ஷகுனி
மஹாபாரதத்தின் முக்கியக் கதாபாத்திரம். காந்தார
நாட்டு இளவரசன். ஆனால் அவன் ஏன் இங்கே குரு
வம்சத்தினரோடு இருந்து வருகிறான்? ஹஸ்தினாபுரத்தில்
ஏன் இருக்கிறான்? அதைக் கொஞ்சம் பார்த்துவிட்டு
மேலே தொடருவோம். ஏற்கெனவே சொல்லிவிட்ட நினைவு
இருக்கு என்றாலும் மீண்டும் நினைவூட்டிக் கொள்வோம். காந்தார அரசன் சுலபன்/சுவலன், நூற்றுக்கும் மேல்
பிள்ளைகளும், காந்தாரி என்ற பெண்ணும் உடையவன்.
உரிய வயதில் மகளுக்குத் திருமணம் செய்ய நினைத்தான். அரண்மனை ஜோதிடர்கள் இளவரசி காந்தாரியின் ஜாதகப்
படி அவளுக்கு இரண்டு திருமணங்கள் என்றும், முதல் கணவன் உயிருடன் இருக்கமாட்டான், அவளை
மணந்ததுமே உயிரை விட்டு விடுவான் என்றும் திட்டவட்டமாகத் தெரிவித்து விட்டனர். அப்போது தான் குரு வம்சத்து இளவரசர்களுக்குப் பெண்
கேட்டு பீஷ்மர் தூது அனுப்பி இருந்தார். இந்தத் தகவல் அவர்கள் காதுகளுக்கு எட்டாவண்ணம்
பார்த்துக் கொள்ள வேண்டுமே! சுவலன் யோசித்து
முடிவெடுத்தான். தன் மகளுக்கு ஓர் ஆட்டுக்கடாவை
மணமகனாகத் தேர்ந்தெடுத்து ஆட்டுக்கடாவோடு மகளுக்குத் திருமணமும் செய்வித்து அந்த ஆட்டை
உடனே வெட்டி பலி கொடுக்கவும் கட்டளையிட்டான்.
அவ்வாறே நடந்தது. ஆனால் இவை அனைத்தும்
பரம ரகசியமாகப் பாதுகாக்கப் பட்டது. அப்படித்
தான் சுவலன் நினைத்து வந்தான்.
பின்னர்
திருதராஷ்டிரனோடு காந்தாரிக்குத் திருமணம் முடிந்து அவளும் ஹஸ்தினாபுரம் வந்து விட்டாள். அவளுடன் வந்த சில சேடியர்களின் பேச்சின் மூலம் காந்தாரி
ஒரு விதவை எனக் கேள்விப் படுகிறார் பீஷ்மர்.
இந்த விஷயம் பாண்டுவின் காதுகளிலும் விழுகிறது. உடனே ஒற்றர்களை காந்தாரத்துக்கு அனுப்பி உண்மை எதுவெனக் கண்டறியும்படி
பீஷ்மர் கூறினார். ஒற்றர்களும் காந்தாரத்தில்
உளவறிந்து காந்தாரிக்கு ஓர் ஆட்டுக்கடாவை மணமுடித்ததையும், அப்போதைய சட்டப்படி அவள்
விதவையே என்றும் சொன்னார்கள். மேலும் ஆடு பலி
கொடுத்ததாலேயே திருதராஷ்டிரன் உயிர் பிழைத்தான் என்றும் இல்லை எனில் அவன் உயிரிழந்திருப்பான்
என்றும் ஒற்றர்கள் கூறவே பீஷ்மருக்கு உண்மையை மறைத்துக் கல்யாணம் செய்து வைத்த காந்தார
அரசன் மேல் கோபம் வந்து அவர்கள் மேல் போர் தொடுக்கிறார். எவராலும் வெல்ல முடியாத பீஷ்மருக்குப் பாண்டுவும்
துணைக்குச் செல்ல காந்தார அரசனும், இளவரசர்களும் சிறைப்பிடிக்கப்பட்டு ஹஸ்தினாபுரம்
கொண்டு சிறையில் அடைக்கப்படுகிறார்கள்.
பீஷ்மருக்கு இருந்த கோபத்தில் அவர்களைக் கொல்ல வேண்டும் என நினைத்தாலும் அப்படிச் செய்வது தர்ம விரோதம் என்று புரிந்தவராய் தினமும் ஒரு கைப்பிடி அரிசி மட்டுமே அவர்கள் நூற்றுவருக்கும் உணவாக அளிக்கச் சொல்கிறார். ஒரு கைப்பிடி அரிசியில் ஒரு மனிதனே உண்ண முடியாதபோது காந்தார அரசனும், அவனின் பிள்ளைகள் நூறுபேரும் உண்பது எப்படி? இன்னும் கொஞ்சம் உணவு தா எனக் கேட்பதும் அரசர்களுக்கு உரிய தர்மம் இல்லை; அதுவும் பெற்ற மகள் வீட்டில் உணவே அளிக்கவில்லை என்றாலும் கேட்கலாம்; தினம் ஒரு கைப்பிடி உணவு அளிக்கையில் போதவில்லை என்பதோ, சிறையிலிருந்து தப்பிப்பதோ சரியல்ல என்ற முடிவுக்கு வந்த அனைவரும், தங்களில் இளையவன் ஆன ஷகுனியைத் தேர்ந்தெடுத்து அந்தக் கைப்பிடி அரிசியைத் தினமும் அவன் ஒருவனையே உண்ணும்படி வற்புறுத்தினார்கள். குரு வம்சத்தினரைப் பழி வாங்க அவன் ஒருவனாவது மீதம் இருக்க வேண்டும் என்று அவனிடம் எடுத்துக் கூறினார்கள். ஷகுனியின் கண்ணெதிரே அவன் குடும்பத்தினர் ஒவ்வொருவராக மடிந்து வந்தனர். ஒரு நாள் சுவலன் ஷகுனியின் கால் ஒன்றை கணுக்காலில் அடித்து உடைத்தான். ஷகுனியிடம், “ இனி நீ நன்றாக முன்போல் நடக்க இயலாது; நொண்டி நொண்டி தான் நடப்பாய். நொண்டும் ஒவ்வொரு முறையும் கெளரவர்களைப் பழி வாங்க வேண்டியதன் காரணத்தை நினைவு கூர்ந்து வா. அவர்கள் உனக்கும் நம் வம்சத்துக்கும் செய்த அநீதியை ஒரு போதும் மறவாதே!” என்று கூறினான்.

நன்றாக தாயம் ஆடுவதும், சூதாட்டத்தில் பெரு விருப்பம் கொண்டவன் என்பதும் தகப்பன் ஆன
சுவலன் நன்கு அறிவான். தான் சாகும் தருவாய்
நெருங்கிவிட்டதை அறிந்த சுவலன் ஷகுனியை அழைத்து, “ நான் இறந்ததும் என் கைவிரல் எலும்புகளால்
தாயம் ஆடும் தாயக்கட்டையை உருவாக்கு. அதில்
முழுதும் என் ஜீவன் நிரம்பி இருக்கும். கெளரவர்கள்
பால் கொண்ட என் ஆத்திரமும் நிரம்பி இருக்கும்.
நீ அந்த தாயக்கட்டையை உருட்டி என்ன கேட்கிறாயோ அது தான் வரும். நீ விரும்பும் வண்ணமே எண்ணிக்கை விழும். நீயே வெற்றி பெற்று வருவாய்!’ என்று கூறினான். சிறிது காலத்தில் சுவலனும் இறந்து போனான். அனைவரும் இறக்க ஷகுனி ஒருவனே மிஞ்சினான். அவன் மிகவும் இளையவனாக இருந்த காரணத்தாலும் காந்தார
நாட்டுக்கு ஒரே வாரிசாக இருந்ததாலும் பீஷ்மரின் கண்காணிப்பில் ஹஸ்தினாபுர அரண்மனையிலேயே
வளர்ந்தான். ஒவ்வொரு நொடியும், ஒவ்வொரு நாளும்,
ஒவ்வொரு கணமும் கெளரவர்களை எவ்விதம் தான் பழி வாங்குவது என்பதிலேயே தன் மூளையைச் செலவழித்தான். வெளிப்பார்வைக்குக் கெளரவர்களின் நண்பன் போல் காட்டிக்
கொண்டு பீஷ்மர் எப்படித் தன் குடும்பத்தை அழித்தாரோ அதே போல் அவர் குடும்பத்தின் கடைசி
வாரிசு வரை அழிக்கத் திட்டம் தீட்டினான். அவனுக்கு
துரியோதனனின் ஆத்திரம், ஆங்காரம், பேராசை, பொறாமை ஆகியன உதவி செய்தன.