Saturday, July 14, 2012

கோபத்திலும், பொறாமையிலும் வேகும் துரியோதனன்!


என் அருமை மக்களே, ராஜாங்க விஷயங்களைப்  பற்றி நீங்கள் இன்னும் சரியாக அறியவில்லை.  எது எதை எப்படிக் கையாளலாம் என்பதையும் புரிந்து கொள்ளவில்லை.  அதற்கான வயதும், அனுபவமும் உங்களிடம் இல்லை.  வேக வேகமான முடிவுகளை எடுக்கிறீர்கள்.  அப்படி எல்லாம் செய்யக் கூடாது.  நிதானமும், பக்குவமும் தேவை.  வரப் போகிறவன் சாமானியன் அல்ல;  கிருஷ்ணன்;  வாசுதேவ கிருஷ்ணன்.  வெறும் உடல் பலம் மட்டுமின்றி புத்தி பலமும் வாய்ந்தவன்.  சக்தி வாய்ந்த ஒரு எதிரி.  அது நினைவில் இருக்கட்டும்.  அதோடு கூட அவனை உன் தந்தையான திருதராஷ்டிரனும் தாத்தா பீஷ்மரைப் போலவே மிகவும் மதிக்கிறான் என்பதை நினைவில் கொள்வாய் துரியோதனா!  ஆகவே நாம் நம்முடைய திட்டங்களை வெகு கவனமாகப் போட்டு நிறைவேற்ற வேண்டும்.  அதற்கு இந்தக் கண்ணன் எவ்வாறு நடந்து கொள்ளப் போகிறான் என்பது மிக முக்கியம்.

மேற்கண்டவாறு சகுனி பேசி முடித்ததும், துரியோதனன், “மாமா அவர்களே, அப்படி எனில் நாளை அவன் இங்கே வருகையில் நாங்கள் என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டான்.

“அப்படிக் கேள் துரியோதனா!  கிருஷ்ணனை நன்கு முகஸ்துதியால் குளிப்பாட்டி விடு.  அவனுடைய நம்பிக்கையை எவ்வகையிலேனும் பெற்றுவிடு.  அவன் நம்பிக்கைக்கு உகந்தவனாக உன்னை ஆக்கிக் கொண்டு விடு.  அவனுக்குக் கீழ்ப்படிந்து நடப்பது போல் பாவனை செய்.  அவனுடைய சாகசங்களை எல்லாம் கண்டு வியந்தாற்போல் பேசு. அவனை உன் பக்கம் இழுத்துக்கொள்.  ஆஆஆ, இன்னொரு விஷயம், இப்போது நினைவில் வருகிறது.  நீ துவாரகை சென்றாயே துரியோதனா!  அப்போது உன் நேரத்தை வீணடித்துவிட்டாய்.  கண்ணனின் நம்பிக்கையை நீ அப்போதே பெற்றிருக்க வேண்டும்.  தப்பு, மாபெரும் தவறு செய்து விட்டாய்.   பலராமனை உனக்கு நண்பனாக்கிக் கொண்டதற்குப் பதிலாக இந்தக் கிருஷ்ணனை உன் நண்பனாக்கி இருக்க வேண்டும். “ இதைச் சொன்ன சகுனி கர்ணன் பக்கம் திரும்பி, “கர்ணா, நீ இப்போது அவனைப் பார்க்கவே பார்க்காதே.  நாம் அனைவரும் நினைப்பது போல் அவன் கெட்டிக்காரன், புத்திசாலி என்பது உண்மையானால் நாம் அவனை விடவும் கெட்டிக்காரர்களாக இருக்க வேண்டும்.”

“ஆஹா, நான் என்ன பாவம் செய்தேனோ!  எப்போதுமே எல்லாரிடமும் வெளிவேஷம் போடுபவனாகவே இருந்து வர வேண்டியுள்ளது.  நான் ஒன்றும் சாதாரணக் குடும்பத்தில் பிறக்கவில்லை.  புருவின் சந்திர வம்சத்தின் ஒரு கிளை வம்சமான குருவம்சத்தின் வாரிசாகவே பிறந்திருக்கிறேன்.  “துரியோதனன் இதைச் சொல்லும்போது முகத்தைத் திருப்பிக் கொண்டான் சகுனி.  துரியோதனன் மேலும் தொடர்ந்தான். “நான் தான் அரசனாக ஆகி இருக்கவேண்டும்.  எனக்கு அதற்கான தகுதிகள் இல்லையா?  ஏன் ஒருவருமே இதை ஒப்புக்கொள்ள மறுக்கின்றனர்?  எனக்கு எதிராகச் சதி செய்கின்றனர்!  இப்போது தான் அந்த யுதிஷ்டிரனும் இல்லையே!  செத்து ஒழிந்து போய்விட்டானே!  இன்னும் என்ன?  அது என்ன அவன் மட்டும் மிகவும் உயர்ந்தவனாகவே கருதப் படுகிறான்?  ஏன் எல்லாரும் யுதிஷ்டிரனை  என்னைக் காட்டிலும் அரியணைக்குத் தகுந்தவனாக நினைக்கின்றனர்?”

“ஹா,ஹா, அவன் ஒரு கடவுளின் பிள்ளை!” சகுனி ஏளனச் சிரிப்போடு கூறினான்.

“ஹூம், என் சித்தப்பா பாண்டு ஒரு கடவுளா?” ஆத்திரத்துடன் கேட்ட துரியோதனன் குரலில் பாம்பின் சீறல் தொனி இருந்தது.

“அவன் எல்லாராலும் மதிக்கப்பட்டான்.  முக்கியமாய் தாத்தா பீஷ்மராலும், இந்த ஹஸ்தினாபுரத்து முட்டாள் மக்களாலும் மிகவும் நேசிக்கப்பட்டான்.”  சகுனியின் குரலின் பரிகாசம் துரியோதனனை சாந்தப்படுத்தவில்லை,  மாறாக அவன் முகம் மிகவும் விகாரமாய் மாறியது.

ஒரு பயங்கரமான குரோதமான முகபாவத்துடன் அவன் பேசினான்:”  ஆம், ஆம், எனக்குத் தெரியும், புரிந்துவிட்டது.  மாமா அவர்களே, நான் அவனை விட மிகவும் சிறந்தவன் தான் என்பதை நான் நன்கறிவேன்.  ஆனால் ஆனால்…..மாமா அவர்களே, நீங்களும் மற்றவர்களோடு சேர்ந்து யுதிஷ்டிரன் என்னை விடவும் மிகச் சிறந்தவன் என நினைக்கிறீர்கள்.  நான் ஒரு சிறந்த போர்வீரன்,  தண்டாயுதத்தை ஏந்திப் போர் புரிந்தேனானால் என்னை வெல்ல எவராலும் இயலாது.  சிறந்த மல்யுத்த வீரன்.  ஆனால், ஆனால்……. என்ன சொல்ல, “ துரியோதனன் குரல் தழுதழுக்க, “ எங்கள் குருவான துரோணர் கூட, பீமனும், அர்ஜுனனுமே என்னை விடச் சிறந்த வீரர்கள் என நினைக்கிறார்.”

“ ஓ, ஓ, உன் தாத்தா பீஷ்மரையே இதெல்லாம் கேட்டுக்கொள் அப்பனே.  அவர் தான் இந்த ஹஸ்தினாபுரத்தின் சிறந்த வீரர் யார் என்பதைத் தீர்மானிப்பவர். “ சகுனியின் குரலில் இன்னமும் ஏளனம் மாறவில்லை.

துரியோதனன் முகம் கோபத்திலும், ஆங்காரத்திலும் சிவந்து பயங்கரமாக மாறிப் போனது.  அழகான அவன் முகம் பார்க்கவே சகிக்க ஒண்ணாத கோரத்தை எட்டியது. 

No comments: