Wednesday, April 29, 2015

கண்ணனுக்குக் காத்திருந்த காரிகை!

இருவரும் போட்டிக்கான முறைப்படி குரு வணக்கம் செய்துவிட்டுப் போட்டியை ஆரம்பித்தனர். முதலில் ஒருவரை ஒருவர் பிடிகளினால் இறுக்கிப் பிடிக்க நினைத்தனர். விரைவில் சோமேஸ்வருக்குத் தன் எண்ணத்தை மாற்றிக் கொள்ளும்படி ஆயிற்று. அவன் நினைத்தபடி கண்ணன் கைகள் மென்மையாகவெல்லாம் இல்லை. ஒரு பிடி பிடித்தானானால் அது இறுக்கியது. அவன் கைகளிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ள சோமேஸ்வர் பாடுபட வேண்டி இருந்தது.  அவனுக்கு இப்போது தான் மெல்ல மெல்லப் புரிந்தது. பதினாறு வயதில் கிருஷ்ணன் மல்யுத்தப் போட்டியில் தன்னை விட வயதிலும் அனுபவத்திலும் மூத்தவர்களான சாணூரனையும், கம்சனையும் எப்படித் தோற்கடித்திருப்பான் என்பதை அறிந்து கொண்டான். அவர்களைத் தரையில் வீழ்த்தியதோடு அல்லாமல் கொல்லவும்  கொன்று விட்டானே! சோமேஸ்வரனின் ஒவ்வொரு அசைவையும் முன் கூட்டியே இது இவ்வாறு தான் இருக்கும் என எதிர்பார்த்தான் கண்ணன். அதற்கேற்றவாறு தன் அசைவுகளை அமைத்துக் கொண்டு தன்னை முன்கூட்டியே காத்துக் கொண்டான்.

சோமேஸ்வர் மிகவும் கெட்டிக்காரத்தனமாகவும் தன் முழுத் திறமையையும் உபயோகித்துக் கண்ணனைத் தன் பிடிக்குள் கொண்டு வர நினைத்தான். ஆனால் அதில் அவன் மிகவும் வெறுப்பே அடைந்தான். கூடி இருந்த மல்லர்களுக்கும் விரைவில் சோமேஸ்வர் திணறுவது புரிந்து விட்டது. திறமையாகப் பயிற்சி பெற்ற அவர்களால் எவ்வாறு அதை விடத் திறமையாகக் கண்ணனால் ஒரு சாதாரண மனித சக்திக்கு அப்பாற்பட்டவனாக, தொலைநோக்குப் பார்வையுடன் சோமேஸ்வரின் அசைவுகளை ஊகித்து யுத்தம் புரிய முடிகிறது என்பதைத் தாளா வியப்புடன் பார்த்தார்கள். நேரம் சென்று கொண்டே இருந்தது.எப்போதெல்லாம் கண்ணன் அகப்பட்டுக் கொண்டுவிடுவான் எனத் தோன்றுகிறதோ அப்போதெல்லாம் எப்படியோ தந்திரமாகக் கண்ணன் சோமேஸ்வரை ஏமாற்றிவிட்டு அவன் பிடியிலிருந்து தப்பி விடுவான். கண்ணனின் விருப்பத்துக்கு ஏற்றாற்போல் அவன் உடல் வளைந்து கொடுத்தது. ஆகவே அவனுடைய ஒவ்வொரு அசைவும் விரைவாகவும் சர்வ நிச்சயமாகவும் அமைந்தது. ஆனால் சோமேஸ்வரோ மல்லர்களின் இயல்புக்கு ஏற்பப் பெருத்த உடல் படைத்திருந்தான். அவன் ஒரு அசைவு அசைவதற்குள்ளாகக் கண்ணன் பல அசைவுகளைச் செய்து அவனைத் தன் பிடியில் கொண்டு வந்துவிடுவான்.

உடல் பருத்திருப்பதன் காரணமாக விரைவில் களைத்தும் போனான் சோமேஸ்வர். ஆனால் கிருஷ்ணனோ சிறிதும் களைப்படையவில்லை. சோமேஸ்வரோ மிகவும் முயற்சி செய்தே கிருஷ்ணனை எதிர்கொள்ள வேண்டி இருந்தது விரைவில் அவன் கண்கள் மங்கத் தொடங்கின. அங்கு குழுமியிருந்த ஜ்யேஷ்டி மல்லர்கள் அனைவருக்கும் தங்கள் தலைவன் ஆன சோமேஸ்வர் இவ்வளவு விரைவில் களைப்படைந்தது ஆச்சரியமூட்டுவதாக இருந்தது.  சோமேஸ்வருக்குள் உள்ளுக்குள் கிளர்ந்தெழுந்த எழுச்சியில் அவன் கிருஷ்ணனைத் தன்னிரு கரங்களாலும் தோள்களைப்பற்றித் தன் பக்கம் இழுத்துக் கீழே தள்ள முயற்சி செய்தான். ஆனால் அந்த முயற்சியில் அவன் தோற்றுப் போனான். ஒவ்வொரு முறையும் தோல்வியைக் கண்ட அவன் கடைசியாக ஒரு முயற்சி செய்ய எண்ணிக் கிருஷ்ணன் மேல் புலியைப் போல் பாய்ந்தான். ஆனால் கிருஷ்ணனோ, அதை எதிர்பார்த்தவன் போல, சோமேஸ்வர் சற்றும் எதிர்பாரா வேகத்தோடு அவனிடமிருந்து தப்பிவிட்டான்.

சோமேஸ்வர் பாய்ந்த வேகத்தில் கிருஷ்ணன் தப்புவான் என எதிர்பார்க்காததால் அவன் கால்கள் தடுமாறின. சற்று நேரம் நின்ற இடத்திலேயே தள்ளாடினான்.அடுத்த நிமிடமே கிருஷ்ணன் தன் கைகள், தோள்கள் ஆகியவற்றின் உதவியோடு மிக வேகமாக ஒரு விசித்திரமான பிடி ஒன்றைப் போட்டுத் தன் எதிரியான சோமேஸ்வரைக் கீழே தள்ளி அவன் மார்பின் மேல் அமர்ந்தான். சோமேஸ்வர் தோற்றதில் ஆச்சரியம் அடைந்தாலும் கிருஷ்ணன் வென்றதில் சந்தோஷம் கொண்ட மல்லர்கள் அனைவரும், ஜெய ஶ்ரீகிருஷ்ணா என்றும் சாது, சாது என்றும் கோஷித்தனர். கிருஷ்ணன் மல்யுத்தக் களத்திலிருந்து வெளியே வந்தான். சாத்யகி கிருஷ்ணன் உடலில் பரவி இருந்த தூசிகளையும் மணலையும் தட்டி எடுப்பதில் முனைந்தான். சோமேஸ்வரும் மெதுவாக எழுந்து கீழே இறங்கிக் கிருஷ்ணனை நமஸ்கரித்தான்.

“பிரபுவே, எனக்கு இப்போது புரிந்தது. நீங்கள் எப்படிப் போரிட்டுக் கம்சனையும், சாணூரனையும் வென்றதோடு அவர்களைக் கொல்லவும் செய்தீர்கள் என்பதைப் புரிந்து கொண்டேன். பிரபுவே, உங்கள் மல்யுத்தத் திறன் அபாரமாக இருக்கிறது; புதுவிதமாகவும் உள்ளது. ஆகவே உங்கள் பயிற்சியை எங்களுக்கும் சொல்லிக் கொடுங்கள்.” என்று சோமேஸ்வர் வேண்டினான்.  “ஆஹா! நான் உனக்குச் சொல்லிக் கொடுப்பதா? தேவையே இல்லை! நீ மல்யுத்தத்தில் நிபுணன் ஆயிற்றே சோமேஸ்வர்! வேண்டுமானால் ஒரு நாள் நாம் இதைப் பற்றி விவாதிப்போம்.” என்றான் கிருஷ்ணன்.

இவர்கள் பேச்சைக் கவனித்த பீமனுக்குத் தன் வேலை ஆகவேண்டுமே என்ற கவலை வந்தது. அங்கு குழுமிய மல்லர்களையும், மற்றவர்களையும் விரைவில் கலைந்து போகச் சொல்லிவிட்டு கண்ணனை பலியாவின் வீட்டுக்குள்ளே அழைத்துச் சென்றான். கண்ணன் உடலில் அப்போதும் மணல் ஒட்டிக் கொண்டிருந்ததைப் பார்த்த பீமன் அதைத் தட்டி விட்டான். கண்ணன் தன் வழக்கமான உடைகளைப்போட்டுக் கொண்டான். அப்போது பீமன் அவனைப் பார்த்து, “கண்ணா, இப்போது நீ அடுத்த அறைக்குள் போக வேண்டும். அங்கே ஒரு உயர்குடிப் பெண் உன்னைச் சந்திக்க வேண்டிக் காத்திருக்கிறாள்.  அவளுக்கு உன்னிடம் ஏதோ பேச வேண்டுமாம்.”

கிருஷ்ணன் அவனைத் தான் தீவிரமாகவும் கடுமையாகவும் பார்ப்பது போல் பாவனை செய்தான். பின்னர் அவனுக்கே பொறுக்க முடியாமல் சிரித்தான். சிரித்துவிட்டு, “பீமா, எனக்குத் தெரியும்! நீ ஏதோ தந்திர வேலை செய்து உன் வேலை ஆகவேண்டும் என்பதற்காகவே என்னை இங்கே அழைத்து வந்திருக்கிறாய். நீ ஏதோ தந்திரம் செய்கிறாய் என்று நான் ஏற்கெனவே சந்தேகப்பட்டது சரியாகப்போயிற்று.” என்றான்.

“ஆஹா! நான் ஒன்றும் சத்தியம் செய்யவில்லையே! கண்ணா, நீ நீண்டநாட்கள் இருக்க வேண்டும். இதோ இப்போது நீ இந்த மல்லர்களை எவ்வாறு சந்தோஷப் படுத்தினாயோ அதே போல் உள்ளே உனக்காகக் காத்திருக்கும் பெண்மணியையும் அவள் வேண்டுகோளைக் கேட்டு சந்தோஷப் படுத்தி அனுப்பி வை!” என்றான். கிருஷ்ணன் அவனைப் பார்த்துக் கண்ணடித்துச் சிரித்தான். “உள்ளே ஜாலந்திரா இல்லையே?” என்றும் விஷமமாகக் கேட்டான். “நீயே உள்ளே போய்ப் பார் கிருஷ்ணா!” என்றான் பீமன். கிருஷ்ணனை அந்த அறைக்குள் தள்ளினான். உள்ளே இரு பெண்கள் அமர்ந்திருந்தனர். ஒருத்தி வயதானவள் இன்னொருத்தி இளம்பெண். கிருஷ்ணன் உள்ளே நுழைந்ததும் இருவருமே அவன் கால்களில் விழுந்து வணங்கினார்கள். தன் கைகளைத் தூக்கி அவர்களை ஆசீர்வதித்தான் கிருஷ்ணன்.  ரேகா எழுந்து சென்று அறைக்கதவைச் சார்த்திவிட்டு அங்கேயே அமர்ந்து கொண்டாள்.

“நான் உங்களுக்கு என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டான் கிருஷ்ணன்

Tuesday, April 28, 2015

மல்யுத்தக் களத்தில் கண்ணன்!

மாலை மயங்கி இரவும் வந்தது.  ஹஸ்தினாபுரத்து மாளிகைகளிலும் அதன் மேன்மாடங்கள், நிலா முற்றங்கள் எங்கும் விளக்குகள் ஏற்றப்பட்டன. அகில் வாசனை எங்கும் பரவியது. கைகளில் தீவட்டி எந்தியபடி தீவட்டிக் காவலர்கள் சுற்றி வர, வெளியே செல்வோரும் தீவட்டிக் காரர்களை அழைத்துக் கொண்டு அவர்கள் வழிகாட்டச் சென்று கொண்டிருந்தனர். அப்படி ஒரு குழு அங்கே கண்ணனின் மாளிகையிலிருந்து கிளம்பிக் கொண்டிருந்தது. யாரெனப் பார்ப்போமா? ஆஹா! அதோ கண்ணன்! அவனுடன் பீமன், உத்தவன்,சாத்யகி ஆகியோரும் இருக்கின்றனர்.  இரு காவலாட்கள் தீவட்டி ஏந்தி வெளிச்சம் காட்டிக் கொண்டு முன்னே செல்கின்றனர். கண்ணனின் மெய்க்காப்பாளர்களான இரு கருட வீரர்கள் கண்ணனின் பக்கவாட்டில் ஆயுதங்களை ஏந்திய வண்ணம் பாதுகாப்புக் கொடுத்துக் கொண்டு சென்றனர். அவர்கள் அனைவரும் பலியாவின் மல்யுத்தக்களத்தை நோக்கியே சென்றனர்.

அனைவரும் பலியாவின் மல்யுத்தக் களத்தை அடைந்தனர். அங்கே குழுமியிருந்த ஜ்யேஷ்டி மல்லர்கள் அனைவரும் கண்ணனை வணங்கி வரவேற்றனர். பெண்கள் அனைவரும் வரவேற்புப் பாடல்களைப் பாடித் தங்கள் மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொண்டனர். குழந்தைகள் கண்ணனைச் சூழ்ந்து கொண்டன. மல்யுத்தக் களமே அன்று விளக்குகளால் ஒளிர்ந்தது. ஆங்காங்கே காவலாட்களும், சேடிப் பெண்களும் நின்று கொண்டு விளக்குகள் அணைந்து விடாமல் அவ்வப்போது எண்ணெய் வார்த்துக் கொண்டிருந்தனர்.  தன் மகன்களில் ஒருவர் துணை இருக்க பலியா அங்கே மெதுவாக வந்து கொண்டிருந்தான். அவன் நடந்து வருவதைப் பார்த்த மல்லர்கள் தங்கள் கைகளைத் தட்டி ஆரவாரம் செய்தனர். அங்கே வந்து கூட்டத்தின் முகப்பில் நின்று கொண்டான் பலியா. மிகப் பலஹீனமாய்க் காணப்பட்டாலும் தன்னைச் சமாளித்துக் கொண்டு கிருஷ்ணனின் கால்களில் விழுந்து வணங்கினான்.

அனைவரையும் சோமேஸ்வர் அந்த மாபெரும் திடலில் மல்யுத்தம் நடக்கும் மேடைக்கு அழைத்துச் சென்றான். அங்கே அந்த மேடையின் ஒரு பக்கம் மாபெரும் லிங்கம் ஸ்தாபனம் செய்யப்பட்டிருந்தது. அருகே அம்பிகையின் திருவுருவமும் மண்ணால் ஆன பிரதிமையாகக் காட்சி அளித்தது. அம்பிகை கருணை பொருந்தியவளாக வடிக்கப்பட்டிருந்தாள். மூங்கிலால் செய்யப்பட்ட சிலம்பக் கழிகள் ஆங்காங்கே அடுக்கப்பட்டிருந்தன. அதைத் தவிர மேலே ஏறிப் பயிற்சி செய்யும் தூண்களும் ஆங்காங்கே காணப்பட்டன கயிறு தாண்டுதல், உயரே எழும்பிக் குதித்தல் ஆகிய பயிற்சிகளுக்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன. அன்றைய விசேஷ தினத்துக்கான எல்லாக் கொண்டாட்டங்களும் முடிந்து ஆரத்தி எடுக்க வேண்டியது தான் நிறுத்தி வைத்திருந்தார்கள். கிருஷ்ணன் வருவதற்காகக் காத்திருந்தார்கள். கிருஷ்ணனும் அவன் நண்பர்களும், மற்றும் பீமனும் அங்கே வழிபாடுகள் நடத்தப்பட்டிருந்த விக்ரஹங்களுக்குத் தங்கள் நமஸ்காரங்களைச் செய்து அவர்களும் வழிபட்டனர்

கற்பூரம் ஏற்றப்பட்டது. பலியா அதை ஏற்றிக் கிருஷ்ணன் கைகளில் கொடுத்து அவனையே ஆரத்தி எடுக்கச் சொன்னான். ஈசனைக் குறித்தும் அம்பிகையைக் குறித்தும் ஆரத்திப்பாடல்கள் பாட, ஒரு பக்கம் மந்திரங்களும் முழங்க ஆரத்தி எடுக்கப்பட்டது அனைவருக்கும் ஆரத்தித் தட்டு வழிபாட்டுக்குக் காட்டப்பட்டது. அப்போது பலியா கிருஷ்ணனிடம், “பிரபுவே, உங்களிடம் நான் ஒன்று வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன். “ என ஆரம்பித்தான். கிருஷ்ணன் ஒரு புன்னகையுடன் குறுக்கிட்டு, “நீ என்ன கேட்கப்போகிறாய் என்பது தெரியும், பலியா! சரி, சரி உன் விருப்பப்படியே நான் இப்போது மல்யுத்தம் செய்யத் தயாராக ஆடைகளை மாற்றி வருகிறேன். ஆனால் என்னுடன் பொருதப் போவது யாரோ?” என்று புன்னகை மாறாமலேயே கேட்டான் அப்போது சோமேஸ்வர் முன்னால், வந்து அந்தப் பெருமையைத் தனக்கு அளிக்கும்படி கேட்டுக் கொண்டான் கிருஷ்ணனும் சம்மதித்தான்.

கோபு வழிகாட்ட பலியாவின் வீட்டுக்குள் சென்ற கிருஷ்ணன் மல்யுத்தம் செய்வதற்கேற்றபடி தன் ஆடைகளை மாற்றிக் கொண்டு வந்தான். சுருள் சுருளாகத் தொங்கிய தன் தலை மயிரை மேலே தூக்கிக் கட்டி இருந்தான். அது கிருஷ்ணனை இன்னமும் ஒல்லியாகக் காட்டியது. மேல் உத்தரீயம் தரிக்காமல் வந்ததால் அவன் உடல் மிக மென்மையாகப் பட்டுப் போன்ற மிருதுத் தன்மையுடன் காணப்பட்டது. ஒரு பெண்ணின் நளினமே அனைவருக்கும் தெரிந்தது. கிருஷ்ணன் உடலிலும் வலுவான தசைகளும், நரம்புகளும், அவன் பிடியிலும் வலுவானதாக இருக்கும் என்பதையே அவர்களால் புரிந்து கொள்ள முடியவில்லை. இந்த உடலில் மல்யுத்தம் செய்யும் அளவுக்கு வலுவும் திறமையும் இருக்கும் என்பதையே நம்ப மறுத்தனர். மாமிசப் பிண்டம் போன்ற தங்கள் உடல்களோடு கிருஷ்ணனின் உடலையும் ஒப்பிட்டுப் பார்த்து இத்தனை மென்மையான ஒருவனால் எவ்வாறு மல்யுத்தம் செய்ய முடியும் என்றே வியந்தனர். இவன் ஒரு மல்யுத்த வீரனாக இருக்க முடியாது என்றும் எண்ணினார்கள்

கிருஷ்ணன் நேரே சோமேஸ்வரிடம் வந்து, “நீ இந்த ஆட்டம் எப்படி இருக்கவேண்டும் என விரும்புகிறாய்? நீ மல்யுத்தம் செய்து  என்னைக் கீழே தள்ளிவிட்டு விடப் போகிறாயா? அல்லது நான் முதலில் யுத்தம் செய்து உன்னைக் கீழே தள்ளிவிடவா?” என்று கேட்டான். அதற்கு சோமேஸ்வர் வணக்கத்துடன், “பிரபுவே, உங்கள் திருக்கரங்களால் என்னைக் கீழே தள்ளிவிட்டீர்களானால் என்னை விட அதிர்ஷ்டம் செய்தவர் யாரும் இல்லை. உங்களால் ஆசீர்வதிக்கப்பட்டதாய்க் கருதுவேன்.  ஆனால் நான் உங்களைக் கீழே தள்ள முடிந்தால், அதை விடப் பெரிய பெருமை எனக்கு ஏது? என் வாழ்க்கையின் மறக்க முடியாத நிமிடமாக அது இருக்கும். ஆனால் ஐயா, முன் கூட்டிய முடிவுடன் நாம் மல்யுத்தம் செய்ய வேண்டாம். என் சீடர்களுக்கும் நான் அவ்வாறே கற்பித்து வருகிறேன்.” என்றான்.

“உண்மைதான் சோமேஸ்வர்! முன் கூட்டியே யார் வெல்வது எனத் தீர்மானித்துவிட்டு மல்யுத்தம் செய்வது ஒரு வேடிக்கையான நிகழ்வாக மாறி விடும். சட்டத்திற்கு உட்பட்ட மல்யுத்தப்போட்டியாக இருக்காது. நாம் நம்முடைய பாரம்பரியத்தையும் அது பிறப்பித்திருக்கும் சட்டங்களையும் மதித்தே ஆகவேண்டும். நீ உன்னால் முடிந்ததைச் செய்! நானும் என்னால் இயன்ற வரை போராடுவேன். வா, நாம் போட்டியை ஆரம்பிப்போம்!” என்றான் கிருஷ்ணன். இருவரும் மல்யுத்தப் போட்டி நடைபெறும் இடம் செல்லும் முன்னர் அங்கிருந்த விக்ரஹங்களிடம் சென்று வணங்கினார்கள். பின்னர் அங்கே குவிந்திருந்த மலர்களைத் தங்கள் கைகளில் எடுத்து அதனால் தங்கள் கைகளைத் தேய்த்துக் கொண்டார்கள். கைகளில் வியர்வை அல்லது வேறு காரணங்களினால் ஈரம் இருந்தால் அது போவதற்காகவும் தங்கள் பிடிகள் இறுக்கமாயும், வலுவாயும் இருக்க வேண்டியும் அப்படிச் செய்து கொண்டார்கள். போட்டி ஆரம்பித்தது

Sunday, April 26, 2015

பீஷ்மரின் கட்டளை!

அங்கே நேர்ந்திருந்த சம்பவங்களினால் ஏற்பட்ட எதிர்பாரா விளைவுகளால் அங்கு கூடிய கூட்டம் திகைத்து நின்றது. சம்பாஷணைகள் செல்லும் வழியைப்பார்த்ததும், அங்கு பெரிய கலவரம் ஒன்று ஏற்படுமோ என அனைவரும் அச்சமுற்றனர். ஒருவருக்கொருவர் பேசிக் கொண்டு, “சாது! சாது!” என்று கோஷித்தனர். பீமனும் அங்கிருந்து ஒரு அங்குலம் நகரவில்லை. துஷ்சாசனனையும் நகர அனுமதிக்கவில்லை. இருவரும் அங்கேயே நின்ற வண்ணம் ஒருவரை ஒருவர் முறைத்துப் பார்த்தவண்ணம் நின்று கொண்டிருந்தனர். அப்போது அங்கே யாரோ தடதடவென ஓடி வரும் சப்தம் கேட்க, அனைவரும் திரும்பிப் பார்த்தனர். நான்கு வில்லாளிகள் வில்லையும், அம்புகள் நிறைந்த அம்புறாத்தூணியையும் தூக்கிக் கொண்டு ஓடி வந்து கொண்டிருந்தனர்.  வரும்போதே “அமைச்சர் விதுரர் வருகிறார்!” எனக் கட்டியம் கூறிக் கொண்டு வந்தனர். ஆம், விதுரர் அங்கே வந்து கொண்டிருந்தார். அவருக்குப் பின்னால் அர்ஜுனன் தன்னுடைய காண்டீபத்தை ஏந்திய வண்ணம் அம்புகள் நிறைந்த அம்புறாத் தூணியையும் அணிந்து கொண்டு வந்து கொண்டிருந்தான்.

விதுரரைக் கண்டதும் கூட்டம் அமைதி அடைந்தது. அவருடைய நேர்மையும், நீதியும் மக்கள் மனதைக் கவர்ந்திருந்தன. தர்மத்தின் வழியிலேயே நடப்பார் என்பதையும் மக்கள் அறிந்திருந்தார்கள். ஆகவே அவர்கள் தாங்களாகவே விலகிக் கொண்டு விதுரருக்கு வழி விட்டனர். ஹஸ்தினாபுரத்திலேயே பீஷ்மருக்கு அடுத்தபடியாக மக்கள் விதுரரைத் தான் மிகவும் மதித்து வந்தனர். அவருடைய கருத்த நிறம், குறுகி இருந்தாலும் தீர்க்கமான மூக்கு, அறிவொளி வீசும் கண்கள், முகத்தில் எப்போதும் நிலைத்து இருக்கும் புன்னகை, கருணையான பார்வை, எப்போதும் அடக்கம் ஆகியவற்றால் விதுரர் மிகவும் பிரபலமானவராக இருந்தார். அவருடைய ஞானம் அவருடன் கூடப் பிறந்திருக்குமோ என எண்ணும்படி இருந்தது. மேலும் அவர் ஒரு துறவியைப் போல் எவ்விதமான பற்றுகளும் எதன் மீதும் வைக்காமல் வாழ்ந்து வந்தார். இல்லை என வருவோர்க்கு அள்ளித் தரும் வள்ளலாகவும் இருந்தார். மேலும் அவர் இங்கு தானாக வந்திருக்க முடியாது என்பதும், பீஷ்ம பிதாமகரின் ஆலோசனையின் பேரிலேயே இங்கு அறிவுரை சொல்ல வந்திருக்கிறார் என்பதும் அனைவரும் அறிந்ததே!

“சித்தப்பா, விதுரச் சித்தப்பா! வருக! வருக!” என்று வரவேற்றான் பீமன். “துஷ்சாசனனும் அவன் சகோதரர்களும் செய்திருக்கும் இந்தக் கொடுமையைப் பாருங்கள் சித்தப்பா! எங்கள் மூத்த அண்ணன் யுதிஷ்டிரனுக்கு ஹஸ்தினாபுரச் சக்கரவர்த்தியாகப் பட்டம் சூட்டப் போவதால் இவர்கள் யாரும் இங்கே இருக்க மாட்டார்களாம். அவர்கள் மாமன் ஊரான காந்தாரம் செல்லப் போகிறார்களாம். இந்த மல்லர்கள் அனைவரையும் இவர்களுடைய சாமான்களை எடுத்துச் செல்லும்படியான வண்டிகளைக் கொண்டு வரும்படி கட்டளை பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. அதனாலேயே இவர்கள் இங்கே தங்கள் வண்டிகளை எடுத்துக் கொண்டு வந்திருக்கிறார்கள். அரச ஆணையை மீற முடியுமா? ஆனால் நடந்தது என்ன?”


“இதோ பாருங்கள் சித்தப்பா! குருவம்சத்து ரத்தினங்களான இந்த அழகான, பெருமை வாய்ந்த இளவரசர்கள் என்ன செய்திருக்கிறார்கள்? அவர்களுக்குச் சேவை புரிய வந்த மல்லர்களைத் தாக்கி இருக்கிறார்கள். அவர்களில் ஓரிருவரைக் கொன்றிருக்கிறார்கள். மாடுகளை வெட்டி இருக்கின்றனர். வண்டிகளைச் சுக்கு நூறாக உடைத்திருக்கின்றனர். எனக்கு இந்தச் செய்தி தெரிந்ததும் நான் ஓடோடி வந்தேன். எதற்குத் தெரியுமா? இந்த மல்லர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்குப் பரிகாரம் தேடி அவர்களுக்கு நஷ்ட ஈடு வாங்கித் தரத் தான் வந்தேன். அதைத் தான் இங்கே துஷ்சாசனனிடம் கேட்டுக் கொண்டிருந்தேன். அப்படி அவர்கள் ஒத்துக்கொள்ளாவிட்டால் இந்த மாளிகையை இப்போதே உடனடியாக உடைத்துத் தள்ளுவேன் எனச் சொல்லிக் கொண்டிருந்தேன்.”

“தாங்கள் எதையும் இப்போது செய்ய வேண்டாம், மாட்சிமை பொருந்திய இளவரசே!” மிகக் கனிவாக பீமன் மனதில் தைக்கும்படியான தொனியில் கூறினார் விதுரர். பின்னர் துஷ்சாசனன் பக்கம் திரும்பினார். “துஷ்சாசனரே! மாட்சிமை பொருந்திய இளவரசர்களே! பீஷ்மப் பிதாமகர் தன்னுடைய கட்டளையை உங்களுக்குத் தெரிவிக்கும்படி என்னை அனுப்பி வைத்தார். உங்கள் சகோதரர்களுக்கும் சேர்த்தே இந்தக் கட்டளை பிறப்பிக்கப் பட்டிருக்கிறது. நீங்கள் அனைவரும் பலியாவுக்கும் அவனுடைய மல்லர்களுக்கும் தக்க நஷ்ட ஈடை உடனடியாகக் கொடுக்க வேண்டும். காயம்பட்டவர்களுக்குச் சிகிச்சை அளிக்க நிதி உதவி செய்ய வேண்டும். இறந்தவர்களுக்குத் தக்க நஷ்ட ஈடைக் கொடுக்க வேண்டும். அதுவும் உடனடியாகச் செய்ய வேண்டும்.”

“இதை நீங்கள் உடனடியாக நிறைவேற்றவில்லை எனில், பீஷ்ம பிதாமகர் பலியாவையும் அவன் ஆட்களையும் உங்களுக்குச் சேவை புரியக் கூடாது எனக் கட்டளை இட்டிருக்கிறார். ஆம், பலியா மற்றும் அவனுடைய மல்லர்கள் அவர்கள் மனைவிமார்களின் சேவைகள் உங்களுக்குக் கிடைக்காது. இதை நீங்கள் உடனடியாகச் செய்து கடைசி மல்லன் வரை திருப்தி அடையும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். அவர்களுக்குத் தேவையானதை முழு மனதோடு செய்து முடிக்க வேண்டும். இல்லை எனில் எந்தக் கௌரவர்களும் உங்களோடு தொடர்பு கொள்ள மாட்டார்கள். மற்றவர்களும் எவ்விதத் தொடர்பும் கொள்ள மாட்டார்கள். ஹஸ்தினாபுரத்து மக்களும் உங்களை ஒதுக்குவார்கள். இதை மனதில் வையுங்கள்.” என்றார்.

இதைக் கேட்ட துஷ்சாசனன் முகம் பயத்தில் வெளுத்தது. பீமன் சொன்னான்:
“இதோ பார் துஷ்சாசனா! இதைக் கேள்! இதோ தாத்தா அவர்களின் கட்டளையே வந்து விட்டது! நீ என்ன செய்யப் போகிறாய்? தாத்தா அவர்களின் கட்டளையை மீறப் போகிறாயா? அதற்குக் கீழ்ப்படிந்து நடக்கப் போகிறாயா?” பீமனின் குரலே துஷ்சாசனனைப் பயமுறுத்தியது.

துஷ்சாசனனால் எவ்வித முடிவுக்கும் வர முடியவில்லை. அவனால் உடனடியாக எதையும் பேசவும் முடியவில்லை. பீமன் அவனை விடவில்லை. துஷ்சாசனன் அச்சப்படும் விதத்தில் அவனை மிக நெருங்கி, “சொல், உடனே சொல்! பேசு! மாட்சிமை பொருந்திய தாத்தா அவர்களை மிஞ்சி இங்கே வேறு யாருக்கும் அதிகாரம் இல்லை. அவருடைய கட்டளையை நீ ஏற்கப் போகிறாயா? மீறப் போகிறாயா? உடனடியாக பதிலைச் சொல்!” என்று வற்புறுத்தினான். துஷ்சாசனன் மிகவும் சீற்றம் அடைந்தான். அந்தச் சீற்றத்தினால் அவனால் பேச முடியவில்லை. அவன் உதடுகள் துடித்தன.

தாத்தா அவர்கள் கட்டளை இட்டிருக்கிறார். அதுவும் இத்தனை பொதுமக்கள் முன்னிலையில் அந்தக் கட்டளை பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. இங்கு இருக்கும் எல்லா மனிதர்களுக்கும் இந்தக் கட்டளை தெரிந்து விட்டிருக்கிறது. ஆகையால் அதைத் தான் மீறவே முடியாது. விதுரர் துஷ்சாசனனையே பார்த்துக் கொண்டு நின்று கொண்டிருந்தார். அவர் அவன் பதிலை எதிர்பார்த்துக் காத்திருந்தார். பீமனும் தன்னுடைய கடுமையான பார்வையை மாற்றாமல் துஷ்சாசனனையே முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தான். துஷ்சாசனன் வேறு வழியில்லாமல் தலை குனிந்தான். தொண்டையை அடைத்தது அவனுக்கு. எச்சிலை விழுங்கிக் கொண்டான். அப்படியும் தொண்டை காய்ந்து உலர்ந்து போயிற்று. ஒரு மாதிரித் தன்னைச் சமாளித்துக் கொண்டு அடைக்கும் குரலில், “நான் தாத்தா அவர்களின் கட்டளைக்குக் கீழ்ப்படிகிறேன். பலியாவுக்கும் அவனுடைய மல்லர்களுக்கும் உரிய நஷ்ட ஈடைக் கொடுத்து விடுகிறேன்.” என்றான்.


Thursday, April 23, 2015

பீமன் விருப்பு! துஷ்சாசனன் வெறுப்பு!

 அங்கிருந்த கூட்டம் நேரம் ஆக, ஆகப் பெரிதாகிக் கொண்டிருந்தது.  இப்போது பீமனும் துஷ்சாசனனும் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்த மக்களுக்கு கௌரவர்கள் ஹஸ்தினாபுரத்தை விட்டுச் செல்ல நினைக்கிறார்கள் என்னும் செய்தி புதிதாகவும் அதிர்ச்சி தருவதாகவும் இருந்தது. “நாங்கள் அப்படி எவரிடமும் சொல்லவில்லை; எவரையும் அழைக்கவும் இல்லை!” என்று அகந்தையாகச் சொன்னான் துஷ்சாசனன். மேலும் தொடர்ந்து, “அதோடு இதுவெல்லாம் அவர்கள் வேலையும் அல்ல! நாங்கள் போவதையும் வருவதையும் அவர்கள் கண்காணிப்பது தவறு! அவர்கள் வேலையும் அல்ல! ” என்று திட்டவட்டமாகக் கூறினான். “நான் எப்படி நீ சொல்வதை நம்புவது? நீ அவர்களை அழைக்கவில்லை எனில் அவர்கள் எப்படி வந்தார்கள்? அவர்களுக்கு நீங்கள் காந்தாரம் செல்வது எப்படித் தெரியும்? என்னால் இதை நம்பமுடியவில்லை; முதலில் எனக்குப் பதில் சொல்லு! நீங்கள் அனைவரும் காந்தாரம் செல்லப் போகிறீர்களா?”

“நீ யார் அதைக் கேட்க? நான் ஏன் உனக்கு பதில் சொல்லவேண்டும்?” என்று அலட்சியமாகக் கூறினான் துஷ்சாசனன். “என்ன? நான் யாரா? அது கூடவா தெரியாது உனக்கு! நான் உனக்கு அண்ணன் முறை! சித்தப்பன் பிள்ளையாக இருந்தாலும் வயதில் உனக்கு மூத்தவன்.” என்று சப்தம் போட்டுச் சொன்னான் பீமன். வேண்டுமென்றே கூட்டத்தினர் காதுகளில் விழவேண்டும் என அவன் சப்தம் போட்டுச் சொல்வது புரிந்தது அனைவருக்கும். மேலும் தொடர்ந்தான் பீமன்:”என்னைப் பற்றி இன்னும் அதிகம் தெரியவேண்டுமா உனக்கு? நான் ராக்ஷச வர்த்தத்தின் அரசன் வ்ருகோதரன். அதோடு பரதன் பிறந்து தர்மத்தின் பால் நின்று நல்லாட்சி செய்த இந்தப் பாரதத்தின் பரதகுலத்தில் தோன்றிய ஒரு அரச குல க்ஷத்திரியன். பரதன் கடைப்பிடித்த அதே தர்மத்தைக் கட்டிக்காக்க நினைப்பவன். நீதிக்கும், நேர்மைக்கும் போராடுபவன். இப்போது உன்னால் கொடூரமாகக் கொல்லப்பட்ட, காயப்படுத்தப்பட்ட இந்த மல்லர்களுக்கு நீ தக்க பதில் சொல்லியே ஆகவேண்டும்.”

ஆனால் துஷ்சாசனன் எந்தவித பதிலும் அளிக்காமல் பீமன் அங்கே நிற்கையிலேயே கதவை மூட நினைத்து மூடினான். அதைப் புரிந்து கொண்ட பீமன் தன் ஒரு காலை உள்ளே வைத்துத் தடுத்தான். தன்னுடைய பயங்கரமான குரலில், “உண்மையைச் சொல். நேரடியாகப் பதில் அளி! கேட்ட கேள்விக்கு பதிலைக் கூறு! உண்மையாகவே நீங்கள் அனைவரும் காந்தாரம் செல்லும் எண்ணத்தில் இருக்கிறீர்களா?”  ஆனால் துஷ்சாசனன் பீமனை மீறிக் கொண்டு கதவை மூட யத்தனித்தான். இப்போது பீமன் கேட்ட கேள்விக்கு,”அது உனக்குத் தெரிந்து என்ன ஆகவேண்டும்! உனக்கு அதில் எவ்வித சம்பந்தமும் இல்லை!” என்று சொல்லிக் கொண்டே கதவை மூடப் பார்த்தான்.

“எனக்குத் தெரிந்தே ஆகவேண்டும். எனக்கு அதில் எல்லா சம்பந்தமும் உள்ளது!” என்றான் பீமன். “உங்களுக்கெல்லாம் காந்தாரம் செல்லும் எண்ணமே இல்லை எனில், இந்த ஏழை, எளிய மக்களுக்கு நீங்கள் காந்தாரம் செல்லும் தகவலை யார் சொல்லி இருப்பார்கள்? எப்படித் தெரிந்திருக்கும்? ஒருவேளை நீங்கள் தாத்தா அவர்களிடம் சொன்னீர்களா? அவரிடம் சென்று எங்கள்(பாண்டவர்களின்) மூத்தவரான யுதிஷ்டிரர் இந்த நாட்டுக்கு அரசனாக ஆக்கப்பட்டால், நாங்கள் அனைவரும் காந்தாரம் சென்று விடுவோம் என்று தாத்தாவிடம் சொல்லி இருந்தீர்களோ? அப்படியும் இருக்கலாம் அல்லவா?”
பீமன் இதைச் சொல்லும்போது கேட்டுக் கொண்டிருந்த கூட்டத்தினருக்கு ஆச்சரியம் கட்டுக்கடங்காமல் போனது. அவர்களுக்கிடையே கிசுகிசுவெனப் பேசிக் கொண்டார்கள். ஆஹா! பீஷ்மப் பிதாமஹருக்கு யுதிஷ்டிரனை அரசனாக்கும் எண்ணம் இருக்கிறதாமே! மக்கள் தங்களுக்குள் ஒருவருக்கொருவர் அதைப் பற்றி விவாதிக்கத் தொடங்கினார்கள். அதை துஷ்சாசனனும் கவனித்தான்.  அவன் வாயே திறக்கவில்லை. எவ்வித பதிலும் தரவில்லை.  ஆனால் பீமன் விடவில்லை.

“உண்மையைச் சொல் என்னிடம். நீங்கள் அனைவரும் யுதிஷ்டிரனை அரசனாக்கினால் காந்தாரத்துக்குப் போய்விடுவதாகத் தாத்தா அவர்களிடம் சொன்னீர்களா?” பீமனை வெறுப்புக் கலந்த பார்வை பார்த்த துஷ்சாசனன் மீண்டும் வாயே திறக்கவில்லை. ஆனால் பீமன், “ஆம், அப்படித் தான் இருக்க வேண்டும். எப்படியோ இருக்கட்டும். உங்களால் ஏற்பட்ட துன்பத்துக்காக இந்த மல்லர்களுக்கான நஷ்ட ஈடு கொடுக்கத் தயாராக  இருக்கிறீர்கள் அல்லவா?” என்று கேட்டான். “அது எங்களுக்கும் மல்லர்களுக்கும் இடையிலானது. உனக்கு என்ன அதில்? நீ நடுவில் புகுந்தவன்! உன்னிடம் எதையும் சொல்ல முடியாது! ” என்றான் துஷ்சாசனன் தன் வெறுப்பு மாறாமல். தன் கையிலிருந்த தண்டாயுதத்தைத் தரையில் ஓங்கி சப்தம் வரும்படி தட்டிக் கொண்டு வைத்தான் பீமன். “நான் இங்கிருந்து போகப் போவதில்லை. உன்னிடமிருந்து பதில் வரும்வரையிலும் இங்கேயே காத்திருக்கப் போகிறேன். நீயும் உள்ளேயும் செல்ல முடியாது; வெளியேயும் போக முடியாது. என்னெதிரே நின்று கொண்டு தான் இருக்க வேண்டும். எனக்குச் சரியான பதிலைக் கொடுத்த பின்னர் நீ எங்கு வேண்டுமானாலும் செல்லலாம். நீ பதிலளிக்கவில்லை எனில் உன் வீடு சுக்குச் சுக்காக ஆகி விடும்.” என்று கடுமையாகச் சொன்னான் பீமன்.

Tuesday, April 21, 2015

பீமனும் துஷ்சாசனனும் நேருக்கு நேர் மோதல்!

முற்றத்தில் கூடி இருந்த மக்கள் ஏதோ விபரீதமாய் நிகழ்ந்திருப்பதைப் புரிந்து கொண்டார்கள். அனைவரும் ஓடி வந்து பீமனையும், மல்லர்களையும் சூழ்ந்து கொண்டனர். பீமனைப் பார்த்ததும் அவனுக்கு முறையாகச் செய்ய வேண்டிய மரியாதைகளைக் கூடச் செய்யாமல் அந்த மல்லர்கள் இருவரும் மூச்சு விடுவதற்குக் கூட முடியாமல் தவித்தனர். பெரிய பெரிய மூச்சுக்களாக விட்டுக் கொண்டிருந்தனர். மிகக் கஷ்டப்பட்டு ஒருவன் வாயைத் திறந்து, “பிரபுவே, எங்களில் ஒருவன் கொல்லப்பட்டான். பலருக்கு மிக மோசமான அளவில் காயங்கள் ஏற்பட்டிருக்கின்றன. இவை அனைத்தையும் துஷ்சாசனன் தலைமை தாங்கி நடத்தி இருக்கிறான். அவனும் அவன் சகோதரர்கள் சிலருமாகச் சேர்ந்த இந்தக் கொடூரத்தை நடத்தி இருக்கின்றனர்.” என்றான்.

மிக மோசமாகக் காயம் அடைந்திருந்ததாலும் மல்யுத்தக் களத்திலிருந்து இங்கே வந்ததில் ரத்தம் சேதமடைந்திருந்ததாலும் அந்த மல்லனால் நிற்க முடியவில்லை. அப்படியே தரையில் அமர்ந்தான். அவன் காயத்திலிருந்து ஒழுகிக் கொண்டிருந்த ரத்தப்போக்கை நிறுத்த கோபு துணியினால் கட்டுப் போட்டுக் கொண்டிருந்தான். அப்போது இன்னொரு மல்லன் பேச ஆரம்பித்தான். “பிரபுவே, நாங்கள் இன்று அதிகாலையில் துஷ்சாசனன் மாளிகைக்கு எங்கள் வண்டிகளை ஓட்டி வரும்படி ஆணையிடப்பட்டோம். துஷ்சாசனனும் அவன் சகோதரர்களும் காந்தாரம் போவதாகவும், அதற்காக அவர்களுடைய சாமான்களையும் மற்ற உடைமைகளையும் எடுத்துச் செல்ல வேண்டி வண்டிகள் தேவைப்படுவதாகவும் அறிந்தோம். அதற்காகவே எங்கள் வண்டிகள் அங்கே கொண்டு செல்லப்பட்டன. ஆனால் நாங்கள் அங்கே சென்றபோது அவர்கள் அனைவரும் எங்களை மிகவும் மோசமாகத் திட்டினார்கள். மேலும் ஆயுதங்களை எடுத்துக் கொண்டு எங்களைத் தாக்க முயன்றனர். அதில் எங்களில் ஒருவன் கொல்லப்பட்டான். பலருக்கும் காயங்கள் ஏற்பட்டிருக்கின்றன. சில மாடுகளும் கொல்லப்பட்டன. சில மாடுகள் காயம் பட்டுத் தவிக்கின்றன. எங்கள் வண்டிகளை அவர்கள் தங்கள் ஆதிக்கத்தில் எடுத்துக்கொண்டதோடு அல்லாமல் அவற்றில் சிலவற்றைச் சுக்கு நூறாக உடைத்தும் விட்டனர்.”

“ஏன்?”

“அவர்கள் சொல்கின்றனர். நாங்கள் அவர்களை அவமானப்படுத்தி விட்டோமாம். எங்களுக்குக் கிடைத்த கட்டளையின்படி தான் நாங்கள் நடந்து கொண்டோம்; மற்றபடி எங்களுக்கு வேறு எந்தக் கெட்ட எண்ணமும் இல்லை. மேலும் நாங்கள் எளிய குடிமக்கள். அரசரின் ஆணைகளுக்குக் கீழ்ப்படிவதைத் தவிர வேறெதுவும் அறிய மாட்டோம். நாங்கள் இவற்றை எல்லாம் எடுத்துச் சொல்லியும் அவர்கள் கேட்பதாக இல்லை. எங்களைக் கூண்டோடு அழிக்கும் எண்ணத்தில் இருக்கின்றனர். எங்களைக் கொல்லாமல் விட மாட்டார்கள் போலிருக்கிறது.” என்றான்.

“சரி, எங்களுடன் வாருங்கள்!” என்றபடி அவர்களை அழைத்துக் கொண்டு பீமன் கிளம்பினான். அவன் முகம் மிகக் கடுமையாக மாறி விட்டது. “என்ன தைரியம் இருந்தால் ஏழை, எளிய மக்களை அவர்களைத் தாக்குவார்கள்? அவர்களைப் பயமுறுத்துவார்கள்! கோபு, உடனே என் மாளிகைக்குச் சென்று என் தண்டாயுதத்தை எடுத்து வா!” என்று கோபுவுக்குக் கட்டளையிட்டான். சோமேஸ்வர் பலியாவின் வண்டியைத் தள்ளியபடி பீமனைத் தொடர்ந்தான். பீமன் துஷ்சாசனனின் மாளிகையை நோக்கி விரைந்து நடந்தான்.  நடப்பதன் முழு விபரமும் புரியாத கூட்டமும் அவர்களைத் தொடர்ந்து சென்றது. பீமன் துஷ்சாசனன் மற்றும் அவன் சகோதரர்கள் தங்கி இருந்த மாளிகைகளை அடைந்ததுமே பல வண்டிகள் உடைக்கப்பட்டுக் கிடந்ததைப் பார்த்தான். மாடுகள் சில இறந்து கிடந்தன. சில காயம்பட்டுக் கிடந்தன. ஒரு மாடு இறக்கும் தருவாயில் பெரிதாக மூச்சு விட்டுக் கொண்டிருந்தது. இரு மல்லர்கள் தங்கள் நினைவே இல்லாமல் ரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள்.  பொறுமையை இழந்த பீமன் துஷ்சாசனன் வீட்டு வாயிலை அடைந்து கதவை மிக வேகமாகத் தட்டினான்.  கூட்டம் இப்போது என்ன நடந்தது என்பதை முழுதும் அறிந்திருந்தது. இதன் விளைவு என்ன என்பதையும் மேலே என்ன நடக்கப் போகிறது என்பதையும் அறிய வேண்டி மிகவும் பதட்டத்துடன் காத்திருந்தது. ஒவ்வொரு நிமிடமும் அங்கே மிகவும் பதட்டமாகவே கழிந்தது.

பீமன் பல முறை தட்டியும் கதவு திறக்கப்படவே இல்லை. தன் உரத்த குரலில் பீமன், “துஷ்சாசனா! உடனே கதவைத் திறக்கப்போகிறாயா இல்லையா! இல்லை எனில் நான் கதவை உடைத்துத் திறப்பேன்! மூடிய கதவுகளுக்கு உள்ளே இருந்து கொண்டு வித்தையா காட்டுகிறாய்? உடனே கதவைத் திற! “ என்று கத்தினான். அதற்குள்ளாக பீமனின் தண்டாயுதத்தை எடுத்துக் கொண்டு கோபு அங்கே வந்து விட்டான். அதைக் கையில் வாங்கிய பீமன் அந்தக் கதவில் தண்டாயுதத்தால் வேகமாக மோதினான். அவன் மோதிய மோதலில் அரண்மனைக் கட்டிடம் முழுதும் ஆடியது.

“கதவைத் திற, துஷ்சாசனா! இல்லை எனில், நான் உடைத்துத் திறப்பேன்!” என்ற வண்ணம் பீமன் தண்டாயுதத்தினால் கதவை உடைத்தான். மொத்தக் கட்டிடமும் மீண்டும் மீண்டும் ஆடியது. சற்று நேரத்தில் கதவு திறக்கப்பட்டது. நிலையை அடைத்த வண்ணம் தன்னிரு கரங்களால் உள்ளே வருவதைத் தடுத்துக் கொண்டு துஷ்சாசனன் நின்றிருந்தான். அவன் பீமனை துவேஷம் நிறைந்த பார்வையால் பார்த்துக் கொண்டிருந்தான். “என்ன வேண்டும் உனக்கு? இது என்ன ராக்ஷசர்களின் நாடு என நினைத்துக் கொண்டாயா? ராக்ஷசா!” என்று பீமனைப்பார்த்துக் கேட்டான்.

“அப்படி இருந்திருக்கக் கூடாதா என எண்ணுகிறேன்.” என்றான் பீமன். மேலும் தொடர்ந்து, “ஆனால் ஹஸ்தினாபுரம் ராக்ஷசர்களை விட மோசமான பிசாசுகளிடமும், பேய்களிடமும் மாட்டிக் கொண்டு திண்டாடுகிறது என்பது இப்போது தான் புரிகிறது. கோழைகள்! கோழைகள்! நேரிடையாக மோதத் தெரியாத கோழைகள்! ஏழை, எளிய மக்களைத் தாக்கிவிட்டுப் பின் தங்கள் வீட்டுக்குள் சென்று ஒளிந்து கொள்ளும் கோழைகள்!” என்று பற்களைக் கடித்த வண்ணம் உறுமினான்.


துஷ்சாசனனின் இரு சகோதரர்கள் ஆயுதங்களைத் தாங்கிய வண்ணம் அங்கே வந்து துஷ்சாசனன் பின்னால் நின்று கொண்டனர். அவர்களைத் தாண்டியும் எவரும் உள்ளே செல்ல முடியாமல் பார்த்துக் கொண்டனர். பீமன் அதை லக்ஷியம் செய்யாமல் மேலே பேசினான்:” பலியாவுக்கு நீ இப்போது பதில் சொல்! அவன் குலத்து மக்களை நீங்கள் அநாவசியமாகத் தாக்கிக் காயப்படுத்தியதோடு இல்லாமல் ஒருவனைக் கொல்லவும் கொன்றிருக்கிறீர்கள். அதற்கெல்லாம் பதில் சொல்ல வேண்டும். அதோடு இல்லாமல் இந்த ஏழைகளின் மாட்டு வண்டிகளும், மாடுகளும் செய்த பாவம் தான் என்ன? அவற்றையும் போட்டு உடைத்ததோடு அல்லாமல் மாடுகளையும் கொன்று காயப்படுத்தி இருக்கிறீர்கள். நீ கொன்ற, காயப்படுத்திய மாடுகளுக்குப் பதிலாக மாடுகளைக் கொடுத்துவிடு. அதே போல் உடைத்த வண்டிகளுக்கு ஈடான வண்டிகளையும் கொடுக்க வேண்டும்.”

“பலியா? அவன் யார் இதை எல்லாம் கேட்பதற்கு?” என்று துச்சமாகக் கேட்டான் துஷ்சாசனன். “அவன் எங்களை எல்லாம் அதிகாரம் செய்வானா? அதைப் பார்த்துக் கொண்டு நாங்கள் சும்மா இருப்போமா?” என்றான் மேலும்.

“துஷ்சாசனா! நீ தேவையில்லாமல் இந்த ஏழை மல்லர்களைத் துன்புறுத்தி இருக்கிறாய். இவற்றுக்கு நீ பதில் சொல்லியே ஆகவேண்டும்.”

“இந்தக் கேடு கெட்ட மல்லர்கள் எங்களைப்பார்த்துச் சிரிக்கின்றனர். நாங்கள் காந்தாரம் செல்லப் போகிறோமாம். அதற்கு எங்கள் சாமான்களை எடுத்துச் செல்ல இவர்கள் வண்டிகளைக் கொண்டு வந்திருக்கிறார்கள். இது எங்களை அவமானம் செய்வதாக இல்லையா?”

“ஒருவேளை நீயே அவர்களை வண்டிகள் கொண்டு வருமாறு ஆணையிட்டிருந்தால்?” சற்றும் தயக்கமின்றிச் சொன்னான் பீமன்.

Sunday, April 19, 2015

கண்ணன் செய்த மாயம்! கூட்டத்தினரிடையே குழப்பம்!

“ஆஹா! உனக்கு நீயே குறைவாக நினைத்துக் கொள்ளாதே பலியா! நீ எப்படிப்பட்ட தேர்ந்த மல்யுத்த வீரன் என்பதை நான் நன்கறிவேன். உன்னைவிடச் சிறந்த மல்யுத்தவீரன் எவரும் இல்லை!” என்றான் கிருஷ்ணன். இதற்கிடையில் பீமன் தலையிட்டான். “கிருஷ்ணா! பலியா உன்னை முக்கியமாக ஒன்று கேட்டுக்கொள்வதற்காகவே நேரில் வந்துள்ளான். நீ அவனுடைய மல்யுத்தக் களத்தை வந்து பார்வையிட்டு அவன் குடியிருப்பில் இருக்கும் மல்லர்களையும் நேரில் சந்தித்து உன் ஆசிகளை அவர்களுக்குத் தெரிவிக்க வேண்டும் என ஆசைப்படுகிறன். அதற்காகவே இப்போது இங்கே வந்திருக்கிறான். இதை உன்னிடம் எப்படி வெளிப்படுத்துவது எனத் தெரியாமல் தவிக்கிறான்.” என்றான் பீமன்.

பலியாவும் மிகவும் சந்தோஷத்துடன் பீமன் பக்கம் திரும்பித் தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியதோடு அல்லாமல், “சின்ன எஜமான், என் மனதில் உள்ளதைத் தாங்கள் சொல்லிவிட்டீர்கள். நான் சொல்லத் தயங்கினேன்.”என்றவாறு கிருஷ்ணனிடம் திரும்பியவன், “பிரபுவே, உங்களுக்கு எப்போது நேரம் கிடைக்கிறதோ அப்போது என்னுடைய மல்யுத்தப் பயிற்சிகள் நடக்கும் களத்திற்கு வாருங்கள். உங்களுக்குத் தெரிந்த முக்கியமான பிடிகளையும் எங்களுக்குக் கற்றுத் தாருங்கள். கம்சனையும், சாணூரனையும் தாங்கள் எவ்விதம் ஜெயித்தீர்கள் என்பதை எங்களுக்குக் காட்டுங்கள். எனக்கும் அது தான் புரியவே இல்லை. நீங்கள் அவர்களை வென்றது மிகப் பெரிய அதிசயம், ஐயா!” என்றான் பலியா.

கண்ணனோ சிரித்த வண்ணம், “எனக்கே அது எப்படி என்று புரியவில்லை பலியா!” என்றவன் பின்னர் தொடர்ந்து, “பீமனுக்குத் தெரியாததா! என்னுடைய தந்திரங்களையும் முக்கியமான பிடிகளையும் அவன் நன்கறிவான். அவற்றில் குறிப்பிடத்தக்க சிறப்பு ஏதும் இல்லை. நாங்கள் அடிக்கடி மல்யுத்தம் பயின்றிருக்கிறோம். ஒருவரோடொருவர் விளையாடி இருக்கிறோம். அப்போது நாங்கள் போடும் முக்கியமான பிடிகளை பீமன் உங்களுக்குக் காட்டுவான்.” என்றான். அதற்குள் பீமன் மீண்டும் அவசரமாகத் தலையிட்டான்.”கிருஷ்ணா! முழுகி நீந்தி நீராட கங்கையே இருக்கையில் பலியாவுக்கு அதன் துணை நதியிடம் செல்லும் அவசியம் ஏன் வரப் போகிறது? அவன் வீட்டுக் கதவை நீ தட்டிக் கொண்டு இருக்கையில் என்னுடைய வரவு பிரமாதம் இல்லை அப்பா!” என்றான் பீமன்.  கிருஷ்ணனே பலியாவின் மல்யுத்தக் களத்திற்குச் சென்று அனைத்தையும் காட்டலாம் என்னும்போது தான் எதற்கு என்பதே பீமன் கருத்து.

பின்னர் மெல்ல பலியாவையும், அவன் மகன் சோமேஸ்வரையும் ஜாடையாகப் பார்த்துக் கண்ணைக் காட்டியவண்ணம் பீமன் மெல்லிய குரலில் பேசினான்:” இன்று மல்யுத்த வீரர்களுக்குஅவர்கள் குல தெய்வமான அம்பிகையை வணங்கித் துதிக்கும் நாள். இன்று மல்யுத்த வீரர்களுக்கு ஒரு புனிதமான நாள். ஆகவே பெரிய அளவில் வழிபாடுகள் நடத்தும் நாள்!” என்று எடுத்துக் கொடுத்தான். பீமன் சொல்வதைப் புரிந்து கொண்டான் பலியா. பின்னர் தன் கரங்களைக் கூப்பிக் கொண்டு மிகவும் மெல்லிய குரலில் கிசுகிசுப்பாகப் பேசினான்:”பிரபுவே, இன்று இரவு நாங்கள் ஜேஷ்டி மல்லர்கள் அம்பிகையை ஆராதிக்கும் புனிதமான நாள். அந்த விழாவில் நீங்கள் கலந்து கொள்வதன் மூலம் விழா சிறக்கும். எங்களுக்கும் மகிழ்ச்சி தரும்.” என்று வேண்டிக் கேட்டுக் கொண்டான். சொல்லிக் கொண்டே கிருஷ்ணனின் பாதங்களில் தன் தலையையும் வைத்து வணங்கினான் பலியா.

கிருஷ்ணன் அன்போடு அவன் முதுகில் தட்டிக் கொடுத்து அவனை எழுப்பினான். அதே மெல்லிய குரலில், “ பாஹுபலி, இந்த விஷயத்தில் நீ தான் ராஜா, உன்னை மிஞ்சியவர்களும் உண்டோ? உன் விருப்பம் என்னைப் பொறுத்தவரை ஒரு கட்டளை. அதை நிறைவேற்றுவேன். உன்னுடைய மல்யுத்தக் களத்துக்கு எந்த நேரம் வர வேண்டுமோ அந்த நேரம் பீமன் என்னை அங்கே அழைத்து வருவான். ஆனால் அது ரகசியமாகவே இருக்கட்டும். பீமனுக்கு மட்டுமே தெரிந்ததாகவும் இருக்கட்டும். ஏனெனில் நான் அங்கே வருவது தெரிந்தால் அங்கேயும் கூட்டம் அதிகம் ஆகும். அதன் மூலம் உனக்கும் உன் மல்லர்களுக்கும் மிகவும் சிரமங்கள் ஏற்படும். ஆகவே நான் அங்கே வரப்போவது தற்சமயம் எவருக்கும் தெரிய வேண்டாம்.” என்றான்.

“ஆம், கிருஷ்ணா! கொஞ்ச நாட்களுக்காவது நீ உனக்கெனத் தனியான தொண்டர்கள், அதிலும் உன்னைத் துதிக்கும் துதிபாடிகள் இல்லாமல் இருக்கப் பழகிக் கொள்!” என்றான் பீமன். உடனே கிருஷ்ணன் அவனைப் பார்த்து, “ உன்னுடன் பழகுவதும் சரி, உன்னுடன் வாழ்வதும் சரி, மோசமான ஒன்று பீமா! ஏதோ செல்லம் கொடுத்துக் கெட்டுப் போன குழந்தையை நடத்துவது போல் என்னை நடத்துகிறாய்!” என்று பீமனைச் சாடினான். பின்னர் பலியாவை மீண்டும் தட்டிக் கொடுத்து சமாதானம் செய்தான் கிருஷ்ணன். அங்கிருந்த கூட்டத்தினருக்கு இங்கே நடந்த உரையாடல் மிகவும் மெல்லிய தொனியில் நடந்ததால் முழுதும் கேட்கவில்லை. என்ன பேசுகிறார்களோ எனத் தங்களுக்குள்ளாக கிசுகிசுத்துக் கொண்டனர். பின்னர் பலியாவை பீமன் தூக்கி வண்டியில் வைப்பதைப் பார்த்ததும் அவர்கள் கிளம்புகின்றனர் என்று புரிந்து கொண்டு மீண்டும் பலியாவுக்கும், கிருஷ்ணனுக்கும் ஜெய கோஷங்களைச் செய்தனர்.

அங்கிருந்து அவர்கள் கிளம்ப ஆயத்தம் செய்வதைப் பார்த்த கிருஷ்ணன், பீமனும் அவர்களோடு செல்ல ஆயத்தம் செய்ததைப் பார்த்துவிட்டு அவனைத் தடுத்தான். “பீமா, இப்போது தான் சொன்னேன், நீ எல்லோரையும் கெடுக்கிறாய் என. ஆம் உன் அன்பினால் என்னைக் கெடுத்தது போதாது என இப்போது பலியாவையும் கெடுக்கிறாயே! பஹுபலி எவ்வளவு வலிமையானவர் என்பதை நீ அறிய மாட்டாயா? அவர் தானே நடந்து செல்வார்! அவரை வண்டியில் ஏற்றிக் கொண்டு ஏன் சிரமப்படுத்துகிறாய்?” என்றான் கிருஷ்ணன்.

“என்னால் முடியாதே, பிரபுவே!” என பலியா பரிதாபமாகச் சொன்னான். “ஏன் முடியாது பாஹுபலி!” எனச் சொல்லிக் கொண்டே கிருஷ்ணன் பீமன் கரங்களிலிருந்த பலியாவைத் தன் கரங்களில் வாங்கிக் கொண்டான். அங்கு கூடியிருந்த மக்கள் அனைவரும் இந்தப் பரிமாற்றத்தைப் பார்த்துக் கொண்டே இருந்தனர். ஏதோ முக்கியமான ஒன்று நடக்கப் போகிறது என்பதைப் புரிந்து கொண்டு அனைவருமே மௌனமாக அவர்களையே கவனித்த வண்ணம் இருந்தனர்.

“உன்னால் முடியும், பலியா! நிச்சயம் முடியும்! நீ நடப்பாய்! நான் உறுதிமொழி தருகிறேன்!” என்றான் கிருஷ்ணன்.  எங்கே தான் தரையில் வீழ்ந்து விடுவோமோ எனப் பயந்த பலியா, “எப்படி, பிரபுவே, எப்படி? என்னால் எப்படி நடக்க முடியும்?” என்று பயந்த குரலில் பரிதாபமாகச் சொன்னான். “நான் சொல்கிறேன்! பாஹுபலி! உன்னால் முடியும்!” என்று பலியாவின் கண்களையே தீர்க்கமாகப் பார்த்த வண்ணம் கிருஷ்ணன் அவனைப் பிடித்திருந்த தன் இருகரங்களில் ஒன்றைத் தளர்த்தி அவனை விடுவித்தான். அவனுடைய ஒருபக்கத்தை மெல்லக் கீழிறக்கினான். பலியாவின் மெலிந்த கால்கள் ஊஞ்சலாடின. பயத்தில் பலியா க்ரீச்சிட்டான். “இதோ பார் பாஹுபலி!  நான் மல்யுத்த வீரர்களுக்குள்ளே தலை சிறந்த ரத்தினம் என்றாய் அல்லவா? இப்போது நான் சொல்லுகிறேன்! கேள்! உனக்கு ஒன்றுமில்லை. உன்னால் நன்றாக நடக்க முடியும். உன் கால்களுக்கு ஏதும் ஆகவில்லை. உன்னிரு கால்களையும் பூமியில் பதித்து நடக்கத் தொடங்கு!” என்று குழந்தைக்குச் சொல்வது போல் கண்ணன் சொன்னான்.

“என்னால் முடியாது!”

“உன்னால் முடியும்!” என்ற கண்ணன் தன் இன்னொரு கரத்தையும் தளர்த்தித் தன் பிடியிலிருந்து அவனை முழுமையாக விடுவித்தான். கீழே விழுந்துவிடுவான் போல் பலியா ஆடினான். பயத்தில் மீண்டும் கீச்சிட்டான்.
“நட!” என்று அவனுக்கு ஆணையிட்டான் கண்ணன். அவன் குரலில் இருந்த தொனி அவன் சொன்னதைக் கேட்டே ஆகவேண்டும் என்று சொல்லாமல் சொன்னது. கொஞ்சம் அதிர்ச்சியோடு கண்ணனைப் பார்த்த பலியா ஏதோ ஒரு சக்தி தன்னுள் நிரம்புவதையும், அது நிரம்ப நிரம்பத் தனக்குள் ஏதோ வலிமை ஏற்படுவதையும் உணர்ந்தான். கண்ணன் கண்களிலிருந்து அந்த சக்தி பிரவாகித்துத் தன்னுள் பரவுவதாயும் உணர்ந்தான். இப்போது என்ன நடந்தாலும் சரி, கிருஷ்ணன் சொன்னபடி தான் தான் கேட்கவேண்டும்; அதைத் தான் தான் செய்ய வேண்டும். என்பதைப் புரிந்து கொண்டான் பலியா.

மெல்ல மெல்லத் தன் கால்களைக் கீழே வைத்தான் பலியா. பூமியில் அவன் பாதங்கள் பட்டதுமே தள்ளாடிக் கீழே விழுந்தான். கிருஷ்ணனின் கரங்கள் அவனைத் தூக்கிவிட்டன. “வா! நட!” என்ற வண்ணம் நடக்க ஆரம்பித்த குழந்தைக்கு அதன் தாய் மேலும் நடக்கச் சொல்லிக் கொடுப்பது போல் சொன்ன வண்ணம் கிருஷ்ணன் நடந்தும் காட்டினான். பலியாவின் கரங்களைப் பிடித்துக் கொண்டு இரண்டடி எடுத்து வைத்தான் கண்ணன். கூடி இருந்த கூட்டம் பார்த்தபடி மௌனமாக நின்றிருக்க, அன்று வரை நடக்கமுடியாமல் வருடக் கணக்காக முடங்கிக் கிடந்த பலியா இன்று யார் உதவியும் இல்லாமல் தானே தனியாக பூமியில் தன் பாதங்களைப் பதித்து நின்று கொண்டிருந்தான். கூட்டத்தினர் மூச்சு விட மறந்தனர். பலியா மெல்ல மெல்ல தன் பாதங்களைத் தூக்கி நடக்க ஆரம்பித்தான். ஓரடி, ஈரடி, மூன்றடி, நான்கடி, ஆஹா! இதோ ஐந்தாவது அடியும் எடுத்து வைத்துவிட்டான் பலியா. தான் நடப்பதையும், யார் துணையும் தனக்குத் தேவையில்லை என்பதையும் பரிபூரணமாக உணர்ந்த பலியாவின் சுருங்கிப் போன கிழட்டு முகத்தில் பெரியதொரு புன்னகை மலர்ந்தது. கண்களில் குளமாகக் கண்ணீர் திரண்டு வர, “பிரபுவே, நான் நடக்கிறேன், நான் நடக்கிறேன்.” என்று அரற்றிய வண்ணம் கிருஷ்ணனின் கால்களில் பலியா விழுந்தான்.

திகைத்துப் போன கூட்டம் தங்கள் கண்ணெதிரே நடந்த இந்த அதிசயத்தை நம்பமுடியாமல் மேலும் திகைத்தது. செயலற்றுப் போனார்கள் அனைவரும். தன்னுடைய தள்ளுவண்டி வரை தானே நடந்து சென்ற பலியா பின்னர் அதற்கு மேல் தன்னால் நடக்க முடியுமா என்று சந்தேகம் வரத் தன் வண்டியில் தானே சென்று அமர்ந்து கொண்டான். “உன்னால் நடக்க முடியாது என்று எவர் சொன்னார்கள்?” என்று கேட்டவண்ணம் கிருஷ்ணன் சந்தோஷமாக அவனைத் தடவிக் கொடுத்து முதுகிலும் தட்டிக் கொடுத்தான். அதுவரை கூட்டத்தினரைக் கட்டிப் போட்டிருந்த அழுத்தம் தானாக விலக அனைவரும், “வாசுதேவக் கிருஷ்ணனுக்கு மங்களம்!” என்று கோஷித்தார்கள். சோமேஸ்வரும், பீமனும் தொடர பலியாவின் வண்டி அங்கிருந்து நகர்ந்தது.

அவர்கள் மாளிகையின் முற்றத்தினருகே வந்த சமயம் இரு மல்லர்கள் ரத்தம் கொட்டக் கொட்ட அவர்களை நோக்கி ஓடி வந்தனர். தலைக்கவசம் அணியாமல் இருந்த ஒருவன் தலையிலிருந்து விடாமல் ரத்தம் கொட்டியது. இருவருமே “நாம் கொல்லப்பட்டு விடுவோம், கொல்லப்பட்டு விடுவோம்!” என்று அரற்றிய வண்ணம் அவர்களை நோக்கி வந்தனர். புலம்பினார்கள். கொஞ்ச தூரத்தில் வேறு சில மல்லர்கள் நின்று கொண்டிருப்பதும் தெரிந்தது.  அவர்கள் பலியாவின் மல்யுத்தக் களத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறார்கள் என்பதும் புரிந்து கொள்ள முடிந்தது. மாடுகள் வண்டியிலிருந்து அவிழ்த்து விடப்பட்டு ஓட்டி விடப்பட்டன. அவை பயத்தில் இங்குமங்கும் தறி கெட்டு ஓடின. முற்றத்தில் அமர்ந்திருந்த மக்களில் சிலர் இது என்ன குழப்பம் என ஒருவரை ஒருவர் கேட்டுக் கொண்டு என்ன விஷயம் என்று பார்க்க அங்கே ஓடி வந்தனர்.

Friday, April 17, 2015

கண்ணனும், பலியாவும்!

தன் மாளிகைக்குத் திரும்பிய பீமன் சத்தமில்லாமல் தன் படுக்கையில் விழுந்து தூங்குவது போல் நடிக்க ஆரம்பித்தான்.  ஏற்கெனவே பொழுது புலரும் நேரமாகி இருந்தது. சிறிது நேரத்தில் அவன் தம்பிகள் மூவரும் கங்கையில் குளித்துத் தங்கள் நித்திய கர்மானுஷ்டானங்களை முடித்து வரக் கிளம்புவார்கள். அவர்களுடன் அவனும் கிளம்பியாக வேண்டும். அவ்வண்ணமே நடந்தது. அப்போது தான் தூக்கத்திலிருந்து எழுந்தாற்போல் நடித்த பீமன் தன் தம்பிகளுடன் தானும் கங்கைக்குச் செல்லச் சேர்ந்து கொண்டான். அவன் நோக்கம் எப்படியானும் கிருஷ்ண வாசுதேவனைச் சந்திக்க வேண்டும். அதுவும் தனியாக!  ஆனால்! கிருஷ்ணன் என்னவோ கங்கையில் தன் கடமைகளைச் செய்து கொண்டு தான் இருந்தான். ஆனால் அவனுடன் பேச முடியாமல் கூடவே உத்தவன், சாத்யகி,ஆகியோர் இருந்ததோடு அர்ஜுனனும் அவர்களுடன் போய்ச் சேர்ந்து கொண்டான்.

அவர்கள் தங்கள் சந்தியாவந்தனத்தை முடித்துக் கொண்டு சூர்ய நமஸ்காரமும், சூரியனுக்கு அர்க்யமும் விட்டுக் கொண்டிருந்த போது பக்கத்துப் படித்துறைகளில் ஆங்காங்கே குளித்துக் கொண்டிருந்த பொதுமக்கள் கிருஷ்ணன் அங்கே இருக்கும் செய்தி தெரிந்ததும் கூட்டமாக வந்து அவனை மொய்த்துக் கொண்டார்கள். அவன் தரிசனம் கிடைத்தாலே போதும் என்று பலர் காத்துக் கொண்டிருந்து அவன் தரிசனத்திலேயே மகிழ்ந்தனர். ஆகவே நதிக்கரையில் கிருஷ்ணனோடு தனித்திருக்க இயலாத பீமன் கிருஷ்ணன் தனக்கு ஒதுக்கி இருக்கும் மாளிகைக்குச் செல்கையில் அவனுடன் கூடவே சென்றான்.  ஆனால் துரதிருஷ்டவசமாக அதன் முற்றம் முழுவதும் மக்கள் நிரம்பிக் கிருஷ்ணனிடம் தங்கள் குறைகளையும், நிறைகளையும் சொல்வதற்கெனக் காத்திருந்தனர். தங்கள் குழந்தைகளை கிருஷ்ணன் கையில் கொடுத்து ஆசீர்வாதம் பெற்று வாங்கவெனக் காத்திருந்த பெற்றோர் பலர். திருமணத்திற்கென ஆசீர்வாதம் பெறக் காத்திருந்தோர் பலர். கிருஷ்ணன் ஒவ்வொருவரையும் கவனிக்க ஆரம்பித்தான்.

சில குழந்தைகளின் தலையைத் தடவியும், சில குழந்தைகளின் முதுகில் தட்டிக் கொடுத்தும், சில குழந்தைகளின்  முகவாயைத் தொட்டுக் கொஞ்சியும் தன் மகிழ்ச்சியையும் ஆசிகளையும் கிருஷ்ணன் தெரிவித்தான். அப்படிக் கிருஷ்ணனால் கவனிக்கப்பட்டவர்கள் தாங்கள் மிக அதிர்ஷ்டம் வாய்ந்தவர்களாக எண்ணினார்கள். ஆண்கள் தங்கள் துணைவிகளையும், பெண்கள் தங்கள் கணவன்மாரையும், திருமணமாகாதோர் தங்கள் பெற்றோரையும் பார்த்துத் தங்கள் மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொண்டனர். அவன் கண் பார்வை பட்டாலே போதும் என்று காத்திருந்தனர் பலர். கிருஷ்ணன் தங்களைப் பார்த்துச் சிரித்தாலே தாங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்களாக அவர்கள் எண்ணிக் கொண்டனர்.

ஆஹா! இவன் இவ்வளவு விலை மதிக்க இயலாத சகோதரனாக ஆகிவிட்டான். மிகவும் முக்கியத்துவம் பெற்றவனாக மாறி விட்டான். தன்னை இத்தனை மனிதர்கள் சூழ்ந்து கொண்டு தனக்கு முக்கியத்துவம் தருவதை ரசிப்பவனாகவும் தெரிகிறது.  ஆனால் இதை இப்படியே விட முடியாது.எப்படியும் இவனை நான் தனியே சந்தித்தே ஆகவேண்டும்; இல்லை எனில் எவ்வாறு இவனை பலியாவும் மல்யுத்த மைதானத்தின் பக்கம் வரவழைப்பது! அதுவும் நடு இரவில் வரவைக்க வேண்டுமே! யோசித்த பீமனுக்குள் ஏதோ பளிச்சிட்டது. உடனே கோபுவை அனுப்பி அவன் பாட்டன் பலியாவை அழைத்து வரச் சொன்னான்.

பலியாவின் மகன் சோமேஸ்வர் தன் தகப்பனை அவன் வண்டியில் வைத்துத் தள்ளிக் கொண்டு வந்தான்.  அந்த இடத்துக்கு அவர்கள் வருகையிலேயே மக்கள் அவர்களைப் பார்த்து அடையாளம் கண்டுகொண்டு தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள். ஒரு காலத்தில் பிரபல மல்லனாக அனைத்துத் தரப்பையும் கவர்ந்தவனாக இருந்த பலியாவைப் பார்த்ததும் பலருக்கும் அவனுடைய மல்யுத்தப் போட்டிகள் எல்லாம் நினைவில் வந்து மோதின. இப்போதும் அதை விடாமல் தன் மகனுக்குப் பயிற்சி அளித்து ஹஸ்தினாபுரத்தின் சிறந்த மல்லனாக ஆக்கி இருப்பதையும் நினைவு கூர்ந்து இருவரையும் ஒருசேரப் பார்த்ததில் மக்கள் அனைவரும் கரகோஷம் செய்து தங்கள் மகிழ்வை வெளிப்படுத்தினார்கள்.  பலியாவின் வண்டி வருவதைப் பார்த்த பீமன் கிருஷ்ணனோடு தான் அமர்ந்திருந்த இடத்திலிருந்து இறங்கிக் கீழே சென்று பலியாவின் வண்டி முன்னேறி வர வழி செய்து கொடுத்தான்.

அதற்குள் அவர்கள் வருவதைப் பார்த்த கிருஷ்ணன் தன் இருக்கையிலிருந்து எழுந்து தன் கிரீடத்தையும் தலை உருமாலையும் சரி செய்தவண்ணம் கீழே இறங்கி பலியாவை நோக்கிச் சென்றான். கிருஷ்ண வாசுதேவனைப் பார்த்த பலியா பேச்சிழந்து போனான்.  அந்த வண்டியிலிருந்து அப்படியயே குனிந்து தன் கரங்களால் கிருஷ்ணனின் பாதத்தைத் தொட்டுக் கொண்டு கண்களில் வைத்த வண்ணம் கிருஷ்ணனின் கரங்களைத் தன் கரங்களால் எடுத்துத் தன் கண்களில் வைத்துக் கொண்டான். கிருஷ்ணனின் கரங்கள் நனைந்தன. ஆம், பலியாவின் கண்கள் கண்ணீரால் குளம்போல் நிறைந்திருந்தன.

அவன் தோள்களில் தட்டிக் கொடுத்த கிருஷ்ணன், “பாஹுபலி, மல்லர்களில் சிறந்த மல்லனே!  நீ ஏன் இவ்வளவு உன்னைச் சிரமம் செய்து கொண்டு என்னைப் பார்க்க வந்திருக்கிறாய்? என்னைப் பார்க்க வருவதற்கு நீ உன்னையே கஷ்டப்படுத்திக் கொண்டிருக்கிறாயே? நானே உன் மல்யுத்தக் களத்திற்கு வந்து உன் வீட்டிற்கும் வந்து உன்னைக் காணவேண்டும் என்றிருந்தேன். ஓரிரு நாட்கள் சென்றதும் நானே வந்திருப்பேனே! எவராலும் வெல்ல முடியாத மல்லன் அல்லவோ நீ! வயதிலும் மூத்தவன் அன்றோ! உன்னை நான் அல்லவோ உன் இடத்திற்கு வந்து மரியாதை செலுத்திப் பார்க்க வேண்டும்! நீ ஏன் வந்தாய்?” என்று கேட்ட வண்ணம் அவனை அப்படியே அணைத்துக் கொண்டான்.

அதற்குள்ளாக பீமன் ஜாடை காட்ட சோமேஸ்வரும், கோபுவும் கிழவனை வண்டியிலிருந்து தூக்கிக் கிருஷ்ணன் காட்டிய ஆசனத்தில் அமர வைத்தனர். கிருஷ்ணனின் அன்பில் நெகிழ்ந்து போயிருந்த பலியா, மீண்டும் கிருஷ்ணனின் கால்களைத் தொட்டுத் தன் கண்களில் வைத்துக் கொண்டான். “பிரபுவே! நீங்கள் மல்லர்களில் ஓர் ரத்தினம் அன்றோ! உம்மை யாரால் வெல்ல முடியும்? “ என்று சொல்லிய வண்ணம் மீண்டும் மீண்டும் கிருஷ்ணனின் கால்களைத் தொட்டுத் தொட்டு வணங்கினான். “பின்னர் நீ ஏன் இவ்வளவு கஷ்டம் ஏற்படுத்திக் கொண்டு என்னை வந்து பார்க்கிறாய்? அதற்குக் காரணம் என்ன?” என்று கேட்டான் கிருஷ்ணன்.

“பிரபுவே, நான் மல்யுத்தத்திற்கும் அதன் சிறந்த வீரர்களுக்கும் ஓர் பணிவான பக்தன். ஐயா, உமக்குப் பதினைந்து பிராயமே ஆகி இருக்கையில் நீர் கம்சன், சாணூரன் போன்ற மல்லர்களை வென்றதை இந்த ஆரிய வர்த்தமே அறியும். அப்படிப்பட்ட சிறந்த மல்லனாகிய உம்மை நான் பார்க்க வேண்டும் என விரும்பியது தவறில்லையே! என் வாழ்நாளில் ஒரு முறையாவது உம்மைப்பார்த்துவிட வேண்டும் என்னும் ஆசையில் இருந்தேன். உம்மை இதோ, இப்போது நேரில் பார்த்ததும் எனக்கு என் ஜன்மம் சாபல்யம் அடைந்து விட்டதாக எண்ணுகிறேன்.”

Tuesday, April 14, 2015

பற்றியது நெருப்பு!

“உலகத்து நாயகியே, அம்மா! முக்காலமும் உணர்ந்தவளே!
பூவுலகில் உயிர்கள் வாழ்வது உன் கருணையினாலன்றோ!
நீயே அனைவரின் உயிரின் சூத்திரதாரியாவாய்!
பூரண சந்திரனைப் போன்ற சிவந்த அழகான முகமுடையவளே!
உன் கருணைக்கண்களால் நல்லோரைக்காக்கும் நீ அதே கண்களால் ரௌத்திரத்தைக் காட்டி தீயோரை வதைக்கிறாய்!
தாயே, நீயும் மகிழ்ந்திடுவாய்! மகிழ்ந்திடுவாய்!

தாயே, மூவுலகையும் படைத்தவளே! நீயன்றோ பூத, பிசாசுகளைக் கட்டி ஆள்கிறாய்! அவற்றை உன் வலிமையால் அடக்குகின்றாய்!
தாயே! உன் தரிச்னம் கிடைக்க நாங்கள் என்ன தவம் செய்தோம்!
எங்களை ஆசீர்வதிப்பாய்!
உன்னைக்காண வேண்டி தவம் இருக்கும் ரிஷி, முனிவர்களை விட
உன் கருணை மழை எங்கள் மேல் பொழிந்தது!
உன் தரிசனம் எவருக்கும் கிடைகாத ஒன்று எங்களுக்குக் கிடைத்தது!
தாயே, எங்கள் துதியால் நீயும் மகிழ்ந்திடுவாய்! மகிழ்ந்திடுவாய்!

(பாடலை அப்படியே மொழிபெயர்க்காமல் எனக்குத் தெரிந்த அளவில் கொடுத்திருக்கிறேன்.)
துஷ்சாசனனும், ஷகுனியும் அதை அப்படியே எதிரொலித்தனர். பின்னர்  அகோரி அவர்களைப் பார்த்து, “தேவி மாதாவிடம் உங்களுக்கு என்ன வேண்டுமோ அதைக் கேட்டுப் பெறுங்கள்!” என்று ஆணையிட்டான். உடனே மிகவும் பக்தியில் ஆழ்ந்து போன பாவனையுடன் துஷ்சாசனன் தன் இரு கரங்களையும் கூப்பிய வண்ணம், கீழ்க்கண்டவாறு கூறினான்:
“தாயே, எங்களுக்கு இந்த வரத்தை கொடுத்து விடு அம்மா!  மூன்று பேரின் மரணத்தை நாங்கள் வேண்டுகிறோம்.  அதுவும் அடுத்த பௌர்ணமிக்குள்ளாக நடக்க வேண்டும்.” என்றான்.

“யார் அவர்கள்?” எனக் குரல் கேட்டது.

இங்கே ஒளிந்திருந்த பீமனுக்கு ஆச்சரியத்துக்கும் மேல் ஆச்சரியம் தன் கண்களை நன்கு துடைத்துக் கொண்டான். பின்னர் மீண்டும் பார்த்தான். அவனுக்குத் தான் தூக்கத்தில் துர் சொப்பனம் ஏதும் காணவில்லை என்பது நன்கு புரிந்தது. “யார் அவர்கள்?” என்று கேட்ட குரல் அந்தக் காடு முழுவதும் பரந்து எதிரொலித்தது கேட்கவே மிகப் பயங்கரமாக இருந்தது.  அகோரியோ தன் சூலத்தை மீண்டும் அவ்விருவர் முன்னும் ஆட்டினான். அவர்கள் இருவரின் கண்கள் மிகவும் விரிந்து திறந்து ஒரே இடத்தில் நிலை கொண்டிருந்தன.  அதைப் பார்த்தால் அங்கே தேவி மாதா நின்று கொண்டிருக்கிறாள் என்றும் இருவரும் அவளையே பார்த்தபடி இருக்கிறார்கள் என்றும் புரிந்து கொள்ளும் மாதிரியில் இருந்தது.

“நாங்கள் ஷாந்தனுவின் மகனான காங்கேயனின் மரணத்தை விரும்புகிறோம். அவனை பீஷ்மன் என்றும் அழைக்கின்றனர். “ என்றான் துஷ்சாசனன். அப்போது சிரிப்பொலி கேட்டது.  மயிர்க்கூச்செறியும் சிரிப்பொலி! அதைக் கேட்கும்போதே அனைவரின் முதுகுத் தண்டும் சில்லிட்டது. பின்னர் மீண்டும் அதே குரல்! “பீஷ்மனா? அவன் சுத்தமான ஒழுங்கான வாழ்க்கையன்றோ வாழ்ந்து வருகிறான்.  எப்போதும் எந்த நேரமும் தர்மத்தைத் தான் கடைப்பிடிக்கிறான்.  அதைத் தவிர வேறு சிந்தனை இல்லை அவனுக்கு. காட்டில் தவம் செய்யும் ரிஷி, முனிவர்களைக் காட்டிலும் இவனுடைய தவ ஒழுக்கம் மிகவும் மேன்மையானது; அவர்களை விடக் கடுமையான தன்னொழுக்கத்தையும் கடைப்பிடிக்கிறான். காம, க்ரோதங்களை அடக்குவதில் வல்லவன்.  அவனுக்கு எங்கள் வரம் உண்டு.  அவனுக்கு எப்போது விருப்பமோ அப்போது தான் அவன் தன் முன்னோர்களைச் சென்றடைவான்.”

“அப்படி எனில், மாதாவே, கிருஷ்ண வாசுதேவன்? அவன் உயிரை அடுத்த பௌர்ணமிக்குள் எடுத்துவிட இயலுமா? அவன் செத்தே ஆக வேண்டும்!”

“ஆஹா! அவன் தெய்விகமான ஒரு வேலையைச் செய்து முடிக்கவென்றே பிறந்தவன். தேவ தூதன் அவன்! அவனுடைய வேலை முடியாமல் அவனாக நினைத்தாலும் உயிரை விட முடியாது. அப்படி இருக்கையில் அவன் உயிரை எங்கனம் வாங்குவது? முடியாது! முடியவே முடியாது!”

சற்று நேரம் அமைதி! அகோரி எரிகின்ற நெருப்பில் மேலும் கட்டைகளைப் போட்டு நெய் வார்த்தான். குண்டத்தில் தீ பெரியதாக எரிந்தது. என்ன செய்வதெனத் திகைத்த துஷ்சாசனன் கடைசியில் மனதை திடப்படுத்திக் கொண்டு, “தேவி மாதா! குறைந்த பட்சமாக அந்த மூன்றாவது ஆளின் உயிரையாவது உன்னால் எடுக்க முடியுமா? அதற்கு உதவ இயலுமா? எங்களிடம் கருணை காட்டு! இவன் உயிரையாவது முடித்து விடு!” என்று மிகப் பணிவாக இறைஞ்சினான். அவன் மனதில் பொங்கிய வெறுப்பை அவன் குரலால் மறைக்க இயலவில்லை. துஷ்சாசனனின் இந்த வேண்டுகோள் பீமன் காதில் பட்டதுமே நம் மரணம் வெகு தூரத்தில் இல்லை; எனப் புரிந்து கொண்டான். ஏனெனில் அவன் தாத்தா பீஷ்மர் மாதிரி நினைத்த போது சாகலாம் என்னும் வரமோ அல்லது வாசுதேவக் கிருஷ்ணனைப் போல் தெய்விக தேவ தூதனாகவோ வந்து பிறக்கவில்லை.

பீமன் மனதில் பயம் தலை தூக்கியது. தனியாக இங்கே வந்து மாட்டிக் கொண்டோமே என நினைத்தான். எப்படியாவது தன் பெயரை துஷ்சாசனன் சொல்லித் தனக்கான மரணத்தை அவன் வேண்டுவதை நிறுத்தியே ஆக வேண்டும். என்ன செய்யலாம். சுற்றும் முற்றும் பார்த்தவன் அங்கே அந்தக் குடிலைத் தாங்கிக் கொண்டு காணப்பட்ட மூங்கில் கொத்தை அப்படியே தன் இருகரங்களால் வேரோடு பிடுங்கி அந்த மூவரும் அமர்ந்திருந்த பக்கமாய்த் தள்ளினான்.  அது பெரும் சப்தத்தோடு அகோரி, ஷகுனி, துஷ்சாசனன் மூவர் மேலும் விழுந்தது. மூங்கில் கொத்தைப் பிடுங்கிய வேகத்தில் அது தாங்கிக் கொண்டிருந்த அந்தக் குடிலும் விழ ஆரம்பித்தது. குடில் நேரே அகோரியின் தலை மீது போய் விழுந்தது. அதன் இரு பக்கச் சுவர்களும் கூடவே பெயர்ந்து ஷகுனியின் மேலும், துஷ்சாசனன் மேலும் விழுந்தது. காய்ந்த புற்களால் வேயப்பட்ட அந்தக் குடிசையின் கூரையும், சுவரும் விழுந்ததும் உடனே அவற்றில் நெருப்புப் பிடித்துக் கொண்டு அகோரியின் தாடியும், அவன் உடலிலும் தீப்பற்றிக் கொண்டது. அதுவரை மயக்கத்தில் இருந்த ஷகுனியும், துஷ்சாசனனும் நெருப்பின் வெம்மை பட்டு விழித்துக் கொண்டனர்.  என்றாலும் இருவருக்கும் எதுவும் புரியவில்லை.

அவர்கள் முன்னே பெரு நெருப்புக்கொழுந்து விட்டு எரிவதையும், அதில் அந்த அகோரியும் எரிந்து கொண்டிருப்பதையும் கண்டார்கள்; திகைத்தார்கள். தாங்களும் நெருப்பில் மூழ்கிவிடுவோம் எனத் தாமதமாகப் புரிந்து கொண்டாலும் புரிந்த உடனே அவர்கள் தங்கள் மேல் காணப்பட்ட புற்களை வேகமாக அகற்றிவிட்டு அந்த இடத்தை விட்டு எழுந்தனர். அப்போது எவரோ பயங்கரமாகச் சிரிக்கும் சப்தம் கேட்டது.  அந்தக் குரல்! இத்தனை நேரம் கேட்டுக் கொண்டிருந்த தேவி மாதாவின் குரல் இல்லை; நிச்சயமாய் அது இல்லை! ஆனால் எவரோ சிரிக்கின்றனர்! யாராக இருக்கும்? இருவருக்கும் கிலி பற்றிக் கொள்ள அந்த இடத்தை விட்டு வேகமாய் நகர்ந்தனர்.  நகர்ந்தவர்கள் சற்றுத் தூரம் போனதும் உடனே ஓட்டம் பிடித்தனர்.  நதிக்கரையை நோக்கி ஓடினார்கள்.

அவர்கள் வந்த படகு தண்ணீரில் மிதக்கும்வரை அவர்களுக்குப் பொறுமை இல்லை;  இருவர் நெஞ்சிலும் அச்சம் மிகுந்திருந்தது.  கடவுளர் அவர்கள் மேல் கோபமாக இருக்கின்றனர்.  அதன் விளைவு தான் இந்தத் தீப்பிடித்தல். இருவரும் படகுக்குக் கூடக் காத்திருக்காமல் தங்களை எவரோ துரத்துவது போல் ஓடும் நீரில் குதித்து அக்கரைக்கு நீந்தினார்கள்.  இங்கே அகோரியின் குடிசை வாயிலில் பீமன் பார்த்துக் கொண்டே இருந்தான். அகோரி எதற்கும் கலங்கவில்லை. நெருப்பை அணைக்க எந்த முயற்சியும் செய்யவில்லை. தன்னையும் காத்துக்கொள்ளவில்லை. எந்தவிதமான பயத்துடன் கூடிய அலறலோ புலம்பலோ அவன் வாயிலிருந்து வரவில்லை.  மாறாக,”தெய்வீக அன்னையே! என்னை எடுத்துக் கொள்! உன்னிடம் சேர்த்துக் கொள்! நான் உன் குழந்தை, என்னை எடுத்துக் கொள்!” என்றே பிரார்த்தித்த வண்ணம் இருந்தான்.

பீமன் தன்னுடன் வந்த ஒற்றனைத் திரும்பிப் பார்த்தான். அவன் தோள்களில் நட்பாகக் கைபோட்டு அணைத்துக் கொண்டான்.” நண்பா, என்னுடைய கேள்விக்கு நீ பதிலே சொல்லவில்லை. நான் உன்னிடம் கேட்டது என்னவெனில் ரேகாவுடன் வந்த அந்த இளம்பெண் யார் என்று தான்! அதற்கு பதில் சொல்!” என்றான்.

“என்னால் நிச்சயமாய்ச் சொல்ல முடியவில்லை! பிரபுவே! ஆனால் அவள் சேடிப்பெண் இல்லை என நிச்சயமாய்த் தெரியும்; அவள் அந்த மல்லர் குடியைச் சேர்ந்தவளும் இல்லை; அவள் நடை, உடை, பாவனைகளிலிருந்து யாரோ இளவரசியைப் போல் காணப்பட்டாள்.”

“அவள் யாராக இருக்கும் என நீ நினைக்கிறாய்? உண்மையைச் சொல்!”

“ஐயா, அவள் காசிதேசத்து இளவரசியாக இருக்கலாம்; எனக்கு நிச்சயமாய்த் தெரியாது. துரியோதனன் மனைவி பானுமதியின் தங்கை வந்திருப்பதாகச் சொல்கின்றனர். அவளாக இருக்கலாம்.”

“ஆஹா, உனக்கு இவ்வளவெல்லாம் தெரிந்திருக்கிறதே!” என்றான் பீமன்.

பீமன் சொல்வதை முழுதும் புரிந்து கொள்வதற்குள்ளாக அந்த ஒற்றனின் முகத்தில் பீமனின் முஷ்டி பாய்ந்து விட்டது. அவன் வாயில் பற்கள் உடைபடும் சப்தம் கேட்டது. அவன் முகத்திலிருந்து ரத்தம் ஒழுக ஆரம்பிக்க அவன் கட்டையைப் போல் கீழே விழுந்தான்

Monday, April 13, 2015

கயிலாயத்தில் ஷகுனியும் துஷ்சாசனுமா???? திகைப்பில் பீமன்!

“ஆஹா! ஆஹா! அந்தச் சிகரங்கள் அனைத்தும் நம் கால்களுக்குக் கீழே! எவருமே நுழைய முடியாத அடர்ந்த காடுகள்! எத்தனை விதப் பூக்கள்! நீரோட்டைகள்! அங்கிருந்து வீசும் காற்றின் ஒலி இதோ கேட்கிறதே! விர், விர்ரென வீசும் காற்றின் ஒலி!” என்று சொன்னவாறே அதன் ஆனந்தத்தில் அமிழ்ந்து போனான் ஷகுனி. துஷ்சாசனனோ, “மரங்களின் உச்சிகள் அனைத்தும் தேர்ந்த நடனக்காரியைப் போல் எப்படி ஆடுகின்றன!” என வியந்த வண்ணம் பார்த்தவன், “அதிசயம்! அதிசயத்திலும் அதிசயம்! இது என்ன? நாங்கள் இருவருமே மேகக் கூட்டங்களிடையே புகுந்து செல்கிறோம் போல் தெரிகிறதே! நாங்கள் சொர்க்கத்தின் உச்சிக்கே வந்துவிட்டோமா? சொர்க்கத்தின் கதவுகளைத் தட்டிக் கொண்டிருக்கிறோமா? இது உண்மையா?” என்றெல்லாம் பரவசத்துடன் பிதற்றினான்.

“என்ன ஒரு அழகான காட்சியைக் கண்டு கொண்டிருக்கிறோம். பனி மூடிய மலைச்சிகரங்கள்! அடுக்கடுக்காகக் காணப்படுகின்றனவே! சிகரங்களின் உச்சிகள் அனைத்தும் தங்கத் தகடுகளால் மூடப்பட்டிருப்பது போல் காண்கின்றன! அவை நீள, நெடுகப் பரந்திருக்கின்றன! இந்த உலகின் கடைக்கோடி வரை இந்தச் சிகரங்களே படர்ந்திருக்கின்றனவோ?”

“ஆஹா! அதோ ஒரு சிகரம்! எல்லாவற்றையும் விட உயர்ந்து ஓங்கி விண்ணைத் தொடும் உயரத்தில் ஒரு சிகரம்! அது ஒரு லிங்கம் போன்ற அமைப்புடன் காணப்படுகிறதே! அதன் மேலெல்லாம் தங்கத்தை வேய்ந்தது போன்ற தோற்றம். தங்கத்தை உருக்கி ஊற்றி இருக்கின்றனரா? “ என்று வியந்து பேசினான் ஷகுனி.

அப்போது அந்த அகோரி, “அது தான் திருக்கயிலைமலை! அங்கே தான் எல்லாம் வல்ல மஹாதேவனும், அவனுடைய அம்பிகையுமான மாதா காளி, துர்கா மாதா, உமா தேவி என்றெல்லாம் போற்றத் தக்கவள் இருக்குமிடம். நீங்கள் இருவரும் மிகவும் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறீர்கள்.  இல்லை எனில் இந்த மலையையோ, இந்தச் சிகரத்தையோ காண முடியாது. புனிதத்திலும் புனிதம் வாய்ந்த இந்தக் கயிலையைத் தரிசிக்கும் பேறு பெற்றிருக்கிறீர்கள். உங்கள் ரதத்தை விட்டுக் கீழே இறங்குங்கள். பிறப்புக்கும், இறப்புக்கும், படைப்புக்கும், அழிவுக்கும் காரணமான அந்த சர்வ வல்லமை படைத்த மகேசனையும் அவன் தேவியையும் கீழே விழுந்து சாஷ்டாங்கமாக வணங்குங்கள். உங்கள் இருவருக்கும் அவர்கள் தரிசனம் கொடுக்க வேண்டும் எனப் பிரார்த்தியுங்கள்.” என்று கூறி இருவரையும் வணங்க வைத்தான் அகோரி.

“ஆம், ஐயா, நாங்கள் ரதத்திலிருந்து இறங்கி ஈசனையும், தேவியையும் பிரார்த்தித்துக் கொண்டிருக்கிறோம். எங்களைச் சுற்றிக் கொண்டு மேகங்கள் செல்கின்றன. அங்குமிங்கும் வேகமாக நகர்கின்றன.” என்றான் ஷகுனி. அப்போது மிகவும் அடங்கிய குரலில் துஷ்சாசனன், “அதோ! மகேசன்!, அதோ தேவி துர்கா மாதா! ஒரு சமயம் அருள் பார்வையும் ஒரு சமயம் கோபப்பார்வையும் பார்க்கும் காளியாகவும் காட்சி தருகிறாள். ஆம்! அதோ பாருங்கள்!” என்றான்.

“ஆஹா! நாங்கள் ஆசீர்வதிக்கப்பட்டோம். தன்யன் ஆனோம். தெய்விகத் தம்பதிகளான பார்வதியும், பரமேஸ்வரனுமே எங்களுக்குக் காட்சி கொடுக்கின்றனர். அம்மையே, அப்பனே, நாங்கள் எங்கள் பணிவான நமஸ்காரங்களை உங்களுக்குச் சமர்ப்பிக்கிறோம். தயவு செய்து எங்களை ஆசீர்வதியுங்கள். உங்கள் கருணையை எங்களுக்கு வர்ஷியுங்கள்!” என்று வேண்டினான் ஷகுனி.

அப்போது எங்கே இருந்தோ ஒரு குரல், மிக மிக ஆழத்திலிருந்து பேசுவது போன்ற தொனியில், “என்ன வேண்டும் உனக்கு?” என்று கேட்டது. ஆழத்திலிருந்து பேசுவது போல் தோன்றினாலும் அதன் தொனி உரத்து எதிரொலிக்கவே அது மூவுலகையும் நிறைப்பது போல் தோன்றவே அதிர்ந்தார்கள் மாமனும், மருமகனும். அந்த மலைச் சிகரங்களிலும், அடர்ந்த காட்டுக்குள்ளும் அந்தத் தொனி எதிரொலித்துக் கொண்டிருந்தது. சிறிது நேரம் வரை யாரும் எதுவும் பேசமுடியாமல் அந்தத் தொனியே கேட்டுக் கொண்டிருந்தது. துஷ்சாசனனுக்கு அது இடியோசை போல் கேட்டது. தன் தலையை உலுக்கிக் கொண்டான். தான் காண்பது கனவாக இருக்குமோ என்னும் எண்ணத்தில் இருந்தவன் தன்னைத் தானே உலுக்கிக் கொண்டும் பயனில்லை.

தன்னை எவராலும் வெல்ல முடியாது என நினைத்துக் கொண்டிருந்த துஷ்சாசனன் இப்போது தன் இதயம் பயத்திலும், அதிர்ச்சியிலும் துடிப்பதை உணர்ந்தான்.  வேகமாக அவன் இதயம் துடித்தது. அதை அதிகரிக்கும் விதமாக இப்போது துர்கா மாதாவின் குரல் கேட்டது. “என்ன வேண்டும் உனக்கு?” இதைக் கேட்டது சர்வ வல்லமை படைத்த அந்த தேவி என்பதை உணர்ந்த துஷ்சாசனன் இன்னும் அதிர்ச்சி அடைந்தான். அப்போது அகோரி அவர்களைப் பார்த்து, “நான் இப்போது சொல்லப் போகும் இந்த பக்திப்பாடலை இருவரும் சேர்ந்து சொல்லுங்கள். அல்லது ஈசன் தன் மூன்றாவது கண்ணான நெற்றிக்கண்ணைத் திறந்துவிட்டால் அனைவரும் சாம்பலாகி விடுவோம்.” என்றான்.  இருவரும் நடுங்கினார்கள். அகோரி பாட ஆரம்பித்தான்:

மூவுலகுக்கும் தலைவனே,
படைத்தல், காத்தல், அழித்தல் என்னும் தொழில்களின் முதல்வனே!
பிரபஞ்சத்தையே ஆட்டி வைக்கும் உன்னுடைய நடனத்தில்
நீ ஓரடி எடுத்து வைத்ததுமே
இந்தப் பிரபஞ்சம் உருவாகிறது: பஞ்சபூதங்கள் தோன்றுகின்றன!
அந்த இடைவிடா நடனத்தின் இன்னொரு அடியிலோ
இந்தப் பிரபஞ்சம் அழிந்து சாம்பலாகி விடுகிறது!
ஐயனே! எங்கள் இந்தத் துதியால் நீ மகிழ்ந்து விடு! மகிழ்ந்து விடு!

ஷகுனியும் துஷ்சாசனனும் ஒரு வார்த்தை விடாமல் திரும்பச் சொன்னார்கள்.

ஐயனே! சர்வ வல்லமை பொருந்தியவனே! எங்கள் இறைவனே! மூத்தவனுக்கும் மூத்தவனே!
உன்னுடைய இடைவிடா நடனமானது அண்ட பகிரண்டங்களையும் விரிவாக்குகிறது.
ஆகாயத்தில் ஒளிரும் நக்ஷத்திரங்கள், சூரிய, சந்திரர்கள், ஒன்பது கிரஹங்கள் அனைத்தும் உனக்குக் கட்டுப்பட்டு உன் வலிமையில் அடங்கி இருக்கின்றனர்! இவர்கள் மட்டுமா? தேவாதி தேவர்களும் கூட உன் வலிமைக்கு அடங்கியவர்களே!
ஐயனே! எங்கள் இந்தத் துதியால் நீ மகிழ்ந்து விடு! மகிழ்ந்து விடு!

இருவரும் இதை அப்படியே எதிரொலிக்க இப்போது தேவியைக் குறித்துப் பாட ஆரம்பித்தான் அகோரி.

Friday, April 10, 2015

பேரானந்தத்தில் மூழ்கிய பகைவர்! திகைப்பில் மூழ்கிய பீமன்!

சற்று நேரம் மூவரிடமும் பேச்சே இல்லை. மௌனம் கோலோச்சியது. பின்னர் அந்த அகோரி துஷ்சாசனனைப் பார்த்து, “என்ன சொல்கிறாய்? உன் எதிரிகளை அழிக்க வேண்டுமெனில் நீ கைலை யாத்திரை செல்ல வேண்டும்.  அதற்கு வேண்டிய மனோதிடம் உன்னிடம் உள்ளதா? நீ செல்வாயா?” என்று கேட்டான். துஷ்சாசனன் தான் தைரியமாக இருப்பதாயும், போவதாயும் தெரிவித்தான்.

“ம்ம்ம்ம்ம்,,, அப்படி எனில் நீ காளிமாதாவைப் பார்க்க விரும்புகிறாயா? அவளைக் காணவோ அவளைக் கண்டு பயமில்லாமல் இருக்கவோ உன்னால் இயலுமா? பணிவுடன் அவளை வணங்கித் துதிப்பாயா?”

அதற்கும் சம்மதித்த அவர்கள் இருவரையும் கண்களை மூடிக் கொண்டு தேவியைத் துதிக்குமாறும், அவர்கள் நோக்கம் நிறைவேற வேண்டும் என்று பிரார்த்திக்குமாறும் அகோரி கூற, அவன் சொன்னதன் பேரில் இருவரும் அரை மனதாகத் தங்கள் கண்களை மூடினார்கள். பக்கத்தில் இருந்த அடுப்பில் கொதித்துக் கொண்டிருந்த கஷாயம் சுற்றுப்புறமெங்கும் தன் மணத்தைப் பரப்பிக் கொண்டிருந்தது. அதிலிருந்து கஷாயத்தை வெளியே எடுத்தான் அகோரி. மீண்டும் சில, பல மந்திரங்களை உச்சாடனம் செய்து கொண்டே அங்கே மயங்கிப் படுத்திருந்த குழந்தையின் அருகே சென்றான் அகோரி. குழந்தையின் குரல்வளையில் தன் கையிலிருந்த கத்தியால் ஒரு கீறு கீற ரத்தம் பீரிட்டது.  அந்த ரத்தத்தை அங்கே காட்சி தந்த காளிமாதாவுக்கு அர்ப்பணித்தான் அகோரி. அதன் பின் அருகிலிருந்த லிங்கத்தின் மேலே சில துளிகள் ரத்தத்தைத் தெளித்தான். பின்னர் அந்த ரத்தத்தால் தன் நெற்றியிலே நீண்டதொரு திலகம் இட்டுக் கொண்டு, எதிரே அமர்ந்திருந்த இருவரின் நெற்றியிலும் ரத்தத் திலகம் பதித்தான்.

இத்தனையும் செய்யும்போதும் அவன் மந்திர உச்சாடனம் தொடர்ந்து கொண்டே இருந்தது. பின்னர் வெளியே எடுத்த கஷாயத்தை முதலில் தான் கொஞ்சம் குடித்து விட்டுப் பின்னர் ஷகுனிக்கும், துஷ்சாசனனுக்கும் கொடுத்தான். அவர்களும் அதை வாங்கிக் குடித்தார்கள். இந்தக் கொடூரமான வெறுப்பூட்டும் நிகழ்ச்சியை ஒளிந்திருந்து பார்த்துக் கொண்டிருந்த பீமன் முழுக்க முழுக்கத் திகில் அடைந்திருந்தான். அவன் திகிலை அதிகப்படுத்துவது போல் கஷாயம் குடித்த ஷகுனி மற்றும் துஷ்சாசனன் இருவரின் கண்களும் விரிந்தன. வழக்கமான ஒன்றாக இல்லாமல் வித்தியாசமாகத் தெரிந்தன அந்தக் கண்கள். அதைக் கண்ட பீமனுக்கு மேலும் திகில் அதிகம் ஆனது. அந்த அகோரியோ நிதானமாக அவர்களிடம், “எப்படி இருக்கிறீர்கள்? எப்படி உணர்கிறீர்கள்?” என்று விசாரித்தான்.

“என் தலையே திரும்பிவிட்டாற்போல் உணர்கிறேன். என் முதுகுத் தண்டில் சில்லென்றிருக்கிறது.” என்று துஷ்சாசனன் சொல்ல, ஷகுனியோ, “என் கண்கள் முன்னே வண்ணமயமான வட்டங்கள் ஒளி வீசிப் பிரகாசிக்கின்றன.” என்றான். கஷாயம் தன் வேலையைத் தொடங்கி விட்டதை உணர்ந்தான் அகோரி. தன் திரிசூலத்தைக் கைகளில் எடுத்துக் கொண்டு அதன் நுனியால் இருவரின் நெற்றிப் பொட்டையும் தொட்டான் அகோரி. “என்ன பார்க்கிறாய்? அதைச் சொல் முதலில்! ஓர் ரதம் வருவது தெரிகிறதா?  அந்த ரதம் எதற்கென நினைக்கிறாய்? உன்னைக் காளிமாதாவிடம் அழைத்துச் செல்லத் தான் அந்த ரதம் வருகிறது. ரதத்தில் ஏறிக்கொள்ளுங்கள்.” என்றான் அகோரி.

சற்று நேரம் பேசாமல் இருந்த இருவரும் திடீரென, “ரதம் வந்துவிட்டது; வந்துவிட்டது!” என்று கூவினார்கள். அவர்கள் குரல் எங்கேயோ தூரத்திலுள்ள மலைக்குகைக்குள்ளே இருந்து பேசும் குரல் போல, அதன் எதிரொலி போலக் கேட்டது. பீமன் ஆச்சரியமாகக் கவனித்துக் கொண்டிருந்தான். அகோரி அவர்களிடம், “ஏறி அமருங்கள்! ரதத்தில் உட்காருங்கள். உங்கள் மனம் பூராவும் காளிமாதாவே நிரம்பி இருக்கட்டும்.  அவள் அருளையே வேண்டிப் பிரார்த்தித்த வண்ணம் ஆசனங்களில் அமருங்கள்.” என்று சொல்லிக் கொண்டே தன் திரிசூலத்தால் மீண்டும் அவர்கள் நெற்றியில் தொட்ட அகோரி அந்தத் திரிசூலத்தை அவர்கள் முன்னால் ஆட்டினான்.

“நீங்கள் வரவில்லையா?” என்று ஷகுனி வினவ, “நானும் உங்களுடன் வரப்போகிறேன்.  ஆனால் இந்த ரதத்தில் இல்லை. வேறொரு ரதத்தில்.” என்று சொன்னவண்ணம் அக்னி குண்டத்தில் இன்னமும் கட்டைகளைப் போட்டான் அகோரி. தூரக் குகைக்குள்ளிருந்து பேசும் அதே குரலில் துஷ்சாசனன், “ஐயா, ரதம் வேகம் எடுக்கிறது. மிக வேகமாய்ப் போகிறது.” என்று சொல்ல, ஷகுனியோ, “இந்த வேகத்தில் எனக்கு மூச்சுத் திணறுகிறது.” என்று சொன்னவன் பயத்தினால் நடுங்கிய வண்ணம் தன் தொண்டையில் கையை வைத்து அமுக்கிக் கொண்டான். அகோரி மீண்டும் சூலத்தை அவர்கள் கண்ணெதிரே ஆட்டினான். “இப்போது எப்படி உணர்கிறீர்கள்?” என்று கேட்க, துஷ்சாசனன் மிகவும் மகிழ்ச்சி நிரம்பிய குரலில், “ஆனந்தமாக உணர்கிறேன். இது தான் பேரானந்தம்! நாங்கள் மிகவும் வேகமாகப் பயணம் செய்கிறோம். எனக்கு மகிழ்வாக இருக்கிறது.” என்று சந்தோஷத்தை அனுபவித்த வண்ணம் கூறினான்.

ஷகுனியோ, “நாங்கள் மிக வேகமாகப் பயணம் செய்கிறோம் ஐயா! காற்று பலமாக வீசுகிறது.  காற்றின் குரல் வலுத்து இருக்கிறது.  அது “உர்ர்”என்ற சப்தத்துடன் வீசிக் கொண்டிருந்தது இப்போது ஊழிக்காற்றைப் போல வீசுகிறது. ஏதோ புயல் காற்று அடிக்கும் சப்தமாகக் கேட்கிறது.” என்றான். அகோரியோ விடாமல் தன் சூலத்தை அவர்கள் முன்னே மேலும், கீழும், பக்கவாட்டிலும் ஆட்டிக் கொண்டிருந்தான். “இப்போது எப்படி உணர்கிறீர்கள்?” என்றும் கேட்டான்.

“நாங்கள் மேலே, மேலே போய்க் கொண்டிருக்கிறோம். எங்கள் கால்களுக்குக் கீழே பூமி தெரிகிறது.” என்று துஷ்சாசனனும், ஷகுனியும் கூற சூலம் மேலும் மேலும் ஆட்டப்பட்டது. “எங்கள் கால்களுக்குக் கீழே இப்போது கங்கை தெரிகிறாள்.  அவள் நதியைப் போல் காணவில்லை. ஒரு கீற்றாகத் தான் தெரிகின்றாள்.” என்று ஷகுனி சொல்ல, துஷ்சாசனன், “ஆஹா, என்ன அற்புதமான காட்சி! நாங்கள் இப்போது மிக உயரமான மலைத் தொடர்களுக்கு வந்திருக்கிறோம்! ஆஹா! இவை தான் இமயமலைத் தொடர்களா? மலைகளின் சக்கரவர்த்தி இமயத்திடம் வந்து விட்டோமா?” என்று சொன்னான்.

Monday, April 6, 2015

துஷ்சாசனனின் விருப்பம்!

பீமன் பார்த்தபோது ஹோமகுண்டம் எதிரே அகோரி அமர்ந்து கொண்டு ஏதேதோ மந்திரங்களை உச்சரித்துக் கொண்டு தாந்த்ரீக முறையில் வழிபாடு செய்து கொண்டிருந்தான். நடுத்தர வயதுள்ள அவன் பார்ப்பதற்குத் தாடி, மீசையுடன் ஒரு மனிதக்குரங்கைப் போல் காட்சி அளித்தான். செக்கச் சிவந்த கண்கள்!  அதற்கேற்றாற்போல் தன் கன்னங்களையும் ஏதோ சிவப்பு வண்ணத்தினால் சிவப்பாக்கி இருந்தான். உடை ஏதும் அணியாமல் இருந்த அவன் பார்க்கவே பயங்கரத் தோற்றத்துடன் காட்சி அளித்தான். உடல் முழுவதும் சாம்பலைப் பூசி இருந்தான். அவன் அருகே இருந்த அடுப்பில் ஏதேதோ மூலிகைகள் போட்டதொரு கஷாயம் கொதித்துக் கொண்டிருந்தது. அந்த ஹோமகுண்டத்தைப் பார்த்த வண்ணம் துர்காதேவி பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்தாள். துர்கை கோர ஸ்வரூபத்தில் காட்சி அளிக்க, அருகே ஈசனின் லிங்க வடிவம் ஒன்றும் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்தது.

அந்த அகோரியின் மந்திர உச்சாடனம் அந்த இரவு வேளையில் பயங்கரமாக ஒலிக்க, அவன் வலப்பக்கம், துஷ்சாசனனும், அவன் அருகே காந்தார இளவரசனும், கௌரவாதியரின் தாய் மாமனுமான ஷகுனி அமர்ந்திருந்தான்.  ஆர்ய வர்த்தத்திலேயே மிகவும் கபடமும், சூழ்ச்சியும் நிறைந்தவன் என்று பேசப்படும் ஷகுனிக்கு இங்கு என்ன வேலை என பீமன் வியந்தான். மேலும் கண்களால் துழாவிய அவன் சட்டெனத் தூக்கி வாரிப் போட உற்றுக் கவனித்தான்.  ஆம் ஒரு குழந்தை அவர்கள் அருகே கிடந்தது.  அதைப் பார்த்தால் தானாக நன்றாய்த் தூங்குவது போல் தெரியவில்லை. மயக்கத்தில் ஆழ்த்தி இருக்க வேண்டும். தனக்கு இடப்பக்கமாய் அகோரி கையிலிருந்த சிவப்பு வண்ணப் பொடியால் மூன்று மனித உருவங்களை வரைந்தான்.

“பிரபுக்களே! யார் உங்கள் முதல் எதிரி? எவரை முதலில் கொல்ல வேண்டும்? யாருடைய சாவை உடனடியாக எதிர்பார்க்கிறீர்கள்?” என்று அவர்கள் இருவரையும் பார்த்து அகோரி தன் கடூரமான குரலில் கேட்டான். “அவன் எவ்விதம் இருப்பான் என வர்ணிக்கவும்!” என்றும் கட்டளை இட்டான். துஷ்சாசனன் அதற்கு, “முதல் மனிதன் மிகவும் வயதானவன்.  உயரமாகவும், நல்ல கட்டான உடல் அமைப்போடும், அதீத பலத்தோடும் காணப்படுவான்.  நீண்ட வெண் தாடி இருக்கும்.  அவன் பெயர் காங்கேயன்!” என்றான்.

“ஆ, அப்படியா? சரி! அவன் உடலோடு சம்பந்தப் பட்டுக் கொண்டிருக்கும் பொருள் ஏதானும் கொண்டு வந்திருக்கிறீர்களா? அது முக்கியம்!” என்றான் அகோரி.  உடனே துஷ்சாசன், “ஆம், ஐயா, இதோ அவன் தாடியின் ஒரு வெண்மையான நீண்ட மயிர்!  இது அவன் தாடியிலிருந்தே எடுக்கப்பட்டது!” என்ற வண்ணம் அதை அகோரியிடம் கொடுக்க அவன் அதைத் தான் வரைந்திருந்த முதல் உருவத்தின் மேல் வைத்தான். தன் திரிசூலத்தைக் கையில் எடுத்துக் கொண்டு, “ஓம், ஹ்ரீம், க்ரீம், ஜெய் காளி” என்று கூவிய வண்ணம் ஏதேதோ மந்திரங்களை உச்சாடனம் செய்த வண்ணம் சூலத்தைத் தலைக்கு மேல் ஓங்கிய வண்ணம் முதல் உருவத்தின் மார்பில் ஓங்கிக் குத்தினான். பின்னர் துஷ்சாசனனைப் பார்த்து, “அடுத்து?” என்று வினவினான்.

“இரண்டாவது ஆள் மிக வசீகரமானவன். பார்ப்பவர்களை எல்லாம் தன் பக்கம் கவர்ந்து இழுப்பான். மிக இளமையானவனும் கூட. இவனுக்கு தாடியோ, மீசையோ இல்லை. இவனும் வலுவானவனே! கறுத்த நிறம் இவனுக்கு மட்டும் எங்கிருந்தோ ஓர் பொலிவைக் கூட்டுகிறது. இவன் பெயர் கிருஷ்ண வாசுதேவன்.  இதோ அவன் சூடி இருக்கும் மாலையிலிருந்து ஒரு பூவை எடுத்து வந்துள்ளேன்!”

அகோரி அந்த வாடிய பூவைக் கையில் எடுத்துக் கொண்டு இரண்டாம் உருவத்தின் மேலே போட்டுவிட்டுத் தன் சூலத்தால் முன்னர் சொன்ன மாதிரி மந்திரங்களை உச்சரித்துக் கொண்டு ஓங்கிக் குத்தினான். “மூன்றாவது மனிதன் யார்?” என்று அகோரி வினவ, “ஓ, அவன் மிக உயரமானவன். பார்க்க ராக்ஷசன் போலிருப்பான். அதிகமாய்ச் சாப்பிடுவான்.  அதே சமயம் உடல் வலுவும் அதிகமாக இருக்கும் அவனுக்கு. அசாதாரணமான பலம் உள்ளவன். இவனும் இளைஞன் தான்! இதோ அவன் அரச விருந்தில் சாப்பிட்ட இலையில் மீதம் இருந்த சோற்றின் ஒரு சிறு உருண்டை!” அகோரி அந்தச் சோற்றுருண்டையை வாங்கி மூன்றாவதாக வரைந்த உருவத்தின் மேல் வைத்தான்.  இந்த மனிதத்தன்மையே இல்லாமல் கொஞ்சமும் குற்ற உணர்ச்சி இல்லாமல் செய்யப்படும் மாபெரும் துரோகத்தைப் பார்த்துக் கொண்டும் கேட்டுக் கொண்டும் இருந்த பீமனின் கண்கள் பிதுங்கி வெளியே வந்துவிடும் போல் இருந்தன.  எவ்வளவு மோசமாக அவர்கள் மனம் இருந்தால் இப்படி எல்லாம் நாம் சாகவேண்டும் என நினைப்பான்! கொஞ்சமும் நியாயமே இல்லாமல் நடந்து கொள்கிறானே! பீமன் துடித்தான்.

அவனுக்கு இருந்த வேகத்துக்கும், கோபத்துக்கும், உடனே அவர்கள் எதிரே குதித்து மூவரையும் கழுத்தை நெரித்துக் குரல்வளையை அமுக்கி விடலாமா என்று ஒரு கணம் யோசித்தான்.  அவன் யோசிக்கையிலேயே அந்த அகோரி பீமனாகக் கருதப்பட்ட உருவத்தின் மேல் சோற்றுருண்டையை வைத்துத் தன் சூலத்தால் ஓங்கிக் குத்தினான். இந்தச் சமயம் நாம் போனால் முழுவதும் பார்க்க முடியாது என்று பீமன் நினைத்ததோடு அல்லாமல், மேலே என்ன நடக்கும் என்று தெரிந்து கொள்ளும் ஆவலிலும் இருந்தான். இந்தக் கொடூரமான சடங்குகளின் முடிவு என்ன என்பதை அறிய விரும்பினான். ஆகவே தான் பொறுத்திருந்து முழுவதையும் பார்ப்பதைத் தவிர வேறு வழியில்லை என்ற முடிவுக்கும் வந்தான்.  அதற்குள்ளாக அகோரி தன் கண்களை மூடிக் கொண்டு ஆழ்நிலை தியான நிலைக்குப் போயிருந்தான். அவன் உடல் தூக்கித் தூக்கிப் போட ஆரம்பித்தது.

சில நிமிடங்கள் சென்ற பின்னர் தன் கண்களைத் திறந்தவன் துஷ்சாசனைப் பார்த்தான். எங்கோ கிணற்றுக்குள் இருந்து பேசுவது போன்றதொரு விசித்திரமான குரலில், “நான் இப்போது உன் குடும்பத்தின் இரு மனிதர்கள் இறப்பதைக் கண்டேன். “என்றவன் மீண்டும் தன் கண்களை மூடிக் கொண்டு அந்தக் காட்சியை மீண்டும் காண்பவன் போல் சிறிது நேரம் இருந்துவிட்டு, மறுபடி கண்களைத் திறந்து, “ஆம், இரண்டு பேர் தான்! அடுத்த பௌர்ணமிக்குள்ளாக இருவர் இறக்கப் போகின்றனர்.” என்று முடித்தான்.

“அவர்கள் யார் ஐயா?” என்று துஷ்சாசனன் கேட்க, மீண்டும் கண்களை மூடிய அகோரி, “அவர்கள் யார் என்பது தெரியவில்லை.  நீங்கள் இறக்கவேண்டும் என்று  விரும்பும் மூவரில் இருவரா என்பதும் தெரியவில்லை; ஆனால் இருவர் இறப்பார்கள்!” என்று சொன்னான். “ம்ம்ம்ம்ம், இவர்கள் மூவரும் இறந்து போகவேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம்.” என்று சர்வ சாதாரணமாக எவ்விதமான தயக்கமும் இல்லாமல் ஷகுனி கூற பீமனின் உடலில் ரத்தம் உறைந்தது. “என் தாய் காளியின் கைகளில் அவர்கள் உயிர் உள்ளது. இதில் நான் ஏதும் செய்ய முடியாது.  தீயவர்களை அழிக்கும் மஹாசக்தியான அந்தக் காளிதேவி தான் முடிவு செய்ய வேண்டும்.  அவளுடைய அதிகாரத்தில் தான் இது அடங்கும்.  அவள் தயவை நாடுங்கள்.” என்றான் அகோரி.

“நாங்கள் எவ்விதம் அவளுடைய அருளைப் பெறுவது?” என்று ஷகுனி கேட்க,
“நாங்கள் அவளை அணுக முடியுமா?” என துஷ்சாசனன் வினவினான். “அணுகலாம், முழு மனதுடனும், முழு நம்பிக்கையுடனும் நீங்கள் அவளை அணுகினால் அவள் அருள் உங்களுக்குக் கிட்டும்.” என்றான் அகோரி.

“ஐயா, அவளை அணுகி அவள் அருளைப் பெறும் வழியை எங்களுக்குக் காட்டுங்கள்!” என்று துஷ்சாசனன் கேட்க, “நீங்கள் அவளைச் சந்திக்க இமயம் போய் தவம் செய்ய வேண்டும். அவளால் தான் உங்கள் வாழ்க்கையின் சங்கடங்களைத் தீர்க்க முடியும். வேறு எவராலும் இயலாது. செல்லுங்கள்; அங்கே சென்று தவம் செய்யுங்கள்.  உங்களால் முடியவில்லை எனில் நான் ஏற்பாடுகள் செய்கிறேன்.” என்று கூறிய வண்ணம் மேலும் மேலும் கட்டைகளை அந்த ஹோமகுண்டத்தில் அகோரி போடத் தீ கொழுந்து விட்டு எரிந்தது.

Thursday, April 2, 2015

அகோரியின் குடிசையில் பீமன்!

பீமன் அந்த அறையை விட்டு வெளியேறினான்.  வெளியே பலியா இருந்த அறைக்கு அவன் வந்தான். அங்கே பலியாவின் மூத்த மகன் சோமேஷ்வர் ஜாலந்திராவைத் திரும்ப அழைத்துச் செல்லத் தயாராகக் காத்திருந்தான்.  பீமனுக்குத் தற்சமயம் உதவி ஆளாகச் சேர்ந்திருக்கும் கோபுவும் அங்கே காத்திருந்தான். அவன் பீமனுடன் பாண்டவர்கள் ஐவரும் தங்கி இருந்த மாளிகைக்குச் செல்ல வேண்டிக் காத்திருந்தான். வெளியே வந்த பீமன் பலியாவைப் பார்த்து, “நாளைக் காலை நான் என்னுடைய நித்திய கர்மானுஷ்டானங்களை முடித்துக் கொண்டு கிருஷ்ணனுடன் இருப்பேன்.  அப்போது கோபுவின் மூலம் உனக்குச் சொல்லி அனுப்புகிறேன்.  நீ வந்து கிருஷ்ண வாசுதேவனைச் சந்திக்கலாம்.” என்றான். பலியா அடைந்த சந்தோஷத்துக்கு அளவே இல்லை. பீமனைப் பார்த்து வணங்கிய வண்ணம், “சின்ன எஜமான்! என் நன்றியைத் தெரிவிக்க வார்த்தைகளே இல்லை!” என்றான்.

அப்போது ரேகாவுடன் வந்த ஜாலந்திரா சோமேஷ்வரின் துணையுடன் அந்த இடத்தை விட்டு வெளியேறினாள். சற்று இடைவெளி விட்டு பீமனும், கோபுவும் அவர்களைப் பின் தொடர்ந்தனர். ஜாலந்திரா தன்னுடைய துணைவர்களோடு தான் செல்ல வேண்டிய இடத்துக்குச் சென்று கொண்டிருப்பதையே பீமன் பார்த்துக் கொண்டிருந்தான். அப்போது அருகிலிருந்த ஒரு மரத்தடியில் ஏதோ அசைவு தெரியவும் என்னவெனப் பார்த்த பீமன், ஒரு மனிதன் தன்னை மரத்தின் பின்னால் மறைத்துக் கொள்வதைக் கண்டுவிட்டான். ஆனால் அந்த மனிதன் பீமனைக் கவனிக்கவில்லை என்று தோன்றியது.  ஏனெனில் ஜாலந்திரா அந்த மனிதனைக் கடந்து சென்றதுமே அவன் வெளியே வந்தாலும் ஜாலந்திராவின் கண்களிலோ அல்லது ரேகா, சோமேஷ்வர் ஆகியோர் கண்களிலோ படாமல் செல்ல நினைத்தவன் போல ரகசியமாகவே அவர்களைப் பின் தொடர்ந்தான். பார்த்துக் கொண்டிருந்த பீமன் அவன் மேல் புலியைப் போல் பாய்ந்தான். அவனைக் கீழே தள்ளி அவன் நெஞ்சில் தன் முழங்காலை வைத்து அழுத்தியவண்ணம் கைகளால் குரல்வளையையும் பற்றினான் பீமன்.

“யார் நீ?  ஏன் அந்தப் பெண்களைப் பின் தொடர்கிறாய்?” என்று கேட்டவண்ணம் அவன் குரல்வளையை அழுத்தினான் பீமன்.  அந்த மனிதன் பீமனைத் தன்னிடமிருந்து விலக்க மிகுந்த முயற்சிகள் செய்தும் அவனால் முடியவில்லை. பதிலும் சொல்லவில்லை.  ஆகவே மீண்டும் பீமன் அவனிடம், “யார் நீ? ஏன் அவர்களைப் பின் தொடர்கிறாய்?” என்று கடுமையான குரலில் கேட்டவண்ணம் தன் பிடியை இறுக்கினான். ஜாலந்திரா, ரேகாவுடன் அந்தத் தெருக்கோடியில் மறையும் மட்டும் பொறுத்திருந்த பீமன் பின்னரே அந்த மனிதனை விட்டு நீங்கினான். எழுந்திருக்கும்போதே அவனைத் தன் கைகளால் பற்றிக் கொண்டு உயரத் தூக்கிய பீமன் அவனை அப்படியே உலுக்கினான்.  அவன் உடல் மட்டுமில்லாமல் பற்களும் ஆட்டம் கண்டன என்று அவன் பற்கள் அடித்துக் கொண்டதில் இருந்து புரிந்தது.

“யாரடா நீ? செவிடா?  காது கேட்காதா உனக்கு?  ஏன் அந்தப் பெண்களைப் பின் தொடர்ந்தாய்?” விடாமல் மீண்டும் கேட்டான் பீமன். ஆனால் அவன் வாயே திறக்கவில்லை.  பீமன் அவனை மீண்டும் உலுக்கினான். “நீ இப்போது பேசுகிறாயா? அல்லது உயிரை விடுகிறாயா?” என்று பற்களைக் கடித்த வண்ணம் கடுமையான குரலில் கேட்டான். அந்த மனிதன் பலவீனமான குரலில் பீமனிடம், “என்னை மன்னியுங்கள்!” என்று இறைஞ்சினான். அவன் குரல்வளையை மீண்டும் பிடித்த பீமன், “உண்மையைச் சொல்! யார் நீ?” என்று மீண்டும் கேட்டான். அந்த மனிதனின் உடல் முழுதும் நடுங்க, குரலும் சேர்ந்து நடுங்கியது. “ஐயா, நான் ஷகுனி அவர்களின் வேலையாள்!” என்று நடுங்கிய வண்ணம் சொன்னான்.

“இங்கே என்ன செய்கிறாய் நீ? சொல், முதலில்! சீக்கிரம் சொல்! இல்லை எனில் உன்னைக் கொன்று போடுவேன்!” என்ற பீமன் சற்றும் இரக்கமில்லாமல் அவனை மீண்டும் உலுக்கி எடுத்தான். “முட்டாள், முட்டாள்!” என்றும் அவனைத் திட்டினான். அந்த மனிதன் தன் கைகளைக் கூப்பி பீமனை நமஸ்கரித்தான். கை கூப்பிய வண்ணமே அவனிடம், “ஐயா, நான் உண்மையைச் சொல்லி விடுகிறேன். இளவரசி பானுமதியின் வளர்ப்புத் தாயான ரேகாவைப் பின்பற்றவும், அவளைக் கண்காணிக்கவும் நான் நியமிக்கப்பட்டிருக்கிறேன்.” என்று பணிவுடன் சொன்னான். “ஓஹோ, அப்படியா? அந்த இன்னொரு பெண் யாரென நீ அறிவாயா?” என்று பீமன் அவனைச் சந்தேகத்துடன் கேட்க, “அது தான் தெரியவில்லை ஐயா, அது தெரிய வேண்டியே நான் முயன்றேன்.” என்று பதில் சொன்னான். “பொய் சொல்லாதே! கோழை! பொய் சொல்கிறாய் நீ!” என்று கத்திய பீமன் மீண்டும் அவன் தொண்டையை அழுத்தினான். வலி தாங்க முடியாமல் தவித்த அந்த மனிதன், “பிரபுவே, பிரபுவே, என்னை விட்டு விடுங்கள்;  நான் உயிர் பிழைத்து ஓட அனுமதியுங்கள். அதை மட்டும் செய்தீர்களானால், நான் உங்களைக் காப்பாற்றியும் விடுவேன். நிச்சயம் காப்பாற்றுவேன்.” என்றான்.

“மீண்டும் பொய் சொல்கிறாயா? நீ என் உயிரைக் காக்கப்போகிறாயா? முட்டாள், முழு மூடன், நிர்மூடன்! பாதகா! மீண்டும் மீண்டும் பொய் சொல்கிறாயா?” என்ற வண்ணம் பீமன் அவனை மறுபடி மறுபடி வேகமாய் உலுக்கினான். அந்த மனிதன் ஓலமிட்டான். ‘என்னைக் கொன்று விடாதீர்கள் ஐயா! நான் நிச்சயம் உங்களைக் காப்பாற்றுவேன்!” பரிதாபமாக இறைஞ்சிய அவன் மேலும், “நான் பொய் சொல்லவில்லை. நீங்கள் அகோரியின் குடிசைக்கு உடனே செல்லுங்கள்.  உங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்வீர்கள். இல்லை எனில் அடுத்த பௌர்ணமிக்குள் உங்கள் உயிர் உங்களுடையது அல்ல!” என்று நடுங்கிய வண்ணம் சொன்னான்.

கங்கைக்கு அக்கரையில் ஒரு அகோரி வசித்து வந்ததையும் அவன் குடிசை அங்கே இருந்ததையும் பீமன் அறிவான்.அவன் மஹாகாளர்களைச் சேர்ந்தவன்.  காளி உபாசகனும் கூட.  காளிக்குக் கடுமையான வழிபாடுகளையும் நிவேதனங்களையும் சமர்ப்பிப்பவன் என்றும் கேள்விப் பட்டிருந்தான். அப்படிப்பட்டவன் குடிசைக்குத் தான் ஏன் போக வேண்டும்? இதில் ஏதோ இருக்கிறது. அதோடு இல்லாமல் அந்த அகோரி முக்காலமும் அறிந்தவன் என்றும் ஒருவனைப்பார்த்ததுமே அவன் எதிர்காலத்தைக் கூறிவிடுவான் என்றும் அவன் கூறுவது அப்படியே நடக்கும் என்றும் கேள்விப் பட்டிருந்தான். சூனிய, மந்திர, தந்திரங்களிலும் அவன் தேர்ந்தவன்.  சூனியம் வைக்கவும், எடுக்கவும் தெரிந்தவன்.  துர் தேவதைகளை வசப்படுத்தக் கூடியவன். வேறு வழியில்லை என்றால் தான் மக்கள் அவனிடம் சென்று பரிகாரம் தேடுவார்கள். பொதுவாக எவரும் அவனை அணுகுவது இல்லை. அவனுக்குப் பிடிக்காத மனிதர்களையோ அல்லது அவனிடம் செல்லும் மக்கள் கேட்டுக்கொள்ளும் மனிதர்களையோ மரணத்தில் தள்ளிவிடும் ஆற்றல் கொண்டவன் என்றும் நன்றாக இருக்கும் ஒரு மனிதனைத் திடீரென மரணமடையச் செய்யும் ஆற்றல் கொண்டவன் என்றும் பேசிக் கொள்வார்கள்.

அங்கே ஏன் தான் போக வேண்டும்? பீமனுக்குள் ஆச்சரியத்துக்கு மேல் ஆச்சரியம். அந்த மனிதனிடம், “சரி, நீயே என்னை அவன் குடிசைக்கு அழைத்துச் செல்! நடுவில் நீ தப்ப நினைத்தாயோ, தொலைந்தாய்!” என்று மிரட்டினான். தன் தலையில் கட்டி இருந்த உத்தரீயத்தினால் அந்த ஒற்றன் கைகளைக் கட்டினான் கோபு. மூவரும் கங்கைக்கரையை நோக்கி நடக்கத் தொடங்கினர். நகரத்தை விட்டு நீங்கி கங்கைக்கரையை அடைந்த அவர்களுக்கு அங்கே காத்திருந்த நான்கு சிறு படகுகள் கண்களில் பட்டன. அடர்த்தியான காடாகக் காணப்பட்ட எதிர்க்கரையில் ஓர் இடத்தில் மட்டும் விளக்குப் பளிச்சிடுவதையும் கண்டார்கள். ஒரு படகைக் கரைக்குக் கொண்டு வந்து மூவரும் அதில் ஏறி நதியைக் கடந்தார்கள். விளக்கு எரிந்து கொண்டிருந்த இடத்தை நோக்கி மெல்ல மெல்ல அதே சமயம் ரகசியமாக முன்னேறினார்கள். விரைவிலேயே அந்த இடத்தை நெருங்கியவர்கள் அந்த வெளிச்சம் அங்கே புல் தரையின் முன் காணப்பட்ட ஒரு சிறு குடிசையின் வாயில் இருந்த அக்னி குண்டத்தின் ஹோமப் புகையும் அதன் தீயும் என்பதைப் புரிந்து கொண்டார்கள்.

மெல்ல மெல்ல அடிகளை மிருதுவாக எடுத்து வைத்த அவர்கள் பக்கவாட்டிலேயே சென்று அந்தக் குடிசையை அடைந்தனர். குடிசையின் பின் பக்கமாகச் சென்றவர்களால்  பக்கவாட்டில் காணப்பட்ட  ஒரு சாளரத்தின் மூலம் அந்தக் குடிசையினுள் பார்க்க முடிந்தது.  பீமன் அங்கிருந்து உள்ளே என்ன நடக்கிறது என்று பார்த்தான்.

Wednesday, April 1, 2015

ஜாலந்திராவின் கலக்கம்! பீமனின் மயக்கம்!

“தவறு செய்து விட்டாயா? என்ன தவறு?” பீமன் ஆச்சரியத்துடன் கேட்டான். ஜாலந்திரா அதிர்ச்சியான தகவல் ஒன்றைக் கேட்டது போல் தன் தலையைக் குனிந்து கொண்டாள். பின்னர் ஏமாற்றம் நிறைந்த குரலில் நிறுத்தி நிறுத்திப் பேசினாள். அதுவும் பீமனிடம் பேசுவது போல் இல்லாமல் தனக்குத் தானே பேசிக் கொள்வதாய்த் தோன்றியது. “ நான் என்னவெல்லாம் கனவு கண்டேன்! என்றோ ஒரு நாள் என்னுடைய சுயம்வரம் நடக்கையில் அதில் அரசர் வ்ருகோதரரும் கலந்து கொள்வார் என எண்ணினேன்; எதிர்பார்த்தேன். ஆனால்…..” நீண்டதொரு சோகப் பெருமூச்சு விட்டாள் ஜாலந்திரா. அதன் மேல் அவளால் பேச முடியாதது போல் தோன்றியது.  சிரமப்பட்டுப் பேசும் பாவனையில், “ஆனால் அதெல்லாம் வெறும் கனவு! என்னுடைய முட்டாள் தனமான கனவு! இப்போது தான் இதை அறிந்து கொண்டேன்!” என்றாள்.

“ஓஹோ, ஜாலந்திரா! ஜாலந்திரா!  இது ஒன்றும் முட்டாள்தனமான கனவெல்லாம் இல்லை.  உன்னுடைய சுயம்வரம் விமரிசையாக நடைபெறும். நானும் அதில் கலந்து கொள்வேன். உன்னை வென்று பரிசாக அடைவேன்.” பீமனுக்கு ஜாலந்திராவின் இந்த திடீர் மாற்றத்தின் காரணம் புரியவில்லை.

“ஐயா, எங்கே நடக்கப் போகிறது! அரசர் வ்ருகோதரர் தான் நான் என் சகோதரிக்குக் கொடுத்தப் புனிதமான வாக்குறுதியை நிறைவேற்றித் தர ஒத்துழைக்க மறுக்கிறாரே! அவர் உதவவில்லை எனில்………….” தயங்கித் தயங்கி பேசினாள் ஜாலந்திரா. அவள் தொண்டையை அடைத்துக் கொண்டது. மீண்டும் மிகவும் கஷ்டப்பட்டு, “ஆஹா! என் மனம் சுக்குச் சுக்காக உடைந்தே விட்டது!” என்று அழும் குரலில் சொன்னாள்.

“சரி! பிரபுவே, நான் உடனே செல்கிறேன். எனக்கு இங்கே என்ன வேலை? அரசர் வ்ருகோதரர் என் வேண்டுகோளை நிறைவேற்றாமல் என்னை வெறும் கையுடன் அனுப்பி வைப்பார் என நான் எதிர்பார்க்கவே இல்லை!” சொல்லிக் கொண்டே எழும் பாவனையில் உட்கார்ந்திருந்த இடத்தை விட்டுச் சற்றே எழுந்தாள் ஜாலந்திரா. அதைப் பார்த்த பீமன் உள்ளம் உருகியது.  “உட்கார், காஷ்யா, உட்கார்ந்து கொள்! என்ன அவசரம்? ம்ம்ம்ம்? நீ உன் அக்காவுக்குச் சத்தியம் செய்து கொடுத்து விட்டாயா?  கிருஷ்ண வாசுதேவனிடம் செய்தியைச் சேர்ப்பதாகச் சத்தியம் செய்திருக்கிறாயா?” என்று அவளிடம் கேட்டான்.

“ஆம், ஐயா, என் தந்தையின் மேல் ஆணையிட்டிருக்கிறேன்.” என்றாள் ஜாலந்திரா. “சரி, சரி, அழாதே இப்போது!” கெஞ்சினான் பீமன். பீமன் தன்னை மிக உறுதி படைத்தவனாகவும், எதற்கும் கலங்காதவனாகவும் நினைத்துக் கொண்டிருந்தான்.  அது பொய் என்பது போல் இப்போது அவன் மனம் இளக ஆரம்பித்து விட்டது. ஜாலந்திராவைப் பார்க்கப் பார்க்க இரக்கம் ஏற்பட்டது. அவள் எவ்வளவு பலவீனமாக அதே சமயம் சிறு பெண்ணாகவும் இருக்கிறாள்; மிகவும் கஷ்டமான ஒரு சூழ்நிலையில் மாட்டிக் கொண்டிருக்கிறாள்.  ஆஹா! இப்போது இவளை இந்த இக்கட்டிலிருந்து காப்பாற்றியே ஆக வேண்டும். உத்கோசகத்தில் காப்பாற்றியதெல்லாம் ஒன்றுமே இல்லை; இப்போது காப்பாற்றி ஆகவேண்டும். அவளுடைய மிருதுவான உடலைப் பற்றி இழுத்துத் தன்னுடன் சேர்த்து அணைத்துக் கொண்டு அவளுக்கு ஆறுதல் கூற விரும்பினான் பீமன்.  ஆனால் ஆரியர்களின் வழக்கம் என்ற ஒன்று இருக்கிறது.  அது அவனைப் பாரம்பரியக் கலாசாரத்திலிருந்து விலக விடவில்லை. இப்போது அவளைத் தொட்டு ஆறுதல் கூறினால் புனிதத்தை அவளும், அவனும் இழந்தவர்கள் ஆகிவிடுவார்கள். அக்னி சாக்ஷியாகத்  திருமணம் என்னும் பந்தம் ஒன்று ஏற்பட்டால் மட்டுமே அவன் அவளிடம் அவ்வாறெல்லாம் நடந்து கொள்ளலாம்.  இத்தகைய விதிகள் அவர்களுக்குக் கட்டாயமாக்கப் பட்டிருந்தன.

ஆனாலும் அவன் உள் மனது தன் பெண்மையின் சாதுரியங்களை எல்லாம் பிரயோகித்து ஜாலந்திரா அவனை உதவி செய்ய வைக்க முயற்சிக்கிறாள் என்று ஒரு பக்கம் கூவிக் கொண்டே தான் இருந்தது.  என்றாலும் அவளை இவ்வளவு வருத்தப்பட வைத்துவிட்டோமே என்னும் எண்ணமும் அவனிடம் தோன்றி அவனைக் கலங்க வைத்தது. இருதலைக் கொள்ளி எறும்பாகத் தத்தளித்தான் பீமன். அவனுள் குற்ற உணர்வே மேலோங்கியது. பொதுவாகவே அவனால் எந்தப் பெண் அழுதாலும், வருந்தினாலும் பொறுக்க முடியாது;  அந்தப் பெண் ஜாலந்திராவாக இருக்கையில் அவனுடைய நேரடிக் கவனிப்புக்கு ஆளாக வேண்டிய அந்த இளவரசி வருந்தினால் அவன் மனம் எவ்வாறு அதைத் தாங்கும்?

“சரி, போகட்டும்! அது வேறு விஷயம்! அப்படியே இருக்கட்டும்.  நான் உனக்குக் கிருஷ்ண வாசுதேவனை நீ சந்திக்க ஏற்பாடு செய்து விடுகிறேன்! சரியா? இப்போது உனக்கு சந்தோஷம் தானே?”

“பிரபுவே, சந்தோஷம், சந்தோஷம்!  வார்த்தைகளில் விவரிக்க ஒண்ணாத சந்தோஷம் எனக்கு ஏற்படுகிறது!” சொன்ன ஜாலந்திரா தன் கண்களில் தேங்கி இருந்த கண்ணீருடன் சிரித்தது மழை பெய்யும் போது மின்னல் ஒளி வீசுவது போல் தோன்றியது பீமனுக்கு. அதைக் கண்ட அவன் மனம் குதித்தது; கூத்தாடியது.

“இதோ பார் காஷ்யா! உன் ஒருத்திக்காகவே நான் இதைச் செய்கிறேன்!” என்றான் பீமன்.

“ஐயா, நான் அதை அறிவேன்! என்னிடம் நீங்கள் எப்படிப்பட்ட அன்பு வைத்திருக்கிறீர்கள் என்பதையும் புரிந்து கொண்டிருக்கிறேன். என்னிடம் உங்களால் கருணையுடன் தான் நடந்து கொள்ள முடியும் என்பதையும் அறிந்திருக்கிறேன்.  உத்கோசகத்தில் நான் நீரில் முழுகி விடாமல் எவ்வளவு திறமையாக என்னைக் காப்பாற்றினீர்கள் என்பதை என்னால் ஒரு நாளும் மறக்க முடியாது. “ இதைக் கொஞ்சம் அந்தரங்கமாக மெல்லிய குரலில் கூறிய ஜாலந்திரா, பின் சிரித்த வண்ணம் மேலும் பேசினாள். “என்னை உங்கள் தோள்களில் தூக்கிச் செல்ல வேண்டியே அந்தப் படகுகளைத் தாங்கள் மூழ்கடித்தீர்கள் என்னும் எண்ணம் என்னிடம் இன்னும் இருந்தாலும்…… நீங்கள் என்னைக் காப்பாற்றியதை என்னால் மறக்க முடியாது.” குறும்புடன் முடித்தாள் ஜாலந்திரா.

“அழகான பெண்களைக் குறித்த என் கருத்தே வேறுவிதமாக இருந்தது;  அவர்கள் அழகாகவும் முட்டாளாகவும் இருப்பார்கள் என்றே எண்ணி இருந்தேன். அவர்கள் தான் இப்படி நினைப்பார்கள்; எல்லாமும் அவர்களுக்காகவே செய்யப்படுவதாக எண்ணுவார்கள்.  ஆனால் காஷ்யா, நீ அழகி மட்டுமில்லை; அற்புதமானவள். அத்தகைய அழகான பெண்களோடு உன்னை ஒப்பிட முடியாது!” என்று அப்போது தான் முதல் முதலாகப் பெண்ணைப் பார்க்கும் சிறுவனைப் போன்ற ஆர்வத்துடன் கூறினான் பீமன்.

“ஆம், ஐயா, நான் அற்புதமானவள் தான்; அப்படி இருந்தால் தான் என்னால் ஓர் அற்புதமான கணவனைத் தேடிக் கொள்ள முடியும்!”

“காஷ்யா, உன் சுயம்வரம் அடுத்த வருடம் நடைபெறுமா?”

“ஆம், ஏன் கேட்கிறீர்கள்?”

அவ்வளவு தாமதத்தைக் கூட பீமன் விரும்பவில்லை. ஏனெனில் அடுத்த வருடம் அவனுடன் வாழ திரௌபதி வந்துவிடுவாள்.  அதற்குள் ஏதேனும் வழி கண்டு பிடிக்க வேண்டும். “காஷ்யா, ஏன் சுயம்வரத்தின் மூலமே உன் திருமணம் நடைபெற வெண்டும் என நினைக்கிறாய்? க்ஷத்திரியர்களுக்கு முக்கியமாக நம் போன்ற அரசகுலத்தவருக்கு காந்தர்வ மணமும் ஏற்புடையதே! உனக்குப் பிடித்த இளவரசனுடன் உடனே  நீ ஏன் காந்தர்வ மணம் புரிந்து கொள்ளக் கூடாது?” பீமன் கேட்டான்.

“நிச்சயமாக இல்லை;  நான் அப்படிச் செய்ய மாட்டேன்.  நான் ஓர் ஆரியப் பெண்! காசி தேசத்து ராஜகுமாரி! என்னுடைய திருமணம் நிறைந்த சபையில் அனைத்து அரசர்களும், ராஜகுமாரர்களும் கூடி இருக்கையில் அவர்களில் ஒருவர், அதுவும் அவர்  நான் விரும்புபவராக இருக்க வேண்டும். என் மனதுக்குப் பிடித்தவரால் நான் வெல்லப்படுவதையே விரும்புகிறேன். திரௌபதி எப்படி உங்கள் சகோதரரால் வெல்லப்பட்டாளோ அப்படியே நானும் வெல்லப்பட வேண்டும்.  அது தான் உயர்குடிப் பிறப்பில் பிறந்த பெண்களுக்கு அழகு. நான் அதைத் தான் விரும்புகிறேன்.”

“ம்ம்ம்ம், இவள் சரியாகவே சொல்கிறாள்.” என்று தனக்குள் நினைத்துக் கொண்டான் பீமன். வெளிப்படையாக அவளிடம், “சரி, சரி, உன் இஷ்டம் போலவே நடக்கட்டும்.  பிடிவாதமான ஒரு பெண்ணிடம் வாக்குவாதம் புரிவதில் பயனில்லை என்பதை நான் உணர்ந்திருக்கிறேன். போகட்டும். இப்போது வந்த வேலையைப் பார்ப்போம். நீ கொண்டு வந்திருக்கும் செய்தி மிக அவசரமானதா? ஆனாலும் நீ கிருஷ்ண வாசுதேவனைப் பார்க்க நாளை இதே நேரம் இங்கே வந்தால் தான் சரியாக இருக்கும்.  அது தான் சிறந்த வழி. இன்று  இப்போது முடியாது. நாளை நான் எப்படியாவது கிருஷ்ணனை இங்கே அழைத்து வந்து விடுகிறேன்.  நீ ரேகாவுடன் இதே போல் நடு இரவில் வந்து விடு! வருவாயா?”

“கட்டாயம் வருவேன்!”என்று மகிழ்ச்சி பொங்கச் சொன்னாள் ஜாலந்திரா.

“ஆனால் கிருஷ்ணன் இங்கே வராமல் இருக்க நூறு காரணங்கள் சொல்லப் போகிறான். ஆனால் நான் எப்படியாவது அவனை இங்கே அழைத்து வருகிறேன்.  முடியவில்லை எனில் அவனைத் தூக்கிக் கொண்டாவது வந்து விடுகிறேன். அவன் வர மறுத்தால் என் வழியில் அவனைத் திருப்புவது தான் சிறந்தது!” என்று கொஞ்சம் கர்வத்துடனே சொன்னான் பீமன்.

“ஆம், ஐயா, நான் நன்கறிவேன்.  அரசர் வ்ருகோதரரைத் தடுக்கும் சக்தி யாரிடம் உண்டு? எவராலும் இயலாது அல்லவோ!” என்ற வண்ணம் பீமன் மனதைக் கலங்கடிக்கும் ஓர் பார்வை பார்த்து அவனைக் கிறங்க அடித்தாள் ஜாலந்திரா. அந்தப் பார்வையில் மயங்கிய பீமன் கள்ளுண்ட வண்டைப் போல் மெய்ம்மறந்தான். அவன் எப்போதும் அடையாத சந்தோஷம் அவனை அடைந்து விட்டதாக உணர்ந்தான்.