Saturday, July 25, 2015

கண்ணனின் கனவில் புதிய நகரம்!

கிருஷ்ணனையே பார்த்துக் கொண்டிருந்த பீமனுக்கு அவன் தன்னுள் ஆழ்ந்து போய் ஏதோ கனவுலகில் இருக்கிறான் என்பதும், அவன் மனதுள் அந்தக் கனவு நகரம் தோன்றிக் கொண்டிருக்கிறது என்பதும் புரிந்தது. இந்த மாறுதலுக்கான காரணத்தையும் அவன் புரிந்து கொண்டான். கிருஷ்ணனின் இந்த உணர்வுகள் அவனுள்ளும் மாற்றத்தை ஏற்படுத்தியது. அவனும் அதில் ஆழ்ந்தான். அவனுள்ளும் கனவு நகரம் விரிந்தது. பரந்தது. மாபெரும் சாம்ராஜ்யம் தோன்றியது. “கிருஷ்ணா! ஆம்! அப்படி ஓர் சாம்ராஜ்யம், தர்ம சாம்ராஜ்யம் உருவாக வேண்டும். அங்கே பெண்கள் இரவு நேரத்திலும் எவ்விதத் தொல்லையும், அச்சமும் இல்லாமல் தன்னந்தனியாகப் பயணிக்க வேண்டும். சுதந்திரமாக நடமாட வேண்டும். எனக்குப் பிறக்கப் போகும் மகன்கள் அதர்மத்தை எதிர்த்துப் போராடும் போருக்குத் தலைமை வகித்து நடத்துவார்கள்; அதில் வெற்றி காண்பார்கள். தங்கமும், வெள்ளியும், சர்வசாதாரணமாக இறைபட வேண்டும். தேவைப்பட்டவர்கள் தங்கள் தேவைக்கு எடுத்துச் செலவு செய்ய வசதியாக இருக்க வேண்டும். அனைவருக்கும் விநியோகிக்க வேண்டும். கோயில்களில் நல்ல முறையில் எல்லாக் காலங்களிலும் வழிபாடுகள் நடந்து கோயிலின் கடவுளர் மட்டுமின்றி அவற்றின் தலைமைப் பூசாரிகளும் நல்ல முறையில் நம்மை வழிநடத்த வேண்டும். என்னால் முடிந்தால் பலஹீனமாய் இருக்கும் ஆரிய இனப் பெண்கள், ஆண்கள் அனைவரையும் வலுவுடன் உள்ளவர்களாய் பலத்துடன் உள்ளவர்களாய் மாற்றிக் காட்டுவேன்.”

“நீ என்ன நினைக்கிறாய் என்பதும், உனக்கு எது வேண்டும் என்பதும் நான் நன்கறிவேன் பீமா! அதனால் தான் உன்னைத் தேடி இங்கே வந்து உன்னுடம் இருக்க விரும்புகிறேன்.”

“அப்படி எனில் வா! கிளம்பு! அப்படி ஓர் நகரைத் தேடிச் செல்வோம்!”

“இரு பீமா! இரு! சற்றுப் பொறு! அவசரப்படாதே! முதலில் நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை முடிவு செய்வோம். நம்மிடம் வெறும் நகரம் மட்டும் இருந்தால் போதுமா? அதில் வசிக்க வேதம் படித்த வேதத்தின் உட்பொருளை உணர்ந்து வாழ்க்கை நடத்தும் வேத பிராமணர்கள் தேவை! தைரியமும், மன உறுதியும் கொண்ட உண்மையாக நடக்கும் க்ஷத்திரியர்கள் தேவை! வியாபாரத்தில் ஈடுபட்டு நாட்டுக்கு உண்மையாக உழைத்துப் பெரும் செல்வம் ஈட்டி அதன் மூலம் பலருக்கும் பயன் கிடைக்கச் செய்யும் வைசியர்கள் தேவை! அவர்கள் மூலம் வியாபாரம் மட்டுமின்றி நிலம், குதிரைகள், கால்நடைச் செல்வங்கள் போன்றவையும் தேவை. இவற்றைப் பராமரிக்கும் ஆட்கள் தேவை. எல்லாவற்றுக்கும் மேல் மன உறுதியுடன் நம்முடன் வாழ்ந்து நம் குழந்தைகளைப் பெற்றெடுக்கத் தயாராக இருக்கும் வீரப் பெண்மணிகள் தேவை! இந்தக் குழந்தைகள் மூலம் நாம் புதியதொரு சமுதாயத்தை உருவாக்குவோம்.”  பீமனின் தோள்களைப் பிடித்த வண்ணம் கண்ணன் கூறினான்.

“ம்ம்ம், நமக்கு அனைத்தும் கிடைக்கும்! ஆனால் அதற்குக் கடும் முயற்சிகள் செய்யவேண்டும். காலம் நிறைய ஆகிவிடும்.” பெருமூச்சுடன் கூறிய பீமன் இவை எல்லாம் திடீர் என ஒரே நாளிலோ, ஒரே இரவிலே நடக்கக் கூடிய ஒன்றல்ல என்பதைப் புரிந்து கொண்டான்.

“பீமா! நாம் என்ன செய்தாலும் அதை நன்றாக, நிதானமாகப் பல முறை யோசித்துச் செய்ய வேண்டும். அதைச் சரியாகவும் செய்ய வேண்டும். நாம் காண்டவப்ரஸ்தத்தை ஒரு வருஷத்தில் கட்டி முடிப்போம். அதன் பின்னரே நான் துவாரகை செல்வேன்.”

“ஆனால், அது எவ்வாறு முடியும் கண்ணா? ஒரு வருஷத்தில் எல்லாம் திடீரென்று முளைத்து விடுமா?”

“நம்மால் முடியும்!உங்கள் ஐவரிடமும் துருபதன் கொடுத்த செல்வம் இருக்கிறது. அவன் உங்களுக்குப் பணிபுரியக் கொடுத்த வீரர் படை இருக்கிறது.  சீதனமாகக் கொடுத்த ரதங்கள், குதிரைகள், மாட்டு வண்டிகள், அவற்றுடன் உள்ள பொருட்கள், கால்நடைச் செல்வங்கள் அனைத்தும் உள்ளன. என் தரப்பில் நீ கவலையே அடைய வேண்டாம். யாதவர்கள் அனைவரும் தங்கள் அனைத்து வளங்களையும் உங்களுக்காக அர்ப்பணிப்பார்கள். மணிமான் அவனுடைய நாகர்களை உங்கள் நகர நிர்மாணத்திற்காக வேலைகள் செய்யவும், உதவிகள் செய்யவும் அழைத்து வருவான்.”

“ஆனால் அது மட்டும் எப்படிப் போதும்?”

“போதாது தான்! அதையும் நான் அறிவேன்! பீமா! நாம் நம்முடைய குலகுருவான வியாசரைச் சந்தித்து இதைக் குறித்துப் பேசி அவருடைய ஆசிகளைப் பெற்றாக வேண்டும். அது முக்கியம். அவருடைய ஆசிகள் இல்லாமல் எந்த ஒரு வேலையும் முற்றுப் பெறாது. நகரை நிர்மாணிக்கும் வரை அவரை நம்முடன் இருக்கச் செய்ய வேண்டும்.”

“ஆஹா! அது வேறா? அவர் எனக்கு ஆசிகள் அளிக்க மாட்டார். எனக்கு உதவவும் மாட்டார். எனக்கு மட்டும் தனியாக உதவுவாரா? மாட்டார்! எனக்குத் தெரியும்! அவர் நாங்கள் ஐவரும் சேர்ந்து தான் இதை ஒருமனதாகச் செய்ய வேண்டும் என்பார். என் மூத்தவன் ஆன யுதிஷ்டிரனை விட்டு விட்டு இதைச் செய்தால் நான் தர்மத்திலிருந்து பிறழ்ந்தவன் என்பார். அவன் இல்லை எனில் இந்த மாபெரும் வேலையில் அதர்மமே இருப்பதாகக் கூறுவார்.”

அப்போது கிருஷ்ணன் ஏதோ புதிதாக நினைவில் வந்தவன் போலத் தன் உதடுகளின் மீது விரலை வைத்து யோசித்தான். பின்னர், “திருதராஷ்டிரனை வசப்படுத்தி அவன் மூலம் ஹஸ்தினாபுரத்துச் செல்வங்களில் ஒரு பகுதி, குதிரைகள், கால்நடைச் செல்வங்கள், ஆட்கள் எனக் கேட்டு வாங்கினால் என்ன?” என்று கேட்டவனுக்கு அது சரியான யோசனையாகத் தோன்றவே பீமன் முதுகில் ஓங்கித் தட்டினான்! “ஆம் அது தான் சரி!  திருதராஷ்டிரனிடம் பேசி இதைச் செய்ய வைப்போம். உன்னுடைய கனவுகள் நனவாவதற்கு இதுவே சரியான சுலபமான வழி.”

ஆனால் பீமன் தலையை ஆட்டினான். “ம்ஹூம், பெரியப்பா எங்களுக்கு எதுவும் தர மாட்டார். தர அவருக்கு விருப்பம் இராது!” என்றான் சோகமாக.

கிருஷ்ணன் மீண்டும் யோசனையில் ஆழ்ந்தான். பின்னர் இந்தப் பிரச்னையிலிருந்து விடுபட ஓர் வழி கண்டு பிடித்தவன் போல் பேச ஆரம்பித்தான். “பீமா! நானே நேரில் போய் திருதராஷ்டிரனிடம் பேசி அவரை இவை அனைத்தையும் கொடுக்க வைக்கிறேன். நாம் கேட்பதெல்லாம் அவர் கொடுத்தாக வேண்டும்.” என்றான்.

“முட்டாள்தனமாகப் பேசாதே, கிருஷ்ணா! அவர் தன் நூறு மகன்களுக்காகவும், தன் பேரப்பிள்ளைகளுக்காகவும், மற்றும் ஹஸ்தினாபுரத்துக்காகவும் அந்தச் செல்வங்களை எல்லாம் காப்பாற்றிக் கொள்ளவே முனைவார்.”

“அப்படியா! சரி பார்க்கலாம்.” என்றான் கிருஷ்ணன். பின்னர் வேறு வழி கண்டு பிடிக்க முனைபவனைப் போல் யோசனையில் ஆழ்ந்தான். “இதோ பார் பீமா! நான் உனக்கு ஒரு வழியைக் காட்டுகிறேன். அது தான் நல்ல வழி. அந்த அரசன் திருதராஷ்டிரன் தாத்தா பீஷ்மரை மனம் நோகச் செய்யும்படி விட மாட்டார். அவர் மனம் சந்துஷ்டி அடைய வேண்டும் என்றே நினைப்பார்.. ஆகவே உன் சகோதரனை அரசனாக வேண்டாம் என்று சொல்ல யோசிப்பார். அதன் மூலம் பீஷ்மரின் வெறுப்பைச் சம்பாதிக்க நேரும் என்பதை அவர் அறிவார். ஆனால் அவருக்கு அதே சமயம் தன் மக்கள் அனைவரும் ஹஸ்தினாபுரத்தை ஆள வேண்டும் என்பதையே விரும்புகிறார். அதைச் செயலாக்கவே விரும்புகிறார். அவர் எண்ணத்துக்குத் தடையாக இருப்பது நீ ஒருவன் தான். உன்னைக் கண்டே அவர் அஞ்சுகிறார்.”

“ஆம், அது சரியே!”

“சரி, இப்போது நாம் போய் அவரிடம் சொல்வோம்: “துரியோதனனே ஹஸ்தினாபுரத்தை ஆளட்டும்! ஏனெனில் அவன் தற்கொலை செய்து கொள்வதை நாங்கள் விரும்பவில்லை! ஆகவே, நாங்கள் புதியதாக ஓர் சாம்ராஜ்யத்தைத் தேடிச் சென்று கண்டு கொண்டு புதியதொரு நகரை நிர்மாணிப்பதிலேயே ஆவல் கொண்டிருக்கிறோம். நாங்கள் செல்கிறோம். யமுனைக்கரையில் காடுகளை அழித்துக் காண்டவப்ரஸ்தத்தை நிர்மாணிக்கிறோம்.” என்று சொல்லலாம்.” என்றான் கிருஷ்ணன்,

Thursday, July 23, 2015

கனவு நகரம் நிர்மாணிக்கப் போகும் இடம்!

கிருஷ்ணன் தோள்களில் தன் கரங்களை அன்புடனும், ஆதரவுடனும் வைத்த பீமன், “கிருஷ்ணா! அந்தக் கனவு நகரை நாம் எவ்விதம் நிர்மாணிக்கப் போகிறோம்? நீ எல்லாவற்றையும் யோசித்து வைத்திருக்கிறாய் போல் இருக்கிறதே!” என்று கேட்டான். தன் தலையைத் தடவிக் கொண்டான் கிருஷ்ணன். பின்னர் யோசனையில் ஆழ்ந்தான். அதன் பின்னர் கனவில் பேசுவது போல் பேச ஆரம்பித்தான்.” நான் உன் இடத்தில் இருந்தால் ஹஸ்தினாபுரத்தில் இருந்து தொலைதூரத்தில் அந்த நகரை நிர்மாணிப்பேன்.” என்றான். “நீ சொல்வது சரியே கிருஷ்ணா! துரியோதனனின் நிழல் கூட அங்கே விழக் கூடாது! அப்படி ஓர் இடம் தேர்ந்தெடுக்க வேண்டும்.” என்றான் பீமன்.

“யமுனையைப் பற்றி நீ என்ன நினைக்கிறாய்? யமுனையின் ஒவ்வொரு அலையையும் நான் நன்கறிவேன். நீர் மட்டம் எப்போது உயரும், எப்போது தாழும் என்பதிலிருந்து, எப்போது வெள்ளம் வரும் நேரம், வடியும் நேரம் என அனைத்தும் அறிவேன்.  நான் யமுனையிடம் மிகுந்த அன்பு செலுத்துகிறேன். யமுனையின் கரையில் உள்ள காடுகள் அனைத்தும் எனக்குப் பழக்கமானவை. அதன் ஒவ்வொரு செடியையும், மரத்தையும் நான் நன்கறிவேன். ஒவ்வொரு மூலை முடுக்கையும் நன்கு கவனித்து வைத்திருக்கிறேன்.”

“கிருஷ்ணா, கிருஷ்ணா! நீ சொல்வதைப் பார்த்தால் மத்ராவை மீண்டும் நிர்மாணிக்கச் சொல்கிறாய் எனத் தோன்றுகிறதே! அப்படியா?” என்றான் பீமன்.

“ஆஹா! அது எங்கனம்? அது யாதவர்களின் நகரம்! நான் பாண்டுவின் குமாரர்களுக்கென ஒரு தனி நகரத்தை நிர்மாணிக்கச் சொல்கிறேன்.”

“ஆனால் அது எங்கே அப்பா?”

“ம்ம்ம்ம், என்னிடம் மணிமான் ஓர் விஷயம் சொன்னான். உன்னுடைய முன்னோர்கள் ஒரு சமயம் காண்டவப்ரஸ்தம் என்னும் பகுதியில் வசித்திருக்கிறார்கள். அதை மணிமான் என்னிடம் உறுதி செய்தான். இப்போது அது நாடாக இல்லை. காடாக உள்ளது. “

“கிருஷ்ணா, எனக்குள் மீண்டும் சந்தேகம் முளை விட்டு விட்டது! நீ உண்மையாகவே சொல்கிறாயா? அல்லது என்னை முட்டாள் ஆக்கப் பார்ர்க்கிறாயா?” ஆனால் இதைச் சொன்னபோது அவன் சிரித்த விதத்தில் இருந்து அவன் கிருஷ்ணனைச் சீண்டுவதற்குக் கேட்கிறான் என்பதும் அவனுக்குக் கிருஷ்ணனிடம் முழு நம்பிக்கை வந்து விட்டதும் புரிந்தது.

“என் பேச்சுக்கு ஒப்புக் கொள் பீமா! நான் உன்னுடனும் நம் நண்பர்கள் அனைவருடனும் வருகிறேன். ஒரே வருடத்திற்குள் நாம் அனைவருமாக அங்குள்ள காட்டை அழித்து நகரை நிர்மாணிப்போம்.”

“கிருஷ்ணா, அப்படி எனில் எனக்கு உன் முழு மனப்பூர்வமான சம்மதத்தைக் கொடு! அப்படிச் செய்வதாக உறுதி மொழி கொடு!” என்று தன் வலக்கையை அவன் முன் நீட்டினான் பீமன். “ஓஹோ,, பீமா! நான் சத்தியம் செய்கிறேன்!” என்ற வண்ணம் அவன் கரங்களில் ஓங்கி அடித்துத் தன் உறுதிமொழியைத் தந்தான் கிருஷ்ணன். துவாரகையைக் கட்ட யாதவர்களுக்கு எப்படி உதவினேனோ அவ்வாறே உனக்கும் நான் உதவுவேன். ஆனால் ஒரு விஷயம் பீமா! இதை உன் நன்மைக்காக மட்டும் நான் செய்யவில்லை. இதில் என் நன்மையும் அடங்கி உள்ளது. ஏனெனில் நான் இப்படிச் செய்யவில்லை எனில் ஆர்யவர்த்தத்தில் நான் தோற்றவனாகவே கருதப்படுவேன். ஆர்யவர்த்தத்தில் எபோதும் தர்மத்தின் ஆட்சியே நடைபெறவேண்டும். இல்லை எனில் மனிதன் தடம் புரண்டு விடுவான். இவ்வுலக மனிதர்களைக் காப்பாற்ற ஆர்யவர்த்தத்தில் தர்மத்தின் ஆட்சி நடைபெற்றால் தான் முடியும். வரும் நாட்களில் இது தான் இந்த பாரத வர்ஷத்தையே காத்து நிற்கும்.”

“ஓ, இதற்காகவே, இதை நிறைவேற்றவே நீ உயிர்வாழ்கிறாயா கிருஷ்ணா? உன் வாழ்க்கையின் லட்சியமே இது தானா?” என்ற பீமனுக்கு அப்போது தான் அகோரியின் குடிசைக்குச் சென்றிருந்தபோது அகோரியின் உடலில் ஆக்கிரமித்திருந்த தேவி மாதா சொன்னது நினைவில் வந்தது. கிருஷ்ணனின் பிறப்பையும் அவன் எதற்காக வாழ்ந்து வருகிறன் என்பதையும் தேவிமாதா சொன்னவை எல்லாம் அப்போது பீமன் நினைவு கூர்ந்தான். அவனுக்குள்   கிருஷ்ணன் பால் பிரமிப்பும், பக்தியும் பெருகின.  கிருஷ்ணனும் அவன் சொன்னதை ஆமோதித்தான்.

“ஆனால் நீ காண்டவப்ரஸ்தத்தை நகராக நிர்மாணிப்பதன் மூலம் உன்னுடைய லட்சியத்தை நிறைவேற்றியவன் ஆவாயா?” என்று கேட்டான் பீமன்.

“ஆம், நான் நிறைவேற்றியவன் ஆவேன்!” என்றான் கிருஷ்ணன். அவன் கண்களில் ஓர் ஒளி தோன்றியது. அந்த ஒளியினால் கிருஷ்ணன் முகமே பிரகாசம் ஆனது. “இந்த ஆர்யவர்த்தத்தின் எதிர்காலமே நீங்கள் ஐவரும் நடத்தப் போகும் தர்மத்தின் ஆட்சியில் தான் உள்ளது. உங்கள் நல்லாட்சியில் தான் ஆர்யவர்த்தம் தழைக்க வேண்டும்.” என்றான் கிருஷ்ணன்..

Wednesday, July 22, 2015

கனவு நகரம் நிர்மாணிக்கக் கிருஷ்ணன் உதவுகிறான்!

கிருஷ்ணன் முழு மனதோடு பேசுவதைக் கண்ட பீமனுக்கு உண்மையிலேயே ஆச்சரியமாக இருந்ததோடு அல்லாமல் கொஞ்சம் சந்தேகமும் ஏற்பட்டது. “உண்மையாகத் தான் சொல்கிறாயா, கிருஷ்ணா!” என்று மாறாச் சந்தேகத்துடன் கேட்டான் “நீ உன்னுடைய தந்திர வேலைகளைக் காட்டுகிறாய் என எண்ணுகிறேன்.” என்று மேலும் கூறினான். கிருஷ்ணன் அவனையே பார்த்து, “நான் தந்திர வேலைகள் செய்வதாக நீ நினைத்தால்! உன் வழியே செல்! அதோ உன் வழி! தெளிவாக இருக்கிறது. நீ என்னுடைய அத்தை வழி மூத்த சகோதரன். உனக்கு நான் கெடுதல் செய்வேனா? பீமா! உன் ஆயுதங்களை எடுத்துக் கொள்! உன் தண்டாயுதத்தால் என் மண்டையை உடைத்துவிடு! அது தான் நல்லது! இதோ பார் பீமா! நீ என்ன நினைக்கிறாய்! உன் மனதில் இருப்பது என்ன என்பதை நான் புரிந்து கொண்டு விட்டேன். ஆகவே நீ உன்னுடைய கனவு நகரத்தை நிர்மாணிக்க உனக்கு உதவிகள் செய்யத் தீர்மானித்தேன்.” என்றான் கிருஷ்ணன்.  அவன் பேச்சில் இருந்த உண்மையைப் புரிந்து கொண்டான் பீமன். அவன் இதையே நினைத்துக் கொண்டிருந்து இருக்கிறான் என்பதையும் தெரிந்து கொண்டான். ஆகவே உண்மையாகவே கிருஷ்ணன் அவனுக்கு உதவி செய்யும் நோக்கத்தில் தான் இருப்பதையும் அறிந்தான். தன் உள் மனதில் இருந்த எண்ணத்தை அவன் கண்டு கொண்டே தனக்குப் பாராட்டுகள் தெரிவிப்பதையும் உணர்ந்தான்.

“நீ எப்படியோ என் மனதைப் படித்து விட்டாய்! ஆம், கிருஷ்ணா! உண்மையாகவே நான் புதியதொரு நகரத்தை நிர்மாணிக்க எண்ணுகிறேன்.” என்றான் பீமன். “தெரியும், பீமா! நீ ஹஸ்தினாபுரத்தை விட வலுவாக, பலம் உள்ளதாக ஓர் சாம்ராஜ்யத்தையும், நகரத்தையும் நிர்மாணிக்க எண்ணுகிறாய்! அங்கே ஆட்சி செய்ய எவ்வித இடையூறுகளும் எந்தப்பக்கமிருந்தும் வரக் கூடாது என்றும் நினைக்கிறாய். நீ நினைப்பது சரியே! அப்படி ஓர் நகரம் நிர்மாணிக்கப்பட்டால் அது கடவுளரின் சொர்க்கமாகவே இருக்கும்.” என்று சொன்ன கிருஷ்ணன் கைகள் பீமனின் தோள்களில் படிந்திருந்ததே தவிர அவன் பார்வை தூரத்தில் எங்கோ பார்த்த வண்ணம் அவன் கனவுலகில் இருப்பது போல் காட்சி தந்தது.

“ஆம், ஓர் கனவு நகரம், கடவுளரின் சொர்க்கம்! மரங்கள் வீதி ஓரங்களில் செழிப்பாக வளர்ந்து நிழல் கொடுத்துக் கொண்டு காற்றில் கர்வம் பொங்கத் தலையாட்ட வேண்டும். எண்ணிலடங்காப் பழங்கள் நிறைந்த மாந்தோப்புக்கள் இருக்க வேண்டும். தோட்டங்கள், நீரூற்றுக்கள், உல்லாசப் பூங்காக்கள், ஆங்காங்கே அவற்றில் பயமோ, கவலையோ இன்றி இளைப்பாறும் மக்கள்… குளங்கள், தாமரை பூத்திருக்க வேண்டும். மீன்கள் அங்குமிங்கும் நீந்தித் திரிய வேண்டும். குளக்கரைகளில் மக்கள் தாமரைகளைப் பறிக்கவும் மீன்களுக்கு உணவிடவும் வேண்டும். “ கிருஷ்ணன் சற்றே நிறுத்தினான். பீமன் தன் தலையை ஆட்டிச் சம்மதம் தெரிவித்தான். கிட்டத்தட்ட அவன் கனவு கண்ட அதே பாணியில் ஓர் நகரம். இதைத் தான் அவன் பல நாட்களாய்க் கனவு கண்டு வந்தான்.

மேலும் கிருஷ்ணன் பேசிக் கொண்டிருந்தான்:” ஒவ்வொரு வீட்டிலும் பூக்கள் நிறைந்த பூந்தோட்டம் இருக்க வேண்டும்.  ஆங்காங்கே தாழ்வாரங்களில் எல்லாம் நிழல் தரும் மரங்கள் நிழல் கொடுத்த வண்ணம் இருக்கவேண்டும். உங்கள் ஐவரின் வீர, தீர, சாகசங்களை வெளிப்படுத்தும் பற்பல வண்ண ஓவியங்களைத் தீட்டி அனைவர் வீடுகளிலும் மாட்டி இருக்க வேண்டும். உங்கள் புகழ் பாரெங்கும் பரவ வேண்டும்.”

பீமன் அகல விரிந்த கண்களோடு ஆச்சரியம் ததும்ப அனைத்தையும் கேட்டுக் கொண்டிருந்தான். அவன் அவ்வப்போது தலையை ஆட்டிச் சம்மதம் தெரிவித்த விதம் அவன் அப்போதே அம்மாதிரியானதொரு நகரத்தைத் தன் மனக்கண்களால் கண்டு களிக்கிறான் என்பதை வெளிப்படுத்தியது. கிருஷ்ணன் வர்ணித்த விதம் பீமன் மனதை மிகவும் கவர்ந்தது. ஆகையால் அவன் பேச்சுக்கு எந்தவிதமான இடையூறும் செய்யாமல் வாய் பேசாமல் கேட்டுக் கொண்டு வந்தான் பீமன்.

கிருஷ்ணன் தொடர்ந்தான்:” நூற்றுக்கணக்கில் பசுக்கள், அவையும் குடம் குடமாகப் பால் அளிக்க வேண்டும். அழகான, வலுவான வேகமாக ஓடக்கூடிய குதிரைகள், அவற்றில் ஏறி அமர்ந்து நாம் போட்டி போட்டுக்கொண்டு குதிரைகளை ஓட்ட வேண்டும். பெரிய ரதங்கள், தங்கள் சக்கரங்களை உருட்டிக் கொண்டு தெருக்களில் ஓட வேண்டும். அவற்றில் வீராதி வீரர்கள், அதிரதிகள், மஹாரதிகள் போன்றோர் பயணம் செய்ய வேண்டும். நாம் நிர்மாணிக்கப் போகும் நகரத்திலும், சாம்ராஜ்யத்திலும் வசிக்கப் போகும் பிராமணர்கள் கற்பித்தலைத் தங்கள் முக்கியத் தொழிலாகக் கொண்டு அனைவருக்கும் தக்க கல்வி கற்பித்து வர வேண்டும். வேதங்களிலும், மற்றவற்றிலும் உள்ள விஷயங்களை எடுத்துச் சொல்ல வேண்டும்; க்ஷத்திரியர்கள் ஆன நாமோ அனைத்துத் தரப்பு மக்களையும் பாதுகாக்கும் ஏற்பாடுகளைச் செய்து கொண்டு அனைவரையும் பாதுகாக்க வேண்டும். க்ஷத்திரியர்களுக்கு முழு அதிகாரம் இருந்தாலும் துஷ்பிரயோகம் செய்யக் கூடாது. வைசியர்கள் வியாபாரத்தின் மூலம் சம்பாதிப்பதை நாட்டுக்குச் செலவு செய்வதோடு, தேவை உள்ளவர்களுக்கும், மற்றும் இல்லாதவருக்குக் கொடுப்பதையும் முக்கியக் கடமையாகக் கொள்ள வேண்டும். நீ எங்கு ஆட்சி புரிந்தாலும் அங்கே தர்மத்தின் ஆட்சி நடைபெறும்; நடைபெற வேண்டும்.”

கிருஷ்ணன் அளித்த இந்த ஒளிமயமான எதிர்காலக் கனவுகள், தன் கனவு நகரம் அப்போதே நனவாகி விட்ட குதூகலம் பீமனுக்கு. அவன் கண்ணெதிரே கிருஷ்ணன் விவரித்த காட்சிகள் அப்படியே அப்போது நடப்பவை போல் தோன்றின.. ஆகவே மேலும் பேசச் சொல்லிக் கிருஷ்ணனை ஊக்குவித்தான். கிருஷ்ணன் மேலும் தொடர்ந்து, “ அதோடு மட்டுமா? உன்னுடைய அரச மாளிகையில் மிக அழகான, உலகத்து அழகெல்லாம் திரண்டு வந்த ஓர் அரசகுல மங்கை ராணியாக இருப்பாள். தேவலோகத்து அப்சரஸ்களின் அழகெல்லாம் இவள் கால் தூசிக்குக் காணாது! அத்தனை அழகான அந்தப் பெண்மணி தன் அழகிய கண்களால் உன்னைக் கண்டு நாணத்துடன் சிரிப்பாள். பாண்டுவுடைய பேரன்மார்களுக்குத் தாயாக இருப்பாள். அவள் பெயர் ஜாலந்திரா!” என்று தன் ஜொலிக்கும் கண்களால் சிரித்த வண்ணம் கண்ணன் கூறினான்.  இதைக் கேட்டதுமே பீமன் முகத்தில் ஓர் ஒளி பிறந்தது. விவரிக்க ஒண்ணாத சந்தோஷத்துடன் அவன் கண்ணனைப் பார்த்து, “கோவிந்தா! உண்மையாகவா? இது எல்லாம் நடக்குமா? நீ இதில் தீவிரமாக இருக்கிறாயா?”

“ஆம், நான் இதில் தீவிரமாக இருக்கிறேன். அப்படி ஒரு நகரை நீ நிர்மாணிக்க அனைத்து யாதவர்களையும் இதில் ஈடுபடுத்துகிறேன். குதிரைகள், பசுக்கள், கால்நடைச் செல்வங்கள், ரதங்கள், ஆயுதங்கள், தேவைப்பட்டால் தங்கக் கட்டிகள்! எது ஆனாலும் தரத் தயாராக இருக்கிறோம்.” “கோவிந்தா, கோவிந்தா! உண்மையாகச் சொல்கிறாயா? நீ இதில் நிச்சயமாக இருக்கிறாயா? உன்னுடைய இந்த வாக்குறுதியை நீ நிச்சயமாய் நிறைவேற்றுவாயா? அதில் உறுதியாக இருக்கிறாயா?”

“இதோ பார் பீமா! என் அருமைத் தந்தை நேர்மையும், நீதியும் வடிவான வசுதேவர் மற்றும் அவர் மனைவியான என்னைப் பெற்ற தாய் தேவகி இவர்கள் இருவர் மேலும் ஆணையிட்டுச் சொல்கிறேன். நான் சொன்னதை நிறைவேற்றுவேன்! நானும், பலராமனும் மட்டும் முன்னர் ஓர் நகரை நிர்மாணிக்க வேண்டி இருந்தது. ஆனால் இப்போது நாங்கள் அனைவரும் உங்களுடன் சேர்ந்து அப்படி ஒரு நகரை நிர்மாணிக்க உதவுகிறோம்.”

“ஆஹா! என்ன அருமை! அற்புதம்!” என்றான் பீமன். அவன் கோபம், ஆத்திரம், தாபம், வெறுப்பு அனைத்தும் போன இடம் தெரியவில்லை. பறந்து ஓடி  விட்டது. அவன் சந்தேகங்கள் போன இடம் தெரியவில்லை. “துரியோதனன் யுவராஜாவாக இருக்கும் நகரம் வசிக்க லாயக்கற்றது. அங்கே வசிக்க முடியாது! அதனால் தான் நான் பானுமதிக்கு வாக்களித்தேன். துரியோதனனே ஹஸ்தினாபுரத்தை ஆளுவான் என்னும் வாக்குறுதியை அளித்தேன்.” என்றான் கிருஷ்ணன் அமைதியாக.  பீமனுக்கு ஆச்சரியத்துக்கு மேல் ஆச்சரியம்.

“கிருஷ்ணா, கிருஷ்ணா! இவை அனைத்தையும் நீ என் பொருட்டு யோசித்து வைத்திருக்கிறாய்! ஆஹா! என்ன ஆனந்தம்! ஏன் முதலிலேயே நீ இதைக் கூறவில்லை! என்னுடைய முடிவில்லாத சங்கடங்களை எல்லாம் முதலிலேய்யே தீர்த்திருக்கலாமே! “ என்றான் பீமன்.

“ம்ம்ம்ம்ம். நான் அவ்வளவு வேகமாக யோசிப்பவன் அல்ல! மெல்ல மெல்லத் தான் யோசித்து முடிவெடுப்பேன். மக்களிடமும் மெதுவாகக் கொண்டு சேர்ப்பேன்.”தன்னைத் தானே சுய விமரிசனம் செய்யும் பாணியில் கூறினான் கிருஷ்ணன். மன்னிப்புக் கேட்கும் பாவனையில் புன்னகையும் செய்தான். அதைப் பார்த்த பீமனுக்கும் சிரிப்பு வந்து விட்டது. “கிருஷ்ணா! என் கனவு நகரை நான் நிர்மாணிக்கையில் நீ என்பக்கம் நின்று தோளோடு தோள் கொடுத்து உதவுவாய் அல்லவா?” என்ற வண்ணம் பீமன் அன்பாகத் தன் கரங்களைக் கிருஷ்ணன் தோள்களில் வைத்தான்.

“நான் உன் பக்கம் நின்று உதவிகள் செய்வதோடு நின்றுவிட மாட்டேன், பீமா! என்னோடு சேர்த்து அனைத்து யாதவர்களையும், மற்றும் நாகர்களையும் சேர்த்து உனக்கு உதவச் செய்வேன். இந்த பூவுலகே கண்டு களிக்கும் வண்ணம் ஓர் அற்புத நகரை நாம் நிர்மாணிப்போம்.” என்றான் கிருஷ்ணன்.

Sunday, July 19, 2015

தர்ம சாம்ராஜ்யத்தை ஸ்தாபிக்கலாம்!

“எல்லாம் சரி அப்பா! உன் மூத்தவன் என்ன சொல்லப்போகிறான்? அவனைக் கொஞ்சம் நினைத்துப் பார்! அவன் கலவரங்களைக் கண்டாலே வெறுப்பவன். இதை எல்லாம் கண்டால் அவன் தனக்கு அரியணையே வேண்டாம் என்று சொல்லி விடுவான். வெறுப்பில் அனைத்தையும் உதறி விடுவான்.” என்றான் கிருஷ்ணன்.

“கிருஷ்ணா! கிருஷ்ணா! நீ எங்கள் எதிரிகளுக்காகப் பரிந்து பேசுகிறாய்!” பீமனுக்குள் மீண்டும் சந்தேகம் முளை விட்டது.

“இல்லை, பீமா! கொஞ்சம் யோசித்துப் பார்! ஹஸ்தினாபுரத்திலேயே இருந்து நாம் ஆட்சி செய்தால் அதன் மூலம் வரப் போகும் விளைவுகளையும் சிந்தித்துப் பார்த்தாக வேண்டும். யார் யார் என்ன சொல்வார்கள்! என்ன நினைப்பார்கள்! எங்கிருந்து ஆதரவு வரும்! என அனைத்தையும் யோசிக்க வேண்டும்.” என்ற கிருஷ்ணன் அதற்கு ஏதோ முடிவைக் கண்டவன் போல மேலும் பேசலானான். “பீமா! நீ சொல்வது சரியாக இருக்கும் என எனக்குத் தோன்றுகிறது. உன் எண்ணங்கள் சரியே! நீ ஹஸ்தினாபுரத்தை விட்டு வந்ததும் சரியே எனத் தோன்றுகிறது. ஒரு புத்தம்புதிய நகரத்தைக் கண்டு பிடித்து நிர்மாணிப்பது தான் நல்லது. அது தானே உன் திட்டம்? அது தான் சரியானதும் கூட. ம்ம்ம்ம்ம்….விஸ்வாமித்திர முனிவர் கூடக் கடவுளரிடம் சொர்க்கத்தைப் பற்றிக் கெஞ்சிக் கொண்டிருக்காமல் புதியதாய் ஓர் சொர்க்கத்தைப் படைக்க ஆரம்பித்தார். படைத்தும் காட்டினார். அது போல் தான் நாமும் செய்ய வேண்டும்.”

இப்போது உண்மையாகவே பீமனுக்கு ஆச்சரியம் மேலிட்டது. கிருஷ்ணன் தனக்குத் தானே வாதம் செய்து கொள்பவனைப் போல் மேலே பேச ஆரம்பித்தான்.”ஒரு புதிய அரசாங்கத்தை, சாம்ராஜ்யத்தை நிர்மாணிப்பது நல்லது; எளியது: சுலபமாக நிறைவேறக் கூடியதும் கூட! இப்போது நீ ராக்ஷசவர்த்தத்தில் நிர்மாணித்த மாதிரித் தான் அதுவும். அங்கே உன் ராணி  ஹிடிம்பாவும், உன் மகன் கடோத்கஜனும் உன்னை முழு மனதோடு மகிழ்வோடு வரவேற்பார்கள்.”

“எனக்குத் தெரியும்!” என்ற வண்ணம் பீமன் பெருமூச்சு விட்டான். இங்கே ஹஸ்தினாபுரத்தில் இருப்பதை விட அங்கே ராக்ஷசவர்த்தத்தில் நான் மிகவும் மகிழ்ச்சியோடு இருந்தேன். ஆனால் என் தாய்க்கும், என் சகோதரர்களுக்கும் அது பிடிக்கவில்லை. அவர்கள் அங்கே இருப்பதை வெறுத்தார்கள்.”

தன் சிந்தனை மாறாமலே கிருஷ்ணன் மேலே பேசினான்:” ஒரு வேளை நம்மால் ஒரு புத்தம்புதிய நகரத்தைக் கண்டு பிடிக்க முடிந்தால்? அங்கே துரியோதனனின் நிழல் கூட விழாது. அல்லவா? அப்படி ஒரு நகரத்தைக் கண்டு பிடிக்க முடிந்தால்?”

“என் முடிவு அதுதான்! நான் கண்டுபிடிக்கப்போகிறேன்.” என்றான் பீமன் திட்டவட்டமாக.

“ஆம், பீமா, நீ சொல்வது சரியே! நான் உன் ஊழியன் கோபு உன்னுடைய கனவு நகரத்தின் அமைப்பை வரைந்து கொண்டிருக்கும்போது பார்த்தேன்.” என்ற வண்ணம் பீமனின் தோள்களைப் பற்றிக் கொஞ்சம் உணர்ச்சிகரமாகப் பேச ஆரம்பித்தான். அவனுக்குள்ளாக ஏதோ புதிய திட்டம் உருவாகி இருக்குமோ என்னும் எண்ணம் தோன்றியது பீமனுக்கு. “அப்படி ஒரு நகரம் உருவானால், அங்கே துரியோதனன் இருக்க மாட்டான். உங்களுடன் சண்டை போட துரியோதனனும் இருக்க மாட்டான். இடையூறுகளைச் செய்யும் துஷ்சாசனனும் இருக்க மாட்டான். உங்களைத் தனிமைப் படுத்த துரோணாசாரியாரும் இருக்க மாட்டார். ஒரு வேளை அதுதான் உன் எண்ணத்தில் இருக்கிறதோ! ஒரு புதிய நகரத்தைக் கனவு நகரத்தை நிர்மாணிக்கும் எண்ணம்!”

பீமன் முகத்தில் புன்முறுவல் தலை காட்டியது. வெகு நேரத்துக்குப் பிறகு மலர்ந்த முகத்தோடு, “ஆம், அப்படித்தான் நினைக்கிறேன்.” என்றான் பீமன். திடீரெனத் தோன்றியதொரு உணர்ச்சிகரமான நினைப்பிலே பீமன் புதியதொரு நகரத்தை நிர்மாணிக்க வேண்டும் என்று புறப்பட்டிருந்தாலும், இப்போது கிருஷ்ணனின் பேச்சைக் கேட்டதும் அது தான் சரி என்று அவனுக்கும் தோன்றியது. புதிய நகரத்தை நிர்மாணிக்கப் பல காரணங்கள் இருந்தன. எல்லாவற்றையும் விட முக்கியமான காரணம் துரியோதனனைப் பார்த்துக் கொண்டே இருக்க வேண்டாம்.

“நான் என்ன செய்தேன் என உனக்குத் தெரியும் அல்லவா? பீமா! இதோ பார்! ஜராசந்தன் என்னையும் மத்ராவையும் சேர்த்து அழிக்கக் கிளம்பி வந்தான். நகரை முற்றுகையிடப் போவதாகத் தெரிந்தது. நகரைத் தீயிட்டு அழிக்கப் போவதாகவும் தகவல்கள் கிட்டின. அதன் பின்னரே நாங்கள் மத்ராவை விட்டு விலகினோம். வெளியேறினோம். சௌராஷ்டிராவுக்குச் சென்று எங்களுக்கென ஒரு புதிய நகரத்தை நிர்மாணித்துக் கொண்டோம். துவாரகை எனப் பெயரிட்டோம். கால்நடைச் செல்வங்களுக்கு மதிப்புக் கொடுத்துக் குதிரைகள், பசுமாடுகள் போன்றவற்றை வளர்த்து அதன் மூலம் பெரும் செல்வந்தர்களாக ஆகி விட்டோம். நாங்கள் நினைத்ததை விடப் பெரிய செல்வந்தர்களாக இருக்கிறோம். ஒரு பெரிய சாம்ராஜ்யத்தையே வென்றிருக்கிறோம். எங்களை விட நீ அறிவுள்ளவன்; விவேகம் நிறைந்தவன். ஹஸ்தினாபுரத்தைத் தான் ஆளுவேன் எனச் சண்டை போட்டுக் கொண்டிருப்பதை விட்டு விட்டுப் புத்தம்புதிதாக ஓர் நகரத்தை, சாம்ராஜ்யத்தை நிர்மாணம் செய்து அதை ஆளலாம். அது தான் நல்லது! அது தான் நமக்கு சொர்க்கமாகவும் இருக்கும். ஹஸ்தினாபுரத்தை ஆள்வது நரகத்தை ஆள்வதற்குச் சமம்.”

பீமன் ஒரேயடியாகக் குதித்தான். “கிருஷ்ணா, கிருஷ்ணா! இது தான்! இது தான்! நான் நினைத்ததும். நான் செய்ய இருந்ததும், இதுவே!” என்றான்.

ஆனால் கிருஷ்ணன் தன் வசத்திலேயே இல்லை போல் தோன்றியது. அவன் தன்னுள் ஆழ்ந்து போயிருந்தான். அவன் கண்கள் தொலைதூரத்தில் ஏதோ ஓர் காட்சியைக் காண்பது போல் மங்கிக் காணப்பட்டது. அவன் பேசினான்; வார்த்தைகள் தெளிவாகவே இருந்தன. ஆகையால் அவன் தனக்குள்ளாக ஏதோ காட்சியைக் கண்டு அதில் மூழ்கி இருக்கிறான் என்பதைப் புரிந்து கொண்டான் பீமன். கிருஷ்ணன் சொன்னான்: “யமுனைக்கரைக்குச் செல்வோம் வா, பீமா! பாஞ்சால அரசன் துருபதன் நமக்கு உதவிகள் செய்வான். நாங்கள் யாதவர்கள் அனைவரும் உங்கள் பக்கமே இருப்போம். நாக தேசத்து அரசன் மணிமானும், தன்னால் இயன்றதை உனக்குக் கட்டாயம் செய்வான். அங்கே ஓர் நகரை நிர்மாணித்து ஓர் சாம்ராஜ்யத்தை ஏற்படுத்தி அதை தர்ம சாம்ராஜ்யமாக மாற்றிக் காட்டுவோம். தர்மத்தின் பாதையில் நல்லாட்சியைக் கொடுப்போம்.”

Saturday, July 18, 2015

பீமனை வழிக்குக் கொண்டு வந்தான் கண்ணன்!

கருணையே வடிவெடுத்த கண்ணன் கருணை பொங்கி வழியும் தன் கண்களால் பீமனையே பார்த்தான். அவன் முகத்தில் தெரிந்த கோபம் கிருஷ்ணனைக் கொஞ்சம் யோசிக்க வைத்தது. பேசாமல் அவனுடன் நடந்தான். அந்த நதிக்கரையில் இருவரும் சிறிது நேரம் அங்கும் இங்குமாக நடந்தனர். அவர்களிடமிருந்து சற்றுத் தொலைவில் கூப்பிட்டால் கேட்கும் தூரத்தில் சகாதேவனும், சாத்யகியும் பின் தொடர்ந்தனர். சற்றுப் பொறுத்துக் கிருஷ்ணன் வாயைத் திறந்தான். “பீமா! நீ உன் சகோதரன் யுதிஷ்டிரன் ஹஸ்தினாபுரத்தை ஆள வேண்டும் என்றே விரும்புகிறாயா? திருதராஷ்டிரனைக் குறித்தோ, துரியோதனன் குறித்தோ உனக்கு ஆக்ஷேபணைகள் ஏதும் இல்லையா? அவர்கள் இருந்தாலும், இல்லாவிட்டாலும் யுதிஷ்டிரன் ஹஸ்தினாபுர மன்னனாக ஆனால் போதும் உனக்கு! அது தானே?” என்று வினவினான்.

“ஏன்? மீண்டும் ஒரு பொய்யான வாக்குறுதியைக் கொடுத்து என்னை ஏமாற்றப் பார்க்கிறாயா? உன் பேச்சை, வஞ்சகப் பேச்சை நான் காது கொடுத்துக் கேட்கப்போவதில்லை.”

கிருஷ்ணன் இப்போது கொஞ்சம் தீவிரமாகவே பேசினான்.” ஒரு வேளை…அதாவது ஒரு வேளை,….. நான் அனைத்து சத்தியங்களையும், உறுதிமொழிகளையும் உடைத்து எறிந்துவிட்டு உன் மூத்தவன் யுதிஷ்டிரன் ஹஸ்தினாபுரத்துக்கு அரசனாக உதவி செய்கிறேன்! என்றால்? அப்போது?” கிருஷ்ணன் ஏதோ தீவிரமான சிந்தனையில் இருப்பதும் அவன் குரலில் இருந்து தெரிந்தது. ஆனால் பீமன் சீறினான். “ வாயை மூடு கிருஷ்ணா! நீ எனக்கு உதவப் போகிறாயா? அதுவும் பானுமதிக்கு நீ அம்மாதிரி சத்தியம் செய்து கொடுத்த பின்னருமா? துரியோதனன் தான் ஹஸ்தினாபுரத்தை ஆளப்போகிறான் என அவளுக்கு நீ கொடுத்த வாக்கு? அதன் பின்னருமா?”பீமன் மேலும் கோபத்தில் சீறினான்.

கிருஷ்ணன் எதையும் லக்ஷியம் செய்யாமல் அவனை வசப்படுத்தும் மென்மையான குரலில் மேலும் பேச ஆரம்பித்தான். “என்னைக் கொஞ்சம் யோசிக்க விடு!” என்றவன், மேலும் தொடர்ந்து யோசித்த வண்ணமே பேச்சைத் தொடர்ந்தான். “ இதோ பார் பீமா! நான் திருதராஷ்டிரனைச் சந்தித்துப் பேசித் தாத்தா அவர்கள் போட்ட திட்டத்தின்படி யுதிஷ்டிரன் ஹஸ்தினாபுரத்தை ஆளவும், துரியோதனன் தொடர்ந்து யுவராஜாவாக இருக்கவும் சம்மதம் வாங்குகிறேன். இந்த முடிவுக்கு அவனைச் சம்மதிக்க வைக்கிறேன்.” என்றான்.

“ஆஹா! அது உன்னால் முடியாது அப்பனே! நிச்சயமாய் முடியாது! நீ சிறு குழந்தையைப்போல் பேசுகிறாய்! என் பெரியப்பாவா இதற்கெல்லாம் சம்மதிப்பார்! நிச்சயம் மாட்டார்! என் மூத்தவன் ஹஸ்தினாபுரத்து அரசன் ஆகிவிட்டால் பின்னர் துரியோதனன் தற்கொலை அல்லவோ செய்து கொள்வான்! ஆகவே அவரால் இதற்குச் சம்மதம் அளிக்க முடியாது!”

“அப்படி எனில் அதுவும் சரிதான்!” கிருஷ்ணன் நம்பிக்கையை இழக்காமல் உற்சாகத்துடனே பேசினான். “பின்னர் நீ யுவராஜாவாக ஆகிவிடலாமே! துஷ்சாசனனோ இதற்கெல்லாம் போட்டிக்கு வரப் போவதில்லை. அவன் தான் காந்தாரம் செல்லப் போவதாய்ச் சொல்லிவிட்டானே!”

பீமனுக்குக் கிருஷ்ணன் பேசிய போக்குப் பிடிக்கவில்லை. அவன் கேலி செய்கிறான் என்பதைப் புரிந்து  கொண்டு, “இப்படி எல்லாம் பேசாதே! உன் பேச்சு எனக்குப் பிடிக்கவே இல்லை. நகைச்சுவையாகப் பேசுவதாக எண்ணிக் கொண்டு இப்படி என்னை வதைக்காதே!” என்று மீண்டும் சீறினான்.

“பீமா, பீமா, நீ எனக்கு நியாயம், நீதி கிடைக்கச் செய்ய மாட்டாயா? இதோ பார்! நம்மிடம் துருபத அரசன் நம் பக்கம் இருப்பதோடு அல்லாமல் விராட தேசத்து அரசர்கள், சுநீதன் மற்றும் யாதவத் தலைவர்கள் என ஒரு பெரும்படையே இருக்கிறது. அனைவருமே தாத்தா பீஷ்மரின் சொல்லைத் தட்ட மாட்டார்கள். அவர் சொல்படி நடப்போது அவர் கருத்துக்களுக்கே ஆதரவும் கொடுப்பார்கள். ஆகவே நமக்கு என்ன வேண்டுமோ அதை நாம் இதன் மூலம் அடைய முடியும்!” என்றான் கிருஷ்ணன். இது பீமனுக்குக் கொஞ்சம் உற்சாகத்தைக் கொடுத்தது என்பது அடுத்து அவன் கேட்டதிலிருந்து தெரிந்த்து.

“நிஜமாகவா சொல்கிறாய்? உன்னால் முடியுமா? அப்படி மட்டும் நடந்தால்??? ஆனால் என் மூத்தவன் யுதிஷ்டிரன் எண்ணம் என்னவாக இருக்கும்? அவன் என்ன சொல்வான்?”

“இதை ஒப்புக் கொள்வதை விட அவனுக்குவேறு வழியும் இருக்கிறதா? அவன் தான் திருதராஷ்டிரனிடம் தன்னை ஒப்புக் கொடுத்துக் கொண்டு அவன் சொல்படி நடப்பதாக உறுதிமொழி கொடுத்துவிட்டானே! “ பேசிக் கொண்டே வந்த கிருஷ்ணன் மனதில் திடீரென ஒரு எண்ணம் தோன்றியது. அந்தச் சிந்தனையின் விளைவு குரலிலும் தெரியுமாறு அவன் தனக்குள் பேசுவது போல் பேசினான்:” ஒருவேளை துரோணாசாரியாரும், கிருபாசாரியாரும் அஹிசத்ராவுக்குப் போய்விட்டார்கள் எனில்……………………..?

“ஓ, நாம் ஒன்றும் கோழைகள் அல்ல! நிச்சயமாய் வீரர்களே! நம்முடைய எதிரிகளை நாமே ஒன்று சேர்ந்து அழிப்போம்.” என்று தன் மார்பில் அடித்துக் காட்டிய பீமன், “குரு வம்சத்து பலம் எல்லாம் துரோணரையோ, கிருபரையோ நம்பி இல்லை. அவர்கள் இயல்பாகவே வீரர்கள்!” என்றான். இந்த யோசனை பீமனுக்குப் பிடித்திருந்ததால் கிருஷ்ணன் மேல் அவனுக்கு இருந்த கோபமும், வெறுப்பும் மெல்ல மெல்லக் குறைய ஆரம்பித்தது.

“ஒரு வேளை,…நீ துஷ்சாசனனோடு சண்டை போட நேர்ந்தால்? அவன் பாட்டனார் சுபலா குரு வம்சத்தினரோடு யுத்தத்துக்கு அறிவிப்புக் கொடுத்துவிடுவார்.”

“ஓ, அது ஒன்றுமே இல்லை! அவர்களை எல்லாம் சுலபமாக ஜெயித்துவிடலாம். கவலையே வேண்டாம்!” என்ற பீமன் மெல்ல மெல்லத் தன் இயல்புக்குத் திரும்பிக் கொண்டிருந்தான். கிருஷ்ணன் ஒரு சந்தேகத்தைக் கிளப்பினான்: “திருதராஷ்டிரன் ஒரு வேளை காட்டுக்குச் செல்ல யோசிக்கலாம். காட்டுக்குச் சென்று தவம் செய்ய விரும்பலாம். ஆனால் காந்தாரி? அவள் தன் மகன் இறந்துவிட்டால்,,,,, அதுவும் மூத்தவன் இறந்து பட்டால் அவன் சிதையிலேயே அவளும் தீக்குளிக்க யத்தனிப்பாள். ஏனெனில் அவன் அவளுக்குக் கண்ணுக்குக் கண்ணான மிக அருமையான மகன்.”

“அதெல்லாம் என்னை என்ன செய்துவிடும்? ஒன்றும் முடியாது! நான் எந்த அளவுக்கு வேண்டுமானாலும் செல்லத் தயாராக இருக்கிறேன். ஆம், அவர்கள் எங்களுக்குச் செய்த தீமைகளை விடவா? ஆகவே எனக்கு ஒன்றும் பிரச்னை இல்லை.”

“ம்ம்ம்ம்ம் ….இன்னொரு தொந்திரவும் இதில் இருக்கிறது. திருதராஷ்டிரன் ஹஸ்தினாபுரத்தை விட்டுச் செல்ல நேர்ந்தால்…….அப்போது குரு வம்சம் இரண்டாகப் பிரிய வாய்ப்பு உள்ளது.  இரு குழுவினராகப் பிரிந்து விடுவார்கள்.”

கிருஷ்ணன் மிக மிக மெதுவாகப் பேசினான். “சகோதரா, உன் வீரம், புஜபல பராக்கிரமம், விவேகம், பயிற்சி அனைத்தும் குருவம்சத்தினரை அதுவும் உன்னில் ஒரு பகுதியினரை ஒடுக்குவதிலேயே சகோதர யுத்தத்திலேயே செலவாகிவிடும். அதை யோசித்தாயா? நீ தர்ம சாம்ராஜ்யத்தை ஸ்தாபிக்க நினைக்கிறாய்! ஆனால் அது முடியுமா? யோசித்தாயா? நான் சொல்வது சரிதானே?” என்றான் கிருஷ்ணன்.

“கிருஷ்ணா! கிருஷ்ணா! இப்படி எல்லாம் பேசி என்னை பயமுறுத்தப் பார்க்கிறாயா? என்னால் இதற்கெல்லாம் பயப்பட முடியாது! எவருடனும் போர் தொடுக்கவோ, எந்தச் சூழ்நிலையையும் சந்திக்கவோ நான் தயாராகவே இருக்கிறேன்.”

Friday, July 17, 2015

பீமன் மறுப்பு! கிருஷ்ணன் தவிப்பு!

பீமனின் கோபத்தை முற்றிலும் அலட்சியம் செய்தான் கிருஷ்ணன். அதைக் கண்டு கொள்ளாமலேயே, “இதோ பார், பீமா! நீ இல்லாமல் நான் திரும்பிச் சென்றேன் ஆனால் உன் மூத்தவன் பட்டாபிஷேஹ வைபவத்தில் கலந்து கொள்ளவே மாட்டான்! அதை யோசித்துப் பார்!” என்றான்.

“ஹூம், ஒரு சக்கரவர்த்தியாய் ஆவதற்கு உள்ள அம்சங்கள் எதுவும் என் மூத்தவனிடம் இல்லை. அப்படி ஆனான் எனில் அது மிக அரிதாகவே நடக்கும்.” என்று சொல்லியவண்ணம் நடக்கத் துவங்கினான் பீமன். திடீரென நின்று திரும்பிப் பார்த்து, “ அவரால் என்ன செய்ய முடியும்? எங்கள் உடலை, ஆன்மாவை, உயிரை துரியோதனனுக்கும் அவன் சகோதரர்களுக்கும் விற்றுவிடுவார்.  தன்னையும் சேர்த்துத் தான் எங்கள் பரம வைரிக்கு விற்பார். அது ஒன்று தான் அவருக்குத் தெரியும். துரியோதனன் எங்கள் பரம வைரி என்பதை அவர் அறிய மாட்டாரா என்ன?”

“ஆஹா! நீ இப்படிப் பேசினாய் எனில் நான் திரௌபதியின் முகத்தை எவ்வாறு பார்ப்பேன்? என்னுடைய ஆலோசனையின் பேரிலேயே அவள் உங்கள் ஐவரையும் மணந்திருக்கிறாள் என்பதை நீ அறிவாயா? அவளுக்கு நான் என்ன பதில் சொல்வேன்? நீ அங்கே இல்லை என்றதுமே அவள் காம்பில்யம் திரும்பப் போவதாய்ச் சொன்னாள். நீ இல்லாமல் நான் சென்றேன் எனில் நிச்சயமாய்க் காம்பில்யத்துக்குப் போய்விடுவாள்.” என்றான் கிருஷ்ணன்.

“அது தான் சரி! இப்படிப் பட்ட உபயோகமற்ற மனிதர்களுக்கு மனைவியாய் இருப்பதை விட அவள் காம்பில்யம் செல்வதே சிறந்தது! அப்படியே செய்யச் சொல் அவளை! அதுதான் அவளுக்கு நல்லது!” என்று ஓங்கிய குரலில் கத்திய பீமன் மீண்டும் வேகமாய் நடக்க ஆரம்பித்தான்.  அவன் அங்கிருந்து செல்வதைக் கிருஷ்ணன் தடுத்தான். தன் கைகளால் அவன் தோள்களைப் பற்றி நிறுத்தி, “இதோ பார் பீமா! நான் சொல்வதைக் கேள்!” என ஆரம்பித்தான். “அதெல்லாம் முடியாது! நீ என்ன சொன்னாலும் நான் கேட்கப் போவதே இல்லை. என்ன நடந்தாலும் சரி.நீ ஹஸ்தினாபுரம் திரும்பிப் போ! உடனே போ!” என்றபடி அவன் கைகளைத் தட்டிவிட்டான் பீமன்.
“அதே போல் என்ன நடந்தாலும் நீ இல்லாமல் நான் திரும்பப் போவதில்லை.” என்று சிரித்த வண்ணம் கூறிய கிருஷ்ணன் மீண்டும் அவன் தோள்களைத் தன் இருகைகளாலும் பிடித்து அவனை மேலும் நடக்கவிடாமல் செய்தான். “இதோ பார் பீமா! இன்னொரு முக்கியமான விஷயம் இருக்கிறது. காசி தேசத்து அரசகுமாரியை மறந்து விட்டாயா? நீ இல்லாமல் நான் ஹஸ்தினாபுரம் சென்றால் அவள் தன் நாவை அறுத்துக் கொண்டு என் காலடியில் தற்கொலை செய்து கொள்வதாய் சபதம் செய்திருக்கிறாள். ஆஹா! அந்த மென்மையான மனம் கொண்ட இளவரசி இவ்விதம் என் காலடியில் விழுந்து சாவதை என்னைக் காணச் சொல்கிறாயா? அதை நான் எவ்விதம் காண்பேன்! என்னால் முடியாது அப்பனே! உன்னைப் போன்ற கல்நெஞ்சம் எனக்கு இல்லை.”

ஜாலந்திராவின் பெயரைக் கேட்டதுமே பீமன் அங்குமிங்கும் நடப்பதை நிறுத்திவிட்டு கிருஷ்ணன் தன்னை நதிக்கரையோரம் போக  அனுமதிப்பதை ஏற்றுக் கொண்டான். கொஞ்சம் யோசனையுடன் அப்படியும் இப்படியுமாக நடந்தான். “அது சரி, கிருஷ்ணா! அந்தப் பெண் உயிருடன் இருந்தாக வேண்டுமா? இந்த பூவுலகில் வாழும் அனைத்துப் பெண்களின் சூழ்ச்சித் திறனும் அவள் ஒருத்தியின் மூளையில் புகுந்திருக்கிறது.” என்று கோபத்துடன் சீறினான்.

“ம்ஹூம், நீ அவளைச் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை. அவளைத் தப்பாகவே எண்ணுகிறாய். நியாயமாக அவளைப் புரிந்து கொள்ளும் விதத்தில் புரிந்து கொள்.”

இதைச் சொல்லும்போது கிருஷ்ணன் காட்டிய நிதானமும், சாந்தமும் பீமனுக்கு எரிச்சலூட்டியது. கிருஷ்ணன் பக்கம் ஆவேசமாகத் திரும்பினான். “ஹூம், அவள் தானே உன்னிடம் வாக்குறுதி வாங்கிக் கொண்டாள்? துரியோதனன் தான் ஹஸ்தினாபுரத்தை ஆளவேண்டும் என வாக்குறுதி வாங்கிக் கொண்டாள் அல்லவா?” கோபம் பொங்கியது பீமனுக்கு. “இதோ பார் பீமா! நான் அவளைச் சந்திக்க வேண்டும் என என்னைக் கட்டாயப்படுத்தியது நீ தான்! அதை மறவாதே! அதோடு அவள் விருப்பங்களுக்கு மதிப்புக் கொடுத்து நிறைவேற்றும்படியும் நீ தான் கேட்டுக் கொண்டாய்!” என்றான் கிருஷ்ணன் புன்னகையோடு.

“ஹூம், சரி, சரி, நீ ஏன் என்னுடன் பேசி நேரத்தை வீணாக்குகிறாய்? என் நேரமும் வீணாகிறது. திரும்பி ஹஸ்தினாபுரத்துக்கே போ! போ!” என்றான் பீமன் கண்டிப்புடன். அதே சமயம் தன் கைகளால் திரும்பிச் செல்லும் சாலையையும் சுட்டிக் காட்டினான். “சரி, அப்பா! நீ திரும்பி வராவிட்டால் போகிறது! என்னை உன்னுடன் வரவிடு! நானும் உன்னுடன் வருகிறேனே!” என்றான் கிருஷ்ணன். அவன் குரலில் பரிதாபம் தெரிந்தது இனி என்ன செய்யப் போகிறேனோ என அவன் கவலைப்படுவது போல் காட்டிக் கொண்டான். “நீ திரும்பவில்லை எனில் நான் துவாரகைக்கே திரும்பிச் சென்று விடுகிறேன். என்னை விடு அப்பா!” என்றான் கிருஷ்ணன் செய்வதறியாதவன் போல.

“முதலில் அதைச் செய்! நீ மட்டும் துவாரகைக்குச் சென்றுவிட்டால் அனைவருக்கும் நல்லது! போ! உடனே கிளம்பு! என் சகோதரர்களை விட நீ மிகவும் மோசமானவன். இனிமையாகப் பேசியே கழுத்தை அறுப்பாய்! அதிலும் சூழ்ச்சிகள் செய்வதில், தந்திரமாகப் பேசி ஏமாற்றுவதில் நீ மன்னன்! சக்கரவர்த்தி! உனக்கு ஈடு, இணை எவருமில்லை!” என்று கிருஷ்ணனைப் பார்த்து வெறுப்புடன் கூறினான் பீமன்.

“பீமா, என் சகோதரா! நீ எப்போதுமே நேர்மையும், நியாயமும் உள்ள ஒரு மனிதனாக இருந்து வருகிறாய்! உன்னிடமிருந்து இப்படி ஒரு பாராட்டுப் பெற நான் என்ன தவம் செய்துவிட்டேன்!  என்ன செய்தேன் பீமா? என்னை நீ ஏசும்படி என்ன செய்துவிட்டேன்?” என்று கிருஷ்ணன் பீமனிடம் நட்புத் தோரணையில் அதே சமயம் சற்றும் குறையாத பணிவுடன் கேட்டான்.

“என்ன செய்யவில்லை நீ?” கிருஷ்ணனை நோக்கித் திரும்பிய பீமன் தன் கரங்களை இடுப்பில் வைத்துக் கொண்டு அவனை முறைத்தான். என்னையும், என் வீரத்தையும், என் தோற்றத்தையும் வைத்து நீ விளையாடினாய்! இதன் மூலம் நான் பட்டத்து இளவரசனாக யுவராஜாவாக ஆகலாம் என்றும் அதன் பின்னர் காசி தேசத்து இளவரசியின் சுயம்வரத்தில் கலந்து கொண்டு அவளை மணக்கலாம் என்றும் நம்பிக்கை ஊட்டினாய்!”

“உண்மை! இதையே தான் நான் ஜாலந்திராவுக்கும் சொல்லி இருக்கிறேன்.” என்று ஒப்புக் கொண்டான் கிருஷ்ணன். பற்களைக் கடித்த வண்ணம் அவனைக் கோபமாகப்பார்த்தான் பீமன். “உன் இரட்டை வேஷம் அம்பலமாகி விட்டது. இரட்டை வேஷம் போடுவதில் நீ நிபுணன்! நீ எனக்கும் என் சகோதரர்களுக்கும் நன்மை செய்யத் தான் வேலை செய்கிறாய் என நான் நினைத்தேன். மூடன்! ஆனால் நீ என்ன செய்தாய்! துரியோதனனுக்கு எங்கள் உரிமையைத் தாரை வார்த்து விட்டாய்! உன் வாக்குறுதியின் மூலம்.”

“ஆமாம், ஆமாம், நான் பானுமதிக்கும் வாக்குக் கொடுத்திருந்தேன். துரியோதனனே ஹஸ்தினாபுரத்தை ஆள்வான் என உறுதி மொழி கொடுத்திருந்தேன்.” எதற்கும் கவலைப்படாமல் கிருஷ்ணன் சந்தோஷமாகச் சிரித்தான். “சீ! வெட்கங்கெட்டவனே!” பீமன் சீறினான் அவனைப் பார்த்து. கிருஷ்ணன் அசரவில்லை. “நான் உண்மையாக நடப்பதை வெட்கம் கெட்ட செயலாக நினைக்கவில்லை!” என்றான் சாவதானமாக.

“நீயா உண்மையானவன்? உண்மையாக நடப்பவன்? தர்மவான் நீயா? நீ?”

“ஆமாம்.” என்றான் கிருஷ்ணன் மீண்டும் அதே நிதானத்துடன். பின்னர் அவனைப் பார்த்து ஊக்கம் கொடுக்கும் சொற்களைப் பேசலானான். “இதோ பார் பீமா! உண்மையைச் சொல்லட்டுமா? உண்மையை உணர்ந்ததும் என்ன செய்யப் போகிறாய்? ஹஸ்தினாபுரத்தை துரியோதனன் ஆண்டால் தான் நீங்கள் ஐவரும் உங்களுக்கான உரிமையை உண்மையாக அடைய முடியும்!”

ஆனால் பீமனோ இதைக் கேட்டதும் கோபம் கொண்ட காளையைப் போல் சீறினான். தன் தலையை ஆட்டினான். “உன்னுடன் பேசவே எனக்குப் பிடிக்கவில்லை.  நான் உன்னுடன் பேசப்  போவதில்லை. உடனே இங்கிருந்து போ! சென்றுவிடு! இல்லை எனில்………..” கிருஷ்ணனை அடிப்பவன் போல் அவன் மீது பாய்ந்து கொண்டு வந்தான் பீமன். அதைக் கண்ட சாத்யகி இருவருக்கும் நடுவே வந்து நின்று  கொள்ள கிருஷ்ணன் சாத்யகியை அங்கிருந்து அகற்றினான். “சாத்யகி, பீமனின் வழியில் குறுக்கிடாதே! அவன் போக்கில் அவனை விடு! என்ன இருந்தாலும் அவன் என் அத்தை வழி சகோதரன். என்னை அடிக்கவோ, கொல்லவோ அவனுக்கு எல்லா உரிமைகளும் உண்டு.” என்ற வண்ணம் பீமன் பக்கம் திரும்பி, “சகோதரா! நீ என்ன சொல்கிறாயோ அதைச் செய்வது என முடிவெடுத்துவிட்டேன்.” என்றான்.

“சூழ்ச்சிக்காரா!, சூழ்ச்சிக்காரா! வஞ்சகா! வஞ்சகா!” என்று கத்தினான் பீமன். பின்னர் அதே சொற்களை முணுமுணுத்துக் கொண்டிருந்தான். “உனக்குச் சேவை செய்ய எனக்கு அனுமதி கொடு, பீமா!” எனக் கிருஷ்ணன் அவனை தயவாகக் கேட்டுக் கொண்டான்.

“என்ன! நீ எனக்குச் சேவை செய்யப்போகிறாயா? ஆஹா! இதில் எவ்வளவு உண்மை இருக்கிறது? எப்போதும் அனைவரும் உனக்கல்லவோ சேவை செய்கின்றனர்? உன் புகழை அல்லவோ பாடுகின்றனர்! நீயல்லவோ அனைவரும் உனக்கு மட்டுமே சேவை செய்ய வேண்டும் என விரும்புகிறாய்? அனைவரும் உனக்குச் சேவை செய்வதோடு அல்லாமல் உன்னைக் கீழே விழுந்து வணங்கவும் வேண்டும். அது தானே உனக்குப் பிடித்தமானது? அதோடு “கிருஷ்ணனுக்கே மங்களம், ஜெயம் கிருஷ்ணனுக்கே!” என்றெல்லாம் முழங்கவும் வேண்டும் அல்லவா? அது தானே உனக்குப் பிடித்தமானது? நீ எனக்குச் சேவை செய்யப்போகிறாயா? ஆஹா! இதை விடப் பெரிய நகைச்சுவையான விஷயத்தை யாரேனும் கேட்டிருக்கின்றனரா? ஹாஹாஹா!” என்று கோபமாகச் சிரித்தான் பீமன்.

“நீ சொல்வது முற்றிலும் சரி, சகோதரா! சில சமயம் என்னை அனைவரும் விரும்புகிறார்கள் என்பதையே நானும் விரும்புகிறேன். அனைவராலும் விரும்பப்படுவதை நான் ஏற்கிறேன். ஆனால் என் பலவீனம் என்னவென்றும் நீ என்னிடம் சொல்ல வேண்டுமே! அதைத் தான் நானும் விரும்புகிறேன். இப்படிப் பட்ட வெளிப்படையான கருத்துக்களால் தான் நான் எப்போதும் சரியான பாதைக்குத் திருப்பி விடப் படுகிறேன். ஆகவே உன் கருத்து எனக்கு மிக முக்கியமானது. இதன் மூலம் நீ என்னை விரும்புவதை நிறுத்திவிடாதே! அப்புறமாய் நான் மிகவும் துயருற்று பரிதாபமான நிலைக்குத் தள்ளப்படுவேன்.”


“ஹூம், சாத்யகியைப் போன்ற முகஸ்துதிக்காரர்களால் நீ மிகக் கெட்டுப் போய்விட்டாய்! முகஸ்துதியைத் தான் நீ விரும்புகிறாய்! இவனைப் போல் முகஸ்துதி செய்பவர்களை உன் நண்பர்கள் ஆக்கிக் கொள்கிறாய்!”

சாத்யகியால் இதற்கு மேல் பொறுக்க முடியவில்லை. “என்ன முகஸ்துதி செய்பவன் என்று சொல்லாதே!” என்று கூவினான். “கிருஷ்ணனைக் கெடுத்தது நாங்கள் யாரும் இல்லை. நீ! நீ தான்! ஆம் நீ தான் அவனைக் கெடுத்துவிட்டாய்! மற்ற எவரையும் விட அதிகமாய் நீ தான் அவனைக் கெடுத்துக் கொண்டிருக்கிறாய்!” என்றும் கூறினான்.
கிருஷ்ணனோ சாத்யகியைக் குறிப்பாகப் பார்த்த வண்ணம், அவன் கூறியதை மறுக்கும் வகையில், “சாத்யகி, பீமன் சொல்வதே சரியானது!” என்ற வண்ணம் பீமன் பக்கம் திரும்பினான். “சகோதரா, நீ சொல்வது சரியே! நான் உன்னுடன் ஒத்துப் போகிறேன். ஹஸ்தினாபுரத்தைப் போன்ற மோசமான இடத்தில் வசிப்பது ஆபத்து ஆனதே! நல்லவேளையாக நீ அங்கிருந்து வெளியேறினாய்!” என்றான். ஆனால் பீமனோ அவனைச் சந்தேகத்துடன் பார்த்துத் தலையை ஆட்டினான்.

“அப்படிப் பார்க்காதே என்னை, சகோதரா! ஹஸ்தினாபுரத்து சூழ்ச்சிகளால் நீ கலங்கிப் போயிருப்பதை நான் அறிவேன். அதிலும் துரியோதனன் எங்கே வசிக்கிறானோ அங்கே இருப்பதை நீ விரும்ப மாட்டாய் என்றும் நான் அறிவேன். ஏனெனில் நீ அரச தர்மங்களைக் கடைப்பிடிக்கக் கூடியதொரு தர்ம சாம்ராஜ்யத்தை ஸ்தாபிக்க நினைக்கிறாய்!”

“என்ன சொன்னாலும் சரி, என்ன நடந்தாலும் சரி, நான் ஹஸ்தினாபுரம் திரும்பப் போவதில்லை.” அத்துடன் பேச்சை நிறுத்தியவன் திரும்பி நடக்க ஆரம்பித்தான்.

Thursday, July 16, 2015

வெறுப்பும் கசப்பும், நகைப்பும்!

சூரியன் அஸ்தமிக்கும் சமயம் பீமன் ரதத்தை நிறுத்தினான். தன் ரதசாரதியைப் பார்த்து அங்கேயே இரவு தங்குவதற்குக் கூடாரம் ஒன்று அமைக்கும்படி ஆணையிட்டான். குதிரைகளை அவிழ்த்துவிட்டு நீர்காட்டித் தீனி போடும்படியும் சொல்லிவிட்டு, கோபுவை அருகில் ஏதேனும் கிராமம் இருந்தால் பால் கிடைத்தால் வாங்கிவரும்படி சொன்னான். கிராமவாசிகளுக்கு பிரபலமான அரசன் வ்ருகோதரன், குரு வம்சச் சக்கரவர்த்தி பாண்டுவின் இளைய மகன் ஆன பீமன் தங்கள் கிராம எல்லையில் முகாம் இட்டிருப்பதை அறிந்தவுடன் அவனைப் பார்க்க வேண்டிக் கூட்டமாகக் கூடினார்கள். அவன் வரவை ஒட்டி ஓர் அரச விருந்துக்கு ஏற்பாடு செய்வதாகவும் கூறினார்கள். விருந்தை ஏற்கும்படி பீமனை வேண்டிய மக்கள் அங்கிருந்த குதிரைகளுக்குத் தீனி காட்டுவதிலும், ரதத்தை சுத்தம் செய்வதிலும் உதவி செய்தனர்.

விருந்தை முடித்துக் கொண்ட பீமன் அங்கிருந்த நதிக்கரையில் தன் கூடாரத்தை அமைத்துக் கொண்டு இரவு அங்கே தங்கி உறங்க ஆயத்தங்கள் செய்து அப்படியே தூங்கியும் போனான். அவனைச் சுற்றி கோபுவும் மற்ற வீரர்கள், ரதசாரதி ஆகியோர் அரண் போல வட்டவடிவில் சுற்றிப் படுத்தனர். மறுநாள் விடிந்து சூர்யோதயம் ஆன சிறிது நாழிகையில் கிருஷ்ணன், சஹாதேவனுடனும், சாத்யகியுடனும் அங்கே வந்து சேர்ந்தான். அவர்களுக்கு பீமன் அங்கே தங்கி இருக்கும் செய்தி தெரிய முகாமுக்கு வந்து சேர்ந்தனர். பீமன் அப்போது நதிக்கரையில் குளித்துக்  காலை அனுஷ்டானங்களை முடித்துக் கொண்டு, சூரியனுக்கும் அர்க்யம் விட்டு வரக் கிளம்பிச் சென்றிருந்தான். இதைக் கேள்விப் பட்ட கிருஷ்ணனும் அவன் குழுவினரும் நதிக்கரையிலேயே தாங்கள் வந்த ரதங்களையும் குதிரைகளையும் விட்டு விட்டு பீமனைத் தேடிச் சென்றனர்.

கோபு அங்கே சின்னச் சின்ன கூழாங்கற்களையும், நத்தைகளின் ஓடுகளையும் வைத்துக் கொண்டு தரையில் ஒரு பெரிய விசித்திரமான அமைப்பைப் பெரியதாக வரைந்து கொண்டிருந்தான். இதற்காக ஆங்காங்கே நடப்பதும் கூழாங்கல்லை வைப்பதும், எடுப்பதும், ஓடுகளை வைப்பதுமாக அங்குமிங்கும் நடந்து கொண்டிருந்தான். அவனிடம், “பீமன் எங்கே?” என்று கிருஷ்ணன் கேட்டதை முதலில் அவன் கவனித்ததாய்க் காட்டிக் கொள்ளவே இல்லை. மீண்டும் மீண்டும் கூழாங்கற்களை மாற்றி அமைப்பதிலேயே குறியாக இருந்தான். மீண்டும் விடாமல் கிருஷ்ணன் அவனிடம் கேட்கவே உள்ளுக்குள்ளாகக் கோபத்தை அடக்கிக் கொண்டு கோபம் கண்களில் தெரிய தன் கைகளால் நதிப்பக்கம் சுட்டிக்காட்டினான். அவன் காட்டிய திசையில் இடுப்பளவு ஆழத்தில் நின்ற வண்ணம் பீமன் தன் அனுஷ்டானங்களை நிறைவேற்றிக் கொண்டிருந்தான்.

“கோபு! நீ இங்கே என்ன செய்கிறாய்? இந்தக் கூழாங்கற்களை வைத்து இது என்ன வீடா கட்டுகிறாய்?” என்று கிருஷ்ணன் கேட்டான்.

“வாசுதேவா! எங்கள் ஏன் பின் தொடர்ந்து வந்தீர்கள்?” அவனுக்குள் இருந்த கோபம் இதில் வெளித் தெரிந்தது. இந்த விருந்தாளிகள் வேண்டாத விருந்தாளிகள் என்பதை அவன் தன் இந்தக் கேள்வியின் மூலம் காட்டிக் கொண்டான். தன் கோபத்தை மறைக்கவும் இல்லை.  கிருஷ்ணன் ஆனால் கருணையுடனும், தயவுடனும் சிரித்தான். “ஆஹா, கோபு, கோபு! இதோ பார்! கோபம் கொள்ளாதே! தயவு செய்! இந்தக் கூழாங்கற்களை எல்லாம் வைத்துக் கொண்டு என்ன செய்யப் போகிறாய்? இப்போது என்ன செய்கிறாய்?”

தான் இன்னமும் முடிக்காமலே வைத்திருந்த அமைப்பைப் பார்த்த கோபு கொஞ்சம் உள்ளூர கர்வத்துடன், “ நாங்கள் புதியதொரு நகரத்தை நிர்மாணிக்கத் திட்டம் தீட்டுகிறோம்.” என்றான். பீமன் செய்ய நினைத்தது எல்லாம் தன்னுடன் சேர்ந்தே அவன் செய்ததாகவும், அவன் திட்டம் போட்டதும் தானும் இணைந்து திட்டம் போட்டதாகவும் கோபுவின் நினைப்பு இருந்தது. அதைக் கண்ட கிருஷ்ணன் சிரித்தான். “கோபு, உன் வேலையை நீ தொடர்ந்து செய்! யார் கண்டார்கள்? ஒரு நாள் இல்லைனா ஒரு நாள் இது உதவலாம்.” என்றான் கிருஷ்ணன். அதற்குள்ளாக கிராமத்து மக்கள் உணவு தயாரித்து எடுத்துக் கொண்டு வந்தனர். அவர்கள் பீமனுக்கும் அவனுடன் வந்தவர்களுக்கும் மட்டுமே பால், பழங்கள் போன்றவைகள் எடுத்து வந்திருக்க, அங்கே இன்னமும்  மூன்று ரதங்கள் கூடுதலாக நிற்பதைக் கண்டு வியந்தனர். புதிதாக வந்தவர்கள் யார் எனப் பார்த்தால் வாசுதேவ கிருஷ்ணன்! அவனுடன் சாத்யகி மற்றும் பீமனின் குட்டி சகோதரன் சகாதேவன். சில நாட்கள் முன்னரே காம்பில்யத்திலிருந்து சென்ற திருமண ஊர்வலத்தில் இவர்களை எல்லாம் கண்டு முக்கியமாய்க் கிருஷ்ணனைக் கண்டு அவனிடம் ஆசிகளை வாங்கி இருந்த மக்கள் மீண்டும் அவனைக் கண்டதும் ஆச்சரியம் அடைந்தனர். கிருஷ்ணனின் சாகசங்கள் பற்றிய கதைகளையும், அவன் நடத்திய அதிசய அற்புதங்களையும் பற்றிக் கேட்டிருந்த அவர்கள் இப்போதும் அவன் காலடியில் விழுந்து வணங்கி ஆசிகளை வேண்டினார்கள்.

கிருஷ்ணன் தன் கூட வந்திருந்த ஆட்களைத் தங்களுக்கும் அங்கே முகாம் அமைக்கும்படியும் கூடாரங்களை ஏற்படுத்தும்படியும் ஆணையிட்டு விட்டு அனைவரும் நதிக்குச் சென்றனர். தாங்களும் குளித்துக் காலை அனுஷ்டானங்களை முடிக்கலாம் என்றே சென்றனர். நதியில் இறங்கியதும் சற்றுத் தொலைவில் பீமனைக் கண்ட கிருஷ்ணன் அவனை அழைத்தான். “பீமா, பீமா! நாங்கள் வந்துவிட்டோம்!” என்றும் அறிவித்தான். ஆனால் பீமனோ முகத்தைத் திருப்பிக் கொண்டு வேறுபக்கம் பார்த்தான். கிருஷ்ணனும் அவனுடைய சகாக்களும் நதியில் குளித்து சூரியனுக்கு அர்க்யம் கொடுத்துத் தங்கள் அனுஷ்டானங்களை நிறைவேற்றிக் கொண்டார்கள். பீமன் தண்ணீரிலிருந்து வெளியேறியதும் மூவரும் அவனை வரவேற்று மூத்தவன் என்பதால் அவன் கால்களில் விழுந்து வணங்க முயன்றனர். பீமன் அவர்கள் தீண்டத் தகாதவர்கள் என்னும்படி நடந்து கொண்டு விருட்டெனத் தன் கால்களை நகர்த்திக் கொண்டதோடு அல்லாமல் அவர்களைக் கோபம் பொங்கவும் பார்த்தான். மிகக் கடுமையான அந்தப் பார்வையை கிருஷ்ணன் ஒருவனே எதிர்கொண்டான்.

“பீமா, என் சகோதரா!” என்று கிருஷ்ணன் ஆரம்பித்தான்.

 “இதோ பார்! கிருஷ்ணா! என்னைத் தொந்திரவு செய்யாதே! என்னைத் திரும்ப அழைத்துச் செல்வதற்குத் தான் நீ வந்திருக்கிறாய் என்பதை நான் நன்கறிவேன். நீ என்ன மந்திர, தந்திர வேலைகள் செய்தாலும் நான் திரும்பி வரப்போவதில்லை! அது நிச்சயம்!” என்று பீமன்  உறுதியுடன் கூறினான்.

“ஆஹா! யார் சொன்னார்கள்! நான் உன்னைத் திரும்ப ஹஸ்தினாபுரத்துக்கு அழைத்துச் செல்லப்போவதாய்? அப்படி ஒரு திட்டமே இல்லை!” என்றான் கிருஷ்ணன் சாவதானமாக. மேலும் தொடர்ந்து, “நீ எங்கெல்லாம் செல்லப் போகிறாயோ அங்கெல்லாம் வரப்போகிறோம்.” என்றான். பீமன் கோபத்தில் கொதித்தான், “சூழ்ச்சிக்காரா, வஞ்சகா, ஏமாற்றுக்காரா! கிருஷ்ணா! நீ ஓர் ஏமாற்றுக்காரன். இதோ பார், சஹாதேவா! நீ, நீயும் இன்னொரு ஏமாற்றுக்காரன் தான். நீங்கள் அனைவருமே ஏமாற்றிப் பிழைப்பவர்கள். போங்கள் இங்கிருந்து! ஹூம், விரைவில் செல்லுங்கள்!”

“கொஞ்சம் நான் சொல்வதைத் தான் கேள் பீமா! சகோதரா! பொறுமை!” என்றான் கிருஷ்ணன். அவனைக் கொன்று விடுவான் போலப் பார்த்தான் பீமன். “நீ என்ன வேண்டுமானாலும் சொல்! ஆனால் அதைக் கேட்க நான் தயாராக இல்லை. நான் கேட்கப்போவதில்லை. இங்கிருக்கும் மூவரில் மட்டுமல்ல, இந்தப் பரந்த உலகிலேயே உன்னைப் போல் ஏமாற்றுக்காரனை நான் பார்த்தது இல்லை.” இடைவிடாமல் பேசியதாலோ என்னமோ கொஞ்சம் நிறுத்திப் பெரியதொரு மூச்சை விட்ட பீமன் மேலும் தொடர்ந்தான்! “போ இங்கிருந்து! திரும்பி ஹஸ்தினாபுரம் செல்! நீ இங்கேயே இருந்தால் என் திட்டங்களை எல்லாம் பாழடித்துவிடுவாய்! உன்னால் என் திட்டங்கள் வீணாவதை நான் விரும்பவில்லை!” பீமன் அவ்வளவோடு திரும்பிக் கொண்டு தன் முகாமை நோக்கி நடந்தவன், தன் கூடாரத்துக்குச் சென்றான். அவனோடு கிருஷ்ணன், சகாதேவன், சாத்யகி ஆகியோர் சேர்ந்து கொண்டனர்.

தவிப்போடு கிருஷ்ணன், “சகோதரா! நீ இல்லாமல் நான் ஹஸ்தினாபுரம் திரும்புவது எப்படி?  என்னால் எப்படிச் செல்ல முடியும்?” என்றான். அவன் குரலில் நிராசை மிகுந்தது. கோபத்துடன் திரும்பிய பீமன் அவனைப் பார்த்துப் பெருங்குரலில் கத்தினான். “என்ன? உன் தந்திரவேலையை ஆரம்பிக்கிறாயா? நீ என்ன சொன்னாலும், எதைச் செய்தாலும் இம்முறை உன்னை நம்புவதில்லை என்று நான் ஏற்கெனவே முடிவு எடுத்துவிட்டேன்.”

எதற்கும் அசராத கிருஷ்ணனோ, “ஏன் போகமாட்டேன் என்று சொல்லட்டுமா? நான் வெறும் கையுடன் நீ இல்லாமல் திரும்பினேன் எனில் உன் அன்னை குந்தி தேவி சாகும்வரை உண்ணாவிரதம் இருந்து உயிரை விட்டு விடுவாள்.”

சீறினான் பீமன். மனம் கசந்துவிட்டது தெரியும் வகையில் நகைத்த வண்ணம், “அவள் எப்போதோ இறந்திருக்க வேண்டும். அதுவும் இதோ இவனைப்போன்ற பிள்ளைகளைப் பெற்றதற்கு, ஏமாற்றுக்காரர்களைப் பிள்ளைகளாப் பெற்றதற்கு எப்போதோ இறந்திருக்க வேண்டும். இப்போது இறந்தால் ஒன்றும் நஷ்டமில்லை!” என்ற வண்ணம் சகாதேவனைச் சுட்டிக் காட்டினான். அவனுடன் சேர்ந்து மற்ற சகோதரர்களையும் சேர்த்தே அவன் சொல்லுவதைப் புரிந்து கொண்டனர் அனைவரும். “இதோ இங்கே இருக்கிறானே, இந்த சகாதேவன், மென்மையாகப் பேசக் கூடியவன்; உண்மையாகவும் பேசுபவனாம்! ஆனால் நான் அவன் என்ன சொன்னாலும் அதை இப்போது நம்பப் போவதில்லை. இப்போது அவன் வாய் மூடி மௌனியாக இருக்கிறானே! இதன் மூலம் தன்னை கெட்டிக்காரனாய்க் காட்டிக் கொள்கிறான் போலும்! நடிப்பு! அனைத்தும் நடிப்பு! இவன் என்ன சொன்னான் என்னிடம் தெரியுமா? இவனுக்கு வருங்காலம் தெரியும் என்றல்லவோ அனைவரும் சொல்கின்றனர்! நான் பட்டத்து இளவரசனாக அரசனுக்கு அடுத்த பதவியில் இருப்பேன் என்றான்! எவ்வளவு பெரிய நகைச்சுவை! ஹாஹாஹாஹா! பொய் சொல்லி இருக்கிறான்! ஏமாற்றுக்காரன்! சூழ்ச்சிக்காரன்!” மனக்கசப்போடு மீண்டும் பெரிதாக நகைத்தான் பீமன்,


Saturday, July 11, 2015

பீமன் கிளம்புகிறான்!

கோபமாகச் சென்றிருக்கும் பீமனை நாம் உடனே பார்க்க வேண்டும். அவன் ஏற்கெனவே கோபத்தில் இருக்கிறான். கோபம் அதிகரிப்பதற்குள்ளாக பீமன் என்ன செய்தான் என்பதைத் தெரிந்து கொள்வோம்.

ராஜசபையை விட்டு உடனடியாகக் கிளம்பிய பீமன், கோபுவிடம் தன் தாய், மனைவி திரௌபதி, காதலி ஜாலந்திரா ஆகியோருக்குச் செய்திகளைச் சேர்ப்பிக்கச் சொன்னான். ரேகா மூலமும், மாலா மூலமும் செய்திகளைச் சேர்ப்பிக்கச் செய்தான். அவனுடைய அவசரத்தையும், அவன் பயணத்திற்குத் தயாராகிறான் என்பதையும் பார்த்த கோபு, “எங்கே போகிறீர்கள், பிரபுவே?” என்று கேட்டான். “அதைப் பற்றி உனக்கு என்ன? உனக்கு அது தேவையில்லாத விஷயம்! நீ திரும்பி பலியாவிடம் செல்!” என ஆணையிட்டான் பீமன். கோபு பிடிவாதமாக மறுத்தான். “நீங்கள் செல்லுமிடம் எல்லாம் நானும் வருவேன். ஏற்கெனவே நீங்கள் வாரணாவதம் சென்றபோது என்னை விட்டு விட்டுச் சென்று விட்டீர்கள்! அதுவே எனக்கு இன்னமும் வருத்தமாக இருக்கிறது. நான் இல்லாமல் தனியே நீங்கள் சென்றால் உங்களுக்குத் தான் கஷ்டம்! நான் கூட வந்தால் உதவியாக இருந்திருப்பேன்; இப்போதும் உதவியாக இருப்பேன்.” என்றான் கோபு.

“நீ வந்தால் எனக்குப் பிரச்னை தான். நீ எப்படி என்னைத் தொந்திரவுகளிலிருந்தும் தடங்கல்களிலிருந்தும் காப்பாற்றுவாய்? உன்னால் முடியாது. வாரணாவதத்துக்கு நீ மட்டும் வந்திருந்தாயானால் நான் உன்னையும் சேர்த்துத் தூக்கிச் சென்றிருக்கும்படி ஆகி இருக்கும். அப்போது ஐந்து பேரைத் தான் தூக்கிச் சென்று காப்பாற்றினேன். உன்னையும் சேர்த்து ஆறு பேரைக் காப்பாற்றி இருக்க வேண்டும். நீ திரும்பப் போ!” என்றான் பீமன்.

“அது அப்படி இல்லை, பிரபுவே! நான் மட்டும் உங்களுடன் இருந்திருந்து ராக்ஷசவர்த்தமும் வந்திருந்தேன் எனில், உங்களை ஒரு ராக்ஷசியை மணக்கும்படி விட்டிருக்க மாட்டேன்.” சிறு வயதிலிருந்து பழகும் தன் எஜமானனிடம் உரிமையுடன் கேலி செய்தான் கோபு. பீமன் சிரித்தான். “இது மட்டும் ஹிடிம்பா காதில் விழட்டும்! உன்னை பக்ஷணம் செய்துவிடுவாள். நீ வாயைத் திறக்கும் முன்னர் அவள் வாயில் இருப்பாய்!” என்ற வண்ணம் கோபுவின் முதுகில் ஓங்கித் தட்டினான் பீமன்.

“பிரபுவே! எது எப்படி இருந்தாலும், இப்போதும் சரி; இனி எப்போதும் சரி, நான் உங்களைத் தனியே விடப் போவதில்லை. தனியே எங்கும் செல்ல அனுமதிக்கவும் போவதில்லை. நீங்கள் களைத்திருந்தால் யார் உங்களை உற்சாகப்படுத்துவார்கள்?  யார் உங்கள் உடலைப் பிடித்துவிட்டு சேவை செய்வார்கள்? உங்களுக்குத் தலை வலித்தால் யார் உங்கள் தலையைப் பிடித்துவிடுவார்கள்? நான் இல்லாமல் நீங்கள் தன்னந்தனியாக என்ன செய்வீர்கள்? அதோடு அகோரியின் குடிசைக்கு நானும் உங்களோடு வந்ததால் தானே நல்லதாக முடிந்தது! இல்லை எனில் என்ன நடந்திருக்கும்?” என்றான் கோபு.

“சும்மா அர்த்தமின்றிப் பேசாதே கோபு!” இந்த சமயத்தில் கோபுவின் இந்த வெட்டி அரட்டை பீமனுக்குள் அலுப்பைத் தந்தது. “எனக்கே நான் போகும் இடம் எதுவென இன்னும் புரியவில்லை! உன்னை எப்படி அழைத்துப்போவது?” என்றான். “ஆனால் எனக்கு நான் எங்கே போகிறேன் என்பது தெரியுமே, பிரபுவே! என் பிரபு எங்கே செல்கிறாரோ அங்கே எல்லாம் இந்த கோபுவும் செல்வான்.” என்றான் கோபு. “சரி, சரி! நீ ஒரு முட்டாள். முழு முட்டாள். அதனால் தான் என்னுடன் வருவதாகப் பிடிவாதம் பிடிக்கிறாய். பின்னால் நீ இதற்காக வருத்தப்படப் போகிறாய், பார்! அதோடு என்னுடன் வரும்போது நீ கொல்லப்பட்டால் உன் மனைவி வேறு என்னைத் தான் திட்டுவாள்.” என்றான் பீமன்.

“ஹா! அப்படி நான் கொல்லப்பட்டால் என்ன ஆகிவிடும். என் மனைவிக்கு இதுவும் வேண்டும்; இன்னமும் வேண்டும். அவள் தானே நீங்கள் எல்லோரும் வாரணாவதம் செல்கையில் நானும் உடன் செல்லாததற்கு என்னை இரவும் பகலும் கேலி செய்து கொண்டிருந்தாளே! என்னைக் கோழை என்றாளே! நீங்கள் எல்லோரும் எரிந்து கொண்டிருந்த மாளிகையிலிருந்து தப்பி ஓடும்போது கூட இருந்து உதவவில்லை என்று என்னைக் கடிந்தாளே! இப்போது அவள் மீண்டும் என்னை அம்மாதிரி சொல்லாமல் இருக்க வேண்டும் என்பதற்காகவே நானே முந்திக் கொள்கிறேன்.”

வெறுப்போடு சம்மதித்தான் பீமன். “சரி, சரி! வா! வந்து தொலை! உன் இஷ்டம் என்னமோ அப்படிச் செய்! இப்போது மாளிகைக்குச் சென்று என் ஆயுதங்களை எடுத்து வா!” என்றான்.

பீமன் கோபத்தில் இருக்கையில் தான் வேகமாக முடிவு எடுத்துத் தீர்மானமாக வேலைகளைச் செய்வான். இப்போதும் அப்படியே வேகமாக முடிவெடுத்தான். கோபு ஆயுதங்களைக் கொண்டு வந்ததும், வெளியே தங்கி இருந்த தங்கள் முகாமுக்குச் சென்று தன் ரதத்தைத் தயார் செய்யச் சொன்னான். ரதசாரதியிடமும் நீண்ட பயணத்துக்குத் தயாராகும்படி சொன்னான். மாற்றுக் குதிரைகள், மற்றும் மாட்டுவண்டிகளில் முகாம் போடத் தேவையான பொருட்கள் எனத் தயார்ப் படுத்தச் சொன்னான். அனைத்தும் நீண்டதொரு பயணத்துக்கான தயாரிப்பாக இருக்க வேண்டும் என்று கட்டளை இட்டான். கோபு தனக்கிட்ட வேலைகளை எல்லாம் முடித்துக் கொண்டு பீமனுடன் வந்து சேர்ந்து கொண்டான்.

ரதம் தயாரானது. பீமன் தன் கைகளில் லகான்களைப் பிடித்துக் கொண்டு ஒரு சுண்டு சுண்டினான். ரதம் பறந்தது. குதிரைகளால் எவ்வளவு வேகமாய்ச் செல்லமுடியுமோ அவ்வளவு வேகமாய்ச் சென்றன. ரதத்துக்குள்ளே அமர்ந்திருந்த கோபு ரதம் அப்படியும் இப்படியுமாக ஆடியதில் நிலை குலைந்து போனான். அவன் உடல் ஒரு இடத்தில் இருக்கவில்லை. அங்குமிங்குமாக ஆடியது. எலும்புகளெல்லாம் நொறுங்கிவிடும்போல் இருந்தன. ஹீனமான குரலில், “பிரபுவே, மெல்ல, மெல்ல, மெதுவாகச் செல்லுங்கள். குதிரைகளை விரட்டாதீர்கள். என்னால் தாங்கமுடியவில்லை!” என்று கூறினான். “நீ வாயை மூடிக்கொண்டு வரவில்லை எனில் உன்னைத் தூக்கி எறிந்துவிடுவேன். உன்னை யார் வரச் சொன்னார்கள்? நான் தான் நீ வராதே என்றேன் அல்லவா? வேண்டுமெனில் இப்போது திரும்பிப் போ!” என்று பீமன் கடுமையாகச் சொன்னான். “நான் திரும்பி எல்லாம் போக மாட்டேன், பிரபுவே! நானும் திரும்பிவிட்டால் உங்களைக் கவனித்துக்கொள்ள யாருமே இருக்க மாட்டார்களே! என் எலும்புகளை நொறுக்கினீர்கள் எனில் உங்கள் பயணம் முடிவதற்குள்ளாக என் முடிவு வந்துவிடும். அப்புறம் யார் இருப்பார்கள் உங்களுடன்?” என்று பரிதாபமாகப் புலம்பினான் கோபு.

“சரி, சரி, உன் எலும்புகள் நொறுங்காமல் இருக்க வேண்டுமானால் எழுந்து கொண்டு ரதத்தின் பக்கவாட்டில் நின்று கொண்டு மேலுள்ள கம்பிகளைப்பிடித்துக் கொள். அதிர்வுகள் தெரியாது.” என்றான் பீமன்.

Thursday, July 9, 2015

இவளைப் போல் ஒரு பைத்தியமும் உண்டோ?

தொடர்ந்து அழுத ஜாலந்திராவைப் பார்த்துக் கிருஷ்ணனுக்குக் கொஞ்சம் கோபம் வந்தது. “ஜாலந்திரா! இதோ அத்தை குந்தி தவிக்கும் தவிப்பைப் பார்த்தாயா? அவரும் தான் மகனைக் காணாமல் அடித்துவிட்டுத் தவிக்கிறார். அவரும் மனவருத்தத்திலேயே இருக்கிறார். அவரை விடவா உன் துக்கம் பெரிது? உன்னுடைய இந்தக் குழந்தைதனமான நடவடிக்கைகள் மூலம் நீ அவரை மேலும் வருந்த வைக்கிறாய்!” என்று கண்டிப்பாகச் சொன்னான். ஜாலந்திரா அதற்கு பதில் சொல்லும் முன்னர் அங்கே யுதிஷ்டிரனும், சகாதேவனும் வந்தனர். அவர்களைப் பார்த்த குந்தி, “பீமன் எங்கே?” என ஆவலுடன் கேட்டாள்.  அதற்கு யுதிஷ்டிரன் தன் தாயைப் பார்த்து, “எங்களால் அறிய முடிந்த செய்தி மிகக் குறைவே! நாங்கள் அறிந்ததெல்லாம் கோபு மூலம் மாளிகையிலிருந்து தன் ஆயுதங்களை எல்லாம் சேகரித்துக் கொண்ட பீமன் நகரை விட்டு வெளியேறிவிட்டான். செல்கையில் தாய் குந்தி தேவிக்கும், திரௌபதிக்கும், காஷ்யாவுக்கும் செய்திகளை அனுப்பி இருக்கிறான். நகருக்கு வெளியே இருக்கும் நம்முடைய முகாமில் அவன் இருக்கலாம் என்கின்றனர். திடீரென அவனுக்கு என்ன ஆயிற்றென்றே புரியவில்லை!” என்று நிறுத்தினான் யுதிஷ்டிரன்.

“அண்ணா! உறுதிமொழி எடுக்கையில் உங்கள் பேச்சைக் கேட்டுத் தான் இளையவர் அப்படி ஒரு முடிவு எடுத்திருக்கிறார். அதுவும் நீங்கள் அனைத்தையும் நம் பெரியப்பாவின் விருப்பத்துக்கு விட்டதில் அவர் மனம் நொந்து போயிருக்கிறார்.” என்றான் நகுலன்.  மேலும் தொடர்ந்து, “இளையவர் மிகக் கோபத்தில் இருந்தார். அவர் முகமே கோபத்தில் சிவந்து விட்டது. மூத்தவரே! உங்கள் இந்த உறுதிமொழியால் தாத்தா அவர்களின் முயற்சியால் செய்த ஏற்பாடுகளையும், பீமன் செய்திருந்த யத்தனங்களையும் பயனற்றதாக்கி விட்டீர்கள். அனைத்தும் வீணாகி விட்டன. நீங்கள் அனைவரும் இந்த ராஜ சபையிலிருந்து வெளியேற ஆயத்தமானீர்கள். அப்போது தான் இளையவர் விருட்டென எழுந்தார். துரியோதனனுக்குச் சவால் கொடுக்கும் ஒரு பார்வையை அவனிடம் காட்டினார். அவன் சகோதரர்களையும் சவால் விடும் தோரணையில் பார்த்தார்.  மூத்தவரே! அப்போது இளையவர் கண்களில் யுத்தத்தின் சாயை தெரிந்தது. பின்னர் அவர் கோபுவை இழுத்துக்கொண்டு ஒவ்வொரு பகுதியையும் பிரித்திருந்த கயிற்று வளையத்தைத் தாண்டிக்கொண்டு பக்கவாட்டு வாயில் வழியாக வெளியேறிவிட்டார்.” தன் நீண்ட பிரசங்கத்தை முடித்தான் நகுலன்.

“என்ன செய்தியைக் கொடுத்துவிட்டுச் சென்றிருக்கிறான்?” யுதிஷ்டிரன் கேட்க, குந்தி,”ரேகாவைக் கேள்! சொல்வாள்!” என்றாள். ரேகா தன் கைகளைக் கூப்பி யுதிஷ்டிரனை நமஸ்கரித்தாள். பின்னர் கூப்பிய கரங்களுடனேயே, “பிரபு, காஷ்யாவுக்குச் சொன்ன செய்தி என்னவெனில்:”நான் உன் சுயம்வரத்தில் கலந்து கொள்ளமாட்டேன்.” என்பதே. அன்னை குந்தி தேவிக்கு:” தாயே, இனி உனக்கு நான்கு மகன்கள் மட்டுமே! ஐவர் இல்லை!” என்பதே. பாஞ்சால நாட்டு இளவரசிக்கு: “இனி உனக்கு நான்கு கணவர்கள் மட்டுமே! நால்வரை மட்டும் நீ கவனித்தால் போதுமானது!” என்பதே. பின்னர் கோபுவை மாளிகைக்கு அனுப்பித் தன் ஆயுதங்களை எடுத்து வரச் செய்தார். பின்னர் வெளியே காத்திருந்த முகாமுக்குச் சென்று தன் ரதத்தைப் பயணத்துக்குத் தயார்ப் படுத்த முனைந்து விட்டார்.”

“என் மூத்தவனே! நீ முன்னரே பீமனிடம் சொல்லி இருக்கலாம் அல்லவா? அனைத்தையும் பெரியப்பாவின் விருப்பத்திற்கிணங்க விடப் போகிறேன் என்று முன் கூட்டியே அவனிடம் தெரிவித்திருந்தால் துரியோதனனை எதிர்க்கும் ஏற்பாடுகளை அவன் செய்யாதிருந்திருப்பான் அல்லவா? அவன் ஏற்பாடுகள் செய்வதை அறிந்தும் நீ சும்மா இருந்தது ஏன்?” என்றால் குந்தி.

“எப்படி? தாயே! எப்படி?” என்று பெருமூச்சு விட்ட யுதிஷ்டிரன், “எனக்கு ராஜ்யசபையில் தான் நான் உறுதி மொழி எடுக்க வேண்டி எழுந்தபோது தான் என் சுயதர்மம் என்ன என்பதும், நான் செய்ய வேண்டியது என்ன என்பதும் தோன்றியது. அதுவரை குழப்பத்தில் தான் இருந்தேன்.  தாத்தா அவர்களின் கட்டளையினால் நான் அரசன் என்பதை ஏற்றுக் கொண்டேன். அது அவருடைய தர்மம். என் பெரியப்பாவும் அவருடைய சுய தர்மத்தை நிறைவேற்றி விட்டார். அவர் மகன்களை சிங்காதனப் போட்டியில் கலந்து கொள்ள விடாமல் நம் பக்கம் ஆதரவாக நின்றதன் மூலம் அவர் தன் தர்மத்தை நிறைவேற்றி விட்டார். “

“இத்தனைக்கும் பிறகு நான் என்னையே கேட்டுக் கொண்டேன்.” எது என்னுடைய தர்மம்?” என. அப்போது தான் எனக்குள் மின்னலைப் போல் பளிச்சிட்டது என் தர்மம் எதுவென. அது தான் அரசாட்சியை மீண்டும் பெரியவரான பெரியப்பாவின் கரங்களுக்குள்ளேயே கொடுப்பது. அது தான் என் தர்மம் என எனக்குப் புரிந்தது. தாயே! என்னைப் போல் கௌரவர்களும் இந்தக் குலத்தில் பிறந்தவர்கள் தானே! நான் மட்டும் இதற்கு பாத்தியதை கொண்டாட முடியுமா? நூற்றுவரின் தந்தை பிறவிக் குருடு என்பதால் அவர்களுக்குப் பிறப்பினால் கிடைத்த உரிமையை நான் இல்லை என மறுக்க முடியுமா? தாயே! நாம் பீமனை இழந்து விட்டோம் என்பது எனக்குப் புரிகிறது. அவன் இல்லாமல் நாம் நிச்சயமாய்க் கஷ்டப்படப் போகிறோம். அவன் இழப்பு ஈடு செய்ய முடியாத ஒன்று.” என்ற யுதிஷ்டிரன் மீண்டும் பெருமூச்சு விட்டான்.

“ஆனால் தர்மத்தின் வழி செல்வதில் உள்ள இடைஞ்சல்களையும் நாம் ஏற்றுக்கொண்டு முன் செல்லவில்லை எனில் தர்மத்தின் வழியிலேயே அர்த்தம் இல்லாமல் போய்விடும். நமக்கு மனிதராக வாழும் யோக்கியதையே இல்லாமல் போகும். இப்போது என் தர்மம் என்னவென எனக்கு நன்றாகவே புரிகிறது தாயே! நான் இந்த ஆட்சியை ஏற்கச் சம்மதித்ததே நம் அனைவருக்கும், முக்கியமாக சகோதரர்கள் அனைவருக்கும் இது நன்மை தரும் என்பதாலேயே. ஆனால் இப்போதோ பீமன் நம்முடன் இல்லை என்பதால் நான் இந்த ஆட்சியை ஏற்பதில் அர்த்தமே இல்லை. எனக்கு எதுவும் வேண்டாம்.” என்றான் யுதிஷ்டிரன் வருத்தம் பொங்க.

“ஆஹா, மூத்தவரே, மூத்தவரே, இம்மாதிரியான அர்த்தமில்லாப் பேச்சுக்களைக் கைவிடுங்கள். போதும், போதும்!” என்ற கிருஷ்ணன் சகாதேவன் பக்கம் திரும்பினான். “சகாதேவா! உனக்கு மற்றொரு பார்வை உள்ளதே! தயவு செய்து அதைப் பயன்படுத்தி இப்போது பீமன் எங்கே இருக்கிறான் என்பதைச் சொல்வாய்! நாம் அனைவரும் பெரும் பீதியிலும், அச்சத்திலும் ஆழ்ந்துவிடாமல் இருக்க வேண்டும். நான் சென்று அவனைத் திரும்ப அழைத்து வந்துவிடுகிறேன். அதற்கிடையில் இந்த விஷயம் எல்லாம் நம்முடன் இருக்கட்டும். நம் கஷ்டங்கள், சிரமங்கள் மற்றவர்களுக்குத் தெரிய வேண்டாம்.” என்றான் கிருஷ்ணன்.

சஹாதேவன் தன் மூச்சை ஒரு தரம் உள்ளிழுத்து வெளிவிட்டுப் பின் தன் கண்களை மூடிக் கொண்டான். உள்ளார்ந்த பார்வையில் அவன் இருப்பது தெரியவர அவன் இப்போது வாய் திறந்து, “இளையவர் கிழக்குத் திசையில் சென்றிருக்கிறார் எனத் தெரிகிறது. அதாவது நாம் காம்பில்யத்திலிருந்து வந்தோமே, அதே திசை… “என இழுத்தான்.  “சரி, இப்போது நாம் அனைவரும் பீமனை மறந்து விடலாம். நான் உடனே சென்று அவனைக் கண்டு பிடித்து இழுத்து வருகிறேன்,” என்ற கிருஷ்ணன், “கருடா!” எனத் தன் துணைக்கு கருடனைக் கூப்பிட்டான். கருடர்களில் ஒருவர் வந்து கூப்பிய கரங்களோடு நின்றான். “ என்னுடைய ஆயுதங்களைத் தயார் செய்துவிட்டு அப்படியே ரத சாரதியிடம் ரதத்தையும் தயார் செய்யச் சொல்!” எனக் கட்டளை இட்டான் கண்ணன்.

“கோவிந்தா,  என் சகோதரா, ஆர்யபுத்திரர் மட்டும் திரும்பி வரவில்லை எனில் நானும் காம்பில்யத்துக்கே திரும்பி விடுவேன் என்பதை அவரிடம் சொல்.” என்றாள் திரௌபதி.  “ஆஹா, பீமன் வரவில்லை எனில் செய்வதற்கு உங்கள் ஒவ்வொரிடமும் ஒவ்வொரு வேலை வைத்துக் கொண்டு இருக்கிறீர்கள். ஜாலந்திரா ஒன்று சொன்னால், அத்தை குந்தி ஒன்று சொல்கிறார். இப்போது நீயுமா? இதோ பார் பாஞ்சாலி, பீமனிடம் நானும் இப்படிச் சொல்லப் போகிறேன். பீமன் திரும்பி வரவில்லை எனில் நானும் என்னுடைய கோபிகள் வசிக்கும் வ்ருந்தாவனத்துக்கே சென்று விடுவேன்.” என்று சொல்லப் போகிறேன்.” என்று சொன்ன கிருஷ்ணன் அங்குள்ள சூழ்நிலையின் இறுக்கத்தைச் சற்றே குறைத்தான்.

அப்போது ஜாலந்திரா திடீரெனக் கோபம் பொங்கக் கிருஷ்ணன் பக்கம் திரும்பினாள். “கோவிந்தா! இவை அனைத்துக்கும் காரணம் நீயே!  ஆம், நீ ஒருவன் தான் காரணம். நீ என் சகோதரி பானுமதிக்கு ஒரு சத்தியம் செய்து கொடுத்தாய் அல்லவா? அதை இப்போது நிறைவேற்றிக் கொண்டிருக்கிறாய்!” என்று கத்தினாள். அவ்வளவு பேர் இருக்க ஜாலந்திரா இப்படிக் கத்தியதைக் கண்ட அனைவரும் ஆச்சரியம் அடைந்தனர்.  கிருஷ்ணன் தயவாகச் சிரித்த வண்ணம், “யார் அந்த சத்தியத்தை என்னிடம் கேட்டது?” என்றான். இப்போது கோபம் அதிகமான ஜாலந்திராவுக்குக் கண்ணீரும் பொங்கியது. “உன் தந்திர, மந்திர வேலையை என்னிடமும் காட்டுகிறாயா  கண்ணா? உன்னால் எவ்வளவு முடியுமோ, அவ்வளவு காட்டு!” என்று விம்மும் குரலில் கூறினாள்.

திரௌபதி அவள் கைகளைப் பிடித்து ஆறுதல் கூற முயன்றபோது ஜாலந்திரா மேலும் கோபத்தோடு அவளைத் தள்ளிவிட்டாள்.  பின்னர் மேலும் கோபத்தோடு அவளைப் பார்த்து, “நான் மற்றவர்களைப் பற்றிச் சிறிதும் கவலைப்படவில்லை. இதோ பார், பாஞ்சாலி, யார் என்ன சொன்னாலும், செய்தாலும் எனக்கு அக்கறை இல்லை.” என்று ஆரம்பித்தாள். “நீ சொல்வது ஒவ்வொன்றையும் நான் கேட்டே ஆகவேண்டும். கேட்கிறேன்.” என்றான் கிருஷ்ணன் மீண்டும் தயை பொங்கும் குரலில். கிருஷ்ணனை ஆங்காரத்துடன் பார்த்தாள் ஜாலந்திரா. அவள் உடலின் ஒவ்வொரு பாகமும் தனித்தனியாக நடுங்கியது. “கோவிந்தா, நீ மட்டும் அவர் இல்லாமல் திரும்பி வந்தாயெனில், நான் என் நாவைத் துண்டித்துக் கொண்டு உன் காலடியில் விழுந்து தற்கொலை செய்து கொள்வேன்.” என்று மீண்டும் கத்தினாள்.

கிருஷ்ணன் பதிலே பேசாமல் சிரித்தான். சிரித்த வண்ணம் திரௌபதியைப் பார்த்து, “இவளைப் போல் ஒரு பைத்தியமும் உண்டோ?” என்று கேட்டான். திரௌபதி திகைத்து நின்றாள்.

Wednesday, July 8, 2015

குந்தியின் வருத்தம், ஜாலந்திராவின் பிடிவாதம்!

அதைக் கேட்டதுமே ஜாலந்திரா மனம் உடைந்து விட்டாள். பெருகும் துக்கத்தை அடக்கிய வண்ணம், உடைந்த குரலில், “அவர் அடுத்த வருடம் என்னுடைய சுயம்வரத்திற்கு வரப் போவதில்லை என்று சொல்லிவிட்டார். அவரை எதிர்பார்க்க வேண்டாம் என்று எனக்குச் செய்தி அனுப்பியுள்ளார்.” என்று கஷ்டப்பட்டுக் கூறியவள் அப்படியே ரேகாவின் கரங்களில் மயக்கமடைந்து விழுந்தாள். கிருஷ்ணனைத் தவிர மற்றவர்களுக்கு பீமனுக்கும், ஜாலந்திராவுக்கும் இடையே உள்ள உறவைக் குறித்துத் தெரிந்திருக்கவில்லை என்பதால் இதைக் கண்டதும் அனைவரும் அதிர்ச்சியுடன் கூடிய ஆச்சரியத்தை அடைந்தனர். திரௌபதி மிகச் சிரமத்துடன் தன் உணர்வுகளை வெளியே காட்டிக்கொள்ளாமல் இருந்தாள். அடக்கிய உணர்வுகளோடு அவள் கிருஷ்ணனைப் பார்த்து, “கிருஷ்ணா, எப்படியேனும், இளையவரைத் திரும்ப அழைத்து வா! அவர் வந்தே ஆக வேண்டும்.” என்றாள்.

அப்போது அர்ஜுனன் அவளைப் பார்த்து, “பாஞ்சாலி, கவலைப்படாதே! அண்ணா யுதிஷ்டிரரும், சகாதேவனும் அவனைத் தேடித்தான் சென்றிருக்கின்றனர். எப்படியும் கண்டு பிடித்து அழைத்து வருவார்கள்.” என்றான். அதற்குள்ளாகக் குந்தி கவலையுடன், “அவன் தன்னைத் தானே தற்கொலை செய்து கொண்டிருக்க மாட்டான் அல்லவா?” என்று வினவினாள். “அத்தை, அத்தை, அன்பான அத்தை! கவலைப்படாதீர்கள்! பீமன் அப்படி எல்லாம் செய்ய மாட்டான். வாழ்க்கையில் அவன் மிக்க ஆர்வம் உள்ளவன். நன்றாக வாழ வேண்டும் என்னும் ருசியுள்ளவன். அப்படிப்பட்டவன் இப்படி ஒரு காரியத்தைச் செய்யவே மாட்டான்.” என்றான் கிருஷ்ணன்.

ஜாலந்திரா மெல்லக் கண் விழித்தாள்.ரேகாவை அவள் இறுக அணைத்துக் கொண்டிருந்தாள். தன் முந்தானையினால் அவளுக்கு விசிறிக் கொண்டிருந்தாள் ரேகா. “கிருஷ்ணா, தயவு செய்து ஏதானும் செய்! உடனே செய்! அர்ஜுனா! உன் அண்ணனும், சகாதேவனும் திரும்பி விட்டார்களா எனப் பார்! பீமனைக் கண்டு பிடித்தார்களா என்றும் விசாரித்துக் கொள்!” என்றாள் குந்தி!

“ஆனால் நான் உங்கள் அனைவரையும் ஒன்று வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்.  இந்த விஷயத்தைப் பற்றி எதுவும் பேசாமல் அமைதி காக்கும்படி கேட்டுக் கொள்கிறேன். ஏனெனில் பீமன் கோபத்தினால் நகரை விட்டுச் சென்று விட்டான் என்பது அனைவருக்கும் தெரிந்தால் உடனே அனைவரும் வருந்துவார்கள். மேலும் பல கலவரங்கள் ஏற்படும். ஹஸ்தினாபுரம் முழுதும் அல்லோலகல்லோலப்படும். நம் நண்பர்கள் அனைவருக்கும் மன வருத்தம் ஏற்படுவதோடு நம் எதிரிகளுக்கு நகைப்புக்கு இடமாகிவிடும்.”

“ஆனால், கோவிந்தா, அவர் முழுமனதோடு சென்று விட்டார். இதை நாம் எப்படி மற்றவர்களிடமிருந்து மறைக்க முடியும்?” என்று கேட்டாள் திரௌபதி.

“எப்படி என்று பார்! நான் சொல்கிறேன் உனக்கு! திரௌபதி, நான் உடனே கிளம்பிச் சென்று அவனைத் தேடிக் கண்டு பிடித்து அழைத்து வருகிறேன். நீ அனைவரிடமும் நாங்கள் வேட்டைக்குச் சென்றிருப்பதாகச் சொல்லிவிடு!” என்றான் கிருஷ்ணன்.

“கிருஷ்ணா, நீ அவனை அழைத்து வரும் வரை நான் உணவு உட்கொள்ள மாட்டேன். இது நிச்சயம்!” என்றாள் குந்தி. கிருஷ்ணன் அவள் முறையீட்டைக் கேட்டுச் சிரித்தான். அவளைப் பார்த்து, “அத்தை! நீங்கள் உணவு எடுத்துக்கொள்ளாமல் இருந்தால் அப்படியே இருங்கள். அது பற்றிப் பிரச்னை ஏதுமில்லை. நீங்கள் எப்போதுமே விரதங்கள் இருந்து உடலை வருத்திக் கொள்ளும் மனுஷி! ஆனால் இப்போது ஏன் சாப்பிடவில்லை என்பதற்கான காரணத்தை மட்டும் வெளியே சொல்ல வேண்டாம்.” என்றான் கிருஷ்ணன்.

அதற்குள் ஜாலந்திரா, “ஹூம், கோவிந்தா, உன்னால் முடியாது. அவர் திரும்பப் போவதே இல்லை. எனக்கு நன்றாகத் தெரியும். உன்னால் அவரை அழைத்து வர இயலாது!” என்று தழுதழுக்கும் குரலில் கூறினாள்.  “ஆஹா, நான் கட்டாயம் அவனை அழைத்துவருவேன். ஆனால் உனக்காக இல்லை, ஜாலந்திரா! அத்தை குந்திக்காக! அதை நினைவில் வை!” என்று சிரித்த வண்ணம் சொன்ன கிருஷ்ணன் அங்கே இருந்த இறுக்கமான சூழ்நிலையை இதன் மூலம் தளர்த்த முயன்றான்.  “அவர் திரும்பவே மாட்டார்!” என்று விரக்தியுடன் தலையை ஆட்டிய வண்ணம் மீண்டும் சொன்னாள் ஜாலந்திரா.

நகுலன் இடைமறித்து, “ பீமன் துரியோதனனுடன் போடவிருந்த சண்டைகளுக்கு எல்லாம் இப்போது இதனால் அர்த்தமின்றிப் போய்விட்டது. அவனை எவ்வாறு இனி எதிர்கொள்வது அதுதான் பீமனின் வருத்தம்?” என்றான். வெறுப்புடனும், கோபத்துடனும், “நம் பெரிய அண்ணா நமக்கெல்லாம் பேரிடரைக் கொண்டு வந்து விட்டார்.” என்றான் அர்ஜுனன். “நம் பெரியப்பாவோ துரியோதனன் பக்கம் தான் இருப்பார். நமக்கு எதுவும் செய்யப் போவதில்லை. ஆகவே இனி துரியோதனனுக்குத் தான் ஆட்சி. நாம் அனைவரும் கை கட்டி வாய் பொத்தி, துரியோதனனுக்கும், அவன் சகோதரர்களுக்கும் முன் அடிமைகளாக நிற்க வேண்டும். அது தான் நடக்கப் போகிறது.” என்றான் அர்ஜுனன்.

“அதையும் பார்க்கலாம்!” என்றான் கிருஷ்ணன் அமைதியாக. “பீமன் ஒருக்காலும் துரியோதனனுக்குச் சேவை செய்து கொண்டு இருக்க மாட்டான். அவன் அப்படிப்பட்டவன் அல்ல. நீங்கள் அனைவரும் இந்த விஷயத்தைச் சற்றே மறந்தால்………….” என்று நிறுத்தினான் கிருஷ்ணன்.

“எப்படி மறப்பது?” என்று குந்தி கேட்க, “என்னால் அவரை மறக்கவே இயலாது!” என்று திட்டவட்டமாக ஜாலந்திரா அறிவிக்க, அவளைப் பார்த்துக் கிருஷ்ணன், “ஜாலந்திரா, முட்டாள் மாதிரிப் பேசாதே! இதோ பார்! குந்தி அத்தைக்கு முன்னால் நீ உன்னையே ஒரு முட்டாள் பெண்ணாகக் காட்டிக் கொண்டிருக்கிறாய் என்பதைப் புரிந்து கொள்!” என்றான் கிருஷ்ணன். “ஹூம், அப்படியே இருந்துவிட்டுப் போகிறேன். நான் ஒரு முட்டாளாகவே இருக்கிறேன். யாருக்கு அதில் அக்கறை உள்ளது? அவர் மட்டும் வரவில்லை எனில்!” என்று ஜாலந்திரா நிறுத்தினாள்.

Tuesday, July 7, 2015

பீமன் அனுப்பிய செய்தி!

சபை முடிந்து அனைவரும் வெளியேறுகையில் அர்ஜுனன் மட்டும் பழைய நண்பர்களைப் பார்த்துத் தலை அசைத்த வண்ணமும், ஒரு சிலரிடம் பேசிக் கொண்டும் இருக்கும்போது நகுலன் அங்கே வந்து அவனைத் தனியாக ஒரு பக்கம் இழுத்துச் சென்றான். “சகோதரரே, பீமனைக் காணவில்லை!” என்று வியப்பும் ஆச்சரியமும் தொனிக்கக் கூறினான். “என்ன, காணவில்லையா? இப்போது கூட இங்கே தான் இருந்தான்! நம் அருகே தானே அமர்ந்திருந்தான்!” என்றான் அர்ஜுனனும் ஆச்சரியத்துடனே.  அதற்கு நகுலன் ஆச்சரியமும், ஆர்வமும் மாறாத குரலில் பதிலளித்தான். “இல்லை அண்ணாரே! தாத்தா அவர்கள் பேச்சை முடித்துக் கொண்டு அனைவரும் கிளம்பும்போது பீமன் மட்டும் அனைவரையும் தள்ளிக் கொண்டு முந்தி அடித்த வண்ணம் பக்கவாட்டு வாயில் வழியாக வெளியே சென்றதைப் பார்த்தேன்.” என்றான்.

“ஓ, அவன் அரண்மனையில் நம் இருப்பிடத்துக்குச் சென்றிருக்கலாம்.” என்றான் அர்ஜுனன். “இல்லை என்றே தோன்றுகிறது, சகோதரரே! நம் பெரிய அண்ணா பேசும்போதெல்லாம் அவர் முகத்தில் ஆத்திரம் கொப்பளித்துக் கொண்டிருந்தது. அதிலும் திருதராஷ்டிரன் சொல்வதைக் கேட்பதாகப் பெரிய அண்ணா சொன்னபோது அவரால் கோபத்தை அடக்க முடியவில்லை.”

“அடக் கடவுளே! அப்படியா சொல்கிறாய்? அப்படி எனில் அவன் வேறு ஏதோ குறும்பான வேலையில் ஈடுபட்டிருக்க வேண்டும் அல்லது தீங்கு ஏதேனும் விளைவிக்க முயல வேண்டும். எப்படியாயினும் அவனைக் கண்டு பிடித்தாக வேண்டும், வா!” என்ற அர்ஜுனன் நகுலனையும் அழைத்துக் கொண்டு பீமனைத் தேடிக் கொண்டு கிளம்பினான்.

இங்கே கிருஷ்ணனுக்காக ஒதுக்கப்பட்டிருந்த மாளிகையில் தன்னிடத்திற்குத் திரும்பிய கிருஷ்ணன் அங்கே ஜாலந்திராவைக் கண்டு வியந்தான். அவள் நிலைமையும் மோசமாக இருந்தது. அவள் முகம் சிவந்து குழப்பத்தில் இருப்பதைக் காட்டியதோடு அவள் உடலே நடுங்கிக் கொண்டிருந்தது. கண்கள் அகல விரிந்து ஆச்சரியத்தையும், குழப்பத்தையும் ஒருங்கே காட்டின! கிருஷ்ணனைப் பார்த்ததும், உதடுகள் நடுங்க,” வாசுதேவா! அவர் சென்றுவிட்டார்!” என்றாள். அவள் மிகவும் உணர்ச்சி வசப்பட்டிருந்தது தெரிந்தது.

“யார்? யார் எங்கே சென்றுவிட்டார்கள்?” என்று கேட்டான் கிருஷ்ணன்.

“அரசன் வ்ருகோதரன் தான்! வேறு யாராயிருக்க முடியும்?”

“ஓ, அவன் சிங்காதன அறையில் சபை கூடியபோது எங்களுடன் தான் அமர்ந்திருந்தான். அவனை அங்கே நான் பார்த்தேன். எங்களுடன் தானே இருந்தான்!” என்றான் கிருஷ்ணன். கோபம் கொண்ட ஜாலந்திரா தன் கால்களால் தரையை உதைத்தாள். “நான் அவர் சென்றுவிட்டார் எனக் கூறுகிறேனே!” எனப் பொறுமையில்லாமல் கூவினாள். அப்போது ரேகா அங்கே வந்து அவளைப் பாதுகாப்பது போல் நின்று கொண்டாள்.

“சரி, சரி, எங்கே போயிருக்கிறான்?”

“எனக்கு எப்படித் தெரியும்?” என்றாள் ஜாலந்திரா. பின்னர் ஏமாற்றத்திலும் கோபத்திலும் தன்னிரு கரங்களையும் விரித்த வண்ணம், “எங்கேயோ சென்று விட்டார். இனி அவர் திரும்பப் போவதே இல்லை!” என விரக்தியாகக் கூறினாள். சொல்லும்போதே அவள் குரல் உடைந்து அழ ஆரம்பித்தாள். பொங்கி வரும் விம்மல்களைக் கட்டுப்படுத்திய வண்ணம்,”எனக்கு இந்தச் செய்தியை ரேகா தான் கொடுத்தாள். கோபு மூலம் அவர் எனக்குச் செய்தியை அனுப்பி இருக்கிறார். கோபு ரேகாவிடம் தெரிவிக்க, ரேகா என்னிடம் தெரிவித்தாள்.” என்று விளக்கினாள்.

“என்ன செய்து அது?”

“உன் சுயம்வரத்தில் என்னை எதிர்பார்க்காதே!” இது தான் அந்தச் செய்தி! வாசுதேவா, ரேகாவை வேண்டுமானால் கேட்டுக் கொள். செய்தி உண்மையா பொய்யா என! நீ தான் என்னை நம்பவில்லையே!” என்றவளுக்குக் கால்கள் துவண்டன. அவளால் நிற்க முடியவில்லை. அப்படியே கீழே உட்கார்ந்தாள். தன் நெற்றியில் இரு கரங்களையும் வைத்துக் கொண்டு பரிதாபமாகப் புலம்ப ஆரம்பித்தாள். “அவர் போய்விட்டார்! ஒரேயடியாகப் போய் விட்டார்.இனி திரும்பி வரப் போவதில்லை! என் கதி? கங்கையில் என்னை மூழ்கடித்துக் கொள்வது தான் ஒரே வழி!”

கிருஷ்ணன் ரேகாவைப் பார்க்க ஜாலந்திரா சொன்ன செய்தியைத் தன் தலை அசைப்பின் மூலம் ரேகாவும் உறுதி செய்தாள்.  கிருஷ்ணன் மேற்கொண்டு வாயைத் திறக்கும் முன்னர் அங்கே குந்தி ஓடோடி வந்தாள். அவளும் செய்வதறியாமல் புலம்பிக் கொண்டு தான் வந்தாள். அவளைத் தொடர்ந்து அர்ஜுனன், நகுலன், திரௌபதி ஆகியோரும் குழப்பமும், கவலையும் கலந்த முகத்துடன் வந்தார்கள். கிருஷ்ணனைப் பார்த்ததுமே அவள், “கிருஷ்ணா, கிருஷ்ணா, என்ன நடந்தது தெரியுமா? பீமன் போய்விட்டான்! ஒரேயடியாகப் போய்விட்டான். ஓ, மஹாதேவா, இது என்ன சோதனை!” என்று புலம்பியவள் தானும் நிற்க முடியாமல் அப்படியே சரிந்தவண்ணம் ஜாலந்திரா அருகே அமர்ந்தாள்.

கிருஷ்ணன் மென்மையான குரலில், “அவன் எங்கே, ஏன் சென்றிருக்கிறான் என்பதை உங்களில் எவராலும் சொல்ல முடியுமா?” என்று கேட்டான். “அது அந்தக் கடவுளுக்குத் தான் தெரியும் அப்பனே!” என்றாள் குந்தி. “கோபு மாலா மூலம் எனக்குச் செய்தியை அனுப்பி இருந்தான்……” என்று ஆரம்பித்தாள் குந்தி.

“என்ன செய்தி?” கிருஷ்ணன் கேட்டான்.

“அம்மாவிடம் சொல்! இனிமேல் அவளுக்கு நான்கு பிள்ளைகள் தான்! அவர்களோடு அவள் திருப்தியாகவும் நிம்மதியாகவும் இருக்கச் சொல்!” இது தான் அவன் எனக்கு அனுப்பிய செய்தி!” என்றாள் குந்தி. சொல்லும்போதே அவள் கண்களிலிருந்து கண்ணீர் முத்துக்கள் உருண்டோடின. இயல்பாகவே தன்னம்பிக்கையும், தைரியமும் மிகுந்த திரௌபதி கூட இப்போது கொஞ்சம் கலங்கித் தான் காணப்பட்டாள். “கிருஷ்ண வாசுதேவா! எனக்கும் ஒரு செய்தி வந்திருக்கிறது!” என்றாள்.

“என்ன அது?”
“திரௌபதி, இனிமேல் உனக்கு நான்கு கணவர்கள் தான். நீ இவர்களைத் திருப்தி செய்தால் போதுமானது. என்பதே அது!” என்றாள் திரௌபதி.

“அவன் இப்படி ஏதேனும் செய்து வைப்பான் என நான் எதிர்பார்த்தேன்.” என்ற வண்ணம் நகுலன் சம்பாஷணையில் குறுக்கிட்டான். “அவன் முகம் கோபத்திலும், க்ரோதத்திலும் கொந்தளித்துக் கொண்டிருந்ததை நான் பார்த்தேன். அதிலும் நம் மூத்தவர் அனைத்தையும் பெரியப்பா திருதராஷ்டிரரின் விருப்பத்திற்கு விடும்போது அவர் முகம் அளவிடமுடியாக் கோபத்தில் காணப்பட்டது.” என்றான். “கடவுளே, கடவுளே!” என்ற வண்ணம் அழ ஆரம்பித்தாள் ஜாலந்திரா. குந்தி தன் கைகளால் அவளை அணைத்துக் கொண்டு ஆறுதல் கூறும் பாவனையில் தட்டிக் கொடுத்தாள். திரௌபதி இதற்குள்ளாகத் தன்னைச் சமாளித்துக் கொண்டு விட்டாள். அவளும் ஜாலந்திராவின் அருகே தரையில் அமர்ந்தாள். ஜாலந்திராவின் கண்ணீரைத் துடைத்துவிட்டாள். பின்னர் அவளைப் பார்த்து, “உனக்கும் செய்தி ஏதேனும் வந்திருக்கிறதா?” என்று கேட்டாள்.