Friday, July 27, 2012

கண்ணனின் யோசனைகள்!


கிருஷ்ணனுக்கு ஆரம்பத்தில் இருந்தே கெளரவ சகோதரர்களிடம் சந்தேகம்;  அவர்கள் தான் ஏதோ தந்திரம் செய்து பாண்டு புத்திரர்களைக் கொன்றிருக்க வேண்டும் என்றே எண்ணினான்.  அதற்கேற்றாற்போல் இங்கே துரியோதனனைப் பார்த்தால்!........கண்ணன் அவனைத் தான் கூர்ந்து கவனிப்பது தெரியாவண்ணம் அவன் நடவடிக்கைகளைக் கூர்ந்து கவனித்தான்.  துரியோதனன் பாண்டவர்களை நினைத்தும், அவர்களின் முடிவை எண்ணியும் துக்கப்படுவது போல் நடிக்கிறான்;  மிக நன்றாகவே நடிக்கிறான் என்பது கண்ணனுக்குப் புரிந்துவிட்டது.  கண்ணன் சகுனியையும் விடவில்லை;  அவனையும் கவனித்தான். சகுனியும் தான் மிகுந்த துக்கத்தில் இருப்பது போல் காட்டிக்கொண்டு அவ்வப்போது கண்களால் கண்ணீரை வெளிப்படுத்திக் கொண்டு, தேவையான சமயங்களில் ஓர் அடக்கப்பட்ட விம்மலோடும் நாடகத்தில் தன் பகுதியை நிறைவாகவே நிறைவேற்றினான்.  ம்ம்ம்ம்ம்ம்ம்…… இதில் என்னவோ இருக்கிறது!  விடக் கூடாது!  சரி, அந்தக் கர்ணன் என்ன செய்கிறான் என்று பார்த்தால்…….ம்ஹும் துக்கத்தின் அறிகுறியே இல்லை.    வெளிப்படையாகவே வரவேற்பைக் காட்டிய தெளிவான முகம்,  சூரியனைப் போலவே பளிச்சிட்ட கண்கள்,  துக்கமில்லாத சாதாரணமான புன்னகை எல்லாமும் அவன் உள்ளத்தின் உறுதியையும், உடலின் வலிவையும் சொல்லாமல் சொல்லின.

கண்ணனுக்குத் தன் தந்தை வசுதேவர் கர்ணனின் பிறப்பைக் குறித்துக் கூறிய கதை நினைவில் மோதியது.  குடும்பத்தில் ஓரிருவர் தவிர வேறு யாருமே அறியாதது.  கண்ணனுக்குத் தெரிய வேண்டிய அவசியம் குறித்து யோசித்தே வசுதேவர் அவனிடம் பகிர்ந்து கொண்டிருந்தார்.  கண்ணனுக்கு  அதிர்ஷ்டம் என்னும் சொல்லுக்கு உள்ள இந்த விசித்திரமான குணங்களை நினைத்தால் ஆச்சரியமாக இருந்தது.  கர்ணன், ஒரு ரதசாரதியால் வளர்க்கப்பட்டவன், துரியோதனனுக்கு அரசியலில் ஆதரவு காட்டுகிறான்.  நம்பிக்கைக்கு உகந்த நண்பனாகவும் இருந்து வருகிறான்.  அந்த ஐந்து சகோதரர்களும், எவர்களைக் குந்தி பார்த்துப்பார்த்து வளர்த்து ஆளாக்கினாளோ, அந்த ஐந்து சகோதரர்களும் இறந்தவர்களாகிவிட்டனர்.   எத்தனை கஷ்டங்களுக்கு இடையில் அவர்களை வளர்த்து ஆளாக்கினாள்!  அனைத்தும் தரைமட்டமாகிவிட்டதே!  அதோடு மட்டுமா?  அவர்களால் ஆர்யவர்த்தத்தில் தர்மம் நிலைநாட்டப்படும் என நினைத்ததும், தவிடு பொடியாகிவிட்டதே!  இனி தர்மம் தலை தூக்குமா?  மெல்ல மெல்ல அவர்கள் அரண்மனை வளாகம் வந்தடைந்தார்கள்.  மிகப் பெரியதொரு வளாகமாக இருந்தது அது.  பல அரச மாளிகைகளும் பின்னால் அவற்றுக்கெனத் தனித் தோட்டங்களோடு காணப்பட்டது. 

கிருஷ்ணன், உத்தவன், சாத்யகி தங்கத் தனி மாளிகை அளிக்கப்பட்டது.  அவர்கள் இருந்த மாளிகைக்கு அருகே தான் திருதராஷ்டிரனின் பாட்டியாரும், மரியாதைக்குரிய ராணியுமான சத்தியவதி வேறொரு அரச மாளிகையில் வசித்து வந்தாள் என்பதை அவர்கள் அங்கே சென்றதும் தெரிந்து கொண்டார்கள்.  பீஷ்மரின் மரியாதைக்கு உகந்த விருந்தாளிகளாய்த் தங்கின யாதவ குல சிரோன்மணிகளை உபசரிக்கும் பொறுப்பை துரியோதனன் வலிந்து ஏற்றுக் கொண்டதோடு அல்லாமல், எப்படியேனும் அவர்களை மகிழ்வில் ஆழ்த்த வேண்டும் என்று முனைப்பும் காட்டி வந்தான்.  கிருஷ்ணனுக்கு அவனுடைய இந்த உபசரிப்பின் பின்னால் துரியோதனனின் உண்மை சொரூபம் மறைந்துள்ளது என்பதைப் புரிந்து கொள்ள அதிக நேரம் ஆகவில்லை.   அவன் தன்னையும் தன் வருகையையும் விரும்பவில்லை என்பதோடு தன் மேல் நம்பிக்கையும் வைக்கவில்லை என்பதைக் கண்ணன் உணர்ந்தான்.  என்ன காரணமாக இருக்கும்?  பாண்டவர்கள் இவன் உத்தரவின் பேரில் தான் கொல்லப்பட்டனரா?  இப்படிப் பட்டதொரு காரியத்தை உண்மையாகவே துரியோதனன் செய்திருப்பானா? 


உண்மையான துரியோதனனையும், அவன் உள்ளத்தில் ஓடும் எண்ணங்களையும், தன்னை அவன் அடிக்கடி சோதனை செய்பவன் போல் பார்ப்பதையும் கண்டு கண்ணனுக்கு அவன் சற்றும் மாறவில்லை என்பது நன்கே தெரிந்தது.  சகுனியின் துணை கொண்டு தன் விருப்பங்களை எப்படியேனும் நிறைவேற்றிக்கொள்ளும் இந்த துரியோதனன் என்னும் இளவரசன் இப்போது பட்டத்து இளவரசனாகிவிட்டான்.  அவனால் தான் ஏற்கப் போகும் பணியை நிறைவாகவும், அரச தர்மத்துக்கு உட்பட்டும் செய்ய முடியுமா?  ம்ஹும், சகுனியின் துணையை அவன் விட்டாலன்றி இது ஒருக்காலும் நடவாத ஒன்று.  பொய்யான புன்னகையிலேயே சகுனி அனைவரையும் ஏமாற்றி வருகிறான்.  சிறிது நேரத்தில் சம்பிரதாயத்துக்கு உட்பட்ட சந்திப்பாக திருதராஷ்டிர மன்னனைச் சந்திக்கச் சென்றான் கண்ணன்.  திருதராஷ்டிரன் மாளிகையும் கண்ணனுக்கு அளிக்கப்பட்ட விருந்தினர் மாளிகைக்கு அருகேயே இருந்தது.   வயசுக்கு மீறிய முதுமையோடும், இப்போதே கூன் விழுந்த முதுகோடும் காணப்பட்ட திருதராஷ்டிரன் அந்த அரியணைக்குச் சற்றும் பொருத்தமின்றிக் காணப்பட்டான்.  துரியோதனனும் தன் தகப்பன் அருகே அமர்ந்து  அங்கே கண்ணன் வருகைக்குக் காத்திருந்தான்.  அவனைத் தவிரவும் இன்னொரு இளைஞன் சஞ்சயன் என்னும் பெயருள்ளவன் அங்கே இருந்தான். 


அவன் திருதராஷ்டிரனின் நம்பிக்கைக்கு உகந்த சேவகன்;  நேரம் வாய்க்கையில் எல்லாம் திருதராஷ்டிரனின் கண்களாகவும், காதுகளாகவும் செயல்படுபவன்.  அவனின்றி திருதராஷ்டிரனால் அரசியல் நிலவரங்களை உள்ளது உள்ளபடி புரிந்து கொண்டிருக்க இயலாது.  இரு காவலாளிகள் தண்டாயுதத்தை ஏந்திய வண்ணம் அங்கே மெளனமாகக் காவல் காத்தனர்.  திருதராஷ்டிரனும் துக்கத்துக்கு உரிய ஆடைகளை அணிந்த வண்ணம் அரசச் சின்னங்கள் ஏதுமின்றிக் குருட்டுக் கண்களைத் தரையில் பதித்த வண்ணம் அமர்ந்திருந்தான்.  குனிகன் என்னும் அமைச்சனால் கண்ணன் திருதராஷ்டிரனிடம் அழைத்துச் செல்லப்பட்டான்.  வழக்கப்படி அவன் கால்களில் விழுந்து கண்ணன் வணங்க, அவனைத் தொடர்ந்த சாத்யகியும், உத்தவனும் கூட மன்னனை வணங்கி விட்டுக் கண்ணனின் இருபக்கமும் நின்று கொண்டனர்.  திருதராஷ்டிரன் தன் ஆச்சரியத்தையும், சந்தேகத்தையும் மறைத்துக் கொண்டு பேசினான் என்பது நன்கு புரிந்தது.  அப்படியே அவன் ஓரிரு வார்த்தைகள் பேசினாலும், அதை துரியோதனன்  திருத்தினான்;  அல்லது மறுத்தான்.  தன் மகனிடம் குருட்டுத்தனமான பாசமும், பக்தியும் வைத்திருக்கிறான் திருதராஷ்டிரன் என்பதையும் கண்ணன் புரிந்து கொண்டான்.  திருதராஷ்டிரனை ஆட்டுவிப்பவன் துரியோதனன் என்றும், அவன் கைகளில் பொம்மையாகவே திருதராஷ்டிரன் இருக்கிறான் என்பதையும் புரிந்து கொண்டான்.


Tuesday, July 24, 2012

கண்ணன் வந்தான்!


“என் அருமைக் குழந்தாய், அவசரப் படாதே! மேலும் வரப் போகும் எதிர்காலத்தைக் குறித்து நினைத்துக்கவலை அடையாமல், தற்போது எதிர்கொள்ளவிருக்கும் பிரச்னைகளைக் குறித்து மட்டும் யோசிப்பாய். “  ஆறுதலாக துரியோதனனைத் தட்டிக்கொடுத்த வண்ணம் சகுனி மேலே பேசினான்.  “இந்தக் கிருஷ்ணன் வந்து தன் சாமர்த்தியத்தை எல்லாம் காட்டிப்பார்க்கட்டும்.  ஒரு தகவலும் கிடைக்காமல் ஓடி விடுவான்.  அவன் போகட்டும்; நாம் மேலே செய்ய வேண்டியதைக் குறித்து ஆலோசிப்போம்.” என்றான் சகுனி.

“அந்த இடையனின் குரல்வளையைப்பிடித்து நெரிக்க வேண்டும்.” ஆத்திரத்துடன் துரியோதனன் சொல்ல, கர்ணன் பேசினான்.

“மாமா அவர்களே, என் ஆலோசனையை நீங்கள் ஏற்க மாட்டீர்கள் என்பதை நான் நன்கறிவேன்.  ஆனாலும் எது நடந்தால் நல்லது என நான் நினைக்கிறேனோ அதைச் சொல்லியே விடவேண்டும்.  வாசுதேவ கிருஷ்ணனிடம் வெளிப்படையாகப் பேசி விடுவது நல்லது.  அவனுடைய யோசனைகளையும் கேட்டுக்கொள்வோமே, இப்போது துரியோதனன் தான் பட்டத்து இளவரசன்;  ஆகவே யாதவர்களோடான கூட்டணியை நாம் விரும்புகிறோம்;  என்று சமாதானமாகவே பேசலாமே!”  கர்ணன் சொன்னான்.

“………ஆஹா, அந்த இடையன் கிருஷ்ணனும், யாதவர்களும் நம்மை ஒன்றுமில்லாமல் பண்ணிவிடுவார்கள்.  என்ன நினைத்தாய் கர்ணா!  அந்த யாதவர்களின் தாசானுதாசனாகப் பணி புரிபவனாக நான் ஆகிவிடுவேன் என்பது உனக்குப் புரியவில்லையா?”  துரியோதனன் உடனடியாகக் கத்தினான். 

“துரியோதனா, நான் சொல்வதைக் கேள்!”  சகுனி நிதானத்தை இழக்காமலேயே பேசினான்.  “இதோ பார்!  தவறாக ஏதோ நடந்திருக்கிறது என அந்தக் கிருஷ்ணனுக்குப் புரியாதபடி நாம் பார்த்துக்கொள்ள வேண்டும்.  அவனுக்கு எதுவுமே தெரியக்கூடாது;  அதோடு உன் பேச்சினாலும், உபசாரத்திலும் அவன் எல்லாவற்றையும் மறந்து போக வேண்டும்.  உன் எண்ணங்களை வெளிக்காட்டிக் கொள்ளாமல் இரு.”

துரியோதனன் யோசனையில் ஆழ்ந்துவிட்டான் என்பதை அவன் நெரித்த புருவங்களும், தொலைதூரப் பார்வையும் காட்டிக் கொடுத்தன.

ஆர்யவர்த்தத்தின் அந்தக் கால வழக்கப்படி ஒரு ராணி இறந்தால், அவள் பிறந்த நாட்டில் இருந்து ஒரு பெரிய பரிவாரங்களோடு முக்கியஸ்தர்கள் துக்கம் விசாரிக்க வருவது வழக்கமாக இருந்து வந்தது.  ஆகவே இப்போது பட்டத்தரசியாக இருந்த குந்தி இறந்துவிட்டாள் என்ற செய்தி கேட்ட வசுதேவர் தன் மகனையும், தம்பி மகனையும் ஒரு பெரிய பரிவாரங்களோடு  ஹஸ்தினாபுரத்துக்கு அனுப்பி வைத்துள்ளார் என்று நாடெங்கும் பேச்சாய் இருந்தது.  ராணியின் பிறந்த வீட்டு மனிதர்களை முறைப்படி வரவேற்று உபசரிக்கத்தான் வேண்டும்.  ஆகவே கிருஷ்ணனின் வரவு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்து விட்டது.   அப்போதைய வழக்கப்படி நகருக்குச் சில காத தூரம் முன்னரே வந்திருந்து எதிர்கொண்டு துரியோதனனும், துஷ்சாசனும் தங்கள் பரிவாரங்களோடும், இன்னும் முக்கியஸ்தர்களோடும் வந்திருந்து கண்ணனையும் அவன் பரிவாரங்களையும் வரவேற்று நகருக்குள் அழைத்துச் சென்றனர்.  கிருஷ்ணன், உத்தவன், சாத்யகி மற்றும் யாதவ முக்கியஸ்தர்கள் தங்கள் வழக்கமான அரச உடையைத் தவிர்த்துவிட்டு துக்கம் கேட்பதற்கு உண்டான வெள்ளை ஆடையைத் தரித்துக் கொண்டனர்.  அவர்களை அழைக்க வந்த துரியோதனன் கோஷ்டியாரும், தங்களுக்கும் துக்கம் உண்டென்பதைக் காட்டிக்கொள்ளும் வண்ணம் வெள்ளாடையே தரித்திருந்தனர்.  அனைவரும் கங்கைக்கரையில் இறந்தவர்களுக்காக அவரவர்கள் செய்ய வேண்டிய சடங்குகளை முறைப்படி செய்து நீத்தார் கடன் ஆற்றினார்கள்.

பின்னர் அனைவரும் அங்கிருந்து நடந்தே அரச மாளிகைக்குச் சென்றனர்.  தெருவெல்லாம் மக்கள் வெள்ளம் கூடிக் கண்ணனின் முக தரிசனத்துக்குக் காத்திருக்க முக்கிய வீதிகளின் வழியாகச் சென்ற அந்த ஊர்வலம், அரச மாளிகையை மெல்ல மெல்ல அடைந்தது.  கிருஷ்ணனுக்கு உடலும், உள்ளமும் வருத்தத்திலும், துக்கத்திலும் கனத்துப் போயிருந்தது.  அதோடு மக்களின் உண்மையான வருத்ததைக் கண்ணன் உணர்ந்தான்.  ஐந்து சகோதரர்களும், குந்தியும் தீக்கிரையானது குறித்து ஹஸ்தினாபுரத்து மக்கள் எந்த அளவுக்கு வருந்துகின்றனர் என்பதை அவர்கள் எழுப்பிய கோஷங்களிலிருந்து புரிந்து கொண்டான்.  இது அவனை மேலும் வருந்தச் செய்தது.  அதோடு கண்ணனுக்குக் கொஞ்சம்  இருந்த நம்பிக்கையும் போய் எங்குமே இருண்டு காணப்பட்டது.  நம்பிக்கையின் ஒரு கீற்றுக் கூட அவன் மனதில் தோன்றவில்லை.  தான் தர்மத்தை நிலை நாட்டப் பிறந்தவன் என்றும், அதைத் தன் அத்தையின் பிள்ளைகள் ஐவரின் துணையோடும் செய்யப் போகிறோம் என்றெல்லாம் அவன் கண்ட கனவு தவிடு பொடியாயிற்று.  இனி என்ன?  எதுவுமே இல்லை!

Wednesday, July 18, 2012

துரியோதனனின் கொதிப்பு!


“நான் என்ன பாவம் செய்தேன்?  ஏன் என்னைக் கண்டால் ஒருவருக்குமே பிடிக்கவில்லை?  யுதிஷ்டிரனை அனைவரும் கொண்டாடுவதோடு அவனை வழிபடவும் செய்கிறார்கள்.  “தர்மத்தின் தேவதை”யாமே அவன்! ஹூம்!  என்னைக் கண்டால் தான் யாருக்கும் பிடிக்கவில்லை.  அவ்வளவு ஏன்?  என் அருமைத் தந்தை கூட என்னை மகா இடைஞ்சலாகவே நினைக்கிறார்.  என்னை தொந்திரவாகக் கருதுகிறார்.   மாமா..மாமா.  உங்களுக்கும் கூட நான் இடைஞ்சலாகவும், தொந்திரவாகவும் இருக்கிறேன் இல்லையா?  ஆஹா, இவ்வுலகில் அரசகுமாரனாய்ப் பிறந்தும் என்னை விரும்புவார் இல்லையே?  என் தாய் ஒருத்தியைத் தவிர என் மேல் அன்பு செலுத்துவார் இல்லையே? ஏன் இப்போது நான் இந்த மாபெரும் சாம்ராஜ்யத்தின் சக்கரவர்த்தியாக ஆக ஒரு வாய்ப்புக் கொடுக்கக் கூடாதா?  நான் எப்போது சக்கரவர்த்தியாக ஆவேன்?  எனக்கு அதற்கான தகுதிகள் இல்லையா?”  துரியோதனன் விண்ணைப் பார்த்த வண்ணம் புலம்பினான்.

“துரியோதனா, பொறுமை..பொறுமை.  விரைவில் நீ பொறுமை இழந்துவிடுகிறாய்.  நான் உனக்கு உதவினேன் எனில் நீ இந்த சாம்ராஜ்யச் சக்கரவர்த்தியாக அரியணையில் அமரலாம்.  உடனே இல்லாவிட்டாலும், சிலநாட்களில் அல்லது மாதங்களில்.”  சகுனி துரியோதனனைச் சமாதானம் செய்யும் குரலில் கூறினான்.

“மாமா, என்னை மன்னியுங்கள்.  எனக்கு உதவக்கூடிய ஒரே நபர் நீங்கள் மட்டுமே என்பதை நன்கறிவேன்.  ஆனால், ஆனால்……மாமா, நான் எவ்வளவு எளிதில் மன்னனாக ஆகி இருக்க முடியும்?  ஏன் கடவுள் அந்த வழியை எனக்குக் கிடைக்கவிடாமல் பாதையை மூடிவிட்டார்!  பார்க்கப் போனால் இந்த அஸ்தினாபுரத்தின் உண்மையான வாரிசு நானல்லவோ!”

“ஓஹோ, துரியோதனா, அமைதியாய் இரு.  இப்போது இதை நீ சொல்ல வேண்டிய அவசியம் எல்லாம் ஏதும் இல்லை.  உன் எதிரிகள் அடியோடு ஒழிந்தார்கள் அல்லவோ!”  கர்ணன் சமாதானம் செய்தான்.

ஆனால் துரியோதனனுக்கு மனம் அமைதி அடையவில்லை.  கண்ணன் ஹஸ்தினாபுரம் வருவது அவனுக்குக்கொஞ்சமும் பிடிக்கவில்லை.  அவன் மனதில் அதே உறுத்திக் கொண்டிருந்தது.  அந்தக் கசப்புடனும், வெறுப்புடனும் தொடர்ந்து பேச ஆரம்பித்தான்: “ஆம், அந்தக் கண்ணன் வருகிறான்.  ஹஸ்தினாபுரத்துக்கு அழையா விருந்தாளியாக வருகிறான்.  காரணம் என்னவோ துக்கம் விசாரிப்பது என்ற சாக்கு.  ஆனால் அவன் வந்ததும் இனிமையான சொற்களால் அந்தக் கிழவன் பீஷ்மனை மயக்குவான்.  பீஷ்மனும் அவனைக் கண்டதுமே பல்லை இளித்துக்கொண்டு , “கண்ணா, வாசுதேவா, கிருஷ்ணா!” என்றெல்லாம் அவனை அழைத்துக் கொண்டு அவனுடன் பேசுவான்.  தன்னை விட பக்தியிலும் புனிதத்திலும் சிறந்தவன் இல்லை என்று சொல்லிக் கொண்டு மோசடிகள் செய்யும் அந்தச் சித்தப்பா விதுரன், கண்ணன் கால்களிலே விழுந்து தன் மூட பக்தியைக் காட்டிக்கொள்வான்.  அவன் மனதில் என்னவெல்லாம் நினைக்கிறான் என்பதை அந்தக் கண்ணனிடம் பகிர்ந்து கொள்வான்.  அதோடு மட்டுமா?  அவனுக்குத் தெரிந்த விஷயங்களையும், யூகங்களையும் கூறுவான்.  அவற்றில் பாண்டவர்களை வாரணாவதத்துக்கு அனுப்பி வைத்ததும் சேரும்.  அவ்வளவு தான்.  அந்தப் பொல்லாத கண்ணன் கண்டு பிடித்துவிடுவான்.  அந்த மாட்டிடையனுக்கு மட்டும் உண்மை தெரிந்தால் என்ன செய்வானோ?  பாண்டவர்களை நாம் வலுக்கட்டாயமாக அவர்களைக் கொல்ல வேண்டியே வாரணாவதம் அனுப்பி வைத்தோம் என்பதை மட்டும் அவன் உணர்ந்தால்!!  கடவுளே!  வேறு வினையே வேண்டாம்.  பின்னர் இந்த உலகுக்கே அந்தக் கண்ணன் மூலம் தெரிந்து விடும்.   அதர்மம் நடந்துவிட்டது எனக் கூப்பாடு போடுவான்.  அவன் குரலை இந்த ஆர்ய வர்த்தத்தின் அரசர்களும், மக்களும் எதிரொலிப்பார்கள்.  உடனே எல்லாரும் பொல்லாத அந்த துரியோதனன் தான் இதை நடத்தி இருக்கிறான் என்று கூறுவார்கள்.  அனைவருக்கும் உண்மை தெரிந்துவிடும்;  அது இருக்கட்டும். இந்தக் கண்ணன் அவன் மாமன் கம்சனைக் கொன்றானே! ஏன் ஒருவருமே அதைக் குறித்து எதுவும் பேசுவதில்லை?  அது என்ன நியாயம்?”  துரியோதனன் கேட்டான்.

“ஹா,ஹா, ஹா, துரியோதனா, கண்ணனின் காலடிகளைத் தொடர்ந்து அவன் சென்ற பாதையிலேயே நீயும் செல்ல விரும்பினால், முதலில் என்னைக் கொன்றுவிடு.  இதோ நான் உன்னருகே இருக்கிறேன்.  நான் உன் தாய்மாமன்.  எங்கள் குலத்தில் பிழைத்திருக்கும் ஒரே நபர் நான் தான்.”  என்றான் சகுனி சிரித்துக்கொண்டே.

“மாமா, நான் என்ன கேலிக்குரியவனாகி விட்டேனா உங்களுக்கு?  என்னைக் கிண்டல் செய்யாதீர்கள் மாமா.  நான் ஹஸ்தினாபுரத்தின் மன்னனாக ஆகிவிடுவேன் தான்!  ஆனால் எப்போது?  என்று?  கடவுளே, மஹாதேவா! என் தந்தைக்கு வயது என்னமோ ஆகிவிட்டது தான்.  ஆனால் அவர் அதற்காக உடனே இறந்துவிடும் நிலையில் இல்லை.  இன்னும் பல்லாண்டுகள் உயிர் வாழ்வார்.  அந்தத் தாத்தா பீஷ்மரோ என்றோ இறந்திருக்கவேண்டும்;  இத்தனை வருடங்கள் ஆகியும் உயிரை வைத்திருக்கிறார்.  அதே போலத் தான் அந்த வேத வியாசனும்.  நான் பார்த்ததில் இருந்து அவன் கிழவனாகவே இருக்கிறான்.  ஆனால் அதற்காகத் தொண்டு கிழமாகவெல்லாம் ஆகவில்லை.  அவனும் சாகக் காணோம்.  நான் தான் அதற்குள் வயதாகிக் கிழவனாகி இறந்தாலும் இறந்துவிடுவேன்;  இந்தத் தாத்தாக்கள் எல்லாம் இளைஞர்களாக ஆகிக் கொண்டிருக்கின்றனர்.”  கசப்புடன் கூறினான் துரியோதனன். 

“இம்மாதிரி உணர்ச்சி வசப்பட்டாயானால் உனக்கு வயதாகும் முன்னரே இறந்து தான் போவாய், துரியோதனா!” எச்சரிக்கைக் குரலில் கூறினான் சகுனி.

“என்ன வேண்டுமானாலும் நடக்கட்டும்;  என்ன வேண்டுமானாலும் ஆகட்டும். அதற்கெல்லாம் நான் கலங்க மாட்டேன்.  என் வழியில் எவர் வந்தாலும் தூக்கிப் போட்டு மிதியாடுவேன்.  நான் இறந்தாலும் சரி, அதற்குள்ளாக என் நோக்கத்துக்குக் குறுக்கே வருபவர்களை விட்டு வைக்கப் போவதில்லை.  அது எவராக இருந்தாலும் சரி.  என்னை மீறி என்னை விலக்கி விட்டு அரசாட்சி புரிபவர்களைப் பார்த்துக்கொண்டு சும்மா இருக்க மாட்டேன்.  சும்மா இரு.  எந்த வம்புக்கும் போகாதே. அது தான் தர்மம், நீதி, நியாயம், நேர்மை என சொல்லிக் கொண்டு யார் வந்தாலும் அவர்கள் சொல்வதைக் கேட்கப் போவதில்லை.  எனக்கு உரியதை அடையவிடாமல் தடுப்பவர்களைச் சும்மா விட மாட்டேன்.  சும்மா வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பது என் தர்மம் அல்ல.”  என்றான் துரியோதனன் திட்டவட்டமாக.  இதைச் சொல்கையில் அவன் முகம் பயங்கரமாகக் காணப்பட்டது.

Saturday, July 14, 2012

கோபத்திலும், பொறாமையிலும் வேகும் துரியோதனன்!


என் அருமை மக்களே, ராஜாங்க விஷயங்களைப்  பற்றி நீங்கள் இன்னும் சரியாக அறியவில்லை.  எது எதை எப்படிக் கையாளலாம் என்பதையும் புரிந்து கொள்ளவில்லை.  அதற்கான வயதும், அனுபவமும் உங்களிடம் இல்லை.  வேக வேகமான முடிவுகளை எடுக்கிறீர்கள்.  அப்படி எல்லாம் செய்யக் கூடாது.  நிதானமும், பக்குவமும் தேவை.  வரப் போகிறவன் சாமானியன் அல்ல;  கிருஷ்ணன்;  வாசுதேவ கிருஷ்ணன்.  வெறும் உடல் பலம் மட்டுமின்றி புத்தி பலமும் வாய்ந்தவன்.  சக்தி வாய்ந்த ஒரு எதிரி.  அது நினைவில் இருக்கட்டும்.  அதோடு கூட அவனை உன் தந்தையான திருதராஷ்டிரனும் தாத்தா பீஷ்மரைப் போலவே மிகவும் மதிக்கிறான் என்பதை நினைவில் கொள்வாய் துரியோதனா!  ஆகவே நாம் நம்முடைய திட்டங்களை வெகு கவனமாகப் போட்டு நிறைவேற்ற வேண்டும்.  அதற்கு இந்தக் கண்ணன் எவ்வாறு நடந்து கொள்ளப் போகிறான் என்பது மிக முக்கியம்.

மேற்கண்டவாறு சகுனி பேசி முடித்ததும், துரியோதனன், “மாமா அவர்களே, அப்படி எனில் நாளை அவன் இங்கே வருகையில் நாங்கள் என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டான்.

“அப்படிக் கேள் துரியோதனா!  கிருஷ்ணனை நன்கு முகஸ்துதியால் குளிப்பாட்டி விடு.  அவனுடைய நம்பிக்கையை எவ்வகையிலேனும் பெற்றுவிடு.  அவன் நம்பிக்கைக்கு உகந்தவனாக உன்னை ஆக்கிக் கொண்டு விடு.  அவனுக்குக் கீழ்ப்படிந்து நடப்பது போல் பாவனை செய்.  அவனுடைய சாகசங்களை எல்லாம் கண்டு வியந்தாற்போல் பேசு. அவனை உன் பக்கம் இழுத்துக்கொள்.  ஆஆஆ, இன்னொரு விஷயம், இப்போது நினைவில் வருகிறது.  நீ துவாரகை சென்றாயே துரியோதனா!  அப்போது உன் நேரத்தை வீணடித்துவிட்டாய்.  கண்ணனின் நம்பிக்கையை நீ அப்போதே பெற்றிருக்க வேண்டும்.  தப்பு, மாபெரும் தவறு செய்து விட்டாய்.   பலராமனை உனக்கு நண்பனாக்கிக் கொண்டதற்குப் பதிலாக இந்தக் கிருஷ்ணனை உன் நண்பனாக்கி இருக்க வேண்டும். “ இதைச் சொன்ன சகுனி கர்ணன் பக்கம் திரும்பி, “கர்ணா, நீ இப்போது அவனைப் பார்க்கவே பார்க்காதே.  நாம் அனைவரும் நினைப்பது போல் அவன் கெட்டிக்காரன், புத்திசாலி என்பது உண்மையானால் நாம் அவனை விடவும் கெட்டிக்காரர்களாக இருக்க வேண்டும்.”

“ஆஹா, நான் என்ன பாவம் செய்தேனோ!  எப்போதுமே எல்லாரிடமும் வெளிவேஷம் போடுபவனாகவே இருந்து வர வேண்டியுள்ளது.  நான் ஒன்றும் சாதாரணக் குடும்பத்தில் பிறக்கவில்லை.  புருவின் சந்திர வம்சத்தின் ஒரு கிளை வம்சமான குருவம்சத்தின் வாரிசாகவே பிறந்திருக்கிறேன்.  “துரியோதனன் இதைச் சொல்லும்போது முகத்தைத் திருப்பிக் கொண்டான் சகுனி.  துரியோதனன் மேலும் தொடர்ந்தான். “நான் தான் அரசனாக ஆகி இருக்கவேண்டும்.  எனக்கு அதற்கான தகுதிகள் இல்லையா?  ஏன் ஒருவருமே இதை ஒப்புக்கொள்ள மறுக்கின்றனர்?  எனக்கு எதிராகச் சதி செய்கின்றனர்!  இப்போது தான் அந்த யுதிஷ்டிரனும் இல்லையே!  செத்து ஒழிந்து போய்விட்டானே!  இன்னும் என்ன?  அது என்ன அவன் மட்டும் மிகவும் உயர்ந்தவனாகவே கருதப் படுகிறான்?  ஏன் எல்லாரும் யுதிஷ்டிரனை  என்னைக் காட்டிலும் அரியணைக்குத் தகுந்தவனாக நினைக்கின்றனர்?”

“ஹா,ஹா, அவன் ஒரு கடவுளின் பிள்ளை!” சகுனி ஏளனச் சிரிப்போடு கூறினான்.

“ஹூம், என் சித்தப்பா பாண்டு ஒரு கடவுளா?” ஆத்திரத்துடன் கேட்ட துரியோதனன் குரலில் பாம்பின் சீறல் தொனி இருந்தது.

“அவன் எல்லாராலும் மதிக்கப்பட்டான்.  முக்கியமாய் தாத்தா பீஷ்மராலும், இந்த ஹஸ்தினாபுரத்து முட்டாள் மக்களாலும் மிகவும் நேசிக்கப்பட்டான்.”  சகுனியின் குரலின் பரிகாசம் துரியோதனனை சாந்தப்படுத்தவில்லை,  மாறாக அவன் முகம் மிகவும் விகாரமாய் மாறியது.

ஒரு பயங்கரமான குரோதமான முகபாவத்துடன் அவன் பேசினான்:”  ஆம், ஆம், எனக்குத் தெரியும், புரிந்துவிட்டது.  மாமா அவர்களே, நான் அவனை விட மிகவும் சிறந்தவன் தான் என்பதை நான் நன்கறிவேன்.  ஆனால் ஆனால்…..மாமா அவர்களே, நீங்களும் மற்றவர்களோடு சேர்ந்து யுதிஷ்டிரன் என்னை விடவும் மிகச் சிறந்தவன் என நினைக்கிறீர்கள்.  நான் ஒரு சிறந்த போர்வீரன்,  தண்டாயுதத்தை ஏந்திப் போர் புரிந்தேனானால் என்னை வெல்ல எவராலும் இயலாது.  சிறந்த மல்யுத்த வீரன்.  ஆனால், ஆனால்……. என்ன சொல்ல, “ துரியோதனன் குரல் தழுதழுக்க, “ எங்கள் குருவான துரோணர் கூட, பீமனும், அர்ஜுனனுமே என்னை விடச் சிறந்த வீரர்கள் என நினைக்கிறார்.”

“ ஓ, ஓ, உன் தாத்தா பீஷ்மரையே இதெல்லாம் கேட்டுக்கொள் அப்பனே.  அவர் தான் இந்த ஹஸ்தினாபுரத்தின் சிறந்த வீரர் யார் என்பதைத் தீர்மானிப்பவர். “ சகுனியின் குரலில் இன்னமும் ஏளனம் மாறவில்லை.

துரியோதனன் முகம் கோபத்திலும், ஆங்காரத்திலும் சிவந்து பயங்கரமாக மாறிப் போனது.  அழகான அவன் முகம் பார்க்கவே சகிக்க ஒண்ணாத கோரத்தை எட்டியது. 

Tuesday, July 10, 2012

மாமனும், மருமகனும் ஆலோசிக்கின்றனர்!


சகுனி துரியோதனனைத் தட்டிக்கொடுத்துச் சமாதானம் செய்தான்.  “ நீ ஒன்றை நம்பவில்லை எனில் அதை வெளிப்படையாய்ச் சொல்லாதே மருமகனே!  நம்புவதுபோல் நடி.  இப்போது என்ன வந்துவிட்டது?  கிருஷ்ணனை அனைவரும் கடவுள் என்கிறார்கள்.  இருந்துவிட்டுப்போகட்டுமே!  எப்படியும் அவனால் இறந்த பாண்டவர்களை உயிர்ப்பிக்க முடியாது.  சொல்லிக்கொண்டு போகட்டும்.  கடவுளரை முகஸ்துதியால் துதித்தால் தான் பக்தர்களுக்கு அருள் புரிகிறான்.  இவனும் அப்படியே“ சொல்லி விட்டு சகுனி சிரித்தான். 

துரியோதனன், “பிரச்னை என்ன என்றால் தாத்தா பீஷ்மர் இந்தக் கண்ணனை மிகவும் நம்புகிறார்.  அவனால் தான் இந்த பூவுலகில் தர்மம் என்பது நிலைநாட்டப் படப் போகிறதாம்.  அவனுடைய சாகசங்களைக் குறித்து மிகவும் பெருமையாகப் பேசிக் கொண்டிருந்தார்.  யாரிடம் என நினைக்கிறீர்கள்?  தந்தையாரிடம்.  இப்படி ஒரு முட்டாள் கிழவனை வைத்துக்கொண்டு என்ன செய்வது?”  என்றான் கோபத்தோடு.

“தாத்தாவுக்கு இவை எல்லாம் எப்படித் தெரிந்தனவாம்?” கர்ணன் கேட்டான்.
“சித்தப்பா விதுரர் மூலம்.” என்ற துரியோதனன் தொடர்ந்து, “ அவருக்குத் தான் இம்மாதிரிச் செய்திகளில் விசுவாசம் அதிகம்.” என்றான் வெறுப்புடன்.

“ஆஹா, மருமகனே!  அவர் ஓர் அருட்தொண்டர் அல்லவோ.  இறையருள் தொண்டர்களே ஒரு மாபெரும் தொந்திரவு தான்.  அவர்களை நீ நம்பவும் முடியாது; அதே சமயம் வெளியேற்றவும் முடியாது.” என்றான் நக்கலாக.

“ஆனால் அந்தக் கண்ணன் எப்படித்தான் இருக்கிறான் என்று பார்க்க நான் ஆவலுடன் இருக்கிறேன்.” என்றான் கர்ணன்.

“ஹூம், தந்தையார் அவனை வரவேற்கப் பிரமாதமான ஏற்பாடுகளைச் செய்ய ஆணையிட்டிருக்கிறார். அவன் யார்?  ஏன் அவனுக்கு இத்தனை முக்கியத்துவம்?” துரியோதனனுக்குத் தாங்க முடியவில்லை.

“இதோ பார் துரியோதனா! சிறப்பான வரவேற்பை ஒரு மனிதனுக்குக் கொடுத்ததால்  எதுவும் நாசமாகிப்போகப் போவதில்லை.  எந்த மாற்றமும் ஏற்படப் போவதில்லை.  அந்த முட்டாள் கிருஷ்ணனும்,  அவனைச் சேர்ந்த முட்டாள் ஜனங்களும் மனதில் மகிழ்ச்சி அடைவார்கள்.  அவ்வளவே.  ஆனால் இத்தனை யாதவ வீரர்களோடு கண்ணன் ஏன் இங்கு வருகிறான் என்பதை என்னால் யூகிக்க முடிகிறது.”  என்றான் சகுனி.

“ஏன்?” கேட்ட கர்ணன், உடனே தனக்குத் தானே பதிலளித்தவனாக, “இந்த யாதவர்களோடு தான் இவர்கள் அனைவரையும் காப்பாற்ற வேண்டிக் கண்ணன் துவாரகைக்குப் போய் ஒளிந்து கொண்டான்.  மஹா சக்கரவர்த்தி ஜராசந்தனிடம் இருந்து ஒளிய வேறு வழி தெரியவில்லை அவனுக்கு.  ஆர்யவர்த்தத்தின் அரசர்கள் அனைவருக்கும் இப்போது தான் பலம் மிக்கவனாகி விட்டோம் எனக் காட்ட விரும்புகிறான் போலும்.”  என்றான்.

“கர்ணா, கர்ணா, உன் மூளையைக் கொஞ்சமாவது பயன்படுத்தி யோசிப்பாய்!  அவன் இதற்காக இத்தனை சிரமப்படவே வேண்டாம்.  ஏற்கெனவே ஜராசந்தனை அவன் அடித்துத் துரத்திவிட்டதாக ஒரு வதந்தி பலமான வதந்தி நிலவுகிறது.  கோமந்தகத்தில் ஜராந்தனைத் துரத்தியதாகவும், அவனையே மீண்டும் எதிர்த்துக் குண்டினாபுரத்தில் ருக்மிணியின் சுயம்வரத்தை நிறுத்தியதாகவும் மக்கள் பேசுகின்றனர்.  மீண்டும் தன் மக்களைக் காக்கவேண்டி துவாரகை நோக்கிச் சென்றான்.  அங்கே வலுவானதொரு சாம்ராஜ்யத்தை உருவாக்கி இருப்பதாய்க் கேள்விப் படுகிறேன்.  தன்னந்தனியாக இளவரசி ருக்மிணியை அனைவர் கண்ணெதிரிலும் தூக்கிச் சென்றான்.  சால்வ மன்னனை வென்றிருக்கிறான்.  ஏற்கெனவே ஆர்யவர்த்தத்தின் அனைத்து அரசர்களும் அவனிடம் மிகவும் மரியாதையுடன் இருக்கிறார்கள்.  உள்ளூர பயமும் கூட இருக்கிறது.”

“எனில் அவன் இங்கே வருவதற்கு ஏதோ முக்கியக் காரணம் இருக்கிறது.” என்றான் கர்ணன் யோசனையுடன்.

“அவன் ஏதோ கெட்ட எண்ணத்தோடு தான் வருகிறான்.”  துரியோதனன் கூறினான்.

Friday, July 6, 2012

சகுனியின் பூர்வோத்திரமும், அவன் எடுத்த பழியும்! 2


சுக்ராசாரியார் யயாதியை முதுமை உடனே வந்தடைய வேண்டும் என சாபம் கொடுக்க, இரு அழகிய மனைவியரோடு சுகம் அனுபவித்தும் திருப்தி அடையாத யயாதி இதனால் மனம் வருந்தினான்.  சுக்ராசாரியாரிடம் இல்வாழ்க்கையில் தான் இன்னமும் திருப்தி அடையவில்லை என்றும், ஆகவே சாபத்தைத் திரும்பப் பெறுமாறும் கேட்டுக் கொண்டான்.  கொடுத்த சாபத்தைத் திரும்பப் பெற இயலாதென்பதால் யயாதி தன் முதுமையை யாரிடமாவது கொடுத்துவிட்டு அவர்களின் இளமையை வேண்டிப் பெறலாம் எனச்சொல்லிக் கொடுத்தார்.  யயாதி முதலில் தேவயானியின் இரு மகன்களையும் கேட்க இருவரும் திட்டமாக மறுத்துவிட்டனர்.  பின்னர் சர்மிஷ்டையின் மகன்களைக் கேட்க, அவர்களில் முதல் இருவரும் மறுக்கக் கடைசி மகனான புரு ஒத்துக் கொண்டு தந்தையின் முதுமையைத் தான் வாங்கிக் கொண்டு தன் இளமையை அவருக்குக் கொடுத்தான்.  அவனுக்கு தன் நாட்டையும், சாம்ராஜ்யத்தையும் கொடுக்கப் போவதாக யயாதி அறிவித்தான்.  பின்னர் பல ஆண்டுகள் மகன் தந்த இளமையால் சுகத்தை அனுபவித்தும் மனம் திருப்தி அடையாத யயாதி, ஒருவாறு மனதைத் தேற்றிக் கொண்டு கடைசி மகனிடம் தன் முதுமையைப் பெற்றுக்கொண்டு இளமையைத் திரும்பக்கொடுத்து அவனுக்குப் பட்டாபிஷேஹமும் செய்து வைத்து அரசனாக்கினான்.

ஆனால் இது சகோதரர்களிடையே பொறாமையை உண்டாக்க ஆரம்பித்தது முதல் சகோதரச் சண்டை.  யது என்னும் முதல் பிள்ளையானவன்  யமுனைக்கரையையும் அதை ஒட்டிய பகுதிகளான உத்தரப் பிரதேசத்தின் ஒரு பகுதி, ராஜஸ்தான், குஜராத் போன்ற இடங்களைத் தனக்கெனப் பெற்றான்.  ஆனால் அவன் வம்சத்தினர் ஒருபோதும் அரியணை ஏற முடியாது என்ற சாபத்தையும் பெற்றான்.  இவன் வழி வந்தவர்களே யாதவர்கள் எனப்பட்டனர்.  ஸ்ரீ கிருஷ்ணர் இந்த யதுகுலத்தோன்றல் ஆவார்.  யாதவர்களின் வம்சாவளியில் வந்தவரே.

அடுத்த மகன் ஆன துர்வசு  என்பான் சரஸ்வதி நதியை எல்லையாய்க் கொண்டு அதன் தென் கிழக்குப் பகுதிகளை அது வங்காள விரிகுடாவை ஒட்டி இருந்த பகுதிகளையும் சேர்த்து ஆண்டான்.  இவன் வம்சத்தின் வழியில் வந்தவர்கள் யவனர்கள் என அழைக்கப்பட்டனர். 

அடுத்து சர்மிஷ்டையின் மகனான அனு என்பான் பஞ்சாப் அதன் மேற்கே உள்ள பகுதிகளைத் தனக்கெனப் பெற்று ஆண்டான்.  இவன் வழி வந்தவர்கள் மிலேச்சர்கள் எனப்பட்டனர்.

அடுத்த த்ருஹ்யூ என்பான் காந்தாரம்,  ஆப்கன், பாகிஸ்தானின் ஒரு பகுதியை ஆண்டான்.  இவனுடைய வழி வந்தவர்களே போஜர்கள் எனப்பட்டனர்.  இவனின் வாரிசுகளில்  பலர்  ஆப்கான் தவிர, அருகிருந்த துருக்கியிலும் சென்று குடியேறியதாய்த் தெரிய வருகிறது.   காந்தாரத்தில் ஆட்சி செய்தவர்கள் த்ருஹ்யூவின் வழி வந்தவர்களே.  சகுனியும், காந்தாரியும் இந்த த்ருஹ்யூவின் வம்சாவளியைச் சேர்ந்தவர்களே.  மேலும் அசுர மன்னனான வ்ருஷபர்வாவைப் பெண்வழிப் பாட்டனாகக் கொண்ட வழியில் வந்தவர்களும் ஆவார்கள்.  ஆகவே இயல்பாகவே அவர்களுக்கு மனிதர்களிடமும், தேவர்களிடமும் தீராப்பகை இருந்து வந்தது.  இப்போது யது இவர்கள் குடியின் மூத்த மகன் ஆனாலும் அவன் பிராமணப் பெண்ணிற்குப் பிறந்தவன்.  பட்டத்து இளவரசன்.  தந்தை சொல் கேட்காததால் பட்டத்தை இழந்தவன்.  என்றாலும் அவன் வாரிசுகள் செல்வாக்கோடும், செல்வ போகங்களோடும், அதிகார பலத்தோடுமே வாழ்ந்து வந்தனர்.  இதனாலும் சகுனிக்கு யது வம்சத்தினரைப் பிடிக்காமல் போனது எனலாம்.  மேலும் ஒரு முக்கியமான காரணம் வருகிறது.


அடுத்த புருவின் மக்களே சரஸ்வதி நதி தீரப் பகுதிகளை ஆண்டான்.  சந்திர வம்சத்து மன்னன்.  பாரத நாட்டிற்கு பரதகண்டம் என்னும் பெயரைக் கொடுத்த பரதன் இவன் வழி வந்தவனே.  ஆக இவன் வழி வந்தவர்களில்  ஒரு  வம்சாவளியைச் சேர்ந்தவர்களே அஸ்தினாபுரத்தைக் குரு வம்சம் என்ற பெயரில் ஆண்டு வந்தனர்.  இந்தக் குரு வம்சத்தில் தான் திருதராஷ்டிரன் பிறந்தான்.  காந்தாரியை மணந்தான்.  காந்தாரியை திருதராஷ்டிரன் மணப்பது ஆரம்ப முதலே சகுனிக்குப் பிடிக்கவில்லை.  ஆனால் காந்தாரிக்கோ அவள் ஜாதகப்படியும், மற்றும் ஜோதிட வல்லுநர்கள் கூறியபடியும், அவள் பிறந்த நேரப்படி முதல் கணவன் உயிருடன் இருக்க மாட்டான்.  அவள் இரண்டாவதாய்த் திருமணம் செய்து கொள்பவனோடேயே அவள் நீண்ட இல்வாழ்க்கை நடத்துவாள் என்று சொல்லப் பட்டது.  இது காந்தார அரசகுலத்தினருக்குப் பெரும் கவலையை அளித்தது.  ஆகவே திருதராஷ்டிரனுக்குப் பெண் கேட்டபோது  அவன் பிறவிக்குருடு எனத் தயங்கினாலும், பின்னர் சம்மதித்தனர்.  ஆனால் காந்தாரியோ தான் அப்படி ஒருவர் உயிரைப் பறித்துக் கொண்டு பின்னர் வேறொருவரைத் திருமணம் செய்து கொண்டு வாழ முடியாது எனத் திட்டவட்டமாகத் தெரிவிக்க, என்ன செய்வது எனப் புரியாமல் தவித்த அரச குலத்தினர் ஜோதிடர்களை நாடினார்கள்.

ஜோதிடர்கள் வாழைமரம், ஆடு, மாடு அல்லது வேறேதும் பிராணிகளோடு காந்தாரிக்கு முதல் திருமணம் செய்வித்துவிட்டுப் பின்னர் அதை பலி கொடுத்துவிடலாம் என்று சொல்கின்றனர்.  அதன்படி நல்ல திடகாத்திரமான ஓர் ஆட்டைத் தேர்ந்தெடுத்து காந்தாரிக்கு அதனுடன் முதலில் திருமணம் நடக்கிறது.  பின்னர் அந்த ஆடு பலி கொடுக்கப் படுகிறது.  அதன் பின்னர் திருதராஷ்டிரனை மணக்கிறாள் காந்தாரி. அவன் குருடு என்பது அறிந்த நாள் முதலே தானும் தன் கண்களை ஒரு துணியால்  இறுகக் கட்டிக் கொண்டு விடுகிறாள்.  காந்தாரியோடு அஸ்தினாபுரம் வந்த சகுனிக்கு அங்கே நடப்பது எதுவும் பிடிக்கவில்லை.  ஆனாலும் வாய் மூடிப் பேசாமல் இருந்தான்.  ஆனால் துரியோதனனிடம் அவனுக்குப் பாசம் மிகவும் இருந்தது.  அவன் தந்தையான சுபலா  தன் பரிவாரங்களோடும், குடும்பத்தோடும் ஓர் முறை அஸ்தினாபுரம் வந்திருந்தான்.  அப்போது கெளரவர்களும், பாண்டவர்களும் சிறுபிள்ளைகள்.  விளையாடிக் கொண்டிருக்கையில்  சண்டை வந்து விடுகிறது.  அந்தப்புரத்தில் பாண்டவர்கள் பிறந்த விதம் குறித்து எழும் பரிகாசப் பேச்சுக்களைக் கேட்டிருந்த துரியோதனாதியர், அவர்கள் தந்தைக்குப் பிறக்காமல் வேறெவருக்கோ பிறந்துவிட்டு இங்கே வந்து வாழ்கின்றனர் என அவர்களைக் கேலி செய்கின்றனர்.  தங்கள் பங்குக்குப் பாண்டவர்களும், அவர்கள் தந்தையும், சரி தங்கள் தந்தையும் சரி பிறந்த விதம் குறித்துப் பாட்டியாரிடம் கேட்குமாறும், மேலும் துரியோதனனின் தாய் ஓர் விதவை எனவும், அவன் விதவைக்குப் பிறந்த மகன் எனவும் கூறி விடுகின்றனர்.

திடுக்கிட்ட துரியோதனன் சத்யவதியைத் தேடிப் போகிறான். முழு விபரங்களையும் அறிந்து கொள்கிறான்.  மேலும் தன் தாயை விதவையாக்கியது தன் பாட்டனாராகிய சுபலா என்னும் காந்தார மன்னன் என்றும், அதற்குத் துணை போனது தன் மாமனும் அன்புக்குப் பாத்திரன் ஆனவனுமாகிய சகுனி எனவும் அறிகிறான்.  துரியோதனனால் தன் தாயின் அவமதிப்பைத் தாங்க முடியவில்லை.  மற்ற விஷயங்கள் அவன் கை மீறியவை.  எப்போதோ நடந்தது.  ஆனால் தன் தாய்?  இப்படிப் பாண்டவர்களால் கேலி பேசப்படுவதற்குக் காரணமே தன்பாட்டனாரும் மாமனும் தானே.  அவர்களை இரவோடிரவாகச் சிறைப்பிடித்துச் சிறையில் அடைத்து உண்ண உணவு கொடுக்காமல் கொடுமைப் படுத்தினான்.  உணவு கொடுத்தாலும் ஒரு கைப்பிடி சாதம் தான் கொடுத்தான். தங்களைப் பட்டினி போட்டுக் கொல்வதே துரியோதனனின் நோக்கம் என்பதைப் புரிந்து கொண்ட சுபலா, தன் குடும்பத்தினர் அனைவரையும் அந்த உணவைக் கடைசிப் பிள்ளையான சகுனிக்கே கொடுக்கச் சொன்னான்.  காரணம் கேட்டதற்கு நம் குலத்தில் அனைவரும் இறந்தாலும் பரவாயில்லை;  சகுனி ஒருவன் மட்டுமாவது உயிர் பிழைக்கட்டும்.  அவனே இந்தக் குரு வம்சத்தை அழிக்கச் சரியான ஆள்.  ஆகவே நாம் உணவு உண்ண வேண்டாம்.  வரும் உணவை எல்லாம் சகுனியை உண்ணச் செய்யுங்கள் என்றான்.  அப்படியே அவர்கள் அனைவரும் பட்டினியால் இறக்க சகுனி மட்டும் உயிர் பிழைத்தான்.  தன் தந்தையிலிருந்து அனைவரும் இறந்ததைக் கண்ட காந்தாரி, தன் மகனிடம், சகுனியையாவது விடுவிக்கும்படி மன்றாடிக் கேட்டுக் கொள்ள சகுனி விடுவிக்கப் படுகிறான்.  வெளிப்பார்வைக்கு அவன் துரியோதனனிடம் பழைய பாசத்தோடு காணப்பட்டாலும் உள்ளூரத் தன் குலமே அழியக் காரணமான குரு வம்சத்தினரை அடியோடு அழிக்க வேண்டும்;  அதுவும் சகோதரச் சண்டையில் என முடிவெடுக்கிறான். 

அவன் தன் தந்தையின் தொடை எலும்புகளைப் பத்திரப் படுத்தி வைத்திருந்ததாகவும், சொக்கட்டான் ஆடுகையில் அவற்றையே பயன்படுத்தியதாகவும் கூறுவார்கள்.  அதனால் அந்தச் சொக்கட்டான் ஆடும் பாய்ச்சிக்காய்கள் அவன் சொன்னபடி கேட்கும் எனவும் கூறுவார்கள். அவை  ஆறைக் குறிக்கும் எண்களில், ஆறு வண்ணங்களில் இருக்குமாம்.  இந்த ஆறு வண்ணங்களும் ஆறு கிரஹங்களின் குறியீடுகள் எனவும்,  எல்லாமே ஆறைக் குறிப்பதால் தகுந்த முறையில் ஆடாவிடில் கெடுதலே விளையும் எனவும் சொல்கின்றனர்.  இதைத் தக்கபடி பயன்படுத்தியே பாண்டவர்களை வனவாசத்துக்கு அனுப்பி வைத்தான் சகுனி. அது பின்னால் பார்க்கலாம்.  சகுனியின் முன் கதைச் சுருக்கம் இதோடு முடிந்தது.  இனி கண்ணன் தொடருவான்.

பி.கு. சகுனியின் தந்தை இறந்தது, காந்தாரி ஆட்டைத் திருமணம் செய்து கொள்வது போன்றவைகள் பற்றிய குறிப்பு ஏதும் வியாச பாரதத்தில் கிடையாது.  செவி வழிச் செய்திகளே. 

Thursday, July 5, 2012

சகுனியின் பூர்வோத்திரமும், அவன் எடுத்த பழியும்! 1

அப்பாதுரை சகுனி பற்றிய பூர்வீகத் தகவல்கள் குறித்துக் கேட்டிருந்தார்.  இரு விதங்களில் சகுனி பழி தீர்த்துக் கொண்டது பற்றிக் கேள்விப் பட்டிருக்கிறேன். அவற்றில் வாரிசுகள் பற்றிய விபரங்கள் அடங்கிய இந்தப் பகுதியை முதலில் பகிர்ந்து கொள்கிறேன்.சகுனியைப் பற்றித் தெரிந்து கொள்ள முதலில் அவனுடைய பூர்வோத்திரத்துக்குப் போக வேண்டும்.  மஹாபாரத காலத்துக்கு வெகு காலம் முன்னால் புராணகாலம் எனச் சொல்லப்பட்ட காலத்திலே யயாதி என்னும் அரசன் ஆண்டு வந்தான்.  பாண்டவர்களும், கெளரவர்களும் யயாதியின் வழித் தோன்றல்களே.  அது எங்கனம் எனப் பார்ப்போம்.  யயாதியின் ஆட்சிக் காலத்தில் ஓர் நாள் அவன் காட்டுக்கு வேட்டையாடச் சென்று இருந்தான்.  அங்கே ஓர் கிணற்றில் இருந்து தாகத்துக்கு நீர் எடுக்க வேண்டி அவன் சென்றபோது அந்தக் கிணற்றில் அழகிய இளம்பெண் ஒருத்தி விழுந்திருந்ததைக் கண்டான்.  அந்தப்  பெண்ணைக் காப்பாற்ற வேண்டி செய்வது என்ன எனத் தெரியாமல் யயாதி தன் வலைக்கையை நீட்ட அந்தக் கையைப் பற்றிய வண்ணம் அந்தப் பெண் கிணற்றில் இருந்து மெல்ல மெல்ல மேலே ஏறி வந்தாள்.  வந்தவள் தன்னைக் காப்பாற்றியது ஓர் சக்கரவர்த்தி என்றும், அவன் இளமையையும், அழகையும் கண்டதும். அவன் மேல் அவளுக்குக் காதலும் மேலிட்டது.  தன் வலக்கையைப் பற்றிக் கொண்டு யயாதி அவளை மேலே இழுத்ததால், தனக்கும் அவனுக்கும் கந்தர்வ முறைப்படி திருமணம் நடந்துவிட்டதாகவும், தன்னை ஏற்கும்படியும் அவள் அவனிடம் வேண்டினாள். ஆனால் மன்னனோ மறுத்தான். அவள் யாரெனத் தெரியாமல் அவளை மணக்க இயலாது என்பதோடு, அவள் பெற்றோரின் சம்மதமும் வேண்டும் என்றும் கூறிவிட்டான்.  மன்னன் தன் வழி செல்ல, கிணற்றில் இருந்து வந்த பெண்ணான தேவயானி தன் தந்தையான சுக்ராச்சாரியாரைத் தேடிச் சென்றாள்.


ஆம் அசுரகுருவான சுக்ராசாரியாரின் ஒரே மகளான தேவயானி தான் அவள்.  சுக்ராசாரியாரிடம் சஞ்சீவனி மந்திரம் கற்க வந்திருந்த கசன் என்னும்  பிருஹஸ்பதி குமாரனிடம் தன் உள்ளத்தைப் பறி கொடுத்தாள்.  ஆனால் அவனோ அவளைத் தன் உடன் பிறந்தவளாக நினைப்பதாகக் கூறிவிட்டான்.  குருவின் மகள் சகோதரிக்குச் சமானம் என்பதால் அவளை மணக்க இயலாது எனக் கூறிவிட்டான்.  தேவயானி அவனை மேலும் மேலும் வற்புறுத்தினாள்.  கசன் தொடர்ந்து மறுக்கவே, அவன் கற்ற வித்தையை அவன் பயன்படுத்த இயலாது என சாபம் கொடுத்தாள்.  கசனோ அதனால் பரவாயில்லை என்றும், தான் வித்தையைப் பயன்படுத்தப் போவதில்லை என்றும், கற்றுக் கொடுக்கப் போவதாகவும் கூறிவிட்டு பதிலுக்கு தேவயானியும் பிராமணர் எவரையும் மணக்க இயலாது என சாபம் கொடுத்துவிடுகிறான்.  ஆகவே இப்போது யயாதி மன்னனைப் பார்த்ததுமே தேவயானிக்குத் தனக்கேற்ற மணாளன் இவனே எனத் தோன்றுகிறது.


சுக்ராசாரியாரோ அசுர குலத்து விருஷபர்வா என்னும் மன்னனின் ஆதரவில் வசித்து வந்தார்.  அவனுக்கு ஒரே மகள் சர்மிஷ்டை என்னும் பெயரில் இருந்தாள்.  தேவயானியும் அவளும் நல்ல தோழிகளாகப்பழகி வந்ததோடு ஆடல், பாடல்களிலும் ஈடுபட்டிருந்தனர்.  அப்படி ஒருநாள் சென்றிருந்தபோது தான் சர்மிஷ்டை தேவயானியைக் கிணற்றில் தள்ளிவிட்டாள்.  மேலும் அவள் தந்தை சுக்ராசாரியார் தன் தந்தையிடம் ஊழியம் செய்பவர் தானே எனக் கேட்டு விட்டாள்.  இதனால் எல்லாமும் தேவயானி அவமானம் அடைந்திருந்தாள்.  யயாதியை அவள் சந்தித்தது அப்போது தான்.  இதெல்லாமும் சேர்ந்து யயாதியையே அவள் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற ஆவல் அவளைத் தூண்டியது.  தன் தகப்பனிடம் சர்மிஷ்டை தனக்குச் செய்த அவமானத்தைக் கூறுகிறாள் தேவயானி.  சுக்ராசாரியார் கோபத்துடன் விருஷபர்வாவிடம் சென்று இதற்குப் பரிகாரம் கேட்கிறார்.  அவரே பரிகாரத்தைக் கூறும்படி விருஷபர்வா கூற, மன்னன் மகள் என்ற கர்வத்தில் தன் மகளை அலக்ஷியம் செய்த சர்மிஷ்டை  தன் மகளுக்கு தாசியாக இருக்க வேண்டும்; அவள் திருமணம் செய்து கொடுக்கையில் அவளோடு கூடச் சென்று பணிவிடைகள் செய்ய வேண்டும் என்று கூறுகிறார் சுக்ராசாரியார்.


குருவின் வார்த்தைக்கு மறுவார்த்தை பேசாத வ்ருஷபர்வா தன் மகளிடம் எல்லாவற்றையும் எடுத்துக்கூறித் தனக்காகவும் நாட்டின் நலனுக்காகவும் சர்மிஷ்டை செய்ய வேண்டிய தியாகத்தைக் கூறுகிறான்.  சர்மிஷ்டையும் தகப்பனுக்காக ஒத்துக்கொண்டு தேவயானியின் பணிப்பெண் ஆகிறாள்.  சுக்ராசாரியார் அடுத்து யயாதி மன்னனிடம் சென்று அழகும், இளமையும், வித்தையும் பொருந்திய தன் மகளை ஏற்றுக்கொள்ளுமாறு கேட்கிறார்.  அவள் பிராமணப் பெண் என்பதாலேயே தான் மறுத்ததாகவும் சுக்ராசாரியார் மனமுவந்து கொடுத்தால் ஏற்பதாகவும் யயாதி கூறி தேவயானியை மணந்து கொள்கிறான்.  தேவயானிக்கு யயாதியை விடவும் அவன் வகித்த அரசபதவியும், தான் பட்டமஹிஷி என்பதுமே முக்கியமாய்ப் பட்டது.  அவளோடு சீர் வரிசைகளில் சர்மிஷ்டையும் சேர்ந்தே வந்தாள்.  அவளைக் கொடுக்கையில் சுக்ராசாரியார் யயாதியிடம் அவளைக் குறித்துக் கூறி அவளை தேவயானியின் தாசியாகவே நடத்த வேண்டும் என்று வாக்குறுதி பெற்றிருந்தார்.  ஆனால் சர்மிஷ்டையோ, தேவயானியுடன் நட்போடு இருந்த காலகட்டத்திலேயே ஓர் நாள் நந்தவனம் ஒன்றில் யயாதியைக் கண்டு அவனிடம் ஒருதலைக்காதல் கொண்டிருந்தாள்.  தேவயானி அவனையே மணந்ததும், தான் அங்கேயே பணிப்பெண்ணாகச் சீர் வரிசைகளோடு வந்ததும், அவள் எப்படியேனும் யயாதியின் உள்ளத்தைக் கவர்ந்து விட வேண்டும் என்ற எண்ணத்துடன் இருந்தாள்.  இதற்குள்ளாக தேவயானிக்கு இரு ஆண்மக்கள் பிறந்தனர்.  ஒருவன் பெயர் யது;  இன்னொருவன் பெயர்  துர்வசு.


அவள் இருந்த அசோக வாடிகா வழியே ஒருநாள் தற்செயலாகச் சென்ற யயாதி அங்கே பெண் துறவி போல் அமர்ந்திருந்த சர்மிஷ்டையையும், அவள் அழகையும் கண்டான்.  அங்கேயே சற்று நேரம் நின்று அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.  சர்மிஷ்டையும் அவன் தன்னைப் பார்ப்பதை உணர்ந்து அவனை வரவேற்றாள்.  தங்கள் கதையை அவனிடம் கூறினாள்.  தான் வ்ருஷபர்வாவின் மகள் எனவும், அவனைக் கண்ட முதலே காதலித்து வருவதாகவும் கூற தேவயானியின் அலக்ஷிய சுபாவத்தால் மனம் நொந்திருந்த யயாதி அவளுடைய அன்பில் மயங்கினான்.  அவளைக் காந்தர்வ விவாஹம் செய்து கொண்டான்.  அவளுடனும் குடும்பம் நடத்தினான்.  அவளுக்கும் பிள்ளைகள் பிறந்தன.  அவர்கள்,   த்ருஹ்யூ, அநு, புரு ஆகியோர்.   இந்த விஷயம் தேவயானிக்குத் தெரிய வருகிறது.  கோபம் கொண்ட அவள் தன் தந்தையிடம் சென்று முறையிட்டாள்.Monday, July 2, 2012

துரியோதனனின் கவலை!


அங்கே மூன்றாவதாய் அமர்ந்திருந்தவன் கர்ணன் என்னும் அங்க நாட்டு அரசன்.  தேரோட்டி ஒருவனால் வளர்க்கப்பட்டு சிறு வயதில் இருந்தே துரியோதனனின் இணை பிரியா நண்பனாக விளங்குபவன்.  துரோணாசாரியாரிடம் ஆயுதப் பயிற்சிகளும், சஸ்திர வித்தைகளும் கற்றவன்.  அப்போதில் இருந்தே அர்ஜுனனைத் தனக்குச் சமமாக நினையாதவன்.  எப்போதுமே அர்ஜுனனை விடத் தான் ஒரு படி மேல் நிலையில் இருக்க விரும்புவன்.  அழகிய முகம்.  நெற்றியில் சூரிய வடிவில் திலகம் இட்டிருந்தான்.  தினசரி சூரிய வழிபாடு தவறாமல் செய்பவன்.  அவன் நேர்மையும், தைரியமும் அவன் முகத்திலும் கண்களிலும் பிரதிபலித்தன. 

கட்டுமஸ்தாகக் காணப்பட்டாலும் அவன் உடல் எளிதில் வளையும் தன்மையும் கொண்டிருந்தது.  அதீத புத்திசாலி என்பதை அவன் கண்களிலிருந்து அவ்வப்போது வந்த மின்னலைப் போன்ற ஒளி காட்டிக் கொடுத்தது.  துரியோதனனை விடவும் ஆயுதப் பயிற்சியிலும், வில் வித்தையிலும் தேர்ந்தவனாய் இருப்பான் என்பதை அவன் உடல் அமைப்புக் காட்டிக் கொடுத்தது.  ஆனாலும் அவன் அணிந்திருந்த உடையும், ஆடை ஆபரணங்களும், கிரீடமும் துரியோதனனை விடவும் அவன் கொஞ்சம் கீழ்ப்பட்ட நிலையிலே இருப்பதைச் சுட்டிக்காட்டியது.

“மாமா, அந்த மாட்டிடையன் இப்போது பார்த்து இங்கே ஏன் வருகிறான்?  அவன் வருவதில் எனக்குக்கொஞ்சம் கூட சம்மதம் இல்லை.  அவனைக்குறித்து நான் நன்கறிவேன்.  பயங்கரமானவன் அவன்.” என்றான் வெறுப்புடன். 


சகுனி சிரித்துக்கொண்டே, நன்றாக நிமிர்ந்து உட்கார்ந்து கொண்டான்.  நிதானமாய்த் தன் கைகளில் இருந்த பானத்தை அருந்தினான்.  துரியோதனனைப் பார்த்து, “ துரியோதனா, அவன் இந்தச் சமயம் மட்டுமல்ல, எப்போது வந்தாலும் எனக்குப் பிடிக்கவில்லைதான்.  அவனைக் கண்டாலே எனக்கும் எரிச்சல் வருகிறதுதான்.  ஆனால் அவனை நீ மாட்டிடையன் எனக்கூப்பிடுவது மட்டும் சரியில்லை.  உனக்கு யாரையானும் பிடிக்கவில்லை எனில் தாராளமாய் அடைமொழிகள் வைத்து அழைக்க ஆரம்பிக்கிறாய்.” என்று கொஞ்சம் ஹாஸ்யமாகவே பேசினான்.


“அவனால் நமக்கு என்ன நேரிட்டுவிடப் போகிறது?” கர்ணன் கொஞ்சம் அலட்சியமாகவே கேட்டான்.

“உனக்குத் தெரியாது கர்ணா!  அவன் புரிந்து கொள்ளாத விஷயமோ, அறியாத செய்தியோ எதுவுமே இருக்காது.  குறைந்த பக்ஷமாக யாதவர்கள் அப்படித்தான் நம்புகின்றனர்.  அவர்களை அவன் தன் கைப்பொம்மைகளாக ஆட்டி வைக்கிறான்.  அவர்களும் அவனுடைய இசைக்கு ஏற்ப ஆடுகின்றனர்.  எத்தனை பெரியவர்களாக இருந்தாலும்.  அதோடு பாண்டவர்கள் அவனுக்கு அத்தை வழி சகோதரர்கள் என்பதை மறவாதே.  அவர்களை நாம் நாடு கடத்தியதையே ஒரு போதும் மன்னிக்க மாட்டான் எனில், இப்போது நடந்திருக்கும் விஷயத்திற்கு என்ன தான் சொல்வானோ!”


“ஒருவேளை பாண்டவர்கள் எப்படி இறந்தார்கள் என ஆராய்ச்சி செய்யப் போகிறானோ என்னவோ!” சகுனி விஷமத்தனமாகச் சிரித்துக்கொண்டே கூறினான்.


“அவர்கள் தான் செத்து ஒழிந்தார்களே.  அவர்களுக்கு உரிய மரியாதையுடன் ஈமக்கடன்களையும் நிறைவேற்றியாகி விட்டது.  இனி அவ்வளவு தான்.  வேறு பேச்சுக்கே இடமில்லை.”  என்றான் கர்ணன் திட்டமாக.


“ஹூம், உனக்குப் புரியவில்லை.  அந்தக்கண்ணனை நான் நன்கறிவேன்.  சிரித்துக்கொண்டே கழுத்தை அறுப்பான். இவ்வுலகிலேயே இப்படிச் சிரித்துச் சிரித்துக் கழுத்தறுப்பவர்களில் இவன் ஒருவன் தேர்ந்தவன்.  நான் நன்கறிவேன்.” என்றான் துரியோதனன்.


தன் மருமகனையே கொஞ்சம் கனிவோடு பார்த்த சகுனி, அவனைச் சீண்டுவது போல, “ கிருஷ்ணனின் சாகசங்களைக் குறித்து அறிந்திருக்கிறாய் அல்லவா?  அவன் சாகசங்கள் ஒரு கதை போல் பேசப்படுகின்றன.  அதோடு அவன் மனிதனே அல்ல;  கடவுள் என்பதாகவும் கூறுகின்றனர்.”  என்றான்.


“பைத்தியக்காரத் தனம், முட்டாள் தனம்.” ஆக்ரோஷத்தோடு பேசினான் துரியோதனன்.   “அவனால் திறமையாகச்  சண்டை போட முடியலாம்.  அதில் வெற்றியும் பெறலாம்.  நல்ல சதியாலோசனைகளும் செய்வான் என நினைக்கிறேன்.  நம்மைப் போல் தான் தூங்கி, விழித்து, எழுந்து, அநுஷ்டானங்களைச் செய்து, உணவு உட்கொண்டு, போர் புரிந்து, மனைவிகளோடு வாழ்ந்து, வயதான பெண்களுக்கு உதவிகள் புரிந்து என ஒரு சாதாரணமான மனுஷனைப் போல் தான் இருக்கிறான்.   ம்ம்ம்ம்ம்…இன்னும் சொல்லப் போனால் பெண்களோடான அவனுடைய உறவுகள் குறித்துப் பலவிதமாய்ப் பேசுகிறார்கள் தான்.  ஆனால் அவனைக் கடவுள் என யார் சொன்னது?  சரி, அவன் கடவுளாகவே இருந்தாலும், ஏன் இங்கே வருகிறான்?  அவனுடைய இப்போதைய நகரம் துவாரகை மேற்குக் கடற்கரைக் கோடியில் உள்ளது.  இவ்வளவு பெரிய நிலப்பரப்பைக் கடந்து ஏன் இங்கே வரவேண்டும்?   அவன் கடவுள் இல்லை என்பது எவ்வளவு நிச்சயமோ அவ்வளவு நிச்சயம் அவன் வெறும் துக்கம் விசாரிக்க மட்டுமே இவ்வளவு தூரத்தைக் கடந்து வருகிறான் என்பதை நான் நம்ப மாட்டேன்.”


“ஆஹா, என் அருமை மருமகனே,  மறுபடி நீ நிதானமிழந்து பேசுகிறாய்.” சொன்னவண்ணமே சகுனி துரியோதனனைத் தட்டிக் கொடுத்தான்.  “நீ ஒரு விஷயத்தை நம்பவில்லை எனில், நம்பவில்லை என்பதை வெளிக்காட்டாதே.  கிருஷ்ணன் கடவுளாகவே இருந்துவிட்டுப் போகட்டுமே;  இறந்து போன பாண்டவர்களை உயிர்ப்பிக்க அவனால் இயலுமா?  நிச்சயம் முடியாது.  அதோடு மருமகனே,  இந்தக் கடவுளர் எல்லாம் தங்களுக்கு முகஸ்துதி செய்பவர்களுக்குத் தான் அருள் புரிகின்றனர்.   சாமானியருக்கு இல்லை. “ என்று கேலியாகச் சொன்னான்.