Monday, December 23, 2013

கண்ணனின் தர்மசங்கடம்!

கண்ணன் இப்போது ஒரு இக்கட்டான நிலையில் இருக்கிறான்.  துவாரகைக்குத் திரும்பி இருந்த கண்ணன் யாதவர்களின் நிலையைக் கண்டு அமைதியை இழந்தான்.  அவன் இல்லாத இந்த நாட்களில் அவர்கள் சோம்பலை வளர்த்துக் கொண்டதோடு ஆட்டம், பாட்டம் உல்லாசங்களிலேயே ஈடுபட்டு நாட்களைக் கழித்திருக்கின்றனர்.  ஏனெனில் அக்கம்பக்கத்து அரசர்கள் அனைவருமே நட்புப் பாராட்டி வந்தனர்.   வலிமையுள்ள அரசர்கள் எவரும் இப்போது இல்லை.  போர், யுத்தம் என்ற பேச்சுக்கே இடமும் இல்லை.  ஆகவே கஷ்டமும், சங்கடங்களும், வேலைகளும் நிறைந்த சிரமமான கட்டுப்பாடான வாழ்க்கை முறைக்கு இப்போது அவசியம் இல்லை.  அவரவர் மனம் போன போக்கில் வாழ்ந்து வந்தனர்.  இதற்குத் தான் வடநாடு சென்றதே முக்கியக் காரணம் எனக் கண்ணன் நினைத்தான்.   தன் மேல் தவறு இருப்பதாகவும் நினைத்தான். வடக்குப் பக்கம் யாத்திரை செல்கையில் குறிப்பிட்ட யாதவர்களின் வீரத்தையும், வலுவையும் வெளிப்படையாய்க் காட்டா வண்ணம் போட்டிருந்த இரும்புத்திரையைக்  கழற்றிவிட்டே சென்றான்.  அவனுடன் நெருங்கிப் பழகியதில் யாதவர்கள் தங்களுக்கு என ஒரு அடையாளத்தைப் பெற்றிருக்கின்றனர்.  இவ்வளவு நாட்கள் அவன் உழைப்புக்கும், அவன் வாழ்ந்த வாழ்க்கைக்கும் இது ஒன்றே மிச்சம்.  இவர்களில் முக்கியமானவனாக உத்தவன் இருந்து வருகிறான்.  விசுவாசம் காட்டுவதிலோ, வீரத்திலோ, எந்த வேலைக்கும் முன் வந்து செய்வதிலோ அவனுக்கு ஈடு இணை இல்லை.   நம்பிக்கைக்கு உரியவனும் கூட;  அதோடு தர்மத்தைக் கடைப்பிடித்து வாழ்வதிலும் ஈடுபாடு கொண்டவன்.  அடுத்து சாத்யகி.

சாத்யகிக்கும் விசுவாசத்துக்குப் பஞ்சமில்லை.  வீரம் மிகுந்தவனே.  தைரியமானவனும் கூட.  ஆர்வமும், ஆவலும் நிரம்பப் பெற்றவன்.  ஆனால் பொறுமை என்பது கிடையாது.  எல்லாவற்றுக்கும் அவசரப் படுகிறான்.  கிருதவர்மனோ திடமானவன்.  உடல்வலுவில் மட்டுமில்லாமல் மனத்தளவிலும் திடம் உள்ளவன்.  வீரர்களைச் செலுத்துவதில் அவனுக்குத் தனிப்பட்டதொரு  அரிய சக்தி இருக்கிறது என்னமோ உண்மை தான். சாருதேஷ்னா என்பவனோ, கெட்டிக்காரன், அதி விரைவில் எல்லாவற்றையும் புரிந்து கொள்வான்.  சமயோசிதமாய்ச் சிந்திக்கும் அறிவு உள்ளவன்.  அவனைத் தான் இப்போது எல்லை நாடுகளின் ஒன்றான அக்ரவனத்திற்கு அரசனாக நியமித்திருக்கிறது.  ஷால்வனையும், செகிதனாவையும் அவன் மேற்பார்வை பார்த்துக் கொள்வான்.  செகிதனாவுக்கு மீண்டும் புஷ்கரத்தை வாங்கிக் கொடுத்தாக வேண்டும்.   செளராஷ்டிரத்திலேயே விட்டுச் சென்ற மற்ற யாதவ அதிரதர்கள் அனைவருமே யுத்தம் செய்வதிலும், ரதத்தில் இருந்து போர் புரிவதிலும் நிகரற்றவர்கள்.  அதில் எந்த சந்தேகமும் இல்லை.  அவர்களுக்குக் கண்ணனிடம் ஈடுபாடு உண்டு தான்.  அவன் தலைமையையும் ஏற்கின்றார்கள் தான்.  ஆனால் அவர்களுக்குள்ளேயே வலு இல்லாமல் இருக்கின்றனர்.   தங்கள் ஆற்றலைப் பரிமளிக்கச் செய்யும் கலை அவர்களுக்குக் கைவரவில்லை.  அதிலும் கண்ணன் இப்போது போட்டிருக்கும் திட்டம் குறித்து அவர்கள் எதுவும் அறியமாட்டார்கள்.  இவர்கள் அனைவருமே கண்ணன் இல்லாத இந்த நாட்களில் பொழுதுபோக்குகளில் மனதைச் செலுத்திப் பழகிவிட்டனர்.

அதோடு யாதவர்களுக்கு இன்னும் மேலும் மேலும் செல்வம் குவிந்தது. அவர்கள் வாழ்க்கைமுறையை எளிதாக்கி விட்டது.  அவர்களின் கால்நடைச் செல்வங்கள் பெருகிவிட்டன.  பூமித்தாயோ அவர்கள் சொன்னபடி, சொன்னதுக்கு மேலே அள்ளிக் கொடுத்தாள்.  முக்கியமான மூன்று துறைமுகங்கள் ஆன துவாரகை, பிரபாச க்ஷேத்திரம், சபர் கச் ஆகியவற்றில் வெளிநாட்டுப் பண்டங்கள் வந்து குவிந்த வண்ணம் இருக்கின்றன.  தங்கமும், வைரமும், முத்துக்களும், விலைமதிக்க முடியா ரத்தினங்களும், சந்தனக் கட்டைகளும் குவிகின்றன.   இத்தனை செழுமையும் சேர்ந்து ஆடம்பர வாழ்வைக் காட்டிவிட்டது.  பகட்டும் போலி ஆடம்பரமும் அதிகம் ஆகிவிட்டது.  ஏற்கெனவே யாதவர்களுக்குக் குடியும், சூதாட்டமும் வாழ்க்கையின் முக்கியமான ஒரு நிகழ்வாக இருந்தது.  இப்போதோ, இத்தனை பெரும்பணமும், பகட்டான வாழ்க்கையும் சேர்ந்து அவர்களில் இளைஞர்கள் கூட இந்தப் பகட்டுக்கு முழு அடிமையாகி இருந்தனர்..

இது ஒரு முக்கியமான அதே சமயம் கவலைப்படக் கூடிய சூழ்நிலை எனக் கண்ணன் நினைத்தான்.  இந்த யாதவர்களை மனதில் வைத்தே அவன் வடக்கே சென்றபோது எல்லாத் திட்டங்களையும் போட்டிருந்தான்.   போரோ, அமைதியோ யாதவர்கள் அதில் உறுதியாக நிற்பார்கள்; தர்மத்தை நிலைநாட்ட வேண்டிய உதவிகளைச் செய்வார்கள்.  தர்மம் நிலைநாட்டப்படும்.  என்றெல்லாம் நம்பினான்.  ஆனால் செல்வமும், அதனால் விளைந்த இந்த சுகமும் ஒரு பெரிய புயல் போல் யாதவர்களின் வாழ்க்கை முறையையே மாற்றிவிட்டதே!  கொடிய தொற்று நோய் பரவுவது போல இந்த சுக வாழ்க்கை அவர்களிடையே பரவி உள்ளதே!   அவர்களை செளராஷ்டிரத்துக்கு அழைத்து வந்தபோது அவர்களிடம் இருந்த ஆர்வமும், உழைப்பும், வீரமும், உறுதியும் இந்த சுக வாழ்க்கைக்கு முன்னர் அடிபட்டுப்போய்விட்டது.  மீண்டும் இவர்களை  வலுவானவர்களாக மாற்றியாக வேண்டும்.  சாத்யகியும், கிருதவர்மனும் கிருஷ்ணனோடு ஒத்துழைக்கத் தயாராக இருந்தனர்.   வடக்கே செல்வதற்கு முன்னர் கடற்கரைக்கு தினம் சென்று உடற்பயிற்சியும், ஆயுதப் பயிற்சியும் எடுத்து வந்ததைப் போல இப்போதும் அவர்கள் இருவரும் தினம் கடற்கரை சென்று ஆயுதப் பயிற்சியும், உடற்பயிற்சியும் செய்தனர்.   ஆனால் இதைப் பார்த்துக் கூட இளைஞர்களான யாதவர்கள் கூட பயிற்சியில் பங்கேற்க வரவில்லை.  தனித்தே இருந்தனர்.

அவர்களின் மகிழ்ச்சியான வாழ்க்கையை இந்த நிகழ்வுகள் கெடுக்கின்றன என்பதைப் போல் அவர்கள் கோபத்துடன் பார்த்தனர்.  சாத்யகியும், கிருதவர்மனும் அவர்களைப் பார்த்துச் சீறிக் கோபம் கொண்டதைக் கூட லக்ஷியம் செய்யவில்லை.  செடிகளுக்குப் பிடிக்கும் கொடிய நோயைப் போல அவர்களின் வீரத்துக்கும், உழைப்புக்கும் இப்போதும் சோம்பல் என்னும் கொடிய நோய் பீடித்திருந்தது.  இந்த சுக வாழ்க்கையை விட்டு அவர்கள் வெளிவரத் தயாராக இல்லை.   எவ்வாறு  இதிலிருந்து மீள்வது? கிருஷ்ணனுக்குத் தன் திட்டங்கள் அனைத்தும் நாசம் ஆவதாகவும், யாதவர்களின் குலத்துக்கே ஒரு மோசமான கிரஹணம் பீடித்திருப்பதாகவும் தோன்றியது.   யோசித்த கிருஷ்ணன் முதலில் பெரியவர்களிடம் இதைக் குறித்துப் பேசினான்.  உக்ரசேனருக்கு வயதாகிவிட்டதால் முன்னைப் போல் அவரால் இயங்க முடியவில்லை.  வசுதேவர், கண்ணனின் தந்தை, அவர் எப்போதும் போல் சாந்தமாகவே இருந்தார்.   அக்ரூரரும் தன்னுடைய துறவித் தன்மையிலிருந்து மாறவே இல்லை.  கிருஷ்ணன் இவர்களிடம் எதிர் கொள்ள வேண்டி இருக்கும் ஆபத்துக்களைக் குறித்து விரிவாகப் பேசினான்.   செகிதனாவை புஷ்கரத்திலிருந்து துரியோதனன் விரட்டி விட்டான்.  துருபதன் மகள் திரெளபதிக்கு  ஜராசந்தனின் பேரன் மேகசந்தியுடன் திருமணம் நடக்கச் செய்யும் மறைமுக ஏற்பாடுகள்,  அதன் மூலம் துரோணரை அடியோடு நீக்க நடக்கும் ஏற்பாடுகள் என அனைத்தையும் குறித்துக் கிருஷ்ணன் எடுத்துச் சொன்னான்.

இப்போது மத்ராவிலோ யாதவர்கள் என எவரும் இல்லை;  அதோடு துரியோதனன் புஷ்கரத்தைத் திரும்பக் கொடுக்க மறுக்கிறான்.  இது தொடர்ந்தால் சாருதேஷ்னா அக்ரவனத்தில் தனித்து விடப்படுவான். ஷால்வனை நம் வீரத்தாலும், அதிகாரத்தாலும் இத்தனை நாட்கள் அடக்கி வைத்திருந்தோம்.  அவனுக்கு இந்த விஷயம் தெரிந்தால் அவன் போர் தொடுக்க ஆயத்தம் ஆகிவிடுவான்.  எல்லைப் பிராந்தியங்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வர வேண்டும்.  பாதுகாக்கப்படவேண்டும்.  தன்னம்பிக்கையும், மன உறுதியும் மட்டும் இங்கே போதாது.  தக்க நபர்களால் எல்லைகள் காக்கப்பட வேண்டும். இதை எல்லாம் கேட்டுக் கொண்டார் உக்ரசேனர்.   உக்ரசேனர் உடலிலோ, மனதிலோ வலுவே இல்லை.  வழக்கம் போல எல்லையற்ற பிரியத்துடனே கிருஷ்ணன் சொல்வதைக் கேட்டுக் கொண்டார்.  பொறுமையுடன் கேட்டுக் கொண்ட அவர் வழக்கம்போல் தானாகத் தனியே எந்த முடிவும் எடுக்க முடியாதவராகப் பேசாமல் இருந்தார்.  ராஜசபையைக் கூட்டி தக்கச் சான்றோர்களிடம் விவாதித்து முடிவெடுக்க விரும்பினார்.  வசுதேவருக்கும், அக்ரூரருக்கும் கிருஷ்ணனிடம் அபரிமிதமான நம்பிக்கை இருந்தது.  என்றாலும் முழு ஆரியவர்த்தத்தைக் கட்டுப்படுத்தும்படியான இந்த நடவடிக்கைக்கு அவர்கள் சம்மதப்படவில்லை. அதை விரும்பவும் இல்லை.  மிகவும் அபாயமான ஒரு நடவடிக்கையாக நினைத்தார்கள்.  தங்கள் வாழ்க்கை மீண்டும் கேள்விக்குறியாக ஆகிவிடும் என்று அஞ்சினார்கள்.  ஏற்கெனவே பல்வேறு கஷ்டங்களை அனுபவித்தாயிற்று.  இப்போது தான் சுகம் என்பதையே காண்கின்றனர். எல்லாக் கஷ்டங்களையும் நல்லவிதமாக எதிர்கொண்டு விட்டார்கள். இப்போது போரோ, ஆயுதங்களோ எடுக்காமல் அமைதியாகவும் நிம்மதியாகவும் வாழவேண்டும் என்பதே அவர்களின் ஒரே குறிக்கோளாக இருந்தது.  பட்டதெல்லாம் போதும்;  எல்லாவற்றையும் நிறுத்திவிட்டு அமைதியாக வாழலாம் என்பதே அவர்கள் கருத்து.Saturday, December 21, 2013

வியாசர் விடை பெற்றார்!

“ஐயா, கடோத்கஜன் அரசனாவது எல்லாம் சரியே!  ஆனால் அதற்காக  அரசர் வ்ருகோதரர் ஏன் எங்களை விட்டுப் பிரிய வேண்டும்? “ இதைக் கேட்கையில் ஹிடும்பி தன் கணவன் பீமன் எவ்வாறு வியாசரிடம் பேசுகையில் இரு கைகளையும் கூப்பிய வண்ணம், பணிவையும், மரியாதையையும் காட்டுவானோ அவ்வாறே தானும் காட்ட நினைத்துக் கைகளைச் சிரமப் பட்டுக் கூப்பிய பாணியில் வைத்துக் கொண்டாள். உடலையும் முன்னே வளைத்துக் கொண்டாள்.  தன் கணவன் துணை இல்லாமல் தன் சொந்த ராக்ஷச மக்களை ஆட்சி செய்வதில் அவள் மிகவும் பதட்டம் அடைந்திருக்கிறாள் என்பதை வெளிப்படையாகவே காட்டினாள்.  ஆகவே மீண்டும் வியாசரைப் பார்த்து, “அவர் இங்கேயே இருக்கட்டும்!” என்று வேண்டிக் கொண்டாள்.

அவளைப் பார்த்துப் புன்னகைத்தார் வியாசர். ஒரு சின்னக் குழந்தையை அதன் தாய் தட்டி சமாதானம் செய்வது போல அவளையும் தன் கரங்களால் தட்டிச் சமாதானம் செய்தார்.  பின்னர் “குழந்தாய், வ்ருகோதரனுக்கு ராக்ஷசர்களைக் காக்கும் வேலை மட்டுமே இல்லை, மகளே!  அவனுக்கு என ஒரு அரச தர்மம் இருக்கிறது.  அதை அவன் கடைப்பிடிக்க வேண்டும்.  அந்த தர்மத்தை நிலைநாட்டப் போரிடவும் தயாராக வேண்டும்.  உயிரை விடவும் மேலானது அரச தர்மத்தையும், ஆட்சி தர்மத்தையும் கடைப்பிடிப்பது என்பது நான் சொல்லியா தெரியவேண்டும் உனக்கு?  அனைத்து உயிர்களுக்குமே அவரவருக்கென ஒரு தர்மம் உள்ளது.  அதை நியமத்தோடு கடைப்பிடித்து வாழ வேண்டும்.  ஆனால் நான் ஒரு வாக்குறுதி அளிக்கிறேன் உனக்கு.  ராக்ஷச வர்த்தத்தில் எப்போதெல்லாம் ஆபத்து நேரிடுகிறதோ, அப்போதெல்லாம் நீ உன் கணவனை நினைத்தாலே போதும்.  அவன் உனக்கு வந்து உதவிகளைக் கட்டாயமாய்ச் செய்வான்.  தானே நேரில் வந்து உதவுவான்.  நான் ஒரு ஆலோசனையும் கூறுகிறேன்.”

“பீமன் இங்கிருந்து செல்லுகையில் கும்பனை உன்னையும், உன் ஆட்சியையும் மேற்பார்வை பார்த்து உனக்கு உதவ நியமிக்கச் சொல்லுகிறேன்.  உன் தேவைகளையும் கும்பன் பார்த்துக் கொள்வான். ஒவ்வொரு வருடமும் உங்களில் மிகவும் வலுவானவரைத் தேர்ந்தெடுத்து கடோத்கஜனைக் காத்து வரவும், அவனுக்கு வேண்டிய உதவிகளைச் செய்யவும், அவனுக்குப் பயிற்சி அளிக்கவும் வைத்துக்கொள்ளுங்கள். அப்படியே நீ செய்து வா மகளே!  விரைவில் உன் முன்னோரான விரோசனனின் புனிதமான ஆவி கடோத்கஜனுக்குள்ளும் புகுந்து கொள்ளும். அவனை நல்வழிப்படுத்தும்.  விரைவில் கடோத்கஜனே உன்னைக் கவனித்துக்கொள்ளும் தகுதியைப் பெற்றுவிடுவான்.”  என்றார் வியாசர்.

இவ்வளவில் கடோத்கஜன் அரசனாவது குறித்து மகிழ்ச்சி அடைந்த ராக்ஷச குருமார்கள் தாங்கள் அந்தரங்கமாய்க் கூடுமிடத்துக்குச் சென்று விரோசனனின் ஆவியை அழைத்துத் தங்களில் ஒருவர் உடலில் புகுந்து கொள்ளுமாறு வேண்டினார்கள்.  அப்படியே நடக்க சிறிது நேரத்தில் விரோசனனின் கட்டளையும் அவர்களுக்குக் கிடைத்தது.  கடோத்கஜன் அரசன் ஆவதில் எந்தத் தடையும் இல்லை என்பதே அது.  அடுத்த நாள் மிகப் பெரிய கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடுகள் செய்தனர்.  முறைப்படியான மதச் சடங்குகள் நடைபெற்றன.  தன் தாயின் மடியில் நின்றிருந்த கடோத்கஜனுக்கு ராக்ஷச அரசனாகப் பட்டாபிஷேஹம் நடைபெற்றது.  அவனுடைய நெற்றியிலும், தோள்பட்டைகளிலும் முறைப்படி மனித ரத்தத்தால் பொட்டு வைக்கப்பட்டது.  ஆனால் ஒரு வித்தியாசம்.  இம்முறை எந்த மனிதனையும் கொன்று ரத்தம் எடுக்கவில்லை.  ராக்ஷச குருமார்களே தங்கள் கட்டைவிரலைக் கத்தியால் கீறி ரத்தம் வரவழைத்துக் கொண்டு பொட்டு இட்டனர்.  தங்கள் அரசனுக்காக இந்த மாதிரியான ஒரு தியாகத்தைச் செய்வதில்  அவர்கள் மிகவும் பெருமையும் அடைந்தனர்.

மூன்றாம் நாள் அனைத்து ராக்ஷசர்களும் ஒன்று கூடி வியாசரை எல்லை வரை சென்று வழியனுப்பினார்கள்.  அனைவரையும் வியாசர் ஆசீர்வதித்தார். அவரால் குணம் பெற்றவர்கள் அவர் காலடியில் விழுந்து ஆசிகளை மீண்டும் பெற்றனர்.   எல்லைக்கருகே சென்ற வியாசர் சகோதரர் ஐவரையும் தன்னருகே அழைத்தார்.  மெதுவாக அதே சமயம் நிதானமாகக் கூறினார்:” நீங்கள் ஐவரும் இறந்தவர்கள் என்பதை ஒருபோதும் மறக்க வேண்டாம். இவ்வுலகில் நீங்கள் வாழ்வதற்கு உரிய நேரம் வரும் வரையிலும் நீங்கள் காத்திருக்கத் தான் வேண்டும்.  அதுவரை பாண்டு புத்திரர்கள் நீங்கள் என்பதை எவரிடமும் வெளிக்காட்டிக் கொள்ள வேண்டாம். உரிய நேரம் வருகையில் உங்களுக்கே தெரியும் வெளிக்காட்டிக்கொள்ளலாம் என்பது.  ஆகவே அதுவரையும் பொறுத்திருங்கள்.” என்றார்.

“ஆசாரியரே, நாங்கள் வெளிப்படச் சரியான தருணம் எது என்பது எங்களுக்கு எப்படித் தெரிய வரும்?” யுதிஷ்டிரன் கேட்டான்.  “நீங்கள் பாண்டுவின் புத்திரர்கள் என்பதை அறிவிக்காமலேயே துருபதன் மகள் திரெளபதியின் சுயம்வரத்தில் நீங்கள் கலந்து கொள்ள வேண்டும் எனக் கிருஷ்ண வாசுதேவன் நினைக்கிறான்.  ஆகவே இங்கிருந்து பிராமணர்களைப் போல வெளியேறுங்கள்.  உங்கள் நீண்ட தலைமுடியை உச்சியில் முடிந்து கொண்டு இளம் துறவிகளைப் போல மாறுங்கள்.  கிருஷ்ண வாசுதேவனுக்குத் தெரியும்.  நீங்கள் எப்போது பாண்டுவின் புத்திரர்கள் என அறிவிக்கலாம் என்பதை அவனே முடிவு செய்து கொள்வான்.  அப்போது நீங்கள் வெளிப்படுங்கள்.  பாண்டுவின் புத்திரர்களாக அறிவித்துக்கொள்ளுங்கள்.” என்றார்.

“தங்கள் கட்டளைப்படியே ஐயா!” என்றான் யுதிஷ்டிரன்!”

“நீங்கள் ஐவரும் சுயம்வரத்துக்குச் செல்லும் முன்னர், உத்கோசகம் சென்று அங்கே உள்ள தெளம்ய ரிஷியை உங்கள் புரோகிதராக நியமித்துக் கொள்ளுங்கள்.  ஒரு தபஸ்வியின் வழிகாட்டுதல் இல்லாமல் எந்த க்ஷத்திரியனாலும் அவனுடைய கடமைகளைச் சரிவர நிறைவேற்ற இயலாது. தங்கள் ஆன்ம வழிகாட்டிகள் இல்லாமல் எந்த க்ஷத்திரிய அரசனாலும் சரியான முறையில் அரசாட்சி செய்ய முடியாது.  மேலும் ஒன்றை நினைவில் வைத்திருங்கள் : நீங்கள் ஐவரும் ஐந்து சகோதரர்கள் என்றாலும் ஐவரும் ஒருவரே.  ஒரு கையில் உள்ள  ஐந்து விரல்களைப் போல நீங்கள் ஐவரும் ஒருவரே என்பதையும் நினைவில் இருத்தவும்.  ஒருவர் மற்றவரிடமிருந்து எப்போதும், எந்நிலையிலும் பிரியாதீர்கள்.  என்னுடைய ஆசிகள் எப்போதும் உங்களுடன் இருக்கும்.  குந்தி, உனக்கும், உன் மக்களுக்கும் என் ஆசிகள் எப்போதும் உண்டு. எல்லாரும் சந்தோஷமாக இருங்கள்.”

இவ்வளவில் ஆசாரியர் தனக்கென ராக்ஷசர்கள் கட்டி வைத்திருந்த கூண்டில் ஏறிக் கொண்டு பயணத்தை ஆரம்பித்தார்.  ராக்ஷசர்கள் அவரை நாக நாட்டின் எல்லைக் கிராமம் ஆன லஹூரியாவுக்குத் தூக்கிச் சென்றார்கள். கார்க்கோடகனும், அவன் ஆட்களும் அங்கே வியாசருக்காகக் காத்திருந்தனர். வியாசர் பயணத்தைத் தொடங்கட்டும்.  பாண்டவர்களும் போகட்டும்.  நாம் இப்போது அவசரமாக துவாரகை வரை செல்ல வேண்டும்.  அங்கே என்ன என்னமோ நடந்துவிட்டது. கிருஷ்ணன்  மனம் அமைதியற்று இருக்கிறது. என்ன ஆயிற்று?


Friday, December 20, 2013

கடோத்கஜன் அரசனாகிறான்!

கூட்டம் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தது.  சூரியன் நன்கு மேல் கிளம்பி விட்டான்.  நல்ல வெளிச்சம் வந்துவிட்டது. திடீரென ஹிடும்பிக்குத் தன் உடை, தலை அலங்காரம் குறித்த கவலை ஏற்பட்டது.  தலையில் எப்போதும் வைத்துக்கொண்டு அலங்கரித்துக் கொள்ளும் பொய்த் தலைமுடியும், முகத்திற்கு அடிக்காத வண்ணக்கலவையும் அப்போது தான் நினைவில் வந்தது.  ஒரு மஹாராணி எப்படித் தோன்றவேண்டுமோ அப்படி அவள் இப்போது தோன்றவில்லை.  ஒரு மஹாராணிக்குரிய அலங்காரங்கள் இல்லாமல் இப்படி வர நேர்ந்தது அவளுக்கு ஆடையின்றித் தான் வெளிப்பட்டுவிட்டது போன்ற எண்ணத்தைக் கொடுத்து கூச்சத்தை உண்டாக்கியது.  அதோடு இல்லாமல் அவள் பிரஜைகளும் இப்போது மிகுந்த ஆச்சரியத்துடன் அவளைக் கூர்ந்து நோக்க ஆரம்பித்துவிட்டனர்.  ஹிடும்பிக்குத் தாங்க முடியாத வெட்கம் ஏற்பட்டது.  தன்னுடைய மஹாராணி என்னும் பதவியின் உயரிய புனித நோக்கத்திற்கு இழுக்கு ஏற்பட்டு விட்டதாகக் கருதிய அவள் தன் முகத்தை இரு கரங்களாலும் மூடிக் கொண்டு விம்மி அழ ஆரம்பித்தாள்.

ஹிடும்பியின் இக்கட்டான இந்தச் சூழ்நிலையைக் குந்தி மிக நன்றாகப் புரிந்து கொண்டுவிட்டாள்.  மெல்ல அவளருகே சென்று அவள் முகத்தைத் தன்பால் திருப்பி அவள் தலையைத் தன் மடியில் வைத்துக் கொண்டாள்.  அவள் ஸ்பரிசத்தில் தெரிந்த ஆறுதல் உணர்வும், நட்பு உணர்வும் ஹிடும்பியின் மனதை சமாதானம் செய்தது.  தன் மகன் ஒரு ராக்ஷசியைத் திருமணம் செய்து கொண்டதை அன்று வரை குந்தி சிறிதும் ஒப்புக்கொள்ளவே இல்லை.  அவள் மனம் எந்த சமரசத்துக்கும் வர மறுத்தது.  ஹிடும்பியுடன் தேவைக்கேற்பக் குறைந்த அளவுக்கான தொடர்பை மட்டும் பராமரித்து வந்தாள்.  ஆனால் இந்த இக்கட்டான நிலையில் ஹிடும்பியைப் பார்த்ததும், இயல்பாகவே தாயன்பால் நிறைந்திருக்கும் அவள் உள்ளத்தில் ஹிடும்பியின் பால் இரக்கமும் தாயன்பும் சுரந்தது.   அவளிடம் ஒரு சிநேகிதியைப் போல் நடந்து கொண்டாள்.  மனம் தளர்ந்து வருத்தத்தில் ஆழ்ந்திருந்த ஹிடும்பியை அருகிலிருந்த வியாசரின் குடிசைப்பக்கம் அழைத்துச் சென்றாள்.  ஒரு ராணிக்குரிய அலங்காரங்களில்லாமல் காட்சி அளித்த அவளை அவள் குடிமக்களின் கேலிப்பார்வைக்கு இலக்காக ஆக்காமல் மறைவாக அழைத்துச் சென்றாள்.  இந்த இரு வருடங்களில் முதல்முறையாக மாமியாரும், மருமகளும்  பெண்களுக்கே என இயல்பாக உள்ள இந்த அலங்கார விஷயத்தில் ஒத்துப் போனதோடு அல்லாமல் ஒருவர் மற்றவரை நன்கு புரிந்தும் கொண்டனர்.

இங்கே கூட்டத்தில் ஒவ்வொருத்தருக்கும் தனித்தனியாக மருந்து கலந்த பாலை அளித்து ஆசீர்வதித்த வியாசர் அனைவரையும் பார்த்து, “என் அருமைக் குழந்தைகளே, நான் இங்கிருந்து கிளம்பும் நேரம் வந்துவிட்டது.  உங்கள் மன்னன் வ்ருகோதரன் அநுமதித்தால் நாளை அல்லது நாளை மறுநாள் கிளம்ப இருக்கிறேன்.” என்றார்.  வியாசரின் மருந்தினால் பயனடைந்தவர்கள் வருந்தினார்கள்.  மற்றவர்களுக்கொஞ்சம் நிம்மதியாகவே இருந்தது எனலாம். அப்போது பீமன், தன் தலைக்கு உரிய அலங்காரங்களைச் செய்து கொண்டு ஒரு ராக்ஷச ராணியாக மாறி வந்து கொண்டிருந்த தன் மனைவி ஹிடும்பியைப் பார்த்துப் புன்னகைத்துக் கொண்டே வியாசரிடம், “ஆசாரியரே, நீங்கள் கடோத்கஜனைத் தூக்கிச் சென்றுவிடப் போவதாக ஹிடும்பி கூறுகிறாள்.  அது உண்மையா?” என்று கேட்டான்.   அங்கிருந்து கிளம்பிக் கொண்டிருந்த மற்ற ராக்ஷசர்களும் இந்தக் கேள்விக்கு வியாசரின் பதிலை அறியும் ஆவலுடன் அங்கேயே நின்றனர்.  வியாசர் பீமனைப் பார்த்துக் கடகடவெனச் சிரித்தார்.   “குழந்தாய் பீமா!  உன் மகன், கடோத்கஜன், என் அருமைக் கொள்ளுப் பேரன் இரண்டு பெரிய வம்சங்களுக்கு ஒரே வாரிசு. ஒன்று இங்குள்ள ராக்ஷசகுலத்து விரோசனனின் வம்சம்.  இன்னொன்று குரு வம்சம்.  அவனை அவன் மக்களிடம் இருந்து பிரித்து அழைத்துச் செல்ல நான் எவ்வாறு நினைப்பேன்?  இங்குள்ளவர்கள் அனுமதி அளித்தால் இவர்களின் முன்னோரான விரோசனனின் அநுமதியோடு கடோத்கஜனை அடுத்த ராக்ஷச குல அரசனாக்கிவிட்டுச் செல்வேன்.”  என்றார்.

கூடி இருந்த அனைவரும் மகிழ்ச்சியில் கூக்குரலிட்டு வாழ்த்துக்களைத் தெரிவிக்க ஆரம்பித்தனர். ஹிடும்பிக்குத் தன் காதுகளையே நம்ப முடியவில்லை.  திடீரென ஏற்பட்ட இந்நிகழ்ச்சியால் அவளுக்கு அதிர்ச்சியும், ஆச்சரியமும் ஒருங்கே ஏற்பட்டது.   அங்கிருந்து கிளம்பவேண்டும் என்னும் எண்ணம் பீமனுக்கும் அப்போது ஏற்பட்டு விட்டது.  ஆகவே அவன் வியாசரைப் பார்த்து, “குருவே, கடோத்கஜன் அரசன் ஆனால் என் நிலைமை என்னாவது?  நான் எங்கே இருப்பேன்?  என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டான்.  “நீ அனைவராலும் எதிர்பார்க்கப்படுகிறாய் மகனே!” என்ற வியாசர், “உன் மகன் கடோத்கஜன் அரசன் ஆனதும், வருகிற பெளர்ணமி தினத்துக்குப் பின்னர் நீயும், உன் சகோதரர்கள் நால்வரும், உன் தாய் குந்தியுடன் ராக்ஷச வர்த்தத்தை விட்டு உன் சொந்த நாட்டுக்குத் திரும்பிச் செல்வாயாக!” என்றார்.

என்ன? வ்ருகோதரன், ராக்ஷச அரசன் நாட்டை விட்டு வெளியேறி சொந்த நாட்டுக்குச் செல்வதா?  ம்ஹூம், ராக்ஷசர்களுக்கு இதில் சம்மதமே இல்லை.  வ்ருகோதரன் எங்களுடனேயே இருக்க வேண்டும்.  அவன் வெளியேறக் கூடாது.  அனைவரும் இதற்கு ஆதரவு தெரிவித்து கோஷமிட்டனர்.

“அவன் மக்கள் அவனை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கின்றனர்!” என்றார் வியாசர்.  “ஆஹா, வ்ருகோதரன் இல்லாமல் நாங்கள் என்ன செய்வோம்?  எங்களால் என்ன முடியும்?  எங்களை அவர் அன்றோ பாதுகாத்து வந்தார்!” என்று நிகும்பனின் தகப்பன் கும்பன் சொல்ல மற்ற ராக்ஷசர்களும் அதை ஆமோதித்தனர்.  “எங்கள் எதிரிகளிடமிருந்தும், கெட்ட ஆவிகளிடமிருந்தும் எங்களைக் காக்கப் போவது யார்? “ கலங்கினார்கள் அனைவரும்.  “உங்களுக்கு ஒன்றும் நேராது.  இதோ ஹிடும்பி இருக்கிறாள் கடோத்கஜனின் அன்னையான அவள் ராணியாக உங்களைப் பாதுகாத்து வருவாள்.  கடோத்கஜனுக்கு உரிய காலம் வந்ததும் அவன் பொறுப்பை ஏற்பான்.  என் ஆசிகள் எப்போதுமே உங்களுக்கு உண்டு.  ஆகவே கவலைப்படாமல் இருங்கள்.” என்றார் வியாசர்.Tuesday, December 10, 2013

அன்பினால் பிணைந்த பாட்டனும், பேரனும்!

காலையில் கண்விழித்து எழுந்த ஹிடும்பிக்குத் தன்னருகே படுத்து உறங்கிக் கொண்டிருந்த பீமனைக் கண்டதும் மகிழ்ச்சி பொங்கியது.  அவள் உடல் எல்லாம் சிலிர்த்தது.  அவள் எதிர்பாரா வண்ணம் அவன் அவளிடம் இரவே திரும்பிவிட்டான்.  அவளில்லாமல் அவனால் இயங்க முடியவில்லை.  ஆஹா! எத்தனை அற்புதமான கணவன்!  அன்பான கணவனும் கூட!  அதோடு மட்டுமா? அவன் மட்டும் அங்கேயே உறங்கி இருந்தால்?? நினைக்கவே ஹிடும்பி நடுங்கினாள்.  அவனுடைய மனிதர்களை ராக்ஷசர்கள் தாக்குகையில் இவன் அவர்களைக் காக்க வேண்டிப் போராடி இருந்திருப்பான்; அதன் மூலம் எங்காவது ஆழமான காயம் பட்டுக் கொண்டு வந்திருப்பான். அதற்கு முன்னாலேயே அங்கிருந்து கிளம்பி வந்துவிட்டான் போலும்! அப்பாடா!  நிம்மதியாக இருக்கிறதே! குழந்தை கடோத்கஜன்!  சட்டென நினைவுக்கு வந்தவளாய்த் தன்னருகே இருந்த தொட்டிலைப் பார்த்தாள் ஹிடும்பி.  குழந்தை எங்கே!  தன்னை அறியாமல் “வீல்” என்று கத்தியவள், தன் தலையில் மாட்டி இருந்த நாரினால் ஆன பொய்முடியை அகற்றிவிட்டுத் தன் தலையை விரித்துப் போட்டவண்ணம், வ்ருகோதரனை எழுப்பினாள். எழுப்பிய வண்ணம் தன்னிரு கரங்களாலும் மார்பில் அடித்துக் கொண்டாள். அவள் குழந்தை, அவள் கண்மணி, அவள் முன்னோரின் மறு பிறவி! விரோசனனின் மறு அவதாரம்,  அந்தக் குழந்தையைக் காணவில்லை.  ஒரு பொக்கிஷத்தையே அவள் தொலைத்து விட்டாள்.

பீமன் எழுந்தான்.  குழந்தையைக் காணோம் என்று தெரிந்ததில் அதிர்ச்சி அடைந்தவன் போல் நடித்தான்.  எனினும் அதைப் பூரணமாகவே செய்தான். கோபத்தோடு எழுந்து,குழந்தையைக் கடத்தியவர்கள் யாராக இருந்தாலும் அவர்களைக் கொன்று விடுவதாக சபதமும் செய்தான்.  குடிசை முழுதும் தேடிவிட்டுப்பின்னர் தங்கள் இருப்பிடத்தில் இருந்து கீழே இறங்கினார்கள் இருவரும்.  ஹிடும்பியின் மனநிலையே முற்றிலும் பாதித்துப் புலம்பிக் கொண்டும், அழுது கொண்டும் உடன் வர, இருவரும் குழந்தையைக்குறித்து விசாரித்த வண்ணம் சென்றனர்.  பீமனும் தன் பங்குக்குக் கோபத்தைக் காட்டிய வண்ணம் உறுமிக் கொண்டும் சீறிக்கொண்டும் சென்றான்.  சட்டென நின்றான் பீமன்.  தன் நெற்றியை ஆள்காட்டி விரலால் தட்டிக் கொண்டான்.  ஏதோ நினைவில் வந்தவன் போல, “இதோ பார் ஹிடும்பி, என் பாட்டனாரைக் கேட்போம், குழந்தை எங்கே உள்ளான் என்பதை!  அவருக்கு இறந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் அனைத்தும் தெரியும்.  அனைத்தும் அறிந்தவர். அவருக்கு கடோத்கஜன் இருக்குமிடம் கட்டாயம் தெரிந்திருக்கும்.” என்றான்.

“என்ன, உங்கள் பாட்டனா?  ஆஹா, அவர் அங்கே எங்கே இருக்கப் போகிறார்!”என்ற ஹிடும்பி தான் தன்னை மீறி உளறிவிட்டதை உடனே உணர்ந்தும் விட்டாள்.  வியாசருக்கும், மற்றவர்களுக்கும்  என்ன நடந்திருக்க வேண்டுமோ அது நடந்திருக்கும்.  ஆனால் அது தான் அறியாமல் நடந்ததாக அன்றோ அவள் காட்டிக் கொள்ள வேண்டும்!  அவளுக்குத் தான் எதுவுமே தெரியாதே. தன்னை சுதாரித்துக் கொண்டுவிட்டாள் ஹிடும்பி.  பீமன் ஒன்றுமே அறியாதவன் போலவே அவளைப் பார்த்து, “என்ன, என் பாட்டனுக்கு என்ன ஆகி இருக்கும்? “ இதைக் கேட்ட அவன் குரலில் கொஞ்சம் கோபத்தையும் காட்டினான்.மேலும் தொடர்ந்து,”அப்படி அவர் இல்லை எனில், கடோத்கஜனும் அவருடன் தான் போயிருப்பான்.”  என்றான்.

ஹிடும்பி முனகினாள். “ஓ,ஓஓ, என் அருமைக் குழந்தை! விரோசனனின் மறுபிறவி அவன்.  இப்போ எங்கே இருக்கிறான்? என்ன செய்கிறான்?” புலம்பினாள் ஹிடும்பி.  “கவலைப்படாதே, ஹிடும்பி, வா, பாட்டனார் இருக்குமிடம் செல்வோம். அங்கே அவரிடம் விசாரிப்போம்.” என்று கூறிய பீமன் அவளை அழைத்துச் சென்றான்.  வியாசரின் குடிசையை நோக்கிச் செல்கையில் அவர்கள் கண்ணில் பட்டவர்களை எல்லாம் விசாரித்துக் கொண்டு சென்றனர்.  அங்கே குடிசைகளில் இருந்து சில ராக்ஷசர்கள் அப்போது தான் கீழே இறங்கினார்கள்.  சிலர் கீழே இறங்கி அவரவர் வேலையைப் பார்க்கச் சென்று கொண்டிருந்தனர்.  அனைவரும் ஹிடும்பியையும், பீமனையும் பார்த்துவிட்டு ஆச்சரியம் மீதூற என்ன செய்தி என்று கேட்டுவிட்டு கடோத்கஜனைக் காணோம் என்றதில் இன்னும் அதிக வியப்பு அடைந்தனர். அவர்கள் யாருமே கடோத்கஜனைப் பார்க்கவே இல்லை என்று கூறினார்கள்.  அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்.  அவர்களும் கடோத்கஜனைத் தேடிக் கொண்டு சென்றனர்.  வெகு விரைவில் ஒரு பெரிய கூட்டம் அவர்களைச் சூழ்ந்து கொண்டது.  கத்திக் கொண்டும், விசாரித்துக் கொண்டும், அலறிக் கொண்டும் எல்லாத் திசைகளிலும் குழந்தையைத் தேடிச் சென்றது கூட்டம்.

வியாசரின் இருப்பிடத்தை நெருங்கினார்கள் பீமனும், ஹிடும்பியும்.  ஹிடும்பி அதிர்ச்சியில் உறைந்து போய்விட்டாள். முகத்தில் குழப்பமும், அதிர்ச்சியும் தெள்ளத் தெளிவாய்த் தெரிய, கண்கள் பிதுங்கி விடும்படி பார்த்துக் கொண்டே நின்றுவிட்டாள்.  வாயைத் திறந்து ஏதோ சொல்ல நினைத்தாள் போலும். தொண்டையில் ஏதோ அடைத்துக் கொண்ட பாவனையில் தன் கைகளால் தொண்டையை அழுத்திக் கொண்டாள்.  அதோ, பீமனின் பாட்டனார். உயிருடன்.  எப்போதும் போல் தான் இருக்கிறார்.  எதுவும் நடந்ததாகவே தெரியவில்லையே! அதுவும் அருகிலுள்ள நீர்க்கரையில் காலைக் குளியலை முடித்துவிட்டுத் திரும்புகிறார்.  அவர் கைகளில் கடோத்கஜன்.  அவனும் குளித்திருக்கிறான் போல் இருக்கிறதே.  என்ன கடோத்கஜனா?  வியாசர் கரங்களிலா?  தன் கண்களைத் துடைத்த வண்ணம் மீண்டும் பார்த்தாள் ஹிடும்பி.  ஆம் கடோத்கஜனே தான்.  குளித்ததில் அதுவும் அவ்வளவு விடியற்காலக்க் குளியலில் சந்தோஷக் கூச்சல் போட்டுக் கொண்டிருந்தான் அவன். ஒரு கை தன்னிச்சையாக வியாசரின் தாடியைப் பற்றிக் கொண்டிருந்தது.  குளித்துவிட்டு வந்த வியாசர் யாக குண்டத்தின் எதிரே அமர்ந்து அன்றைய அநுஷ்டானத்தை வேத மந்திர ஒலியுடன் ஆரம்பித்தார். அவர் கரங்களில் உவகையுடன் கூச்சலிட்டுக் கொண்டிருந்தான் கடோத்கஜன்.

ஹிடும்பி ஆனந்தக் கூச்சலிட்டாள். “அதோ கடோத்கஜன்.  என் குழந்தை! அவன் எப்படி இங்கே வந்திருப்பான்? என்னருகே அல்லவோ தூங்கிக் கொண்டிருந்தான்? “ என்று வியப்புடன் கேட்டாள்.  பீமன் அதற்கு, “பாட்டனாரால் எதையும் நடத்திக் காட்ட முடியும் ஹிடும்பி.  அவரைக் குறித்து நீ எதுவும் அறிய மாட்டாய்.  ஒரு குழந்தையை அவரால் நடக்க மட்டுமா, ஓடவே வைக்க முடியும்.  கடோத்கஜன் தானாகவே இங்கே வந்திருக்க வேண்டும்.” என ஏதுமே அறியாதவன் போல் முகத்தை வைத்துக் கொண்டு அப்பாவியாய்க் கூறினான் பீமன். சற்று நேரத்தில் மந்திரகோஷம் முடிந்தது. மக்கள் அனைவருமே யாககுண்டத்தின் அக்னிக்கு தானியங்கள், கொட்டைகள், பழங்கள் ஆகியவற்றை ஆஹுதி அளித்தனர். அனைவரையும் வியாசர் ஆசீர்வதித்தார்.  அவர் கொடுத்த பாலினால் உடல் நலம் பெற்றவர்கள் அனைவரும் அவரைப் பார்த்து ஆனந்தக் கூச்சலிட்டனர்.  அந்தக் கூட்டத்தின் நடுவே ஹிடும்பியும், பீமனும் வழியை உண்டாக்கிக் கொண்டு வியாசரிடம் சென்றனர்.  அவர்களைப் பார்த்த வியாசர் புன்னகையுடன் தன் கரங்களில் இருந்த கடோத்கஜனைப் பார்த்து, “இதோ பார், என் கண்மணி, உன் அம்மா வந்திருக்கிறாள்.” என்றார். குழந்தையை வாங்கிக் கொள்ள ஹிடும்பியும் தன் கரங்களை ஆவலுடன் நீட்டினாள்.  ஆனால் கடோத்கஜனோ அவளைப் பார்த்துக் கோபமாக உறுமிவிட்டு முகத்தைத் திருப்பிக் கொண்டான்.  வியாசர் எங்கே அவளிடம் தன்னைக் கொடுத்துவிடுவாரோ என்று பயப்படுபவன் போல அவரை இறுக்கிக் கட்டிக் கொண்டு தோள்களில் முகத்தையும் புதைத்துக் கொண்டான்.  வியாசர் மீண்டும் சிரித்துவிட்டுக் குழந்தையைத் தாயிடம் கொடுக்க முயல, அவன் திரும்பி வியாசரிடமே வர, சுற்றி நின்ற கூட்டமும் இதைப் பார்த்துவிட்டுச் சிரிக்க ஆரம்பித்தது.

ஒரு வழியாகத் தன் பிள்ளையை வாங்கிக் கொண்ட ஹிடும்பி வியாசரைப் பார்த்து, “இரவில் நட்ட நடு நிசியில் இவன் எப்படி உங்களிடம் வந்து சேர்ந்தான்?” என்று வியப்புடன் கேட்டாள்.  “நீ அவனையே கேட்பது தானே! “ என்ற வியாசர் சிரித்த வண்ணம் தன் கரங்களை நீட்ட ஆவலுடன் பாய்ந்து வந்தான் கடோத்கஜன்.  வியாசரின் மடியில் ஏறி அவர் தாடியைப் பிடித்த வண்ணம் அவர் தொடைகளில் நின்று கொண்டு ஒரு கையால் கழுத்தையும் கட்டிக் கொண்டான்.   குழந்தையை அன்புடன் அணைத்த வண்ணம் வியாசர் அவனிடம்,”என் கண்ணே, நீ இங்கே எப்படி வந்தாய்?” என்று கேட்டார். கடோத்கஜன் மீண்டும் உறுமினான்.  “அவன் என்னிடம் சொல்ல மாட்டானாம், எப்படி வந்தோம் என, “ என்ற வியாசர், குழந்தையிடம் மீண்டும், “அது சரி என் கண்மணி, இந்தக் கொள்ளுப்பாட்டனை உனக்குப் பிடிக்குமா?” என்று கேட்டார். கடோத்கஜன் என்ன புரிந்து கொண்டானோ, சிரித்துக் கொண்டும் வியாசரின் தாடியை உலுக்கிக் கொண்டும் அவர் தொடைகளில் நின்ற வண்ணம் குதித்துத் தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினான்.

Sunday, December 8, 2013

வியாசரின் கரங்களில் கடோத்கஜன்!

“ஆனால் அது ஒன்று தான் நமக்கு ஒரே நம்பிக்கை, இல்லையா?” என்றான் அர்ஜுனன்.  தனது தொடர்ந்த உடற்பயிற்சியால் உடலை வலுவாகவும் சுறுசுறுப்புள்ளதாகவும் ஆக்கி வைத்திருந்த அர்ஜுனனுக்கு உடல் அவன் சொற்படி கேட்டது.  மரத்தின் மேலே ஏறும் முன்னர் அவன் பீமனிடம், “நீ மேலே வந்ததுமே கடோத்கஜனை அவன் அம்மாவின் அருகில் இருந்து மெல்லத் தூக்கிக் கொள்.  அப்படி ஒருவேளை, உன் மனைவி ஹிடும்பி எழுந்து கொண்டாளானால், அவளிடம், நீ இல்லாமல் எனக்குத் தூக்கமே வரவில்லை;  உன்னைப் பிரிந்து இருக்க முடியவில்லை; நான் சந்தோஷமாக இல்லை என்று சொல்லிவிடு. அவளுடன் இரவைக் கழித்துவிடு. ஆனால் அதற்கு முன்னர் குழந்தையை எடுத்து என்னிடம் கொடுத்துவிடு.   நான் வெளியே காத்திருப்பேன்.  ஏதானும் ஒரு காரணத்தைக் காட்டி, சாக்குச் சொல்லி, வெளியே வந்து குழந்தையை என்னிடம் கொடுத்துவிடு.  நீ பின்னர் இரவு முழுதும் உன் மனைவியோடு கழித்துக் கொள்.” என்றான். “ஆஹா, குழந்தைகளைத் திருடுவதில் நீ இவ்வளவு கெட்டிக்காரன் என இன்று வரை நான் நினைக்கக் கூட இல்லை அர்ஜுனா!” என்ற பீமன்   அர்ஜுனனின் குறும்புப் பேச்சில் கவரப்பட்டவனாக, அவனைக் குறித்துப் பெருமிதம் கொண்டான்.   தனக்கு வந்த பெரும் சிரிப்பையும் கஷ்டப்பட்டு அடக்கிக் கொண்டான்.

மூச்சை அடக்கிக் கொண்டு அர்ஜுனன் மெல்ல மெதுவாக, நிதானமாக மரத்தின் மேல் ஏறினான்.  மேலே ஏறியதுமே ஹிடும்பியின் மூச்சு சப்தம் வரும் திசையை ஓரளவு ஊகித்து உணர்ந்து கொண்டான் அர்ஜுனன்.  அவள் எங்கே படுத்திருக்கிறாள் என்பதையும் தெரிந்து கொணடான்.  அங்கிருந்த நூலேணியை அவிழ்த்து, கீழே காத்திருக்கும் பீமனுக்காக அதைத் தொங்க விட்டான்.  பீமனும் அதைப் பிடித்துக் கொண்டு கீழ்ப்பாகம் நன்றாக நிற்கும் வண்ணம் மரத்தின் வேரில் அழுத்தமாய்க் கட்டிவிட்டு, அர்ஜுனனைப் போல் முடியாவிட்டாலும் கூடியவரை மெதுவாக மரத்தின் மேல் சப்தமின்றி ஏறினான். மெல்லத்தவழ்ந்து கதவருகே சென்று அந்தச் சின்னஞ்சிறு கதவைத் திறந்து கொண்டு உள்ளே சென்றவன், ஹிடும்பி படுத்திருக்கும் இடத்துக்குச் சென்றான்.  நரித்தோல்களைப் பக்குவப் படுத்தித் தயாரிக்கப்பட்ட படுக்கையில் படுத்திருந்தாள் ஹிடும்பி.  கடோத்கஜனைத் தூக்கி எடுத்து வெளியே காத்திருக்கும் அர்ஜுனனிடம் கொடுத்தான்.  பின்னர் சத்தமின்றிச் சிரித்த வண்ணம் மனைவிக்கு அருகே படுக்கையில் படுத்தான்.  அவன் வருகையை உணர்ந்த ஹிடும்பி தன் கண்களைத் திறவாமலேயே அவனை இறுக அணைத்த வண்ணம், “ஆஹா, நீங்கள் வந்துவிட்டீர்களா?” என்றாள்.  மிக மெதுவாக அவன் காதுகளில் மட்டுமே கேட்கும்படி பேசினாள் ஹிடும்பி.

“ஆம், ஆம், உன்னை விட்டு விட்டு என்னால் அங்கே தூங்க முடியவில்லை!” என்று சொல்லிய பீமனும் அவளை அணைத்துக் கொண்டான்.  “ஆஹா, எப்படிப்பட்ட அருமையான கணவன் நீங்கள்!” என்று சொல்லிய வண்ணம் அவனை இறுக அணைத்த ஹிடும்பி தன்னை மறந்தாள்.  “நீயும் அருமையான மனைவி தான்,” என்ற வண்ணம் பீமனும் அவளை அணைத்துக் கொண்டான்.  சற்று நேரம் குழந்தையைக் கூட மறந்து கணவனின் அன்பான அரவணைப்பில் தன்னை மறந்து ஆழ்ந்துவிட்டாள் ஹிடும்பி.   அங்கே அர்ஜுனன் அந்தக் குழந்தையைத் தன் கரங்களில் தூக்கிக் கொண்டு நடந்தான்.  ராக்ஷசர்களைக் கண்டாலே வெறுத்த அர்ஜுனனுக்கு அந்தக் குழந்தையிடம் இனம் தெரியாத பாசம் ஏற்பட்டிருந்தது.  தலையில் ஒரு மயிர் கூட இல்லாமல் முழு வழுக்கையுடன் காணப்பட்ட அந்தக் குழந்தையை அவனுக்கு மிகவும் பிடித்திருந்தது.  சாதாரணக் குழந்தையாக இல்லாமல் ராக்ஷசக் குழந்தையாக இருந்தாலும் அர்ஜுனன் அந்தக் குழந்தையை மனமார விரும்பினான்.  அந்தக் குழந்தையும் நன்கு தூங்கிக் கொண்டிருந்தது.  அர்ஜுனன் தூக்கிச் செல்வதால் அதன் தூக்கமும் கலைவதாகத் தெரியவில்லை.  ஆனால், இது என்ன! குழந்தை கண்களைத் திறந்து ஏதோ சப்தங்கள் செய்கிறதே.  அர்ஜுனன் ஒரு விநாடி கூட தாமதிக்கவில்லை.  அவனுக்குச் சிறு வயதில் இருந்தே நாடகங்களில் பெண்ணாக நடித்துப் பழக்கம்.  அதற்காகத் தன் குரலைக் கூடப் பெண் குரல் போலவும் பக்குவப் படுத்தி இருந்தான்.  ஆகவே இப்போதும் அப்படியே பெண்குரலில்  குழந்தையைச் சமாதானம் செய்ய அதுவும் உறங்கிவிட்டது.

அதற்குள்ளாக வியாசர் தூங்கிக் கொண்டிருந்த இடத்தை நோக்கி ராக்ஷசக் கூட்டம் செல்வதை அர்ஜுனன் உணர்ந்து கொண்டான்.  அவர்கள் அங்கே சென்று அடைவதற்கு முன்னர் தான் அங்கே செல்ல  விரும்பினான் அவன்.   அவசரமாகச் சென்றதில் தடுமாறிக் கீழேயும் விழுந்தான்.  ஆனாலும் குழந்தையைக் கீழே போடவில்லை.  பத்திரமாகப் பாதுகாத்தான்.   ஆனால் குழந்தை விழித்து விட்டான்.  என்ன அருமையான , அற்புதமான குழந்தை. கீழே விழத் தெரிந்தும் அழவே இல்லை.  பயப்படவே இல்லை.  அர்ஜுனனைப் பார்த்துச் சிரித்தான் அந்தக் குழந்தை. சித்தப்பன் தனக்கு ஏதோ விளையாட்டுக் காட்டுவதாக அதன் நினைப்புப் போலும்.  குழந்தை இந்த சாகசங்களை எல்லாம் உள்ளூர அனுபவிக்கிறதோ என்ற எண்ணம் அர்ஜுனன் மனதில் எழுந்தது.   ஆசாரியர் படுத்திருந்த இடத்துக்கு அருகே ஒருவழியாய் அர்ஜுனன் வந்து சேர்ந்துவிட்டான்.


காட்டுப்பாதையில் முட்களையும், புதர்களையும் விலக்கிக் கொண்டு மரத்தில் இருந்து குதித்த ராக்ஷசர்கள், பெரிய பெரிய அடிகள் வைத்து நடந்து வரும் சப்தம் நன்றாகவே கேட்டது இப்போது.  ஆசாரியரோ, யாக குண்டம் எரிந்து கொண்டிருக்க அதன் எதிரே அமைதியாக அமர்ந்திருந்தார். அவரின் ஒரு பக்கம் குந்தியும், யுதிஷ்டிரனும் இருக்க, மறுபக்கம் நகுல, சஹாதேவர்கள் நின்றிருந்தனர்.  அவருக்குப் பின்னால் சற்று தூரத்தில் ஜைமினி ரிஷியும், மற்றச் சீடர்களும் காணப்பட்டனர். வரவிருக்கும் ஆபத்தை அனைவரும் உணர்ந்திருக்கிறார்கள் என்பதும் புரிந்தது.  அனைவருமே வெளிப்பார்வைக்கு அமைதியாகத் தோன்றினாலும் உள்ளூர அச்சத்துடன் இருப்பதும் தெரிந்தது. அமைதியாக இருந்தவர் வியாசர் ஒருவரே.  அவர் சுயக் கட்டுப்பாட்டின் மூலமும் இம்மாதிரியான பல நிகழ்ச்சிகளைக் கண்டிருக்கிற அனுபவத்தினாலும் இதை எதிர்கொள்ளத் தயாராகக் காத்திருந்தார்.  ஆனால் அவர் அமைதியும் ,சாந்தமும் மற்றவர்களைப் போய்ச் சேரவில்லை.  என்றாலும் ஒருவரும் பேசவில்லை.

ஓடோடிச் சென்ற அர்ஜுனன் நிலைமையை ஒருவாறு உணர்ந்தவனாய் யாக குண்டத்துக்கு எதிரே அமர்ந்திருந்த வியாசரிடம் கடோத்கஜனைக் கொடுத்தான்.  அன்போடும், கருணையோடும் குழந்தையை வாங்கிக் கொண்ட வியாசர், “ஜைமினி, அக்னி எரியக் கூடிய பொருட்களைக் கொண்டு வா.  அக்னிக்குக் கொடுக்கக் கூடிய ஆஹுதியையும் ஏற்பாடு செய்.  நாம் அவன் பாதுகாப்பை நாடுவோம்.” என்றார்.  ஜைமினி ஒரு மரக்கட்டையை எடுத்து அதில் நெருப்பு உண்டாக்கி அக்னி குண்டத்தில் போட்டுவிட்டுக் கைநிறைய தானியங்களையும் எடுத்து ஆஹுதியாக அக்னி குண்டத்தில் அளித்தார்.  தீ கொழுந்து விட்டு எரிந்தது.  அந்த இடமே நல்ல வெளிச்சமாக ஆகியது.  கடோத்கஜன் நன்கு கண்களை விழித்து வியாசரையே பார்த்தான்.  வியாசர் குழந்தையைக்கொஞ்சும் விதத்தில், சப்தம் கொடுக்கவே கடோத்கஜனும் அதற்கு ஏற்பச் சிரித்துக் கொண்டே நெளிந்து கொடுத்தான்.  வியாசர் அவன் வாயில் தேனை வைக்க, அதைச் சுவைத்து உண்டான் கடோத்கஜன்.  அவனுக்கு மிகவும் பிடித்தது என்பது அவன் சப்புக் கொட்டிச் சாப்பிடுவதில் தெரிந்தது.  ஒரு கையால் வியாசரின் நீண்ட வெண்தாடியைப் பிடித்து இழுத்த வண்ணம், அவர் கொடுத்த தேனை அருந்திய கடோத்கஜன் விரைவில் மீண்டும் உறக்கத்தில் ஆழ்ந்தான்.

மிருகங்களின் எலும்புகளால் செய்யப்பட்ட கூரான ஆயுதங்களைத் தாங்கிய வண்ணம், கொலை செய்யும் எண்ணத்துடன் அங்கே வந்து சுற்றி வளைத்துக் கொண்ட ராக்ஷசக் கூட்டம் யாக குண்டத்தின் வெளிச்சம் படும்படியாக வந்து நின்றது.  நடப்பதைப் பார்த்து செய்வதறியாமல் திகைத்தது.  அவர்களுடைய மூளையில், ஆசாரியரும், பீமனின் சகோதரர்களும் அவன் தாயும், மற்றச் சீடர்கள்,ஜைமினி அனைவருமே இந்த நடு இரவில் நன்கு உறங்குவார்கள்.  அப்போது சப்தமில்லாமல் வந்து ஆயுதங்களால் தாக்கி அனைவரின் மண்டையையும் உடைத்துவிட வேண்டும் என்பதே பதிந்திருந்தது.  அனைவர் மண்டையையும் உடைக்கப் போகிறோம் என்ற எண்ணத்தோடு வந்தவர்கள் இங்கே ஒரு ஆச்சரியத்தை அன்றோ பார்க்க நேர்ந்தது!  ஆச்சரியத்திலும் ஆச்சரியம்!  இந்த ஆசாரியன் என்னும் கிழவன் தூங்கவே இல்லை.  யாக குண்டத்துக்கு எதிரே நன்றாக விழித்துக் கொண்டு அமர்ந்திருக்கிறான்.  அவன் கரங்களில் நம் வாரிசு, விரோசனனின் மறுபிறவியான, கடோத்கஜன்.   இப்போது என்ன செய்யலாம்?  ஒருவரை பார்த்துக் கொண்டு முட்டாள் தனமாக விழித்தனர்.  அடுத்து என்ன செய்யலாம் என யோசித்துக் கொண்டு நின்றனர்.

ஆசாரியர் அவர்கள் எண்ணத்தையே அறியாதவர் போல அவர்களைக் கனிவுடன் பார்த்தார்.  “என் குழந்தைகளே, ஏன் அங்கேயே நின்றுவிட்டீர்கள்?  இங்கே வாருங்கள்.  என் அருகே வந்து அமருங்கள்.  ஆனால் சப்தம் செய்யாதீர்கள்.  குழந்தை கடோத்கஜன் தூங்குகிறன்.  அவன் விழிக்கும்படி சப்தம் செய்யாதீர்கள்.” என்றார்.  தடுமாறித் திகைத்தனர் ராக்ஷசர்கள். கடோத்கஜன் அங்கே எப்படி வந்தான் என்பது அவர்களுக்குப் புரியாததொரு புதிராக இருந்தது.  மாலையில் ஹிடும்பியுடன் ரகசியமாகப் பேசி இந்தத் திட்டத்தைத் தீர்மானித்துக் கொண்டு அனைவரும் பிரிந்த பின்னர் கடோத்கஜனைத் தூக்கிக் கொண்டு ஹிடும்பி மரத்தின் மேல் ஏறித் தன் குடிசைக்குள் சென்றதை அவர்கள் அனைவருமே பார்த்திருந்தனர்.  இப்போது எப்படி இங்கே?  ஒவ்வொருவராக ராக்ஷசர்கள் வியாசரின் அருகே வந்து அந்த யாக குண்டத்தைச் சுற்றி அமர்ந்து கொண்டனர்.   தன் விரலை உதட்டின் மேல் வைத்து, “சப்தம் வேண்டாம்!” என்று எச்சரித்துக் கொண்டிருந்தார் வியாசர். வியாசர் எச்சரிக்கவில்லை என்றால் கூட அந்த ராக்ஷசர்கள் தங்கள் மன்னர் குல வாரிசு உறங்கும்போது சப்தம் போட்டிருக்க மாட்டார்கள்.  வியாசரின் மடியில் சொகுசாய்ப் படுத்து  உறங்கும் கடோத்கஜனைப் பார்த்த வண்ணம் அனைவரும் அமர்ந்திருந்தனர்.

Saturday, December 7, 2013

பிள்ளையைத் திருடச் செல்லும் தகப்பன்!

“எதைக் குறித்துப் பேசுகிறீர்கள், குழந்தைகளே!” வியாசரின் குரல் கேட்டது.  அவரும் எழுந்து அமர்ந்திருந்தார்.  தூக்கம் கலையத் தன் கண்களைத் தேய்த்துவிட்டுக் கொண்டார்.  “ஆசாரியரே, பீமனுடைய உத்தரவு இல்லாமல்,  இந்த ராக்ஷசர்கள் எங்கோ பயணம் கிளம்புவதாய்த் தெரிகிறது.  ராக்ஷசர்களிடையே அரசனின் ஆணையை மீறும் வழக்கம் இல்லை.  இவர்களின் பழக்கத்திலிருந்து இது மாறுபட்டதாய்த் தெரிகிறது.  ஒருவேளை அவர்கள் நம்மைத் தாக்க ஏற்பாடுகள் செய்கின்றனரோ?  நட்ட நடு இரவில் இப்படி ஒரு பயணம் கிளம்பினார்கள் எனில் அவர்கள் அப்போதெல்லாம் மிகக் கொடூரமாகவே நடந்து கொள்வதைக் கண்டிருக்கிறோம்.  “சஹாதேவன் வியாசரிடம் தன் சந்தேகத்தைக் கூறினான்.  “அப்படி யாரையேனும் அவர்கள் தாக்க எண்ணினால் முதல் ஆள் நானாகவே இருப்பேன்.” என்ற வியாசர் புன்முறுவல் செய்தார்.  மேலும் தொடர்ந்து, “ ஆனால் நான் எவருக்கும் ஊறு விளைவிக்காதவன். “ என்றார்.  “உங்களை ஏன் அவர்கள் தாக்கவேண்டும் ஆசாரியரே!” அர்ஜுனன் கேட்டான்.

“அவர்கள் தங்கள் மன்னன் ஆன வ்ருகோதரனை மிகவும் நேசிப்பதோடு இல்லாமல் அவர்களின் முன்னோரான விரோசனனே திரும்ப வந்துவிட்டதாகவும் நினைக்கின்றனர்.  அப்படி எண்ணியே அவனுக்கு மரியாதை செய்கின்றனர்.  சாதாரணமாக அவர்கள் தங்கள் அருமை மன்னனின் பாட்டனுக்கு எந்தத் தீங்கும் நினைப்பவர்கள் அல்ல!” என்ற வியாசர் சற்று நிறுத்தினார்.  சற்றுத் தொலைவில் மரங்களின் மேல் கட்டப்பட்ட வீடுகளிலிருந்து குதித்த ராக்ஷசர்கள் தங்களுக்குள்ளே கிசு கிசுவென ஏதோ பேசிக் கொள்ளும் சப்தம், மெதுவாக அவருக்குக் கேட்டது.  சற்று நேரம் உற்றுக் கவனித்தார்.  “ஓ, எனக்குப் புரிந்து விட்டது விஷயம்.  நான் கடோத்கஜனை அவர்களிடமிருந்து பிரிக்கப் போவதாய் நினைக்கின்றனர்.  ஆஹா, அவன் பரதனுடைய வம்சத்தில் பிறந்திருக்கும் குரு குலத்தினரின் முதல் வாரிசு என்றேன் அல்லவா? அது அவர்களிடையே சந்தேகத்தைக் கிளப்பி விட்டிருக்கிறது.” என்றார் வியாசர்.

“ஆம், ஆசாரியரே, அவர்கள் இந்த விஷயத்தில் சற்றும் விட்டுக் கொடுக்க மாட்டார்கள்.  தங்கள் அரசனின் வாரிசு விஷயத்தில் மிகவும் உணர்ச்சி வசப்படுவார்கள்.   இந்த ராக்ஷசர்கள் அனைவருமே ஹிடும்பியின் குடும்பத்தோடு மிகவும் அன்பும், பாசமும் கொண்டவர்கள்.  ஹிடும்பியிடம் மாறாத மரியாதையும் அவர்களுக்கு உண்டு.  கடோத்கஜனை அவர்கள் கடவுளாகவே நினைக்கின்றனர்.  அவனைத் தூக்கிச் செல்ல நினைத்தால் எதைக் கொடுத்தாவது அதைத் தடுக்கவே முயல்வார்கள்.  யாராலும் அவனைத் தூக்கிச் செல்ல முடியாது.  தூக்கிச் செல்ல விடமாட்டார்கள்.”  என்றான் அர்ஜுனன்.

வியாசர் சாந்தமாக, “அவர்கள் வரட்டும், பார்க்கலாம்.” என்றார்.  “இது போன்ற பல தாக்குதல்களை இதற்கு முன்னால் நான் சந்தித்திருக்கிறேன்.  அந்த மஹாதேவன் என்னைக் கைவிட மாட்டான். அவன் இருக்கிறான் என்னைக் காப்பாற்ற!  நான் இப்படி எல்லாம் இறந்தும் போக மாட்டேன்.  நான் இறக்க வேண்டும் என்று நினைத்தால் தான் என் உயிர் என்னை விட்டுப்போகும்.  , இந்த உடலை விட வேண்டும் என நான் நினைக்கையிலேயே என் உயிர் என் உடலை விட்டுப் பிரியும்.  இது அந்த மஹாதேவன் எனக்கு அளித்த மாபெரும் வரம்.” என்றார் வியாசர்.

“நான் இருக்கையில் உங்களில் எவரையும் அவர்கள் தொடக்கூட முடியாது.” என்றான் பீமன்.  அர்ஜுனன் சிரித்துக் கொண்டே, “அண்ணாரே, தாங்கள் தங்கள் குடிமக்களிடம் மிகவும் நம்பிக்கை வைத்திருப்பது போல் தெரிகிறது.  உங்களுக்கு அவர்களிடம் பிடிப்பு அதிகம் என நினைக்கிறீர்கள்.  அதை நம்புகிறீர்கள்.” என்றான்.  அச்சமூட்டும் வகையில் கேட்டுக் கொண்டிருந்த ராக்ஷசர்களின் அசைவுகள் , அவர்கள் எழுப்பிய சப்தங்கள் இப்போது தெளிவாகக் கேட்க ஆரம்பித்தது.  “பீமா, இப்போது நம் எல்லாரையும், ஆசாரியர் உட்பட காத்துக்கொள்ள ஒரே ஒரு வழிதான் உள்ளது.  நீ உடனே போய் கடோத்கஜனைத் தூக்கி வா.  அப்போது தான் நாம் பத்திரமாக இருப்போம்.” என்று அர்ஜுனன் பீமனிடம் கூறினான்.  “கடவுளே, அவன் அம்மாவோடு அவள் அரவணைப்பில் தூங்கிக் கொண்டிருக்கையில் நான் எப்படி அவனைத் தூக்கி வர இயலும்? “ இயலாமையில் கை விரித்தான் பீமன்.  “ஒருவேளை அப்படி நான் தூக்கி வந்தேன் எனில், நாம் கடோத்கஜனை இங்கிருந்து பிரித்துத் தூக்கிச் செல்லப் போகிறோம்;  அவனைக் கடத்தப் போகிறோம் என்னும் அவர்கள் எண்ணம் உறுதியாகிவிடும்.  ஆனால் உனக்காக வேண்டுமானால், ஹிடும்பியை இங்கே வரவழைக்கிறேன்.”

“ஐயோ, வேண்டாம், வேண்டாம், அதை மட்டும் செய்யாதே.  நீ அவளை அழைக்கும் சப்தத்தில் இந்த மொத்தக் காடே அதிர்ந்து போய்விடும்.  நீ உன் முரட்டுக்குரலில் கத்துவாய். தாங்காது!” என்று அர்ஜுனன் கூறினான்.  “அண்ணா,” என இடைமறித்த சஹாதேவன், “அண்ணா, அர்ஜுனன் கூறிய வழிதான் சரியானது.  நீங்கள் உடனே போய்க் குழந்தையைத் தூக்கி வாருங்கள்.” என்றான்.  “வா, பீமா, நேரம் இல்லை. மிகக் குறைவாகவே உள்ளது.  ம்ஹூம், அம்மாவை இப்போது எழுப்புவதில் எந்த பலனும் இல்லை.  யுதிஷ்டிர அண்ணாவையும், எழுப்பவேண்டாம்.  நகுலனையும் எழுப்பாதே..  சப்தங்கள் வரும் திசை எனக்குப் புரிந்து விட்டது.  சீக்கிரமாய் வா, பீமா.  அவர்கள் இங்கே நம்மை நெருங்குவதற்குள்ளாக கடோத்கஜன் நம்மிடையே இருந்தாக வேண்டும்.  எப்படியோ அவனைக் கொண்டுவரவேண்டும்.” என்றான் அர்ஜுனன்.

பீமனுக்கு இந்த வழி பிடிக்கவில்லை. தன்னிரு கரங்களையும் தூக்கித் தான் செயலற்று இருப்பதைக் காட்டிக் கொண்டான்.  எனினும் அர்ஜுனனைத் தொடர்ந்து  அவனும் மெதுவாக நகர்ந்தான்.  வீரமான  சாகசங்களை நிகழ்த்துவதில் பீமனுக்குப் பிரியம் உண்டு.  அவனுக்கு மிகவும் பிடித்தமானதும் கூட.  ஆனால் இப்படி நட்ட நடு இரவில், தன் சொந்தக் குழந்தையையே திருடி வரும் நிலை! ம்ஹூம், இது அவனுக்கு ஏற்றதே அல்ல.  ஆனால் அர்ஜுனனின் சமயோசித புத்தி குறித்தும் அவன் திறமையைக் குறித்தும் அவன் நன்கறிவான்.  தங்களால் சமாளிக்க இயலாத ஒரு நிகழ்வு நடக்கையில் எவ்விதம் அதிலிருந்து வெளிவருவது என்பதை அவன் எல்லாக் கோணங்களில் இருந்தும் சிந்தித்து முடிவெடுப்பான் என்பதையும் பீமன் அறிவான்.  ஆகையால் அவனால் எதுவும் சொல்ல முடியவில்லை.  ஆசாரியர் வியாசர் அவர்களைப் பார்த்தார், மெல்ல,” எங்களைக் குறித்துக் கவலை வேண்டாம்.  அந்த மஹாதேவன் எங்களைக் காப்பான்.” என்றார்.  “நம்மை நாமே காத்துக்கொள்ள நம்மால் முடிந்தவரை முயன்று பார்க்கலாம்.” என்றான் அர்ஜுனன்.  “இருட்டாக இருக்கையிலேயே கடோத்கஜனை இங்கே தூக்கி வந்துவிடுவது தான் நல்லது.” என்றான் மேலும்.

“சஹாதேவா, ஜைமினியை எழுப்பு, விரைவில்! நான் இந்த யாக குண்டத்தில் நெருப்பு மூட்டி வெளிச்சம் உண்டாக்குகிறேன்.” என்றார் வியாசர்.  “இப்போது சரியான நேரம் இல்லை ஆசாரியரே.  இன்னும் சிறிது நேரத்துக்கு இங்கே வெளிச்சம் உண்டாக்க வேண்டாம்.  நாங்கள் விரைவில் போய் இந்த இருட்டிலேயே கடோத்கஜனைத் தூக்கி வந்து விடுகிறோம்.” என்றான் அர்ஜுனன்.  பீமனும், அர்ஜுனனும் மெல்ல மெல்ல நகர்ந்து சென்றனர்.  காற்றின் திசையால் ராக்ஷசர்களின் குரலொலிகள் சில சமயங்களில் தெளிவாகவும்,அவ்வப்போது தெளிவில்லாமலும் கேட்டுக் கொண்டிருந்தது.  என்றாலும் அவர்களால் எந்தத் திசையிலிருந்து அவர்கள் நகர்கின்றனர் என்பதைப் புரிந்து கொள்ள முடிந்தது.  அடர்ந்து கருமையாய்க் காணப்படும் கும்மிருட்டிலும் அர்ஜுனனுக்கு எளிதில் திசைகளையும், செல்லும் வழியையும் கண்டு கொள்ள முடியும்.  அந்த வசதியைப் பயன்படுத்திக் கொண்டு பீமனைத் தனக்கு முன்னே அவன் குடிசையை நோக்கி நகர்த்திக் கொண்டிருந்தான் அர்ஜுனன்.  பீமனின் கையையும் இறுகப்பற்றி இருந்தான்.  இருளில் அவன் முன்னே சென்று இவன் அவனைத் தொலைத்துவிட்டால்!! அர்ஜுனன் எதற்கும் தயாராக இருந்தான்.

மிகுந்த எச்சரிக்கையுடன், கொஞ்சம் சுற்றிச் சுற்றிப் போன அந்த வழியில் சில சமயம் தடுமாறவும் செய்தனர் இருவரும்.  கடைசியில் ஒரு வழியாக மூன்று மரங்கள்  நெருங்கி வளர்ந்திருக்கும் இடத்தில் மரக்கிளைகளைச் சேர்த்துக் கட்டப்பட்டிருந்த பெரிய குடிசையை அடைந்தனர்.  அது தான் பீமனும், ஹிடும்பியும் தங்கி இருந்த அரண்மனை.  மற்றக் குடிசைகளை விட இது பெரிதாகவே இருந்தது.  “ஆஹா, நாம் இப்போது மரத்தின் மேல் ஏறித்தான் ஆகவேண்டும். நூலேணி மடித்து மேலே வைக்கப்பட்டிருக்கும் அல்லவா?” என்றான் அர்ஜுனன் அப்போது தான் நினைவில் வந்தவனாக.   பீமன் பெருமூச்சு விட்டான். “என்னைப் பார். இவ்வளவு குண்டாக இருந்து தொலைக்கிறேன்.  நான் மரத்தில் ஏறினால் அது போடும் சப்தத்தில் ஹிடும்பி எழுந்து விடுவாள். அப்புறம் அதோகதிதான்!”  என்றான்.  “கவலைப்படாதே!  நீ கீழேயே இரு.  நான் மெதுவாக மரத்தின் மேலேறி, நூலேணியின் ஒரு முனையைக் கீழே உனக்காகப் போடுகிறேன்.  நீ அப்புறம் மேலே ஏறி வரலாம்.” என்றான் அர்ஜுனன்.  “ஹிடும்பிக்கு மட்டும் மேலே வந்திருப்பது நீதான் என்பது தெரிந்தால், உன்னைக் கொன்று பக்ஷணம் பண்ணிவிடுவாள்.” என்றான் பீமன் கவலையுடன்.Friday, December 6, 2013

நள்ளிரவில் நடந்த விநோதங்கள்!

மறுநாள் மாலையில் யாகத்தீயை ஒட்டி பாண்டவர்கள் ஐவரும், குந்தியுடன் அமர்ந்திருக்க வியாசரும் அங்கே அமர்ந்திருந்தார். அப்போது வியாசர் சகோதரர்கள் ராக்ஷசவர்த்தத்தை விட்டு நீங்கி வெளிப்படும் காலம் நெருங்கிவிட்டதாகவும், இதுவே தக்க சமயம் என்றும் கூறினார்.  பீமனுக்கு இஷ்டமே இல்லை.  அவனுக்குத் தனக்கென ஒரு தனி ராஜ்யம் இருப்பதை விரும்பியதோடு அதை அனுபவித்து ரசித்து அரசனாகவே வாழ விரும்பினான்.  அதோடு இல்லை;  ஹிடும்பியையும், அவளுக்கும் தனக்கும் பிறந்த கடோத்கஜனையும்  மிகவும் நேசித்தான்.  கடோத்கஜனைக் குழந்தையிலேயே பிரிய பீமன் விரும்பவில்லை.  ஆறு மாதக் குழந்தையாக இருக்கும் தன் மகனின் அருகேயே தானும் இருந்து அவன் வளர்ச்சியைக் காண விரும்பினான்.  ஆனால் மற்றவர்களோ எப்போது அங்கிருந்து ஓடலாம் என்றே காத்திருந்தனர்.  சொல்லப் போனால் ராக்ஷசவர்த்தம் வந்ததில் இருந்தே அங்கிருந்து செல்லவேண்டும் என்றே எண்ணினர்.

அவர்கள் அப்போது வெளிப்படுவதன் நன்மைகளை வியாசர் விரிவாக எடுத்து உரைத்தார். காம்பில்யத்தின் இளவரசியான திரெளபதிக்கு நடைபெறப் போகும் சுயம்வரத்தையும் அதை ஒட்டி ஆர்யவர்த்தத்தின் அனைத்து அரசர்கள், இளவரசர்கள் கூடி இருக்கும் மகாசபையில் அவர்கள் தங்களை வெளிப் படுத்திக் கொள்வது நன்மை பயக்கும் என்றார்.  அதோடு இல்லாமல் மற்ற அரசர்கள் முன்னிலையில் துரியோதனனால் அவர்களை ஒதுக்கித் தள்ள முடியாது என்றும் அவனும் வரவேற்றே ஆக வேண்டிய நிலையில் இருப்பான் என்பதையும் விளக்கினார்.  பீஷ்மரும், மஹாராணி சத்யவதியும் எப்போது அவர்கள் வருவார்கள் என்று காத்திருப்பதாகவும் கூறினார்.  “கிருஷ்ண வாசுதேவனும் நீங்கள் வெளிப்படுவதை விரும்புகிறான்.  அவனுடன் நீங்கள் ஒத்துப் போவதையே நான் விரும்புவேன்.  அவன் உங்களுக்கு நல்ல உறவினன் மட்டுமல்லாமல் நல்ல நண்பனாகவும் இருப்பான்.”  என்றார் வியாசர்.  யாரும் ஒன்றும் சொல்லவில்லை.  அவ்வளவில் அந்தக் கூட்டம் முடிந்து இரவு உணவுக்குப் பின்னர் அனைவரும் அங்கேயே படுத்து உறங்கினர்.  நடு இரவு. எல்லாருமே அசந்து உறங்கினார்கள்.    யாகத் தீ மெதுவாக அணைந்து புகையை மட்டும் கக்கிக் கொண்டிருந்தது.  அந்தக் காட்டின் மெளனத்தையும் தாண்டி மிகப் பலமான காற்று, விர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ரெனச் சுழற்றி அடித்துக் கொண்டிருந்தது.  அதைத் தவிர வேறு சப்தமே இல்லை.  அப்போது அர்ஜுனனுக்குத்  திடீரென விழிப்பு வந்து விட்டது.

அவனுடைய உணர்வுகள் அனைத்துமே எப்போதுமே விழிப்பில் இருக்கும்.  ஆகவே ஏதோ ஒன்று நடக்கப் போகிறது என்ற உள்ளுணர்வில் அவன் விழித்து எழுந்துவிட்டான்.  ஏதோ நடக்கக்கூடாதது ஒன்று நடக்கப்போகிறது.  உற்றுக் கவனித்தான் அர்ஜுனன்.  அப்போது, “தொப்” என்று ஒரு சப்தம் மிக மிக லேசாகக் கேட்டது.  சற்று நேரத்தில் அதைப் போன்றே மீண்டும் ஒரு தொப்.  அடுத்து இன்னும் ஒரு தொப்!  ம்ஹூம், இதில் ஏதோ விஷயம் இருக்கிறது.  மரங்களில் இருந்து பழங்கள் கீழே விழும் சப்தம் எனில், இப்போது எந்த மரத்திலும் பழங்களே கிடையாதே!  யோசித்த அர்ஜுனனுக்கு, இது மனிதர்கள்/அதாவது ராக்ஷசர்கள் ஒருவர் பின் ஒருவராக அவர்களின் உயரமான குடியிருப்பிலிருந்து சப்த மில்லாமல் குதிக்கும் ஓசையே என்று நிச்சயம் ஆனது.  அடர்ந்த அந்தக் காட்டுக்குள்ளே ராக்ஷசர்கள் அவர்களின் மரத்து மேல் இருக்கும் வீடுகளில் இருந்து ஒருவர் ஒருவராகக் கீழே குதிப்பது என்பதை நினைத்தால் கொஞ்சம் அச்சமூட்டுவதாகவே இருந்தது.   அவர்கள் இம்மாதிரி ரகசியமாகப் பயணம் கிளம்புவது எனில் அது யாரையேனும் கொலை செய்து உண்ணத் தான் இருக்கும்.  மற்ற நேரங்களில் இப்படிக் கிளம்புவது இல்லை. 

யாக குண்டத்திலிருந்து வந்த அந்தக் குறைந்த ஒளியில் தன் கண்களைத் தீட்டிக் கொண்டு உற்றுக் கவனித்தான் அர்ஜுனன்.  அணைந்து கொண்டிருந்த அந்தக் குண்டத்தின் அருகே திறந்த வானத்தின் கீழே ஒரு குழந்தையைப் போல் வியாசர் தூங்கிக் கொண்டிருந்தார்.  சற்று தள்ளிக் குந்தியும், அவள் அருகே வரிசையாக யுதிஷ்டிரனும், நகுலன், சஹாதேவனும் படுத்திருந்தனர்.  ஜைமினியும் மற்ற மாணாக்கர்களும் இன்னும் தள்ளி வேறொரு திசையில் படுத்திருந்தனர்.  இன்னும் தொலைவிலே அவர்களைப் பாதுகாப்பது போல் பீமன் படுத்திருந்தான்.  அவன் விடுத்த குறட்டை ஒலி ஒரு கர்ஜனையைப் போல் கேட்டது.  ஆனாலும் அவன் ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பதை அர்ஜுனன் புரிந்து கொண்டான்.  இந்தக் காட்டில் தரையில், பூமியில் படுப்பது பாதுகாப்புக்கு உரியதன்று என்பதை அர்ஜுனன் அறிவான்.  இரவு நேரங்களில் மரங்களின் மேலுள்ள வீடுகளில் படுத்து உறங்குவதே பாதுகாப்பு என்பதையும் அறிந்திருந்தான்.  ஆனால் வியாசரால் மரத்தின் மேல் ஏறிப்படுப்பது என்பது இயலாது;  அது தான் அவர் உயிரைக்காக்கும் என்றாலும் அம்மாதிரிப் படுப்பதை அவர் விரும்பவில்லை.  ஆகவே அனைவருமே கீழே படுத்து உறங்கினார்கள்.  ராக்ஷசர்களுக்கு இது நல்ல வாய்ப்பாக அமைந்து விட்டதோ?

அர்ஜுனன் தன் கண்களை நன்கு திறந்து கொண்டு காற்றில் வாசனைகளை முகர்ந்தான்.  ஒவ்வொரு நிமிடமும் ஒரு ராக்ஷசன் மரத்தின் மேலிருந்து கீழே குதிப்பது கேட்டுக் கொண்டிருந்தது.  ஏதோ ஒன்று நடக்கிறது அல்லது நடந்து கொண்டிருக்கிறது.  ராக்ஷச ராஜா வ்ருகோதரனுக்கு அது குறித்து எதுவும் தெரியாது.   அவனறியாமல் ஏதோ நடக்கிறது.  அர்ஜுனன் சப்தமில்லாமல் சஹாதேவனை எழுப்பினான்.  அவனுக்குத் தன் சந்தேகத்தை உறுதி செய்து கொள்ள வேண்டும்.  சஹாதேவனும் உற்றுக் கேட்டுவிட்டு மரங்களின் இலைகளின் மெல்லிய அசைவையும், ராக்ஷசர்கள் கீழே குதிக்கும் சப்தத்தையும், அவர்கள் காய்ந்த இலைகளின் மீது நடக்கும் போது எழும் கரகரவென்ற சப்தத்தையும் கேட்டுவிட்டு ராக்ஷசர்கள் அனைவரும் ஒவ்வொருவராக மரத்தின் மீதிருந்து இறங்கி எங்கோ ஓர் இடத்தில் கூடுகின்றனர் என்பதை அறிந்து கொண்டான்.  ஏற்கெனவே அவர்களுக்குள்ளாகப் பேசி முடிவு செய்திருக்கின்றனர்.  அதன்படி கூடுகின்றனர் என்பதையும் புரிந்து கொண்டனர் இருவரும்.  இந்தக் கபட நாடகத்தின் பின்னே எத்தகைய சூது ஒளிந்திருக்கிறதோ என இருவரும் யோசித்தனர்.  அவர்கள் அனைவரையும் ராக்ஷசர்கள் தாக்கப்போகின்றனரா?   அப்படித் தான் இருக்க வேண்டும்.

ராக்ஷசர்கள் வ்ருகோதரனிடம் விசுவாசம் வைத்திருந்தனர்.  அவனிடம் எல்லையற்ற அன்பும் மரியாதையும் காட்டினார்கள்.  ஏனெனில் அவன் மிக பலசாலியாக இருந்ததோடு அல்லாமல் அவர்களின் முன்னோரான விரோசனனின் ஆவி அவனிடம் பரிபூர்ணமாக இறங்கி இருந்ததாக நம்பினார்கள்.  பீமனை ஏற்றுக் கொண்ட அவர்களால் பீமனின் சகோதரர்களை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.  அவர்களோடு ஒத்துப் போகவோ, சமரசம் செய்து கொள்ளவோ விரும்பவில்லை. அவர்களைப் பொறுத்த வரை பீமனின் சகோதரர்கள் வெளி தேசத்திலிருந்து வந்த அந்நியர்களே!  அதுவும் இப்போது ஆசாரியர் வியாசர் வந்திருப்பதினாலும் அவர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டிருக்கக் கூடும்.   ஆகவே அவர்கள் அனைவரையும் ஒட்டு மொத்தமாகத் தாக்கிக் கொல்ல வேண்டுமென நினைக்கலாம்.  அர்ஜுனன் மெல்லத் தவழ்ந்து சென்று பீமனை எழுப்பினான்.  அதற்கு அவன் மிக முயற்சிக்க வேண்டி இருந்தது.  சந்தோஷமாய் சுக நித்திரை செய்து கொண்டிருந்த பீமனுக்குத் தன்னுணர்வு வரவும் நேரம் பிடித்தது.  ஆனால் அவன் சுய உணர்வுக்கு வந்ததுமே ஏதோ நடக்கிறது என்பதையும் அசாதாரணமான ஒன்று நடப்பதையும் புரிந்து கொண்டு விட்டான்.  தன்னருகே வைத்திருந்த தன் ஆயுதமான கனத்த தடியைக் கையிலேந்திக் கொண்டு தாக்குதலைச் சமாளிக்கத் தயாராகி விட்டான்.

அர்ஜுனன் அப்போது, “ சகோதரா, பீமா, அவர்கள் பலர்;  நாமோ எண்ணிக்கையில் குறைந்தவர்கள்.  எவ்வளவு பேர் இருக்கிறார்கள் என்பதே தெரியவில்லையே!” என்று பீமன் காதில் கிசு கிசுத்தான். சஹாதேவன் உடனே தன் காதை பூமியில் வைத்துக் கேட்டான். சற்று நேரம் கேட்டவன், “அவர்கள் ஐம்பது பேருக்குள்ளாகத் தான் இருக்கின்றனர்.   ஒன்றிரண்டு பேர் கூட இருக்கலாம்.” என்று கூறினான்.  பீமன் உடனே அர்ஜுனனிடம், “உன் வில்லையும், அம்புகளையும் தயார் நிலையில் வைத்திருக்கிறாயா?  உன்னால் இருட்டில் கூட அம்பைக் குறி பார்த்து எய்ய முடியும்!” என்றான்.  “ம்ம்ம், எனக்குத் தெரியும், இருட்டிலும் அம்பு எய்வேன் நான். ஆனால், இந்தக் கூட்டத்தின் முன்னர் நான் எய்யும் பலவீனமான அம்புகள் என்ன செய்ய முடியும்?  சிறிதளவே தாக்க இயலும்.  அதற்கு முன்னர் இந்த இருட்டிலே நம் மண்டைகள் உடைக்கப்பட்டாலும் ஆச்சரியம் இல்லை.  நாம் எங்கிருக்கிறோம், என்ன செய்ய வேண்டும் என்பதைப் புரிந்து கொள்ளும் முன்னரே நம் மண்டைகள் உடைக்கப்பட்டுவிடும்.” என்றான் அர்ஜுனன்.Wednesday, December 4, 2013

வியாசர் வந்து விட்டார்!

அந்த நாளும் வந்தது.  ராக்ஷசவர்த்தத்தின் முக்கியமான ராக்ஷசர்கள் மற்றும் சில பெண் ராக்ஷசிகள், குழந்தைகள் அனைவரும் நிகும்பனுடைய தலைமையில் தங்களை நன்கு அலங்கரித்துக் கொண்டு எல்லைப் பகுதியை நோக்கிச் சென்றனர்.  அவர்களுடன் பீமனும் சென்றான்.  அன்றிரவு எல்லைப் பகுதியில் தங்கிய அவர்கள் மறுநாள் அதிகாலையிலேயே 25 ராக்ஷசர்கள்   பீமனின் தலைமையில் அந்தக் கரடு முரடான, முட்கள் அடர்ந்து, பாறைகளாய்க் காணப்பட்ட எல்லையைக் கடந்து மறுபக்கம் சென்றனர். அந்தப் பக்கம் சென்று தங்களைக் காண வரும் வியாசரை எதிர்கொண்டு வரவேற்று உபசரிக்க வேண்டும் என்பதே பீமனின் நோக்கம்.  அது தான் முறையானது என்பதையும் அவன் அறிந்திருந்தான்.

 எல்லைப் பகுதியின் மறுபக்கம் சென்றவர்களை சிகுரி நாகன் வரவேற்றான்.  அதோடு காலை அநுஷ்டானங்கள் முடிந்ததும் வியாசர் அவர்களைக் காண்பார் என்றும் தெரிவித்தான்.  உண்மையில் அந்த யாகங்கள், யக்ஞங்களைக் காண வேண்டி பீமன் ஆவலுடன் காத்திருந்தான்.  எல்லைப் பகுதி கிராமம் ஆன நாகர்களின் லஹூரியாவுக்கு சிகுரி நாகன் அவர்களை அழைத்துச் சென்றான். நாகர்களின் வாழ்விலும் சரி, ராக்ஷசர்களின் வாழ்விலும் சரி இத்தனை ராக்ஷசர்கள் ஒரு சேர நாகர்களின் நகரத்துக்கு அழைத்துச் செல்லப்படுவது இது தான் முதல் முறையாகும்.  அதுவும் இந்தப் பகல் நேரத்தில், பகல் வெளிச்சத்தில் இவ்வளவு ராக்ஷசர்கள் எவ்வித அச்சமும் இன்றி நாகர்களின் கிராமத்தை நோக்கிப் பயணித்தனர்.

இவ்வளவு ராக்ஷசர்களை எதிர்பார்க்காத நாகர் குடிமக்கள் முதலில் கொஞ்சம் பயப்படவே செய்தனர்.  ஆனால் ராக்ஷசர்கள் தங்களுக்கு எவ்வித அச்சத்தையும் தோற்றுவிக்காமல், தங்களில் எவரையும் தொந்திரவும் செய்யாமல் அவர்கள் பாட்டுப் போய்க் கொண்டிருந்தது ஆச்சரியமாக இருந்தாலும், பின்னர் அதன் காரணம்  என்ன என அறியும் ஆவல் மீதூர்ந்தது.  ராக்ஷசர்களின் வித்தியாசமான உடை அலங்காரம், தலை அலங்காரம் எல்லாமும் நாகர்களின் குழந்தைகளை மிகவும் கவர்ந்தது.  அவர்கள் கும்பல் கும்பலாக இவர்களைப் பின் தொடர்ந்து கூச்சலிட்டுக் கொண்டு ஓடி வந்தனர்.   அவ்வப்போது அவர்களைப் பார்த்து பீமன் கேலி செய்யும் விதத்தில் விளையாட்டாகப் பயமுறுத்தி உறுமிப் பின்னர் அவர்களோடு சேர்ந்து ஒரு குழந்தை போல் சிரித்து அவர்களை உற்சாகப் படுத்திக் கொண்டு சென்றான். அவர்கள் வியாசர் இருக்குமிடத்தை அடைந்ததும், அங்கே வியாசர்,ஜைமினி முதலானோர் அனைத்து அநுஷ்டானங்களையும் முடிக்கும் விதமாகக் கடைசி மந்திரத்தை ஜபித்துக் கொண்டிருப்பதைக் கண்டனர்.  அவர்கள் முடித்து விட்டதை அறிந்ததுமே பீமன் அவர் கால்களில் விழுந்து அவர் காலடி மண்ணைத் திருநீறு போல் தன் நெற்றியில் அணிந்து கொண்டான். வியாசரோ மிகவும் அன்புடன் அவனைக் கட்டி அணைத்துக் கொண்டார்.

மற்ற ராக்ஷசர்களுக்கோ தங்கள் மன்னனின் பாட்டனாருக்கு எவ்விதம் மரியாதை செய்ய வேண்டும் என்று புரியவில்லை.  பீமன் கீழே விழுந்து வணங்கியதைக் கண்ட  அவர்கள் தாங்களும் அவ்விதமே செய்ய நினைத்துத் தங்கள் ஆடை, அணிகளோடு சிரமப்பட்டுக் கீழே விழுந்து அவரை வணங்க அது சுற்றியுள்ள நாகர்களிடையே சிரிப்பை வரவழைத்தது.  ஆனாலும் வியாசர் தங்கள் ஒவ்வொருவரையும் தலையைத் தொட்டு ஆசீர்வதித்ததையும், ராக்ஷசர்களின் மொழியில் கொச்சையாகப்பேசி நலம் விசாரித்ததையும் கண்டு அவர்களுக்கு மனம் மகிழ்ந்தது.  பின்னர் வழக்கமான சடங்கு ஆரம்பித்தது . ஒவ்வொருவருக்கும் ஒரு சிறிய பானையில் பால் அளிக்கப்பட்டது.  அது பசுவின் பாலாகவும் இருக்கலாம்.  ஆட்டுப் பாலாகவும் இருக்கலாம்.  ஏனெனில் அங்கே பசுக்கள் அபூர்வமாகவே காணப்பட்டன.  ராக்ஷசர்கள் அது வரை பாலையே குடித்து அறியாதவர்கள் ஆதலால், அந்தப்பாலையும், பாத்திரத்தையும் சந்தேகமாக உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தனர்.  இதை விட அந்த ஆடுகளை நம்மிடம் கொடுத்திருந்தால் அவற்றின் தோலை அவை உயிரோடு இருக்கும்போதே நம் கைகளாலேயே உரித்து அதன் மாமிசத்தை உண்ணலாமே என்ற எண்ணம் அவர்களிடையே எழுந்தது.

அப்போது ஒவ்வொருவரும் அந்தப் பானையோடு பாலை வியாசரிடம் எடுத்துச் செல்ல, அருகிலிருந்த ஜைமினி வைத்திருந்த ஒரு மூட்டையிலிருந்து ஒரு இலையை எடுத்து அனைவரின் பாலிலும் வியாசர் போட்டுக் கொண்டிருந்தார்.  பின்னர் அனைவரையும் ஆசீர்வதித்து அனுப்பினார். ராக்ஷசர்களுக்கு அந்தப்பாலைக் குடிக்கலாமா வேண்டாமா என்பதில் மிகுந்த சந்தேகம் இருந்தாலும் தங்கள் மன்னனும் அப்படியே செய்வதைக் கண்டு அவர்களும் வேறு வழியில்லாமல் அதையே பின்பற்றினர்.  வேத மந்திரங்கள் ஓதப்பட்டன.  ஒவ்வொருவராகத் தங்கள் வணக்கத்தை வியாசரிடம் வரிசையாகத் தெரிவித்து வருகையில் அங்கே திடீரென ஒரு சந்தோஷக் கூச்சல்.


மிகவும் வியாதியஸ்தர்களாக இருந்தவர்களிடமிருந்தும், ஊனமுற்றவர்களிடமிருந்ந்தும் அந்தக் கூச்சல் எழுந்தது.  தங்கள் துன்பம் தீர்ந்துவிட்டதாகக் கூறி சந்தோஷக் கூச்சலிட்டனர்.  ராக்ஷசர்களுக்கு இப்போதும் என்ன செய்வதெனத் தெரியவில்லை.  ஆனாலும் அவர்களுக்கு இது ஏதோ மந்திர, தந்திரவித்தை நடக்கிறதோ என்ற எண்ணமும் இருந்தது.  அந்த சந்தேகத்துடனேயே அவர்கள் மற்றவர்களைப் பின்பற்றி அப்படியே தாங்களும் நடந்து கொண்டனர்.  வியாசர் அவர்களை ஆசீர்வதிக்கையில் அவர்களில் சிலருக்குத் தங்கள் உபாதை திடீரெனக் குறைந்ததை உணர முடிந்தது.  அப்படி உணர்ந்தவர்கள் அங்கிருக்கும் அனைவரும் அதிசயிக்கும் வகையில் தங்கள் பிரபலமான  போர் நடனத்தை ஆடி அனைவரையும் மகிழ்வித்தனர்.

இந்தச் சடங்குகள் எல்லாம் முடிந்ததும், வியாசர், ஜைமினி, மற்றும் அவர்களின் மாணாக்கர்கள் அனைவருமே நார்களாலும், இலைக்கொடிகளாலும் கட்டப்பட்ட கூண்டுகளில் ஏறி அமர்ந்தனர். ஒவ்வொரு கூண்டும் நான்கு முனைகளிலும் கம்புகளோடு சேர்த்துக் கட்டப்பட்டு நான்கு ராக்ஷசர்களால் சுமந்து வரப்பட்டது.  அந்தப் பாறையான பகுதிகளில், நடக்கக் கூடக் கஷ்டப்படும் இடங்களில் எல்லாம் வெகு எளிதாக அந்த ராக்ஷசர்கள் அவர்களைச் சுமந்து கொண்டு கவனமாக நடந்தனர்.  வியாசருக்குத் தான் இப்படி மேலே ஆகாயத்துக்கும், கீழே பூமிக்கும் இடையில் கூண்டில் அடைபட்டுக் கொண்டு பிரயாணம் செய்வது முதல் அநுபவம்.  அதிலும் சில இடங்களில் பாறைகளை ஒரே தாண்டாகத் தாண்டினார்கள் அந்த ராக்ஷசர்கள்.  ராக்ஷசர்கள் அனைவருக்கும் ஒரு எண்ணம், பாறைகளைத் தாண்டுகையில் வியாசர் பயந்து நடுங்கிப்போய்விடுவார்;  இந்த நீண்ட தாடியுள்ள பாட்டனாருக்கு பயமாய் இருந்தால் என்ன செய்வது எனக் கவலைப்பட்டனர்.  ஆனால் வியாசரோ அதை எல்லாம் கவனிக்கவே இல்லை.  அந்த ராக்ஷசர்களுக்கு உற்சாகம் ஊட்டும் சொற்களை அவர்கள் மொழியில் சொல்லிக் கொண்டு வந்தார். “நல்லது அப்பனே, நன்றாகத் தாண்டுகிறாயே, கவனமாகச் செல்கிறாயே!” என்றெல்லாம் பாராட்டிக் கொண்டும் வந்தார்.

பாறைகள் மேல் ஏறி, இறங்கித் தாண்டி, சரிவில் இறங்கிப் பின்னர் அங்கிருந்த நீண்ட நீர்க்கரை ஓரமாகச் சென்றனர்.  சற்று நேரத்தில் குடியிருப்புகளை நெருங்கிவிட்டனர்.  கண்கள் கண்ணீரால் நிறைந்திருக்க யுதிஷ்டிரன், அர்ஜுனன், நகுலன், சஹாதேவன் ஆகிய நால்வரும் தங்கள் அன்னை குந்தியோடு ஓடோடி வந்தனர்.  அனைவருமே வியாசரின் கால்களில் விழுந்து வணங்கினார்கள்.  தன் கூண்டிலிருந்து வெளியே வந்த வியாசர் தன் அருமைப் பேரன்களை பாசத்தோடு கட்டி அணைத்துக் கொண்டு உச்சி மோந்து ஆசீர்வதித்தார்.  குந்தியையும் தலையைத் தொட்டு ஆசிகள் வழங்கினார்.


 ஹிடும்பியும், மற்ற ராக்ஷசர்களும் உள்ளூர எழுந்த கோபத்துடன் சற்றுத் தள்ளியே நின்றவண்ணம் இவற்றைப் பார்த்துக் கொண்டிருந்தனர்.  வியாசர் அவர்களைப் பார்த்துவிட்டார்.  உடனே தன் கைகளால் அவர்களை அழைத்த வண்ணம் குந்தியைப் பார்த்து, “குந்தி, மருமகள் எங்கே இருக்கிறாள்?  யார் அவள்?  ஓ, இவள் தானா?  இது தான் பீமனின் மகனும் என்  பேரனுமா?  “ என்று கேட்டார்.  பின்னர் தாமே அவர்கள் அருகே நெருங்கினார்.  ஹிடும்பி தன் தோள்களில் தன் அருமை மகன் கடோத்கஜனைச் சுமந்த வண்ணம், தன் கணவனும், அவன் சகோதரர்களும் இந்த வித்தியாசமான கிழவரை வரவேற்ற முறையை ஆச்சரியம் ததும்பும் கண்களால் பார்த்துக் கொண்டிருந்தாள்.  இப்படி ஒரு வரவேற்பை அவள் இன்று வரை கண்டதில்லை.

இப்படி எல்லாம் கீழே விழுந்து வணங்கி வரவேற்பதை சாமானியமாக மனிதர்களால் கடைப்பிடிக்கப்படும் ஒரு நாகரிகப் போக்கு என்பதை அவளால் ஏற்க முடியவில்லை.  அவள் இன்று வரை தங்கள் உயிருக்குப் போராடும் விருந்தாளியைத் தான் பார்த்திருக்கிறாள்.  அவர்களைக் கொல்லத் தயாராக இருக்கும் ராக்ஷசர்களிடமிருந்து தங்களை விடுவித்துக் கொள்ளப்போராடும் அப்பாவி மக்களையே பார்த்திருக்கிறாள்.  அப்போது பீமன் அவள் காதுகளில் மெல்லக் கிசுகிசுத்தான். “பாட்டனாரின் கால்களில் விழுந்து வணங்கு!”  அவளுக்கு என்ன செய்வது என்றே புரியவில்லை.  என்றாலும் தன் முழங்கால்களை மடித்துக் கொண்டு கீழே விழுந்து வணங்க யத்தனித்தவள் அப்படியே தரையில் சாஷ்டாங்கமாக விழுந்தாள்.  பீமன் கத்தினான்; கர்ஜித்தான்.  ஆனால் வியாசர் எதுவுமே நடவாதது போல் கீழே குனிந்து ஹிடும்பியின் தலையைத் தொட்டு ஆசீர்வதித்துப் பின்னர் அவள் கைகளில் இருந்த கடோத்கஜனை மிகவும் அன்போடும் பிரியத்தோடும் தூக்கிக் கொண்டார்.

குழந்தையா அது?  ஆறு மாசத்துக்கு ஒரு ராக்ஷசன் போலவே இருந்தான் கடோத்கஜன்.  வியாசரைப் போலவே கருநிறம், மயிரே இல்லாத தலை, வட்டமான அதே சமயம் பிரகாசமான பெரிய விழிகள், கொழுத்த கைகள், கால்கள், அந்தக் கால்களால் வியாசரை உதைத்த வண்ணம் தன் பலத்தைக் காட்டிய வண்ணம் விளையாடினான் கடோத்கஜன்.  குழந்தையைத் தன் தோள்களில் தூக்கிக் கொண்ட வியாசர் அவனை அப்படியே சுற்றி விளையாட்டுக் காட்டினார். மேலே தூக்கிக் காட்டிச் சிரித்தார்.  முதலில் கொஞ்சம் யோசித்த வண்ணம் அவர் முகத்தையே பார்த்த கடோத்கஜன் பின்னர் சிரிக்க ஆரம்பித்தான்.


 பின்னர் சற்று நேரம் அவர் முகத்தையே உற்றுப் பார்த்த வண்ணம் இருந்தவன் நீண்ட அந்த வெள்ளைத் தாடியைத் தன் கரங்களால் பிடித்து இழுத்ததோடு அல்லாமல் தாடியில் பாதியைத் தன் வாயில் இட்டுச் சுவைத்தான்.  சுற்றி இருந்த அனைவரும் இதைப் பார்த்து ஆனந்தித்தனர்.  பின்னர் வியாசர், ஹிடும்பியைப் பார்த்து, “ஹிடும்பி, இவ்வுலகிலேயே நீ தான் மிகவும் பாக்கியசாலி.  அதிர்ஷ்டம் செய்தவள். பரத குல வம்சத்துக்கு ஒரு நல்ல வாரிசை நீ கொடுத்துவிட்டாய்.  “ என்று சொல்லிக் கொண்டே தன் கைகளால்  பேரனின் மயிரே இல்லாத அந்த வழுக்கைத் தலையை அன்போடு தடவிக் கொடுத்தார்.  குழந்தை அந்தத் தடவலிலும், அவரின் தாடியைப் பிடித்து இழுப்பதிலும் மகிழ்ச்சி அடைந்து சத்தம் போட்டுச் சிரிக்க ஆரம்பித்தான்.
சுற்றி இருந்த அனைவரும்   இந்தக் காட்சியைக் கண்டு  மெய்ம்மறந்து நின்றனர்.  தன்னுடைய கொள்ளுப் பாட்டனரோடு இவ்வளவு விளையாடி ஆனந்திக்கும் கடோத்கஜன் அவர்களுக்கு மகிழ்ச்சியை ஊட்டினான்.


 சகோதரர்கள் ஐவருக்கும் வியாசரின் அன்றாட நடவடிக்கைகளில் எவ்வித மாறுதலும் ஏற்படக் கூடாது என்பதிலும் அவரின் சடங்குகளுக்குக் குந்தகம் விளையக் கூடாது என்பதிலும் கவனம் அதிகமாக இருந்தது.  ஆகவே அவர்கள் நிறையப் பழங்கள், கொட்டைகள், வேர்கள், இலைகள், பூக்கள், காய்கள், தேன் சேகரம் செய்து வைத்தல், தானியங்கள் சேகரித்தல் ஆகியன முன்னேற்பாடுகளாகச் செய்து வைத்திருந்தனர்.  ராக்ஷசவர்த்தத்தில் ராக்ஷசர்களுக்குப் பால், தயிர், நெய் போன்றவை பழக்கமே இல்லை என்பதால் அதை ஈடுகட்டும் விதமாகப் பல்வேறு ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.  அதோடு அல்லாமல் ஆரியர்களின் வாழ்க்கையில் பால், தயிர், நெய் போன்றவை முக்கியத்துவம் பெற்றவை.  வியாசரும் கூட அவை தான் பலம் என்று சொல்வார். ஆனால் ராக்ஷசர்கள் அவற்றைப் பயன்படுத்தியதே இல்லை.  ஆகவே வ்ருகோதரனனின் குடியிருப்புக்குச் செல்லும் முன்னர் வியாசருக்குத் தன் சடங்குகளை இந்த தானியங்கள், பழங்கள், கொட்டைகள், இலைகள், பூக்களின் மூலமே நிறைவேற்றிக்கொள்ள வேண்டி இருந்தது

Tuesday, December 3, 2013

ஹிடும்பியின் மன வேதனை!

“ஓ, அது ஒன்றும் பெரிய விஷயமில்லை தாயே!  ஒரு தாய் தன் குழந்தையைத் தந்தையிடம் ஒப்படைத்துப் பிரிய மறுத்தால், தன் கடமைக்காகத் தந்தை மகனைப் பிரிந்து தான் வரவேண்டும்.  வேறு வழியில்லை.  ஐவரின் வெற்றியும் தர்மத்தோடு பின்னிப் பிணைந்திருப்பதையும் நினைவில் கொள்ளுங்கள் தாயே!  அந்த இளம் குழந்தைக்குத் தற்போது அவன் தாயுடன் இருப்பதே நன்மை பயக்கக் கூடியதாக இருக்கலாம். உங்கள் மகனைப் போல அவன் தன் தந்தையுடன் செல்ல மறுக்கலாம்.” வியாசரால் சிரிப்பை அடக்க முடியாமல் சத்தமாகச் சிரித்தார்.  அவருள் பழைய நினைவுகள் ஓடின.  அவர் குழந்தையாக இருந்தபோது அவர் தாயான சத்யவதி எவ்வாறு தன்னைப் பிரிந்தாள் என்பதைப் பராசரர் பல முறை அவருக்குச் சொல்லி இருக்கிறார். அவை நினைவில் வந்தன. 

“ஓ, நான் அதன் மூலம் சரியான ஒன்றைத் தானே தேர்ந்தெடுத்தேன்.  ஆனால் இந்த ராக்ஷசி தவறு செய்கிறாள்.” என்ற சத்யவதிக்கு வேறு வழியில்லாமல் தன் இளங்குழந்தையைத் தந்தையான பராசரரிடம் ஒப்படைத்த அந்த நிகழ்வு, இன்றளவும் அவள் மனதை வருந்தச் செய்யும் நிகழ்வு கண் முன்னே தோன்றியது.  “ஒரு குழந்தை சரியானபடி வளர்க்கப்பட, பரம்பரையின் நியமங்களைப் பின்பற்ற அவை நன்கறிந்த தகப்பனிடமே வளர வேண்டும்.  அந்தக் குழந்தையால் தான் குடும்பப் பாரம்பரியங்கள் போற்றிப் பாதுகாக்கப்படும்.  நான் உன் தந்தையிடமிருந்து உன்னைக் கவர்ந்து செல்ல ஒருபோதும் நினைக்கவே இல்லை.”……….

“ஓஹோ, நீ ஒரு ராக்ஷசி அல்லவே தாயே!  நீ ஒரு ராக்ஷசியாக இருந்திருந்தால் அப்படிச் செய்திருக்கலாமோ என்னமோ!” என்ற வியாசர் மீண்டும் நினைத்துக் கொண்டு சிரித்தார்.  “ஒரு ராக்ஷசியால் தன் கணவனையும் துறக்கலாம்; துறக்க முடியும்; குழந்தையையும் விழுங்க முடியும்.”

“ஓ, அப்படிப்பட்ட பிசாசுகள் இருப்பதாய் என்னிடம் கூறாதே கிருஷ்ணா! அதை விடு!  இப்போது பீமனுக்கு எப்படி வழிகாட்டுவது!  என்ன செய்யலாம்? ஒரு தரம் முடிவெடுத்துவிட்டால் பிடிவாதமாக அதிலிருந்து அவன் கடைசி வரை மாறவே மாட்டானே! குழந்தாய், கிருஷ்ணா, மகனே, உன்னால் ராக்ஷசவர்த்தம் செல்ல இயலுமா?  உன்னால் முடியுமானால்??? அவர்களைச் சந்தித்து விட்டாயெனில்! உன் அறிவுரைக்கு அவர்கள் கட்டுப்படுவார்கள்.  அவர்களை அங்கிருந்து வெளியேற உன்னால் சம்மதிக்க வைக்க இயலும்.  இதை நான் நன்கறிவேன்.”  என்றாள் மஹாராணி.

தன் வயதுக்கும், அறிவுக்கும் சற்றும் பொருந்தா வகையில் தாயைப் பார்த்துக் குழந்தை போல் சிரித்தார் வியாசர்.  “எனக்கு இப்போது தான் புரிகிறது.  நான் இங்கே எதிர்பார்க்கப்பட்டேன் என்பதை அறிந்து கொண்டேன்.  இன்னொரு பலமான முடிச்சையும் இப்போது அவிழ்க்க வேண்டும்.  சரி, நான் செல்கிறேன்.  அவர்கள் என் குழந்தைகளும் தானே.  அதோடு உங்கள்விருப்பங்கள் அனைத்துமே எனக்கு நீங்கள் இட்ட கட்டளைகள் தாயே!”


“என் குழந்தாய், உன்னை மகனாய் அடைய நான் செய்த தவம் தான் என்ன!  நீ தான் எவ்வளவு உதவி செய்கிறாய்.  உன்னால் எனக்கு மிகவும் சுகமே காண முடிகிறது.” இதைச் சொன்ன ராணியின் முகம் கர்வத்தில் பூரித்தது.  

இப்போ நாம அவசரமா ராக்ஷசவர்த்தம் போயாகணும்.  எல்லாருமாச் சீக்கிரம் யமுனையைக் கடந்து நாக நாட்டையும் கடந்து ராக்ஷசவர்த்தம் வாங்க. அதுக்குள்ளே பீமனுக்குச் செய்தி எல்லாம் போய் தன் அருமைத் தாத்தா வியாசர் வரப் போவதற்காக வரவேற்பு ஏற்பாடுகளெல்லாம் பண்ண ஆரம்பிச்சுட்டான். ராக்ஷசவர்த்தத்தின் சரித்திரத்திலேயே மிகப் பெரிய நிகழ்வாக அதைப் பார்த்தனர்.  அனைத்து ராக்ஷசர்களுக்கும் வியாசரை முறைப்படி வரவேற்கவேண்டும் என்னும் கட்டளை அரசன் வ்ருகோதரனிடமிருந்து சென்றது.  ஒவ்வொரு ராக்ஷசனும், மனிதர்கள் நுழைய முடியாமல் புதர்கள் அடர்ந்து கிடந்த பாதையைச் செப்பனிட்டார்கள். முட்புதர்களை வெட்டி வழியை ஒழுங்கு செய்தனர்.  மரங்களின் மேல் இருந்த தங்கள் வீடுகளை மீண்டும் ஒழுங்கு செய்து பூக்களாலும், இலை, கொடிகளாலும் அலங்கரித்தனர்.  இன்று வரை எவராலும் நினைத்துக் கூடப் பார்க்கமுடியாத ஒரு குடிசையைத் தரையில் அமைத்தனர்.  இம்மாதிரித் தரையில் குடிசை அமைக்க முடியும் என்பதே ராக்ஷசர்களுக்குப் புதிய விஷயம்.  வர விருக்கும் விருந்தாளிக்காக அந்தக் குடிசை பூமியில் அமைக்கப்பட்டிருந்தது.

யுதிஷ்டிரனுடைய ஆலோசனைப்படி குடிசையைச் சுற்றிலும் வியாசர் தன்னுடைய வைதிக கர்மானுஷ்டானங்களைச் செய்யும் வண்ணம் யாக குண்டங்கள் அமைக்கப்பட்டன.  மொத்தக் குடியிருப்பிலும் உள்ள மக்கள் அனைவருமே ஆங்காங்கே குடியிருப்பைச் சுத்தம் செய்வதிலும், அழகுபட அலங்கரிப்பதிலும் ஈடுபட்டனர்.  வயதில் முதிர்ந்த ராக்ஷசர்கள், இம்மாதிரியான வரவேற்பு ஏற்பாடுகளை நம் குலத்து முன்னோரான விரோசனன் காலத்தில் கூடப் பார்த்தது இல்லை என்று பேசிக் கொண்டனர்.  தங்கள் தலையை அலங்கரிக்கும் புதியதொரு பொய் முடியைப் பெண்களும், வாயில் வைத்துக்கொள்ளும் மரச்சில்லுகளை ஆண்களும் புதிதாகத் தயாரித்துக் கொண்டனர்.  மேலே அணியும் தோலாடைக்காகப் புதியதாக நரிகளை வேட்டையாடிக் கொன்று அதன் தோலை உரித்து மேலாடை தயாரித்துக் கொண்டனர்.  ராக்ஷசிகள் தங்கள் மார்பகங்களைப் பூக்களாலும், இலைகளாலும் ஆன மாலைகள், செண்டுகள் போன்றவற்றால் அலங்கரித்து மறைத்துக் கொண்டனர்.

ராக்ஷசச் சக்கரவர்த்தி வ்ருகோதரனின் தாத்தாவைப் பற்றிய செய்திகள் ராக்ஷசவர்த்தம் முழுதும் பரவி இருந்தது.  அவர் சாதாரணமான மனிதரே அல்ல.  அவரிடம் விரோசனனின் ஆவி கூட இருக்கிறதாம். அவர் செல்லும் இடமெல்லாம் மக்கள் சந்தோஷக் கூச்சலிட்டுக் கொண்டுபின் தொடர்கின்றனராம்.  இறந்தவர்களைக் கூட உயிர்ப்பிக்கிறாராமே?  வயது முதிர்ந்த பல ராக்ஷசர்களுக்கும் இதை நம்ப முடியாவிட்டாலும் இளைஞர்கள் ஒருவருக்கொருவர் அப்படி இருக்கலாம் என்று பேசிக் கொண்டனர். அவர்களில் ஒரு சில ராக்ஷசர்கள் தங்கள் நாட்டை விட்டுச் சில சமயங்களில் வெளியே சென்று வந்திருக்கின்றனர்.  அப்படிப் பட்டவர்கள் வ்ருகோதரனின் இந்தப் பாட்டனாரைத் தாங்கள் பார்த்திருப்பதாகவும், படகுகளில் சீடர்கள் புடை சூழ ஒவ்வொரு நாடாகச் செல்வார் என்றும் செல்லும் இடமெல்லாம் மக்கள் ஆரவார வரவேற்புக் கொடுப்பார்கள் என்றும் கூறினார்கள்.  மேலும் பல வியாதியஸ்தர்களின் வியாதிகளை இவர் குணப்படுத்தி இருப்பதைத் தங்கள் கண்களால் கண்டதாகவும் கூறினார்கள்.


ஒரு வயதான ராக்ஷசன் இதை உறுதி செய்தான்; “ஒரு சமயம் அவனுக்கு ஏதோ வியாதி வந்து இறப்பின் கடைசிக்கட்டத்தில் இருந்தான்.  இந்தப் பாட்டனார் வரும் செய்தி அவனுக்குத் தற்செயலாகத் தெரிய வந்தது.  உடனே தன் உதட்டில் பொருத்தி இருந்த மரச்சில்லுகளை எல்லாம் எடுத்துவிட்டு அவனும் கூட்டத்தோடு கூட்டமாகக் கலந்து கொண்டான்.  அவனும் வரிசையில் நின்று இந்தப் பாட்டனாரால் கொடுக்கப்பட்ட மருந்து கலந்த பாலை வாங்கி உண்டான்.  அவனுக்கு உடல்நிலை சரியாகிவிட்டது. இதைக் கேட்டதுமே ராக்ஷசர்களில் எவருக்கெல்லாம் உடல்நிலை சரியில்லையோ அனைவரும் வியாசரின் வரவை எதிர்நோக்கிக் காத்திருக்க ஆரம்பித்தனர். அவர்கள் மனதிலும் புதியதொரு நம்பிக்கைக் கீற்றுத் தெரிய ஆரம்பித்தது.  இப்படி எல்லாருமே ஒரு வகையில் சந்தோஷத்தோடு வியாசரின் வரவை எதிர்நோக்கிக் காத்திருந்த வேளையில் அங்கே இதற்காகக் கவலைப்படும் ஒரு ஜீவனும் இருந்தது.  அது தான் ஹிடும்பி.  அவளுக்கு எப்படியோ வியாசர் இங்கே வருவது சரியல்ல என்னும் உணர்வு உண்டாகி விட்டது. பெண்களுக்கே உரியதொரு உள்ளுணர்வின் மூலம் வியாசரின் வரவு தன் இல்வாழ்க்கையில் பெரியதொரு நாசத்தை உண்டு பண்ணப்போகிறது என எதிர்பார்த்தாள்.

என்னதான் அவள் கணவன் பீமனிடம் அவள் குலத்து முன்னோரான விரோசனனின் ஆவி கலந்து இருந்தாலும், அவளை, ஹிடும்பியை பீமன் சந்தோஷமாக வைத்திருந்தாலும், அவள் தன் மாமியாரான குந்திக்குத் தன்னைப் பிடிக்கவில்லை என்பதையும் தன்னுடைய வாழ்க்கை முறைகளை அவள் வெறுப்பதையும் புரிந்து கொண்டிருந்தாள்.  ராக்ஷசர்களின் இளவரசியாக இருந்த அவள் வ்ருகோதரனை மணந்து ராணியான பின்னால், மக்களின் விசுவாசத்தையும் அன்பையும் பெற்றிருந்தாலும், அவள் மாமியார் இந்த விஷயத்தில் அவளை ஏமாற்றவே செய்தாள்.  மேலும் தன் கணவனைத் தன்னிடமிருந்து அந்த மூதாட்டி பிரிக்க நினைக்கிறாள் என்னும் எண்ணமும் ஹிடும்பியிடம் தோன்றி இருந்தது.  சரியான சமயத்துக்காகக் காத்திருக்கிறாள் என்றும் எண்ணினாள்.   அந்தக் கிழவி முழு முயற்சியும் செய்தால் அவள் மகனான தன் கணவன் தன்னை விட்டுப் பிரிய மறுக்க மாட்டான் என்பதையும் அவள் அறிந்திருந்தாள்.  இப்போது எங்கிருந்தோ வரும் இந்தப் பாட்டனார்!  இவருக்கும் தன்னையும் தன் குடிமக்களையும் தங்கள் வாழ்க்கை முறைகளையும் பிடிக்கவில்லை எனில்???  நிலைமை மிகவும் மோசமாகிவிடுமே!  அந்தக் கிழவனுக்கும் அப்படி ஓர் எண்ணம் இருப்பதைக் குந்தி அறிந்தாளானால் தன் கணவனைத் தன்னிடமிருந்து பிரிப்பது அவளுக்கு மிக எளிதாகிவிடுமே!பதிவில் விட்டுப் போன பகுதியைச் சேர்த்திருக்கேன்.  நல்லவேளையாகக் கவனித்தேன். மன்னிக்கவும்.

Friday, November 29, 2013

சத்யவதியின் கவலை!

“ஹா, அது தான் பீமனின் மகன் பெயர் அன்னையே!”

இந்த விந்தையான பெயரினால் தனக்கு வந்த சிரிப்பை அடக்கமுடியாமல் சிரித்த ராணி, “ஏன் கடோத்கஜன் என்று பெயரிட்டார்கள்?” என மீண்டும் கேட்டாள்.  “ராக்ஷசர்கள் அனைவரும், அவனை, அந்தக் குழந்தையை ‘விரோசனன்’ என்றே அழைக்கின்றனர்.  ஆனால் பீமன் மட்டும் ‘கடோத்கஜன்’ என்னும் பெயரிலேயே அழைக்கிறான்.  வழவழவென்றிருக்கும் மண் பானையைப் போல் அந்தக் குழந்தையின் தலையும் வழுக்கையாக மயிரே இல்லாமல் காணப்படுகிறது.  “ உத்தவனும் ராணியுடன் சிரிப்பில் கலந்து கொண்டே கூறினான்.  “ஆனால் அந்தக் குழந்தையால் பல சங்கடங்கள் உருவாகியுள்ளன.  ஹிடும்பிக்கு அந்தக் குழந்தையை விட்டு விட்டு வர இயலாது.  ஏனெனில் அவள் ராக்ஷச குல மக்களை விட்டுப் பிரிய முடியாது. அவள் மக்கள் அவளைப் பிரிய அனுமதிக்க மாட்டார்கள்.  கடோத்கஜனைத் தன்னிடமிருந்து பிரித்து எடுத்துச் செல்லவும் ஹிடும்பி அனுமதிக்க மாட்டாள். பீமனோ, குழந்தையையும், ஹிடும்பியையும் விட்டு வர மாட்டான்.  மற்ற நான்கு சகோதரர்களும் பீமன் இல்லாமல் அங்கிருந்து கிளம்ப மாட்டார்கள். ஆக நமக்கெல்லாம் மேலே என்ன செய்யலாம் என்பது புரியத்தான் இல்லை. வாசுதேவன் என்னிடம் ஒரு செய்தி கூறி அனுப்பினான்: ‘ஐந்து சகோதரர்களும் ஒருவரும் அறியாமல் சுயம்வரத்துக்கு வந்து கலந்து கொள்ள வேண்டும்’ என்பதே அந்தச் செய்தி.  இது எங்கனம் நடக்க முடியும்?  முடியவில்லை அன்னையே!  ஆகவே நான் உங்களிடம் வந்திருக்கிறேன், மாட்சிமை பொருந்திய ராணியே, தாங்கள் தான் உதவ வேண்டும்.”

மஹாராணி சத்யவதி சிறிது நேரம் யோசித்த வண்ணம் அமர்ந்திருந்தாள்.  “இது உண்மையிலேயே மிகவும் சிரமமான, கஷ்டமானதொரு சூழ்நிலையாக இருக்கிறது.  விதுராஉன்னால் அங்கே சென்று அவர்களுக்கு அறிவுறுத்தி   சம்மதிக்கச் வைக்க முடியுமா?”

“என் சக்திக்கு அப்பாற்பட்டது, தாயே!” என்றார் விதுரர்.  “இவ்வுலகில் அனைவரையும் என்னால் என் அறிவுரைகளைக் கேட்டு அதற்கேற்றாற்போல் சம்மதிக்க வைக்க முடியும்.  பீமன் ஒருவனைத் தவிர.  அவன் பிடிவாதம் பிடிப்பது என முடிவெடுத்துவிட்டால் எளிதில் மாற்ற இயலாது.”

மஹாராணி சத்யவதி தன் அழகிய அமைப்பான கரத்தால் தன் தலையைத் தாங்கிக் கொண்டாள்.  சட்டென ஏதோ நினைவில் வந்தது போல் நெற்றிப் புருவத்தில் தட்டிக் கொண்டாள்.  “ஓ, எனக்கு இப்போது தான் புரிகிறது.  இன்று காலை திடீரென கிருஷ்ண த்வைபாயனன் (வியாசர்) வந்தது இதற்குத் தான்.   அவன் வந்திருக்கும் செய்தி எனக்குக் கிடைத்ததுமே,  ஏதோ முக்கியமான ஒன்று நிகழப்போகிறது என ஊகித்தேன்.  நமக்கு எப்போதெல்லாம் தேவையோ அப்போதெல்லாம் அவன் தவறாமல் வந்துவிடுகிறான். “  இதைச் சொல்கையில் அந்த வயது முதிர்ந்த தாய்க்கும் தன் மகனைக் குறித்த பெருமையில் முகம் மலர்ந்து விகசித்தது.    தாயன்பு சுடர் விட்டுப் பிரகாசித்தது.  “உனக்குத் தெரியுமா உத்தவா?  நீ அறிவாயா?  த்வைபாயனன் எவ்வளவு பெரிய சிறந்த மஹரிஷியாக இருந்தாலும் ஒரு   சிறந்த மகனாகவும் இருக்கிறான் என்பதை நீ அறிவாயா?  அவன் இல்லை எனில் நான் என்ன செய்ய முடியும்?  என்னால் என்ன செய்ய இயலும்?  நிச்சயமாய் எதுவும் இயலாது.  விதுரா, குழந்தாய், நீ சென்று த்வைபாயனன் தன் மதிய நேரத்து சந்தியாவந்தனங்களையும், அநுஷ்டானங்களையும் முடித்துவிட்டானா என்று பார்க்கிறாயா?  முடித்துவிட்டான் எனில் அவனை இங்கே வரச் சொல்கிறாயா?”

விதுரர் அங்கிருந்து கிளம்ப மஹாராணி உத்தவனிடம் மேலும் நாககூடத்தின் நிகழ்ச்சிகளைப் பற்றிக் கேட்டு அறிந்து கொண்டாள்.  அப்போது யாரோ வேகமாக வரும் நடை சப்தமும், பெரும் குரலில் மனம் விட்டுச் சிரிக்கும் ஒலியும் கேட்கவே உத்தவன் எழுந்து  கொண்டு வியாசரை வரவேற்கும் வண்ணம் தன் கைகளைக் கூப்பிய வண்ணம் நின்றான்.  பரந்து அகன்ற தன் முகம் முழுவதும் சிரிப்பாய் வந்தார் வியாசர்.  கண்களில் அன்பும், கருணையும் பெருக்கெடுத்து ஓடியது.  வந்தவர் தன் முழு உடலையும் கீழே கிடத்தித் தன் தாயை வணங்கி அவள் கால்களைத் தொட்டுத் தன் கண்களில் ஒற்றிக் கொண்டு, அவள் பாத தூளியைத் தன் சிரசிலும் தரித்துக் கொண்டார். வெள்ளை வெளேரெனப் பஞ்சு போன்றிருந்த அந்தத் தலைமுடியையும், அவரின் கொண்டையையும் மிக ஆதுரத்துடன் ஒரு தாயின் பாசம் பூரணமாகத் தெரியும் வண்ணம் குழந்தைகளை அன்போடு உச்சந்தலையை மோர்ந்து பார்க்கும் தாயைப்போன்ற அன்புடன் வியாசரை இன்னமும் தன் குழந்தையாகவே பாவிப்பது தெரியும் வண்ணம் மஹாராணி தடவிக் கொடுத்தாள்.

வயது முதிர்ந்த அந்த மகன் தன் தாயைப் பார்த்து, “தாயே,நீங்கள் நலமாக இருக்கிறீர்கள் அல்லவா?” என நலம் விசாரித்தார்.  “ஒரு வயதானவளுக்கு எத்தகைய உடல் நலம் இருந்தால் நன்மையோ அத்தகைய உடல் நலத்தோடு நலமாகவே இருக்கிறேன், குழந்தாய்.”  என்றாள் அந்த அன்னை.  பின்னர் தன் மகனைப் பார்த்து, “உன்னை மிகவும் எதிர்பார்த்தேன், கிருஷ்ணா!” என்றாள். (வேத வியாசருக்குக் கிருஷ்ண த்வைபாயனர் என்பது பெயர். இதை நினைவில் வைக்கவும்.)  வியாசர் முகம் முழுவதுமே பெரியதொரு சிரிப்பில் மலர்ந்தது.  “உங்களுக்கு என்னுடைய உதவி தேவைப்படும் என என் மனதில் தோன்றியது தாயே!” என்றார்.

“எப்படி அறிவாய், மகனே?”

“தெரியாது, தாயே.  தெரியாது.  ஆனால் என் உள்ளிருந்து ஒரு குரல் வற்புறுத்தியது!  அது அந்த மஹாதேவன் குரலாகவும் இருக்கலாம்.   அந்தக் குரல் என்னை வற்புறுத்தியது, “உடனே உன் தாயிடம் செல்!” என்று.   அந்தக் குரலுக்கு நான் கீழ்ப்படிந்தேன்.  ஒருவேளை உங்கள் வெளியிடப்படாத உள் மனதின்  விருப்பம் தெய்வத்தின் குரலாக, தெய்வத்தின் ஆணையாக எனக்கு வந்திருக்கலாம்.”

“என் குழந்தாய், இப்போது ஒரு கடுமையான சூழ்நிலையில் நாம் இருக்கிறோம்.  பாண்டவ சகோதரர்கள் ஐவரும் ராக்ஷச வர்த்தத்தில் ஒளிந்து வாழ்வது குறித்து நீ அறிந்திருப்பாய்.   பீமன் ராக்ஷசர்களின் தலைவனாகவும் அரசனாகவும் ஆகி இருக்கிறான்.  ராக்ஷசப் பெண்ணை மணந்து ஒரு  ஆண் மகனுக்கும் தந்தையாகிவிட்டான்.  இப்போது கிருஷ்ண வாசுதேவன் அவர்களை அங்கிருந்து வெளிவரச் சொல்கிறான். திரெளபதியின் சுயம்வரத்தை ஒட்டி அவர்கள் வெளிப்பட்டு சாமானிய மற்ற அரசர்களைப் போல் வெளிப்படையாக வாழச் சரியான சமயம் வாய்த்திருப்பதாக அவன் கருதுகிறான்.  ஆனால் பீமனுக்கு ராக்ஷசவர்த்தத்தை விட்டு வர இஷ்டமில்லை.  அவன் இல்லாமல் மற்ற நால்வரும் வர மாட்டார்கள்.   உனக்குத் தான் தெரியுமே, நால்வரும் பீமன் இல்லாமல் அங்கிருந்து நகரக் கூட மாட்டார்கள்.”

“ஏன் தாயே?”

“இவை எல்லாமும் ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்துள்ளது கிருஷ்ணா!  பீமனுக்குத் தன் மகனைப் பிரிய மனமில்லை.  அந்த ராக்ஷசப் பெண்ணோ! அவள் பெயர் என்ன? உத்தவா?  அந்தப் பெண்ணின் பெயர் என்ன? அவளோ தன் மகனைப் பிரிய மாட்டாளாம்.  அவள் கணவனோடு குழந்தையை எடுத்துவரவும் ராக்ஷசர்கள் அனுமதிக்க மாட்டார்களாம்.  இப்போது என்ன செய்யலாம்? மகனே?”

“அன்னையே, அவள் சொல்வது அனைத்தும் சரியானதே!  நீஙகள் ராக்ஷசர்களோடு வாழ்ந்து பார்க்கவில்லை;  நான் இருந்திருக்கிறேன். அவளுக்கு நம்முடைய பழக்க, வழக்கங்கள், நாம் வசிக்கும் இந்தச் சூழ்நிலை இயற்கைக்கு மாறாகவே தெரியும்.  முற்றிலும் புதியதொரு சூழ்நிலையாக இருக்கும்.  நம்முடன் அவள் வாழ நேர்ந்தால் இந்தச் சூழ்நிலையில் அவள் ஒரு வாடிய புஷ்பத்தைப் போல் ஆகிவிடுவாள்.  அவளால் இந்தச் சூழ்நிலையில் ஒன்ற முடியாது.”

“பின்னர் அந்த ஐந்து சகோதரர்களையும் அங்கிருந்து எவ்வாறு திரும்ப வெளிக்கொண்டு வர முடியும்? ஒரு வேளை இப்போது இருப்பதைப் போன்றதொரு சூழ்நிலை திரும்ப வராமல் போய்விட்டால்?  அவர்களால் வெளிவரவே இயலாதே!”  மஹாராணியின் குரலில் கவலை தொனித்தது.

Tuesday, November 26, 2013

ஹஸ்தினாபுரத்தின் முதல் வாரிசு!

“ஆம், தாயே! மழைக்காலத்துக்கு முன்னர் நான் அனுப்பிய செய்தி உங்களுக்கு வந்திருக்கும் என எண்ணுகிறேன்.” ரகசியம் பேசும் தொனியில் மெதுவாகப் பேசினான் உத்தவன். “ ஐவரும் ராக்ஷச வர்த்தத்தில் வசிக்கின்றனர். அங்கே எவரும் அவர்களைக் கண்டு பிடிக்க முடியாது. “ மஹாராணியும் சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டு காது கொடுத்துக் கேட்கும் தூரத்தில் எவரும் இல்லை என்பதை நிச்சயம் செய்து கொண்டாள்.  பின்னர், “ஆம், விதுரன் எனக்குச் சொன்னான்.  மிக்க மகிழ்ச்சி அடைந்தேன்.  அவர்கள் வாழ்க்கையில் தங்களுக்கு உரியவற்றைப் பெற்று மகிழ்வோடு வாழவேண்டும் என்பதே என் விருப்பம்.  அது மட்டும் நடந்துவிட்டால் போதும்.  என் கடைசி நாட்களை நான் நிம்மதியாகவும், சந்தோஷமாகவும் கழிப்பேன்.”

“அது தான் நான் இங்கே வந்ததின் காரணமும் ஆகும், தாயே!  வாசுதேவன் மார்கசீர்ஷ (மார்கழி) மாதத்தில் அவர்கள் தாங்கள் ஒளிந்து வாழும் பயங்கரமான ராக்ஷசவர்த்தத்தில் இருந்து வெளியேற வேண்டும் என விரும்புகிறான்.  அப்போது திரெளபதியின் சுயம்வரத்துக்கான நேரமும் நெருங்கி வரும்.” புன்னகை புரிந்தாள் மஹாராணி.  “ஒவ்வொருத்தரும் திரெளபதியின் கரத்தைப் பிடிக்கத் தாங்களே ஏற்றவர்கள் என எண்ணுகின்றனர்; துரியோதனனும் நினைக்கிறான்.  அவ்வளவு ஏன்?  கர்ணன், அஸ்வத்தாமா அனைவருமே விரும்புவதாக நான் அறிந்தேன்.  விதுரா, ராஜசபையில் என்ன முடிவெடுக்கப்பட்டது?”

விதுரர் தன் கைகளைக் கூப்பிய வண்ணம், “மாட்சிமை பொருந்திய அன்னையே, இளவரசர் சுயம்வரத்திற்கு வந்த அழைப்பை ஏற்கலாம் என முடிவெடுக்கப்பட்டது.”  என்றார்.  புத்தி நுட்பமுள்ள ராணியோ, “துரோணர் இதற்கு எவ்வாறு ஒத்துக் கொண்டார்?” என்று உடனே கேட்டாள்.  ராணியின் கேள்வியைக் கேட்ட விதுரர் சிரித்தார். “உண்மையில் இது ஒரு ஆச்சரியமே அன்னையே! நான் நினைப்பது என்னவெனில் துரியோதனனால் ஏற்பட்ட கெடுதலைச் சரி செய்து எதிரியை நண்பனாக்கிக் கொள்வது சிறந்தது என அவர் நினைத்திருக்கலாம்.  செகிதனாவைப் புஷ்கரத்திலிருந்து விரட்டியது அவருக்குப் பிடிக்கவில்லையே!  அதோடு துரியோதனனால் போட்டியில் ஜெயித்து இளவரசியின் கரத்தைப்பிடிக்க முடியாது என்று அவருக்கு நிச்சயம் ஏற்பட்டிருக்கலாம்.  இது துரியோதனனுக்கு ஒரு பாடமாக அமையும் என்றும் எதிர்பார்க்கலாம்.”

“ஆஹா, இந்தச் சிறுவன் துரியோதனனை வழிக்குக் கொண்டு வருவது கஷ்டம்.  அவனே ஒரு போக்கிரிப் பையன்.  ஆஹா, அவன் ஹஸ்தினாபுரத்தை ஆட்சி செய்கையில் என்னவெல்லாம் நடக்கப் போகிறதோ, அதை அந்த மஹாதேவனே அறிவான்.  அது போகட்டும்,  உத்தவா, தற்போது என்ன செய்தி கொண்டு வந்தாய்?”

“தவிர்க்க முடியாததொரு சூழ்நிலை உருவாகியுள்ளது. வாசுதேவன் பாண்டவர்கள் சுயம்வரத்தில் கலந்து கொள்ள வேண்டும் என எண்ணுகிறான்.  இதன் மூலம் அவர்கள் பழைய வாழ்க்கைக்கு, அங்கிருக்கும் அனைத்து அரசர்களின் முன்னிலையிலும் எளிதாகத்  திரும்பி வர முடியும் என்பதும் அவன் கருத்து.  அதற்கு இந்தச் சுயம்வரம் சரியான நேரமாக அமையும் என நினைக்கிறான்.  அவர்களை மீண்டும் அவர்களுக்கு உரிய இடத்தில் அமர்த்த இது உதவும்.”

“அப்புறம், என்ன கஷ்டம்?  அவர்கள் வரமாட்டேன் என்கின்றனரா?”  மஹாராணி கேட்டாள்.  உத்தவன் மீண்டும் காது கேட்கும் தூரத்தில் எவரும் இல்லை என்பதை நிச்சயப்படுத்திக் கொண்டு மீண்டும் குரலை நன்கு தழைத்துக் கொண்டு பேசினான். “ ஆசாரியர் வேத வியாசரிடமிருந்து செய்தி கிடைக்கும்வரை அங்கிருந்து கிளம்ப யுதிஷ்டிரன் தயாராக இல்லை;  தான் என்ன செய்ய வேண்டும் என்பதை அவர் தான் சொல்ல வேண்டும் என்று அவன் சொல்கிறான்.  அர்ஜுனனோ உடனே அங்கிருந்து கிளம்பத் துடிக்கிறான்.   வெளியே வந்து காம்பில்யத்துக்கோ, ஹஸ்தினாபுரத்துக்கோ வரமுடியாவிட்டாலும் பரவாயில்லை;  எங்களுடன் துவாரகை வருகிறேன் என்று துடிக்கிறான்.  ராக்ஷசவர்த்தத்தில் தற்போது அவன் நடத்தி வரும் வாழ்க்கை அவனுக்குப் பிடிக்கவே இல்லை;  ஆனால் சகோதரர்கள் அனைவரும் சம்மதித்து வர வேண்டும் என்பதோடு, அத்தை குந்தியும் சம்மதிக்க வேண்டும் என்று சொல்கிறான்.  அது வரை அவனாலும் கிளம்ப முடியாது.”

“எனக்குத் தெரியும் அவர்களின் ஒற்றுமையைக் குறித்து.  ஐவரும் அருமையான சகோதரர்கள்.  ஒரே நெருப்பிலிருந்து எழுந்த ஐந்து பிழம்புகள்.  என் இத்தனை வருட வாழ்க்கையில் சகோதரர்களுக்குள்ளே இத்தனை அன்பும், ஒற்றுமையும், நம்பிக்கையும் ஒரு சேர அமைந்து நான் இன்று வரை பார்க்கவில்லை.  இவர்களைத் தான் பார்க்கிறேன்.  த்வைபாயனன் இங்கே தான் இருக்கிறான்.  இன்று காலை தான் இங்கே வந்து சேர்ந்தான்.  யுதிஷ்டிரன் தன் சகோதரர்களோடு வெளிப்பட வேண்டும் என்பதில் அவனுக்கும் சம்மதம் இருக்கும்.” என்றாள் ராணி.

“இதோடு முடியவில்லை தாயே!  பீமன் தன்னால் இப்போது வர இயலாது என்று திட்டவட்டமாகச் சொல்லிவிட்டான்.  அவன் இல்லாமல் அவர்களில் எவரும் அங்கிருந்து கிளம்ப மாட்டார்கள்.”

“ஆஹா, அவன் என்ன அங்கேயே கடைசி வரை இருந்து தன்னை மறைத்துக் கொள்ளவா விரும்புகிறான்? இல்லை என்றே நம்புகிறேன்.  அந்த ராக்ஷசவர்த்தத்திலேயேவா இருக்கப் போகிறானாம்?”

“அவன் தான் ராக்ஷசவர்த்தத்தின் அரசன், மஹாராணி, அதோடு அடுத்த வாரிசையும் அடைந்து விட்டான்.  பீமனுக்கு மகன் பிறந்திருக்கிறான்.”

“என்ன?” ராணிக்கு ஆச்சரிய மிகுதியில் கண்கள் விரிந்தன என்றால் எதற்கும் அசையாத விதுரர் கூட விரிந்த கண்களுடன் ஆச்சரியக்குறியை முகத்தில் காட்டினார்.  “ஆம், அன்னையே, பீமனுக்கு ராக்ஷசன் போலவே ஒரு பிள்ளை பிறந்திருக்கிறான்.  அவனுக்கு ஆறு மாதம் தான் ஆகிறது என்றால் எவரும் நம்ப மாட்டார்கள்.  அவன் அழுகையே சிங்க கர்ஜனை போல் இருக்கிறது. பீமன் என்ன சொல்கிறான் தெரியுமா?  முன்னோர்களின் உதவியே இல்லாமல் ஒரு மாபெரும் சாம்ராஜ்யத்தை ஸ்தாபித்த பரதனின் வழித்தோன்றல்களான அவர்களுக்கு இப்போது பிறந்திருக்கும் இந்தக் குழந்தை தான் முதல் வாரிசு என்றும், ஹஸ்தினாபுரத்தின் சிம்மாசனத்துக்கு வாரிசு பிறந்திருப்பதாகவும் சொல்கிறான். பரத வம்சத்தைச் சார்ந்த குருவின் வழித்தோன்றல்களில் இப்போதிருக்கும் பிள்ளைகள் எவருக்கும் ஆண் குழந்தை பிறக்கவில்லை. ஆகவே பீமனின் குழந்தையே வயதில் மூத்தவன் என்பதால் முறையான வாரிசு என்கிறான்.”

மனம் விட்டுச் சிரித்தாள் மஹாராணி.  அவள் முகம் புன்னகையில் மலர்ந்து விரிந்தது.  “ஆம், ஆம், அது உண்மையே.  அவன் தான் நம் குலத்தின் முதல் வாரிசு ஆவான்.  என்றாவது ஒரு நாள் ஹஸ்தினாபுரத்தின் சிம்மாசனத்திலும் அமருவான்.  பீமன் அவனை ஏன் இங்கே அழைத்து வரக்கூடாது?”

“ராக்ஷசர்களின் ராணியான ஹிடும்பி, தன் மகனைப் பிரியச் சம்மதிக்கவில்லை.” என்றான் உத்தவன்.

“பின் அவளையும் அழைத்து வரலாமே!  பீமன் தான் ராக்ஷசக் குலத்தில் திருமணம் செய்து கொண்ட முதல் இளவரசன்.  அவள் நரமாமிசம் சாப்பிடமாட்டாள் என நான் நினைக்கிறேன்.”

“அரசன் வ்ருகோதரன், “பீமன் அங்கே இப்படித் தான் அழைக்கப்படுகிறான்.” என்ற உத்தவன் மேலும் தொடர்ந்து, “அங்கே அரசன் வ்ருகோதரன்,  ஒரு சட்டத்தைப் போட்டிருக்கிறான். அதன்படி எந்த ராக்ஷசர்களும் நர மாமிசம் உண்ணக் கூடாது.  ஹிடும்பி, தன் கணவன் போட்ட உத்தரவை மீறாத உத்தம மனைவியாக இருந்து வருகிறாள்.   ஆனால் எனக்கு என்னமோ சில சமயம் அவள் நர மாமிசம் சாப்பிடவே விரும்புவதாகத் தோன்றும்.  எப்படியோ, இப்போது கடோத்கஜனைச் சுற்றி எல்லாம் நடக்கிறது.”

“கடோத்கஜன்!  இது என்ன பெயர்!”  என்றாள் ராணி.


Monday, November 25, 2013

உத்தவன் சத்யவதியைச் சந்திக்கிறான்!

ஆசாரியரின் குரலும், பார்வையுமே பார்த்தாலே ஒரு கெளரவத்தைக் கொடுக்கும் வண்ணம் மாறிக்காணப்பட்டது.  அந்த கம்பீரம் குறையாமலேயே அவர், மேலும் பேசினார்; “ துரியோதனா, ஏற்கெனவே உன்னிடம் செகிதனாவைப் புஷ்கரத்திலிருந்து விரட்டி அடித்ததைத் தவறென்று கூறினேன். அரசியல் ரீதியாக அது தவறே.  மாபெரும் தவறு.  ஏனெனில் ஒரு நல்ல நண்பனை நீ விரோதியாக்கிக்  கொண்டு  விட்டாய்.  தவறான முற்றுகை.  புஷ்கரத்தை முற்றுகையிட்டதும் அதை எடுத்துக்கொண்டதும் ஒரு தவறான முன்னுதாரணம்.  இப்போதோ, கிருஷ்ண வாசுதேவன் போன்றதொரு பெரிய தலைவன் சொல்லும் நட்புக் கலந்த அறிவுரையையும் ஏற்க மறுக்கிறாய்.  அதற்கு மதிப்புக் கொடுக்க மாட்டேன் என்கிறாய். கிருஷ்ண வாசுதேவனால்   ஒரு மாபெரும் தவறைச் சரியாக்குவதற்கு, நமக்குக் கிடைத்த ஒரு நல்ல சந்தர்ப்பம் இது.  அதை நீ மறுக்கிறாய்.   அடிப்படையில்லாமல் செய்யப் பட்ட ஒரு போரிலிருந்தும், மாற்றக் கூடிய ஒரு அரசியல் சூழ்நிலையிலிருந்தும் கெளரவமாக நம்மை மீட்டுக் கொள்ள இயலும்.  இதையும் நீ காண மறுக்கிறாய்.   வாசுதேவனின் இந்த வேண்டுகோளை ஏற்கும்படி பிதாமகர் பீஷ்மரிடம் நான் பணிவுடன் விண்ணப்பித்துக் கொள்கிறேன்.”

மிகக் கடுமையாகவும், அதே சமயம் கோபத்தோடும், “எனில் நீங்கள் போர் புரியப் போவதில்லையா?” என்று துரியோதனன் கேட்டான்.  ஆசாரியர் நிதானமாக, “உனக்கு வேண்டுமானால் நீ போர் புரிந்து கொள்.  எனக்கும் அதற்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை.   எனக்கு நிச்சயமாய்த் தெரியும்.  பாட்டனார் பீஷ்மரும் என்னைப் போலவே இதே எண்ணத்தோடு இருப்பார் என்று எண்ணுகிறேன்.” என்றார் துரோணர்.

“நீர் சொல்வது அனைத்தும் சரியானதே, ஆசாரியரே!  “என்ற பீஷ்மர் எப்போதும் போல் தன் கரத்தைத் தூக்கி அனைவரின் கவனத்தையும் தன் பக்கம் திருப்பினார்.  “நாம் தர்மத்தின் பாதையிலிருந்து நழுவக் கூடாது.  காரணமே இல்லாமல் போர் புரியவும் கூடாது.  அநாவசியமாக ஒரு நாட்டை முற்றுகையிடவும் கூடாது.  உத்தவா, என்னுடைய ஆசிகளைக் கிருஷ்ண வாசுதேவனுக்குத் தெரிவிப்பாய்.  புஷ்கரத்தை மீண்டும் அதன் மன்னன் செகிதனாவுக்கே திருப்பிக் கொடுக்கிறோம் எனவும் கூறு.  மேலும் தக்க மரியாதைகளோடு நாங்களும் கிருஷ்ண வாசுதேவனையும், பலராமனையும் வரவேற்கும் நிகழ்ச்சியில் செகிதனாவுடன் கலந்து கொள்கிறோம் என்பதையும் தெரிவிப்பாய். "

"ஆசாரியரே, இப்போது தான் நீங்கள் சொன்னீர்கள்.  சுயம்வரத்துக்குச் செல்லும் அரசன், இளவரசன் ஆகியோருடன்  யுத்தம் செய்வது சரியல்ல என்றீர் அல்லவா?” இதைச் சொல்கையில் விதுரனைக் குறிப்பாகப் பார்த்தார் பீஷ்மர்.  “இப்போது யுத்தம் ஒன்றும் இல்லை என்பதால், துரியோதனன், மற்றும் சுயம்வரத்தில் கலந்து கொள்ளப் போகும் அனைத்து இளவரசர்களையும் ஏற்று ஆசீர்வதிப்போம்.  துரியோதனன் செல்வதையும் ஒத்துக் கொள்வோம்.  அடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதை நாம் அறியோம்.  அந்தக் கடவுள் என்ன நினைக்கிறாரோ என்பதையும் நாம் அறியோம்.  இறை அருளால், அனைத்தும் நலமாக நடக்கும் என நம்புவோம்.”

ஒரு நிமிடத்துக்கும் குறைவான நேரத்தில் துரோணருக்குப் பளிச்சென அனைத்தும் விளங்கிற்று.  துரியோதனனுக்கு ஒரு பாடம் கற்பித்தாக வேண்டும்.  அது மிகவும் முக்கியமான ஒன்று.  யாதவர்களில் பொறுக்கி எடுத்த அதிரதர்கள் சுயம்வரத்துக்குச் செல்லுகின்றனர்.  அவ்வளவு அதிரதர்கள் தங்கள் முழு பலத்தையும் காட்டும்போது துரியோதனனால் அவ்வளவு எளிதாக திரெளபதியை சுயம்வரத்தில் வெல்ல முடியாது. கிருஷ்ண வாசுதேவன் திரெளபதியை ஏற்க மறுத்தாலும், பலராமன் ஏற்க மறுத்தாலும் சரி, அல்லது சாத்யகி, கிருதவர்மன் போன்ற திறமைசாலிகளால் கூட ஏற்க முடியவில்லை எனினும் சரி, துரியோதனனுக்கு வெற்றி அடையும் வாய்ப்புக்கள் குறைவாகவே உள்ளன.  அப்படி அவனால் திரெளபதியை வெல்ல முடியவில்லை என்றாலும் அதனால் அவமானம் ஒன்றும் அடையப் போவதில்லை.

 துரோணருக்கு உள்ளூர துரியோதனன் சுயம்வரத்துக்குச் செல்வது பிடிக்கவில்லை என்றாலும் இத்தனையையும் மீறி அவனால் திரெளபதியை வெல்ல முடியாது என்ற அளவில் நம்பிக்கை பிறந்தது.  குரு வம்சத்தின் யுவராஜாவாக, அடுத்த பட்டத்துக்குத் தயார் நிலையில் துரியோதனன் இருக்கும் வரையில் குரு வம்சம் முன்னேற முடியாது.  அதுவும் இப்போதோ கிருஷ்ண வாசுதேவன் போன்ற திறமைசாலிகளின் அதிகார எல்லை விரிவடைந்து கொண்டிருக்கிறது.  ஆர்ய வர்த்தத்தின் பல அரசர்களுக்கும் ஆலோசனைகள் கூறும் தகுதியை கிருஷ்ண வாசுதேவன் அடைந்திருக்கிறான்.  அரியணை இல்லாமல், யுவராஜா பட்டம் இல்லாமல்.  என்றால் அவன் திறமை தான் எவ்வளவு போற்றக் கூடியது!


கிருஷ்ண வாசுதேவனால்  அவன் தலைமையில் ஏற்படுத்தப்பட்ட கச்சிதமான உடன்பாட்டினால் கிழக்கே மகத நாட்டின் ஜராசந்தன் போர் தொடுத்தாலும், இங்கே காம்பில்யத்தில் துருபதனின் நட்பான உடன்படிக்கையாலும்,  தர்மத்தின் அவதாரமே கிருஷ்ண வாசுதேவன் என நினைக்கும் பீஷ்மப் பிதாமகரின் ஆதரவாலும் கிருஷ்ண வாசுதேவனின் அதிகார எல்லை எவ்வளவு தூரத்துக்குச் செல்லும் என்பதை இப்போதே சொல்ல முடியாது. அதோடு மட்டுமா?  கிருஷ்ணன் தன்னிடம் நடந்து கொள்ளும் முறையைப் பார்த்தாலும் அவன் இன்னமும் தன் அதிகார எல்லையை விஸ்தரிப்பதோடு அவரை முடிசூடாச் சக்கரவர்த்தியாக ஆக்கிவிட்டுத் தான் மறுவேலை பார்ப்பான் போல் உள்ளது.  ஆகவே கிருஷ்ண வாசுதேவனோடு நட்புரிமை பாராட்டுவதைத் தவிர வேறெதுவும் செய்வது அவர் எடுத்துக் கொண்டிருக்கும் லட்சியத்துக்குச் சரியாக வராது. மீண்டும் ஒரு புன்னகை புரிந்து கொண்டார் துரோணர்.  துரியோதனனைப் பார்த்தும் இகழ்ச்சியாகச் சிரித்துக் கொண்டார்.


பீஷ்மப் பிதாமகரைப் பார்த்து மரியாதையுடன் பேசலானார்: “ பிதாமகரே, புஷ்கரத்தை செகிதனாவுக்கு மீண்டும் கொடுக்கப் போவது உண்மை எனில், கிருஷ்ணனுக்கும், பலராமனுக்கும் உங்களால் அங்கே மரியாதைகளும், விருந்துபசாரமும் கொடுக்கப் போவதும் உண்மை எனில், அங்கே உங்கள் சார்பில் நான் சென்று அந்நிகழ்ச்சிகளை நடத்தித் தரட்டுமா?  எனக்குப் போக அநுமதியைப் பிதாமகர் கொடுப்பார் என எண்ணுகிறேன்.”  என்றார்.

“அப்படியே ஆகட்டும், ஆசாரியரே!  எங்கள் சார்பில் நீர் செல்லலாம்.” என்றார் பீஷ்மர்.

ராஜசபை கலையும்போது அரண்மனை ஊழியர் ஒருவர் வந்து, விதுரரிடம், “ப்ரபுவே, மாட்சிமை பொருந்திய மஹாராணி அம்மா தன் பூஜையை முடித்துக் கொண்டு ஓய்வாக இருக்கிறார்கள். உத்தவனைத் தன்னிடம் அழைத்து வருமாறு உங்களிடம் கூறச் சொன்னார்கள். “ என்றார். உத்தவனைக் குறிப்பாகப் பார்த்தார் விதுரர். உடனடியாக இருவரும் மஹாராணி சத்யவதியைப் பார்க்க அவள் அரண்மனைக்குச் சென்றனர்.

திருதராஷ்டிரனுடைய பாட்டியும், சந்தனுவின் ராணியுமான சத்யவதி தன்னுடைய வழக்கமான சிம்மாசனத்தில் அமர்ந்திருந்தாள்.  அந்த முதுமைப் பிராயத்திலும் ஒளிர்ந்த அவள் அழகுத் தோற்றம் பார்ப்பவர் மனதில் கண்ணியத்தையும், மரியாதையையும் ஏற்படுத்தி அவள் சாந்தமான முகபாவம் அமைதியையும் ஏற்படுத்தியது.  தன் நளினமான கையசைவால் விதுரரையும், உத்தவனையும் வரவேற்றாள் ராணி சத்யவதி.  மஹாராணியை உத்தவன் பார்ப்பது இது இரண்டாம் முறை.  அவள் இளமையில் வசீகரமாக இருந்தது போலவே இப்போது முதுமையிலும் குறையாத வசீகரத்துடன் அனைவரையும் கவர்ந்து கொண்டிருப்பதை உத்தவனால் உணர முடிந்தது.   திடமும், உறுதியும் கொண்ட அவளின் நல்ல மனோபாவத்தால் அம்பிகையின் கருணையைப் போல் அவளிடமும் கருணை நிறைந்திருந்தது.  உத்தவன் அவளைக் குனிந்து வணங்கும் அந்தச் சிறிய நேரத்துக்குள்ளாக அவன் மனதில் அவளின் வாழ்க்கைச் சித்திரம் முழுதும் ஓடியது.

ஒரு காலத்தில் மீனவளாக இருந்த இந்தப் பெண்மணி தன் அழகால் சந்தனுவை வசீகரித்து மணந்து ராணியானதும் அல்லாமல், இப்போது அனைவரும் வணங்கும் புனிதவதியாகவும் ஆகிவிட்டாளே, இவளுடைய தரிசனத்துக்காகப் பலர் காத்திருக்கையில் தனக்கு இவள் தரிசனம் கொடுத்து விட்டாளே என்ற நினைப்பில் கண்களும் கசிந்தன உத்தவனுக்கு.

“தேவபாகனின் மகனே! எப்படி இருக்கிறாய்?  நலமாக இருக்கிறாயா?  நீ நாக நாட்டில் இருந்து வருவதாய்க் கேள்விப் பட்டேனே! உன் மாமனாரும் மற்றோரும் நலமா?” என்று தன் மாறாத இனிமைக் குரலில் கேட்டாள் ராணி சத்யவதி.  “அனைவரும் நலம் தாயே!  அரசர் கார்க்கோடகர் தன் நமஸ்காரங்களை உங்களுக்குத் தெரிவிக்கச் சொன்னார்.  இளவரசிகளான என் இரு மனைவியரும் தங்கள் நமஸ்காரங்களை உங்களுக்குத் தெரிவித்தனர்.  வசீகரமாய்ச் சிரித்தாள் சத்யவதி.  அந்தச் சிரிப்பைக் கண்ட உத்தவன், இவள் இளமையில் இந்தச் சிரிப்பால் எத்தனை பேரை வசீகரித்திருப்பாள் என எண்ணினான்.  எல்லாவற்றுக்கும் மேல் இந்தச் சிரிப்பு ஒன்றாலேயே ராஜா சந்தனுவை இவள் ஆட்சி செய்திருப்பாள் எனவும் எண்ணினான்.

“என்ன செய்தி கொண்டு வந்தாய்?” குறிப்பாய்க் கேட்டாள் ராணி சத்யவதி.  உத்தவன் சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டான்.


Friday, November 22, 2013

குருவின் பேச்சும், துரியோதனன் மறுப்பும்!

"நாகர்களில் சிறந்தவனும், நாகர்களின் தலைவனுமான  கார்க்கோடகனின் கருத்தும் அதுவே, பாட்டனாரே!” என்றான் உத்தவன்.  “அவர் கூறுவது: ‘என் மகன் மணிமான் சுயம்வரத்துக்குச் செல்லும் முன்னர், செகிதனாவுடன் கிருஷ்ண வாசுதேவனையும், பலராமரையும் உபசரிக்கும் நிகழ்வில் கலந்து கொள்ள விரும்புகிறான்.  அவர்கள் காம்பில்யத்துக்குச் செல்லும் வழியில் அவர்களை நாககூடம் வரை வந்து செல்லுமாறும் அழைப்பு விடுத்துத் தானே அருகிருந்து அழைத்து வரவும் விரும்புகிறான்.”

“இவை விசித்திரமான செய்திகள்!” திருதராஷ்டிரன் கூறினான்.

அதற்குள்ளாக துரியோதனன் பாய்ந்தான்.  “தந்தையே, இவை தூதுச் செய்திகள் அல்ல!  நமக்கிடப்பட்டிருக்கும் கட்டளைகள்!”  அவன் ரத்தம் கொதித்தது.  தேவையற்ற  இந்த வேண்டுகோள்களை நினைத்து நினைத்து அவன் மனம் கொதித்தான்.  ஆனால் பெரியோர்கள் நிறைந்த சபையில் கடைப்பிடிக்கவேண்டிய குறைந்த பட்ச மரியாதையை அவன் கட்டாயமாய்க் கடைப்பிடிக்க வேண்டி இருந்தது.  அதோடு அவன் யோசனைகளும் கருத்துக்களும் உடனடியாக நிராகரிக்கப்படும் நிலையும் இருக்கிறது. நிராகரிக்கப்படலாம் தான்!  பற்களைக் கடித்தான் துரியோதனன்.  “இது நமக்கு ஏற்பட்ட இழுக்கு!’  கத்தினான் கர்ணன்.  அவன் கோபமும் எல்லை கடந்தது.  தன்னிச்சையாக அவன் கைகளும் உடைவாளுக்குச் சென்றன.

“புஷ்கரத்தை நாம் திரும்பக் கொடுக்கக் கூடாது!” திட்டவட்டமாக அறிவித்தான் துரியோதனன்.  சபைக்குக் கொடுக்க வேண்டிய சிறிதளவு  மரியாதை  இல்லாமல் பேசப்பட்ட இந்தப் பேச்சுக்களைத் தன் ஒரு கையசைவால் நிராகரித்தார் பீஷ்மர். இளைஞர்கள், பேசத் தெரியாமல் பேசுகின்றனர்!  அப்போது மீண்டும் பேச ஆரம்பித்தான் உத்தவன்.

 “மாட்சிமை பொருந்திய பாட்டனாரே!  கிருஷ்ண வாசுதேவனின் செய்தி முடியவில்லை.  அவன் இன்னமும் என்ன சொல்லி இருக்கிறான் எனில், யாதவர்கள் எவருக்கும் குரு வம்சத்தினருடன் போர் தொடுக்கும் எண்ணம் சிறிதும் இல்லை.  புஷ்கரத்தில் தங்கிய பின்னர் நாங்கள் அனைவருமே காம்பில்யத்தில் நடைபெறப் போகும் சுயம்வரத்திற்குச் செல்லப் போகின்றோம்.  செகிதனாவுக்கும் அழைப்பு வந்திருப்பதால் அவனும் வருவான்.  மணிமானுக்கும் அழைப்புப் போயிருப்பதால் அவனும் வருவான். ஆகவே இயல்பாகவே நாங்கள் எவரும் புஷ்கரத்தில் ஒரு போர் நடைபெறுவதை விரும்பவே இல்லை.”  என்றான்.

தன்னிரு கரங்களையும் விரித்த வண்ணம் பெரிதாகப்புன்னகை புரிந்தான் ஷகுனி.   அவன்”ஓஹோ, அது தான் உங்கள் விருப்பம் எனில் எங்களுடைய விருந்துபசாரத்தை ஏற்பதே அனைத்திலும் சிறந்த வழி!  கிருஷ்ண வாசுதேவனின் விருப்பத்தையும், வேண்டுகோளையும், மாட்சிமை பொருந்திய மன்னர் மறுக்க வேண்டும் என நினைக்க மாட்டார்.  அவர் அதை விரும்பவும் மாட்டார்.  இருவருக்கும் இடையில் சிறந்த நட்பு இருக்கிறதே!” என்றான்.  ஷகுனியை இரக்கத்துடன் பார்த்த பாட்டனர் பீஷ்மர், உத்தவனின் பதிலை எதிர்நோக்கி அவன் பக்கம் திரும்பினார்.  உத்தவனோ, “மன்னா, மாட்சிமை பொருந்திய பாட்டனாரே, நாங்கள் எதிர்பார்ப்பது வெறும் விருந்துபசாரம் மட்டும் இல்லை;  அப்படி வெறும் விருந்து உபசாரத்தை மட்டுமே எதிர்பார்த்திருந்தால்  இந்தச் செய்திகளைக் கிருஷ்ணன் அனுப்பியே இருக்க மாட்டான். “

இதைக் கேட்டதுமே துரியோதனன் தன் மூர்க்கத்தனம் வெளிப்படும் வண்ணம், “அப்போது நாங்கள் கிருஷ்ணனின் வேண்டுகோளை நிராகரிப்பது தவிர வேறு வழியில்லை!” என்றான்.

உத்தவன் மன்னன் பக்கம் திரும்பினான். “இனி உங்கள் விருப்பம் மன்னா, வேண்டுகோளை ஏற்பதோ, அல்லது நிராகரிப்பதோ உங்கள் விருப்பம். வாசுதேவனுக்கு இப்படி ஒரு எண்ணம் மனதில் இருந்ததால், உங்களால் செய்ய முடியும் என அவன் நினைத்ததால் இந்த வேண்டுகோளை என் மூலம் கேட்டிருக்கிறான்.  சாத்யகி, யாதவ வீரர்களின் பொறுக்கி எடுத்த சிறந்த அதிரதர்களுடன் ஏற்கெனவே புஷ்கரத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறான்.  புஷ்கரத்தின் காவலன் செகிதனாவும், நாக நாட்டு இளவரசன் மணிமானும் யமுனையைக் கடந்து புஷ்கரத்துக்குள் நுழையச் சென்று கொண்டிருக்கின்றனர்.”

“என்ன,எங்களை மிரட்டிப் பார்க்கிறாயா?  அதுவும் குரு வம்சத்திலேயே சிறந்தவரை? எங்களை மீறிப் போர் புரிவாயா?” ஆத்திரம் பொங்கக் கேட்டான் துரியோதனன்.  “நாங்கள், யாதவர்கள் போரை விரும்பவில்லை.  குரு வம்சத்தின் சிறந்த மன்னனும், தர்மத்தை நிலை நாட்டுவதில் சிறந்தவருமான பாட்டனார் பீஷ்மரும் சேர்ந்து ஏற்கெனவே நடந்து விட்ட ஒரு தவறைத் திருத்தத் தான் வேண்டுகிறேன்.”

“பாட்டனாரே, நாம் கிருஷ்ணனால் கட்டளை இடப்பட வேண்டுமா?  கூடாது!” என்றான் துரியோதனன்.  பின்னர் ஆசாரியர் துரோணர் பக்கம் திரும்பி, “ஆசாரியரே, புஷ்கரத்தை நோக்கிச் செல்ல நம் படையைத் தயார் செய்யுங்கள்!”என்றான்.  துரியோதனனைப் பார்த்து விசித்திரமாகச் சிரித்தார் துரோணர்.  பின்னர் அவனை ஒரு விசித்திரமான பார்வை பார்த்துக் கொண்டே, “துரியோதனா, நீ சுயம்வரத்துக்குச் சென்று திரெளபதியை உனக்கு மணமகளாக்க விரும்புகிறாய்.  அதே போல் யாதவர்களும் விரும்புகின்றானர்;  அரசன் செகிதனா; இளவரசன் மணிமான். இவர்களும் விரும்புகின்றனர்.  சுயம்வரத்துக்குச் செல்லும் அரசர்களோடு எல்லாம் நீ போர் புரிய முடியுமா?  திரெளபதியை நீ ஜெயிக்க வேண்டுமெனில் சுயம்வரத்தில் தான் போட்டியே தவிர செல்லும் வழியில் இல்லை!” என்றார். ஒரு தந்தை மகனுக்குச் சொல்லும் அறிவுரை என்ற தொனியில் அவர் பேசினாலும் அதிலிருந்த ஏளனம் புரியும்படி அழுத்தம் கொடுத்துப் பேசினார்.

“சுயம்வரத்தில் என்ன நடந்தாலும் அது குறித்த கவலை எனக்கில்லை! வாசுதேவனின் இந்த மிரட்டல்களுக்கு அஞ்சி செகிதனாவுக்குப் புஷ்கரத்தைத் திரும்பக் கொடுக்க முடியாது.  அவன் வேண்டுகோளை நிராகரிப்போம்!” என்று தன் தொடைகளில் கைகளை ஓங்கித் தட்டிய வண்ணம் கூறினான் துரியோதனன்.  துரோணர் தன்னுடைய கம்பீரமான குரலில் ஒரு குருவின் தகுதியுடன் அவனுக்கு ஆலோசனை கூறும் உரிமை தனக்கு இருப்பதால் அவனிடம் திட்டவட்டமாகக் கூறினார்;” தவறாக ஒரு காரியத்தைச் செய்வது வீரத்துக்கு இழுக்கு.  இதன் மூலம் ஒரு நாயகனாக நீ ஆக இயலாது.  தர்மத்தைக் காக்கவென்று சிறிது வளைந்து கொடுப்பதால் எந்தவிதமான அவமானமும் ஏற்பட்டு விடாது!”  என்றார்.
Wednesday, November 20, 2013

உத்தவன் பணிவும், துரியோதனன் கொதிப்பும்!

உத்தவன் கிருஷ்ணனிடமிருந்து கொண்டு வந்த செய்தியால் மனம் மாறிய ராஜசபை துரியோதனன் சுயம்வரத்துக்குச் செல்ல அனுமதி கொடுத்துவிட்டது.  சரியான நேரத்துக்குக் கிருஷ்ணனின் அந்தச் செய்தி வந்தது என துரியோதனன் நினைத்தான்.  அழகும், திடகாத்திரமும் நிரம்பிக் காணப்பட்ட உத்தவன், சிரித்த முகத்தோடும் காணப்பட்டதோடு அல்லாமல், எதையும் எளிதாய்க் கடந்து செல்பவனாகவும் இருந்தான்.  தன் பணிவும், அன்பும் எளிதில் அனைவருக்கும் புலப்படும் வண்ணம் அந்த ராஜசபைக்குள் நுழைந்ததுமே பாட்டனார் பீஷ்மருக்கும், அரசனான திருதராஷ்டிரனுக்கும் தன் பணிவான நமஸ்காரங்களை அளித்தான்.  மற்றவர்களையும் பார்த்து கை கூப்பி வணங்கியவன், ஆசாரியர் துரோணருக்குச் சிறப்பாகத் தனி வணக்கம் செலுத்தினான்.  இதன் மூலம் துரோணரின் ஆசாரிய வாழ்க்கையின் முக்கியத்துவத்தை அங்கீகரித்ததோடு அல்லாமல், பிராமணர்களிலேயே தனிப்பட்டவராகவும், தன் குருவான பரசுராமரின் சிறப்பைக் குறைக்காமல் தன் மாணாக்கர்களையும் அவ்விதமே பழக்குபவரும் ஆன துரோணருக்கு இங்கே அளித்துள்ள படைத்தலைவர் என்ற பதவிக்கு உண்டான மரியாதையையும் அதன் மூலம் காட்டினான்.

“உத்தவா, தேவபாகனின் மகனே, ஹஸ்தினாபுரத்துக்கு மீண்டும் வருகை புரிந்தமைக்கு நன்றி.  உனக்கு நல்வரவு.   உன்னைப் பார்ப்பதில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம்.  இப்படி அமருவாய்! உன் தேசத்து மக்கள் அனைவரும் நலமாக இருக்கின்றனரா?” என்று பாட்டனார் பீஷ்மர் கேட்டார்.

“மரியாதைக்குரிய பிதாமகரே! நான் துவாரகையிலிருந்து வரவில்லை.  சில மாதங்களாக நான் என் மாமனார், நாகர்களின் தலைவரோடு வசித்து வருகிறேன்.” என்றான் உத்தவன்.  “ஆஹா, அப்படி எனில் நீ நாகர்களின் இளவரசிகளை மணந்திருப்பது உண்மையா?” என்றான் திருதராஷ்டிரன்.  “ஆம் ஐயா, “ என்றான் உத்தவன்.

“மாட்சிமை பொருந்திய நாகர்களின் அரசன் கார்க்கோடகனும், அவன் மக்களும் நலமா? “பீஷ்மர்.

“ஆம், பாட்டனாரே, அனைவரும் நலம்.” உத்தவன்.

“நீ எங்களுக்காக ஒரு தூதுச் செய்தி எடுத்து வந்திருப்பதாக விதுரன் கூறினான்.  வாசுதேவக் கிருஷ்ணனின் செய்தியை நீ கொண்டு வந்திருக்கிறாயா?” பீஷ்மர் கேட்டார். “ஆம், பிதாமகரே!” என்ற உத்தவன், “அதோடு இல்லாமல் அரசன் செகிதனாவிடமிருந்தும் செய்தியைக் கொண்டு வந்திருக்கிறேன்.  அடுத்து என் மாமனார் நாகர்களின் அரசனிடமிருந்தும் ஒரு செய்தி காத்திருக்கிறது.  அனைவருமே மாட்சிமை பொருந்திய பாட்டனாருக்கும், மாட்சிமை பொருந்திய ஹஸ்தினாபுரத்து மன்னனுக்கும் தங்கள் பணிவான வணக்கங்களைத் தெரிவிக்கச் சொன்னார்கள்.”

“என்ன செய்திகளை நீ கொண்டு வந்திருக்கிறாய், குழந்தாய்?” பீஷ்மர் கேட்டார்.


“யாதவ குலத் தோன்றல், அவர்களில் சிறந்தவன் ஆன வாசுதேவ கிருஷ்ணன், அனுப்பிய செய்தி இது!” என்ற உத்தவனின் குரலில் அனைவரையும் தன் பக்கம் ஈர்த்து இழுக்கும் கவர்ச்சி இருந்தது.  அவன் சொல்வதை அப்படியே நம்பும் வண்ணம் அவன் குரலில் உறுதியும், நம்பிக்கையும் தெரியப் பேசினான்.  “பாஞ்சால இளவரசியின் சுயம்வரத்தில் கலந்து கொள்ள வாசுதேவ கிருஷ்ணனும், மூத்தவர் ஆன பலராமரும் காம்பில்யத்துக்கு வருகை புரிகின்றனர்.  அவர்களோடு பல யாதவ அதிரதர்களும் வருகின்றனர்.  வடக்கே காம்பில்யம் செல்லும் வழியில் அவர்கள் சில நாட்களைப் புஷ்கரத்தில் செலவிட எண்ணுகின்றனர்.”

“அவர்கள் அனைவருக்கும் நல்வரவு.  எல்லாரும் வரட்டும்!” என்றான் திருதராஷ்டிரன்.

“ஆஹா, நீங்கள் இவ்விதம் நினைப்பீர்கள், கூறுவீர்கள் என்று வாசுதேவனுக்கு நிச்சயமாய்த் தெரியும் மன்னா!”  சற்றே நிறுத்தி விட்டு மேலும் தொடர்ந்தவன், “ ஆனால் தவறான ஒரு காரியத்தைத் திருத்தும்படி இப்போது அவன் வேண்டுகோள் விடுக்கிறான்.  தங்களையும், பிதாமகர் பீஷ்மரையும் வணங்கி வாசுதேவ கிருஷ்ணன் வேண்டுவது எல்லாம்  இதுவே.  போன வருடம் அரசன் செகிதனாவைக் குரு வம்சத்து வீரர்கள் புஷ்கரத்திலிருந்து விரட்டி விட்டனர்.  அந்தப் போர் நியாயமாக நடக்கவில்லை; எரிச்சலைத் தூண்டும் விதத்தில் முன்னறிவிப்பே இல்லாமல் நடந்து முடிந்தது.  வேறு வழியில்லாமல் செகிதனாவும் அவன் மக்களும் யமுனையைக் கடக்க நேரிட்டது.  யமுனையைக் கடந்து நாக நாட்டிற்குள் நுழைந்து நாகர்களிடம் அடைக்கலம் கேட்கவும் நேர்ந்தது.  கிருஷ்ண வாசுதேவன் இந்த வேண்டுகோளைத் தான் முன் வைக்கிறான்: “ செகிதனாவுக்கு அவன் இழந்த நாட்டை, அவன் பிரதேசத்தைத் திருப்பிக் கொடுங்கள்.  யாதவர்களாகிய நாங்கள் அங்கே செல்கையில் அவனுக்கு எங்களை உபசரிக்கவும் எங்கள் படை வீரர்களுக்கு உணவளிக்கவும் முடியும்.  "


“என்ன?” என்று ஆக்ரோஷமாய்க் கேட்ட துரியோதனனின் புருவங்கள் கோபத்தில் நெரிந்தன.  “புஷ்கரம் எங்களால் ஜெயிக்கப்பட்டது.  எங்கள் வீரர்களால் வெல்லப்பட்டது.  எங்கள் படைபலத்தால் ஜெயித்த அந்தப் பிரதேசம் குரு வம்சத்தினருக்கே சொந்தமானது.  அதை நாங்கள் பெருமையுடன் எங்களிடமே வைத்துக் கொள்ளப் போகிறோம். குருவம்சத்தினருக்குப் பெருமை அளிக்கும் விஷயம் இது!” என்றான். இதைச் சொல்கையில் கோபத்தில் தன் இருக்கையிலேயே அவன் குதித்தான்.  எழுந்து ஆவேசமாகப் பேசினான்.  கர்ணனின் கைகள் தன்னிச்சையாக அவன் உடைவாளுக்குப் போக அஸ்வத்தாமோ உத்தவனைத் தின்று விடுபவன் போலப் பார்த்து முறைத்தான்.


துரியோதனனைப் பார்த்து வருத்தம் தெரிவிக்கும் வகையில் சிரித்த உத்தவன், மற்றபடி அவன் சொன்ன விஷயங்களால் பாதிப்பே அடையாமல் மேலே பேசினான்.  இப்போது அவன் துரியோதனனைப் பார்த்தே பேசினான்.  “மாட்சிமை பொருந்திய யுவராஜா! கிருஷ்ணனால் அனுப்பப் பட்ட தூதுச் செய்தியை முழுதும் நான் முடிக்கும் வரை பொறுமை காக்க வேண்டுகிறேன்.  பாட்டனாருக்கும், மன்னர் திருதராஷ்டிரருக்கும் செய்தியை நான் முழுதும் தெரிவிக்கிறேன்.  அதன் பின்னர் இதன் மேல் என்ன செய்யவேண்டும் என்று தீர்மானிப்பது அவர்கள் விருப்பம்!”  என்றான்.

“மஹாதேவா, என் ஆண்டவா, இந்த வாசுதேவன் என்ன என்னமோ அதிசயங்களைச் செய்து வருகிறானே!” தனக்குள்ளாக ஆச்சரியப் பட்டுக் கொண்டார் துரோணர்.  அவன் மேல் ஒரு அன்பான நெகிழ்வான நட்பு உணர்வும் அவர் மனதில் தோன்றியது.  இங்கே ஒரு நாடகம் நடக்கிறது. விசித்திரமான நாடகம்.  அதை எங்கிருந்தோ சூத்திரதாரியாக இயக்குபவன் கிருஷ்ண வாசுதேவன்.  இப்படிப்பட்ட அதிசயங்களை நடத்துபவன் நாடகத்தின் முடிவையும் தனக்கேற்ற மாதிரி முடியச் செய்வான்.

“இந்தச் செய்திக்கு, செகிதனாவும் ஒரு விஷயத்தைத் தன் பங்கிற்குச் சேர்த்திருக்கிறார்.” என்றான் உத்தவன்.  “என்ன அது?” என்று பீஷ்மர் கேட்டார்.  “செகிதனாவின் செய்தி இது: பாட்டனார் பீஷ்மருக்கு என் வணக்கங்கள்.  நீங்கள் தர்மத்தின் மொத்த வடிவம்.  புஷ்கரத்தின் பாதுகாவலனாகவும், மன்னனாகவும் நான் குரு வம்சத்தினரோடு நட்பாகவே இருந்து வந்தேன்.  எந்தவிதமான தூண்டுதலோ, முன்னறிவிப்போ இல்லாமல் திடீரென என் நாடு என்னிடம் இருந்து பிடுங்கப்பட்டது.  என் நாட்டிற்குள் அந்நியர்களான குரு வம்சத்து வீரர்கள் நுழைந்ததால், நானும், என் நாட்டு மக்களும், நாகர்களின் அரசனிடம் தஞ்சம் புக நேர்ந்தது. உங்களுக்குப் புரிந்திருக்கும் எது நல்லது என.  பிதாமகரே, நேர்மையின் வடிவம் நீர்!  உங்கள் நீதியும் பேசப்படும் ஒன்று.  அத்தகைய நீதிமுறையைப் பின்பற்றி என் நாட்டை என்னிடமும் , என் மக்களிடமும் மீண்டும் ஒப்படைக்க வேண்டுகிறேன்.  ஒருவேளை கிருஷ்ண வாசுதேவனும், மூத்தவர் பலராமரும் புஷ்கரம் வந்து தங்க விரும்பினால் நான் அவர்களுக்கு அருகே இருந்து நேரடியாக நானே உபசரிக்கவும் விரும்புகிறேன்.”

உத்தவனின் இத்தகைய நாகரிகமான பேச்சுக்களால் துரியோதனன் எரிச்சல் அடைந்தான்.  கோபத்தில் அவன் முகம் சிவந்தது.  “பாட்டா, இது ரொம்பவே அதிகம்!  இது சரியல்ல!” எனத் தன் மறுப்பைக் கடுமையாகத் தெரிவித்தான். துரியோதனனைச் சற்றும் கவனிக்காத பீஷ்மர் அவன் வார்த்தைகளை அலட்சியம் செய்துவிட்டு உத்தவன் பக்கம் திரும்பி, “உத்தவா, நாக மன்னன் கார்க்கோடகனின் செய்தி என்ன?” என்று கேட்டார்.