Friday, December 20, 2013

கடோத்கஜன் அரசனாகிறான்!

கூட்டம் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தது.  சூரியன் நன்கு மேல் கிளம்பி விட்டான்.  நல்ல வெளிச்சம் வந்துவிட்டது. திடீரென ஹிடும்பிக்குத் தன் உடை, தலை அலங்காரம் குறித்த கவலை ஏற்பட்டது.  தலையில் எப்போதும் வைத்துக்கொண்டு அலங்கரித்துக் கொள்ளும் பொய்த் தலைமுடியும், முகத்திற்கு அடிக்காத வண்ணக்கலவையும் அப்போது தான் நினைவில் வந்தது.  ஒரு மஹாராணி எப்படித் தோன்றவேண்டுமோ அப்படி அவள் இப்போது தோன்றவில்லை.  ஒரு மஹாராணிக்குரிய அலங்காரங்கள் இல்லாமல் இப்படி வர நேர்ந்தது அவளுக்கு ஆடையின்றித் தான் வெளிப்பட்டுவிட்டது போன்ற எண்ணத்தைக் கொடுத்து கூச்சத்தை உண்டாக்கியது.  அதோடு இல்லாமல் அவள் பிரஜைகளும் இப்போது மிகுந்த ஆச்சரியத்துடன் அவளைக் கூர்ந்து நோக்க ஆரம்பித்துவிட்டனர்.  ஹிடும்பிக்குத் தாங்க முடியாத வெட்கம் ஏற்பட்டது.  தன்னுடைய மஹாராணி என்னும் பதவியின் உயரிய புனித நோக்கத்திற்கு இழுக்கு ஏற்பட்டு விட்டதாகக் கருதிய அவள் தன் முகத்தை இரு கரங்களாலும் மூடிக் கொண்டு விம்மி அழ ஆரம்பித்தாள்.

ஹிடும்பியின் இக்கட்டான இந்தச் சூழ்நிலையைக் குந்தி மிக நன்றாகப் புரிந்து கொண்டுவிட்டாள்.  மெல்ல அவளருகே சென்று அவள் முகத்தைத் தன்பால் திருப்பி அவள் தலையைத் தன் மடியில் வைத்துக் கொண்டாள்.  அவள் ஸ்பரிசத்தில் தெரிந்த ஆறுதல் உணர்வும், நட்பு உணர்வும் ஹிடும்பியின் மனதை சமாதானம் செய்தது.  தன் மகன் ஒரு ராக்ஷசியைத் திருமணம் செய்து கொண்டதை அன்று வரை குந்தி சிறிதும் ஒப்புக்கொள்ளவே இல்லை.  அவள் மனம் எந்த சமரசத்துக்கும் வர மறுத்தது.  ஹிடும்பியுடன் தேவைக்கேற்பக் குறைந்த அளவுக்கான தொடர்பை மட்டும் பராமரித்து வந்தாள்.  ஆனால் இந்த இக்கட்டான நிலையில் ஹிடும்பியைப் பார்த்ததும், இயல்பாகவே தாயன்பால் நிறைந்திருக்கும் அவள் உள்ளத்தில் ஹிடும்பியின் பால் இரக்கமும் தாயன்பும் சுரந்தது.   அவளிடம் ஒரு சிநேகிதியைப் போல் நடந்து கொண்டாள்.  மனம் தளர்ந்து வருத்தத்தில் ஆழ்ந்திருந்த ஹிடும்பியை அருகிலிருந்த வியாசரின் குடிசைப்பக்கம் அழைத்துச் சென்றாள்.  ஒரு ராணிக்குரிய அலங்காரங்களில்லாமல் காட்சி அளித்த அவளை அவள் குடிமக்களின் கேலிப்பார்வைக்கு இலக்காக ஆக்காமல் மறைவாக அழைத்துச் சென்றாள்.  இந்த இரு வருடங்களில் முதல்முறையாக மாமியாரும், மருமகளும்  பெண்களுக்கே என இயல்பாக உள்ள இந்த அலங்கார விஷயத்தில் ஒத்துப் போனதோடு அல்லாமல் ஒருவர் மற்றவரை நன்கு புரிந்தும் கொண்டனர்.

இங்கே கூட்டத்தில் ஒவ்வொருத்தருக்கும் தனித்தனியாக மருந்து கலந்த பாலை அளித்து ஆசீர்வதித்த வியாசர் அனைவரையும் பார்த்து, “என் அருமைக் குழந்தைகளே, நான் இங்கிருந்து கிளம்பும் நேரம் வந்துவிட்டது.  உங்கள் மன்னன் வ்ருகோதரன் அநுமதித்தால் நாளை அல்லது நாளை மறுநாள் கிளம்ப இருக்கிறேன்.” என்றார்.  வியாசரின் மருந்தினால் பயனடைந்தவர்கள் வருந்தினார்கள்.  மற்றவர்களுக்கொஞ்சம் நிம்மதியாகவே இருந்தது எனலாம். அப்போது பீமன், தன் தலைக்கு உரிய அலங்காரங்களைச் செய்து கொண்டு ஒரு ராக்ஷச ராணியாக மாறி வந்து கொண்டிருந்த தன் மனைவி ஹிடும்பியைப் பார்த்துப் புன்னகைத்துக் கொண்டே வியாசரிடம், “ஆசாரியரே, நீங்கள் கடோத்கஜனைத் தூக்கிச் சென்றுவிடப் போவதாக ஹிடும்பி கூறுகிறாள்.  அது உண்மையா?” என்று கேட்டான்.   அங்கிருந்து கிளம்பிக் கொண்டிருந்த மற்ற ராக்ஷசர்களும் இந்தக் கேள்விக்கு வியாசரின் பதிலை அறியும் ஆவலுடன் அங்கேயே நின்றனர்.  வியாசர் பீமனைப் பார்த்துக் கடகடவெனச் சிரித்தார்.   “குழந்தாய் பீமா!  உன் மகன், கடோத்கஜன், என் அருமைக் கொள்ளுப் பேரன் இரண்டு பெரிய வம்சங்களுக்கு ஒரே வாரிசு. ஒன்று இங்குள்ள ராக்ஷசகுலத்து விரோசனனின் வம்சம்.  இன்னொன்று குரு வம்சம்.  அவனை அவன் மக்களிடம் இருந்து பிரித்து அழைத்துச் செல்ல நான் எவ்வாறு நினைப்பேன்?  இங்குள்ளவர்கள் அனுமதி அளித்தால் இவர்களின் முன்னோரான விரோசனனின் அநுமதியோடு கடோத்கஜனை அடுத்த ராக்ஷச குல அரசனாக்கிவிட்டுச் செல்வேன்.”  என்றார்.

கூடி இருந்த அனைவரும் மகிழ்ச்சியில் கூக்குரலிட்டு வாழ்த்துக்களைத் தெரிவிக்க ஆரம்பித்தனர். ஹிடும்பிக்குத் தன் காதுகளையே நம்ப முடியவில்லை.  திடீரென ஏற்பட்ட இந்நிகழ்ச்சியால் அவளுக்கு அதிர்ச்சியும், ஆச்சரியமும் ஒருங்கே ஏற்பட்டது.   அங்கிருந்து கிளம்பவேண்டும் என்னும் எண்ணம் பீமனுக்கும் அப்போது ஏற்பட்டு விட்டது.  ஆகவே அவன் வியாசரைப் பார்த்து, “குருவே, கடோத்கஜன் அரசன் ஆனால் என் நிலைமை என்னாவது?  நான் எங்கே இருப்பேன்?  என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டான்.  “நீ அனைவராலும் எதிர்பார்க்கப்படுகிறாய் மகனே!” என்ற வியாசர், “உன் மகன் கடோத்கஜன் அரசன் ஆனதும், வருகிற பெளர்ணமி தினத்துக்குப் பின்னர் நீயும், உன் சகோதரர்கள் நால்வரும், உன் தாய் குந்தியுடன் ராக்ஷச வர்த்தத்தை விட்டு உன் சொந்த நாட்டுக்குத் திரும்பிச் செல்வாயாக!” என்றார்.

என்ன? வ்ருகோதரன், ராக்ஷச அரசன் நாட்டை விட்டு வெளியேறி சொந்த நாட்டுக்குச் செல்வதா?  ம்ஹூம், ராக்ஷசர்களுக்கு இதில் சம்மதமே இல்லை.  வ்ருகோதரன் எங்களுடனேயே இருக்க வேண்டும்.  அவன் வெளியேறக் கூடாது.  அனைவரும் இதற்கு ஆதரவு தெரிவித்து கோஷமிட்டனர்.

“அவன் மக்கள் அவனை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கின்றனர்!” என்றார் வியாசர்.  “ஆஹா, வ்ருகோதரன் இல்லாமல் நாங்கள் என்ன செய்வோம்?  எங்களால் என்ன முடியும்?  எங்களை அவர் அன்றோ பாதுகாத்து வந்தார்!” என்று நிகும்பனின் தகப்பன் கும்பன் சொல்ல மற்ற ராக்ஷசர்களும் அதை ஆமோதித்தனர்.  “எங்கள் எதிரிகளிடமிருந்தும், கெட்ட ஆவிகளிடமிருந்தும் எங்களைக் காக்கப் போவது யார்? “ கலங்கினார்கள் அனைவரும்.  “உங்களுக்கு ஒன்றும் நேராது.  இதோ ஹிடும்பி இருக்கிறாள் கடோத்கஜனின் அன்னையான அவள் ராணியாக உங்களைப் பாதுகாத்து வருவாள்.  கடோத்கஜனுக்கு உரிய காலம் வந்ததும் அவன் பொறுப்பை ஏற்பான்.  என் ஆசிகள் எப்போதுமே உங்களுக்கு உண்டு.  ஆகவே கவலைப்படாமல் இருங்கள்.” என்றார் வியாசர்.3 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

தொடர்கிறேன் அம்மா... நன்றி...

ஸ்ரீராம். said...

துயர்மிகு பிரிவு.

sambasivam6geetha said...

நன்றி ஶ்ரீராம்,

நன்றி டிடி.