக்கமின்றிச் சொன்ன பாமா மேலும் தொடர்ந்தாள்.”எங்களிடம் இருக்கும் தங்கத்தின் அளவுக்கும், மதிப்புக்கும் இவை தூசு மாத்திரம். இந்தச் சொற்பத் தங்கம் திருடு போனதை என் தந்தையால் கண்டுபிடிக்கவே முடியாது. “தன் கைகளால் அந்த அறையைச் சுற்றிக்காட்டினாள் அவள்.  “இதோ பார், ஒவ்வொரு அறையிலும் தங்கமும், வைரமும், நவரத்தினங்களும் எப்படிக் கொட்டிக் கிடக்கிறது!  ஒவ்வொரு அறையும்  தங்கத்தாலும் வைரத்தாலும் நவரத்தினங்களாலும் இழைக்கப்பட்டிருக்கிறது என்பதையும் பார்.  எது எங்கே யாரிடம் போனது என்பதை எவராலும் கண்டு பிடிக்க இயலாது.  அதே போல் எங்களிடம் இருக்கும் குதிரைகளும் கணக்கிலடங்காதவை.  அவற்றில் ஒரு சில இல்லை என்பதையும் எவரால் கண்டு பிடிக்க இயலும்?”