Thursday, February 25, 2016

பாமா தவிப்பு! கண்ணன் சிரிப்பு!

கிருஷ்ணன் ஊரியை அந்தச் சுரங்க வாயிலுக்கருகே எடுத்துச் சென்று அதை அங்கே படுக்கச் சொன்னான். அதை அங்கே படுக்க வைத்தால் சுரங்க வாயில் வழியாக யாரேனும் வந்தாலோ, காட்டு மிருகங்கள் வந்தாலோ ஊரி முதலில் பார்த்துவிட்டுக் குரல் கொடுக்கும். இதைவிடப் பெரிய காவலர் தேவை இல்லை. கிருஷ்ணன் இப்படி நினைத்தவண்ணம் தானும் படுக்கச் சென்றான். ஆனால் ஊரியோ தன் குட்டிக்குப் பாலைக் கொடுத்துவிட்டு மீண்டும் சத்யா எங்கே படுத்திருக்கிறாளோ அங்கே தன் குட்டியையும் எடுத்துக் கொண்டு வந்துவிட்டது. கிருஷ்ணனுக்கு அலுப்பாக இருந்தது. மீண்டும் பூனைக்குட்டியை சுரங்க வாயிலுக்கு எடுத்துச் சென்று அங்கே படுக்க வைத்துவிட்டு ஊரியை அங்கே வருமாறு அழைத்தான். ஊரியோ மீண்டும் அங்கே வந்து குட்டியைத் தன் வாயில் கவ்விக் கொண்டு தன் யஜமானியின் அருகேயே சென்றது. அது தான் மட்டுமின்றித் தன் குட்டியும் தன் யஜமானியுடன் தான் படுக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தது. ஊரி சுரங்க வாயிலில் படுப்பது தான் சரியானது என்னும் முடிவில் இருந்த கிருஷ்ணனுக்குக் கொஞ்சம் கோபம் கூட வந்தது.

அதைத் திரும்ப வலுக்கட்டாயமாகவேனும் அங்கே அழைக்க எண்ணிய அவன், அந்தக் குட்டியை எடுத்துத் தன் கைகளால் அணைத்துக் கொண்டான். அதன் பின்னர் ஊரியை அழைத்துச் சுரங்க வாயிலை மீண்டும் காட்டி அதை அங்கேயே படுக்கும்படி சொன்னான். குட்டி கிருஷ்ணன் கைகளில் பாதுகாப்பாக இருக்கும் என்பதைப் புரிந்து கொண்ட ஊரி இப்போது சமாதானமாகக் கண்ணன் தனக்கெனக் காட்டிய இடத்தில் சென்று சாதுவாகப் படுத்துக் கொண்டது. கிருஷ்ணன் குளிர் காயவென மூட்டிய நெருப்பு நிதானமாக எரிந்து கொண்டிருந்ததோடு அல்லாமல் குகையிலும் குளிர் பரவாமல் இருந்தது. சத்யபாமா அதனால் நன்றாக ஆழ்ந்து உறங்கினாள். கிருஷ்ணன் பூனைக்குட்டியைத் தன்னுடன் படுக்க வைத்துக் கொண்டான். ஆரம்பத்தில் கிருஷ்ணனின் அணைப்புப் பூனைக்குட்டிக்கு இதமாகவே இருந்தது. ஆகவே அது சௌகரியமாக உணர்ந்தது. ஆனால் போகப்போக அதன் பசி அதிகம் ஆகவே மெதுவாக அவன் அணைப்பிலிருந்து விலகித் தன் தாய் இருக்குமிடம் சென்றுவிட்டது. அதன் தன் மோப்ப சக்தியால் தாய் இருக்குமிடத்தை உணர்ந்தது போலும்! கிருஷ்ணன் அது அப்படித் தேடிக் கொண்டு சென்றதையே ஆர்வத்துடன் கவனித்தான். ஊரி அதன் பசியை ஆற்றியது. பசி ஆறியதும் மீண்டும் மோப்பம் பிடித்த வண்ணம் கிருஷ்ணன் படுத்திருக்கும் இடம் தேடி வந்துவிட்டது. கண்கள் திறக்காத இந்தச் சின்னஞ்சிறு குட்டியின் அறிவை நினைத்துக் கிருஷ்ணனுக்கு மகிழ்ச்சியாக இருந்தது. மேலும் இதைப் பார்க்கவே மிகவும் அழகாகவும் இருந்தது. ஒரு பந்து போலச் சின்னஞ்சிறு உடலுடன் இருக்கும் இந்தக் குட்டியானது தன் தள்ளாடும் சின்னஞ்சிறு கால்களை வைத்து நடந்த வண்ணம் அங்கும் இங்கும் சென்று வந்தது கிருஷ்ணனுக்குப் பொழுது போக்காகவும் இருந்ததோடு இல்லாமல் மனதுக்கு ஆறுதலாகவும் இருந்தது. அதுவும் அந்தக் குட்டிக்குத் தன் தாயை விடக் கிருஷ்ணன் அருகே இருப்பது மிகவும் பாதுகாப்பாகத் தெரிந்தது போலும்! கிருஷ்ணனால் அதைப் புரிந்து கொள்ளவும் முடிந்தது. “அற்புதமான குட்டி நீ!” என்று அதைப் பார்த்துச் சொன்ன கிருஷ்ணன் தன் கைகளால் அதற்கு ஆறுதல் அளித்தான்.

மறுநாள் காலை விடிந்தது. கிருஷ்ணன் முதலில் எழுந்தான். அந்தக் குளத்தில் தன் குளியலை முடித்துக் கொண்டு புனிதமான அந்தக் குகையின் முன்னே வந்தான். குகையின் வெளிச்சுவர்களில் சூரியனின் காலை இளம் கதிர்கள் பட்டுப் பிரகாசித்துக் கொண்டு இருந்தது. அந்தக் காட்சி மிகப் பிரமாதமான ஒன்றாக இருந்ததோடு கிருஷ்ணனுக்குக் கிளர்ச்சியையும் ஊட்டியது. இப்படி உணர்வுகளைத் தூண்டிவிடும் பாறைகளைக் கண்ணன் அதுவரையிலும் பார்த்தது இல்லை. பின் மெல்லக் குகையின் உள்ளே நுழைந்தான். சத்யபாமா எழுந்து அமர்ந்திருந்தாள். முழந்தாளிட்டு அமர்ந்திருந்த அவள் தன் முழந்தாள்களுக்குள் தன் முகத்தைப் புதைத்துக் கொண்டு விம்மி விம்மி அழுது கொண்டிருந்தாள். பார்க்கவே பரிதாபமாக இருந்தது. ஊரி தனக்கான உணவுக்காகக் காட்டுக்குள் சென்றிருந்தது. பாமா அழுவதைக் கவனித்த கிருஷ்ணன் அதைச் சிறிதும் சட்டை செய்யாமல், “ஓ, நீ இப்போது சரியாகி விட்டாயா? இப்போது நன்றாக இருக்கிறாய் போல் தெரிகிறது!” என்றான். பாமா நிமிர்ந்து கூடப் பார்க்கவில்லை. கிருஷ்ணன் அவள் அருகே சென்றான். அதைப் புரிந்து கொண்ட பாமா தன் உடலைச் சுற்றி இருந்த சிறிதளவே ஆன அந்தத் துணியை இழுத்து மேலும் தன்னை மூடிக்கொள்ள முயன்றாள். தன் முகத்தைத் தவிர உடலின் பெரும்பகுதியும் மூடி இருக்கவேண்டும் என்பதில் கவனம் செலுத்தினாள்.

அவளையே பார்த்த கிருஷ்ணன், “இதோ பார் சத்யா! முதலில் உன் அழுகையை நிறுத்து! உன்னால் இப்போது நடக்க முடியாது! அதோடு நீ அழுவதால் எந்தப் பலனும் ஏற்படாது. என்னுடைய உருமாலைத் தண்ணீரில் நன்கு நனைத்துக் கொண்டு வந்திருக்கிறேன். நீ உன் உடலை இதை வைத்துச் சுத்தம் செய்து கொள்!” என்ற வண்ணம் உருமாலைக் கொடுத்தான். ஆனால் பாமாவோ தன் முகத்தை மீண்டும் தன் முழந்தாள்களுக்குள் புதைத்த வண்ணம், “ ஓ, உங்கள் உதவி எனக்குத் தேவையில்லை! நான் எப்படி இருக்கிறேனோ அப்படி இருந்து கொள்கிறேன். என்னால் முடிந்தவரை மெல்ல மெல்ல நடந்து குளத்திற்குச் சென்று கொள்கிறேன்.” என்றாள். கிருஷ்ணனுக்கு அவள் கோபம் வேடிக்கையாக இருந்தது. அவளைப் பார்த்துச் சிரித்தான். பின்னர் அவளைப் பார்த்துக் கொஞ்சம் கடுமையைக் காட்டினான். பாமாவுக்கு அவன் ஒரு ஆசிரியர் போல் தன்னைக் கடிந்து கொள்வதாகப் பட்டது. “சத்யா! முதலில் அழுகையை நிறுத்தப் போகிறாயா இல்லையா? நான் உனக்கு அழுவதற்காக இரவும், பகலுமாகப் பல தினங்களைக் கொடுக்கிறேன். அப்போது அழுது கொள்ளலாம். ஆனால் இப்போது இல்லை! இப்போது அழுகை தேவை இல்லை!” என்றவன் நிஜம்மாகவே கொஞ்சம் கடுமை காட்டிய வண்ணம், “நாம் இப்போது இருக்கும் நிலைமையையும் அதில் உள்ள பயங்கரத்தையும் கொஞ்சம் நினைத்துப் பார்!” என்றான்.

ஆனால் பாமாவோ மீண்டும் தன் முகத்தை முழங்கால்களுக்கிடையில் புதைத்த வண்ணம் விம்மினாள். “இதோ பார்! சத்யா! இது அழுவதற்கான நேரம் ஏதும் இல்லை! உணர்வுகளை வெளிக்காட்டுவதற்கான நேரமும் இல்லை! அவ்வளவு ஏன்! நீ எவ்வளவு அடக்கமும் விநயமும் நிறைந்தவள் என்பதைப் பார்க்கவோ, கவனிக்கவோ கூட நேரம் இல்லை! நீ இங்கே எதற்காக வந்திருக்கிறாய்? ச்யமந்தக மணியைத் தேடி! அல்லவா? நீ ஒரு முட்டாள் பெண் சத்யா! என் கஷ்டங்களை அதிகம் ஆக்கி விட்டாய்! அதோடு இப்போது நீயும் எனக்குச் சுமையாக இருக்கிறாய்! சாத்யகியைக் கரடிகளோ அல்லது மனிதர்களோ தூக்கிச் சென்ற சமயம் நீ மிகப் பயந்திருக்கிறாய்! அவர்களிடமிருந்து தப்பிப்பதற்காக அப்போது நீ புதர்களுக்குள் புகுந்துவிட்டாய்!”

ஆனால் பாமா மீண்டும் விம்மிய வண்ணம் புலம்பினாள்.”நான் செத்திருக்க வேண்டும்! இருக்கக் கூடாது! அப்போதே இறந்திருக்க வேண்டும்!” என்றாள்.

“ஹாஹா!” என்று சிரித்த கிருஷ்ணன், “நான் நீ இன்னமும் புத்திசாலித்தனமாகச் செயல்பட்டிருக்க வேண்டும் என்று எண்ணுகிறேன். நீ ஒரு பள்ளத்தினுள்ளே விழுந்துவிட்டாய்! உன் ஆடைகளெல்லாம் தாறுமாறாகக் கிழிந்திருந்தன. வேறு வழியில்லாமல் உன்னை நான் தொட்டுக் காப்பாற்றும்படி ஆகி விட்டது!”

பாமா இன்னமும் பெரிதாக அழ ஆரம்பித்தாள்.





2 comments: