Sunday, February 28, 2016

பாமா இயல்பு நிலைக்குத் திரும்புகிறாள்!

கண்ணன் குகையின் வாயிலைத் திரும்பிப் பார்த்தான். அங்கே விசித்திரமான ஓர் உருவம் நின்று கொண்டிருந்தது. அதன் உடல் முழுவதும் மயிரால் மூடப்பட்டிருந்தது. அதன் தலையிலிருந்து தொங்கிய நீண்ட மயிர்க்கற்றைகள் காலின் பாதம் வரைக்கும் தொங்கிக் கொண்டிருந்தது. அது அந்தச் சுரங்கப் பாதையினுள் விரைவில் மறைந்தும் போனது. கண்ணன் அதைத் தொடர்ந்து செல்ல முடிவு செய்தான். தன் கையில் அரிவாளைப் பாதுகாப்புக்கு வைத்துக் கொண்டு அந்த விசித்திர உருவம் பிரவாகம் எடுத்து ஓடும் குளக்கரைக்குத் தான் அது போயிருக்க வேண்டும் என்று முடிவு செய்து அங்கே சென்றான். அதற்குள்ளாக அந்த உருவம் கரைஓரக் கற்களின் மேல் நடந்து சுறுசுறுப்பாக மேலே உள்ள குகைக்குச் செல்லும் பாதையில் மறைந்து விட்டது. கிருஷ்ணனும் அந்தப் பிரவாஹத்தைத் தாண்டி மேலே சென்று குகைக்குச் செல்லும் துவாரத்தின் வழியே பார்த்தான். அந்த உருவம் ஓர் அணிலைப் போல் தாவித் தாவி மிகத் துரிதமாக அந்தத் துவாரத்தினுள் புகுந்து மறுபக்கம் சென்றுவிட்டது. அது மனிதனைப் போல் நடக்கிறதா? அல்லது ஓர் மிருகம் போலவா என்பதைக் கண்ணனால் புரிந்து கொள்ள முடியவில்லை. அதன் தொண்டையிலிருந்து கிளம்பிய சப்தம் ஓர் அழகான பறவையின் இசை போல் இனிமையாக இருந்தது.

கிருஷ்ணனுக்குத் தொடர்ந்து செல்லத் தான் விருப்பம். ஆனால் பாமா? அவளை இந்த நிலையில் தனியாக விட்டு விட்டுப் போக முடியாதே! அவள் கால் சரியாகி அவனுடன் வர முடியும் என்னும் நிலை வரும்வரை அவன் காத்திருந்தே ஆக வேண்டும். ஹூம்! முட்டாள் பெண்! கொஞ்சமும் யோசிக்காமல் அவனை அவள் தந்தையிடமிருந்து காப்பாற்ற வேண்டும் என்னும் நோக்கத்தில் ச்யமந்தகமணியைத் தேடும் முயற்சியில் தானே இறங்கி விட்டாள். இப்போது அவளால் துவாரகைக்கு அவள் வீட்டிற்கும் திரும்பிச் செல்ல முடியாது. இங்கே அவளைத் தனியே விட்டுவிட்டு அவனாலும் செல்ல முடியாது! ஆனால் அதே சமயம் அவர்கள் இந்தக் குகையிலும் தங்க முடியாது. முன்னேறிச் செல்லத் தான் வேண்டும். ச்யமந்தகத்தைக் கண்டுபிடிக்க வேண்டும். சாத்யகிக்கு என்ன ஆயிற்று’ அவன் எப்படி இருக்கிறான் என்பதையும் பார்க்க வேண்டும். ஆகவே வேறு வழியின்றி குகைக்குத் திரும்பினான் கண்ணன். சத்யபாமா இன்னமும் பயத்தினால் நடுங்கிய வண்ணம் இருந்தாள். “அது என்ன பிசாசா? பேயா?” என்று கண்ணனை வினவினாள்.

“ஹா! அது பேயோ, பிசாசோ! ஏதோ ஒன்று! ஆனால் யாருக்கும் தொந்திரவு செய்யாத ஒன்று! அந்தச் சுரங்கப்பாதையின் இன்னொரு துவாரத்தின் வழியாக மேலே உள்ள குகைக்குச் சென்று விட்டது அது! அது பார்க்கவே விசித்திரமாக இருந்தது. அதன் மொழி பறவைகள் இசைக்கும் சங்கீதம் போலக் கேட்கவே இனிமையாக இருந்தது.” என்றான் கிருஷ்ணன். “ஆம், அது பிசாசே தான்! எனக்கு உறுதியாகத் தெரியும்!” என்றாள் சத்யபாமா. மேலும் நடுங்கிய வண்ணம், “ஒருவேளை அது என் தந்தை சொல்கிறாற்போல் இந்தக் குகையைக் காவல் காக்கும் தெய்விகப் பாதுகாவலர்களில் ஒன்றாக இருக்கலாமோ?” என்று வினவினாள்! “கவலைப்படாதே சத்யா! உனக்குக் கொஞ்சம் சரியானதும் நாம் அதைத் தொடர்ந்து செல்லலாம்.” என்று கண்ணன் ஆறுதலாகப் பேசினான். அவள் பரிதாபமாக,”என்னை விட்டு விட்டுச் சென்று விடாதே! கோவிந்தா! அது ஒரு பிசாசு தான் என்பதில் எனக்குச் சந்தேகமே இல்லை. நான் இப்படி ஒரு மனிதனையோ, மிருகத்தையோ இன்று வரை சந்தித்ததே இல்லை. அதன் உடல் முழுவதும் மயிரால் அல்லவோ மூடப்பட்டிருந்தது! இப்படி ஒன்றை இன்று வரை பார்த்ததே இல்லை!”

“ஆம், உண்மை தான்! அதன் உடல் முழுவதும் மயிராலேயே மூடப்பட்டிருந்தது.” என்ற வண்ணம் கிருஷ்ணன், அங்கு எரிந்து கொண்டிருந்த நெருப்பில் மேலும் கட்டைகளைப் போட்டான். நெருப்பு ஒளி வீசிப் பிரகாசித்தது. அதன் பின்னர் காட்டிலிருந்து பறித்து வந்திருந்த பழங்கள், கொட்டைகள்,போன்றவற்றையும் கிருஷ்ணன் வீட்டிலிருந்து எடுத்து வந்திருந்த உணவையும் இருவரும் பகிர்ந்து உண்டார்கள். சற்று நேரம் ஓய்வெடுத்த பின்னர் சத்யபாமா இப்போது தன்னால் சிறிது நடக்க முடியும் என்று கூறினாள். மெல்ல எழுந்து கிருஷ்ணன் தோளைப் பிடித்துக் கொண்டு மெதுவாக நடந்தாள். என்றாலும் கிருஷ்ணன் உடனே கிளம்பவில்லை. மீண்டும் காட்டுக்குச் சென்று மேலும் பழங்களையும், மற்ற தானியங்கள், கொட்டைகள் போன்றவற்றையும் சம்பாதித்துக் கொண்டு வந்தான். அதோடு நெருப்பில் இடுவதற்கென காய்ந்த மரக்கிளைகளையும் கொண்டு வந்திருந்தான். இன்று இரவு படுக்கைக்குத் தேவையான இலைகளையும் மூட்டை கட்டித் தூக்கி வந்திருந்தான்.

குகையின் வாயிலில் நின்று கொண்டு இருவரும் கண்ணன் கொண்டு வந்திருந்த பழங்கள், கொட்டைகள் போன்றவற்றை அங்கிருந்த சூரிய பகவானின் விக்ரஹத்திற்கு நிவேதனம் செய்தார்கள். காயத்ரி மந்திரத்தை ஜபித்தார்கள். அவர்கள் கண் முன்னே ஓர் அற்புத உலகம் விரிந்திருந்தது. குகையின் வெளிச்சுவர்கள் சூரிய ஒளி பட்டு வைரக்கற்களைப் போல் பிரகாசித்துக் கொண்டிருந்தது. மலைப்பக்கம் இருந்த குகைச்சுவரோ, மரங்களின் அடுத்தடுத்த தொடர்க்கிளைகளால் மூடப்பட்டு பசுமையாகக் காட்சி அளித்துக் கொண்டிருந்தது. மாலை ஆக, ஆக அந்தக் குகையின் சூரியனின் அஸ்தமனக் கதிர்களின் மஞ்சள் வண்ணம் பட்டு உருக்கிய தங்கத்தைப் போல் காட்சி அளித்தது. ஆம், இது உண்மையாகவே சூரியனின் சொந்தக் குகையாகத் தான் இருக்க வேண்டும் என்பதை இருவரும் உணர்ந்தனர்.

சிறிது நேரம் சென்றதும் சத்யபாமா ஊரியின் கண்கள் திறக்காத குட்டியைத் தன் மடியில் வைத்துக் கொண்டு உட்கார்ந்திருந்தாள். ஆனால் அதுவோ கிருஷ்ணன் எங்கே இருக்கிறான் என்பதை மோப்பம் பிடித்துக் கொண்டு சென்று அவன் மேல் ஏறி அமர முயற்சித்தது. கிருஷ்ணனும் அன்புடன் அதை எடுத்து அணைத்த வண்ணம் அதைத் தடவிக் கொடுத்தான். அதைப் பார்த்த சத்யபாமா, “உங்களைக் கண்டு பொறாமைப்படுகிறேன், பிரபுவே!” என்றாள். சத்யபாமா மெல்ல மெல்லத் தன் இயல்பான நிலைக்குத் திரும்ப ஆரம்பித்திருந்தாள். ஆகவே அவளுடன் பிறந்த திமிர்த்தனம் மெல்ல எட்டிப் பார்த்தது. “ஊரியைப் பிறந்தது முதல் நான் வளர்த்து வருகிறேன்;ஆனால் இப்போதோ! அவள் என்னை விட உங்களிடமே அதிகம் அன்பு செலுத்துகிறாள். அதிலும் இந்தப் பொல்லாத பூனைக்குட்டி, இன்னும் கண்களே திறக்கவில்லை! அதற்குள்ளாக அதன் திமிரைப்பாருங்கள்! அதற்கும் உங்களிடம் தான் இருக்க வேண்டுமாம்! நான் வேண்டாமாம்!” என்றாள்.

கிருஷ்ணன் தனக்குள்ளாகச் சிரித்துக் கொண்டான். அவன் கண்களில் குறும்புடன், “கொஞ்சம் யோசி பாமா! நீயே காரணத்தைக் கண்டுபிடி!  என்னுடைய நற்பெயரையும், கீர்த்தியையும் காப்பாற்ற வேண்டி நீ ஏன் இவ்வளவு உன்னையே கஷ்டப்படுத்திக் கொள்ள வேண்டும்? நிச்சயமாக உங்கள் அனைவரிடமும் ஏதோ தப்பு இருக்கிறது!” என்று கூறியவண்ணம் குறும்புத்தனமாகச் சிரித்தான்.

Friday, February 26, 2016

ஐயோ! பேய்! பிசாசு!

கிருஷ்ணன் இப்போது கொஞ்சம் தீவிரமான குரலில் பேசினான். என் தலையில் கட்டி இருந்த உருமாலின் உதவியால் உன் காயங்களைக் கட்டி இருப்பதோடு மிச்சம் இருந்த துணியால் உன் உடலையும் ஓரளவுக்கு மூடியுள்ளேன்.அதன் பின்னர் நான் பிரவாகத்தின் அருகே சென்று நெருப்பை மூட்டி உன் காயங்களைக் கழுவி மருந்து போட்டேன். உன்னுடைய சுளுக்கிக் கொண்ட கணுவையும் நீவிக் கொடுத்தேன். அதன் பின்னரே இந்தக் குகைக்கு உன்னைத் தூக்கி வந்து வலுக்கட்டாயமாய் உணவும் கொடுத்தேன்.”

நிமிர்ந்து அவனைப் பார்த்த சத்யபாமா எழுந்து நிற்க முயற்சித்துத் தோல்வி அடைந்தாள். “இப்போது எழுந்து நிற்க முயற்சிக்காதே! இன்னும் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு உன்னால் இன்னொருவர் உதவியின்றி எழுந்து நிற்கவோ, நடக்கவோ இயலாது. உனக்குக் கொஞ்சமானும் மூளை இருந்தால் அதை யோசித்துக் கொள்! நீ இப்போது இருக்கும் நிலைமையைச் சரிவரப் புரிந்து கொள்! அதைத் தான் நான் இப்போது விரும்புகிறேன். அசட்டுப் பிடிவாதம் பிடிக்காமல் உள்ள நிலையைப் புரிந்து கொண்டு அதற்கேற்றாற்போல் நடந்து கொள்! இப்போது நீ இருக்கும் நிலையில் உன்னால் தனியாக துவாரகைக்குச் செல்ல முடியாது!” என்றான் கிருஷ்ணன். சத்யபாமோ அதைத் தன் அழுகையினாலேயே அங்கீகரித்தாள். கிருஷ்ணன் மேலும் பேசினான்.

“நீ இப்போது துவாரகைக்குச் செல்ல முயற்சித்தால் நீ தனியாகவே திரும்ப வேண்டும். என்னால் உன்னுடன் இப்போது வர முடியாது. நீ தனியாகச் சென்றாலோ சிங்கங்களுக்கோ அல்லது கரடிகளுக்கோ அருமையான உணவாகி விடுவாய்! இப்போது கவனமாய்க் கேள்! சாத்யகி எந்தத் திசையில் சென்றிருக்கக் கூடும் அல்லது அவனைக் கடத்தியவர்கள் அழைத்துச் சென்றிருக்க வேண்டும் என்பதை நான் இப்போது ஓரளவுக்குப் புரிந்து கொண்டு விட்டேன். ச்யமந்தக மணியையும் அவர்களே எடுத்துச் சென்றிருக்கக் கூடும். உன்னைத் தனியாக இங்கேயே விட்டுவிட்டு அந்தத் திசைக்கு நான் பயணம் செய்ய முடியாது; நான் அப்படிச் செய்யப் போவதும் இல்லை. நாம் இருவருமே இப்போது மிகவும் ஆபத்தான நிலையில் இருக்கிறோம். ஆகவே நீ உன் மூளையை மட்டுமில்லாமல் உன் உணர்வுகளையும் சாந்தப்படுத்திக் கொண்டு நிதானமாக இருந்தாயெனில் நாம் வந்திருக்கும் காரியத்தில் வெற்றி கிட்டும்!”

சத்யா அழுவதை நிறுத்திக் கொண்டு தன் கண்கள் முழுவதும் அன்பு வழிய அவனைப் பார்த்தாள். அதில் கருணையும் காதலும் கலந்தே தென்பட்டது. கிருஷ்ணன் அவளைப் பார்த்து, “இப்போது நீ நான் சொன்னபடி கேட்டு நடந்தால் போதுமானது!” என்றான். மேலும் தொடர்ந்து, “நீ உயிருடன் இருக்க விரும்பினால் நான் சொன்னபடி கேட்டுக் கொண்டு என்னுடன் வா! அது தான் உனக்கு மிகவும் நன்மை தரும்!” என்றான். மேலும் அவளைப் பார்த்துச் சிரித்தவண்ணம் கிருஷ்ணன் சொன்னான்:”ஒரு முறை உன்னை ஓங்கி ஒரு குத்துவிட்டேன். இல்லையெனில் நீ பைத்தியம் பிடித்தவளைப் போல் கத்திக் கொண்டிருந்திருப்பாய்! இப்போதும் அப்படி ஏதேனும் நடந்தால் உன்னை மீண்டும் குத்தவோ அறையவோ நேரும்! ஆகவே நல்லபடி நடந்து கொள். சுபத்ராவைப் போலவும் உன்னைப் போலவும் உள்ள சிறு பெண்கள் நான் என்ன சொல்கிறேனோ அதைச் செய்தால் போதும்! அதைத் தான் நான் விரும்புகிறேன்.” என்றவன் மீண்டும் சத்தமாகச் சிரித்தான். சத்யபாமா தன் கண்களைத் துடைத்துக் கொண்டாள். பின்னர் கிருஷ்ணனைப் பார்த்து அழகாக, மோகனமாகச் சிரித்த வண்ணம், “நீ ஓர் கொடுங்கோலன், கோவிந்தா!” என்றாள்.

“ஆமாம், ஆமாம். உன் தந்தையை விடப் பெரிய கொடுங்கோலன் நானே! அதில் சந்தேகமே இல்லை! முதலில் நான் விரும்புவது எல்லாம், எதற்கெடுத்தாலும் அழுவதை நிறுத்து! என்ன நடந்தாலும் தைரியமாக இரு! அடுத்ததாக என்னை எதிர்த்துக் கொண்டு கிளம்பாதே! “ என்ற வண்ணம் விரல் விட்டு எண்ணிய கிருஷ்ணன் தன் விரலால் மூன்று எனக் காட்டியவண்ணம், “மூன்றாவதாக நான் உனக்கு மருந்து போடும்போது பேசாமல் இரு. உன்னால் எதுவும் இயலாது! நான்காவதாக நீயாக எழுந்திருக்க முயற்சி செய்யாதே! உன் காயங்கள் ஆறிவிட்டதெனில் நானே உன்னை நடக்கச் சொல்லி விடுவேன். ஐந்தாவதாக, நான் என்ன கொடுக்கிறேனோ அது தான் நமக்கு உணவு. அதைக் கட்டாயம் சாப்பிட்டுக்கொள்!” இவற்றைக் கேட்ட சத்யபாமா தன் இயல்பான துடுக்குத் தனத்தோடு, “நான் இதைக் கேட்கவில்லை எனில் என்ன நடக்கும்?” என்று கேட்டாள். கிருஷ்ணன் சிரித்தான்,

பின்னர் தன் மயக்கும் கண்களோடு அவளை வசப்படுத்தும் தொனியில், “நான் சொன்னபடி நீ நடந்து கொண்டாயெனில் இருவரும் உயிருடன் இருப்போம். இல்லை எனில் இருவரும் அழிந்துவிடுவோம்! நீயே முடிவு செய்து கொள்!” என்றான். “கோவிந்தா! என்னையும், சாத்யகியையும் மன்னித்துவிடு! உன் நலனுக்காக நாங்கள் இருவரும் ச்யமந்தகமணியைத் தேடுவதில் முனைந்தோம்.” என்றாள் பாமா. “அதெல்லாம் சரி! ஆனால் என் வரவுக்காக நீங்கள் இருவரும் ஏன் காத்திருக்கவில்லை?” என்று கேட்டான் கிருஷ்ணன். அதற்கு பாமா கூறினாள்:

“ச்யமந்தகம் எங்கே எடுத்துச் சென்றிருக்கக் கூடும் என்பதில் எனக்கு உறுதியாகத் தெரிந்திருந்தது. இங்கே தான் எடுத்துவரப்பட்டிருக்க வேண்டும் என்று சந்தேகம் கொண்டிருந்தேன். எப்படியோ எனக்குத் தெரிந்திருந்தது. ச்யமந்தகம் இங்கே இந்தப்புனிதக் குகைக்கு எடுத்துவரப் பட்டு தெய்வீகக் காவலர்களின் பாதுகாப்பில் வைக்கப்பட்டிருக்கும் என்று நினைத்தேன். இங்கே தான் என் தந்தையின் தவத்தை மெச்சி சூரிய தேவன் அந்த ச்யமந்தக மணியைத் தந்தைக்குப்பரிசாக அளித்திருந்தார். ஆகவே தந்தையும் ஒவ்வொரு மாதமும் இங்கே வருவார். வந்து ச்யமந்தகத்துக்கும் சூரிய பகவானுக்கும் வழிபாடுகள் செய்து அர்க்யங்கள் கொடுத்துத் திருப்தி செய்வார்.”

“அது சரி! சாத்யகியை உன்னுடன் வரும்படி நீ தான் அழைத்தாயா? உன் விருப்பத்தின் பேரிலா அவன் இங்கே வந்தான்?”

“ஆம். நான் தான் அவனிடம் புனிதக் குகை பற்றிக் கூறினேன்.”

“அப்படியா? அவன் இரு பெரிய கரடிகளால் தூக்கிச் செல்லப்பட்டிருக்கக் கூடும் என்பதில் உனக்குச் சந்தேகம் ஏதும் இல்லையே?”

“தெரியவில்லை கோவிந்தா! நான்மிகப் பயந்திருந்தேன். ஆகவே நான் சரிவரக் கவனிக்கவில்லை. எனக்கு நினைவு இருப்பதெல்லாம் அந்தப் புதர்ப்பள்ளத்துக்குள் தெரிந்த சிறு இடைவெளி வழியே நான் ஓடிப்போனதும், அப்போது தவறிப் போய் மலை அடிவாரப் பள்ளத்தினுள் விழுந்ததும் தான்! அதன் பின்னர் நினைவிழந்து விட்டேன்!” என்றாள் பாமா.

“ப்ரசேனனும் அவனுடைய குதிரையும் இறந்து கிடந்ததையும் அவர்கள் உடலைக் கழுகுகள் தின்று கொண்டிருந்ததையும் நீ பார்த்தாயா?”

“இல்லை. நாங்கள் குறுக்குப் பாதை என நினைத்த பாதையின் வழியே சென்றோம். ஆனால் வழியைத் தவறவிட்டு விட்டோம். காட்டில் தொலைந்து போனோம்.மிகச் சிரமத்துடனேயே இந்த வழியைக் கண்டு பிடித்தோம். அதுவும் காலடித் தடங்கள் இருந்ததால் கண்டு பிடிக்க முடிந்தது. “

கிருஷ்ணன் தன்னிடமிருந்த தங்கச் சங்கிலியின் இருபகுதிகளையும் அவளிடம் காட்டினான். “இந்தச் சங்கிலி யாருடையது என்பதை நீ அறிவாய் அல்லவா?” என்றும் கேட்டான். சத்யபாமா அதைக் கைகளில் வாங்கி நன்றாகக் கவனித்துப் பார்த்தாள். பின்னர், “இந்தச் சங்கிலியில் தான் என் தந்தை ச்யமந்தக மணியைக் கோர்த்துக் கழுத்தில் மாட்டி இருந்தார்.” என்றாள்.

“ம்ம்ம்ம், அப்படியா? அது சரி! அந்தக் கரடிகள்? அவை எங்கிருந்து வந்தன? இப்போது எங்கே போயிற்று?  நான் மிகக் கவனத்துடன் கரடியின் காலடிச் சுவடுகளை ஆராய்ந்தேன். அந்தக் கரடியும் அதன் துணைவனும் இந்தக் குகை வரை வந்திருக்கின்றனர். பின்னர் எங்கே போனார்கள் என்பது தான் தெரியவில்லை!” என்றான் கிருஷ்ணன். பின்னர், “சரி, சத்யா, எழுந்திரு! நேரத்தைக் கடத்த வேண்டாம். விரைவில் பயணத்துக்குத் தயார் ஆவோம். உன்னிடம் இருக்கும் துணியைக் கொண்டு உன்னை ஒரு வேட்டைக்காரன் மனைவியைப் போல் அலங்கரித்துக் கொள். நீ எப்படி இருந்தாலும் சரி. இப்போது உன் தோற்றத்தில் அக்கறை கொள்ளாதே! நாம் இப்போது சாத்யகியையும் ச்யமந்தகத்தையும் கண்டு பிடித்தாக வேண்டும். உன் தந்தை சொல்வது உண்மை எனில், அந்த தெய்வீகக் காவலர்கள் விரைவில் இந்தக் குகைக்குத் திரும்பி விடுவார்கள். பின்னர் நாம் இருவரும் அவர்களுடனும் சண்டை போட வேண்டி இருக்கும்.”

“ஆஹா! நான் எப்படிச் சண்டைபோடுவேன்? என்னால் எப்படி முடியும்? என்னால் எழுந்து நிற்கக் கூட முடியவில்லை!” என்றாள் பாமா. “நான் என் கைகளை உனக்கு உதவிக்கு அளிக்கிறேன். பிடித்துக் கொண்டு எழுந்து வா! பிரவாஹத்தின் அருகே செல்வோம். உன்னைச் சுத்தம் செய்து கொள்!” என்றான் கிருஷ்ணன். பேசிக் கொண்டே தன் கரங்களை நீட்டிய கிருஷ்ணன் மெதுவாக அவளைத் தூக்க முயன்றான். ஆனால் பாமாவோ க்ரீச் என்று பலத்த குரலில் ஓலமிட்டுக் கொண்டே மீண்டும் கீழே விழுந்தாள். “அதோ பேய்! பிசாசு! பிசாசு! பேய்!” என்று கூவிய வண்ணம் குகையின் வாயிலைச் சுட்டியவள் அப்படியே கீழே விழுந்து மயக்கம் அடைந்தாள்.

Thursday, February 25, 2016

பாமா தவிப்பு! கண்ணன் சிரிப்பு!

கிருஷ்ணன் ஊரியை அந்தச் சுரங்க வாயிலுக்கருகே எடுத்துச் சென்று அதை அங்கே படுக்கச் சொன்னான். அதை அங்கே படுக்க வைத்தால் சுரங்க வாயில் வழியாக யாரேனும் வந்தாலோ, காட்டு மிருகங்கள் வந்தாலோ ஊரி முதலில் பார்த்துவிட்டுக் குரல் கொடுக்கும். இதைவிடப் பெரிய காவலர் தேவை இல்லை. கிருஷ்ணன் இப்படி நினைத்தவண்ணம் தானும் படுக்கச் சென்றான். ஆனால் ஊரியோ தன் குட்டிக்குப் பாலைக் கொடுத்துவிட்டு மீண்டும் சத்யா எங்கே படுத்திருக்கிறாளோ அங்கே தன் குட்டியையும் எடுத்துக் கொண்டு வந்துவிட்டது. கிருஷ்ணனுக்கு அலுப்பாக இருந்தது. மீண்டும் பூனைக்குட்டியை சுரங்க வாயிலுக்கு எடுத்துச் சென்று அங்கே படுக்க வைத்துவிட்டு ஊரியை அங்கே வருமாறு அழைத்தான். ஊரியோ மீண்டும் அங்கே வந்து குட்டியைத் தன் வாயில் கவ்விக் கொண்டு தன் யஜமானியின் அருகேயே சென்றது. அது தான் மட்டுமின்றித் தன் குட்டியும் தன் யஜமானியுடன் தான் படுக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தது. ஊரி சுரங்க வாயிலில் படுப்பது தான் சரியானது என்னும் முடிவில் இருந்த கிருஷ்ணனுக்குக் கொஞ்சம் கோபம் கூட வந்தது.

அதைத் திரும்ப வலுக்கட்டாயமாகவேனும் அங்கே அழைக்க எண்ணிய அவன், அந்தக் குட்டியை எடுத்துத் தன் கைகளால் அணைத்துக் கொண்டான். அதன் பின்னர் ஊரியை அழைத்துச் சுரங்க வாயிலை மீண்டும் காட்டி அதை அங்கேயே படுக்கும்படி சொன்னான். குட்டி கிருஷ்ணன் கைகளில் பாதுகாப்பாக இருக்கும் என்பதைப் புரிந்து கொண்ட ஊரி இப்போது சமாதானமாகக் கண்ணன் தனக்கெனக் காட்டிய இடத்தில் சென்று சாதுவாகப் படுத்துக் கொண்டது. கிருஷ்ணன் குளிர் காயவென மூட்டிய நெருப்பு நிதானமாக எரிந்து கொண்டிருந்ததோடு அல்லாமல் குகையிலும் குளிர் பரவாமல் இருந்தது. சத்யபாமா அதனால் நன்றாக ஆழ்ந்து உறங்கினாள். கிருஷ்ணன் பூனைக்குட்டியைத் தன்னுடன் படுக்க வைத்துக் கொண்டான். ஆரம்பத்தில் கிருஷ்ணனின் அணைப்புப் பூனைக்குட்டிக்கு இதமாகவே இருந்தது. ஆகவே அது சௌகரியமாக உணர்ந்தது. ஆனால் போகப்போக அதன் பசி அதிகம் ஆகவே மெதுவாக அவன் அணைப்பிலிருந்து விலகித் தன் தாய் இருக்குமிடம் சென்றுவிட்டது. அதன் தன் மோப்ப சக்தியால் தாய் இருக்குமிடத்தை உணர்ந்தது போலும்! கிருஷ்ணன் அது அப்படித் தேடிக் கொண்டு சென்றதையே ஆர்வத்துடன் கவனித்தான். ஊரி அதன் பசியை ஆற்றியது. பசி ஆறியதும் மீண்டும் மோப்பம் பிடித்த வண்ணம் கிருஷ்ணன் படுத்திருக்கும் இடம் தேடி வந்துவிட்டது. கண்கள் திறக்காத இந்தச் சின்னஞ்சிறு குட்டியின் அறிவை நினைத்துக் கிருஷ்ணனுக்கு மகிழ்ச்சியாக இருந்தது. மேலும் இதைப் பார்க்கவே மிகவும் அழகாகவும் இருந்தது. ஒரு பந்து போலச் சின்னஞ்சிறு உடலுடன் இருக்கும் இந்தக் குட்டியானது தன் தள்ளாடும் சின்னஞ்சிறு கால்களை வைத்து நடந்த வண்ணம் அங்கும் இங்கும் சென்று வந்தது கிருஷ்ணனுக்குப் பொழுது போக்காகவும் இருந்ததோடு இல்லாமல் மனதுக்கு ஆறுதலாகவும் இருந்தது. அதுவும் அந்தக் குட்டிக்குத் தன் தாயை விடக் கிருஷ்ணன் அருகே இருப்பது மிகவும் பாதுகாப்பாகத் தெரிந்தது போலும்! கிருஷ்ணனால் அதைப் புரிந்து கொள்ளவும் முடிந்தது. “அற்புதமான குட்டி நீ!” என்று அதைப் பார்த்துச் சொன்ன கிருஷ்ணன் தன் கைகளால் அதற்கு ஆறுதல் அளித்தான்.

மறுநாள் காலை விடிந்தது. கிருஷ்ணன் முதலில் எழுந்தான். அந்தக் குளத்தில் தன் குளியலை முடித்துக் கொண்டு புனிதமான அந்தக் குகையின் முன்னே வந்தான். குகையின் வெளிச்சுவர்களில் சூரியனின் காலை இளம் கதிர்கள் பட்டுப் பிரகாசித்துக் கொண்டு இருந்தது. அந்தக் காட்சி மிகப் பிரமாதமான ஒன்றாக இருந்ததோடு கிருஷ்ணனுக்குக் கிளர்ச்சியையும் ஊட்டியது. இப்படி உணர்வுகளைத் தூண்டிவிடும் பாறைகளைக் கண்ணன் அதுவரையிலும் பார்த்தது இல்லை. பின் மெல்லக் குகையின் உள்ளே நுழைந்தான். சத்யபாமா எழுந்து அமர்ந்திருந்தாள். முழந்தாளிட்டு அமர்ந்திருந்த அவள் தன் முழந்தாள்களுக்குள் தன் முகத்தைப் புதைத்துக் கொண்டு விம்மி விம்மி அழுது கொண்டிருந்தாள். பார்க்கவே பரிதாபமாக இருந்தது. ஊரி தனக்கான உணவுக்காகக் காட்டுக்குள் சென்றிருந்தது. பாமா அழுவதைக் கவனித்த கிருஷ்ணன் அதைச் சிறிதும் சட்டை செய்யாமல், “ஓ, நீ இப்போது சரியாகி விட்டாயா? இப்போது நன்றாக இருக்கிறாய் போல் தெரிகிறது!” என்றான். பாமா நிமிர்ந்து கூடப் பார்க்கவில்லை. கிருஷ்ணன் அவள் அருகே சென்றான். அதைப் புரிந்து கொண்ட பாமா தன் உடலைச் சுற்றி இருந்த சிறிதளவே ஆன அந்தத் துணியை இழுத்து மேலும் தன்னை மூடிக்கொள்ள முயன்றாள். தன் முகத்தைத் தவிர உடலின் பெரும்பகுதியும் மூடி இருக்கவேண்டும் என்பதில் கவனம் செலுத்தினாள்.

அவளையே பார்த்த கிருஷ்ணன், “இதோ பார் சத்யா! முதலில் உன் அழுகையை நிறுத்து! உன்னால் இப்போது நடக்க முடியாது! அதோடு நீ அழுவதால் எந்தப் பலனும் ஏற்படாது. என்னுடைய உருமாலைத் தண்ணீரில் நன்கு நனைத்துக் கொண்டு வந்திருக்கிறேன். நீ உன் உடலை இதை வைத்துச் சுத்தம் செய்து கொள்!” என்ற வண்ணம் உருமாலைக் கொடுத்தான். ஆனால் பாமாவோ தன் முகத்தை மீண்டும் தன் முழந்தாள்களுக்குள் புதைத்த வண்ணம், “ ஓ, உங்கள் உதவி எனக்குத் தேவையில்லை! நான் எப்படி இருக்கிறேனோ அப்படி இருந்து கொள்கிறேன். என்னால் முடிந்தவரை மெல்ல மெல்ல நடந்து குளத்திற்குச் சென்று கொள்கிறேன்.” என்றாள். கிருஷ்ணனுக்கு அவள் கோபம் வேடிக்கையாக இருந்தது. அவளைப் பார்த்துச் சிரித்தான். பின்னர் அவளைப் பார்த்துக் கொஞ்சம் கடுமையைக் காட்டினான். பாமாவுக்கு அவன் ஒரு ஆசிரியர் போல் தன்னைக் கடிந்து கொள்வதாகப் பட்டது. “சத்யா! முதலில் அழுகையை நிறுத்தப் போகிறாயா இல்லையா? நான் உனக்கு அழுவதற்காக இரவும், பகலுமாகப் பல தினங்களைக் கொடுக்கிறேன். அப்போது அழுது கொள்ளலாம். ஆனால் இப்போது இல்லை! இப்போது அழுகை தேவை இல்லை!” என்றவன் நிஜம்மாகவே கொஞ்சம் கடுமை காட்டிய வண்ணம், “நாம் இப்போது இருக்கும் நிலைமையையும் அதில் உள்ள பயங்கரத்தையும் கொஞ்சம் நினைத்துப் பார்!” என்றான்.

ஆனால் பாமாவோ மீண்டும் தன் முகத்தை முழங்கால்களுக்கிடையில் புதைத்த வண்ணம் விம்மினாள். “இதோ பார்! சத்யா! இது அழுவதற்கான நேரம் ஏதும் இல்லை! உணர்வுகளை வெளிக்காட்டுவதற்கான நேரமும் இல்லை! அவ்வளவு ஏன்! நீ எவ்வளவு அடக்கமும் விநயமும் நிறைந்தவள் என்பதைப் பார்க்கவோ, கவனிக்கவோ கூட நேரம் இல்லை! நீ இங்கே எதற்காக வந்திருக்கிறாய்? ச்யமந்தக மணியைத் தேடி! அல்லவா? நீ ஒரு முட்டாள் பெண் சத்யா! என் கஷ்டங்களை அதிகம் ஆக்கி விட்டாய்! அதோடு இப்போது நீயும் எனக்குச் சுமையாக இருக்கிறாய்! சாத்யகியைக் கரடிகளோ அல்லது மனிதர்களோ தூக்கிச் சென்ற சமயம் நீ மிகப் பயந்திருக்கிறாய்! அவர்களிடமிருந்து தப்பிப்பதற்காக அப்போது நீ புதர்களுக்குள் புகுந்துவிட்டாய்!”

ஆனால் பாமா மீண்டும் விம்மிய வண்ணம் புலம்பினாள்.”நான் செத்திருக்க வேண்டும்! இருக்கக் கூடாது! அப்போதே இறந்திருக்க வேண்டும்!” என்றாள்.

“ஹாஹா!” என்று சிரித்த கிருஷ்ணன், “நான் நீ இன்னமும் புத்திசாலித்தனமாகச் செயல்பட்டிருக்க வேண்டும் என்று எண்ணுகிறேன். நீ ஒரு பள்ளத்தினுள்ளே விழுந்துவிட்டாய்! உன் ஆடைகளெல்லாம் தாறுமாறாகக் கிழிந்திருந்தன. வேறு வழியில்லாமல் உன்னை நான் தொட்டுக் காப்பாற்றும்படி ஆகி விட்டது!”

பாமா இன்னமும் பெரிதாக அழ ஆரம்பித்தாள்.

Wednesday, February 24, 2016

குகைக்குள் கண்ணனும், பாமாவும்!

இங்கே படுத்து உறங்கியவர்கள் எவராக இருக்கும்? கண்ணன் யோசித்தான்! எதுவும் புரியவில்லை. மீண்டும், “இங்கே யார் இருக்கிறீர்கள்?” என்று குரல் கொடுத்தான். எந்த மறுமொழியும் வரவில்லை. சத்ராஜித் சொன்னது ஒருவேளை உண்மையாக இருக்கலாம்; அந்தப் புனிதமான குகை இரு தெய்வீகக் காவலர்களால் பாதுகாக்கப் படுவதாகச் சொல்வானே! அது உண்மையாகத் தான் இருக்க வேண்டும். இந்த இரு படுக்கைகளும் அவர்களால் பயன்படுத்தப் பட்டிருந்தால், இப்போது அவர்கள் எங்கே? அங்கே சுவரில் ஓர் இடத்தில் தெய்வீகப் பிரதிமையை வைத்து வழிபட்ட அடையாளங்கள் தெரிந்தன. இது தான் சூரியனை வழிபட்ட இடமாக இருந்திருக்குமோ?  அதற்கேற்றாற்போல் அங்கே சில காய்ந்த மலர்கள் தென்பட்டன. மலர்களால் அர்ச்சித்து வழிபட்டிருக்கக் கூடும். ஆஹா! அது என்ன? தங்கம்! தங்கத்தினால் ஆன அக்ஷதைகள்! அப்போது இது தான் சூரியனின் புனிதக் குகையாக இருக்க வேண்டும். இங்கே தான் சத்ராஜித் ச்யமந்தகத்தை வைத்து வழிபட்டிருக்க வேண்டும். யோசனைகளில் மூழ்கிய கண்ணன் ஏற்கெனவே அமைக்கப்பட்டிருந்த இலைப் படுக்கையைக் கலைத்து எடுத்தான். அந்தக் குகையில் வெளிச்சத்திற்காகவும், குளிர் காய்வதற்காகவும் நெருப்பு மூட்டினான். புதியதான ஓர் இலைப்படுக்கையை மெத்தெனத் தயாரித்து சத்யபாமாவைத் தூக்கி வந்து அதில் கிடத்தினான்.

அதன் பின்னர் கிருஷ்ணன் குகையைச் சுற்றிப் பார்க்க ஆரம்பித்தான். அப்படிப் பார்க்கையில் ஒரு மூலையில் குகையின் தரை சரிவாக உள்ளே சென்றதைக் கவனித்தான். அருகே சென்று பார்த்த போது அந்தச் சரிவு ஒரு சுரங்க வாயிலில் முடிவதைக் கண்டான். கண்ணன் தன் கைகளில் கத்தியை எடுத்துக் கொண்டு எதிரே காட்டு மிருகங்கள் வந்தாலும் தாக்கும் வண்ணம் முன்னெச்சரிக்கையுடன் நுழைந்தான். சற்றுத் தூரம் சென்ற கண்ணன் தன் கணுக்கால் அளவுத் தண்ணீரில் தான் சென்று கொண்டிருப்பதை உணர்ந்தான். அங்கே ஓர் குளம் இருப்பதைப் போல் தெரியவே கண்ணன் சற்றுப் பின் வாங்கினான். குகையின் மறுபக்கத்தில் விழுந்து கொண்டிருந்த இந்த நீர்ப்பிரவாஹத்துக்கு வழி அந்தச் சுரங்க வாயில் என்பதையும் கண்ணன் உணர்ந்து கொண்டான். அந்தப்பக்கம் ஓர் பெரிய பாறை விழுந்து கற்பாலம் போல் நிற்கவே அதன் மூலம் அந்தப் பிரவாஹத்தில் ஓர் குளம் உருவாகி இருந்தது. தண்ணீர்ப் பிரவாஹத்தில் கண்ணன் ஓர் கல்லை எறிந்தான். அது அடியில் போய் மறைந்தது. கண்ணன் இந்தக் குளம் இடுப்பளவுத் தண்ணீரோடு தான் இருக்கிறது என்பதைப் புரிந்து கொண்டான். அதற்குள்ளாக அவன் கண்கள் அந்த அரையிருட்டுக்குப் பழகி விட்டது. நிஜமாகவே ஒரு சில பாறாங்கற்கள் அங்கே பாலம் போல் அமைந்திருந்ததைக் காண முடிந்தது அவனால். மெல்ல அதன் மேல் ஏறிய கண்ணன் ஒவ்வொரு கல்லாகக் குதித்துத் தாண்டினான். பின்னர் ஓர் தட்டையான கல்லின் மேல் போய் நின்றான். அந்தக் குளத்தின் மறுபக்கம் அவன் வந்திருக்கிறான். கிட்டத்தட்ட அந்தக் குளத்தின் மறுபக்கம் வந்திருக்கிறான்.

சுரங்கத்தின் இன்னொரு முனைக்கு அவன் வந்துவிட்டான். அங்கே சுவரில் ஒரு பெரிய வட்டவடிவமான ஓட்டையைக் கண்டான். அது ஒரு மனிதனோ அல்லது மிருகமோ தவழ்ந்து செல்லும் அளவுக்குத் தாராளமாக இருந்தது. அதன் வழியாகச் சென்ற கண்ணன் அந்தச் சுரங்கப்பாதையின் இன்னொரு முனை மற்றொரு குகையில் கொண்டு விட்டதையும் அந்தக் குகை சற்றே உயரமான பகுதியில் அமைந்திருப்பதையும் கண்டு கொண்டான். அந்தக் குகை உச்சியில் வெடிப்புடன் கூடியதாய்  கவிந்த கூரையுடன் ஓர் பெட்டகத்தைப் போல் இருந்தது. உச்சியில் காணப்பட்ட வெடிப்பின் வழியாக சூரிய ரச்மி அந்தக் குகையின் உள்ளே வந்து கொண்டிருந்தது. அதனால் சிறிதளவு வெளிச்சமும் கிடைத்தது.. ஆனால் குகைச் சுவர்களில் சூரிய ஒளி பட்டுப் பிரதிபலிக்கவே இல்லை. அந்தக் குகை ஒரு செங்குத்தான வழியில் சென்று முடிந்ததையும் கண்டான் கண்ணன். இந்த வழி தான் அந்தப் புனிதமான சூரியனின் குகையை இத்துடன் சேர்க்கிறது. ராய்வதகா மஐத் தொடரின் நடுவிலே முதல் சிகரத்துக்கும் மற்றச் சிகரங்களுக்கும் நடுவே அமைந்துள்ளது இந்தக் குகை! இதன் மிகக் குறுகிய இந்த வழியே தான் சாத்யகியைப் பிடித்தவர்கள் அவனை அழைத்துச் சென்றிருக்க வேண்டும். அவனுக்கும், பாமாவுக்கும் ஏதேனும் ஆபத்து வருவதாக இருந்தாலும் இந்த வழியே தான் வரவேண்டும்.

அப்போது அவனை விடாமல் பின் தொடர்ந்து வந்திருந்த ஊரி அந்த ஓட்டை வழியே உள்ளே சென்றது. அதன் மறுமுனைக்குச் சென்ற அது கிருஷ்ணன் பின் தொடரக் காத்திருந்தது. ஆனால் கிருஷ்ணன் அதைத் தொடரவில்லை! ஊரியைத் திரும்ப அழைத்தான். “இங்கே வா, ஊரி! நான் திரும்பச் செல்லப் போகிறேன்.” என்றான். ஊரியும் திரும்பி வந்தது. அது தன் வாயில் எதையோ கவ்விக் கொண்டு வந்தது.கிருஷ்ணன் அதன் வாயிலிருந்து அதை எடுத்து அங்கு கிடைத்த சூரிய ஒளியில் அதை ஆராய்ந்தான். அது ஒரு தங்கச் சங்கிலியின் ஒரு சிறு பகுதி! பிரசேனனின் உடல் கிடைத்த இடத்தில் கண்ணன் கண்டெடுத்த தங்கச் சங்கிலியை அது ஒத்திருந்தது. அதன் ஒரு பகுதி தான் இது என்பதில் கண்ணனுக்குச் சந்தேகம் இல்லை. அந்தச் சங்கிலியின் குறிப்பிட்ட பகுதிகள் மூலம் இரண்டும் ஒன்றே என்பதைப் புரிந்து கொண்ட கண்ணன், இந்தச் சங்கிலியைக் கொண்டு இவ்வளவு தூரம் வந்தவர் எவரோ அவர் தான் ச்யமந்தகத்தையும் கொண்டு போயிருக்க வேண்டும் என்று முடிவு செய்தான். பின்னர் தான் தங்க ஏற்பாடு செய்திருந்த அந்தப் புனிதமான தெய்வீகக் குகைக்குத் திரும்பினான். அங்கே சத்யபாமா நன்கு ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருந்தாள். அவள் குடிப்பதற்காக அவன் தன் உருமாலை அங்கிருந்த குளத்தில் நனைத்து நீரைச் சேகரித்துக் கொண்டு வந்திருந்தான். உருமாலைப் பிழிந்து ஒரு சில சொட்டுத் தண்ணீரைத் தன் உள்ளங்கையில் சேகரித்த கண்ணன், அவன் உண்ணக் கொண்டு வந்திருந்த உணவின் துகள்களோடு அந்த நீரைச் சேர்த்துக் கலந்தான். வழியில் அவன் கண்ட எலுமிச்சை மரத்திலிருந்து பறித்துக் கொண்டு வந்திருந்த எலுமிச்சம்பழத்தின் சாறை அதோடு கலந்தான். சத்யபாமாவை உலுக்கி எழுப்பினான். எழுந்து கொண்டாலும் அவள் மிகக் கஷ்டத்துடனேயே தன் வாயைத் திறந்தாள். அவன் கலந்து வைத்திருந்த குழைந்த உணவை அப்படியே விழுங்கி விட்டுக் கொஞ்சம் நீரையும் குடித்தாள்.  நெருப்பை மூட்டினான் கண்ணன். இது குளிர்காய மட்டும் பயன்படாது. காட்டு மிருகங்களிடமிருந்து தப்பவும் பயன்படும்.
Monday, February 15, 2016

குகைக்குள் கண்ணன்!

“ஓஹோ, அது தான் புனித குகையா?” என்ற கிருஷ்ணன் சத்யபாமாவிடம்,”உனக்கு எப்படித் தெரியும்?” என்றும் கேட்டான்.

“ஆம், இது தான் சூரியனின் அந்தப் புனிதமான குகை! நான் குழந்தையாக இருக்கையில் ஓர் முறை என்னை என் தந்தை இங்கே அழைத்து வந்திருக்கிறார். இந்தக் குகையின் தெளிவான தோற்றத்தையும் அதன் பிரகாசத்தையும் கண்டு நான் வியந்திருக்கிறேன். இந்தக் குகை என் கனவுகளில் கூடப் பலமுறை வந்துள்ளது! என் தந்தை இங்கே தன் தன் தவத்தை இயற்றி சூரிய தேவனின் கருணைக்குப் பாத்திரமாகி இருக்கிறார்!” இதைக் கேட்ட கிருஷ்ணன் தன் சக்தியை எல்லாம் திரட்டி எழுந்து கொண்டு மீண்டும் பாமாவைத் தூக்கிக் கொண்டான். இந்தக் குகையில் தான் இன்றிரவைக் கழிக்க வேண்டும் என்றும் முடிவு செய்து கொண்டான். வரும் வழியெங்கும் கிருஷ்ணன் நன்கு கவனித்துப் பார்த்துக் கொண்டே தான் வந்திருந்தான். தனக்கு முன்னால் சென்றவர்களின் காலடித் தடங்களை நன்கு உற்று நோக்கி இருந்தான். ஒரு காலடித் தடம் நிச்சயமாக ஒரு மாபெரும் உருவம் படைத்த கரடியுடையது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அதோடு ஓர் இடத்தில் ஒரு பெரிய பாறையை அந்தக் கரடி உருட்டித் தள்ளி இருந்தது. பாறைகளுக்கு அடியில் தனக்கு உணவாக ஏதேனும் கிடைக்குமா எனப் பார்த்திருக்க வேண்டும்.  மேலும் அது ஒரு பெண்மானை அடித்துக் கொன்று பாதி உண்ட பின்னர் மிச்சத்தை அங்கேயே மறைத்தும் வைத்திருந்தது.

கிருஷ்ணன் குகை இருக்கும் உயரத்தைக் கண்டான். ஆம், இது நிச்சயமாக சூரியதேவனின் குகையாகத் தான் இருக்க வேண்டும். அதில் சந்தேகமே இல்லை. அந்தக் குகையின் நுழைவாயிலுக்கு அருகே இருந்த பாறையில் சூரியதேவனின் சிற்பம் செதுக்கப்பட்டிருந்தது. ஏழு குதிரைகள் இழுக்கும் ரதத்தில் சூரிய தேவன் பயணம் செய்யும் காட்சி சித்தரிக்கப்பட்டிருந்தது. கிருஷ்ணன் திகைப்புடன் பார்த்துக் கொண்டிருந்தான். சாத்யகியை எங்கே கொண்டு சென்றிருக்கிறார்கள்? யார் கொண்டு சென்றிருக்கின்றனர்? அது சரி! இந்தக் குகையை இரு தெய்வீகக் காவலர்கள் காவல் காப்பதாக சத்ராஜித் சொல்வாரே! அவர்கள் எங்கே? இந்தக் குகையின் வாயிலில் இல்லாமல் அவர்கள் எங்கே சென்றிருப்பார்கள்? இந்தப் பயணம் இந்தக் குகையுடன் முடிகிறதா? அல்லது தொடர்கிறதா? அப்படி முடிகிறதெனில் ச்யமந்தகமணி இங்கே கிடைக்குமா? அல்லது அது எங்கே உள்ளது? அதோடு இது வரையிலும் அவன் தொடர்ந்து வந்த கரடியின் காலடிச் சுவடுகள், இதுவரை காணக் கிடைத்தவை இப்போது எங்கே போயின? அவை எங்கே முடிவடைந்தன?ம்ம்ம்ம்ம்? கிருஷ்ணன் யோசித்துக் கொண்டிருந்தான்.

இதோ சூரிய அஸ்தமனம் நெருங்கிக் கொண்டிருக்கிறது. விரைவில் சூரியன் அஸ்தமனம் ஆகிவிடுவான். தன்னுடைய தேடல் பணியில் இவ்வளவு தாமதம் ஏற்பட்டதுக்குக் கிருஷ்ணன் எரிச்சல் அடைந்திருந்தான். ஆனால் என்ன செய்வது? சத்யபாமாவை அந்தக் குகையின் நுழைவாயிலில் உட்கார்த்தி வைத்தான். தன் மனதுக்குள்ளாக சூரியனுக்குப் ப்ரீதியான காயத்ரி மந்திரத்தை ஜெபித்தான். இதன் மூலம் சூரியனை வழிபட்டுத் திருப்தி செய்ய முடியும் என்பது கிருஷ்ணன் நம்பிக்கை. மேலும் ஓர் சில இலைகளை அங்கிருந்த சூரியனின் சிற்பத்தின் மேல் அர்ப்பணித்துவிட்டுக் கிருஷ்ணன் தான் மட்டும் குகைக்குள் நுழைந்தான். சத்யபாமாவை குகைக்குள் கொண்டு வர அவன் அவசரப்படவில்லை. மெதுவாகக் குகையை ஆராய்ந்தான். எங்காவது ஏதேனும் காட்டு மிருகம் ஒளிந்திருந்து திடீர் என மேலே பாய்ந்துவிட்டால்? எதற்கும் கவனமாக இருக்க வேண்டும். குகை அவன் நினைத்தது போல் கும்மிருட்டாக இருக்கவில்லை. குகையின் மேல் கூரையில் ஆங்காங்கே ஒரு சில வெடிப்புகள் இருந்தன. அவற்றின் வழியாக சூரியனின் ரச்மி இதமாகக் குகையினுள் விழுந்து வெளிச்சத்தை ஏற்படுத்தியதுடன் அந்தச் சூழ்நிலைக்கு ஓர் ரம்மியத்தையும் கொடுத்துக் கொண்டிருந்தது. குகையின் சுவரிலும் சூரியக் கிரணங்கள் விழுந்து பிரதிபலித்துக் கொண்டிருந்தன.

சத்ராஜித் தன்னுடைய தவத்தை இங்கே வைத்துக் கொண்டு அதன் மூலம் சூரியனின் கருணைக்குப் பாத்திரமாக ஆகி இருந்தான் எனில் அதில் நிச்சயம் ஏதோ இருக்கவேண்டும். சூரியன் அவனுக்கு இங்கேதான் ச்யமந்தகமணியைப் பரிசளித்தான் எனில்! அதற்கு என்ன காரணம் இருக்க வேண்டும்? மெல்ல யோசித்த கிருஷ்ணன் தன் பலமனைத்தும் சேர்த்துக் கொண்டு உரக்க, “உள்ளே யாரேனும் இருக்கிறீர்களா?” என்று கூவினான். ஆனால் அவன் குரல் தான் எதிரொலியாக மீண்டும் கேட்டது! உள்ளே இருந்து பதில் ஏதும் வரவில்லை. மீண்டும் சுற்றும் முற்றும் பார்த்த கிருஷ்ணன் ஓர் இடத்தைக் கண்டதும் கூர்ந்து கவனித்தான். ஆம் இரண்டு நபர்கள் இந்தக் குகையில் இருந்திருக்க வேண்டும். ஏனெனில் புற்களாலும், இலைகளாலும் ஆன இரு படுக்கைகள் அங்கே காணப்பட்டன. அதில் யாரோ படுத்திருந்தற்கான அறிகுறிகளும் தெரிந்தன. மேலும் குளிர் காய்வதற்கென நெருப்பு மூட்டப்பட்டிருந்ததற்கான தடயங்களும் காணக் கிடைத்தன.

Saturday, February 13, 2016

அதோ! அதுதான் புனிதமான சூரியனின் குகை!

வேறு வழியில்லை என்பதைப் புரிந்து கொண்ட பாமாவும், “சரி, சரி! உங்களுக்கு என்ன செய்ய வேண்டுமோ செய்து கொள்ளுங்கள்!”என்று கொஞ்சம் மனக்கசப்புடனேயே கூறினாள். அவளுக்குத் தன்னிடமே வெறுப்பு உண்டாயிற்று. தன் கண்களை மூடிக் கொண்டு தன்னுடைய அலங்கோலமான நிலையைச் சிறிதேனும் மறக்க விரும்பினாள். கண்ணன் அவளை அடக்கமற்ற பெண் என நினைத்துக் கொள்வான்! ஆம்! அவ்வளவு மோசமாக அரைகுறையான ஆடையுடன் அவள் காணப்படுகிறாள்! ஆனால் இப்போது அவன் கட்டளைகளுக்குக் கீழ்ப்படுவதைத் தவிர வேறு வழியில்லை! கிருஷ்ணன் மெல்ல அவளை எழுந்து அமர உதவி செய்தான். ஆனாலும் அவளால் முடியவில்லை. மிகவும் சிரமத்துடனேயே எழுந்து கொண்டாள். உட்கார முடியாமல் உட்கார்ந்து கொண்டாள். அவளுக்குக் கிருஷ்ணன் சில பழங்களையும், அவன் கொண்டு வந்த உணவிலிருந்து ஒரு சிறு பகுதியும் உண்ணக் கொடுத்தான். காட்டிலிருந்து அப்போதே புத்தம்புதிதாக எடுக்கப்பட்ட காய், கனிகள் போன்ற உண்ணத் தகுந்த உணவுகள் அங்கே நெருப்பில் வாட்டப்பட்டு அவளுக்கு உண்ணக் கொடுத்தான். அவள் உணவைக் கண்டதும் மிகுந்த ஆர்வத்துடன் உண்ண ஆரம்பித்தாள். மிகுந்த பசியோடு இருந்த அவளுக்கு இந்த உணவு தேவாமிர்தமாக இருந்தது.

அங்கிருந்த ஊற்றிலிருந்து அவளுக்குக் குடிக்க நீரையும் கொண்டு வந்து தந்தான் கண்ணன். நீர் கொண்டு வரப் பாத்திரமோ வேறு எந்த சாதனங்களோ இல்லாததால் தன்னிரு கரங்களிலேயே முகர்ந்து வந்து கொடுத்தான். அவன் கரங்கள் அவள் உதடுகளில் பட்டபோது பாமாவுக்கு அவனை அப்படியே கட்டி அணைக்க வேண்டும் போல் உள்ளுணர்வு பொங்கி எழுந்தது! கஷ்டப்பட்டுத் தன்னை அடக்கிக் கொண்டாள். பாமாவின் உயிருக்கு ஆபத்து ஏதும் இல்லை என்பதைக் கண்டு கொண்ட கிருஷ்ணன் நிம்மதி அடைந்தான். ஆகவே அவன் அங்கிருந்து மெல்ல மெல்ல முன்னேறிச் சென்று காட்டை விட்டு வெளியேறி சமவெளியில் மலை உச்சியில் ஒரு குகையைப் பார்த்தான். அந்த மலை திடீரென அவன் முன்னே தோன்றியதைப் போல் மேலெழுந்து நின்றது! அவர்கள் இருவரும் அந்த நீர்நிலைக்கு அருகேயே இரவைக் கழிக்க முடியாது! ஏனெனில் காட்டு மிருகங்கள் இரவில் நீர் அருந்த அங்கே வரலாம். அவர்கள் மிருகங்களுக்கு இரையாகலாம். ஆகவே கிருஷ்ணன் யோசனையில் இருந்தான். சுற்றும் முற்றும் பார்த்து ஊரியைத் தேடினான். ஆனால் ஊரியைக் கண்ணால் பார்க்கவே முடியவில்லை. தன்னுடைய குட்டியை மட்டும் கிருஷ்ணனுக்கு அருகே வைத்துவிட்டு அது எங்கோ சென்றிருந்தது. எங்கே போயிற்று அந்தப் பொல்லாத பூனை?  குட்டிப் பூனையோ இன்னமும் கண்களைத் திறக்கவில்லை. கிருஷ்ணனை ஆதரவாகப் பற்றிக் கொண்டு நிம்மதியாகத் தூங்கிக் கொண்டிருந்தது.

அவன் இப்போது சத்யபாமாவைத் தூக்கித் தான் செல்லும்படியாக இருக்கும். அப்போது இந்தக் குட்டிப் பூனையை என்ன செய்வது? இங்கேயே விட முடியாது! காட்டுமிருகங்களுக்கு இரையாகிவிடுமே! தன்னுடைய உத்தரீயத்தில் மீதமிருக்கும் பகுதியை ஒரு தொட்டில் போல் மாற்றிக் கட்டி அதைத் தன் தோளில் பூணூலைப் போல் போட்டுக் கொண்டு அந்தக் குழிவான பகுதியில் பூனைக்குட்டியை அமர வைத்தான். பின்னர் சத்யபாமாவைத் தூக்கித் தன் தோள்களில் போட்டுக்கொண்டான். மெல்ல நடந்து காட்டுப்பாதைக்கு வர, அங்கே அவனுக்கு முன்னால் ஊரி அவனுக்காகக் காத்திருந்தது. அதைப் பார்த்த கிருஷ்ணன், “பொல்லாத பூனையே! எங்கே சென்றுவிட்டாய் இத்தனை நேரம்?” என்று அதட்டலாகக் கேட்டான். ஊரியோ அவனையும் அவன் தோளில் தன் எஜமானியையும் பார்த்ததும் சந்தோஷக் கூச்சலிட்டது! அந்த அடர்ந்த காட்டுக்குள்ளிருந்து அவர்கள் வெளியேறினார்கள். இப்போது பாதை நேரே அந்த மலை உச்சிக்குச் சென்றது. அந்த மலை முழுவதும் சூரிய ஒளியில் குளித்துக் கொண்டிருந்தது. சத்யபாமாவைப் பார்த்தான் கிருஷ்ணன்.

“சத்யா, இப்போது நீ உன்னுடைய வலக்காலின் துணையோடு நடக்கலாம். என் தோள்களைப் பிடித்துக் கொள். நான் அப்படியே என் இடக்கையால் உன்னை அணைத்துப் பிடித்து நடத்துகிறேன். என் வலக்கை சுதந்திரமாக இருந்தால் தான் மேலே செல்லும் வழியை என் அரிவாளால் சுத்தம் செய்ய முடியும்; அதோடு காட்டுமிருகங்கள் வந்தாலும் அவற்றை எதிர்கொள்ள வசதியாக இருக்கும். ஆபத்தை எதிர்கொள்ளும்போது என் பின்னால் மறைந்து கொள்!” என்றான். அவளுடைய சுளுக்கில்லாத காலின் உதவியோடு அவளை மெல்ல நிற்க வைத்த கிருஷ்ணன், அவளை மெல்ல நடத்தினான். சத்யா அவன் தோள்களைப் பிடித்துக் கொண்டு தொங்கிய வண்ணம் ஒரு கையை அவனைச் சுற்றிப் போட்டுக் கொண்டு நடந்தாள். சத்யபாமா தன்னை மறந்து போயிருந்தாள். மெய்ம்மறந்த நிலையில் நடந்தாள் அவள். இது நனவா, கனவா என்னும் எண்ணம் அவளுக்கு மீண்டும் எழுந்தது. இது கனவெனில் இந்தக் கனவே தொடரட்டும்! கடவுளே, என் ஆசையைப் பூர்த்தி செய்!

இது உண்மையாக இருந்தால், தான் பட்ட  கஷ்டங்கள் ஏதும் வீணாகவில்லை. சிரமங்களுக்குப் பலன் கிடைத்து விட்டது. அவள் கனவுலகின் நாயகன், அவளுடைய பிரபு! அவனுடன் அவள் இம்மாதிரிச் செல்வதற்கு எவ்வளவு சிரமங்கள் பட்டாலும் தகுமே! இதற்குத் தானே அவள் தன் வாழ்நாள் முழுவதும் காத்திருந்தாள்!  மேலும் அவள் தன்னுடைய எதிர்காலம் இருளில் மூழ்கிவிட்டது என்பதையும் நன்கறிந்திருந்தாள். இனிமேல் அவள் தன்னுடைய பிறந்த வீட்டிற்குச் செல்வதை நினைத்துக் கூடப் பார்க்க முடியாது! அது நடவாத காரியம். யாதவக் குலமே அவளுக்கு எதிராக இருந்தாலும் ஆச்சரியம் இல்லை. எந்த யாதவனும் அவளை மணக்க முன்வரப் போவதில்லை. ஆகவே இந்தச் சில நிமிஷங்களுக்குக் கிடைத்திருக்கும் சந்தோஷத்தை அது சிறிது நேரமே ஆனாலும் முழுவதும் அனுபவிக்க விரும்பினாள் பாமா! இதை இழக்க விரும்பவில்லை அவள்! மேலே ஏறுவது கஷ்டமாகத் தான் இருந்தது. செங்குத்தான அந்த மலைப்பாதையில் ஏறுவது மிகக் கஷ்டமான ஒன்றாக இருந்தது. ஆங்காங்கே கொஞ்சம் நின்று மூச்சு வாங்கிக் கொண்டு தங்களை ஆஸ்வாஸப் படுத்திக் கொண்டே அவர்கள் மேலேறினார்கள்.

இப்போது பாதை ஒரு முடுக்கில் திரும்பியது!அங்கே அவர்கள் திரும்புகையில் சத்யபாமா தன் கைகளைக் கிருஷ்ணனிடமிருந்து விடுவித்துக் கொண்டாள். அந்தப் பாதையின் உச்சியில் தெரிந்த ஒரு இடத்தைத் தன் கரங்களால் சுட்டிய வண்ணம், “இதோ! அந்தப் புனிதமான குகை!” என்று கூறினாள். அப்போது பார்த்து அவளுடைய சுளுக்குக் கால் அவளுக்கு உதவாமல் போகவே சத்யபாமா நிற்க முடியாமல் கீழே விழுந்தாள். வலி பொறுக்க முடியாமல் அலறினாள். ஆனாலும் தன் நடுங்கும் கரங்களோடு அந்தக் குகையைச் சுட்டிக் காட்டிய வண்ணம், “இது தான் அந்தப் புனிதமான குகை!” என்று மீண்டும் கூறினாள். கிருஷ்ணன் அவள் சுட்டிக்காட்டிய பக்கம் பார்த்தான். அங்கே அந்த மலைச்சிகரத்தின் பின்னணியில் ஒரு பெரிய பாறை காணப்பட்டது. அந்தப் பாறையின் ஒரு முனை நீண்டு முன் வந்திருந்தது. அது அந்தக் குகையில் வாயிலாக இருக்கலாம் எனக் கிருஷ்ணன் நினைத்தான். அந்தப் பாறையின் பளபளப்பு ஒரு வைரக்கல்லைப் போல் அந்தச் சூரிய ஒளியில் பிரகாசித்துக் கொண்டிருந்தது. மாலைச் சூரியன் தன் செந்நிறக் கிரணங்களால் அந்தப் பாறையின் மேல் விழுந்து அதைத் தங்கம் போல் ஆக்கிக் கொண்டிருந்தான். அந்தக் கிரணங்கள் அங்கே வந்து விழுந்ததைப்பார்த்த கிருஷ்ணனுக்கு எண்ணற்ற தங்க ரேகைகள் அந்தப்பாறையின் மேல் படிந்து அதைத் தங்கமாக மாற்றிக் கொண்டிருப்பது போல் தோன்றியது. இது ஒரு அழகான, அற்புதமான காட்சி தான்! ஆம், உண்மையாகவே இது தான் சூரியக் கடவுளின் வீடாக இருக்க வேண்டும்.

Thursday, February 11, 2016

கண்ணனின் சிசுருஷைகள்!

இப்போது அந்த மனிதன் அவள் அருகே மண்டியிட்டு அமர்ந்திருந்தான். அவன் முகம் அவள் பார்க்கக் கூடிய கோணத்தில் இருந்தது. தன் கண்களைத் திறந்து அவனைப் பார்த்தாள். அப்படி ஒன்றும் புதிய முகமாகத் தெரியவில்லை. அவள் கனவிலும், நனவிலும் கண்டு கொண்டிருந்த முகம் தான் அது. அவள் சிறுமியாக இருக்கும்போதிலிருந்தே எந்த முகத்தைக் கண்டு உயிர் வாழ நினைத்தாளோ, எந்த முகத்தைக் கண்டால் அவள் முகம் மட்டுமில்லாமல் உள்ளமும் மலருமோ, தன் உயிரைக் கொடுத்தாவது எந்த முகத்தைக் காண நினைத்தாளோ அந்த முகம் தான் அது! அவள் வீட்டு மனிதர்கள் யாருடைய முகமும் இல்லை இது! அவள் வீட்டு மனிதர்களின் முகம் இப்படிப் பளிச்சென இருக்காது. இந்த  முகத்தில் வலியோ, வேதனையோ, பயமோ அல்லது தாங்க முடியாக் குற்ற உணர்வோ காணப்படவில்லை. பளிங்கு போன்ற முகம். ஆனால் கருநிறப் பளிங்கு! ஆஹா! பாமா நிச்சயம் கனவு தான் காண்கிறாள்! இல்லை எனில் இந்த முகம் எப்படி அவள் அருகே வர முடியும்! இது நினைவில்லை! கனவு! ஆனாலும் நல்லதொரு கனவு! அந்த முகம் அவள் உள் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தியது! மீண்டும் கூர்ந்து பார்த்தாள் பாமா! அந்த முகத்தில் கர்வமோ, அகம்பாவமோ, அலட்சியமோ அல்லது வெறுப்போ, இகழ்ச்சியோ காணப்படுகிறதா? இல்லை, இல்லவே இல்லை! இது எப்படி சாத்தியம்!

மாறாக அந்த முகத்தில் ஒரு தெய்விகத் தன்மையும், அமைதியும் அன்றோ நிலவுகிறது. ஒரு பரிசுத்தம் காணப்படுகிறதே! வெகுளித் தன்மையும் தீங்கில்லா முகபாவமுமே காண்கிறேனே! இந்த முகம் இப்போதைய இந்த உணர்வுகளைத் தான் வெளிப்படுத்துகிறதே தவிர வேறெதையும் ஒளித்து மறைக்கவில்லை! நிச்சயமாய்ச் சொல்ல முடியும்! சற்றும் பயமின்றிக் காணப்படும் இந்த முகம் பிறர் தன்னைப் பார்ப்பதிலிருந்து தன்னை ஒளித்துக்கொள்ளவும் செய்யாது! அந்தக் கண்கள்! கருணைப்பிரவாகமாகப் பொழியும் கண்கள்! அவை தான் எத்தனை பிரகாசமாக இருக்கிறது! எல்லையற்ற இந்தப் பரந்த வாழ்க்கையைக் கண்டு சற்றும் அஞ்சாமல் சந்தோஷமாகப் பற்பல வீரதீர சாகசங்களைச் செய்தும் சற்றும் கர்வம் கொள்ளாது கருணையும், அன்பும் மட்டுமே காட்டும் கண்கள்!அவை அவனுக்கு ஒரு அற்புதமான உயர்ந்த மதிப்பைக் கொடுக்கின்றனவே! அவனே தன் திறமையைத் தானே பார்த்துக் கொள்ளும்படியானதொரு நிலையைக் கொடுக்கிறதோடு அல்லாமல், இவ்வுலகத்தினரையும் இதை எல்லாம் பார்க்க வைத்ததோடு அதன் மூலம் அவர்களையும் இதற்கெல்லாம் தக்கவர்களாக மாற்றும் கண்கள்!

அந்த அரை மயக்கத்தில் சத்யபாமா தான் ஓர் தெய்வீகமான சக்தியின் முன்னர் இருப்பதை உணர்ந்து கொண்டாள். அவள் இன்று வரை ஒரு ஆணின் அருகாமையில் இவ்வளவு அருகாமையில் இருந்ததில்லை. இந்த மனிதனின் உடல் வலிமையும் பொருந்தி உள்ளதோடு இளமைத் துள்ளலோடும் இருக்கிறது! அவனுடைய கருநிறம், உடலின் நிறம் அவன் தலைமயிரின் நிறத்தோடு கலந்து காணப்படுகிறது. அந்தத் தலைமயிர் மட்டும் சுருள்,சுருளாக இல்லாவிட்டால் அவன் உடலோடு பொருந்தியே அன்றோ காணப்படும்! அப்போது அவன் தன்னை விசித்திரமாகப் பார்த்துக் கொண்டிருப்பதை உணர்ந்த சத்யபாமாவின் உள்ளத்தில் ஏதோ செய்தது. ஒரு விசித்திரமான இன்னதென்று சொல்லமுடியா உணர்வு! ஒரு சிறு போராட்டம்! ஆஹா! இத்தனை வருடத் தனிமை! அவளுடைய போராட்டங்கள், சொல்ல முடியா மனோ நிலைகள்! அதன் காரணிகள், அதன் மூலம் விளைந்த பல அசிங்கமான நிகழ்வுகள்! என எல்லாம் அவள் முன்னே வந்து சென்றது. அந்த ஒரு நிமிடத்தில் தான் பிறந்ததில் இருந்து அன்றுவரையான வாழ்வை அவள் திரும்ப வாழ்ந்து முடித்தாள்! தன்னருகே இருந்த இளைஞனைப் பார்த்து மெல்லப் புன்னகை செய்தாள்! அவனும் அவளைப் பார்த்துத் திரும்பப் புன்னகைத்தான். அவள் மனதில் என்ன நினைக்கிறாள் என்பதை அவன் புரிந்து கொண்டான் என்பதை பாமா உணர்ந்து கொண்டாள்.

ம்ஹூம், இது நிச்சயம் உண்மையாக இருக்க முடியாது! அவள் நல்லதொரு சொப்பனத்தைக் காண்கிறாள்! என்ன அழகான கனவு! அவளையும் அறியாமல் புலம்ப ஆரம்பித்தாள்! “கோவிந்தா! கோவிந்தா! ஏன் என்னை விடாமல் கனவிலும், நனவிலும் துரத்துகிறாய்? இப்போதும் என் கனவில் வந்துள்ளாயே! கோவிந்தா! உன் போன்ற பராக்கிரமங்கள் நிறைந்ததொரு சாகசங்கள் புரிந்ததொரு வீரனுக்கு மனைவியா நான் சிறிதும் தகுதி உள்ளவள் ஆக மாட்டேன்!” எனத் துயருடன் கூறினாள். பின்னர் அவளையும் அறியாமல் அழுகை பொங்கி வரக் குலுங்கிக் குலுங்கி அழுதாள்.  ஆனால் என்ன ஆச்சரியம்! உடனடியாக அவன் பேசினான்! ஆம்! பேசி விட்டான்!”முதலில் உன் அழுகையை நிறுத்து!  நீ கனவுலகில் இருந்தாயெனில் நானும் அதே கனவுலகில் தான் இருப்பேன்! அதைப் புரிந்து கொள்! உன் அழுகையை நிறுத்து!” என்றான்.

இப்போது சத்யபாமா தான் அணிந்திருந்த உடையைப் பார்த்தாள். அது தான் அணிந்து வந்த உடை அல்லவென்றும், இப்போதே கோவிந்தனால் தனக்கு அணிவிக்கப்பட்டிருக்க வேண்டும் என்பதையும் புரிந்து கொண்டாள். அந்த உடையை எடுத்துத் தன்னை முழுதும் போர்த்திக் கொண்டாள். கண்ணன் அவளைப் பார்த்துக் குறும்பாகச் சிரித்தான். அவன் கண்கள் குறும்பில் கூத்தாடின! “ஆஹா! இந்தத் துணி உனக்கு முழுவதும் மறைத்துக் கொள்ளப் போதுமானதாக இல்லை! ஆகவே நீ அடக்கமாக இருக்கவேண்டும் என்று நினைப்பதை விட்டுவிடு!” என்று சொல்லிவிட்டுச் சிரித்தான். பாமா அதைக் கவனிக்காமல் எழுந்திருக்க முயற்சித்தாள். அந்த முயற்சியில் தோல்வியுற்றுக் கீழே மறுபடி படுத்தவள் வெறி கொண்டாற்போல் அழ ஆரம்பித்தாள். கிருஷ்ணன் சற்றும் தயங்காமல் அவளை ஓங்கி அறைந்தான். அது ஒன்றுதான் அவளைத் தற்சமயம் இப்போதைய நிலைக்குக் கொண்டுவரக் கூடியது என்பதை உணர்ந்தே அவ்வாறு செய்தான். அதிர்ச்சியில் பாமாவும் அழுகையை நிறுத்தினாள்.

“முதலில் அழுவதை நிறுத்து!” என்று கண்டிப்பாகவும், கட்டளையாகவும் சொன்னான் கோவிந்தன். பின்னர், “இப்போது எழுந்திருக்க முயற்சி செய்யாதே! உன்னால் முடியாது! உனக்கு இப்போது நடக்க முடியாது! உன்னுடைய கணுக்காலில் சுளுக்கு ஏற்பட்டுள்ளது. வீக்கமும் இருக்கிறது. இப்போது நடக்க முயற்சி செய்து என் வேலையை இன்னமும் கடினம் ஆக்கிவிடாதே!” என்றான்.

Wednesday, February 10, 2016

கனவா? நனவா? பாமாவின் தவிப்பு!

சத்யபாமாவிற்கு நினைவு வந்து சிறிது நேரம் ஆகி விட்டது. ஆனாலும் அவளால் கண்களைத் திறக்க முடியவில்லை. மிகவும் முயன்று பார்த்தும் முடியவில்லை. அவள் உடலெங்கும் வலி! தாங்க முடியாத வலி! அவள் தலையோ ஒரு கல்லைப் போல் கனத்தது. அதோடு அவளுக்குத் தான் இவ்வுலகில் இருக்கிறோமா அல்லது வேறேதானும் உலகில் இருக்கிறோமா என்னும் எண்ணம்! கனவா? நனவா? தான் உயிருடன் இருக்கிறோமா? அல்லது வேறோர் உலகுக்கு வந்துவிட்டோமா? உயிருடன் இருந்தால்? அதை நம்புவதா? அல்லது இல்லை என நம்புவதா? எங்கே இருக்கிறாள் அவள்? அதெல்லாம் சரி! இந்த உடல், இது என் உடலா? அல்லது வலிகளின் மொத்த உருவமா? என் உடலில் எங்கே இருந்து எப்படி இவ்வளவு வலி வந்தது? ம்ம்ம்ம்? மெல்ல, மெல்ல அவளுக்கு நினைவு வந்தது! அந்த முட்புதருக்கிடையே அவள் புகுந்தது வரை நினைவில் உள்ளது. ஆனால் இப்போது அவள் அங்கில்லை. முட்புதரைக் கடந்ததும் என்ன நிகழ்ந்தது? சத்யாவுக்கு நினைவில் வரவில்லை! “சோ”வென்ற ஓசை அவள் காதில் விழுந்தது. ஒரு அழகான லயத்தோடு அது கேட்டது! என்ன இது?

ஆம்! ஒரு பிரவாகம்! நதியா? அல்லது அருவியா? ஓடையா? தெரியவில்லை! ஆனால் நீர் பாறைகளில் விழுந்து எழுந்து ஓடும் ஓசை காதுக்கு ஓர் இனிமையான சங்கீதம் போல் கேட்கிறது. இத்தனை யோசனைகளிடையே அவள் மீண்டும் களைத்துச் சோர்ந்து போனாள். திறக்க முயன்ற அவள் இமைகள் தானாகவே மூடிக் கொண்டன. மீண்டும் சத்யா கண்களைத் திறந்தாள். இப்போது அவளால் நன்கு திறக்க முடிந்தது. நினைவும் இருந்தது. தான் எவ்வளவு நேரமாக உணர்வின்றிக் கிடந்தோம் என்பதே அவளுக்குப் புரியவில்லை. ஆனால் அவள் இவ்வுலகில் தான் இன்னமும் இருக்கிறாள். ஜீவித்திருக்கிறாள். ஆனால் எங்கே இருக்கிறாள்? அந்த முட்புதருக்குள்ளே நுழைந்து வெளிவந்தவள் அதன் பின் என்ன ஆனாள்? இந்த இடத்திற்கு எப்படி வந்தாள்? அவள் உடல், கை, கால்கள் போன்றவற்றை ஒரு மனிதன் சுத்தம் செய்கிறான்! அவன் ஏன் செய்ய வேண்டும்? அவனுக்கு யார் இந்த உரிமையைக் கொடுத்தது? அவளைத் தொட்டுச் சுத்தம் செய்ய என்ன தைரியம் அவனுக்கு? சத்யா தன்னால் இயன்றவரை அந்தப் புதிய மனிதனைத் தன் கரங்களால் தடுக்க நினைத்தாள். வாயினாலும் கத்த நினைத்தாள். ஆனால், என்ன ஆச்சரியம்! அவள் கரங்களும் மேலெழும்பவில்லை! வாயைத் திறந்தாலோ தொண்டையில் ஏதோ அடைத்துக் கொள்கிறது. சொற்கள் அங்கேயே சிக்கிக் கொண்டாற்போல் தொண்டை அடைத்துக் கொண்டிருக்கிறதே! என்ன இது?

கனவுகளைப் போன்ற தோற்றங்கள் அவள் முன்னே தோன்றின. அவள் தந்தை அவர்கள் மாளிகையில் நுழைவாயிலுக்கருகே கிருஷ்ணனின் காதுக் குண்டலங்களை எடுக்கிறார். ஆனால் அதற்கு முன்னர்! அவரல்லவோ அதை நழுவ விட்டார்! அவள் தலையை அப்படியும், இப்படியும் அசைத்தாள்! அவள் ஏதோ பாட வேண்டும் என நினைக்கிறாள்! இல்லை, இல்லை நினைத்தாள்! என்ன பாடல் அது? தெரியவில்லை. ஆனால் அந்தப் பாடலின் சில வரிகள் அவள் தானே பாடிச் சேர்த்தாள்! மூலப்பாடலில் இல்லாத சில வரிகள்! ஆம், ஆம், அவளால் தான் சேர்க்கப்பட்டது!  என்ன வரிகள் அவை? முதலில் அந்தப்பாடல் என்ன பாடல்? எதைக் குறித்துப் பாடப்பட்டது? சத்யாவின் தலைக்குள்ளாக ஏதேதோ மின்னலைப் போல் தோன்றியதாக அவள் உணர்ந்தாள். பின்னர் அந்தப் பாடலின் பெயர் அவள் நினைவில் வந்தது! ஆம், ஆம், ஒரு வீரனின் மனைவி கொடுக்கும் பிரியாவிடைப்பாடல் அது! போருக்குச் செல்லும் கணவனுக்கு மனைவி பாடும் பிரியாவிடைப்பாடல் அது! ஹூம், சத்யபாமாவும் ஒரு வீரனின் மனைவியாகத் தான் நினைத்தாள்; நினைக்கிறாள். ஆனால் அந்த வீரன்? அவள் எவ்வளவு யோசித்தும் முழுப்பாடலும் அவள் நினைவுக்கு வரவில்லை. அவளால் பாடப்பட்ட அந்தக் குறிப்பிட்ட வரிகளும் அவள் நினைவில் வரவில்லை! அப்போது அவளுள் திடீரென ஒரு தோற்றம்!

அவள் சிறிய தந்தை பிரசேனன் அவள் தகப்பனிடம் விடைபெற்றுச் செல்லும் காட்சி, அவள் கண் முன்னர் தோன்றியது!  அதுவும் பிரம்ம முஹூர்த்தம் ஆரம்பிக்கும் சமயத்தில்! எங்கே போனார் அவர்? இப்போது எங்கே எப்படி இருக்கிறார்? அவரைத் தானே அவள் தேடி வந்தாள்! அவள் உடல் நடுங்கியது! அந்தக் கரடிகள்! பயங்கரமான கரடிகள்! அவற்றிடமிருந்து தப்பவே அவள் ஓடி வந்தாள்! முட்புதரில் மாட்டிக் கொண்டாள். இப்போது சத்யபாமாவுக்கு முழு நினைவும் வந்துவிட்டது! ஆம், அந்தக் கரடிகள்! சாத்யகியைத் தூக்கிக் கொண்டு சென்றுவிட்டன! அவளை அவை கவனிக்கவில்லை என்பதே ஒரு நன்மையாக எண்ணிக் கொண்டு அவள் அவற்றிடமிருந்து தப்பி ஓடி வந்தாள்! முட்புதர்களில் மாட்டிக் கொண்டாள்! அவள் அவற்றிலிருந்து வெளியேறியபோது அவள் பாதங்களிலிருந்து ரத்தம் ஒழுகிக் கொண்டிருந்தது. உடை முழுவதும் கிழிந்து நார் நாராகத் தொங்கியது. அவளால் இயன்றவரை அவள் ஓடினாள்! ஏதோ ஆகி விட்டது! அப்போது தான் ஏதோ ஆகிவிட்டது! என்ன ஆயிற்று? அவளால் நினைவுக்குக் கொண்டுவர முடியவில்லை! அது என்ன? ஒரு வேளை…..ஒரு வேளை……. அவள் இறந்துவிட்டாளோ?

அப்போது ஒரு மெல்லிய கரம் அவள் தலைக்காயத்தைக் கழுவிக் கொண்டிருந்தது. அந்தக் கரத்தின் மென்மை தெரிந்த அதே கணம் அது தேவையானபோது வலுவாகவும் மாறும் என்பதும் அவளுக்குப் புரிந்தது. அவள் தலைக் காயத்தைக் கழுவியதோடு அல்லாமல் தலைமயிரையும் நன்கு அலசிக் கழுவிய அந்தக் கரம் அதை அவள் முகத்திலிருந்து அகற்றி ஒழுங்கும் செய்தது. யார் இவன்? எப்படி என்னைத் தொட்டு எல்லாவற்றையும் உரிமையுடன் செய்கிறான்? இந்த உரிமையை அவனுக்குக் கொடுத்தது யார்? பாமாவுக்குக் கோபம் வந்தாலும் அவளால் ஏதும் செய்ய முடியவில்லை! அப்போது அங்கே குளிர்காய்வதற்காக நெருப்பு மூட்டப்பட்டிருப்பதையும் அவள் உணர்ந்தாள். பின்னர் அந்த மனிதனின் கரங்கள் அவள் உடலெங்கும் சில மூலிகை இலைகளை நெருப்பில் வாட்டி ஒத்தடம் கொடுப்பதையும் உணர்ந்தாள். வலிக்கு என்னமோ இதமாய்த் தான் இருந்தது. அதோடு உணவு ஏதோ தயார் ஆகிக் கொண்டிருப்பதையும் அந்த நெருப்பின் வாசம் உணர்த்தியது. பாமாவுக்குப் பசி அதிகமாக இருந்தது. ஆகவே இந்த உணவு வாசனையை அவள் வரவேற்றாள். ஆனால் இவை எல்லாம் உண்மையா? இல்லை! இருக்காது! இதெல்லாம் கனவே அன்றி வேறெதுவும் இல்லை! அவள் கனவு காண்கிறாள். இதை அறிய வேண்டி அவள் தன் கண்களை மீண்டும் மூடிக் கொண்டாள். பின்னர் சட்டெனக் கண்களைத் திறந்து பார்த்தால்! இல்லை, இல்லை, அவள் கனவு காணவில்லை! நிஜம் தான்! எல்லாமும் உண்மையே! ஆனால் இவன் யார்? இவ்வளவு உரிமையுடன் அவளைத் தொட்டு அவள் உடலைக் கழுவி விட்டு, காயங்களைத் துடைத்து, முகத்தைத் துடைத்து! சீச்சீ, கொஞ்சம் கூட வெட்கம் இல்லாதவனாக இருக்கிறானே! பாமா கோபத்துடன் எழுந்து அவன் உதவியை மறுக்க முயன்றாள். ஆனால் அவளால் எழுந்திருக்கவே முடியவில்லை. அவள் உடலில் சக்தியே இல்லை!

Tuesday, February 2, 2016

பாமா கிடைத்துவிட்டாள்!

இதற்குள்ளாகக் கிருஷ்ணன் ஊரியின் குரலோசைகளுக்கு உரிய பொருளைப் புரிந்து கொள்ள ஆரம்பித்து விட்டான். ஊரியின் சந்தோஷம் ஒரு “பிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்” என்னும் கத்தலில் அடங்கிவிடும். ஊரிக்கு ஏதேனும் பிடிக்கவில்லை எனில் அது அங்கிருந்து வெளியேறிவிடும். தாங்க முடியாத மகிழ்ச்சி எனில் அவன் உடலின் மேல் உரசித் தன் மகிழ்வை வெளிப்படுத்தும். கோபம் எனில் மிகவும் ஆக்ரோஷமாக ஜொலிக்கும் கண்களோடு, ஒரு “மியாவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்” என்னும் சப்தம். தன்னுடைய முடிவான முடிவைப் பிடிவாதமாக நிலை நிறுத்தும் சுபாவம். சோகம் எனில் பலவீனமானதொரு குரலில் கத்துவது, தனக்குப் பிடிக்காத அல்லது தன்னைப் பிடிக்காத மனிதர்கள் எனில் வாலை நேரே உயரத் தூக்கியவண்ணம் கம்பீரமாக அங்கிருந்து செல்வது! என ஒவ்வொரு உணர்வுகளையும் தனித்தனியே வெளிக்காட்டிவிடும் ஊரி. அதோடு இல்லாமல் மனிதர்கள் பேசுவதையும் புரிந்து கொள்ளும் சக்தியைப் பெற்றிருந்ததோடு அதற்குத் தக்க பதிலைத் தன் முறையில் வெளிக்காட்டும் திறனையும் பெற்றிருந்தது.

கிருஷ்ணனுக்குச் சொல்லவே வேண்டாம். கோகுலத்திலும், விருந்தாவனத்திலும் அவன் சிறுவனாயிருந்த காலங்களிலே பசுக்கள், காளைகள், கன்றுகள் போன்றவற்றின் உணர்வுகளையும் அவற்றின் குரலோசையின் மூலம் அவை தெரிவிக்கும் விஷயங்களைப் புரிந்து கொள்ளும் திறனையும் பெற்றிருந்தான். அதன் பின்னர் மத்ரா வந்த பின்னரோ குதிரைகளோடு அவன் பழகிப் பழகி அவற்றின் உணர்வுகளையும் அவை கனைப்பின் மூலம் சொல்வதையும் தெரிந்து கொள்ளும் திறனைப் பெற்றிருந்த கிருஷ்ணன் இதன் மூலம் பலரின் வெறுப்பையும் சம்பாதித்துக் கொண்டிருந்தான். இப்போது இங்கே இந்தப் பூனை! கிருஷ்ணனுக்குக் கொஞ்சம் ஆச்சரியம் தான். அனைவராலும் துஷ்டாத்மா என வெறுப்புடன் பார்க்கப்படும் பூனை இப்படி மனிதர்களோடு சம்பாஷிக்கும் ஆற்றலை எங்கிருந்து பெற்றது?  ஏதோ பேசத் தெரிந்தாற்போல் அது கூறுவதும் அது தன்னால் புரிந்து கொள்ளப்பட்டதும் கிருஷ்ணனுக்கு இன்னமும் நம்பக் கூட முடியவில்லை. ஆனால் அவனுக்குத் தெரியாத ஒன்றும் உண்டல்லவா? ஊரியின் எஜமானியான சத்யபாமா ஊரி சின்னஞ்சிறு குட்டியாக இருந்த போதிலிருந்தே அதை எடுத்து வளர்த்ததோடு அல்லாமல் அதனோடு பேசிப் பேசி அதை எல்லாம் புரிந்து கொள்ளும் ஒரு ஜீவனாக மாற்றி இருந்தாள் என்பதைக் கிருஷ்ணன் அறியமாட்டானே!  ஆனால் இப்போது ஊரி சொல்வதைக் கிருஷ்ணன் நன்கு புரிந்து கொண்டான். ஊரி அவனை ஏதோ ஒரு வேலைக்கு அழைக்கிறது! ஏதோ செய்யச் சொல்கிறது! அதன் போக்கில் சென்று தான் பார்ப்போமே! கிருஷ்ணன் ஊரி அழைத்த பக்கம் நோக்கி நடந்தான். அது அங்கே அடர்த்தியாக இருந்த புதர்களுக்கு அப்பால் காணப்பட்ட ஓர் திறந்த வெளியை நோக்கிச் சென்றது. சற்றுத் தூரம் சென்ற அது பின்னர் திரும்பிப் பார்த்துக் கிருஷ்ணன் வரவுக்குக் காத்து நின்றது.

ஆனால் கிருஷ்ணனோ அது தன் போக்கில் செல்லட்டும், தான் தன்னுடைய வழியைப் பார்த்துக் கொண்டு செல்லலாம் என நினைத்தான். அந்தப் பிடிவாதமான பூனை இதற்கு இடம் கொடுக்கவே இல்லை. கிருஷ்ணன் இப்போது வந்த வேலையை விட்டுப் பூனை அழைக்கும் வேறு ஏதோ ஒரு வேலையைத் தான் கவனித்தாக வேண்டும். வேறு வழியே இல்லை! வேறு வழியில்லாமல் கிருஷ்ணனும் பூனையின் மனதை மாற்றும் வேலையை விட்டு விட்டான். பூனையின் பின்னேயே சென்றான். பூனைக்குத் தான் என்ன செய்கிறோம் என்பது தெரிந்திருக்கிறது என்பதையும் அதை அது முக்கியமான வேலையாகக் கருதுவதையும் கிருஷ்ணன் உணர்ந்து கொண்டான். அது அந்தத் திறந்தவெளியில் சற்றுத் தூரம் சென்று மறுபடியும் அடர்ந்த புதர்களைத் தாண்டி அந்தப் பக்கம் போய்க் கிருஷ்ணன் வரவுக்கு மீண்டும் காத்திருந்தது. பூனை காட்டிய வழியில் சென்ற கிருஷ்ணன் வழியில் சின்னச் சின்னத் துண்டுகளாக வண்ணத் துணிகளின் துண்டுகள் கிடப்பதைப் பார்த்தான். அந்த வழியாகச் சென்ற ஏதோ ஒரு பெண்ணின் ஆடையிலிருந்து கிழிக்கப்பட்டோ அல்லது கிழிந்தோ அது அங்கே கிடக்க வேண்டும். ம்ம்ம்ம் அப்படி எனில் சத்யபாமா இந்த வழியாகத் தான் சென்றிருக்கிறாளோ? கிருஷ்ணனுக்கு அப்படித் தான் இருக்க வேண்டும் எனத் தோன்றியது.

தன் அரிவாளால் அங்கிருந்த புதர்களை வெட்டித் தள்ளி முன்னேறிய கிருஷ்ணன் மெல்ல மெல்ல அந்தப் புதர்க்காட்டின் மறுபக்கத்துக்கு வந்துவிட்டான். அங்கிருந்த செங்குத்தான மலைப்பாறை ஒன்றின் மறுபக்கத்து முனைக்குக் கிருஷ்ணன் வந்து விட்டான். அந்த முனையில் வந்து நின்று கொண்டிருந்த ஊரி இப்போது மிகப் பரிதாபமாகக் கத்தியது. அதன் குரலில் கிருஷ்ணனை அது அங்கே அழைப்பது புரியவரக் கிருஷ்ணனும் வேகமாக ஊரியின் அருகே சென்றான். அந்த முனைக்குச் சில அடிகள் கீழே காணப்பட்ட ஒரு பள்ளத்தில் ஓர் உருவம் கிடந்தது. கிருஷ்ணன் மனதில் சுருக்கெனத் தைக்கக் கூர்ந்து பார்த்தான். ஆஹா! அது சத்யபாமாவே தான்! கிருஷ்ணன் இதயம் ஒரு கணம் துடிக்க மறந்தது! சத்ராஜித்தின் மகள் இங்கேயா கிடக்கிறாள்? அவளுக்கு என்ன ஆயிற்று? உயிருடன் இருக்கிறாளா இல்லையா? இப்போது கீழே இறங்கிப் பார்த்தால் தான் உண்மை நிலவரம் புரியும். கிருஷ்ணன் மெல்ல மெல்லக் கீழே இறங்க வழியை ஏற்படுத்தினான். பின்னர் வெகு கவனமாகக் கீழே இறங்கினான். சத்யபாமாவின் உடல் கிடந்த இடம் நோக்கிச் சென்றான். அந்த உடலைப் புரட்டி ஆராய்ந்தான்.

இல்லை; சாகவில்லை. சத்யபாமா மயக்கத்தில் கிடக்கிறாள். ஆழ்ந்த மயக்கத்தில் இருக்கிறாள். அவள் உடலில் அங்குமிங்கும் கிழிந்த துணிகளே ஆடையாகத் தாறுமாறாகத் தொங்கியது. அவள் உடலெங்கும் காயங்கள் காணப்பட்டன. முட்களால் அவள் உடல் மட்டுமின்றி உடையும் தாறுமாறாகக் கிழிக்கப்பட்டிருந்தது. அவள் தலையிலிருந்து ஏற்பட்டிருந்த ஒரு காயத்தில் இருந்து வழிந்து வந்த ரத்தம் அவள் முகத்தை முழுவதும் ரத்தமயமாக ஆக்கி இருந்ததோடு அது இப்போது காய்ந்து போய் விகாரமான தோற்றம் அளித்துக் கொண்டிருந்தது. கிருஷ்ணன் அவளை நோக்கிச் சென்றவன் தான் நினைத்தது போல் அவள் இறக்கவில்லை என்பதை உணர்ந்து கொண்டான். அவள் மெதுவாக மூச்சு விட்டுக் கொண்டிருந்தாள். அந்தக் குன்றின் முனையிலிருந்து அவள் விழுந்திருக்க வேண்டும். தவறி விழுந்தாளா? வேண்டுமென்றே விழுந்தாளா என்பது தெரியவில்லை! ஆனால் அப்படி விழும்போது கீழுள்ள பாறையில் அவள் தலை மோதி அடிபட்டிருக்க வேண்டும். அதனால் அவள் நினைவிழந்திருக்கலாம். தன்னுடனேயே வந்த ஊரியைக் கிருஷ்ணன் அதன் எஜமானியின் பக்கம் நிறுத்தி வைத்தான். ஊரியின் குட்டி அப்போது பால் குடிக்க வேண்டி தீனமான குரலில் கத்தவும் தான் அணைத்திருந்த குட்டியை அதன் தாயிடம் விட்டு விட்டுக் கிருஷ்ணன் தன் தலையில் கட்டி இருந்த உருமாலில் இருந்து ஒரு பக்கமாகத் துணியைக் கிழித்து எடுத்தான்.

பாமாவின் தலையில் அந்தக் காயத்தை ஓரளவு துடைத்துச் சுத்தம் செய்து ரத்தப் போக்கை நிறுத்த அந்தத் துணியை மேலும் கிழித்துக் கட்டினான். மீதம் இருந்த துணியை அப்படியே பாமாவின் இடுப்பில் சுற்றிவிட்டான். அவள் உடலை மூடி இருந்த கிழிந்த துணிகளை முடிச்சுக்களைப் போட்டுச் சரி செய்து அவள் உடலையும் மூடிய கிருஷ்ணன் மனதில் அவள் எப்படிப்பட்ட காரியத்தில் இறங்கித் தன்னை எம்மாதிரியான நிலைக்குக் கொண்டு வந்திருக்கிறாள் என்பது புரிய வர மனம் வேதனைப் பட்டது. கடவுளே, கடவுளே, நான் என்ன செய்வேன் என மனதில் நினைத்துக் கொண்டான் கிருஷ்ணன். மேலும் அவள் முகத்தையும், அவள் கை விரல்களில் காணப்பட்ட உடைந்த நகங்களையும், எப்போதும் திருத்தமக இருக்கும் அவள் தலைக்கேசம் அங்குமிங்கும் அவிழ்ந்து தொங்கி முகத்தின் ரத்தத்தில் ஊறிப் போயிருப்பதையும் பார்த்த கிருஷ்ணனுக்கு மனம் இன்னமும் துக்கத்தில் ஆழ்ந்தது. அவன் உள்ளத்தின் அடி ஆழத்திலிருந்து கருணைப் பிரவாகம் எடுத்தது. ஆஹா! இவள் எப்படிப் பட்ட பெண்!

முழுவதும் ஆடம்பர வாழ்க்கையிலும், பணம், பகட்டு, நகை, ஆடம்பரம், உல்லாசம் என வாழ்ந்து வந்த இந்தப் பெண் இன்று எத்தகையதொரு கடினமான வேலையில் ஈடுபட்டிருக்கிறாள்? அதுவும் தனக்காக! தன்னுடைய மனதை வெல்வதற்காக! தன் இதயத்தில் இடம்பிடிப்பதற்காக!  ஏற்கெனவே துவாரகையில் பெரும் பெயரும் புகழும் பெற்றிருக்கும் சாத்யகனின் மகனுக்காகப் பேசப்பட்ட இந்தப் பெண் அவனால் நிராகரிக்கப்பட்டவள்! நிராகரிக்கப்பட்ட இவள் அந்த சாத்யகனின் மகனான சாத்யகியோடு ஓடி வந்ததாகச் சொல்லப்பட்டிருக்கிறாள். பேசப்படுகிறாள்! இது எத்தகையதொரு களங்கம் அவளுக்கு! இத்தனையும் எதற்காக? கிருஷ்ணன் தன் சபதத்தில் வெற்றி அடைவதற்காக! ச்யமந்தகம் அவனால் கண்டுபிடிக்கப்பட வேண்டும் என்பதற்காக! கிருஷ்ணனை வேண்டுமானால் அவள் காப்பாற்றி இருக்கலாம்! ஆனால் இதன் மூலம் அவள் சபிக்கப்பட்டவளாகி விடுகிறாளே! தீராக்களங்கம் ஏற்பட்டு விட்டதே! இத்தனைக்கும் பின்னர் அவளை வேறு எந்த யாதவனும் திருமணம் செய்து கொள்ள முன்வருவானா என்ன? எவரும் திருமணம் செய்து கொள்ள மாட்டார்கள்! அவ்வளவு ஏன்? சத்யபாமாவின் மீது அளவு கடந்த பிரியம் வைத்திருந்த அவள் தந்தை சத்ராஜித் கூட அவளை மீண்டும் ஏற்றுக் கொள்ள மாட்டானே! வெறுத்து ஒதுக்குவானே!

பாமாவை ஓரளவுக்குத் தயார் செய்த கிருஷ்ணன் அவளைத் தூக்கித் தன் தோள்கள் மீது போட்டுக் கொண்டான். மீண்டும் அந்தக் குன்றின் மேல் வந்த வழியே ஏறினான். மேலே வந்ததும் அவளைக் கீழே கிடத்தினான். பின்னர் அவளைத் தூக்கிச் செல்ல வசதியாக அந்தப் புதர்க்காட்டை மேலும் வெட்டித் தேவையான இடைவெளியை ஏற்படுத்தினான். பாமாவையும் தூக்கிக் கொண்டு ஊற்றுக்குளம் இருந்த திக்கை நோக்கிச் சென்றான். ஊரியும் தன் குட்டியை வாயில் கவ்விக் கொண்டு கிருஷ்ணனைப் பின் தொடர்ந்தது.