Wednesday, April 1, 2015

ஜாலந்திராவின் கலக்கம்! பீமனின் மயக்கம்!

“தவறு செய்து விட்டாயா? என்ன தவறு?” பீமன் ஆச்சரியத்துடன் கேட்டான். ஜாலந்திரா அதிர்ச்சியான தகவல் ஒன்றைக் கேட்டது போல் தன் தலையைக் குனிந்து கொண்டாள். பின்னர் ஏமாற்றம் நிறைந்த குரலில் நிறுத்தி நிறுத்திப் பேசினாள். அதுவும் பீமனிடம் பேசுவது போல் இல்லாமல் தனக்குத் தானே பேசிக் கொள்வதாய்த் தோன்றியது. “ நான் என்னவெல்லாம் கனவு கண்டேன்! என்றோ ஒரு நாள் என்னுடைய சுயம்வரம் நடக்கையில் அதில் அரசர் வ்ருகோதரரும் கலந்து கொள்வார் என எண்ணினேன்; எதிர்பார்த்தேன். ஆனால்…..” நீண்டதொரு சோகப் பெருமூச்சு விட்டாள் ஜாலந்திரா. அதன் மேல் அவளால் பேச முடியாதது போல் தோன்றியது.  சிரமப்பட்டுப் பேசும் பாவனையில், “ஆனால் அதெல்லாம் வெறும் கனவு! என்னுடைய முட்டாள் தனமான கனவு! இப்போது தான் இதை அறிந்து கொண்டேன்!” என்றாள்.

“ஓஹோ, ஜாலந்திரா! ஜாலந்திரா!  இது ஒன்றும் முட்டாள்தனமான கனவெல்லாம் இல்லை.  உன்னுடைய சுயம்வரம் விமரிசையாக நடைபெறும். நானும் அதில் கலந்து கொள்வேன். உன்னை வென்று பரிசாக அடைவேன்.” பீமனுக்கு ஜாலந்திராவின் இந்த திடீர் மாற்றத்தின் காரணம் புரியவில்லை.

“ஐயா, எங்கே நடக்கப் போகிறது! அரசர் வ்ருகோதரர் தான் நான் என் சகோதரிக்குக் கொடுத்தப் புனிதமான வாக்குறுதியை நிறைவேற்றித் தர ஒத்துழைக்க மறுக்கிறாரே! அவர் உதவவில்லை எனில்………….” தயங்கித் தயங்கி பேசினாள் ஜாலந்திரா. அவள் தொண்டையை அடைத்துக் கொண்டது. மீண்டும் மிகவும் கஷ்டப்பட்டு, “ஆஹா! என் மனம் சுக்குச் சுக்காக உடைந்தே விட்டது!” என்று அழும் குரலில் சொன்னாள்.

“சரி! பிரபுவே, நான் உடனே செல்கிறேன். எனக்கு இங்கே என்ன வேலை? அரசர் வ்ருகோதரர் என் வேண்டுகோளை நிறைவேற்றாமல் என்னை வெறும் கையுடன் அனுப்பி வைப்பார் என நான் எதிர்பார்க்கவே இல்லை!” சொல்லிக் கொண்டே எழும் பாவனையில் உட்கார்ந்திருந்த இடத்தை விட்டுச் சற்றே எழுந்தாள் ஜாலந்திரா. அதைப் பார்த்த பீமன் உள்ளம் உருகியது.  “உட்கார், காஷ்யா, உட்கார்ந்து கொள்! என்ன அவசரம்? ம்ம்ம்ம்? நீ உன் அக்காவுக்குச் சத்தியம் செய்து கொடுத்து விட்டாயா?  கிருஷ்ண வாசுதேவனிடம் செய்தியைச் சேர்ப்பதாகச் சத்தியம் செய்திருக்கிறாயா?” என்று அவளிடம் கேட்டான்.

“ஆம், ஐயா, என் தந்தையின் மேல் ஆணையிட்டிருக்கிறேன்.” என்றாள் ஜாலந்திரா. “சரி, சரி, அழாதே இப்போது!” கெஞ்சினான் பீமன். பீமன் தன்னை மிக உறுதி படைத்தவனாகவும், எதற்கும் கலங்காதவனாகவும் நினைத்துக் கொண்டிருந்தான்.  அது பொய் என்பது போல் இப்போது அவன் மனம் இளக ஆரம்பித்து விட்டது. ஜாலந்திராவைப் பார்க்கப் பார்க்க இரக்கம் ஏற்பட்டது. அவள் எவ்வளவு பலவீனமாக அதே சமயம் சிறு பெண்ணாகவும் இருக்கிறாள்; மிகவும் கஷ்டமான ஒரு சூழ்நிலையில் மாட்டிக் கொண்டிருக்கிறாள்.  ஆஹா! இப்போது இவளை இந்த இக்கட்டிலிருந்து காப்பாற்றியே ஆக வேண்டும். உத்கோசகத்தில் காப்பாற்றியதெல்லாம் ஒன்றுமே இல்லை; இப்போது காப்பாற்றி ஆகவேண்டும். அவளுடைய மிருதுவான உடலைப் பற்றி இழுத்துத் தன்னுடன் சேர்த்து அணைத்துக் கொண்டு அவளுக்கு ஆறுதல் கூற விரும்பினான் பீமன்.  ஆனால் ஆரியர்களின் வழக்கம் என்ற ஒன்று இருக்கிறது.  அது அவனைப் பாரம்பரியக் கலாசாரத்திலிருந்து விலக விடவில்லை. இப்போது அவளைத் தொட்டு ஆறுதல் கூறினால் புனிதத்தை அவளும், அவனும் இழந்தவர்கள் ஆகிவிடுவார்கள். அக்னி சாக்ஷியாகத்  திருமணம் என்னும் பந்தம் ஒன்று ஏற்பட்டால் மட்டுமே அவன் அவளிடம் அவ்வாறெல்லாம் நடந்து கொள்ளலாம்.  இத்தகைய விதிகள் அவர்களுக்குக் கட்டாயமாக்கப் பட்டிருந்தன.

ஆனாலும் அவன் உள் மனது தன் பெண்மையின் சாதுரியங்களை எல்லாம் பிரயோகித்து ஜாலந்திரா அவனை உதவி செய்ய வைக்க முயற்சிக்கிறாள் என்று ஒரு பக்கம் கூவிக் கொண்டே தான் இருந்தது.  என்றாலும் அவளை இவ்வளவு வருத்தப்பட வைத்துவிட்டோமே என்னும் எண்ணமும் அவனிடம் தோன்றி அவனைக் கலங்க வைத்தது. இருதலைக் கொள்ளி எறும்பாகத் தத்தளித்தான் பீமன். அவனுள் குற்ற உணர்வே மேலோங்கியது. பொதுவாகவே அவனால் எந்தப் பெண் அழுதாலும், வருந்தினாலும் பொறுக்க முடியாது;  அந்தப் பெண் ஜாலந்திராவாக இருக்கையில் அவனுடைய நேரடிக் கவனிப்புக்கு ஆளாக வேண்டிய அந்த இளவரசி வருந்தினால் அவன் மனம் எவ்வாறு அதைத் தாங்கும்?

“சரி, போகட்டும்! அது வேறு விஷயம்! அப்படியே இருக்கட்டும்.  நான் உனக்குக் கிருஷ்ண வாசுதேவனை நீ சந்திக்க ஏற்பாடு செய்து விடுகிறேன்! சரியா? இப்போது உனக்கு சந்தோஷம் தானே?”

“பிரபுவே, சந்தோஷம், சந்தோஷம்!  வார்த்தைகளில் விவரிக்க ஒண்ணாத சந்தோஷம் எனக்கு ஏற்படுகிறது!” சொன்ன ஜாலந்திரா தன் கண்களில் தேங்கி இருந்த கண்ணீருடன் சிரித்தது மழை பெய்யும் போது மின்னல் ஒளி வீசுவது போல் தோன்றியது பீமனுக்கு. அதைக் கண்ட அவன் மனம் குதித்தது; கூத்தாடியது.

“இதோ பார் காஷ்யா! உன் ஒருத்திக்காகவே நான் இதைச் செய்கிறேன்!” என்றான் பீமன்.

“ஐயா, நான் அதை அறிவேன்! என்னிடம் நீங்கள் எப்படிப்பட்ட அன்பு வைத்திருக்கிறீர்கள் என்பதையும் புரிந்து கொண்டிருக்கிறேன். என்னிடம் உங்களால் கருணையுடன் தான் நடந்து கொள்ள முடியும் என்பதையும் அறிந்திருக்கிறேன்.  உத்கோசகத்தில் நான் நீரில் முழுகி விடாமல் எவ்வளவு திறமையாக என்னைக் காப்பாற்றினீர்கள் என்பதை என்னால் ஒரு நாளும் மறக்க முடியாது. “ இதைக் கொஞ்சம் அந்தரங்கமாக மெல்லிய குரலில் கூறிய ஜாலந்திரா, பின் சிரித்த வண்ணம் மேலும் பேசினாள். “என்னை உங்கள் தோள்களில் தூக்கிச் செல்ல வேண்டியே அந்தப் படகுகளைத் தாங்கள் மூழ்கடித்தீர்கள் என்னும் எண்ணம் என்னிடம் இன்னும் இருந்தாலும்…… நீங்கள் என்னைக் காப்பாற்றியதை என்னால் மறக்க முடியாது.” குறும்புடன் முடித்தாள் ஜாலந்திரா.

“அழகான பெண்களைக் குறித்த என் கருத்தே வேறுவிதமாக இருந்தது;  அவர்கள் அழகாகவும் முட்டாளாகவும் இருப்பார்கள் என்றே எண்ணி இருந்தேன். அவர்கள் தான் இப்படி நினைப்பார்கள்; எல்லாமும் அவர்களுக்காகவே செய்யப்படுவதாக எண்ணுவார்கள்.  ஆனால் காஷ்யா, நீ அழகி மட்டுமில்லை; அற்புதமானவள். அத்தகைய அழகான பெண்களோடு உன்னை ஒப்பிட முடியாது!” என்று அப்போது தான் முதல் முதலாகப் பெண்ணைப் பார்க்கும் சிறுவனைப் போன்ற ஆர்வத்துடன் கூறினான் பீமன்.

“ஆம், ஐயா, நான் அற்புதமானவள் தான்; அப்படி இருந்தால் தான் என்னால் ஓர் அற்புதமான கணவனைத் தேடிக் கொள்ள முடியும்!”

“காஷ்யா, உன் சுயம்வரம் அடுத்த வருடம் நடைபெறுமா?”

“ஆம், ஏன் கேட்கிறீர்கள்?”

அவ்வளவு தாமதத்தைக் கூட பீமன் விரும்பவில்லை. ஏனெனில் அடுத்த வருடம் அவனுடன் வாழ திரௌபதி வந்துவிடுவாள்.  அதற்குள் ஏதேனும் வழி கண்டு பிடிக்க வேண்டும். “காஷ்யா, ஏன் சுயம்வரத்தின் மூலமே உன் திருமணம் நடைபெற வெண்டும் என நினைக்கிறாய்? க்ஷத்திரியர்களுக்கு முக்கியமாக நம் போன்ற அரசகுலத்தவருக்கு காந்தர்வ மணமும் ஏற்புடையதே! உனக்குப் பிடித்த இளவரசனுடன் உடனே  நீ ஏன் காந்தர்வ மணம் புரிந்து கொள்ளக் கூடாது?” பீமன் கேட்டான்.

“நிச்சயமாக இல்லை;  நான் அப்படிச் செய்ய மாட்டேன்.  நான் ஓர் ஆரியப் பெண்! காசி தேசத்து ராஜகுமாரி! என்னுடைய திருமணம் நிறைந்த சபையில் அனைத்து அரசர்களும், ராஜகுமாரர்களும் கூடி இருக்கையில் அவர்களில் ஒருவர், அதுவும் அவர்  நான் விரும்புபவராக இருக்க வேண்டும். என் மனதுக்குப் பிடித்தவரால் நான் வெல்லப்படுவதையே விரும்புகிறேன். திரௌபதி எப்படி உங்கள் சகோதரரால் வெல்லப்பட்டாளோ அப்படியே நானும் வெல்லப்பட வேண்டும்.  அது தான் உயர்குடிப் பிறப்பில் பிறந்த பெண்களுக்கு அழகு. நான் அதைத் தான் விரும்புகிறேன்.”

“ம்ம்ம்ம், இவள் சரியாகவே சொல்கிறாள்.” என்று தனக்குள் நினைத்துக் கொண்டான் பீமன். வெளிப்படையாக அவளிடம், “சரி, சரி, உன் இஷ்டம் போலவே நடக்கட்டும்.  பிடிவாதமான ஒரு பெண்ணிடம் வாக்குவாதம் புரிவதில் பயனில்லை என்பதை நான் உணர்ந்திருக்கிறேன். போகட்டும். இப்போது வந்த வேலையைப் பார்ப்போம். நீ கொண்டு வந்திருக்கும் செய்தி மிக அவசரமானதா? ஆனாலும் நீ கிருஷ்ண வாசுதேவனைப் பார்க்க நாளை இதே நேரம் இங்கே வந்தால் தான் சரியாக இருக்கும்.  அது தான் சிறந்த வழி. இன்று  இப்போது முடியாது. நாளை நான் எப்படியாவது கிருஷ்ணனை இங்கே அழைத்து வந்து விடுகிறேன்.  நீ ரேகாவுடன் இதே போல் நடு இரவில் வந்து விடு! வருவாயா?”

“கட்டாயம் வருவேன்!”என்று மகிழ்ச்சி பொங்கச் சொன்னாள் ஜாலந்திரா.

“ஆனால் கிருஷ்ணன் இங்கே வராமல் இருக்க நூறு காரணங்கள் சொல்லப் போகிறான். ஆனால் நான் எப்படியாவது அவனை இங்கே அழைத்து வருகிறேன்.  முடியவில்லை எனில் அவனைத் தூக்கிக் கொண்டாவது வந்து விடுகிறேன். அவன் வர மறுத்தால் என் வழியில் அவனைத் திருப்புவது தான் சிறந்தது!” என்று கொஞ்சம் கர்வத்துடனே சொன்னான் பீமன்.

“ஆம், ஐயா, நான் நன்கறிவேன்.  அரசர் வ்ருகோதரரைத் தடுக்கும் சக்தி யாரிடம் உண்டு? எவராலும் இயலாது அல்லவோ!” என்ற வண்ணம் பீமன் மனதைக் கலங்கடிக்கும் ஓர் பார்வை பார்த்து அவனைக் கிறங்க அடித்தாள் ஜாலந்திரா. அந்தப் பார்வையில் மயங்கிய பீமன் கள்ளுண்ட வண்டைப் போல் மெய்ம்மறந்தான். அவன் எப்போதும் அடையாத சந்தோஷம் அவனை அடைந்து விட்டதாக உணர்ந்தான்.

1 comment:

ஸ்ரீராம். said...

என்ன ஜாலம்!