Wednesday, February 10, 2016

கனவா? நனவா? பாமாவின் தவிப்பு!

சத்யபாமாவிற்கு நினைவு வந்து சிறிது நேரம் ஆகி விட்டது. ஆனாலும் அவளால் கண்களைத் திறக்க முடியவில்லை. மிகவும் முயன்று பார்த்தும் முடியவில்லை. அவள் உடலெங்கும் வலி! தாங்க முடியாத வலி! அவள் தலையோ ஒரு கல்லைப் போல் கனத்தது. அதோடு அவளுக்குத் தான் இவ்வுலகில் இருக்கிறோமா அல்லது வேறேதானும் உலகில் இருக்கிறோமா என்னும் எண்ணம்! கனவா? நனவா? தான் உயிருடன் இருக்கிறோமா? அல்லது வேறோர் உலகுக்கு வந்துவிட்டோமா? உயிருடன் இருந்தால்? அதை நம்புவதா? அல்லது இல்லை என நம்புவதா? எங்கே இருக்கிறாள் அவள்? அதெல்லாம் சரி! இந்த உடல், இது என் உடலா? அல்லது வலிகளின் மொத்த உருவமா? என் உடலில் எங்கே இருந்து எப்படி இவ்வளவு வலி வந்தது? ம்ம்ம்ம்? மெல்ல, மெல்ல அவளுக்கு நினைவு வந்தது! அந்த முட்புதருக்கிடையே அவள் புகுந்தது வரை நினைவில் உள்ளது. ஆனால் இப்போது அவள் அங்கில்லை. முட்புதரைக் கடந்ததும் என்ன நிகழ்ந்தது? சத்யாவுக்கு நினைவில் வரவில்லை! “சோ”வென்ற ஓசை அவள் காதில் விழுந்தது. ஒரு அழகான லயத்தோடு அது கேட்டது! என்ன இது?

ஆம்! ஒரு பிரவாகம்! நதியா? அல்லது அருவியா? ஓடையா? தெரியவில்லை! ஆனால் நீர் பாறைகளில் விழுந்து எழுந்து ஓடும் ஓசை காதுக்கு ஓர் இனிமையான சங்கீதம் போல் கேட்கிறது. இத்தனை யோசனைகளிடையே அவள் மீண்டும் களைத்துச் சோர்ந்து போனாள். திறக்க முயன்ற அவள் இமைகள் தானாகவே மூடிக் கொண்டன. மீண்டும் சத்யா கண்களைத் திறந்தாள். இப்போது அவளால் நன்கு திறக்க முடிந்தது. நினைவும் இருந்தது. தான் எவ்வளவு நேரமாக உணர்வின்றிக் கிடந்தோம் என்பதே அவளுக்குப் புரியவில்லை. ஆனால் அவள் இவ்வுலகில் தான் இன்னமும் இருக்கிறாள். ஜீவித்திருக்கிறாள். ஆனால் எங்கே இருக்கிறாள்? அந்த முட்புதருக்குள்ளே நுழைந்து வெளிவந்தவள் அதன் பின் என்ன ஆனாள்? இந்த இடத்திற்கு எப்படி வந்தாள்? அவள் உடல், கை, கால்கள் போன்றவற்றை ஒரு மனிதன் சுத்தம் செய்கிறான்! அவன் ஏன் செய்ய வேண்டும்? அவனுக்கு யார் இந்த உரிமையைக் கொடுத்தது? அவளைத் தொட்டுச் சுத்தம் செய்ய என்ன தைரியம் அவனுக்கு? சத்யா தன்னால் இயன்றவரை அந்தப் புதிய மனிதனைத் தன் கரங்களால் தடுக்க நினைத்தாள். வாயினாலும் கத்த நினைத்தாள். ஆனால், என்ன ஆச்சரியம்! அவள் கரங்களும் மேலெழும்பவில்லை! வாயைத் திறந்தாலோ தொண்டையில் ஏதோ அடைத்துக் கொள்கிறது. சொற்கள் அங்கேயே சிக்கிக் கொண்டாற்போல் தொண்டை அடைத்துக் கொண்டிருக்கிறதே! என்ன இது?

கனவுகளைப் போன்ற தோற்றங்கள் அவள் முன்னே தோன்றின. அவள் தந்தை அவர்கள் மாளிகையில் நுழைவாயிலுக்கருகே கிருஷ்ணனின் காதுக் குண்டலங்களை எடுக்கிறார். ஆனால் அதற்கு முன்னர்! அவரல்லவோ அதை நழுவ விட்டார்! அவள் தலையை அப்படியும், இப்படியும் அசைத்தாள்! அவள் ஏதோ பாட வேண்டும் என நினைக்கிறாள்! இல்லை, இல்லை நினைத்தாள்! என்ன பாடல் அது? தெரியவில்லை. ஆனால் அந்தப் பாடலின் சில வரிகள் அவள் தானே பாடிச் சேர்த்தாள்! மூலப்பாடலில் இல்லாத சில வரிகள்! ஆம், ஆம், அவளால் தான் சேர்க்கப்பட்டது!  என்ன வரிகள் அவை? முதலில் அந்தப்பாடல் என்ன பாடல்? எதைக் குறித்துப் பாடப்பட்டது? சத்யாவின் தலைக்குள்ளாக ஏதேதோ மின்னலைப் போல் தோன்றியதாக அவள் உணர்ந்தாள். பின்னர் அந்தப் பாடலின் பெயர் அவள் நினைவில் வந்தது! ஆம், ஆம், ஒரு வீரனின் மனைவி கொடுக்கும் பிரியாவிடைப்பாடல் அது! போருக்குச் செல்லும் கணவனுக்கு மனைவி பாடும் பிரியாவிடைப்பாடல் அது! ஹூம், சத்யபாமாவும் ஒரு வீரனின் மனைவியாகத் தான் நினைத்தாள்; நினைக்கிறாள். ஆனால் அந்த வீரன்? அவள் எவ்வளவு யோசித்தும் முழுப்பாடலும் அவள் நினைவுக்கு வரவில்லை. அவளால் பாடப்பட்ட அந்தக் குறிப்பிட்ட வரிகளும் அவள் நினைவில் வரவில்லை! அப்போது அவளுள் திடீரென ஒரு தோற்றம்!

அவள் சிறிய தந்தை பிரசேனன் அவள் தகப்பனிடம் விடைபெற்றுச் செல்லும் காட்சி, அவள் கண் முன்னர் தோன்றியது!  அதுவும் பிரம்ம முஹூர்த்தம் ஆரம்பிக்கும் சமயத்தில்! எங்கே போனார் அவர்? இப்போது எங்கே எப்படி இருக்கிறார்? அவரைத் தானே அவள் தேடி வந்தாள்! அவள் உடல் நடுங்கியது! அந்தக் கரடிகள்! பயங்கரமான கரடிகள்! அவற்றிடமிருந்து தப்பவே அவள் ஓடி வந்தாள்! முட்புதரில் மாட்டிக் கொண்டாள். இப்போது சத்யபாமாவுக்கு முழு நினைவும் வந்துவிட்டது! ஆம், அந்தக் கரடிகள்! சாத்யகியைத் தூக்கிக் கொண்டு சென்றுவிட்டன! அவளை அவை கவனிக்கவில்லை என்பதே ஒரு நன்மையாக எண்ணிக் கொண்டு அவள் அவற்றிடமிருந்து தப்பி ஓடி வந்தாள்! முட்புதர்களில் மாட்டிக் கொண்டாள்! அவள் அவற்றிலிருந்து வெளியேறியபோது அவள் பாதங்களிலிருந்து ரத்தம் ஒழுகிக் கொண்டிருந்தது. உடை முழுவதும் கிழிந்து நார் நாராகத் தொங்கியது. அவளால் இயன்றவரை அவள் ஓடினாள்! ஏதோ ஆகி விட்டது! அப்போது தான் ஏதோ ஆகிவிட்டது! என்ன ஆயிற்று? அவளால் நினைவுக்குக் கொண்டுவர முடியவில்லை! அது என்ன? ஒரு வேளை…..ஒரு வேளை……. அவள் இறந்துவிட்டாளோ?

அப்போது ஒரு மெல்லிய கரம் அவள் தலைக்காயத்தைக் கழுவிக் கொண்டிருந்தது. அந்தக் கரத்தின் மென்மை தெரிந்த அதே கணம் அது தேவையானபோது வலுவாகவும் மாறும் என்பதும் அவளுக்குப் புரிந்தது. அவள் தலைக் காயத்தைக் கழுவியதோடு அல்லாமல் தலைமயிரையும் நன்கு அலசிக் கழுவிய அந்தக் கரம் அதை அவள் முகத்திலிருந்து அகற்றி ஒழுங்கும் செய்தது. யார் இவன்? எப்படி என்னைத் தொட்டு எல்லாவற்றையும் உரிமையுடன் செய்கிறான்? இந்த உரிமையை அவனுக்குக் கொடுத்தது யார்? பாமாவுக்குக் கோபம் வந்தாலும் அவளால் ஏதும் செய்ய முடியவில்லை! அப்போது அங்கே குளிர்காய்வதற்காக நெருப்பு மூட்டப்பட்டிருப்பதையும் அவள் உணர்ந்தாள். பின்னர் அந்த மனிதனின் கரங்கள் அவள் உடலெங்கும் சில மூலிகை இலைகளை நெருப்பில் வாட்டி ஒத்தடம் கொடுப்பதையும் உணர்ந்தாள். வலிக்கு என்னமோ இதமாய்த் தான் இருந்தது. அதோடு உணவு ஏதோ தயார் ஆகிக் கொண்டிருப்பதையும் அந்த நெருப்பின் வாசம் உணர்த்தியது. பாமாவுக்குப் பசி அதிகமாக இருந்தது. ஆகவே இந்த உணவு வாசனையை அவள் வரவேற்றாள். ஆனால் இவை எல்லாம் உண்மையா? இல்லை! இருக்காது! இதெல்லாம் கனவே அன்றி வேறெதுவும் இல்லை! அவள் கனவு காண்கிறாள். இதை அறிய வேண்டி அவள் தன் கண்களை மீண்டும் மூடிக் கொண்டாள். பின்னர் சட்டெனக் கண்களைத் திறந்து பார்த்தால்! இல்லை, இல்லை, அவள் கனவு காணவில்லை! நிஜம் தான்! எல்லாமும் உண்மையே! ஆனால் இவன் யார்? இவ்வளவு உரிமையுடன் அவளைத் தொட்டு அவள் உடலைக் கழுவி விட்டு, காயங்களைத் துடைத்து, முகத்தைத் துடைத்து! சீச்சீ, கொஞ்சம் கூட வெட்கம் இல்லாதவனாக இருக்கிறானே! பாமா கோபத்துடன் எழுந்து அவன் உதவியை மறுக்க முயன்றாள். ஆனால் அவளால் எழுந்திருக்கவே முடியவில்லை. அவள் உடலில் சக்தியே இல்லை!

1 comment:

ஸ்ரீராம். said...

கண் விழிக்கப் போகும் பாமா ஆச்சர்யத்திலும் விழிக்கப் போகிறாள்!