Wednesday, December 17, 2014

பீஷ்மரின் யோசனை!

“தாயே, நாம் இவற்றிலிருந்து தப்ப முடியாது.  தப்பிச் செல்லும் வழியையும் பார்க்கக் கூடாது.  இந்த நாட்டையும் இதன் அரசாட்சியையும் காக்கவேண்டியது நம் பொறுப்பு.  நம் தர்மம். அதிலிருந்து நாம் எக்காரணத்தைக் கொண்டும் விலகக் கூடாது. கடைசி வரைக்கும் நாம் நம் முயற்சிகளைத் தொடரவேண்டும்.  நம்மால் செய்ய முடிந்ததைச் செய்து கொண்டே இருக்க வேண்டும். நம் உயிரைவிட மேலான இந்த நாட்டுக்கு நம் கடமையைச் செய்தாக வேண்டும். ஒருவேளை துரியோதனன், கர்ணன், அஸ்வத்தாமன், துஷ்சாசனன் ஆகியோரின் உதவியோடு இந்த ஹஸ்தினாபுரத்தை ஆள ஆரம்பித்தான் எனில்! நம் கட்டுப்பாடுகளையும் மீறி அப்படி நடந்ததெனில்! இங்கே எதுவுமே புனிதமாக இருக்காது.  நல்லவை எதுவும் நடைபெறாது.கடவுளருக்கே மதிப்பில்லாமல் போய்விடும்.  பெண்கள் அவமதிக்கப்படுவார்கள். பெரியோரைக் கேவலமாக நடத்துவார்கள்.  கால்நடைகளைக் கூடத் துன்புறுத்துவார்கள். முக்கியமாக நாம் கடவுளென மதிக்கும் ஆநிரைச் செல்வங்களைத் துன்புறுத்துவார்கள். எந்த ரிஷியும், முனிவரும் இங்கே ஆசிரமங்கள் அமைத்துப் பாடசாலைகள் அமைத்து மாணாக்கர்களுக்குப் போதிக்க முன்வர மாட்டார்கள்.  வேதங்கள் கற்ற வேதியர்கள் இங்கே வரவே அஞ்சுவார்கள். தர்மம் சுக்குச் சுக்காக நொறுங்கிவிடும்.:

“ஆனால் காங்கேயா! ஆனால் இது துரியோதனன் ஆட்சிக்கு வந்தால் தானே நடக்கும்? நாம் இங்கிருந்தாலும் இல்லை என்றாலும் துரியோதனன் ஆட்சிக்கு வந்தான் என்றால் மட்டுமே இவை நடக்கும் அல்லவா? அவனை வரவிடாமல் செய்து விட்டால்?” பீஷ்மரின் முகத்தையே ஆவலுடன் பார்த்தாள் சத்யவதி.
“ஆம், தாயே, பெரியோரை நிந்திப்பவர்கள் இருக்கும் குடும்பங்களில், குடும்பமே நசித்துப் போகிறது.  அது போல் பெரியோரை நிந்திக்கும் இளைஞர்கள் ஆட்சியாளர்கள் ஆனால் அந்த ராஜ்யத்தின் கதி! நினைக்கவே முடியவில்லை. ஆட்சியாளர்கள் சரியில்லை எனில் ஆட்சியும் நல்லாட்சியாக இருக்காது.  தர்மத்துக்கு அங்கே வேலையில்லை.  தர்மம் விலகிவிடும். அதர்மம் கூத்தாடும். ஆகையால் தாயே, நாம் நம்மால் முடிந்ததைச் செய்துவிடுவோம். அது வெற்றியடைவதும், தோல்வியடைவதும், கடவுளின் கைகளில் இருக்கிறது.”

“காங்கேயா, என்ன நடந்தாலும், எது நடந்தாலும் நீ பாண்டவர்களுக்குக் கொடுத்த வாக்கினை நிறைவேற்றியே ஆகவேண்டும். அது நம்முடைய தர்மம்.”

யோசனையுடன் நிமிர்ந்து பார்த்தார் பீஷ்மர்.  “யுதிஷ்டிரன் மூத்தவன் தாயே!  அவன் இருக்கும்போது அவனுடைய உரிமைகளை நாம் இன்னொருவருக்கு எவ்வகையில் தூக்கிக் கொடுக்க முடியும்? “திட்டவட்டமாகச் சொன்ன பீஷ்மர் மேலும் தொடர்ந்தார்:” தாயே, ஏற்கெனவே துரியோதனனின் விருப்பத்துக்கு இணங்கி பாண்டவர்களை நான் வாரணாவதத்துக்கு நாடு கடத்தியதே என்னை இன்னும் முள்ளாய்க் குத்துகிறது.  அந்தக் குற்ற உணர்விலிருந்தே நான் இன்னமும் மீளவில்லை. நான் பலஹீனன் ஆகிவிட்டேன் தாயே! அப்படிச் சொன்னதன் மூலம் மாபெரும் பாவம் புரிந்திருக்கிறேன்.  அந்தப் பாவத்திற்கு நான் இப்போது பரிகாரம் தேடி ஆகவேண்டும்.”

“ஹூம், க்ருஷ்ண த்வைபாயனன் மட்டும் இப்போது இங்கிருந்தால்!  ஆஹா, அவன் இங்கே இருக்கமாட்டானா என நான் மிகவும் எதிர்பார்க்கிறேன். இவ்வளவு பிரச்னைகள் நிறைந்த இந்தச் சூழ்நிலையில் அவனால் தக்கதொரு யோசனை கூறமுடியும் என நினைக்கிறேன்.”  சத்யவதிக்குத் தன் மகன் கிருஷ்ணத்வைபாயனர் என்னும் வியாசரின் நினைவு வந்தது.

“ஆம், தாயே, தாங்கள் சொல்வது சரியே!  ஆனால் ஒரு விஷயத்தில் நான் உறுதியாக இருக்கிறேன். யுதிஷ்டிரன் தான் ஹஸ்தினாபுரத்தின் சிம்மாதனத்தில் ஏற வேண்டும். அதுதான் நான் செய்த பாவத்துக்குச் சரியான பரிகாரம்.  ஒருவேளை இதுவே பீஷ்மனின் கடைசிச் செயலாக இருக்கும்!” பீஷ்மர் மீண்டும் யோசனையில் ஆழ்ந்தார்.

Monday, December 15, 2014

சத்யவதியின் கலக்கம்!

“சுவர்ணப்ரஸ்தத்தையும், பானிப்ரஸ்தத்தையும் ஆள்வதற்கு துரியோதனனுக்கு எவ்வகையில் ஆக்ஷேபணை இருக்க முடியும்?”

“தாயே, துரியோதனன் ஹஸ்தினாபுரத்தை விட்டுச் சென்றுவிடுவதாகச் சொல்கிறான்.  அதைக் கேட்ட திருதராஷ்டிரனோ அவன் சென்றுவிட்டால் தான் தற்கொலை செய்து கொள்ளப் போவதாகச் சொல்கிறான். துரியோதனனும் இங்கேயே இருந்தால் தற்கொலை செய்து கொள்வானாம்.”

“கோழைகள்! கோழைகள்! அதிலும் துரியோதனன் மிகவும் கோழை! அவனுடைய ஆசைகள், விருப்பங்கள் அவை நன்மை தரக்கூடியன அல்லவென்றாலும் அவை நிறைவேறாவிட்டால் உடனே தற்கொலை செய்து கொள்வதாக அனைவரையும் பயமுறுத்துவான்.  இதுவே அவன் வழக்கம். அது இருக்கட்டும் மகனே!  நீ துரியோதனனை சமாதானப் படுத்தி இருக்கவேண்டும். யுதிஷ்டிரன் அரசனாவதற்கு துரியோதனனை பக்குவப் படுத்தி இருக்க வேண்டும்.  அவனிடம் நீ இது குறித்துப் பேசி ஒப்புக்கொள்ள வைக்கவில்லையா?”

தன் மகனைப் பார்த்துத் தயையுடன் சிரித்த தாயைப் பார்த்த பீஷ்மர் முகத்தில் வருத்தம் தாண்டவமாடியது. “தாயே, துஷ்சாசனும், விகர்ணனும் சற்று நேரத்திற்கு முன் தான் என்னை வந்து பார்த்தனர். துஷ்சாசனனின் சூழ்ச்சியும் தந்திரமும், கபடமும் தாங்கள் அறியாதது அல்ல.  அவன் என்ன சொல்கிறான் தெரியுமா? யுதிஷ்டிரனை அரசனாக்கினால் அவனும் அவன் சகோதரர்களும் காந்தாரத்துக்குச் சென்று விடுவார்களாம்.”

“ஓஹோ, அப்படியா விஷயம்?  அவ்வளவு தூரத்துக்குப் பேச ஆரம்பித்து விட்டனரா?”

“இன்னும் மோசமாகப் பேசினான். என் வாழ்நாளிலேயே முதல்முறையாக பரதன் பிறந்த குலத்தில் பிறந்த ஒரு வாரிசு தன் மூத்தோரை மதியாமல் எதிர்த்துப் பேசுவதுடன் அவர்கள் கட்டளைகளை ஏற்கவும் மறுக்கிறான்.  இன்றுவரையிலும் இப்படி ஒருவனை நான் பார்த்தது இல்லை. “பீஷ்மர் இதைச் சாதாரணமான குரலில் சொல்ல நினைத்தாலும் அவரால் முடியவில்லை.  அவர் மனவேதனை குரலில் தெரிந்தது.

“அப்படியா சொன்னான்?  அதுவும் உன்னிடமேவா? காங்கேயா!  என்ன இது!”

“ஆம் தாயே, என்னிடமே அப்படித் தான் சொன்னான். அதை நன்றாக உணர்ந்து தான் சொல்லி இருக்கிறான்.  அந்த இடத்திலேயே அவன் மண்டையில் ஒன்று போடலாமா எனக் கோபம் வந்தது. ஆனால் அதனால் என்ன பலன்?  எதுவும் இல்லை. என்னை நானே அடக்கிக் கொண்டேன்.”

“ம்ம்ம்ம், இதைக் குறித்து ஆசாரியர் துரோணர் ஏதேனும் அறிவாரா?”

“தாயே!  அவர் அறியாதது இல்லை.  இதுவும் தெரியும் அவருக்கு.  இன்னமும் அதிகம் தெரிந்திருக்கும். துரியோதனனை அவர் ஆதரிக்கவில்லை எனில் அஸ்வத்தாமா துரோணரை விட்டுச் சென்றுவிடுவதாக அவரிடம் மிரட்டினான் என்று துரோணர் என்னிடம் சொன்னார். அவன் அப்படிச் செய்யக் கூடியவனே.  அதே போல் துரோணரைக் குறித்தும் தாங்கள் அறிவீர்கள். அவருடைய ஒரே மகன் சம்பந்தப்பட்டிருக்கும் எந்த விஷயத்திலும் அவர் பலஹீனம் வெளிப்படும்.  மகனிடம் அவ்வளவு பாசம் அவருக்கு!”

சற்று நேரம் எதுவும் பேசாமல் யோசனையில் ஆழ்ந்த சத்யவதி பின்னர் உள்ளார்ந்த கவனத்துடன் பேச ஆரம்பித்தாள்.  அவள் குரலின் ஆழத்திலிருந்து அவள் இதில் உறுதியாக இருப்பது தெரிந்தது. “காங்கேயா!  இந்த நாட்டுக்கு அரசன் ஆவதற்கு யுதிஷ்டிரனே தகுதி வாய்ந்தவன். அவனே சரியான வாரிசு.  அவனை அரசனாக்குவதே சரியானது.  அவனை ஹஸ்தினாபுரத்தை விட்டுச் செல் என எவரும் கேட்க முடியாது.  அதே சமயம் துரியோதனனின் விபரீத ஆசைகளைக் குறித்தும் நாம் அறிவோம். அவன் எண்ண ஓட்டத்தை நாம் புரிந்தே வைத்திருக்கிறோம். யுதிஷ்டிரன் அரசன் ஆவதற்கோ, பாண்டவர்கள் ஐவரும் இங்கேயே வசிப்பதையோ துரியோதனன் முற்றிலும் விரும்ப மாட்டான்.” அப்போது இருந்த சூழ்நிலையைக் குறித்து விவரித்த சத்யவதி மேலும் யோசனையில் ஆழ்ந்தாள்.

“ஆம், தாயே, ஆம், யுதிஷ்டிரனை மட்டும் நாம் மன்னன் ஆக்கிவிட்டோம் எனில் சகோதரச் சண்டை நிச்சயம்.  பெரியப்பன் மக்களும், சிற்றப்பன் மக்களும் ஒருவருக்கொருவர் அடித்துக்கொள்வார்கள். அதனால் நாட்டில் ஓர் உள்நாட்டு யுத்தமே ஏற்பட்டுவிடும். அதோடு இல்லை தாயே,  திருதராஷ்டிரன் மக்கள் ஹஸ்தினாபுரத்தை விட்டுச் சென்றார்களானால் அவர்களோடு சேர்ந்து நம் ஆசாரியர்களும், படைகளின் தளபதிகளும் ஆன துரோணாசாரியாரும், அவர் மைத்துனர் கிருபாசாரியாரும் கூட அவர்களோடு சென்றுவிடுவார்கள். தன் மக்கள் அனைவரும் சென்றுவிட்டார்களெனில் திருதராஷ்டிரன் மட்டும் இங்கேயே இருப்பானா என்ன? அவனும் சென்று விடுவான். குரு வம்சத்தின் சாம்ராஜ்யமே மெல்ல மெல்லச் சரியத் துவங்கும்.”

நீண்ட பெருமூச்சு விட்டாள் சத்யவதி. “நான் இப்படி எல்லாம் நடக்கும் என்று நினைக்கவே இல்லை மகனே!  என் வாழ்நாளில் என் சந்ததியினர் தங்கள் பாட்டனை எதிர்ப்பார்கள்; நான் அதைக் காண நேரும் என்றே நினைக்கவில்லை.  இதைப் பார்க்கவா நான் உயிருடன் இருக்கிறேன்! இந்தக் குழந்தைகளுக்காக நீ எவ்வளவு செய்திருக்கிறாய்!  அவர்கள் தகப்பனை விட நீ தான் இந்தக் குழந்தைகளை மிக அருமையாக வளர்த்து ஆளாக்கினாய்!  அனைவரையும் வீரர்களாக்கி மகிழ்ந்திருக்கிறாய்! அவர்களுக்கு என்ன தேவையோ அவற்றைச் சரியான சமயத்துக்கு அவர்களுக்குக் கிடைக்கச் செய்து பார்த்தாய். உன்னுடைய வார்த்தையை அவர்கள் மீற முடியாச் சட்டமாக அல்லவோ மதிக்க வேண்டும்!”

“தாயே, உலகம் மாறிக் கொண்டு வருகிறது.  இந்நாட்களில் மூத்தோருக்கு மரியாதை செய்வது என்பது குறைந்தே வருகிறது.” பீஷ்மர் எவ்விதமான உணர்ச்சியும் இல்லாமல் வறட்டுக் குரலில் கூறினார்.

“காங்கேயா, நாம் நீண்டநாட்களாக வாழ்ந்து வருகிறோம் அல்லவா?  அதை நீ உணர்ந்திருக்கிறாய் அல்லவா?” இவ்வளவு நாட்கள் வாழ நேர்ந்தது குறித்த வருத்தம் குரலில் இழையோட சத்யவதி மேலும் பேசினாள்.” நாம் வானபிரஸ்தம் செல்ல வேண்டிய நேரம் வந்துவிட்டது.  நாம் இங்கே இருக்கக் கூடாது.  காட்டிற்குச் செல்ல வேண்டும்.  இதை நான் எப்போதோ செய்திருக்க வேண்டும்.  ஆனால் க்ருஷ்ண த்வைபாயனன் தான் தடுத்துவிட்டான்.  இது சமயமல்ல என்று கூறிவிட்டான். என்னை வற்புறுத்தி நாட்டில் தங்க வைத்து விட்டான்.”Saturday, December 13, 2014

பீஷ்மரின் கவலை!

பீஷ்மருக்கு அவர் இவ்வளவு வருடங்களாகக் கட்டிக் காத்து வந்ததொரு மாபெரும் சாம்ராஜ்யத்தின் அஸ்திவாரமே ஆட்டம் கண்டாற்போலவும், எந்நேரமும் இடிந்து விழுந்துவிடுமோ என்னும் அச்சத்திலும் இருப்பதாக உணர்ந்தார்.  இந்த இளைஞர்கள் அவர் காலத்தில் இருந்தவர்களைப் போல் அல்ல.  உலகம் ஒவ்வொரு நொடியும் மாறிக் கொண்டு வருகிறது.  மாறி வரும் சூழலில் இவர்களது எண்ணங்களும் மாறுபடுகின்றன. நம் காலத்தில் இருந்தாற்போல் எதுவும் இப்போது இல்லை.  ம்ம்ம்ம்ம்ம்ம்ம்………. என்ன செய்யலாம்?  ஆம், அது தான் சரி.  பீஷ்மர் தன் சிறிய தாயாரும் இன்றளவும் அவருடன் இந்த சாம்ராஜ்யத்தின் விஸ்தரிப்புக்கும் ஸ்திர நிலைமைக்கும் பாடுபட்டுக் கொண்டு அவரோடு தோளோடு தோள் கொடுத்துக் கொண்டிருக்கும் மகாராணி சத்யவதியைக் கண்டு அவளோடு ஆலோசனை செய்ய விரும்பினார்.


யோசனையுடன் ஒவ்வொரு அடிகளையும் நிதானமாக அளந்து நடப்பது போல் நடந்த வண்ணம் சத்யவதியின் மாளிகையை பீஷ்மர் அடைந்தார். அவரை அங்கே கண்டதுமே காவலுக்கு என நிறுத்தப்பட்டிருந்த சேடிப் பெண்கள், பூனையைக் கண்டதும் பறந்தோடும் கிளிகளைப் போல ஓட்டமாக ஓடி விட்டனர். ராணி சத்யவதி தன் வழக்கப்படி அங்கே சுவற்றில் அமைக்கப்பட்டிருந்ததொரு பிறையில் பொருத்தப்பட்டிருந்த மகாதேவன், அந்த சங்கரன் உருவச் சிலையைப் பார்த்த வண்ணம் மௌனத்தில் ஆழ்ந்திருந்தாள். கடவுளருக்கெல்லாம் கடவுளான அவரிடம் என்ன வேண்டுகிறாள்? வருடங்கள் பல ஓடியும் சத்யவதியின் எழில் குறையவில்லை.  அவள் வயதுக்கேற்ற சுருக்கங்களையும்  அவள் மேனியில் காணமுடியவில்லை. அவள் அழகுக்கு அழகு சேர்ப்பது போல் அவள் தன் நரைத்த மயிரை எடுத்துக் கட்டியிருந்த விதம் கிரீடம் ஒன்றை அவளுக்குச் சூட்டியது போல் அமைந்துவிட்டது.  இதனால் அவள் கம்பீரமும், எழிலும் அதிகம் தான் ஆனது.


வெகு சிலரையே அவள் பார்க்க அனுமதித்தாள்.  ஆனாலும் அவளை ஒரு முறை பார்ப்பவர்களை  அவள் எழில் மட்டுமின்றி வெளிப்படையான அவள் மன உறுதியும், ஹஸ்தினாபுரத்தின் முன்னேற்றத்துக்குப் பாடுபடும் அவள் குணமும் கவர்ந்து விடும்.  அவள் எதிரே பீஷ்மர் அமர்வதற்கென தங்கத்தகடு வாய்ந்ததொரு ஆசனம் போடப்பட்டது. பீஷ்மர் சத்யவதியை விடச் சில ஆண்டுகள் மூத்தவராக இருந்தாலும் அவளுக்குத் தாய் என்ற ஸ்தானத்தில் மரியாதை செய்யத் தவறியதில்லை.  அது போலவே இப்போதும் அவள் கால்களில் விழுந்து தன் வணக்கத்தைத் தெரிவித்துக் கொண்டார். தன் மூத்தாளின் மகனின் சிரசில் தன் கைகளை வைத்து ஆசீர்வதித்த சத்யவதி ஒரு அன்பான புன்முறுவல் மூலம் தான் பீஷ்மர் மேல் வைத்திருக்கும் பாசத்தை வெளிப்படுத்தினாள்.


“அமர்ந்து கொள் காங்கேயனே!  உன்னைப் பார்த்தால் மாபெரும் குழப்பத்தில் இருப்பது போல் தெரிகிறதே!  என்ன விஷயம்?” இவ்வுலகமே மறந்துபோன அவருடைய உண்மைப் பெயரான காங்கேயன் என்னும் பெயரில் இன்று வரை சத்யவதி மட்டுமே அழைக்கிறாள். இவ்வுலகு அவரைக் கடுமையான சபதம் எடுத்த அதைக் கடுமையாகக் கடைப்பிடிக்கும் பீஷ்மராகவே அறிந்திருக்கிறது. சத்யவதி கேட்டதற்கு பீஷ்மர் சற்று நேரம் மறுமொழி கொடுக்கவில்லை. பின்னர் மெதுவாக, ஒவ்வொரு வார்த்தையையும் ரகசியம் பேசுவது போன்ற குரலில் சொன்னார். “தாயே, நாம் மிகவும் மோசமானதொரு சூழ்நிலையை இப்போது எதிர்கொள்ள வேண்டி இருக்கிறது. ஆம், மோசமானதொரு சூழ்நிலை!”


பரிதாபம் பொங்க பீஷ்மரைப் பார்த்த சத்யவதி அது மாறாத குரலிலேயே அதே சமயம் விஷயத்தைத் தெரிந்து கொள்ளும் ஆர்வத்துடன் , “என்ன விஷயம்?” என்று கேட்டாள். “திருதராஷ்டிரன் இன்று காலை என்னைப் பார்த்தான் தாயே!  கண்களில் கண்ணீருடன், “பிதாமகரே, தயவு செய்து துரியோதனனை ஹஸ்தினாபுரத்தை விட்டு அனுப்பி விடாதீர்கள்.” என்று வேண்டினான். அவன் எல்லாவற்றிலும் களைத்துச் சளைத்துப் போனவனாகத் தென்பட்டான்.”


சத்யவதியின் ஆச்சரியம் அவள் குரலிலும், கண்களிலும் வெளிப்படையாகவே தெரிந்தது.  “என்ன?  ஹஸ்தினாபுரத்தின் யுவராஜா துரியோதனனை ஹஸ்தினாபுரத்திலிருந்து அனுப்புவதா?  இதில் எவருக்கும் சம்மதமில்லையே!  எவரும் இப்படிச் சொல்லவும் இல்லையே! அவன் இங்கேயே இருக்கட்டும்;  இருப்பான். யுவராஜாவாகவே!”


“தாயே, அவனை அப்படி இருக்கச் செய்வதில் ஆபத்து நிறைந்திருக்கிறது. நீங்கள் மறந்திருக்க மாட்டீர்கள் தாயே!  வாரணாவதத்தில் என்ன நடந்தது என்பதைத் தாங்கள் அறிவீர்கள் தானே! பாண்டவர்களின் உயிரை எடுப்பதில் துரியோதனன் கிட்டத்தட்ட ஜெயித்து விட்டான். விதுரனின் சமயோசிதம் பலிக்கவில்லை எனில்!  பாண்டவர்கள் உயிருடன் இருப்பது எங்கே!”


“அதெல்லாம் சரிதான் மகனே!  ஆனால் இப்போதோ யுதிஷ்டிரனை அரசனாக்கப் போகிறோம். அரசனை அவனால் எப்படி எதிர்க்க முடியும்? இயலாத காரியம் மகனே!”


“இல்லை தாயே, தாங்கள் துரியோதனனைச் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை.  அவன் முன்னெப்போதையும் விட இப்போது மிகவும் மோசமானவனாக, பயங்கரமானவனாக ஆகி விட்டான். அதோடு இல்லாமல் அதிகாரத்தின் ருசியையும் அனுபவித்து விட்டான். யுதிஷ்டிரனோ அவன் சகோதரர்களோ இங்கில்லாமல் தனியாகப் பதவி சுகம் கண்டுவிட்டான். அனைத்து வளங்களையும் தன் ஆதிக்கத்திற்குள் கொண்டு வந்துவிட்டான். தன்னைப் பின்பற்றும் ஒரு கூட்டத்தை உருவாக்க இவை அனைத்தும் தேவை என்பதை உணர்ந்து கொண்டு அப்படியே நடந்து கொண்டு தனக்காக ஒரு தனிக் கூட்டத்தை உருவாக்கியும் விட்டான்.  அஸ்வத்தாமா துரியோதனனின் சிறந்த நண்பனாகி விட்டான்.  ஆகவே அஸ்வத்தாமா மீது அளவு கடந்த பாசம் வைத்திருக்கும் துரோணர் எந்த அளவுக்கு யுதிஷ்டிரனுக்கு உதவுவார் என்பது கேள்விக்குறி!  யுதிஷ்டிரன் துரோணரை நம்ப முடியாது. துரியோதனன் ஹஸ்தினாபுரத்திலேயே தொடர்ந்து இருந்தான் எனில், பாண்டவர்கள் ஐவரும் அவனுடைய தயவிலும், கருணையிலும் தான் உயிர் வாழ வேண்டும்.”

Sunday, December 7, 2014

இந்தக் கிழவன் தான் நம் முதல் எதிரி!

பீஷ்மர் தன் வாழ்க்கையில் நிகழ்ந்த முக்கியமான நிகழ்வுகளைக் குறித்துத் திரும்பத் திரும்ப யோசிக்கையில் அவரைச் சந்திக்க துரியோதனனின் சகோதரன் துஷ்சாசனனும், விகர்ணனும் வருவதாக அவருக்குத் தெரிவிக்கப்பட்டது.  பீஷ்மரின் மலர்ந்த முகத்தில் கருமேகம் போல் நிழல் படர்ந்தது. இந்த கௌரவர்கள் சும்மாவே இருப்பதில்லை. எப்படியேனும் பாண்டவர்களுக்குத் தொந்திரவு கொடுக்கவே எண்ணுகின்றனர்.  அவர்களுடைய தந்திரமான வேலைகளின் மூலம் எதிர்பாரா வண்ணம் ஒரு பெரிய சங்கடத்தை உண்டு பண்ண நினைக்கின்றனர்.  தைரியமாக வெளிப்படையாக அவர்கள் இதைச் செய்கின்றனர்.  என்ன துரதிர்ஷ்டம்!  அவருடைய நீண்ட நெடிய வாழ்விலே அவர் பேச்சை மீறி எவனும் இந்த ஹஸ்தினாபுரத்தில் நடந்ததில்லை.  அவர் சொல்லுக்கு மறு சொல் இருக்காது.  ஆனால் இப்போதோ!  இந்தக் கௌரவர்கள் ஆட்டி வைக்கின்றனரே!  இப்படிப் பட்டதொரு நிலைமையை அவர் வாழ்க்கையில் முதல் முறையாக அனுபவிக்கிறார்.

துஷ்சாசனனும், விகர்ணனும் உள்ளே வந்து எப்போதும் போல் அவர் கால்களில் விழுந்து நமஸ்கரித்தனர்.  வாய் பேசாமல் கைகளால் அவர்களை ஆசீர்வதித்த பீஷ்மர் இருவரையும் உற்று நோக்கினார்.  காந்தத்தைப் போன்ற தன் கண்களால் அவரையே பார்த்தான் துஷ்சாசனன்.  அவன் பார்வையும், அவன் ஒரு தீர்மானமான முடிவில் இருப்பதைச் சொல்லாமல் சொன்னது. தீர்க்கமான முகவாய் அவன் தன்னம்பிக்கையை எடுத்துக் காட்டியது.  யார் என்ன சொன்னாலும் அதிலும் பீஷ்மர் சொன்னால் கூட நிலை குலையாத உறுதியான மனம் கொண்டவன் என்பது அவன் பார்த்த ஒரு பார்வையே சொல்லிற்று. மாறாக விகர்ணன் சாந்தமான முகபாவத்தோடு பார்க்கையிலேயே அனைவரையும் ஈர்க்கும் நல்ல உள்ளம் கொண்டவன் என்பது தெரியும்படி இருந்தான். பார்வையாலேயே இருவரையும் அமரச் சொன்னார் பீஷ்மர்.  சிறிது நேரம் அங்கே அமைதி நிலவிற்று.

பீஷ்மரும் தன் ஆசனத்தில் அசையாமல் அமர்ந்த வண்ணம் துஷ்சாசனையே உற்றுக் கவனித்துக் கொண்டிருந்தார்.  துஷ்சாசனன் வாயைத் திறப்பதாகத் தெரியவில்லை. விகர்ணன் நெளிந்தான்.  அவனுக்கு அந்த நிலை அசௌகரியமாகத் தெரிந்தது.  துஷ்சாசனை நோக்கித் தன் பார்வையைத் திருப்பியவன் அவனையே சம்பாஷணையை ஆரம்பிக்கும்படி ஜாடை காட்டினான்.  துஷ்சாசனன் ஆரம்பித்தான்.

“தாத்தா அவர்களே, எங்களுடைய முடிவை உங்களுக்குத் தெரிவித்துக்கொள்ளவே நாங்கள் இங்கே வந்திருக்கிறோம்.  தயை செய்து ஏற்றுக் கொள்ளுங்கள்.” என்றான் துஷ்சாசனன்.

“சொல்” என்றார் பீஷ்மர் சற்றே முரட்டுத்தனமாக அதே சமயம் சுருக்கமாகக் கூறினார்.

“மாட்சிமை பொருந்திய தாத்தா அவர்களால் இந்த நாட்டுக்கு யுதிஷ்டிரன் அரசனாகத் தேர்ந்தெடுக்கப் பட்டிருப்பதாகத் தெரிகிறது.”

பீஷ்மர் முகத்தில் எவ்விதச் சலனமும் இன்றிக் கேட்டுக் கொண்டிருந்தார்.  எந்த பதிலும் தரவில்லை.  விகர்ணன் முகம் பயத்தில் வெளுத்தது. துஷ்சாசனனுக்கோ மேற்கொண்டு என்ன சொல்வது எப்படி ஆரம்பிப்பது என்பது புரியவில்லை.  கொஞ்சம் தன்னை நிதானித்துக் கொண்டு தைரியத்தை வரவழைத்துக் கொண்டு மேலே பேச ஆரம்பித்தான்.

“தாத்தா அவர்களே! எங்களை மன்னியுங்கள்.  நாங்கள் கௌரவர் நூற்றுவரும் சேர்ந்து ஒரு முடிவு எடுத்துள்ளோம்.  யுதிஷ்டிரன் மன்னன் ஆனால்  நாங்கள் எவரும் அவனுக்குக் கீழே பணி புரிய மாட்டோம்.”

பீஷ்மர் இப்போதும் அசைந்து கொடுக்கவில்லை.  துஷ்சாசனன் குழப்பத்தை அதிகரிக்கும் வண்ணமாக மேலும் மௌனத்தையே கடைப்பிடித்தார்.  அதே சமயம் அவன் சொல்வதைத் தான் கவனித்து வருவதையும் காட்டிக் கொண்டார்.  என்றாலும் எவ்விதமான பதிலும் கொடுக்கவில்லை.

“யுதிஷ்டிரன் மன்னன் ஆகிவிட்டால், அடுத்த நிமிடமே நாங்கள் ஹஸ்தினாபுரத்தை விட்டுச் சென்று விடுவோம்.”

“சரி,” என்றார் பீஷ்மர் குரலில் எவ்வித உணர்ச்சியும் காட்டாமல்.

துஷ்சாசனன் தடுமாறினான்.  திகைத்துப் போனான்.  தன் உதடுகளைக் கடித்துக் கொண்டான்.  பின்னர் தன் தொண்டையைச் சரி செய்து கொண்டு மேலும் பேச ஆரம்பித்தான். “ எங்களுக்கு உங்கள் அனுமதி வேண்டும், தாத்தா அவர்களே!  நாங்கள் ஹஸ்தினாபுரத்தை விட்டுச் சென்று காந்தாரத்தில் எங்கள் தாய் வழிப்பாட்டனார் சுபலாவுடன் வசிக்கப் போகிறோம்.  அங்கே செல்ல தங்கள் அனுமதி வேண்டும்.”

தீர்க்கமாக துஷ்சாசனையே பார்த்தார் பீஷ்மர்.  பின்னர், “நான் அனுமதி கொடுக்கப் போவதில்லை!” என்று ஒரே வார்த்தையில் முடித்தார்.

கோபத்திலும், வெட்கத்திலும் அவமானம் தாங்க முடியாமலும் துஷ்சாசனன் முகம் சிவந்து விட்டது.  பாட்டனை எதிர்க்க வேண்டும் என்னும் உணர்வு அவனை அறியாமல் பீறிட்டு எழுந்தது.  “நாங்கள் இங்கிருந்து கிளம்பி விடுவோம்.  ஆம் கிளம்பி விடுவோம்!” என்று முணுமுணுத்துக் கொண்டான்.  இந்தக் கிழவன் படு பொல்லாதவனாக இருக்கிறானே! தன் கட்டுப்பாடுகளை அறவே இழந்தான் துஷ்சாசனன். பெரியவர்கள் முன்னர் ஆரிய வர்க்கத்து இளவல்கள் நடந்து கொள்ளும் முறையையும் முற்றிலும் மறந்தான்.  ஆனால் பீஷ்மரோ எதற்கும் கலங்காமல் அவனையே கோபப் பார்வை பார்க்க இளைஞர்கள் இருவரும் உள்ளுக்குள் நடுங்கினர்.

துஷ்சாசனன் இப்படி ஒரு நிலைமையை எதிர்பார்க்கவில்லை.  பீஷ்மரின் கோபம் அவனுள் வியப்பையும் கோபத்தையும் ஒருங்கே விளைவித்தது.  அங்கிருந்து அவரிடம் சொல்லிக் கொள்ளாமல் கிளம்ப யத்தனித்தான். கிளம்பியும் விட்டான்.  ஆனால் இன்னமும் மரியாதை குறையாத விகர்ணன் பீஷ்மரின் கால்களில் மீண்டும் விழுந்து எழுந்து மரியாதையுடன் விடை பெற்றுக் கொண்டான்.  போகலாமா என அனுமதியும் கேட்டுக் கொண்டான்.  வாய் திறவாமல் கண் ஜாடையிலேயே அனுமதி கொடுத்தார் பீஷ்மர்.


பெரியவர்களுக்கு எதிரே முதுகைக் காட்டிக் கொண்டு செல்லக் கூடாது என்னும் பாரம்பரியத்தையும் மறந்தவனாக துஷ்சாசன் பீஷ்மருக்கு முதுகைக் காட்டித் திரும்பிக் கொண்டு அங்கிருந்து செல்ல ஆரம்பித்தான். ஆனால் பீஷ்மர் சும்மா இருக்கவில்லை.  தன் கம்பீரமான அதே சமயம் கண்டிப்பான குரலில் கூறினார். “இளைஞர்களே! நான் சொல்லி விட்டேன்.  சொன்னால் சொன்னது தான். யுதிஷ்டிரன் ஹஸ்தினாபுரத்துக்கு மன்னனாக முடிசூட்டப்படுவான்.  நீங்கள் இப்போது போகலாம்.” அவர் வார்த்தைகளில் ஒரு தீர்மானமான முடிவு தெரிந்தது.  அவர் தீர்மானித்துவிட்டார் என்பது துஷ்சாசனுக்குக் கோபத்தைக் கிளறி விட்டது.  அவன் அடக்க முடியாக் கோபத்தில் ஆழ்ந்தான். வார்த்தைகளால் விவரிக்க ஒண்ணாக் கோபத்தில் ஆழ்ந்த துஷ்சாசனன், “இந்தக் கிழவன் தான் நமக்கு முதல் எதிரி!” என்று எண்ணினான்.