கண்ணன் பேசுகிறான்!
ஸ்ரீகாலவனின் உடல் அனைவரின் பார்வைக்காக வைக்கப் பட்டிருந்த சமயம், அதைக் காண வந்த ஷாயிபா நடந்தவற்றை முற்றிலும் நம்பாதவளாய்த் தான் வந்தாள். ஆனால் இறந்த தன் பெரியப்பனைக் கண்டதும், அவனைக் குறித்துப் பாடப்பட்ட துதிப்பாடல்களை அழுதுகொண்டே புலம்பியதோடு, மார்பில் அறைந்து கொண்டும், தலையைப் பிய்த்துக்கொண்டும் தன் நிலை மறந்து கதறினாள். அவன் உடல் மீது விழுந்து கதறி அழுதவளைப் பிரிப்பதற்கு அனைவரும் பெரும்பாடு பட்டனர். ஒருவழியாக அவளை அழைத்துச் சென்றதும் உடல் எரியூட்ட எடுத்துச் செல்லப் பட்டது. அதன் பின்னர் இப்போது இங்கே கண்ணனைக் காண ஷாயிபா வந்திருக்கிறாள். என்ன நடக்கப் போகிறதோ? கண்ணனைக் கண்டதுமே அவள் அவனை நோக்கிப் பல சாபங்களை மழையெனப் பொழிந்தாள். அவள் நாக்கைச் சுழற்றிய வேகத்தில் சாபங்கள் தவிர வேறு மாதிரி அவளால் பேசமுடியுமா என்னும் அளவுக்குக் கண்ணனுக்குச் சாபங்களை தாராளமாய் வழங்கினாள்.
"கொலைகாரா, மனிதர்களிலேயே மிக மிக மோசமானவன் நீ! உன் குலத்துக்கே சாபம் கொடுக்கிறேன்." இவ்வாறு கூறிய ஷாயிபா தன் இடுப்பில் இருந்து ஒரு கத்தியை உருவினாள். அனைவரும் தங்களைச் சுதாரித்துக்கொள்வதற்குள் கத்தியோடு கண்ணனை நோக்கிப் பாய்ந்தாள். அப்போது ஸ்வேதகேது சட்டென எழுந்து அவள் பின்னால் சென்று அவள் தோள்களைப் பிடித்துக்கொண்டு அவளைத் தடுத்தான். அப்படியே கத்தியையும் அவள் கையிலிருந்து பிடுங்க யத்தனித்தான். அடிபட்ட பெண்புலியாகச் சீறிக்கொண்டிருந்த ஷாயிபா திரும்பி அதே கத்தியால் ஸ்வேதகேதுவைக் குத்த முயன்றாள். அவனையும் தன் வாய்க்கு வந்தவாறு திட்டினாள்! "நீ ஒரு மிருகம், புழுவை விடக் கேவலமானவன்! இங்கே நீ வந்தது என் மூலமாக. உனக்கு இங்கே ஒரு மரியாதையான பதவி கிட்டியதும் என்னால் தான். என் இதயத்தையே உனக்குத் தரவிருந்தேன். நீ என்னை ஏமாற்றிவிட்டு எனக்குத் துரோகம் செய்ததுமல்லாமல் அனைவருக்கும் இதய தெய்வம் போன்றிருந்த என் பெரியப்பனின் சாவுக்கும் காரணமாய் இருந்திருக்கிறாய். அவரைக் கொன்ற இந்தக் கொலைகாரனக் கொல்லவும் உனக்கு இன்னும் தயக்கமாய் இருக்கிறதே! இதை விடக் கேவலம் வேறு இல்லை!"
ஷாயிபா நின்றிருந்த கோலமும், அவள் முகமும், கண்களும் அவள் தன் நிலையில் இல்லை என்பதையும், கிட்டத்தட்ட சுய உணர்வை இழந்திருந்தாள் என்பதையும் சுட்டிக் காட்டியது. என்றாலும் அவளால் பின்னப் பட்ட மாயவலையிலிருந்து வெளி வந்திருந்த ஸ்வேதகேதுவுக்கு அவள் நடந்து கொண்ட விதம் கண்டு இன்னும் ஆத்திரம் அதிகமாயிற்று. தன் முழு பலத்தையும் காட்டி அவள் கைகளை முறுக்கி அவள் கையிலிருந்து கத்தியைக் கீழே விழச் செய்தான். நடுவில் தன்னைத் தடுக்க வந்த உத்தவனையும் அப்பால் தள்ளிவிட்டான். பின்னர் அவளை அடித்துக் கீழே தள்ளினான். அவள் செய்வதறியாது குத்துக்காலிட்டு உட்கார்ந்து திக்பிரமை பிடித்தவள் போல் "ஓ"வென்று பெருங்கூச்சலுடன் அழ ஆரம்பித்தாள்.
வெறுப்போடு அவளைக் கண்ட ஸ்வேதகேது இவ்வளவு நாள் தனக்குள் அடக்கி வைத்திருந்த ஆத்திரத்தை அடக்க முடியாமல் தவித்தான். அவனையும் மீறிச் சொற்கள் வெளியே வந்தன! "சூனியக் காரி! நீ என்னை இங்கே அழைத்து வந்தாயா?? என்னை மயக்கி, என் அறிவைக் கெடுத்து என் குருநாதரிடம் இருந்து பிரித்தாயே! என் கடமையையும், என் தர்மத்தையும் என்னை மறக்க வைத்தாயே! முட்டாளும், அறிவீனனும் ஆன ஒரு அரசனைப் புகழ்ந்து பாடிக்கொண்டிருந்த நீ என்னையும் அவ்வாறு செய்வதற்காகவும், அவனுக்கு அடிமையாக இருக்கவுமே என்னை இங்கே அழைத்து வந்தாய்! அதற்காக உன் அழகை,இனிமையான பேச்சை, சாமர்த்தியத்தைப் பயன்படுத்திக்கொண்டாய்! என்னையும் அந்த முட்டாளைப் போற்றிப் பாடி வணங்கும்படி செய்தாய்!"
"ம்ஹும், நானும் முட்டாள் தான்! அதனால் அன்றோ இங்கே வந்ததும் நீ என்னை மணந்துகொண்டு என் மனைவியாவாய் என எதிர்பார்த்து வந்தேன்! ஆனால்..... ஆனால்.... என்ன நடந்தது?? உனக்கு மட்டுமல்ல, முட்டாள் அரசனுக்கும் நான் அடிமையானேன். அவனுடைய வீரர்களுக்கு என் விலைமதிப்பற்ற ஆயுதப் பயிற்சியைக் கற்றுக் கொடுத்தேன். அந்தப் பயிற்சியின் மூலம் என் அருமை நண்பர்களையே அடிமையாக்கினான். உண்மையில் நீயன்றோ உன் பெரியப்பன் மூலம் அனைவரையும் ஆட்டிப் படைத்துக்கொண்டிருந்தாய்? பாவம் அந்தப் பரிதாபத்துக்கு உரிய ராணி பத்மாவதி! அவளை என்ன பாடு படுத்தி இருக்கிறாய் நீ? உன்னுடைய அத்தனை கொடுமைக்கும் உன் பெரியப்பனின் ஆதரவு உனக்குக் கிட்டியது. போதாதென்று இளவரசன் ஷக்ரதேவனையும் அடிமைப்படுத்த முயன்றாய்! என் வாழ்க்கையை நீ கெடுத்துக் குட்டிச் சுவராக்கி விட்டாய்!"
"ஆனால் என்னால் இயன்றவரை இளவரசன் ஷக்ரதேவனையாவது என்னால் சீக்கிரம் காப்பாற்ற முடிந்தது. ராணி பத்மாவதி கடைசிக்காலத்தை நிம்மதியாய்க் கழிக்கலாம். இத்தனைக்குப் பின்னரும் உனக்குத் திருப்தி கிடைக்கவில்லையா?? என் அருமை நண்பனும், ஜராசந்தனை ஓட ஓட விரட்டியவனும் ஆன கிருஷ்ண வாசுதேவனை என் மூலமே கொல்ல எண்ணுகின்றாயா?? என் அருமையான வாழ்க்கையில் உன்னை நான் பார்த்து மோகம் கொண்ட அந்த நாள் ஒரு கொடுமையான விபத்து ஏற்பட்ட , பேரழிவு ஏற்பட்ட நாளாகும்!"
இத்தனையும் பேசியும் ஸ்வேதகேதுவின் கோபம் அடங்கியதாய்த் தெரியவில்லை. அவன் இன்னமும் ஷாயிபாவின் கைகளை இறுகப் பிடித்து அவளை அடக்கிக் கொண்டிருந்தான். ஆனால் அவளோ, தன் பற்களால் ஸ்வேதகேதுவைக் கடித்துக் காயம் உண்டாக்கிக் கொண்டிருந்தாள். அவனிடமிருந்து தன்னை விடுவித்துக்கொள்ளவும் பெருமுயற்சி செய்தாள். கண்ணன் எழுந்து, ஸ்வேதகேதுவின் கைகளை அவள் உடல் மீதிருந்து எடுத்தான். "ஸ்வேதகேது, அவளைக் குற்றம் சொல்லி என்ன பயன்?? அவளிடம் மயங்கியது நீர் அல்லவோ? உம்முடைய பலவீனம். நீர் பொறியில் சிக்கிய எலி போல் அவளிடம் மாட்டிக் கொண்டீர். உம்மை வலை வீசிப் பிடித்தார்கள். நீரும் பலவீனத்தால் அதில் மாட்டிக் கொண்டீர்! மேலும் இங்கு வந்து நீரும் ஸ்ரீகாலவனை வணங்க ஒப்புக் கொண்டு தானே அவனுக்கு ஊழியம் செய்தீர். உமக்குப் பதவியும், அதிகாரமும், அதன் மூலம் விளைந்த ஆடம்பரங்களும் தேவைப்பட்டது அன்றோ? அதற்கெனப் பெரும் விலையும் கொடுத்தீர் அன்றோ? என்றோ ஒரு நாள் ஷாயிபா உம்மை மணப்பாள் என எதிர்பார்த்து, உம் பரம்பரைகளில் உம் குலத்தில் காலம் காலமாய் வணங்கி வந்த அனைத்துக் கடவுளரையும் மறந்தீர், தர்மத்தை மறந்தீர், உம் வித்தையை மறந்தீர், உம் குருவை மறந்தீர்!"