Saturday, January 21, 2012

நல்லவர்க்கொரு தீங்கு நண்ணாது நயமுறக் காத்திடுவான்!

உண்மை; கிருஷ்ணன் யாதவர்களைக் குடியமர்த்துவதிலும், அவர்களுக்கு வேண்டியதைச் செய்வதிலும் மட்டும் நின்றுவிடவில்லை. வெளி உலகில் நடப்பவைகளையும் தெரிந்து கொள்வதில் ஆர்வம் காட்டினான். முக்கியமாய் அவனுடைய அத்தையான குந்தியின் புத்திரர்களின் க்ஷேமலாபங்களில் மிகுந்த அக்கறை காட்டினான். யாதவர்களுக்கு இத்தனை மேன்மை ஏற்பட்டும் அவர்களின் செல்வம் விருத்தி அடைந்தும், தர்மத்தின் வழியிலே செல்வது ஒன்றே ஆர்யவர்த்தத்தின் மேன்மைக்கும், சிறப்புக்கும் நல்லது எனத் திடமாக இருந்தான். ஆகவே ஆர்யவர்த்தத்தின் மேன்மைக்குப் பாண்டவர்களின் நலமும், வீரமும், அவர்கள் பலம் அடைவதும் தேவை எனப் புரிந்து வைத்திருந்தான். அதோடு கூட அர்ஜுனன் கூடவும், பீமன் கூடவும் கழித்த நாட்களின் இனிமையான நினைவுகளைக் கண்ணன் மறக்கவே இல்லை. அவர்களின் வளர்ச்சியைத் தூர இருந்தாலும் தெரிந்து கொள்வதில் அக்கறையும் காட்டி வந்தான். அவந்தியின் வளர்ச்சியும், பலமும் ஆர்யவர்த்தத்தின் அனைத்து பாகங்களுக்கும் செல்ல வசதியாக அது மத்தியத்தில் அமைந்ததும், அதன் வளர்ச்சிக்கும் பலத்துக்கும் காரணமாக அமைந்த அதன் இளவரசர்களான விந்தனும், அனுவிந்தனும் அவர்களின் நட்பும் சாந்தீபனியின் குருகுல வாழ்க்கையில் இருந்தே அவை தொடர்ந்து வருவதையும் நினைவு கூர்ந்தான் கிருஷ்ணன். அவர்கள் மூலமே நாட்டின் பல பாகங்களிலும் நடக்கும் மாறுதல்களையும், மற்ற அரசியல் செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொண்டான் கிருஷ்ணன்.

அதோடு ஊருக்கு ஊர் செல்லும் பிராமணர்கள், புனித யாத்திரை செல்லும் யாத்ரீகர்கள் போன்றோர் மூலமும் பல விஷயங்களையும் தெரிந்து கொள்ள முடிந்தது. அது போலவே குரு சாந்தீபனியின் குருகுலமும் நாட்டின் பல பாகங்களுக்கும் சென்று வருவதால் அவர்களின் மூலமும் பல விஷயங்களைத் தெரிந்து கொள்ள முடியும். மேலும் சாந்தீபனி பல மன்னர்களுக்கும் ஆசாரியராக இருந்தமையால் பல நாட்டு நடவடிக்கைகள் அவர் மூலம் கண்ணன் அறிய நேர்ந்தது. ருக்மிணியின் சுயம்வரம் கிருஷ்ணனின் துணிகரமானதொரு சாதனையாக முடிந்த பின்னர், ஜராசந்தன் தன் நாடான மகதத்தின் தலைநகரம் ராஜகிருஹத்திற்கு வெறுப்போடும், ஆங்காரத்தோடும், துவேஷத்தோடும் சென்றடைந்தான். அடக்க முடியாச் சீற்றம் கொண்டிருந்தான். ருக்மிணியின் சுயம்வரம் முடிந்த இந்த மூன்று வருடங்களில் ஆர்யவர்த்தத்தின் எந்த அரசனோடும் போரிட்டு அவனை அடிமையாக்கவில்லை; ஆனால் அவன் சும்மா இருப்பதும் காசி ராஜாவைத் திடீரெனத் தாக்கி முற்றுகையிட்டுக் காசி ராஜ்யத்தைத் தன் ராஜ்யத்தோடு இணைக்கவே என்றும் பேசிக்கொண்டார்கள். ஆனால் கிருஷ்ணன் தர்மத்தை நிலைநாட்டுவது என்பது இப்போது ஹஸ்தினாபுரத்து அரசர்கள் கைகளிலும், பாஞ்சால நாட்டு அரசன் துருபதன் கைகளிலுமே உள்ளது என்பதை உணர்ந்திருந்தான். ஆர்ய வர்த்தத்தில் இப்போது இவர்கள் இருவருமே மிகப் பெரியதொரு சாம்ராஜ்யத்தை ஆண்டு வந்ததோடு தனிப்பட்ட முறையில் பலமும், செல்வாக்கும் கொண்டு விளங்கினார்கள்.

கங்கைக்கரையின் வளமான நிலங்களைக் கொண்டிருந்த இரு நாடுகளும் ஆர்யவர்த்தத்தின் கண்ணின் மணிகள் போல விளங்கின. இங்கே தான் பெருமை வாய்ந்த குருக்ஷேத்திரமும், பிரம்மரிஷிதேசமும் அடங்கி இருந்ததோடு பல ரிஷி முனிவர்களின் ஆசிரமங்களும் இருந்தன. அதோடு க்ஷத்திரியர்களுக்கான பல்வேறு நியமங்களும் காங்கேயன் எனப்பட்ட பீஷ்மரால் ஏற்படுத்தப்பட்டன. ஒரு க்ஷத்திரியன் எப்படி வாழ்ந்து காட்ட வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக விளங்கிய பீஷ்ம பிதாமகர், குரு வம்சத்தின் அஸ்திவாரமாக, அசைக்க முடியாதவராக விளங்கினார். ஹஸ்தினாபுரத்தின் மன்னனாக திருதராஷ்டிரன் பெயரளவுக்கே இருக்கிறான் எனவும் அதிகாரம் முழுதும் பீஷ்மர் கைகளில் என்றும் பேசிக்கொண்டார்கள். அரச தர்மத்தை நிலைநாட்டுவதையே ஒரே குறிக்கோளாய்க் கொண்ட பீஷ்மர், சொந்த வாழ்க்கையிலும், பொது வாழ்க்கையிலும் அப்பழுக்குச் சொல்லமுடியாத ஒழுக்கத்தோடு கடும் பிரமசரியத்தை அநுஷ்டித்தார். அதே சமயம் யுத்தம் என வந்தால் அவரை எவராலும் வெல்ல முடியாத அளவுக்குப் பயங்கரமாகப் போரிடுவார். ஹஸ்தினாபுரத்தின் தற்போதைய சூழ்நிலை கிருஷ்ணன் மனதில் உற்சாகத்தையும், ஊக்கத்தையும் அளித்தது. பிறவியிலேயே குருடான மன்னன் திருதராஷ்டிரன், தன் தம்பியான பாண்டுவின் குமாரன் யுதிஷ்டிரனுக்கு யுவராஜ பட்டாபிஷேஹம் செய்துவிட்டான். அவன் செய்த புத்திசாலித்தனமான, விவேகம் உள்ள நல்ல காரியங்களில் இதுவும் ஒன்று. கண்ணனின் அத்தை குமாரன் யுதிஷ்டிரன் இப்போது ஹஸ்தினாபுரத்தின் யுவராஜா. பீஷ்ம பிதாமஹரின் ஆசிகளோடும், உதவியோடும் ஹஸ்தினாபுரம் மட்டுமில்லாமல் ராஜ்யத்தின் அனைத்து மக்களின் நல்ல அபிப்பிராயத்தையும் யுதிஷ்டிரன் குறுகிய காலத்தில் பெற்றுவிட்டான். மக்கள் அனைவருமே யுதிஷ்டிரனை மிகவும் நேசித்தார்கள்.

யுதிஷ்டிரன் அடுத்துத் தங்களுக்கு அரசனாகப் போகும் நாளை மிக ஆவலோடு எதிர்பார்த்தார்கள். அதோடு ஹஸ்தினாபுரத்தோடு மோதிய அரசர்களை வென்றதன் மூலம் பாண்டவர்களில் மூன்றாவதான அர்ஜுனனின் திறமையும் அவன் வில் வித்தையும் நாடெங்கும் கொண்டாடப் பட்டு வந்தது. கிருஷ்ணனின் சாகசங்களைப் போலவே அர்ஜுனனின் சாகசங்களையும் கதைப்பாடல்களாக மக்கள் பாடி மகிழ்ந்தனர். நாட்டின் நாலா திசைகளிலும் அர்ஜுனனின் வில்லும், அம்பும் செய்யும் மாயாஜாலத்தைக் குறித்துப் பேசி மகிழ்ந்தனர். இத்தனை இருந்தாலும் அங்கே ஓரு இடையூறு இருக்கத்தான் செய்தது. அது…..பாண்டவர்களின் பெரியப்பாவான திருதராஷ்டிரனின் மகனான துரியோதனன் மூலம் வந்தது. அதுவும் கண்ணனுக்குத் தெரிய வந்தது, பலராமனிடம் கதாயுதப் பயிற்சி மேற்கொள்ளும் சாக்கில் துரியோதனன் துவாரகைக்கு வந்தபோது தான். அப்போது தான் யுதிஷ்டிரன் யுவராஜாவாகப் பட்டம் ஏற்றிருந்தான். துரியோதனன் சிறந்த வீரன் தான் சந்தேகமே இல்லை; வந்த சிலநாட்களிலேயே பலராமனின் மதிப்பையும், அவன் பிரியத்தையும் சம்பாதித்துக்கொண்டான். அவனின் பிரியமான சீடனாகவும் மாறிவிட்டான். கிருஷ்ணனிடமும் துரியோதனன் நண்பனாக முயன்றான். அவனுடைய பலத்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியுற்றன. கிருஷ்ணன் அவனைத் தூரத்திலேயே வைத்துப் பழகினான். அவன் மனதுக்குள் உள்ள கெட்ட எண்ணத்தைக் கிருஷ்ணனால் புரிந்து கொள்ள முடிந்தது.

Monday, January 16, 2012

சீடனா வந்தெனைச் சேர்ந்தனன், தெய்வமே!

குருதேவரே, பின் ஏன் தயக்கம்? என் மகளுக்கு வாசுதேவ கிருஷ்ணனே சிறந்த மணமகன் ஆவான். அவனிடம் நீங்கள் நேரில் பேசுங்கள். என்னுடைய சபதத்தையும் அவனாலேயே முடிக்க முடியும். கிருஷ்ணனை என் மாப்பிள்ளையாகப் பெறவேண்டி நான் என்ன வேண்டுமானாலும் செய்யத் தயாராக இருக்கிறேன். இதன் மூலம் பாஞ்சால நாட்டிற்கும், யாதவர்களுக்கும் ஒரு நீண்ட நெடிய தொடர்பு ஏற்பட்டு உறவும் பலமடையும்.”

சாந்தீபனி சிரித்தவண்ணமே தாம் அங்கிருந்து பிரபாஸ க்ஷேத்திரத்திற்கே அடுத்துச் செல்லவிருப்பதால் கிருஷ்ண வாசுதேவனிடம் துருபதனின் விருப்பத்தைத் தெரிவிப்பதாய்க் கூறினார். ஆனால் கிருஷ்ண வாசுதேவனுக்கு ஆலோசனைகள் கூறும் அளவுக்குத் தகுதியான மனிதர்கள் இந்த ஆர்யவர்த்தத்திலேயே இல்லை என்றும் கூறினார். சில நாட்களில் பாஞ்சாலத்திலிருந்து பிரபாஸ க்ஷேத்திரத்துக்குப் பயணம் ஆன சாந்தீபனி முனிவரும் அவரின் முக்கியச் சீடர்களும் பிருகு தீர்த்தத்திலிருந்து சகல வசதிகளும் நிரம்பிய பெரிய கப்பல் போன்ற படகுகளில் பிரபாஸ க்ஷேத்திரத்துக்கு வந்து சேர்ந்தனர். அப்போது நடுப்பகல் நேரமாக இருந்தது.

கிருஷ்ண வாசுதேவனின் அரண்மனையில் கிருஷ்ணன் அன்று அதிகாலையிலேயே எழுந்தான். அவனின் இரு மனைவியரும் பணிவிடைகள் செய்ய அவன் தன்னை வெளியே செல்லத் தயார் படுத்திக்கொண்டான். குருதேவர் அன்று வருவதால் சீக்கிரம் கிளம்பவேண்டி இருந்தது. அவரை வரவேற்க வேண்டும். அவருக்குத் தேவையான பணிவிடைகளைச் செய்ய வேண்டும். இரு மனைவியரையும் பார்த்துக் கிருஷ்ணன், “குருதேவர் உங்கள் இருவரையும், கணவனை சந்தோஷமாக வைத்திருக்கிறீர்களா எனக் கேட்கப் போகிறார்.” என்றான் குறும்புடன். அதற்கு ருக்மிணி, :என் கணவர் இந்த நாட்டின் அனைத்துக் குடிமக்களையும் என் கணவர் சந்தோஷமாக வைத்திருக்கிறார்; எங்கள் இருவரைத் தவிர எனச் சொல்வேன்.” என்றாள்.
“உங்கள் இருவரின் முகத்தைப் பார்த்தே தெரிந்து கொள்வார்.”எனக் கிருஷ்ணனும் விஷமமாகப் பதில் சொல்லிவிட்டுக் கிளம்பினான். பலராமன், யுயுதானா என்ற பெயர் உள்ள ஆனால் சாத்யகனின் மகன் என்பதால் சாத்யகி என அழைக்கப்பட்ட சாத்யகி ஆகியோரும் கிருஷ்ணனோடு சேர்ந்து கொண்டனர். சாத்யகி கிருஷ்ணனோடு சேர்ந்தது முதல் அவனை நிழல் போலத் தொடர்ந்தான். தன்னுடைய முழு விசுவாசத்தையும் காட்டிக் கிருஷ்ணனின் சாகசங்கள் அனைத்திலும் தானும் பங்கு பெற்றான். மூவரும் கடற்கரையில் உடல்பயிற்சி, ஆயுதப் பயிற்சி, வில் வித்தை, மல்யுத்தம், வாள் சண்டை, கதைப் பயிற்சி போன்றவற்றில் அன்றாடப் பயிற்சிகளை மேற்கொண்டிருந்த யாதவ இளைஞர்களையும், வீரர்களையும் பார்த்து உற்சாகப் படுத்தினார்கள். அனைவரும் கூடி இருந்தாலும் கிருஷ்ணன் அனைவரையும் தனித்தனியாக விசாரித்து ஊக்கம் கொடுத்தான். அனைவரும் சேர்ந்து, “ஜெயஶ்ரீ கிருஷ்ணா” என கோஷம் போட்டார்கள். “வாசுதேவ கிருஷ்ணனுக்கு மங்களம்” என்ற கோஷம் இங்கே துவாரகை வந்ததில் இருந்து கிருஷ்ணனிடம் கொண்ட அபார பக்தியால் “ஜெயஶ்ரீ கிருஷ்ணா” என்றாகி இருந்தது.

தன்னுடைய தண்டாயுதத்திற்குக் கிருஷ்ணன் கெளமோதகி என்ற பெயரும், தன்னுடைய வில்லிற்கு சார்ங்கம் என்ற பெயரும் வைத்திருந்தான். சார்ங்கத்தைத் தூக்கி நிறுத்தி நாணேற்றி அம்பு விடக்கூடிய திறமை கண்ணன் ஒருவனுக்கே உண்டு. அன்று அவன் எந்தப் பயிற்சியும் மேற்கொள்ளவில்லை. அனைவரின் பயிற்சியையும் மேற்பார்வை பார்த்துவிட்டுக் கடலில் நீந்தச் சென்றனர். பின்னர் அன்றாட நித்ய கர்மானுஷ்டானங்களை முடித்துக்கொண்டு குரு கர்கர் தொடர, பலராமன், சாத்யகி ஆகியோருடன் கண்ணன் தன் ஆசாரியரை எதிர்கொண்டு அழைக்கச் சென்றான். குருநாதர் வரப் போவதை அறிந்த யாதவர்களில் பெரும்பாலோர் அந்தக் கடற்கரையில் அந்தக் குளிர்காலத்து இளங்காலையில் கூடி இருந்தார்கள். முதலில் சீடர்கள் கரைக்கு வந்து சேர்ந்தார்கள். பின்னர் வந்த படகில் சாந்தீபனியும் வந்து சேர்ந்தார். மான் தோலை ஆடையாக உடுத்திக்கொண்டு, வெண்மையான நீண்ட தாடியுடன் காட்சி அளித்த சாந்தீபனியின் தோற்றம் அவருடைய இடைவிடாத தவத்தின் காரணமாய் ஒரு பிரகாசமான ஜோதியைப் போல் காட்சி அளித்தது. சூரியன் தான் உதயமாகிவிட்டானோ என எண்ணும்படி ஜோதிர்மயமாய்க் காட்சி அளித்தார் சாந்தீபனி.

கண்ணனைப் பார்த்ததுமே நீண்ட நாட்கள் பிரிந்திருந்த குழந்தையைத் தந்தை பார்த்ததும் எப்படிக் கட்டி அணைப்பாரோ அவ்வாறு கட்டி அணைத்தார் சாந்தீபனி. தன்னுடைய அருமைச் சீடனை அன்போடும், பாசத்தோடும், உள்ளார்ந்த பெருமையோடும் பார்த்தார். விடாமுயற்சியோடு போராடும் ஒரு வாழ்க்கையை அதன் தீவிரம் குறையாமலே வாழ்ந்தவனைப் போல் காணமுடியவில்லை. கிருஷ்ணனைப் பார்த்தால் சொகுசு வாழ்க்கை வாழ்பவனைப் போலவே காணப்பட்டான். அவன் உடல் மெலிதாக இருந்தாலும் உறுதி உண்டு என்பதை அவர் அறிவார். பெண்ணிற்கு இருப்பது போல் வளைந்த புருவங்களும், அதன் கீழே தெரிந்த ஆயிரம் கோடி சூரியப் பிரகாசத்தைக் காட்டும் ஒளிமயமான கண்கள், இயல்பாகத் தானாகவே வரும் இளநகை கொண்ட முகம், இந்த உடல் மெலிதாக இருந்தாலும் தேவைப்படும்போது தன் உறுதியைக் காட்டும், எஃகு போல் மாறும் என்பதைக் காட்டிய திண்ணிய தோள்கள், நீண்ட கைகள், ஒரு காலத்தில் யமுனைக்கரையில் கோபிகைகளோடு நடனமாடிய கால்கள், தேவைப்படும்போது ரதத்தை வேகமாக ஓட்டியவண்ணமே வில்லையும், அம்பையும் குறிபார்த்துத் தாக்க உதவும் என்பதையும், இடையில் காணப்பட்ட மஞ்சள் பட்டாடை, தலையில் சூடிய கிரீடமும், அதில் பொருத்திய மயிலிறகும், கழுத்தில் சூடிய வாசனை மிகுந்த சண்பக மலர்களால் கட்டப்பட்ட மாலையுமாகக் கண்ணன் தரிசனத்தில் தன்னை மறந்தார் சாந்தீபனி. அவனைப் பார்த்தால் செயற்கரிய சாகசங்களைச் செய்தவன் போலல்லாமல் எளிமையாகவும், அதே சமயம் இயல்பான பணிவோடும் காட்சி கொடுப்பதையும் பார்த்தார் சாந்தீபனி.

மிகுந்த சந்தோஷத்தோடு கண்ணனைப் பார்த்த அவர் பலராமனையும் கட்டி அணைத்து ஆசி வழங்கியபடியே,”உத்தவன் எங்கே?” என்று கேட்டார். அவன் ஹஸ்தினாபுரம் போயிருப்பதாய் பலராமன் கூறினான். கண்ணன் துவாரகையில் யாதவர்களைக் குடியமர்த்துவதோடு மட்டும் நின்றுவிடவில்லை என்பதை சாந்தீபனி புரிந்து கொண்டார்.

Friday, January 13, 2012

கண்ணன் தன்னைச் சரணென்று போவையேல் சத்தியங் கூறுவன்!

துருபதா, நீ சொன்னால் மட்டும் போதுமா? கிருஷ்ணன் அப்படி எல்லாம் நீ சொன்னதும் உடனே அதற்கு உடன்படமாட்டான். அவனுக்குப் பாண்டவர்களிடம் அபார அன்பு, பாசம். அதிலும் அர்ஜுனனிடம் தனியான பிரியம் வைத்திருக்கிறான். அவர்களுக்கு எப்படி துரோகம் செய்ய நினைப்பான்? அதிலும் அர்ஜுனன் ஆர்யவர்த்தத்தின் சிறந்த வில்லாளி எனப் பெயர் எடுத்த பின்னரும் அவன் இதற்கு உடன்படுவானா?”

“ஆசாரியரே, கிருஷ்ண வாசுதேவனிடம் நீங்கள் எடுத்துக் கூறினால் ஒத்துக்கொள்வான். எனக்கு அப்படித் தான் தோன்றுகிறது. கிருஷ்ண வாசுதேவன் மட்டும் எனக்கு மருமகன் ஆனான் எனில்; ஆஹா! நான் எதைத் தான் தர மாட்டேன்! அவன் மனதால் நினைப்பதைச் செய்து முடிப்பேன்! என் நாட்டையும் பங்கு போடத் தயாராய் இருக்கிறேன். யாதவர்கள் இழந்த மதுராவையும் புதுப்பித்து அவர்களிடம் ஒப்படைக்கத் தயாராய் இருக்கிறேன்.”

“எல்லாம் சரிதான் துருபதா! உன் மகள் கிருஷ்ணவாசுதேவனிடம் முழுமையாகத் தன்னை ஒப்படைக்கத் தயாராக இருக்கிறாளா? தன்னைக் குறித்து எந்தவிதமான பெருமையும் கொள்ளாமல், கிருஷ்ண வாசுதேவனின் திறமைகளுக்காக மட்டுமின்றி, அவனுக்காக மட்டும், அவனை மட்டுமே நினைத்துத் தன் சுயப் பெருமைகளையும், கர்வத்தையும் அறவே நினையாமல், அவன் செல்லும் பாதையில் அவனோடு உடன் செல்ல, அவனுக்காக வாழத் தயாராக இருப்பாளா? கண்ணன் அப்படிப் பட்டதொரு பெண்ணையே மணக்கத் தயாராக இருப்பான். “

“திரெளபதி கண்ணனின் சாகசங்களைப் பற்றிக் கேள்விப் பட்டிருக்கிறாள். அவனுடைய வீரத்தை நினைத்துப் பெருமையாகப் பேசி இருக்கிறாள். ஆனால் ஆசாரியரே! அவள் தன் சுயத்தில், தன்னில் நம்பிக்கை அதிகம் கொண்டிருப்பதோடு, தன்னுடைய தனித் தன்மையில் மிகவும் கர்வம் உடையவள்; எதற்காகவும் அதை இழக்கமாட்டாள். அவ்வளவு எளிதில் யாருக்கும் தலை வணங்க மாட்டாள். தன்னை வெற்றி கொள்ள அனுமதிக்கமாட்டாள்.” துருபதன் ஒரு மென்னகையோடு சொன்னாலும் இதற்காக அவன் உள்ளூர பெருமைப்படுவது தெரிந்தது. “ஒருவேளை தன் தகப்பனிடமிருந்து இந்த குணம் அவளுக்கு வாய்த்திருக்கலாம்.” இதைச் சொல்லும்போது தன்னுடைய போராட்ட குணமும், தன்னம்பிக்கையும் நினைத்து துருபதன் முகம் பெருமிதத்தில் ஒளிர்ந்தது.

“துருபதா, கண்ணனைச் சந்திக்கையில் தன் கர்வத்தையும் தன்மானத்தையும் மறப்பாளா உன் மகள்? அப்படி எனில் நல்லது! ஆனால் யாருக்குத் தெரியும்?? கிருஷ்ணன் திறமையான ரதசாரதி என்பது அவனைப் பொறுத்தவரை பெரியதொரு விஷயமே இல்லை.”

“ஆசாரியரே, அவன் உண்மையில் எப்படிப்பட்டவன்? குணத்தில், நடத்தையில்?”

“அவன் வெறும் போர்வீரன் மட்டுமல்ல; யுத்தத்தில் சிறந்தவன் மட்டுமல்ல; யாதவர்கள் செளராஷ்டிரக் கடற்கரைப் பட்டினங்களில் வசிக்க ஆரம்பித்த இந்த மூன்று வருடங்களில் அவர்களின் படைபலம் மட்டுமல்லாமல், செல்வ வளமும் மிகவும் உயர்ந்திருக்கிறது. பல விதங்களிலும் வலிமை படைத்தவர்களாக ஆகிவிட்டனர் யாதவர்கள். குதிரைகளும், பசுக்களும், காளைகளும் கூடப் பலமடங்கு பெருகிவிட்டன. அவர்கள் கடல் பயணத்திலும், கடல் வணிகத்திலும் கூடச் சிறந்து விளங்குகின்றனர். அவர்களின் கப்பல் துவாரகையின் துறைமுகத்திலிருந்து கிளம்பி வெகு தூரக்க் கடல்களில் எல்லாம் சஞ்சாரம் செய்து பல நாடுகளுக்குச் சென்று வணிகம் செய்து அங்கிருந்து பெருமளவு செல்வத்தைக் கொண்டு சேர்க்கின்றனர்.”

“ஓஹோ, ஆசாரியரே, அதனால் தான் யாதவர்கள் அவனை ஓர் உயிருள்ள கடவுள் என்கின்றனரா?”
“யாதவர்களுக்கு அவன் ஓர் உந்துசக்தியாக விளங்குகின்றான். அவர்கள் அவனை தர்மத்தின் வடிவமாய்க் கருதுகின்றனர். சத்திய ஜோதியாக நினைக்கின்றனர். முன்னைப் போல் முரடர்களாகவும், பொறுப்பற்றவர்களாகவும் யாதவர்களைக் காண முடியாது. கிருஷ்ணனின் தலைமையின் கீழ் அவர்கள் நடவடிக்கை எல்லாம் மாறிவிட்டது. ஒழுக்கமும், ஒற்றுமையும் நிரம்பியவர்களாகி விட்டனர். அதனால் தான் ஷால்வனைத் தோற்கடித்து ஜராசந்தனின் கூட்டணியை வெற்றிகரமாக முறியடித்தனர்.”

“அத்துடன் இல்லை துருபதா! கிருஷ்ண வாசுதேவன் மிகவும் அபாயமானவனும் கூட.” குறும்புச் சிரிப்பு மிளிர ஆசாரியர் தொடர்ந்தார். அவனைச் சந்திப்பது என்பது அவனை நாம் முழுமனதோடு அன்பு செய்யவேண்டியே சந்திக்க முடியும். நம் அன்பானது அவனிடம் நாம் எவ்வகையில் காட்டவேண்டும் எனில் நம்மை நாம் மொத்தமாய் அவனிடம் ஒப்படைத்துவிடவேண்டும். அவனிடம் சரணடையவேண்டும். நீயே கதி என நினைக்கவேண்டும். துருபதா, அவன் என் மாணவன் தான் இல்லை எனச் சொல்லவில்லை. ஆனால் ……ஆனால் கடவுள் எப்போதேனும் மானுட ரூபம் எடுத்தாரானால், அல்லது எடுத்திருந்தாரானால்….. அது வாசுதேவ கிருஷ்ணன் ஒருவனே!

“அவன் கடவுள் தான் துருபதா!”

Sunday, January 8, 2012

யாருக்கு மாப்பிள்ளை யாரோ! அவர் எங்கே பிறந்திருக்கிறாரோ!

“ஏன் கூடாது? ஆசாரியரே, கிருஷ்ண வாசுதேவனைக் குறித்துப் பல அதிசயமான செய்திகள் கூறப்படுகின்றன. அவன் ஜராசந்தனை முறியடித்துக் கரவீரபுரத்தின் வாசுதேவன் என்றழைக்கப்பட்டவனைக் கொன்று, காலயவனன் என்னும் கொடியதொரு அரக்கனையும் கொன்றிருக்கிறான். கொடிய கடுமையான வெப்பம் தரக்கூடிய பாலைவனங்களைக் கடந்தும், அடர்ந்த காடுகளைக் கடந்தும் எப்படியோ யாதவர்களை மேலைக்கடலோரத்திற்கு அழைத்து வந்து அங்கே ஒரு ராஜ்யத்தை ஸ்தாபித்துக்கொடுத்திருக்கிறான். சமீபத்தில் ஷால்வனைக் கூடத் தோற்கடித்திருப்பதாய்ச் சொல்கின்றனர். அதோடு அவன் ரதத்தை வேகமாய்ச் செலுத்தியவண்ணம் வில் வித்தை செய்வதில் வல்லவன் என்ற பெயரும் பெற்றிருக்கிறான். இந்த ஆர்யவர்த்தம் முழுதும் அவனுடைய வீரத்தைப் போற்றி மகிழ்கிறது.”

“துருபதா, துருபதா, அவன் என் சீடன். என் மகன். அவனைப் பற்றி நீ எனக்குச் சொல்லவேண்டியதில்லை அப்பனே! “ சாந்தீபனியின் குரலில் பெருமிதம் தென்பட்டது. “அவன் கைகளில் வில்லும், அம்பும் அவன் நினைப்பதைச் செய்யும் வல்லமை கொண்டிருக்கின்றது. வேகமாய் ஓடும் ரதத்திலிருந்து குறியை நோக்கி அம்பைச் செலுத்துவது எவ்வளவு கடினம் என உனக்குப் புரியும். ரதத்திலும் தன்னைச் சமப் படுத்தி நின்றவண்ணம் வேகமாயும், சரியான நேரத்திலும் செல்லுமாறு அம்பைச் செலுத்துவது, அதுவும் வேகமாய் ஓடும் குதிரைகளின் வேகத்துக்கு ஏற்பச் செலுத்துவது என்பது; கிருஷ்ண வாசுதேவனால் மட்டுமே இயலும். குதிரைகளும் அவனுக்குக் கட்டுப்படும். இவை எல்லாம் அந்த மஹாதேவரின் அருளாலேயே கிருஷ்ண வாசுதேவனுக்குச் சாத்தியமாகிறது என்பதில் சந்தேகமே இல்லை.”

“ஆசாரியரே, வில்லில் இருந்து அம்பைப் பிரயோகம் செய்வது மட்டுமின்றிச் சக்கரத்தாலும் எதிராளியைத் தாக்கிப் பின்னர் சக்கரத்தைத் திரும்பவும் பெற்றுவிடுவானாமே? அதுவும் ஓடும் ரதத்தில் இருந்து; அவன் எதிரியும் முன்னால் ஓடும் ரதத்தில் தப்பிக்கும் சமயம் அந்த வேகத்துக்கு ஈடு கொடுத்து சக்கரத்தைப் பிரயோகம் செய்வானாமே?” மிதமிஞ்சிய ஆர்வமும், கண்ணனைக் காணும் ஆசையும் தொனித்தது துருபதன் குரலில். அதோடு இப்படி ஆர்வத்தைக் காட்டிக்கொள்வதன் மூலம் தன் கடுமையைக் கொஞ்சம் குறைத்துக்காட்டிக்கொள்ளவும் எண்ணினான்.

“உண்மை துருபதா, நீ சொல்வது அனைத்தும் உண்மை.” என்றார் சாந்தீபனி.

“ஆஹா, இதைவிட வேறே என்ன வேண்டும் எனக்கு? ஆசாரியரே, அவனைப் பார்த்து என் கிருஷ்ணாவை மணமுடிக்கத் தயார் செய்யுங்கள். உங்களைக் கெஞ்சிக் கேட்டுக்கொள்கிறேன். அவன் உங்கள் மாணவன்; உங்களுக்கு மிக அருமையானவன். உங்கள் பேச்சைக் கேட்பான்.”

“கிருஷ்ணனைக் குறித்து நான் நன்கறிவேன். கிருஷ்ணன் அவ்வளவு எளிதில் ஒரு பெண்ணை மணந்துவிடமாட்டான். அந்தப் பெண் அவனுக்குப் பிடித்தமானவளாக இருந்தால் மட்டும் போதாது; அவன் மனதில் அவள் இடம்பெறவேண்டும். அவன் உள்ளத்தை, அவனை அவள் தன் நடத்தைகளால் ஜெயிக்கவேண்டும். கிருஷ்ணனை வென்று அவனை அடைவது அவ்வளவு எளிதல்ல. விதர்ப்ப இளவரசி ருக்மிணியும், கரவீரபுரத்தின் இளவரசி ஷாயிபாவும் பலவிதமான சோதனைகளைக் கடந்தே கிருஷ்ணனை மணாளனாக அடைய முடிந்தது. “

“ஆசாரியரே, என் மகள்; அவள் என் மகள் என்பதற்காக நான் பெருமையாகப் பேசவில்லை. உண்மையிலேயே மிகவும் அருமையான ஒரு பெண். கிருஷ்ண வாசுதேவனை எப்படி வேண்டுமானாலும் பரிசோதிக்கச் சொல்லுங்கள். அனைத்திலும் அவள் வெல்வாள்.” துருபதன் குரலில் பெருமை தொனித்தது. “உன்னைப் பற்றியோ, உன் மகளைக் குறித்தோ நான் அறியாதவன் அல்ல, துருபதா! அவள் வீரமான பெண்மணி. இந்த ஆர்ய்வர்த்தத்திலேயே மிக உயர்ந்ததொரு க்ஷத்ரிய அரசகுமாரனை அவள் மணப்பாள்.” என்றார் சாந்தீபனி. “ஆசாரியரே, அவள் கிருஷ்ணனுக்கு ஏற்றதொரு மனைவியாக நிச்சயம் இருப்பாள். நான் உறுதியாகச் சொல்கிறேன்.” என்றான் துருபதன்.

Friday, January 6, 2012

செங்கண்மால் தான் கொண்டு போவானோ???????????

துருபதன் வாயே திறக்காமல் எங்கோ கவனமாக இருந்தது போல் காணப்பட்டவன் சட்டென்று திரும்பி ஆசாரியரிடம், “ஆசாரியரே, என்னுடைய சபதத்தை எப்பாடுபட்டேனும் நான் முடிக்கப் போகிறேன். துரோணரின் சீடர்களை விடச் சிறந்த ஒருவனுக்கே என் மகளை மணமுடிக்கப் போகிறேன். என் அருமை மகள் கிருஷ்ணாவும் என் சபதத்தை நான் நிறைவேற்றத் துணையாகவே இருப்பாள். துரோணரை எவ்வகையிலேனும் அழிக்கும் ஒருவனையே அவள் மணமுடிப்பாள். இது சத்தியம்!” என்று தீர்மானமாகச் சொன்னான். சாந்தீபனி கொஞ்சம் ஆச்சரியம், கொஞ்சம் யோசனையோடு துருபதனின் இந்த ஆக்ரோஷ சுபாவத்தைப் பார்த்துத் தமக்குள் விரைவில் துருபதனின் இந்த சபதம் பழிமுடிக்கப்படாவில்லை எனில் மேலே என்ன ஆகுமோ எனக் கவலை கொண்டார். இது எல்லாம் கடைசியில் எதில் போய் முடியுமோ என யோசித்து வருந்தினார். “துருபதா, நீ உன் மகளை இப்படிச் சொல்லிச் சொல்லி வளர்த்து வந்தது மாபெரும் தவறு. அவளுடைய மண வாழ்க்கை முழுதும் கசப்புகளாலும், வேதனைகளாலும் நிரம்பியதாய் ஆகிவிடும். உன்னை நீயே மாற்றிக்கொள்வாய்.”

“இல்லை குருவே! என் மகள் மிக மிகச் சிறந்ததொரு பெண்மணி. திடமான மனம் படைத்தவள். திடமான முடிவுகளையும் தானே எடுப்பதில் வல்லவள். மஹா தைரியசாலி. இப்படி ஒரு அருமையான மகள் எனக்குக்கிடைத்ததில் நான் பெருமைப் படுகிறேன். அவள் அடிக்கடி என்னிடம் சொல்கிறாள்: தந்தையே , நான் பெண்ணாய்ப் பிறந்துவிட்டேனே! இல்லை எனில் இத்தனை வருடங்களில் துரோணரின் அந்தச் சீடனை அழித்துவிட்டு துரோணரைப் பழிவாங்கி உங்கள் தீராத துக்கத்தைத் துடைத்திருப்பேன்.” என்று சொல்கிறாள். இப்படி ஒரு மகள் யாருக்குக் கிடைப்பாள்?” துருபதனின் முகம் பெருமையால் ஒளிர்ந்தது.

“துருபதா, தற்காலத்தில் வில்லையும், அம்பையும் வைத்துச் சிறப்பாகச் செலுத்தும் வில்லாளிகளைக் காண்பதே அபூர்வமாக உள்ளது.” சாந்தீபனி துருபதனுக்கு நம்பிக்கையூட்டும் விதத்தில் பேச ஆரம்பித்தார். “வில்லாளிகளே மிகவும் குறைந்துவிட்டனர். வில்லையும், அம்பையும் வைத்துக்கொண்டு அஸ்திரப் பிரயோகமும் செய்யத் தெரிந்தால் அவனால் பல அதிசயங்களை நிச்சயமாய் நிகழ்த்த முடியும். ஆனால் எனக்குத் தெரிந்த இளம் வீரர்களில் வாட்போரில் சிறந்தவர்கள், வேல் வைத்துப் பழகியவர்கள், கதை, ஈட்டி போன்றவற்றைப் பிரயோகம் செய்வதில் வல்லவர்கள், எனப் பலர் உள்ளனர். வில்லாளிகள் மிகக் குறைவாகவே உள்ளனர்.”

“உண்மைதான் ஆசாரியரே. வில்வித்தையில் சிறந்தவனே இன்றைய நாட்களில் யுத்தத்தில் ஜெயிக்க முடியும். பாதுகாப்பான தூரத்தில் இருந்து குறி வைத்துத் தாக்க வில்லையும், அம்பையும் பிரயோகம் செய்வதைத் தவிர வேறு சிறந்த வழி எது உள்ளது? அப்படிப்பட்ட வில்லாளியை எவராலும் வெல்லவும் முடியாது.”

“ஆம், துருபதா, அதனால் தான் நான் அர்ஜுனனை எவராலும் வெல்ல முடியாதவன் எனக் கூறுகிறேன். அவனால் கவிந்திருக்கும் இருளிலும், தன் பின்பக்கம் பார்க்காமலேயே கூடவும் குறி வைத்து அம்பால் தாக்க முடியும். அத்தகையதொரு வல்லவன்.” குரு சாந்தீபனியின் குரலில் அவரையும் அறியாமல் பெருமிதம் இழையோடியது.

“ஆசாரியரே, தாங்கள் வில்வித்தையில் சிறந்தவரென நாடு, நகரம் முழுதும் பிரசித்தி அடைந்தவர். உங்கள் மாணவர்களில் சிலர் வில்வித்தையில் சிறந்தவர்கள் என நானும் சிறிது அறிந்திருக்கிறேன்.” துருபதன் நிறுத்தினான்.

“ஓ, அவந்தி நகரத்து இளவரசரகள் விந்தனும், அநுவிந்தனும் சிறந்த வில்லாளிகள்.” சாந்தீபனி கூறினார். துருபதனுக்குக் கொஞ்சம் ஏமாற்றம். தலையை ஆட்டினான். “அவர்களில் எவரும் துரோணரின் சீடனுக்கு அருகில் கூட வரமுடியாது. ஆனால் ஆசாரியரே, ஒரே ஒரு மாணவன் இருக்கிறான். அவனும் உங்கள் மாணவனே. கடவுளரால் ஆசீர்வதிக்கப்பட்டவன் என்ற பெயர் பெற்றவன். ஆசாரியரே, நான் யாரைச் சொல்கிறேன், தெரிகிறதா? நான் சொல்லும் அந்த மிகச் சிறந்த வில்லாளி நான்கு குதிரைகள் பூட்டிய வேகமாய் ஓடும் ரதத்தில் இருந்து அந்தக் குதிரைகளைச் சமாளித்துக்கொண்டே அதே சமயம் எங்கோ தூரத்தில் இருக்கும் குறியைத் தாக்கி வீழ்த்தும் வல்லமை உடையவன். எனக்குத் தெரிந்து அர்ஜுனனால் கூட இதைச் செய்ய முடிந்ததில்லை என எண்ணுகிறேன்.”

உள்ளார்ந்த மகிழ்ச்சியுடனும், ஆர்வத்துடனும் சிரித்த சாந்தீபனி, “கிருஷ்ண வாசுதேவன். துருபதா, நீ அவனைத் தானே சொல்கிறாய்? என் மாணாக்கர்களிலேயே அவன் ஒருவனே என்னையும் மிஞ்சிய வில்லாளி. வில், அம்பில் மட்டுமில்லாமல் அனைத்து ஆயுதங்களையும் சரியான சமயத்தில், சரியான முறையில் பிரயோகம் செய்வதில் வல்லவன். உண்மைதான் துருபதா, அவனுக்கு மிஞ்சிய வில்லாளி இந்த ஆர்ய வர்த்தத்திலேயே இல்லைதான். ஆனால் நீ அவனைக் கணக்கில் எடுப்பதில் பிரயோசனமே இல்லை.”

Wednesday, January 4, 2012

திரெளபதிக்குத் தக்க மணாளன் யார்? துருபதனின் கவலை!

பலவிதங்களிலும் இப்போது சங்கடமான நிலைமை அவனுக்கு ஏற்பட்டிருந்தது. கிழக்கே மெல்லமெல்லத் தன் கரங்களை நீட்டிக்கொண்டிருந்த ஜராசந்தன். குருவம்சத்து அரச குடும்பத்தினருக்கு மிகவும் நெருங்கிய ஆசாரியராகத் தன் வலிமையை மேலும் மேலும் அதிகப்படுத்திக்கொண்டிருந்த துரோணரும், அவரின் மகன் அஸ்வத்தாமா, கூடவே எல்லாவகையிலும் அவர்களுக்குத் துணை போன கிருபர், இவர்கள் அனைவரையும் கண்ணை மூடிக்கொண்டு ஆதரித்த பீஷ்ம பிதாமகர், துரோணரின் மாணவர்களிடையே அவருக்கிருந்த செல்வாக்கு எல்லாவற்றையும் நினைத்துக் கலங்கினான். அவனுக்கும் வயதாகிக் கொண்டிருந்தது. துருபதனின் மகன்களோ அவர்களுக்கு என்னதான் திறமை இருந்தாலும் அர்ஜுனனைப் போலவோ, கர்ணனைப் போலவோ, பீமனைப் போலவோ சிறப்பான தேர்ச்சியைப்பெறவில்லை. ஆஹா, அந்தப் பாண்டவர்கள் எவ்வளவு திறமை வாய்ந்தவர்களாகிவிட்டார்கள். அவர்களில் மூத்தவனான யுதிஷ்டிரனை இப்போது யுவராஜாவாக்கி விட்டார்களாமே! அந்த அர்ஜுனன், துரோணரின் பேச்சைக் கேட்டு என்னைக் கட்டி இழுத்துச் சென்றவன், இந்தப் பாரத பூமியிலேயே நிகரற்ற வில்லாளியாமே! ஹூம் அவனுக்கா என் பெண்ணைக் கொடுப்பது! துருபதன் மனம் குழம்பியது. அப்போதுதான் காவலன் ஒருவன் அங்கே வந்து குரு சாந்தீபனி துருபதனைக் காண வந்திருப்பதாய்க் கூறினான்.


அந்நாட்களில் நடமாடும் பல்கலைக்கழகமாய்த் திகழ்ந்த குரு சாந்தீபனி எல்லா அரசர்களின் தலைநகரங்களிலும் தன்னுடைய முக்கியமான சீடன் ஒருவனை முதன்மை ஆசாரியராகப் போட்டு குருகுலம் நடத்தி வந்தார். வருடம் முழுவதும் அவர் எல்லா நாடுகளுக்கும் சுற்றி வந்து தேவைப்பட்ட நாடுகளில் தேவைப்படும் அரசகுமாரர்களுக்கும், வீரர்களுக்கும் தன்னுடைய கலைகளைக் கற்பித்து வந்தார். அவந்தி நாட்டரசனும் அவனின் இளவல்களான விந்தனும், அனுவிந்தனும் சாந்தீபனி ஆசாரியரிடம் மிகவும் பக்தி கொண்டிருந்ததால் வருடத்தின் முக்கியமான மழைநாட்களில் வேறெங்கும் போகாமல் அவந்தியிலேயே தங்கி வந்து தன் தலைமை குருகுலத்தின் மாணாக்கர்களுக்குப் பயிற்சி அளிப்பார். இப்போது இங்கே துருபத நாட்டிற்கும் அவ்வாறே விஜயம் செய்திருந்தார். வந்தவுடன் மன்னனைக் கண்டு ஆசி வழங்கும் முறைப்படி அன்றும் துருபதனைக் காண வந்தார். அந்நாளைய ஆயுதப் பயிற்சியின் நவீனத் தொழில்நுட்பங்களையும், மாறுதல்களையும் அப்போதைக்கப்போதே தெரிந்து கொண்டு தன் மாணாக்கர்களுக்கு உடனடியாகக் கற்பித்து வந்தார் சாந்தீபனி.

குறைந்த பட்சம் பதினைந்து நாட்களாவது தங்கிப் பாஞ்சாலத்தின் மகா வீரர்களுக்கும் படைத்தலைவர்களுக்கும் தனக்குத் தெரிந்த பல நுணுக்கங்களையும் கற்றுக்கொடுப்பார் சாந்தீபனி. தான் கிருஷ்ண வாசுதேவனைக் குறித்து நினைக்கவும், உடனே அங்கே சாந்தீபனி வருவது தெரிந்ததும் இது ஏதோ நன்மைக்கே எனத் தோன்றியது துருபதனுக்கு. குருவை முறைப்படி மரியாதைகளோடு முன் சென்று எதிர்கொண்டழைத்து வரவேற்று நமஸ்கரித்து ஆசிகளைப் பெற்றபின்னர் தன் மனதில் உள்ளனவற்றை எல்லாம் அவரிடம் கொட்டினான் துருபதன். தன் மகளின் சுயம்வரம் குறித்தும் எவராலும் வெல்லமுடியாததொரு வில்லாளியையே அவள் மணக்கவேண்டும் என்னும் விருப்பத்தையும் தெரிவித்த அவன் முகம் அப்போது அதன் உள் நோக்கத்தை உணர்ந்து மறைக்க இயலாத அவன் ஆத்திரத்தை அப்படியே வெளிக்காட்டியது. சாந்தீபனியும் நிலைமையைப் புரிந்து கொண்டவரே. அவர் கூறினார்:” துருபதா, உன் மனம் எனக்குப் புரிகிறது. உன் உணர்வுகளையும் புரிந்து கொண்டேன். ஆனால் இப்போதைய இளம் வில்லாளிகளில் பாண்டவர்களில் மூன்றாமவனான அர்ஜுனன் ஒருவனே ஆர்யவர்த்தத்திலேயே சிறந்த வில்லாளி எனப் பெயர் வாங்கியுள்ளான். அவன் வில் வித்தையைப் பற்றி அனைவரும் அப்படிச் சிலாகித்துப் பேசுகின்றனர். கண்ணை மூடிக்கொண்டோ, அல்லது பின் பக்கமாகவோ குறி பார்த்துத் தாக்கும்வல்லை மட்டுமில்லாமல், சப்தத்தினாலும் குறியைத் தாக்கும் வல்லமை கொண்டவனாக இருக்கிறானாம். அவன் கடவுளரால் ஆசீர்வதிக்கப்பட்டவன் என அனைவரும் கூறுகின்றனர்.”


துருபதனின் முகம் போன போக்கைப் பார்த்த சாந்தீபனி வேறு சில நாட்டின் அரசர்களின் பெயரையும், அரசகுமாரர்கள் பெயரையும் துருபதனுக்குப் பரிந்துரைத்தார். துருபதன் எவரையும் அங்கீகரிக்கவில்லை. “ஆசாரியரே, துரோணரின் சீடனையும் முறியடிக்கக்கூடிய ஒருவனை எனக்காகக் கண்டுபிடியுங்கள்.” என வேண்டினான். இளநகை புரிந்த சாந்தீபனி, “அர்ஜுனனுக்கு அடுத்தபடி எனில் அவனுக்குச் சரிசமமாகவே கருதப்படும் தேரோட்டி ராதேயனின் மகன் கர்ணன் ஒருவனே ஆவான். அவன் துரியோதனின் அத்யந்த நண்பன் மட்டுமல்லாமல் அவனுக்குக் கீழ்ப்படிந்தவனும் ஆவான். துரியோதனன் தயவால் அங்கநாட்டரசன் ஆனான். இவனும் துரோணரின் சீடனே ஆனாலும் பிரம்மாஸ்திரத்தை அவன் அர்ஜுனன் பேரில் பிரயோகிக்க வேண்டும் என்பதால் கற்க ஆசை கொண்டதால் துரோணர் அதை அவனுக்குக் கற்பிக்கவில்லை. பின்னர் பரசுராமரின் சீடனாக ஆகிக் கற்று வந்திருக்கிறான். ஆனால் அங்கேயும் குருவினால் சபிக்கப்பட்டான் என்று கேள்விப் பட்டேன். அவன் எந்தவிதத்திலும் உன் அருமை மகள் கிருஷ்ணாவுக்குப் பொருத்தமானவனே அல்ல.”

Sunday, January 1, 2012

நற்பொருளைக் கொடுத்துச்சிவந்த கரங்களா!

அனைவரும் கர்ணன் தான, தருமம் செய்வதில் சிறந்தவன் என்றும் நினைக்கலாம். கர்ணன் தானமும், தருமமும் செய்தான் தான் இல்லை எனவில்லை. ஆனால் அதுவும் அவன் சுயநலத்திற்காகவே செய்தான். பார்க்கப் போனால் அவனுக்கு நாடு வந்ததே துரியோதனனால். துரியோதனன் கர்ணனுக்கு என ஒரு அந்தஸ்தை உண்டாக்கிக் கொடுக்கவேண்டும் என்ற எண்ணத்திலேயே அங்கநாட்டிற்கு அரசனாக்கினான். ஆகவே கர்ணனுக்கு நாடே தானமாகக் கிடைத்தது. சுயமாக எதுவும் கர்ணனுக்குக் கிடைக்கவில்லை. அதோடு அவன் பாண்டவர்களை வெல்லவென்றே தருமமும், தானமும் செய்வதை ஒரு வேள்வி போல் செய்து வந்தான். ஆகவே இதில் சுயநலமே மிகுந்திருந்தது. என்றாலும் நாளாவட்டத்தில் தானம் செய்வது அவன் அன்றாட வாழ்க்கையின் நடைமுறையாகவும் போனது. இந்தக் கர்ணனுக்கும் இப்போது யுதிஷ்டிரன் யுவராஜாவாகப் பட்டம் சூட்டப்பட்டதும், ஹஸ்தினாபுரத்தின் மக்களுக்கும், அரசமாளிகையினருக்கும் பாண்டவர்கள் மிகவும் பிரியமானவர்களாக இருப்பதும் பிடிக்கவில்லை. எப்பாடுபட்டேனும் இவர்களை அகற்றவேண்டும். துரியோதனனுடன் ஆன தன்னுடைய நட்பை இதற்குப் பயன்படுத்த ஆரம்பித்தான் கர்ணன். அவனுக்குத் துணையாக காந்தார நாட்டு சகுனி மாமா. ஆனால் இவர் ஆரம்பத்தில் இதை எல்லாம் எதிர்த்தவரே! அதைப் பின்னர் பார்ப்போமா! இப்போது அடுத்துப் பாஞ்சால நாட்டு துருபதனின் பாத்திரத்தையும், இந்தக் கதையின் ஆரம்பத்தில் பாஞ்சால நாட்டின் நிலைமையையும் ஆராய்வோம்.

இளவயதில் துருபதனுடன் படித்த துரோணர் கிருபரின் தங்கையை மணந்து இல்வாழ்க்கை நடத்தியதில் ஏற்பட்ட வறுமை காரணமாக துருபதனிடம் செல்வத்தை யாசிக்கச் சென்றபோது அவன் மூலம் ஏற்பட்ட அவமானத்தை மறக்கவே இல்லை. அதற்குப் பழிவாங்கத் தக்க சமயத்தை எதிர்பார்த்துக் காத்திருந்தார். அரசகுலத்தைச் சேர்ந்த தன்னுடைய மாணாக்கர்கள் தக்க பருவம் அடையவும், அவர்கள் வித்தையில் பூரணமாகத் தேர்ச்சி பெறவும் காத்திருந்தார். அவர்கள் உரிய தேர்ச்சி பெற்றதும் தங்கள் திறமையை வெளிப்பட உலகுக்கும் காட்டினார்கள். அதன் பின்னர் கெளரவர்களை முதலில் அனுப்பி துருபதனை வென்றுவரச் சொல்கிறார் துரோணர். ஆனால் அவர்களால் இயலவில்லை. அதன் பின்னர் வில் வித்தையில் சிறந்த அர்ஜுனன் செல்ல அவனும் போரில் வென்றதோடு அல்லாமல் துருபதனைக் கட்டி இழுத்து வந்து துரோணரின் காலடிகளில் விழச் செய்கிறான். தன் காலடியில் வந்து விழுந்த துருபதனைக் கண்டு எள்ளி நகையாடிய துரோணர் இப்போது பாஞ்சால நாடு தன் வசம் இருப்பதாகவும், தான் துருபதனுக்கு அந்த நாட்டில் சரிபாதியைத் தருவதாகவும் கூறினார். அவமானம் அடைந்த துருபதன் துரோணர் கொடுத்ததை வாங்கிக் கொண்டு தன் நாடு திரும்பினான்.


வேறு வழியே இல்லாமல் துரோணரால் வெகுமதி என்ற பெயரில் அளிக்கப்பட்ட தன் சொந்த நாட்டைப் பெற்றுக்கொண்டு திரும்பிய துருபதன் இந்த அவமானத்தை மறக்க முடியாமல் தவித்தான். தன்னுடைய மொத்த வாழ்நாளையும் செலவழித்தாலும் இத்தகையதொரு மீளா அவமானத்திலிருந்து தான் தப்ப இயலாதே என மனம் உருகினான். இதற்கு ஒரே வழி துரோணரைப் பழிவாங்குவதே என முடிவு செய்தான். துரோணரையும், அவர் அபிமான சீடனான அர்ஜுனனையும் தன்னால் மறக்க இயலாது; அவர்களால் தான் அடைந்த அவமானத்தையும் பொறுக்க இயலாது.

தன்னுடைய துவேஷத்தையும், ஆங்காரத்தையும் அப்படியே தன்னுடைய இரு மகன்களுக்கும் (த்ருஷ்டத்யும்னன், சத்யஜித்) , ஒரே மகளான கிருஷ்ணாவுக்கும் (திரெளபதி) இளவயதில் இருந்து சொல்லிச் சொல்லி அவர்களை துரோணருக்கு எதிராக மாற்றினான் துருபதன். தங்கள் தகப்பன் அடைந்த அவமானத்தால் மனம் நொந்த இரு சகோதரர்களும், மகளான திரெளபதியும் தங்கள் தகப்பனுக்கு நேர்ந்த அவமானத்துக்குப் பழிவாங்குவதைத் தங்கள் வாழ்நாளின் முக்கியக் குறிக்கோளாய்க்கொண்டனர். அவர்கள் தங்கள் வாழ்க்கையையே தங்கள் தகப்பனுக்கு நேர்ந்த அவமானத்தைத் துடைக்கவே அர்ப்பணித்துக்கொள்வதாய் முடிவும் செய்தனர். என்னதான் பகைவராக இருந்தாலும் துரோணரை விடவும் சிறந்த ஆசாரியர் இல்லை என்ற காரணத்தால் த்ருஷ்டத்யும்னன் அவரிடமும் சிலநாட்கள் கல்வி கற்றுத் தேர்ந்தான். துரோணரும் துருபதனின் நோக்கத்தையும், த்ருஷ்டத்யும்னனின் நோக்கத்தையும் அறிந்திருந்தும் எந்தவிதமான வேறுபாட்டையும் காட்டாமல் அவனுக்குத் தனக்குத் தெரிந்த வித்தைகளையெல்லாம் கற்பித்தார்.

இவ்வாறு இரு சகோதரர்களும் தக்க சந்தர்ப்பத்துக்குக் காத்திருக்க அவர்களின் சகோதரியான கிருஷ்ணா, என்று அழைக்கப்பட்ட கருநிறத்து அழகியான திரெளபதியும் வாலிபப் பருவத்தை அடைந்து தக்க மணாளனுக்குக் காத்திருந்தாள். அந்நாட்களில் ஆர்யவர்த்தத்தில் குறிப்பிட்டுப் பேசும்படியான அழகும், தீரமும், மன உறுதியும் படைத்தவளாக வர்ணிக்கப்பட்ட கிருஷ்ணா(தன் நிறத்திற்காகக் கிருஷ்ணா என அழைக்கப்பட்டாள்) ஆர்யவர்த்தத்திலேயே சிறந்த வில்வித்தை வீரனையே, அதிலும் வேகமாய் ஓடும் ரதத்தில் இருந்த வண்ணமே வில்லில் அம்பை ஏற்றிக் குறிபார்த்து எய்து இலக்கைத் தாக்கும் அளவுக்குத் திறமை உள்ள வில்லாளியையே மணக்கப் போவதாய்ப் பேச்சு. அரசர்களின் மஹாசபைகளிலும், ரிஷிகளின் ஆசிரமங்களிலும், குருகுலங்களில் ஆயுதப் பயிற்சியும், யுத்தப் பயிற்சியும் மேற்கொள்ளும் அரசகுமாரர்களிடையேயும் இதுதான் பேச்சு. திரெளபதியின் இந்த அறிவிப்பினால் எவருக்கும் அவளை மணக்கத் துணிவில்லை. நாட்கள் கடந்து வருடங்களும் கடந்தன. திரெளபதியும் இப்போது பத்தொன்பது வயதை முடித்து இருபதாவது வயதில் இருக்கிறாள். இனியும் நாட்களைக் கடத்தக்கூடாது. துருபதனுக்கு ஒருபக்கம் கவலை; கண்ணை மூடிக்கொண்டு எவனோ ஒரு அரசகுமாரனுக்கும் தன் அருமை மகளை, தனக்காகப்பழி முடிக்கக் காத்திருக்கும் வீராங்கனையைக் கொடுக்க அவன் தயாரில்லை. என்ன செய்யலாம்? அவளுக்குத் தக்க மணாளனுக்கே அவளை மணமுடிக்கவேண்டும்.

இந்த ஆர்யவர்த்தத்திலேயே சிறந்த வில்வீரன் யார்? அப்போது இருவரைக் குறித்தே அனைவரும் கூறி வந்தனர். ஒருவன் கிருஷ்ண வாசுதேவன். சிறந்த வில்லாளியும், ரதசாரதியும் கூட. ஓடும் ரதத்தில் இருந்து தொலைதூரத்துக் குறியைத் தாக்கும் வல்லமை படைத்தவன். மற்றவன் அர்ஜுனன். அவனுக்குச் சமமான வீரன். அவனைவிடச் சிறந்தவனாகவும் விளங்குவான். ஆனால்??? ஆனால்?? அவன் செய்த காரியம்! சேச்சே! ஹும் ஹூம், அந்த தேரோட்டி சூதனின் மகன் கர்ணனும் சிறந்த வில்லாளியாமே? அவனும் இப்போது அங்கநாட்டின் அரசன் தான். ஆனாலும் கிருஷ்ணாவுக்கு அவன் தகுந்தவன் அல்ல.

கிருஷ்ண வாசுதேவன்?? ஆம்... அதுதான் சரி... தூரத்தில் கட்டியக்காரர்களின் குரல்.

"ஆச்சாரிய சாந்தீபனி அவர்கள் வருகிறார்கள்! பராக்! பராக்! பராக்!!!!"""