Wednesday, November 13, 2013

பானுமதியின் கலக்கம்! துரியோதனனின் க்ரோதம்!

“ஆசாரியரே, கிருஷ்ணன் அப்படி ஒரு வாக்குறுதியை எங்கனம் கொடுக்க முடியும்?” பானுமதி கேட்டாள்.

“இதோ பார் பானுமதி!  எனக்கு இவை தான் தெரியும்.   கிருஷ்ணனிடமிருந்து இப்படி ஒரு வாக்குறுதியை மட்டும் உன்னால் வாங்க முடிந்தால் நல்லது.  ஏனெனில் அவன் கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவான்.”

“நிச்சயமாய் அப்படி ஒரு வாக்குறுதியைக் கிருஷ்ணன் கொடுக்க மாட்டான், ஆசாரியரே!”

“அப்படியா சொல்கிறாய்?  அப்படி என்றால் உன்னைத் தன் அருமைத் தங்கையாக அவன் ஸ்வீகரித்திருக்கிறான் என்பது வெறும் வார்த்தை!  வெட்டிப் பேச்சு! அல்லது பெரியதொரு நகைச்சுவை!” என்றார் துரோணர் சிறிது புன்னகையுடன்.

“ஆசாரியரே, கிருஷ்ணன் வாக்குக் கொடுத்தால் காப்பாற்றும் மன உறுதி உள்ளவன் என்பதை நான் நன்கறிவேன்.” என்றாள் பானுமதி.  “நல்லது, குழந்தாய், அப்படி எனில் நீ விரைவில் மாட்சிமை பொருந்திய மஹாராணி சத்யவதியிடம் சென்று அவளின் அநுமதியை வாங்கு.  அவள் அநுமதி கொடுத்த பின்னரும், அதை மறுக்கும் துணிவு அவனிடம் இருக்காது.  நீ என்னுடன் தாராளமாக வரலாம்.” என்றார். “முயற்சி செய்கிறேன், ஆசாரியரே.  ஆனால் கிருஷ்ண வாசுதேவனால் இந்த விஷயத்தில் உதவ முடியும் என்று எனக்குத் தோன்றவில்லை.” என்றாள் பானுமதி.  “ஆஹா, பானுமதி, நீ ஒன்றை அறியவில்லை.  அவன் எல்லாரும் சொல்வதைப் போன்றதொரு ஆச்சரிய புருஷனாக மட்டும் இருந்தால், எதையும், நடக்கக் கூடாததைக் கூட நடத்தி வைப்பான்.  அத்தகைய ஆற்றலுடையவனாக அவன் இருக்க வேண்டும்.” பானுமதி அத்துடன் ஆசாரியரிடம் விடை பெற்றுச் சென்றாள்.  துரோணரின் முகத்தில் ஒரு வெற்றிப் புன்னகை காணப்பட்டது.  அனைத்தும் அவர் நினைத்த மாதிரியே மிக எளிதாகச் சென்று கொண்டிருக்கிறது.

பானுமதி மிகவும் மகிழ்ச்சி அடைந்தாள்.  மாட்சிமை பொருந்திய மஹாராணி சத்யவதி அம்மை அவள் புஷ்கரத்துக்கு ஆசாரியர் துரோணருடன் செல்ல அநுமதி அளித்து விட்டார்.  அவள் மீண்டும் கிருஷ்ணனைச் சந்திக்கப் போகிறாள்.  கிருஷ்ணன்!!!!!!, இடையன் என அனைவராலும் அழைக்கப்படுகிறான்.  தன் இடையில் செருகிய புல்லாங்குழலின் இசையில் விருந்தாவனத்தின் கோபியர்களைத் தன் பக்கம் ஈர்த்தவன், அவர்கள் அனைவரையும் கவர்ந்தவன், ஆஹா, இவனைக் குறித்து அவள் தந்தையின் ராஜசபையில் எத்தனை நாடோடிப் பாடல்கள் பாடப்பட்டன! இவனுடைய சாகசங்களைக் குறித்த வர்ணனைகள் பாணர்களாலும், பாடினிகளாலும் பாடப்பட்டு வருகின்றனவே.  எத்தனை உற்சாகமாய்ப் பாடி ஆடுவார்கள்.  அவன் நினைப்பே இவ்வளவு சந்தோஷத்தைத் தருமா?  ஆனால் , இப்போது அவன் மாட்டிடையன் அல்ல.  ஒரு வலிமை மிக்க, அதிகாரபலம் கொண்ட மனிதனாகி விட்டதோடு அவனையும், அவன் கருத்துக்களையும் அனைவரும் மதித்துப் போற்றும் வண்ணமும் நடந்து கொள்கிறான்.  அவ்வளவு ஏன்,  எவரையும், பாட்டனார் பீஷ்மரைக் கூட மதிக்காத துரியோதனன் கூட,  இந்தக் கண்ணனின் நல்லெண்ணத்தைப் பெற்றாகவேண்டும் என்று பாடுபட்டானே! இப்போது அவளுக்கு  அவன் உதவியைப் பெற்றாக வேண்டும்.  திரெளபதிக்குச் சிறிதேனும் துரியோதனனைத் தேர்ந்தெடுக்கும் எண்ணம் இருந்தால்  அதைக் கண்ணன் எவ்வகையிலேனும் மாற்றி விடுவான்.  இதில் பானுமதிக்குச் சிறிதும் சந்தேகமே இல்லை.   அவள் மிகவும் நேசிக்கும் அன்புக் கணவன் துரியோதனனின் ஆசைக்கும், அன்புக்கும் உகந்த மனைவியாய் பானுமதியே எந்நாளும் இருக்கலாம்.  அதில் தான் அவள் சந்தோஷமே இருக்கிறது.  அத்தோடு மட்டுமா?  ஹஸ்தினாபுரத்தின் வருங்கால மஹாராணியும் பானுமதி தான்.  பானுமதியின் மனம் மகிழ்ச்சியில் துள்ளியது.

அவளால் மகிழ்ச்சியை அடக்க முடியவில்லை.  அவள் நடந்து செல்கையிலேயே நாட்டியம் ஆடிக்கொண்டே செல்கிறாளோ என்னும்படியாக ஆனந்தக் குதியாட்டத்தோடு சென்றாள்.  தன் அந்தப்புரத்துக்கு வந்த அவள் செல்லமாக வளர்க்கும் கிளியிடம் தன் மனதைப் பகிர்ந்து கொண்டாள்.  அது எப்போதுமே, இந்த ஒரே வார்த்தையைத் தான் சொல்லும்.  “பானுமதி, அனைத்துமே நல்லதுக்குத் தான்.”  துரியோதனன் ஷகுனியின் மாளிகைக்குச் சூதாட்டம் ஆடச் சென்றிருந்தான்.  இரவு நேரம் கழித்தே வருவான்.  அது தான் அவன் வழக்கமும் கூட.  அப்போது அவள் மெதுவாகத் தான் புஷ்கரம் செல்ல இருப்பதைக் குறித்து அவனுக்குக் கூறுவாள்.  வழக்கம் போல் அவள் தன் கணவன் வரும்வரை கண் விழித்திருந்தாள்.  அவன் வர எத்தனை தாமதம் ஆனாலும் தூங்காமல் காத்திருப்பதே பானுமதிக்கு வழக்கம்.   மது மயக்கத்தில் தடுமாறிக் கொண்டு வந்த துரியோதனின் கிரீடத்தை வாங்க அவள் கையை நீட்டினாள்.  அவனோ அவளைக் க்ரோதமாகப் பார்த்துவிட்டுப் பல்லைக் கடித்தான்.  பின்னர் மிகவும் முயற்சி எடுத்துத் தன்னை நிலைப்படுத்திக் கொண்டான் துரியோதனன்.

பின்னர் வழக்கமான கொஞ்சலோ, அன்பான அணைப்போ, காதலுடன் கூடிய பார்வையோ இல்லாமல், மிக வலிமையாகக் கொஞ்சம் வலிக்கும்படியாகவே அவள் கைகளைப் பிடித்தான். அவளைத் தன் பக்கம் வேகமாக இழுத்தான். “ கேடுகெட்ட பெண்ணே!  அடி, நீ இன்று ஆசாரியதேவரைப் பார்க்கச் சென்றிருந்தாயா?”   அவன் கண்கள் மிகவும் பயங்கரமாக அவளைப் பார்த்து விழித்தன.   பானுமதிக்குத் தூக்கிவாரிப்போட்டது.  அவள் சந்தோஷமெல்லாம் வடிந்து போனது. தன் கணவனின் இந்த மோசமான, பயங்கரமான நடவடிக்கையை அவள் எதிர்பார்க்கவே இல்லை.  ஆகவே உள்ளூர பயம் இருந்தாலும் வெளிக்காட்டிக் கொள்ளாமல் அவனை அமைதிப் படுத்த விரும்பினாள்.  அப்படியே முயற்சியும் செய்தாள்.  அவனைப் பார்த்துக் காதலுடன் சிரித்து, “ஆமாம், அதற்கென்ன!  நான் தான் அநேகமாய் தினம் தினம் அவரைப் பார்க்கச் செல்கிறேனே!”  என்றாள்.  இந்த பதிலால் திருப்தி அடையவில்லை துரியோதனன்.  எரிச்சல் அடைந்தான்.   அவள் மெல்லிய தோள்களை வலுவாகப் பிடித்து அவளை உலுக்கினான்.  பானுமதிக்கு மிகவும் வலித்தது.  என்றாலும் வாய் திறக்கவே இல்லை.  “பொய் சொல்லாதே!” என்று கத்தியவன், “ நீ என்னைக் குறித்து வேவு பார்க்கவே அங்கே சென்றிருக்கிறாய்!  நான் சுயம்வரத்துக்குச் செல்வதை ஆசாரியர் எதிர்க்க வேண்டும்;  அவர் மூலம் எதிர்ப்பு வந்தால் நான் செல்ல மாட்டேன் என்ற எண்ணம் உனக்கு.  ஆகவே அவரை எனக்கு எதிராகத் தூண்டிவிடவே சென்றாய்.   உன்னை நான் நன்கறிவேன்.  உன் சிந்தனைகள் செல்லும் திசை எனக்குப் புரிகிறது!” என்றான்.

இதைச் சொல்லிக் கொண்டே அவன் பானுமதியை உலுக்கிய உலுக்கலில் அவள் நிலை குலைந்து கீழே விழுந்தாள்.  அவன் சொன்ன வார்த்தைகளைக் கேட்டதும் அவள் முகம் பயத்தில் வெளிறியது. 

“பேசுடி, பேசு! சூழ்ச்சிக்காரி!   ஆசாரியரிடம் ஏன் சென்றாய்? அங்கே உனக்கு என்ன வேலை?  ஹூம், நான் சொல்லவா?  மாமா ஷகுனி என்னிடம் சொல்கிறார் இதைக் குறித்து.  அவமானம்! ஆசாரியர் உன்னைப் புஷ்கரத்துக்கு அழைத்துச் செல்லப் போகிறாராமே!” தன் பலம் கொண்ட மட்டும் கத்தினான் துரியோதனன்.  மாமா ஷகுனிக்கு எல்லா இடத்திலும் ஹஸ்தினாபுரத்தின் அனைத்து மாளிகைகளிலும் ஒற்றர்கள் இருப்பதை அவள் நன்கறிவாள்.  ஆனாலும் மெல்ல, மெதுவாகக் கூறினாள்: “ மாட்சிமை பொருந்திய மஹாராணி சத்யவதி அம்மை  ஆசாரியரோடு புஷ்கரம் செல்ல என்னை அனுமதித்திருக்கிறார்.” என்றாள்.

“ஆஹா, மாட்சிமை பொருந்திய மஹாராணி!  யார் அந்தக் கிழவியா?”  பற்களைக் கடித்தான் துரியோதனன்.  அவன் க்ரோதம் அதிகம் ஆயிற்று. “ ஓஹோ, அவ்வளவு தூரத்துக்குப் போயாகிவிட்டாயா?  அந்தக் கிழவியிடம் சென்று அநுமதி வாங்கி இருக்கிறாயா?  அவளிடமும் நீ சென்றிருக்கிறாய்!  ஆனால் உனக்கு என்னிடம் அநுமதி வாங்க வேண்டும் என்று தோன்றவே இல்லை! என்னிடம் இதைக் குறித்து நீ பேசக் கூட இல்லை.  எனக்குத் தெரியும்.  அந்தக் கிருஷ்ணனை நீ சந்திக்க வேண்டும் என்றே செல்கிறாய், அல்லவா?”

பானுமதியின் நாடி, நரம்பெல்லாம் தளர்ந்து உடைந்து போய்விட்டாள்.  எழுந்து நின்றவள் நிற்க முடியாமல் மீண்டும் கீழே அமர்ந்து வாய் விட்டு அழுத வண்ணம் புலம்பினாள்:  “ஆர்ய புத்ர, நீங்கள் தான் வாசுதேவ கிருஷ்ணனை நண்பனாக்கிக் கொள் என என்னிடம் கூறினீர்கள்.  அதோடு மட்டுமின்றி அவன் என்னைத் தன் ஸ்வீகாரத் தங்கையாக ஸ்வீகரித்திருப்பதை வரவேற்கவும் செய்தீர்கள்.  அப்போது மிகவும் மகிழ்ச்சியும் அடைந்தீர்கள்.”

“ஹூம், தங்கையாம், தங்கை! “ தன்னிரு கரங்களையும் இடுப்பில் வைத்த வண்ணம் தன் பயங்கரம் சிறிதும் குறையாமல் அவள் எதிரே நின்ற துரியோதனன் மீண்டும் கத்த ஆரம்பித்தான்.  “இந்தச் சின்னத் தங்கைக்கு அவள் பெரிய அண்ணனைப் பார்க்கவேண்டும் என்ற ஆசை இப்போது ஏன் வந்ததாம்?” இகழ்ச்சியுடன் கேட்டான் துரியோதனன்.  விம்மி விம்மி அழுது கொண்டிருந்த பானுமதி பேச முடியாமல் தன்னை ஒருவாறு சமாளித்துக் கொண்டு மிகவும் கஷ்டத்துடன், “நான் அவனைச் சென்று பார்ப்பதிலோ, என் நமஸ்காரங்களைத் தெரிவித்துக் கொள்வதிலே என்ன தவறு இருக்கிறது?” என்று கேட்டாள்.
4 comments:

ஸ்ரீராம். said...

துரியோதனன் தன மனைவி பானுமதியிடம் இவ்வளவு கொடூரமாக நடந்து கொள்வானா!

ம்.... எல்லாமே நல்லதுக்குத்தான்!

இராஜராஜேஸ்வரி said...

பானுமதியின் கலக்கம்! துரியோதனனின் க்ரோதம்!

அருமையாக படம் பிடித்ததைப்போல் பதிவாக்கியிருக்கிறீர்கள்..
பாராட்டுக்கள்..!

sambasivam6geetha said...

ஆமாம், பானுமதி மட்டுமா? எல்லாருமே துரியோதனன் கைகளில் பாடுபடத்தான் செய்தனர்! :(

sambasivam6geetha said...

நன்றி ராஜராஜேஸ்வரி!