Wednesday, January 13, 2016

அவர் சென்று விட்டார்!

சத்ராஜித் தான் அவமானப்பட்டதை உணர்ந்து கொண்டான். அதோடு அவனுடைய சுய அபிமானமும், தன்னம்பிக்கையும் கூடக் குறைந்து விட்டிருந்தது. அவன் எவ்வளவு யோசித்து அழகாகத் திட்டமிட்டு அதை நிறைவேற்றினான்! ஆனால் அனைத்தும் வீணாகிவிட்டனவே! ஆம், அவன் திட்டங்கள் வீணானதில் சந்தேகமே இல்லை! சத்யா, பற்களைக் கடித்தான் சத்ராஜித். சத்யா அவனுடைய அந்த சபிக்கப்பட்ட பெண்! அவள் இத்தனை நேரம் அழிந்தே போயிருப்பாள்! அவள் தான் அவனை இந்த துவாரகை நகரமே பார்த்துச் சிரிக்கும்படியான நிலைக்கு உள்ளாக்கிவிட்டாள். அதே சமயம், கிருஷ்ணன் போட்ட சபதத்தினால் அவனுடைய மன உறுதியினால் அவன் கௌரவம் மிகவும் உயர்ந்து விட்டிருக்கிறது. ஆனால் சத்ராஜித்திற்கோ அவமானம்!

எல்லாவற்றிற்கும் சிகரம் வைத்தாற்போல் அவன் தம்பி பிரசேனன் இன்னமும் திரும்பவில்லை. அவன் சென்ற வேலையைச் சரியாக முடித்துக் கொண்டு இத்தனை நேரம் திரும்பி வந்திருக்க வேண்டும். ஆனால் அவன் இன்னமும் வரவில்லை. ஏதேனும் நடக்கக் கூடாதது நடந்து விட்டதோ? பிரசேனனுக்கு ஏதேனும் ஆபத்து நேர்ந்து விட்டதோ? அப்படி எனில் ச்யமந்தகம், ச்யமந்தகம் அது பத்திரமாக இருக்குமா? சத்ராஜித்திற்குக் கவலை பீறிட்டது. அவன் தன்னுடைய தினசரி நியமங்களுக்காக உட்கார்ந்து அவற்றை யந்திரம் போல் செய்தான். நொடிக்கொரு முறை அவன் கண்கள் வாசலைப் பார்த்ததோடு அல்லாமல் அவனே ஏதேனும் காலடி ஓசை கேட்டால் பிரசேனன் தான் வந்துவிட்டானோ என்னும் ஆவலில் எழுந்து ஓடி வந்தான். ஆனால் ஒவ்வொரு முறையும் அவனுக்கு ஏமாற்றம் தான்.

அன்றைய யக்ஞமும் பெயருக்கு நடந்தது என்பதை சத்ராஜித் கவனித்தான். வேத விற்பன்னர்கள் வந்திருந்தாலும் எவரும் ஈடுபாட்டுடன் செய்யவில்லை. ஆர்வமே காட்டாமல் கடமைக்குச் செய்தனர். குடும்ப நபர்களோ ஏதோ பேய், பிசாசு, பூதம் அந்த மாளிகையில் நடமாடுவது போல் பயந்த வண்ணம் இருந்தனர். ஏதோ சொல்லத் தெரியாத பேரிடர் நிகழ்ந்துவிட்டாற்போல் உணர்ந்தனர்.  இவர்களே நேற்று வரை அவனிடம் எவ்வளவு மரியாதையும், அடக்கமும் காட்டினார்கள். எவராலும் அடக்க முடியாத கிருஷ்ணனை சத்ராஜித் அடக்கப் போகிறான் என்பதில் அவனைக் கண்டு வியந்து பாராட்டினார்கள். கண்ணனையே அழிக்கப் போகிறான் என்பதில் அவர்களுக்குக் கொஞ்சம் கர்வமாகவும் இருந்தது. இன்றோ! அவனை கழிவிரக்கத்துடன் பார்ப்பதோடு அல்லாமல் அவனிருக்கும் தர்மசங்கடமான நிலையை நினைத்தும் அவர்கள் வேடிக்கை பார்ப்பது போல் சத்ராஜித்திற்குத் தோன்றியது.

துவாரகை முழுவதும் பரவி இருக்கும் வதந்தியை நம்புவதா வேண்டாமா எனத் தெரியவில்லை. அது அவன் மன அமைதியைக் கெடுத்தது. எல்லோரும் ஒரு மனதாகச் சொல்வது என்னவெனில் சாத்யகி அவன் மகள் சத்யபாமாவை அழைத்துக் கொண்டு ஓடி விட்டான் என்றே! அவனும் அப்படித் தான் நினைத்தான். காந்தர்வ முறைப்படி மணம் செய்து கொள்ள இருவரும் சென்றுவிட்டதாகப் பேசிக் கொள்கின்றனர். யாதவர்களில் பலருக்கும் சாத்யகி இப்படிச் செய்ததில் மனம் நொந்து விட்டது. சாத்யகர் எவ்வளவு பெரிய மனிதர்! க்ஷத்திரியர்களுக்கே ஓர் எடுத்துக்காட்டாக உதாரண புருஷராக வாழ்பவர்! அவர் மகன் இப்படியா?  சாத்யகியின் இந்த நடவடிக்கையால் சாத்யகரின் குடும்பப்பாரம்பரியமே அழிந்து விட்டதே! இத்தனை நாட்கள் வரை அவர்கள் எவ்வளவு கௌரவமான வாழ்க்கையை நடத்தி வந்தார்கள்!

மக்கள் மனதில் இப்போது ச்யமந்தக மணி மறைந்தது குறித்த சிந்தனையே இல்லை. அதிலும் அதைக் கிருஷ்ணன் திருடி இருப்பான் என்னும் செய்தியையும் அவர்கள் எவரும் நம்பவில்லை. அனைவரும் என்ன நினைத்தார்கள் எனில் சத்யபாமாவிடம் தான் ச்யமந்தகம் இருந்தது எனவும், அவள் சாத்யகியை அழைத்துக் கொண்டு செல்கையில் அதையும் தன்னுடன் எடுத்துச் சென்றிருக்கிறாள் என்றே அனைவரும் எண்ணினார்கள். ஆனால் சத்ராஜித்திற்கு அது உண்மை அல்ல என்பது நன்றாகத் தெரியும். அதே சமயம் அவன் மனதில் ஒரு பிரமிப்பு ஏற்பட்டிருந்தது. அது மூடநம்பிக்கையினால் ஏற்பட்ட பிரமிப்பு என்பதை அவன் உணரவில்லை. ஆனாலும் அவனுடைய செல்வாக்கு, அதிகாரம் அனைத்தும் அந்த ச்யமந்தகத்தால் தான் கிடைத்தது என்பதை அவன் மனதார நம்பினான்; இப்போதும் அதையே நம்புகிறான். இப்போது அது அவனை விட்டுச் சென்று விட்டதால் தான் இத்தகைய கலவரமான செய்திகள் கிடைப்பதோடு அவனுடைய மனமும் கலக்கம் அடைந்திருக்கிறது. அவனுடைய செல்வாக்கும், அதிகாரமும் குறைந்திருக்கிறது.

துவாரகையின் யாதவர்கள் அனைவருக்கும் சாத்யகியின் இந்த விசித்திரமான கபட நாடகத்தைப் புரிந்து கொள்ள முடியவில்லை. விசித்திரமாகவன்றோ நடந்து கொண்டிருக்கிறான். சத்யபாமாவுடன் ஓடிப் போய்விட்டான். ஆனால் அவனுடைய அனைத்து ஆயுதங்களும், மற்றும் ரதமும் இங்கேயே இருக்கின்றன. ஒரு துரும்பைக் கூட அவன் எடுத்துச் செல்லவில்லை. சத்யபாமாவுடன் அவன் ஓடிப் போயிருந்தான் எனில் அவன் ஆயுதங்களையும் எடுத்துக் கொண்டு ரதத்தில் அல்லவோ சென்றிருக்க வேண்டும். ஏனெனில் சத்ராஜித் தன் மகளை அழைத்துக் கொண்டு ஓடியவனைத் துரத்திச் சென்று போர் தொடுப்பானே! ஏன் அவன் தன் ஆயுதங்களையும், ரதத்தையும் விட்டுச் சென்றான்? அவர்கள் அப்படி எங்கே தான் சென்றிருப்பார்கள்?

இங்கே கிருஷ்ணனின் மாளிகையில் ருக்மிணி, காலையில் வழக்கம் போல் எழுந்தாள். தன்னருகே படுத்திருக்கும் கிருஷ்ணனை நோக்கித் திரும்பியவள் அதிர்ந்து போனாள். அங்கே கிருஷ்ணனைக் காணவில்லை. ஒருவேளை தான் இன்று அதிக நேரம் தூங்கி விட்டோமோ? கிருஷ்ணன் எழுந்து சென்று விட்டானோ? தன்னை எழுப்பவில்லையோ? இல்லையே! கிருஷ்ணன் இப்படிச் செய்ய மாட்டானே! வழக்கமாக அவள் காலை பிரம்ம முஹூர்த்த வழிபாட்டுக்கான ஏற்பாடுகளைச் செய்யும் வரை எழுந்திருக்கும் வழக்கமே இல்லையே! அவள் அதற்கான ஏற்பாடுகளைச் செய்து அவனை எழுப்பியதும் தானே எழுந்து வருவான்! இது என்ன புது வழக்கம்?

சரி, இன்று நேரமாகிவிட்டது எனக் குளிக்கக் கடலுக்குப் போய்விட்டார் போலும்!ஆனால் வீட்டை விட்டு வெளியே செல்லும் முன்னர் அவளையும் ஷாயிப்யாவையும் பார்த்து விடைபெறாமல் செல்லும் வழக்கமே இல்லையே! இது கொஞ்சம் புதிதாக இருந்தது ருக்மிணிக்கு. அப்போது ருக்மிணியின் மனதில் ஓர் கவலை அப்பிக் கொண்டது! ஒரு வேளை…ஒரு வேளை அவன் ச்யமந்தகத்தைத் தேடிச் சென்று விட்டானோ? எதற்கும் ஷாய்ப்யாவைப் பார்க்கச் சென்றிருக்கலாம். ஷாய்ப்யாவின் அறையை நோக்கிச் சென்ற ருக்மிணி, “பிரபு இங்கே வந்தாரா?” என்று அவளிடம் கேட்டாள். அவள் குரலில் தொனித்த அவசரமும் பரபரப்பும் ஷாய்ப்யாவையும் தொற்றிக் கொண்டது. சாதாரணமாக அவள் இப்படிப் பேச மாட்டாள். தெளிவாக உறுதியான, குரலில் நிச்சயத்தோடு பேசுவாளே!

“இல்லை, அவர் இங்கே வரவில்லையே? ஏன் கேட்கிறாய்?”

“அவர் சென்று விட்டார்!” ருக்மிணி சொன்னாள்.

1 comment:

ஸ்ரீராம். said...

தொடர்கிறேன்.