Saturday, January 23, 2016

ஊரி சொல்லப் போகும் செய்தி!

மெல்ல மெல்ல இரவு கழிந்து விடிவெள்ளி தெரிய ஆரம்பித்தது. சற்று நேரத்தில் விடியப் போவதற்கான அறிகுறிகளும் தெரிந்தன. பறவைகள் விதவிதமான கூச்சலிட்டன. சிர்ப், கீகீகீ, குக்கும், கும், என்றெல்லாம் சப்தங்கள் வர ஆரம்பித்தன. கண்ணன் மற்றொரு நாளை ஆவலுடன் வரவேற்றான். சூரியன் உதிக்கும் சமயம் மரத்திலிருந்து கீழே இறங்கினான் கண்ணன். காட்டில் அப்போது தான் கொஞ்சம் வெளிச்சம் தெரிந்தது. அவன் சென்ற, செல்லப் போகும் பாதையை ஒட்டி இருந்த ஒரு சின்ன ஓடையில் குளித்துக் காலைக் கடன்களையும் நித்திய அனுஷ்டானங்களையும் முடித்துக் கொண்டான். பின்னர் தான் துவாரகையில் இருந்து கொண்டு வந்திருந்த உணவில் சிறிது எடுத்துத் தன் பசியை ஆற்றிக் கொண்டான். அங்கிருந்த மரங்களில் பழுத்திருந்த பழங்களும் கண்ணனின் பசிக்கு உதவியது. பின்னர் அங்கே தெரிந்த கரடியின் காலடித் தடத்தைப் பின் தொடர்ந்து செல்லலாம் எனத் தீர்மானித்தான். சற்று தூரம் சென்றதும் அந்தப்பாதையோடு ஓர் விளையாட்டுத் திடலுக்குச் செல்லும் பாதையும் இணைந்து வந்தது.

அந்தப் பாதையைக் கூர்ந்து கவனித்த கிருஷ்ணன் மனம் ஆனந்தத்தில் துள்ளிக் குதித்தது. அங்கே ஒரு ஆணின் காலடித் தடமும், ஓர் பெண்ணின் காலடித் தடமும் தெரிந்தது. சற்றுத் தூரம் அந்தப் பாதையில் போய்ப் பின்னர் அங்கே இருந்த முக்கியப் பாதையில் அந்தக் காலடித் தடங்கள் தொடர்ந்தன. அந்தக் காலடித் தடங்கள் சத்யபாமாவுடையதும், சாத்யகியுடையதுமாக இருக்கக் கூடும் என்று கண்ணன் நம்பினான். ஆகவே இந்தப் பாதைதான் அந்தப் புனிதமான குகைக்குச் செல்லும் பாதையாகவும் இருக்கக் கூடும். இன்னும் கொஞ்சம் மேலே சென்றான் கிருஷ்ணன். சற்றுத் தூரத்தில் ஒரு ஓநாயின் ஆங்காரமான குரலும், ஒரு பூனையின் மியாவ், மியாவ் என்னும் மெல்லிய குரலும் கேட்டது. வேகமாகக் கிருஷ்ணன் அந்த இடம் நோக்கிச் சென்றான். அங்கே ஒரு பூனை தன் சின்னஞ்சிறிய குட்டியை வாயில் கவ்விக் கொண்டு ஓர் மரத்தின் மேல் ஏற முயன்று கொண்டிருந்தது. அந்த ஓநாயின் முகம் அங்கே மரத்தின் அடியில் இருந்த ஓர் பள்ளத்தில் புதைந்து போயிருந்தது. அந்தப் பள்ளத்தில் மற்றக் குட்டிகள் இருக்க வேண்டும். ஓநாய் அதைப் பட்சணம் செய்யப் பார்க்கிறது. கிருஷ்ணன் நினைத்தது சரியே! அந்தப் பள்ளத்திலிருந்து சின்னஞ்சிறிய மியூவ் சப்தம் மிகவும் பலவீனமான குரலில் கேட்டது. ஆஹா, குட்டிகளுக்கு ஆபத்து!

அந்த ஓநாய் பள்ளத்திலிருந்து தன் முகத்தை வெளியே எடுத்தபோது அதன் வாயில் ஒரு பூனைக்குட்டியைக் கவ்விக் கொண்டிருந்தது. கிருஷ்ணன் விரைவாக ஓர் அம்பை எடுத்து அதன் மேல் விட்டான். ஓநாய் தப்பி ஓடப் பார்த்துவிட்டுப் பின்னர் செத்து விழுந்தது. ஆனால் குட்டி பிழைக்கவில்லை. கிருஷ்ணன் மன வருத்தத்தோடு அந்த ஓநாயின் அருகே சென்றான். அதன் வாயிலிருந்து குட்டி கீழே விழுந்திருந்தது. ஓநாய் செத்துவிட்டதை உறுதிப் படுத்திக் கொண்டு அதன் உடலில் இருந்து அம்புகளை எடுத்து அங்கே கீழே கிடந்த இலைகளை வைத்து அந்த அம்புகளைத் துடைத்துச் சுத்தம் செய்தான். மீண்டும் அந்தப் பள்ளத்தைப் பார்த்தான் கிருஷ்ணன். அங்கே இன்னொரு குட்டி உடல் முழுவதும் காயங்களோடு முக்கி, முனகிக் கொண்டு இருந்தது. அதன் உடலிலும் ஓநாய் தன் பற்களால் கடித்துக் குதறி இருந்தது. அதுவும் இறக்கும் நிலையில் இருந்தது. கிருஷ்ணன் மனம் மிக வருந்தியது. பின்னர் கிருஷ்ணன் அந்தப் பூனையை நோக்கித் திரும்பினான். அது ஆபத்து தன்னை விட்டு விலகுவதற்காகக் காத்துக் கொண்டு இருந்ததைக் கவனித்தான். “வா, வா, உனக்கு இப்போது ஆபத்து ஏதுமில்லை!” என்று அதைத் தன்னிடம் அழைத்தான். பின்னர் கிருஷ்ணன் தன் பிரயாணத்தைத் தொடங்கலாம் என நினைத்தான். அதற்குள்ளாக அந்தப்பூனை மரத்திலிருந்து இறங்கிக் கிருஷ்ணனைப் பார்த்துக் கொண்டே தன் வாயில் இருந்த குட்டியை அவன் காலடியில் வைத்தது. அவன் உடலின் மேல் தன் உடலை உரசிக் கொண்டு சந்தோஷமாய்க் கூச்சலிட்டது. கிருஷ்ணன் அதிசயத்துடன் குனிந்து பார்த்தான். அவனுக்கு அதிர்ச்சி!

“ஆஹா, நீ அந்தப்பொல்லாத ஊரிப் பூனை அன்றோ! பாமாவின் தோழி இல்லையா?” என்றான். “இங்கே எப்படி வந்தாய் நீ?” என்று அதனிடம் கேட்டான். ஊரி இங்கே இருக்கிறாள் எனில் கட்டாயம் அவள் யஜமானி சத்யபாமாவும் இங்கே தான் இருப்பாள். அதே போல் தான் நடந்திருக்கிறது. ஊரி தன் யஜமானியைத் தொடர்ந்து வந்தாள். ஆனால் இந்த இடம் வந்ததும் யஜமானியைப் பிரிந்து விட்டாள். ஊரிக்குப் பிரசவ நேரம் நெருங்கி விட்டது. ஆகவே இந்த மரத்தடியைத் தன் பிரசவத்துக்கான இடமாகத் தேர்ந்தெடுத்துக் கொண்டாள். அங்கே இலைகளையும், தழைகளையும் பரப்பி மெத்தை போல் ஆக்கிக் கொண்டு அங்கே தன் குழந்தைகளை வெளிக்கொணர்ந்தாள். கிருஷ்ணன் ஊரியைத் தன் கைகளில் தூக்கிக் கொண்டு அணைத்துக் கொண்டான். அதைத் தட்டிக் கொடுத்து ஆசுவாசம் செய்தான். ஒரு காலத்தில் அதன் உடல் எவ்வளவு சுத்தமாகவும், வெல்வெட் போன்ற மிருதுத் தன்மையுடனும் இருந்தது! இப்போது அதன் வெண்மை நிறம் அழுக்காகி மிருதுத் தன்மையும் நீங்கி இருந்தது. மனம் வருந்திய கிருஷ்ணன் மெல்ல அதைக் கீழே இறக்கி விட்டான். இறந்தவை போக மீதம் இருந்த ஒரே ஒரு குட்டியைக் கையில் எடுத்த கிருஷ்ணன் தன் மார்போடு அணைத்துக் கொண்டு அதையும் தடவிக் கொடுத்தான். அது இன்னமும் கண்களைத் திறக்கவில்லை. மெல்ல பலவீனமான குரலில் மியாவ் என்றது.

ஊரி சந்தோஷத்துடன் கிருஷ்ணனையே சுற்றிச் சுற்றி வந்தது. சந்தோஷக் குரல் கொடுத்தது. ஊரியையும் அதன் குட்டியையும் ஓடைக்கு எடுத்துச் சென்ற கிருஷ்ணன் இரண்டையும் நன்றாக அழுக்கு நீங்கக் குளிப்பாட்டி விட்டான். பின்னர் தன் மதிய நேர அனுஷ்டானங்களைச் செய்தான். அவன் அதைச் செய்யும்போதே அந்த ஓடையில் இருந்த ஒரு மீனைப் பிடித்து உண்ட ஊரி தன் உணவை முடித்துக் கொண்டது. பின்னர் தன் ஒரே ஒரு குட்டிக்குப் பாலைக் கொடுத்த வண்ணம் அங்கிருந்த புல் தரையில் ஆனந்தமாகப் படுத்துக் கொண்டது. பசி தீர்ந்த குட்டியும் விரைவில் தூங்கிப் போனது. கிருஷ்ணன் பின்னர் தன் வழியில் போக ஆயத்தம் ஆனான். அந்தக் குறுகிய வழிக்கு மீண்டும் சென்றான். ஆனால் ஊரி அவனை மேலே நடக்கவிடவில்லை. பெரும் குரல் எடுத்துக் கத்திய வண்ணம் அவனிடம் ஏதோ செய்தியைச் சொன்னது. அவன் நடக்கும் பாதையில் வழியை மறித்துக் கொண்டு நின்றது. அவன் கால்களுக்கிடையே புகுந்து கொண்டு அவனை நடக்கவிடாமல் செய்தது. மியாவ், மியாவ் என்று பெரும் குரலில் கத்தியது.

Wednesday, January 20, 2016

காட்டில் கண்ணன்!

தான் சரியான பாதையில் தான் வந்திருப்பதாகக் கிருஷ்ணன் நினைத்தான். ஆம், அப்படித் தான் இருக்க வேண்டும். தெய்வீகக் காவலர்களால் பாதுகாக்கப்படுவதாக சத்ராஜித்தினால் சொல்லப்பட்ட அந்தப் புனிதமான குகைக்கு ச்யமந்தகத்தை எடுத்துக் கொண்டு அங்கே பத்திரப்படுத்த வேண்டி பிரசேனன் சத்ராஜித்தினால் அனுப்பி வைக்கப்பட்டிருக்க வேண்டும். ஏனெனில் ச்யமந்தகத்தை ஒளித்து வைக்க இதைவிடச் சிறந்த இடம் சத்ராஜித்திற்குக் கிடைக்காது. அதிலும் கிருஷ்ணன் தான் ச்யமந்தகத்தைத் திருடி விட்டான் என்று அவன் சொன்ன பொய்யை யாதவர்கள் நம்புவதற்கும் அது இங்கே இருந்தால் தான் சரிப்படும். கிருஷ்ணன் யோசனையுடன் ச்யமந்தகம் இப்போது எங்கே எனச் சுற்றும் முற்றும் தேடினான். பிரசேனனின் உடைமைகள் அங்கே தரையில் அங்குமிங்குமாகச் சிதறிக் கிடந்தன.ஆனால் அவற்றில் ச்யமந்தகம் இருப்பதாகத் தெரியவில்லை. கிருஷ்ணன் மேலும் தேடியதில் ஒரு கனத்த தங்கச் சங்கிலியின் ஒரு பாகம் மட்டுமே கிடைத்தது. இதிலிருந்து சங்கிலியின் மற்றொரு பாகத்தோடு ச்யமந்தகமும் பிரிக்கப்பட்டிருக்க வேண்டும். மனிதனோ அல்லது மிருகமோ பிரசேனனை யார் தாக்கி இருந்தாலும் அவர்கள் அவன் கழுத்திலிருந்த ச்யமந்தக மணியோடு கூடிய மாலையையும் பிடுங்கி இருக்க வேண்டும். அந்த முயற்சியில் மாலை இரண்டாக அறுபட்டு இருக்க வேண்டும். ச்யமந்தகம் இருக்கும் பாகத்தை எடுத்துக் கொண்டு இதை இங்கேயே விட்டு விட்டுப் போயிருக்க வேண்டும்.

கிருஷ்ணன் பிரசேனனின் உடலைக் கழுகுகள் தின்ன விட்டு விட்டு அவன் உடைமைகளைப் பொறுக்கி எடுத்தான்.அவனுடைய ஆபரணங்களையும், ஆயுதங்களையும் தரையிலிருந்து எடுத்து அங்கே ஒரு குழி தோண்டி அவற்றைப் புதைத்தான். மேலே ஒரு சின்ன அடையாளக் கல்லையும் வைத்தான். பின்னர் மீண்டும் முன்னோக்கிச் செல்ல ஆயத்தமானான். இப்போது காட்டுக்குள் செல்லும் இந்த வழியானது மிகவும் குறுகலாகவும், மரங்கள் அடர்ந்தும் காணப்பட்டதோடு அல்லாமல் இருபக்கங்களிலும் புதர்கள் வேறு வரம்பு கட்டி இருந்தன. புதர்களும் அடர்த்தியாகவே இருந்தன. அவை ஆங்காங்கே மேலே செல்லும் வழியை மூடிக் கொண்டும் காணப்பட்டன. அதோடு அங்கே சூரியவெளி உள்ளே நுழைய முடியாதபடி மரங்கள் அடர்த்தியாகக் காணப்பட்டதோடு அல்லாமல் அவற்றின் கிளைகள் ஒன்றோடு ஒன்று பின்னிக் கொண்டு பசுமையான கூடாரமாகக் காட்சி அளித்தது. இந்தக் குறுகிய பாதை தன்னை எங்கே இட்டுச் செல்லும்? ம்ம்ம்ம். சத்ராஜித் சொல்லும் அந்தப் புனிதமான குகைக்கு இது செல்லாவிட்டாலும் பரவாயில்லை. இது எங்கே செல்கிறதோ, அங்கே நாமும் செல்வோம். ஏனெனில் இந்தப் பாதையில் சென்றால் ஒருவேளை ச்யமந்தகத்தைக் குறித்தத் தகவல்கள் ஏதேனும் கிட்டலாம். மேலும் காட்டுக்கு உள்ளே செல்ல இது ஒன்று தான் வழியாகக் காண்கிறது.

சற்றுத் தூரம் தான் சென்றிருப்பான். மீண்டும் பிணம் தின்னிக் கழுகுகளின் கூச்சல் காதைப் பிளந்தது. கிருஷ்ணன் கொஞ்சம் ஆச்சரியத்தோடு நிமிர்ந்து தனக்கு முன்னே கவனித்தான். அங்கே இன்னொரு உடல் இருக்கிறது போலும். அதைத் தான் இந்தக் கழுகுகள் உணவாக்கிக் கொண்டிருக்கின்றன! யாருடைய அல்லது எதன் உடல் அது?  தன்னுடைய அரிவாளால் இரு பக்கமும் இருந்த முட்புதர்களை வெட்டிச் சீராக்கினான் கிருஷ்ணன்.அவன் செல்ல வழியை உண்டாக்கினான். அந்த வழியே சென்றதும் மீண்டும் ஓர் திறந்த வெளி. அங்கே ஒரு சிங்கத்தின் உடல் கிடந்தது. அதைத் தான் அந்தக் கழுகுகள் தங்களுக்கு உணவாக்கிக் கொண்டிருந்தன. சிங்கத்தின் உடல் அநேகமாகக் கழுகுகளால் பக்ஷணம் ஆகி விட்டது. எனினும் கிருஷ்ணன் ஓர் அம்பை விட்டு ஒரு கழுகைக் கொன்று வீழ்த்தவே மற்றவை பறந்து மேலே போய் விண்ணில் சுற்றிச் சுற்றி வந்தன. ஒரு காலத்தில் காட்டுக்கே ராஜாவாக இருந்த சிங்கராஜா இப்போது உயிரில்லாமல் வெறும் எலும்புக்கூடாகக் காட்சி அளித்தார். எலும்புகளும் ஆங்காங்கே உடைய ஆரம்பித்துவிட்டன. சிங்கத்தின் பிணத்தைக் கூர்ந்து ஆராய்ந்தான் கிருஷ்ணன்.

அதன் ஒரு முன்னங்காலில் பிரசேனன் அணிந்திருந்த துணியின் ஒரு முனை காணப்பட்டது. ஆக சிங்கம் தான் பிரசேனனை அடித்துக் கொன்றிருக்கிறது. இன்னொரு காலில் நகத்துக்கும் சதைக்கும் இடையே கறுப்பாக ஏதோ காணப்பட்டது. அதைக் கூர்ந்து பார்த்தான் கிருஷ்ணன். கரடியின் உடலில் இருந்து பிடுங்கப்பட்ட மயிர்! கொஞ்சம் சதையோடு பிய்ந்து வந்திருந்தது. கரடிக்கும் சிங்கத்திற்கும் கடுமையான சண்டை நடந்திருக்க வேண்டும். ஒரு கரடியா அல்லது இரண்டு மூன்று கரடிகளா? தெரியவில்லை. கரடியாகத் தான் இருக்க வேண்டும். சுற்றும் முற்றும் பார்த்தாலும் சிங்கத்திற்கும் கரடிகளுக்கும் அல்லது கரடிக்கும் கடுமையான சண்டை நடந்ததன் அடையாளங்கள் தெரிந்தன. ஒரு வேளை சிங்கத்திடம் ச்யமந்தகம் பிணைத்திருக்கும் தங்கச் சங்கிலியின் மற்றொரு பாகம் இருக்குமோ? கிருஷ்ணன் கூர்ந்து ஆராய்ந்து பார்த்ததில் எங்குமே ச்யமந்தகத்தோடு கூடிய தங்கச் சங்கிலியின் மற்றொரு பாகம் காணப்படவில்லை. ச்யமந்தகத்தை பிரசேனன் காட்டுக்குக் கொண்டு வந்திருந்தான் எனில்! ஆம், ஆம் நிச்சயமாய் அவன் கொண்டு வந்திருக்க வேண்டும். சிங்கம் அவனைக் கொல்லும்போது ச்யமந்தகத்தோடு கூடிய சங்கிலியின் ஒரு பாதியை அவன் கழுத்திலிருந்து அறுத்து எடுத்திருக்க வேண்டும். ச்யமந்தகம் இல்லாத மற்றொரு பாகம் தான் கிடைத்து விட்டது. ஒருவேளை அந்தச் சங்கிலியின் மற்றொரு பாதி சிங்கத்தின் பற்களுக்கிடையில் இருக்குமோ? அப்படி இருந்திருந்தால் கரடிகள் சிங்கத்தைத் தாக்கிக் கொன்றபோது அவற்றை எடுத்துச் சென்றிருக்க வாய்ப்பு உண்டு.

ஆனால் அது நடந்திருக்குமா? அப்படி நடக்க வாய்ப்பு இருக்கிறதா? தெரியவில்லை! காட்டில் வாழும் மிருகமான சிங்கத்திற்கோ கரடிக்கோ இந்தப் பிரகாசமான ஒளிவீசும் வைரக் கல்லில் என்ன ஆர்வம் இருக்க முடியும்? ஒருவேளை சத்ராஜித் சொல்வது போல் ச்யமந்தகத்தின் அதிசயமான குணம், பார்ப்போரைக் கவர்ந்து இழுக்கும் குணம், இந்த மிருகங்களின் மனதையும் கவர்ந்து இழுத்துவிட்டதோ? அப்படி ஒருவேளை அந்தக் கரடிகள் ச்யமந்தகத்தைக் கொண்டு சென்றிருந்தால் அவை எங்கே சென்றிருக்கும்? இந்த மாபெரும் காட்டில் அந்தக் கரடிகள் வாழும் குகையை எப்படித் தேடுவது? அது ஒருக்காலும் நடக்காத ஒன்று. அது தான் அப்படி எனில் சாத்யகியையோ, சத்யபாமாவையோ எப்படித் தேடுவது? அவர்கள் இங்கே இருப்பதற்கான அடையாளம் எதுவும் கிடைக்கவில்லை. அவர்கள் இந்த வழியில் சென்றிருப்பதற்கான அடையாளங்களும் காணவில்லை. இப்படிப் போயிருக்க மாட்டார்கள் போலும்! எங்கே தான் போயிருப்பார்கள்?

மீண்டும் அந்த இடத்தைக் கவனமாகக் கிருஷ்ணன் ஆராய்ந்தான். அப்போது ஒரே ஒரு கரடி மட்டும் தான் சண்டை போட்டிருக்கிறது எனவும் மற்றொன்று தள்ளி நின்று பார்த்துக் கொண்டிருந்திருக்கிறது என்பதையும் கண்டு பிடித்தான். ஆனால் அது கரடியின் காலடிச் சுவடு தானா? அல்லது மனிதர் யாரேனும் கரடியோடு வந்திருந்திருந்தார்களா? கண்டு பிடிப்பது கஷ்டம்! இதற்குள்ளாக அங்கே சூரிய அஸ்தமனம் ஆகும் நேரமாகி விட்டது. சூரியன் இருக்கையிலேயே இருண்டு கிடந்த காடு இப்போது காரிருளில் மூழ்க ஆரம்பித்தது. கிருஷ்ணன் சற்றுத் தூரம் முன்னேறி ஒரு அடர்ந்த மரத்தின் மேலே ஏறிக் கொண்டு தன்னுடைய இரவுக்கான இருக்கையை அங்கே அமைத்துக் கொண்டான். அந்த மரத்தின் அடர்ந்த கிளைகளுக்கு நடுவே தன்னுடைய இரவுப் படுக்கையை அமைத்துக் கொண்ட கிருஷ்ணன் வேத வியாசர் தன்னை ருஷிகேசன் என்று அழைப்பதை நினைவு கூர்ந்தான். ஏனெனில் கிருஷ்ணன் தன் மனதையும், உடலையும் ஒருசேரக் கட்டுப்படுத்தத் தெரிந்து வைத்திருந்தான். இதைக் குறித்து பலராமன் கூடக் கிருஷ்ணன் அவ்வப்போது கேலி செய்வான். ஹூம், இப்படி இருப்பதால் உனக்குத் தூக்கத்தின் அருமையே தெரியாமல் போய்விட்டது என்றும் கூறுவான். இந்த இனிய நினைவுகளில் மனம் மகிழ்ச்சியுடன் இருந்த கிருஷ்ணன் தான் மரத்தின் மேல் இருந்தாலும் காட்டில் எங்கும் தொலையவில்லை என்றும் தனியாக இருக்கவில்லை என்றும் உணர்ந்தான்.

விட்டு விட்டுத் தெரிந்த நக்ஷத்திர ஒளியில் அதே மரத்தின் மற்றொரு கிளையில் அமர்ந்திருந்த ஓர் ஆந்தையைப் பார்த்தான். பளபளக்கும் தனது வட்டமான கண்களால் அது கிருஷ்ணனைப் பார்த்தது. கூ, கூ எனக் கத்தியது. அதைப் புரிந்து கொண்டாற்போல் கிருஷ்ணனும் இங்கிருந்து வாயினால் சீழ்க்கை சப்தம் செய்தான். கீழே இரண்டு முயல்கள் அந்த மரத்தின் அடியில் வந்து சிறிது ஓய்வு எடுத்துக் கொண்டு பின்னர் ஓட்டமாக ஓடிப்போயின. நடு இரவுக்குப் பின்னர் ஒரு சிங்கராணி தன் குட்டிகளுடன் உலா வந்தாள். அவள் கண்கள் பளபளத்தன. முகத்தில் சோகம் இருந்தாற்போல் தோன்றியது கண்ணனுக்கு. அதற்கேற்றாற்போல் சிங்கராணியும் குட்டிகளும் மிகவும் மெதுவாக நடந்து சென்றன. தங்கள் குடும்பத் தலைவன் இறந்ததற்கு அவை சோகமாக இருப்பது போல் தோன்றியது கிருஷ்ணனுக்கு. சற்று நேரத்திற்கெல்லாம் சிங்கங்கள் அலறும் சப்தம் கேட்டது. இவையும் கொல்லப்பட்டுக் கழுகுகளுக்கு உணவாகி விட்டனவோ! கிருஷ்ணன் வருத்தம் அடைந்தான். மேலே விண்ணில் சப்தரிஷி மண்டலம் ஒரு கோடியிலிருந்து இன்னொரு கோடிக்குப் பிரயாணம் செய்து கொண்டிருந்தது.

Tuesday, January 19, 2016

பிரசேனனின் உடல்!

கிருஷ்ணன் மேலும் யோசித்தான். சத்ராஜித் எப்போதும் தன்னைச்  சுற்றி ஓர் தெய்வீக ஒளிவட்டம் பிரகாசிக்கிறது என்பது போல் நடந்து கொள்வான். அதற்கு அவன் சொல்வது என்னவெனில் காயத்ரி மந்திரத்தை அவன் பத்து லட்சம் முறைகளுக்கு மேல் ஜபித்திருப்பதாகவும் அந்த நேரங்களில் அவன் முழு உபவாசம் இருந்ததாகவும் சொல்லி இருக்கிறான். அதுவும் அவன் இம்மாதிரித் தவம் இருந்த குகை சூரியனுடையது எனவும், அங்கே தெய்வீகக் காவலர்களே காவல் காப்பதாகவும் சொல்லி இருக்கிறான். அந்தப் புனிதமான சூரியனின் குகை எங்கே இருக்கிறது என்பது எவருக்கும் தெரியாது. அப்படி ஒன்று இல்லவே இல்லை என்றே பலரும் நினைக்கின்றனர். ஒருவேளை அப்படி ஒன்று இருந்தால், அது சத்யபாமாவுக்கும் தெரிந்திருந்தால், ச்யமந்தகமணியைப் பிரசேனன் அந்த குகைக்குத் தான் எடுத்துச் சென்றிருப்பான் என்பதை பாமாவும் அறிந்திருப்பாள். ஆகவே அவளும் அங்கே போயிருக்கலாம். ஆனால் அந்த குகை எங்கே உள்ளது?

உஜ்ஜயந்தா மலையைச் சுற்றியுள்ள காடுகள் கிருஷ்ணனுக்குப் பழக்கமானவையே. ஆகையால் அவன் சுறுசுறுப்பாகத் தன் நடையை அந்தக் காடுகளை நோக்கிப் போட்டான். மலையடிவாரத்தில் வேட்டைக்காரர்கள் தங்கவும், யாதவத் தலைவர்கள் வேட்டைக்குச் செல்கையில் தங்கவும் சில குடிசைகள் கட்டப்பட்டு இருந்தன. கிழக்கு வெளுக்கும் நேரத்தில் கிருஷ்ணன் அந்தக் குடிசைகளை அடைந்தான். அங்கே சத்ராஜித்தினால் கட்டப்பட்டு இருந்த தங்குமிடத்தை ஆராய்ந்தான். அது மூடப்பட்டுக் கிடந்தது. ஆகவே வந்தவர்கள் இதைத் தாண்டி மேலும் உள்ளே சென்றிருக்க வேண்டும். கிருஷ்ணன் மேலே நடந்தான். சிறிது தூரம் சென்றதும் ஒரு பாதை மலையைச் சுற்றிக் கொண்டு மூன்றாகப் பிரிந்தது. மூன்றும் மலைக்கு மேல் செல்லும் பாதைகள். அவற்றில் ஒன்றில் மட்டுமே குதிரைகள் சென்றிருந்த காலடித் தடங்களும் மனிதர்களின் காலடித் தடங்களும் காணப்பட்டன. கிருஷ்ணன் அந்தப் பாதையைத் தேர்ந்தெடுத்தான். மெல்ல மெல்ல சூரியன் உதயம் ஆனான். உதய சூரியனின் பொற்கதிர்கள் பட்டு அந்தக் காட்டுப்பிராந்தியமே மஞ்சள் ஒளி பெற்றுத் திகழ்ந்தது. மலைகளில் இருந்த மரங்கள், செடிகள், கொடிகள் அனைத்தும் மஞ்சள் வண்ணம் பெற்றுப் பிரகாசித்தன. இன்றொரு புத்தம்புதிய நாள் உதயம் ஆகிவிட்டது. காலை இளங்காற்று மிகவும் மென்மையாகவும் பல்வகைப் பூக்களின் நறுமணத்தைச் சுமந்தும் இதமாக வீசியது. லேசாகக் குளிர் தெரிந்தாலும் அதுவும் தேவையாகவே இருந்தது. புத்துணர்ச்சியைக் கொடுத்தது. மரங்களின் மேல் காற்று மோதியபோது எழுந்த மர்மர சப்தமும் இனிமையாகவே இருந்தது. பறவைகள் நானாவிதமாகக் கூச்சலிட்டுக் கொண்டு காலை பொழுது புலர்ந்ததை வரவேற்றன. மான்கள் கூட்டம் ஒன்று மேயச் சென்று கொண்டிருந்தவை திடீரெனக் கண்ணனை அங்கே கண்டதும் ஓட்டமாக ஓடி அடர்ந்திருந்த  காட்டுக்குள் மறைந்தன.

சத்ராஜித்தின் நடவடிக்கைகள் கடந்த சிலநாட்களாக எப்படி இருந்தன என்பதைக் கிருஷ்ணன் மீண்டும் மீண்டும் தன் மனதிற்குள் நினைத்துப் பார்த்து ஆராய்ந்தான். மனிதர்கள் தான் எத்தகைய விசித்திரமான வழிமுறைகளில் நடக்கின்றனர்! அவர்களை அவரவர் சுய தர்மத்திற்குக் கொண்டு வரவேண்டியும், தர்மத்தின் பாதையிலிருந்து பிறழாமல் இருக்கவும் எத்தனை முயற்சித்தாலும் அவர்கள் அதைப்புரிந்து கொண்டு கவனமாக நடந்து கொள்வதில்லை. சத்ராஜித்திற்கும் ஒரு குடும்பம் உள்ளது. பிரம்மாண்டமானதொரு மாளிகை, தங்கக்கட்டிகள், ஆபரணங்கள், குதிரைகள், பசுக்கள், வைர வைடூரியங்கள் என அளப்பரிய செல்வமும் உள்ளது. சந்தோஷமாக இருக்கவேண்டியது எப்படி என்பதை அவன் அறியவில்லை. அப்படி அறிந்திருந்தால் அவன் இத்தகையதொரு செல்வத்தை வைத்துக் கொண்டு எவ்வளவோ  மகிழ்ச்சியாக இருந்திருப்பான். உலகிலேயே அவன் தான் மிக மகிழ்ச்சியான மனிதனாகவும் இருந்திருப்பான்.  அவன் ஏன் கிருஷ்ணனைக் கொல்லப் பார்த்தான்? இத்தனைக்கும் கிருஷ்ணன் யாருக்கும் எந்தக் கெடுதலும் செய்யவில்லையே! அதுவும் யாதவர்களை அவன் மரணத்தின் பிடியிலிருந்தும் ,ஜராசந்தனின் கொடூரத்திலிருந்தும் காப்பாற்றி அல்லவோ இங்கே அழைத்து வந்திருக்கிறான். அவர்கள் எவ்வளவு பயந்து கொண்டும், ஏழமையிலும் ஒருவருக்கொருவர் சண்டை போட்டுக் கொண்டும் இருந்தார்கள்? இங்கே வந்ததும் அவர்களின் நிலைமையையே உயர்த்திவிட வில்லையா! ஆரியர்களுக்குள் இன்று யாதவர்கள் பெரும் கீர்த்தி பெற்றவர்களாக இருக்கின்றனரே! தங்கள் க்ஷத்திரிய தர்மத்தைக் காப்பாற்ற வேண்டியும் அதைப் பாதுகாக்கவேண்டியும் கிருஷ்ணனை அன்றோ அவர்கள் நம்பி இருக்கின்றனர்!

ச்யமந்தகத்தைக் கண்ணன் திருடி இருப்பான் என்பதை அவர்கள் யாரும் நம்பவில்லை என்பது என்னமோ உண்மைதான். ஆனால் அதற்காகக் கண்ணன் சும்மா இருந்துவிட முடியுமா? அவனுக்கென ஒரு தார்மீகக் கடமை உள்ளது. பொறுப்பு உள்ளது. ச்யமந்தகம் எங்கே என்பதைக் கண்டு பிடித்து உரியவரிடம் ஒப்படைக்க வேண்டியது கண்ணன் கடமையன்றோ! இதற்காக அவன் தன் உயிரைக் கூடப் பணயம் வைத்துத் தான் ஆகவேண்டும். ஆம், மனிதர்கள் அதிலும் வீரர்கள் இப்படித் தான் அங்கும் இங்கும் அலைந்து தங்கள் உயிரைப் பணயம் வைத்தாவது தர்மத்தின் பாதையில் செல்ல வேண்டி இருக்கிறது. சென்றாக வேண்டும். சாகசங்களைச் செய்யும் வீரன், அதிசயங்களைச் செய்யும் வீரன் ஒருவன் இந்த உலகுக்குத் தேவை தான். அப்படிப் பட்ட ஒருவனை மக்கள் பெரிதும் விரும்பவும் செய்வார்கள். ஆகவே தான் இந்தக் கடமையை எப்படியாவது செய்தாக வேண்டும். ஹூம். கிருஷ்ணன் தனக்குத் தானே சிரித்துக் கொண்டான். அவன் பிறந்த நேரத்தில் கிரஹங்களின் சேர்க்கையைக் குறித்துப் பலரும் சொல்லிக் கேட்டிருக்கிறான். அவற்றின் விசித்திரமான வழிகள் கிரஹங்களின் சேர்க்கைகள் தான் அவனை இப்படி எல்லாம் வழி நடத்துகிறதோ?

ஆம், சிலவாரங்கள் முன்னர் தான் அவன் பாண்டவர்களுடன் சேர்ந்து இருந்து அவர்களுக்கென ஒரு நகரை ஸ்தாபிப்பதிலும், அரசை நிர்மாணிப்பதிலும் உதவிகள் செய்து வந்தான். இதோ, இப்போது! அவன் ச்யமந்தகத்தைத் திருடி விட்டதாக ஓர் குற்றச்சாட்டு அவன் மேல் சுமத்தப்பட்டிருக்கிறது. அதுவும் யாரால்? சத்ராஜித்தால்! அவனுக்கோ எவர் மீதும் அக்கறை இல்லை. உலகில் மனிதர்கள் படைக்கப்பட்டிருப்பதே தன்னுடைய சொந்தப் பாதுகாப்புக்காகத் தான் என்னும் எண்ணம் அவனிடம் எப்போதும் உண்டு. கண்ணன் சுற்றுப்புறத்தை மீண்டும் கவனித்தான். சூரியன் இன்னமும் மேலே ஏறி இருந்தான். காடு முழுவதும் சூரிய ஒளியில் பிரகாசமாய்த் தெரிந்தது.  மரங்களின் இலைகளுக்கிடையே கீழே விழுந்த சூரிய வெளிச்சம் தரையில் யாரோ பொற்காசுகளைக் கொட்டிக் கவிழ்த்தாற்போல் தெரிந்தது. காட்டு மரங்களில் பழுத்துக் கிடந்த உண்ணக் கூடிய பழங்களைப் பறித்துக் கிருஷ்ணன் சாப்பிட்டு விட்டு அங்கிருந்த ஓர் அருவியில் நீரையும் பிடித்துக் குடித்தான். இன்னும் மேலே நடக்கையில் அவன் தலைக்கு மேல் பிணம் தின்னிக் கழுகுகளின் கூச்சல் கேட்டது. கழுகுகள் பறந்த இடத்தைக் குறிவைத்து வேகமாகச் சென்றான். அந்த இடத்தை அடைந்ததும், கழுகுகள் அங்கே கிடந்த இரு உடல்களைப் பங்கிட்டுக் கொண்டு கொத்தித் தின்று கொண்டிருப்பதைக் கவனித்தான். நல்ல உணவு கிடைத்ததில் அவை சந்தோஷக் கூச்சலிட்டுக் கொண்டும், கீழே உட்கார்ந்து கொத்துவதும் பின்னர் மேலே பறப்பதுமாய் அமர்க்களம் செய்து கொண்டிருந்தன. பருந்துகளும் மற்றச் சின்னச் சின்ன மாமிசம் தின்னும் பறவைகளும் கழுகுகளால் பிய்த்துப் போடப்பட்டச் சின்னச் சின்னத் தசைத்துணுக்குகளைக் கவ்விக் கொண்டன. சில நரிகளும் தென்பட்டன. ஆனால் கழுகுகளின் கொத்தலுக்குப் பயந்து தூரத்தில் நின்றன. அவற்றில் தைரியமான சில நரிகள் கழுகுகளை விரட்டவும் முயன்றன. தசையும், சதையும் கொஞ்சம் கொஞ்சமாய்த் தீர்ந்து போய் எலும்புக்கூடு மட்டும் மிச்சம் இருக்கும் நேரம்!

தன் கையிலிருந்த அரிவாளால் கழுகுகளைப் பயமுறுத்தி விரட்டிய வண்ணம் கிருஷ்ணன் நிதானமாகவும் எச்சரிக்கையுடனும் அந்த உடல்களின் அருகே சென்றான். ஒரு உடல் குதிரை ஒன்றினுடையது. அதன் உடலில் சேணம் கட்டப்பட்டுக் கிடந்தது. இன்னொன்று ஒரு மனிதனின் உடல். அந்த உடலைத் தான் கழுகுகள் மொய்த்துக் கொண்டிருந்தன. கிருஷ்ணன் தன் வில்லில் இருந்து ஓர் அம்பை வேகமாக ஒரு கழுகின் மேல் செலுத்தினான். கொஞ்ச நஞ்சம் மீதம் இருந்த சதையையும் கொத்தித் தின்று கொண்டிருந்த அந்தக் கழுகு பயத்துடன் பறக்கப் பார்த்தது. ஆனால் அதற்குள்ளாக அம்பு அதன் மேல் தைத்துவிட இறக்கைகளைப் படபடவென அடித்த வண்ணம் தரையில் வீழ்ந்த அது மெல்ல எழுந்திருக்கப் பார்த்து முடியாமல் மீண்டும் கீழே விழுந்து இறந்தது. இதைக் கண்ட மற்றக் கழுகுகள் பயத்தில் கிரீச்சிட்டுக் கொண்டு விண்ணில் பறந்தன.  மீண்டும் ஓர் கழுகு அந்த உடலைக் கொத்த வருவதைப் பார்த்த கிருஷ்ணன் மறுபடி இன்னோர் அம்பை எய்தான். அதுவும் கீழே விழுந்து இறந்தது. மற்றக் கழுகுகள் இதைக் கண்டதும் பறந்து ஓடிவிட்டன.

அங்கிருந்த மனிதனின் உடல் மனதைக் கலக்கும் வண்ணம் பயங்கரமான தோற்றத்தைத் தந்தது. ஒரு காலத்தில் முகம் என இருந்த இடத்தில் இப்போது தாடியும், தலை மயிரும் மட்டும் ஒரு மாதிரியான கோலத்தில் தொங்கிக் கொண்டிருந்தன. அந்த மனிதன் அணிந்திருந்த உடையும் கந்தல் கந்தலாகக் கிழிந்து போயிருந்தது. அந்தக் கந்தல் துணி அவன் இடுப்பில் தொங்கிக் கொண்டிருந்த கோலம் பார்க்கவே மோசமாக இருந்தது. அந்த உடலின் அருகில் ஓர் வில், அம்புகள் நிறைந்த அம்புறாத் தூணி, ஒரு பெரிய வாள் ஆகியன கிடந்தன. அவனுடைய முதுகுத் தண்டு யாரோ வலுவான கரங்களால் அடித்தாற்போல் இரண்டாகப் பிளந்து கிடந்தது. அதைப் பார்க்கையிலேயே வெளிப்படையாகத் தெரிந்த ஓர் விஷயம் இது எந்த மனிதனும் செய்யவில்லை; இவன் மரணம் மனிதனால் ஏற்படவில்லை என்பதே! சக்தி வாய்ந்த மிருகம் ஒன்றின் வேலை தான் இது என்பதைப் பார்த்ததுமே புரிந்தது. கிருஷ்ணன் கீழே குனிந்து அந்த மனிதனை அடையாளம் காண முயன்றான்.

மிகக் கவனமாக அவன் அணிந்திருந்த உடையையும், ஆபரணங்களையும், அவன் தோள்பட்டைகளையும் ஆராய்ந்தான். அவன் அணிந்திருந்த உருமால், கிழிந்திருந்தாலும் அது விலை உயர்ந்தது என்பது தெரிந்தது. அவன் அணிந்திருந்த அரைக்கச்சை முழுதும் தங்கத்தால் வேயப்பட்டிருந்ததோடு அல்லாமல் அதன் நடுவில் சூரியக் கடவுளின் பிம்பமும் இருந்தது. இதே போன்ற ஒன்றைத் தான் சத்ராஜித்தும் அணிந்து கொள்கிறான். நேற்றும் அணிந்திருந்தான். வில்லின் தண்டு கூட சூரியக் கடவுளின் பிம்பத்தைக் கொண்டிருந்தது. கிருஷ்ணனுக்கு இறந்தது யார் என்பது புரிந்து விட்டது. சத்ராஜித்தின் சகோதரன் பிரசேனனின் உடல் தான் இது!

Monday, January 18, 2016

கண்ணன் யோசிக்கிறான்!

இப்போது நாம் கிருஷ்ணனைக் கொஞ்சம் கவனிக்கணும். அவன் என்ன செய்தான், எப்படிச் செய்தான் எனத் தெரிந்து கொள்ள அவன் பின்னே செல்ல வேண்டி இருக்கிறது. கொஞ்சம் அலைச்சல் தான். ஆனாலும் என்ன செய்யறது? முதல்நாள் இரவு படுத்துக் கொண்ட கிருஷ்ணன் காலை வெகு சீக்கிரம் கண் விழித்துவிட்டான். சூரியோதயத்திற்கு இன்னும் சில நாழிகைகள் இருக்கின்றன. அதற்கு முன்னாலேயே எழுந்துவிட்டான் கிருஷ்ணன். சப்தமே செய்யாமல் கடலுக்குச் சென்று குளித்து முடித்தான். காலை அனுஷ்டானங்களையும் முடித்துக் கொண்டான். பின்னர் சென்றது போல் சப்தமே இல்லாமல் திரும்பத் தன் மாளிகைக்கு வந்தான். தன்னுடைய உடைகள், ஆயுதங்கள் அனைத்தையும் வைத்திருக்கும் அறைக்குச் சென்றான். தேடிப் பிடித்து ஒரு வேட்டைக்காரனின் உடையை அணிந்து கொண்டான். மடிப்பு மடிப்பாகச் சென்ற அது கிருஷ்ணனின் தலை வரைக்கும் சென்றது. அப்படியே தலையில் அதை முடிந்து கொண்டான். முழங்காலுக்குச் சிறிது மேல் வரை வந்த அந்த உடையை இரு பக்கமாகப் பிரித்து இரு கால்களுக்கிடையில் அணிந்ததால் அவனால் எங்கும், எதிலும் வேகமாகச் செல்லலாம். இடுப்பில் ஒரு உருமாலை இறுக்கிக் கட்டிக் கொண்டான். அரைக்கச்சை போல் அது அமைந்தது. தோல் வாரினால் பிணைத்த மரச் செருப்பை அணிந்து கொண்டான். இப்போது ஆயுதம் தரிக்க வேண்டும்.

ஆயுதங்களைக் கூர்ந்து கவனித்துப் பார்த்து மூங்கிலினால் செய்த வில்லை எடுத்துக் கொண்டான். பொதுவாக வேட்டைக்காரர்கள் இம்மாதிரி வில்லைத் தான் பயன்படுத்துவார்கள். அதற்கேற்றவாறு அம்புகளையும் பொறுக்கி எடுத்துக் கொண்டான். அரைக்கச்சையில் பெரிய கத்தி ஒன்றை உறையோடு செருகிக் கொண்டான். கடைசியாக அரிவாள் ஒன்றைக் கையில் எடுத்துக் கொண்டான். சற்றுத் தயங்கியவன் ஒரு உல்லாசமான அதே சமயம் விசித்திரமான சிரிப்புடன், தன் புல்லாங்குழலை எடுத்தான். அவன் சிறுவனாக இருந்தபோது இந்தப் புல்லாங்குழல் அவனை விட்டுப் பிரிந்தது இல்லை. இப்போதோ அவன் புல்லாங்குழலை இசைப்பது குறைந்தே விட்டது; ஏன் அறவே இல்லை! அதை இப்போது எடுத்துத் தன் இடையில் அரைக்கச்சைக்குள் செருகிக் கொண்டான். பின்னர் அதே புன்னகை மாறாமல் மாளிகையின் சமையல் கூடத்திற்குச் சென்றான். ஓலையினால் பின்னப்பட்ட ஒரு சிறு பையை எடுத்துக் கொண்டு அதில் உணவுப் பொருட்களை நிரப்பிக் கொண்டு அதை நன்கு மூடித் தன் தோளில் தொங்க விட்டுக் கொண்டான். பின்னர் எவரும் அறியாமல் வீட்டை விட்டு வெளியேறி காடு இருக்கும் திசை நோக்கி நடந்தான்.

கடந்து சென்ற மூன்று நாட்களின் சம்பவங்கள் அனைத்தும் அவன் கண் முன்னர் வரிசையாக வந்தன. அவற்றை ஒன்றோடு ஒன்று பொருத்திப் பார்த்துக் கொண்டு நடந்தான். சத்ராஜித்தின் தம்பி பிரசேனன், மூர்க்கத்தனமானவன் ஒரு மோசமான மனிதன், எங்கே எந்தச் சச்சரவு நடந்தாலும் அதில் பங்கெடுத்துக் கொள்பவன், ஒரு ரகசியமான சந்தேகத்துக்கிடமான வேலையைச் செய்ய பாதி ராத்திரியில் சென்றிருக்கிறான். அவன் அப்படி எங்கே, எதற்காக, ஏன் சென்றான்? அதுவும் சத்ராஜித் துவாரகையின் பெரிய பெரிய தலைவர்களை எல்லாம் மிரட்டிப் பயமுறுத்திக் கிருஷ்ணன் தான் ச்யமந்தகத்தைத் திருடினான் என ஒப்புக் கொள்ள வைப்பதற்காகப் போராடிக் கொண்டிருக்கையில் அவனுடன் இல்லாமல் பிரசேனன் மட்டும் எங்கே தனியாகப் போயிருக்க முடியும்? சந்தேகமாக இருக்கிறது. ச்யமந்தகம் காணாமல் போனதற்கும் பிரசேனனுக்கும் நிச்சயம் ஏதோ தொடர்பு உள்ளது.
அதோடு சாத்யகி காணாமல் போனதுக்கும் சத்யபாமா காணாமல் போனதற்கும் சம்பந்தம் இருப்பதாகவும் கண்ணன் நினைக்கவில்லை. இருவரும் ஒருவர் மீது ஒருவர் காதல் கொண்டு இங்கிருந்து ஓடவில்லை. இது காதலர்களின் ஓடுதல் இல்லை. சாத்யகி கிருஷ்ணனிடம் எதையும் எப்போதும் ஒளித்தது இல்லை. அவனிடம் ரகசியம் என்பதே இல்லை. ஹஸ்தினாபுரம் செல்கையில் சத்யபாமாவால் அவன் கடத்திச் செல்லப்பட்டது குறித்து சாத்யகி கிருஷ்ணனிடம் நன்கு விவரித்திருந்தான். அவள் தந்தையால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கொலையாளிகளால் அவன் கொல்லப்படாமல் சத்யபாமா உதவியதையும் கூறி இருந்தான். அதோடு இல்லாமல் சாத்யகியிடம் அவள் திருமணம் கிருஷ்ணனுடன் நடப்பதற்கு அவன் உதவி தேவை என்றும் கூறி அதற்காக அவனிடம் உறுதிமொழியும் வாங்கிக் கொண்டிருக்கிறாள். ஆகவே அவர்கள் இருவரும் ச்யமந்தகத்தைத் தான் தேடிப் போயிருக்க வேண்டும். அதைத் தேடிக் கண்டு பிடித்தால் கிருஷ்ணனின் மேல் விழுந்திருக்கும் பழியை நீக்கலாம். அது தான் அவர்கள் எண்ணம். ஆம், அப்படித்தான் இருக்க வேண்டும்.

சாத்யகியைக் குறித்துக் கிருஷ்ணன் நன்கு அறிவான். கிருஷ்ணனுக்காகத் தன் உயிரையே கொடுக்கும் வண்ணம் விசுவாசம் மிக்கவன் அவன். ஆகவே அவன் கிருஷ்ணனுக்காக ச்யமந்தகத்தைத் தேடிச் சென்றிருந்தால் அதில் ஆச்சரியப்பட ஏதுமில்லை. ஆனால் சத்யபாமாவும் அவனுடன் சென்றிருக்கிறாள் எனில் அதற்கு ஒரே ஒரு காரணம் தான் இருக்க முடியும். பாமாவுக்கு அவள் தந்தை எங்கே ச்யமந்தகத்தை ஒளித்து வைப்பார் என்பது தெரிந்திருக்க வேண்டும். ஆகவே இந்த விஷயத்தில் அவள் சாத்யகியின் உதவியை நாடி இருக்கலாம். ஆகவே இருவரும் ஒன்றாகப் போயிருக்கலாம். இதில் தான் இருவரும் முட்டாள் தனமாக நடந்து கொண்டிருக்கிறார்கள். முட்டாள்கள், முட்டாள்கள்! இப்படிச் செய்ததின் மூலம் இருவரின் நற்பெயர் மட்டுமா கெட்டுப்போகும்? கிருஷ்ணனுக்கும் இதனால் பலன் ஏதும் கிடைக்கப் போவதில்லை. இருவரும் கிருஷ்ணனை எப்படியாவது இந்தப் பழியில் இருந்து காப்பாற்ற வேண்டும் என்னும் ஆவலில் கிளம்பிப் போயிருக்கிறார்கள். இது கிருஷ்ணனுக்கு எவ்வகையிலும் நன்மையைத் தரப் போவதில்லை.

யோசிக்க யோசிக்கக் கிருஷ்ணனுக்கு சத்யபாமா தன்னுடைய மடத்தனத்தினால் இத்தகைய காரியத்தைச் செய்திருப்பதாகவே தோன்றியது. அவனைக் காப்பாற்ற வேண்டி இப்படி ஓர் மடத்தனத்தைச் செய்து தன்னைத் தானே அழித்துக் கொள்ளப் போகிறாள் சத்யபாமா! அப்படித் தான் இருக்க வேண்டும். மேலும் யோசனைகள் ஓடின கிருஷ்ணனுக்குள். சத்யபாமா அந்தப் பிரியாவிடைப் பாடலின் விட்டுப் போன வரிகளை அவனுக்கு அனுப்பி வைத்திருந்தாளே! அதில் அவனுக்கு ஓர் செய்தி இருப்பதாகவும் கூறி இருந்தாள். அதற்குத் தான் ருக்மிணி அவளையும் ஷாய்ப்யாவையும் பாமா மறைமுகமாகத் தாக்கிக் கண்டித்திருப்பதாகக் கூறினாள். ஆனால் அவள் சொன்னது தவறு! ஆம், பாமா அவர்கள் இருவருக்கும் அதில் செய்தி அனுப்பவில்லை. சத்ராஜித்தின் மாளிகைக்குச் சென்றபோது  சத்ராஜித்திடம் பேசியபோது கண்ணன் தானே கூறினான். அவளுக்கு இந்தப் பாடல் தெரிவதற்கு வாய்ப்பே இல்லை என்றும் , இந்தப் பாடலைத் தினமும் பாடி வரும் சாத்யகனின் குடும்பத்திற்கு மருமகளாகச் செல்லும் வாய்ப்பு பாமாவுக்குக் கிடைக்காது என்றும் அப்படி அவள் போனாலும் அது பொருந்தாத திருமணமாக இருக்கும் என்றும் ஏனெனில் க்ஷத்திரிய தர்மம் பற்றி அவள் ஏதும் அறிய மாட்டாள் என்றும் கண்ணன் தானே கூறி இருந்தான்.

அவளுக்கு அந்தப் பாடல் நிச்சயமாகத் தெரியாது; தெரிந்திருந்தாலும் ஓரிரு வரிகள் தான் தெரிந்திருக்கும். இதனால் அவள் மனம் புண்பட்டிருக்கும். அவள் கௌரவத்திற்கும், அகங்காரத்திற்கும் கிருஷ்ணன் மேற்கண்டவாறு கூறியவை பங்கம் விளைவித்திருக்கும். அதனால் தான் அவள் சுபத்ராவிடம் அந்தப் பாடலை முழுதும் பாடுமாறு கேட்டிருக்கிறாள். அதனால் தான் அவள் இப்போது தன்னை இந்த வேலையில் ஈடுபடுத்திக் கொள்வதன் மூலம் தானும் ஒரு க்ஷத்திரியப் பெண்மணி தான்; அதிலும் மற்றப் பெண்களை விடத் தான் சிறந்தவள்; என்றெல்லாம் நிரூபிக்க வேண்டி இந்த வேலையில் இறங்கி இருக்கிறாள். முட்டாள் பெண்! அவள் தந்தையின் கௌரவமும், அவள் குடும்ப கௌரவமும் இதில் அடங்கி இருப்பதை உணரவே இல்லை. அவளும் ஒரு வீரனின் மனைவியாவதற்கு முற்றிலும் தகுதியானவள் என்பதை நிரூபிக்க வேண்டும் அவளுக்கு! இதன் மூலம் அவள் சுய கௌரவம் பாதிக்கப்படுவதோடு அல்லாமல் அவள் உயிருக்கும் ஆபத்து ஏற்படும். அதை உணரவே இல்லையே!

ஏன் இப்படி எல்லாம் நடக்கிறது? இருவரும் மிக மிக அவசரமாக ஏதேதோ செய்துவிட்டார்கள். இப்போது கண்ணனின் தர்மம் அவர்களை எவ்வகையிலாவது காப்பாற்றுவது! இந்த மாபெரும் அபகீர்த்தியில் இருந்தும், உயிருக்கே ஏற்படப் போகும் ஆபத்திலிருந்தும் அவர்களைக் காப்பது கண்ணனின் கடமை! ச்யமந்தகத்துக்கு எது நேர்ந்தாலும் சரி. அவர்கள் இருவரும் காப்பாற்றப்பட வேண்டும். ஹூம்! எனக்கு உதவுவதாக என் மேல் அன்பு கொண்டவர்கள் எடுத்துக் கொள்ளும் நடவடிக்கைகளால் எனக்கு மிக அதிகமான பொறுப்பும், கடமையும் சுமந்து விடுகிறது. இப்போது என் மேலுள்ள அதீத அன்பினால் இவர்கள் செய்த இந்தக்காரியத்தினால் என் பொறுப்பும் அதிகரித்து விட்டது. ஏன் இப்படிச் செய்கின்றனர்? இவர்கள் அன்பே எனக்கு மாபெரும் சுமையாகப் போய் விடுகிறதே!

பாமாவுக்கு பிரசேனன் தான் அந்த ச்யமந்தகத்தை எடுத்துச் சென்றிருக்கிறான் என்பது தெரியுமா? அப்படித் தெரிந்தால் அவள் அவன் சென்றிருக்கும் வழியிலேயே செல்வாள். இந்தப் பிரசேனன் தான் ச்யமந்தகத்தை எடுத்துக் கொண்டு எங்கு தான் சென்றிருப்பான்? கிருஷ்ணன் வியந்தான்.

Sunday, January 17, 2016

பிரசேனன் மரணம்! சத்ராஜித் கலக்கம்!

சத்ராஜித் செய்வதறியாமல் வாயடைத்துப் போய் நின்றான். பலராமன் கூறியவற்றின் பொருளை உள்வாங்கிக் கொள்ளவே அவனுக்கு வெகு நேரம் ஆனது. அப்படியும் அவனால் புரிந்து கொள்ள முடியவில்லை. மிகவும் சிரமத்துடன் பேசினான். “கிருஷ்ணனை நான் கடத்தினேனா? என்ன சொல்கிறாய் வாசுதேவ புத்திரனே!”

“அவனை இப்போதே இங்கே கொண்டு வந்து நிறுத்துகிறாயா இல்லையா? முதலில் அதைச் சொல்! அப்போது தான் நான் அடுத்துச் செய்யவேண்டியது என்ன என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியும்.” சத்ராஜித் திகைத்துப் போனான். பலராமனின் தீர்க்கமான உறுதியான பேச்சின் தன்மையை அறிந்து அதன் பொருளை அறிந்து செய்வதறியாமல் தவித்தான். இந்தப் புதிய மாற்றத்தை அவனால் எதிர்கொள்ள முடியவில்லை. வேறு வழியின்றித் தன் கரங்களைக் கூப்பியவண்ணம் சொன்னான். “வாசுதேவ புத்திரரே! நீங்கள் சொல்லித்தான் அதுவும் இப்போது சொல்வதன் மூலம் தான் நான் கிருஷ்ணன் துவாரகையில் இல்லை என்பதையும், அவன் மறைந்துவிட்டான் என்பதையும் அறிந்தேன். இதற்கு முன்னர் எனக்குத் தெரியாது!”

பலராமன் அதை நம்பாமல் தன் தலையை அசைத்தான். “அன்று அவன் உன் மாளிகைக்கு வந்தபோது நீ அவனைக் கொல்ல முயற்சி செய்தாய்! உன்னால் அது முடியவில்லை. ஆகவே இன்று அவனைக் கடத்தி உன் கண்காணிப்பில் வைத்திருக்கிறாய்!” என்றான். “வாசுதேவ புத்திரா! என் தந்தையின் நற்பெயரின் மீது ஆணையாகச் சொல்கிறேன். கிருஷ்ணன் இப்போது காணாமல் போனதற்கும் எனக்கும் சம்பந்தம் ஏதும் இல்லை! நான் இதைக் குறித்து ஏதும் அறியேன்!” என்றான் சத்ராஜித். “அப்படியா? நீ உண்மையைத் தான் பேசுகிறாயா? அப்படி என்றால் என்னுடன் வா! வந்து ராஜா உக்ரசேனரிடம் உன் தரப்பு வாதத்தை எடுத்துச் சொல்! அவர் திருப்தி அடைகிறாரா பார்க்கலாம்.” என்றான் பலராமன்.

சத்ராஜித்திற்கு ஏதும் புரியவில்லை. தன்னைச் சுற்றிலும் பார்த்தான். பலராமனை எதிர்க்கலாம் என்றே முதலில் நினைத்தான். ஆனால் ஏனோ ஒரு தயக்கம் வந்து குறுக்கிடவே தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு தன் எண்ணத்தை மாற்றிக் கொண்டான். ஏற்கெனவே அவன் காவலாளர்கள் தூரத்தில் நின்று கொண்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். அருகே வந்தால் பலராமனின் பிடிக்குள் அகப்பட்டுவிடுவோமோ என்னும் பயம் தான் காரணம். இவர்களை எப்படி நம்புவது? அதோடு பலராமனைத் தாக்கினால் என்ன நடக்கும் என்பதை அவன் தன் கண்களாலேயே நுழைவாயில் இடிக்கப்பட்ட விதத்திலிருந்து புரிந்து கொண்டு விட்டான். ம்ம்ம்ம்ம்ம். கிருஷ்ணனைத் தாக்க முயற்சித்திருக்கக் கூடாது! அது தான் செய்த பெரிய தவறு. சத்ராஜித் அதை இப்போது தாமதமாகப் புரிந்து கொண்டுவிட்டான். இந்தத் தவறை அவனால் திருத்தவும் இயலாது. அவனுக்குக் கொஞ்சம் அவகாசம் தேவைப்பட்டது. அது மட்டும் கிடைத்தால் எப்படியாவது பேசிச் சமாளிக்கலாம்.

“நான் இன்னமும் என் காலை நியமங்களை முழுதுமாக முடிக்கவில்லை. பாதியில் எழுந்து வந்திருக்கிறேன். நீங்கள் வந்தபோது காலை அனுஷ்டானங்களைத் தான் செய்து கொண்டிருந்தேன். “ என்று இழுத்ஹ்டான் சத்ராஜித். ஆனால் பலராமன் எதற்கும் அசைந்து கொடுக்கவில்லை. “இதோ பார், நைனனின் மகனே! நான் உன்னை அரச மாளிகைக்கு அழைத்தால் வரவேண்டியது மட்டுமே உன் கடமை! அதை மறவாதே! நீ நித்யகர்மானுஷ்டானங்களைச் செய் அல்லது செய்யாமல் இரு! எனக்கு அதைக் குறித்த கவலை ஏதும் இல்லை. நீ வர மறுத்தால் நான் உன்னை இழுத்துக் கொண்டு செல்வேன்!”

“ஆனால் என்னால் எப்படி வரமுடியும்?” கெஞ்சினான் சத்ராஜித். என் நித்திய கர்மாக்களை நான் இன்னமும் செய்து முடிக்கவில்லை. அதோடு நான் அரசரைச் சந்திக்க வேண்டிய நியமப்படி ராஜ தரிசனத்துக்கான உடைகளை அணியவேண்டும்.”

“உன் பிதற்றல்களை முதலில் நிறுத்து! நான் சொன்னால் சொன்னது தான்! அதுவே முடிவானது! ஒன்று நீயாக என்னுடன் வா, அல்லது நான் உன்னை இழுத்துச் செல்வேன்.” சொல்லிய வண்ணம் பலராமன் சத்ராஜித்தை நோக்கி அடி எடுத்து வைத்தான். அப்போது திடீரென உத்தவன் அந்தக் கூட்டத்தினிடையில் வழியை உண்டாக்கிக் கொண்டு வந்தான். பலராமனிடம் வந்து ரகசியமாக ஏதோ சொன்னான். பலராமன் குனிந்து கொண்டு உத்தவனின் கிசுகிசுப்பேச்சை உன்னிப்பாகக் கவனித்தான். உத்தவன் சொன்னான்.

“பெரியவரே, மாட்சிமை பொருந்திய வசுதேவர் இந்த விஷயத்தை உன்னிப்பாகக் கவனித்து வருகிறார். கிருஷ்ணன் தன்னுடைய சொந்த விருப்பத்தின் பேரில் தான் இங்கிருந்து சென்றிருக்கிறான். செல்லும்போது வேட்டைக்காரர்களின் உடையை அணிந்து சென்றிருக்கிறான்.” என்றான். பலராமன் உள்ளூர நகைத்தான். அவனுக்குத் தான் ஏற்படுத்திய குழப்பம் மிகவும் பிடித்திருந்தது. ஆனாலும் இதிலிருந்து வெளியே வந்தாக வேண்டும். “உத்தவா, நான் சத்ராஜித்தை உக்ரசேன மஹாராஜாவை வந்து சந்திக்கவேண்டும் என்று சொல்லிவிட்டேனே!” என்றான். “அவன் அதற்குக் கீழ்ப்படிந்தே ஆக வேண்டும்! என்னுடன் அவன் வரட்டும்!” என்றான்.

அப்போது திடீரென சத்ராஜித்தின் காவலர்களிடையே பெரும் குழப்பம். அவர்கள் கூடி நின்றவர்கள் பிரிந்து திரும்பிப் பார்த்தார்கள். அவர்களில் ஒருவன் வீரன் ஒருவனை மிகவும் மோசமான கோலத்தில் அழைத்துக் கொண்டு வந்திருந்தான். அந்த வீரன் பார்க்கவே பயங்கரமாகக் காட்சி அளித்தான். அவன் உடலெங்கும் காயங்கள் காணப்பட்டன. மிக மோசமாக ரத்தம் இழந்து கொண்டிருந்தான். தலை எல்லாம் அவிழ்ந்து தொங்கி அங்குமிங்கும் பறந்தது. அவன் காலில் இருந்து ரத்தம் வந்து கொண்டிருந்தது. அவன் கண்கள் வெறி கொண்டவனைப் போலக் காட்சி அளித்தன. அங்குமிங்கும் பார்த்துக் கொண்டு நிலை இல்லாமல் தவித்துக் கொண்டிருந்தான். சத்ராஜித்தைக் கண்டதும் அவன் சத்ராஜித்தின் கால்களில் விழுந்து தன் தலையை அவன் காலடிகளில் வைத்துக் கொண்டு பெரும் குரலெடுத்துக் கதறினான்.

“பிரபுவே, பிரபுவே, தங்கள் அருமைத் தம்பி பிரபு பிரசேனர் நம்மை விட்டுப் பிரிந்து சிவலோகம் அடைந்துவிட்டார்.” என்று சொல்லிய வண்ணம் மீண்டும் பெரும் குரலெடுத்துக் கதறினான். சத்ராஜித் அதிர்ச்சி அடைந்தான். “என்ன?” என்று கேட்டான். “எங்கே என் அருமைத் தம்பி பிரசேனன்?” என்று கேட்டவண்ணம் தன் தலையை இரு கரங்களாலும் அழுத்திப்பிடித்துக் கொண்டான். தன் தந்தையின் திகைப்பைக் கவனித்த சத்ராஜித்தின் மகன்கள் இருவரும் விரைவில் அவன் அருகே வந்தனர். வந்த வீரன் உடல் எல்லாம் நடுங்கிக் கொண்டிருந்தது. குரலும் நடுங்கியது. தான் சொன்னதையே மீண்டும் சொன்னவன், “பிரபுவே, ஒரு சிங்கம் பிரசேனரைக் கொன்று விட்டது!” என்றான் நடுங்கும் குரலில். சத்ராஜித்திற்குத் தான் கேட்டவற்றை நம்பவே முடியவில்லை. “என்ன, ஒரு சிங்கம் அவனைக் கொன்று விட்டதா? எப்படி? அதை நீ எப்படி அறிவாய்?” என்று கேட்டான்.

“ஐயா, அவர் குதிரைக்குப் பின்னே என் குதிரையும் சென்று கொண்டிருந்தது. அப்போது காட்டில் இருந்து ஒரு சிங்கம் அவர் மேல் பாய்ந்தது.” என்று சொன்னவன் மீண்டும் அந்தச் சிங்கம் எதிரே நின்று கொண்டு தன் மேல் பாய்ந்துவிடுமோ என பயந்தவன் போல நடுங்கினான். தான் உயிர் பிழைத்து வந்தது எவ்வளவு பெரிய விஷயம் என நினைக்க நினைக்க அவனுக்குத் திகைப்பாக இருந்தது. “என்ன ஆகிவிட்டது!” என்று நினைத்த சத்ராஜித்திற்கு இந்த விஷயத்தின் இந்தச் செய்தியின் முக்கியத்துவம் அப்போது தான் புரிந்தது. உடனேயே அவன் முகம் கவலையிலும், பயத்திலும் வெளுத்தது! அதைப் பார்த்த பங்ககரா தன் தகப்பனின் தோள்களைச் சுற்றித் தன் கரங்களைப் போட்டு ஆறுதலாக அணைத்துக் கொண்டான்.

சத்ராஜித் இங்கேயும், அங்கேயும் சுற்றிச் சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்தான். அவனால் மேலே ஏதும் பேசமுடியவில்லை. அடுத்த கேள்வியை எப்படிக் கேட்பது என்றும் யோசித்துக் கொண்டிருந்தான். அதன் பின்னர் தனக்குள் பேசுவது போல் முணுமுணுத்தான். “பிரசேனனை சிங்கம் கொன்றதை நீ பார்த்தாயா? அது உறுதியா?” என்று கேட்டான். அவன் கேட்டது அந்த வீரனுக்குப் புரியாத காரணத்தால் பங்ககரா அதைத் திரும்ப அவனிடம் சொன்னான்.

“நான் அதைப் பார்க்கவேண்டிக் காத்திருக்கவில்லை ஐயா! பிரபுவே, அந்தச் சிங்கம் பெரும் குரலில் உறுமிக் கொண்டே அவர் மேல் பாய்ந்ததை என் இரு கண்களாலும் பார்த்தேன். அப்போது பிரசேனர் குதிரையின் மேலிருந்து கீழே விழுந்துவிட்டார். என் குதிரை இதைக் கண்டு பயத்தில் திரும்பி விட்டது. என்னைக் கீழே தள்ளிவிட்டுத் தன் உயிரைக் காத்துக்கொள்ள வேண்டி அது ஓடி விட்டது.” என்றான் அந்த வீரன்.

“பிரசேனன் கொல்லப்பட்டான்! பிரசேனன் கொல்லப்பட்டான்!” மீண்டும் மீண்டும் புலம்பினான் சத்ராஜித்.  பயத்திலும் கலக்கத்திலும் அவன் விழிகள் பயங்கரமான ரத்தச் சிவப்பாகக் காணப்பட்டன. அவன் தனக்குள்ளாக முணுமுணுத்துக் கொண்டான். “ச்யமந்தகம், ச்யமந்தகம்! ஆஹா! ச்யமந்தகம்! ஓ, சூரிய பகவானே! நான் என்ன செய்வேன்!” என்று புலம்பிய வண்ணம் தன் கரங்களை பங்ககராவின் மேல் போட்டுக் கொண்டு அவன் துணையோடு நடக்க ஆரம்பித்தான். ஆனால் அவனால் ஓர் அடி  கூட எடுத்து வைக்க முடியாமல் கீழே அப்படியே மயங்கிச் சரிந்தான். இதைப் பார்த்த பலராமன், “பங்ககரா, நான் இப்போது போகிறேன். உன் தந்தையை ஆசுவாசம் செய்! அவரை அதன் பின்னர் வந்து அரசரைக் காணச் சொல்! இல்லை எனில் நான் மீண்டும் இங்கே வந்து அவரை இழுத்துச் செல்லும்படி ஆகும். ஆகவே அதற்கு இடம் வைக்காமல் அவரையே போய்ப் பார்க்கச் சொல்!” என்ற வண்ணம் தனக்குள் சிரித்துக் கொண்ட பலராமன் சத்ராஜித்தின் மாளிகையை விட்டு வெளியேறினான். பங்ககரா, தன் சகோதரர்கள் மற்றும் அங்கிருந்த காவலாளிகளின் உதவியுடன் தன் தந்தையைத் தூக்கிக் கொண்டு மாளிகையின் உள்ளே சத்ராஜித்தின் படுக்கை அறையை நோக்கிச் சென்றான்.


Saturday, January 16, 2016

கொண்டு வா! கிருஷ்ணனை!

“என்ன, சென்று விட்டாரா? யார் நம் பிரபுவா? எங்கே போயிருக்கிறார்?”ஷாயிப்யா ஆச்சரியத்துடன் கேட்டாள். அதோடு அவளுக்குக் கிருஷ்ணன் இப்படி நடந்து கொண்ட முறையும் விசித்திரமாக இருந்தது. கிருஷ்ணன் ஒவ்வொரு நாளும் குளிக்கச் சென்றால் கூட மனைவியர் இருவரிடமும் விடைபெற்றுக் கொண்டு அவர்களின் வாழ்த்துக்களையும் பெற்றுக் கொண்டே செல்வது வழக்கம். துவாரகையில் இருந்தால் இந்த நடைமுறையைக் கட்டாயமாய்க் கடைப்பிடிப்பான் கிருஷ்ணன். ஆனால் இன்று? எவரிடமும் சொல்லாமல் அன்றோ போயிருக்கிறான்? குளிக்கத் தானா?

“அந்த மஹாதேவனுக்குத் தான் தெரியும் அவர் எங்கே சென்றிருப்பார் என்பது!”என்றாள் ருக்மிணி. அவள் செயலற்றுப் போய் இருப்பதை உணர்ந்து கொண்ட ஷாயிப்யா, “வா, நாம் ஆயுதசாலைக்குச் சென்று அங்கே பார்ப்போம். அங்கே ஆயுதங்களைத் தீட்டிக் கொண்டு உட்கார்ந்திருப்பார்.” என்றாள்.  “அதெல்லாம் எங்கேயும் போய்ப் பார்க்கவே வேண்டாம்!” இதைச் சொல்லும்போதே ருக்மிணியின் கண்கள் கண்ணீரை வர்ஷித்ததோடு அல்லாமல் குரலும் தழுதழுத்தது. “அவருடைய கிரீடம், சக்கரம், கத்தி, அவ்வளவு ஏன், அவருடைய பீதாம்பரம் எல்லாம் ஒழுங்காகக் கழற்றி வைக்கப்பட்டுப் படுக்கையில் இருக்கின்றன. அதோடு அவருடைய அரைக்கச்சையைக் கூடக் கழட்டி வைத்துவிட்டுப் போயிருக்கிறார். வா, ஷாயிப்யா, நாம் பெரியவர் பலராமரைச் சென்று பார்ப்போம். அவருக்குச் செய்தியைச் சொல்வோம்.” என்று ஷாயிப்யாவை அழைத்தாள் ருக்மிணி.

பலராமனின் மனைவி ரேவதி, கிருஷ்ணன் மறைந்துவிட்ட செய்தியைக் கேட்டதும் ருக்மிணியையும் ஷாயிப்யாவையும் பலராமனின் படுக்கை அறைக்கே அழைத்துச் சென்று விட்டாள். பலராமன் அப்போது ஸ்வப்பன உலகில் சஞ்சரித்துக் கொண்டிருந்தான். ஏதேதோ இன்பக் கனவுகள் என்பது அவன் புன்முறுவலில் இருந்து தெரிந்தது. அவனை உலுக்கி எழுப்பிக் கிருஷ்ணன் காணாமல் போய்விட்ட செய்தியை மூவரும் அவனிடம் தெரிவித்தார்கள். பலராமனுக்கு ஒன்றுமே புரியவில்லை. தன்னை உலுக்கிக் கொண்டு தூக்கத்தை விரட்டி அடித்த வண்ணம், “என்ன, கோவிந்தன் மறைந்துவிட்டானா?” என்று கேட்டான். எப்போதும் போல் அவன் இரவில் அவனுக்கு மிகவும் பிடித்த மதுபானம் செய்திருந்தான். அதனுடைய தாக்கம் இன்னமும் அவனிடம் இருந்து மறையவில்லை.

உணர்வுகளைக் கட்டுப்படுத்திக் கொண்டு எப்போதும் கவனமாகப் பேசும் ருக்மிணி அப்போது தன்னிலை மறந்திருந்தாள். “அவரை யாரோ கடத்தி இருப்பதாக நினைக்கிறேன். ஆம் நிச்சயமாக நம்புகிறேன்.” என்றாள். “என்ன? கடத்தி இருப்பார்களா? யார் கடத்தி இருப்பார்கள் என நினைக்கிறாய் ருக்மிணி?” என்ற வண்ணம் மீண்டும் தன்னை உலுக்கிக் கொண்டு தலையையும் உலுக்கினான் பலராமன். அவனுக்குத் தான் தூக்கத்தில் கனவு காண்கிறோமோ என்னும் சந்தேகம் போகவில்லை. “வேறு யார்? அந்த மூர்க்கன் சத்ராஜித்தாகத் தான் இருக்கும். பிரபுவால் ச்யமந்தகம் இருக்குமிடம் கண்டுபிடிக்கப்பட்டுவிடுமோ என்னும் சந்தேகம் அவனுக்கு! ஆகையால் அவரைக் கடத்தி இருப்பான்.” என்றாள் ருக்மிணி.

“ஓஓ, சரி, ருக்மிணி, நீ கவலைப்படாதே! நான் அவனைக் கண்டுபிடித்துக் கூட்டி வருகிறேன்.” என்ற வண்ணம் எழுந்த பலராமன், உடனே கடலுக்குச் சென்றான். தன் தூக்கம், மது மயக்கம் இரண்டும் தீரும் வண்ணம் குளித்தான். வீட்டிற்குத் திரும்பித் தன் உடைகளை அணிந்து கொண்டான். தன்னுடைய பிரியமான ஆயுதமான கலப்பையை எடுத்துக் கொண்டான். சத்ராஜித்தைத் தேடிச் சென்றான். துவாரகை அப்போது தான் மெல்ல மெல்ல விழித்துக் கொண்டிருந்தது. அது ஒரு நாளும் பலராமன் இவ்வளவு சீக்கிரம் குளித்து முடித்து உடுத்திக் கொண்டு ஆயுதபாணியாகத் தெருக்களில் விரைவதைக் கண்டதில்லை. ஆகையால் துவாரகை மக்களுக்கு வியப்பு! இவ்வளவு அதிகாலையில் பலராமன் தன் கைகளில் கலப்பையைத் தூக்கிக் கொண்டு கோபக் குறிகளைக் காட்டும் முகத்தோடு, நெருப்புத் தணலெனப் பிரகாசிக்கும் கண்களோடு சத்ராஜித் மாளிகை இருக்கும் திசை நோக்கிச் செல்கிறானே? என்ன காரணமாக இருக்கும்?

ஒரு சிலர் மரியாதையைக் குறிக்கும் விதமாக பலராமனுக்குச் சற்றுப் பின்னால் அவனைத் தொடர்ந்தார்கள். எதோ அசாதாரணமான ஒன்று நடந்திருப்பதோடு அதை விட அசாதாரணமாக இன்னும் வேறு ஏதோ ஒன்று நடக்கப் போகிறது என்றும் உணர்ந்திருந்தார்கள். ஆகவே எவரும் எதுவும் பேசாமல் மௌனமாகவே சென்றனர். சத்ராஜித்தின் மாளிகையை அடைந்ததும் வெளி வாசலில் இருந்து உள்ளே முற்றத்துக்குச் செல்லும் பாதையில் பொருத்தியிருந்த பெரிய கதவைத் தன் கலப்பையால் உலுக்கினான் பலராமன். அங்கிருந்த காவலாளர்கள் ஓடோடி வந்தனர். சத்ராஜித்தின் வீட்டை இப்படி உலுக்கும் வல்லமையும், திறமையும் அந்த நகரில் எவருக்கும் இல்லை என நினைத்திருந்தவர்கள் இப்போது பலராமனின் இந்தத் துணிச்சலான வேலையைக் கண்டு வாய் பேச முடியாமல் திகைத்து நின்றனர். ஆனால் அவர்களுக்கு இதைச் செய்தது பலராமன் என்பது அங்கிருந்த சிறிய திட்டி வாசல் கதவைத் திறந்து வெளியே பார்க்கும்வரை தெரியாது. திறந்து பார்த்தவர்கள் பலராமனைக் கண்டு ஆச்சரியம் அடைந்தனர். அவன் கோபத்தையும் பொறுமையின்மையையும் கண்டு செய்வதறியாது திகைத்தனர்.

“கதவைத் திறவுங்கள்!” என்று ஆவேசமாகக் கட்டளை இட்டான் பலராமன். அவர்களோ தங்கள் கைகளைக் கூப்பினார்கள். பணிவாக, “பிரபுவே, கதவைத் திறக்கும் முன்னர் எங்களுக்கு எங்கள் யஜமானரின் உத்தரவு தேவை!” என்று சொன்னார்கள். “எனக்கு யாருடைய உத்தரவுக்காகவும் காத்திருக்க வேண்டியதில்லை!  எனக்குத் தேவையும் இல்லை. நீங்களும் உங்கள் கதவுகளும்!” என்று சொல்லிய வண்ணம் தன்னுடைய கலப்பையினால் கதவை நோக்கித் திரும்பி நின்ற வண்ணம் ஓங்கி ஓர் அடி அடித்தான் பலராமன். பல்லாயிரம் இடிகளைப் போன்ற சப்தத்தோடு இறங்கிய அந்தக் கலப்பை அந்த மரக்கதவின் சட்டங்களைப் பொடிப்பொடியாக்கியது. கதவு பொடியானது கண்டும், அதனால் அந்தக் கதவைப் பிடித்திருந்த கட்டிட பாகங்கள் கீழே விழுவதைக் கண்டும் பயந்த காவலாட்கள் சற்றே விலகிப் பின்னால் சென்றனர். பலராமன் முற்றத்தை நோக்கிச் சென்றான்.

“உங்கள் யஜமானனை இங்கே உடனே இந்த நிமிடமே வரச் சொல்லுங்கள்!” என உத்தரவிட்டான். “எனக்கு அவருடன் முக்கியமாகப் பேச வேண்டியதிருக்கிறது!” என்றும் கூறினான். “பிரபுவே, தயவு செய்து உள்ளே வாருங்கள். நாங்கள் உள்ளே சென்று யஜமானிடம் உங்கள் வரவைத் தெரிவிக்கிறோம். நீங்கள் அவரைப் பார்க்க விரும்புவதையும் தெரிவிக்கிறோம். “ என்று சொன்னவண்ணம் அவர்களில் ஒருவன் தன் கரங்களைக் கூப்பிய வண்ணம் உள்ளே செல்லத் திரும்பினான். மற்றவர்கள் அவனுக்கு உள்ளே செல்ல வழியை ஏற்படுத்திக் கொடுத்துவிட்டு பலராமனின் கலப்பை அவர்கள் மேல் விழாத வண்ணம் தூரத்தில் பாதுகாப்பாக நின்று கொண்டனர். ஏனெனில் துவாரகை நகரமே பலராமனின் கோபத்திற்கும் அவனுடைய வலிமையான கலப்பைத் தாக்குதலுக்கும் பழகி இருந்தது.

பலராமன் வந்திருக்கும் செய்தி குறித்து அறிந்து கொண்ட பங்ககரா உடனே ஓடி வந்தான். பலராமனை வரவேற்றான். “பிரபுவே, வாருங்கள், வாருங்கள், உள்ளே வாருங்கள்! “ என்றும் அழைத்தான். “உங்களைச் சந்திப்பதில் தந்தை மிக சந்தோஷம் அடைவார்!” என்றும் கூறினான். “சத்ராஜித்தை உடனே இங்கே வரச் சொல்! அவன் இங்கே தான் வரவேண்டும். இங்கேயே வரச் சொல் அவனை! உன் மாளிகைக்குள் நான் நுழையப் போவதில்லை. அப்படி நுழைவதாக இருந்தால் அது மாளிகையைச் சுக்குநூறாக்குவதற்காகத் தான் இருக்கும்.” என்றான். வெளி வாயிலுக்குப் பின்னால் சாலையில் நூற்றுக்கணக்கான யாதவக் குடிகள் அதற்குள் கூடி விட்டார்கள். மாளிகைக்கு உள்ளே வீட்டின் உறுப்பினர்களில் ஆண்கள் சற்று தூரத்தில் என்ன நடக்கிறது என்பதைப் பார்க்கக் கூடி விட்டார்கள். பலராமன் எந்த அளவுக்குப் போவான் என்பதை அவர்களால் கணிக்க முடியவில்லை.

அப்போது சத்ராஜித் மாளிகையின் உள்ளிருந்து வேகமாக வெளியே வந்தான். அவனுடைய மகன்களில் ஒருவனான வடபதி என்பவனும் பங்ககராவுடன் வந்து கொண்டிருந்தான். சத்ராஜித்திற்கு பலராமன் ஏன் இங்கே வந்திருக்கிறான் என்பதே புரியவில்லை. அதுவும் இவ்வளவு கோபமாகப் பொறுமையின்றிக் கதவை உடைத்துத் திறந்து கொண்டல்லவோ வந்திருக்கிறான்! ஏற்கெனவே தன் வீட்டில், தன் குடும்பத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிகழ்வுகளால் அவன் நிலை குலைந்து போயிருந்தான். இப்போது வீட்டின் வெளிவாயில் கதவு உடைக்கப்பட்டது அவன் கௌரவமே சிதைந்து போனாற்போல் அவனுக்குத் தோன்றியது.

இருந்தாலும் கோபத்தை அடக்கியவண்ணம் பலராமனைப் பார்த்து, “ மாட்சிமை பொருந்திய
வாசுதேவனின் மகனே! வருக, வருக! உங்கள் வரவு நல்வரவாகுக! தயவு செய்து மாளிகையின் உள்ளே எழுந்தருள வேண்டும்!” என்று வேண்டினான். “இப்போது தான் உன் மகனிடம் உன் வீட்டினுள் காலடி எடுத்து வைக்க மாட்டேன் என்பதைச் சொன்னேன். அப்படி வந்தால் அது உன் வீட்டை நொறுக்குவதற்காக மட்டுமே இருக்கும்! அதுவும் உன் தலையில் விழும்படி வீட்டை இடிப்பேன். இப்போது நான் கேட்பதற்கு பதில் சொல்! கிருஷ்ணனை எங்கே ஒளித்து வைத்திருக்கிறாய்?” என்று ஆவேசமாகக் கேட்டான். அவன் குரலில் சத்ராஜித்தை மிரட்டும் பாவனை இருந்தது.

“என்ன? கிருஷ்ணனை நான் ஒளித்து வைத்துள்ளேனா? எனக்கு எப்படித் தெரியும் அவன் எங்கே என்பது? இது என்ன புதுக் குழப்பம்?” என்றான் சத்ராஜித். பலராமன் என்ன சொல்கிறான், எதற்காக இங்கே வந்திருக்கிறான், மேலே என்ன நடக்கப் போகிறது என்பது எதையும் அறியாமல் தவித்தான் சத்ராஜித். “ஓஹோ! உனக்குத் தெரியாதா? கிருஷ்ணன் எங்கே இருக்கிறான் என்பது உனக்குத் தெரியாது! அப்படியா? அதை நான் நம்பவேண்டுமா? பொய் சொல்லாதே சத்ராஜித்! கிருஷ்ணனை இப்போதே என் முன்னால் கொண்டு வந்து நிறுத்து! உடனே! நீ தான் அவனை நேற்றிரவு கடத்தி வந்திருக்கிறாய்!”

Wednesday, January 13, 2016

அவர் சென்று விட்டார்!

சத்ராஜித் தான் அவமானப்பட்டதை உணர்ந்து கொண்டான். அதோடு அவனுடைய சுய அபிமானமும், தன்னம்பிக்கையும் கூடக் குறைந்து விட்டிருந்தது. அவன் எவ்வளவு யோசித்து அழகாகத் திட்டமிட்டு அதை நிறைவேற்றினான்! ஆனால் அனைத்தும் வீணாகிவிட்டனவே! ஆம், அவன் திட்டங்கள் வீணானதில் சந்தேகமே இல்லை! சத்யா, பற்களைக் கடித்தான் சத்ராஜித். சத்யா அவனுடைய அந்த சபிக்கப்பட்ட பெண்! அவள் இத்தனை நேரம் அழிந்தே போயிருப்பாள்! அவள் தான் அவனை இந்த துவாரகை நகரமே பார்த்துச் சிரிக்கும்படியான நிலைக்கு உள்ளாக்கிவிட்டாள். அதே சமயம், கிருஷ்ணன் போட்ட சபதத்தினால் அவனுடைய மன உறுதியினால் அவன் கௌரவம் மிகவும் உயர்ந்து விட்டிருக்கிறது. ஆனால் சத்ராஜித்திற்கோ அவமானம்!

எல்லாவற்றிற்கும் சிகரம் வைத்தாற்போல் அவன் தம்பி பிரசேனன் இன்னமும் திரும்பவில்லை. அவன் சென்ற வேலையைச் சரியாக முடித்துக் கொண்டு இத்தனை நேரம் திரும்பி வந்திருக்க வேண்டும். ஆனால் அவன் இன்னமும் வரவில்லை. ஏதேனும் நடக்கக் கூடாதது நடந்து விட்டதோ? பிரசேனனுக்கு ஏதேனும் ஆபத்து நேர்ந்து விட்டதோ? அப்படி எனில் ச்யமந்தகம், ச்யமந்தகம் அது பத்திரமாக இருக்குமா? சத்ராஜித்திற்குக் கவலை பீறிட்டது. அவன் தன்னுடைய தினசரி நியமங்களுக்காக உட்கார்ந்து அவற்றை யந்திரம் போல் செய்தான். நொடிக்கொரு முறை அவன் கண்கள் வாசலைப் பார்த்ததோடு அல்லாமல் அவனே ஏதேனும் காலடி ஓசை கேட்டால் பிரசேனன் தான் வந்துவிட்டானோ என்னும் ஆவலில் எழுந்து ஓடி வந்தான். ஆனால் ஒவ்வொரு முறையும் அவனுக்கு ஏமாற்றம் தான்.

அன்றைய யக்ஞமும் பெயருக்கு நடந்தது என்பதை சத்ராஜித் கவனித்தான். வேத விற்பன்னர்கள் வந்திருந்தாலும் எவரும் ஈடுபாட்டுடன் செய்யவில்லை. ஆர்வமே காட்டாமல் கடமைக்குச் செய்தனர். குடும்ப நபர்களோ ஏதோ பேய், பிசாசு, பூதம் அந்த மாளிகையில் நடமாடுவது போல் பயந்த வண்ணம் இருந்தனர். ஏதோ சொல்லத் தெரியாத பேரிடர் நிகழ்ந்துவிட்டாற்போல் உணர்ந்தனர்.  இவர்களே நேற்று வரை அவனிடம் எவ்வளவு மரியாதையும், அடக்கமும் காட்டினார்கள். எவராலும் அடக்க முடியாத கிருஷ்ணனை சத்ராஜித் அடக்கப் போகிறான் என்பதில் அவனைக் கண்டு வியந்து பாராட்டினார்கள். கண்ணனையே அழிக்கப் போகிறான் என்பதில் அவர்களுக்குக் கொஞ்சம் கர்வமாகவும் இருந்தது. இன்றோ! அவனை கழிவிரக்கத்துடன் பார்ப்பதோடு அல்லாமல் அவனிருக்கும் தர்மசங்கடமான நிலையை நினைத்தும் அவர்கள் வேடிக்கை பார்ப்பது போல் சத்ராஜித்திற்குத் தோன்றியது.

துவாரகை முழுவதும் பரவி இருக்கும் வதந்தியை நம்புவதா வேண்டாமா எனத் தெரியவில்லை. அது அவன் மன அமைதியைக் கெடுத்தது. எல்லோரும் ஒரு மனதாகச் சொல்வது என்னவெனில் சாத்யகி அவன் மகள் சத்யபாமாவை அழைத்துக் கொண்டு ஓடி விட்டான் என்றே! அவனும் அப்படித் தான் நினைத்தான். காந்தர்வ முறைப்படி மணம் செய்து கொள்ள இருவரும் சென்றுவிட்டதாகப் பேசிக் கொள்கின்றனர். யாதவர்களில் பலருக்கும் சாத்யகி இப்படிச் செய்ததில் மனம் நொந்து விட்டது. சாத்யகர் எவ்வளவு பெரிய மனிதர்! க்ஷத்திரியர்களுக்கே ஓர் எடுத்துக்காட்டாக உதாரண புருஷராக வாழ்பவர்! அவர் மகன் இப்படியா?  சாத்யகியின் இந்த நடவடிக்கையால் சாத்யகரின் குடும்பப்பாரம்பரியமே அழிந்து விட்டதே! இத்தனை நாட்கள் வரை அவர்கள் எவ்வளவு கௌரவமான வாழ்க்கையை நடத்தி வந்தார்கள்!

மக்கள் மனதில் இப்போது ச்யமந்தக மணி மறைந்தது குறித்த சிந்தனையே இல்லை. அதிலும் அதைக் கிருஷ்ணன் திருடி இருப்பான் என்னும் செய்தியையும் அவர்கள் எவரும் நம்பவில்லை. அனைவரும் என்ன நினைத்தார்கள் எனில் சத்யபாமாவிடம் தான் ச்யமந்தகம் இருந்தது எனவும், அவள் சாத்யகியை அழைத்துக் கொண்டு செல்கையில் அதையும் தன்னுடன் எடுத்துச் சென்றிருக்கிறாள் என்றே அனைவரும் எண்ணினார்கள். ஆனால் சத்ராஜித்திற்கு அது உண்மை அல்ல என்பது நன்றாகத் தெரியும். அதே சமயம் அவன் மனதில் ஒரு பிரமிப்பு ஏற்பட்டிருந்தது. அது மூடநம்பிக்கையினால் ஏற்பட்ட பிரமிப்பு என்பதை அவன் உணரவில்லை. ஆனாலும் அவனுடைய செல்வாக்கு, அதிகாரம் அனைத்தும் அந்த ச்யமந்தகத்தால் தான் கிடைத்தது என்பதை அவன் மனதார நம்பினான்; இப்போதும் அதையே நம்புகிறான். இப்போது அது அவனை விட்டுச் சென்று விட்டதால் தான் இத்தகைய கலவரமான செய்திகள் கிடைப்பதோடு அவனுடைய மனமும் கலக்கம் அடைந்திருக்கிறது. அவனுடைய செல்வாக்கும், அதிகாரமும் குறைந்திருக்கிறது.

துவாரகையின் யாதவர்கள் அனைவருக்கும் சாத்யகியின் இந்த விசித்திரமான கபட நாடகத்தைப் புரிந்து கொள்ள முடியவில்லை. விசித்திரமாகவன்றோ நடந்து கொண்டிருக்கிறான். சத்யபாமாவுடன் ஓடிப் போய்விட்டான். ஆனால் அவனுடைய அனைத்து ஆயுதங்களும், மற்றும் ரதமும் இங்கேயே இருக்கின்றன. ஒரு துரும்பைக் கூட அவன் எடுத்துச் செல்லவில்லை. சத்யபாமாவுடன் அவன் ஓடிப் போயிருந்தான் எனில் அவன் ஆயுதங்களையும் எடுத்துக் கொண்டு ரதத்தில் அல்லவோ சென்றிருக்க வேண்டும். ஏனெனில் சத்ராஜித் தன் மகளை அழைத்துக் கொண்டு ஓடியவனைத் துரத்திச் சென்று போர் தொடுப்பானே! ஏன் அவன் தன் ஆயுதங்களையும், ரதத்தையும் விட்டுச் சென்றான்? அவர்கள் அப்படி எங்கே தான் சென்றிருப்பார்கள்?

இங்கே கிருஷ்ணனின் மாளிகையில் ருக்மிணி, காலையில் வழக்கம் போல் எழுந்தாள். தன்னருகே படுத்திருக்கும் கிருஷ்ணனை நோக்கித் திரும்பியவள் அதிர்ந்து போனாள். அங்கே கிருஷ்ணனைக் காணவில்லை. ஒருவேளை தான் இன்று அதிக நேரம் தூங்கி விட்டோமோ? கிருஷ்ணன் எழுந்து சென்று விட்டானோ? தன்னை எழுப்பவில்லையோ? இல்லையே! கிருஷ்ணன் இப்படிச் செய்ய மாட்டானே! வழக்கமாக அவள் காலை பிரம்ம முஹூர்த்த வழிபாட்டுக்கான ஏற்பாடுகளைச் செய்யும் வரை எழுந்திருக்கும் வழக்கமே இல்லையே! அவள் அதற்கான ஏற்பாடுகளைச் செய்து அவனை எழுப்பியதும் தானே எழுந்து வருவான்! இது என்ன புது வழக்கம்?

சரி, இன்று நேரமாகிவிட்டது எனக் குளிக்கக் கடலுக்குப் போய்விட்டார் போலும்!ஆனால் வீட்டை விட்டு வெளியே செல்லும் முன்னர் அவளையும் ஷாயிப்யாவையும் பார்த்து விடைபெறாமல் செல்லும் வழக்கமே இல்லையே! இது கொஞ்சம் புதிதாக இருந்தது ருக்மிணிக்கு. அப்போது ருக்மிணியின் மனதில் ஓர் கவலை அப்பிக் கொண்டது! ஒரு வேளை…ஒரு வேளை அவன் ச்யமந்தகத்தைத் தேடிச் சென்று விட்டானோ? எதற்கும் ஷாய்ப்யாவைப் பார்க்கச் சென்றிருக்கலாம். ஷாய்ப்யாவின் அறையை நோக்கிச் சென்ற ருக்மிணி, “பிரபு இங்கே வந்தாரா?” என்று அவளிடம் கேட்டாள். அவள் குரலில் தொனித்த அவசரமும் பரபரப்பும் ஷாய்ப்யாவையும் தொற்றிக் கொண்டது. சாதாரணமாக அவள் இப்படிப் பேச மாட்டாள். தெளிவாக உறுதியான, குரலில் நிச்சயத்தோடு பேசுவாளே!

“இல்லை, அவர் இங்கே வரவில்லையே? ஏன் கேட்கிறாய்?”

“அவர் சென்று விட்டார்!” ருக்மிணி சொன்னாள்.

Tuesday, January 12, 2016

சாத்யகியைக் காணவில்லை!

முகி பேசிக் கொண்டிருக்கையிலேயே எவரோ அழுத்தமான காலடிகளை வைத்து தடதடவென நடந்து வரும் சப்தம் கேட்டது. உடனே பெண்கள் அனைவரும் பின்வாங்கினார்கள். தங்கள் தலையில் முந்தானையை முக்காடாகப் போட்ட வண்ணம் திரைக்கு மறைவே சென்று நின்று கொண்டனர். இது அக்காலத்தில் வெளி ஆண்களுக்குக் காட்டப்படும் ஒரு மரியாதையாகக் கட்டாயமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வந்தது. உள்ளே அப்படி அவசரத்தோடு வந்தவன் சாத்யகன். அவன் வந்த கோலத்தைப் பார்த்தால் கிருஷ்ணனுக்கு ஆச்சரியமாக இருந்தது. சாத்யகர் தலையில் கிரீடம் இல்லை, ஆயுதங்களையோ, தன் உருமாலையோ அணியவில்லை; மாறாக அவர் முகம் ஆத்திரத்திலும் கோபத்திலும் கொந்தளித்துக் கொண்டிருந்தது. அவர் கண்கள் சிவந்து நெருப்பைப் போல் ஜொலித்துக் கொண்டிருந்தன. அவர் வந்த கோலத்தைப் பார்த்ததுமே அனைவரும் ஏதோ நடக்கக் கூடாதது நடந்து விட்டிருக்கிறது என்பதைப் புரிந்து கொண்டனர். சாத்யகர் தான் வரப்போவதை முன்கூட்டி அறிவிக்கவும் இல்லை; அதோடு கண்ணனைத் தன் மாளிகையில் வந்து சந்திக்கும்படி அழைக்கவும் இல்லை. அவசரமாக வந்திருக்கிறார்.

வந்ததுமே அவர் கோவிந்தனைப் பார்த்து, “கிருஷ்ணா, யுயுதானா சாத்யகி எங்கே?” என்று கேட்டார். “என்ன ஆயிற்று, சித்தப்பா?  யுயுதானா எங்களுடன் இல்லை; இன்று காலை மல்யுத்தப் பயிற்சிக்கும் அவன் வரவில்லை!” என்றான் கிருஷ்ணன். “என்ன ஆயிற்றா? கண்ணா, சாத்யகி, யுயுதானா சாத்யகி மறைந்து விட்டான். அவனைக் காணவில்லை!” என்றார் சாத்யகர். அங்கிருந்த பெண்கள் திடுக்கிட்டுத் திகைத்தார்கள். அப்போது கிருஷ்ணன், “இன்று காலை மல்யுத்தப் பயிற்சிக்கு அவன் வரவில்லை என்றதும் நானும் ஆச்சரியம் தான் அடைந்தேன்.  உத்தவனைக் கூட அனுப்பி அவனுக்கு என்ன ஆயிற்று என்று கேட்டுவரச் சொன்னேன்.” என்றான் கிருஷ்ணன்.

“நீ அவனைக் கடைசியாக எப்போது பார்த்தாய்?” என்று சாத்யகர் கேட்டார். “அவன் கிருதவர்மாவின் வீட்டுக்குச் சென்று கொண்டிருக்கையில் என்னைப் பார்த்தான். அதன் பின்னர் நான் அவனைப் பார்க்கவில்லை!” என்றான் கிருஷ்ணன். தன் புருவங்கள் நெரிய யோசித்த சாத்யகர், “அவன் அங்கே இல்லை! நான் விசாரித்துவிட்டேன்!” என்றார். அவர் முகம் கோபத்திலும் யோசனையிலும் ஆழ்ந்தது. அப்போது முகி க்ரீச்சென்று கூச்சலிட்டாள். “கடவுளே, பசுபதிநாதா!” என்று கூறியவள் அப்படியே தரையில் விழுந்து மயக்கம் அடைந்தாள். ருக்மிணி அவளுக்கு உதவி செய்ய ஓடினாள். ஷாயிப்யா உள்ளே சென்று நீர் எடுத்து வந்தாள். தங்கள் சேலைத் தலைப்பினால் உத்தவனின் மனைவியர் இருவரும் அவளுக்கு விசிறி விட்டனர்.

“யார் இந்தப் பெண்மணி?”என்று முகியைப் பார்த்துக் கேட்டார் சாத்யகர்.

“இந்த அம்மையார் தான் சத்யபாமாவின் செவிலித்தாய்! சத்ராஜித்தின் மகள் சத்யபாமாவின் வளர்ப்புத் தாய்!” என்று விளக்கினான் கிருஷ்ணன்.

“இவள் ஏன் இங்கே வந்திருக்கிறாள்?”

“சத்ராஜித்தின் மகளும் காணாமல் போய்விட்டாள். அவளும் மறைந்து விட்டாள்.”

அப்போது அனைவரும் சேர்ந்து செய்த சிசுரூஷைகளால் சற்றுக் கண் விழித்த முகி உள்ள நிலைமையைப் புரிந்து கொண்டு, தன் தலையில் கையை வைத்துக்கொண்டு ஓவெனக் கத்தி அழ ஆரம்பித்தாள். “எனக்கு இப்போது புரிந்து விட்டது! இப்போது புரிந்து விட்டது!” என்று புலம்பியவள், “அவர்கள் இருவருமாகச் சேர்ந்து தான் ஓடிப் போய்விட்டார்கள்!” என்று முடித்தாள். சாத்யகரின் முகத்தில் கோபம் அதிகமாயிற்று. கோபம் மாறாமலேயே அவர், “யார்? யாரைச் சொல்கிறாய் நீ?” எனக் கடுங்குரலில் கேட்டார்.

“தங்கள் அருமை மகன் யுயுதானா சாத்யகியும், என்னுடைய யஜமானியும் தான், பிரபுவே!”என்று பதிலளித்த முகி மீண்டும் தன் தலையில் அடித்துக் கொண்டாள்.

“ஹூம்! என் மகன்? யுயுதானா சாத்யகி! சத்ராஜித்தின் மகளுடன் ஓடி விட்டானா?” சாத்யகரின் குரலில் இருந்த கோபம் அனைவரையும் அதிர வைத்தது! மழைக்கடவுளான இந்திரன், ஒரே சமயத்தில் இடி, மின்னலுடன் கூடிய பெருமழையைப் பெய்ய வைத்தால் எப்படி இருக்குமோ அப்படி அவர் குரல் இடியைப் போலவும், கண்கள் கொடிய மின்னலைப் போலவும் ஜொலித்தன. பெருமழையைப் போல் முகி கண்ணீரை வர்ஷித்துக் கொண்டிருந்தாள். அங்கிருந்த அனைவரும் ஏதும் பேசாமல் மௌனமாகப் பார்த்துக் கொண்டிருந்தனர்.

“ஆமாம், ஐயா, ஆமாம்! எனக்கு நன்றாகத் தெரியும். இருவரும் கிருதவர்மாவின் வீட்டில் தான் சந்தித்துக் கொள்வார்கள். நான் அதையும் அறிவேன்.” என்றாள் முகி.

“நான் இதை நம்பவே மாட்டேன். என் மகன் யுயுதானா சாத்யகி சத்ராஜித்தின் பெண்ணை மணக்க ஒருக்காலும் விரும்ப மாட்டான்!” என்றார் சாத்யகர் திட்டவட்டமாக.

“என்னாலும் இதை நம்ப முடியவில்லை.” என்றான் கிருஷ்ணன். பின்னர் மேலும் சொன்னான்: “எனக்குத் தெரிந்தவரை அவன் அவளைப் பாராட்டிப் பேசுவான். அதிலும் அவளால் அவன் கடத்தப்பட்டதும், அதனால் தான் அவன் என்னுடன் ஹஸ்தினாபுரம் வர முடிந்தது என்பதும், அவன் கொலையாளிகளின் கைகளினால் இறந்து போகாமல் காப்பாற்றி அவனுக்கு உயிர் கொடுத்தது அவள் தான் என்பதிலும் அவன் அவள் தைரியத்தை மெச்சிப் பாராட்டுவான்.” என்றான் கிருஷ்ணன்.

“மஹாதேவா! மஹாதேவா! இவ்வுலகில் பெண்களே இல்லையா? நல்ல பெண்கள் எத்தனையோ பேர் இருக்கையில் என் மகனுக்கு இந்த சத்ராஜித்தின் முட்டாளும் முரடும் அகந்தையும், கர்வமும் பிடித்த பெண் தானா கிடைத்தாள்?” சாத்யகரால் முகி சொன்னதை ஜீரணிக்க முடியவில்லை. அதில் உண்மை இருக்கும் என்பதையும் அவர் நம்ப மறுத்தார்.

“அவசரப்பட்டு எந்தவிதமான முடிவுக்கும் வராதீர்கள் சித்தப்பா!  நம் கண்களுக்குத் தெரிவதெல்லாம் எப்போதும் உண்மையாக இருப்பதில்லை! நம் கண்களே நம்மை ஏமாற்றலாம்.” என்ற வண்ணம் சாத்யகரை ஆறுதல் படுத்த முயன்றான் கிருஷ்ணன். ஆனால் சாத்யகர் சமாதானம் அடையவில்லை. “அந்தக் கொடூரமான பெண்ணை மணப்பதற்கு முன்னர் அவன் செத்துவிட்டால் நல்லது. நான் அதைத் தான் எதிர்பார்க்கிறேன்.” என்று சொன்னவர் தன் வீட்டுக்குத் திரும்பினார். உத்தவனின் மனைவியரும் முகியுடன் அவர்கள் மாளிகையை நோக்கிச் சென்று விட்டனர்.

“இந்த இரட்டை மறைவுக்குக் காரணம் என்ன? இதன் பொருள் என்ன?” என்று ருக்மிணி கண்ணனைப் பார்த்துக் கேட்டாள். கண்ணன் சில கண நேரம் ஆழ்ந்த யோசனையில் இருந்தான். “மாட்சிமை பொருந்திய சாத்யகர் சொல்வதில் உண்மை இருப்பதாகத் தெரியவில்லை. யுயுதானா அவ்வளவு மோசமானவன் அல்ல! அவன் நேர்மை மிக்கவன். சத்ராஜித்தின் பெண்ணை மணக்கவேண்டும் என அவன் விரும்பினால் முதலில் அதை என்னிடம் தான் சொல்லி இருப்பான்!” என்றான் கிருஷ்ணன். பின்னர் வீட்டிலிருந்து தொலை தூரத்தில் தெரிந்த கடலையே நோக்கிய வண்ணம் நின்றவன் பின்னர் திரும்பி ருக்மிணியைப் பார்த்துச் சிரித்தான். அவன் கண்களில் இப்போது குழப்பம் தெரியவில்லை. தெளிவு தெரிந்தது. அவளிடம், “வைதர்பி, இப்போது எனக்கு அந்தப் பிரியாவிடைப்பாடலில் விடுபட்ட வரிகள் சொல்வதன் தாத்பரியம் என்னவெனப் புரிந்து விட்டது!” என்றான். அவன் கண்களில் குறும்பு கூத்தாடியது.

“அப்படியா? அதன் முக்கியத்துவம் தான் என்ன, என் பிரபுவே?”

“இப்போது என்னை எதுவும் கேட்காதே, வைதர்பி. சமயம் வரும்போது நானே உன்னிடம் சொல்வேன். “ என்றவன், “இருவரும் முழு முட்டாள்கள். ஆம் முட்டாள்கள்!” என்று தனக்குள்ளே முணுமுணுத்துக் கொண்டான்.



Monday, January 11, 2016

பாமாவின் பாடல்! ருக்மிணியின் ஊடல்!

“உனக்குத் தான் அவளை மிகப் பிடிக்குமே? இன்று ஏன் பிடிக்கவில்லை?” என்று மீண்டும் கேட்டான் கிருஷ்ணன்.

“ஓ,ஓ, அவள் என்ன செய்தாள் என்பது உனக்கு எப்படித் தெரியும் அண்ணா?”

“ஏன், என்ன செய்தாள்? எனக்கு எப்படித் தெரியும்?”

அத்துடன் சுபத்ரா உள்ளே சென்றுவிட கிருஷ்ணன் உத்தவனுடன் தனித்து விடப்பட்டான். உத்தவனும் அவனும் அன்றைய விஷயங்களைப்பேசி ஒருவருக்கொருவர் தெளிவு கண்டனர். பின்னர் அனைவரும் இரவு உணவுக்காகச் சென்றனர். கிருஷ்ணன் படுக்கச் செல்வதற்குத் தயாராகிக் கொண்டிருக்கையில் மீண்டும் சுபத்ரா அவனைத் தேடி வந்தாள். அவள் மிகப்பரபரப்பாக இருந்தாள். “அண்ணா, அண்ணா!” என்று கத்திக் கொண்டே வந்தாள். கிருஷ்ணன் ஆச்சரியமாக அவளைப் பார்த்துக் கொண்டிருக்க, “இதோ, அந்தப் பெரிய பூனை மீண்டும் வந்துவிட்டது!”

“எங்கே? இங்கேயா?” கிருஷ்ணன் ஆச்சரியத்துடன் கேட்க, “இல்லை, அண்ணா! அவளே நேரில் வந்துவிடவில்லை! அவள் ஒரு செய்தியை எனக்கு அனுப்பி இருக்கிறாள். அந்தச் செய்தியை உன்னிடம் சொல்லும்படி என்னைப் பணித்திருக்கிறாள். அதுவும் ஒரு பாடலின் சில வரிகளை!” என்றாள் சுபத்ரா.

“எந்தப் பாடல் சுபத்ரா?”

“பிரியாவிடைப்பாடல் தான் அண்ணா! ஒரு வீரனின் மனைவி அவன் போர்க்களத்துக்குச் செல்கையில் பாடும் பிரியாவிடைப் பாடல்!” என்றாள் சுபத்ரா.

“ஓஹோ, ஆனால் அந்தப் பாடல் எனக்கு மனப்பாடமாகத் தெரியுமே!  நீயும், மற்றப் பெண்களும் தினசரி பாடும் இந்தப்பாடல் எனக்கு நினைவில் இல்லை எனில் என்னைப் போன்ற முட்டாள் யாரும் இருக்க முடியாது!”

“அண்ணா, அந்தப் பொல்லாத பெரிய பூனைக்குத் துணிச்சல் மிக அதிகம். அவள் என்ன சொல்லி இருக்கிறாள் தெரியுமா? அந்தப் பாடலில் உனக்கும் தெரியாத சில வரிகள் உள்ளனவாம். முழுப்பாடலையும் நீ அறிய மாட்டாயாம்! ஆகவே என்னை விட்டு அந்த விட்டுப் போன வரிகளைச் சொல்லச் சொல்லி இருக்கிறாள்.”

“விட்டுப் போன வரிகளா? அவை எவை?”

அப்படி ஒரு வேளை, என் பிரபுவே, அக்னியின் கொடிய நாக்குகள் உங்களைத் தீண்டினால்,
உங்கள் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வண்ணம் தீண்டினால், ஆஹா, நீங்கள் எனக்கு மிகவும் அருமையானவர் பிரபுவே! அப்படிப்பட்ட உங்களை அக்னி தீண்டினால், உங்கள் நற்பெயர் களங்கம் அடைந்தால்! உங்கள் உயிரைவிட உங்களுக்கு உங்கள் நற்பெயரன்றோ மிகவும் அரிதானது! அதற்குக் களங்கம் விளைந்தால்!

அக்னியின் கொடிய நாக்குகள் உங்களைத் தீண்டினால், என் பிரபுவே, நான் உங்களுக்கு முன்னரே அங்கே சென்றுவிடுவேன். என் உடலை அக்னி தீண்டும் வண்ணம் அதை வரவேற்பேன். உங்களுக்கு முன்னால் என்னை அக்னி தீண்டட்டும் என் பிரபுவே!

உங்கள் கண்ணெதிரே நான் ஓர் எரியும் தூணைப்போல் எரிந்து அரணாக உங்களைக் காப்பேன்! என்னை அக்னி முற்றிலும் எரித்துச் சாம்பலாக்கும்வரை அங்கேயே நிற்பேன்! அக்னியின் கொடிய நாக்குகள் உங்களைத் தீண்டினால் என் பிரபுவே!

என் உடல் எரிந்த நான் சாம்பல் ஆன பின்னராவது நீங்கள் அந்தச் சாம்பலை எடுத்து உங்கள் மார்போடு அணைப்பீர்களா? என் காதல் கனவுகளில் நீங்கள் என்னை அணைத்திருந்தீர்கள் என் பிரபுவே! இப்போது என் சாம்பலையாவது நீங்கள் அணைத்துக் கொள்வீர்களா!

என் பிரபுவே, என் சாம்பல் கூட உங்களை விடாமல் அழுந்தப் பற்றி அணைத்திருக்கும். இப்போது நான் அதைத் தான் செய்ய நினைத்திருந்தாலும், என் பிரபுவே, கொடிய விதி என்னை உங்களிடமிருந்து பிரித்திருக்கிறது! அக்னியின் கொடிய நாக்குகள் உங்களைத் தீண்டினால், என் பிரபுவே!

உங்களுக்கு முன்னால் நான் அங்கே நின்றிருப்பேன்!

கண்ணன் இதைக் கேட்டுவிட்டு, ”இந்த வரிகள் எதைச் சொல்கின்றன என உனக்கு ஏதேனும் புரிகிறதா?” என்று சுபத்ராவைப் பார்த்துக் கேட்டான். அப்போது அங்கிருந்த ருக்மிணி, “வெட்கம் கெட்ட பெண்! எனக்கும் ஷாயிப்யாவுக்கும் பாடம் கற்றுக் கொடுக்க முயல்கிறாள்; அல்லது கற்றுக் கொடுத்திருக்கிறாள்!” என்றாள்.

கிருஷ்ணன் ருக்மிணியைப் பார்த்துச் சிரித்தான். “உன்னுடைய விளக்கம் சரியானதாகத் தோன்றவில்லை ருக்மிணி! போகட்டும்! எது எப்படியோ இதை எல்லாம் மறந்துவிட்டு நாம் படுத்துத் தூங்குவோம்!”: என்றான். அடுத்த நாள் காலை கிருஷ்ணன் வழக்கம் போல் அதிகாலையிலேயே எழுந்துவிட்டான். தினம் பிரம்ம முஹூர்த்த நேரத்திலே எழுவது அவன் வழக்கம். விடியும் முன்னர் அந்த நேரத்தின் புனிதத்தை அப்படியே அனுபவிக்க அவனுக்கு மிக விருப்பம். எழுந்ததும் வழக்கம் போல் கடலுக்குச் சென்றான். குளித்து சூரிய பகவானுக்கு அர்க்கியங்கள் கொடுத்து வழிபட்டான். பின்னர் உத்தவனோடு மல்யுத்தப் பயிற்சி செய்தான். வழக்கமாகச் செய்வது தான் என்றாலும் தினமும் சாத்யகியோடு தான் மல்யுத்தப் பயிற்சி நடக்கும். இன்று ஏனோ சாத்யகி வரவில்லை. ஆகவே கிருஷ்ணன் பயிற்சி முடிந்ததும் உத்தவனை அனுப்பி சாத்யகிக்கு என்ன ஆயிற்று என்று பார்த்து வரச் சொன்னான். ஒருவேளை அவனுக்கு உடல்நலம் சரியில்லையோ என எண்ணினான்.

மல்யுத்தப் பயிற்சி முடிந்து மீண்டும் கடலில் குளித்த கிருஷ்ணன் தன் மாளிகையை அடைந்தான். அங்கே உத்தவனின் இரு மனைவியரான கபிலாவும் பிங்களாவும் கிருஷ்ணனின் வரவை எதிர்நோக்கிக் காத்திருந்தார்கள். அவர்கள் முகத்தில் பதட்டமும், கவலையும் தெரிந்தது. மிகவும் பரபரப்புடனும் காணப்பட்டனர். கண்களில் கண்ணீரும் காணப்பட்டது. அவர்களோடு ஒரு வயதான நாககுலப் பெண்மணியும் கவலை தோய்ந்த முகத்துடன் அவ்வப்போது அழுத வண்ணம் நின்று கொண்டிருந்தாள்.

கிருஷ்ணனைப் பார்த்ததுமே இருவரில் ஒருவர், “பிரபுவே, சத்ராஜித்தின் மகளைக் காணவில்லை!” என்றாள். “யார்? சத்யபாமாவா?” என்று கிருஷ்ணன் கேட்க இருவரும் தலை அசைத்து ஆமோதித்தனர். “உங்களுக்கு எப்படித் தெரியும் அவள் காணாமல் போய்விட்டாள் என்பது?” எனக் கிருஷ்ணன் மேலும் கேட்டான். அப்போது தங்கள் அருகே நின்றிருந்த வயதான பெண்மணியைக் காட்டி, “இவள் முகி! எங்கள் நாகநாட்டுப் பெண். இவள் தான் சத்யாவின் செவிலித் தாய்! நாங்களும் நாக இளவரசிகள் என்பதால் எங்களை அடிக்கடி வந்து சந்திப்பாள். இப்போதும் எங்களைக் காண வந்தவள் காலையிலிருந்து அழுது கொண்டிருக்கிறாள். அவள் யஜமானியைக் காணவில்லை என்கிறாள். காலையில் தான் பார்த்தாளாம், அவள் காணாமல் போனதை!”

கிருஷ்ணனுக்குப் புதிராக இருந்தது. ம்ம்ம்ம்? அந்த விட்டுப் போன வரிகள் சொல்லு செய்தி தான் என்ன? யோசித்தான் கிருஷ்ணன். தனக்குள் தானே கேள்விகளைக் கேட்டுக் கொண்டான். பின்னர் முகியிடம் திரும்பி அவளுக்குத் தன் யஜமானியைக் காணோம் என்பது எப்படித் தெரியும் என்று கேட்டான்.

அதற்கு முகி, “ஐயா, அவள் நேற்று முழுவதும் அழுது கொண்டிருந்தாள்.” என்று சொன்னவள் அதற்கு மேல் பேச முடியாமல் விம்மி விம்மி அழ ஆரம்பித்தாள். தன்னிரு கரங்களாலும் முகத்தை மூடிக் கொண்டு பெரிதாக அழுதாள். “அழுகையை நிறுத்து! பெண்ணே! சுபத்ராவிடன் அவள் எப்போது உன்னை அனுப்பினாள்? அதாவது பிரியாவிடைப்பாடலின் விடுபட்ட வரிகளைச் சொல்லி அனுப்பியது எப்போது?” என்று கேட்டான் கண்ணன்.

“மாலை மங்கி இரவானதும் அனுப்பினாள். அதற்கு முன்னர் அவள் கிருதவர்மாவின் வீட்டுக்குச் சென்றிருந்தாள். அங்கிருந்து திரும்பியதும் உடனே அவள் உங்கள் தங்கையைக் காண என்னை அனுப்பி வைத்தாள். அப்போது தான் அந்தப் பாடலின் விடுபட்ட வரிகளைச் சொல்லி அனுப்பினாள்.” என்ற முகி சிறிது யோசனைக்குப் பின்னர், “ நான் திரும்பி வந்ததும் என்னிடம் ஒன்றும் கேட்கவில்லை. என்னைப் படுக்கப் போகச் சொன்னாள். தானும் படுத்துத் தூங்கப் போவதாய் என்னிடம் சொன்னாள்.” என்றாள்.

“அவளைக் காணவில்லை என்பதை நீ எப்போது கண்டு பிடித்தாய்?”

“காலையில் தான் பிரபுவே! நான் எப்போதும் போல் காலையில் அவளுக்குப் பணிவிடை செய்ய வந்தேன். ஆனால் அவள் படுக்கையில் இல்லை!”

“ம்ம்ம்ம்? ஊரி என்ன ஆனாள்?”

“ஊரியும் அவளுடன் சென்றிருக்கிறாள். அதோடு இல்லை பிரபுவே! சத்யா தன்னுடன் எந்தவிதமான பொருட்களையும் கொண்டு செல்லவில்லை! அவளுடைய விலை உயர்ந்த துணிகள், ஆபரணங்கள் எல்லாம் அப்படியே இருக்கின்றன. அவள் முதல் நாள் கட்டி இருந்த விலை உயர்ந்த ஆடையும் கட்டிலில் காணப்பட்டது. இதிலிருந்து அவள் சேடிப் பெண்களின் உடையை அணிந்து கொண்டு சென்றிருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.” என்று சொல்லிவிட்டு மீண்டும் அழ ஆரம்பித்தாள் முகி.

Saturday, January 9, 2016

சத்யபாமா என்றொரு பொல்லாத பூனை!

பெரியோரிடமிருந்து விடைபெற்ற கிருஷ்ணன் தன் தாய் தேவகியைச் சந்தித்து உரையாடிவிட்டு, அவளுக்குத் தன் நமஸ்காரங்களைத் தெரிவித்துவிட்டுப் பின்னர் தன் சொந்த மாளிகையை நோக்கிச் சென்றான். அங்கே ருக்மிணியும், ஷாய்ப்யாவும் தங்கள் குழந்தைகளுடன் அவனை வரவேற்றனர். யாரும் யாருடனும் எதுவும் பேசவில்லை. மௌனமாகவே கிருஷ்ணனை வரவேற்றனர். எனினும் ஒரு வார்த்தை சொல்லாத பல செய்திகளை இருவரின் மௌனமும் கிருஷ்ணனுக்கு உணர்த்திவிட்டது. காலையிலிருந்து நடந்த சம்பவங்களின் தாக்கம் இருவரிடமும் அதிகமாக இருப்பதைக் கிருஷ்ணன் புரிந்து கொண்டான். அவர்கள் மூவரின் புரிதல் அவர்களுக்குள் பேச்சே வேண்டாம், மௌனமாகவே புரிய வைக்கும்படியாக இருந்தது. ஆகவே கிருஷ்ணனும் இருவரிடமும் எதுவும் பேசவில்லை. இப்போது தனக்கு நேரிட்டிருக்கும் கடுமையான சோதனையின் தாக்கம் எதுவும் கிருஷ்ணனின் முகத்தில் பார்க்கமுடியவில்லை. இரு மனைவியரையும் பார்த்துச் சிரித்தான். அந்தச் சிரிப்பு ஒன்றே இருவருக்கும் பல விஷயங்களை உணர்த்திவிட்டது. பின்னர் குழந்தைகளுடன் பேசிக் களித்தான் கிருஷ்ணன்.

மதிய உணவுக்குப் பின்னர் யாதவத் தலைவர்கள் அனைவரும் கிருஷ்ணனைச் சந்திக்க வந்தனர். கிருஷ்ணனின் மனோவேதனையைப் பங்கு போட்டுக் கொண்டு அவனுக்கு ஆறுதல் சொல்ல வந்த அவர்களுக்குக் கிருஷ்ணனின் நிலை ஆச்சரியத்தை அளித்தது. கிருஷ்ணன் தான் அவர்களுக்கு ஆறுதல் சொல்லும்படியாக இருந்தது. யாதவத் தலைவர்கள் தான் கடுமையான துயரத்தில் இருந்தனர். கிருஷ்ணன் அவர்களைச் சமாதானம் செய்தான். “சத்ராஜித்திற்கு இப்போது அழிவு காலம் தொடங்கி விட்டது!” என்று கூறினான். “என்றாலும் யாதவக் குடிமக்கள் யாரும் சத்ராஜித்தின் மேல் மிகக் கடுமை காட்டாவண்ணம் பயங்கரமான நடவடிக்கைகளில் இறங்காவண்ணம் நாம் கவனித்துக் கொள்ள வேண்டும்.” என்ற கிருஷ்ணன் அங்கு வந்தவர்களைப் பார்த்து என்ன நடந்தாலும் அமைதி காக்கும்படி வேண்டினான். மேலும் கூறினான்:” நான் நல்லவனாகக்  கபடு, சூது அற்றவனாக இருந்தால், எனக்குத் தெரியும் நான் நல்லவன் என்றே, நீங்களும் அதை உணர்ந்திருக்கிறீர்கள். ஆகவே அந்த மகாதேவன் நம்மைக் காத்து அருளுவான். கவலை வேண்டாம்!” என்றான்.

“கிருஷ்ணா! என்ன இருந்தாலும் நீ இப்படி ஒரு சபதம் செய்திருக்கக் கூடாது!” என்று அனைவரும் ஒருமித்த குரலில் கூறினார்கள். “வாழ்க்கையில் நான் மேற்கொண்டிருக்கும் முக்கியமான வேலையை நிறைவேற்ற வேண்டுமானால், நான் இப்படி ஒரு சபதம் செய்தே ஆகவேண்டும். தர்மம் ஒன்றே என் குறிக்கோள்! அதை நிலைநாட்ட என் உயிரைக்கூடக் கொடுக்க வேண்டி இருந்தால் கொடுத்தே ஆகவேண்டும்.” என்று கிருஷ்ணன் மிக அடக்கமாகவும் விநயமாகவும் கூறினான். ஆனால் எவருக்கும் இந்த விளக்கத்தில் திருப்தி இல்லை. பின்னர் ஒவ்வொருவராக விடைபெற்றுச் சென்றனர். உத்தவனும் அவனுடைய இரு மனைவியரான நாக நாட்டு இளவரசிகள் கபிலாவும் பிங்கலாவும் மட்டும் தங்கி இருந்தனர். இருவரும் ஒரே மாதிரியாக உடை அணிந்து தலை அலங்காரம் செய்து கொண்டு, ஆபரணங்களையும் ஒரே மாதிரியாக அணிந்திருந்தனர். அவர்கள் அலங்காரமும், அழகும் கண்களையும் கருத்தையும் கவர்ந்தாலும் அவர்கள் முகம் மாபெரும் சோகத்தில் ஆழ்ந்திருந்தது. சந்திரனை ஒத்த அவர்கள் முகங்கள் எப்போதும் ஒரு அழகான சிரிப்போடு காணப்படும். இப்போதோ கருமேகங்கள் சூழ்ந்த வானைப் போல முகமண்டலத்தைச் சோக ரேகைகள் மூடி இருந்தன. அவர்கள் கண்கள் எந்நேரமானாலும் நீரை வர்ஷிக்கத் தயாராகக் காத்திருந்தன.

அப்போது உத்தவன் பேசினான். “ச்யமந்தகத்தை சத்ராஜித் தான் எங்கேயானும் ஒளித்து வைத்திருப்பான் என நம்புகிறேன். அப்படித் தான் இருக்கும் என்று நான் முழு மனதோடு நம்புகிறேன். அது எங்கே, எப்படி, யாரிடம் போனது என்பதை மட்டுமல்ல, திரும்ப அதைக் கொண்டு வரும் வேலையும் நம்மைச் சேர்ந்து விட்டது!”

கிருஷ்ணன் புன்னகை புரிந்தான். “கவலைப்படாதே, உத்தவா! எல்லாம் வல்ல மஹாதேவனுக்கு நம்மிடம் கருணை இருக்கிறது. ஆகவே ச்யமந்தகம் இருக்குமிடத்தை அவன் கண்டுபிடிப்பதோடு நமக்கு அதைக் காட்டியும் கொடுப்பான். இது யாதவர்களுக்கு ஏற்பட்ட் ஒரு பரிக்ஷை! சோதனை! மிரட்டலுக்கும், பயங்கரத்துக்கும் யாதவர்கள் தலை வணங்கி விடுவார்களா அல்லது அதை எதிர்த்து தைரியமாக நிமிர்ந்து நிற்கிறார்களா என்பதைக் கண்டறியும் சோதனை அது!”

அப்போது கிருஷ்ணன், “ஒரு விஷயம் எனக்குக் கொஞ்சம் வித்தியாசமாகத் தோன்றியது. சத்ராஜித்தின் அருமைச் சகோதரர் ஆன ப்ரசேனர் இன்று காலை சத்ராஜித்துடன் காணப்படவில்லை. அவன் பலவீனமானவர்களை மேலும் மேலும் கொடுமைப்படுத்தும் ரகத்தைச் சேர்ந்தவன். இப்படி ஒரு சந்தர்ப்பம் கிடைத்திருக்கையில் அதை விட மாட்டான். நன்றாகச் சண்டை போடக் கூடியவன். அவன் ஏன் இன்று காலை சத்ராஜித்துடன் காணப்படவில்லை? அவன் அங்கே தானே இருந்திருக்க வேண்டும்! அவனுக்கு என்ன ஆயிற்று என்பதை நாம் கண்டறிய வேண்டும். அப்போது பல உண்மைகள் வெளிவரலாம்.” என்றான்.  “நான் ஏற்கெனவே அதை விசாரித்துவிட்டேன், கிருஷ்ணா! நேற்று இரவு வரை அவன் மாளிகையில் தான் இருந்திருக்கிறான். இரவு தூங்கவும் சென்றிருக்கிறான். இன்று காலை விடியும் முன்னரே காணாமல் போயிருக்கிறான்.” என்றான் உத்தவன்.

அப்போது சுபத்ரா அங்கே ஓடோடி வந்தாள். மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க ஓடி வந்த அவள் கிருஷ்ணனைக் கட்டிக் கொண்டாள். “அண்ணா, கோவிந்தா! இது என்ன நான் கேள்விப்படுவது? நீ என்ன செய்துவிட்டாய்? உன்னை நீயே எரித்துக் கொள்வதாகவா சபதம் செய்திருக்கிறாய்?” என்று ஆவேசமாகக் கேட்டாள். கிருஷ்ணன் ஆதுரத்துடன் தன் தங்கையின் முகத்தைத் தன்னிரு கரங்களாலும் பிடித்துக் கொண்டு அவளையே சற்று நேரம் பார்த்தான். அவள் கண்களைத் துடைத்துவிட்டான். “என்ன ஆயிற்று உனக்கு?” என்ற வண்ணம் அவள் தலையைக் கோதி விட்டான்.

“அண்ணா, அண்ணா, ஒருவேளை, ஒருவேளை, ச்யமந்தகத்தை உன்னால் கண்டுபிடிக்க முடியாமல் போய்விட்டால்! ஆஹா! நான் என்ன செய்வேன்!” என்று விம்மும் குரலில் புலம்பினாள் சுபத்ரா. “ஆஹா, அதனால் என்ன சுபத்ரா? என் சபதம் அப்போது நிறைவேற்றப்படும். தைரியமாக இரு! அழாதே! இம்மாதிரியான ஒரு நிலைமை அப்படி எல்லாம் விரைவில் வந்துவிடாது. அப்படி வந்துவிட்டால், ஒரு திருடன் என்ற பெயரோடு வாழ்வதைக் காட்டிலும் சாவதே மேல்!” என்றான் கிருஷ்ணன். மீண்டும் அவள் கண்ணீரைத் தன் உருமாலால் துடைத்துவிட்ட கண்ணன் அவள் கன்னத்தையும் தட்டிச் சமாதானம் செய்தான். சுபத்ரா இதற்குள் தன்னை அடக்கிக் கொண்டு, “அண்ணா, உனக்கு ஒரு விஷயம் தெரியுமா? அந்தப் பொல்லாத பெரிய பூனை, அதான் அவள் என்னை இன்று பார்க்க விரும்பினாள். ம்ம்ம்ம், உனக்குத் தெரியுமா? தினமும் மதிய நேரங்களில் நாங்கள் இருவரும் சேர்ந்தே கோயிலுக்குச் செல்வோம் என்பது?” என்று கேட்டாள் கண்ணனை.

கருணையுடன் சிரித்தான் கிருஷ்ணன். “யாரைச் சொல்கிறாய் சுபத்ரா? சத்ராஜித்தின் மகள் சத்யபாமாவையா?”

“பின் நான் வேறு யாரைச் சொல்வேன் என நினைத்தாய்? அவள் தான் பெரிய பொல்லாத பூனை!” ஒவ்வொருவருக்கும் இப்படி ஒரு பட்டப்பெயரை வைப்பதில் சுபத்ரா வல்லவளாக இருந்தாள். “ஓஹோ!” கிருஷ்ணன் மீண்டும் சிரித்தான். “அது சரி, சுபத்ரா, அவள் பொல்லாத பெரிய பூனை எனில் சிறிய பூனை யார்?” என்று கேட்டான். “அதான் அவளுடனே எப்போதும் இருக்குமே ஊரி! அது தான் சிறிய பூனை! அந்த சத்ராஜித்தின் மகள் இன்று என்னைப் பார்க்க விரும்பினாள். நான் அவள் முகத்தைப் பார்க்கக் கூட விரும்பவில்லை என்று பதில் சொல்லி அனுப்பி விட்டேன்.” என்றாள் சுபத்ரா. கிருஷ்ணன் சிரித்தான். “ஏன் சுபத்ரா? அவள் முகத்துக்கு என்ன ஆயிற்று? நன்றாகத் தானே இருந்தது? நீ ஏன் அவள் முகத்தைப் பார்க்க விரும்பவில்லை?” என்று வேடிக்கையாகக் கேட்டான் கிருஷ்ணன்.

Friday, January 8, 2016

பாமாவின் பிரியாவிடை!

கண்ணனுடன் ஹஸ்தினாபுரம் சென்றிருந்த அதிரதர்கள் அனைவரும் ஒன்று கூடிக் கலந்தாலோசனை செய்வதாகத் தகவல்கள் கசிந்தன. அவர்கள் அனைவருக்கும் சத்ராஜித் தலைமைப் பதவியை அடைய ரகசியமாகச் சூழ்ச்சிகளும், சதிவேலையும் செய்கிறான் என்னும் சந்தேகம் இருந்தது. இவை எல்லாம் சத்யபாமாவின் காதுகளை அரண்மனை ஊழியர்கள் வழியாகவும், உறவினர் மூலமாகவும் எட்டின. அவள் மனம் சொல்லொணாத் துயரில் ஆழ்ந்தது. தன் சகோதரன் பங்ககராவை அழைத்து அவன் பக்கத்து நியாயத்தைச் சொல்லும்படி கேட்டாள். அவள் தந்தை சொல்வதை ஆங்காங்கே ஆமோதித்தாலும் மொத்தத்தில் பங்ககராவின் வர்ணனை கொஞ்சம் வித்தியாசமாகவே தெரிந்தது. பங்ககரா சொன்னது என்னவெனில்: பெரியோர்கள் எவருக்கும் கிருஷ்ணன் மேல் திருட்டுக் குற்றம் சுமத்தியதில் நம்பிக்கை இல்லை. அவர்கள் அதைத் துளியும் நம்பவில்லை. இவ்வளவு தீவிரக் குற்றம் சுமத்திய பின்னரும் உக்ரசேன மஹாராஜா கிருஷ்ணனிடம் தனி அபிமானத்தைக் காட்டிய வண்ணம் இருந்தார். சாதாரணமாக எப்போதும் ப்ருஹத்பாலனையே தான் நடக்கையில் உதவிக்கு அழைத்துச் செல்லும் அவர் இன்று வித்தியாசமாகக் கிருஷ்ணனின் தோள்களைப் பற்றிக் கொண்டு அவன் உதவியோடு தாழ்வரைக்கு வந்தார். இதன் மூலம் கிருஷ்ணன் மேல் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டைத் தான் அடியோடு நம்பவில்லை என்பதை அவர் நிரூபித்தார் என்பது பங்ககராவின் எண்ணம்.

சாத்யகரோ தன் வழக்கம்போல் அழுத்தம் திருத்தமாகவும் அப்பட்டமாகவும் பேசினார். அவர் அனைவரிடமும் சத்ராஜித் கிருஷ்ணன் மேல் சுமத்திய குற்றச்சாட்டுக்கு ஆதாரங்களே இல்லை எனவும், தவறான குற்றச்சாட்டு எனவும் அழுத்தம் திருத்தமாகத் தெரிவித்தார். அதோடு இல்லாமல் கிருஷ்ணன் போட்ட சபதங்களால் மக்கள் மனம் எவ்வளவு இளகி அவன் பால் திரும்பியது என்பதையும் பங்ககரா எடுத்துரைத்தான். இதைக் கேட்டுக் கொண்டிருந்த சத்யபாமாவின் மனக்கண்ணில் கிருஷ்ணன் தன்னைத் தானே எரித்துக் கொள்ளுவது போன்ற கோரமான காட்சி தோன்றியது. அந்தக் கண்கள்! கிருஷ்ணனின் கண்கள் பேசும் கண்கள்! மனதின் அன்பையும், பாசத்தையும் கண்கள் வழியாகவே காட்டுவானே! அவன் கண்களே சிரிக்குமே! அவற்றை இனி பார்க்க முடியாதவாறு நிரந்தரமாக மூடிவிடுமோ? பாமா மனம் துடித்தாள். அவன் முகம் மட்டும் என்ன?

எப்போதும் நிரந்தரமாக அப்போது தான் பூத்த தாமரை போல ஒரு சிரிப்பு அவன் முகத்தில் இருக்கும். அதைப் பார்க்கையிலேயே பார்ப்பவர்கள் மனமும் ஆனந்திக்கும். பாமாவின் மனமோ ஆனந்தத்தில் துள்ளிக் கூத்தாடும். அந்த அழகிய முகம் அப்படியே எரிந்து போய் முகமூடி போட்டாற்போல் உறைந்து எவ்விதமான உணர்வுகளும் இல்லாமல் போய்விடுமே! அவனுடைய அழகிய கட்டான உடல் அமைப்பு, மெல்லிய உடலாக இருந்தாலும் அதில் எஃகைப் போன்ற உறுதி இருக்கும் என அனைவரும் சொல்கின்றனர். நீண்ட மெல்லிய கரங்கள், உறுதியான நீளமான விரல்கள், மெல்லிய ஆனால் உறுதியான நீண்ட கால்கள், அதில் குவிந்திருக்கும் அல்லி மொட்டுப் போன்ற பாதங்கள்! அவனுடைய மாறா இளமை!கம்பீரம்! ஆஹா! இத்தனையும் அவன் தன்னைத் தானே எரித்துக் கொள்வதால் நிரந்தரமாக ஒரு கட்டையைப் போல் ஒன்றுமில்லாமல் ஆகிவிடுமே! ஹே! சர்வேஸ்வரா! தேவி, பரமேஸ்வரி!

துவாரகையின் ஒவ்வொரு மக்களுக்கும் ஆண், பெண், குழந்தைகள் என அனைவருக்கும் முக்கியமாக தேவகி அம்மா, ருக்மிணி, ஷாய்ப்யா, சுபத்ரா, என அனைவர் நெஞ்சிலும் கிருஷ்ணனின் இந்த முடிவு பெருமளவில் தாக்கத்தை உண்டாக்கி இருக்கும். அனைவரும் பயத்தில் விதிர்விதிர்த்துப் போயிருப்பார்கள். ச்யமந்தகம் கிடைத்துவிட வேண்டும் என்றே அனைவரும் எதிர்பார்ப்பார்கள். அது கிடைத்துவிடுமா?அவள் தந்தை அவ்வளவு முட்டாள் இல்லை! ச்யமந்தகம் விரைவில் கிடைக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டுமோ அனைத்தையும் இதற்கு முன்னரே செய்து முடித்திருப்பார். ச்யமந்தகத்தை அவர் விருப்பம் இல்லாமலோ அல்லது அவருக்குத் தெரியாமலோ எடுக்க முடியாது. அப்படி இருக்கையில் கிருஷ்ணனால் முடியுமா? தந்தை நிச்சயமாக ச்யமந்தகத்தை சித்தப்பா ப்ரசேனரிடம் தான் கொடுத்து மறைவாக வைக்கச் சொல்லி அனுப்பி இருக்க வேண்டும். அதிலும் தந்தை மாதா மாதம் வழிபாடு நடத்தச் செல்லும் காட்டுக்கு அனுப்பி வைத்திருக்கிறார். அங்கே சென்று ச்யமந்தகத்தை எவருக்கும் தெரியாமல் வழிபட்டு எப்போதும் செய்வது போல்  சூரிய பகவானைத் திருப்தி செய்து மீண்டும் தங்கத்தைப் பெற்றும் வரலாம். அவளால் இதை மீறி எதுவும் செய்ய முடியவில்லை. சுட்டு விரலைக்கூட உயர்த்தி தந்தையை “நீர் தான் திருடர்” என்று சொல்ல முடியவில்லை. அவள் இரவும், பகலும் விழித்திருக்கையிலும், தூங்கும்போதும் தன்னுடைய பிரபுவாக தன்னுடைய நாயகனாக, மணாளனாகக் கனவு காணும் கிருஷ்ணனை இந்தப் பேராபத்திலிருந்து அவளால் காப்பாற்ற முடியவில்லை! அவளைப் போன்ற துரதிர்ஷ்டக்காரியும் உண்டோ!

துயரத்தில் வெதும்பிக் கொண்டிருந்த பாமாவுக்கு அப்போது ஆறுதலை அளிக்கும் செய்தி ஏதேனும் கிடைக்காதா என்ற எண்ணம் தோன்றியது. ஆனால் அவள் செவிலித்தாயான முகி சுபத்ராவைப் பார்க்கச் சென்றவள் பாமாவின் மனம் மேலும் வருந்தும் வண்ணம் ஓர் செய்தியைக் கொண்டு வந்திருந்தாள். அவளை சுபத்ரா சொன்னதை அப்படியே ஒரு வார்த்தை பிசகாமல் சொல்லச் சொன்னாள் பாமா! அவள் சொன்னது இது தான்! “ என் சகோதரனைத் திருடன் என வாய் கூசாமல் பொய்ப்பழி சுமத்திய அந்த துஷ்டன் ஆன சத்ராஜித்தின் மகள் முகத்தைப் பார்க்கக் கூட எனக்குப் பிடிக்கவில்லை. நான் அதை விரும்பவும் இல்லை.” இவ்வளவு தான் சுபத்ரா சொன்னவை. பாமா அனலில் இட்ட புழுப்போல் துடித்துப் போனாள். மாலை மங்கும் வரை காத்திருந்த பாமா கிருதவர்மாவின் வீட்டை நோக்கிச் சென்றாள். அங்கே சாத்யகி வந்திருந்தால் அவனுடன் பேசியாவது உள்ள நிலையைத் தெரிந்து கொள்ளலாம் என்னும் ஆவல் அவளுக்கு!

அவள் வீடே அவளுக்கு நரகத்தை விட மோசமாகத் தெரிந்தது. அவள் தந்தையை அவள் ஆழ் மனதிலிருந்து வெறுத்தாள். இவ்வளவு மோசமானவரா தந்தை! ஒரு பொய்யர், சூழ்ச்சிக்காரர்! பொய்ப்பழி சுமத்துபவர்! ஹூம், அவருக்கு ஒத்துப்பாடும் சிற்றன்னைமார், தங்கைகள் மேலும் சகோதரர்கள். ஆனால் கொஞ்சம் ஆறுதலாக பங்ககரா தந்தை சொல்வதை முழுவதும் நம்பவில்லை என்பதை அவள் புரிந்து கொண்டிருந்தாள். ஆனால் பங்ககரா ஒரு விசுவாசமான மகனாகத் தந்தை வார்த்தைக்கு மறுவார்த்தை பேச முடியாதவனாக இருந்தான். கிருஷ்ணனுக்கு ஆதரவாக அவனால் ஒரு வார்த்தை கூடப் பேச முடியவில்லை. அவள் நினைத்திருந்தால் கிருஷ்ணனைக் காப்பாற்றி இருக்கலாம்; ஆனால் அவளும் ஒரு கோழையாக இருந்துவிட்டாள்!

சாத்யகியிடம் பேசிய பின்னர் வீட்டுக்குத் திரும்பிய சத்யபாமா அவள் இறுதி முடிவு எடுக்கும் முன்னர் தன் அருமைப் பிரபுவான கண்ணனைப் பார்த்து இறுதி விடை பெற விரும்பினாள். அவள் கண்கள் கண்ணீரை மழையாகப்பொழிந்தன. விம்மல்கள் தொண்டையை அடைத்துக் கொண்டன. அதை அடக்கிக் கொண்டு அவள் இறுதி விடை பெறும் அந்த கீதத்தைப் பாடினாள். நடுநடுவே விம்மல்கள் தடுத்தாலும் அவளால் பாடாமல் இருக்கமுடியவில்லை. அவள் மனதின் ஆழத்திலிருந்த சோகம் அனைத்தும் தொனிக்க அந்தப்பாடலைப்பாடிய அவள், அவளையும் அறியாமலேயே புதிதாகப் பல வரிகளைச் சேர்த்துப் பண் அமைத்துப் பாடிக் கொண்டிருந்தாள். கிருஷ்ணன் இப்போது இருக்கும் நிலைமையில் அவன் மனைவியாகத் தன்னை நினைத்துக் கொண்டு ஒரு க்ஷத்திரிய வீரனின் மனைவி அவள் கணவனை விட்டுப் பிரியும்போது என்ன என்ன வார்த்தைகளை எல்லாம் கூறுவாள் என்பது இயல்பாக அவள் மனதின் ஆழத்திலிருந்து வந்தன. அந்த வரிகள் அவள் மனதிலேயே மீண்டும் மீண்டும் சுற்றிச் சுற்றி வந்து எதிரொலித்துக் கொண்டிருந்தன.

அன்றிரவு படுக்கப் போகும் முன்னர் பாமா தன் செவிலித்தாயை அழைத்தாள்.. அவளைப் பார்த்தாள்! அவளும் தான் வளர்த்த குழந்தையான பாமாவின் துயரத்தால் பாதிக்கப்பட்டிருந்தாள். பாமா முகியைப் பார்த்து, “முகி, உடனே சுபத்ராவிடம் செல்வாய்! அவளிடம் என்னுடைய செய்தியை அப்படியே ஒரு வார்த்தை விடாமல் சொல்! எந்த ஒரு வார்த்தையையும் மறந்துவிடாதே! அல்லது நீயாகச் சேர்க்காதே! மாற்றவும் மாற்றாதே! இதோ என் செய்தி!

அதற்குள் முகி சொன்னாள், “நான் அப்படியே சொல்கிறேன், குழந்தாய்!” என்று கூறிய வண்ணம் வாய் விட்டு அழுதாள்.

“முகி! சுபத்ராவிடம் சொல்! “ நீ சரியாகச் சொல்கிறாய் சுபத்ரா! நீ என்னை வந்து பார்க்கும்படி நான் அவ்வளவு தகுதியானவள் இல்லைதான்! ஆனாலும் நாம் இருவரும் கொண்டிருந்த இத்தனை வருட நட்புக்காக, நான் உன்னைக் கெஞ்சிக் கேட்டுக் கொள்கிறேன். இதை மட்டும் உன் சகோதரனிடம் சொல்வாய்! இந்த வரிகள் நீ எனக்குச் சொல்லிக் கொடுத்த பிரியாவிடைப்பாடலில் விடுபட்டுப் போன பகுதி!  உன் சகோதரனிடம் சொல்!

“அப்படி ஒரு வேளை, என் பிரபுவே, அக்னியின் கொடிய நாக்குகள் உங்களைத் தீண்டினால்,
உங்கள் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வண்ணம் தீண்டினால், ஆஹா, நீங்கள் எனக்கு மிகவும் அருமையானவர் பிரபுவே! அப்படிப்பட்ட உங்களை அக்னி தீண்டினால், உங்கள் நற்பெயர் களங்கம் அடைந்தால்! உங்கள் உயிரைவிட உங்களுக்கு உங்கள் நற்பெயரன்றோ மிகவும் அரிதானது! அதற்குக் களங்கம் விளைந்தால்!

அக்னியின் கொடிய நாக்குகள் உங்களைத் தீண்டினால், என் பிரபுவே, நான் உங்களுக்கு முன்னரே அங்கே சென்றுவிடுவேன். என் உடலை அக்னி தீண்டும் வண்ணம் அதை வரவேற்பேன். உங்களுக்கு முன்னால் என்னை அக்னி தீண்டட்டும் என் பிரபுவே!

உங்கள் கண்ணெதிரே நான் ஓர் எரியும் தூணைப்போல் எரிந்து அரணாக உங்களைக் காப்பேன்! என்னை அக்னி முற்றிலும் எரித்துச் சாம்பலாக்கும்வரை அங்கேயே நிற்பேன்! அக்னியின் கொடிய நாக்குகள் உங்களைத் தீண்டினால் என் பிரபுவே!

என் உடல் எரிந்த நான் சாம்பல் ஆன பின்னராவது நீங்கள் அந்தச் சாம்பலை எடுத்து உங்கள் மார்போடு அணைப்பீர்களா? என் காதல் கனவுகளில் நீங்கள் என்னை அணைத்திருந்தீர்கள் என் பிரபுவே! இப்போது என் சாம்பலையாவது நீங்கள் அணைத்துக் கொள்வீர்களா!

என் பிரபுவே, என் சாம்பல் கூட உங்களை விடாமல் அழுந்தப் பற்றி அணைத்திருக்கும். இப்போது நான் அதைத் தான் செய்ய நினைத்திருந்தாலும், என் பிரபுவே, கொடிய விதி என்னை உங்களிடமிருந்து பிரித்திருக்கிறது! அக்னியின் கொடிய நாக்குகள் உங்களைத் தீண்டினால், என் பிரபுவே!

உங்களுக்கு முன்னால் நான் அங்கே நின்றிருப்பேன்!

இந்தச் செய்தியை சுபத்ராவுக்கு அனுப்பிய பாமா இரவு உணவுக்காக அனைவருடனும் சேர்ந்து உணவருந்தச் சென்றாள். இப்போதும் அவளால் உணவு உண்ண முடியவில்லை. உண்டதாகப் பெயர் பண்ணிவிட்டுத் தன் அறைக்குத் திரும்பினாள். ஆனால் தூங்கவில்லை. இரவு மெல்ல மெல்லக் கழிந்தது. நடு இரவு என்பதை அறிவுக்கும் மணி ஓசை ஒலித்தது. மாளிகையில் அனைவரும் நன்கு அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தனர். பாமா மெல்லப் படுக்கையை விட்டு எழுந்தாள். தன் உடைகளைக் கழற்றி வைத்துவிட்டுச் சேடிப் பெண்ணின் உடை ஒன்றை எடுத்து அணிந்து கொண்டாள். ஊரியைத் தூக்கிக் கொண்டாள். அது கத்தாமல் இருக்க அதன் வாயைத் தன் கரங்களால் பொத்தினாள். அப்படியே தாழ்வரைக்குச் சென்று அங்கிருந்து மைதானத்தின் இருளில் மறைந்தாள்.

Thursday, January 7, 2016

பாமாவின் மனோநிலை!

தன் தந்தை உக்ரசேனரைப் பார்க்கவேண்டி அரசமாளிகைக்குக் கிளம்பியதும், சத்யா செய்வதறியாது திகைத்துப்போயிருந்தாள். அவளுடைய இன்பக் கனவுகள் அனைத்தும் சுக்கு நூறாகச் சிதறிப் போய்விட்டன. கிருஷ்ணனை இனிமேலும் அவளால் மணக்க இயலுமா? நிச்சயமாய் முடியாது. இனி நம்பிக்கையே இல்லை. ஒரு சிறிதளவு நம்பிக்கை கூட இல்லை. கிருஷ்ணனைக் குறித்து இனியும் அவள் நினைப்பதே சரியாக இருக்காதோ? இல்லை, இல்லை, அவளால் அவனை நினைக்காமல் இருக்க முடியாது! ஆனால், அவள் தந்தை! கிருஷ்ணனின் மேல் போர் தொடுக்கப் போவதாக அறிவித்து விட்டாரே! இப்போது எந்தக் காரணத்தைச் சொன்னாலும் என்ன சமாதானம் சொன்னாலும் அவர் மனம் மாறப் போவதில்லை. அவள் தந்தையும் அவருடைய நண்பர்களும் மற்ற யாதவர்களுடனும், யாதவகுலப் பெரியோர்களுடனும் முக்கியமாகக் கிருஷ்ணனுடனும் போருக்குத் தயாராகி விட்டார்கள். யாதவர்கள் அனைவருக்கும் கிருஷ்ணன் மேல் எவ்வளவு பக்தி, மரியாதை என்பதை பாமா நன்கறிவாள். ஆனால் இந்தப் போர் தவிர்க்க முடியாத ஒன்றாக ஆகிவிட்டதே! யாதவர்கள் அனைவருமே ஒருவருக்கொருவர் யுத்தம் செய்து கொண்டு அதன் மூலம் ஓர் உள்நாட்டுப் போர் வந்துவிடுமோ! ஆனால் பாமாவுக்கு ஒரு சந்தேகம்! கடந்த இருவருடங்களாகவே அவள் தந்தை இத்தகையதொரு நிலைமையை உருவாக்கக் கஷ்டப்பட்டு முயன்று கொண்டிருந்தார் என்பதே அவள் சந்தேகம். ஆம் இந்நிலைமையை அவர் எதிர்பார்த்துக் காத்திருந்திருக்கிறார்.

எல்லாவற்றையும் விட அவளுக்குத் துயரம் அளித்தது என்னவெனில், அவள் கிருஷ்ணன், அவளால் “என் பிரபு” என அழைக்கப்பட்டவன், இன்று திருட்டுக் குற்றம் சுமத்தப்பட்டுக் குற்றவாளியாக நிற்கிறான். அவனுடைய நற்பெயர் இதனால் கெட்டுவிடுமோ? யாதவர்கள் அனைவராலும் அவன் ஒதுக்கப்படுவானோ? கிருஷ்ணனின் மதிப்பைக் குறைக்கும் வகையில் இப்படி ஓர் பழியை அவள் தந்தை அவன் மேல் சுமத்தியது ஓர் மோசமான நிகழ்வு. இந்தக் குற்றச்சாட்டு ஆதாரமற்றது. மேலும் மேலும் அவள் சிந்தித்துப் பார்த்தாள். ம்ஹூம், அவளால் அவள் தந்தையின் குற்றச்சாட்டைச் சிறிதும் நம்பவே முடியவில்லை. அவள் தன் கண்களால் பார்த்திருக்கிறாள், சித்தப்பா ப்ரசேனர் அந்த அதிகாலையில், இருள் பிரியா வேளையில் ஒரு ரகசிய வேலையாகக் கிளம்பிப் போனதை அவள் நன்கு கவனித்துப் பார்த்திருக்கிறாள். அதோடு நுழைவாயிலுக்கருகே கிருஷ்ணனின் காதுக் குண்டலத்தை அவள் தந்தை கீழே போட்டதையும் அவள் கவனித்தாள். அதைத் தான் எடுத்து அவள் சகோதரர்களிடமும் மற்றவர்களிடமும் அவள் தந்தை கிருஷ்ணன் தான் ச்யமந்தகத்தைத் திருடினான் என்பதற்குச் சான்றாகக் காட்டினார். ம்ம்ம்ம்?? ச்யமந்தகம் மறைந்ததற்கும் இந்த நிகழ்வுகளுக்கும் இடையில் ஏதோ சம்பந்தம் இருக்கிறது. ஆம் நிச்சயமாக இருக்கிறது.

தாங்க முடியாத் துயரத்தில் தவித்தாள் பாமா. அவளால் எவரிடமும் இந்தத் துயரத்தைப் பகிர்ந்து கொள்ளவும் முடியவில்லை. அவள் தந்தை அவளுடைய பிரியத்துக்கு உகந்த
“பிரபு”வான கிருஷ்ணனை அடியோடு அழிக்கக் கிளம்பிச் சென்றிருக்கிறார். கிருஷ்ணனுடைய வெளிப்படையான தன்மையையும் ச்யமந்தகத்தை அவன் திருடவில்லை என்பதையும் நிரூபிக்க வேண்டியவர் அவள் ஒருவளே. அவளால் மட்டுமே இதை நிரூபிக்க இயலும். ஆனால் அவளால் இதைச் செய்ய முடியவில்லை. நிரூபிக்க இயலவில்லை. எப்படி நிரூபிப்பாள்? கிருஷ்ணனின் கௌரவத்தை எப்படிக் காப்பாள்?

மதிய உணவுக்குச் சிறிது நேரம் முன்னர் அவள் தந்தையும் சகோதரன் பங்ககராவும் திரும்பி வந்தனர். அவள் தந்தை வெற்றிக் களிப்புடன் அவளிடமும் அவள் சிற்றன்னைமாரிடமும் சொன்னதை வேறு வழியின்றி மனக்கசப்புடன் அவள் கேட்டுக் கொண்டாள். அவள் தந்தை கூறினார்: பெரியோரிடம் தான் பேசிய விதத்தையும், அங்கிருந்த மக்கள் அனைவரும் கிருஷ்ணனைத் “திருடன்” என அழைத்ததையும், கிருஷ்ணன் ச்யமந்தகத்தை மீட்டுத் தரவில்லை எனில் தன்னைத் தானே எரித்துக் கொள்வதாக சபதம் செய்ததையும், அவனைத் தான் செய்ய வைத்ததாகவும் பெருமையுடன் கூறினார்.  சத்யபாமா இதைக் கேட்டதும் கலக்கமடைந்தாள். அதிலும் ச்யமந்தகம் கிடைக்கவில்லை எனில் கிருஷ்ணன் தன்னைத் தானே எரித்துக் கொள்வான் என்பதைக் கேட்டு அவளுக்கு மயக்கமே வந்துவிட்டது. அனைவரும் சாப்பிடச் சென்றார்கள். இயந்திரம் போல் சென்ற பாமாவினால் ஒரு கவளம் உணவைக் கூட விழுங்க முடியவில்லை. வேறு வழியின்றி சாப்பிட்டதாகப் பெயர் பண்ணிய பாமா தன் அறைக்கு வந்து படுக்கையில் விழுந்தாள். அவள் கண்கள் மூடவே இல்லை. அவளுக்குத் தூக்கம் வரவே இல்லை. அப்போது பார்த்து அவள் செல்லப் பூனை ஊரி அங்கே வந்து காலையிலிருந்து பாமா தன்னைக் கவனிக்காமல் இருப்பது குறித்துப் புகார் சொல்லும் தோரணையில், “மியாவ், மியாவ்,” எனக் கத்திக் கொண்டு அவளருகே வந்ததும் கோபத்துடன் பூனையைத் தள்ளிவிட்டாள் பாமா.

ஆனால் ஊரியோ பாமாவின் துயரத்தைப் புரிந்து கொண்டாற்போல் நடந்து கொண்டது. அதற்குத் தன் யஜமானியின் மனோநிலையைப் புரிந்து கொள்ளும் சக்தி வாய்த்திருந்தது. ஆகவே தன் பின்னங்கால்களினால் நின்ற வண்ணம் முன்னங்கால்களை பாமாவின் படுக்கையில் அவள் முகத்துக்கு எதிரே வைத்துப் பரிதாபமாகக் குரல் கொடுத்தது.  சத்யாவின் முகம் முழுவதும் அவள் விட்ட கண்ணீரால் நிரம்பி இருந்தது. இப்போது அவள் செல்லப்பூனையில் இந்த நடவடிக்கையினால் அவள் மனம் மேலும் நெகிழ்ந்தது. பூனை தன் யஜமானியின் துயரத்தைத் தானும் பங்கு போட்டுக் கொள்ள முயலுவதைக் கண்டு அதை எடுத்து அப்படியே அணைத்துக் கொண்டாள். “ஊரி, ஊரி, ஊரி” என்று கடித்த பற்களுக்கிடையே பேசிய அவள், “ஊரி, நீ ஒருத்திதான் என்னைப் புரிந்து கொண்டவள்; எனக்கென நீ ஒருத்தி தான் இருக்கிறாய்! இல்லை எனில் இவ்வுலகில் எனக்கு உதவுபவர்கள் எவரும் இல்லை. உறவென்றும் ஒருவரும் இல்லை!” என அதன் காதுகளில் மெல்ல முணுமுணுத்தாள். சற்று நேரம் யோசித்தாள் பாமா. பின்னர் ஒரு முடிவுக்கு வந்தவளாய்த் தன் செவிலித்தாயை அழைத்தாள்.

முகி என்னும் பெயருடைய அந்த செவிலித்தாய் நாக இனத்துப் பெண். பாமாவின் தாய் இறந்ததில் இருந்து அவள் தான் பாமாவைத் தன் சொந்த மகள் போல் வளர்த்து வந்தாள். அவளைத்தான் இப்போது பாமா அழைத்து உடனடியாக சுபத்ராவைப் போய்ப் பார்க்கும்படி சொன்னாள். சுபத்ராவைக் கோவிலுக்கு வந்து தன்னைச் சந்திக்கும்படி அழைப்பு அனுப்பினாள். வழக்கமான இடத்தில் தான் காத்திருப்பதாகவும் சுபத்ரா வந்து தன்னைச் சந்திக்க வேண்டும் எனவும் சொல்லி அனுப்பினாள். பின்னர் கிருதவர்மாவை சாத்யகியைப் பார்த்து அன்று மாலை சூரிய அஸ்தமனத்தின் பின்னர் கிருதவர்மாவின் வீட்டில் தன்னைப் பார்க்க ஏற்பாடு செய்யும்படி செய்தி அனுப்பினாள். காலையிலிருந்து அடுத்தடுத்து நடந்த சம்பவங்களால் சத்யபாமா வெளியே சொல்லமுடியாதபடி மனோவேதனையை அனுபவித்து வந்தாள். இப்போதோ நகரிலிருந்து பற்பல செய்திகள் வந்தவண்ணம் இருந்தன. அவற்றாலும் அவள் வேதனை அதிகரித்தது. அவை ஒவ்வொன்றும் ஒவ்வொருவிதமாக இருந்ததோடு அல்லாமல் சில மிகைப்படுத்தப்பட்டவையாகவும் தெரிந்தன.

அவள் மாளிகையின் ஊழியர்கள் மூலமும் மற்றும் சில நண்பர்கள் மூலமும் வந்த செய்திகள் அவளை அதிர வைத்தன. மற்றும் சில ஒற்றர்களும் செய்தியைப் பரப்பினார்கள். எவர் சொல்வதை நம்புவது என்றே புரியவில்லை பாமாவுக்கு. ஆனால் துவாரகையில் மக்கள் அனைவருமே ஒவ்வொரு வகையில் மனோ நிலையில் எழுச்சி கண்டு துடித்துக் கொண்டிருந்தனர். ஆகவே ஆங்காங்கே சிறு சிறு மோதல்களும் ஏற்பட்டிருந்தன. வந்த செய்திகளில் குறிப்பிடப்பட்ட பொதுவான மனோநிலையாக யாதவர்கள் அனைவரும் சத்ராஜித்திடமே கோபம் கொண்டிருப்பதாகத் தெரிவித்தன. கிருஷ்ணனை சத்ராஜித் திருடன் என்று சொன்னதை எவராலும் தாங்க முடியவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது. கிருஷ்ணன் ச்யமந்தகத்தைத் திருடி இருப்பான் என்பதை எவரும் நம்பவில்லை என்றும் கூறினார்கள். மேலும் கிருஷ்ணன் தன்னைத் தானே எரித்துக் கொள்வதாக சபதம் செய்திருப்பதும் அனைவர் மனதிலும் வேதனையை உண்டு பண்ணி இருந்ததாகவும் தெரிய வந்தது.

Tuesday, January 5, 2016

என்னை நானே எரித்துக்கொள்வேன்!

சாத்யகர் சத்ராஜித்தை நோக்கித் திரும்பினார். அவருடைய குரல் தீர்க்கமாகவும் உறுதியாகவும் தொனித்தது. “ஆம், அது எங்களுக்கும் தெரியும். கிருஷ்ணனும் அது அவனுடைய குண்டலங்கள் தான் என்பதை மறுக்கவே இல்லை. ஆனால் ச்யமந்தக்த்தை அவன் திருடியதாக ஒப்புக் கொள்ளவே இல்லையே! இதை நான் உங்களுக்கெல்லாம் தெளிவாகச் சொல்கிறேன்.” என்றவாறு தன் கைகளை ஆணையிடும் தோரணையில் உயரத் தூக்கிய சாத்யகர், “யாதவப் பெருமக்களே, கேளுங்கள்! கிருஷ்ணனை நான் சிறுவனாக இருந்த போதிலிருந்தே நன்கு அறிவேன். அவன் நம்முடைய ரக்ஷகன். பாதுகாவலன். நம்மை மத்ராவின் துயரங்களிலிருந்து மீட்டு இங்கே கொண்டு சேர்த்தவன். அவனால் ஒருபோதும் திருடவே முடியாது! அப்படிப்பட்ட இளைஞன் அல்ல அவன். ஆனால் நைனனின் மகனான சத்ராஜித் மட்டும் அவன் மேல் குற்றம் சுமத்துகிறான். நம்முடைய வாழ்க்கையின் உயரிய நோக்கம், நம்பிக்கை அனைத்துமே இவன் சுமத்தும் குற்றத்தில் அஸ்திவாரமின்றி ஆட்டம் காண்கிறது என்பதை சத்ராஜித் நிரூபித்தாக வேண்டும்.”

கூட்டத்தில் சாது,சாது என்ற கோஷம் எழுந்தது. அதே சமயம் சத்ராஜித்தின் ஆட்கள் அந்தக் கூட்டத்தில் இருந்தவர்களில் சிலர், “கோவிந்தன் ஒரு திருடன், கோவிந்தன் ஒரு திருடன்!” என்று கூவினார்கள். சாத்யகர் ஏதுமே பேசாமல் தன் கைகளாலேயே அந்தக் கூக்குரலை அடக்கி அமைதியை நிலை நாட்டினார். சாத்யகர் மேலும் பேசும் முன்னர் கிருஷ்ணன் முன்னால் வந்து பேச ஆரம்பித்தான். தெளிவான குரலில் தான் சொல்லப் போவதை உறுதி செய்யும் குரலில் அவன் பேசியது அனைவரையும் ஈர்த்தது. “யாதவப் பெருமக்களே! இந்த சத்ராஜித் சொல்வது அனைத்தும் முழுப்பொய்! நான் ச்யமந்தகத்தைத் திருடவே இல்லை. ஆனால் அதை சத்ராஜித்திடமிருந்து பிடுங்க வேண்டும் என்றும் அதை அக்ரூரரின் கஜானாவில் சேர்க்க வேண்டும் என்றும் சொன்னது உண்மைதான். அதுவும் நம் யாதவர்கள் அனைவரின் நன்மைக்காகவே சொன்னேன். இதை நான் அப்போதே சத்ராஜித்திடம் தெளிவாக எடுத்துச் சொல்லிவிட்டேன். மேலும் இப்போது நான் கூறுகிறேன். நான் சொன்னதை நிறைவேற்றுவேன். என்ன நடந்தாலும் சரி, நான் சொன்னால் சொன்னபடி செய்வேன். ச்யமந்தகத்தை சத்ராஜித்திடமிருந்து எடுத்து அக்ரூரரின் கஜானாவில் சேர்த்தே தீருவேன்!”

சத்ராஜித் அப்போது குறுக்கிட்டுப் பேச முனைந்தான். ஆனால் கிருஷ்ணன் தன் கரங்களால் அவனைத் தடுத்து நிறுத்தினான். தான் இன்னமும் முடிக்கவில்லை என்பதை அந்தச் செய்கையின் மூலம் நிரூபித்துவிட்டுத் தொடர்ந்தான். “யாதவர்களுக்கும் சத்ராஜித்துக்கும் நான் செய்யக் கூடிய மிகப் பெரிய சேவை என்பதே ச்யமந்தகத்தை சத்ராஜித்தின் தனிப்பட்ட சொத்தாக இருப்பதிலிருந்து மீட்டு யாதவர்களின் பொதுச் சொத்தாக ஆக்குவதே ஆகும். இதனால் சத்ராஜித்தின் அகம்பாவமும், சுயநலமும் அதிகமாகி வருகின்றதே தவிர குறையவில்லை. ஆகவே அதை அவரிடமிருந்து கட்டாயம் மீட்கவேண்டும். இந்த விஷயத்தில் நான் என் வாக்குறுதியைக் கட்டாயமாய்க் காப்பாற்றியே தீருவேன். உங்கள் அனைவருக்கும் நன்கு தெரியும்! நான் எப்போதுமே என்னால் இயன்றவரை முழு முயற்சியும் செய்து கொடுத்த வாக்கைக் காப்பேன் என அறிந்திருப்பீர்கள்!”

கூட்டம் உற்சாகத்தில் ஆரவாரமிட்டுக் கூத்தாடியது. சத்ராஜித்தின் ஆதரவாளர்கள் மட்டும் எதிர்ப்புக் குரல் தெரிவித்தனர். “கேளுங்கள்!” கிருஷ்ணனின் குரல் கொஞ்சம் கடுமையாக மாறியது. ஏதோ மரண தண்டனையை அறிவிப்புச் செய்பவன் போல் முகமும் கடுமையாக மாறியது. “கேளுங்கள், யாதவகுலப் பெருமக்களே! நான் சொன்னபடி செய்யத் தவறினால் மன்னர் உக்ரசேனர் என்னை யாதவ குலத்திலிருந்தே நீக்கிவிடட்டும். என் தந்தை வசுதேவர் என்னை தன் மகன் அல்ல என அறிவிக்கட்டும். என் ஆசாரியரும் குலகுருவுமான கர்காசாரியார் என்னைத் தன் சீடன் இல்லை என அறிவித்து எனக்கு சாபங்களும் இடட்டும்! என் மதிப்புக்கும், மரியாதைக்கும் உரிய சாத்யகரால் நான் க்ஷத்திரியனே அல்ல என்ற அறிவிப்பு வரட்டும். மேலும் நான் ஓர் அதிரதியாக இருப்பதற்குத் தகுந்தவன்  அல்ல என்று கூறட்டும்! என் அண்ணனும் என் உயிரினும் மேலானவனும் ஆன பலராமன் தன் வெற்றுக்கரங்களால் என் மண்டையை உடைத்துச் சுக்கு நூறாக்கி விடட்டும்.” இப்போது கொஞ்சம் நிறுத்திக் கொண்ட வாசுதேவக் கிருஷ்ணன், தழுதழுத்த குரலில் மேலும் பேசலானான். “ நீங்கள் அனைவரும் என்மேல் மாறாத பிரியமும், விசுவாசமும் கொண்டவர்கள். ஏனெனில் நான் தர்மத்தின் வழி நடக்கிறேன் என்பதை அறிந்தவர்கள். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு இரவும், ஒவ்வொரு பகலும் நான் தர்மத்தை நிலைநாட்டுவதற்காகவே உயிர்வாழ்கிறேன் என்பதை அறிந்திருப்பீர்கள். இதில் நான் தவறினேன் எனில், நான் உயிர் வாழ அருகதை அற்றவன். என்னை நானே எரித்துக் கொள்வேன்.”

கூடியிருந்த கூட்டத்தில் அனைவரும் இந்தப் பேச்சால் உலுக்கப்பட்டனர். அனைவர் கண்களும் கண்ணீரால் நிரம்பியது. சாத்யகர் மட்டும் எதற்கும் அசையாமல் நின்றிருந்தார். அனைவரும் கிருஷ்ணனின் குரல் எப்போதும் இருக்கும் அன்பும், இனிமையும், மென்மையும் இல்லாமல் இப்போது கடினமாக, உறுதியாக, வருத்தம் கலந்து பேசியதைக் கேட்டு மனம் வருந்தினார்கள். அவர்கள் அனைவரையும் கஷ்டமான காலகட்டங்களில் கூட இனிமையுடனும், ஆதரவுடனும் பேசிய அந்தக் குரல்! இப்போது இப்படிப் பேசுவதோடு அல்லாமல் தனக்குத் தானே தண்டனையும், அதுவும் கடுமையான தண்டனையும் விதித்துக் கொள்கிறதே!

அதன் பின்னர் கண்களில் ஓர் விசித்திரமான ஒளியோடு சத்ராஜித்தின் பக்கம் திரும்பிய கிருஷ்ணன், “மாட்சிமை பொருந்திய சத்ராஜித் அவர்களே! நீங்கள் யாதவர்களின் சொத்துக்களை அவர்களிடமிருந்து பிடுங்கி விட்டீர்கள். உங்களுடைய பணபலத்தையும், படை பலத்தையும் வைத்து அவர்களை ஒடுக்க நினைத்துவிட்டீர்கள். உங்கள் செல்வமும் அதனால் விளைந்த அகந்தையும் உங்கள் கண்களை மறைத்துவிட்டது. உங்கள் செல்ல மகளுக்கு யுயுதானாவை மணமுடிக்க வேண்டும் என சித்தப்பா சாத்யகரை மறைமுகமாக மிரட்டுகிறீர்கள். இப்போது நீங்கள் என் வாழ்நாள் எதற்காக உள்ளதோ அதை என் வாழ்நாளின் உயரிய நோக்கத்தை என்னிடமிருந்து பறிக்கப் பார்க்கிறீர்கள்! அதை நான் ஒருக்காலும் விட்டுக் கொடுக்க மாட்டேன்!”

தன்னுடைய எரிக்கும் கண்களை சத்ராஜித்தின் பக்கம் திருப்பினான் கிருஷ்ணன். அவன் பார்வையின் வேகத்தையும் அதன் உஷ்ணத்தையும் தாங்க முடியாமல் சத்ராஜித் வேறுபக்கம் பார்த்தான். கிருஷ்ணன் மேலே பேச ஆரம்பித்தான். “சத்ராஜித் அவர்களே! உங்கள் மேல் தவறு என்பது உறுதியாகிவிட்டால், நான் எதுவும் சொல்ல மாட்டேன். மன்னர் அவர்களிடம் உங்களுக்குத் தக்க தண்டனை கொடுத்தாக வேண்டும் என்றெல்லாம் கட்டாயப்படுத்த மாட்டேன். க்ஷத்திரிய தர்மத்தின் எச்சங்கள் ஒரு சிறிதளவாவது உம்மிடம் இருந்தால், அது உங்களுக்கு அதுவாகவே போதுமான தண்டனையைப் பெற வைக்கும். அதையும் நான் பார்ப்பேன்.”

கூட்டத்தை நோக்கித் திரும்பிய கிருஷ்ணன், “மாட்சிமை பொருந்திய அரசரே, பெரியோர்களே, யாதவ குடி மக்களே, நான் உங்கள் அனைவரிடமும் கெஞ்சிக் கேட்பது ஒன்றே ஒன்று தான்! கொஞ்சம் பொறுமையாக இருங்கள்! எனக்குக் கொஞ்சம் அவகாசம் கொடுங்கள். உங்கள் அனைவரின் கௌரவத்தையும் நான் மீட்டு எடுப்பேன். இது என்னுடைய கௌரவம் மட்டும் அல்ல! மாறாக உங்கள் அனைவரின் கௌரவமும் இதிலே தான் அடங்கி இருக்கிறது. ஆகவே கொஞ்சம் அவகாசம் கொடுங்கள்!” என்று வேண்டிக் கொண்டான்.

கூட்டம், “ஜெய ஶ்ரீகிருஷ்ணா! ஜெய ஶ்ரீகிருஷ்ணா!” என்று ஆமோதித்தது.


Monday, January 4, 2016

குழப்பம் உருவானது!

விரைவில் ப்ருஹத்பாலன் அக்ரூரர், பலராமன், உத்தவன் மற்றும் சாத்யகியோடு அங்கு வந்து சேர்ந்தான். பெரியவர்களான வசுதேவர், சாத்யகர் மற்றும் அக்ரூரர் ஆகியோர் உக்ரசேனருடன் அடுத்த அறைக்குச் சென்று நடந்த விஷயங்களைக் குறித்து விவாதிக்க ஆரம்பித்தனர். அவர்கள் அனைவரும் மீண்டும் மன்னனின் படுக்கை அறைக்கு வந்தபோது உக்ரசேனரின் கைகள் கிருஷ்ணனின் தோள்களைப் பிடித்துக் கொண்டிருந்தன. பொதுவாக ப்ருஹத்பாலனே உக்ரசேனரின் உதவிக்கு வருவான். இன்றோ கிருஷ்ணனின் உதவியோடு உக்ரசேனர் வந்தார். சத்ராஜித் தன் மகன் பங்ககராவுடனும் ஷததன்வாவுடனும் அவர்களைத் தொடர்ந்து தாழ்வரைக்கு வந்தான். வெளி முற்றத்தில் கூடி இருந்த மக்கள் ஒருவருக்கொருவர் பார்த்துக் கூவிக் கொண்டும், சண்டையிட்டுக் கொண்டும் இருந்ததும் அவ்வப்போது காதுகளில் விழுந்தன. ஒரு சிலர் அப்போதே ஒருவருக்கொருவர் குறை கூறிக் கொண்டும், மிரட்டிக் கொண்டும் இருந்தனர். ஆங்காங்கே ஒரு சிலர் ஆயுதப் பிரயோகமும் செய்தது சப்தங்களால் தெரிய வந்தது.

தாழ்வரைக்கு மன்னனும் மற்றவர்களும் வந்து சேர்ந்ததும் மக்கள் கூட்டம் அமைதியில் ஆழ்ந்தது. என்றாலும் கூட்டத்தில் அமைதியின்மையும் குழப்பமான மனோநிலையும் இருந்தது தெளிவாகத் தெரிந்தது. அங்கே அப்போது வந்து சேர்ந்த அதிரதிகளுக்காக மக்கள் விலகி வழிவிட்டனர். அனைவரும் அங்கே கூடினார்கள். சத்ராஜித் கிருஷ்ணனை ச்யமந்தக மணியைத் திருடி விட்டதாகக் குற்றம் சாட்டுவதைக் குறித்து அவர்களுக்குத் தெரிய வரவும் அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அதோடு இல்லாமல் மன்னன் முன்னால் பணிவோ விநயமோ இல்லாமல் சத்ராஜித் நடந்து கொண்ட முறையும், மன்னனை அவன் அவமதித்ததையும் அவர்கள் அறிந்திருந்தார்கள். மேலும் மன்னனை முறைப்படி சந்திக்க வராமல் பூரண ஆயுதபாணியாக சத்ராஜித், பங்ககரா, ஷததன்வா மற்ற அதிரதர்கள் அனைவரும் வந்திருப்பதும் அவர்களைத் திகைக்க வைத்தது. ஆகவே இப்போது இங்கே கூடிய அவர்கள் அனைவரும் உக்ரசேனர், வசுதேவர், சாத்யகி, அக்ரூரர் ஆகியோரின் பின்னால் போய் அவர்களுக்குப் பாதுகாப்பாக நின்று கொண்டனர்.

குழப்பம் கொஞ்சம் ஓய்ந்து அமைதி நிலவுவதைக் கண்ட மன்னன் கிருஷ்ணனின் தோள்களில் இருந்து தன் கரங்களை விலக்கிக் கொள்ளக் கிருஷ்ணனும், பலராமனும் மற்ற அதிரதர்களுடன் சேர்ந்து நின்று கொண்டனர். அப்போது சத்ராஜித்துடன் வந்திருந்த அதிரதிகளிலும் மஹாரதிகளிலும் இளைஞனான ஒருவன் சற்றே முன்னால் வந்தான் கிருஷ்ணனை நோக்கித் தன் கரங்களை நீட்டிக் கொண்டு, “அதோ! அந்தத் திருடன் நிற்கிறான்! அவன் தான் ச்யமந்தகத்தைத் திருடி விட்டான்!” என்று கூட்டத்தை நோக்கிக் கூவியதோடு அல்லாமல் கிருஷ்ணனை நோக்கிக் காறித் துப்பினான். பலராமனுக்குள் கோபம் கொந்தளித்தது. கோபக்காரனான அவன் கோபத்தைக் கிளறிவிட இது ஒன்றே போதுமானதாக இருந்தது. அடக்க முடிஅயக் கோபத்துடன் தாழ்வரையிலிருந்து கீழே இறங்கினான். அந்த மஹாரதியை நோக்கிச் சென்றான். அவனுடைய முழு உடலும் அந்த மஹாரதியை அப்படியே மறைத்ததால் பலராமன் என்ன செய்கிறான் என்பதே சில கணங்கள் யாருக்கும் புரியவில்லை. அப்படியே அவனை ஒரு குழந்தையைத் தூக்குவது போல் மேலே தூக்கினான் பலராமன். அங்கே நின்றிருந்தவர்களில் கடைசி வரிசைக்குப்போய் அவன் விழும்படி அவனைத் தன் தலைக்கு மேல் சுழற்றித் தூக்கி வீசி எறிந்தான் பலராமன். கடைசி வரிசையில் நின்றிருந்தவர்கள் அவனை அப்படியே பிடித்துக் கொண்டனர். இல்லை எனில் அவன் தலை கீழே மோதிச் சிதறிப் போயிருக்கும்.

கூடியிருந்த கூட்டம் சிரிப்பில் ஆழ்ந்தது. அனைவரும் “ஜெய பலதேவா!பலதேவனுக்கு மங்களம்!” என்றெல்லாம் கூச்சல் இட்டார்கள். பலதேவனுக்கே வெற்றி என்றும் சிலர் கூத்தாடினார்கள். இந்தக் குழப்பத்தில் சத்ராஜித் கூவிய “திருடன், திருடன்” என்னும் கூக்குரல் எவர் காதிலும் விழாமல் போயிற்று. அப்போது சாத்யகன் முன்னால் வந்தார். அவருடைய உறுதியான கட்டுக்கோப்பான தேகத்தையும் அவர் முகத்தில் நிலவிய சாந்தியையும், அவரின் உள்ளத்து நேர்மையை வெளிக்காட்டும் கண்களும் சேர்ந்து அவர் முன்னால் வந்ததுமே கூட்டத்தை அமைதியில் ஆழ்த்தியது. என்றாலும் சாத்யகரும் கூட்டத்தை அமைதியாய் இருக்கும்படித் தன் கைகளால் சைகை செய்தார். கூட்டம்  அமைதியில் ஆழ்ந்தது. கூட்டத்தைப் பார்த்து சாத்யகர் பேச ஆரம்பித்தார்.

“அனைவரும் கேளுங்கள்! உக்ரசேன ராஜாவின் கட்டளைகளை நான் இப்போது சொல்லப் போகிறேன். நைனனின் மகன் ஆன சத்ராஜித் ஒரு குற்றம் சாட்டுகிறான். மாட்சிமை பொருந்திய கோவிந்தனைத் திருடன் என்கிறான். அவனுடைய ச்யமந்தக மணிமாலையை கோவிந்தன் திருடி விட்டதாகக் கூறுகிறான். சாத்யகர் நேரடியாக விஷயத்துக்கு வந்தது அனைவருக்கும் திருப்தியாக இருந்ததோடு சத்ராஜித்தை அவர் “நைனனின் மகன்” என அலட்சியமாகக் குறிப்பிட்டதில் உள்ளூர சந்தோஷமாகவும் இருந்தது. சத்ராஜித்தை யாதவர்கள் பலரும் அவன் நடவடிக்கைகளால் வெறுத்து வந்தனர். இப்போது சத்ராஜித் மேலும் பேச ஆரம்பித்தார்.

“சத்ராஜித் சொல்கிறான். கிருஷ்ணன், இன்று அதிகாலை நேரத்தில் சத்ராஜித்தின் வழிபாட்டு அறையை உடைத்துத் திறந்து கொண்டு உள்ளே சென்று ச்யமந்தகத்தை அதன் பீடத்திலிருந்து எடுத்துச் சென்று விட்டானாம். ஆனால் கோவிந்தன் இதைத் திட்டவட்டமாக மறுக்கிறான். இது ஒரு தீவிரமான விஷயம். முக்கியமான விஷயம்! இதன் தாக்கம் அனைத்து யாதவர்களிடமும் சென்று சேரும். நம் எல்லோரையும் பாதிக்கும். கிருஷ்ணனுக்கு ஒன்று எனில் அது நம் அனைவரையும் நிச்சயம் பாதிக்கும். நம் உயிர், உடல், உடைமைகள் அனைத்தும் அவனுக்குச் சொந்தமானவை! அவனால் தான் நாம் இன்று உயிருடனும் இத்தனை செல்வங்களுடனும் இருக்கிறோம். நம்முடைய இன்றைய வீரமிக்க சாகசச் செயல்களுக்கும், நமக்குக் கிடைத்திருக்கும் கௌரவத்திற்கும் ஆர்யவர்த்தத்து அரசர்களால் நாம் போற்றப்படுவதற்கும் கிருஷ்ணனே காரணம்.”

சற்றே நிறுத்திய சாத்யகர் கூட்டத்தை ஒரு கணம் யோசனையோடு பார்த்தார். சுற்றிலும் உள்ள மக்களை அவர் பார்த்த விதத்திலிருந்து தம் பேச்சு அவர்களிடையே எவ்வகைத் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது என்பதை அவர் கணிக்கிறார் என்பது புரிந்தது. பின்னர் அவர் மீண்டும் பேச ஆரம்பித்தார். “நம் மாட்சிமை பொருந்திய மன்னர் உக்ரசேனர் அவர்கள் நைனனின் மகனிடம் கிருஷ்ணனால் தான் இது திருடப்பட்டது என்பதை நிரூபிக்கும்படி கூறுகிறார். ஆகவே இப்போது முதலில் நைனனின் மகனான சத்ராஜித் பேசட்டும். இங்குள்ள பெரியோர்கள் அதை முதலில் கேட்பார்கள். அதன் பின்னர் கோவிந்தன் என்ன சொல்கிறான் என்பதைக் கேட்போம். கடைசியில் முடிவு செய்யப்படும். சத்ராஜித் சொல்வது உண்மையா என்பதும் அதற்கான தண்டனையை அந்தத் திருடனுக்கு வழங்குவதா என்பதும் முடிவு செய்யப்படும். அல்லது சத்ராஜித் பொய் சொல்லி பொய்சாட்சியத்தை நிறுவுகிறானா என்பதும் முடிவு செய்யப்படும்.”

அப்போது சத்ராஜித் முன்னால் வந்தான். சாத்யகன் பேசுவதைத் தடுத்தான். “என்ன சாட்சி வேண்டும் உனக்கு? இதை விட என்ன வேண்டும்? அந்தக் கிருஷ்ணன் என் ச்யமந்தகத்தை என்னிடமிருந்து பிடுங்கிவிடுவதாக நேற்றுக் கூறினான். எப்படியோ எடுப்பேன் என்றும் சொன்னான். இதோ, இது அவனுடைய காதுக் குண்டலங்கள். இதை அவனுடையது இல்லை என அவனைச் சொல்லச் சொல், பார்க்கலாம்! அவன் திருடிக் கொண்டு ஓடியபோது தப்பிச் சென்ற வாயிலின் கதவு அருகே இது விழுந்து கிடந்தது. “என்று கிருஷ்ணனின் குண்டலங்களை எடுத்துக் காட்டினான்.