Saturday, May 26, 2012

திருதராஷ்டிரனின் தந்திரம்!


ஆர்யவர்த்தத்தின் மிகப் பெரிய சாம்ராஜ்யமான குரு வம்சத்தினரின் ராஜ்யம் பெருகி இருப்பதும், எவராலும் அசைக்க முடியாத இடத்தைப் பெற்றிருப்பதும் தாத்தா பீஷ்மரின் இடைவிடாத பணியால் தான்.   அவர் எண்ணம், செயல் அனைத்திலும் ஹஸ்தினாபுரத்தின் நலனே முன் நிற்கும்.  ஆனால் இப்போதோ! நடக்கவிருக்கும் பேராபத்திலிருந்து நாட்டை மட்டுமின்றிப் பாண்டவர்களையும் காக்க வேண்டுமே.  கவலை தோய்ந்த முகத்துடன் காணப்பட்டார் பீஷ்மர்.  யுதிஷ்டிரன் ஏதோ ஒன்று நடக்கப்போகிறது என்ற வரையில் புரிந்து கொண்டான்.  திருதராஷ்டிரனைப்பார்த்து, “ஆம், சக்கரவர்த்தி, நான் யுதிஷ்டிரன் தான் வந்துள்ளேன்.” என்று பணிவோடும் விநயத்தோடும் கூறி இருவரையும் பாதம் பணிந்து வணங்கினான்.  “தங்கள் கட்டளைக்குக் காத்திருக்கிறேன்.” என்றும் கூறினான். 

“உன்னுடன் யார் வந்திருக்கிறார்கள்?” என்று திருதராஷ்டிரன் வினவிக்கொண்டே, “விதுரனா?  இன்னும் எவரோ வந்திருக்கிறார்களே?  சஹாதேவனா?” எனக் கேட்டவண்ணம் தன் கைகளைத் தூக்கி ஆசி கூறும் பாவனையில் உயர்த்தினான்.  

“என் அருமைக் குழந்தைகளே, நூறாண்டு வாழ்வீர்களாக!” என வாழ்த்திய பீஷ்மரின் கண்களில் கண்ணீர் தோன்றியது.  குரலும் தழுதழுத்தது.  யுதிஷ்டிரனைப் பாசத்தோடும், அன்போடும் பார்த்துக் கண்ணீர் சிந்தினார். 

“நான் உன்னை அழைக்கையில் நீ உன்மாளிகைக்குத் திரும்பிக்கொண்டு இருந்திருப்பாய்.  உனக்குக் காலை உணவு அருந்தும் நேரம் வேறு.  நான் அழைக்கும்படி ஆயிற்று.”  திருதராஷ்டிரன் மன்னிப்புக் கேட்கும் குரலில் கூறினான்.  “ஆனால், குழந்தாய், விஷயம் மிகவும் முக்கியமானதென்பதாலேயே உன்னை உடனடியாக வரச் சொன்னேன்.  இதில் தாமதம் செய்ய இயலாது.”

“நான் எப்போதும் உங்கள் கட்டளைக்குக் கீழ்ப்படிந்து இருப்பேன், சக்கரவர்த்தி.” யுதிஷ்டிரன் உறுதி தொனிக்கும் குரலில் கூறினான். 

“அனைவரும் அமருங்கள்.  விதுரா, நீயும் அமர்ந்து கொள்.” திருதராஷ்டிரன் தொடர்ந்தான்.  “என் குமாரன்” ஆரம்பித்த திருதராஷ்டிரன் என்ன நினைத்தானோ, “யுதிஷ்டிரா, நீ எனக்கு துரியோதனையும், அவன் தம்பிமார்களையும் விட அருமையானவன் என்பதில் உனக்குச் சிறிதேனும் சந்தேகம் வரக் கூடாது.  ஆனால் மகனே, இப்போது ஒரு மாபெரும் ஆபத்து நம்மை எல்லாம் சூழ்ந்திருக்கிறது.  என் மகன் துரியோதனனும், அவன் தம்பியரும் பொறாமையிலும், பேராசையிலும் மூழ்கி விட்டனர்.  வெறுப்பும், ஏற்பட்டிருக்கிறது அவர்களுக்கு.  யுதிஷ்டிரா, யாரிடம் என்பதை நான் சொல்ல வேண்டியதில்லை.”

“ஏன், என்ன காரணம்? நாங்கள் அவர்களுக்கு என்ன தீங்கு செய்தோம்?  ஏன் அவர்கள் எங்களைக்கண்டாலே துக்கம் அனுஷ்டிக்க வேண்டும்.  சக்கரவர்த்தி, எனக்கு இந்தக் காரணத்தைத் தெளிவாக்குங்கள்.”

“நீ எப்போதும் நேர்மையாக நடந்து கொள்வாய் என்பதை அறிவேன் யுதிஷ்டிரா, அர்ஜுனனும் எந்த வம்பிற்கும் போவதில்லை. நகுலனையும், சஹாதேவனையும் போலப் பணிவுள்ள தம்பிகள் கிடைப்பது துர்லபம்.” திருதராஷ்டிரன்  எப்படியேனும் யுதிஷ்டிரன் மனதில் தான் நடுநிலையாளனாகப் பேசுகிறோம் என்ற எண்ணத்தை ஏற்படுத்துவதில் முனைந்தான்.  யுதிஷ்டிரனும் அதைப் புரிந்து கொண்டே இருந்தான்.  திருதராஷ்டிரன் தன் மகன்களிடம் வைத்திருக்கும் அதீதமான  பாசத்தைப்புரிந்து கொண்ட  யுதிஷ்டிரன் திருதராஷ்டிரனால் நடுநிலையாகப் பேச முடியவில்லை என்பதையும் கண்டு அவன் உதவிக்கு வந்தான்.  “மரியாதைக்குரிய மன்னரே, ஒருவேளை பீமனால் அவர்களுக்கு மன வருத்தம் ஏற்பட்டிருக்கலாம்.  பீமன் கொஞ்சம் குறும்புக் காரன்.  ஆனால் அவன் வெளிப்படையாகப் பேசுபவன்.  மனதில் எந்தவிதமான வஞ்சக நோக்கையும் வைத்துக்கொள்ள மாட்டான்.  அவனாலோ, அல்லது மற்றவராலோ எவரானும் மனம் புண்பட்டிருப்பது தெரிந்தால் உடனே மன்னிப்புக்கேட்டுக் கொள்வான்.”

பீஷ்மர் தன் நீண்ட தாடியைத் தடவிய வண்ணம் அனைத்தையும் கேட்டுக்கொண்டும், கிரகித்துக்கொண்டும் வாய் பேசாமல் மெளன சாட்சியாக அமர்ந்திருந்தார்.

Wednesday, May 23, 2012

திருதராஷ்டிரனின் தந்திரம்


அன்பும், பாசமும், பச்சாத்தாபமும் பொங்கும் கண்களை யுதிஷ்டிரனிடம் திருப்பிய விதுரர், “குழந்தாய், உன்னையும் உன் நான்கு சகோதரர்களையும் எப்படியேனும் கொன்றுவிட வேண்டும் என துரியோதனன் திட்டம் தீட்டி இருப்பதையும், அதற்கு வேண்டிய ஏற்பாடுகளை ரகசியமாய்ச் செய்து வருவதையும் அறிவாயா?”

“சித்தப்பா, சஹாதேவன் என்னிடம் கூறினான்.  அவனுக்கு எப்படியோ தெரிந்திருக்கிறது.  பீமனுக்கு இது தெரிந்ததும், அவன் வேண்டிய முன்னேற்பாடுகளையும், பாதுகாப்புகளையும் செய்து வருகிறான்.  ஆனால் சித்தப்பா, எனக்கு என்னவோ துரியோதனாதியாரின் முயற்சிகள் எல்லாம் பலிக்கும் எனத் தோன்றவில்லை.  அப்படி எல்லாம் எங்களை எவராலும் கொன்றுவிட முடியாது.  நாங்கள் இந்த உலகில் எவ்வளவு காலம் வாழ வேண்டுமென்பது இறைவன் கைகளிலேயே உள்ளது.  அவன் நினைக்கும் வரை எங்களை எவராலும் ஒன்றும் செய்ய முடியாது. “யுதிஷ்டிரன் திட்டவட்டமாய்க் கூறினான்.

“உன் இறைவன் உன்னைக் காப்பார் குழந்தாய்!  இறைவனின் பரிபூரண அருள் உனக்கும், உன் சகோதரர்களுக்கும் கிட்டட்டும்.  அது போகட்டும்! ஒருவேளை உனக்கோ, உன் தம்பிகளுக்கோ ஆபத்து ஏற்பட்டால், அந்தக் கஷ்டமான நேரத்தில் உங்களுக்கு உதவ நான் ஒருவன் இருக்கிறேன் என்பதை ஒரு போதும் மறவாதே!” என்றார் விதுரர்.

“சித்தப்பா, நீங்கள் எப்போதுமே மிகவும் நல்லவராகவும், நேர்மையானவராகவும் இருக்கிறீர்கள்.  நீங்கள் இல்லை எனில் இந்த யுவராஜா பதவியில் என்னால் என்ன செய்திருக்க முடியும்?  என் தம்பிகள் தான் என்ன செய்திருக்க முடியும்? உங்களை நாங்கள் எப்போதுமே மதித்து வணங்குவதோடு பூரணமாய் நம்புகிறோம்.” யுதிஷ்டிரன் மனமாரச் சொல்லுகிறான் என்பது அவன் குரலில் இருந்தும், கண்களின் ஒளியிலிருந்தும் புரிந்தது.  சற்று நேரத்தில் அவர்கள் திருதராஷ்டிரன் வீற்றிருந்த அரச மண்டபத்தை அடைந்தனர்.  ஒரு தங்கச் சிம்மாதனத்தின் மேல் திருதராஷ்டிரன் அமர்ந்திருந்தான்.  அவன் அருகே அவனுக்குச் சம ஆசனத்தில் தாத்தா பீஷ்மரும் அமர்ந்திருந்தார்.  இருவரும் வெகு நேரமாக ஏதோ முக்கியமான ஆலோசனையில் ஈடுபட்டிருந்தனர் என்பதை அவர்கள் முகமே காட்டியது.  பீஷ்மரின் முகம் இறுக்கமாகவும், திருதராஷ்டிரன் தர்ம சங்கடமான நிலையில் இருப்பதாகவும் தெரிய வந்தது.   ஐம்பதே வயதுக்குள்ளான திருதராஷ்டிரனுக்கு இள வயதிலேயே நரைத்திருக்கும் போலும்.  அந்த நரைமுடி அவனை வயது கூடியவனாய்க் காட்டியது.

சிவந்த நிறத்தோடும், நல்ல உடல்கட்டோடும் காணப்பட்டாலும், அவன் உதடுகள் தொய்வுற்று, தோள்பட்டைகள் வளைந்து காணப்பட்டன.  பார்வையற்ற அவன் கண்கள் அந்த அறையின் வாசலைப் பார்த்துக் கொண்டிருந்தாலும், அனைவரின் நடை சப்தத்தை வைத்தே யார் வருகிறார்கள் என்பதை திருதராஷ்டிரன் அறிந்து கொள்வான்.  இப்போதும் யுதிஷ்டிரன் வரவை அப்படியே அறிந்து கொண்டான்.  தாத்தா பீஷ்மரோ நல்ல உடல் கட்டோடும், பூரண பலத்தோடும், எவராலும் அசைக்க முடியாத இமயமலைச் சிகரம் பனியால் மூடி இருப்பது போல் தன் வெண் தாடியும், நரைத்த தலையைத் தூக்கிக் கட்டிய வண்ணமும் காணப்பட்டார். இமயத்தை எவ்வாறு அசைக்க முடியாதோ அவ்வாறே தாத்தா பீஷ்மரையும் அசைக்க முடியாது என யுதிஷ்டிரன் மனதுக்குள் நினைத்துக் கொண்டான்.  திருதராஷ்டிரனை விடப் பல மடங்கு மூத்தவராய் இருந்தாலும் அவர் உடல் வளையாமல் நேராக இருந்தது.  திருதராஷ்டிரனை விடவும் வீரமும் வலிமையும் உள்ளவராய்க் காணப்பட்டார். கண்களிலிருந்து அவ்வப்போது கிளம்பிய தீக்ஷண்யமான ஒளி, விண்ணில் மின்னும் மின்னலை ஒத்திருந்தது.  ஆனால் அவர் முகம் சாந்தமாய்க் காணப்பட்டது.

மூன்று தலைமுறைகளாக இந்தக் குரு வம்சத்திற்குத் தாத்தா பீஷ்மர் ஒரு தூணாக இருந்து காத்து வருகிறார்.  இந்தக் குரு வம்சத்திற்கும் ஹஸ்தினாபுரத்தின் செல்வாக்குக்கும் அவர் செய்திருக்கும் சேவைகளைப் பட்டியலிட முடியாது.  தன் தந்தை ஷாந்தனு, சத்யவதியை மணப்பதற்காக, அவர் குரு வம்சத்தின் அரியணையைத் துறந்ததில் இருந்து இந்தக்குரு வம்சத்தின் மேன்மையைத் தவிர வேறொன்றையும் அவர் நினைத்துக் கூடப் பார்க்கவில்லை.  யுதிஷ்டிரனின் எண்ணங்கள் திருதராஷ்டிரனின் குரலால் தடைப்பட்டது. 

“குழந்தாய், யுதிஷ்டிரா, நீதானே?”  திருதராஷ்டிரன் குரலில் வலிய வரவழைத்துக் கொண்ட அன்பும், பாசமும் காணப்பட்டது.  பாண்டவர்களைக் காட்டிலிருந்து நகருக்கு அழைத்து வந்ததும், அவர்களைப் பிரியமுடனும், பாசத்துடனும் வளர்த்ததும், ஆயுதப்பயிற்சிக்கு ஏற்பாடுகள் செய்ததும், அவர்களை வலிமையானவர்களாக மாற்றியதும் தாத்தா பீஷ்மர் தான்.  அதே போல் தான் கெளரவர்களையும் பீஷ்மரே வளர்த்தார்.  அனைவரையும் ஒன்றாகவே துரோணரின் ஆயுதப் பயிற்சியில் ஈடுபடுத்தினார்.  ஆனால்??? ஆனால்??? பாண்டவர்களுக்கும், கெளரவர்களுக்கும் இப்படிப் பகைமை எப்படி ஏற்பட்டது?  எதனால் ஏற்பட்டது? யுதிஷ்டிரரால் புரிந்து கொள்ள இயலவில்லை.

Saturday, May 19, 2012

நாடு கடத்தப்பட்ட சகோதரர்கள்!

ஹஸ்தினாபுரத்தின் நம்பிக்கைக்கு உகந்த விதுரர் அளவான தாடியுடனும், பெரிய கண்களில் பிரகாசித்த ஒளியோடும், புன்முறுவலை எந்நேரமும் தாங்கி நிற்கும் முகத்துடனும், பார்த்தாலே வணங்கத் தக்கவராய், மரியாதைக்கு உரியவராய்க் காணப்பட்டார். அவர் திருதராஷ்டிரனின் தந்தைக்கும், அவரின் சேடிப் பெண்ணிற்கும் வியாசர் மூலம் பிறந்த பிள்ளை. என்றாலும் அவரை ஒரு தாசியின் மகன் என்று அந்த அரச குலத்தவர் எவரும் எண்ணவில்லை. அம்பிகையும், அம்பாலிகையும் வியாசரால் எவ்வாறு குழந்தைப் பேற்றைப் பெற்றார்களோ அவ்வாறே இந்தச் சேடிப் பெண்ணும் வியாசரால் குழந்தைபேறு அடைய நேரிட்டது.


அம்பிகாவுக்குக் கண் தெரியாத பிறவிக் குருடான திருதராஷ்டிரன் பிறக்கவும், மீண்டும் வியாசர் மூலம் இன்னொரு குழந்தையைப் பெற்றுக்கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்ட அவள், வியாசரிடம் போய்க் கேட்க இஷ்டமில்லாமல் தன் அந்தரங்கச் சேடியை அனுப்பி வைக்க விதுரர் பிறந்தார். சிறு வயதில் இருந்தே தன்னை அர்த்த சாஸ்திரத்திலும், மற்றப் பயிற்சிகளிலும் ஈடுபடுத்திக் கொண்ட விதுரர் ஹஸ்தினாபுரத்தின் முன்னேற்றமும், அதன் செல்வாக்கை அதிகப்படுத்துவதுமே தன் வாழ்நாள் லக்ஷியமாய்க் கொண்டார். அவருடைய பரந்த மனதையும், எவரையும் புண்படுத்தமல் பேசும் பேச்சையும், எவ்விதமான சூழ்நிலைகளையும் எதிர்கொள்ளும் உறுதியான மனத்தையும் பார்த்து வியந்த பீஷ்மர் அவரை ஹஸ்தினாபுரத்தின் முதல் அமைச்சராக ஆக்கி மகிழ்ந்தார்.

ஒரு யோகியைப் போல் எளிமையான வாழ்க்கை வாழ்ந்து வந்தார் விதுரர். எவருக்கும் எந்த விதமான சலுகையையும் காட்டாமல், தன் அதிகாரத்தின் மூலமே அனைத்தையும் எந்தவிதமான பிரச்னைகளும் இன்றி நிர்வகித்து வந்தார். அநாதைகளுக்கும், திக்கற்றவர்களுக்கும் தன் ஆதரவைப் பூரணமாய்க் காட்டினார். அதிலும் பாண்டுவின் ஐந்து குமாரர்கள் மேலும் விதுரருக்கு அபாரமான அன்பு. அதே போல் பாண்டவர்களும் அவரைத் தங்கள் தந்தையின் மாற்றாந்தாயின் மகன் எனக் கருதாமல் சொந்த சிறிய தந்தையாகவே கருதி வந்தனர். அவர் சொல்லைத் தட்டாமல் நிறைவேற்றினார்கள். இப்போது விதுரரின் முகம் மேகங்களால் மூடப்பட்ட சூரியனைப் போல் இருண்டு காணப்பட்டது.


யுதிஷ்டிரர் பீமனைப் பார்த்து மாளிகையைச் சுற்றிலும் வில்லாளிகள் வில்லும், அம்பும் தாங்கிக் காவல் காப்பது ஏன் எனக் கேட்டார். நம்மை எல்லாம் கெளரவர்களிடமிருந்து காக்கவே அவர்களைத் தாம் நியமித்ததாய் பீமன் கூறினான். யுதிஷ்டிரர் அமைதியாக, “பீமா, அவர்கள் அனைவரையும் திரும்ப அவர்கள் இடத்துக்கு அனுப்பி வை. நமக்கு இப்போது அவர்கள் தேவையில்லை.” என்றார். பீமன் ஏன் எனக் கேட்க, அர்ஜுனனும் யுதிஷ்டிரர் குரலில் இருந்த ஒரு விசித்திரமான தொனியைக் கேட்டு ஆச்சரியமடைந்து என்ன விஷயம் எனக் கேட்டான். யுதிஷ்டிரர், “ஏனெனில் நாம் அனைவரும் நாளை மறுநாள் ஹஸ்தினாபுரத்தை விட்டுச் செல்கிறோம். இங்கிருந்து வெளியேறுகிறோம்.” என்றார். அவர் குரலில் அசாதாரணமான அமைதி காணப்பட்டது.

 “ஏன்?” எனக் கொதித்தான் பீமன். மற்றவர்கள் பேச வாயின்றி யுதிஷ்டிரரையும், பீமனையும் மாறி மாறிப் பார்த்த வண்ணம் சிலையாக நின்றனர்.

 “ஏனெனில் அது தான் நம் அரசரான திருதராஷ்டிர மஹாராஜாவின் கட்டளை. அதற்கு நாம் கீழ்ப்படிந்தே ஆகவேண்டும்.”

“எங்கே செல்வோம்? காட்டுக்குள்ளா?” “இல்லை, வாரணாவதம் செல்கிறோம்.”

“இல்லை, அண்ணா, இல்லை. நான் திருதராஷ்டிரப் பெரியப்பா, மன்னிக்கவும் திருதராஷ்டிர அரசரின் கட்டளைக்குக் கீழ்ப்படிய மறுக்கிறேன். என்னை எவராலும் நாடு கடத்த முடியாது.”

யுதிஷ்டிரர் முகத்தில் வருத்தம் தோன்ற, “நான் ஒத்துக்கொண்டு வந்திருக்கிறேன் பீமா!” என்றார்.


இது எப்படி நடந்தது? அனைவருக்கும் இதே கேள்விதான். அன்றைய தினம் தன் வழக்கப்படி யுவராஜாவுக்கான கடமைகளைத் தனக்கென நியமிக்கப் பட்ட இடத்தில் இருந்து கவனித்துக் கொண்டிருந்த யுதிஷ்டிரரை, விதுரர் வந்து அழைத்தார். அரசன் திருதராஷ்டிரன் அவனை அழைப்பதாய்க் கூற மன்னனின் கட்டளைக்குக் கீழ்ப்படிந்து யுதிஷ்டிரனும் உடனே விதுரரோடு அங்கு சென்றார். செல்லும் போதே விதுரர், யுதிஷ்டிரனின் செவிகளில்,”குழந்தாய், ஏதோ விபரீதமாய் நடக்கப் போகிறது என்பதை அறிந்தேன். எதானாலும் நீ உன்னுடைய தைரியத்தையும், உறுதியையும் இழந்துவிடாதே!” என்றார். யுதிஷ்டிரனோ, பதிலுக்கு, “சித்தப்பா, என்னிடம் தைரியம் இருக்கிறதோ இல்லையோ தெரியாது. அதே போல் உறுதி படைத்தவனா என்பதும் அறியேன். ஆனால் நான் அந்தப் பரமாத்மாவிடம் மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளேன். அவன் என்ன நினைக்கிறானோ, என் மூலம் எதை நடத்திக்கொள்ள விழைகிறானோ, அவை எல்லாம் நன்மைக்கே என்று நினைக்கிறேன். நடப்பவை எல்லாம் நல்லதுக்கே!” என்று மிகவும் நம்பிக்கை தொனிக்கும் குரலில் கூறினான்.

Tuesday, May 15, 2012

சகோதரர்களின் கலக்கம்!

“ஆஹா, கோவிந்தன் மட்டும் இங்கிருந்தால் நம் பக்கம் வலுவடைந்துவிடும். நமக்கு வேண்டிய அனைத்து உதவிகளையும் செய்வான். “ பீமனும் கற்பனையில் ஆழ்ந்தான். குந்தியோ கிருஷ்ணன் செய்ததாய்ச் சொல்லப்படும் சாகசங்களைக் குறித்து உத்தவனை மீண்டும் மீண்டும் கேட்டறிந்தாள். அவனை இன்னமும் கோவிந்தன் என்றே அழைக்கின்றனரா என்றும் கேட்டாள். யாதவர்களில் சிலருக்கு அவன் இன்னமும் கோவிந்தனே என்று சொன்ன உத்தவன், தன்னைப் பொறுத்தவரையிலும் கிருஷ்ணன் என்பதைத் தவிர வேறு பெயரால் அழைப்பது சரியாயில்லை எனச் சொன்னான். அப்படி அழைப்பதே தனக்கு மன நிறைவைத் தருவதாய்க் கூறினான். அனைவரும் கிருஷ்ணன் வந்து சேர இன்னும் மூன்று வாரங்கள் ஆகுமே எனக் கவலையுடன் பேசிக் கொண்டனர். “வரட்டும், வரட்டும். அவன் வருகையில் ருக்மிணியை அழைத்து வருவானா? நான் அவளைப் பார்க்க வேண்டும். என் கோவிந்தனுக்கு ஏற்ற மனைவி தானா என அறிய வேண்டும்.” என்றாள் குந்தி. “அத்தையாரே! தன்னைப் போன்ற பசுக்களையும், கால்நடைகளையும் மேய்க்கும் இடையனுக்கு விதர்ப்ப நாட்டின் இளவரசி எப்படி தகுதியான மனைவியாக முடியும் எனக் கிருஷ்ணன் அடிக்கடி சொல்வான். ருக்மிணிக்குக் கோபம் தலைக்கு ஏறும்.” “ம்ம்ம்ம்ம், கண்ணனுக்குச் செய்தி அனுப்பி ருக்மிணியை உடன் அழைத்து வரச் சொல்ல வேண்டும். ஆஹா, அவள் என் கால்களில் விழுந்து வணங்க வேண்டுமே! நான் கண்ணனை விட மூத்தவன் ஆயிற்றே! இந்த அனுபவமும் புதியதாய் இருக்கும்! எப்படி எனப் பார்த்துவிட வேண்டும். அதோடு ருக்மிணி கண்ணனைக் கல்யாணம் செய்து கொள்ளப் பட்ட சிரமம் எல்லாம் ஒரு பக்கம் இருக்க, அவள் அவற்றிற்கெல்லாம் தகுதியானவளா எனத் தெரிந்து கொள்ளவும் வேண்டும். நானாக இருந்திருந்தால் என்னைக் காதலிக்கும் பெண்ணைத் தோள்களில் சுமந்து கொண்டு வந்து கல்யாணம் செய்திருப்பேன்.” பீமன் வழக்கமான உற்சாகத்தோடு கூறினான். குந்தி இப்போது, ஷாயிபாவைப் பற்றிக் கேட்டாள். அவள் எப்படி இருப்பாள் என்றும், ருக்மிணியும், ஷாயிபாவும் சண்டை போட்டுக்கொள்வார்களா என்றும் கேட்டாள். உத்தவன் உடனே சுதாரித்துக் கொண்டு, “ஷாயிபா ஓர் அற்புதமான பெண்மணி. அவளால்தான் அவள் உதவியால் தான் ருக்மிணியால் கண்ணனைக் கல்யாணம் செய்து கொள்ள முடிந்தது. சுயம்வர மண்டபத்தில் இருந்து ருக்மிணி தப்ப ஷாயிபா தான் உதவி செய்தாள். “ அவன் பேசிக் கொண்டிருக்கையிலேயே நகுலன் வருவது தெரிந்தது. நகுலன் வந்து கொண்டிருந்தான். ஒல்லியாக, உயரமாகக் கண்களிலே உல்லாசமான பார்வையைத் தேக்கிக் கொண்டு பீமனையும், அர்ஜுனனையும் விடச் சிறப்பாக ஆடைகள் அணிந்து காணப்பட்டான். உள்ளே நுழைந்தவன் தாய் குந்தியையும், சகோதரர்களையும் வணங்கிய வண்ணமே, பீமனைப் பார்த்து, “நடு அண்ணா, நீங்கள் கூறியபடி செய்து முடித்துவிட்டேன்.” என்று தெரிவித்தான். “என்ன ஆயிற்று?” குந்தி பதற, பீமன், துரியோதனனின் திட்டங்களை முறியடிக்கப் பதில் திட்டம் போட்டிருப்பதாய்க் கூறியதோடு தாயை பயமுறுத்த வேண்டி, பயங்கரமாய்ப் பார்த்துக் கொண்டு சிரித்தான். குந்தி “அவர்கள் உன் பெரியப்பா மக்கள், அவர்களை ஒன்றும் செய்யாதே!” என்று கெஞ்சினாள். பீமனோ, “அவர்கள் விரும்புவது எங்கள் ரத்தத்தைக் குடிக்க வேண்டும் என. அது மட்டும் பரவாயில்லையா?” என்று கோபத்தோடு வினவினான். “இல்லை, பீமா, இல்லை. நீ எல்லாவற்றையும் தவறான கோணத்திலேயே பார்க்கிறாய். உன் அன்பால் அவர்களை வெல்லலாம். முயன்று பார். பதிலுக்குப் பதில், ரத்தத்துக்கு ரத்தம் என்றெல்லாம் சண்டைப் போட வேண்டாம். அவர்களிடம் அன்பு காட்டு. உன் அன்பால் அவர்களை மாற்ற முயன்று பார். “ குந்தி கெஞ்சினாள். “ இவர்களிடம் அன்பு காட்டுவதே வீணான வேலை. தகுதியானவர்களுக்கே அன்பு காட்ட வேண்டும். இவர்களைப் போன்ற கொடியவர்களுக்கு அன்பு காட்டக் கூடாது. “ பீமன் கோபமாய்ப் பேசுகையில் யாரோ வரும் காலடிச் சப்தம் கேட்டது. அனைவரும் திரும்பிப் பார்க்க யுதிஷ்டிரர் வந்து கொண்டிருந்தார். அர்ஜுனனையே பெரிய அளவில் செய்தாற்போல் காட்சி அளித்த அவரிடம் இல்லாத எழிலும், நளினமும் அர்ஜுனனிடம் காணப்பட்டது. தீக்ஷண்யமான கண்களும், தாடியும் அவரின் புத்தி கூர்மையை அதிகப் படுத்திக் காட்டியதோடு அல்லாமல் வயதையும் கூட்டிக் காட்டியது. நற்குணங்களும் பெரியோருக்குக் காட்டும் மரியாதையும், பணிவும் அவரோடு ஒட்டிப் பிறந்தது போல் வெகு இயல்பாகப் பொருந்திக் காணப்பட்டன. யுதிஷ்டிரர் தனியாக வரவில்லை; கூடவே விதுரரும் வந்தார்.