Thursday, December 30, 2010

கண்ணன் வருவான், கதை சொல்லுவான் 2-ம் பாகம்

பிக்ருவிற்குக் கப்பல்களைப் பிடித்ததோடு வேலை முடியவில்லை. அங்கே கப்பல் தலைவர்கள் அடிமைகளை அடைத்து வைத்திருந்த இடத்துக்குச் சென்று கதவை உடைத்து அனைத்து அடிமைகளையும் விடுவித்தான். பலராமனும் அவனுடன் சென்ற மற்றவர்கள் நடத்திய திடீர்த் தாக்குதலில் மொத்த நகரமும் நிலைகுலைந்தது. விடுதலை பெற்ற அடிமைகள் சந்தோஷம் தாங்க முடியாமல் பிக்ரு சொன்ன வேலையைச் சிரமேற்கொண்டு செய்ய ஆரம்பித்தனர். தங்கள் கண்களில் படும் நபர்கள் தங்களை எதிர்த்தால் உடனே அவர்களைக் கொன்று கொண்டு முன்னேறிச் சென்றார்கள் பலராமனும் குக்குட்மின் அரசனும். குஷஸ்தலை இத்தகையதொரு தாக்குதலை எதிர்பார்க்காமல் ஆச்சரியத்தில் ஆழ்ந்தது. மேலும் புண்யாஜனா ராக்ஷசர்கள் கடலில் மட்டுமே வீரம் மிகுந்தவர்கள். தரைவழிச் சண்டை தெரியாததோடு வணிகத்திலே மட்டுமே கவனம் செலுத்தி வந்த தற்போதைய மக்களுக்குச் சண்டையின் அடிப்படையும் புரியவில்லை. எவ்வாறு எதிர்ப்பது எனவும் தெரியவில்லை. யுத்தத்தில் கைதேர்ந்த பல கப்பல்கள் கடலில் தொலைதூரத்துக்குத் தொலைதூரம் சென்றிருந்தன. இங்கே இருந்தவர்களில் தச்சுவேலை செய்யும் தச்சர்கள், மற்ற சிற்பவேலை செய்பவர்கள், பணம் லேவாதேவி செய்பவர்கள், வியாபாரிகள், தரகர்கள் போன்ற தொழிலில் ஈடுபட்டவர்களே ஆகவே பலராமனுக்கும், குக்குட்மினுக்கும் வெகு எளிதாக வெற்றி கிடைத்தது. அவர்களில் பலருக்கும் கையில் கத்தியைப் பிடிக்க்க் கூட்த் தெரியவில்லை.


அதன் பின்னர் அவர்கள் புண்யாஜனா மக்களின் கோயிலுக்குச் சென்று அங்கே மனிதர்களைக் கொன்று அவர்களின் ரத்தத்தால் வழிபாடுகள் நடத்திக்கொண்டிருந்த பல பூசாரிகளைப் பிடித்துக் கொண்டு கோயிலை இழுத்து மூடினார்கள். மதுக்கடைகள் அனைத்தும் தாக்கப்பட்டன. பலராமனுக்கு மிகவும் சந்தோஷம். அவன் விருப்பத்துக்கு மதுவை மாந்தியதோடு ரேவதிக்கும் உபசாரம் செய்ய, ரேவதி கண்டிப்பாய் மறுத்தாள். உத்தவனிடம் கொடுக்க உத்தவனும் மறுத்து மேற்கொண்டு ஆகவேண்டிய வேலைகளுக்கு உத்தரவுகள் கொடுக்க ஆரம்பித்தான். மாலை ஆவதற்குள்ளாக பலராமனின் ஆட்கள் அனைவரும் வெற்றிக் கொண்டாட்டத்தில் மூழ்கினார்கள். குஷஸ்தலையின் தெருக்களில் ஆட்டம், பாட்டம், கொண்டாட்டமாய் இருந்த்து. மறுநாள் வெற்றி பெற்றவர்களுக்கு அரச விருந்து வைத்துக் கொண்டாட, பிக்ருவும் குக்குராவும் அனைத்துக்கப்பல்களையும் கைப்பற்றிக்கொண்டு, அவற்றையும் துறைமுகத்தையும் சீர் செய்யும் வேலைகளில் ஈடுபட்டனர்.

ஒருவேளை தூரத்தில் சென்றிருக்கும் புண்யாஜனா கப்பல்கள் திரும்பித் தாக்கினால் என்ன செய்வது? ஆகையால் அதற்கான முன்னேற்பாடுகளை முதலில் செய்தனர். குக்குட்மின் அரசாட்சிப் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். அவருக்கு விசுவாசமாயும், உண்மையாயும் இருந்த அவர் இனத்தைச் சேர்ந்த சில மனிதர்கள் இந்த விஷயம் பரவியதும் தங்கள் மறைவிடங்களில் இருந்து தங்கள் குழந்தைகள், மனைவி, மக்களோடு குஷஸ்தலை நோக்கி விரைந்தனர். உத்தவன் குக்குட்மினின் அருகே எப்போதும் இருந்து தக்க ஆலோசனைகள் கூறி வந்தான். பலராமன் மிகவும் மகிழ்வோடு இருந்தான். அவன் சந்தோஷத்துக்கு எல்லையே இல்லை. ரேவதி எங்கெல்லாம் சென்றாளோ அங்கெல்லாம் அவள் பின்னாலேயே சுற்றிக்கொண்டிருந்தான். ரேவதிக்கும் இப்போது பலராமன் மேல் தனி மதிப்பு ஏற்பட்டிருந்தது. ஆகவே அவனைப் பார்த்து அவ்வப்போது ஒரு புன்னகை, ஒரு தலையாட்டல், கடைக்கண்களால் பார்ப்பது, சிலசமயம் பலராமன் மேல் தான் வைத்திருக்கும் அன்பு புரியும்படியாக அவனை நேருக்கு நேர் பார்ப்பது, பின்னர் சட்டென்று அந்த இடத்தை விட்டுச் செல்லுதல் என்று பலராமன் மேல் தான் கொண்ட காதலைப்பரிபூரணமாய் வெளிப்படுத்திக்கொண்டிருந்தாள்.

மூன்று நாட்கள் வெற்றிவிழா நடந்து முடிந்தபின்னர் பலராமன் தன் ஆட்களைப் பார்த்து விரைவில் கிளம்பத் தயாராகச் சொன்னான். குஷஸ்தலையின் மக்களுக்கு பலராமன் ஒரு மாபெரும் அதிசயமாய்த் தெரிந்தான். அவன் ஆதிசேஷன் எனவும் ஆயிரம் தலை படைத்த ஆதிசேஷனின் பூரண அவதாரம் எனவும் அவர்கள்பரிபூரணமாய் நம்பினார்கள். ஆகவே பலராமன் செல்லுமிடமெல்லாம் அவனை வழிபட்டு வாழ்த்தினார்கள். பிரபாச க்ஷேத்திரத்தில் சண்டையிட்ட வீர்ர்கள் காடுகளில் மறைந்திருக்கும் நாகர்களிடம் செல்ல வேண்டிக் கிளம்பினார்கள். நாகர்கள் பரசுராமரைத் தங்கள் குலதெய்வமாய்க் கொண்டாடிவந்தனர். பல்லாண்டுகள் முன்னர் ஷர்யாத குலத்திடம் அடிமைப்பட்டுக்கிடந்த தங்களை விடுவித்த பரசுராமரை அவர்கள் எப்போதுமே மிகவும் மரியாதையுடன் வணக்கத்துடன் வணங்கிவந்தார்கள். அவர் எப்போது வேண்டுமானாலும் தங்கள் முன்னால் தோன்றித் தங்களை வாழ்த்துவார் எனவும் நம்பிவந்தார்கள்.


ஆகவே இப்போது பலராமன் அவருடைய முக்கிய சீடர்களில் ஒருவன் எனத் தெரிந்ததும், அவர்கள் காட்டில் தாங்கள் மறைந்திருந்த இடங்களில் இருந்து வெளியே வந்தனர். அவர்களுக்கும் கிரிநகரின் அரசனையோ அந்த நகரின் குடிமக்களையோ பிடிக்காது. ஆகவே இப்போது கிரிநகரைத் தாக்கச் செல்லும் பலராமனுக்குத் துணையாகத் தாங்களும் சென்றார்கள். பலராமன் கிரிநகர் மலையின் அடிவாரத்துக்குச் சென்றதும் அங்கே கூடாரம் அடித்துத் தங்கினான். மலை அடிவாரத்திலோ மேலே கோட்டையின் வெளிப்புறத்திலோ மக்கள் நடமாட்டமே கண்களுக்குத் தெரியவில்லை. அனைவருமே கோட்டைக்குள் பதுங்கி இருந்தார்கள் போலும். அங்கே தாமகோஷனின் வீர்ர்கள் சுற்றிச் சுற்றி வந்தபோது ஒருவன் கண்களில் ஒரு வீரன் மலையிலிருந்து இறங்கி இவர்களை நோக்கி வருவது தெரியவே அவனை இழுத்து வந்து பலராமன் முன்னர் நிறுத்தினான். அவன் பலராமனை நிமிர்ந்து பார்க்கவே தயங்கினான். பயந்து பயந்து நிமிர்ந்தவனை விசாரித்த்தில் அவன் மலைமேலிருந்த கோட்டையிலிருந்து வந்திருப்பது தெரிய வந்தது.


அவனிடம் பலராமன் கூறினான்:”உன் மன்னனிடம் போய்ச் சொல்வாயாக! மதுராவில் இருந்து யாதவர்களிலேயே தலைசிறந்த வசுதேவனின் குமாரனும், கண்ணனின் மூத்த சகோதரனும், சக்கரவர்த்தியான ஜராசந்தனையே தோற்கடித்து ஓடவைத்தவனும், அவ்வளவு ஏன், அந்த ஆதிசேஷனே வந்திருப்பதாய்ப் போய்ச் சொல். உன் மன்னனை எங்களுக்குக் கப்பம் செலுத்தச் சொல். உன் அரசன் யாதவகுலத்தின் மது என்ற பிரிவைச் சேர்ந்தவன் தானே? அவன் எங்கள் ஆளுகைக்குள்ளே தான் வருகிறான். எனக்கு வேகமாய் ஓடக்கூடிய 50 குதிரைகளுடன் கூடிய ரதங்களும், அவற்றை ஓட்டக்கூடிய அதிரதிகளும் தேவை. அதைத் தவிர 50 வேகமாய் ஓடக்கூடிய குதிரைகளும் ஒரு மனிதனின் எடைக்கு ஏற்ற அளவு பொன்னும் வேண்டும். நாளை மாலைக்குள் அனைத்தும் வந்து சேரவேண்டும்; இல்லை எனில் நான் கோட்டையைத் தரைமட்டமாக்கிவிடுவேன்; கோட்டையில் எவரும் உயிர் பிழைக்கமாட்டார்கள். என்னை எதிர்க்க முயலவேண்டாம்!’ என்றான்.


ப்ரியா கேட்டுக்கொண்டபடி குஷஸ்தலை இருந்திருக்கக் கூடும் என நினைக்கும் இடங்களின் படங்களைப் போட்டிருக்கிறேன். சிலர் இப்போதைய கோவா எனவும் வேறு சிலர் தியூ, தாமன் எனவும் கூறுகின்றனர். எப்படி இருந்தாலும் மேற்குக் கடலோரமே இருந்திருக்கிறது.

Saturday, December 25, 2010

கண்ணன் வருவான், கதை சொல்லுவான், 2-ம் பாகம்

கப்பல் செல்லும்போதே கரையில் ஆட்கள் நடமாட்டம் தெரிந்தது.  வெகுவிரைவில் குஷஸ்தலையின் கடலும் வந்துவிட்டது.  பிக்ரு எதிர்பார்த்ததுக்கு மாறாகப் பாதி வழியிலேயே  புண்யாஜனாக் கப்பல் அவர்களை முழுவேகத்தோடு தாக்கி பிக்ருவின் கப்பலின் சுக்கானைத் தூளாக்கியது.  ராதுவுக்கு ஒரு அரைநாள் தேவைப்பட்டது சுக்கானைச் சரியாக அமைப்பதற்கு.  பிக்ரு இதை எதிர்பார்க்கவே இல்லை.   அதை வாய்விட்டும் கூறிக்கொண்டான்.  பலராமன் புண்யாஜனாக்கப்பல் இருளில் மறைந்து நிற்கிறது என்பதையும் விரைவில் அவர்கள் கப்பலைத் தாண்டி நகருக்குள் சென்று எச்சரிக்கை செய்வார்கள்  எனவும் புரிந்துகொண்டான்.  அந்தக் கப்பலைத் தடுக்கவேண்டுமே, அதோடு இந்தக் கப்பல் முன்னால்கிளம்பவேண்டும், ஏனெனில்  காற்று சுத்தமாய் நின்று போய்விட்டது.  காற்றுச் சாதகமாய் இருந்தால் தான் கப்பல் நகரவே முடியும்.  காற்று மட்டும் வீசினால்??   மேலும் புண்யாஜனாக் கப்பல் உதவிக்கு வருவதற்கு முன்னாலேயே நகரைத் தாக்கவேண்டும்.  ஆகவே  அவர்களுக்கு முன்னால் தாங்கள் துறைமுகம் செல்லவேண்டும் என நினைத்தான்.  ஆனால் பிக்ருவோ அது இயலாத ஒன்று எனத் திட்டவட்டமாய்த் தெரிவித்தான். பலராமனின் கோபம் எல்லை மீறியது.  பிக்ருவிடம் கத்தினான்.   இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளைக் கண்ட மற்ற வீரர்களும், மாலுமிகளும் செய்வதறியாது தள்ளி நின்று வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தனர்.

பலராமன் அசரவில்லை.  தன்னுடைய முழு பலத்தையும் இந்தச் சண்டையில் பிரயோகிக்க எண்ணினான்.  மேலும் தான் அநந்தன் என்பதையும் காட்டிக்கொள்ள இது ஒரு அருமையான சந்தர்ப்பம் எனவும் நினைத்தான்.  ஆகவே மிகவும், வலுவான குரலில், “நான் அநந்தன்,  இந்த பூமியையே நான் தான் தாங்குகிறேன்.  ஆகவே காற்றுத் தேவதைகளே, உங்களுக்கு நான் ஆணையிடுகிறேன்.  இங்கே விரைவில் புயல்சின்னங்கள் தோன்றவேண்டும் . அது எங்களுக்குச் சாதகமாக அமையவேண்டும்.  சீக்கிரத்தில் காற்றை அனுப்பி எங்களை விரைவில் குஷஸ்தலையின் துறைமுகத்தை அடையச் செய்வாய்!” கோபம் கொண்ட பலராமன் தன் கால்களை ஓங்கி உதைத்தான்.  அலைகளின் ஓசைக்கும் மேல் அவன் குரல் கேட்டது, “ஏ, மருத்துக்களே, நான் ஆதிசேஷன், உங்களுக்குக் கட்டளையிடுகிறேன்.  விரைவில் காற்றை அனுப்பி எங்கள் கப்பலை நகரச் செய்வாய்.” என்று ஓங்கிக் கத்தினான்.  அவன் வார்த்தைகளுக்குக் கட்டுப்பட்டது  போல  தென்றல் மெதுவாக வீசத் தொடங்கியது.  மெல்ல மெல்ல பலராமன் வார்த்தைகளுக்குக் கீழ்ப்படிந்தான் வருணன்.  மெல்ல மெல்ல வீசத் தொடங்கிய விரைவில் வலுவான புயல்காற்றாக மாறியதோடல்லாமல் காற்று அவர்களுக்குச் சாதகமாய் அவர்கள் செல்லும் திசைக்குச் செல்ல வசதியாகவே வீசத் தொடங்கியது.  வானம் மப்பும், மந்தாரமுமாய்க் காணப்பட்டது.  விரைவில் பெருமழையும், புயலும் வீசும் என அறிகுறிகள் தென்பட்டன.  பிக்ருவும், அவன் மாலுமிகளும் இந்த மிக மிக உயரமான மனிதன் சிறிது நேரத்தில் செய்த அதிசயத்தைக் கண்டு திகைப்பும்  ஆச்சரியம் அடைந்தனர்.  ஆனால்  திடீரென வீசிய  இந்தக் காற்றை எதிர்பாராத புண்யாஜனாக் கப்பல்கள் தடுமாற ஆரம்பித்தன.  கடல் சீற ஆரம்பித்தது,  அதே சமயம் பெரிய சப்தத்தோடு இடியும் இடிக்க ஆரம்பிக்க, மின்னல் வானின் ஒரு கோடியிலிருந்து மறு கோடிக்கு அதிவேகமாய்ப் பிரயாணம் செய்த்து. 

பிக்ரு தன் ஊழியர்களை விரட்டி விரட்டி வெகு விரைவில் வேலை செய்ய வைத்தான்.  இந்தக் கடும்புயலில் இருந்து தப்பிக்க அவன் செய்த முயற்சிகளை எல்லாம் மீறிக்கொண்டு ஒரே ஒரு கப்பல் மட்டுமே தப்ப முடிந்தது.  மூழ்கிக்கொண்டிருந்த மற்றக்கப்பலில் இருந்தவர்களை எல்லாம் அவசரம் அவசரமாக மீட்டு இந்தக் கப்பலுக்குக் கொண்டுவரப்பட்டனர்.  கப்பல் தன் படைவீரர்களோடு  காற்றை அநுசரித்துக்கிளம்பியது.  விரைவில் கடலின் கொந்தளிப்பு அடங்க, மெல்ல மெல்ல விடியலின் கிரணங்கள் விண்ணில் தெரிந்தன.  காலை இளங்காற்று சுகமாக வீசியது.  பிக்ருவின் கப்பல் ஆநந்தமாய்ப் பயணம் செய்தது.  அவ்வளவு  நேரமும் பலராமன் அங்கேயே நின்றுகொண்டு கப்பலின் மாலுமிகளுக்கு உத்தரவுகள் கொடுத்தான்.  அதே சமயம் தன்னையும் உற்சாகப் பானத்தால் குளிப்பாட்டிக்கொண்டான்.  சீக்கிரத்திலேயே குஷஸ்தலையின் கடற்கரை வந்தது.  துறைமுகத்தில்  யாருமே இப்படி ஒரு கப்பல் படைவீரர்களோடு வருவார்கள் என எதிர்பார்க்கவே இல்லை.  அவர்கள் நினைத்தது சாதாரணமாய் எப்போதும்போல் வரும் ஒரு கப்பல் எனச் சற்று அலக்ஷியமாகவே இருந்தனர்.  பலராமனின் கட்டளையின் பேரில் துறைமுகத்தில் நின்றுகொண்டிருந்த ஒரு கப்பலின் மேல் பிக்ருவின் கப்பல் வேகமாய் மோதி அந்தக் கப்பலில் இருந்த அனைவரையும் கடலில் தள்ளியது.   விரைவிலேயே அந்தக் கப்பல் பிக்ருவின் வசத்துக்கு வந்தது. 

பலராமன் தலைமையில் தாமகோஷனின் வீரர்களும், மற்ற மாலுமிகளும் சேர்ந்து கீழே இறங்கிக் கண்ணில் பட்டவர்களைக் கடுமையாகத் தாக்கினார்கள்.  தாக்கிக்கொண்டே மெல்ல மெல்ல நகருக்குள் நுழைந்த்னர்.  நகரில் நுழையும்போது அவர்கள் நாலு பிரிவாய்ப் பிரிந்து கொண்டனர்.  பலராமன், உத்தவன், குக்குட்மின், ரேவதி ஆகிய நால்வரும் தலைமை வகிக்கப் படை பிரிந்து சென்று அனைவரையும் தாக்க ஆரம்பித்தது.  பலராமனின் போர்த்தந்திரமும் அவன் வீரமும் மட்டுமல்லாமல் ரேவதிக்கு இந்த மாதிரியான சண்டை முறையும்  மிகவும் பிடித்தது.  அவள் மிகவும் ரசித்துச் சண்டை போட்டாள்.  அதற்குள் கப்பலில் இருந்த பிக்ரு தன் மற்ற வீரர்களை வைத்துக்கொண்டு அங்கே நின்றிருந்த அனைத்துக்கப்பல்களையும் சிறைபிடித்தான்.  பெரும்பாலான கப்பல்கள் வணிகக் கப்பல்களாய் இருந்தமையால் வெகு எளிதில் அவர்களை வெல்ல முடிந்த்து. 

Tuesday, December 14, 2010

கண்ணன் வருவான், கதை சொல்லுவான், 2-ம் பாகம்

 பிக்ரு சம்மதித்தான்!

“அதை எல்லாம் விட்டுத் தள்ளு பிக்ரு.  நாம் புண்யாஜனா ராக்ஷசர்களைக் கடலிலும், நிலத்திலும் அடியோடு அழிக்கப் போகிறோம்.  குஷஸ்தலை இப்போது இருப்பதை நிர்மூலம் ஆக்கிவிட்டுப் புதிதாய் நிர்மாணிக்கப்போகிறேன். “ பலராமன் திட்டவட்டமாய்ச் சொன்னான்.  “ஓஓஓ, பலராமா, நீ அவர்களைச் சாதாரணமாய் எண்ணிவிட்டாய் போலும்! அவர்கள் மிகவும் சக்தி வாய்ந்தவர்கள் அப்பா!” என்றான் பிக்ரு.  “நான் செய்வேன், செய்துமுடிப்பேன்.” கொஞ்சம் கோபத்தோடு சொன்ன பலராமன், மேலும் தொடர்ந்து,”நீ எங்களுடன் சேர்ந்து கொண்டாலும் சரி, இல்லை என்றாலும் பரவாயில்லை, நான் எடுத்த காரியத்தைத் தொடர்ந்து முடிப்பேன்.  ஆனால் நீ சேர்ந்தாயானால் நாங்கள் பிடிக்கும் அனைத்துக்கப்பல்களுக்கும் உன்னையே சொந்தக்காரனாக்குவேன்.  நீ சேரவில்லை எனில் குஷஸ்தலை, புண்யாஜனா ராக்ஷசர்களோடு சேர்ந்த அந்தக் கப்பல்கள் அனைத்தையும் அழித்துவிட்டுக் கடைசியில் உன்னையும் அழிப்பேன்.” சொன்னதைச் செய்துவிடுவானோ என்னும்படி பலராமன் குரலில் தீவிரமான உணர்வு தெரிந்தது.

“ஆஹா, நீ என் எஜமான் அன்றோ?? என்னிடம் இவ்வளவு கோபம் கொள்ளலாமா?? சொன்னால் கேள், அந்தப் புண்யாஜனா ராக்ஷசர்கள் பலம் பொருந்தியவர்கள். அவ்வளவு எளிதில் அவர்களை வெல்ல முடியாது.”

“அதனால் என்ன?? ஜராசந்தனையும் இப்படித்தான் இந்த பூமியிலேயே பலம் பொருந்திய சக்கரவர்த்தி என்றார்கள்.  கடைசியில் நாங்கள் அவனை விரட்டி அடித்தோம்.  இன்னொன்று தெரியுமா உனக்கு?? கடலும் கண்ணனின் சொல்படியே கேட்கும்.  கோமந்தகாவிற்குத் தீ வைக்க முயலும்போது அதை அணைக்கக் கண்ணன் கடலை ஆணையிட்டான்.  கடலும் பணிந்தது. “ பலராமன் கோமந்தகா மலையில் நடந்த நிகழ்வுகளை பிக்ருவிடம் எடுத்துச் சொன்னான்.

“எனக்குத் தெரியாதா பலராமா?  அவன் எங்களோடு கப்பலில் இருந்தவரையிலும் காற்று மாறி வீசியோ, புயல் அடித்தோ நாங்கள் கஷ்டப் படவே இல்லையே? எங்களுக்குச் சாதகமாகவே இருந்தது அன்றோ?”

“நாங்கள் எப்படியும் போகிறோம், பிக்ரு.  ஐந்து சிறு கப்பல்கள் உள்ளன எங்களிடம்.  என்ன எங்களுக்குக் குஷஸ்தலைக்குச் செல்ல நல்லதொரு வழிகாட்டி வேண்டும்.  கடலை நன்கறிந்த ஒருவன் தேவை.  அதுமட்டும் நீயாக இருந்தால்?? நீ வரச் சம்மதித்தால் இன்னும் ஆட்களைத் தயார் செய்து அவர்களை உன் கப்பலில் அழைத்துக்கொண்டு செல்லலாம்.  உன் கப்பல் பெரியது.”

“என்னால் முடியாது.” பிக்ரு மறுத்தான்.

“ஆஹா, நீ வெறும் சுக்கான் பிடித்துக்கொண்டு பாஞ்சஜனாவிற்கு அடிமையாய் இருந்த நாட்களை மறந்துவிட்டாயா?  கண்ணன் இல்லை எனில் உன் கதி?? நீ மட்டும் எங்களோடு வந்தாயெனில் புண்யாஜனாக் கப்பல்கள் அனைத்தும் உனக்கே உனக்கு. “

பிக்ருவின் கண்கள் ஆசையில் மின்னின.  அவன் பேரன் ஆன குக்குராவும், கப்பலின் தச்சனும் தற்போது அவர்கள் கூட்டாளியும் ஆன ராதுவும் ஆவலால் உந்தப்பட்டார்கள்.  இவ்வளவு நேரம் பொறுமையாக அவர்கள் பேசுவதைக் கேட்டுக்கொண்டிருந்த உத்தவன் இப்போது பிக்ருவிடம், “கிருஷ்ணின் செய்தியை உன்னிடம் சொல்ல மறந்துவிட்டேன்.”  என்றான். 

“என்ன அது?” என்றான் பிக்ரு.

“கண்ணன் என்னிடம் சொன்னது:”என் தகப்பனுக்கு இணையானவனும், என் அருமைச் சிற்றப்பனும்,  அருமை நண்பனுமான பிக்ருவிடம் சொல்லு. என் சகோதார்கள் ஆன குக்குராவுக்கும், ராதுவுக்கும் கூறு.  மேலும் கப்பலின் அனைத்து நண்பர்களுக்கும், முக்கியமாய் ஹூக்குவிற்கும், ஹூல்லுவிற்கும் சொல்லு.  நான் கூறினேன் என்று அவர்களிடம் எடுத்துச் சொல்.  இது அதர்மத்திற்கும், தர்மத்திற்கும் இடையிலான போர்.  தர்ம்ம் நிலைபெற வேண்டுமானால் புண்யாஜனா ராக்ஷசர்களால் அபகரிக்கப்பட்ட குஷஸ்தலை மீண்டும் அதன் உண்மையான உரிமையாளருக்கே வரவேண்டும்.  இதற்குப் புண்யாஜனா ராக்ஷசர்களை அழிக்க நேர்ந்தாலும் சரியே.  நானே நேரில் வந்து இந்த யுத்தத்தை நடத்தி இருப்பேன்.  ஆனால் பிக்ரு சித்தப்பா இருப்பது நானே அங்கு நேரில் இருப்பதற்குச் சமம்.”  இது தான் கண்ணன் கூறியது." என்றான் உத்தவன்.

பிக்ரு கண்ணீர் பொங்க மெளனமாக அமர்ந்து சற்று நேரம் சிந்தித்தான்.

“தாத்தா, கண்ணனின் அருமைச் சகோதரனை இப்படி நட்டாற்றில் விடலாமா?  இவருக்கு நாம் துரோகம் செய்தால் கண்ணனுக்கே செய்த மாதிரியாகுமே?  நம்மை நம்பியே கண்ணன் நேரில் வராமல் நம்மிடம் உதவி வேண்டி இவர்களை அனுப்பி உள்ளார்.” குக்குராவிற்குப் பெருமையாகவும் இருந்தது.  “நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து புண்யாஜனா ராக்ஷசர்களை ஒழிப்போம்.  நம் கடவுளான கண்ணன் ஆணையை நிறைவேற்றுவோம்.”  என்றான்.

ராதுவும் அதற்குச் சம்மதித்தான்.  பிக்ரு மனதுக்குள் போராட்டம். பின்னர் பிக்ரு  பலராமன் பக்கம் திரும்பி, “ என் கடவுளே, உன் வேண்டுகோள் எங்களுக்கு ஆணைகளாகும்.  நானும் என் நண்பர்களும் எங்கள் உயிரைப் பணயம் வைத்தாவது உங்களுக்கு உதவுகிறோம்.  எங்கள் உயிரே உங்களுக்கும், கண்ணனுக்கும் உடைமையானது.  இந்தக் கப்பல் என்றுமே கண்ணனுடைய கப்பல்.  என்னுடையது என நான் நினைத்தவனே அல்ல.”  என்றான்.  என்றாலும் அவன் மனதுக்குள் புண்யாஜனா ராக்ஷசர்களை எதிர்ப்பது முட்டாள் தனம் என்றே பட்டது.  ஆனாலும் கண்ணன் கேட்டுவிட்டான்.  அவனுக்கு நாம் உடைமை.  நம் உயிர் அவனுடையது.  மேலும் நம் பேரனும் மாலுமிகளும் நம்மைக் கோழை என்று எண்ணிவிடுவார்கள். கண்ணனுக்கு உதவ மனம் இல்லை என நினைப்பார்கள்.  கொஞ்சம் கொஞ்சம் நம்பிக்கையும் எட்டிப் பார்த்தது அவன் மனதில்.  ஓர் ஓரத்தில் நம்பிக்கைக் கீற்றும் தெரிந்தது.  ஏனெனில் கண்ணன் இதைச் சொல்லி அனுப்பி இருக்கிறான் என்றால் அதில் ஓரளவு பொருள் இருக்கும்.  குஷஸ்தலையில் புண்யாஜனா ராக்ஷஸர்களின் போர்க்கப்பல் இருந்தால் என்ன செய்வது என்று கவலையும் வந்த்து பிக்ருவுக்கு. 

உத்தவன் அதற்கும் சமாதானம் சொன்னான்.  பலராமன் நம்முடன் இருக்கிறானே?? அவனால் முடியாதது என்ன?? அவன் ஆதிசேஷனுக்குச் சமமானவன் அன்றோ? என்றான்.  பலராமனுக்கு மகிழ்ச்சி பொங்கியது, “ஆம், ஆம், என் தந்தையே என்னிடம் கூறி இருக்கிறார்.  நான் ஆதிசேஷன் என்று.  நான் பிறக்கும்போது அப்படித் தான் இருந்தேனாம்.  நான் நிச்சயமாய்ச் சொல்கிறேன். அந்தப் புண்யாஜனா ராக்ஷசர்களை நான் அடியோடு ஒழிப்பேன்.” அவனுக்குத் தன்னை ஆதிசேஷன் என்று கூறியதில் மிகவும் சந்தோஷமாய் இருந்த்து.  அதற்கு ஆக்ஷேபணையும் தெரிவிக்கவில்லை. 


சில நாட்களில் தேவையான ஆயுதங்கள், உணவுப்பொருட்கள், குடிநீர் போன்றவைகளை நிரப்பிக்கொண்டு பிக்ருவின் கப்பலோடு சேர்ந்து மற்றச் சிறிய ஐந்து கப்பல்களும் பிரயாணத்துக்குத் தயாராயின.   பிரபாச க்ஷேத்திரத்தின் அரசன் அனைத்துக்கப்பல்களுக்கும் தேவையான உதவிகளைச் செய்து நல்லதொரு நாளில் அவர்களுக்கு விடை கொடுத்தான்.  பலராமன் மிகவும் சந்தோஷத்துடன் கப்பலின் மேல் தளத்தில் நின்று கொண்டு அருகில் இருந்த ரேவதியைப் பார்த்துச் சிரித்தான்.  அத்தனை நாட்கள் கவலையுடனும், அவநம்பிக்கையுடனும் இருந்த ரேவதியும் அன்று மனம் மாறி பலராமனைப் பார்த்துச் சிரித்தாள்.  பலராமனுக்கு ஏற்பட்ட சந்தோஷத்தில் உத்தவனை அப்படியே தலைக்குமேல் தூக்கித் தட்டாமாலை சுற்றினான்.

Monday, December 13, 2010

கண்ணன் வருவான், கதை சொல்லுவான் 2-ம் பாகம்

 பிக்ரு உதவுவானா?? பலராமனின் குழப்பம்!


“உத்தவா, நாளை அல்லது நாளை மறுநாள் என் தமையன் பலராமன் மன்னன் குக்குட்மின்னோடு குஷஸ்தலைக்குப் போகப் போகிறான்.  எவ்வாறேனும் குஷஸ்தலையை மீட்கவேண்டும் என்பதே அவர்கள் எண்ணம்.   நீயும் அவர்களோடு செல்.  இதைவிடவும் பெரியதொரு தியாகம் நீ செய்யவேண்டியதில்லை.  அவளை விட்டு நீ பிரிந்திருப்பதே  உன்னுள்ளே மாபெரும் மாற்றத்தை உண்டு பண்ணும்.  நீ குஷஸ்தலையில் இருந்து இங்கே திரும்பும்போது உன்னுடைய இந்தத் தீ அநேகமாய் அணைந்தே போயிருக்கும்.  அதோடு ஸ்வேதகேதுவும் அதற்குள் மதுராவை வந்தடைவார் என எதிர்பார்க்கிறேன்.” என்றான் கண்ணன்.  “ஆஹா, கண்ணா, கடினமான வேலையைக் கொடுக்கிறாயே?? எனினும் நான் செய்து முடிப்பேன். இதனால் என் உயிரே போனாலும் சரி. “ என்றான் உத்தவன்.  “உத்தவா, மாபெரும் காரியங்கள் எல்லாமே ஒருவரின் உயிரைப் பணயம் வைத்தே நிறைவேறுகின்றன.” என்றான் கண்ணன். 

மறுநாளே பலராமனும் உத்தவனும் ரேவதியோடும் குக்குட்மின்னோடும் குஷஸ்தலையை நோக்கிப் பயணப்பட்டார்கள்.  தாமகோஷனுக்கு இந்த விஷயம் தெரிந்ததும் முதலில் ஆக்ஷேபித்தான்.  ஏனெனில் புண்யாஜனா ராக்ஷஸர்கள் குஷஸ்தலையின் மக்களையும், சின்ன்ஞ்சிறு குழந்தைகளையும் அவர்களின் கடவுளுக்கு உயிர்ப்பலி கொடுத்து வழிபாடுகள் செய்தார்கள்.  ஆகவே இவ்வளவு கடினமான ராக்ஷசர்களை வெல்ல பலராமன் செல்வதில் சம்மதம் இல்லை எனிலும் தன்னிடமுள்ள வீரர்களில் தேர்ந்தெடுத்த சிலரை பலராமனோடு அனுப்பி வைத்தான்.  பலராமனின் ஆவலைக் கட்டுப்படுத்த முடியவில்லை.  சாந்தீபனியின் ஐந்து சீடர்களும் அவனோடு வரச் சம்மதித்திருந்தனர்.  கிளம்புவதற்கு உரிய நல்ல நேரம் வந்ததும், அனைவரும்  ஜெயசேன மன்னனால் அளிக்கப் பட்ட ரதங்களில் ஏறிக்கொண்டு பிருகு தீர்த்தம் சென்று அங்கிருந்து படகுகளில் பிரபாஸ க்ஷேத்திரத்தை நோக்கிச் சென்றார்கள்.  பிரபாஸத்தின் மன்னனுக்கு ஜராசந்தனை முறியடித்த சகோதரர்களில் மூத்தவன் ஆன பலராமன் அங்குள்ள சோமநாதர் ஆலயத்திற்கு வழிபாட்டிற்கென வருவதாய்த் தகவல்கள் அனுப்ப்ப் பட்டன.  கோமந்தக மலையில் நடந்த கதையும் அவர்களுக்குப் போய்ச் சேர்ந்திருந்த்து.  மாபெரும் சக்கரவர்த்தி ஜராசந்தனையே வென்ற அந்த இளைஞனைப் பார்க்க மக்கள் பெரும் கூட்டமாய்க் கூடினார்கள்.  பலராமன் பிரபாஸ க்ஷேத்திரத்து மன்னனைப்பார்த்துத் தனிமையில் தான் வந்த காரியத்தைப் பற்றிக் கூறினான்.  மன்னனும் யாதவ குலத்தைச் சேர்ந்தவனாய் இருந்ததாலும், கண்ணனையும், பலராமனையும் பற்றி அறிந்து அவர்கள் மேல் கொண்டிருந்த நன்மதிப்புக் காரணமாயும் அவன் பலராமனின் திட்டத்துக்கு ஒப்புக் கொண்டான்.  அதை ரகசியமாய் நிறைவேற்றவும் சம்மதித்தான்.  அதற்கு அவன் விதித்த நிபந்தனை ஒன்றே ஒன்று தான்.  குஷஸ்தலை கைப்பற்றப்பட்டதும் அதனுடைய கோட்டையில் குடியிருக்கும் தன்னுடைய தாயாதியான சிற்றரசனை அங்கிருந்து வெளியேற்ற வேண்டும் என்றும் கூறினான்.  பலராமன் அதற்கும் ஒத்துக்கொண்டான்.

உத்தவனுக்குக் கண்ணன் மதுராவை விட்டு ஒருவேளை வெளியேறினால் பாதுகாப்பான இடமாக குஷஸ்தலை இருக்கும் என்று சொன்னது நினைவில் வந்த்து.  கண்ணன் சொன்னதில் இருந்த உண்மையையும் அவன் உணர்ந்தான்.  மற்ற எந்த இடங்களையும்விட இங்கே இந்த மேற்குக் கோடியில் பத்திரமாயும், பாதுகாப்போடும் இருக்கலாம்.  மத்திய தேசத்து அரசர்களால் அவ்வளவு எளிதில் வர முடியாத இடம் இது.  ஜராசந்தன் இங்கே வரவே மாட்டான்.   ஆகவே எவ்வாறேனும் இதைக் கைப்பற்ற வேண்டிய ஆயத்தங்களைச் செய்யவேண்டும் என்ற முடிவுக்கு உத்தவன் வந்தான்.   பலராமன் புண்யாஜனா ராக்ஷசர்களிடமிருந்து கோட்டையைக்கைப்பற்றும் அவசரத்தில் இருந்தான்.   ஆனால் குக்குட்மினும், உத்தவனும் அவ்வளவு அவசரப் படக்கூடாது என்று கூறிவிட்டு நிதானமாய்த் திட்டம் போட்டார்கள்.  உளவறியச் சென்றிருந்த ஒற்றர்கள் அனைவருமே திரும்பி வந்து குஷஸ்தலையைச் சுற்றி மூன்று வளையங்களாகப்பாதுகாப்பு அரண் எழுப்பி இருப்பதாயும், அதை நெருங்குவது என்பது மிகவும் கஷ்டம் என்றும் சொன்னார்கள்.  மேலும் புண்யாஜனா ராக்ஷசர்கள் அதிகம் கடல் பிரயாணம் செய்ததால் தங்கள் கோட்டையைத் தாங்கள் இல்லாத சமயம் வேறு எவரும் நெருங்க முடியாதபடி அரண் கட்டிப் பாதுகாத்தனர்.

மிகவும் ஆலோசித்த குக்குட்மினும், உத்தவனும் குஷஸ்தலையைத் தாக்கக் கடல்வழியே சிறந்தது என்ற முடிவுக்கு வந்தனர்.  அதுவும் கஷ்டம் தான் பல ஆயுதக் கப்பல்கள் அந்த வழியையும் காவல் செய்தன.  என்றாலும் வேறு வழியில்லை என்று நினைத்தனர்.  அவர்கள் யோசனையைச்  செயலாற்றுவதற்குள்ளாகப் பாஞ்சஜனா கப்பல் திரும்புவதாயும் குஷஸ்தலையை வந்தடையும் எனவும் தகவல் கிடைத்தது.  ஆகவே அவர்கள் பாஞ்சஜனாவின் வரவுக்குக் காத்திருந்தனர்.  பாஞ்சஜனாவும் வந்து சேர்ந்தது.  கூடவே பிக்ருவின் பேரன் ஆன குக்குராவும்.  குக்குரா கரைக்குச் சில சாமான்கள் வாங்க வந்தவன் உத்தவனிடம் அழைத்துச் செல்லப் பட்டான். உத்தவனைப் பார்த்த குக்குராவின் சந்தோஷம் எல்லை மீறியது.  கண்ணன், பலராமன், உத்தவன் ஆகியோர் பாஞ்சஜனாவை விட்டுச் சென்றதும் நடந்தவைகளை அவன் கூறினான்.  பாஞ்சஜனா ராக்ஷசனின் உறவினர்கள் இறந்துவிட்டதாயும் இப்போது அவன் பாட்டன் பிக்ருவே கப்பல் தலைவனாகவும், கப்பலின் சொந்தக்காரனாயும் ஆகிவிட்டதையும் அவனுக்கு அடுத்த நிலையில் தான் இருப்பதாயும் கூறிய அவன் இதெல்லாம் கண்ணனாலேயே சாத்தியமாயிற்று என்று நன்றியுடன் கூறினான்.

பிக்ருவைச் சந்திக்க பலராமனையும், உத்தவனையும் தன் படகில் அழைத்துச் சென்றான். அவர்களைக்கண்ட பிக்ருவுக்கு ஆச்சரியமாய் இருந்தாலும் அவனுக்கும் சந்தோஷத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை.  கப்பலில் இருந்த மாலுமிகள் அனைவருக்குமே அவர்களைக் கண்டதும் ஆனந்தம் பொங்கக் கூச்சலிட்டு வரவேற்றனர்.  ஹூக்குவும் ஹூல்லுவும் அவர்களோடு இருந்தனர்.  அவர்களும் தங்கள் பற்கள் தெரிய இவர்களைக் கண்டு சிரித்து வரவேற்றனர்.  அனைவரும் சற்று நேரம் பழைய விஷயங்களைப் பேசி மகிழ்ந்தனர்.  மாலுமிகள் அனைவருமே கண்ணனின் சாகசங்களைப் பாடலாக இயற்றிப் பாடி வந்தனர்.  அவற்றை இப்போது பாடி பலராமனையும் உத்தவனையும் மகிழ்வித்தனர்.  கப்பல் எவ்வாறு தங்கள் கைகளுக்கு வந்தது என்பது பற்றியும் கூறினார்கள்.  பாஞ்சஜனாவின் உறவினர்கள் பிக்ருவையும் அவர்களோடு சேர்ந்த மற்றவர்களையும் கொல்லச் செய்த ஏற்பாட்டையும், அதை முறியடித்து அந்த இரு இளைஞர்களையும் வென்று ஐம்பது வருடங்களுக்கும் மேலாகத் தான் நேசித்த கப்பலைக் கைப்பற்றியதையும் பிக்ரு விவரித்தான்.  பின்னர் கண்ணனைப் பற்றிக் கேட்டான்.

அதுவரை பொறுமையோடு இருந்த பலராமன் இப்போது பொறுமை இழந்து தான் குஷஸ்தலையைப் புண்யாஜனா ராக்ஷசர்களிடமிருந்து மீட்க வந்திருப்பதாயும் கூறிவிட்டு அதற்கு பிக்ருவின் உதவி தேவை என்றும் கூறினான்.  ஆனால் பிக்ருவோ, “புண்யாஜனாவா நம்மால் முடியாதப்பா. மேலும் அவர்கள் எங்களை நன்கறிவார்கள் பாஞ்சஜனாவின் இரு உறவினர்களும் அழிய நாங்கள் காரணம் என்பதும் அவர்களுக்குத் தெரியும்.  புண்யாஜனா ராக்ஷஸர்கள் எங்களுக்கு எதிரிகள்.  அவர்கள் கப்பலைக் கூட நாங்கள் கடலில் செல்லும்போது கண்டால் விலகிச் சென்றுவிடுவோம்.   .  . “ என்றான் பிக்ரு.

Friday, December 10, 2010

கண்ணன் வருவான், கதை சொல்லுவான், 2-ம் பாகம்!


 உத்தவனுக்குப் புரிந்தது!

“கண்ணா, உன் விவேகம் எங்கள் அனைவருக்கும் வந்தால்???...” உத்தவன் பெருமூச்சு விட்டான்.  

“அப்படியா உத்தவா?? உனக்கு அப்படித் தோன்றுகிறதா?  எனில் நான் சொல்வதை நீ ஏற்கலாமே?? “ கிருஷ்ணன் இப்போது நிச்சயமாய்க்குற்றம் சாட்டும் தோரணையில் உத்தவனைக் கடிந்து கொண்டான்.  “இதோ பார் உத்தவா, ஆணுக்கும், பெண்ணுக்கும் ஏற்படும் பந்தம் வாழ்நாள் பூராவும் நீடித்து நிற்கவேண்டும்.  மரணம் என்பது ஒன்றே அவர்களைப் பிரிக்க முடியும்.  இந்த உலகத்தின் மாந்தர்களைக் கடவுள் அவர்களைக் கருவியாகக் கொண்டு அவர்கள் மூலமே சிருஷ்டிக்கிறார்.  இல்வாழ்க்கையில் அறம் முக்கியம்.  இல்லற தர்மம் என்பது கணவன், மனைவி இருவரும் மனமொத்து அநுஷ்டிக்கவேண்டிய ஒன்று.  அந்த அற்புதமான இல்லற தர்மத்தை நீ உன் அற்ப ஆசைக்காகப் பொசுக்கிவிடாதே! குளிர் காய மூட்டப் பட்டிருக்கும் நெருப்பில் வேள்வித் தீயை எங்கனம் உண்டாக்குவாய்?? வேள்வித்தீ அணையாமல் பாதுகாக்கவேண்டிய ஒன்று. “

“அந்த வேள்வித் தீ தான் இவ்வுலகைக் காக்கும் அக்னி.  இதற்குப் பெரிய தியாகங்கள் செய்யவேண்டும்.  நம் ஆசைகளைத் துறக்கவேண்டும்.  ஆசைகளே இல்லாதவனே பெரிய செயல்களை எளிதில் சாதிப்பான். “ கண்ணன் கண்கள் கனவுலகில் ஆழ்ந்தது போல் தோன்றின.  தனக்குத் தானே பேசிக்கொள்வது போல் அவன் மேலும் மேலும் பேசிக்கொண்டிருந்தான். “ நீ ஒரு பெண்ணை விரும்பினாயெனில் கட்டாயமாய் அவளுக்குப் பரிசாக ஏதேனும் தரவேண்டும்.  ஒரு பரிசு, சிறிய பரிசு, அல்லது அவள் வசிக்க ஒரு அழகான சிறிய வீடு, வாழ்நாள் முழுதும் அவளைப் பாதுகாப்பேன் என்ற உன் உறுதிமொழி, இத்தனையும் தேவை.  அப்படியும் உனக்குக் கிடைப்பது என்னமோ அவளுடைய உடலும், அவள் உனக்கெனச் செய்யப் போகும் சேவைகளும்தான்.  ஆனால் அது மட்டுமே போதுமா உனக்கு?? உனக்கென ஒருத்தி, உன்னையே கடவுளாக நினைத்து என்றென்றும் வணங்கும் ஒருத்தி, உன் வீட்டு வேள்வித் தீயை உனக்காகப் பாதுகாக்கும் ஒருத்தி  கிடைக்கவேண்டுமெனில் நீ உன்னை இன்னமும் உயர்த்திக்கொள்ள வேண்டும்.  உன் மனம் தெய்வீகப் பாதையில் சென்றால் மட்டும் போதாது.  தர்மத்தை உன் குறிக்கோளாக வைத்துக்கொள்ளவேண்டும்.  எந்நிலையிலும் உனக்கென உள்ள தர்மத்தைக் கைவிடக் கூடாது. உன்னையே அதில் ஆஹுதியாக இடவேண்டுமென்றாலும் அதற்கும் நீ தயாராக வேண்டும்”

“குழப்பாதே கண்ணா, எனக்கு ஒன்றுமே புரியவில்லை.  நான் எப்போதுமே உனக்காகவே வாழ்ந்து வந்திருக்கிறேன்.  நீ என்ன சொல்கிறாயோ அதற்குக் கீழ்ப்படிந்திருக்கிறேன்.  இப்போதும் இந்த விஷயத்திலும் நீ என்ன சொல்கிறாயோ அதையே செய்யத் தயாராய் இருக்கிறேன்.  உன்னால் எல்லாவற்றையும் ஆழ்ந்து சிந்திக்க முடிகிறது.  என்னால் முடியவில்லை.”

“என்றால் யோசி என் சகோதரனே, ஷாயிபா உனக்கு வழியோடு செல்லும்போது குளிர்காயக் கிடைக்கும் நெருப்பா? அல்லது உன் வீட்டு வேள்வித்தீயைப்பாதுகாத்து உனக்காக என்றென்றும் அணையாமல் பாதுகாக்கும் உன் குடும்ப விளக்கா?  ஆஹா, அவள் நிச்சயமாய் ஓர் அற்புத அழகு படைத்த பெண் தான். மறுக்கவே இல்லை. அவள் அழகு எப்படிப்பட்ட மனிதரையும் வீழ்த்திவிடும்.   ஆனால் அவள் தன் மாமனுக்குக் காட்டிய அதே அர்ப்பணிப்பு உணர்வோடு வேறு எவரையும் தனக்குக் கணவனாக ஏற்றுக்கொண்டு செம்மையான இல்லற வாழ்க்கையை மேற்கொள்வாளா என்பது சந்தேகமே.  அவளைப் போன்றவர்கள் அவர்களாகத் தங்கள் மனதை மாற்றிக்கொண்டால் உண்டு.  தற்சமயம் அவள் மாபெரும் காட்டுத் தீயைப் போல் தானும் எரிந்து கொண்டு மற்றவர்களையும் எரிக்க முயல்கிறாள். ம்ஹும், அவள் குளிர் காய மூட்டப் பட்டிருக்கும் தீயாய்க் கூட இல்லை அப்பா, அப்புறம் அல்லவா அவளை வேள்வித்தீயாகவோ, குடும்ப விளக்காகவோ பார்க்க முடியும்?? ஸ்வேதகேது நான் சொன்னதை ஏற்றுக்கொண்டுவிட்டான்.  ஷாயிபா தானாக மாறினால் ஒரு வேளை ஸ்வேதகேதுவும் அவளை ஏற்றுக்கொள்ளலாம்.  தற்சமயம் அவனும் அவளிடம் தீராத வெறுப்புடனேயே இருக்கிறான்.”

“என்னையும் அப்படியே இருக்கச் சொல்கிறாயா?”

“ஆம் உத்தவா, தற்சமயம் அதுதான் நன்மை பயக்கும் செயல்.  உங்கள் இருவரில் ஒருவர் முயன்று பாருங்கள்.  அவளைச் சிறிதேனும் மாற்ற முடிகிறதா என.  யாருக்குத் தெரியும்?  இந்தக் காட்டுத்தீ திடீரென்று அடங்கினாலும் அடங்கலாம்.  அல்லது வேறு யாரேனும் புதியவரை இனி இவரே தன் கடவுள் என அறிமுகமும் செய்யலாம்.” கண்ணன் யோசனையோடு கூறினான்.

“ஆஹா, அவளை மறப்பது கஷ்டம், மிக மிகக் கஷ்டம், கண்ணா!”

“ஓ, அதனால் என்ன?/ கஷ்டமான வழி தான் எப்போவும் சிறந்ததாய் இருக்கும்.  மனமும் உடலும் ஒருமித்துத்  தபஸின் வழி செல்வது கஷ்டம் தான். ஆனால் அந்த வழியில் தானே நம் உடல் மட்டுமில்லாமல் மனதும் புனிதமாகிறது??  ஆண்களாகிய நாம் இந்தத் தபஸை மேற்கொள்ளவில்லையெனில் இப்படிக் காட்டுத் தீயைப் போன்ற ஷாயிபா மட்டுமின்றிப் பல பெண்களும் காட்டுத் தீயாகவும், குளிர்காய மூட்டப் படும் வழி நெருப்பாகவும் மாறிவிடுவர்.  ஆத்திரமும் ஆங்காரமும், கொண்டு கோபம் தணியாமல் ருத்ரனைப் போல் அனைவரையும் அழிக்கக் கிளம்புவார்கள்.  பின்னர் மனித குலமே நாசமடையத் துவங்கும்.  ஆணும், பெண்ணும் இணைந்து இருப்பதில் தான் மனித குலத்து மேன்மையும்,  நன்மையும் இருக்கிறது.  அதை விடுத்து  நாம் நம் தர்மத்தைக் கைவிட்டால் குடும்ப உறவுகள் அறுந்துவிடும்.  நம் முன்னோர்களின் பாரம்பரியக் கோட்பாடுகளும், நம்பிக்கைகளும், சம்பிரதாயங்களையும் மறந்து ஒரு காட்டு வாழ்க்கை வாழ ஆரம்பிப்போம்.  உலகை ஒருங்கிணைத்திருக்கும் அந்த மந்திரச் சங்கிலி அறுபட்டால் உலகத்து மாந்தரெல்லாம் துன்பத்தில் ஆழ்ந்துவிடுவார்கள்.  ஆணும், பெண்ணும் பொறுப்பில்லாமல், எதற்கும் லாயக்கில்லாதவர்களாய் மிருகங்களை விடக் கீழே தாழ்ந்த நிலைக்குச் செல்லுவார்கள். தர்மம் எங்கே இருக்கும்??  எல்லாம் முற்றிலும் அழிய ஆரம்பிக்கும்.”

உத்தவன் தலைகுனிந்து அனைத்தையும் கேட்டுக்கொண்டிருந்தான்.  “இன்று வரையிலும் உன்னிடம் இப்படி எல்லாம் நான் பேசினது இல்லை உத்தவா, ஏனென்றால் அப்படி ஒரு சமயம் வாய்க்கவில்லை.  ஆனால் உத்தவா, கேள், எந்நிலையிலும்,எக்காரணத்தைக் கொண்டும் நாம் தர்மத்தைக் கைவிடக் கூடாது.  நாம் இன்னும் தொலைதூரம் செல்லவேண்டும்.  நம் வாழ்க்கைப் பயணம் இப்போது தான் ஆரம்பம் ஆகி இருக்கிறது.  இந்த சமயத்தில் நாம் நிலை பிறழ்ந்தால்?? உத்தவா, என் அருமை உத்தவா, நீஇல்லாமல் நான் என்ன செய்வேன்? என்னால் என்ன செய்ய முடியும்?  நீ என் மேல் வைத்திருக்கும் விசுவாசம், நம்பிக்கை என்னை என்றும் நல்வழியில் நடத்தி வந்திருக்கிறது உத்தவா,  அதை மறக்காதே! அதே போல் இனி வரப்போகும் நாட்களிலும் நீ அதே விசுவாசத்தையும் நம்பிக்கையும் காட்டினாயானால் இன்னமும் அதே நல்வழியில் நான் செல்ல முடியும்.  எனக்கு உதவி செய்வாயா உத்தவா?”

“ஓ, கடவுளே, என் கடவுளே, என்னை மன்னித்துவிடு கண்ணா, மன்னித்துவிடு.  உன்னுடைய இந்த அன்புக்கு நான் என்ன கைம்மாறு செய்யமுடியும்?? முதலில் நான்  இத்தகைய உயர்ந்ததொரு அன்புக்குப் பாத்திரமானவனே அல்ல.  நீ ஆணையிடு கண்ணா, எனக்கு ஆணையிடு,  நான் என்ன செய்யவேண்டும் என்று சொல், நான் அதைச் செய்து முடிக்கிறேன்.” உத்தவன் கண்களிலிருந்து கண்ணீர் பெருகியது.


Sunday, December 5, 2010

கண்ணன் வருவான், கதை சொல்லுவான், 2.ம் பாகம்!

 ராதைக்கேற்ற கண்ணனோ?

“உத்தவா, நீ உண்மையாகவே ஷாயிபாவை மனமார விரும்புகிறாயா?  அவள் மேல் நீ கொண்டிருக்கும் காதல் என்னும் உணர்வு வெறும் உடல் சம்பந்தப் பட்டதா? அல்லது உன் மனமும் அவளை விரும்புகிறதா?  அவளை நீ அடையவேண்டும் என்று நினைக்கிறாயா?”

“கண்ணா, அவள் எனக்கு வேண்டும்தான்,  அதே சமயம் நமக்கெல்லாம் அருமையான சிநேகிதரும், நமக்கு வேதங்களைக் கற்றுக்கொடுத்த ஆசானுமான ஸ்வேதகேதுவுக்கு நான் துரோகம் இழைக்கவும் விரும்பவில்லை.  என் நண்பனுக்கு நான் உண்மையாக நடந்து கொள்ளவேண்டும்.”

“எந்தப் பெண்ணோடும் நீ உன்னை, உன் வாழ்க்கையைப் பிணைத்துக்கொள்ளலாம்.  உன் அன்பாகிய அக்னி தற்சமயம்  காட்டு நெருப்பைப் போன்றது.  அதை நீ ஒரு தியாக நெருப்பாக மாற்று, வேள்விகளில் பயன்படுத்தப்படும் தூய்மையான அக்னியாக மாற்று.  காட்டு நெருப்பு அழிக்கத் தான் செய்யும், எவருக்கும் இதத்தைக் கொடுக்காது.  வேள்வித் தீயோ அனைவரையும், புனிதப் படுத்தும், மாசுக்களை நீக்கும்.”

கண்ணா, என்ன சொல்கிறாய்??  ஏன் காட்டுத்தீ  என்கிறாய்?”

“உத்தவா, அக்னி ஆக்கவும் செய்யும், அழிக்கவும் செய்யும். அழிவை நினையாமல் ஆக்கபூர்வமான பிரயோகங்களில் உன் அன்பாகிய தீயைச் செலுத்து.  காட்டு வழிகளில் பிரயாணங்கள் செய்யும்போது ஆங்காங்கே குளிர் காய நெருப்பு மூட்டப் பட்டிருக்கும் பார்த்திருக்கிறாயா?”

“ஆம், கண்ணா, அவற்றில் இன்னும் கட்டைகளைப் போட்டு நாமும் குளிர் காய்ந்திருக்கிறோமே?”


“நமக்கு முன்னால் அதில் குளிர் காய்ந்துவிட்டுச் சென்றவர்களைப் பற்றியோ, அந்த அக்னியை முதலில் மூட்டியவர் யார் என்றோ நீ அறிவாயா? நாம் எவருமே அறிய மாட்டோம். அல்லவா?  அதே போல் நமக்குப் பின்னர் யார் வந்து அந்த நெருப்பில் குளிர்காய்வார்கள் என்பதையும் நாம் எவ்வாறு அறிவோம்? அது திடீரென அணையவும் செய்யும். தொடர்ந்து எரிவதும் நிச்சயம் இல்லை.  நாம் நம் வேலையை மட்டுமே பார்த்துக்கொண்டு சென்று விடுவோம்.  அப்படித் தான் உனது இந்த அன்பும்.  உன் மனதுக்கு இதத்தைத் தருகிறதென  மட்டுமே நினைக்கிறாய்.  உனக்கு இது தேவை என நீயாக நினைக்கிறாய்.  இதன் பின் விளைவுகள் பற்றி உன் மனம் எண்ணிப் பார்க்கவில்லை.  இது உன்னை எங்கே இட்டுச் செல்லும், எவ்வளவு ஆழத்தில் நீ மூழ்கிவிடுவாய்? உன்னால் எழுந்திருக்க முடியுமா என்றெல்லாம் நீ எண்ணிப் பார்க்கவில்லை. “

“கண்ணா, வார்த்தைகளால் என்னைக் கொல்லாதே!”

“இல்லை உத்தவா, அப்படி எதுவும் இல்லை.  பிரயாணங்களில் கிடைக்கும் பிரகாசமான பயங்கரமான செளந்தரியம் உடைய  காட்டு நெருப்பு அந்த நேரத்துக்கு மனதுக்கும், உடலுக்கும் இதத்தைக் கொடுக்கும்தான்.  அது அந்த நேரம் தேவையாகவும் இருக்கும்.  ஆனால் கண்ணைக் கூச வைக்காத இதமான பாதுகாப்போடு எரிக்கப் படும் வேள்விக்குண்டத்து வேள்வித் தீயோ என்றும் நிரந்தரம்.  உன் வீட்டில் எரியப் போகும் வேள்வித் தீயை நீ ஒரு நாளும் அழிக்க முடியாது.  அது தொடர்ந்து எரிந்தால் தான் உனக்கும், உன் குடும்பத்துக்கும், ஏன் உன் வருங்காலச் சந்த்திகளுக்குமே நன்மை பயக்கும்.  “ கண்ணன் தன் மந்திரக்குரலில் இவற்றைக் கூறிக்கொண்டே உத்தவன் தோள்களில் தன் கைகளை வைத்தான்.  அந்தக் குரலில் தெரிந்த அக்கறை, கனிவு, நம்பகத் தன்மை உத்தவனைக் கவர்ந்தது.  “கண்ணா, புதிர் போடாதே அப்பா. என் போன்ற சாமானியனுக்குப் புரிகிறாப் போல் பேசு! என்னை என்னதான் செய்யச் சொல்கிறாய்?”

“உனக்கு ஷாயிபாவோடு உன் வாழ்நாள் முழுதும் கழிக்க விருப்பமா?? அவளும் அதற்கு இணங்குவாள் என்று தோன்றுகிறதா?” கண்ணன் மீண்டும் கேட்டான்.

“கண்ணா, அவள் எனக்கு வேண்டும்தான், ஆனால் ஸ்வேதகேது??” உத்தவன் மறுப்போடு தலையசைத்தான்.  “ என் நண்பனுக்கு என்னால் துரோகம் இழைக்க முடியாது அப்பனே!”

“என்றால் நீ உன்னுடைய கொள்கையில், உறுதியாய் இரு.  நண்பன் தான் முக்கியம் என்றால் இனி நீ ஷாயிபாவை அதற்குரிய மரியாதையுடன் பார்க்க ஆரம்பி.  உனக்கு நீயே உண்மையானவனாய் நடந்து கொள்.  அவள் மேல் அன்பு செலுத்து.  அந்த அன்பை உனக்குத் திரும்பத் தரவேண்டும் என எதிர்பாராதே.  அர்ப்பணிப்பு உணர்வோடு அவள் மேல் பக்தி செலுத்து.  உனக்குக் கிடைக்கும் எந்த விலை உயர்ந்த  அரிய  பொருளையும் அவளிடம் கொடுத்து அவளைச் சந்தோஷப் படச் செய்.  நாளாக நாளாக உன் மனமும், உடலும் பண்பட்டு இந்த மகத்தான வேள்வித் தீயில் நீ எரிந்து போகாமல் உன்னைப் பாதுகாக்கும்.  உனக்கு ஆத்ம பலத்தைக் கொடுக்கும்.  எல்லாவற்றிலும் சிறந்த பலம் ஆத்மபலம் தான் உத்தவா.  ஆத்மபலம் உள்ளவன் எத்தகைய எதிரியையும் சுலபமாக வெல்வான். நேருக்கு நேர் சண்டையிடவே வேண்டாம்.”

“ஆனால்?? அதெல்லாம் சரிதான் கண்ணா.  அவள் எப்படி எனக்குரியவள் ஆவாள்? நான் அவளை எனக்குரியவளாக்கிக்கொள்ள முடியாதே?”

“ஆஹா, உத்தவா? வேள்வியின் ஆகுதியாக உன்னை நீயே மாற்றிக்கொள்வாயா? அல்லது வேள்வியை நடத்தும் ஆசானாக உயரிய இட்த்தில் வீற்றிருக்கப்போகிறாயா? இல்லை உத்தவா, இல்லை, வேள்வித் தீயில் நீ உன்னுடைய ஆசைகளை ஆகுதியாக இட்டுப் பொசுக்கினால் தான் உனக்கு அதன் நற்பயன்கள் கிடைக்கும்.   உன்னுடைய இந்த ஆசைகளை நீ வேள்வித்தீயில் வேண்டிப் பெற முடியாது.”

உத்தவன் கண்ணீரோடு, “ஷாயிபா எனக்குச் சொந்தமானவள் அல்ல என்று நினைக்கும்போதே நான் பைத்தியமாகிவிடுவேன் கண்ணா!” என்றான்.  அவன் குரலின் பரிதாபம் கண்ணன் மனதைத் தொட்ட்து.
“உத்தவா, எனக்கு மட்டும் தெரியாதா என்ன ஷாயிபாவின் அற்புத அழகைப் பற்றி?? நானும் அறிவேன்.  அறிவும், அழகும் நிறைந்த தைரியமான பெண் அவள்.  ஆனால் அவளின் அற்புத சக்தியெல்லாம் தவறான இடத்தில் தன் பக்தியை அவள் செலுத்தியதால் வீணாகிவிட்டது.  நான் முதல்முறை அவளைப் பார்த்த்துமே அவள் அழகு, வீரம், அவள் ஸ்ரீகாலவன் மேல் கொண்டிருக்கும் பக்தி, விசுவாசம் எல்லாமே என் மனதைத் தொட்ட்து.  ஆனால் அவை தவறான இடத்தில் வைக்கப்பட்டுவிட்டது.  எனினும் அவளைக் கண்டதுமே என் மனக்கடிவாளத்தை நான் அடக்கிவிட்டு அவளுக்கும் எனக்கும் நடுவில் ஒரு பாதுகாப்பு அரணை ஏற்படுத்திவிட்டேன்.  உத்தவா, இம்மாதிரியான ஓர் அரணை ஏற்படுத்திக்கொள்வதால் தான் நான் சந்திக்கும் எல்லாப் பெண்களிடமும் என்னால் சரளமாய்ப்பழக முடிகிறது.  ஏன் என் தாய் யசோதை, கோபிகா ஸ்த்ரீகள், விசாகா, ராதா, தேவகி அம்மா, திரிவக்ரை என எல்லாப் பெண்களையும் இப்படிப் பார்ப்பதினாலேயே என்னால் அவர்களின் அன்பில் ஆழ்ந்து மூழ்கிப் போய்விடாமல் இருக்க முடிகிறது.  அந்த அன்பை நான் வாங்கிக் கொள்வதற்கும் மேல் அதிகமாய்ச் செலுத்திவிடுகிறேன்.  அதனால் என் மனமும் அமைதியாய் இருக்கிறது.  எனக்கு எந்தச் சலனமும் ஏற்பட்டதில்லை.”

“கண்ணா, கண்ணா, உன்னை மாதிரியும் ஒருவர் இருக்க முடியுமா? உன்னால் தான் முடியும் அப்பா.  என்னால் முடியாது.  உனக்கும் எனக்கும் நடுவிலே இருந்த அப்பழுக்கற்ற உறவு கூட இப்போது என் இந்த நடவடிக்கையால் மாசுபட்டுவிட்ட்தே கண்ணா!”

“உத்தவா, நான் உனக்குக் காட்டுகிறேன், எவ்வாறு பாதுகாப்பு அரணை நிர்மாணித்துக்கொண்டு பழகவேண்டும் என்று சொல்லிக் கொடுக்கிறேன்.  என்னைப் பொறுத்தவரையில் அது ஒன்றும் கஷ்டம் இல்லை.  ஆனால் உத்தவா?? உன் உடலிலும், மனதிலும் நூறு நூறு கூரிய முட்களால் குத்திப்புண்ணாவது போல் உணர்வாய், உன்னால் அதைத் தாங்க முடியுமா?  முட்கள் கீறி ரத்தம் கசியும், வெளியே தெரியாது, ஆனாலும் அந்தக் காயத்தைப்பொறுத்துக்கொண்டுதான்  ஷாயிபாவுடன் நீ சேர்ந்தே இருக்க நேரிடும்,  தினம் தினம் அவளைப் பார்த்தாகவேண்டும்,  உன்னால் முடியுமா?”

“கண்ணா, ஏன் என்னை இதெல்லாம் கேட்டுக்கொண்டிருக்கிறாய்? என்னை மிகவும் வருத்துகின்றன இவை எல்லாம்.  அவள் எனக்கு, எனக்கே எனக்கு என்று எப்போதுமே என்னோடு இருக்கவேண்டும் என, என்னவெல்லாமோ எண்ணுகிறேனே, ஆனால் அவள் எனக்கு ஒருநாளும் கிடைக்கப் போவதில்லை.” உத்தவன் குரலில் அழுகை.

‘சரி, உத்தவா, இப்போது நான் கேட்கப் போகும் கேள்விகளுக்கு உண்மையான பதிலைச் சொல்லு.  ஷாயிபாவை நீ திருமணம் செய்து கொண்டு உன் வீட்டின் விளக்கு மட்டுமல்லாமல், உன் வீட்டு வேள்வித் தீயையும் அணையாமல் பாதுகாத்து, உனக்காகக் குழந்தைகளைப் பெற்று, உன்னோடு சேர்ந்து வளர்த்து, உன் குடும்பப் பாரம்பரியங்களையும், உன் குடும்பச் சம்பிரதாயங்களையும் காப்பாற்ற வேண்டும் என்றெல்லாம் கனவு காண்கிறாயா?  உனக்கும், அவள் மூலம் நீ பெறப் போகும் உன் குழந்தைகளுக்கும் அவள் சிறந்ததொரு தாயாகவும், இல்லத்தரசியாகவும் இருந்து கடமையாற்றுவாள் என எதிர்பார்க்கிறாயா?  ஒரு கணவனாக உன்னையே அவள் சார்ந்தும், உன்னை அவள் நினைத்துக்கொண்டும் இருக்கவேண்டும் என்று தோன்றுகிறதா?”

“கண்ணா, தெரியலை, எனக்குப் புரியவில்லை, நான் அவ்வளவு தூரம் தொலைநோக்கோடு சிந்தித்துப் பார்க்கவில்லையே!”

“ம்ஹும், உத்தவா, நான் இதை எதிர்பார்க்கவில்லை உன்னிடம்.  நீ இவ்வளவு சுயநலவாதியாக எப்போது ஆனாய்?  அவளிடம் செலுத்தவென்று என்ன இருக்கிறது உன்னிடம்?? அவளை நீ உன் வாழ்க்கையில் எப்போதோ வந்து போகும் வசந்தத்தின் ஒரு சிறிய துகள் எனத் தான் நினைக்கிறாய்!  மின்மினிப் பூச்சியின் ஒரு கண நேர ஒளியைப் போல் அவள் மேல் நீ செலுத்தும் அன்பும் நிலையானது இல்லை. “

உத்தவன் எதுவுமே பேசவில்லை.

“மீண்டும் யோசித்துப் பார் உத்தவா.  உன் குடும்பத்து விளக்காக, ஒரு தெய்வீகத் தாயாக, நீயும், உன் குழந்தைகளும் மரியாதையோடும், புனிதமாகவும் நினைக்கும் ஒரு இல்லத்தரசியாக உன் குடும்பத்தால் முழுமையாகவும், உண்மையாகவும் நேசிக்கப் படுபவளாய் நீ ஷாயிபாவை எதிர்பார்க்கிறாயா, இல்லையா?”

“அதிலென்ன சந்தேகம் கண்ணா?”

“ஓ, அப்படியெனில், அவளுக்கு வயதாகி, இந்த அழகெல்லாம் போய், உடல் தளர்ந்து போயிருக்கும் காலங்களிலும் இதே அன்பை நீ அவளிடம் காட்டுவாய் அல்லவா? மாற மாட்டாயே?  இப்போது கொழுந்து விட்டு எரியும் இந்த அன்புத் தீயை அணையாமல் பாதுகாத்து உனக்கும் அவளுக்கும் வயதானாலும் இதே ஒளியோடு எரிய விடுவாயா? அல்லது காலத்தின் கோலத்தால் தீ மெல்ல மெல்ல எரிந்து முடியும் நிலைக்குப் போய்விடுமா?”

“அதை நான் எப்படிச் சொல்ல முடியும்  கண்ணா? எனக்கு ஒன்றும் புரியவில்லை!”

“உன்னால் இதைக் கூடத் தெளிவாய்ச் சொல்ல முடியவில்லை என்றால், ஷாயிபாவை நீ எந்தப் பீடத்தில் ஏற்றி வணங்குவாய்? அவளை எவ்வாறு போற்றிப் பாதுகாப்பாய்?  அவள் அன்பின் நெருப்பு உன்னிடம் அணையாமல் இருக்குமா?"

கண்ணன் கண்கள் மெல்ல மெல்ல ஏதோ கனவில் ஆழ்ந்தவை போல் காணப்பட்டன.  கண்ணன் எங்கோ பார்த்துக்கொண்டு, ஆழ்ந்ததொரு நினைவில் மெதுவாய்ப் பேசினான்.  “உத்தவா, நீயும், அண்ணா பலராமனும் ராதையை நான் விருந்தாவனத்தில் தனியாக விட்டு விட்டு வந்துவிட்டேன் எனக் குறை கூறி வந்திருக்கிறீர்கள்.  அதற்காக என்னைக் கடிந்து கொண்டும் இருக்கிறீர்கள்.  ஆனால் உத்தவா, நான் அவள் அன்பை என் நெஞ்சத்தில் எரியும் நெருப்பாக, என்றென்றும் அணையாப் புனித வேள்வித் தீயாகப் பாதுகாக்கவே விரும்பினேன்.  நான் விருந்தாவனத்திலேயே இருந்து ஒரு மாட்டிடையனாகவே இருப்பேன் என எண்ணியே ராதையிடன் என் மனதைப் பறி கொடுத்தேன்.  அவளும் என்னை மனப்பூர்வமாக விரும்பினாள்.  ஆனால் அப்போது நான் அறிந்திருக்கவில்லை, நான் வசுதேவனின் குமாரன் என்றோ, என்றோ ஓர்நாள் மதுராவுக்கு நான் செல்லவேண்டும் என்பதோ எனக்குத் தெரியாது.  ஆனால் தெரிய வந்ததும், ராதையை விருந்தாவனத்தில் இருந்து மதுராவுக்கு அழைத்துக்கொண்டு வருவது பொருத்தமான ஒன்றாய் எனக்குப் படவில்லை.  அது ராதைக்கு நான் செய்யும் துரோகம் என்று தோன்றியது எனக்கு.  வசந்த காலத்தில் பூக்கும் மிக அபூர்வமான பூவைப் போன்ற ராதை, நகரத்தின் கடுமையான நாகரீகங்களில் நெருப்பிலிட்ட மலரைப் போல் வாடிவிடுவாள்.  இந்தக் கடுமையான, கட்டுப்பாடுகள் நிறைந்த வாழ்க்கை அவளுக்குப் பழக்கம் இல்லை.  மேலும் எனக்கு என் தகப்பனுக்கு நான் செய்யவேண்டிய கடமைகள் இருக்கின்றன.   என் வழி ஒரு கடினமான பாதையாக மாறிவிட்டது.  இந்தப் பாதையிலிருந்து நான் விலக முடியாது.  விலகவும் கூடாது.  அவற்றைத் தட்ட முடியாது.  எல்லாவற்றுக்கும் மேல் மதுராவுக்கு  வந்ததுமே நான் வாசுதேவ கிருஷ்ணனாக ஆகியும் விட்டேன்.”  கண்ணன் குரலில் ஒரு கசப்புணர்வு தென்பட்டதோ?”  ஆனால் நான் ராதையைப் பொறுத்த மட்டில் “கானா”.  இந்த வாசுதேவ கிருஷ்ணனிடம் அவள் அவளுடைய கானாவைக் காண முடியாது.  ஓ, இவ்வுலகத்திற்கு நான் செய்யவேண்டிய கடமைகள் நிறையவே உள்ளன.   அவற்றையும் என் பிறப்பின் காரணத்தையும் விட்டுவிட்டு நானும் அவள் மனதுக்குப் பிடித்த, அவ்வளவு ஏன் அவளின் மூச்சுக்காற்றாகவே இருந்த  ஓர் இடைச்சிறுவனாய் அவளிடம் போய் நிற்க முடியாது.  இவை எல்லாவற்றையும் யோசித்துப் பார்த்துவிட்டே நான் ராதையைப் பிரிந்தேன்.  ஆனால் உத்தவா, உனக்குப் புரியுமா இல்லையா தெரியாது.  அவள் அன்பு என்னை ஒரு கவசம் போலக் காத்து வருகிறது.   அதே போல் என் அன்பையும் அவளுக்கெனப் பாதுகாத்து அவளிடம் அளித்துவிட்டேன் .  அது அவளைக் காக்கும்.  நாங்கள் உடலால் பிரிந்திருந்தாலும் எங்கள் உள்ளத்து அன்பெனும் நெருப்பு அணையாமல் சுடர் விட்டுப் பிரகாசிக்கிறது.  எங்கள் அன்பின் அணையாத அந்த நெருப்பின் வெம்மை தான் எனக்குச் சக்தியையும், பலத்தையும் அளிக்கிறது. ”  கண்ணன் குரலில் இனம் தெரியாத ஆழமான சோகம்.

Friday, December 3, 2010

கண்ணன் வருவான், கதை சொல்லுவான், 2-ம் பாகம்.


 உத்தவனின் போராட்டம்!

மெல்ல மெல்ல தன்னைச் சமாளித்துக்கொண்ட உத்தவன் மேலும் பேச ஆரம்பித்தான்.  “கண்ணா, நீ சொல்வது சரியே, நீ எங்களைப் போன்றவன் அல்ல.  நீ எங்களிலிருந்து வேறுபட்டவன்.  நான் உன்னிடம் எதையும் மறைக்க விரும்பவில்லை.  ஆனாலும் உன்னிடம் இவ்வளவு நாள் இது பற்றி நான் பேசவில்லைதான்.  உன்னிடம் ஒரு வேற்று மனிதன் போல் நடந்துகொண்டிருக்கிறேனே! கண்ணா, என் மனத்தின் வேதனைகளை, அது அநுபவிக்கும் துன்பத்தை நான் உன்னிடம் எப்போதோ சொல்லி இருக்கவேண்டும்.  என் மனதைத் திறந்து காட்டி அதன் உள்ளே மலர்ந்திருக்கும் காதல் தாமரையின் மகரந்தத் தேனைஉண்ண வந்த வண்டு தாமரை இதழ்களைப் பிய்த்துப் போட்டு  தானும் மகரந்தத்தேனை உண்ணாமல், மலருக்கும் அதன் சுகந்தத்தைத் தராமல் படுத்தும் பாட்டை உன்னிடம் காட்டி இருக்கவேண்டும்.  ஆஹா, நான் என்ன சொல்வேன்! இந்தக் காதல் இவ்வளவு துன்பவேதனையையா தரும்?? எனில் ஏன் மனிதர் மீண்டும் மீண்டும் அதன் வலையிலே விழுகின்றனர்?? கண்ணா, கரவீரபுரத்திலிருந்து எனக்கு நேர்ந்ததை உன்னிடம் நான் சொல்கிறேன் கேள்!”

"ஷாயிபாவை உன் முன்னிலையிலிருந்து அழைத்துச் சென்ற தினத்தில் இருந்து என் முன்னே நான் விழித்திருக்கும்போதும், கண்ணை மூடித் தூங்க முயலும்போதும் ஷாயிபாவின் நீர் நிரம்பிய துயரமான விழிகளே நினைவில் வந்தன.  கண்ணீருடன் அவள் துன்பம் தாங்க முடியாமல் உன்னைப் பார்த்த பார்வை என்னைக் கொன்றே விட்டது.  அந்த ஆழமான விழிகளில் மிதந்த கண்ணீர் வெள்ளத்தில் நான் முழுகிக் காணாமலே போனேன்.  அந்த நிமிடம் நான் ஒரு திருடனைப் போலவும் உணர்ந்தேன்.  ஏனெனில் ஷாயிபாவோ ஸ்வேதகேதுவுக்கென நிச்சயிக்கப் பட்டிருந்தாள். அவளை எவ்வாறு நான் நினைக்க்லாம்??  ஆனால் கண்ணா, அவள் கண்கள் என்னைத் துரத்தின.”

“எவ்வாறு இது நடந்தது?? அதுவும் இவ்வளவு விரைவில்??” கொஞ்சம் ஆச்சரியத்தோடும், நிறைய பரிதாபத்தோடும் கண்ணன் கேட்டான்.  “தெரியவில்லை, கண்ணா, ஒன்றுமே புரியவில்லை.  நாம் கரவீரபுரத்தை விட்டுக் கிளம்பும் அன்று ஷாயிபா தேரில் ஏறிவிட்டாளா, அவளுக்கு ஏதேனும் தேவையா என்று கவனிக்கச் சென்றேன்.  அப்போது அவள் தேரில் தன்னிரு முழங்கால்களுக்கு இடையிலும் முகத்தைப் புதைத்துக்கொண்டு அமர்ந்திருந்தாள்.  அவள் சோகம் என்னை பலமாகத் தாக்கியது.  என்றாலும் அவளிடம் ஏதேனும் தேவையா என விசாரித்தேன்.  உடனே அவள் நிமிர்ந்து என்னை வெட்டுவது போல் ஒரு பார்வை பார்த்தாள்.  அந்தக் கண்களிலிருந்து தீப்பொறி கிளம்பியது.  அந்த்த் தீயில் நான் பொசுங்கிச் சாம்பலாகாமல் இருந்த்தே அதிசயம் என்று தோன்றிற்று.  அந்தக் கோப்ப்பார்வையிலிருந்து நான் தப்ப நினைத்து என் பார்வையை வேறுபக்கம் திருப்ப நினைத்தேன்.  என்னால் இயலவில்லை.  அவள் முகம், கண்கள், மூக்கு, கன்னங்கள், முகவாய், நெற்றி, கழுத்து என இவை அனைத்துமே தனித்தனியாகவும் மொத்தமாகவும் என் மனதில் பதிந்தன.  என்னைக் கவர்ந்தன.  இப்படி ஒரு அழகை நான் இதுவரை கண்டதில்லை என்ற எண்ணம் மேலோங்க, இது தவறு என்ற ஓர் எச்சரிக்கையும் எனக்குள்ளே கேட்டது.  அந்த எச்சரிக்கையைப் புறக்கணிக்கவே என் மனம் விரும்பியது.  அவளை அப்படியே முழுதாய் விழுங்கிவிடுவேன் போல் ஒருமுறை பார்த்தேன்.  உடனே எனக்கு ஸ்வேதகேதுவுக்கு அவளை முதலில் பார்த்த்தும் ஏற்பட்ட உணர்ச்சிக்கலவையின் காரணம் புரிய வந்தது.  அவர் மேல் பரிதாபம் தோன்றினாலும் என்னையும் என்னால் கட்டுப்படுத்திக்கொள்ள முடியவில்லை.  அந்தக் காதல் தீயில் எரிந்து பொசுங்கிப்போய்விட்டேன் எனில்?”

“ம்ம்ம்ம்ம் மன்மதனின் விளையாட்டின் காரணத்தை யார் அறிவார்?  மன்மதக் கணைகளுக்குத் தப்பினவரும் எவரும் இல்லை.” என்றான் கண்ணன். 

உத்தவன் தொடர்ந்தான்:
“எப்படி வேண்டுமானாலும் இருக்கட்டும் கண்ணா, நான் கொஞ்சம் பாலை எடுத்துக்கொண்டு வந்து அவளுக்குக் கொடுத்துக் குடிக்கச் சொன்னேன்.  அவள் அந்தக் குவளையைக் கையால் கூடத் தொடவில்லை.  அவளுடைய தோழிப்பெண் வாங்கி அவளிடம் கொடுக்க அவள் அதை வாங்கி மிக வேகமாய் என் முகத்தில் விசிறி அடித்தாள். “ 

இந்த இடத்தில் சற்றே தயங்கிய உத்தவன் மேலும் தொடர்ந்தான்.” நான் இன்னொரு கிண்ணம் பாலை எடுத்துக்கொண்டு அவள் முன்னாலேயே நின்றேன்.  மாமன் இறந்ததில் இருந்து எதுவுமே சாப்பிடாத அவள் கொஞ்சம் பாலாவது அருந்தவில்லை எனில் இறந்துவிடுவாளோ எனப் பயந்தேன்.  ஆகவே அவள் செய்த அவமரியாதையைப் பொறுத்துக்கொண்டு பாலை அவளிடம் நீட்டினேன்.   சற்று நேரம் என்னையே பார்த்துக்கொண்டிருந்த அவள், பின்னர் அந்தப் பாலை வாங்கிக் குடித்தாள்.  வேலைக்காரியிடம் கிண்ணத்தைக் கொடுத்துவிட்டு, என்னைப் பார்த்து, “நீர் என்னைக் குடிக்கச் சொன்னதால் நான் பாலை வாங்கிக் குடித்துவிட்டேன்.  இனி நீர் செல்லலாம்.  மேலும் மேலும் என்னைப் பொல்லாதவள் ஆக்காதீர்!” என்று கூறினாள்.  அப்போதைக்கு அவளை விட்டு நான் அகன்றாலும் மீண்டும் மீண்டும் ஒவ்வொரு உணவு வேளையின் போதும் அவளிடம் சென்று அவளை உணவருந்த வைப்பேன்.  அவளும் உணவை அருந்திவிட்டு என்னை உடனே சென்றுவிடுமாறு கெஞ்சுவாள்.  அவள் இருக்குமிடம் போகப்போக எனக்கு இந்த உலகமே புதியதாய்த் தோன்ற ஆரம்பித்துவிட்ட்து.  இந்த வானம், இந்தக் காடுகள், இந்த நதி, இந்த பூமி எல்லாம் புதுமையாய்த் தோன்ற ஆரம்பித்துவிட்ட்து.  உன்னிடம் இருந்து விலக ஆரம்பித்தேன்.  நீயும் யாரோ எனத் தோன்றிவிட்டது எனக்கு.”

கிருஷ்ணன் மெல்லிய புன்னகையுடன் கண்ணை விளையாட்டாய்ச் சிமிட்டிக்கொண்டே, “தூரத்து விண்ணில் தொலைதூரத்தில் பிரகாசிக்கும் நக்ஷத்திரம் போல் மங்கித் தெரிந்தேனா நான்?” என்று கேட்டான்.  உத்தவன் கண்ணனின் கேலியை அசட்டை செய்துவிட்டு மேலே தொடர்ந்தான். “ஒவ்வொரு நாள் இரவும் கண்ணை மூடினால் அவள் கண்களே என் எதிரே தோன்றின.  ஒரு சமயம் கண்ணீர் சிந்தும் கண்கள், ஒரு சமயம் கோபப்பாரவை பார்க்கும் கண்கள், ஒரு சமயம் கேலியாய்ச் சிரிக்கும் கண்கள்,  அந்தக் கண்களை அணைகட்டினாற்போல் பாதுகாக்கும் நெற்றிப் புருவங்களின் வளைவுகள், கோபத்தில் துடிக்கும் அந்த நீண்ட மூக்கு, அவள் உதடுகள், கோபத்தில் துடிக்கும் அந்த உதடுகளில் உள்ளே இருக்கும் சிவந்த நாக்கிலிருந்து கிளம்பும் வசைமாரிகள், எனக்கு அவை இனிய இசையாகத் தோன்றின.  மெல்லிய அழகான அவள் உடலும், அவற்றின் நளினமும், காந்தியும்….”

உத்தவன் மேலே தொடருவதற்குள்ளாக்க் கண்ணன் மேலே தொடர்ந்தான்:”மேற்கொண்டு நான் சொல்கிறேன்.  இரு, ஓர் அழகிய பெண்புலியைப் போல் அழகும், பயங்கரமும், கம்பீரமும் கொண்டிருந்தாள்.  அல்லவா? என் அருமை உத்தவனைப் பயமுறுத்திவிட்டதோ??”

"விளையாடாதே கண்ணா, ஒவ்வொரு நாள் இரவிலும் எனக்கு என்ன நேர்ந்த்து என்றோ, நான் எவ்விதம் மாறிக்கொண்டிருந்தேன் என்பதோ உனக்குத் தெரியாது.”

“ஓ, எனக்குத் தெரியும், நீ இப்போதெல்லாம் இரவுகளில் நன்றாய்த் தூங்குவதில்லை என்று” கண்ணன் கூறினான்.  “ஆஹா, ஆம் கண்ணா, நட்ட நடு ராத்திரியில் தூக்கமே போய்விடும்.  என் உடலே புயற்காற்றில் அகப்பட்ட இலையைப் போல் ஆடும்.  என் நாடி, நரம்புகளில் எல்லாம் ரத்தம் சூடு ஏறும்.  என் காதுகளில் மணி ஓசை விழும். “ இப்போது உத்தவனின் முகத்தில் வெட்கம் அப்பிக்கொண்டது.  தான் சொல்லப் போகும் விஷயத்தில் மிகவும் நாணம் அடைந்தவனாய்ப் பேச ஆரம்பித்த உத்தவன், “நான் இப்போது சொல்வதைக் கேட்டு என்னைத் தவறாய் நினைக்காதே கண்ணா. “ திக்கித் திணறிப் பேசினான் உத்தவன். “நான் என்னுடைய தூக்கத்திலேயே அவளைத் தூக்கிச் சென்றுவிடுவேன்.  அதுவும் ஸ்வேதகேதுவைத் தாக்கி வீழ்த்திவிட்டு அவளைத் தூக்கிச் செல்வேன்.  நான் காதலுக்கு அவமரியாதை செய்துவிட்டதாய் நினைக்காதே கண்ணா.  க்ஷத்திரியர்கள் போரில் இன்னொருவர் வீட்டுப் பெண்களை அபகரித்து வரும் வழக்கம் கொண்டிருப்பது உனக்குப் பிடிக்காது என்பதை நான் நன்கறிவேன். ஆடுமாடுகளைப் போல் பெண்களை அடிமைகளாய் நினைத்து அவ்விதம் பிடித்து வருவதை நீ எதிர்க்கிறாய் என்றும் தெரியும்.”

“ஆம், அது தர்மவிரோதம்! மனிதராய்ப் பிறந்த எவரும் இவ்விதம் செய்வது அதர்ம்ம்.” என்றான் கண்ணன்.

“ஆஹா, நான் நெறி தவறிவிட்டேனே கண்ணா, நான் பாதாளத்தில் படுகுழியில் வீழ்ந்துவிட்டேனே. பேராசையிலும், பொறாமையிலும் செய்வதறியாது பாவத்தைச் செய்துவிட்டேனே!  கண்ணா, நான் படுகுழியில் வீழ்ந்துவிட்டேன் என்பதை உணர்ந்த அக்கணமே எனக்குள் அதிர்ச்சி ஏற்பட்டது.  நான் திகைத்துப் போனேன், நான் இவ்வளவு கொடியவனாய் மாறிவிட்டேனா என அதிர்ந்து போனேன்.  ஸ்வேதகேதுவுக்கு உரிய ஒரு பொருளை அது எப்படி இருந்தாலும் நான் அபகரிக்க முடியாது.  அதே சமயம் அவளை என்னால் மறப்பதோ விட்டுவிடுவதோ இயலாது.  ஆகவே நான் செய்யவேண்டியது என்ன?? துறவு.  ஆம், நான் துறவு மேற்கொள்வது ஒன்றே வழி!”

கண்ணன் உத்தவனைப் பரிதாபத்துடன் பார்த்தான்.  “உத்தவா, துறவறம் என்பது அவ்வளவு ஒன்றும் எளிது அல்ல.  கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்ட வெகு சிலரே துறவறம் மேற்கொள்கின்றனர்.  அவர்கள் பூர்வ புண்ணியமே இந்த ஜென்மத்தில் அவர்களைத் துறவு மேற்கொள்ள வைக்கின்றது.  நம் அனைவருக்கும் உரியது அல்ல அது.  நம் அனைவராலும் துறவு மேற்கொள்ளவும் இயலாது.  நீ என்னதான் பதரிகாசிரம்ம் சென்று தவ வாழ்க்கை மேற்கொண்டாலும் ஷாயிபாவின் நினைவு, ஏதோ ஒருவித்த்தில் உன்னைத் தொடர்ந்து கொண்டு தான் இருக்கும்.  அவள் உன் தனிமையில் உன்னை மிகவும் தொந்திரவு செய்வாள்.  உன்னால் அவளை மறக்க இயலாது. “

என்னால் அவளை மறக்க இயலவேண்டும் கண்ணா, கட்டாயமாய் ஷாயிபாவை மட்டும் நான் எப்படியேனும் மறந்தாகவேண்டும்.  இல்லை எனில் எனக்குப் பைத்தியமே பிடித்துவிடும்.  எவ்வாறு மறப்பேன் அவளை?” 

“நீ உன்னைக் கட்டுப்படுத்திக்கொள்ளவேண்டும் உத்தவா, வேறு வழியே இல்லை!” என்றான் கண்ணன் மென்மையாக.

“எவ்வாறு கண்ணா, எவ்வாறு?? நான் இப்படி ஒரு வழி இருக்கிறது என்று யோசித்துப் பார்க்கவே இல்லையே!” என்றான் உத்தவன்.

கண்ணன் உத்தவனை அன்பும், கருணையும் த்தும்ப நோக்கினான். பின்னர் மென்மையான அதே சமயம் உறுதி தொனிக்கும் குரலில் பேச ஆரம்பித்தான்.  அவன் உள்ளத்து அன்பெல்லாம் அந்தக் குரலில் வழிந்தோடக் கண்ணன் கூறியதாவது:’ உத்தவா, நான் ஏற்கெனவே கூறி இருக்கிறேன்.  பெண்கள் நெருப்பை ஒத்தவர்கள்.  அவர்களின் மேல் நாம் வைக்கும் ஆசை நம்மையும் நெருப்புப் போல் பற்றிக்கொள்ளும்.  காமனின் கணைகளால் தாக்கப்பட்ட நாம் நம் உள்ளத்தையும், உடலையும்  அவர்களிடம் ஒப்புக்கொடுத்து நம்முடைய புத்தியைப் பறி கொடுத்துவிட்டு நிற்போம்.  இந்தச் சிறு நெருப்பு பெரு நெருப்பாய் மாறி நம்மை முழுதுமாய் அழிக்கவிடாமல் நாம் நம்மைக் காத்துக்கொள்ளவேண்டும்.”

“என்ன மிச்சம் இருக்கிறது கண்ணா, இருக்கிறதும் கொஞ்ச நாட்கள் இப்படியே இருந்தால் எரிந்து சாம்பல் கூட மிச்சம் இருக்காது.” உத்தவன் குரலில் கசப்புத் தொனிக்கப் பேசினான். 

“ஓ, ஒரு வழி இருக்கிறது உத்தவா.  உன் அன்பைக் காட்டு.  அதே சமயம் அந்த அன்பினால் நீ முழுதும் எரிந்து போகாமல் காப்பாற்றிக்கொள்.  “

எப்படி கண்ணா, எப்படி??”

Tuesday, November 30, 2010

கண்ணன் வருவான், கதை சொல்லுவான், 2-ம் பாகம்!


 உத்தவன் மனம் திறக்கின்றான்!

உத்தவனின் சிரிப்பும் சரி, வலுக்கட்டாயமாய் வரவழைத்துக்கொண்ட தொனியிலும் சரி கண்ணன் நிம்மதி அடையவில்லை.  ஏதோ மறைக்கிறான் உத்தவன், நம்மிடமா? என்று வேதனையுடன், “இல்லை உத்தவா, ஒருவேளை நான் செய்வது எல்லாம் உனக்குச் சம்மதம் என்பதாலேயே உனக்குப் பிடிக்காத ஏதோ ஒன்றை நான் செய்கிறேனோ எனத் தோன்றுகிறது. அந்த விஷயம் உனக்குப் பெரும் தொந்திரவாயுஅம் இருக்கிறது.”  உத்தவன் கண்களைப் பார்த்துக்கொண்டே பேசிய கண்ணன் கண நேரம் அதில் தோன்றி மறைந்த மின்வெட்டைக் கவனித்துக்கொண்டான். “சொல், என் அருமை சோதரா, சொல்.” என்றான்.  கொஞ்சம் யோசனையுடன், மேலும், “இரு, இரு, உனக்குப் புரிய வைக்க முயல்கிறேன்.  நாம் கரவீரபுரத்துக்கு வரும்வரைக்கும் நீ எப்போதும்போலவே இருந்தாய்.  அங்கிருந்து கிளம்புவதற்குள் உனக்குள் ஏதோ நேர்ந்துவிட்டது.  அதன் பின்னரே உன்னிடம் மாற்றம்.  இதுவரை உனக்கு ஏற்படாத ஏதோ ஒரு நிகழ்வு, அதிசயமான சம்பவம், என்னவெனப் புரியவில்லை, அதனால் மாறி விட்டாய்!”

“ஓ, கண்ணா, எனக்கு ஒன்றும் ஆகவில்லை அப்பா.  நான் எப்போதுமெ உன்னுடனே இருந்து வந்திருக்கிறேனே!” மீண்டும் முகத்தில் மலர்ச்சியை வலுக்கட்டாயமாய் வரவழைத்துக்கொண்டான் உத்தவன்.  கிருஷ்ணன் விடவில்லை, “அப்படியா?? நான் உன்னுடனேயே இருக்கும்போதும் உனக்கு என்ன குறை?? என்ன துன்பம் நேரிட்டுவிட்டது?? ஓ, ஓ,ஓ, என் அருமை உத்தவா, என்னால் உன்னை உணர முடிகிறது.  நீயும், நானும் பிறந்ததிலிருந்து ஒன்றாய் இருந்து வருகிறோமே, உன்னுடைய ஒரு நிறைவேறாத ஆசையை, அதன் இழப்பை, ஏன் நீயே உன்னிடம் தோல்வி அடைந்துவிட்டாயோ என நீ எண்ணுகிறாய் என்பதையும், நீ என்னிடம் மறைக்கிறாய் அப்பனே!  அப்படி நீ எதில் தோல்வி அடைந்து விட்டாய் என்று தான் எனக்குப் புரியவில்லை.  இதற்கு முன்னரெல்லாம் நீ இப்படி எதையோ பறி கொடுத்தாற்போல் நடந்து கொண்டதில்லையே?? என்னிடம் மறைக்காதே உத்தவா, உண்மை வெளிவரட்டும்!” கண்ணனின் இந்த வார்த்தைகள் உத்தவனின் நெஞ்சில் அம்பைப் போல் தாக்கின என்றாலும் அதிலிருந்து துன்பமாகிய ரத்தம் சொட்டுச் சொட்டாகக் கசிந்தது.  அந்தக் காயத்தைத் தாங்க முடியாத உத்தவன் தன் நெஞ்சை அமுக்கிப் பிடித்துக்கொண்டான்.  கசிய ஆரம்பித்த ரத்தம் அவன் கண்களின் வழியே கண்ணீராக வர ஆரம்பித்தது.

சற்றே தயங்கிய அவன், பின் ஒரு பெருமூச்சுடன் தன்னைச் சமாதானம் செய்து கொண்டு, பேச ஆரம்பித்தான்.  ஆனாலும் அவன் குரல் நடுங்கியது.  இனம் புரியாத பயம் அவனை ஆட்டுவிப்பது கண்ணனுக்குப் புரிந்தது.  நடுங்கிய குரலில் அவன், “உனக்குத் தெரியவேண்டுமா?? என்ன தெரியவேண்டும்?? இதோ சொல்கிறேன் கேள்! அலுத்துவிட்டது எனக்கு! ஆம், கண்ணா, இந்த வாழ்க்கை, இதன் உல்லாசம், இதன் வெற்றி, தோல்விகள் அனைத்துமே எனக்குப் போதும் போதுமென்றாகிவிட்டது.  இந்த வாழ்க்கையைத் துறந்து தொலைத்துவிட்டு இமயச் சாரலில் பதரிகாசிரமத்தில் சென்று தவம் செய்து அமைதியாக வாழ விரும்புகிறேன்.   பரபரப்பும், சூழ்ச்சியும் ஒருவரை ஒருவர் அடிக்கச் சமயம் பார்த்துக்கொண்டிருப்பதுமான இந்த வாழ்க்கை எனக்கு மிகவும் அலுத்துவிட்டது என் சகோதரா!”

 கண்ணன் அவனையே இமைகொட்டாமல் பார்த்துக்கொண்டிருந்தான். “ஏன் அப்பா, ஏன் துறவியாக நினைக்கிறாய்?? ஏன் உனக்கு இந்த வாழ்க்கை பிடிக்கவில்லை?? இந்த வாழ்க்கையை நன்கு நல்ல முறையில் தர்மத்தைக் கடைப்பிடித்து வாழ்ந்து தர்மத்தை நிலைநாட்டவே, வாழ்க்கையின் உந்நதத்தை மக்களுக்கு எடுத்துக்காட்டவே, அது எல்லாவற்றிலும் உயர்ந்த தர்மத்தைக் கடைப்பிடிக்கவேண்டிய ஒன்று என்பதைச் சொல்லவே நாம் இங்கிருக்கிறோம்.  வெறும் சாதாரண வாழ்க்கை வாழ்ந்துகழிக்க அல்ல! அதை நீயும் நன்கு அறிவாயல்லவா?”

“ஓஓ, கண்ணா, அதெல்லாம் நீ பார்த்துக்கொள் அப்பா.  உனக்குத் தான் அதெல்லாம் சரியாய் இருக்கும். நீ ஒரு கடவுள் என்று எல்லாரும் சொல்கின்றனர்.  ;யார் கண்டார்கள்? உண்மையிலேயே நீ தான் அந்தப் பரவாசுதேவனோ என்னமோ?? நீ வாழ்க்கையை உன் விருப்பத்திற்கேற்ப வளைத்துக்கொண்டு வாழப் பிறந்திருக்கிறாய்.  உன்னிடம் வாழ்க்கை கைகட்டிச் சேவகம் செய்யும்.  காலம் உனக்கு ஊழியம் செய்யக் காத்திருக்கிறது.  உனக்கு இதெல்லாம் சரியாய் இருக்கும்.  எனக்கு அப்படி இல்லை! நான் ஒரு சாதாரண மானுடன்.” என்றான் உத்தவன்.  

“ஆஹா, இது என்ன சொல்கிறாய் உத்தவா?? வாழ்க்கை வாழ்வதற்கே! நல்லமுறையில் வாழ்ந்து காட்டவே நாம் பிறந்திருக்கிறோம். வாழ்க்கையை எதிர்நீச்சல் போட்டு வாழ்ந்து காட்டி மற்றவர்களுக்கும் கற்றுக்கொடுக்கவேண்டும்.  ஆசாரியர் பரசுராமரும் நம்மிடம் கோமந்தக மலையில் அதையே சொன்னாரல்லவா?  மறந்துவிட்டாயா?? இதுவரையிலும் நீயும், நானும் அப்படித் தானே வாழ்ந்து வந்திருக்கிறோம்?”

“என்னால் இனி இயலாது கண்ணா, தயவு செய்து மேலும் மேலும் பேச்சுக் கொடுத்து என்னை எதாவது உளற வைத்துவிடாதே.  நான் துறவு மேற்கொள்ளத் தீர்மானித்துவிட்டேன்.  “ அவன் கண்களின் பிடிவாதம் கண்ணனுக்கு இனி என்னை ஒன்றும் கேட்காதே என அறிவுறுத்தின.  “உத்தவா,  உன்னுடைய துன்பத்தை என்னுடன் பகிர்ந்துகொள்வதே உனக்குத் துன்பமளிக்கும் விஷயம் என்றால் வேண்டாம்!”  சட்டென எழுந்து உத்தவனைத் தன்னோடு சேர்த்து அணைத்து ஆறுதலளிக்க விரும்பிய கண்ணனுக்கு மனதில் ஏதோ பொறிதட்டியது.  உடனே உத்தவனைப் பார்த்து, “ உத்தவா, நீ எங்கேயானும் அந்த ஷாயிபாவிடம் உன் மனதைப் பறி கொடுத்துவிடவில்லையே?” என்று சந்தேகத்தோடு வினவினான். 
குரல் தழுதழுக்க, “கண்ணா, என்னை எதுவும் கேட்காதே!” என்ற உத்தவன் கண்ணன் தோள்களில் தன் முகத்தைப் புதைத்துக்கொண்டான். “ஆஹா, எவ்வளவு பெரிய முட்டாள் நான், கடைசியில் அந்த மன்மதனின் கணைகள் உன்னையும் தாக்கிவிட்டனவா??உத்தவா, உன்னுடைய உணர்வு என்னவாயிருக்கும் என்பதை என்னால் நன்கு புரிந்து கொள்ள முடிகிறது!”  கண்ணன் வருத்தத்துடன் மேலும் கூறினான்.  “அவள் ஸ்வேதகேதுவுக்கென வாக்குக்கொடுக்கப்பட்டவள். இருவரின் யாரேனும் ஒருவர் விரும்பாமல் இருந்தால் தவிர நீ அவர்கள் இருவரிடையிலும் புகுந்து அவளை உன்னவளாக்கிக்கொள்ள இயலாது.  ஆனால் உனக்கு இப்போது அவள் மேல் அன்பும், ஆசையும் அளவுக்கதிகமாய்ப் போய்விட்டது.  அவளில்லாமல் உன்னால் இப்போது உயிர் வாழமுடியாது.  அவளோ உனக்குக் கிடைப்பது அரிதிலும் அரிது.  ஆஹா, இப்போது புரிகிறது, நீ ஏன் துறவு மேற்கொள்ள விரும்பினாய் என்று.”

“வேண்டாம், கண்ணா, வேண்டாம், மேலும் மேலும் பேசாதே! உன் அன்பினாலும், ஆதரவினாலும் என்னைக் கொல்கிறாயே!  நான் உனக்கு உண்மையான நண்பனாக, சகோதரனாக நடந்து கொள்ளவில்லையே; இன்னொருவருக்கு எனப் பேசப்பட்ட பெண்ணை நினைத்துக்கொண்டு பாவம் செய்துவிட்டேனே.  எனக்குப் பைத்தியம் தான் பிடித்துவிட்டது. “ உத்தவன் இப்போது விம்மி விம்மி அழவே ஆரம்பித்தான்.  “முட்டாள் மாதிரிப் பேசாதே உத்தவா! இது இயற்கை. உன்னால் மட்டுமல்ல, ஞாநிகளும், ரிஷி, முனிவர்களாலுமே தடுக்க இயலாத ஒன்று.  உனக்கு நீயே கடுமையாகத் தண்டனை விதித்துக்கொள்ளாதே.  இந்தப் பெண்ணாசை இருக்கிறதே, அது மட்டும் வந்துவிட்டால் ஒவ்வொரு ஆணும் நெருப்பாகத் தன்னை எரித்துக்கொள்வான்.  காமனின் கணைகளால் இவன் தாக்கப்பட்டிருக்கிறான் என்பதை ஒரு மாபெரும் அடையாளமாக இந்தப் பெண்கள் மாற்றிவிடுகிறார்கள்.  இதிலிருந்து எவரும் தப்பியதில்லை.” என்றான் கண்ணன்.

“நான் அந்த நெருப்பால் எரிக்கப் படுவதையோ, வெறும் அடையாளச்சின்னம் பெறுவதையோ விரும்பவில்லை கண்ணா, முழுதும் எரிந்து சாம்பலாகவே விரும்புகிறேன்.  உனக்கு என்ன தெரியும்?? என்னுடைய உணர்வுகளை நீ புரிந்து கொள்வாயோ மாட்டாயோ?? கோகுலத்திலும் , விருந்தாவனத்திலும்  உன்னை விரும்பியவளை எந்தவிதக் கஷ்டமும் இல்லாமல், ஒரு சிணுக்கம் கூடக் காட்டாமல் விட்டுவிட்டு நீ வந்துவிட்டாய்.  என்னால் அப்படி எல்லாம் முடியாதப்பா!”

“தப்பு உத்தவா, நீ சொல்வது தவறு.” என்றான் கண்ணன்.  அவன் குரல் அமைதியாகவும் நிதானமாகவும் வந்தது.  உத்தவன் அவனை ஆச்சரியத்தோடு பார்த்தான்.

Wednesday, November 24, 2010

கண்ணன் வருவான், கதை சொல்லுவான், 2-ம் பாகம்!

உத்தவனின் மாற்றமும், கண்ணனின் கலக்கமும்!

ரேவதியையும், அவள் வீரத்தையும் உயர்வாகப் பேசி எவ்வகையிலாவது குக்குட்மின்னின் மனதைச் சமாதானம் செய்ய பலராமன் முயற்சித்தான். ஆனால் ரேவதியும் பலராமன் தன்னைக் குழந்தைபோல் நடத்துவதாய்க் கருதினாள். தோல்வியுற்று ஓடி வந்து தான் அழுவதற்கு பலராமன் கூறும் சமாதானம் என நினைத்தாள். கோபத்தோடு பலராமனைப் பார்த்துக் கத்தினாள். பலராமன் என்ன சொல்வதென்று தெரியாமல் மெளனமாய் இருந்தான். “போ, வெளியே!” திட்டவட்டமாய்க் கூறினான் குக்குட்மின். சட்டெ ன்று பலராமனுக்கு அவர்கள் மீது இருந்த பரிதாப உணர்ச்சி மறைந்தது. அதுவரையிலும் தன்னைக் கட்டுப்படுத்திக்கொண்டிருந்தவன், இப்போது தூக்கத்திலிருந்து விழித்தவன் போல் சுயநினைவுக்கு வந்தான். “சும்மாக் கத்தாதீர்கள் இருவரும்! அரசே, உங்கள் மகள் நன்கு பயிற்சி அளிக்கப் பட்டிருந்தாலும் அவள் ஒருத்தியால் மட்டுமே குஷஸ்தலையை வென்று மீட்க முடியாது. “ இப்போது குக்குட்மினின் முகத்தில் கோபம் கொந்தளித்தது. ஆனால் பலராமன் விடாமல், “கேட்கிறீர்களா இல்லையா? உங்கள் போர்த்தந்திரங்கள் இந்தக் காலத்துக்குச் சற்றும் பொருந்தாதவை. உங்கள் போர்முறையில் சண்டையிட்டு குஷஸ்தலையை வெல்ல முடியாது. “ பலராமன் இப்போது வற்புறுத்திக் கூறினான்.

“போ, வெளியே,” மீண்டும் கத்தினான் குக்குட்மின். ரேவதியோ பலராமனை வெறுப்புடன் பார்த்தாள். கோபத்தில் அவள் உடலே நடுங்கியது. “போகமுடியாது!” அழுத்தம் திருத்தமாய்க் கூறிய பலராமன், “ நான் உங்களுடன் வந்து குஷஸ்தலையை உங்களுக்காக மீட்டுத் தருகிறேன். கத்துவதை நிறுத்துங்கள். நான் வசுதேவனின் மகன். எல்லாம் வல்ல பரம்பொருளின் மீது ஆணையிட்டு, ஆகாசவாணி, பூமாதேவி சாக்ஷியாகக் கூறுகிறேன். நீங்கள் மீண்டும் குஷஸ்தலைக்கு மன்னனாவதை நான் என் கண்களால் காணுவேன்! இது உறுதி! என் சபதம்!” என்றான். செயலிழந்து அவனைப் பார்த்தான் குக்குட்மின். ரேவதியோ புதியதொரு பார்வையுடன் பலராமனைப் பார்த்தாள். “கேளுங்கள், நான் உங்கள் குமாரிக்கு ஆயுதப் பயிற்சி அளிக்கப் போகிறேன். அதுவும் உண்மையான யுத்தத்தில் எப்படிச் சண்டையிடவேண்டுமோ, அவ்வாறு கடினமான பயிற்சி அளிக்கப் போகிறேன். “தீர்மானமாய்க் கூறிய பலராமன் மேலும் தொடர்ந்தான்.
“அவள் பயிற்சியை எடுத்துக்கொண்டு வரப் போகிறாள். ஆகவே நீர் சண்டையிட வரவேண்டாம். உங்கள் மகளுக்கு நான் பயிற்சி கொடுத்துத் தயாராக்குகிறேன். புண்யாஜன ராக்ஷஸர்களை ஒருத்தர் பாக்கி இல்லாமல் அனைவரையும் குஷஸ்தலையில் இருந்து விரட்டி அடிக்கிறேன். இந்தப்பழைய ராக்ஷஸர்களின் குஷஸ்தலையை எரித்துச் சாம்பலாக்கிவிட்டு உங்களுக்குப் புதியதொரு அற்புதமான குஷஸ்தலையை உருவாக்கித் தருகிறேன். தேவலோகத்து அமராபுரிக்குப் போட்டியிடும் வண்ணம் அழகான நகரை உருவாக்கித் தருவேன். மீண்டும் ஒரு முறை என்னை வெளியே போ என்று சொன்னீர்கள் என்றால் உங்கள் இருவரையுமே இந்த சிப்ரா நதியில் மூழ்கடித்துவிடுவேன். பின்னர் நான் மட்டும் தனியாக் குஷஸ்தலை செல்லவேண்டும். இப்போது சொல்லுங்கள், நான் போகவேண்டுமா? அல்லது நீர் என்னுடனும், என் சகோதரன் உத்தவனுடனும் வந்து செளராஷ்டிராவின் குஷஸ்தலைக்குச் செல்லலாமா? அதுவும், நாளை மறுநாளே!”
ரேவதி பெரியதொரு ராக்ஷஸன் போல் நின்று கொண்டிருந்த பலராமனைப் பார்த்துவிட்டுத் தன் தந்தை என்ன சொல்லப் போகிறார் என்று எதிர்பார்த்துக்கொண்டு அவர் பக்கம் திரும்பினாள். எல்லாவற்றையும் கேட்ட குக்குட்மின் நீண்ட ஆலோசனைக்குப் பின்னர், “வசுதேவகுமாரா, அந்தக் கடவுளே உன்னை என்னிடம் அனுப்பி வைத்திருக்கிறார். உன் கருத்துக்கு நான் உடன்படுகிறேன். நாம் போகலாம்.” என்று கூறினான். அவன் குரலில் புதியதொரு நம்பிக்கை உதயமாகி இருந்தது தெரிந்தது.
************************************************************************************


அந்த இரவில் கிருஷ்ணன் உத்தவனை நினைத்து நினைத்து மிகவும் கவலைப்பட்டான். உத்தவனுக்கு ஏதோ ஆகிவிட்டது. கண்ணன் பிறந்ததில் இருந்து கோகுலத்துக்கு அனுப்பப் பட்ட உத்தவன் கண்ணனோடு சேர்ந்தே வளர்ந்தான். இத்தனை வருடங்களில் உத்தவனை இப்படி ஒரு நிலையில் கண்ணன் பார்த்ததில்லை. தன்னிடம் கூட ஏதோ மறைக்கிறானே?? அதோடு கூட நினைவெல்லாம் எங்கேயோ இருக்கிறது, வித்தியாசமாய் நடந்து கொள்கிறான். எப்போதுமே பேச்சுக் குறைவு தான். என்றாலும் வெளிப்படையாய் உள்ளத்தில் உள்ளதை ஒளிக்காமல் பேசும் வழக்கம் கொண்டவன். மென்மையான சுபாவம் படைத்தவன். அதிர்ந்தே பேசமாட்டான். கண்ணன் தாமகோஷனுடனும், பலராமனுடனும் முதல் ரதத்தில் பிரயாணம் செய்து கொண்டு வந்தான். ஷாயிபாவும், அவள் தோழிகளும் அடுத்த ரதத்திலும், ஆசாரியர்கள் மற்ற ரதங்களிலும் பின் தொடர்ந்து கொண்டிருந்தனர். உத்தவன் இந்தப் பிரயாணத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்று நடத்திக்கொண்டிருந்ததால் பெரும்பாலும் குதிரையிலேயே பயணம் செய்து கொண்டிருந்தான். இரவுகளில் வழக்கம்போல் கண்ணன் இருக்கும் இடம் தேடி வந்து படுத்துக்கொள்கிறான் தான். இருவரும் அருகருகே படுத்துக்கொண்டு ஒருவரை ஒருவர் கட்டி அணைத்துக்கொண்டு அன்றைய சம்பவங்களையும், அதைப் பற்றிய அவர்கள் உணர்வுகளையும் பகிர்ந்து கொள்வார்கள். ஆனால் இந்தப் பிரயாணம் ஆரம்பித்துச் சிறிது காலத்திலேயே கிருஷ்ணன் உத்தவனிடம் மாற்றத்தை உணர்ந்தான். முதலில் சரியாகத் தெரியவில்லையாயினும், உத்தவனுக்குள் ஏதொ புதியதொரு மாற்றம் நிகழ்ந்திருக்கிறது. ம்ம்ம்ம்ம்?? இந்தக் கடைசி இரு தினங்கள், உத்தவன் வேண்டுமென்றே கிருஷ்ணனின் அருகில் வருவதைத் தவிர்த்து வருகிறான். இன்னும் சொல்லப் போனால் பகல்வேளைகளில் கூடக் கண்ணனின் முகத்தை நேருக்கு நேர் பார்ப்பதைத் தவிர்க்கிறான்.

உத்தவா? இது நீ தானா??

அன்று கண்ணன் மிகவும் வற்புறுத்திக் கூறியதன் பேரில் உத்தவன், கண்ணனோடு படுக்க வந்தான். சற்று நேரம் பேசிக்கொண்டிருந்த நண்பர்கள் பின்னர் தூங்கலாம் என படுத்தார்கள். எப்போதும்போல் பலராமன் படுத்ததுமே உறங்கி விட்டான். கண்ணனுக்குத் தூக்கம் வரவில்லை. கண்ணன் எப்போதுமே படுத்த அடுத்த நிமிடமே உறங்குபவன் தான். ஆனால் இன்று உத்தவன் திரும்பித் திரும்பிப் புரண்டு படுப்பதைப் பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தான். சற்று நேரம் பொறுத்த கண்ணன் மெல்லத் தன் கைகளை உத்தவன் மேல் வைத்தான். தூக்கிவாரிப்போட்டுக்கொண்டு எழுந்த உத்தவன் அருகே அமர்ந்து தன்னைக் கனிவோடும், கருணையோடும் பார்த்துக் கொண்டிருந்த கண்ணனைக் கண்டதும், என்ன சொல்வதென்று புரியாமல் பார்த்தான். கண்ணன் அவனிடம், “உத்தவா, நான் உன்னுடன் பேசவேண்டும்!” என்றான். உத்தவன் பதிலே பேசவில்லை. வானில் நேரம் கழித்து வந்த சந்திரன் மங்கிய நிலவொளியைக் கொடுத்துக்கொண்டிருந்தது. உத்தவன் எதுவுமே பேசாமல் கண்ணனோடு நடந்தான். இருவரும் ஒரு அடர்ந்த மரத்தைச் சுற்றிப் போடப்பட்டிருந்த ஒரு மேடைக்கு வந்து அமர்ந்தார்கள். கண்ணன் உத்தவனையே சற்று நேரம் பார்த்துக்கொண்டிருந்தான். உத்தவன் சங்கடத்தோடு நெளிந்தான்.


“உத்தவா, இப்போதெல்லாம் நீ மிகவும் மாறிவிட்டாய்!”
“நானா? மாறியா விட்டேன்? அதெல்லாம் ஒன்றும் இல்லை கண்ணா!”

“உத்தவா, உண்மையைச் சொல், நான் என்ன கேட்கிறேன் என்பது உனக்குப் புரிகிறதல்லவா?? நம்மிருவருக்கும் இடையே ஏதோ தடை இருப்பதை நான் உணர்கிறேனே?? அது உனக்குத் தெரியவில்லையா?? நான் ஒருவேளை உன்னை அவமதித்துவிட்டேனோ?”

உத்தவன் கண்களில் கண்ணீர் ததும்பா, “அவமதிப்பா? கண்ணா, உனக்கு யாரையுமே அவமதிக்கத் தெரியாதே? என்னை நீ எவ்வாறு அவமதிப்புச் செய்வாய்?? மேலும் நீ என்னை என்ன சொன்னாலும், என்ன செய்தாலும் எனக்குச் சம்மதமே! அப்படி இருக்கையில் உனக்கு என்ன சந்தேகம் கண்ணா?”

Thursday, November 18, 2010

கண்ணன் வருவான், கதை சொல்லுவான், 2-ம் பாகம்!

கண்ணனின் உதவி!

கிருஷ்ணனின் தந்திரம் பலராமனுக்குப் புரிந்துவிட்டது. ஓங்கிக் கண்ணன் முதுகில் அன்போடு ஒரு அடி அடித்தான். “கவலைப்படாதே சகோதரா! சில சமயங்களில் நான் இல்லாமலும் எவ்வாறு வாழ்வது என நீயும் புரிந்து கொள்ளவேண்டாமா??” சிரித்தான் பலராமன். சந்தோஷம் அவனைத் திக்குமுக்காட வைத்தது. கண்ணன் ஏற்கெனவே குஷஸ்தலையைப் பிடிக்கத் திட்டம் தயாரித்திருந்தான். இப்போது அவன் கவனம் எல்லாம் அவன் சிற்றப்பன் மகனும், நெருங்கிய தோழனுமான உத்தவன் பற்றியது தான். கொஞ்ச நாட்களாகவே விசித்திரமாய் நடந்து கொள்கிறான். அவனைப் புரிந்து கொள்ள முடியவில்லை. நாளை இரவு அவன் என்னோடு படுக்க வரும் வேளையில் அதைப் பற்றிக் கேட்டுத் தெரிந்து கொள்ளவேண்டும். பலராமனுக்கு அவன் பலத்தையும், வீரத்தையும் தெரிந்து கொள்ள இப்போது ஒரு சந்தர்ப்பம் அளிக்கப் பட்டது போல் உத்தவனுக்கும் தேவை எனில் ஒரு சந்தர்ப்பம் கொடுத்து அவனையும் உற்சாகப் படுத்தவேண்டும். சூழ்நிலைகளில் மாற்றங்களும், தான் செய்யும் செயல்களில் ஒரு தன்னிறைவும் ஏற்பட்டால் உத்தவன் சரியாகிவிடுவான். ஏன் ஒவ்வொரு மனிதனுக்கும் இது தேவையானது தானே?? கெட்டிக்காரனும், விசுவாசியுமான உத்தவன் அருகிலிருந்தால் பலராமன் கட்டாயம் குஷஸ்தலையை வென்று மீட்டு விடுவான்.

“நல்லது அண்ணா, ஒரு மாவீரனைப் போல் பேசுகிறாய். வெற்றியோடு திரும்பி வா! ம்ம்ம்ம்ம்?? உன் இடத்தில் நான் இருந்தால் உத்தவனைத் துணைக்கு அழைத்துக்கொள்வேன். பிக்ருவை நினைவிருக்கிறதல்லவா உனக்கு? பாஞ்சஜனா கப்பலின் மாலுமி?? அவனையும் அவன் துணை மாலுமிகளையும் உத்தவன் நன்கு அறிவான். நீ செல்லப் போவதோ ஒரு துறைமுகம். அங்கே ஒரு கப்பலின் துணை கட்டாயம் வேண்டும் உனக்கு. யோசி!” அவ்வளவில் இருவரும் அவர்கள் இருப்பிடம் திரும்பிவிட்டனர். மறுநாள் குரு சாந்தீபனியின் சீடர்களுக்குள் போட்டி ஆரம்பித்தது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் தங்கள் திறமையைக் காட்டி வந்தார்கள். கண்ணன் சீக்கிரமே போட்டியிலிருந்து விலகினான். பலராமனோ முழு உற்சாகத்தில் இருந்தான். ரேவதியைப் பார்க்கும்போதெல்லாம் அவன் இதயம் படபடவென அடித்துக்கொண்டது. அதுவும் அன்று ரேவதி புலித்தோலால் ஆன ஒரு உடையைப் போட்டிக்கெனச் சிறப்பாகத் தயாரிக்கப் பட்டதை அணிந்து வந்திருந்தாள். அவளைப் பார்க்கும்போதே ஒரு பெண்புலியைப் பார்ப்பது போல் இருந்தது பலராமனுக்கு.

ரேவதி சற்றும் தயக்கமில்லாமல் பலராமனை நேருக்கு நேர் பார்த்தாள். அவளுக்குள் முழு உற்சாகமும், வீரமும் பொங்கிக் கொண்டிருந்தது. ஆகவே மிகவும் தைரியமாக பலராமனை எதிர்கொண்டு அவனோடு போட்டிக்குத் தயாரானாள். பலராமனோ முதலில் அவளை ஒரு பெண் என்பதால் மிகவும் சாதாரணமாகவே சண்டை போட்டான். ஆனால் ரேவதியின் வீரத்தையும், பலத்தையும் பார்த்துவிட்டு அவன் எண்ணத்தை மாற்றிக்கொள்ள நேர்ந்தது. தான் ஒரு துடிப்பும், வீரமும், நுட்பமும் நிறைந்த எதிரியோடு போட்டியிடுகிறோம் என்பதை உணர்ந்தான். ஆகவே போகப்போகத் தான் போட்டியிடுவது யாரிடம் என்பதையும் மறந்து முழு வீரத்தோடு போட்டியிட்ட பலராமன் சீக்கிரமே ரேவதியின் கதையைத் தன் கதையால் வீழ்த்தி அவளைத் தோற்கடித்தான். ரேவதியின் கதை விண்ணில் பறக்க, அவள் கண்ணிலோ கண்ணீர் வெள்ளம். அன்று வரையிலும் அந்த குருகுலத்தில் கதை வைத்துச் சண்டை போடுவதில் அவளை மிஞ்ச எவரும் இல்லை. ஆனால் இன்றோ?? சுத்தமாக அவளை ஒன்றுமில்லை என ஆக்கிவிட்டான் பலராமன். தோல்வியின் கனத்தைத் தாங்க முடியாதவளாய் முகத்தைக் கைகளால் மூடிக்கொண்டு அழுதவண்ணமே அங்கிருந்து சென்றாள் ரேவதி.

அப்போது தான் தன்னிலைக்கு வந்த பலராமன் தன்னை ஒரு முட்டாள் போல் உணர்ந்தான். அவன் மனதில் வருத்தம் மேலோங்கியது. போட்டி மும்முரத்தில் யாருடன் போட்டி போடுகிறோம் என்பதையும் மறந்து தான் செய்த செயலை நினைத்து வருந்தினான். என்ன இருந்தாலும் அவள் என்னைவிடவும் அநுபவம் குறைந்தவள், சிறியவளும் கூட. மேலும் ஒரு அழகான, புத்திசாலியான பெண்ணும் கூட. பலராமன் யோசித்துக்கொண்டே நிற்க, கண்ணன் நிலைமை மோசமாவதற்குள் அண்ணனை உசுப்பி விட்டான். “அண்ணா, ஏன் தயங்குகிறீர்கள்? போய் அவளைச் சமாதானம் செய்து இந்தக் கலையைத் தாங்கள் அவளுக்குக் கற்பிப்பதாய்க் கூறுங்கள். இதில் உள்ள ரகசியங்களை எல்லாம் சொல்லிக் கொடுப்பதாயும் கூறுங்கள். புதிய புதிய உத்திகளைக் கற்பிப்பதாய்ச் சொல்லுங்கள். அப்படியே, உங்கள் இதயத்தையும் தருவதாய்க் கூறுங்கள். இதுவே நல்ல சமயம். விட்டுவிடாதீர்கள்.” பலராமனை ரேவதி சென்ற திசையில் தள்ளிவிட்டான் கண்ணன். பலராமனும் என்ன செய்வது என அறியாமலும் ரேவதியிடம் எப்படிச் சொல்வது எனப் புரியாமலும் அவளைப் பின் தொடர்ந்து அவளும், அவள் தகப்பனும் வசிக்கும் குகைக்குச் சென்றான்.

அங்கே ரேவதி தன் தகப்பன் மடியில் சாய்ந்து இதயமே வெடிக்கும்படியாக அழுது கொண்டிருந்தாள். தான் ஒன்றுக்கும் உபயோகமில்லாமல் போய்விட்டதாயும், தந்தையை ஏமாற்றி விட்டதாயும், அவரின் முயற்சிகள் பலனற்றுப் போனதாயும் கூறி வருந்தினாள். குக்குட்மின் அவளைச் சமாதானம் செய்யும் விதமாய் அவள் தலையைக் கோதிக்கொடுத்துக் கொண்டிருந்தான். ரேவதியின் பின்னாலேயே வந்த பலராமன் இந்த உருக்கமான காட்சியைப் பார்த்துவிட்டுத் தான் உள்ளே நுழையும் சமயம் எது எனப் புரியாமல் திகைத்துக்கொண்டே, குக்குட்மின்னைப் பார்த்துவிட்டு, “மன்னியுங்கள் அரசே, நான் தவறு செய்துவிட்டேன்” என்றான். அவனைப் பார்த்துக் குக்குட்மின், “போ வெளியே!” என்று தன் கடினமான குரலில் கூறினான். ஆனால் பலராமன் விடாமல், “ரேவதி ஒரு சிறந்த வீரப் பெண்மணி!நன்றாய் வீரத்தோடும், விவேகத்தோடும் சண்டையிட்டாள்." என்று பாராட்டும் குரலில் கூறினான்.

Saturday, November 13, 2010

கண்ணன் வருவான், கதை சொல்லுவான், 2-ம் பாகம்!

 அண்ணனுக்கு உதவும் தம்பி!



பலராமன் ரேவதியின் தந்தையைப் பார்த்தே தீருவது எனத் தீர்மானித்தான். அரசன் குக்குட்மின் நல்ல உயரமாய் இருந்தான். சொல்லப் போனால் பலராமனே உயரமான இளைஞன். அவனையும் விட அதிக உயரமாய் இருந்தான். குக்குட்மின் வசித்த குகைக்கு குரு சாந்தீபனியோடு கண்ணனும், பலராமனும் வந்தார்கள். குக்குட்மின் அசையாமல் விறைப்பாக அமர்ந்திருந்தான். சாந்தீபனி இருவரையும் அறிமுகம் செய்து வைத்தபோதும் அவன் முகம் உணர்வுகள் அற்றே காணப்பட்டது. இருவரையும் சற்று வெறுப்புடனே பார்த்தான். மனிதர்களைக் கண்டாலே பிடிக்காமல் போய்விட்டது அவனுக்கு. சாந்தீபனி சகோதரர்கள் இருவரின் சாகசங்களையும் பற்றி அவனுக்குக் கூறினார்.

குக்குட்மின் கண்களில் அவ்வப்போது தெரிந்த ஒளியைத் தவிர வேறு உணர்ச்சிகளை அவன் வெளிக்காட்டவில்லை. ரேவதி அப்போது உள்ளே வந்து தந்தையின் கட்டளைக்குக் காத்திருந்தாள். பலராமன் அவளை வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்தபோது அவளோ தன் தந்தையை மிகவும் மதிப்போடும், மரியாதையோடும், அதே சமயம் கனிவு தெரியப் பார்த்துக்கொண்டிருந்தாள். கிருஷ்ணனுக்குப் பலராமனுடைய மனதில் ஏற்பட்டிருக்கும் மாற்றம் நன்கு புரிந்தது. இதுவரைக்கும் பலராமன் பார்த்த பெண்கள் எவரும் அவனுடைய பிரம்மாண்டமான உருவத்திற்கும், பலத்துக்கும், தோற்றத்துக்கும் பொருந்திவரவில்லை. பொம்மைகள் போல் காட்சி அளித்தனர்.

அந்தப் பெண்களால் தனக்கு மகிழ்ச்சி கிட்டாது என பலராமன் நினைத்தான். இப்போதுதான் முதல் தடவையாக பலராமன் அவனுடைய உயரத்துக்கும், பலத்துக்கும் பொருந்தி வரக்கூடிய ஒரு பெண்ணைப் பார்த்திருக்கிறான். அதுவும் மிக அழகியும் கூட. ஓர் இளவரசியும் ஆவாள். கண்ணன் இதுவரைக்கும் அவன் அண்ணன் பலராமன் இப்படி ஒரு பெண்ணை விடாமல் உற்று நோக்கியதைக் கண்டதே இல்லை. இதுவே முதல்முறை. தனக்குப் பொருத்தமான ஜோடியை பலராமன் கண்டுகொண்டான் என்பது கண்ணனுக்குப் புரிந்தது. ஆனால் அந்தப் பெண்??? கண்ணன் ஒரு தீர்மானத்துக்கு வந்தான். இதுவரையிலும் அவர்கள் அடைந்த அனைத்து வெற்றிகளுக்கும் கண்ணன் ஒருவனையே பொறுப்பாளியாகவும், காரணகர்த்தாவாகவும் ஆக்கிவந்தனர். பலராமனுக்குக் கண்ணனிடம் துளிக்கூடப் பொறாமையோ, துவேஷமோ ஏற்பட்டதில்லை. இத்தனைக்கும் பின்னணியில் இருந்து செயல்பட்டிருக்கும் பலராமனின் வீரமும், பலமும் இப்போதாவது வெளிப்படவேண்டும். அவன் மனதில் கொஞ்சமாவது இதனால் தாழ்வு மனப்பான்மை ஏற்பட்டிருந்தால் அத விலகவேண்டும். பலராமன் எதற்கும், எவருக்கும் குறைந்தவன் இல்லை. அதை நிரூபிக்கவேண்டும். கண்ணன் குக்குட்மின்னைப் பார்த்துப் பேச ஆரம்பித்தான்.

“மாட்சிமை பொருந்திய அரசே, நாளை குருதேவரின் தேர்ந்தெடுத்த சீடர்களுக்குள் ஒரு போட்டி நடக்கப் போகிறது. உங்கள் குமாரி அனைத்திலும் தேர்ச்சி பெற்றிருப்பதாய் குருதேவர் கூறினார். அவளும் எங்களுடன் கலந்து கொள்வாள் என எதிர்பார்க்கிறேன்.” என்றான் கண்ணன்.

ரேவதிக்குத் தூக்கிவாரிப் போட்டது. விளையாட்டுக்குச் சொல்கின்றனரா?? கண்ணன் இதைக் கவனித்துவிட்டு, மீண்டும் குக்குட்மினிடம் வற்புறுத்தினான். “இம்மாதிரிப் பயிற்சிக்கான சண்டைகளில் எல்லாம் ரேவதி கலந்துகொள்ளமாட்டாள். சமயம் வரும்பொழுது உண்மையான சண்டையிலேயே ஈடுபடப் போகிறாள்.”தீர்மானமாக வந்தது குக்குட்மினின் குரல். கண்ணனோ விடவில்லை. “என் பெரிய அண்ணன் கதையை எப்படி உபயோகிப்பது என்பதையும் அதில் உள்ள சில நுணுக்கங்களையும் உங்கள் குமாரிக்குச் சொல்லிக் கொடுப்பார். கதையை வைத்துச் சண்டை போடுவதில் அவர் நிபுணர்.” பலராமனின் இதயம் படபடத்தது. ரேவதி என்ன சொல்லப் போகிறாளோ? என்றாலும் அவன் வாய் திறக்காமல் காத்திருந்தான். குக்குட்மினின் மனம் சிறிது மாறியது. உடனே ரேவதியைப் பார்த்து, “குழந்தாய், புதிய நுணுக்கங்களைக் கற்றுக்கொள்வது நன்மை தரும். நீயும் சென்று வா. “ என்று கூறினான்.

“தங்கள் விருப்பம் தந்தையே!” என்றாள் ரேவதி.

கண்ணனும் பலராமனும் தங்கி இருந்த அரண்மனைக்குத் திரும்பினார்கள். கண்ணன் பலராமனிடம், “அண்ணா, பாவம் அந்த அரசர், மிகவும் நல்லவராய் இருக்கிறாரே? அவர் இப்படி அனைத்தையும் இழந்து நிற்பது வருத்தம் அளிக்கிறது. அவரிடம் எதிர்பார்ப்பு எதுவும் இல்லை, ஆனால் ஆழ்ந்த நம்பிக்கை இருக்கிறது. தந்தைக்கும், மகளுக்கும் இடையில் உள்ள அருமையான உறவின் பிணைப்பைப் பார்த்தாயா?? அருமை! அற்புதம்!” என்றான் கண்ணன்.

“பாவம், எப்படித் திரும்பக் குஷஸ்தலையை மீட்கப் போகின்றனரோ?? அந்தப் பெண்ணை நினைத்தால் மிகவும் வருத்தமாய் உள்ளது.” பலராமன் கூறினான்.

கிருஷ்ணன் புன்னகையோடு, “நாம் உதவி செய்தால் நன்றாக இருக்கும், ஆனால் நாமோ உடனே மதுராவுக்குச் செல்லவேண்டுமே? அங்கே நமக்காகக் காத்திருக்கின்றனரே? ம்ம்ம்ம்??? நீ மதுரா சென்றாயானால், நான் செளராஷ்டிரா போய் அங்கே எல்லாவற்றையும் முடித்துக்கொண்டு வருவேன்.” என்றான் கண்ணன் சற்றே கபடமாக. பலராமனின் முகம் பிரகாசம் அடைந்தது. உடனே அவன் வேகமாய்ப் பேச ஆரம்பித்தான்:” கண்ணா, என்னை விட உன்னைத் தான் மதுராவில் அதிகம் எதிர்பார்ப்பார்கள். வேண்டுமானால் நான் போகிறேனே செளராஷ்டிராவுக்கு. குக்குட்மினுக்கு நான் உதவுகிறேனே?”

“ஓ, அண்ணா, உனக்குப் புரியவே இல்லையே?? மதுராவுக்கு நான் மட்டும் தனியாகப் போய் என்ன செய்யமுடியும்? நீ இல்லாமல் என்னால் எதுவும் இயலாது. “ கண்ணன் மறுத்துப் பேசினான்.

“ரொம்பவே பணிவைக் காட்டாதே தம்பி. இதையே வேறுவிதமாய்ச் சொன்னால்?? “நான் என்ன செய்யமுடியும் நீ இல்லை எனில்??” யோசி தம்பி, யோசி! பலராமன் கூறக் கண்ணன் நீண்ட பெருமூச்சு விட்டான். “எதிர்காலத்தில் நமக்குக் குஷஸ்தலை போல் ஓர் இடம் தேவைப்படும். எப்போதுமே கோமந்தகமலைத் தொடரில் பத்திரமாய் இருக்கலாம் என நினைக்க முடியாது. “

“நல்ல யோசனை தம்பி, குஷஸ்தலை குக்குட்மினின் கைகளுக்கு வந்துவிட்டால் நமக்கு அங்கே எப்போதும் நல்வரவு கிடைக்கும்.”

“அதே, அண்ணா, அதே! நீ குக்குட்மினுக்கு உதவினாய் எனில் நிச்சயமாய் அவருக்குக் குஷஸ்தலை கிடைத்துவிடும். ஆனால் நீ இல்லாமல் நான் என்ன செய்வேன்??”