Friday, November 29, 2013

சத்யவதியின் கவலை!

“ஹா, அது தான் பீமனின் மகன் பெயர் அன்னையே!”

இந்த விந்தையான பெயரினால் தனக்கு வந்த சிரிப்பை அடக்கமுடியாமல் சிரித்த ராணி, “ஏன் கடோத்கஜன் என்று பெயரிட்டார்கள்?” என மீண்டும் கேட்டாள்.  “ராக்ஷசர்கள் அனைவரும், அவனை, அந்தக் குழந்தையை ‘விரோசனன்’ என்றே அழைக்கின்றனர்.  ஆனால் பீமன் மட்டும் ‘கடோத்கஜன்’ என்னும் பெயரிலேயே அழைக்கிறான்.  வழவழவென்றிருக்கும் மண் பானையைப் போல் அந்தக் குழந்தையின் தலையும் வழுக்கையாக மயிரே இல்லாமல் காணப்படுகிறது.  “ உத்தவனும் ராணியுடன் சிரிப்பில் கலந்து கொண்டே கூறினான்.  “ஆனால் அந்தக் குழந்தையால் பல சங்கடங்கள் உருவாகியுள்ளன.  ஹிடும்பிக்கு அந்தக் குழந்தையை விட்டு விட்டு வர இயலாது.  ஏனெனில் அவள் ராக்ஷச குல மக்களை விட்டுப் பிரிய முடியாது. அவள் மக்கள் அவளைப் பிரிய அனுமதிக்க மாட்டார்கள்.  கடோத்கஜனைத் தன்னிடமிருந்து பிரித்து எடுத்துச் செல்லவும் ஹிடும்பி அனுமதிக்க மாட்டாள். பீமனோ, குழந்தையையும், ஹிடும்பியையும் விட்டு வர மாட்டான்.  மற்ற நான்கு சகோதரர்களும் பீமன் இல்லாமல் அங்கிருந்து கிளம்ப மாட்டார்கள். ஆக நமக்கெல்லாம் மேலே என்ன செய்யலாம் என்பது புரியத்தான் இல்லை. வாசுதேவன் என்னிடம் ஒரு செய்தி கூறி அனுப்பினான்: ‘ஐந்து சகோதரர்களும் ஒருவரும் அறியாமல் சுயம்வரத்துக்கு வந்து கலந்து கொள்ள வேண்டும்’ என்பதே அந்தச் செய்தி.  இது எங்கனம் நடக்க முடியும்?  முடியவில்லை அன்னையே!  ஆகவே நான் உங்களிடம் வந்திருக்கிறேன், மாட்சிமை பொருந்திய ராணியே, தாங்கள் தான் உதவ வேண்டும்.”

மஹாராணி சத்யவதி சிறிது நேரம் யோசித்த வண்ணம் அமர்ந்திருந்தாள்.  “இது உண்மையிலேயே மிகவும் சிரமமான, கஷ்டமானதொரு சூழ்நிலையாக இருக்கிறது.  விதுராஉன்னால் அங்கே சென்று அவர்களுக்கு அறிவுறுத்தி   சம்மதிக்கச் வைக்க முடியுமா?”

“என் சக்திக்கு அப்பாற்பட்டது, தாயே!” என்றார் விதுரர்.  “இவ்வுலகில் அனைவரையும் என்னால் என் அறிவுரைகளைக் கேட்டு அதற்கேற்றாற்போல் சம்மதிக்க வைக்க முடியும்.  பீமன் ஒருவனைத் தவிர.  அவன் பிடிவாதம் பிடிப்பது என முடிவெடுத்துவிட்டால் எளிதில் மாற்ற இயலாது.”

மஹாராணி சத்யவதி தன் அழகிய அமைப்பான கரத்தால் தன் தலையைத் தாங்கிக் கொண்டாள்.  சட்டென ஏதோ நினைவில் வந்தது போல் நெற்றிப் புருவத்தில் தட்டிக் கொண்டாள்.  “ஓ, எனக்கு இப்போது தான் புரிகிறது.  இன்று காலை திடீரென கிருஷ்ண த்வைபாயனன் (வியாசர்) வந்தது இதற்குத் தான்.   அவன் வந்திருக்கும் செய்தி எனக்குக் கிடைத்ததுமே,  ஏதோ முக்கியமான ஒன்று நிகழப்போகிறது என ஊகித்தேன்.  நமக்கு எப்போதெல்லாம் தேவையோ அப்போதெல்லாம் அவன் தவறாமல் வந்துவிடுகிறான். “  இதைச் சொல்கையில் அந்த வயது முதிர்ந்த தாய்க்கும் தன் மகனைக் குறித்த பெருமையில் முகம் மலர்ந்து விகசித்தது.    தாயன்பு சுடர் விட்டுப் பிரகாசித்தது.  “உனக்குத் தெரியுமா உத்தவா?  நீ அறிவாயா?  த்வைபாயனன் எவ்வளவு பெரிய சிறந்த மஹரிஷியாக இருந்தாலும் ஒரு   சிறந்த மகனாகவும் இருக்கிறான் என்பதை நீ அறிவாயா?  அவன் இல்லை எனில் நான் என்ன செய்ய முடியும்?  என்னால் என்ன செய்ய இயலும்?  நிச்சயமாய் எதுவும் இயலாது.  விதுரா, குழந்தாய், நீ சென்று த்வைபாயனன் தன் மதிய நேரத்து சந்தியாவந்தனங்களையும், அநுஷ்டானங்களையும் முடித்துவிட்டானா என்று பார்க்கிறாயா?  முடித்துவிட்டான் எனில் அவனை இங்கே வரச் சொல்கிறாயா?”

விதுரர் அங்கிருந்து கிளம்ப மஹாராணி உத்தவனிடம் மேலும் நாககூடத்தின் நிகழ்ச்சிகளைப் பற்றிக் கேட்டு அறிந்து கொண்டாள்.  அப்போது யாரோ வேகமாக வரும் நடை சப்தமும், பெரும் குரலில் மனம் விட்டுச் சிரிக்கும் ஒலியும் கேட்கவே உத்தவன் எழுந்து  கொண்டு வியாசரை வரவேற்கும் வண்ணம் தன் கைகளைக் கூப்பிய வண்ணம் நின்றான்.  பரந்து அகன்ற தன் முகம் முழுவதும் சிரிப்பாய் வந்தார் வியாசர்.  கண்களில் அன்பும், கருணையும் பெருக்கெடுத்து ஓடியது.  வந்தவர் தன் முழு உடலையும் கீழே கிடத்தித் தன் தாயை வணங்கி அவள் கால்களைத் தொட்டுத் தன் கண்களில் ஒற்றிக் கொண்டு, அவள் பாத தூளியைத் தன் சிரசிலும் தரித்துக் கொண்டார். வெள்ளை வெளேரெனப் பஞ்சு போன்றிருந்த அந்தத் தலைமுடியையும், அவரின் கொண்டையையும் மிக ஆதுரத்துடன் ஒரு தாயின் பாசம் பூரணமாகத் தெரியும் வண்ணம் குழந்தைகளை அன்போடு உச்சந்தலையை மோர்ந்து பார்க்கும் தாயைப்போன்ற அன்புடன் வியாசரை இன்னமும் தன் குழந்தையாகவே பாவிப்பது தெரியும் வண்ணம் மஹாராணி தடவிக் கொடுத்தாள்.

வயது முதிர்ந்த அந்த மகன் தன் தாயைப் பார்த்து, “தாயே,நீங்கள் நலமாக இருக்கிறீர்கள் அல்லவா?” என நலம் விசாரித்தார்.  “ஒரு வயதானவளுக்கு எத்தகைய உடல் நலம் இருந்தால் நன்மையோ அத்தகைய உடல் நலத்தோடு நலமாகவே இருக்கிறேன், குழந்தாய்.”  என்றாள் அந்த அன்னை.  பின்னர் தன் மகனைப் பார்த்து, “உன்னை மிகவும் எதிர்பார்த்தேன், கிருஷ்ணா!” என்றாள். (வேத வியாசருக்குக் கிருஷ்ண த்வைபாயனர் என்பது பெயர். இதை நினைவில் வைக்கவும்.)  வியாசர் முகம் முழுவதுமே பெரியதொரு சிரிப்பில் மலர்ந்தது.  “உங்களுக்கு என்னுடைய உதவி தேவைப்படும் என என் மனதில் தோன்றியது தாயே!” என்றார்.

“எப்படி அறிவாய், மகனே?”

“தெரியாது, தாயே.  தெரியாது.  ஆனால் என் உள்ளிருந்து ஒரு குரல் வற்புறுத்தியது!  அது அந்த மஹாதேவன் குரலாகவும் இருக்கலாம்.   அந்தக் குரல் என்னை வற்புறுத்தியது, “உடனே உன் தாயிடம் செல்!” என்று.   அந்தக் குரலுக்கு நான் கீழ்ப்படிந்தேன்.  ஒருவேளை உங்கள் வெளியிடப்படாத உள் மனதின்  விருப்பம் தெய்வத்தின் குரலாக, தெய்வத்தின் ஆணையாக எனக்கு வந்திருக்கலாம்.”

“என் குழந்தாய், இப்போது ஒரு கடுமையான சூழ்நிலையில் நாம் இருக்கிறோம்.  பாண்டவ சகோதரர்கள் ஐவரும் ராக்ஷச வர்த்தத்தில் ஒளிந்து வாழ்வது குறித்து நீ அறிந்திருப்பாய்.   பீமன் ராக்ஷசர்களின் தலைவனாகவும் அரசனாகவும் ஆகி இருக்கிறான்.  ராக்ஷசப் பெண்ணை மணந்து ஒரு  ஆண் மகனுக்கும் தந்தையாகிவிட்டான்.  இப்போது கிருஷ்ண வாசுதேவன் அவர்களை அங்கிருந்து வெளிவரச் சொல்கிறான். திரெளபதியின் சுயம்வரத்தை ஒட்டி அவர்கள் வெளிப்பட்டு சாமானிய மற்ற அரசர்களைப் போல் வெளிப்படையாக வாழச் சரியான சமயம் வாய்த்திருப்பதாக அவன் கருதுகிறான்.  ஆனால் பீமனுக்கு ராக்ஷசவர்த்தத்தை விட்டு வர இஷ்டமில்லை.  அவன் இல்லாமல் மற்ற நால்வரும் வர மாட்டார்கள்.   உனக்குத் தான் தெரியுமே, நால்வரும் பீமன் இல்லாமல் அங்கிருந்து நகரக் கூட மாட்டார்கள்.”

“ஏன் தாயே?”

“இவை எல்லாமும் ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்துள்ளது கிருஷ்ணா!  பீமனுக்குத் தன் மகனைப் பிரிய மனமில்லை.  அந்த ராக்ஷசப் பெண்ணோ! அவள் பெயர் என்ன? உத்தவா?  அந்தப் பெண்ணின் பெயர் என்ன? அவளோ தன் மகனைப் பிரிய மாட்டாளாம்.  அவள் கணவனோடு குழந்தையை எடுத்துவரவும் ராக்ஷசர்கள் அனுமதிக்க மாட்டார்களாம்.  இப்போது என்ன செய்யலாம்? மகனே?”

“அன்னையே, அவள் சொல்வது அனைத்தும் சரியானதே!  நீஙகள் ராக்ஷசர்களோடு வாழ்ந்து பார்க்கவில்லை;  நான் இருந்திருக்கிறேன். அவளுக்கு நம்முடைய பழக்க, வழக்கங்கள், நாம் வசிக்கும் இந்தச் சூழ்நிலை இயற்கைக்கு மாறாகவே தெரியும்.  முற்றிலும் புதியதொரு சூழ்நிலையாக இருக்கும்.  நம்முடன் அவள் வாழ நேர்ந்தால் இந்தச் சூழ்நிலையில் அவள் ஒரு வாடிய புஷ்பத்தைப் போல் ஆகிவிடுவாள்.  அவளால் இந்தச் சூழ்நிலையில் ஒன்ற முடியாது.”

“பின்னர் அந்த ஐந்து சகோதரர்களையும் அங்கிருந்து எவ்வாறு திரும்ப வெளிக்கொண்டு வர முடியும்? ஒரு வேளை இப்போது இருப்பதைப் போன்றதொரு சூழ்நிலை திரும்ப வராமல் போய்விட்டால்?  அவர்களால் வெளிவரவே இயலாதே!”  மஹாராணியின் குரலில் கவலை தொனித்தது.

Tuesday, November 26, 2013

ஹஸ்தினாபுரத்தின் முதல் வாரிசு!

“ஆம், தாயே! மழைக்காலத்துக்கு முன்னர் நான் அனுப்பிய செய்தி உங்களுக்கு வந்திருக்கும் என எண்ணுகிறேன்.” ரகசியம் பேசும் தொனியில் மெதுவாகப் பேசினான் உத்தவன். “ ஐவரும் ராக்ஷச வர்த்தத்தில் வசிக்கின்றனர். அங்கே எவரும் அவர்களைக் கண்டு பிடிக்க முடியாது. “ மஹாராணியும் சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டு காது கொடுத்துக் கேட்கும் தூரத்தில் எவரும் இல்லை என்பதை நிச்சயம் செய்து கொண்டாள்.  பின்னர், “ஆம், விதுரன் எனக்குச் சொன்னான்.  மிக்க மகிழ்ச்சி அடைந்தேன்.  அவர்கள் வாழ்க்கையில் தங்களுக்கு உரியவற்றைப் பெற்று மகிழ்வோடு வாழவேண்டும் என்பதே என் விருப்பம்.  அது மட்டும் நடந்துவிட்டால் போதும்.  என் கடைசி நாட்களை நான் நிம்மதியாகவும், சந்தோஷமாகவும் கழிப்பேன்.”

“அது தான் நான் இங்கே வந்ததின் காரணமும் ஆகும், தாயே!  வாசுதேவன் மார்கசீர்ஷ (மார்கழி) மாதத்தில் அவர்கள் தாங்கள் ஒளிந்து வாழும் பயங்கரமான ராக்ஷசவர்த்தத்தில் இருந்து வெளியேற வேண்டும் என விரும்புகிறான்.  அப்போது திரெளபதியின் சுயம்வரத்துக்கான நேரமும் நெருங்கி வரும்.” புன்னகை புரிந்தாள் மஹாராணி.  “ஒவ்வொருத்தரும் திரெளபதியின் கரத்தைப் பிடிக்கத் தாங்களே ஏற்றவர்கள் என எண்ணுகின்றனர்; துரியோதனனும் நினைக்கிறான்.  அவ்வளவு ஏன்?  கர்ணன், அஸ்வத்தாமா அனைவருமே விரும்புவதாக நான் அறிந்தேன்.  விதுரா, ராஜசபையில் என்ன முடிவெடுக்கப்பட்டது?”

விதுரர் தன் கைகளைக் கூப்பிய வண்ணம், “மாட்சிமை பொருந்திய அன்னையே, இளவரசர் சுயம்வரத்திற்கு வந்த அழைப்பை ஏற்கலாம் என முடிவெடுக்கப்பட்டது.”  என்றார்.  புத்தி நுட்பமுள்ள ராணியோ, “துரோணர் இதற்கு எவ்வாறு ஒத்துக் கொண்டார்?” என்று உடனே கேட்டாள்.  ராணியின் கேள்வியைக் கேட்ட விதுரர் சிரித்தார். “உண்மையில் இது ஒரு ஆச்சரியமே அன்னையே! நான் நினைப்பது என்னவெனில் துரியோதனனால் ஏற்பட்ட கெடுதலைச் சரி செய்து எதிரியை நண்பனாக்கிக் கொள்வது சிறந்தது என அவர் நினைத்திருக்கலாம்.  செகிதனாவைப் புஷ்கரத்திலிருந்து விரட்டியது அவருக்குப் பிடிக்கவில்லையே!  அதோடு துரியோதனனால் போட்டியில் ஜெயித்து இளவரசியின் கரத்தைப்பிடிக்க முடியாது என்று அவருக்கு நிச்சயம் ஏற்பட்டிருக்கலாம்.  இது துரியோதனனுக்கு ஒரு பாடமாக அமையும் என்றும் எதிர்பார்க்கலாம்.”

“ஆஹா, இந்தச் சிறுவன் துரியோதனனை வழிக்குக் கொண்டு வருவது கஷ்டம்.  அவனே ஒரு போக்கிரிப் பையன்.  ஆஹா, அவன் ஹஸ்தினாபுரத்தை ஆட்சி செய்கையில் என்னவெல்லாம் நடக்கப் போகிறதோ, அதை அந்த மஹாதேவனே அறிவான்.  அது போகட்டும்,  உத்தவா, தற்போது என்ன செய்தி கொண்டு வந்தாய்?”

“தவிர்க்க முடியாததொரு சூழ்நிலை உருவாகியுள்ளது. வாசுதேவன் பாண்டவர்கள் சுயம்வரத்தில் கலந்து கொள்ள வேண்டும் என எண்ணுகிறான்.  இதன் மூலம் அவர்கள் பழைய வாழ்க்கைக்கு, அங்கிருக்கும் அனைத்து அரசர்களின் முன்னிலையிலும் எளிதாகத்  திரும்பி வர முடியும் என்பதும் அவன் கருத்து.  அதற்கு இந்தச் சுயம்வரம் சரியான நேரமாக அமையும் என நினைக்கிறான்.  அவர்களை மீண்டும் அவர்களுக்கு உரிய இடத்தில் அமர்த்த இது உதவும்.”

“அப்புறம், என்ன கஷ்டம்?  அவர்கள் வரமாட்டேன் என்கின்றனரா?”  மஹாராணி கேட்டாள்.  உத்தவன் மீண்டும் காது கேட்கும் தூரத்தில் எவரும் இல்லை என்பதை நிச்சயப்படுத்திக் கொண்டு மீண்டும் குரலை நன்கு தழைத்துக் கொண்டு பேசினான். “ ஆசாரியர் வேத வியாசரிடமிருந்து செய்தி கிடைக்கும்வரை அங்கிருந்து கிளம்ப யுதிஷ்டிரன் தயாராக இல்லை;  தான் என்ன செய்ய வேண்டும் என்பதை அவர் தான் சொல்ல வேண்டும் என்று அவன் சொல்கிறான்.  அர்ஜுனனோ உடனே அங்கிருந்து கிளம்பத் துடிக்கிறான்.   வெளியே வந்து காம்பில்யத்துக்கோ, ஹஸ்தினாபுரத்துக்கோ வரமுடியாவிட்டாலும் பரவாயில்லை;  எங்களுடன் துவாரகை வருகிறேன் என்று துடிக்கிறான்.  ராக்ஷசவர்த்தத்தில் தற்போது அவன் நடத்தி வரும் வாழ்க்கை அவனுக்குப் பிடிக்கவே இல்லை;  ஆனால் சகோதரர்கள் அனைவரும் சம்மதித்து வர வேண்டும் என்பதோடு, அத்தை குந்தியும் சம்மதிக்க வேண்டும் என்று சொல்கிறான்.  அது வரை அவனாலும் கிளம்ப முடியாது.”

“எனக்குத் தெரியும் அவர்களின் ஒற்றுமையைக் குறித்து.  ஐவரும் அருமையான சகோதரர்கள்.  ஒரே நெருப்பிலிருந்து எழுந்த ஐந்து பிழம்புகள்.  என் இத்தனை வருட வாழ்க்கையில் சகோதரர்களுக்குள்ளே இத்தனை அன்பும், ஒற்றுமையும், நம்பிக்கையும் ஒரு சேர அமைந்து நான் இன்று வரை பார்க்கவில்லை.  இவர்களைத் தான் பார்க்கிறேன்.  த்வைபாயனன் இங்கே தான் இருக்கிறான்.  இன்று காலை தான் இங்கே வந்து சேர்ந்தான்.  யுதிஷ்டிரன் தன் சகோதரர்களோடு வெளிப்பட வேண்டும் என்பதில் அவனுக்கும் சம்மதம் இருக்கும்.” என்றாள் ராணி.

“இதோடு முடியவில்லை தாயே!  பீமன் தன்னால் இப்போது வர இயலாது என்று திட்டவட்டமாகச் சொல்லிவிட்டான்.  அவன் இல்லாமல் அவர்களில் எவரும் அங்கிருந்து கிளம்ப மாட்டார்கள்.”

“ஆஹா, அவன் என்ன அங்கேயே கடைசி வரை இருந்து தன்னை மறைத்துக் கொள்ளவா விரும்புகிறான்? இல்லை என்றே நம்புகிறேன்.  அந்த ராக்ஷசவர்த்தத்திலேயேவா இருக்கப் போகிறானாம்?”

“அவன் தான் ராக்ஷசவர்த்தத்தின் அரசன், மஹாராணி, அதோடு அடுத்த வாரிசையும் அடைந்து விட்டான்.  பீமனுக்கு மகன் பிறந்திருக்கிறான்.”

“என்ன?” ராணிக்கு ஆச்சரிய மிகுதியில் கண்கள் விரிந்தன என்றால் எதற்கும் அசையாத விதுரர் கூட விரிந்த கண்களுடன் ஆச்சரியக்குறியை முகத்தில் காட்டினார்.  “ஆம், அன்னையே, பீமனுக்கு ராக்ஷசன் போலவே ஒரு பிள்ளை பிறந்திருக்கிறான்.  அவனுக்கு ஆறு மாதம் தான் ஆகிறது என்றால் எவரும் நம்ப மாட்டார்கள்.  அவன் அழுகையே சிங்க கர்ஜனை போல் இருக்கிறது. பீமன் என்ன சொல்கிறான் தெரியுமா?  முன்னோர்களின் உதவியே இல்லாமல் ஒரு மாபெரும் சாம்ராஜ்யத்தை ஸ்தாபித்த பரதனின் வழித்தோன்றல்களான அவர்களுக்கு இப்போது பிறந்திருக்கும் இந்தக் குழந்தை தான் முதல் வாரிசு என்றும், ஹஸ்தினாபுரத்தின் சிம்மாசனத்துக்கு வாரிசு பிறந்திருப்பதாகவும் சொல்கிறான். பரத வம்சத்தைச் சார்ந்த குருவின் வழித்தோன்றல்களில் இப்போதிருக்கும் பிள்ளைகள் எவருக்கும் ஆண் குழந்தை பிறக்கவில்லை. ஆகவே பீமனின் குழந்தையே வயதில் மூத்தவன் என்பதால் முறையான வாரிசு என்கிறான்.”

மனம் விட்டுச் சிரித்தாள் மஹாராணி.  அவள் முகம் புன்னகையில் மலர்ந்து விரிந்தது.  “ஆம், ஆம், அது உண்மையே.  அவன் தான் நம் குலத்தின் முதல் வாரிசு ஆவான்.  என்றாவது ஒரு நாள் ஹஸ்தினாபுரத்தின் சிம்மாசனத்திலும் அமருவான்.  பீமன் அவனை ஏன் இங்கே அழைத்து வரக்கூடாது?”

“ராக்ஷசர்களின் ராணியான ஹிடும்பி, தன் மகனைப் பிரியச் சம்மதிக்கவில்லை.” என்றான் உத்தவன்.

“பின் அவளையும் அழைத்து வரலாமே!  பீமன் தான் ராக்ஷசக் குலத்தில் திருமணம் செய்து கொண்ட முதல் இளவரசன்.  அவள் நரமாமிசம் சாப்பிடமாட்டாள் என நான் நினைக்கிறேன்.”

“அரசன் வ்ருகோதரன், “பீமன் அங்கே இப்படித் தான் அழைக்கப்படுகிறான்.” என்ற உத்தவன் மேலும் தொடர்ந்து, “அங்கே அரசன் வ்ருகோதரன்,  ஒரு சட்டத்தைப் போட்டிருக்கிறான். அதன்படி எந்த ராக்ஷசர்களும் நர மாமிசம் உண்ணக் கூடாது.  ஹிடும்பி, தன் கணவன் போட்ட உத்தரவை மீறாத உத்தம மனைவியாக இருந்து வருகிறாள்.   ஆனால் எனக்கு என்னமோ சில சமயம் அவள் நர மாமிசம் சாப்பிடவே விரும்புவதாகத் தோன்றும்.  எப்படியோ, இப்போது கடோத்கஜனைச் சுற்றி எல்லாம் நடக்கிறது.”

“கடோத்கஜன்!  இது என்ன பெயர்!”  என்றாள் ராணி.


Monday, November 25, 2013

உத்தவன் சத்யவதியைச் சந்திக்கிறான்!

ஆசாரியரின் குரலும், பார்வையுமே பார்த்தாலே ஒரு கெளரவத்தைக் கொடுக்கும் வண்ணம் மாறிக்காணப்பட்டது.  அந்த கம்பீரம் குறையாமலேயே அவர், மேலும் பேசினார்; “ துரியோதனா, ஏற்கெனவே உன்னிடம் செகிதனாவைப் புஷ்கரத்திலிருந்து விரட்டி அடித்ததைத் தவறென்று கூறினேன். அரசியல் ரீதியாக அது தவறே.  மாபெரும் தவறு.  ஏனெனில் ஒரு நல்ல நண்பனை நீ விரோதியாக்கிக்  கொண்டு  விட்டாய்.  தவறான முற்றுகை.  புஷ்கரத்தை முற்றுகையிட்டதும் அதை எடுத்துக்கொண்டதும் ஒரு தவறான முன்னுதாரணம்.  இப்போதோ, கிருஷ்ண வாசுதேவன் போன்றதொரு பெரிய தலைவன் சொல்லும் நட்புக் கலந்த அறிவுரையையும் ஏற்க மறுக்கிறாய்.  அதற்கு மதிப்புக் கொடுக்க மாட்டேன் என்கிறாய். கிருஷ்ண வாசுதேவனால்   ஒரு மாபெரும் தவறைச் சரியாக்குவதற்கு, நமக்குக் கிடைத்த ஒரு நல்ல சந்தர்ப்பம் இது.  அதை நீ மறுக்கிறாய்.   அடிப்படையில்லாமல் செய்யப் பட்ட ஒரு போரிலிருந்தும், மாற்றக் கூடிய ஒரு அரசியல் சூழ்நிலையிலிருந்தும் கெளரவமாக நம்மை மீட்டுக் கொள்ள இயலும்.  இதையும் நீ காண மறுக்கிறாய்.   வாசுதேவனின் இந்த வேண்டுகோளை ஏற்கும்படி பிதாமகர் பீஷ்மரிடம் நான் பணிவுடன் விண்ணப்பித்துக் கொள்கிறேன்.”

மிகக் கடுமையாகவும், அதே சமயம் கோபத்தோடும், “எனில் நீங்கள் போர் புரியப் போவதில்லையா?” என்று துரியோதனன் கேட்டான்.  ஆசாரியர் நிதானமாக, “உனக்கு வேண்டுமானால் நீ போர் புரிந்து கொள்.  எனக்கும் அதற்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை.   எனக்கு நிச்சயமாய்த் தெரியும்.  பாட்டனார் பீஷ்மரும் என்னைப் போலவே இதே எண்ணத்தோடு இருப்பார் என்று எண்ணுகிறேன்.” என்றார் துரோணர்.

“நீர் சொல்வது அனைத்தும் சரியானதே, ஆசாரியரே!  “என்ற பீஷ்மர் எப்போதும் போல் தன் கரத்தைத் தூக்கி அனைவரின் கவனத்தையும் தன் பக்கம் திருப்பினார்.  “நாம் தர்மத்தின் பாதையிலிருந்து நழுவக் கூடாது.  காரணமே இல்லாமல் போர் புரியவும் கூடாது.  அநாவசியமாக ஒரு நாட்டை முற்றுகையிடவும் கூடாது.  உத்தவா, என்னுடைய ஆசிகளைக் கிருஷ்ண வாசுதேவனுக்குத் தெரிவிப்பாய்.  புஷ்கரத்தை மீண்டும் அதன் மன்னன் செகிதனாவுக்கே திருப்பிக் கொடுக்கிறோம் எனவும் கூறு.  மேலும் தக்க மரியாதைகளோடு நாங்களும் கிருஷ்ண வாசுதேவனையும், பலராமனையும் வரவேற்கும் நிகழ்ச்சியில் செகிதனாவுடன் கலந்து கொள்கிறோம் என்பதையும் தெரிவிப்பாய். "

"ஆசாரியரே, இப்போது தான் நீங்கள் சொன்னீர்கள்.  சுயம்வரத்துக்குச் செல்லும் அரசன், இளவரசன் ஆகியோருடன்  யுத்தம் செய்வது சரியல்ல என்றீர் அல்லவா?” இதைச் சொல்கையில் விதுரனைக் குறிப்பாகப் பார்த்தார் பீஷ்மர்.  “இப்போது யுத்தம் ஒன்றும் இல்லை என்பதால், துரியோதனன், மற்றும் சுயம்வரத்தில் கலந்து கொள்ளப் போகும் அனைத்து இளவரசர்களையும் ஏற்று ஆசீர்வதிப்போம்.  துரியோதனன் செல்வதையும் ஒத்துக் கொள்வோம்.  அடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதை நாம் அறியோம்.  அந்தக் கடவுள் என்ன நினைக்கிறாரோ என்பதையும் நாம் அறியோம்.  இறை அருளால், அனைத்தும் நலமாக நடக்கும் என நம்புவோம்.”

ஒரு நிமிடத்துக்கும் குறைவான நேரத்தில் துரோணருக்குப் பளிச்சென அனைத்தும் விளங்கிற்று.  துரியோதனனுக்கு ஒரு பாடம் கற்பித்தாக வேண்டும்.  அது மிகவும் முக்கியமான ஒன்று.  யாதவர்களில் பொறுக்கி எடுத்த அதிரதர்கள் சுயம்வரத்துக்குச் செல்லுகின்றனர்.  அவ்வளவு அதிரதர்கள் தங்கள் முழு பலத்தையும் காட்டும்போது துரியோதனனால் அவ்வளவு எளிதாக திரெளபதியை சுயம்வரத்தில் வெல்ல முடியாது. கிருஷ்ண வாசுதேவன் திரெளபதியை ஏற்க மறுத்தாலும், பலராமன் ஏற்க மறுத்தாலும் சரி, அல்லது சாத்யகி, கிருதவர்மன் போன்ற திறமைசாலிகளால் கூட ஏற்க முடியவில்லை எனினும் சரி, துரியோதனனுக்கு வெற்றி அடையும் வாய்ப்புக்கள் குறைவாகவே உள்ளன.  அப்படி அவனால் திரெளபதியை வெல்ல முடியவில்லை என்றாலும் அதனால் அவமானம் ஒன்றும் அடையப் போவதில்லை.

 துரோணருக்கு உள்ளூர துரியோதனன் சுயம்வரத்துக்குச் செல்வது பிடிக்கவில்லை என்றாலும் இத்தனையையும் மீறி அவனால் திரெளபதியை வெல்ல முடியாது என்ற அளவில் நம்பிக்கை பிறந்தது.  குரு வம்சத்தின் யுவராஜாவாக, அடுத்த பட்டத்துக்குத் தயார் நிலையில் துரியோதனன் இருக்கும் வரையில் குரு வம்சம் முன்னேற முடியாது.  அதுவும் இப்போதோ கிருஷ்ண வாசுதேவன் போன்ற திறமைசாலிகளின் அதிகார எல்லை விரிவடைந்து கொண்டிருக்கிறது.  ஆர்ய வர்த்தத்தின் பல அரசர்களுக்கும் ஆலோசனைகள் கூறும் தகுதியை கிருஷ்ண வாசுதேவன் அடைந்திருக்கிறான்.  அரியணை இல்லாமல், யுவராஜா பட்டம் இல்லாமல்.  என்றால் அவன் திறமை தான் எவ்வளவு போற்றக் கூடியது!


கிருஷ்ண வாசுதேவனால்  அவன் தலைமையில் ஏற்படுத்தப்பட்ட கச்சிதமான உடன்பாட்டினால் கிழக்கே மகத நாட்டின் ஜராசந்தன் போர் தொடுத்தாலும், இங்கே காம்பில்யத்தில் துருபதனின் நட்பான உடன்படிக்கையாலும்,  தர்மத்தின் அவதாரமே கிருஷ்ண வாசுதேவன் என நினைக்கும் பீஷ்மப் பிதாமகரின் ஆதரவாலும் கிருஷ்ண வாசுதேவனின் அதிகார எல்லை எவ்வளவு தூரத்துக்குச் செல்லும் என்பதை இப்போதே சொல்ல முடியாது. அதோடு மட்டுமா?  கிருஷ்ணன் தன்னிடம் நடந்து கொள்ளும் முறையைப் பார்த்தாலும் அவன் இன்னமும் தன் அதிகார எல்லையை விஸ்தரிப்பதோடு அவரை முடிசூடாச் சக்கரவர்த்தியாக ஆக்கிவிட்டுத் தான் மறுவேலை பார்ப்பான் போல் உள்ளது.  ஆகவே கிருஷ்ண வாசுதேவனோடு நட்புரிமை பாராட்டுவதைத் தவிர வேறெதுவும் செய்வது அவர் எடுத்துக் கொண்டிருக்கும் லட்சியத்துக்குச் சரியாக வராது. மீண்டும் ஒரு புன்னகை புரிந்து கொண்டார் துரோணர்.  துரியோதனனைப் பார்த்தும் இகழ்ச்சியாகச் சிரித்துக் கொண்டார்.


பீஷ்மப் பிதாமகரைப் பார்த்து மரியாதையுடன் பேசலானார்: “ பிதாமகரே, புஷ்கரத்தை செகிதனாவுக்கு மீண்டும் கொடுக்கப் போவது உண்மை எனில், கிருஷ்ணனுக்கும், பலராமனுக்கும் உங்களால் அங்கே மரியாதைகளும், விருந்துபசாரமும் கொடுக்கப் போவதும் உண்மை எனில், அங்கே உங்கள் சார்பில் நான் சென்று அந்நிகழ்ச்சிகளை நடத்தித் தரட்டுமா?  எனக்குப் போக அநுமதியைப் பிதாமகர் கொடுப்பார் என எண்ணுகிறேன்.”  என்றார்.

“அப்படியே ஆகட்டும், ஆசாரியரே!  எங்கள் சார்பில் நீர் செல்லலாம்.” என்றார் பீஷ்மர்.

ராஜசபை கலையும்போது அரண்மனை ஊழியர் ஒருவர் வந்து, விதுரரிடம், “ப்ரபுவே, மாட்சிமை பொருந்திய மஹாராணி அம்மா தன் பூஜையை முடித்துக் கொண்டு ஓய்வாக இருக்கிறார்கள். உத்தவனைத் தன்னிடம் அழைத்து வருமாறு உங்களிடம் கூறச் சொன்னார்கள். “ என்றார். உத்தவனைக் குறிப்பாகப் பார்த்தார் விதுரர். உடனடியாக இருவரும் மஹாராணி சத்யவதியைப் பார்க்க அவள் அரண்மனைக்குச் சென்றனர்.

திருதராஷ்டிரனுடைய பாட்டியும், சந்தனுவின் ராணியுமான சத்யவதி தன்னுடைய வழக்கமான சிம்மாசனத்தில் அமர்ந்திருந்தாள்.  அந்த முதுமைப் பிராயத்திலும் ஒளிர்ந்த அவள் அழகுத் தோற்றம் பார்ப்பவர் மனதில் கண்ணியத்தையும், மரியாதையையும் ஏற்படுத்தி அவள் சாந்தமான முகபாவம் அமைதியையும் ஏற்படுத்தியது.  தன் நளினமான கையசைவால் விதுரரையும், உத்தவனையும் வரவேற்றாள் ராணி சத்யவதி.  மஹாராணியை உத்தவன் பார்ப்பது இது இரண்டாம் முறை.  அவள் இளமையில் வசீகரமாக இருந்தது போலவே இப்போது முதுமையிலும் குறையாத வசீகரத்துடன் அனைவரையும் கவர்ந்து கொண்டிருப்பதை உத்தவனால் உணர முடிந்தது.   திடமும், உறுதியும் கொண்ட அவளின் நல்ல மனோபாவத்தால் அம்பிகையின் கருணையைப் போல் அவளிடமும் கருணை நிறைந்திருந்தது.  உத்தவன் அவளைக் குனிந்து வணங்கும் அந்தச் சிறிய நேரத்துக்குள்ளாக அவன் மனதில் அவளின் வாழ்க்கைச் சித்திரம் முழுதும் ஓடியது.

ஒரு காலத்தில் மீனவளாக இருந்த இந்தப் பெண்மணி தன் அழகால் சந்தனுவை வசீகரித்து மணந்து ராணியானதும் அல்லாமல், இப்போது அனைவரும் வணங்கும் புனிதவதியாகவும் ஆகிவிட்டாளே, இவளுடைய தரிசனத்துக்காகப் பலர் காத்திருக்கையில் தனக்கு இவள் தரிசனம் கொடுத்து விட்டாளே என்ற நினைப்பில் கண்களும் கசிந்தன உத்தவனுக்கு.

“தேவபாகனின் மகனே! எப்படி இருக்கிறாய்?  நலமாக இருக்கிறாயா?  நீ நாக நாட்டில் இருந்து வருவதாய்க் கேள்விப் பட்டேனே! உன் மாமனாரும் மற்றோரும் நலமா?” என்று தன் மாறாத இனிமைக் குரலில் கேட்டாள் ராணி சத்யவதி.  “அனைவரும் நலம் தாயே!  அரசர் கார்க்கோடகர் தன் நமஸ்காரங்களை உங்களுக்குத் தெரிவிக்கச் சொன்னார்.  இளவரசிகளான என் இரு மனைவியரும் தங்கள் நமஸ்காரங்களை உங்களுக்குத் தெரிவித்தனர்.  வசீகரமாய்ச் சிரித்தாள் சத்யவதி.  அந்தச் சிரிப்பைக் கண்ட உத்தவன், இவள் இளமையில் இந்தச் சிரிப்பால் எத்தனை பேரை வசீகரித்திருப்பாள் என எண்ணினான்.  எல்லாவற்றுக்கும் மேல் இந்தச் சிரிப்பு ஒன்றாலேயே ராஜா சந்தனுவை இவள் ஆட்சி செய்திருப்பாள் எனவும் எண்ணினான்.

“என்ன செய்தி கொண்டு வந்தாய்?” குறிப்பாய்க் கேட்டாள் ராணி சத்யவதி.  உத்தவன் சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டான்.


Friday, November 22, 2013

குருவின் பேச்சும், துரியோதனன் மறுப்பும்!

"நாகர்களில் சிறந்தவனும், நாகர்களின் தலைவனுமான  கார்க்கோடகனின் கருத்தும் அதுவே, பாட்டனாரே!” என்றான் உத்தவன்.  “அவர் கூறுவது: ‘என் மகன் மணிமான் சுயம்வரத்துக்குச் செல்லும் முன்னர், செகிதனாவுடன் கிருஷ்ண வாசுதேவனையும், பலராமரையும் உபசரிக்கும் நிகழ்வில் கலந்து கொள்ள விரும்புகிறான்.  அவர்கள் காம்பில்யத்துக்குச் செல்லும் வழியில் அவர்களை நாககூடம் வரை வந்து செல்லுமாறும் அழைப்பு விடுத்துத் தானே அருகிருந்து அழைத்து வரவும் விரும்புகிறான்.”

“இவை விசித்திரமான செய்திகள்!” திருதராஷ்டிரன் கூறினான்.

அதற்குள்ளாக துரியோதனன் பாய்ந்தான்.  “தந்தையே, இவை தூதுச் செய்திகள் அல்ல!  நமக்கிடப்பட்டிருக்கும் கட்டளைகள்!”  அவன் ரத்தம் கொதித்தது.  தேவையற்ற  இந்த வேண்டுகோள்களை நினைத்து நினைத்து அவன் மனம் கொதித்தான்.  ஆனால் பெரியோர்கள் நிறைந்த சபையில் கடைப்பிடிக்கவேண்டிய குறைந்த பட்ச மரியாதையை அவன் கட்டாயமாய்க் கடைப்பிடிக்க வேண்டி இருந்தது.  அதோடு அவன் யோசனைகளும் கருத்துக்களும் உடனடியாக நிராகரிக்கப்படும் நிலையும் இருக்கிறது. நிராகரிக்கப்படலாம் தான்!  பற்களைக் கடித்தான் துரியோதனன்.  “இது நமக்கு ஏற்பட்ட இழுக்கு!’  கத்தினான் கர்ணன்.  அவன் கோபமும் எல்லை கடந்தது.  தன்னிச்சையாக அவன் கைகளும் உடைவாளுக்குச் சென்றன.

“புஷ்கரத்தை நாம் திரும்பக் கொடுக்கக் கூடாது!” திட்டவட்டமாக அறிவித்தான் துரியோதனன்.  சபைக்குக் கொடுக்க வேண்டிய சிறிதளவு  மரியாதை  இல்லாமல் பேசப்பட்ட இந்தப் பேச்சுக்களைத் தன் ஒரு கையசைவால் நிராகரித்தார் பீஷ்மர். இளைஞர்கள், பேசத் தெரியாமல் பேசுகின்றனர்!  அப்போது மீண்டும் பேச ஆரம்பித்தான் உத்தவன்.

 “மாட்சிமை பொருந்திய பாட்டனாரே!  கிருஷ்ண வாசுதேவனின் செய்தி முடியவில்லை.  அவன் இன்னமும் என்ன சொல்லி இருக்கிறான் எனில், யாதவர்கள் எவருக்கும் குரு வம்சத்தினருடன் போர் தொடுக்கும் எண்ணம் சிறிதும் இல்லை.  புஷ்கரத்தில் தங்கிய பின்னர் நாங்கள் அனைவருமே காம்பில்யத்தில் நடைபெறப் போகும் சுயம்வரத்திற்குச் செல்லப் போகின்றோம்.  செகிதனாவுக்கும் அழைப்பு வந்திருப்பதால் அவனும் வருவான்.  மணிமானுக்கும் அழைப்புப் போயிருப்பதால் அவனும் வருவான். ஆகவே இயல்பாகவே நாங்கள் எவரும் புஷ்கரத்தில் ஒரு போர் நடைபெறுவதை விரும்பவே இல்லை.”  என்றான்.

தன்னிரு கரங்களையும் விரித்த வண்ணம் பெரிதாகப்புன்னகை புரிந்தான் ஷகுனி.   அவன்”ஓஹோ, அது தான் உங்கள் விருப்பம் எனில் எங்களுடைய விருந்துபசாரத்தை ஏற்பதே அனைத்திலும் சிறந்த வழி!  கிருஷ்ண வாசுதேவனின் விருப்பத்தையும், வேண்டுகோளையும், மாட்சிமை பொருந்திய மன்னர் மறுக்க வேண்டும் என நினைக்க மாட்டார்.  அவர் அதை விரும்பவும் மாட்டார்.  இருவருக்கும் இடையில் சிறந்த நட்பு இருக்கிறதே!” என்றான்.  ஷகுனியை இரக்கத்துடன் பார்த்த பாட்டனர் பீஷ்மர், உத்தவனின் பதிலை எதிர்நோக்கி அவன் பக்கம் திரும்பினார்.  உத்தவனோ, “மன்னா, மாட்சிமை பொருந்திய பாட்டனாரே, நாங்கள் எதிர்பார்ப்பது வெறும் விருந்துபசாரம் மட்டும் இல்லை;  அப்படி வெறும் விருந்து உபசாரத்தை மட்டுமே எதிர்பார்த்திருந்தால்  இந்தச் செய்திகளைக் கிருஷ்ணன் அனுப்பியே இருக்க மாட்டான். “

இதைக் கேட்டதுமே துரியோதனன் தன் மூர்க்கத்தனம் வெளிப்படும் வண்ணம், “அப்போது நாங்கள் கிருஷ்ணனின் வேண்டுகோளை நிராகரிப்பது தவிர வேறு வழியில்லை!” என்றான்.

உத்தவன் மன்னன் பக்கம் திரும்பினான். “இனி உங்கள் விருப்பம் மன்னா, வேண்டுகோளை ஏற்பதோ, அல்லது நிராகரிப்பதோ உங்கள் விருப்பம். வாசுதேவனுக்கு இப்படி ஒரு எண்ணம் மனதில் இருந்ததால், உங்களால் செய்ய முடியும் என அவன் நினைத்ததால் இந்த வேண்டுகோளை என் மூலம் கேட்டிருக்கிறான்.  சாத்யகி, யாதவ வீரர்களின் பொறுக்கி எடுத்த சிறந்த அதிரதர்களுடன் ஏற்கெனவே புஷ்கரத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறான்.  புஷ்கரத்தின் காவலன் செகிதனாவும், நாக நாட்டு இளவரசன் மணிமானும் யமுனையைக் கடந்து புஷ்கரத்துக்குள் நுழையச் சென்று கொண்டிருக்கின்றனர்.”

“என்ன,எங்களை மிரட்டிப் பார்க்கிறாயா?  அதுவும் குரு வம்சத்திலேயே சிறந்தவரை? எங்களை மீறிப் போர் புரிவாயா?” ஆத்திரம் பொங்கக் கேட்டான் துரியோதனன்.  “நாங்கள், யாதவர்கள் போரை விரும்பவில்லை.  குரு வம்சத்தின் சிறந்த மன்னனும், தர்மத்தை நிலை நாட்டுவதில் சிறந்தவருமான பாட்டனார் பீஷ்மரும் சேர்ந்து ஏற்கெனவே நடந்து விட்ட ஒரு தவறைத் திருத்தத் தான் வேண்டுகிறேன்.”

“பாட்டனாரே, நாம் கிருஷ்ணனால் கட்டளை இடப்பட வேண்டுமா?  கூடாது!” என்றான் துரியோதனன்.  பின்னர் ஆசாரியர் துரோணர் பக்கம் திரும்பி, “ஆசாரியரே, புஷ்கரத்தை நோக்கிச் செல்ல நம் படையைத் தயார் செய்யுங்கள்!”என்றான்.  துரியோதனனைப் பார்த்து விசித்திரமாகச் சிரித்தார் துரோணர்.  பின்னர் அவனை ஒரு விசித்திரமான பார்வை பார்த்துக் கொண்டே, “துரியோதனா, நீ சுயம்வரத்துக்குச் சென்று திரெளபதியை உனக்கு மணமகளாக்க விரும்புகிறாய்.  அதே போல் யாதவர்களும் விரும்புகின்றானர்;  அரசன் செகிதனா; இளவரசன் மணிமான். இவர்களும் விரும்புகின்றனர்.  சுயம்வரத்துக்குச் செல்லும் அரசர்களோடு எல்லாம் நீ போர் புரிய முடியுமா?  திரெளபதியை நீ ஜெயிக்க வேண்டுமெனில் சுயம்வரத்தில் தான் போட்டியே தவிர செல்லும் வழியில் இல்லை!” என்றார். ஒரு தந்தை மகனுக்குச் சொல்லும் அறிவுரை என்ற தொனியில் அவர் பேசினாலும் அதிலிருந்த ஏளனம் புரியும்படி அழுத்தம் கொடுத்துப் பேசினார்.

“சுயம்வரத்தில் என்ன நடந்தாலும் அது குறித்த கவலை எனக்கில்லை! வாசுதேவனின் இந்த மிரட்டல்களுக்கு அஞ்சி செகிதனாவுக்குப் புஷ்கரத்தைத் திரும்பக் கொடுக்க முடியாது.  அவன் வேண்டுகோளை நிராகரிப்போம்!” என்று தன் தொடைகளில் கைகளை ஓங்கித் தட்டிய வண்ணம் கூறினான் துரியோதனன்.  துரோணர் தன்னுடைய கம்பீரமான குரலில் ஒரு குருவின் தகுதியுடன் அவனுக்கு ஆலோசனை கூறும் உரிமை தனக்கு இருப்பதால் அவனிடம் திட்டவட்டமாகக் கூறினார்;” தவறாக ஒரு காரியத்தைச் செய்வது வீரத்துக்கு இழுக்கு.  இதன் மூலம் ஒரு நாயகனாக நீ ஆக இயலாது.  தர்மத்தைக் காக்கவென்று சிறிது வளைந்து கொடுப்பதால் எந்தவிதமான அவமானமும் ஏற்பட்டு விடாது!”  என்றார்.
Wednesday, November 20, 2013

உத்தவன் பணிவும், துரியோதனன் கொதிப்பும்!

உத்தவன் கிருஷ்ணனிடமிருந்து கொண்டு வந்த செய்தியால் மனம் மாறிய ராஜசபை துரியோதனன் சுயம்வரத்துக்குச் செல்ல அனுமதி கொடுத்துவிட்டது.  சரியான நேரத்துக்குக் கிருஷ்ணனின் அந்தச் செய்தி வந்தது என துரியோதனன் நினைத்தான்.  அழகும், திடகாத்திரமும் நிரம்பிக் காணப்பட்ட உத்தவன், சிரித்த முகத்தோடும் காணப்பட்டதோடு அல்லாமல், எதையும் எளிதாய்க் கடந்து செல்பவனாகவும் இருந்தான்.  தன் பணிவும், அன்பும் எளிதில் அனைவருக்கும் புலப்படும் வண்ணம் அந்த ராஜசபைக்குள் நுழைந்ததுமே பாட்டனார் பீஷ்மருக்கும், அரசனான திருதராஷ்டிரனுக்கும் தன் பணிவான நமஸ்காரங்களை அளித்தான்.  மற்றவர்களையும் பார்த்து கை கூப்பி வணங்கியவன், ஆசாரியர் துரோணருக்குச் சிறப்பாகத் தனி வணக்கம் செலுத்தினான்.  இதன் மூலம் துரோணரின் ஆசாரிய வாழ்க்கையின் முக்கியத்துவத்தை அங்கீகரித்ததோடு அல்லாமல், பிராமணர்களிலேயே தனிப்பட்டவராகவும், தன் குருவான பரசுராமரின் சிறப்பைக் குறைக்காமல் தன் மாணாக்கர்களையும் அவ்விதமே பழக்குபவரும் ஆன துரோணருக்கு இங்கே அளித்துள்ள படைத்தலைவர் என்ற பதவிக்கு உண்டான மரியாதையையும் அதன் மூலம் காட்டினான்.

“உத்தவா, தேவபாகனின் மகனே, ஹஸ்தினாபுரத்துக்கு மீண்டும் வருகை புரிந்தமைக்கு நன்றி.  உனக்கு நல்வரவு.   உன்னைப் பார்ப்பதில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம்.  இப்படி அமருவாய்! உன் தேசத்து மக்கள் அனைவரும் நலமாக இருக்கின்றனரா?” என்று பாட்டனார் பீஷ்மர் கேட்டார்.

“மரியாதைக்குரிய பிதாமகரே! நான் துவாரகையிலிருந்து வரவில்லை.  சில மாதங்களாக நான் என் மாமனார், நாகர்களின் தலைவரோடு வசித்து வருகிறேன்.” என்றான் உத்தவன்.  “ஆஹா, அப்படி எனில் நீ நாகர்களின் இளவரசிகளை மணந்திருப்பது உண்மையா?” என்றான் திருதராஷ்டிரன்.  “ஆம் ஐயா, “ என்றான் உத்தவன்.

“மாட்சிமை பொருந்திய நாகர்களின் அரசன் கார்க்கோடகனும், அவன் மக்களும் நலமா? “பீஷ்மர்.

“ஆம், பாட்டனாரே, அனைவரும் நலம்.” உத்தவன்.

“நீ எங்களுக்காக ஒரு தூதுச் செய்தி எடுத்து வந்திருப்பதாக விதுரன் கூறினான்.  வாசுதேவக் கிருஷ்ணனின் செய்தியை நீ கொண்டு வந்திருக்கிறாயா?” பீஷ்மர் கேட்டார். “ஆம், பிதாமகரே!” என்ற உத்தவன், “அதோடு இல்லாமல் அரசன் செகிதனாவிடமிருந்தும் செய்தியைக் கொண்டு வந்திருக்கிறேன்.  அடுத்து என் மாமனார் நாகர்களின் அரசனிடமிருந்தும் ஒரு செய்தி காத்திருக்கிறது.  அனைவருமே மாட்சிமை பொருந்திய பாட்டனாருக்கும், மாட்சிமை பொருந்திய ஹஸ்தினாபுரத்து மன்னனுக்கும் தங்கள் பணிவான வணக்கங்களைத் தெரிவிக்கச் சொன்னார்கள்.”

“என்ன செய்திகளை நீ கொண்டு வந்திருக்கிறாய், குழந்தாய்?” பீஷ்மர் கேட்டார்.


“யாதவ குலத் தோன்றல், அவர்களில் சிறந்தவன் ஆன வாசுதேவ கிருஷ்ணன், அனுப்பிய செய்தி இது!” என்ற உத்தவனின் குரலில் அனைவரையும் தன் பக்கம் ஈர்த்து இழுக்கும் கவர்ச்சி இருந்தது.  அவன் சொல்வதை அப்படியே நம்பும் வண்ணம் அவன் குரலில் உறுதியும், நம்பிக்கையும் தெரியப் பேசினான்.  “பாஞ்சால இளவரசியின் சுயம்வரத்தில் கலந்து கொள்ள வாசுதேவ கிருஷ்ணனும், மூத்தவர் ஆன பலராமரும் காம்பில்யத்துக்கு வருகை புரிகின்றனர்.  அவர்களோடு பல யாதவ அதிரதர்களும் வருகின்றனர்.  வடக்கே காம்பில்யம் செல்லும் வழியில் அவர்கள் சில நாட்களைப் புஷ்கரத்தில் செலவிட எண்ணுகின்றனர்.”

“அவர்கள் அனைவருக்கும் நல்வரவு.  எல்லாரும் வரட்டும்!” என்றான் திருதராஷ்டிரன்.

“ஆஹா, நீங்கள் இவ்விதம் நினைப்பீர்கள், கூறுவீர்கள் என்று வாசுதேவனுக்கு நிச்சயமாய்த் தெரியும் மன்னா!”  சற்றே நிறுத்தி விட்டு மேலும் தொடர்ந்தவன், “ ஆனால் தவறான ஒரு காரியத்தைத் திருத்தும்படி இப்போது அவன் வேண்டுகோள் விடுக்கிறான்.  தங்களையும், பிதாமகர் பீஷ்மரையும் வணங்கி வாசுதேவ கிருஷ்ணன் வேண்டுவது எல்லாம்  இதுவே.  போன வருடம் அரசன் செகிதனாவைக் குரு வம்சத்து வீரர்கள் புஷ்கரத்திலிருந்து விரட்டி விட்டனர்.  அந்தப் போர் நியாயமாக நடக்கவில்லை; எரிச்சலைத் தூண்டும் விதத்தில் முன்னறிவிப்பே இல்லாமல் நடந்து முடிந்தது.  வேறு வழியில்லாமல் செகிதனாவும் அவன் மக்களும் யமுனையைக் கடக்க நேரிட்டது.  யமுனையைக் கடந்து நாக நாட்டிற்குள் நுழைந்து நாகர்களிடம் அடைக்கலம் கேட்கவும் நேர்ந்தது.  கிருஷ்ண வாசுதேவன் இந்த வேண்டுகோளைத் தான் முன் வைக்கிறான்: “ செகிதனாவுக்கு அவன் இழந்த நாட்டை, அவன் பிரதேசத்தைத் திருப்பிக் கொடுங்கள்.  யாதவர்களாகிய நாங்கள் அங்கே செல்கையில் அவனுக்கு எங்களை உபசரிக்கவும் எங்கள் படை வீரர்களுக்கு உணவளிக்கவும் முடியும்.  "


“என்ன?” என்று ஆக்ரோஷமாய்க் கேட்ட துரியோதனனின் புருவங்கள் கோபத்தில் நெரிந்தன.  “புஷ்கரம் எங்களால் ஜெயிக்கப்பட்டது.  எங்கள் வீரர்களால் வெல்லப்பட்டது.  எங்கள் படைபலத்தால் ஜெயித்த அந்தப் பிரதேசம் குரு வம்சத்தினருக்கே சொந்தமானது.  அதை நாங்கள் பெருமையுடன் எங்களிடமே வைத்துக் கொள்ளப் போகிறோம். குருவம்சத்தினருக்குப் பெருமை அளிக்கும் விஷயம் இது!” என்றான். இதைச் சொல்கையில் கோபத்தில் தன் இருக்கையிலேயே அவன் குதித்தான்.  எழுந்து ஆவேசமாகப் பேசினான்.  கர்ணனின் கைகள் தன்னிச்சையாக அவன் உடைவாளுக்குப் போக அஸ்வத்தாமோ உத்தவனைத் தின்று விடுபவன் போலப் பார்த்து முறைத்தான்.


துரியோதனனைப் பார்த்து வருத்தம் தெரிவிக்கும் வகையில் சிரித்த உத்தவன், மற்றபடி அவன் சொன்ன விஷயங்களால் பாதிப்பே அடையாமல் மேலே பேசினான்.  இப்போது அவன் துரியோதனனைப் பார்த்தே பேசினான்.  “மாட்சிமை பொருந்திய யுவராஜா! கிருஷ்ணனால் அனுப்பப் பட்ட தூதுச் செய்தியை முழுதும் நான் முடிக்கும் வரை பொறுமை காக்க வேண்டுகிறேன்.  பாட்டனாருக்கும், மன்னர் திருதராஷ்டிரருக்கும் செய்தியை நான் முழுதும் தெரிவிக்கிறேன்.  அதன் பின்னர் இதன் மேல் என்ன செய்யவேண்டும் என்று தீர்மானிப்பது அவர்கள் விருப்பம்!”  என்றான்.

“மஹாதேவா, என் ஆண்டவா, இந்த வாசுதேவன் என்ன என்னமோ அதிசயங்களைச் செய்து வருகிறானே!” தனக்குள்ளாக ஆச்சரியப் பட்டுக் கொண்டார் துரோணர்.  அவன் மேல் ஒரு அன்பான நெகிழ்வான நட்பு உணர்வும் அவர் மனதில் தோன்றியது.  இங்கே ஒரு நாடகம் நடக்கிறது. விசித்திரமான நாடகம்.  அதை எங்கிருந்தோ சூத்திரதாரியாக இயக்குபவன் கிருஷ்ண வாசுதேவன்.  இப்படிப்பட்ட அதிசயங்களை நடத்துபவன் நாடகத்தின் முடிவையும் தனக்கேற்ற மாதிரி முடியச் செய்வான்.

“இந்தச் செய்திக்கு, செகிதனாவும் ஒரு விஷயத்தைத் தன் பங்கிற்குச் சேர்த்திருக்கிறார்.” என்றான் உத்தவன்.  “என்ன அது?” என்று பீஷ்மர் கேட்டார்.  “செகிதனாவின் செய்தி இது: பாட்டனார் பீஷ்மருக்கு என் வணக்கங்கள்.  நீங்கள் தர்மத்தின் மொத்த வடிவம்.  புஷ்கரத்தின் பாதுகாவலனாகவும், மன்னனாகவும் நான் குரு வம்சத்தினரோடு நட்பாகவே இருந்து வந்தேன்.  எந்தவிதமான தூண்டுதலோ, முன்னறிவிப்போ இல்லாமல் திடீரென என் நாடு என்னிடம் இருந்து பிடுங்கப்பட்டது.  என் நாட்டிற்குள் அந்நியர்களான குரு வம்சத்து வீரர்கள் நுழைந்ததால், நானும், என் நாட்டு மக்களும், நாகர்களின் அரசனிடம் தஞ்சம் புக நேர்ந்தது. உங்களுக்குப் புரிந்திருக்கும் எது நல்லது என.  பிதாமகரே, நேர்மையின் வடிவம் நீர்!  உங்கள் நீதியும் பேசப்படும் ஒன்று.  அத்தகைய நீதிமுறையைப் பின்பற்றி என் நாட்டை என்னிடமும் , என் மக்களிடமும் மீண்டும் ஒப்படைக்க வேண்டுகிறேன்.  ஒருவேளை கிருஷ்ண வாசுதேவனும், மூத்தவர் பலராமரும் புஷ்கரம் வந்து தங்க விரும்பினால் நான் அவர்களுக்கு அருகே இருந்து நேரடியாக நானே உபசரிக்கவும் விரும்புகிறேன்.”

உத்தவனின் இத்தகைய நாகரிகமான பேச்சுக்களால் துரியோதனன் எரிச்சல் அடைந்தான்.  கோபத்தில் அவன் முகம் சிவந்தது.  “பாட்டா, இது ரொம்பவே அதிகம்!  இது சரியல்ல!” எனத் தன் மறுப்பைக் கடுமையாகத் தெரிவித்தான். துரியோதனனைச் சற்றும் கவனிக்காத பீஷ்மர் அவன் வார்த்தைகளை அலட்சியம் செய்துவிட்டு உத்தவன் பக்கம் திரும்பி, “உத்தவா, நாக மன்னன் கார்க்கோடகனின் செய்தி என்ன?” என்று கேட்டார்.


Tuesday, November 19, 2013

பானுமதியின் எதிர்காலம்?????

தூக்கத்தில் கூட துரியோதனனின் சோகப் பெருமூச்சைக் கேட்ட பானுமதிக்குத் தாங்கவே இல்லை.  அவள் கிருஷ்ணனைச் சென்று பார்த்தால் தான் என்ன?  என்ன மோசமாக நடந்துவிடும்!  ஒன்றும் இல்லை. அவளால் அதற்கும் மேல் பொறுத்திருக்க இயலவில்லை .  மெல்ல எழுந்தாள்.  தன் கைகளை மென்மையாக துரியோதனன் மேல் வைத்தாள். அவனைக் கட்டிக் கொண்டே குனிந்து, “ஆர்ய புத்திரா, நீங்கள் விரும்பினால் நான் நிச்சயமாய்க் கிருஷ்ணனைச் சென்று பார்க்கிறேன்.” என்றாள்.

 தூக்கிவாரிப் போட்டுக்கொண்டு எழுந்தான் துரியோதனன்.  அவன் மிகவும் மோசமான நிலைமையில் இருந்ததால் அவனுக்கு எதுவுமே புரியவில்லை. “என்ன சொல்கிறாய்?” என்றான் அவளிடம்.  “உங்கள் சொற்களை மீற நினைத்ததுக்கு மன்னிப்புக் கேட்கிறேன், ஆர்யபுத்திரா!  நான் கிருஷ்ணனைச் சென்று பார்க்கப்  புஷ்கரம் செல்கிறேன்.” என்றாள் பானுமதி. “நிஜமாகவா சொல்கிறாய்?  நீ போகிறாயா? “ துரியோதனனுக்குத் தான் கனவு காண்கிறோமோ என்று சந்தேகம்.  தன்னை உலுக்கி விட்டுக் கொண்டான். அவன் தோள்களில் தொங்கியவாறே, “ஆம், ஐயா, நான் செல்கிறேன்.” என்றாள் பானுமதி.

“நீங்கள் என்ன சொல்கிறீர்களோ, என்ன விரும்புகிறீர்களோ அதைச் செய்கிறேன்.  நான் புஷ்கரம் சென்று கிருஷ்ணனைப் பார்த்து என்ன செய்ய வேண்டும் என நீங்கள் விரும்புகிறீர்கள்?” என்று கேட்டாள் பானுமதி. “புஷ்கரம் சென்று கிருஷ்ணனைப்  பார்.  என்னுடன் நட்பைத் தொடரச் சொல்! அவன் ஒரு வலிமை மிக்க, பலம் பொருந்தியவனாக ஆகிவிட்டான். அத்தகையவன் நட்பு எனக்குப் பல வகைகளிலும் உதவி செய்யும்.”

“சரி, என் ப்ரபுவே!  அவ்விதமே செய்கிறேன்.”

“இன்னும் ஒன்றும் இருக்கிறது பானுமதி! அதை மட்டும் நீ செய்துவிட்டால்!! செய்வாயா? எனக்காக அதை நீ செய்வாயா?”

“என்ன?”

“சுயம்வரத்தில் என்னை மணமகனாகத் திரெளபதி தேர்ந்தெடுக்க வேண்டும்.  அதற்குக் கிருஷ்ணனிடம் உதவி கேள்! அவன் உதவியின் மூலம் திரெளபதியிடம் பேசி அவள் மனதை என்பால் திருப்ப முயலச் சொல்!”

அவன் தோள்களில் தொங்கிக் கொண்டிருந்த பானுமதி அவன் தன்னோடு இணக்கமாக இருந்த இந்தச் சூழ்நிலையிலும், இந்த உதவியைத் தன்னிடம் கேட்டது மாபெரும் சுயநலமாகப் பட்டது.  அவள் மனம் என்ன பாடு படும் என்பதை யோசிக்காமல் அவளிடமே இதைக் கேட்கிறானே!  தன் உதடுகளைக் கடித்துக் கொண்ட வண்ணம் படுக்கையிலிருந்து எழுந்திருக்க முயன்றாள் பானுமதி.  ஹூம், பாஞ்சால இளவரசியிடம் அவனுக்கு இருக்கும் ஈர்ப்புக்கும் கவர்ச்சிக்கும், அவள், பானுமதி, அவன் மனைவி, துணை நிற்க வேண்டும்.  அதுவும் எப்படி!  வேசிகளுக்குத் தரகு வேலை பார்ப்பவர்கள் போல் அவளும் இந்தச் சூழ்ச்சிக்குத் துணை நிற்க வேண்டும். மனம் பூராவும் துக்கத்திலும் வெறுப்பிலும் ஆழ்ந்தது பானுமதிக்கு.

துரியோதனன் அவளைப் பார்த்து, “செய்வாயா!  இதை நீ செய்வாயா ?  சொல் தேவி, நீ இதைக் கட்டாயம் எனக்காகச் செய்வேன், எனக் கூறு.  என் பாதுகாப்பிற்காக.  என் பலத்துக்காக.  என் நாட்டுக்காக.  இதன் மூலம் உன்னுடைய நிலைமையில் மாற்றம் ஏதும் நேராது.  நிச்சயம்.  ஆனால் என் எதிர்காலமே இதில் தான் அடங்கி இருக்கிறது.”

பானுமதி ஒரு முடிவுக்கு வந்துவிட்டாள்.  “ நீங்கள் சந்தோஷமாக இருந்தாலே போதும்.  என் நிலையைப் பற்றி நான் கவலைப்படவே இல்லை. அவ்வளவு ஏன்?  என் உயிரைக் குறித்துக் கூட எனக்குக் கவலை இல்லை. நான் புஷ்கரம் செல்கிறேன்.  திரெளபதியை நீங்கள் மணப்பதற்குக் கண்ணன் உதவி செய்ய வேண்டும் என்று வற்புறுத்துகிறேன்.  என்னால் முடிந்த வரை முயற்சி செய்து கண்ணனை உங்களுக்கு உதவி செய்ய வைக்கிறேன்.”

அவளுடைய இந்தப் பெருந்தன்மையான போக்கினால் உண்மையாகவே நெகிழ்ந்த துரியோதனன், “ நீ என்றென்றும் என் அன்புக்குரியவள் பானுமதி!   நீ மிக மிக நல்லவளும் கூட!”  என்று சொல்லிக் கொண்டே அவளைத் தன் பக்கம் இழுத்து அணைத்து அவளுக்கு உற்சாகம் ஊட்ட விரும்பினான்.  பானுமதியும் அவனை அன்போடு அணைத்துக் கொண்டாள்;  என்றாலும் அவன் மார்பில் முகத்தைப் புதைத்தவள் அப்படியே தனக்கு வந்த ஒரு மாபெரும் விம்மலையும் அடக்கிக் கொண்டாள்.   அவளிடம் துரியோதனன் கேட்டது சாதாரண விஷயமா?  அவள் நிலை, யுவராஜாவின் மனைவி, அடுத்த பட்ட மஹிஷி என்பதிலிருந்து விலகிவிடுவாள்.  அதோடு அவள் எதிர்காலம், அவளுக்கு இப்போது பிறக்கப் போகும், இனி பிறக்கப் போகும் குழந்தைகள், முக்கியமாய் அவள் மகன்களின் எதிர்காலம், அவளுடைய வாழ்க்கை, உயிர் எல்லாமே தான் துரியோதனன் கேட்டுவிட்டான்.  இனி அவள் நிலை என்னாகும்? போகட்டும்,  அவன் விரும்புவது அதுவானால், அதுவே அவனுக்கு மகிழ்ச்சியைக் கொடுக்குமெனில் அதை அவள் செய்து முடிப்பாள்.

“மேலும் கேள் பானுமதி.  நீ ஆசாரியரோடு தனியாகச் செல்ல வேண்டாம்.  ஷகுனி மாமா உன் துணைக்குக் கூட வருவார்.” என்றான் துரியோதனன்.  பானுமதிக்குச் சீற்றம் தாங்க முடியாமல் தொண்டையை அடைத்தது.  அவள் இவ்வளவு சொல்லியும் அவள் அருமைக் கணவன் அவளை முழுதும் நம்பவில்லை.  அவளை உளவு பார்க்க மாமா ஷகுனியைக் கூட அனுப்புகிறான்.  அவள் இவ்வளவு நேரமும் மிகவும் முயன்று அவன் மனதில் இடம் பிடிக்கச் செய்த முயற்சிகள் அனைத்தும், அவன் தன்னை நம்பவேண்டும் என்று செய்த தியாகங்கள் அனைத்தும், வியர்த்தமாகி அர்த்தமே இல்லாமல் போய்விட்டனவே!

“அப்படியே, ஆர்ய புத்திரா!” இதைச் சொன்னவண்ணம் தனக்கு வந்த பெரியதொரு விம்மலை அடக்கியவண்ணம் படுக்கையில் வீழ்ந்தாள் பானுமதி.  மீதி இரவு அவளுக்குத் தூக்கமின்றிக் கழிந்தது.Saturday, November 16, 2013

பானுமதி யோசிக்கிறாள்!

தனக்கு ஒரு குழந்தை பிறக்கப் போகிறதை குறித்த மகிழ்ச்சியை துரியோதனனால் அடக்க முடியவில்லை.  மிகவும் பெருமிதமும் அடைந்தான்.  மனம் பூரணமான திருப்தியில் திளைத்தது.  அவனுக்குப் பிறக்கப் போகும் முதல் குழந்தைக்கு பானுமதி தாயாகப் போகிறாள்.  இந்த எண்ணமே அவனுக்கு மகிழ்ச்சியைத் தந்தது.  குரு வம்சத்தினர் வெகு காலமாக எதிர்பார்த்து வந்த ஒன்று நடக்கப் போகிறது.  இது ஒரு நல்ல சகுனமாகவே அவனுக்குத் தோன்றியது.  சக்கரவர்த்தி பரதன் அரசாண்ட அரியணையில் அவன் மகனும் ஒரு சக்கரவர்த்தியாக ஆளுவான்.  மிகவும் கனிவோடும், அன்போடும் பானுமதியின் கண்ணீரைத் தன் மேல் வேஷ்டியால் துடைத்து அவளை அணைத்து ஆறுதல் அளித்தான்.  உண்மையிலேயே குழந்தை மனம் கொண்ட பானுமதியின் மனமோ  தன் கணவனின் இந்த அன்பில் நெகிழ்ந்தது.  அவள் தனக்கு நேரப் போகும் ஆபத்தைக் கூட மறந்துவிட்டாள்.  அவளுக்கு இனி கண்ணனைச் சந்திக்க வேண்டும் என்ற எண்ணமே இல்லை;  அவனைச் சந்தித்தாலும், சந்திக்காவிட்டாலும் அவளுக்கு ஒன்று தான்.  அதே போல் அவள் பிறந்த நாட்டை விடப் பெரிய தேசத்தின் இளவரசியை இனி துரியோதனன் மணந்து வந்தாலும் அது குறித்து அவளுக்குக் கவலை இல்லை.  அவள் விரும்புவதெல்லாம் அவள் கணவன் அவளை அன்பாக நடத்த வேண்டும்; அவளிடம் என்றும் மாறா அன்பு பூண்டிருக்க வேண்டும் என்பதே.

அவன் தோள்களில் சாய்ந்து அவன் அணைப்பில் உறங்க வேண்டும். இதை விடவும் பெரிய சுகமோ, அல்லது பதவியோ, அதிகாரமோ இருக்குமா? வாய்ப்பே இல்லை.   சில நொடிகளிலேயே துரியோதனனின் அன்பான அணைப்பில் ஆழ்ந்து உறங்க ஆரம்பித்தாள் பானுமதி.  சிறிது நேரத்திலேயே அவள் உலுக்கி எழுப்பப்படுவதை உணர்ந்தாள்.  திடுக்கிட்டுக் கண் விழித்தவள் கனவல்ல; நனவே எனத் தெளிந்தாள்.  எழுந்து அமர்ந்திருந்த துரியோதனன் அவளைப் பார்த்து, “தேவி, நான் என் மனதை மாற்றிக் கொண்டு விட்டேன்;  நன்கு யோசித்துப் பார்த்தேன்.  நீ கிருஷ்ண வாசுதேவனைக் கட்டாயம் சந்திக்க வேண்டும்.” என்றான்.

பானுமதிக்கு இது கனவே என்று தோன்றியது.  ஆகவே திரும்பப் படுத்துக் கொண்டு மறுபக்கம் திரும்பிய வண்ணம் மீண்டும் உறங்க ஆரம்பித்தாள். ஆனால் துரியோதனன் விடவில்லை.  “தேவி, நீ கிருஷ்ணனைச் சந்தித்தே ஆக வேண்டும் என்று விரும்புகிறேன்.” என்றான்.  மீண்டும் எழுந்த பானுமதி தன் கண்களைத் தேய்த்துவிட்டுக் கொண்டு, தான்  காண்பது கனவல்ல;   நனவே எனத் தெளிந்தாள்.  அவனை ஆச்சரியத்துடன் பார்த்தாள்.  “நான் ஏன் அங்கே செல்லவேண்டும்?? எதற்காக?  நான் இப்போது சந்தோஷமாகவே இருக்கிறேன்.” என்று அவன் தோள்களைக் கட்டிக் கொண்டு கொஞ்சலாகக்க் கூறினாள்.  “ஓஹோ, தேவி, என்னை சந்தோஷமாய் வைத்திருப்பது தானே உனக்கும் மகிழ்ச்சியைத் தரக்கூடியது!  நீ கிருஷ்ணனிடம் செல்.  நீ அவனிடம் செல்ல வேண்டும் என நான் விரும்புகிறேன்.” என்றான். அவளை வற்புறுத்தினான்.

“ஆனால் என்ன காரணத்துக்காக நான் அவனிடம் செல்வேன்?”

“அவனிடம் சென்று என் அன்பான விசாரிப்பையும், என் வணக்கத்தையும் தெரிவி.  கூடவே ஒரு சகோதரியாக உன் வணக்கத்தையும் தெரிவிப்பாய்!” புன்முறுவலோடு கூறினான் துரியோதனன்.  “ம்ஹூம், நான் போக மாட்டேன்.  எனக்குப் போக வேண்டும் என்று மனதில் தோன்றவே இல்லை!” என்றவள் மேலே தொடர்ந்து, “அதோடு நான் அத்தனை தூரம் பிரயாணப் படுவதில் எவ்விதமான பலனும் இல்லை;  பொருளும் இல்லை. “ என்றாள்.

பானுமதியால் முதலில் ஆவேசமாகக் கத்திச் சண்டை போட்ட துரியோதனன் இப்போது ஏன் போகச் சொல்லுகிறான் என்பதைப் புரிந்து கொள்ள முடியவில்லை.  ஒருவேளை தான் மிகவும் கடுமையாக நடந்து கொண்டதற்காக இந்தச் சலுகையை அளிக்கிறானோ?  ஆனால் அவன் எவ்வளவு கடுமையாக நடந்து கொண்டாலும் பானுமதிக்குப் பொருட்டில்லை.  ஒரு புயல் வந்து தாக்குவது போல் அவனுடைய உணர்வுகள் வந்து செல்வதையும், வந்த வேகத்திலேயே மறைவதையும் அவள் கண்டிருக்க்கிறாள்.  அவனுக்கு மகிழ்வல்லாத எதையும் அவள் செய்யவும் விரும்பவில்லை.  அதோடு அவன் உள் மனதில் பானுமதி புஷ்கரம் செல்லக்  கூடாது என துரியோதனன் விரும்பினான் எனில்  அதை மீறிச் செல்லவேண்டும் என அவள் நினைக்கக் கூட மாட்டாள்.  அவள் திரும்பிக் கொண்டுவிட்டாள்.  தூங்குவது போல் நடித்த வண்ணம் தன் கண்களை மூடிக் கொண்டாள்.

“பிடிவாதக் காரி, முட்டாள் பெண்ணே!” துரியோதனன் முணுமுணுத்தவண்ணம், “நீ புஷ்கரம் செல்வதும், கிருஷ்ணனைச் சந்திப்பதும்  எத்தனை முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று என்பதைத் தெரிந்து கொண்டிருக்கிறாயா?” என்று அவளைக் கேட்டான்.  பானுமதி பதிலே சொல்லவில்லை.  அசையவே இல்லை.

 “ஹூம், நான் நல்ல நேரத்தில் பிறக்கவே இல்லை;  என் அதிர்ஷ்டம் அவ்வளவு தான்.  ஹூம், காலையில் ராஜசபையில் ஆசாரியதேவர்! இரவோ இங்கே படுக்கை அறையில் சொந்த மனைவி!  எப்போதெல்லாம் நான் தலை எடுக்கலாம்;  அதற்கான நேரம் இது எனத் தோன்றி நான் அதற்கான முயற்சிகளைச் செய்கிறேனோ அப்போதெல்லாம் எனக்கு மிகவும் நெருங்கியவர்களே எனக்கு மாறாகச் செயல்படுகின்றனர்.  எனக்கு விரோதமாக நினைக்கின்றனர்.”  தன் நெற்றியில் கையை வைத்துத் தாங்கிய வண்ணம் ஏதேதோ நினைத்துக் கொண்டு மிகவும் சோகமாக வெகு நேரம் அமர்ந்திருந்தான் துரியோதனன்.  பிறகு ஏதோ நினைத்தவன் போல மீண்டும், “ ஏன் எனக்கென யாருமே இல்லை?  எனக்கு உதவவென்று எவருமே பிறக்கவில்லையா?  என் பக்கம் ஏன் யாருமே நிற்க மறுக்கின்றனர்?” என்று முணுமுணுப்பாகக் கூறிக் கொண்டான்.  ஒரு நீண்ட பெருமூச்சை விட்டவன் படுக்கையில் படுத்து, பானுமதிக்கு முதுகைக் காட்டிய வண்ணம் தூங்க ஆரம்பித்தான்.

ஆனால் பானுமதிக்கு அதன் பின்னர் தூக்கம் வரவில்லை.  அவள் கணவனின் பெருமூச்சுக்கள் அவள் நெஞ்சைக் கிழித்தன. அவளுக்கு அனுபவம் குறைவு என்றாலும் அவள் கணவன் செல்லும் பாதையில் நிறையத் தடங்கல்கள் இருப்பதை அவளால் உணர முடிந்தது.  கண்ணுக்குத் தெரியாத சில சக்திகள் அவள் கணவனின் வெற்றிப்பாதையில் குறுக்கிடுவதை அவளால் உணர முடிந்தது.  எப்படியானாலும், அவனும் அப்படித்தான் உணர்கின்றான்.  ஏனெனில் இம்மாதிரியான குறுக்கீடுகள் நேரிடுவதாக அவனுக்கு உணரும் சமயம் இப்படித் தான் அவன் குணமே மாறிப் போகிறது.  க்ரோதம் நிறைந்தவனாக, ஆவேசம் கொண்டவனாக, தன் குணங்களைக் கட்டுக்குள் கொண்டுவர முடியாதவனாக மாறிப் போகிறான். குரு வம்சத்தினரில் பெரியோர் சிலருக்கு துரியோதனனின் நடவடிக்கைகள் பிடிக்கவில்லை தான்.  அவன் ஒரு சக்கரவர்த்தியாக வேண்டும் என்ற விருப்பத்தையும் கூட பெரியோர் சிலரால் பொறுக்க இயலவில்லை. அதையும் தடுக்கின்றனர்.  சொந்தக் குடும்பத்தினரே இதைச் செய்கின்றனர்.

அவன் மேல் எந்தவிதமான தப்புமே இல்லாதிருக்கையிலேயே யுதிஷ்டிரனை யுவராஜாவாகக் கொண்டு வந்து அவனுக்கு அநியாயத்தைச் செய்தார்கள்.  அது மாபெரும் தவறு என அவள் அப்போதே நினைத்தாள். ம்ம்ம்ம், அவள் மாமனாரும், துரியோதனனின் தந்தையுமான திருதராஷ்டிரன் குருடன் என்பதால் அவள் கணவனுக்கு தண்டனையைத் தருவதா?  இப்போது தான் என்ன தவறு செய்கிறான்?  அல்லது செய்து விட்டான்?  ஒரு பலமுள்ள சக்கரவர்த்தி என்னும் நிலையை அடையத் ஹஸ்தினாபுரத்தின் சாம்ராஜ்யத்தின் நிலையான தன்மைக்காகத் தானே அவன் திரெளபதியை மணமுடிக்க எண்ணுகிறான்.  குருதேவர் அதைத் தெளிவாக எதிர்க்கிறார் எனில் அவளும் தானே!  அவள் கணவனின் இந்தத் திட்டத்தைத் தடுக்கும் வகையில் அவள் குருதேவரையும் இந்தச் சதியில் சேர்த்துக் கொண்டுவிட்டாள்.  ம்ம்ம்ம்.. கிருஷ்ணனின் உதவியையும் பெற்றாக வேண்டும்.  அவள் கிருஷ்ணனின் உதவியைப் பெறுவது குறித்துச் சிந்திக்க ஆரம்பித்தாள்.  ஆம், அவள் கணவன் சொல்வதே சரி.  அவள் கணவன் இப்போது தனித்து விடப்பட்டுவிட்டான்.  நண்பர்கள் எவரும் இல்லை.  என்னதான் அவளை விட வயதில் பெரியவனாக இருந்தபோதிலும் இவனை இப்போது அவள் தான் கவனிக்க வேண்டும். அவனிடம் என்ன கெட்ட குணம் இருந்தாலும் அவளை எப்படி நடத்தினாலும் கடைசியில் அவளை நேசிக்கிறான்; பாதுகாத்து வருகிறான்.

ம்ம்ம் அவனுக்கும் நண்பர்கள் இருக்கின்றனர் தான்.  கர்ணன், அஸ்வத்தாமா இருவரும்.  அவனுடைய மனோநிலைக்குத் தக்கவாறே நடந்து கொண்டு அதற்கேற்ப அவனைத் தூண்டிவிடுவார்கள்.  அவனை எவ்விதத்திலும் தடுப்பவர்கள் இல்லை.  அதோடு ஷகுனி மாமாவும் இருக்கிறார்.  என்றாலும் அவன் அரிதாகவே அவனிடம் விரும்பத்தக்கவிதமாய் நடந்து கொள்வான். துரியோதனனின் தந்தையோ அவனிடம் மிகவும் அன்பை வைத்துவிட்டு, அதனால் முட்டாள்தனமாக நடந்து கொள்வான்.  அவன் தாயோ எனில் அவனிடம் அன்பிருந்தாலும், அவன் நிலையைக் கண்டு வருந்துபவள் அல்ல. ஆம், பானுமதி, துரியோதனனின் மனைவியான பானுமதியால் மட்டுமே அவனுக்குத் தேவையான அன்பையும், ஆதரவையும், கொடுக்க முடியும் என்பதோடு அவன் விதியோடு அவன் போராடுகையில் தேவையான உதவியையும் அவளால் தான் அளிக்க முடியும்.  பானுமதி மேலும் யோசித்தாள்.

Thursday, November 14, 2013

வென்றது யார்? துரியோதனனா? பானுமதியா?

“பொய் சொல்கிறாயா?  நீ ஏன் போகிறாய் என்பதை நான் சொல்லட்டுமா?” ஓங்கி அவள் கன்னத்தில் ஓர் அறை கொடுத்தான் துரியோதனன்.  “பொய்யா சொல்கிறாய்? திரெளபதியிடம் என்னைப் பற்றிய அவதூறான தகவல்களைச் சொல்லி என் மேல் அவளுக்கு ஈர்ப்பு ஏற்படக் கூடாது எனக் கண்ணனிடம் கேட்டுக் கொள்ளப் போகிறாய்!  உண்மையா, இல்லையா?  ஆஹா, இந்தச் சின்னச் சின்னஞ்சிறு தங்கை ஹஸ்தினாபுரத்தின் மஹாராணியாக வேண்டும் என்று திட்டம் போட்டு விட்டாள்.  அதற்கான உதவியைப் பெறுவதற்காக அவள் பெரியண்ணனிடம் செல்கிறாள்.  உண்டா, இல்லையா! சொல், உண்மையைச் சொல்!” ஆவேசத்துடன் கத்தினான் துரியோதனன். பானுமதி அப்படியே படுக்கையில் சுருண்டு விழுந்து விட்டாள். பொய் சொல்லிப் பழக்கமே இல்லாத அவளுக்கு இந்தக் கேள்விகளுக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை.

பழி வாங்கும் அசுரனைப் போல் அவளெதிரே வந்து நின்று கொண்டான் துரியோதனன்.  அவள் தோள்களை இறுகப் பிடித்து, முறுக்கித் தன் பக்கம் திருப்பினான் அவளை.  “சொல், என்னிடம் உண்மையை!  எதற்காக நீ அங்கே போகவேண்டும் என்கிறாய்?  என்றேனும் ஒரு நாள் இந்த ஹஸ்தினாபுரத்தின் மஹாராணியாகி விடலாம் எனக் கனவு காண்கிறாய் நீ! ஹூம்!  கவலையே படாதே!  திரெளபதியை நான் மணக்கிறேனோ இல்லையோ! அதை விடு!  ஆனால் நீ  மட்டும் ஹஸ்தினாபுரத்தின் மஹாராணியாகாமல் நான் பார்த்துக் கொள்கிறேன்!  நடத்தை கெட்டவளே! சீ!”  துரியோதனனின் கடைசி வசைச்சொல்லைக் கேட்ட பானுமதியின் உள்ளம் உடைந்தே போனது.

 “தயவு செய்யுங்கள், ப்ரபு,  ஆர்ய புத்திரரே, நீங்கள் சொல்லாலும், செய்கைகளாலும் என்னைப் புண்படுத்திக் கொண்டிருக்கிறீர்கள்.”  அழுது கொண்டே கெஞ்சினாள் பானுமதி.  ஆனாலும் துரியோதனன் அவள் தோள்களை நசுக்கிப் பிழிவதை நிறுத்தவே இல்லை.

“நீ செத்தாலும் எனக்குக் கவலை இல்லை!”  என்றான் அலட்சியமாக.  பானுமதியால் உடல் வலியைப் பொறுக்கவே முடியவில்லை.  மெல்லிய அவள் தேகம் காற்றில் ஆடும் பூங்கொடியை விட மோசமாக நடுங்கியது.  தன் தைரியத்தை எல்லாம் வரவழைத்துக் கொண்டு துரியோதனனைப் பார்த்தாள்.  கிட்டத்தட்ட சவால் விடும் தோரணையில் அவனைப் பார்த்தாள்.

 “ஆம், கொன்று விடு, கொன்று விடு. முதலில் என்னைக் கொல் பார்க்கலாம். பின்னர் நீ உன் அருமை மகனைக் கொன்றதை உணர்வாய்!” நடுங்கும் குரலில் அழுத வண்ணம் கூறினாள் பானுமதி.  துரியோதனனுக்கு பானுமதி சொன்னதின் உண்மையும், நிதரிசனமும் சில விநாடிகள் உறைக்கவே இல்லை.   சற்று யோசித்த பின்னரே அவள் கூறிய செய்தியின் சிறப்பான முக்கியத்துவம் புரிந்தது.   உடனே அவள் மீதிருந்த தன் கைகளை எடுத்துக் கொண்டு அதே கைகளால் தூக்கத்திலிருந்து விழிப்பவன் போல் கண்களைத் தேய்த்துவிட்டுக் கொண்டான்.  பானுமதி கூறிய செய்தியின் தாக்கம் அவனைச் சென்றடைந்தது.  சில விநாடிகளில் முழுதும் மயக்கம் தெளிந்தவனாகக் காணப்பட்டான்.

“ஓஹோ, நீ குழந்தையைச் சுமக்கிறாயா?”  அவன் குரலே இப்போது மாறி இருந்தது.  பானுமதியின் சகோதரியான , அவன் முதல் மனைவியும்  அவள் வயிற்றில் சுமந்திருந்த அவன் குழந்தையும்  அந்தக் குழந்தையை அவள் பிரசவிக்கும்போதே இறந்துவிட்டனர்.  அதன் பின்னர் பானுமதியை அவன் மணந்து இருவருடங்கள் ஆகியும் அவள் குழந்தை உண்டாகவே இல்லை. தாமதம் ஆகிக் கொண்டிருந்தது.  அவன் நீண்ட நாட்களாக ஒரு மகனுக்காகக் காத்திருக்கிறான்.  அந்த மகன் இப்போது வரப் போகிறானா?  “நிச்சயமாகத் தான் சொல்கிறாயா?  இது உண்மை தானா?” என்று மீண்டும் அவளிடம் கேட்டான் துரியோதனன்.   தன் உடல் நடுக்கம் இன்னமும் குறையாமல் காணப்பட்ட பானுமதி, இன்னமும் பயம் நீங்காமல், அதே சமயம் சற்றே பணிவுடன் அவனிடம், “ஆம் , இது உண்மை தான்!”  என்றாள்.

“ஏன் என்னிடம் முன்னரே சொல்லவில்லை?”  பொறுமையில்லாமல் மீண்டும் துரியோதனன் அவளிடம் கேட்டாலும், குரலில் கோபம்  தெரியவில்லை.  “எனக்கு நிச்சயம் ஆக வேண்டாமா?  அதற்கு முன்னர் உங்களிடம் எப்படித் தெரிவிப்பது?” என்றாள் பானுமதி.

 “சரி, இப்போது நிச்சயம் தானே?” துரியோதனன் கேட்க, அதை ஆமோதித்தாள் பானுமதி.  தன்னிலைக்கு முழுதும் வந்து விட்ட துரியோதனன் அப்போது தான் நினைவுக்கு வந்தவன் போல அவளைப் பாதுகாப்பு உணர்வு தெரியும் வண்ணம் அணைத்துக் கொண்டான்.  “சரி, சரி, அழாதே, அழுகையை நிறுத்து.  உன் அழுகை குழந்தைக்குப் பாதிப்பை ஏற்படுத்தும்.  ஆனால் இப்படிப் பட்ட முட்டாள் தனமான காரியங்களை நீ ஏன் செய்கிறாய்?  அது தான் எனக்குப் புரியவே இல்லை.  கிருஷ்ண வாசுதேவனிடம் போய், பாஞ்சால இளவரசி என்னைத் தன் மணமகனாய்த் தேர்ந்தெடுப்பதைத் தடுக்கத் தானே  அவனிடம் கேட்கப்போகிறாய்?”


துரியோதனனின் இந்த மாற்றத்தினால் பானுமதிக்குக் கொஞ்சம் தைரியம் வந்தது.  மீண்டும் அவனைப் பார்த்து அவன் தோள்களைக் கட்டிக் கொண்டு தொங்கிய வண்ணம் பதிலளித்தாள்.  அதுவும் கொஞ்சலாகக் கிசு கிசுவென்ற குரலில் அவனுக்கு மட்டுமே கேட்கும்படியாக:”  ஆர்யபுத்திரா, நான் உங்கள் மகன் ஹஸ்தினாபுரத்தின் சக்கரவர்த்தியாக வேண்டும் என்று விரும்புகிறேன்.” அவள் இதைச் சொல்கையில் அவள் மனதில் எவ்விதமான வேறுபாடான உணர்வுகளும் இல்லை என்பதைத் தெரியும்படியாகவே சொன்னாள்.  அவளின் இந்த வெகுளித்தனமான நடவடிக்கையில் கவரப் பட்ட துரியோதனன் அவளை மிகுந்த அன்புடன் அணைத்துக் கொண்டான்.

“ஆம்,  உன் மகன் தான் இந்த ஹஸ்தினாபுரத்தின் சக்கரவர்த்தியாவான்.  அது திரெளபதியை நான் மணந்தாலும், மணக்காவிட்டாலும் நிச்சயமாய் உன் மகனே அடுத்த சக்கரவர்த்தி.  அதைக் குறித்து நீ கவலைப்படாதே.  பரத குலத்திலேயே முதல்வனாகச் சொல்லும்படி பெயரெடுப்பான்.  ஆனால் நான் திரெளபதியைக் கட்டாயமாக சுயம்வரத்தில் வென்றாக வேண்டும்.   உனக்குத் தெரியுமா?  இப்போது இருப்பதை விடவும் பத்து மடங்கு பலம் உள்ளவனாக நான் ஆகிவிடுவேன், திரெளபதி மட்டும் எனக்கு மாலையிட்டால் துருபதனின் படைபலமும் சேர்ந்து விட்டால், நானே இந்த ஆர்யவர்த்தத்தில் பலமுள்ள அரசனாவேன்! ”

பானுமதிக்கு மீண்டும் தன் விம்மலை அடக்க முடியவில்லை. கஷ்டப்பட்டுச் சமாளித்தாள்.  அவள் விதி முடிந்து விட்டது.  துரியோதனன் என்ன வேண்டுமானாலும் இப்போது சொல்லுவான்.  ஆனால் பாஞ்சால இளவரசியை மட்டும் அவன் மணமுடித்து வந்துவிட்டான் எனில், ம்ஹ்ஹும் ஒரு வித்தியாசமான துரியோதனனையே அவள் காண முடியும். ஆனாலும் தவிர்க்க இயலாத இந்த நிகழ்வை அவள் ஏற்றே ஆகவேண்டும். பானுமதி தன்னைத் தானே சமாதானப் படுத்திக்கொள்ள வேண்டும். ஏனெனில் அவள் அவ்வளவுக்கு துரியோதனனை விரும்புகிறாள். கண்மூடித்தனமான காதலுடன் இருக்கிறாள்.  அவனுக்கு மகிழ்ச்சியைக் கொடுக்காத எதையும் அவள் செய்ய விரும்பவில்லை;  விரும்பவும் கூடாது. அவன் மகிழ்ச்சியே அவளுக்கும் மகிழ்ச்சி.


 “ஆர்ய புத்திரரே, உங்கள் கட்டளைக்கு நான் கீழ்ப்படிகிறேன்.  நான் புஷ்கரம் செல்லவில்லை.”  என்றாள் மிகவும் பணிவாக. துரியோதனன் உடனே புன்னகை புரிந்தான்.  ஆனால் ஒரு சந்தேகம் உடனே அவனுக்கு வந்துவிட்டது.  “ஆனால் நீ பாட்டியார் மாட்சிமை பொருந்திய மஹாராணி சத்யவதியிடம் அல்லவோ அநுமதி பெற்றிருக்கிறாய்? அவள் அநுமதி கொடுத்தும் நீ செல்லவில்லை எனில்?  அவள் என்ன நினைப்பாள்? என்னையன்றோ தவறாய் நினைப்பாள்?”  என்று கேட்டான்.  அதற்கு பானுமதி, “ நான் பாட்டியாரிடம் சென்று என் உடல் நிலை அவ்வளவு தூரப் பிரயாணம் செய்ய லாயக்கு இல்லை என்று சொல்கிறேன்.  ஒரு பெண்ணால் மற்றொரு பெண்ணின் உடல் நிலையைக் குறித்துப் புரிந்து கொள்ள முடியும். பாட்டியார் புரிந்து கொள்வார்.”  என்றாள்.

இப்போது துரியோதனன் படுக்கையிலிருந்து எழுந்து கொண்டு தன் கிரீடத்தையும் மற்ற அரச உடைகள், சம்பிரதாயமான ஆபரணங்கள் அனைத்தையும் கழற்றி ஒவ்வொன்றாக பானுமதியிடம் கொடுக்க அவள் அதை வாங்கி எப்போதும் பத்திரமாக வைக்கும் இடத்தில் வைத்து பத்திரப்படுத்தினாள்.  சிறிது நேரம் இருவரும் ஒன்றுமே பேசவில்லை.
Wednesday, November 13, 2013

பானுமதியின் கலக்கம்! துரியோதனனின் க்ரோதம்!

“ஆசாரியரே, கிருஷ்ணன் அப்படி ஒரு வாக்குறுதியை எங்கனம் கொடுக்க முடியும்?” பானுமதி கேட்டாள்.

“இதோ பார் பானுமதி!  எனக்கு இவை தான் தெரியும்.   கிருஷ்ணனிடமிருந்து இப்படி ஒரு வாக்குறுதியை மட்டும் உன்னால் வாங்க முடிந்தால் நல்லது.  ஏனெனில் அவன் கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவான்.”

“நிச்சயமாய் அப்படி ஒரு வாக்குறுதியைக் கிருஷ்ணன் கொடுக்க மாட்டான், ஆசாரியரே!”

“அப்படியா சொல்கிறாய்?  அப்படி என்றால் உன்னைத் தன் அருமைத் தங்கையாக அவன் ஸ்வீகரித்திருக்கிறான் என்பது வெறும் வார்த்தை!  வெட்டிப் பேச்சு! அல்லது பெரியதொரு நகைச்சுவை!” என்றார் துரோணர் சிறிது புன்னகையுடன்.

“ஆசாரியரே, கிருஷ்ணன் வாக்குக் கொடுத்தால் காப்பாற்றும் மன உறுதி உள்ளவன் என்பதை நான் நன்கறிவேன்.” என்றாள் பானுமதி.  “நல்லது, குழந்தாய், அப்படி எனில் நீ விரைவில் மாட்சிமை பொருந்திய மஹாராணி சத்யவதியிடம் சென்று அவளின் அநுமதியை வாங்கு.  அவள் அநுமதி கொடுத்த பின்னரும், அதை மறுக்கும் துணிவு அவனிடம் இருக்காது.  நீ என்னுடன் தாராளமாக வரலாம்.” என்றார். “முயற்சி செய்கிறேன், ஆசாரியரே.  ஆனால் கிருஷ்ண வாசுதேவனால் இந்த விஷயத்தில் உதவ முடியும் என்று எனக்குத் தோன்றவில்லை.” என்றாள் பானுமதி.  “ஆஹா, பானுமதி, நீ ஒன்றை அறியவில்லை.  அவன் எல்லாரும் சொல்வதைப் போன்றதொரு ஆச்சரிய புருஷனாக மட்டும் இருந்தால், எதையும், நடக்கக் கூடாததைக் கூட நடத்தி வைப்பான்.  அத்தகைய ஆற்றலுடையவனாக அவன் இருக்க வேண்டும்.” பானுமதி அத்துடன் ஆசாரியரிடம் விடை பெற்றுச் சென்றாள்.  துரோணரின் முகத்தில் ஒரு வெற்றிப் புன்னகை காணப்பட்டது.  அனைத்தும் அவர் நினைத்த மாதிரியே மிக எளிதாகச் சென்று கொண்டிருக்கிறது.

பானுமதி மிகவும் மகிழ்ச்சி அடைந்தாள்.  மாட்சிமை பொருந்திய மஹாராணி சத்யவதி அம்மை அவள் புஷ்கரத்துக்கு ஆசாரியர் துரோணருடன் செல்ல அநுமதி அளித்து விட்டார்.  அவள் மீண்டும் கிருஷ்ணனைச் சந்திக்கப் போகிறாள்.  கிருஷ்ணன்!!!!!!, இடையன் என அனைவராலும் அழைக்கப்படுகிறான்.  தன் இடையில் செருகிய புல்லாங்குழலின் இசையில் விருந்தாவனத்தின் கோபியர்களைத் தன் பக்கம் ஈர்த்தவன், அவர்கள் அனைவரையும் கவர்ந்தவன், ஆஹா, இவனைக் குறித்து அவள் தந்தையின் ராஜசபையில் எத்தனை நாடோடிப் பாடல்கள் பாடப்பட்டன! இவனுடைய சாகசங்களைக் குறித்த வர்ணனைகள் பாணர்களாலும், பாடினிகளாலும் பாடப்பட்டு வருகின்றனவே.  எத்தனை உற்சாகமாய்ப் பாடி ஆடுவார்கள்.  அவன் நினைப்பே இவ்வளவு சந்தோஷத்தைத் தருமா?  ஆனால் , இப்போது அவன் மாட்டிடையன் அல்ல.  ஒரு வலிமை மிக்க, அதிகாரபலம் கொண்ட மனிதனாகி விட்டதோடு அவனையும், அவன் கருத்துக்களையும் அனைவரும் மதித்துப் போற்றும் வண்ணமும் நடந்து கொள்கிறான்.  அவ்வளவு ஏன்,  எவரையும், பாட்டனார் பீஷ்மரைக் கூட மதிக்காத துரியோதனன் கூட,  இந்தக் கண்ணனின் நல்லெண்ணத்தைப் பெற்றாகவேண்டும் என்று பாடுபட்டானே! இப்போது அவளுக்கு  அவன் உதவியைப் பெற்றாக வேண்டும்.  திரெளபதிக்குச் சிறிதேனும் துரியோதனனைத் தேர்ந்தெடுக்கும் எண்ணம் இருந்தால்  அதைக் கண்ணன் எவ்வகையிலேனும் மாற்றி விடுவான்.  இதில் பானுமதிக்குச் சிறிதும் சந்தேகமே இல்லை.   அவள் மிகவும் நேசிக்கும் அன்புக் கணவன் துரியோதனனின் ஆசைக்கும், அன்புக்கும் உகந்த மனைவியாய் பானுமதியே எந்நாளும் இருக்கலாம்.  அதில் தான் அவள் சந்தோஷமே இருக்கிறது.  அத்தோடு மட்டுமா?  ஹஸ்தினாபுரத்தின் வருங்கால மஹாராணியும் பானுமதி தான்.  பானுமதியின் மனம் மகிழ்ச்சியில் துள்ளியது.

அவளால் மகிழ்ச்சியை அடக்க முடியவில்லை.  அவள் நடந்து செல்கையிலேயே நாட்டியம் ஆடிக்கொண்டே செல்கிறாளோ என்னும்படியாக ஆனந்தக் குதியாட்டத்தோடு சென்றாள்.  தன் அந்தப்புரத்துக்கு வந்த அவள் செல்லமாக வளர்க்கும் கிளியிடம் தன் மனதைப் பகிர்ந்து கொண்டாள்.  அது எப்போதுமே, இந்த ஒரே வார்த்தையைத் தான் சொல்லும்.  “பானுமதி, அனைத்துமே நல்லதுக்குத் தான்.”  துரியோதனன் ஷகுனியின் மாளிகைக்குச் சூதாட்டம் ஆடச் சென்றிருந்தான்.  இரவு நேரம் கழித்தே வருவான்.  அது தான் அவன் வழக்கமும் கூட.  அப்போது அவள் மெதுவாகத் தான் புஷ்கரம் செல்ல இருப்பதைக் குறித்து அவனுக்குக் கூறுவாள்.  வழக்கம் போல் அவள் தன் கணவன் வரும்வரை கண் விழித்திருந்தாள்.  அவன் வர எத்தனை தாமதம் ஆனாலும் தூங்காமல் காத்திருப்பதே பானுமதிக்கு வழக்கம்.   மது மயக்கத்தில் தடுமாறிக் கொண்டு வந்த துரியோதனின் கிரீடத்தை வாங்க அவள் கையை நீட்டினாள்.  அவனோ அவளைக் க்ரோதமாகப் பார்த்துவிட்டுப் பல்லைக் கடித்தான்.  பின்னர் மிகவும் முயற்சி எடுத்துத் தன்னை நிலைப்படுத்திக் கொண்டான் துரியோதனன்.

பின்னர் வழக்கமான கொஞ்சலோ, அன்பான அணைப்போ, காதலுடன் கூடிய பார்வையோ இல்லாமல், மிக வலிமையாகக் கொஞ்சம் வலிக்கும்படியாகவே அவள் கைகளைப் பிடித்தான். அவளைத் தன் பக்கம் வேகமாக இழுத்தான். “ கேடுகெட்ட பெண்ணே!  அடி, நீ இன்று ஆசாரியதேவரைப் பார்க்கச் சென்றிருந்தாயா?”   அவன் கண்கள் மிகவும் பயங்கரமாக அவளைப் பார்த்து விழித்தன.   பானுமதிக்குத் தூக்கிவாரிப்போட்டது.  அவள் சந்தோஷமெல்லாம் வடிந்து போனது. தன் கணவனின் இந்த மோசமான, பயங்கரமான நடவடிக்கையை அவள் எதிர்பார்க்கவே இல்லை.  ஆகவே உள்ளூர பயம் இருந்தாலும் வெளிக்காட்டிக் கொள்ளாமல் அவனை அமைதிப் படுத்த விரும்பினாள்.  அப்படியே முயற்சியும் செய்தாள்.  அவனைப் பார்த்துக் காதலுடன் சிரித்து, “ஆமாம், அதற்கென்ன!  நான் தான் அநேகமாய் தினம் தினம் அவரைப் பார்க்கச் செல்கிறேனே!”  என்றாள்.  இந்த பதிலால் திருப்தி அடையவில்லை துரியோதனன்.  எரிச்சல் அடைந்தான்.   அவள் மெல்லிய தோள்களை வலுவாகப் பிடித்து அவளை உலுக்கினான்.  பானுமதிக்கு மிகவும் வலித்தது.  என்றாலும் வாய் திறக்கவே இல்லை.  “பொய் சொல்லாதே!” என்று கத்தியவன், “ நீ என்னைக் குறித்து வேவு பார்க்கவே அங்கே சென்றிருக்கிறாய்!  நான் சுயம்வரத்துக்குச் செல்வதை ஆசாரியர் எதிர்க்க வேண்டும்;  அவர் மூலம் எதிர்ப்பு வந்தால் நான் செல்ல மாட்டேன் என்ற எண்ணம் உனக்கு.  ஆகவே அவரை எனக்கு எதிராகத் தூண்டிவிடவே சென்றாய்.   உன்னை நான் நன்கறிவேன்.  உன் சிந்தனைகள் செல்லும் திசை எனக்குப் புரிகிறது!” என்றான்.

இதைச் சொல்லிக் கொண்டே அவன் பானுமதியை உலுக்கிய உலுக்கலில் அவள் நிலை குலைந்து கீழே விழுந்தாள்.  அவன் சொன்ன வார்த்தைகளைக் கேட்டதும் அவள் முகம் பயத்தில் வெளிறியது. 

“பேசுடி, பேசு! சூழ்ச்சிக்காரி!   ஆசாரியரிடம் ஏன் சென்றாய்? அங்கே உனக்கு என்ன வேலை?  ஹூம், நான் சொல்லவா?  மாமா ஷகுனி என்னிடம் சொல்கிறார் இதைக் குறித்து.  அவமானம்! ஆசாரியர் உன்னைப் புஷ்கரத்துக்கு அழைத்துச் செல்லப் போகிறாராமே!” தன் பலம் கொண்ட மட்டும் கத்தினான் துரியோதனன்.  மாமா ஷகுனிக்கு எல்லா இடத்திலும் ஹஸ்தினாபுரத்தின் அனைத்து மாளிகைகளிலும் ஒற்றர்கள் இருப்பதை அவள் நன்கறிவாள்.  ஆனாலும் மெல்ல, மெதுவாகக் கூறினாள்: “ மாட்சிமை பொருந்திய மஹாராணி சத்யவதி அம்மை  ஆசாரியரோடு புஷ்கரம் செல்ல என்னை அனுமதித்திருக்கிறார்.” என்றாள்.

“ஆஹா, மாட்சிமை பொருந்திய மஹாராணி!  யார் அந்தக் கிழவியா?”  பற்களைக் கடித்தான் துரியோதனன்.  அவன் க்ரோதம் அதிகம் ஆயிற்று. “ ஓஹோ, அவ்வளவு தூரத்துக்குப் போயாகிவிட்டாயா?  அந்தக் கிழவியிடம் சென்று அநுமதி வாங்கி இருக்கிறாயா?  அவளிடமும் நீ சென்றிருக்கிறாய்!  ஆனால் உனக்கு என்னிடம் அநுமதி வாங்க வேண்டும் என்று தோன்றவே இல்லை! என்னிடம் இதைக் குறித்து நீ பேசக் கூட இல்லை.  எனக்குத் தெரியும்.  அந்தக் கிருஷ்ணனை நீ சந்திக்க வேண்டும் என்றே செல்கிறாய், அல்லவா?”

பானுமதியின் நாடி, நரம்பெல்லாம் தளர்ந்து உடைந்து போய்விட்டாள்.  எழுந்து நின்றவள் நிற்க முடியாமல் மீண்டும் கீழே அமர்ந்து வாய் விட்டு அழுத வண்ணம் புலம்பினாள்:  “ஆர்ய புத்ர, நீங்கள் தான் வாசுதேவ கிருஷ்ணனை நண்பனாக்கிக் கொள் என என்னிடம் கூறினீர்கள்.  அதோடு மட்டுமின்றி அவன் என்னைத் தன் ஸ்வீகாரத் தங்கையாக ஸ்வீகரித்திருப்பதை வரவேற்கவும் செய்தீர்கள்.  அப்போது மிகவும் மகிழ்ச்சியும் அடைந்தீர்கள்.”

“ஹூம், தங்கையாம், தங்கை! “ தன்னிரு கரங்களையும் இடுப்பில் வைத்த வண்ணம் தன் பயங்கரம் சிறிதும் குறையாமல் அவள் எதிரே நின்ற துரியோதனன் மீண்டும் கத்த ஆரம்பித்தான்.  “இந்தச் சின்னத் தங்கைக்கு அவள் பெரிய அண்ணனைப் பார்க்கவேண்டும் என்ற ஆசை இப்போது ஏன் வந்ததாம்?” இகழ்ச்சியுடன் கேட்டான் துரியோதனன்.  விம்மி விம்மி அழுது கொண்டிருந்த பானுமதி பேச முடியாமல் தன்னை ஒருவாறு சமாளித்துக் கொண்டு மிகவும் கஷ்டத்துடன், “நான் அவனைச் சென்று பார்ப்பதிலோ, என் நமஸ்காரங்களைத் தெரிவித்துக் கொள்வதிலே என்ன தவறு இருக்கிறது?” என்று கேட்டாள்.
Tuesday, November 12, 2013

துரோணரின் திட்டமும், பானுமதியின் தயக்கமும்!

பரிபூரணத் திருப்தியுடன் துரோணர் யுத்தசாலைக்குத் திரும்பினார்.  தன்னைக் குறித்தும் தன் செயல்கள் குறித்தும் அவருக்கு மன நிறைவு ஏற்பட்டிருந்தது.  குரு வம்சத்தினருக்கு மிகவும் இக்கட்டான ஒரு சூழ்நிலையில், குழப்பமான பின்னணியில் துரோணர் ஒரு மகத்தான அதிலும் இன்றியமையாத ஒரு பாதுகாவலராகத் தன்னை வெளிப்படுத்திக் கொண்டு விட்டார். புஷ்கரம் செல்ல வேண்டும் என அவர் எடுத்து இருந்த முடிவு சரியானதே!  எல்லாம் வேகமாக மாறி வருகிறது.  பரதனின் குலத் தோன்றல்களான இந்தக் குரு வம்சத்தினரின் மாட்சிமைக்கும் பெருமைக்கும் துரியோதனனால் எந்த கெளரவத்தையும் கொண்டு வர இயலாது.  அவ்வளவு ஏன்?  ஏற்கெனவே இருந்துவரும் சிறிதளவு கெளரவத்தையும் பாதுகாக்கக் கூட அவனால் இயலாது.  கிருஷ்ண வாசுதேவன் என்ற புதியதொரு நக்ஷத்திரம் சூரியனை விட அதிகமாகப் பிரகாசித்த வண்ணம் அடி வானிலிருந்து எழும்புவதைக் காண அவன் கண்களால் இயலவில்லை. ஒரு சாதாரண மன்னனாகக் கூட இல்லாத, சாதாரண மனிதன் ஆன அந்தக் கிருஷ்ண வாசுதேவனின் சக்தி சக்கரவர்த்திகளின் அதிகாரங்களை விடவும் பலம் பொருந்தி விளங்குவதையும் அவன் அறியவில்லை.  துரோணர் அவனைத் தன் நண்பனாக்கிக் கொண்டதற்குப் பெருமிதம் கொண்டதோடு தனக்குத் தானே சிரித்தும் கொண்டார்.

யுத்தசாலைக்கு வந்தவருக்கு அங்கே கண்ணீர் மல்கிய கண்களோடும், கலங்கிய முகத்தோடும், அழுது அழுது வீங்கிய முகத்தோடும் சற்றும் பொறுமையின்றி அவருக்காகக் காத்திருந்த துரியோதனனின் மனைவி பானுமதி தான் கண்ணில் பட்டாள்.  அவளின் இளமையும், அழகும் அவளுடைய இந்த அதீதமான துக்கத்தினால் மேகம் மறைத்தது போல் மறைந்தே காணப்பட்டது.  ஒளி  குன்றிக் காணப்பட்டாள்.  துரோணரைக் கண்டதுமே அவர் காலடிகளில் வீழ்ந்தாள் பானுமதி.  “என்ன நடந்தது ஆசாரியரே?  என் விதி முடிவடைந்து விட்டதா?” என பரிதாபமாகக் கேட்டாள்.  துரோணரின் மனைவி, கிருபாதேவி, சற்றே பருமனாகக் காணப்பட்டாள்.  ஒரு தாயின் வாத்ஸல்யத்துடன், பானுமதியின் அருகே அமர்ந்து அவளை அணைத்து ஆறுதல் கொடுத்தாள்.  அவள் உச்சந்தலை மேல் ஆசீர்வதிக்கும் பாவனையில் கைகளை வைத்த துரோணர், “என் ஆசிகள் குழந்தாய்.  உனக்கு எதுவும் நேராது.  கவலை வேண்டாம்.”  என்றார்.

“ஆசாரியரே, எனில் ஆர்யபுத்திரர் சுயம்வரத்துக்குச் செல்லும் தம் முடிவை மாற்றிக் கொண்டு விட்டாரா?” பானுமதி கேட்டாள்.  அவள் உதடுகள் துடித்தன.  “இல்லை, அம்மா, இல்லை.  துரியோதனன் சுயம்வரத்துக்குச் செல்லப் போகிறான்.  ஆனால் நீ கவலைப் படாதே.  அவனால் திரெளபதியை ஜெயித்து மணம் முடிக்க இயலாது.  விசித்திரமாக, இன்னும் சொல்லப் போனால் ஆச்சரியவசமாக, கிருஷ்ண வாசுதேவன் நம் உதவிக்கு வந்து விட்டான்.”  “வாசுதேவ கிருஷ்ணனா?  இப்போது இங்கேயா இருக்கிறான்?” பானுமதி ஆச்சரியத்துடன் கேட்டாள்.  அவள் முகம் மகிழ்ச்சியில் ஒளிர்ந்தது.  “நான் அவனைப் பார்க்க வேண்டும்;  உடனே!”  என்றாள்.  “இல்லை,குழந்தாய்.  நீ தவறாகப் புரிந்து கொண்டு விட்டாய்.  அவன் இங்கில்லை.  ஆனால் அவன் நமக்கு ஒரு நல்ல செய்தியை அனுப்பி உள்ளான். அது எல்லாவற்றையும் மாற்றிவிட்டது. உனக்குத் தெரியுமா? உன் கணவனுக்கும், புஷ்கரத்தின் காவலன் செகிதனாவுக்கும் இடையில் நடந்த போர்? உன் கணவன் அவனை எவ்விதம் விரட்டினான் என்பதை நீ அறிவாயா?  வாசுதேவன் புஷ்கரம் திரும்ப யாதவ அரசன் செகிதானாவுக்கே கொடுக்கப்பட வேண்டும் என்று செய்தி அனுப்பி உள்ளான்.” என்றார்.

“ஆஹா, ஆர்யபுத்திரர் இதற்கு ஒரு நாளும் சம்மதிக்க மாட்டார்  நான் அவரை நன்கறிவேன்.” என்றாள் பானுமதி.

“ஆனால் உனக்கு என்னைத் தெரியாது பானுமதி. “ சிரித்த வண்ணம் கூறிய துரோணர், “செகிதனாவிடம் புஷ்கரத்தை ஒப்படைக்க வேண்டும் என்பது முடிவு செய்யப்பட்டு விட்டது.  நானே நேரில் சென்று அதைச் செய்யப் போகிறேன்.  அப்போது  கிருஷ்ண வாசுதேவனும், பலராமனும் சுயம்வரம் செல்லும் வழியில் அங்கே வரப்போகிறார்களாம்.  நான் அவர்களையும் வரவேற்கப் போகிறேன்."  அவர் முகம் ஏதோ திடீரென நினைவு வந்தது போல் ஒரு கணம் யோசனையில் ஆழ்ந்தது.  புருவங்களைச் சுளித்த வண்ணம் திரும்பி பானுமதியைப் பார்த்தவர் சிரித்த வண்ணம், “ பானுமதி, சில நாட்களுக்கு முன்னர் நீ என்னிடம் கிருஷ்ண வாசுதேவன் இங்கே வந்திருக்கையில் உன்னைத் தன் சகோதரியாக ஏற்றுக் கொண்டதாகக் கூறினாய்!”  என்றார்.

“ஆமாம், ஆசாரியரே!” பானுமதியின் நினைவுகள் பின்னோக்கிப் பாய்ந்தன.  அந்தக் கொடிய இரவு, கெளரி அம்மன் கோயிலில் நடந்த வழிபாட்டின் போது நிகழ்ந்த நிகழ்வுகள் அனைத்தும் ஒரு நொடியில் அவள் மனதில் தோன்றி மறைந்தன.  அதனால் ஏற்பட்ட மனவெழுச்சியினால் அவள் முகம் வெட்கத்தாலும், தன்னையே குறித்த கோபத்தாலும் சிவந்தது.   சமாளித்த வண்ணம் ஆசாரியரைப் பார்த்து அவள், “ கிருஷ்ண வாசுதேவனின் கருணை எல்லையற்றது.  அன்று மட்டும் அவன் இங்கே வந்திராவிட்டால் நான் கங்கையில் மூழ்கி உயிரை விட்டிருப்பேன். " என்றாள்.

“நல்லது பானுமதி.  அப்படி என்றால் அவனைச் சந்திக்க நீயும் என்னுடன் புஷ்கரத்துக்கு வருகிறாயா?” என்று துரோணர் கேட்டார்.

“ஆஹா, ஆசாரியரே, கிருஷ்ண வாசுதேவனைச் சந்திக்கவா?  அதுவும் நானா?  ஒரு நாளும் நடவாது ஐயா.  ஆர்யபுத்திரர் என்னை அங்கே அனுப்பச் சம்மதிக்கவே மாட்டார்.  அதோடு கிருஷ்ண  வாசுதேவனின் செயல்கள் அவரை மகிழ்ச்சி அடையச் செய்யவில்லை.  கிருஷ்ண வாசுதேவனை அவருக்குப் பிடிக்கவில்லை.”  என்றாள் பானுமதி.  “பானுமதி, உனக்கு துரியோதனன் திரெளபதியை ஜெயித்து மணமுடித்து வர மாட்டான் என்பதை உறுதி செய்து கொள்ளும் ஆசை இல்லையா?” என்று துரோணர் மீண்டும் கேட்டார்.  “ஆசாரியரே, அதைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்றே நான் விரும்புகிறேன்.”  என்றாள் பானுமதி.

“பானுமதி, ஒரு வேளை நீ கிருஷ்ண வாசுதேவனிடமிருந்து ஒரு வாக்குறுதியை வாங்க முடிந்தால்…….அவன் உனக்குக் கட்டாயம் உதவுவான்.”

“எப்படி ஆசாரியரே, எப்படி? அவனால் ஒரு போதும் ஆர்யபுத்திரரை சுயம்வரத்துக்குச் செல்வதிலிருந்தோ, திரெளபதியை வென்று மணமுடிப்பதிலிருந்தோ தடுக்க முடியாதே!” என்றாள் பானுமதி.

“எனக்குத் தெரியாது!” என்று யோசனையுடன் கூறிய துரோணரின் கண்கள் அவர் ஆழ்ந்த சிந்தனையில் இருப்பதைக் காட்டின.  மேலும் தொடர்ந்த அவர், “ வாசுதேவக் கிருஷ்ணனைக் குறித்த கதைகள், அவன் சாகசக் கதைகள், அதிசயங்களை நிகழ்த்துவதாய்க் கூறும் கதைகள், நாம் அடிக்கடி பலர் வாயிலாகவும் கேட்டு வருகிறோம் அல்லவா?  அவை அனைத்தும் உண்மையாக ஏன் இருக்கக் கூடாது?  உண்மையாகவே இருக்கலாம். அதிலும் இந்தப் புஷ்கரம் சம்பந்தப் பட்ட விஷயத்தில் அவன் தலையீடு மிகவும் ஆச்சரியகரமாகவே இருந்தது.   அந்த எண்ணத்தை என்னால் உதற முடியவில்லை. " ஆசாரியர் தம் மனதுக்குள்ளாக இந்தத் தலையீட்டினால் தனக்கு ஏற்பட்டிருக்கும் சுயலாபத்தைக் குறித்து மகிழ்ந்ததோடு அதை பானுமதியிடம் பகிர்வதையும் தவிர்த்தார்.  பானுமதியைப் பார்த்து, “என்ன செய்ய வேண்டும் என நான் உனக்குச் சொல்லிக் கொடுக்கிறேன்.  கேள்!” என்றார்.

“மாட்சிமை பொருந்திய மஹாராணி அம்மா சத்யவதியிடம் செல்.  அவளிடம், வாசுதேவ கிருஷ்ணன் உன்னைத் தன் சிறிய தங்கையாக ஏற்றுக் கொண்டிருப்பதைச் சொல்.  அந்த நிகழ்வையும் வர்ணித்துச் சொல்.  ஒரு அன்பான சகோதரி, எப்படி தன் அருமை அண்ணனை வரவேற்கச் செல்வாளோ அவ்வாறே நீயும், வாசுதேவக் கிருஷ்ணனை வரவேற்கவே புஷ்கரம் போக விரும்புவதாய்க் கூறு.  ஒரு வேளை அவள் உனக்குப் புஷ்கரம் செல்ல அநுமதி கொடுக்கலாம்.  தேவை எனில் விதுரனின் உதவியையும் கேள்.  அவனுக்கு மாட்சிமை பொருந்திய ராணி அம்மாவிடம் மிகவும் செல்வாக்கு உண்டு.  அனுமதி கிட்டிப் புஷ்கரமும் சென்று விட்டாயானால் பின்னர் உன் முக்கியமான வேலை வாசுதேவ கிருஷ்ணனிடம் வாக்குறுதி வாங்குவதே!   அவன் தன் எல்லா முயற்சிகளையும் எடுத்து திரெளபதி துரியோதனனைத் தேர்ந்தெடுப்பதிலிருந்து தடுக்க வேண்டும் என்று வாக்குறுதி கேள்.  அவனால் இயன்ற அனைத்தையும் அவன் சக்தி அனைத்தையும் பிரயோகித்து இதைச் செய்யச் சொல்லி அவனிடம் உறுதிமொழி வாங்கு!”  என்றார்.


Sunday, November 10, 2013

உத்தவன் வந்தான்!

விதுரர் தான் கொண்டு வந்த செய்தி முழுவதையும் சொல்லி முடித்ததும், அவருக்கு உத்தரவு கொடுக்கும் பாவனையில்  பீஷ்மர் தலையை அசைத்தார். உடனேயே விதுரர் தன் கைகளைக் கூப்பிய வண்ணம் மன்னன் திருதராஷ்டிரன் பக்கம் திரும்பினார்.  “மாட்சிமை பொருந்திய மன்னா!  ஷூரர்களின் தலைவன் ஆன தேவபாகனின் மகனும், கிருஷ்ண வாசுதேவனின் அத்யந்த, அந்தரங்க நண்பனுமான உத்தவன், ஒரு முக்கியமான செய்தியைக் கொண்டு வந்துள்ளான்.   மாட்சிமை பொருந்திய மன்னர் அதைக் கேட்டு என்ன முடிவெடுக்கலாம் என்பதையும் அந்தச் செய்தி தீர்மானிக்கலாம்.  உத்தவன் வெளியே காத்திருக்கிறான்.  மன்னர் உத்தரவு கொடுத்தால் அவனை உள்ளே அழைத்து வரலாம்.  உத்தவனை அழைத்து வரலாமா?”

அனைவருக்கும் என்ன சொல்வது என்பதே புரியவில்லை. ஒரு க்ஷணம் அனைவரும் திகைத்துத் திக்குமுக்காடிப் போயினர்.  விதுரரை ஆச்சரியத்துடன் பார்த்தனர்.  துரோணரோ இந்தப் புதிய செய்தியால் ஏற்கெனவே நடைபெற்றுக் கொண்டிருக்கும் விவாதத்தின் முன்னேற்றம் என்னவாக இருக்கும் என்ற யோசனையில் அனைவரின் முகத்தையும் மாறி மாறிக் கவனித்துக் கொண்டிருந்தார்.  விதுரரோ, அவரின் வழக்கமான பற்றற்ற தன்மையை விடுத்து அளவிட முடியாத உணர்ச்சிப் பிரவாகத்தில் மூழ்கிய வண்ணம் அனைத்தையும் செய்வது தெள்ளத் தெளிவாகப் புரிந்தது.  அப்போது திருதராஷ்டிரன், “ தேவபாகனின் மகன் உத்தவன், எந்த அரசனின் தூதுக்குழுச் செய்தியைத் தாங்கி இங்கே வந்துள்ளான் என்பதை நான் அறியலாமா?” என்று கேட்டான்.  தனக்கும், இதற்கும் சம்பந்தமில்லாதவர் போல பீஷ்மர் தன் கைகளால் தன் தாடியைத் தடவிய வண்ணம் அமர்ந்திருந்தார்.

“உத்தவன் இன்று காலை திடீரென வந்தான்;  வந்தவன் என்னுடன் தங்க வேண்டும் என நகருக்கு வெளியிலிருந்து எனக்குச் செய்தி அனுப்பினான்;” என்ற விதுரர் தொடர்ந்து, “ நான் உடனடியாகக் கிளம்பிச் சென்று உரிய மரியாதைகளோடு அவனை நகருக்குள் அழைத்து வந்தேன்.  அவன் யாதவர் குலத்திலேயே சிறந்தவனும், மஹாரதனும், மஹாவீரனுமான கிருஷ்ண வாசுதேவனிடமிருந்து ஒரு முக்கியச் செய்தியைக் கொண்டு வந்திருப்பதாகக் கூறினான். “

“ஹூம், கிருஷ்ண வாசுதேவன்!” ஏளனமான தொனியில் கூறிய துரியோதனன், தன் நண்பர்களைப் பார்க்க, கர்ணன் முகத்தைச் சுளித்துக் கொண்டான்.  அஸ்வத்தாமாவோ கோபத்தோடு விதுரரைக் கொன்றே விடுவான் போலப் பார்த்துக் கொண்டிருந்தான்.  விதுரர் இவை எதையும் கவனிக்காதவர் போல மேலே தொடர்ந்தார்.  “ஆனால் பீஷ்மரைச் சந்தித்துச் செய்தியைத் தெரிவிக்கும் முன்னர்,  நம் மதிப்புக்கும், மரியாதைக்கும் உரிய மஹாராணி சத்யவதியை தரிசிக்க வேண்டும் என உத்தவன் கூறினான்.  ஆகவே நான் முதலில் அவனை மஹாராணி சத்யவதியிடம் அழைத்துச் சென்றேன்.  அங்கே ராணி அம்மாவுடன் ஆன  சந்திப்பை முடித்த பின்னர், இங்கே ராஜ சபைக்கு உங்கள் அனைவரையும் சந்திக்க வேண்டி அழைத்து வந்தேன்.  உத்தவனை உள்ளே அழைத்துவர நான் ஏற்கெனவே தாத்தா பீஷ்மரின் அநுமதியைப் பெற்று விட்டேன். “

“கிருஷ்ண வாசுதேவன்!” மீண்டும் துரியோதனன் குறுக்கிட்டான்.  “நாம் ஏற்கெனவே முக்கியமான விஷயம் குறித்துக் கலந்து விவாதித்து வருகிறோம்.  அதிலேயே இன்னமும் நம்மால் ஒரு முடிவுக்கும் வர முடியவில்லை.  இப்போது நாம் ஏன் நம் விஷயத்தில் கிருஷ்ண வாசுதேவன் குறுக்கிட்டுத் தொல்லைகளை அநுமதிப்பதை ஏன் பொறுத்துக் கொள்ள வேண்டும்?  நம்முடைய முக்கியமான விவாதத்தில் இன்னமும் சிக்கல்களையே அது ஏற்படுத்தும்.  அவன் ஏன் இதில் தலையிடுகிறான்?  இந்த உத்தவனுக்குக் கொஞ்சம் பொறுத்திருக்க முடியாதா?”  என்றான்.  பீஷ்மரின் தீர்மானமான குரல் துரியோதனனின் பேச்சில் குறுக்கிட்டது.  “குரு வம்சத்தினரின் ராஜசபைக்கு, யாதவ குலத் தோன்றலும், வீரனும் ஆன கிருஷ்ண வாசுதேவனின் எந்தச் செய்தியானாலும் வரவேற்கப் படுகிறது.   விதுரா, தேவபாகனின் மகன் உத்தவனை சபைக்குள் வர அநுமதி கொடு.  அவனை அழைத்து வா.  நாம் அவனைச் சந்திக்க ஆவலோடும், மகிழ்வோடும் காத்திருக்கிறோம்.”  என்றார்.

துரோணாசாரியாரின் தலை மட்டும் அல்ல, மனமும் சுழன்றது.  அவர் தன்னுடைய கடைசி எச்சரிக்கையைக் கொடுக்க நினைத்திருந்தது, விதுரரின் வரவால் தடைப்பட்டு விட்டது.  உத்தவன் வருவதற்கு முன்னால் அதைச் சொல்லிவிடலாம் தான்;  சாதாரண சமயமாக இருந்திருந்தால் அவ்விதம் சொல்லியும் இருப்பார்.  ஆனால்,  ஆனால்……..அவன் கிருஷ்ண வாசுதேவனின் பெயரை அன்றோ கூறியுள்ளான்.  அவர் மனதில்  இந்தச் செய்தி ஏற்படுத்திய தாக்கத்தை என்னவென்று சொல்வது!  குறுகுறுத்தது அவருக்கு.  அனைவரும் அதிசயிக்கத் தக்க விதத்தில் வாசுதேவன் இதில் தலையிடப் போகிறானா?  என்ன நடக்கப் போகிறது?  துரோணர் காத்திருந்தார்.


Friday, November 8, 2013

சுயம்வரத்திற்கு அழைப்பு வந்தது!

இதற்கு முந்தைய பதிவில் அரசகுமாரர்களைக் குறித்த ஷகுனியில் கிண்டல் மொழிகளைப் பார்த்தோம்.  ஆனால் துரியோதனன் அவற்றைச் சிறிதும் கவனித்துக் கொண்டதாகத் தெரியவில்லை.  அவன் தன் கருத்திலேயே குறியாகப் பாட்டனார் பீஷ்மரைப் பார்த்து, “பாட்டனாரே, நாங்கள் அந்த சுயம்வரத்துக்குச் செல்கிறோம்;  தடுக்காதீர்கள்.   கட்டாயமாகப் போயாக வேண்டும்.  நானோ அல்லது எங்களில் ஒருவரோ நிச்சயமாக திரெளபதியை அடைவோம்.  அதற்கான போட்டி இருந்தால் அதிலும் வெல்வோம்.  எங்களை மிஞ்சிய வீரன் எவனும்  இந்த ஆர்ய வர்த்தத்தில் உண்டோ?” பீஷ்மரின் நீண்ட மெளனத்தாலும், அவரின் பொறுமையாலும் பொறுமையிழந்து போன குரலில் இவற்றைக் கூறிய துரியோதனன், உடனே மந்திரி குனிகரைப் பார்த்து, “ எங்கள் வலிமையாலும், ஆயுத பலத்தாலும் திரெளபதியை வென்று அவளை எங்களில் ஒருவனுக்கு மாலை சூட வைப்பதைத் தவிர வேறேன்ன அவமானம் துருபதனுக்கு இருக்க முடியும்?”  என்றும் கேட்டான்.  மர்மமான முறையில் என்னவென்று எவருக்கும் புலப்படா வண்ணம் ஒரு புன்னகை பீஷ்மரின் கடுமையான முகத்தில் நிலவுவதை துரோணர் கண்டு ஆச்சரியமடைந்தார்.  இந்தக் கிழவன் சாமானியமானவன் அல்ல;  ஏதோ விஷயம் உள்ளது. அந்த தைரியம் இவனுக்கு இருக்கிறது.  என்று துரோணர் தமக்குள் நினைத்துக் கொண்டார்.

அப்போது திருதராஷ்டிரனோ தன் குருட்டுக்கண்களைத் தன் மகன் துரியோதனன் பக்கம் திருப்பி, “ஒருவேளை அந்த இளவரசி உங்களில் எவரையும் தேர்ந்தெடுக்காவிட்டால்?? நம் குரு வம்சத்திற்கன்றோ அது அவமானத்தைத் தேடித் தரும்!” என்று தன் சந்தேகத்தை எழுப்பினான்.  அப்போது ஷகுனி கடகடவெனச் சிரித்தான்.  தன் உடலை உருட்டிப் புரட்டித் திரும்பி திருதராஷ்டிரனைப் பார்த்துக் கேலி ததும்பும் குரலில், “ மாட்சிமை பொருந்திய மன்னா!  பழங்காலத்திலிருந்து நடைபெற்று வரும் ஒரு பாரம்பரியமான நடைமுறை.  மிகவும் புனிதமானதென்றும் கருதப்படுகிறது.  அதில் வென்றால் மகிழ்ச்சி அளிக்கும்.  தோல்வி அடைந்தால் அதன் மூலம் அவமானம் எவ்வாறு நேரும்?  இதிலே எவ்விதமான மதிப்புக் குறைவும் இல்லை;  ஏனெனில் ஒரு இளவரசி ஒரு இளவரசனைத் தான் மணக்க முடியும்…..” என்று கூறிய வண்ணம் மேலும் சிரிக்க ஆரம்பித்தான்.  அப்போது பீஷ்மர் தன் கடுமையான பார்வையை ஷகுனியின் பால் திருப்பிய வண்ணம் தன் அழுத்தமான தொனியில் பேச ஆரம்பித்தார்.  துரோணரைப் பார்த்து, “ஆசாரியரே, இவ்விஷயத்தில் உங்கள் கருத்து என்ன?” என்று கேட்டார்.

பீஷ்மருக்கு எதிரே தன்னிரு கரங்களையும் கூப்பிய வண்ணம் துரோணர் தன் கம்பீரமான அதே சமயம் தன் பவித்திரமும் தெரியும்படியான குரலில் பேச ஆரம்பித்தார்.  “மதிப்புக்கும், மரியாதைக்கும் உரிய பாட்டனாரே!  மாட்சிமை பொருந்திய மன்னா!  துரியோதனனின் நடவடிக்கைகளால் எனக்கு மனவலி ஏற்பட்டு மன வருத்தம் அடைந்துள்ளேன்.  துருபதனின் சபைக்குச் சென்று அவன் மகளின் சுயம்வரத்தில் கலந்து கொண்டு அவள் மணமாலையை அடைய முயற்சிப்பது குரு வம்சத்தினரின் பாரம்பரியத்திற்கும், புகழுக்கும், வீரத்துக்கும் ஏற்றதல்ல.  அவமானத்துக்குரியதாகும்.  நான் எதிர்பார்ப்பது என்னவெனில், ஒரேயடியாக ஒரே போரில் துருபதனையும் அவன் நாட்டையும் அடியோடு அழித்துவிட்டு, அவனுடைய அதிகாரங்களைப் பிடுங்கிக் கொண்டு அந்த வெற்றிச் சின்னமாகவும், அவனை இனிமேல் சமாதானமாக இருக்கும்படி அறிவுறுத்தும்படியாகவும் அவன் பெண்ணைத் தூக்கி வரவேண்டும்.  இதைத் தான் நான் எதிர்பார்க்கிறேன். என் மாணாக்கர்களுக்கு வீரத்துடன் சேர்ந்த இந்த உன்னதமான பெருமையை அடையும் வழியை நான் கற்றுக் கொடுக்கவில்லையே என வருந்துகிறேன்.  இதில் நான் தோல்வி அடைந்திருக்கிறேன்.”  என்றார்.

அப்போது கர்ணன், “எங்கள் பலத்தையும், வீரத்தையும் நீங்கள் சந்தேகிக்கிறீர்களா ஆசாரியரே?” என்று கேட்டான்.  அவர்களின் வீரம் மற்றவரால் சந்தேகிக்கப்படுவதை ஒரு நொடி கூடக் கர்ணனால் பொறுக்க இயலாது.  சற்றும் தேவையில்லாப் பொருத்தமற்ற வழிகளில் இந்த உரையாடல்கள் செல்வதைப் பொறுக்காத பீஷ்மர் தன்  ஒரு கை அசைவால் அதை நிறுத்தினார். “ஆசாரியரே, அப்போது நீங்கள் சுயம்வரத்துக்கு இளவரசர்கள் செல்வதை விரும்பவில்லை என எடுத்துக்கொள்ளலாமா?” என்றும் கேட்டார்.  “மாட்சிமை பொருந்திய பாட்டனாரே, இளவரசர்கள் சுயம்வரத்துக்குச் செல்வதை ஒத்துக் கொள்வது என்னளவில் கஷ்டமான ஒன்று.  என்னால் அதை ஒத்துக்கொள்ள இயலவில்லை.  தாங்கள் என்ன செய்ய நினைக்கிறீர்கள் என்பது எனக்குப் புரியவில்லை.  ஆனால் ஒன்று மட்டும் எனக்கு நிச்சயமாகத் தெரியும்: துரியோதனனோ, கர்ணனோ அல்லது என் மகன் அஸ்வத்தாமாவோ யாராக இருந்தாலும் காம்பில்யத்திற்குச் சென்றார்களானால் குரு வம்சத்தினருக்குப் புகழைக் கொண்டு வரப்போவதில்லை.  வலிமையையும் கொண்டு வரப்போவதில்லை.   அனைத்தையும் மீறி அவர்கள் சென்று எவரேனும் திரெளபதியை வென்று மணமகளாக அழைத்து வந்தால்…. குரு வம்சம் துண்டு துண்டாகப் பின்னப்பட்டுச் சிதறிப் போகும்.  யாருமே அவளை வெல்ல முடியவில்லை என்றாலும் கஷ்டம் தான்!  அப்போது நம் வம்சத்திற்கே களங்கம் ஏற்படும்.  நம் கெளரவமெல்லாம் தூள் தூளாக நொறுங்கி விடும்.  எவ்வழியில் போனாலும் நம்முடைய அனைத்து பலமும் சிதைந்து உருத்தெரியாமல் போகும் அபாயம் இருக்கிறது.  என்னளவில் நான் இதைத் தெளிவாக்க விரும்புகிறேன். நான்……….”

துரோணர் தன் வார்த்தைகளை முடிக்கும் முன்னர், துரியோதனன் சுயம்வரத்திற்குச் செல்ல நேர்ந்தால் என்ன நடக்கும் என்பதை விவரிக்கும் முன்னர், அங்கே திடீரென விதுரர் வந்தார்.  நேரே பிதாமகர் பீஷ்மர் அருகே சென்று தலை வணங்கி நமஸ்கரித்துவிட்டு அவர் காதுகளில் ஏதோ கூறினார்.  அனைவரும் மெளனமாகப் பார்த்துக் கொண்டிருந்தனர்.  ஆனால் அனைவர் மனதிலும் விதுரர் கூறுவது ஏதோ முக்கியமான விஷயம் என்பது தோன்றியது.  ஒரு முக்கியமான, தீவிரமான விஷயத்தைக் குறித்த அனைவரின் கருத்துக்களையும் கேட்டுக் கொண்டு அதன் மீது முடிவெடுக்க வேண்டிய கட்டாயத்தின் பேரில் கூடிய இந்த சபையில் நுழைந்து விதுரர் , பீஷ்மரிடம் ரகசியமாக ஏதோ கூறுவதென்றால் அது எத்தனை முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாயிருக்கும்!  துரோணர் பீஷ்மரின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தார்.  விதுரரின் வார்த்தைகளைக் கேட்ட அந்தக் கணம் பீஷ்மரின் கண்கள் ஒரு கணம் பளிச்சிட்டன.  விஷயம் ஏதோமுக்கியத்துவம் வாய்ந்தது என்பதற்கான அறிகுறிகள் அவர் கண்களிலும் முகத்திலும் தோன்றி மறைந்தது.  பேசி முடிந்ததும் பீஷ்மரின் முகத்தில் ஒரு விசித்திரமான புன்னகை காணப்பட்டது.