Sunday, July 28, 2013

பீமனின் சாகசங்களும், உத்தவனின் நடுக்கமும்!

“அப்படி எல்லாம் உற்று உற்றுப் பார்க்காதே உத்தவா, நீ ஒரு முட்டாள். இதற்கு முன்னர் நீ என்னைப் பார்த்ததே இல்லையா? உனக்கு இங்கே வந்து என்னைப்பார்க்க வேண்டும் என்ற ஆசை இருந்திருந்தால் நிகும்பனிடம் சொல்லி அனுப்புவது தானே!  நானே ஓடோடி வந்து உன்னை வரவேற்று அழைத்துச் சென்றிருப்பேனே!” என்றான் பீமன்.  உதட்டை முறுக்கிக் கொண்டு கேலியாகச் சிரித்த உத்தவன், “எனக்கென்ன ஜோசியமா தெரியும் ? என் அத்தையின் மகன் இங்கே அரசனாக வீற்றிருக்கிறான் என அறிவேனா நான்?  அதுவும் இந்தக் கொடூரமான ராக்ஷச ஜன்மங்களுக்கு!  ஆனால் உன்னைப் பார்த்தால் நீ ஒன்றும் கவலைப்படவில்லை போல் தெரிகிறது.  உள்ளூர ரசிக்கிறாய் போல் இருக்கிறதே!’ என்றான்.  “ஆஹா, மிக மிக உயர்வாக நினைக்கிறேன்.” என ஆமோதித்தான் பீமன்.  மேலும் தொடர்ந்து, “ அஸ்தினாபுரத்தில் அந்தப் பொல்லாத சகுனியோடும், அவன் மருமகன்களான கெளரவ புத்திரர்களோடும், வாய்ச்சண்டை, நிஜச் சண்டை போடுவதை விட இந்தக் கொடிய ராக்ஷசர்களின் அரசனாக இருப்பதை மிகவும் விரும்பிச் செய்கிறேன்.  இது எத்தனையோ நன்மை தரும் வேலை.  இங்கே உன் நிலைமை என்ன என்பதை நன்கு அறிய முடியும்.  எல்லாம் நேரடியாக நடைபெறும். நீ சண்டையும் போடலாம்.  யாரை வேண்டுமானாலும் கொல்லவும் கொல்லலாம்.  அல்லது கொல்லப்படவும் செய்யலாம்.  ஆனால் உயிர் பிழைத்திருந்தால் நீ விரும்பிய வண்ணம் வாழலாம்.” என்றான்.

“அதெல்லாம் சரி அப்பனே, எவ்வாறு நீ இங்கே வந்து சேர்ந்தாய்? குந்தி அத்தையை எங்கே காணவில்லை?  அதோடு மற்றச் சகோதரர்கள் எங்கே இருக்கின்றனர்?” என்று கேட்டான் உத்தவன்.  “ஓஹோ, அவர்கள் அனைவரும் பத்திரமாக இருக்கின்றனர்.  நான் உன்னை அவர்களிடம் அழைத்துச் செல்கிறேன்;  ஆனால் ஒன்று அதற்குள்ளாக இந்த ராக்ஷசர்கள் அவர்களைச் சாப்பிடாமல் இருக்க வேண்டுமே!” கேலியாகச் சொல்லிவிட்டு அதைச் சர்வசாதாரணமான ஒரு நகைச்சுவையாகக் கருதிக் கொண்டு நகைத்த பீமன், “ எல்லாம் என்னால் தான்.  ஐந்து பேரிலும் என் மூலமாகவே இவை அனைத்தும் நடந்தது.  எனக்கு ஏன் இப்படி எல்லாம் நடந்தது! அது தான் ஏன் எனப் புரியவில்லை.” என்றான். “கிருஷ்ணன் மட்டுமில்லை, நாங்கள் அனைவருமே உங்கள் ஐந்து பேரையும் குறித்து மிகவும் கவலை கொண்டிருந்தோம்.” என்றான் உத்தவன்.

“ஹாஹாஹா,” நகைத்த பீமன், “நான் ஒருவன் இருக்கையிலே அப்படி எல்லாம் நடக்க விடுவேனா!” என்று சொல்லிவிட்டு மீண்டும் சிரித்தான்.  ஒரு சின்ன விஷமக்காரச் சிறுவனைப் போல் அவன் நகைப்பும், பேச்சும் அமைந்திருப்பதாகத் தோன்றியது உத்தவனுக்கு.  பீமன் தொடர்ந்து, “ ஹஸ்தினாபுரத்துக்காரர்களுக்கு நாங்கள் உயிருடன் இருக்கும் விஷயம் தெரியக் கூடாது என்பது சித்தப்பா விதுரரின் கட்டளை. அவருக்கு அதுவே முக்கியக் கவலையாகவும் இருந்தது.  ஆகவே நாங்களும் அப்படியே நடக்கத் தீர்மானித்தோம்.  வாரணாவரத்தை விட்டு நீ சென்ற பின்னர், இந்நிகழ்ச்சி நடந்தது.  சொல்லிவைத்தாற்போல் ஒரு பிச்சைக்காரி ஒருத்தி தன் ஐந்து குழந்தைகளுடன் எங்களை வந்து பார்த்தாள். அவளை அந்த அரக்கு மாளிகையில் எங்களுடன் தங்க வைத்திருந்தோம். பின்னர் சித்தப்பா விதுரரின் ஆலோசனைப்படி அங்கிருந்து தப்ப வேண்டிய நாளை எதிர்நோக்கி இருந்தோம். அரக்கு மாளிகையில் தீப்பற்றிய தகவல் தெரிந்ததும், சித்தப்பாவின் ஆள் பூமிக்கடியில் தோண்டிக் கொடுத்திருந்த சுரங்கப்பாதையில் நாங்கள் தப்பி அரக்கு மாளிகையை விட்டு வெளி வந்தோம்.  வெளிவந்த எங்களுக்கு ஒரு படகு காத்திருந்தது.  அந்தப் படகின் உதவியால் நாங்கள் ஆற்றையும் எளிதாகக்கடந்து அக்கரை சேர்ந்தோம்.  நாங்கள் யார் என்பது வேறு எவருக்கும் தெரிய வேண்டாம் எனச் சித்தப்பா விதுரரின் ஆணை என்பதால் விரைவில் நாங்கள் ஏகச் சக்கரத்தையும் கடந்து காட்டுக்கு உள்ளே வந்துவிட்டோம்.  ஆஹா, உத்தவா, நீ கூட இல்லாமல் போனாயே!  அந்த மாதிரி வரும் போது சிலிர்ப்போடு கூடிய மகிழ்வாக இருந்தது.  ஒரே திக், திக் தான் ஒரு பக்கம் என்றாலும் எனக்கு அந்த உணர்வு மிகவும் பிடித்திருந்தது.  நன்கு அனுபவித்தேன்.” என்று ஏதோ ஒரு சாதாரணமான நிகழ்வை அனுபவித்தது போலச் சொன்னான் பீமன்.

“அதெல்லாம் சரி அப்பனே, இந்த மிக மோசமான, மட்டமான காட்டுப்பகுதியை ஏன் தேர்ந்தெடுத்தீர்கள்?” என்றான் உத்தவன்.

“அது ஒரு பெரிய கதை அப்பனே!  ஆனால் இதை மோசம், மட்டம் என்றெல்லாம் சொல்லாதே!  இப்போது இது என் நாடு.  நான் இதன் அரசன்.   அரசன் விருகோதரன்.  ஆம், இங்கே இது தான் என் பெயர். “ என்றான் பீமன்.  உத்தவன் மார்பில் விளையாட்டாகத் தட்டினான்.  உத்தவனுக்கோ வலி பொறுக்க முடியவில்லை.  சிறிதும் லட்சியம் செய்யாத பீமன், தொடர்ந்து, “நாங்கள் வரும் வழியில் நாகர்களின் ஒரு சில கிராமங்களைக் கடந்து வந்தோம்.  எங்களைக் கண்ட கிராமத்து மக்கள் மிரண்டதோடு மட்டுமில்லாமல் பயப்படவும் செய்தார்கள்.  எங்கே அவர்கள் அரசனிடம் போய்ச் சொல்லிவிடுவார்களோ!  அவன் வந்து எங்களை அடையாளம் கண்டு கொள்வானோ எனக் கவலைப்பட்டோம்.  உனக்குத் தான் தெரியுமே, உத்தவா, நாங்கள் ஒரு விசித்திரமான குடும்பம் என.  எங்களை யார் எங்கே பார்த்தாலும் அடையாளம் கண்டு கொள்வார்கள்.  எங்களைக் கவனிக்காமல் எவரும் தப்ப மாட்டார்கள்.  ஒரு வயதான பெண்மணி, சரியாக நடக்க முடியாமல் தவிக்கிறாள்.  அவள் பிள்ளை ஒருத்தன் அவ்வப்போது சிங்கம் உறுமுவதைப் போல் கர்ஜிக்கிறான்.  மேலும் நான்கு மனிதர்கள் ஒரு புத்திசாலியான மனிதன், ஒரு சிறந்த மனிதன், ஒரு அறிவற்றவனைப் போன்றவன், இன்னொருத்தன் எப்போப் பார்த்தாலும் விண்ணில் தெரியும் நக்ஷத்திரங்களையே கவனிப்பவன்.  இப்படி ஒரு குடும்பம்.  எவரும் யாரும் எதற்கும் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை.  அவர்களைக் குறித்தே கவலை கொள்வார்களா என்பது தெரியவில்லை.  இப்படியானதொரு குடும்பம் அனைவர் கண்களையும் கருத்தையும் கவர்ந்துவிடுமே.  ஆகையால் தான் காட்டின் உள்ளே, மிக மிக உள்ளே வந்து சேர்ந்தோம்.” சொல்லும்பொழுதே தன் சகோதரர்களைக் குறித்த தன் விளக்கத்தை எண்ணி எண்ணிச் சிரித்துக் கொண்டே சொன்னான் பீமன்.  பின்னரும் நினைத்து நினைத்துச் சிரித்தான்.

“அத்தை குந்தி அவர்கள் இந்தக் காட்டில் நடக்கவே மிகவும் கஷ்டப்பட்டிருப்பார்களே!” எனக் கவலை குரலில் தொனிக்கக் கேட்டான் உத்தவன்.  “ஆ, நான் அப்படி விட்டு விடுவேனா!  அம்மாவின் பாதங்கள், எவ்வளவு மென்மையானவை என்பதை நான் நன்கறிவேன்.  ஆகவே அவரை என் தோள்களில் சுமந்து கொண்டு தான் வந்தேன்.  சில சமயம் சகோதரர்களையும் சுமக்க நேரிட்டது.” மிக அலட்சியமாகச் சொன்ன பீமன், “அவர்கள் அனைவரும் தாங்கள் தான் மிகவும் கெட்டிக்காரர்கள் என நினைக்கின்றனர்.  ஆனால் நான் இல்லாமல் அவர்களால் என்ன செய்ய முடியும்?  ஒரு நிமிடம் கூட அவர்களால் வாழ முடியாது.  எப்போதெல்லாம் ஏதேனும் கஷ்டம் வருகின்றதோ அப்போதெல்லாம் ஆதரவற்ற சிறு குழந்தைகளைப் போல என் தயவை நாடி என்னையே பார்ப்பார்கள்.” சொல்லிக் கொண்டே மிகப் பெருமையுடன் சிரித்தான் பீமன்.  “ஆனால், பீமா, ராக்ஷசர்களின் அரசனாக நீ எப்படி ஆனாய்?  அதைச் சொல்லவே இல்லையே!” என உத்தவன் கேட்டான்.  “ஓ, வேறு யாருக்கும் அந்தத் தகுதி இல்லை.  என் ஒருத்தனுக்கு மட்டுமே அவர்கள் அரசனாகும் தகுதி இருந்தது.” மிகவும் பெருமையுடன் சொன்ன பீமன், “ ஆஹா, இது எவ்வளவு சிறப்பாக இருக்கிறது தெரியுமா?  நம் குலத்து முன்னோர்கள், முக்கியமாய் சக்கரவர்த்தி பரதனுக்குக் கூடக் காட்டில் இவ்வாறான அனுபவங்கள் எல்லாம் கிடைத்திருக்காது.  எத்தகைய அனுபவங்கள் அவை எல்லாம்.  கேள்: முழுதாக இரு நாட்கள் நாங்கள் இந்தக் காட்டின் உள்ளே சென்று கொண்டிருந்தோம்.  மிக மிக நடுக்காட்டிற்குச் சென்று விட்டோம். செல்லும்போது மரங்களினடையில் படுத்துத் தூங்கி விட்டு, காட்டில் கிடைக்கும் பழங்களை உண்டு கொண்டு சென்றோம்.  அப்போது தான் ஹிடும்பன் வந்தான்.”

“ஹிடும்பனா?  இடும்பனா? யார் அது?” என ஆச்சரியத்துடன் உத்தவன் வினவினான்.  “ஓ உனக்குத் தெரியாதல்லவா? ஹிடும்பன் தான் இந்தக் காட்டில் ராக்ஷசர்களின் அரசனாக இருந்தான்.  இந்தக் காட்டின் ஒரு பக்கத்திலிருந்து இன்னொரு பக்கத்துக்குத் தன் பரிவாரங்களோடு போய்க் கொண்டிருந்தான்.  அப்போது அவன் எங்களை மோப்பம் பிடித்துவிட்டான்.  இந்த ராக்ஷசர்கள் இருக்கின்றார்களே, ஒரு யோஜனை தூரத்திலேயே மனித வாசனையை மோப்பம் பிடித்துவிடுவார்கள்.” என்றான் பீமன். “ஆஹா, எனக்கு நன்றாகத் தெரியுமே!” என்றான் உத்தவன், தன் அனுபவங்களை நினைத்து அவன் உடல் நடுங்கியது.  “பின்னர் அவர்கள் எங்களைச் சூழ்ந்து கொள்ள ஆரம்பித்தனர்.  தங்கள் கால்களில் மிருதுவான பட்டைகளைக் கட்டிக் கொண்டு தாங்கள் வருவது தெரியாமல் மெல்ல மெல்ல நகர்ந்து வந்து அரை வட்ட வடிவில் எங்களைச் சூழ்ந்து கொண்டனர்.”

“ஆஹா, அவர்களின் இந்த வழக்கம் குறித்தும் நான் நன்கறிவேனே!  இப்போது கூட அந்த மோசமான அனுபவங்களை நினைத்தால் என் உடல் நடுங்குகிறது. “ என்ற உத்தவனின் உடல் நடுங்கிக் கொண்டிருந்தது.



Friday, July 19, 2013

விருகோதரன் வந்து விட்டான்!

உத்தவன் மறைந்திருந்த மரத்தினடியில் இருந்த ராக்ஷசர்கள் அனைவருக்கும் அந்த சப்தத்தின் பொருள் புரிந்திருந்தது.  ஆகவே உடனடியாக ஓட்டமாக ஓடி சப்தம் வந்த திக்கை நோக்கிச் சென்றார்கள்.  எத்தனை வேகமாகச் செல்லமுடியுமோ அத்தனை வேகமாகச் சென்றனர்.  அந்தத் திறந்த வெளியின் ஒரு பக்கத்திலிருந்து ஒரு பலம் பொருந்திய ராக்ஷசன் முன்னே வந்தான்.  அவன் அங்கே இருந்த அனைத்து ராக்ஷசர்களையும் விட உயரமாய், திடகாத்திரமாய் அதே சமயம் பருமனாகவும், வலிமைபொருந்தியவனாகவும் காணப்பட்டான்.  இப்படி ஒரு மனிதனை இன்று வரை உத்தவன் கண்டதில்லை.  ஒரு நீண்ட கன்னங்கரிய தாடி அவன் மார்பில் தவழ்ந்தது.  முற்றிலும் இறகுகளால் ஆனதொரு ஆடை அவன் உடலில் காணப்பட்டது.  ஏதோ மரத்தின் வேரின் அடிப்பாகம் போன்றதொரு ஆயுதம் நுனியில் உருண்டையாக கதை போன்ற தோற்றத்துடன் அவன் கையில் காணப்பட்டது.  தன் தோள்களில் அதைச் சார்த்தி இருந்தான்.

உத்தவன் கண்கள் இமைக்க மறந்தன.  அவன் இதயம் துடிக்க மறந்தது.  மிகப் பெரியதொரு பேராபத்திலிருந்து தப்பியதாக நினைத்த அவன் இப்போது அதைவிடப் பெரியதொரு ஆபத்தில் மாட்டிக் கொண்டானோ!  ம்ம்ம்ம் இவனைப்  பார்த்தால் சாதாரண மனிதனாகத் தோன்றவில்லை.  இந்தக் கொடூரமான ராக்ஷசர்களின் தலைவனாக, இல்லை, இல்லை அரசனாக இருக்க வேண்டும்.  அவர்களை விடக் கொடூரமாக இருப்பான் போலிருக்கிறது.  இவர்களை எல்லாம் ஒன்றுமில்லை எனச் சொல்லலாம் போல.  ஆனால், ஆனால் ஒரு வித்தியாசமும் இருக்கிறதே. இவனும் மற்ற ராக்ஷசர்களைப் போல சிவப்பும், வெள்ளையுமாக உடலெங்கும் வண்ணம் அடித்துக் கொண்டிருக்கிறான்.  அவர்களை விடவும் இன்னமும் ஆடம்பரமாகவும் இருக்கிறான்.  ஆனால் இவன் மூக்கில் இறகுகள் காணப்படவில்லை என்பதோடு மரச்சில்லுகளைத் தன் துருத்திய பற்களை விட நீளமாக உதடுகளில் பொருத்திக் கொள்ளவில்லை.  அதோடு இவர்களைப்போல மிருகம் போல் கைகளாலும், கால்களாலும் தவழ்ந்து வரவில்லை.  நம்மைப் போலவே நடக்கிறான்.

அந்த வெட்டவெளியில் நட்டநடுவில் வந்து நின்று கொண்ட அந்த ராக்ஷச அரசன் மீண்டும் ஓர் முறை சிங்கம் போல் கர்ஜித்தான்.  அதைக் கேட்டதுமே ஆங்காங்கே  காட்டின் புதர்களில் மறைந்து இருந்த அனைத்து ராக்ஷசர்களும் ஓடோடி வந்தனர்.  இது அவர்களுக்கு அழைப்புப் போலும்.  அந்த ராக்ஷச அரசன் தன் மூக்கைச் சுருக்கி எதையோ மோப்பம் பிடித்தான்.  ஏதோ வாசனையைக் கண்டு பிடித்துள்ளான். அப்போது அவன் அருகிலிருந்த ஒரு புதரிலிருந்து ஒரு ராக்ஷசச் சிறுவன் அவனை நோக்கி ஓடினான்.  தன் கைகளாலும், கால்களாலும் மிருகத்தைப்போல் தவழ்ந்து சென்ற அவனை உத்தவன் யாரென அறிந்து கொண்டான்.  நிகும்பன் தான் அவன்.  தன் அரசன் அருகே சென்ற நிகும்பன் எழுந்து நின்றுகொண்டு அந்த ராக்ஷச அரசன் கையைப் பிடித்து இழுத்த வண்ணம் உத்தவன் மறைந்திருக்கும் மரத்தைச் சுட்டிக் காட்டினான்.  "நன்றி கெட்ட ராக்ஷசன், பொல்லாதவனாக இருக்கிறானே!" உத்தவன் தனக்குத் தானே முணுமுணுத்துக் கொண்டான்.

அந்த ராக்ஷசன் நிமிர்ந்து கூர்ந்து பார்த்தான்.  அந்த மாபெரும் உருவம், அதன் வலிமை மிக்க தோள்கள், ஒரு தூணைப் போன்ற வலிமையான கழுத்து, அந்த சாயல் எல்லாம் எங்கோ பார்த்த மாதிரி அறிந்த மாதிரி தோன்றியது உத்தவனுக்கு.  ஆனால் இவனை நாம் இதற்கு முன்னர் பார்த்தது கூட இல்லையே! ஆனால் அறிந்ததொரு மனிதனைப் போல் அல்லவோ காண்கிறான்!  உத்தவனைப் பார்த்ததுமே யாரெனப் புரிந்து கொண்ட அந்த ராக்ஷச அரசனின் முகமோ பெரியதொரு புன்னகையில் மலர்ந்து விகசித்தது.  இந்தச் சிரிப்பு..... இப்படி யாரோ சிரிப்பார்களே, எவராக இருக்கும்?? உத்தவன் யோசிக்கையிலேயே, தாங்க முடியாச் சிரிப்போடு, "அடே உத்தவா, கீழே இறங்குடா! அங்கே என்ன செய்கிறாய்? ஏ, குரங்கே!  குரங்கைப் போலவே மேலே உட்கார்ந்திருக்கிறாயா?"என்றது.  உத்தவனுக்குத் தன் காதுகளை நம்ப முடியவில்லை.  இது என்ன மொழி!  ஆஹா, நம் தாய்மொழியன்றோ!  நாம் பேசும் மொழியல்லவோ இது.  ஆரியர்களின் மொழியன்றோ!  நம் பிரியத்துக்கு உரிய, வணக்கத்துக்கு உரிய மொழியன்றோ இது!  உத்தவனின் முகம் சந்தோஷத்தில் மலர்ந்தது.  அவன் இதயம் அதீத மகிழ்ச்சியைத் தாங்க முடியாமல் படபடவென அடித்துக் கொண்டது.

"அடே, கீழே இறங்குடா.  வா, வா, அங்கேயே குரங்கைப்போல் எத்தனை நேரம் அமர்ந்திருப்பாய்?" மீண்டும் அந்தக் குரல் சொல்லியது.  "ஓஹோ, உன்னால் இறங்க முடியாதோ!  மிக உயரத்தில் இருக்கிறாய் அல்லவா?  அப்போ ஒரு வேலை செய்.  நீ கீழே குதித்துவிடு.  பயப்படாதே. நீ கீழே குதிக்கையிலேயே நான் உன்னைப் பிடித்துவிடுவேன்.  உனக்கு அடிபடாமல் மெதுவாகப்பிடித்துக் கீழே இறக்குவேன்.  பயந்து கோழையைப்போல் அங்கே அமர்ந்திருக்காதே.  இறங்குடா கீழே.  நான் உன்னைச் சாப்பிட்டுவிட மாட்டேன்."  உத்தவன் தன்னை மரத்துடன் பிணைத்துக் கொண்டிருந்த உத்தரீயத்தைக் கிழித்துத் தன்னை விடுவித்துக் கொண்டு மரத்திலிருந்து கீழே இறங்கலானான்.  இறங்குகையிலேயே அவன், "ஹே கிருஷ்ணா, நீ எனக்குக் கொடுத்த வாக்கைக் காப்பாற்றிவிட்டாய்.  என்னையும் காப்பாற்றி விட்டாய்.  ஹே கிருஷ்ணா, முகுந்தா, முராரே!' என முணுமுணுத்துக் கொண்டே இருந்தான்.

கீழே பீமன் அவனை இறங்கும்போதே பாதியில் தானே இறக்கிவிட்டுப் பின்னர் பலத்த சிரிப்போடு அவனை அப்படியே மேலே தூக்கி ஒரு சுழற்றுச் சுழற்றிக் கீழே இறக்கிக் கொண்டே, " அரசன் விருகோதரன் வந்து உன்னைக் காத்து இருக்கையில், நீ கிருஷ்ணனுக்கா நன்றி சொல்கிறாய்!  அடேய் நன்றிகெட்டவனே! இதுதானா எனக்கு விதித்தது! " என்று  சொல்லிவிட்டு மீண்டும் உத்தவனைத் தூக்கினான்.  உத்தவன் உணர்வுகளின் அழுத்தமும், தான் காப்பாற்றப்பட்டதைக் குறித்த திகைப்பும் இன்னமும் மறையாமல் மன அழுத்தம், பசி, சோர்வு  தாங்க முடியாமல் போனவனாக பீமனின் தோள்களிலேயே மயங்கிச் சரிந்தான்.  உத்தவன் மயக்கத்திலிருந்து எழுந்ததும், மீண்டும் பசியாலும், தாகத்தாலும், மயங்கிவிடுவான் போல் தோன்றியது.  அவனால் திடமாக நிற்கக் கூட முடியவில்லை.  கால்கள் அப்படி நடுங்கிக் கொண்டிருந்தன.  பீமன் அவனை அருகில் இருந்த ஒரு ஊற்றுக்கு அழைத்துச் சென்று நீர் அருந்த வைத்தான். அதற்குள்ளாக நிகும்பன் எங்கிருந்தோ சில பழங்களைப் பறித்து வந்தான்.  அதை உத்தவனைச் சாப்பிட வைத்து, "இப்போது நீ நிம்மதியாய்த் தூங்கு.  இவர்களோடு எனக்குக் கொஞ்சம் வேலை இருக்கிறது.  நான் இவர்களைக் கவனித்துக் கொள்கிறேன்." என்று ஆறுதல் சொன்னான்.

உத்தவன் நிம்மதியாகத் தூங்கினான்.  விழித்து எழுந்த உத்தவனுக்கு, அங்கே கண்ட காட்சி திகைப்பை அளித்தது.  ஆம், பீமன் அந்த ராக்ஷசர்களின் எவர் அந்த இரு சிறைக்கைதிகளை நெருப்பிலிட்டுத் தின்றார்களோ அவர்களை எல்லாம் தலைகீழாகத் தொங்கவிட்டுத் தண்டனை கொடுத்துக் கொண்டிருந்தான்.  அதைத் தடுக்காமல் அக்கம்பக்கம் புதர்களில் ஒளிந்து மறைந்திருந்தவர்களுக்கும் தண்டனை கிடைத்தது.  உத்தவன் பீமன் அருகில் சென்றபோது அவன், "இந்த ராக்ஷசர்களுக்கு நர மாமிசம் சாப்பிடாதீர்கள் என்றால் புரியவில்லை. அவர்கள் சாப்பிட்டதை வாந்தி எடுக்க வைத்தால் ஒரு வேளை இனி சாப்பிடமாட்டார்களோ என்னவோ!" என்று கூறிவிட்டுச் சிரித்தான்.  உத்தவன் உடல் மீண்டும், அந்தப் பழைய நிகழ்ச்சிகளின் காட்சிகள் கண் முன்னே தெரிந்ததால் நடுங்கியது.   பிடிக்கப்பட்ட அனைவருக்கும் தண்டனை கொடுத்து முடிந்ததும், அந்த தண்டனையை அவர்கள் சரிவர நிறைவேற்றுகிறார்களா என்பதைப் பார்க்கக் காவல் போடப்பட்டது. பின்னர் பீமன் உத்தவனை அழைத்துக் கொண்டு காட்டின் உள்பகுதிக்குச் சென்றான். உத்தவன் கைகளோடு தன் கைகளையும் கோர்த்துக் கொண்டு நிகும்பனும் அவர்களோடு சென்றான். ஓரளவுக்கு உடலில் பலம் வந்த உத்தவன் தன் அத்தை மகனிடம் ஏற்பட்டிருக்கும் விசித்திரமான மாறுதல்களை உற்றுக் கவனித்தான். 

Wednesday, July 17, 2013

நின்னைச் சரணடைந்தேன், வாசுதேவா!

இதற்கு மேல் தூக்கமும் வராது போல் இருந்தது உத்தவனுக்கு.  நிலவொளி பளீரெனப் பிரகாசிக்க உருக்கி ஊற்றிய வெள்ளிக் கம்பிகள் போல் அந்த மரக்கிளைகளின் மேல் படர்ந்த நிலவொளியைப் பார்த்த உத்தவன் அது இலைகளுக்கு ஊடே புகுந்து கீழே தரையில் காட்டிய விசித்திரமான ஒளிக்கோலத்தைக் கண்டான்.  எனினும் அதை ரசிக்கும் மனநிலையில் அவன் இல்லை.  கீழே படுத்து உறங்கிய அந்தப்பிசாசுகளின் மேலும் இதே நிலவொளி வீசுகிறது. ஹூம், இத்தனை வெளிச்சமும் அபாயமாய்த் தோன்றியது உத்தவனுக்கு.  எந்த ஆரியனுக்கும் கிடைக்காததொரு விசித்திரமான மரணம் எனக்குக் கிடைக்கப் போகிறது.  உத்தவனுக்குத் தன் நிலைமையே விசித்திரமாய் இருந்தது.  தனக்குத் தானே சிரித்துக் கொண்டான்.  திடீரென அவனுக்குக் கசனின் நினைவு வந்தது.  சுக்ராசாரியாரிடம் சஞ்சீவனி மந்திரம் கற்கும் நோக்கத்தோடு வந்த கசன் அவராலேயே உண்ணப்பட்டுப்பின்னர் சஞ்சீவனி மந்திரத்தைக் கற்று அவர் வயிற்றிலிருந்து கிழித்துக் கொண்டு வெளிவந்து பின்னர் சுக்ராசாரியாரையும் சஞ்சீவனி மந்திரம் மூலம் உயிர்ப்பித்தான்.  ஆனால் இங்கே, இங்கே உத்தவன் அந்த ராக்ஷசர்களால் நெருப்பில் வாட்டப்பட்டு உண்ணப்பட்டதும் அவனைத் திரும்ப அழைக்க எவரும் இல்லை.  அவர்கள் அவனைப் பக்ஷணம் பண்ணியது பண்ணியதாகவே இருக்கும்.  ஆஹா, எனக்கு மட்டும் அந்த சஞ்சீவனி மந்திரம் தெரிந்திருந்தால்!! இந்த ராக்ஷசர்கள் அனைவரின் வயிற்றையும் கிழித்துக் கொண்டு வெளிவரும் சந்தர்ப்பம் கிடைக்குமே!  ஹூம் எனக்கு அந்த அதிர்ஷ்டமெல்லாம் இல்லை.


இப்போது அரை மயக்கத்திலிருந்த உத்தவன் கண்கள் முன் ஒரு காட்சி படம் போலத் தோன்றியது.  தான் விழித்திருக்கிறோமா, தூங்குகிறோமா, இது கனவா, நனவா என்ற குழப்பத்தில் ஆழ்ந்தான் உத்தவன்.  அந்த இரு இரட்டையர்களின் குரலும் கேட்டாற்போல் இருந்தது உத்தவனுக்கு.  “ஆஹா, உத்தவனை ராக்ஷசர்கள் சாப்பிட்டுவிட்டார்களே!” என்று பரிதாபமான குரலில் சொல்வது கேட்டது. இல்லை, இல்லை; அது உண்மையில்லை.  அவனை எந்த ராக்ஷசனும் இதுவரை சாப்பிடவில்லை.  இதோ இந்தக் கிளையின் மேல் உட்கார்ந்திருக்கிறானே.  ஆனால் விரைவில் ராக்ஷசர்கள் அவனைச் சாப்பிடப் போவது என்னமோ உறுதி! உத்தவன் மீண்டும் மயக்கத்தில் ஆழ்ந்து போகவிருந்தான்.  அப்போது அவன் காதுகளில் கேட்டது ஒரு பரிச்சயமான குரல்.  “நான் இருக்கையில் உத்தவனாவது இறந்து போவதாவது! அவனைச் சாக விடமாட்டேன்.”  அந்தக் குரலின் உறுதியும், கருணையும், தொனியில் தொனித்த பாசமும் உத்தவனைத் தூக்கிவாரிப் போட வைத்தது.  இது யார் குரல்? ஆஹா, அல்லும்பகலும் நான் நினைத்துக் கொண்டிருக்கும் என் கிருஷ்ணன் குரல் அல்லவோ இது!  அவன் குரல்களில் தான் எத்தனை உறுதி! திண்மை! திட்டவட்டமாக அன்றோ சொல்கிறான்.  தன்னைத் தானே உலுக்கிக் கொண்டான் உத்தவன்.  இது என்ன உண்மையா, பொய்யா?  தான் கண்டது கனவா? நனவா?  அல்லது…அல்லது என் புலன்கள் என்னை ஏமாற்றுகின்றனவா?  இல்லை, இல்லை, அந்தக் குரல் கேட்டது பொய்யில்லை. பொய்யே அல்ல.  குரலில் காணப்பட்ட நிச்சயத்தன்மை, அதன் இனிமை, எப்போதும் போல் ஒலிக்கும் கருணைத் தன்மை எதுவும் பொய்யல்ல.  எவராலும், எதாலும் அசைக்கப்பட முடியாத ஈடு இணையற்ற ஒரு பக்தியின் வெளிப்பாடாக அமைந்த அந்தக் குரல் பொய்யில்லை.  இதோ, இதோ, என் கண் முன்னர் அந்த நீலமேக சியாமள வண்ணனான கண்ணன் முகம் தெரிகின்றதே.


இவ்வளவு அருகே அந்த முகம் தெரிவதோடு அதில் தெரியும் அந்த நீண்ட கண்கள்!  ஒளியை மட்டுமா வீசுகின்றன!  கருணையையும், அன்பையும் மழையாக வர்ஷிப்பதோடு, நான் இருக்க பயமேன் என்ற அபயமும் அல்லவோ அளிக்கிறது.  அன்புடன் கூடிய கருணை, அதோடு நான் காத்து ரக்ஷிப்பேன் என்ற உறுதி.  இதோ கண்ணன் தலை, அதில் சூடிய கிரீடம், மயில் பீலி, அளவு கடந்த மென்மையுடனும், கருணையுடனும் என்னை நோக்கிக் குனிகின்றான் கண்ணன்.  உத்தவன் மனதுக்குள் நம்பிக்கை துளிர் விட்டது.  தன் நிராதரவான நிலையை முற்றிலும் மறந்து நம்பிக்கை கொண்டான்.  தன் எதிரே கிருஷ்ணன் இருப்பதாகவே நம்பினான்.  தன்னை முழுக்க முழுக்க அவனிடம் ஒப்படைத்துக் கொண்டான்.  பரிபூரணமாகச் சரணாகதி அடைந்தான்.  கிருஷ்ணனைப் பார்த்துப் பாசத்துடன் சிரித்தான்.  தன் விசுவாசமான அன்பையும் பரிபூரணச் சரணாகதியையும் காட்டினான்.  “கண்ணா, என் மன்னா, மணிவண்ணா.  நான் என்றென்றும் உன்னுடையவன்.  ஒருவேளை இப்போது இங்கே நான் இறக்க நேரிட்டாலும் உன்னுடைய ஆணையைச் சிரமேற்கொண்டு அதை நிறைவேற்றும் முயற்சியில் இறப்பதற்காகப் பெருமைப் படுகிறேன்.  அதோடு கண்ணா, இந்தக் கடைசி நிமிடத்தில் கூட உன் நாமத்தை  மட்டுமே என் உதடுகள் உச்சரிக்க வேண்டும். வேறெதுவும் வேண்டாம்.”  மீண்டும் உத்தவனுக்குத் தூக்கிவாரிப் போட்டது.  அதே குரல், அதே குரல், மென்மையாக, அதே சமயம் உறுதியுடன் தன் கருணையை எல்லாம் வெளிப்படுத்திக் கொண்டு கேட்டது.  “நான் உயிருடன் இருக்கும்வரை உத்தவனைச் சாகவிடமாட்டேன்!’  உத்தவன் சிரித்துக் கொண்டான்.


ஆஹா, என்னுடைய கற்பனைகள் எங்கெல்லாம் போகின்றன.  என்ன என்னமோ சித்து விளையாட்டுகள் எல்லாமும் தோன்றுகின்றன.  குரல்கள் எல்லாம் கேட்கின்றன.  ஆனால் பரவாயில்லை.  என் அருமைக் கண்ணனின் அந்தக் குரலை ஒரு முறை அல்ல இருமுறைகள் கேட்டுவிட்டேன்.  இது போதும், எனக்கு இது போதும், கண்ணா, நீயே சரணம்.  நின்னைச் சரணடைந்தேன். இப்போது நான் மிகவும் சந்தோஷமாக மகிழ்வோடு உன் நாமத்தை உச்சரித்துக் கொண்டே இறக்கத் தயாராகிவிட்டேன்.”


ஹே கிருஷ்ணா கோவிந்தா ஹரே முராரே
ஹே நாதா நாராயணா வாசுதேவா


இதற்குள்ளாகக் கீழே அந்தப்பிசாசு மனிதர்கள் விழித்து விட்டதாகத் தோன்றியது.  எழுந்ததோடு அல்லாமல், அந்த மரத்தைச் சுற்றி ஓடினார்கள், கூக்குரலிட்டார்கள், யாரையோ பழிப்புக் காட்டுவது போல் கத்திக் கொண்டு அங்குமிங்கும் ஓடியதில் உத்தவன் பயத்தில் கீழே விழத்தான் போகிறேன் என்றே எண்ணினான்.  அவன் உடலில் நேற்றிருந்த அளவுக்கு சக்தியும் இன்றில்லை.  மிகவும் தளர்ந்து போயிருந்தான்.  ஆடிக் கொண்டும், பாடிக் கொண்டும் கத்திக் கொண்டும் இருந்த ராக்ஷசர்கள் விரைவில் உலர்ந்த மரக்கிளைகளைக் கொண்டு வந்து அந்த மரத்தடியில் குவித்த வண்ணம் இருந்தனர்.  அவனைக் கீழே கொண்டு வர வேண்டி அவர்கள் நெருப்பை மூட்டி விடப் போகிறார்கள் என்பதை உத்தவன் புரிந்து கொண்டான்.  அதே போல் கீழே நெருப்பு மூட்டப்பட்டது.  புகையால் மூச்சு அடைத்தது  உத்தவனுக்கு.  மூக்குத் துவாரங்கள் எரிந்தன.  “ஓ, கண்ணா, வாசுதேவா, நான் உன்னுடையவன்.  உன்னிடம் சரணாகதி அடைந்துவிட்டேன்.  உயிர் பிழைத்திருந்தாலும் சரி, இறப்பிலும் சரி நான் என்றென்றும் உன்னுடையவன். இதை மட்டும் நீ ஒரு போதும் மறவாதே! என்னையும் மறந்துவிடாதே!’  உடலின், மனதின் அனைத்து சக்திகளையும் இழந்த நிலையில் உத்தவன் இந்த வார்த்தைகளைத் தன்னுள்ளே முணுமுணுத்துக் கொண்டான்.  இனி தானாகவே கீழே இறங்க வேண்டியது தான்.  அல்லது நேரே நெருப்பில் குதித்து விடலாமா?


உத்தவன் ஒரு முடிவுக்கு வருவதற்குள்ளாக தூரத்தில் காட்டுக்குள்ளே, ஏதோ சப்தம் கேட்டது.  இல்லை, இல்லை, எவரோ ஒரு குழுவாகச் சுற்றிச் சூழ்ந்து கொள்ள மெல்ல மெல்ல நகர்ந்து வருகின்றனர். இந்த ராக்ஷசர்களும் அப்படித் தானே வந்தனர்!  இது ஒருவேளை இன்னொரு ராக்ஷசர்களின் குழுவோ?  கீழே இருந்த ராக்ஷசர்களுக்கும் அந்தச் சப்தம் கேட்டிருக்கிறது என்பது அவர்கள் உற்றுக் கவனித்து விட்டு ஒருவரை ஒருவர் அச்சத்தோடு பார்த்துக் கொண்டதில் இருந்து தெரிந்தது.  திடீரென முரசங்களின் முழக்கம் ஓங்கி வலுவாகவும் வேகமாகவும் ஒலித்தது.  சிறிது நேரம் ஒலித்து ஓய்ந்த முரசின் முழக்கத்திற்குப் பின்னர் கோபம் கொண்ட ஆண் சிங்கத்தின் கர்ஜனை போன்றதொரு குரல் காட்டின் அந்தத் திறந்த வெளியெங்கும் பாய்ந்து எதிரொலித்தது.



Tuesday, July 16, 2013

தன்னிரக்கத்தில் உத்தவன்!

சற்று நேரம் உச்சரித்த உத்தவனுக்குச் சற்று நேரத்திற்குப் பின்னர் தேவகி அம்மாவால் தினம் தினம் பாடப்பட்ட அந்த இனிமையான பக்திப்பாடலைச் சொல்ல முடியவில்லை.  காலை இளங்காற்று சுகமாக வீசத் தன்னையும் அறியாமல் உறங்கி விட்டான்.  திடீர் திடீர் எனத் தூக்கி வாரிப் போட்டு எழுந்து தான் கீழே விழுந்துவிடவில்லையே என நிச்சயம் செய்து கொள்வான். இம்மாதிரி அரைத் தூக்கத்திலும், அரை விழிப்பிலும் மாறி மாறிச் சென்று தன்னிலையறியாது இருந்த உத்தவன் கண்களில் பல்வேறு விதமான காட்சிகள் தோன்றி மறைந்தன. கிருஷ்ணன் தன் புல்லாங்குழலை ஊதிக் கொண்டு இனியகீதம் இசைத்த வண்ணம் ராதையுடன் தோன்றினான்.  அவனும் ராதையும் விளையாடுவதும் தெரிகிறதே!  ஆஹா, இதென்ன, அதற்குள் ராதை மறைந்து இது யார்?  ஷாயிப்யா! இவ்வளவு கோபத்துடன் யாரைத் திட்டுகிறாள்?  ஆஹா, என்னைத் தான்!  அம்மா! அம்மா! தன்னையும் அறியாமல் அழுத உத்தவன் முன் இதோ அவன் தாய்! கம்சா!  ஆனால் இது என்ன?  வெறுப்புடனும் இகழ்ச்சியுடனும் முகத்தை அன்றோ திருப்பிக் கொள்கிறாள்!  உத்தவன் மனதைச் சமாதானம் செய்யவென வந்தவர்கள் போல் நாக கன்னியர் இரட்டையர் அங்கே வந்தனர்..  இனிமையாகச் சிரித்துக் கொண்டு அவர்கள் அன்பையெல்லாம் கண் வழியே கொட்டியவண்ணம் ஒரு நிமிடம் நிஜமோ என உத்தவன் எண்ணிவிட்டான்!  மீண்டும் தூக்கி வாரிப் போட எழுந்து தான் அமர்ந்திருக்கும் நிலையைச் சரி பார்த்துக் கொண்டு விழுந்துவிடாமல் இருக்கப் பாதுகாப்புச் செய்து கொண்டான். ஒரு முறை கீழேயும் பார்த்துக் கொண்டான்.  ராக்ஷசர்கள் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தனர்.  அவன் மனக்கண் முன்னர் நெருப்பில் வாட்டப்பட்ட அந்த இரு மனிதர்களும் தோன்றினர்.  விரைவில் களைப்பு மிகுந்து அவன் கீழே விழுந்துவிடுவான்.  அவனையும் அப்படித் தான் நெருப்பில் வாட்டுவார்கள்.

நான் ராக்ஷசர்களிடம் மாட்டி இறந்த செய்தி கிருஷ்ணனைப் போய் எட்டும்.  நான் இல்லாமல் கிருஷ்ணன் தனிமையாக உணர்வானோ! ம்ம்ம்ம்ம் அவன் மனதில் நினைப்பதை அப்படியே முடித்துத் தருபவர்கள், அவன் நம்பிக்கைக்குப் பாத்திரமானவர்கள் எவரும் அவன் அருகில் இல்லை. ம்ம்ம்ம்ம் உத்தவன் இப்போது அந்த இரு பெண்கள் குறித்தும் யோசித்தான்.  என்ன செய்வார்கள் இருவரும்? அதுவும் நான் ராக்ஷசர்களால் நெருப்பில் இடப்பட்டு இறந்தேன் என்பது தெரிய வந்தால்??? எனக்காக வருந்துவார்களா?  ஒருவேளை,,,, ஒரு வேளை,,,,, கங்கையில் விழுந்து தங்களையும் முடித்துக் கொண்டுவிட்டால்???? தன்னைச் சுற்றிலும் காணப்பட்ட பிரகாசமான சூரிய ஒளியால் உத்தவன் உற்சாகம் அடைய முயன்றான்.  வாயை நன்கு திறந்து காற்றை உள்ளிழுத்து சுத்தமான காற்றால் தன்னைப் புதுப்பித்துக் கொண்டான். மரத்திலிருந்து துளிராக இருந்த பச்சை இலைகளை மென்று தின்றான்.  ஆனால் அவை அவனுக்குப் புத்துணர்ச்சி தருவதற்கு பதிலாக மயக்கத்தையே தந்தது.  வயிறு சங்கடமாக உணர்ந்தான்.  ஆயிற்று.  இந்த மரத்தில் அவன் ஏறி அமர்ந்து இரு இரவுகளும், ஒரு பகலும் கழிந்துவிட்டன. பொறுக்க முடியாத அளவுக்குக் களைத்து விட்டான் உத்தவன். அட, இதுவே ஏதேனும் போர்க்களமாக இருந்திருந்தால்?? நம் திறமையைக் காட்டிவிட்டு வீர மரணம் அடையலாமே!

ஒரு நல்ல உயர்ந்த நோக்கத்துக்காக உயிரை விட்டிருக்கலாமே!  ஆனால் இப்போதோ அவன் எந்த நேரம் மரத்திலிருந்து அதன் பழுத்த பழம் உதிர்வது போல் கீழே விழுவானோ தெரியாது! விழுந்த உடனே அவனுக்குக் காத்திருப்பது நெருப்பு தான். நெருப்பில் வாட்டப்பட்டு அந்த ராக்ஷசர்கள் அவனைப் பக்ஷணம் செய்யப் போகின்றனர்.  அவனுடைய உயர்ந்த அபிலாஷைகள் அனைத்துக்கும் ஒரு அவமானகரமான முடிவு ஏற்படப் போகிறது. அவ்வப்போது பசியிலும், தாகத்திலும் களைத்த உத்தவன் ஒரு மயக்கமான நிலைக்குத் தள்ளப் பட்டு மயக்கமா, தூக்கமா, விழிப்பா என அறிய முடியாததொரு நிலையில் இருந்தான்.  நம்பிக்கைகள் அனைத்தும் போய்விட்டன.  பொய்த்துவிட்டன.  மூட்டுக்கு மூட்டு வலி தாங்கவில்லை.  நாமே கீழே விழுந்து இது அனைத்துக்கும் ஒரு முடிவு கட்டிவிடலாமா என உத்தவன் யோசித்தான்.  அவனால் இந்தக் காத்திருத்தலைத் தாங்க முடியவில்லை.  எந்த நேரம் எது நடக்குமோ என ஒவ்வொரு கணமும் பயந்து கொண்டு மேலே அமர்ந்திருப்பதை விட ஒரு வழியாகக் கீழே இறங்கினால் இவை அனைத்துக்கும் ஒரு முடிவு ஏற்படும்.  தெரிந்த முடிவு தானே!  நண்பகல் ஆகி விட்டது.  மரக்கிளைகளின் இலைகள் வழியே ஊடுருவிய சூரியக் கிரணங்கள் சுட்டுப்பொசுக்கின. உத்தவன் வாய் வெப்பத்தாலும், இரண்டு நாட்களாகத் தண்ணீர் குடிக்காததாலும் உலர்ந்து போய் விட்டது. அவன் நாக்கு ஒட்டி உலர்ந்து போய் மேலண்ணத்தில் ஒட்டிக் கொண்டுவிட்டது.  உடலெல்லாம் நெருப்பாக எரிந்தது.  தண்ணீர், தண்ணீர், ஒரு சொட்டு நீர் கிடைத்தால் கூடப் போதும்.  நாக்குக்குக் கொஞ்சமானும் இதமாக இருக்கும்.  நீர்! எங்கே கிடைக்கும்!

கண்ணா, வாசுதேவ கிருஷ்ணா, என்னைக் கைவிட்டுவிட்டாயா?  இல்லை, நீ கைவிட மாட்டாய்! இது என் விதி! இதோ என் கடைசிப் பிரார்த்தனை! கடைசியாக உன்னிடம் விடைபெற்றுக் கொள்கிறேன் அப்பா.
“ஹே கிருஷ்ணா கோவிந்தா ஹரே முராரே
ஹே நாதா நாராயணா வாசுதேவா
கிருஷ்ணா, என் கிருஷ்ணா, என் இனிய நண்பா, என் அருமைச் சகோதரா,  நீ எனக்கு இட்ட முக்கியமான பணியின் நிமித்தமாக வந்த நான் அதை முடிக்காமல் இறந்தாலும், தைரியமாக இறப்பை எதிர்கொண்டேன் என்ற திருப்தி எனக்கு இருக்கிறது அப்பா.  ஆம், உன் விருப்பம் எனக்கு நீ இட்ட கட்டளையாக எண்ணியே நான் செயல்படுகிறேன். என் வாழ்நாளில் நீ எப்போதெல்லாம் உன் விருப்பத்தை என்னிடம் சொல்கிறாயோ அவற்றை உன் கட்டளையாகச் சிரமேற்கொண்டு நிறைவேற்றி வருவதை என் கடமையாகவே கொண்டிருந்தேன்.  இப்போதும் அப்படியே நினைத்தேன்.  ஆனால் கிருஷ்ணா, இப்போது என்னால் அதை நிறைவேற்ற முடியவில்லையே! கிருஷ்ணா, கிருஷ்ணா, என் வாழ்நாள் முழுதும், நான் உன்னைத் தவிர வேறு எவரையும் எப்போதும் ஒரு கணம் கூட நினைத்தது இல்லை.  அப்படியே இந்தக் கடைசிக் கணங்களிலும் உன்னைத் தான் நினைத்துக் கொண்டிருக்கிறேன்.  ஆனால் கிருஷ்ணா, உனக்கு இது தெரியுமா?  நீ அறிவாயா? நான் என்னுடைய கடைசிக் கணங்களில் இருக்கிறேன் என்பதை நீ உணர்வாயா?

உத்தவன் அப்படியே தூங்கிவிட்டான்.  விழித்தெழுந்த உத்தவன் மாலை ஆகி இருப்பதை உணர்ந்தான்.  ஓரிரு ராக்ஷசர்களைத் தவிர மற்றவர் அனைவரும் இன்னும் விழிக்கவில்லை தூங்கிக் கொண்டிருக்கின்றனர் என்பதையும் கண்டான். அவர்களும் அருகிலிருந்த ஒரு ஊற்றுக்குச் சென்று நீர் அருந்திவிட்டு மீண்டும் தூங்கக் கண்டான்.  காடும் இரவுக்குத் தயாரானது போல் சற்று நேரம் சுறுசுறுப்பாக மிருகங்கள் அங்குமிங்கும் நடமாடுவதும், பறவைகள் கூடுகளுக்குத் திரும்பும் கீச் கீச் சப்தங்களோடும் காணப்பட்டது.  விரைவில் எங்கும் நிசப்தம்.  சந்திரன் உதயம் ஆக அதன் இனிமையான குளுமையான கிரணங்கள் பால் போல் ஒளியைப் பொழிந்தது.  உத்தவனையும் நிலவொளி குளிப்பாட்டியது.  ராக்ஷசர்கள் எழுந்து கொண்டாலும் அங்குமிங்கும் சுற்றித் திரிந்துவிட்டு மீண்டும் படுத்துவிட்டனர். பசியாலும், தாகத்தாலும் களைத்த உத்தவனுக்கு உடலின் சக்தியெல்லாம் போய்விட்டதுபோல் உணர்ந்தான்.  முடியாது;  இனி தன்னால் தாக்குப் பிடிக்க இயலாது. தலை சுற்றியது அவனுக்கு.  பின்னந்தலை பயங்கரமாக வலித்தது. மூட்டுக்கள் மரத்துப் போய் உணர்வற்றுவிட்டதோ என்னும்படி விறைப்பாக ஆகிவிட்டன. கீழே இறங்க வேண்டியது தான்.  நான் இறந்து போகும் நேரம் நெருங்கிவிட்டது.  இனி என்ன?



Monday, July 15, 2013

உத்தவன் பிழைப்பானா????

மெல்ல மெல்ல விடிய ஆரம்பித்தது. ராக்ஷசர்கள் தங்களுக்குள்ளாக மெதுவாகப் பேசிக் கொண்டார்கள்.  தற்சமயத்துக்கு அவர்கள் உத்தவனைப்பயமுறுத்தும் எண்ணத்தை விட்டுவிட்டார்கள் என்றே தோன்றியது.  நான்கு ராக்ஷசர்கள் அந்த மரத்தினடியில் காவலுக்கு அமர்ந்து கொள்ள மற்றவர்கள் தாங்கள் சிறைப் பிடித்துக் கொண்டு வந்திருந்த கைதிகளை, காட்டில் சற்று தூரத்தில் காணப்பட்டிருந்த வெட்டவெளிக்கு அழைத்துச் சென்றனர்.  அந்த அரைகுறையான விடியல் வெளிச்சத்தில் உத்தவன் ராக்ஷசர்களை நன்கு கவனித்தான்.  முன் பக்கம் நீட்டிக் கொண்டிருந்த பற்களும், செக்கச் சிவந்த  மரச்சில்லுகள் உதடுகளில் செருகப்பட்டிருப்பதையும் அந்தச் சிவந்த நிறத்தின் மூலம் அவர்கள் ரத்ததைக் குடித்துவிடுவார்களோ என்னும் அச்சம் தோன்றுவதையும் அவனால் மறைக்க முடியவில்லை.  மூக்கின் இருபக்கங்களிலும், முகத்திலும் காணப்பட்ட இறகுகள் அவர்களுக்கு ஒரு அமாநுஷ்யமான்ன தோற்றத்தைக் கொடுத்துக் கொண்டிருந்தது.  தலையைச் சுற்றிலும் இந்த இறகுகளே கிரீடத்தைப் போல் அலங்கரிக்கப்பட்டிருந்ததோடு அல்லாமல் முகத்திலும் சிவப்பும், வெள்ளயுமாக வர்ணம் தீட்டிக் கொண்டிருந்தனர். கன்னங்கறுக்கக் காணப்பட்ட நகங்கள் மிகக் கூர்மையாகக் காணப்பட்டன.  நிகும்பனுக்கும் நகங்கள் கூர்மையாக இருந்தாலும் இவை இன்னமும் அதிகமாத் தீட்டப்பட்டவையாகத் தோன்றின.  அவர்கள் கிட்டத்தட்ட நிர்வாணமாக இருந்தனர்.  எலும்புகளை மாலையாகக் கோர்த்து உடலில் ஆங்காங்கே அணிந்திருந்தனர். அவர்களின் ஈட்டிகளும், கோடரிகளும் கூரிய கல்முனை கொண்டவையாகத் தோன்றின.


சில ராக்ஷசர்கள் சிறைப்பிடித்து வந்த அந்தக் கைதிகளை மரத்தோடு சேர்த்துக் கட்டிவிட்டு ஏதோ உணவை அளித்து அவர்களை வற்புறுத்திச் சாப்பிடச் செய்தனர்.  அவர்கள் பயத்திலேயே அதை உண்டதும் நன்கு புரிந்தது.  மற்றவர்கள் ஆங்காங்கே சுள்ளிகளையும், மரக்கிளைகளையும் கொண்டு வந்து ஒரு பெரிய நெருப்பு மூட்டினார்கள்.  எரியும் நெருப்பில் கற்களைத் தூக்கிப்போட்டுவிட்டு அதைச் சுற்றி வந்து நடனம் ஆடினார்கள்.  கற்கள் நெருப்பில் சூடு ஏறி செக்கச் சிவந்த நிறத்தைப் பெற்று ஒளி வீசிற்று. அதைக் கண்டதும், அந்தக் கைதிகளைக் கட்டவிழ்த்துவிட்டு, ஈட்டி முனையில் அவர்களைப் பயமுறுத்தி, கீழே அமர வைத்து மரக்கிளைகளினால் கயிறு போல் தயாரித்து அவர்களின் கை, கால்களைக் கட்டினார்கள்.  பின்னர் அந்த ராக்ஷசர்கள் போர்க் கூக்குரல் இட்டுக் கொண்டு அந்தக் கைதிகளைச் சுற்றி வந்து நாட்டியம் ஆடிக் கொண்டே, சூடாக இருக்கும் அந்தக் கற்களின் மேல் கைதிகளை அமரச் செய்தனர்.  கைதிகள் பரிதாபமாகக் கத்திக் கொண்டு அழுது கொண்டு இருக்கையில் அவர்கள் அதைக் கவனிக்காமலே தங்கள் காரியத்திலேயே கண்ணாக அவர்கள் மேல் மணலை வாரி இறைத்தனர். கைதிகளின் கூக்குரல் காற்றிலே கலந்தன.  சற்று நேரத்தில் அவர்களின் கூக்குரலின் ஒலி வேகம் குறைய ஆரம்பித்துப் பின்னர் மெல்ல மெல்ல முனகலாக மாறி, அதுவும் ஈனமாகக் கேட்டு வந்தது  சற்று நேரத்தில் சுத்தமாக நின்றே போனது.  தன்னையும் அறியாமல் உத்தவன் அவர்கள் செய்வதை ஓர் ஆர்வத்தோடு பார்த்து வந்தவனுக்கு இது அதிர்ச்சியைக் கொடுத்தது.


நெருப்பை மூட்டி அவர்கள் செய்தவற்றை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்த உத்தவனுக்குப் பசியோ, தாகமோ எடுக்கவே இல்லை.  நேரம் சென்றதே தெரியவில்லை அவனுக்கு.  ராக்ஷசர்கள் அந்த இரு கைதிகளும் வறுக்கப்பட்ட நெருப்பைச் சுற்றி ஆடிக் கொண்டே இருந்தனர்.  அவ்வப்போது கூக்குரல் கொடுத்துக் கொண்டிருந்தனர்.  அவர்கள் யாரையோ திட்டிக் கொண்டிருப்பதாக உத்தவனுக்குத் தோன்றும்.  சூரியன் மறையும் நேரம் வந்துவிட்டது.  உத்தவன் அனைத்து நம்பிக்கையையும் இழந்து விட்டான். அவனால் இன்னும் அதிக நேரம் அதே நிலையில் இருக்க இயலாது.  கீழே இறங்கவில்லை என்றாலும் விழுவதற்கு வாய்ப்பு இருக்கிறது.  கீழே விழுந்தான் எனில் அந்த இருவரைப் போல அவனும் நெருப்பில் வாட்டப் படவேண்டியவன் தான்.  அந்த உடல்கள் நெருப்பில் நன்கு வெந்து விட்டது என்பது தெரிந்ததும் அனைவரும் நெருப்பைச் சுற்றி அமர்ந்த வண்ணம் அந்த உடல்களை வெளியே எடுத்தனர்.  அந்த நெருப்பிலிருந்து கிடைத்த சாம்பலை நெற்றியில் மிகவும் பக்தியோடு பூசிக் கொண்டனர்..  உடல்களுக்கும் நெற்றியில் சாம்பலைப் பூசிவிட்டுச் சற்றுத் தூரத்திலிருந்த ஒரு கற்கோயிலுக்கு எதிரே அந்த உடல்களை வைத்து அவர்களின் தெய்வத்துக்கு அர்ப்பணம் செய்தனர்.  அவர்களில் தலைவர் போல் காணப்பட்ட இருவர் இந்தச் சடங்கை முன்னின்று செய்தனர்.

படையல் முடிந்ததும், மீண்டும் உற்சாக நடனம் ஆரம்பித்தது.  இம்முறை பறைகளும், பேரிகைகளும் கூடச் சேர்ந்து முழங்கின.  தங்கள் ஈட்டிகளையும், கோடரிகளையும் உற்சாகமாய் ஆட்டிக் கொண்டு ஆனந்த நடனம் செய்தனர்.  அந்த இரு ராக்ஷச ஆசாரியர்களும் உடலை வெட்டிப் பங்கு போடுவதில் முனைந்திருந்தனர்.  கத்திக்குப் பதிலாகக் கூர்மையான மூங்கில் கொம்புகளையே பயன்படுத்தினார்கள்.  பின்னர் அனைவருக்கும் பங்கிட்டுக் கொடுத்துவிட்டு உற்சாகம் கொப்பளிக்க உண்டனர்.  மூச்சுவிடக் கூட மறந்த உத்தவன் பயத்துடன் இதைக் கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தான். அவர்களின் இந்தப்பயங்கரமான  விருந்து  முடிய நள்ளிரவாகி விட்டது. அதன் பின்னர் ஒவ்வொருவராக அவர்கள் கீழே அப்படியே படுத்துத் தூங்க ஆரம்பித்தனர்.  அவர்கள் அனைவரும் நன்கு ஆழ்ந்து உறங்க கிட்டத்தட்ட விடியும் நேரம் ஆகிவிட்டது.  அவர்கள் உண்ட பெரு விருந்தின் மயக்கம் விடிந்த பிறகும் நீடித்தது.


இந்த மாபெரும் விருந்தின் காரணமாகவும், விடாமல் நடனம் ஆடிய களைப்பிலும் அனைவரும் அயர்ந்து உறங்கினார்கள். சிலரின் குறட்டைச் சப்தம் இடியோசை போல் கேட்டது.  வாயைத் திறந்து கொண்டு தூங்கிய சிலர் பார்க்கவே பயங்கரமாக இருந்தனர்.  ஒரு சிலர் நல்ல தூக்கமில்லாமல் அவஸ்தைப் பட்டுக் கொண்டும் இருந்தனர்.  மேலே மரக்கிளையில் அமர்ந்திருந்த உத்தவன் தன்னைத் தானே ஏற்கெனவே கட்டிக் கொண்டிருந்தான்.  என்றாலும் இப்போது தலை சுற்றிக் கீழே விழுந்துவிடுவான் போல் பயந்தான்.  பசி, தாகம், அவன் பார்த்த பயங்கரக் காட்சிகள், மனித உடல் எரிந்த வாசனை, மனித உடலின் மாமிசத்தின் வாசனை அனைத்தும் சேர்ந்து அவன் தைரியத்தைச் சுக்குச் சுக்காக ஆக்கி விட்டிருந்தது.  அத்தனை நேரமாய் அவனுள்ளே இருந்த அவன் மன உறுதியை இந்நிகழ்ச்சிகள் குலைக்க ஆரம்பித்துவிட்டன. அனைத்து நம்பிக்கைகளையும் அவன் இழந்துவிட்டான்.  அவன் மனம் உடைந்து விட்டது.  மரக்கிளைகளைப் பிடித்துக் கொண்டிருந்த அவன் கைகள் தளர்ந்துவிட்டன போல் தோன்றியது.  கால்கள் நடுங்கின.  கண்கள் கண்ணீரைப் பெருக்கின.  தன்னையும் அறியாமல் கீழே விழுந்துவிடுவோம்.  உயிருக்கு உத்தரவாதமில்லை என்றே எண்ணினான் உத்தவன். அப்போது அவனையும் அறியாமல் அவன் உதடுகள் ஏதோ முணுமுணுத்தன.

“ஹே கிருஷ்ண கோவிந்த ஹரே முராரே
ஹே நாதா, நாராயணா, வாசுதேவா!”



Friday, July 12, 2013

ராக்ஷசர்களின் முற்றுகை!

அப்போது அங்கிருந்த நிசப்தத்தைக் கிழித்துக் கொண்டு “க்ரீச்” என்றதொரு ஓலம் கேட்டது. அது மனிதக் குரலா, விலங்கின் குரலா, பறவையின் குரலா என இனம் காண முடியவில்லை. அதைக் கேட்டதுமே நிகும்பன் தாமதிக்கவே இல்லை. தன் கால்களாலும், கைகளாலும் சத்தமின்றித் தவழ்ந்து சென்று சற்று தூரத்தில் மறைந்திருந்த நீண்ட அதே சமயம் அடர்த்தியான புற்களுக்கிடையில் காணப்பட்டதொரு புதரின் மறைவில் அதன் கீழே நழுவிச் சென்று மறைந்து கொண்டான். கண நேரத்திற்கு உத்தவன் மனதில் நிகும்பன் தன்னை ஆசை காட்டி அழைத்து வந்து மோசம் செய்கிறானோ என்ற எண்ணமே மேலிட்டது. தன்னை மரணத்தின் விளிம்பிற்கு அழைத்துச் செல்கிறானோ என சம்சயப் பட்டான்.   ஆனால் அந்தச் சின்னஞ்சிறு ராக்ஷசச் சிறுவன் அவன் மேல் காட்டிய அன்பு பொய்யல்ல.  அத்தகையதொரு அன்பு காட்டுபவன் ஏமாற்றவும் மாட்டான்.  அந்தச் சிறுவனக் கொடூரமானவன் என நினைப்பதே தவறு. ஆகவே உத்தவன், தன்னுடைய அம்புறாத்தூணியை முதுகில் நன்றாக இழுத்துக் கட்டிக் கொண்டு அந்தச் சிறுவன் சொன்ன புத்திமதியின் பிரகாரம் அருகிலிருந்த பெரிய, உயரமான மரத்தின் அடர்ந்த கிளைகளில் மறைந்து கொள்ள வேண்டி ஏற ஆரம்பித்தான்.


அது எவ்வளவு நன்மையைத் தந்தது என்பதை உத்தவன் உடனே உணர்ந்தான்.  மரத்தின் அடர்ந்த மேற்கிளைகளில் ஒன்றின் உள்ளே சென்று அவன் மறைந்தது தான் தாமதம், சில நிழல் உருவங்கள் மெல்ல மெல்ல நகர்ந்து வந்து அந்த மரத்தினடியில் வந்ததையும், அங்கேயே அமர்ந்ததையும் பார்த்தான்.  அவன் தைரியத்தை உலுக்கி அவன் மனதைக் கலங்கடிக்கும்படியான பயங்கரமானதொரு ஊளைச் சப்தம் இல்லை இல்லை அலறல் அப்போது கேட்டது.  இது ஏதோ காட்டு மிருகத்தின் ஊளை அல்ல; பிணம் தின்னிப்பேய்கள் ஊளையிடும் என்பார்களே அது போல் அல்லவோ இருக்கிறது! உத்தவன் தலையோடு கால் நடுங்கினான்.  மரத்திலிருந்து கீழே விழுந்துவிடுவானோ என அஞ்சினான்.  தன்னையும் அறியாமல் மரத்தில் தானிருந்த இடத்தில் பற்றிக் கொண்டிருந்த கிளையைக் கைநழுவ விட்டுவிடுவான் போல இருந்தது.  ஆனால் உடனே சுதாரித்துக் கொண்ட உத்தவன், நிகும்பனின் புத்திமதியை நினைவு கூர்ந்தான். “என்ன நடந்தாலும் கீழே மட்டும் இறங்கிவிடாதே!” இது தான் அவன் சொன்னது. சத்தமின்றி மெல்ல இன்னும் மேலே ஏறிய உத்தவன் வசதியானதொரு கிளையைத் தேர்ந்தெடுத்து அமர்ந்து கொண்டான்.


உத்தவன் நன்கு கூர்ந்து கவனித்ததில் கீழே பத்துப் பதினைந்து ராக்ஷசர்கள் இருப்பதாய்த் தோன்றியது.  ராக்ஷசர்கள் தங்களோடு  இரண்டு நபர்களைச் சிறைப் பிடித்தும் வந்திருக்க வேண்டும்.  நிலவொளியில் ராக்ஷசர்களின் ஆயுதங்கள் பிரகாசித்ததையும் உத்தவன் கண்டான். ஈட்டிகளும், கோடரிகளும் ஏந்தி இருந்தனர்.  மரத்தினடியில் இருந்த அந்த ராக்ஷசர்கள் தங்கள் ஓலத்தை நிறுத்தாமல் தொடர்ந்து கூக்குரலிட்டுக் கொண்டே இருந்தனர்.  கேட்கவே பயங்கரமாக இருந்தது.  சிலர் வெறி பிடித்தது போல் ஆடவும் தொடங்கினார்கள்.  அவர்களின் இந்தச் செயல்களினால் உத்தவன் தான் இருந்த மரக்கிளையிலிருந்து பயத்திலேயே கீழே விழுந்துவிடுவானோ எனப் பயந்து  கொண்டிருந்தான்.  சற்று நேரம் இவ்வாறு ஆடிப் பாடிக் கூக்குரலிட்டுக் கொண்டிருந்த ராக்ஷசர்கள் களைப்பினாலோ, அல்லது அவர்களுக்கே அலுப்புத் தோன்றியதாலோ எல்லாவற்றையும் நிறுத்திவிட்டுப் படுத்து ஓய்வு எடுக்க ஆரம்பித்தனர். சிறைப்பிடித்து வந்தவர்களைக் கட்டியிருந்த கயிறுகளின் மற்றொரு முனை, அவர்களைப் பிடித்து வந்த ராக்ஷசர்களின் கால்களோடு சேர்த்துக் கட்டப்பட்டிருந்தது.  ஆகையால் சிறைப்பிடித்து வந்த இருவரும் தங்களைப் பிடித்த ராக்ஷசர்களை எழுப்பாமல் தப்ப இயலாது.


மரக்கிளையில் உயிருக்குப்பயந்து ஒளிந்து கொண்டிருந்த உத்தவன் தன்னுடைய மரணத்திற்காகக் கவலைப்படக்கூடாது என்ற முடிவுக்கு வந்துவிட்டான். அந்த ராக்ஷசர்கள் தூங்குகையில் மெல்ல, மெல்ல மேலே உள்ள கிளைக்கு ஏறினான். எவ்வளவு தான் கவனமாக சத்தமே இல்லாமல் ஏறினாலும், மரத்தின் இலைகளின் மர்மர சப்தத்தை அவனால் நிறுத்த இயலவில்லை.  அந்த நிசப்தமான வேளையில் திடீரெனக் கேட்ட இந்தச் சின்னஞ்சிறு சப்தத்தில் விழித்து எழுந்த அந்த ராக்ஷசர்கள் கோபத்தில் அந்தத் திக்கைப் பார்த்து ஓலமிட்டு அலறினார்கள்.  எப்படியோ மேற்கிளைக்கு ஏறிவிட்ட உத்தவன் தான் பயத்தில் கீழே விழுந்துவிடாமல் இருக்கத் தன் மேல் உத்தரீயத்தை எடுத்துப் பக்கத்துக்கிளையோடு சேர்த்துத் தன்னைத் தானே கட்டிக் கொண்டான். நேரம் மெல்ல மெல்லக் கடந்தது. கீழ்வானில் வெள்ளி முளைத்தது.  உத்தவன் இருந்த கிளை அவனின் உடல் எடையை இனிமேலும் தன்னால் தாங்க முடியாது எனப் பெருமூச்சு விட்டது.  சடசடவென முறிய ஆரம்பித்தது.  சப்தம் கேட்ட ராக்ஷசர்கள் எழுந்து கூக்குரலிட்டுக் கொண்டே மரத்தைச் சுற்றிச் சுற்றி வந்து மேலேயும், கீழேயும் தேடினார்கள். 


மரக்கிளைகளுக்கு இடையே தேடினார்கள். அந்தக் கூக்குரலைக் கேட்கவே முடியவில்லை.  ஆனால் அவர்கள் நிறுத்தும்வழியையும் காணோம்.  உத்தவனுக்குத் தான் கீழே விழுந்துவிடாமல் பார்த்துக் கொள்ளவே முடியவில்லை.  எப்படியோ சமாளித்துக் கொண்டு மரக்கிளையின் இன்னொரு பாகத்துக்குத் தாவினான்.  மரத்தின் மேலே யாரோ இருப்பது ராக்ஷசர்களுக்கு நிச்சயம் ஆகிவிட்டது.  ஆனால் அவன் கீழே விழவில்லை என்றதும் அந்த ராக்ஷசர்கள் அவர்களில் இருவரை மரத்தின் மேலேறிப் பார்க்கச் சொன்னார்கள்.  இரு ராக்ஷசர்கள் மரத்தின் மேலே ஏறினார்கள்.  உத்தவன் தன் அம்புறாத் தூணியில் மிச்சம் இருந்த நான்கு அம்புகளில் ஒன்றை எடுத்து மேலே ஏறும் ராக்ஷசன் மேல் குறிபார்த்தான். அம்பை அவன் கைகள் தன்னிச்சையாக எய்தியது.  உத்தவன் குறி தப்பவில்லை.  அது முன்னால் வந்து கொண்டிருந்த ராக்ஷசனைத் தாக்க அவன் அலறிக் கொண்டு கீழே விழுந்தான்.  அவன் உடலில் இருந்து ரத்தம் பெருகியது.  இதைக் கண்ட மற்றவன் மரத்திலிருந்து கீழே இறங்கிவிட்டான்.



Thursday, July 11, 2013

உத்தவனை ஆபத்து நெருங்கி விட்டது!

கொஞ்சம் போல் நொண்டியதைத் தவிர நிகும்பன் முற்றிலும் குணமடைந்துவிட்டான்.  மீண்டும் பழைய ஆரோக்கியத்தை விரைவில் பெற்றுவிடுவான்.  ராக்ஷசர்களின் பூமியை இந்த உலகின் மற்றப் பகுதிகள் பிரித்த எல்லையிலிருந்து அவனே வழிகாட்டிச் சென்றான்.  செல்லும் வழியெல்லாம் பாறாங்கற்கள், புல், பூண்டு கூட சில இடங்களில் முளைக்கவில்லை.  முளைக்கும்படியான நிலமே இல்லாமல் எல்லாமே செங்குத்தான பாறைகளாகவும், வட்டப்பாறைகளாவுமே காணப்பட்டன.  உலகம் தோன்றிய நாளிலிருந்து இங்கே வன வளமே தோன்றி இருக்காது என உத்தவன் எண்ணிக் கொண்டான். அவற்றில் பயணம் செய்வதும் கடினமான ஒன்றாகவே இருந்தது.  சில சமயம் அது பாதையா, எங்கே செல்கிறது என்பதைக் கூட அறியமுடியவில்லை.  பல இடங்களில் பாறைகளின் மேல் ஏறியும் சில இடங்களில் பாறைகளைத் தாண்டியுமே செல்ல வேண்டி இருந்தது.  ஆனால் நிகும்பனுக்கு இது கடினமாகத் தெரியவில்லை. மிக எளிதாகப் பாறைகளைக் கடந்து சென்றான்.  எல்லையில் காணப்பட்ட கூர்மையான பாறைக்கற்களைக் கடப்பதும் கடினமாகவே இருந்தது.  செங்குத்து அதிகமான அந்தப் பாறைகளின் மேல் காலை வைத்துத் தாண்டுகையில் உள்ளூர அச்சம் தோன்றியது.  மிகக் குறுகிய அந்தப்பாதையைத் தாண்டும்போது பக்கவாட்டில் தோன்றிய மாபெரும் பள்ளத்தாக்கைக் கண்ட உத்தவன் அடி வயிற்றில் சில்லிட்டது.  ஆனால் நிகும்பனோ சுலபமாகச் சென்றதோடு அல்லாமல் உத்தவன் தவிப்புடன் மேலே ஏறுவதைப் பார்த்துப் பெரிதாகச் சிரித்தான்.  அதோடு உத்தவன் ஏறுகையில் மல்லாக்கவோ, குப்புறவோ தான் விழுந்துவிடாமல் இருக்கக் குனிந்த வண்ணம் இரு கைகளையும் மேல் பாறையின் ஊன்றிக் கொண்டே கால்களை அடுத்த பாறையில் எடுத்து வைத்தான். இதைப் பார்த்த நிகும்பனுக்குச் சிரிப்புத் தாங்கவில்லை.


நடுப்பகல் வேளையில் சூரியன் சுட்டெரிக்கப் பாறைகள் அனைத்தும் கால் வைக்க முடியாமல் தீயில் இடப்பட்டது போல் சுட்டது.  அந்தச் சூட்டில் தான் நடக்கவே கஷ்டப் படுகையில் உத்தவனுக்குத் தன் ஆயுதங்களையும் தூக்கிச் சுமந்து செல்ல முடியவில்லை.  ஏற்கெனவே தன் அம்புறாத் தூணியிலிருந்து பல அம்புகளை எடுத்து எறிந்துவிட்டான்.  இப்போது வில்லையும் தூக்கி எறிந்துவிட்டு அம்பு ஒன்றைக் கைப்பிடியாகப் பயன்படுத்தியவண்ணம் நடக்க ஆரம்பித்தான். மதியத்துக்குள் அந்தக் கற்பாறைகளால் ஆன மலையைக் கடந்துவிட்டார்கள்.  இப்போது மரங்கள் அடர்ந்திருந்த ஒரு காட்டைச் சமீபித்திருந்தார்கள்.  நிகும்பன் சொன்னதிலிருந்து காட்டைத் தாண்டி ராக்ஷசர்களின் நகரம் வருகிறது என உத்தவன் புரிந்து கொண்டான்.  சூரிய அஸ்தமனத்தின் போது அவர்கள் அந்தக் காட்டை அடைந்துவிட்டனர்.  நிகும்பன் மிகுந்த உற்சாகத்தில் இருந்தான்.  இது அவன் தாயகம்; அவன் வீடு இருக்கும் இடம்.  அவன் சொந்த நாடு; சொந்த மனிதர்கள் வசிக்கும் இடம். அவன் இஷ்டத்துக்கு அந்தக் காட்டில் கிடைத்த சிறு மிருகங்களை வேட்டையாடி உண்டான்.  உத்தவனைக் கூட மறந்துவிட்டான் அப்போது. பின்னர் ஒரு மரத்தின் நிழலில் இருவருமாக அருகருகே படுத்து உறங்க ஆரம்பித்தனர். நடு இரவு.  சந்திரன் ஜாஜ்வல்யமாகப் பிராகாசித்துக் கொண்டிருந்தான்.  அந்த உயர்ந்த மலைக்காட்டிலே கைகளால் தொட்டு விடும் தூரத்தில் சந்திரன் இருப்பதாகத் தோன்றியது. நிலவொளி எங்கும் பரவி இருந்தது.  திடீரென விழித்த நிகும்பன் தன் மூக்கைச் சுளித்த வண்ணம் ஏதோ மோப்பம் பிடிப்பது போல் உற்றுக் கவனித்துக் கொண்டு இருந்தான்.  மரங்களின் மேற்கிளைகளில் காற்றின் சப்தம், ஒரு சமயம், ‘மர்மர’ என ரகசியமாகவும் சில சமயங்களில் வேகமாக, “விர்ர்ர்ர்ர்ர்ர்” எனவும் சில சமயம் நிதானமாக, ‘சலசல’வென்றும் கேட்டுக் கொண்டிருந்தது.  சரசரவென்று இலைகள் ஒன்றோடு ஒன்று மோதிக்கொள்ளும் சப்தமும் நிலவொளியும் சேர்ந்து ஏதோ செய்தியை நிகும்பனுக்குத் தெரிவித்தது போலும்.


உத்தவனை எழுப்பினான் நிகும்பன்.  அவன் கைகளைப் பிடித்து இழுத்து எழுப்பிவிட்டான். அதே சமயம் தன் இன்னொரு கைவிரல்களால், தென் திசையை நோக்கிச் சுட்டி ஏதோ எச்சரிக்கையும் செய்தான்.  நல்ல தூக்கத்திலிருந்து உத்தவன் தன் கண்களைத் தேய்த்துக் கொண்டான்.  என்னவென்று கவனித்தான்;  ஆம், நிகும்பன் ஏதோ சொல்கிறானே, அது என்ன?? ஆஹா, அவன் சொல்வது சரியே.  தூரத்தில் வெகு தூரத்தில் எங்கோ பறைகள் கொட்டும் சப்தமோ, அல்லது பேரிகைகள் முழங்கும் முழக்கமோ கேட்டது. ஆனால், ஆனால், இது என்ன? இந்த சப்தத்தைக் கேட்டுவிட்டு நிகும்பன் ஏன் அஞ்ச வேண்டும்?  உத்தவனுக்குப் புரியவில்லை.  என்ன இது?  ஏன் பயப்படுகிறாய்? என்று நிகும்பனைக் கேட்டான் உத்தவன். “ராக்ஷசர்கள்” மெதுவாக, மிக மிக மெதுவாக உத்தவனுக்கு மட்டுமே கேட்கக் கூடிய குரலில் சொன்ன நிகும்பன் அவனை அங்கிருந்த ஒரு மோசமான பாதையின் பக்கம் தள்ளிக் கொண்டு போய் மறைந்தான்.  மேலே நடக்கவும் யத்தனித்தான். அந்தப் பாதை முட்களும், செடிகளும், கொடிகளுமாக நிரம்பி இருந்தது.  உத்தவனால் அந்த முட்களின் மேல் காலை வைத்து நடக்க முடியவில்லை.  ஆகவே  உத்தவன் அவனைத் தொடர மறுத்தான்.  உற்சாகக் கூச்சலும், பறைகளின் முழக்கமும் நெருங்கி வந்து கொண்டிருந்தது. 


“ராக்ஷசர்கள், ராக்ஷசர்கள்,” உத்தவனின் மறுப்பாலோ என்னவோ சீற்றமடைந்த குரலில், அதே சமயம் மிக ரகசியமாகக் கூறினான் நிகும்பன். “திரும்பிப் போய்ப் பார்க்கலாம், வா!” என்று அழைத்தான் உத்தவன்.  “அதெல்லாம் நடக்காது.  அவர்கள் உன்னைத் தின்றுவிடுவார்கள்.” என்றான் நிகும்பன். அப்போது திடீரென பறைகளின் முழக்கமும், மனிதர்களின் கூச்சலும் நின்றது.  மனிதர்களின் தொண்டையிலிருந்து எழும்பிய குரல் அவர்கள் தொண்டையிலேயே உறைந்துவிட்டதோ என்னும்படியான நிசப்தம் நிலவியது.  மொத்தக் காடும் அமைதியடைந்தது.  ஒரு சில மரங்களின் சலசல வென்ற சப்தத்தைத் தவிர இரவுப் பக்ஷிகளின் கூக்குரல் கூட இல்லாமல் அமைதியாகக் காணப்பட்டது அந்தக் காடு.  அவ்வப்போது எழுந்த தவளைகளின் கிராக், கிராக் என்ற சப்தம் உத்தவனையும், நிகும்பனையும் தூக்கி வாரிப் போட வைத்தது.  நிகும்பன் உத்தவனைப் பார்த்து, “அவர்கள் உன்னை மோப்பம் பிடித்துவிட்டார்கள் போல் தெரிகிறது.” என்றான் பயத்துடன்.  “அவர்கள் உன்னைப் பிடித்துவிடுவார்கள்.” என்றான்.  அவன் சொல்வது சரியே என்பது போல் அங்கே திடீரென, ‘சடசட’வென்ற ஓசையுடன் ஒரு பெரிய சப்தம் கேட்டது.  ஆனால், இது வேறு திசையிலிருந்து அல்லவோ வருகிறது?? உத்தவன் திகைத்தான். விரைவில் அவனுக்குப் புரிந்தது.  நிகும்பன் சொல்வது சரியே; ராக்ஷசர்கள் அவனை மோப்பம் பிடித்துவிட்டார்கள்.  இப்போது அவனைப் பிடிப்பதற்காக அரை வட்ட வடிவில் சூழ்ந்து கொண்டு அவனிருக்குமிடம் நோக்கி வருகின்றனர்.  அது தான் சப்தம் திசைகள் மாறிக் கேட்டது போலும்.  இப்போது எல்லாத் திசைகளிலிருந்தும் கேட்கிறது.  அவர்கள் நெருங்கி விட்டனர்.


உத்தவன் பற்களைக் கடித்துக் கொண்டான்.  அவன் கைகள் தன்னிச்சையாகத் தன் அம்புறாத் தூணிக்குச் சென்று அங்கிருந்து சக்தி வாய்ந்ததொரு அம்பை எடுத்தது.  வில் இல்லையே என யோசித்த வண்ணம் அவன் இருக்கையில் நிகும்பன் அவன் கைகளைத் தடுத்தான்.  “அவர்கள் உன்னைத் தின்றுவிடுவார்கள்.” என்று மீண்டும் ரகசியக் குரலில் சொன்ன வண்ணம் அருகே இருந்த ஒரு உயரமான மரத்தைக் காட்டியபடி அதன் அடர்ந்த கிளைகளில் மேலே போய் ஏறி ஒளிந்து கொள்ளவும் சொன்னான்.  “மேலே மரத்தில் ஏறி அதன் அடர்ந்த கிளைகளில் மறைந்து கொள்!’ என்றான் நிகும்பன்.



Monday, July 8, 2013

ராக்ஷசவர்த்தத்தை நோக்கி உத்தவன்!


“ஏன்? ஜைமினி நல்ல மருத்துவர். அவர் நன்றாகவே பார்த்துக் கொள்ளுவார் இவனை!” என்று வியாசர் பதிலளித்தார்.  “ஆனால், மதிப்புக்குரிய ஆசாரியரே, அந்த மஹாதேவன், ஈசன் என் உதவிக்கு வந்திருக்கிறான்.” உத்தவனின் மனம் வேகமாக யோசித்துக் கொண்டிருந்தது.  யோசனைகளுக்கு இடையே அவன் எப்படியோ இப்போதைக்கு அந்த இரு பெண்களின் பிடியிலிருந்து தப்பினாலும் தான் நிரந்தரமாய்த் தப்பவேண்டுமெனில் இங்கிருந்து ராக்ஷஸவர்த்தம் செல்வதே ஒரே வழி என நிச்சயம் செய்துவிட்டான்.  இதன் மூலம் அவன் உயிருக்குப்பாதுகாப்பு இல்லை எனினும் இந்த சங்கடத்தை விட அது எவ்வளவோ பரவாயில்லை. ஆனால் கார்க்கோடகனுக்கு உத்தவன் என்ன சொல்கிறான் என்ற ஆவல்! “எப்படிச் சொல்கிறாய், உன் உதவிக்குக் கடவுள் வந்திருப்பதாய்?” என்று உத்தவனைக் கேட்டான். 


“மாமா அவர்களே, ஐந்து சகோதரர்களும் உயிருடன் தான் இருக்கின்றனர்!” என்ற உத்தவன் தொடர்ந்து, “ஆகவே நான் இந்தப் பையனுடன் ராக்ஷஸவர்த்தம் சென்று அவர்களை அழைத்து வந்துவிடுகிறேன். கிருஷ்ணன் இங்கே வந்ததும், அவர்களை துவாரகை அழைத்துச் செல்வது குறித்து முடிவு செய்யலாம்.” என்றான். உத்தவனுக்குப் பைத்தியம் பிடித்துவிட்டதோ என அனைவ்வரும் அவனைத் திடுக்கிட்டுப் போய்ப் பார்த்தார்கள்.  “நீயா?  ராக்ஷஸவர்த்தம் செல்வதா?” கார்க்கோடகன் திகைப்பின் விளிம்பில் கேட்க, அவன் மனைவியான ரவிகாவோ உத்தவனை விடுவதாயில்லை. “அங்கே போய் உனக்கு ஏதேனும் ஆகிவிட்டால் என் பெண்களின் கதி என்னாவது?  நீ ராக்ஷஸவர்த்தம் செல்லவே கூடாது!” என்று தன் காரியத்திலேயே கண்ணாக இருந்தாள். ஆனால் உத்தவன் திட்டமாக, “நான் செல்லப் போகிறேன் மாமி அவர்களே!  நான் இங்கு வந்ததே அதற்காகத் தானே!” என்றான் உத்தவன்.  அவன் மனம் மகிழ்ச்சியில் கூத்தாடியது.  ராக்ஷஸவர்த்தம் சென்று ராக்ஷசர்களால் தான் சாப்பிடப்படுவது இந்தப் பெண்களை மணப்பதை விட மேல்.  அவன் மனம் மகிழ்ச்சி அடைந்தது.  வியாசரால் உத்தவன் நோக்கத்தைப் புரிந்து கொள்ள முடிந்தது.  ஐந்து சகோதரர்களையும், குந்தியையும் கண்டுபிடித்துக் காப்பாற்ற வேண்டும் அல்லது அந்த முயற்சியில் ராக்ஷசர்களால் கொல்லப்படவேண்டும்.  இந்த இரு சகோதரிகளிடமிருந்து தப்ப அவனுக்கு வேறு வழி இல்லை.  ஆகவே ராக்ஷஸவர்த்தம் செல்வதே மேல் எனத் தீர்மானித்துவிட்டான். 


“ஆஹா, அப்படியே செய் மகனே!  உன்னால் முடியும்!  அந்தப் பசுபதிநாதன் உன்னைக் காத்து அருளுவான்.  என் மக்களே! எவரும் கவலைப் படாதீர்கள்.  அவன் இங்கே இந்த வேலைக்காகவே அனுப்பப் பட்டான் அல்லவா! அந்தப் பசுபதி நாதன் பார்த்துக்கொள்ளுவான்.  ரவிகா தன் நெற்றியில் தன்னிரு கரங்களால் ஓங்கி அடித்துக் கொண்டாள்.  அப்போது அவள் கைகளில் தோள்பட்டை வரை அவள் அணிந்திருந்த வளையல்களின் “கலகல”வென்ற சப்தத்தில் கூட துக்கம் நிறைந்திருப்பதாகத் தோன்றியது.  அவள் மகள்கள் இருவரும் அதிர்ச்சியில் மயங்கிக் கீழே விழுந்துவிட்டார்கள். அவர்களுக்குள் நடந்த இந்த சம்பாஷணையைத் தீவிரமாகக் கேட்டுக் கொண்டிருந்த ஆர்யகன், சட்டெனத் திரும்பி ஆசாரியரைப்பார்த்தான்.  திடீரெனத் தோன்றிய மன எழுச்சியால் நடுங்கிய கிறீச்சென்ற குரலில், “நீங்கள் சொல்வது சரியே ஆசாரியரே!’ என்றான். திகைப்புடன் ஆர்யகனைப் பார்த்த அனைவரும் அவன் உடலே நடுங்கிக் கொண்டிருந்ததைக் கண்டனர்.  ஆஹா, பசுபதிநாதன் அவன் உடலில் ஆவிர்ப்பவித்திருக்கிறான்.  அவன் உதடுகள், கைகள் என அனைத்தும் நடுங்குகின்றன.  அவன் உதடுகளிலிருந்து இப்போது வரும் வார்த்தைகள் அவன் சொந்த வார்த்தைகள் அல்ல.  அந்தப் பசுபதிநாதன் அவன் உள்ளிருந்து அவனைப் பேச வைக்கிறான்.  நாகர்கள் அனைவரும் பக்தியோடு ஆர்யகனைப் பார்த்தனர்.


மிகுந்த வலியும், வேதனையும் அனுபவிப்பவனைப் போல் ஆர்யகன் தன் தலையை மெல்லத் தூக்கினான்.  அவன் கண்கள் அப்படியும் இப்படியுமாய் உருண்டன.  சற்று நேரம் இப்படிப் பார்த்துக் கொண்டிருந்த ஆர்யகன் மீண்டும் நிதானமடைந்தவன் போலக் காணப் பட்டான்.  ஒரு நிலைக்கு வந்துவிட்டான் என்பது புரிந்தது.  கண்கள் மின்னலெனப் பளிச்சிட, அதில் இப்போது தெரிந்த பாவம் தனியானதொரு அதிகாரத்தை அவன் பெற்றிருப்பதைக் காட்டியது.  குரலும் அவன் குரலாகத் தெரியவில்லை. வித்தியாசமான அதே சமயம் அழுத்தமான உறுதியான குரலில் கட்டளையிடும் தொனியில் வந்தன வார்த்தைகள்.  இல்லை;  இது ஆர்யகன் குரலே இல்லை.  உத்தவன் பிரமித்துப் போய்ப் பார்த்துக் கொண்டிருந்தான்.  “அவன் உடலில் ஓடுவது ஆர்யகன் ரத்தம்! அவன் சென்று வென்று நாகர்களின் பெருமையை நிலைநாட்டி அவர்கள் அச்சமில்லாதவர்கள் என்பதை நிரூபிப்பான்!” அனைவரும் வியப்புற்றுப் பார்த்துக் கொண்டிருக்கையிலேயே அவன் கண்கள் தாமாக மூடின. ஒரு நீண்ட பெருமூச்சுக் கேட்டது.  ஆஹா, பசுபதிநாதர் பேசி இருக்கிறார்.  உத்தவன் அவர்களிடமிருந்து விடைபெறுகையில் பாதுகாப்பு இல்லாதது போல் உணர்ந்தான். என்றாலும் இந்தத்தர்மசங்கடமான சூழ்நிலையில் இருந்து தான் தப்பியது அவனுக்கு மகிழ்ச்சியே!  சிகுரி நாகன் எல்லைக் கிராமம் ஆன லஹூரியாவுக்கு வந்து அவனுக்கு விடை கொடுத்தான்.  ஐந்து சகோதரர்கள் இருக்குமிடம் இப்போது உத்தவனுக்குத் தெரிந்துவிட்டது.  கிருஷ்ணன் அவனை நம்பி ஒப்படைத்த மிக முக்கியமானதொரு பணியை அவன் அநேகமாக நிறைவேற்றிவிட்டான். 


அதோடு மட்டுமில்லாமல் இரட்டைச் சகோதரிகள் தற்கொலை செய்து கொள்வதிலிருந்து காப்பாற்றப் பட்டுவிட்டார்கள். அவன் இங்கே இருந்து செல்வதற்கு இது சரியான சந்தர்ப்பம்.  அவன் இல்லாமல் அந்தப் பெண்கள் சிறிது நாட்களில் அவனுடன் தங்களுக்கு ஏற்பட்ட (அவர்கள் வரையிலும்) சோகமான அனுபவங்களை முற்றிலும் மறந்துவிட்டு விரைவில் வேறு கணவனையோ, கணவர்களையோ தேர்ந்தெடுத்துக்கொள்வார்கள்.


கொஞ்சம் அதிசயமாக இருந்தாலும் அந்த ராக்ஷஸச் சிறுவன் நிகும்பனுக்கு உத்தவனை மிகவும் பிடித்துவிட்டது.  அதற்குக் காரணம் அவன் பீமனின் சகோதரன் என்பதே.   அந்த ராக்ஷஸச் சிறுவனின் இருண்ட மனதில் பீமன் வலுவையும், பலத்தையும் கொடுக்கும் ஒரு பேரொளியாகத் தோன்றுகிறான் போலும்!  மேலும் மேலும் யோசித்த உத்தவனுக்கு அவன் இந்த ராக்ஷசர்களால் சாப்பிடப் பட்டால் என்ன ஆகும் என்பது புரியாத புதிராக இருந்தது.  நாககூடத்துக்குக் கிருஷ்ணன் வந்து காத்திருப்பான்.  தான் ராக்ஷசர்களால் சாப்பிடப் பட்டதை அறிந்து வருந்துவான்.  மற்ற எவர் இழப்பையும் விடத் தன் இழப்புக் கண்ணனுக்குத் தாங்க முடியாததொன்றாக இருக்கும். அந்த இரட்டையர்கள் கூட அவனை மறக்கும் வரை அவனை நினைத்து அழலாம்; அடடா, சோகத்தில் அந்தப் பெண்கள் வேறு ஏதேனும் முடிவை எடுக்காமல் இருக்க வேண்டுமே! உத்தவனுக்குத் தன்னையும் அறியாமல் சிரிப்பு வந்தது.  அவன் தந்தை தேவபாகருக்கும் அவன் இழப்புப் பெரிய அளவிலேயே இருக்கும். அவன் தாய் கம்சாவோ (கம்சனின் சொந்தச் சகோதரி) வெளிப்படையாகக் கண்ணீரைக் கொட்டுவாள்.  ஆனால் உள்ளூர அவளுக்கு அவ்வளவு வருத்தம் இருக்காது.  பிறந்ததில் இருந்து தான் வளர்த்தறியாத மகனிடம் அவளுக்குப் பாசம் என்பதே இருந்ததில்லையே! அதோடு கிருஷ்ணனுக்குப் பக்ஷமாக இருக்கிறேன் என்பதாலும் அவளுக்கு என்னைப் பிடிப்பதில்லை. 


ஆம், ராக்ஷசர்கள் என்னைச் சாப்பிடப் போகிறார்கள்.  அது தான் என் முடிவு.  அதோடு உத்தவன் கதை முடிந்தது.  உத்தவன் தனக்குள்ளே கணக்கிட்டுக் கொண்டு தனக்குத் தானே சிரித்துக் கொண்டான்.




Thursday, July 4, 2013

ராக்ஷசன் கொடுத்த தகவல்கள்!

அவர்கள் அந்த ராக்ஷசனின் முன்பக்கம் துருத்திக் கொண்டிருந்த பற்களையும், இடுக்கியைப் போல் அமைந்திருந்த கைகளையும் வாயிலிருந்து நீட்டிக் கொண்டிருந்த செக்கச் சிவந்த புடைப்புக்களையும் பார்த்து பயந்து அலறினார்கள்.  ஆனால் சீக்கிரத்தில் அந்தச் சிவந்த புடைப்புக்கள் மரச்சில்லினால் ஆனவை என்பது தெரிந்துவிட்டது.  ஆனாலும் பலத்த எதிர்ப்புக்கிடையே சிகுரி நாகன் அவனைக் கட்டினான்.  அவன் ஓடிப் போய்விடப் போகிறான் என்பது ஒரு காரணம்.  இன்னொரு காரணம் அவர்கள் அனைவருமே ராக்ஷசர்கள் பார்க்கச் சிறிய அளவில் இருந்தாலும் திடீரென வளர்ந்து பயம் கொண்ட உருவம் எடுத்துத் தாக்குவார்கள் என்று நினைத்ததும் தான்.  அவனுடைய காயங்களுக்கு மூலிகைகள் கலந்த மண்ணால் மருந்திட்டு, அவன் கால் உடைந்த இடத்திலும் மூங்கிலை வைத்துக் கட்டி எனச் சிகிச்சைகள் செய்து அவனை மிகவும் கவனத்துடன் பாதுகாத்தான்.  குடிக்கத் தண்ணீர் கொடுத்தால் அவன் நாயைப் போல் நக்கிக் குடித்தது அவர்களுக்கு விசித்திரமாக இருந்தது.  அந்த ராக்ஷசச் சிறுவன் சிகுரி நாகனைக் கடிக்க முயற்சி செய்தான்.  சிகுரி நாகன் அவனை பலமாகத் தாக்கினான்.  ஆனாலும் மீண்டும் மீண்டும் அந்தச் சிறுவன் அவனைக் கடிக்க முயல அவனோ  பசியோடு இருக்கும் குழந்தை அழுவது போல் அழுதான்.  அப்போது தான் சிகுரி நாகனுக்கு அவன் பசியோடு இருப்பதைச் சொல்லும் முறை இதுவாக இருக்குமோ எனத் தோன்றியது. 

சற்று யோசித்த சிகுரி நாகன் ஒரு சிறுமுயலைப் பிடித்து அவனிடம் கொடுக்க அவன் முகம் மலர்ந்தது.  விரைவில் தன் விரல் நகங்களால் அதன் கழுத்தைக் கிழித்துத் தோலை உரித்து அதன் மாமிசத்தை மிகவும் ஆர்வத்துடனும் சந்தோஷத்துடனும் சாப்பிட்டான்.  அவனுடைய வளைந்த உதடுகளில் வயிறு நிரம்பிய திருப்தி தெரியும் ஒரு புன்னகையும் தோன்றியது.  இதற்குள் மற்ற நாகர்கள் காட்டுக் கொடிகளால் ஆன ஒரு கூண்டைச் செய்து முடித்திருந்தனர். அதை ஒரு கம்பில் நான்கு பேர் தூக்கிச் செல்லும்படி கட்டினார்கள்.  அந்த ராக்ஷசச் சிறுவனின் கை, கால்கள் கட்டப்பட்டு அவன் அந்தக் கூண்டில் அடைக்கப்பட்டான்.  பின்னர் அவனைச் சிலர் தூக்கிச் செல்ல அவர்கள் பயணம் நாககூடத்தை நோக்கிச் சென்றது.  கை, கால்கள் கட்டப்பட்டிருந்தாலும் நாகர்கள் அவன் மேல் ஒரு கண் வைத்திருந்தனர்.  திடீரென அவன் தன்னை அளவில் பெரியவனாக்கிக் கொண்டு கூண்டை உடைத்தெறிந்துவிட்டுத் தங்கள் மேல் பாய்ந்துவிடுவான் என எண்ணிக் கொண்டு அச்சத்துடனேயே இருந்தனர். ஒவ்வொரு கிராமமாகத் தாண்டுகையிலும் சிகுரி நாகன் பல கஷ்டங்களை எதிர் நோக்கினான். ஏனெனில் அந்த அந்தக் கிராமத்துக் குடிமக்களான நாகர்கள் விஷயம் தெரிந்து ராக்ஷசனைக் கொல்லத் தங்கள் ஈட்டி, கேடயங்களோடு கூண்டை முற்றுகையிட்டது தான்.  சிறுவனாக இருந்தாலும் அந்த ராக்ஷசனை அடக்குவதும் கடினமாகவே இருந்தது எனலாம்.  ஒரு மிருகம் எப்படி நடந்து கொள்ளுமோ அப்படியே அவன் நடந்து கொண்டான்.  ஆனால் சிகுரி நாகனை மட்டும் தன்னைக் காத்தவன் என்ற எண்ணம் அவனிடம் தோன்றியிருக்க வேண்டும்.  அவன் தட்டிக் கொடுத்தபோதெல்லாம் அமைதி காத்தான். 

இத்தனைக்கும் பிறகு நாககூடம் கொண்டு வரப்பட்ட ராக்ஷசச் சிறுவனுக்குத் தான் உத்தவன் இப்போது சிகிச்சை அளித்துக் கொண்டிருந்தான்.  அதைச் சுற்றிலும் இருந்த நாகர்கள் அனைவருமாய்க் கூடி நின்று பார்த்துக் கொண்டிருந்தனர்.  அந்த நாளையப் போர் வீரர்களுக்கு யுத்த விதிமுறைகளும், யுத்தம் செய்யவும் மட்டும் அறிந்து கொண்டவர்களாய் இல்லாமல் இம்மாதிரிக் காயங்களுக்கான சிகிச்சை முறையும் தெரிந்து வைத்திருந்தார்கள். ஆகவே உத்தவன் ஒரு தேர்ந்த மருத்துவனைப் போலவே அவனுக்கு சிகிச்சை அளித்தான்.  கார்க்கோடகன் அந்தத் தாழ்வாரத்திலிருந்து சற்றுத் தூரத்தில் நிற்க ஆர்யகன் அமர்ந்திருந்த பல்லக்குத் தாழ்வாரத்தின் அருகே கொண்டுவரப் பட்டது.  இளவரசிகளும் தொடர்ந்து வந்தனர்.  முக்கியமாய் அந்த இரட்டைச் சகோதரிகள் தங்கள் பெற்றோரின் பின்னால் நின்று கொண்டு எட்டி எட்டிப் பார்த்தனர்.  உத்தவன் தான் பழகி வந்ததொரு நாய்க்குட்டியைத் தடவிக் கொடுப்பது போல் பிரியமுடன் அவனைத் தட்டிக் கொடுத்துத் தடவிக் கொடுத்து ஆறுதல் சொல்லுவதை தெறிக்கும் விழிகளுடன், அதில் ஆச்சரியம் மட்டுமில்லாமல் அச்சமும் தெரியப் பார்த்துக் கொண்டிருந்தனர்.  அப்போது அங்கே ஆசாரியர் வியாசர் வந்தார்.  ராக்ஷசச் சிறுவன் ஒடிந்த மரம் போல் அவர் கைகளில் சாய்ந்தான்.  அவனை மிருதுவாகத் தட்டிக் கொடுத்து ஆசுவாசப் படுத்தினார் வியாசர்.

“அமைதியாய் இரு மகனே.  உனக்கு ஒன்றும் இல்லை.  நீ சரியாகிவிடுவாய்!” என்று வியாசர் கூறி இருக்க வேண்டும்.  அதுவும் அந்த ராக்ஷசனுக்குப் புரியும் மொழியில் கூறி இருக்க வேண்டும்.  அவன் முகத்தில் அவர் சொல்வதைப் புரிந்து கொண்ட பாவனை இருந்தது.  ஜைமினி ரிஷியைக் கூப்பிட்டு மூங்கிலால் கட்டப்பட்டிருந்த எலும்பு முறிந்த காலைப் பரிசோதிக்கச் சொன்னார் வியாசர்.  ஜைமினியும் அந்த மூங்கில் கட்டைப் பிரித்துப் பார்த்துவிட்டு மூலிகைகள், பச்சிலைகள்  ஆகியவற்றை வேகவைத்துக் காயத்தில் போட்டுத் தேர்ந்த மருத்துவரின் அனுபவத்தோடு அந்த முறிந்த காலை எலும்புகளை ஒன்று சேரும் விதமாகக் கட்டினார்.  ராக்ஷசச் சிறுவனுக்கு உள்ளூரப் பயமாய் இருந்திருக்க வேண்டும்.  ஆசாரியரின் இதமான அணைப்புக்குள்ளே தான் தனக்குப் பாதுகாப்பு என்னும்படியாக நினைத்தவன் போல அவரை நெருங்கி அணைத்தாற்போல் இருந்து கொண்டான்.  பழகிய நாய் தன் எஜமானனிடம் நெருங்கி நிற்பதைப் போல் தோன்றியது அது.  உத்தவனை அவன் பார்த்த போது ஏதோ அறிந்து கொண்டவன் போல, எவரையோ புரிந்து கொண்டவன் போல் அவன் பார்வை இருந்தது.  உத்தவன் அவனுக்கு பதிலளிக்கும் விதமாகத் தன் கரங்களை நீட்டி அவனை ஆறுதல் படுத்த விரும்பினான்.  தன் கரங்களை நீட்டவும் செய்தான்.  அந்தப் பையனின் முகம் சகிக்க முடியாததொரு விகாரத்தை அடைந்தாலும், அது புன்முறுவல் என்பதைப் புரிந்து கொள்ள முடிந்தது.  அவன் தன்னுடைய மொழியில் ஏதோ சொன்னான்.  அது உத்தவன் காதுகளில் “பீமன்” என்பது போல் அரைகுறையாக விழுந்தது. 

ஆசாரியர் முகம் புன்சிரிப்பால் விகசித்தது.  “உத்தவா, நீ அரசன் பீமனின் சகோதரனா? என்று கேட்கிறான் இவன்” என்றார் ஆசாரியர். இப்படி ஒன்றை எதிர்பாரா உத்தவன் திடுக்கிட்டுத் திகைத்துப் போய்விட்டான். என்ன சொல்வது என்பதே அவனுக்குப் புரியவில்லை.  ஆனால் ஆசாரியர் அங்கே நிதானத்துடனும், தக்க சமயத்தில் தக்க வார்த்தைகளைப் பேசும் தெளிவும் பெற்றவராக இருந்தது அனைவருக்கும் கை கொடுத்தது.  அந்தச் சிறுவனைப் பார்த்து ஆசாரியர், “உனக்கு பீமனைத் தெரியுமா?” என்று கேட்டார்.  அந்தப் பையன் மிகவும் தெளிவாகவும், அதைவிடவும் மரியாதை நன்கு தெரியும்படியும் மீண்டும் ஒருமுறை, “பீமன்” என்று சொல்லிவிட்டுத் தன் தலையையும் ஆட்டினான். “மகனே, பீமன் எப்படி இருப்பான்? சொல் பார்க்கலாம்! மிக மிக உயரமாகவும், மிகமிக அதிக பலத்தோடும், கை, கால்கள் இரண்டும் வலிமையுடனும், தோள்களிலும், புஜங்களிலும் அதிகமான சதைப்பற்றோடும் காணப்படுவானா?” வியாசர் அவனைக் கேட்டார்.  அந்தச் சிறுவனுக்கு வியாசர் பேசியதில் பாதிக்கும் மேல்புரிந்தது என்பது அடுத்து அவன் ஆமோதித்துச் செய்த சைகைகளிலும், அவன் முகத்து சந்தோஷத்திலும், பீமன் எப்படி இருப்பான் என்பதைத் தன் சைகைகளால் அவன் அபிநயித்துக் காட்டியதிலும் இருந்து தெரிந்து விட்டது. 

இப்போது உத்தவன் அவனைப் பார்த்து, “என்னைப் போல் வெளுத்த நிறமுடையவனா?” என்று தன் தோலைக்காட்டிக் கேட்டான்.  அந்தப் பையன் புன்னகையுடன் தலையை ஆட்டினான். வியாசர், “அங்கே ஐந்து பீமர்கள் இருக்கின்றனரா?” என்று கேட்டுவிட்டுத் தன் விரல்களாலும் ஒன்று, இரண்டு என எண்ணிக் காட்டிக் கேட்டார்.  இதற்கும் அந்தப் பையன் ஆமோதித்துத் தலையை ஆட்டினான்.  உத்தவன், “நான் பீமனின் சகோதரன்!” என்றான் அவனிடம். அந்தப் பையனை ஆறுதலுடன் தட்டிக் கொடுக்க ஆரம்பித்தான்.  வியாசரும் உத்தவன் சொன்னதை ஆமோதித்தார்.  அந்தப் பையன் தன் தலையை ஆட்டினாலும் உள்ளூர எரிச்சல் பட்டான் என்பது தெரிந்தது.  “பீமனிடம் போக வேண்டுமா உனக்கு?” என்று கேட்ட உத்தவன் அதை அவனுக்குப் புரியுமாறு சைகைகளாலும் சொன்னான்.  அவனுக்குப் புரிந்தது.  அவன் முகம் மலர்ந்தது. அவன் தன் தலையை வெகு வேகமாக ஆட்டியதோடு அல்லாமல், பீமன் மிகப் பெரியவன் என்பதை மீண்டும் தன் சைகைகளால் அபிநயித்துக் காட்டினான். அதோடு தன் கட்டை விரலை மடக்கிய வண்ணம் மீதம் நான்கு விரல்களைக் காட்டி, மற்ற நான்கு பீமர்களும் மிகவும் சிறியவர்கள் என்பதையும் வேடிக்கையாகச் சொல்லிச் சிரித்தான்.  வியாசர் மனம் விட்டுச் சிரித்தார். யுதிஷ்டிரன், அர்ஜுனன், நகுலன், சகாதேவன் ஆகிய நால்வரையும் இந்த ராக்ஷசன் எப்படி வர்ணிக்கிறான் என நினைத்துச் சிரித்தபடியே, “பெரிய பீமன் எங்கே இருக்கிறான்?” என்று வினவினார்.  “அங்கே, அங்கே!” என்று தனக்குத் தென் பக்கமாகக் கைகளால் சுட்டிக் காட்டினான் அந்த ராக்ஷசன்.  “ஓஹோ, அங்கேயா?”என்ற வியாசரிடம் உத்தவன், “ஆசாரியரே, இந்தப்பையன் என்னுடனே இருக்கட்டும்.  இவன் உடல் நலமும் காலும் சரியாகும் வரை இவனை நான் நன்றாய்க் கவனித்துக் கொள்கிறேன்.” என்றான்.




Tuesday, July 2, 2013

சிகுரி நாகனால் கண்டுபிடிக்கப்பட்ட ராக்ஷசன்!

நாகர்கள் அனைவரும் கூடிவிட்டார்கள். அனைவர் கைகளிலும் ஈட்டிகள் காணப்பட்டன. அனைவரும் கூட்டமாக ஓடி வந்தாலும் அரசனின் மாளிகைக்குச் சற்று தூரத்திலேயே நின்றுவிட்டனர்.  “ராக்ஷசன், ராக்ஷசன்!” என அனைவரும் கத்திக் கொண்டிருந்தனர்.  அனைவரின் கண்களும் அங்கிருந்த ஒரு கூண்டின் பக்கமே பார்த்தன.  கம்புகளையும் கயிறுகளையும் வைத்துக் கூண்டு போல் செய்து கட்டப்பட்ட  அதன் உள்ளே ஒரு சிறுவன் கை, கால்கள் கட்டப்பட்டுக் கிடந்தான்.  நான்கு நாகர்கள் பல்லக்கைத் தூக்குவது போல் அதைத் தூக்கி வந்து கொண்டிருந்தனர்.  இளம் தலைவன் ஆன சிகுரி நாகன் ஓடி வந்து கொண்டிருந்த கூட்டத்தைத் தூரத்திலேயே கட்டுப்படுத்தினான்.  அந்தக் கூண்டுக்குள் கிடந்த சிறுவன் மயக்கம் அடைந்திருந்தான் என்பதும், பரிதாபமாக ஏதோ சொல்லிக் கொண்டிருந்தான் என்பதும் புரிந்தது.  ஆனால் அவன் என்ன மொழியில் பேசினான் என்பதே புரியவில்லை அவர்களுக்கு.  அப்போது அங்கே வந்த கார்க்கோடகன், கூட்டத்தினரை அமைதியாக இருக்கச் சொல்லிவிட்டு, என்ன நடந்தது என வினவ அங்கே முன்னால் வந்த ஒரு நாகன் சிகுரி நாகன் காட்டிலிருந்து இந்த ராக்ஷசனைப் பிடித்துவந்ததாய்க் கூறினான்.


கங்கைக்கும் யமுனைக்கும் இடைப்பட்ட இந்தப் ப்ரதேசத்தை நாகர்களே ஆக்கிரமித்துக் கொண்டு வாழ்ந்து ஆட்சி புரிந்து வந்தாலும் வட கிழக்கே இதன் எல்லைப் பகுதியில் எவராலும் எளிதாக அடைய முடியா காட்டுப் ப்ரதேசங்களில் ராக்ஷசர்கள் வாழ்ந்து வருவதை நாகர் குடியினர் அறிவார்கள்.  நாகர்களுக்கு எவரிடமாவது பயம் என்றால் அது இந்த ராக்ஷசர்களிடம் தான்.  ராக்ஷசர்களைக் குறித்த இயற்கைக்குப் புறம்பான பயமூட்டும் கதைகள் பல அங்கே நிலவுவதுண்டு. நாகர்களின் எல்லைக் கிராமங்களில் இவை கதையாகச் சொல்லப்படுவதும் உண்டு.  ராக்ஷசர்கள் அந்தக் கிராமங்களுக்கு அடிக்கடி வந்து போவதாகவும் சொல்லுவார்கள்.  இதற்கு ஆதாரமாக எவரேனும் நேர்மையான வழியிலே செல்லாத நாகர்கள் இருந்தால் அவனைப் பிடித்துக் கொண்டு ராக்ஷசர்கள் சென்று விடுவதாகவும் கூறுவதோடு சில சமயங்களில் ராக்ஷசர்களின் கூரிய பற்கள் நாகர்களின் ரத்தத்தை உறிஞ்சி விடுவதாகவும் சொல்லுவார்கள்.  இவை எல்லாம் இரவுகளிலேயே நடப்பதால் எல்லைக் கிராமங்களிலே இரவு நேரத்தில் அணையா நெருப்பை மூட்டிவிடுவார்கள்.  இரவு முழுதும் அது எரிந்துகொண்டே இருக்கும்.  நெருப்பைக் கண்டு பயந்து ராக்ஷசர்கள் வரமாட்டார்கள் என நம்பினார்கள்.


ஆனாலும் எந்த ராக்ஷசனும் ஆர்யகனின் தலைநகரம் ஆன நாககூடம் வரை வந்ததில்லை.  ஆகவே இப்போது சிகுரி நாகனால் ஒரு ராக்ஷசன் பிடித்து வரப் பட்டதை அறிந்த நாகர்கள் அனைவரும் ஆண், பெண்,குழந்தைகள் அடங்கலாக, தாங்கள் இதுவரை பார்த்திராத அந்த ராக்ஷசனைக் காண வேண்டி அங்கே கூடிவிட்டார்கள்.  ஆனாலும் ஒரு ராக்ஷசன் வந்துவிட்டான் என்பது அவர்களிடையே பயத்தையும் உண்டாக்கியது.  எல்லா நாகர்களும் ஈட்டிகளை ஏந்திக் கொண்டே வந்திருந்தனர்.  சிறுவர்கள் கூச்சலிட்டார்கள்.  அந்த ராக்ஷசனைப் பார்த்துக் கோபம் கொண்டு கற்களை விட்டெறிந்து அவனைத் தாக்கினார்கள்.  சில கற்கள் அந்த ராக்ஷசன் மேல் படாமல் தப்பினாலும் கற்கள் மேலே படும்போது அவன் தன் கூர்மையான பற்களைக் காட்டி உறுமினான்.  ராக்ஷசர்களைப் புனிதமானவர்களாகக் கருதுவதில்லை என்பதால் அரச மாளிகைக்குச் சற்று தூரத்திலேயே அவனை அடைத்திருந்த கூண்டை நிறுத்தி இருந்தான் சிகுரி நாகன்.  பின்னர் அவனை அங்கேயே நிறுத்தி வைத்துவிட்டு அங்கே அப்போது வந்த இளவரசன் கார்க்கோடகனைப் பார்த்துத் தன் வணக்கத்தைத் தெரிவித்தான் சிகுரி நாகன்.  எப்படி இந்த ராக்ஷசனைச் சந்திக்க நேர்ந்தது என்பதையும் அவனைப் பிடித்து வந்ததையும் கார்க்கோடகனுக்கு விளக்கினான்.

ராக்ஷசனை இப்படிப்பிடித்து வைத்திருப்பதைக் குறித்து உத்தவன் அதிகம் கவலை கொள்ளவில்லை.  அவனிடத்தில் இதைக் குறித்த பயம் ஏதும் இல்லை.  அந்தச் சிறுவனைப் பார்த்தாலே பரிதாபமாக இருந்தது அவனுக்கு.  அந்தச் சிறுவனும் அப்படித் தான் காணப்பட்டான். முனகிக் கொண்டும், புலம்பிக் கொண்டும் அப்படியும் இப்படியும் திரும்பிய அவன் மூக்கில் இருந்து ரத்தம் கசிந்து கொண்டிருந்தது.  நாகர்கள் அனைவரும் தன்னைக் கவனித்துக் கொண்டிருக்கையிலேயே அதைச் சிறிதும் லக்ஷியம் செய்யாத உத்தவன் அந்தக் கூண்டின் அருகே சென்று அந்தச் சிறுவனைத் தொட்டு ஆறுதல் படுத்த விரும்பினான்.  தன்னுடைய தொடுகையின் மூலம் தான் அவனுக்கு ஆறுதல் சொல்வதை உணர்த்த நினைத்தான்.  அவ்வாறே செய்தான்.  நாகர்களில் ஒருவன் பெருத்த கூச்சலிட்டான். “தொடாதே, தொடாதே, அவன் ஒரு ராக்ஷசன்.  உன்னைத் தின்றுவிடுவான்.” என்று கத்தினான். 

“சாப்பிடட்டும். நன்றாய்ச் சாப்பிடட்டும்.” என்ற உத்தவன், அந்தச் சிறுவனைக் கட்டியிருந்த கயிறுகளை அவிழ்த்துவிட்டு அவனைத் தன்னிரு கரங்களால் அணைத்தபடி தூக்கினான்.  கிட்ட இருந்து பார்க்கையில் உத்தவனுக்கு அவனை மனிதன் எனச் சொல்வதா, மிருகம் எனச் சொல்வதா என்ற சந்தேகம் ஏற்பட்டது.  செங்குத்தாய்க் குறுகிய தலையை உடைய அந்தச் சிறுவன் மரச்சில்லுகளில் சிவப்பு நிறத்தில் வண்ணம் தீட்டி அதைத் தன் உதடுகளில் செருகி இருந்தான்.  தூரத்திலிருந்து அதைப் பார்க்க இயற்கையாகவே அவன் நாக்குகள் அப்படிச் சிவந்து இருப்பதைப் போல் தெரியும்.  ஆனால் கிட்ட இருந்து பார்க்கையில் தான் அது மரச்சில்லுகளால் ஆனவை என்பது உத்தவனுக்குப் புரிந்தது.  அவன் பற்கள் இயல்பாகவே ஓநாயின் பற்களைப்போல் கூர்மையாகவே காணப்பட்டன.  கரடியின் நகங்களைப் போன்ற நீண்ட, கடினமான அதே சமயம் முனையில் கூர்மையான நகங்கள் காணப்பட்டன.  எவரையும் நேருக்கு நேர் சந்திக்கமுடியாத அளவுக்குக் கபடு நிறைந்ததாகத் தோன்றிய அவன்  இருகண்களும் ரத்த விளாறாகச் சிவந்து காணப்பட்டன.  அவன் அழுகின்றான் என்பது புரிந்தாலும் அது கூட ஒரு அடிபட்ட மிருகத்தின் குரலாகவே தெரிந்தது.

அவனை அருகிலிருந்த ஒரு தாழ்வாரத்தில் உத்தவன் இறக்கிவிட அவனோ இரு கால்களால் நிற்காமல் தன் கால்கள், கைகள் இரண்டையும் பயன்படுத்தி நான்கு கால்களால் நிற்கும் மிருகங்களைப் போலவே நின்றான்.  அவனுக்குக் கொஞ்சம் தண்ணீர் கொடுத்தான் உத்தவன்.  அதை அவன் அந்தப் பாத்திரத்தைத் தன் கரங்களில் வாங்கிக் குடிக்காமல் மிருகங்கள் குடிப்பது போல் கீழே கவிழ்ந்து நக்கிக் குடித்தான்.  சிகுரி நாகன் தான் இவனைப் பிடித்த கதையைச் சொல்ல ஆரம்பித்தான்.

சிகுரி நாகன் நாகர்கள் தலைவர்களிடையே மிகவும் திறமையானவன் என்று பெயரெடுத்தவன்.  ஆர்யகனின் கட்டளையின் பேரில், ஒவ்வொரு கிராமமாகச் சென்று பஞ்ச பாண்டவர்களும்,குந்தியும் அந்தப் பக்கமாகச் சென்றதை எவரேனும் பார்த்தார்களா என்ற விசாரணைகளில் ஈடுபட்டிருந்தான்.  அவனுக்குக் கிடைத்த தகவல்கள் எல்லாம் ஐந்து ஆரியர்கள்,  ஒரு மூதாட்டி சென்றதாகவும், அவர்களில் ஒருவன் மிகப்பெரியவனாக பலசாலியாகக் காணப்பட்டான்.  தன் தோள்களில் அந்த மூதாட்டியைச் சுமந்து கொண்டூ சென்றான்.  அவர்கள் இந்தப்பகுதியைத் தாண்டிக் கொண்டு ராக்ஷசவர்த்தம் சென்றுவிட்டதாகச் சொன்னார்கள்.  கடவுளே, அது ராக்ஷசர்கள் வாழும் இடம்.  பேய்களும், பிசாசுகளும் கூட அங்கே உலவலாம். யார் கண்டது! ஆனாலும் சிகுரி நாகன் பஞ்ச பாண்டவர்கள் சென்றிருக்கக் கூடிய வழியை ஊகித்து எல்லைக் கிராமம் ஆன லஹூரியாவை அடைந்தான்.  அந்தக் கிராமத்துக்கு அந்தப் பக்கம் எல்லையைக் குறிக்கும் பெரிய பெரிய தடுப்புகள் காணப்பட்டன.  அவற்றைத் தாண்டி பெரிய பெரிய கற்பாறைகளும், மலைகளும், மலைக்காடுகளும், எவராலும் செல்ல முடியாத நெருக்கமான காடுகளும் காணப்பட்டன.  ராக்ஷசர்களால் மட்டுமே அங்கே செல்ல முடியும். அவர்கள் அங்கே தான் வசிக்கின்றனர்.  சிகுரி நாகன் லஹூரியாவை அடைந்த சமயம் அவன் சென்றதற்கு முதல் நாள் தான் ராக்ஷசர்கள் நெருப்பு மூட்டி எரிவதையும் பொருட்படுத்தாமல் அந்தக் கிராமத்துக்கு வந்து சென்றிருப்பதை அறிந்தான்.  ஒரு வயதான கிழவனும், ஒரு நாயையும் காணவில்லை.  ராக்ஷசர்கள் தான் இழுத்துச் சென்றிருக்க வேண்டும்.  சிகுரி நாகன் அவர்களின் காலடியைத் தொடர்ந்து செல்ல விரும்பினான்.

அவ்வாறே சென்ற அவன் இங்கே வந்து சென்றவர்கள் ஐந்து ராக்ஷசர்கள் என்றும் அவர்களில் ஒருவன் சிறுவன் என்பதையும் தெரிந்து கொண்டான்.  அவர்களின் காலடிகள் சிறிது தூரமே அவனுக்கு வழிகாட்டிச் சென்றன. பின்னர் காணப்பட்ட கரடு முரடான கற்கள் நிறைந்த தரையினாலும், பாதை வர வரக் குறுகியதாலும் காலடிகள் தென்படவில்லை.  நாகர்களில் சிலரை மிகுந்த சிரமத்தோடு இதில் ஈடுபடுத்திய சிகுரி நாகனால் சிறிது தூரமே அவர்கள் சென்ற பாதையைத் தொடர முடிந்தது. இவ்வளவு தூரம் வந்ததற்கே அந்த நாகர்கள் மிகவும் நடுங்கினார்கள்.  என்றாலும் சிகுரி நாகன் விடவில்லை.  தொடர்ந்து சென்றான் .  சிறிது தூரத்தில் கற்பாறைகளில் மீண்டும் காலடிகள் தெரிய அதைத் தொடர்ந்த சிகுரி நாகனுக்குச் சற்று நேரத்தில் அடிபட்ட ஒரு மிருகம் முனகுவது போன்றதொரு குரல் கேட்டது. அங்குமிங்கும் அலைந்து தேடிய அவர்களுக்குச் சிறிது தூரத்தில் காணப்பட்ட ஒரு குறுகிய குழியில் இருந்து அந்தச் சப்தம் வருவது புரிய, அங்கே சென்றனர்.  அங்கே தான் இந்த ராக்ஷசச் சிறுவன் ஒரு கால் உடைந்த நிலையில் கிடந்தான்.  இரவு நேரத்தில் லஹூரியாவில் ஏதேனும் கிடைக்குமா எனப் பார்க்க வந்த அவனுடன் வந்த ராக்ஷசர்கள் திரும்புகையில் மிக அவசரத்தில் இருந்திருக்க வேண்டும்.  அதனால் தான் இந்தச் சிறுவன் தங்களுடன் இல்லாதது கூடத் தெரியாமல் திரும்பிப் போயிருக்கின்றனர்.  இந்தப் பையன் குழிக்குள் விழுந்தது அவர்களுக்குத் தெரியாமல் போயிருக்க வேண்டும்.  பின்னர் தெரிந்ததும் கூட இவனைக் காப்பாற்றி அழைத்துச் செல்ல மனமில்லாமல் திரும்பிப் போயிருக்க வேண்டும். 

சிகுரி நாகனுடன் கூட வந்த நாகர்கள் கல்லால் அடித்தே அவனைக் கொன்றுவிட நினைத்தார்கள்.  ஆனால் சிகுரி நாகனுக்கோ இவனிடமிருந்து பாண்டவர்கள் குறித்த தகவல் ஏதேனும் கிடைக்குமோ என்ற ஆசை இருந்தது.  ஆகவே அவர்களைத் தடுத்து இவனை அவர்கள் கற்களால் அடித்து மேலும் காயப்படுத்தாமல் காப்பாற்றினான்.  அந்தக் குழிக்குள் அவனே மெல்ல மெல்ல இறங்கி அந்தப் பையனைத் தன் தோள்களில் சுமந்து வெளியே கொண்டு வந்தான். சிகுரி நாகனுடன் கூட வந்தவர்களுக்கு இதில் அவ்வளவாக விருப்பமில்லை.  சிகுரி நாகன் அருகேயோ அந்த ராக்ஷசப் பையன் அருகேயே கூட அவர்கள் வரவில்லை.