Monday, April 13, 2015

கயிலாயத்தில் ஷகுனியும் துஷ்சாசனுமா???? திகைப்பில் பீமன்!

“ஆஹா! ஆஹா! அந்தச் சிகரங்கள் அனைத்தும் நம் கால்களுக்குக் கீழே! எவருமே நுழைய முடியாத அடர்ந்த காடுகள்! எத்தனை விதப் பூக்கள்! நீரோட்டைகள்! அங்கிருந்து வீசும் காற்றின் ஒலி இதோ கேட்கிறதே! விர், விர்ரென வீசும் காற்றின் ஒலி!” என்று சொன்னவாறே அதன் ஆனந்தத்தில் அமிழ்ந்து போனான் ஷகுனி. துஷ்சாசனனோ, “மரங்களின் உச்சிகள் அனைத்தும் தேர்ந்த நடனக்காரியைப் போல் எப்படி ஆடுகின்றன!” என வியந்த வண்ணம் பார்த்தவன், “அதிசயம்! அதிசயத்திலும் அதிசயம்! இது என்ன? நாங்கள் இருவருமே மேகக் கூட்டங்களிடையே புகுந்து செல்கிறோம் போல் தெரிகிறதே! நாங்கள் சொர்க்கத்தின் உச்சிக்கே வந்துவிட்டோமா? சொர்க்கத்தின் கதவுகளைத் தட்டிக் கொண்டிருக்கிறோமா? இது உண்மையா?” என்றெல்லாம் பரவசத்துடன் பிதற்றினான்.

“என்ன ஒரு அழகான காட்சியைக் கண்டு கொண்டிருக்கிறோம். பனி மூடிய மலைச்சிகரங்கள்! அடுக்கடுக்காகக் காணப்படுகின்றனவே! சிகரங்களின் உச்சிகள் அனைத்தும் தங்கத் தகடுகளால் மூடப்பட்டிருப்பது போல் காண்கின்றன! அவை நீள, நெடுகப் பரந்திருக்கின்றன! இந்த உலகின் கடைக்கோடி வரை இந்தச் சிகரங்களே படர்ந்திருக்கின்றனவோ?”

“ஆஹா! அதோ ஒரு சிகரம்! எல்லாவற்றையும் விட உயர்ந்து ஓங்கி விண்ணைத் தொடும் உயரத்தில் ஒரு சிகரம்! அது ஒரு லிங்கம் போன்ற அமைப்புடன் காணப்படுகிறதே! அதன் மேலெல்லாம் தங்கத்தை வேய்ந்தது போன்ற தோற்றம். தங்கத்தை உருக்கி ஊற்றி இருக்கின்றனரா? “ என்று வியந்து பேசினான் ஷகுனி.

அப்போது அந்த அகோரி, “அது தான் திருக்கயிலைமலை! அங்கே தான் எல்லாம் வல்ல மஹாதேவனும், அவனுடைய அம்பிகையுமான மாதா காளி, துர்கா மாதா, உமா தேவி என்றெல்லாம் போற்றத் தக்கவள் இருக்குமிடம். நீங்கள் இருவரும் மிகவும் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறீர்கள்.  இல்லை எனில் இந்த மலையையோ, இந்தச் சிகரத்தையோ காண முடியாது. புனிதத்திலும் புனிதம் வாய்ந்த இந்தக் கயிலையைத் தரிசிக்கும் பேறு பெற்றிருக்கிறீர்கள். உங்கள் ரதத்தை விட்டுக் கீழே இறங்குங்கள். பிறப்புக்கும், இறப்புக்கும், படைப்புக்கும், அழிவுக்கும் காரணமான அந்த சர்வ வல்லமை படைத்த மகேசனையும் அவன் தேவியையும் கீழே விழுந்து சாஷ்டாங்கமாக வணங்குங்கள். உங்கள் இருவருக்கும் அவர்கள் தரிசனம் கொடுக்க வேண்டும் எனப் பிரார்த்தியுங்கள்.” என்று கூறி இருவரையும் வணங்க வைத்தான் அகோரி.

“ஆம், ஐயா, நாங்கள் ரதத்திலிருந்து இறங்கி ஈசனையும், தேவியையும் பிரார்த்தித்துக் கொண்டிருக்கிறோம். எங்களைச் சுற்றிக் கொண்டு மேகங்கள் செல்கின்றன. அங்குமிங்கும் வேகமாக நகர்கின்றன.” என்றான் ஷகுனி. அப்போது மிகவும் அடங்கிய குரலில் துஷ்சாசனன், “அதோ! மகேசன்!, அதோ தேவி துர்கா மாதா! ஒரு சமயம் அருள் பார்வையும் ஒரு சமயம் கோபப்பார்வையும் பார்க்கும் காளியாகவும் காட்சி தருகிறாள். ஆம்! அதோ பாருங்கள்!” என்றான்.

“ஆஹா! நாங்கள் ஆசீர்வதிக்கப்பட்டோம். தன்யன் ஆனோம். தெய்விகத் தம்பதிகளான பார்வதியும், பரமேஸ்வரனுமே எங்களுக்குக் காட்சி கொடுக்கின்றனர். அம்மையே, அப்பனே, நாங்கள் எங்கள் பணிவான நமஸ்காரங்களை உங்களுக்குச் சமர்ப்பிக்கிறோம். தயவு செய்து எங்களை ஆசீர்வதியுங்கள். உங்கள் கருணையை எங்களுக்கு வர்ஷியுங்கள்!” என்று வேண்டினான் ஷகுனி.

அப்போது எங்கே இருந்தோ ஒரு குரல், மிக மிக ஆழத்திலிருந்து பேசுவது போன்ற தொனியில், “என்ன வேண்டும் உனக்கு?” என்று கேட்டது. ஆழத்திலிருந்து பேசுவது போல் தோன்றினாலும் அதன் தொனி உரத்து எதிரொலிக்கவே அது மூவுலகையும் நிறைப்பது போல் தோன்றவே அதிர்ந்தார்கள் மாமனும், மருமகனும். அந்த மலைச் சிகரங்களிலும், அடர்ந்த காட்டுக்குள்ளும் அந்தத் தொனி எதிரொலித்துக் கொண்டிருந்தது. சிறிது நேரம் வரை யாரும் எதுவும் பேசமுடியாமல் அந்தத் தொனியே கேட்டுக் கொண்டிருந்தது. துஷ்சாசனனுக்கு அது இடியோசை போல் கேட்டது. தன் தலையை உலுக்கிக் கொண்டான். தான் காண்பது கனவாக இருக்குமோ என்னும் எண்ணத்தில் இருந்தவன் தன்னைத் தானே உலுக்கிக் கொண்டும் பயனில்லை.

தன்னை எவராலும் வெல்ல முடியாது என நினைத்துக் கொண்டிருந்த துஷ்சாசனன் இப்போது தன் இதயம் பயத்திலும், அதிர்ச்சியிலும் துடிப்பதை உணர்ந்தான்.  வேகமாக அவன் இதயம் துடித்தது. அதை அதிகரிக்கும் விதமாக இப்போது துர்கா மாதாவின் குரல் கேட்டது. “என்ன வேண்டும் உனக்கு?” இதைக் கேட்டது சர்வ வல்லமை படைத்த அந்த தேவி என்பதை உணர்ந்த துஷ்சாசனன் இன்னும் அதிர்ச்சி அடைந்தான். அப்போது அகோரி அவர்களைப் பார்த்து, “நான் இப்போது சொல்லப் போகும் இந்த பக்திப்பாடலை இருவரும் சேர்ந்து சொல்லுங்கள். அல்லது ஈசன் தன் மூன்றாவது கண்ணான நெற்றிக்கண்ணைத் திறந்துவிட்டால் அனைவரும் சாம்பலாகி விடுவோம்.” என்றான்.  இருவரும் நடுங்கினார்கள். அகோரி பாட ஆரம்பித்தான்:

மூவுலகுக்கும் தலைவனே,
படைத்தல், காத்தல், அழித்தல் என்னும் தொழில்களின் முதல்வனே!
பிரபஞ்சத்தையே ஆட்டி வைக்கும் உன்னுடைய நடனத்தில்
நீ ஓரடி எடுத்து வைத்ததுமே
இந்தப் பிரபஞ்சம் உருவாகிறது: பஞ்சபூதங்கள் தோன்றுகின்றன!
அந்த இடைவிடா நடனத்தின் இன்னொரு அடியிலோ
இந்தப் பிரபஞ்சம் அழிந்து சாம்பலாகி விடுகிறது!
ஐயனே! எங்கள் இந்தத் துதியால் நீ மகிழ்ந்து விடு! மகிழ்ந்து விடு!

ஷகுனியும் துஷ்சாசனனும் ஒரு வார்த்தை விடாமல் திரும்பச் சொன்னார்கள்.

ஐயனே! சர்வ வல்லமை பொருந்தியவனே! எங்கள் இறைவனே! மூத்தவனுக்கும் மூத்தவனே!
உன்னுடைய இடைவிடா நடனமானது அண்ட பகிரண்டங்களையும் விரிவாக்குகிறது.
ஆகாயத்தில் ஒளிரும் நக்ஷத்திரங்கள், சூரிய, சந்திரர்கள், ஒன்பது கிரஹங்கள் அனைத்தும் உனக்குக் கட்டுப்பட்டு உன் வலிமையில் அடங்கி இருக்கின்றனர்! இவர்கள் மட்டுமா? தேவாதி தேவர்களும் கூட உன் வலிமைக்கு அடங்கியவர்களே!
ஐயனே! எங்கள் இந்தத் துதியால் நீ மகிழ்ந்து விடு! மகிழ்ந்து விடு!

இருவரும் இதை அப்படியே எதிரொலிக்க இப்போது தேவியைக் குறித்துப் பாட ஆரம்பித்தான் அகோரி.

1 comment:

ஸ்ரீராம். said...

நம்ப முடியவில்லை....இல்லை....இல்லை!