Tuesday, May 15, 2012

சகோதரர்களின் கலக்கம்!

“ஆஹா, கோவிந்தன் மட்டும் இங்கிருந்தால் நம் பக்கம் வலுவடைந்துவிடும். நமக்கு வேண்டிய அனைத்து உதவிகளையும் செய்வான். “ பீமனும் கற்பனையில் ஆழ்ந்தான். குந்தியோ கிருஷ்ணன் செய்ததாய்ச் சொல்லப்படும் சாகசங்களைக் குறித்து உத்தவனை மீண்டும் மீண்டும் கேட்டறிந்தாள். அவனை இன்னமும் கோவிந்தன் என்றே அழைக்கின்றனரா என்றும் கேட்டாள். யாதவர்களில் சிலருக்கு அவன் இன்னமும் கோவிந்தனே என்று சொன்ன உத்தவன், தன்னைப் பொறுத்தவரையிலும் கிருஷ்ணன் என்பதைத் தவிர வேறு பெயரால் அழைப்பது சரியாயில்லை எனச் சொன்னான். அப்படி அழைப்பதே தனக்கு மன நிறைவைத் தருவதாய்க் கூறினான். அனைவரும் கிருஷ்ணன் வந்து சேர இன்னும் மூன்று வாரங்கள் ஆகுமே எனக் கவலையுடன் பேசிக் கொண்டனர். “வரட்டும், வரட்டும். அவன் வருகையில் ருக்மிணியை அழைத்து வருவானா? நான் அவளைப் பார்க்க வேண்டும். என் கோவிந்தனுக்கு ஏற்ற மனைவி தானா என அறிய வேண்டும்.” என்றாள் குந்தி. “அத்தையாரே! தன்னைப் போன்ற பசுக்களையும், கால்நடைகளையும் மேய்க்கும் இடையனுக்கு விதர்ப்ப நாட்டின் இளவரசி எப்படி தகுதியான மனைவியாக முடியும் எனக் கிருஷ்ணன் அடிக்கடி சொல்வான். ருக்மிணிக்குக் கோபம் தலைக்கு ஏறும்.” “ம்ம்ம்ம்ம், கண்ணனுக்குச் செய்தி அனுப்பி ருக்மிணியை உடன் அழைத்து வரச் சொல்ல வேண்டும். ஆஹா, அவள் என் கால்களில் விழுந்து வணங்க வேண்டுமே! நான் கண்ணனை விட மூத்தவன் ஆயிற்றே! இந்த அனுபவமும் புதியதாய் இருக்கும்! எப்படி எனப் பார்த்துவிட வேண்டும். அதோடு ருக்மிணி கண்ணனைக் கல்யாணம் செய்து கொள்ளப் பட்ட சிரமம் எல்லாம் ஒரு பக்கம் இருக்க, அவள் அவற்றிற்கெல்லாம் தகுதியானவளா எனத் தெரிந்து கொள்ளவும் வேண்டும். நானாக இருந்திருந்தால் என்னைக் காதலிக்கும் பெண்ணைத் தோள்களில் சுமந்து கொண்டு வந்து கல்யாணம் செய்திருப்பேன்.” பீமன் வழக்கமான உற்சாகத்தோடு கூறினான். குந்தி இப்போது, ஷாயிபாவைப் பற்றிக் கேட்டாள். அவள் எப்படி இருப்பாள் என்றும், ருக்மிணியும், ஷாயிபாவும் சண்டை போட்டுக்கொள்வார்களா என்றும் கேட்டாள். உத்தவன் உடனே சுதாரித்துக் கொண்டு, “ஷாயிபா ஓர் அற்புதமான பெண்மணி. அவளால்தான் அவள் உதவியால் தான் ருக்மிணியால் கண்ணனைக் கல்யாணம் செய்து கொள்ள முடிந்தது. சுயம்வர மண்டபத்தில் இருந்து ருக்மிணி தப்ப ஷாயிபா தான் உதவி செய்தாள். “ அவன் பேசிக் கொண்டிருக்கையிலேயே நகுலன் வருவது தெரிந்தது. நகுலன் வந்து கொண்டிருந்தான். ஒல்லியாக, உயரமாகக் கண்களிலே உல்லாசமான பார்வையைத் தேக்கிக் கொண்டு பீமனையும், அர்ஜுனனையும் விடச் சிறப்பாக ஆடைகள் அணிந்து காணப்பட்டான். உள்ளே நுழைந்தவன் தாய் குந்தியையும், சகோதரர்களையும் வணங்கிய வண்ணமே, பீமனைப் பார்த்து, “நடு அண்ணா, நீங்கள் கூறியபடி செய்து முடித்துவிட்டேன்.” என்று தெரிவித்தான். “என்ன ஆயிற்று?” குந்தி பதற, பீமன், துரியோதனனின் திட்டங்களை முறியடிக்கப் பதில் திட்டம் போட்டிருப்பதாய்க் கூறியதோடு தாயை பயமுறுத்த வேண்டி, பயங்கரமாய்ப் பார்த்துக் கொண்டு சிரித்தான். குந்தி “அவர்கள் உன் பெரியப்பா மக்கள், அவர்களை ஒன்றும் செய்யாதே!” என்று கெஞ்சினாள். பீமனோ, “அவர்கள் விரும்புவது எங்கள் ரத்தத்தைக் குடிக்க வேண்டும் என. அது மட்டும் பரவாயில்லையா?” என்று கோபத்தோடு வினவினான். “இல்லை, பீமா, இல்லை. நீ எல்லாவற்றையும் தவறான கோணத்திலேயே பார்க்கிறாய். உன் அன்பால் அவர்களை வெல்லலாம். முயன்று பார். பதிலுக்குப் பதில், ரத்தத்துக்கு ரத்தம் என்றெல்லாம் சண்டைப் போட வேண்டாம். அவர்களிடம் அன்பு காட்டு. உன் அன்பால் அவர்களை மாற்ற முயன்று பார். “ குந்தி கெஞ்சினாள். “ இவர்களிடம் அன்பு காட்டுவதே வீணான வேலை. தகுதியானவர்களுக்கே அன்பு காட்ட வேண்டும். இவர்களைப் போன்ற கொடியவர்களுக்கு அன்பு காட்டக் கூடாது. “ பீமன் கோபமாய்ப் பேசுகையில் யாரோ வரும் காலடிச் சப்தம் கேட்டது. அனைவரும் திரும்பிப் பார்க்க யுதிஷ்டிரர் வந்து கொண்டிருந்தார். அர்ஜுனனையே பெரிய அளவில் செய்தாற்போல் காட்சி அளித்த அவரிடம் இல்லாத எழிலும், நளினமும் அர்ஜுனனிடம் காணப்பட்டது. தீக்ஷண்யமான கண்களும், தாடியும் அவரின் புத்தி கூர்மையை அதிகப் படுத்திக் காட்டியதோடு அல்லாமல் வயதையும் கூட்டிக் காட்டியது. நற்குணங்களும் பெரியோருக்குக் காட்டும் மரியாதையும், பணிவும் அவரோடு ஒட்டிப் பிறந்தது போல் வெகு இயல்பாகப் பொருந்திக் காணப்பட்டன. யுதிஷ்டிரர் தனியாக வரவில்லை; கூடவே விதுரரும் வந்தார்.

No comments: