Sunday, September 5, 2010

கண்ணன் வருவான், கதை சொல்லுவான் 2-ம் பாகம்!

ஸ்வேதகேது மனம் திறக்கிறான்!

ஸ்வேதகேது உத்தவனின் குற்றச்சாட்டுகளுக்கு அசைந்தே கொடுக்கவில்லை. “உத்தவா, முதலில் உங்கள் கதையைக் கூறு. பின்னர் நான் என் கதையைச் சொல்கிறேன்.” என்றான். உத்தவனோ, “பெரியதாய் ஒன்றுமில்லை சொல்ல. பிரபாஸ க்ஷேத்திரத்தில் நாங்கள் இருந்தபோது நீரும் அங்கே இருந்தீர். பின்னர் நாங்கள் புநர்தத்தனை விடுவிக்க வைவஸ்வதபுரிக்குச் சென்றோம். கிருஷ்ணனின் அதி அற்புத சாகசங்கள் பற்றி நான் சொல்லவேண்டியது இல்லை. பாஞ்சஜனா ராக்ஷசனைக் கடலினடியில் தள்ளிவிட்டு வைவஸ்வத புரிக்கு அந்தக் கப்பலிலேயே சென்றோம். நாகலோகத்தின் சர்வ வல்லமை படைத்த அன்னை மாதா என்று போற்றப்படும் அரசியிடமிருந்தும், மரணக் கடவுள், யமன் என்றெல்லாம் அழைக்கப் படும் அரசனிடமிருந்தும் புநர்தத்தனை மீட்டு வந்தோம். கிருஷ்ணனின் சாகசங்களும், புத்திசாலித் தனமான முடிவுகளுமே இதற்குத் துணை செய்தன.”

“ஓஓ, ஆமாம், நான் நன்கறிவேன் கிருஷ்ணனின் வீரத்தையும் சாகசங்களையும் நன்கறிவேன். அவனால் அற்புதங்களை நிகழ்த்த முடியும்! பின்னர்???” என்று வினவினான்.

“பின்னர் நாங்கள் மதுராவிற்குச் சென்றோம். அங்கே ஜராசந்தன் கம்சனைக் கொன்றதற்குப் பழிவாங்க எங்களைக் கொல்லச் சபதம் எடுத்திருப்பதாயும், மதுரா நகரையே அழிக்கப் போவதாயும் செய்திகள் கிடைத்தன. நாங்கள் அப்போது இந்த்த் தாக்குதலுக்குத் தயாராய் இல்லை. முற்றுகைக்கு மதுரா நகரும் தயாரில்லை. அங்கிருந்தால் ஆபத்து நமக்கு மட்டுமில்லை, மதுராவுக்கும் எனத் தெரிந்து கொண்டு அங்கிருந்து கிளம்பி இங்கே வந்து சஹ்யாத்திரி மலைத் தொடர்களில் அடைக்கலம் புகுந்தோம்.”

“பின்னர்?”

“அங்கே இருந்த கோமந்தக மலையில் கருடக் குடியிருப்புகளில் பரசுராமரால் அடைக்கலம் பெற்றோம். ஆனால் உங்கள் கடவுள், இந்த வாசுதேவன் இருக்கிறானே? அவன் எங்களை ஏமாற்றிவிட்டான். ஜராசந்தனுக்குத் தகவல் கொடுத்துவிட்டான். ஜராசந்தனும் எங்களைத் தேடி அங்கே வந்துவிட்டான். மலைக்காடுகளுக்குத் தீ வைத்து எங்களை அழிக்க முயற்சி செய்தான்.”

ஓஓஓ, பரம்பொருளே, வாசுதேவரே! எங்கள் கடவுளே!” ஸ்வேதகேது அந்தக் கரவீரபுரத்து மக்கள் அனைவரும் ஸ்ரீகாலவனை வணங்கும் தொனியில் மிகவும் பணிவோடு இதைக் கூற உத்தவனின் ஆத்திரம் பொங்கியது..

“வெட்கமற்ற ஸ்ரீகாலவனின் சீடரே! கேளும்!” என்றான் உத்தவன். அவன் குரலில் படமெடுத்தாடும் நல்லபாம்பின் சீறல் மிக உக்கிரமாய்த் தொனித்தது. “கண்ணனை எவராலும் வெல்ல முடியாது. அதை அவன் நிரூபித்தும் வருகிறான். கோமந்தகமலையில் என்ன நடந்தது தெரியுமா?? கடலரசன் கண்ணன் சொற்படி கேட்டு மலையைச் சுற்றி வளைத்துக்கொண்டு பாய்ந்து வரும் தீயைத் தன் கடல் நீரால் அணைத்தான். அக்னியும் கண்ணனுக்குக் கட்டுப்பட்டு முற்றிலும் அணைந்து போனது. மேலே இருந்து கீழே வந்த கண்ணனும், பலராமனும் ஜராசந்தனின் படையை அழித்தனர். கோனார்டின் அரசன் கொல்லப் பட்டான். ருக்மிக்குக் காயம் ஏற்பட்டது. விந்தனும், அநுவிந்தனும் குருகுல முறை சகோதரர் என்பதால் காக்கப் பட்டனர். ஜராசந்தன் எப்படியேனும் தப்பி ஓடக் கண்ணனால் அநுமதிக்கப் பட்டான். அதுவும் தாமகோஷன் தலையீட்டினாலேயே தப்புவிக்கப் பட்டான். ஓடிக் கொண்டிருக்கிறான் இப்போது!” என்றான்.

“அது சரியப்பா, கரவீரபுரத்துக்கு எப்படி, ஏன் வந்தாய்?? என்ன நடந்தது இங்கே?”

“கண்ணன் ஸ்ரீகாலவனோடு சிநேகிதமாக இருக்கவேண்டும் என்றே ஆசைப்பட்டான். அவனால் தான் ஜராசந்தன் கோமந்தக மலை வரையிலும் வந்தான் என்று தெரிந்தும் கண்ணன் ஸ்ரீகாலவன் மனம் மாறுவான் என்றே எதிர்பார்த்தான். ம்ஹும், ஆனால் இங்கே என்ன நடக்கிறது? உன் மன்னன் கண்ணனின் நட்புக் கரத்தை வெறுத்து ஒதுக்குகிறானே? மேலும் கண்ணனைக் கண்டபடி திட்டுவதோடு அல்லாமல் அவன் தான் கடவுள் என்று நான் ஒப்புக்கொள்ளவேண்டும் என்றும் அவன் அடி பணிந்து வணங்கவேண்டும் என்றும் கூறுகிறான். வற்புறுத்துகிறான். நான் மறுத்ததால் இந்தச் சிறைக்குத் தள்ளப் பட்டேன். “

“ஓ, அப்படியா? புநர்தத்தா?? நீ எப்படி இங்கு வந்தாய்?”

“ அதை நீர்தான் சொல்லவேண்டும் ஸ்வேதகேது அவர்களே! இதோ இவர் தான் புநர்தத்தனின் தாய்வழிப் பாட்டனார் ருத்ராசாரியார். வேத, வேதாங்களில் கரை கண்டவர். சமுத்திரங்களின் எல்லை காணமுடியாதது போலவே இவரின் ஆழ்ந்த படிப்புக்கும் எல்லை இல்லை எனலாம். இவருடன் இருக்கும் மற்ற ஆசாரியர்களின் நிலையும் இவ்வாறே. இவர்கள் அனைவரும் அன்னை ஸரஸ்வதியின் அருட்கடாக்ஷம் நிரம்பியவர்கள். அவளால் ஆசீர்வதிக்கப் பட்டவர்கள். இவர்கள் எப்படி ஒரு மனிதனை, அதுவும் ஸ்ரீகாலவன் போன்றவனைக் கடவுளாக வணங்க முடியும்?”

"புநர்தத்தன் தன் பாட்டனைத் தேடி வந்தவன், அவனும் ஸ்ரீகாலவனை வணங்க மறுத்து இந்தச் சிறையில் தள்ளப் பட்டான். ஆனால், நீர், நீர், ஸ்வேதகேது! உம்மைப் போன்ற ஒரு குருவிடம் பாடம் கேட்டோமே என வெட்கப் படுகிறேன். எங்களுக்கெல்லாம் ஓர் ஆதர்சமாக இருந்த நீர், இப்போது இங்கே வெட்கம் கெட்டு, பணத்திற்கு அடிமையாகி, ஒரு கொடூர மனம் படைத்த மன்னனுக்கு ஊழியம் செய்து வருகிறீர். இது தான் நீர் படித்த வித்தைகளின் விளைவா?? சாந்தீபனி போன்றதொரு குருவிடம் அவருக்கு அடுத்த ஸ்தானத்தில் நீர் இருந்ததை மறந்தீரோ?? " உத்தவன் கடுமையான வார்த்தைகளை வீச ஸ்வேதகேது வாயே திறக்கவில்லை. அவனுக்கு மறுமொழி எதுவும் சொல்லவில்லை.

மெல்லத் தலையைக் குனிந்து கொண்டான். எப்படிப் பட்டதொரு தவ வாழ்க்கையை வாழ்ந்து வந்தான்! சாந்தீபனியின் சீடனாக இருந்ததோடு மட்டுமல்லாமல் அவர் நம்பிக்கைக்குப் பாத்திரமாகவும் இருந்து வந்திருக்கிறான். அவனுடைய கனவுகளெல்லாம் அப்போது அவனும் இது போன்றதொரு தவ வாழ்வு மேற்கொண்டு அவனும் ஒரு ரிஷியாகி, அவனிடமும் அவனுக்கென ஒரு ஆசிரமம் ஏற்படுத்திக்கொண்டு அதில் சீடர்கள் என அமைதி நிறைந்த கெளரவமான ஒரு வாழ்க்கைக்கான கனவு! இந்தக் கனவைக் கண்டு வந்த அவன் இப்போது அனைத்து ஆசாரியர்களையும் கேள்வி, முறையில்லாமல் சிறையில் தள்ளும் ஸ்ரீகாலவனுக்கு ஊழியம் புரிந்து கொண்டு இருக்கிறான். நிமிர்ந்து பார்த்தான் ஸ்வேதகேது.

"உத்தவா! ஒரு மிருகத்தை விடக் கேவலமாக நான் நடத்தும் இந்த வாழ்க்கையையும் என் நிலையையும் பார்த்தாயா? " என்றான்.

2 comments:

எல் கே said...

aduthuuu

priya.r said...

நல்ல பகிர்வு ;தொடரட்டும் உங்கள் திருப்பணி .