Tuesday, April 28, 2015

மல்யுத்தக் களத்தில் கண்ணன்!

மாலை மயங்கி இரவும் வந்தது.  ஹஸ்தினாபுரத்து மாளிகைகளிலும் அதன் மேன்மாடங்கள், நிலா முற்றங்கள் எங்கும் விளக்குகள் ஏற்றப்பட்டன. அகில் வாசனை எங்கும் பரவியது. கைகளில் தீவட்டி எந்தியபடி தீவட்டிக் காவலர்கள் சுற்றி வர, வெளியே செல்வோரும் தீவட்டிக் காரர்களை அழைத்துக் கொண்டு அவர்கள் வழிகாட்டச் சென்று கொண்டிருந்தனர். அப்படி ஒரு குழு அங்கே கண்ணனின் மாளிகையிலிருந்து கிளம்பிக் கொண்டிருந்தது. யாரெனப் பார்ப்போமா? ஆஹா! அதோ கண்ணன்! அவனுடன் பீமன், உத்தவன்,சாத்யகி ஆகியோரும் இருக்கின்றனர்.  இரு காவலாட்கள் தீவட்டி ஏந்தி வெளிச்சம் காட்டிக் கொண்டு முன்னே செல்கின்றனர். கண்ணனின் மெய்க்காப்பாளர்களான இரு கருட வீரர்கள் கண்ணனின் பக்கவாட்டில் ஆயுதங்களை ஏந்திய வண்ணம் பாதுகாப்புக் கொடுத்துக் கொண்டு சென்றனர். அவர்கள் அனைவரும் பலியாவின் மல்யுத்தக்களத்தை நோக்கியே சென்றனர்.

அனைவரும் பலியாவின் மல்யுத்தக் களத்தை அடைந்தனர். அங்கே குழுமியிருந்த ஜ்யேஷ்டி மல்லர்கள் அனைவரும் கண்ணனை வணங்கி வரவேற்றனர். பெண்கள் அனைவரும் வரவேற்புப் பாடல்களைப் பாடித் தங்கள் மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொண்டனர். குழந்தைகள் கண்ணனைச் சூழ்ந்து கொண்டன. மல்யுத்தக் களமே அன்று விளக்குகளால் ஒளிர்ந்தது. ஆங்காங்கே காவலாட்களும், சேடிப் பெண்களும் நின்று கொண்டு விளக்குகள் அணைந்து விடாமல் அவ்வப்போது எண்ணெய் வார்த்துக் கொண்டிருந்தனர்.  தன் மகன்களில் ஒருவர் துணை இருக்க பலியா அங்கே மெதுவாக வந்து கொண்டிருந்தான். அவன் நடந்து வருவதைப் பார்த்த மல்லர்கள் தங்கள் கைகளைத் தட்டி ஆரவாரம் செய்தனர். அங்கே வந்து கூட்டத்தின் முகப்பில் நின்று கொண்டான் பலியா. மிகப் பலஹீனமாய்க் காணப்பட்டாலும் தன்னைச் சமாளித்துக் கொண்டு கிருஷ்ணனின் கால்களில் விழுந்து வணங்கினான்.

அனைவரையும் சோமேஸ்வர் அந்த மாபெரும் திடலில் மல்யுத்தம் நடக்கும் மேடைக்கு அழைத்துச் சென்றான். அங்கே அந்த மேடையின் ஒரு பக்கம் மாபெரும் லிங்கம் ஸ்தாபனம் செய்யப்பட்டிருந்தது. அருகே அம்பிகையின் திருவுருவமும் மண்ணால் ஆன பிரதிமையாகக் காட்சி அளித்தது. அம்பிகை கருணை பொருந்தியவளாக வடிக்கப்பட்டிருந்தாள். மூங்கிலால் செய்யப்பட்ட சிலம்பக் கழிகள் ஆங்காங்கே அடுக்கப்பட்டிருந்தன. அதைத் தவிர மேலே ஏறிப் பயிற்சி செய்யும் தூண்களும் ஆங்காங்கே காணப்பட்டன கயிறு தாண்டுதல், உயரே எழும்பிக் குதித்தல் ஆகிய பயிற்சிகளுக்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன. அன்றைய விசேஷ தினத்துக்கான எல்லாக் கொண்டாட்டங்களும் முடிந்து ஆரத்தி எடுக்க வேண்டியது தான் நிறுத்தி வைத்திருந்தார்கள். கிருஷ்ணன் வருவதற்காகக் காத்திருந்தார்கள். கிருஷ்ணனும் அவன் நண்பர்களும், மற்றும் பீமனும் அங்கே வழிபாடுகள் நடத்தப்பட்டிருந்த விக்ரஹங்களுக்குத் தங்கள் நமஸ்காரங்களைச் செய்து அவர்களும் வழிபட்டனர்

கற்பூரம் ஏற்றப்பட்டது. பலியா அதை ஏற்றிக் கிருஷ்ணன் கைகளில் கொடுத்து அவனையே ஆரத்தி எடுக்கச் சொன்னான். ஈசனைக் குறித்தும் அம்பிகையைக் குறித்தும் ஆரத்திப்பாடல்கள் பாட, ஒரு பக்கம் மந்திரங்களும் முழங்க ஆரத்தி எடுக்கப்பட்டது அனைவருக்கும் ஆரத்தித் தட்டு வழிபாட்டுக்குக் காட்டப்பட்டது. அப்போது பலியா கிருஷ்ணனிடம், “பிரபுவே, உங்களிடம் நான் ஒன்று வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன். “ என ஆரம்பித்தான். கிருஷ்ணன் ஒரு புன்னகையுடன் குறுக்கிட்டு, “நீ என்ன கேட்கப்போகிறாய் என்பது தெரியும், பலியா! சரி, சரி உன் விருப்பப்படியே நான் இப்போது மல்யுத்தம் செய்யத் தயாராக ஆடைகளை மாற்றி வருகிறேன். ஆனால் என்னுடன் பொருதப் போவது யாரோ?” என்று புன்னகை மாறாமலேயே கேட்டான் அப்போது சோமேஸ்வர் முன்னால், வந்து அந்தப் பெருமையைத் தனக்கு அளிக்கும்படி கேட்டுக் கொண்டான் கிருஷ்ணனும் சம்மதித்தான்.

கோபு வழிகாட்ட பலியாவின் வீட்டுக்குள் சென்ற கிருஷ்ணன் மல்யுத்தம் செய்வதற்கேற்றபடி தன் ஆடைகளை மாற்றிக் கொண்டு வந்தான். சுருள் சுருளாகத் தொங்கிய தன் தலை மயிரை மேலே தூக்கிக் கட்டி இருந்தான். அது கிருஷ்ணனை இன்னமும் ஒல்லியாகக் காட்டியது. மேல் உத்தரீயம் தரிக்காமல் வந்ததால் அவன் உடல் மிக மென்மையாகப் பட்டுப் போன்ற மிருதுத் தன்மையுடன் காணப்பட்டது. ஒரு பெண்ணின் நளினமே அனைவருக்கும் தெரிந்தது. கிருஷ்ணன் உடலிலும் வலுவான தசைகளும், நரம்புகளும், அவன் பிடியிலும் வலுவானதாக இருக்கும் என்பதையே அவர்களால் புரிந்து கொள்ள முடியவில்லை. இந்த உடலில் மல்யுத்தம் செய்யும் அளவுக்கு வலுவும் திறமையும் இருக்கும் என்பதையே நம்ப மறுத்தனர். மாமிசப் பிண்டம் போன்ற தங்கள் உடல்களோடு கிருஷ்ணனின் உடலையும் ஒப்பிட்டுப் பார்த்து இத்தனை மென்மையான ஒருவனால் எவ்வாறு மல்யுத்தம் செய்ய முடியும் என்றே வியந்தனர். இவன் ஒரு மல்யுத்த வீரனாக இருக்க முடியாது என்றும் எண்ணினார்கள்

கிருஷ்ணன் நேரே சோமேஸ்வரிடம் வந்து, “நீ இந்த ஆட்டம் எப்படி இருக்கவேண்டும் என விரும்புகிறாய்? நீ மல்யுத்தம் செய்து  என்னைக் கீழே தள்ளிவிட்டு விடப் போகிறாயா? அல்லது நான் முதலில் யுத்தம் செய்து உன்னைக் கீழே தள்ளிவிடவா?” என்று கேட்டான். அதற்கு சோமேஸ்வர் வணக்கத்துடன், “பிரபுவே, உங்கள் திருக்கரங்களால் என்னைக் கீழே தள்ளிவிட்டீர்களானால் என்னை விட அதிர்ஷ்டம் செய்தவர் யாரும் இல்லை. உங்களால் ஆசீர்வதிக்கப்பட்டதாய்க் கருதுவேன்.  ஆனால் நான் உங்களைக் கீழே தள்ள முடிந்தால், அதை விடப் பெரிய பெருமை எனக்கு ஏது? என் வாழ்க்கையின் மறக்க முடியாத நிமிடமாக அது இருக்கும். ஆனால் ஐயா, முன் கூட்டிய முடிவுடன் நாம் மல்யுத்தம் செய்ய வேண்டாம். என் சீடர்களுக்கும் நான் அவ்வாறே கற்பித்து வருகிறேன்.” என்றான்.

“உண்மைதான் சோமேஸ்வர்! முன் கூட்டியே யார் வெல்வது எனத் தீர்மானித்துவிட்டு மல்யுத்தம் செய்வது ஒரு வேடிக்கையான நிகழ்வாக மாறி விடும். சட்டத்திற்கு உட்பட்ட மல்யுத்தப்போட்டியாக இருக்காது. நாம் நம்முடைய பாரம்பரியத்தையும் அது பிறப்பித்திருக்கும் சட்டங்களையும் மதித்தே ஆகவேண்டும். நீ உன்னால் முடிந்ததைச் செய்! நானும் என்னால் இயன்ற வரை போராடுவேன். வா, நாம் போட்டியை ஆரம்பிப்போம்!” என்றான் கிருஷ்ணன். இருவரும் மல்யுத்தப் போட்டி நடைபெறும் இடம் செல்லும் முன்னர் அங்கிருந்த விக்ரஹங்களிடம் சென்று வணங்கினார்கள். பின்னர் அங்கே குவிந்திருந்த மலர்களைத் தங்கள் கைகளில் எடுத்து அதனால் தங்கள் கைகளைத் தேய்த்துக் கொண்டார்கள். கைகளில் வியர்வை அல்லது வேறு காரணங்களினால் ஈரம் இருந்தால் அது போவதற்காகவும் தங்கள் பிடிகள் இறுக்கமாயும், வலுவாயும் இருக்க வேண்டியும் அப்படிச் செய்து கொண்டார்கள். போட்டி ஆரம்பித்தது

3 comments:

கதம்ப உணர்வுகள் said...

//மாமிசப் பிண்டம் போன்ற தங்கள் உடல்களோடு கிருஷ்ணனின் உடலையும் ஒப்பிட்டுப் பார்த்து இத்தனை மென்மையான ஒருவனால் எவ்வாறு மல்யுத்தம் செய்ய முடியும் என்றே வியந்தனர். இவன் ஒரு மல்யுத்த வீரனாக இருக்க முடியாது என்றும் எண்ணினார்கள்//

கண்ணனையும் அவன் பலத்தையும் அறியாத அறிவிலிகள் இப்படித்தானே நினைப்பார்கள்...

அருமையான பகிர்வுப்பா...

ஸ்ரீராம். said...

//விழுந்ஹ்டு//

வெளியிட அல்ல. திருத்துவதற்கு மட்டும். இரண்டாவது பாரா கடைசி வரி.

ஸ்ரீராம். said...

பீமன் கண்ணனிடம் சகுனியின் அந்தச் சதியை எப்போதுதான் சொல்லப் போகிறான்?