"மாட்சிமை பொருந்திய வாசுதேவனை வரவேற்பதில் பாஞ்சாலம் பெருமையும் அதிர்ஷ்டமும் அடைந்திருக்கிறது!" என்றான் துருபதன் தன் கம்பீரமான குரலில். கிருஷ்ணனும், அங்குள்ள அனைவருமே துருபதனின் இருப்பை உணர்ந்து முழு அரச மரியாதையைக் காட்டுவதை உணர்ந்தான். கண்ணன் மெல்லிய நகையுடன், "உண்மையில் எனக்குத் தான் அதிர்ஷ்டமும், பெருமையும்." என்று கூறினான். துருபதனின் கால்களைத் தொட்டு வணங்க முயன்ற கண்ணனைத் தடுத்துத் தன்னோடு சேர்த்து அணைத்துக் கொண்டான் துருபதன். மிக அழகாகவும், ஆடம்பரமாகவும் அலங்கரிக்கப்பட்ட பட்டத்து யானையின் மேல் தன்னருகே கண்ணனை அமரச் சொன்னான் துருபதன். அவர்களுடன் த்ருஷ்டத்யும்னனும் அவன் சகோதரன் சத்யஜித்தும் அமர்ந்து கொள்ள யானை பிளிறிக் கொண்டே கிளம்பியது. மற்றவர்கள் அனைவரும் அவர்களைப் பின் தொடர்ந்தார்கள்.
முன்னே முரசுகளும், பேரிகைகளும் சப்திக்க, எக்காளங்கள் ஊத, கட்டியக்காரர்கள் கட்டியம் கூற, பின்னே ஊர்வலம் முக்கிய வீதிகளின் வழியாகச் சென்றது. மிகக் குறைவாகவே பேசிய துருபதன் பேசிய ஓரிரு வார்த்தைகளும் ஆழ்ந்த உணர்வுகளோடு கூடியதாக இருந்ததைக் கண்ணன் உணர்ந்தான். யாதவர்களையும் அவர்களின் இடம் மாற்றி வேறிடம் சென்றதையும், அவர்களைப் பற்றிய மற்ற விபரங்களையும் துருபதன் நன்கு அறிந்திருந்தான். குரு சாந்தீபனியைத் தவிரவும் அவன் ஒற்றர்கள் மூலமும் இதை எல்லாம் அறிந்திருக்கலாம் எனக் கண்ணன் நினைத்தான். த்ருஷ்டத்யும்னனிடமும், சத்யஜித்திடமும் கண்ணன் பேசிய போதும் அவர்கள் இருவருமே துருபதனைப் போலக் கேட்ட கேள்விக்குப் பதில் என்ற அளவில் இருந்ததைக் கண்டான். ஆனாலும், அவர்கள்கண்களில் அவர்கள் நேர்மை தெரிந்ததோடு கிருஷ்ணனைக் குறித்து அவர்கள் மிகப் பெருமையாகவும், உயர்வாகவும் உளமார, மனமார நினைக்கின்றார்கள் என்பதையும் புரிந்து கொண்டான்.
மாளிகைக்கு வந்ததும், துருபதனின் மூன்றாவது மகன் ஷிகண்டினை அறிமுகம் செய்து வைத்தார்கள். பார்ப்பதற்கு ஒரு அழகான சிறு பெண்ணைப்போல் காட்சி அளித்த ஷிகண்டின் வயதுக்கேற்ற வளர்ச்சி இல்லாமல் காணப்பட்டான். அவன் வரும் முன்னரே அவனுக்கும் முன்னால் அவனுடைய பயந்த சுபாவம் அங்கே ஒரு காற்றைப் போல் சூழ்ந்து கொண்டு மூச்சு முட்ட வைப்பதைப் போல் கண்ணன் உணர்ந்தான். துருபதனும், அவனுடைய மற்ற இரு மகன்களும் ஷிகண்டினையே பார்த்துக் கொண்டிருக்க அந்தப் பையனோ சபையை அவமதிக்கும் விதமாக நடந்து கொண்டுவிடுவானோ எனக் கண்ணன் அஞ்சினான். அப்படியே அவனும் நடுங்கிக் கொண்டிருந்தான். தடுமாறினான். முறையான வரவேற்புக் கொண்டாட்டத்தில் கலந்து கொள்ள முடியாமல் தவித்தான். பின்னர் அனைவருக்கும் ராஜ விருந்து படைக்கப்பட்டது. உயர் அதிகாரிகள் சூழ, முக்கியமான நபர்கள் கலந்து கொள்ள மிகவும் உயர்தரமான விருந்து படைக்கப்பட்டது.
ஏற்பாடுகள் அனைத்தும் கன கச்சிதமாகச் செய்யப்பட்டிருந்தது. எங்கோ தூரத்தில் மெல்லிய இசை ஒலிக்க,அரச குடும்பத்துப் பெண்கள் மிக அருமையாகவும், பகட்டான ஆடை அலங்காரத்துடனும் வந்து உணவு பரிமாற ஆரம்பித்தார்கள். அவர்களில் துருபதனின் அன்பு மகள் திரெளபதியும் இருந்தாள்.