Friday, December 28, 2012

கண்ணனுக்கு வரவேற்பு!


"மாட்சிமை பொருந்திய வாசுதேவனை வரவேற்பதில் பாஞ்சாலம் பெருமையும் அதிர்ஷ்டமும் அடைந்திருக்கிறது!" என்றான் துருபதன் தன் கம்பீரமான குரலில்.  கிருஷ்ணனும், அங்குள்ள அனைவருமே துருபதனின் இருப்பை உணர்ந்து முழு அரச மரியாதையைக் காட்டுவதை உணர்ந்தான்.  கண்ணன் மெல்லிய நகையுடன், "உண்மையில் எனக்குத் தான் அதிர்ஷ்டமும், பெருமையும்." என்று கூறினான்.  துருபதனின் கால்களைத் தொட்டு வணங்க முயன்ற கண்ணனைத் தடுத்துத் தன்னோடு சேர்த்து அணைத்துக் கொண்டான் துருபதன்.  மிக அழகாகவும், ஆடம்பரமாகவும் அலங்கரிக்கப்பட்ட பட்டத்து யானையின் மேல் தன்னருகே கண்ணனை அமரச் சொன்னான் துருபதன்.  அவர்களுடன் த்ருஷ்டத்யும்னனும் அவன் சகோதரன் சத்யஜித்தும் அமர்ந்து கொள்ள யானை பிளிறிக் கொண்டே கிளம்பியது. மற்றவர்கள் அனைவரும் அவர்களைப் பின் தொடர்ந்தார்கள்.

முன்னே முரசுகளும், பேரிகைகளும் சப்திக்க, எக்காளங்கள் ஊத, கட்டியக்காரர்கள் கட்டியம் கூற, பின்னே ஊர்வலம் முக்கிய வீதிகளின் வழியாகச் சென்றது.  மிகக் குறைவாகவே பேசிய துருபதன் பேசிய ஓரிரு வார்த்தைகளும் ஆழ்ந்த உணர்வுகளோடு கூடியதாக இருந்ததைக் கண்ணன் உணர்ந்தான்.  யாதவர்களையும் அவர்களின் இடம் மாற்றி வேறிடம் சென்றதையும், அவர்களைப் பற்றிய மற்ற விபரங்களையும் துருபதன் நன்கு அறிந்திருந்தான்.  குரு சாந்தீபனியைத் தவிரவும் அவன் ஒற்றர்கள் மூலமும் இதை எல்லாம் அறிந்திருக்கலாம் எனக் கண்ணன் நினைத்தான்.  த்ருஷ்டத்யும்னனிடமும், சத்யஜித்திடமும் கண்ணன் பேசிய போதும் அவர்கள் இருவருமே துருபதனைப் போலக் கேட்ட கேள்விக்குப் பதில் என்ற அளவில் இருந்ததைக் கண்டான்.  ஆனாலும், அவர்கள்கண்களில் அவர்கள் நேர்மை தெரிந்ததோடு கிருஷ்ணனைக் குறித்து அவர்கள் மிகப் பெருமையாகவும், உயர்வாகவும் உளமார, மனமார நினைக்கின்றார்கள் என்பதையும் புரிந்து கொண்டான்.

மாளிகைக்கு வந்ததும், துருபதனின் மூன்றாவது மகன் ஷிகண்டினை அறிமுகம் செய்து வைத்தார்கள். பார்ப்பதற்கு ஒரு அழகான சிறு பெண்ணைப்போல் காட்சி அளித்த ஷிகண்டின் வயதுக்கேற்ற வளர்ச்சி இல்லாமல் காணப்பட்டான்.  அவன் வரும் முன்னரே அவனுக்கும் முன்னால் அவனுடைய பயந்த சுபாவம் அங்கே ஒரு காற்றைப் போல் சூழ்ந்து கொண்டு மூச்சு முட்ட வைப்பதைப் போல் கண்ணன் உணர்ந்தான்.  துருபதனும், அவனுடைய மற்ற இரு மகன்களும் ஷிகண்டினையே பார்த்துக் கொண்டிருக்க அந்தப் பையனோ சபையை அவமதிக்கும் விதமாக நடந்து கொண்டுவிடுவானோ எனக் கண்ணன் அஞ்சினான்.  அப்படியே அவனும் நடுங்கிக் கொண்டிருந்தான். தடுமாறினான்.  முறையான வரவேற்புக் கொண்டாட்டத்தில் கலந்து கொள்ள முடியாமல் தவித்தான். பின்னர் அனைவருக்கும் ராஜ விருந்து படைக்கப்பட்டது.  உயர் அதிகாரிகள் சூழ, முக்கியமான நபர்கள் கலந்து கொள்ள மிகவும் உயர்தரமான விருந்து படைக்கப்பட்டது.

ஏற்பாடுகள் அனைத்தும் கன கச்சிதமாகச் செய்யப்பட்டிருந்தது.  எங்கோ தூரத்தில் மெல்லிய இசை ஒலிக்க,அரச குடும்பத்துப் பெண்கள் மிக அருமையாகவும், பகட்டான ஆடை அலங்காரத்துடனும் வந்து உணவு பரிமாற ஆரம்பித்தார்கள்.  அவர்களில் துருபதனின் அன்பு மகள் திரெளபதியும் இருந்தாள்.

Saturday, December 15, 2012

பாஞ்சாலத்தில் கண்ணன்!


சத்யவதி தன்னிடம் பகிர்ந்து கொண்ட ரகசியம் வியாசருக்குத் தெரிந்திருக்குமா எனக் கண்ணன் யோசித்தான்.  அவரிடம், “தாங்கள் ஐந்து சகோதரர்களும் உயிருடன் இருக்கிறார்கள் என நம்புகிறீர்களா ஆசாரியரே!” எனக் கண்ணன் கேட்டான்.  வியாசர் அந்தக் கேள்விக்கு நேரடியாகப்பதில் கூறவில்லை.  “அப்படி அவர்கள் இறந்திருந்தால்???? கண்ணா, நீ இங்கே இப்போது இருக்கிறாய்.  எதற்கு?  ஆர்ய வர்த்தத்தின் அரசர்களுக்கு மனுநீதியையும், வைவஸ்வதர் சொன்னதையும், ஜனகர் சொன்ன ராஜநீதியையும் நீயன்றோ போதிக்க வேண்டும்! வாசுதேவா, இப்போது நீ துருபதனைச் சந்திக்கச் செல்கிறாய் அல்லவா?  அவனிடம் அன்பின் மூலமும், பாசத்தின் மூலமும் மட்டுமே வெற்றி கிட்டும் என எடுத்துச் சொல்லி அவன் மனதை மாற்றுவதில் வெற்றி அடை !  குரு வம்சத்தினருக்கும், பாஞ்சால நாட்டு மன்னனுக்கும் நடுவில் இருக்கும் பகை அடியோடு ஒழிந்து அங்கே ஒரு அமைதியான நட்புப்பூங்கா உருவாகட்டும்.  பாஞ்சால நாட்டு மன்னர்களும் சாமானியர்கள் அல்ல,  தர்மத்தைக் கடைப்பிடிப்பதில் வல்லவர்களே. “

“மாட்சிமை பொருந்திய ஆசாரியரே, இந்த விஷயத்தில் என்னால் எவ்வளவு தூரம் உதவ முடியும் எனப் புரியவில்லை.  எனினும் நான் முயல்கிறேன்.”
“நீ ஒரு க்ஷத்திரியன் கண்ணா! எப்போதும் அரசனுக்குரிய தர்மத்தையே கடைப்பிடித்து வா.  க்ஷத்திரிய தர்மத்தைக் கைவிடாதே.  உண்மையை மதித்து நட!  தர்மத்தின் வழி செல்பவருக்குத் தக்க மரியாதையைக் கொடுத்து வா.  மற்றவற்றை அந்த மாபெரும் இறைவன் கைகளில் விட்டு விடு.”
“பீஷ்மரும் இதையே தான் சொன்னார் ஆசாரியரே!”  என்றான் கண்ணன்.
“துரியோதனனின் சதித்திட்டங்களை பீஷ்மன் முறியடித்து அவனுக்கு ஒரு பாடம் புகட்டி இருக்கவேண்டும் .  மாறாக துரியோதனனுக்கு அடங்கி நடக்கும்படி யுதிஷ்டிரனுக்குச் சொல்லிக் கொடுத்தது அவன் செய்த மாபெரும் தவறு.”  வியாசர் கூறினார்.  ஒரு சிறுநகையுடன், மேலும் தொடர்ந்து, “ஒவ்வொரு மனிதனும் அவனுக்கென ஒரு தனிக் கடமையைக் கைக்கொண்டிருக்கிறான்.  பீஷ்மன் குரு வம்சத்தையும் ஹஸ்தினாபுரத்தையும் காப்பது அவனுடைய மாபெரும் கடமையாகக் கொண்டிருக்கிறான்.  ஆகவே அவன் வரையில் அதைக் காக்க வேண்டி அவன் செய்தது சரி.”

“ஆம், ஐயா, நான் அறிந்த வரையில் பீஷ்மரின் மனதுக்குள்ளே ஒரு பிரளயமே நடந்து கொண்டிருக்கிறது.  மிகுந்த மனப்போராட்டத்தில் அவர் தவிக்கிறார்.  ஐந்து சகோதரர்களா?  ஹஸ்தினாபுரமா?  என்ற கேள்வி எழுந்தபோது அவர் மனம் ஹஸ்தினாபுரம் பக்கமே சாய்ந்துவிட்டது.  அதே சமயம் சகோதரர்களிடம் வைத்திருக்கும் பாசத்தாலும் தவிக்கிறார்.”

“வாசுதேவா, உன் எதிரில் காணப்படும் அனைத்துப் பிரச்னைகளையும் நீ தக்க விதத்தில் சமாளிப்பாய்.  எனினும் நீ எல்லாவற்றையும் அந்த இறைவனிடம் ஒப்படைத்துவிடு.  உன் ஒருவனால் மட்டுமே இந்தப் பிரச்னைகளைக் கட்டுக்குள் கொண்டு வர முடியும்.  இது தான் உன் வாழ்க்கையின் உண்மையான அர்த்தம்;  நீ கட்டப் போகும் பிரம்மாண்டமான சாம்ராஜ்யமும் இதுவே.  இதை எவராலும் வெல்ல முடியாது.”  என்றார் வியாசர்.
“தங்கள் ஆசிகளை வேண்டுகிறேன் குருதேவரே!” என்று கண்ணன் அவர் பாதம் பணிந்தான். 
“என் ஆசிகள் எப்போதும் உனக்கு உண்டு வாசுதேவா!  நீ மேற்கொள்ளப் போகும் அனைத்துச் செயல்களிலும் வெற்றியே அடைவாய்!”  தன்னிரு கரங்களைத் தூக்கி ஆசீர்வதித்தார் வியாசர்.  அதற்குள் வியாசரை அழைத்துச் செல்ல தெளமியர் வர, அவருடன் வேதபாடசாலைக்குச் சென்றார் வியாசர்.  மாலை நேர அநுஷ்டானங்களுக்கும், வழிபாட்டுக்கும் பின்னர் அனைவரும் பழங்கள், பால் என அருந்தி இரவு உணவை முடித்துக் கொண்டு படுத்தனர்.  இரவு முழுவதும் வியாசரின் அருகாமையை மிகவும் நன்றாக உணர்ந்தான் கண்ணன்.  காலையில் எழுந்ததும், வியாசர் தன் சீடர்களோடு நடுக்காட்டிற்குள் இருக்கும் நாகர்களின் அரசன் ஆன ஆர்யகனைச் சந்திக்கச் சென்றுவிட்டார் எனக் கண்ணன் கேள்விப் பட்டான்.  விடிவதற்கு முன்னரே அவர்கள் கிளம்பிச் சென்றிருந்தனர்.  உத்தவனைத் தேடினான் கிருஷ்ணன்.  அவன் வியாசருடன் சென்றிருப்பதாக சாத்யகி கூறினான்.
“உத்தவன், உங்கள் இருவரின் தந்தைக்கும் தாய்வழிப் பாட்டனார் ஆன ஆர்யகனைச் சந்தித்து ஆசிகள் பெற்று வரப் போயிருக்கிறான்.  நாம் நம் வழியே திரும்புகையில் உத்கோசகத்துக்கு அருகே நம்முடன் சேர்ந்து கொள்வதாய்க் கூறினான்.”  சாத்யகி மேலும் கூறினான்.

“ஏன் அவன் திடீரெனச் சென்றிருக்கிறான்?”  கண்ணன் உத்தவன் சாத்யகியிடம் உண்மையைச் சொல்லி விட்டுச் சென்றிருக்கிறானா என அறிய விரும்பினான்.  ஆனால் சாத்யகியோ, “ ஒருவேளை ஐந்து சகோதரர்களும் உண்மையாகவே இறந்துவிட்டனரா என அவன் அறிய விரும்பி இருக்கலாம்.  எனக்கு என்ன தெரியும் கண்ணா! ஆசாரியர் வியாசருடன் பேசியதும், உத்தவனுக்கு வியாசரும் அதே விஷயமாகத் தான் ஆர்யகனைச் சந்திக்கச் செல்கிறார் எனத் தோன்றி இருக்கலாம்.  அல்லது காட்டின் நடுவில் ஆர்யகனின் பாதுகாப்பில் ஐந்து சகோதரர்களும் இருக்கிறார்களா என வியாச முனிவர் பார்க்கப் போவதாகவும் நினைத்திருக்கலாம்.  நான் அறியேன்!”
சாத்யகியின் சாமர்த்தியமான பதிலைக் கேட்டுக் கண்ணன் சிரித்தான்.

கிருஷ்ணனும், அவனுடன் வந்தவர்களும் நதியிலேயே தங்கள் பயணத்தைத் தொடர்ந்தனர்.  ஏகசக்ர தீர்த்தத்தின்  அருகே அவர்கள் வந்துவிட்டனர்.  இன்னும் ஒரே ஒரு துறை தான் காம்பில்யத்தை அடைய பாக்கி இருந்தது.  ஏக சக்ர தீர்த்தக்கரையிலேயே திருஷ்டத்யும்னன் அவர்களைச் சந்தித்தான்.  பாஞ்சால நாட்டு அரசன் தன் யுவராஜாவான திருஷ்டத்யும்னனை மட்டுமின்றி, தன் முதல் அமைச்சரையும் கண்ணனை வரவேற்க அனுப்பி இருந்தான்.  ஆசாரிய உத்போதனர் என்னும் பெயர் கொண்ட முதல் அமைச்சருடன், ஷ்வேதகேதுவும் வந்திருந்தான்.  அவன் முன்னால் சென்று கண்ணன் வருகையை அறிவிக்கவே துருபதனால் இத்தனை ஏற்பாடுகளையும் செய்ய முடிந்தது.  பாஞ்சால நாட்டுத் தலை நகருக்கு அழகாக அலங்கரிக்கப் பட்ட படகுகளில் அனைவரும் சென்றனர்.  கரையோரங்களில் அவர்கள் தங்குகையில் அங்கிருந்த குடியிருப்பின் மக்கள் அவர்களுக்குப் பெரிய அளவில் வரவேற்பு அளித்தனர்.  திருஷ்டத்யும்னனின் வீர, தீரப்பராக்கிரமங்களையும், அவனின் திடமான உறுதியான உடலையும், உறுதியைக் காட்டும் கண்களையும் பார்த்த கிருஷ்ணன் சந்தோஷம் அடைந்தான்.  பாஞ்சால நாட்டு மன்னனின் ஆட்சியில் குடிமக்கள் எவ்விதக் குறையுமின்றி சந்தோஷமாக இருப்பதாகக் கண்ணன் கேள்விப் பட்டிருந்தான்.  அவர்கள் தங்கிச் செல்லும் இடங்களில் உள்ள மக்கள் மூலம் கண்ணன் அதைப் பூரணமாகப் புரிந்து கொண்டதோடு ஆங்காங்கே நிறைய ரிஷிகளின் ஆசிரமங்களும், குருகுலங்களும் இருப்பதையும் பார்த்தான். 

காம்பில்யத்தை அவர்கள் அடைந்த போது கோட்டை வாயிலுக்கே வந்து கண்ணனை வரவேற்றான் துருபதன்.  மக்களோ வெள்ளமாகக் கூடி இருந்தனர்.  கண்ணனின் சாகசக் கதைகள் அவ்வளவு தூரம் மக்கள் மனதைக் கவர்ந்திருந்தது.  உயரமாகவும், அதிகப்பருமன் இல்லாமலும், மாபெரும் வீரன் எனவும் தோற்றமளித்த துருபதன் முகத்தில் எப்போதும் உறைந்த தன்மையே காணப்படுமோ என எண்ணும்படி இருந்தான்.  எனினும் நெடுநாட்களாய்த் தான் காத்துக் கொண்டிருந்த தன் அருமை விருந்தினரை வரவேற்க வேண்டி அவன் முகம் கொஞ்சம் போல இளகியும் இருந்தது. 

Monday, December 10, 2012

தர்மத்தின் வாழ்வதனைச் சூது கவ்வும்!


“கண்ணா,  இப்படி எல்லாம் நினைத்துக் கொண்டிருந்தேன் எனில் நான் இத்தனை காலம் உயிர் வாழ்ந்திருக்கவே முடியாது.  வாசுதேவ கிருஷ்ணா, நான் பிறந்த சமயம் இந்த ஆர்யவர்த்தம் சகலவிதமான செளகரியங்களையும் கொண்டிருந்தது.  ஆனால் அதன் மன்னர்களிடையே ஒற்றுமை என்பதே இல்லை.  வேதங்கள் ஓதுவதும், அவற்றைப் பற்றிப் பேசுவதும் முற்றிலும் தடை செய்யப்பட்டிருந்தது.  உள்நாட்டுச் சண்டையில் முக்கியத்துவம் காட்டி வந்த மன்னர்கள் வேதம் ஓதுதலை மறந்தே விட்டார்கள் எனலாம்.  ஆசிரமங்கள் அனைத்தும் காடுகள் போல் மாறிவிட்டன.  இப்படி அனைத்தும் அழிந்துவிடுமோ என்னும் சூழ்நிலையிலேயே நான் பிறந்தேன்.”

“பின்னர் நீங்கள் அனைத்தையும் மீண்டும் நிலை நாட்டி தர்மத்தை ஸ்தாபித்து இருக்கிறீர்கள்.  ஆசாரியரே, மிகக் கடினமான இந்த வேலையைத் தனி ஒருவராக எப்படிச் செய்தீர்கள்? உங்களால் எப்படி முடிந்தது?”  கண்ணன் ஆச்சரியத்தோடு கேட்டான். 

“கண்ணா, தர்மம் என்பது காலவரையரை இல்லாத ஒன்று.  அது என்றும் நிலைத்திருப்பது.  ஆகவே அழியாத ஒன்று.  அவ்வப்போது அதற்குச் சரியான பாதுகாவல் இல்லாமல் மறைந்திருப்பது போல் தோன்றலாம்.  ஆனால் தக்க சமயம் வந்ததும் மீண்டும் தலையெடுக்கும்.   தர்மம் ஒருகாலும் அழியாது.  ஏனெனில் அதுவே சத்தியம், நிரந்தரம், உண்மை!  எவராலும் அதை அழிக்க இயலாது!”
“ஆனால், ஆசாரியரே, ஜராசந்தன் போன்ற அரசர்களாலும் என் மாமன் கம்சன் போன்ற கொடியவர்களாலும் தர்மத்தை அழிக்க முடிந்திருக்கிறது.  தாங்கள் நன்கு அறிவீர்கள்.”

“கண்ணா, நான் பெரிய சாம்ராஜ்யச் சக்கரவர்த்திகளையும் சரி, குறுநில மன்னர்களையும் சரி நம்புவதே இல்லை.  ஏனெனில் அவர்கள் மனம் முழுதும் வெறுப்பு, அவநம்பிக்கை, பொறாமை, ஒருவர் மற்றவர் மேல் கொண்டுள்ள பயம் ஆகியவற்றால் பீடிக்கப்பட்டுள்ளார்கள்.  இவையே அவர்களை வழிநடத்துகிறது.  நான் ரிஷி, முனிவர்களையும், ஆசிரமங்களையுமே நம்புகிறேன்.  நதி வழியாகவும், தரை வழியாகவும் நான் ஒவ்வொரு ஆசிரமமாகப் பயணிக்கையில் அவை அனைத்துமே ஒரு அருமையான பல்கலைக்கழகங்களாகத் திகழ்வதை உணர்கிறேன்.  மாணவர்களின் வாழ்க்கைக்கு மட்டுமின்றி அவர்களின் ஆத்ம தாகத்தையும் தீர்க்க வல்லவை இந்த குருகுலங்கள்.  பற்பல கலைகளையும் சுய ஒழுக்கத்தையும் போதிக்கும் இந்த ஆசிரமங்களினால் மாணவர்களின் தன்னம்பிக்கை அதிகமாவதோடு சுயக் கட்டுப்பாடும் அதிகமாகிறது.  இதன் ஆசிரியர்கள் ஒருவேளை ஏழையாக இருக்கலாம்.  தப்பில்லை.  ஆனால் அவர்கள் தவத்தில் உயர்ந்தவர்கள்.  அதர்மம் எந்த விதத்தில் வந்தாலும் அவர்களின் தவ பலத்தால் அவர்கள் உயர்ந்தே நிற்கிறார்கள்.  இவர்களை எதிர்த்து எந்த அரசனும் ஒன்றும் செய்ய இயலாது.”

“ஆமாம், ஆசாரியரே, உங்களாலும், உங்கள் வழிநடத்தலாலும் அனைத்து ஆசிரமங்களும் பல்கலைக் கூடமாகவே திகழ்கின்றன.”

“கண்ணா, முதலில் நான் ஒருவனாகத் தான் இந்த யுத்தத்தை ஆரம்பித்தேன். ஆனால், நாளாக, ஆக, எல்லாம் வல்ல மஹாதேவனால் இந்த ரிஷிகளின் மனதில் தைரியத்தையும் நம்பிக்கையையும் ஊட்ட முடிந்தது.  அனைவரும் என் பக்கம் சேர்ந்தார்கள்.  இந்த ரிஷிகள் அனைவரும் தர்மத்தின் வழிநடப்பவர்கள்.  அதைக் காப்பதற்காக எப்படிப்பட்ட ஏழ்மையோ கஷ்டமோ  வந்தாலும் அதையும் தாங்கிக் கொண்டிருக்கிறார்கள்.  இவர்களின் இந்த உற்சாகம் பல அரசர்களையும் கவர்ந்திருப்பதோடு அல்லாமல் இவர்கள் மேல் மட்டற்ற மரியாதை கொள்ளவும், இவர்களுக்கு எந்தவிதமான உதவிகளைச் செய்யவும் வைத்திருக்கிறது.  இதோ இந்த தெளம்யரைப்  பார் கண்ணா!  ஒரு வருடம் முன்னால் இவர் இங்கு வந்து இந்த ஆசிரமத்தை நிறுவினார்.  இவருடைய இடைவிடா தபஸின் காரணமாகக் காட்டுவாசிகளான இந்த நாகர்களைக் கூட முன்னேற வைத்துள்ளார்.  அவர்களின் நடவடிக்கைகள், போர் முறைகள் அனைத்திலும் கட்டுப்பாடும் நாகரிகமும் கொண்டு வர இவரால் இயன்றிருக்கிறது.  ஆரியர்களின் நாகரிக வாழ்க்கை முறையை நாகர்களின் தலைவன் ஆர்யகனும், அவன் குடிமக்களும் முழு மனதோடு ஏற்றுக் கொண்டு விட்டனர்.  பல அரசர்கள் பலமுறை முயன்றும் அவர்களில் எவராலும் நடக்காத ஒன்று இந்த தெளம்யரின் தபஸினால் நடந்துள்ளது.  “

“ஆர்யகன் இன்னமும் சுறுசுறுப்பாக நடமாடும் நிலையில் இருக்கிறாரா, ஆசாரியரே?”

“ஆர்யகனுக்கு மிகவும் வயது ஆகி விட்டது.”  என்றார் வியாசர்.

“சொல்லுங்கள் ஆசாரியரே!துரியோதனனை எவ்வாறு தர்மத்தின் வழியில் திருப்புவது?”  இதைச் சொல்லும்போது ஹஸ்தினாபுரத்தில் நடந்த கெளரி பூஜையும், அதைச் சாக்காக வைத்து பானுமதியின் மூலம் தன்னை மாற்ற துரியோதனன் செய்த கேவலமான முயற்சிகளும் கண்ணன் நினைவில் வந்தது.

“கண்ணா, அதைக் குறித்தெல்லாம் யோசிக்காதே!  எல்லாம் வல்ல மஹாதேவனால் சரியான நேரத்தில் இதற்கு ஒரு பதிலைக் கொடுக்க இயலும்.   நமக்கு வேண்டியதை, வேண்டிய சமயம் அவன் கொடுத்தே ஆகவேண்டும் என நாம் யாரையும் கட்டாயப் படுத்த முடியாது.  அதற்கு நமக்கு எந்த உரிமையும் இல்லை.” வியாசர் முகத்தின் புன்சிரிப்பு விரிந்தது ஒரு மலர் மெல்ல மெல்ல மலர்வது போல் இருந்தது.

“ம்ம்ம்ம்…மேலும் இப்போது யுதிஷ்டிரனும் மறைந்துவிட்டான்.”  கண்ணன் தொடர்ந்தான்.

வியாசரின் புன்னகை மேலும் விகசித்தது.  “அவர்கள் சொல்கின்றனர்.  யுதிஷ்டிரன் மாண்டுவிட்டான் என. “ எவராலும் அறிந்து கொள்ள இயலாத மர்மச் சிரிப்பொன்று வியாசரின் முகத்தில் காணப்பட்டது.  “ எனக்குத் தெரியும்.  அவன் சாகவில்லை;  உயிருடன் இருக்கிறான்.  உடலோடு இல்லை என்றாலும்  ஆன்ம சொரூபத்திலாவது.”  கண்ணன் முகத்தைப் பார்த்துச் சிரித்தார் வியாசர். 


Thursday, December 6, 2012

கண்ணனை விட என் கவலை அதிகமா இருந்தது.  ஒரு வழியா இதுவும் சரியா வந்திருக்கு.  இறைவனுக்கு நன்றி.

Tuesday, December 4, 2012

கண்ணனுக்கும் கவலை!


அனைவரும் உணவு உண்ண அமர்ந்த போதும் வியாசருக்கு அவர்களுடனேயே அமர்ந்து உணவு உண்ணப் பரிமாறி இருந்தாலும் அவர் உடனடியாக அமராமல் அனைவரையும் பந்தி விசாரணை செய்து அவரவருக்கு வேண்டியவற்றைக் கேட்டறிந்து அவற்றைப் பரிமாறச் சொல்லி அனைவரும் மன நிறைவுடன் உட்கொண்ட பின்னரே அவர் அமர்ந்தார்.  இது அவர் எப்போதும் கடைப்பிடிக்கும் வழக்கம் எனக் கிருஷ்ணன் கேள்விப் பட்டான்.  உண்டு முடித்ததும், “ஷாந்தி, ஷாந்தி, ஷாந்தி” என மும்முறை உச்சரித்த வியாசர் பின்னர் கைகளை வணங்கிய வண்ணமே அங்கிருந்து வெளியேறினார்.  அனைவரும் ஓடோடியும் வந்து அவர் பாதங்களைத் தொட்டுத் தங்கள் கண்களில் ஒற்றிக் கொண்டனர்.  வியாசரைக் குறித்த பல்வேறு செய்திகளையும் கேள்விப் பட்டிருந்த கண்ணன், தான் நேரில் பார்ப்பதற்கு முன்னர் அவை எல்லாம் ஒன்றுமே இல்லை என்பதை உணர்ந்தான்.  இந்த மனிதர் அனைவருக்கும் நண்பராக இருக்கிறார்.  மற்றவர்களிடமிருந்து தன்னை அயல் மனிதனாக வேறுபடுத்திக் காட்டிக் கொள்ளவில்லை.  மாறாக அவர்களில் ஒருவராக, அவர்கள் மனதைப் புரிந்தவராக, அதே சமயம் அவர்களின் ஆன்மிக பலமாகவும், உடல் நலத்துக்கு ஏற்ற பலம் தரும் மருத்துவராகவும் திகழ்ந்தார்.  ஒரு மனிதன் இவ்வாறு பலரையும் கவர்ந்து இழுப்பது கண்ணனுக்கு ஆச்சரியத்தை அளித்தாலும்,  தான் போற்றி வணங்கக் கூடிய மனிதர் இவர் என்பதைப் புரிந்து கொண்டான்.

கண்ணனுக்கும் அவனுடன் வந்தவர்களுக்கும், ரிஷிகளின் குடிலுக்கு அருகேயே குடில் அமைத்துத் தரப் பட்டது.  வியாசரின் குடிலில் இருந்து கண்ணனுக்கு அழைப்பும் வந்தது.  வியாசரின் குடிலில் அவர் எதிரே கூப்பிய கரங்களுடன் அமர்ந்த கண்ணனுக்குத் தான் மாபெரும் மனிதர் ஒருவர் முன் அமர்ந்திருக்கும் நிலைமை புரிந்தது.  இந்த மனிதன் சாதாரணமானவன் அல்ல.  இங்கிருக்கும் அனைவரையும் தனித்தனியாக அறிவான்;  அனைவரிடமும் அன்பும் செலுத்துவான்;  அனைவரின் துக்கங்களுக்கும், துயரங்களுக்கும், மருந்திடுவான்;  அனைவரையும் புரிந்தும் கொள்வான்.  இப்படி ஒரு அதிசய மனிதன் இவ்வுலகில் உண்டா?  அல்லது இவன் வேற்று கிரஹத்து மனிதனா? கண்ணனுக்கு மயக்கம் ஏற்பட்டது.  கண்ணனைப் பார்த்த அந்த விசாலமான கண்களில் கருணையும், அன்பும் பொங்கி வழிந்தது.  குரலிலும் அளப்பரிய அன்பு தெரிந்தது.  ஒவ்வொருவர் சொல்வதையும் இவர் இதே போல் அதி தீவிர கவனத்துடனும், அக்கறையுடனும், அன்புடனும் கேட்டுத் தீர்வுகளைச் சொல்கிறார்.  கண்ணன் புரிந்து கொண்டான்.  இவர் எதிரே எவரும் அந்நியர் இல்லை.  அனைவரும் இவருக்குச் சொந்தமானவர்களே.

“கோவிந்தா, ஹஸ்தினாபுரத்துக்கு நீ வந்த காரணம்?”  வியாசர் கேட்டார்.
கண்ணன் ஹஸ்தினாபுரத்துக்குத் தான் வர நேர்ந்த விஷயத்தைத் தெரிவித்தான்.  பாண்டவர்கள் அரக்கு மாளிகையில் நெருப்பு வைத்துக் கொல்லப் பட்டதையும், தான் துக்கம் விசாரிக்க வேண்டி ஹஸ்தினாபுரம் வந்ததையும், தனக்கு ஏற்பட்ட அதிர்ச்சியையும், ஹஸ்தினாபுரத்தில் திருதராஷ்டிரருடனும், பீஷ்மருடனும் பேசியதையும், துரியோதனனையும், அவன் தாய்மாமன் சகுனியையும் குறித்த தன் எண்ணங்களையும் அவரிடம் தெரிவித்தான்.  இவருக்கு எதிரே இவர் முன்னே எதையும் மறைக்கக் கூடாது;  அது பாவம் என்ற எண்ணம் கிருஷ்ணனிடம் இருந்தது.  ஆகவே அனைத்தையும் அவரிடம் கூறினான்.  எனினும்,  சத்யவதி தன்னிடம் பகிர்ந்து கொண்ட ரகசியத்தைச் சொல்லலாமா வேண்டாமா என்பதில் அவனால் ஒரு முடிவுக்கும் வர முடியவில்லை.  அது சரியா, தவறா என நிர்ணயிக்க முடியவில்லை. 
“ஆசாரியரே, யாதவர்களையும் கெளரவர்களையும் நெருங்கி வரும்படி செய்வதில் எனக்கு நம்பிக்கை உள்ளது.  ஆகவே குரு வம்சத்தினரை யாதவர்களிடம் நெருங்கி வரச் செய்ய ஹஸ்தினாபுரத்தில் யுதிஷ்டிரன் இருப்பது நன்மை பயக்கும் என எண்ணினேன்.  யாதவர்களும், குருவம்சத்தினரும் நெருங்கினால், துருபதனுக்கும் குரு வம்சத்தினரிடம் இருக்கும் மாபெரும் பகை ஓரளவுக்குக் குறையும்.  அவர்களிடம் அவனுக்கு இருக்கும் அவநம்பிக்கையைக் குறைக்கலாம்.  யாதவர்கள் துவாரகையிலும், காம்பில்யத்தில் துருபதனும், ஹஸ்தினாபுரத்தில் யுதிஷ்டிரனும் ஒற்றுமையாக இருந்து ஆட்சி செய்வது அனைவருக்கும் நன்மை பயக்கும் ஒன்று என என் கருத்து.  என் ஆசையும் அதுவே. “ என்றான் கண்ணன். 

“எப்படி நீ அதைச் செய்து முடிக்கப் போகிறாய் வாசுதேவா?” ஆசாரியர் கேட்டார்.
“அரசர்கள் ஒரு முறை உணர்ந்து கொண்டதும், ராஜ தர்மத்தைக் கடைப்பிடிப்பார்கள் என நம்பினேன்.  அரசர்கள் ராஜ தர்மத்தைக் கடைப்பிடித்தால் மக்களும் அவரவர் தர்மங்களைக் கடைப்பிடிப்பார்கள்.  இந்த நம்பிக்கைதான் ஆசாரியரே.  ஆனால்……..ஆனால்…… இப்போது யுதிஷ்டிரன் இல்லை.  அவன் இல்லாமல் என்ன நடக்கும்?  என்னுடைய நம்பிக்கைகளை நான் முற்றிலும் இழந்துவிட்டேன் ஆசாரியரே!”

ஆசாரியரின் முகம் விகசித்து மலர்ந்தது.  மலர்ந்த முகத்தோடு கண்ணனைப் பார்த்து, “வாசுதேவா, தர்மம் ஒருநாளும் மரிப்பதில்லை.  அதை நீ அறிய மாட்டாயா?  அதற்கு இறப்பில்லை.   அதோடு கம்சனை அழித்த நீ, ஜராசந்தனை ஓட ஓட விரட்டிய நீ இதை மறக்கலாமா?  வாசுதேவா, எங்கெல்லாம் அதர்மம் தலை எடுக்கிறதோ, அதை வேரோடு அழிக்கப் பிறந்தவன் நீ.  அதை மறவாதே!” என்றார். 
“மதிப்புக்குரிய ஆசாரியரே! உங்களைப் போன்ற மஹரிஷிகளால் தான் எனக்கு நம்பிக்கை ஒளி காட்ட முடியும். மகதத்தில் சர்வ செளகரியங்களோடும், இணையற்ற செல்வாக்குடனும் ஜராசந்தன் ஆட்சி செலுத்தி வருகையில், அதர்மம் எங்கிருந்து அழிந்தது?  ஹஸ்தினாபுரத்தில் துரியோதனன் ஆண்டு வருகிறான்.  காம்பில்யத்திலோ துருபதன் அனைவரிடமும் தன் வெறுப்பைக் காட்டி வருகிறான்.  அவர்கள் வெறுப்பில் வாழ்கின்றனர்; வன்முறையில் நம்பிக்கை வைத்துள்ளனர்.  அவர்களுக்குத் தெரிந்த ஒரே தர்மம் அவர்களைத் திருப்தி செய்யும் இந்த வெறுப்பும், வன்முறையுமே.”