Tuesday, January 15, 2013

நிராசையில் துருபதன்!


“ஜராசந்தனின் வேண்டுகோளா?”  கண்ணன் கொஞ்சம் ஆச்சரியத்துடனேயே கேட்டான். 

“ஆம்” என்ற துருபதன் தொடர்ந்து,” அவனுடைய பேரன் மேஹசந்திக்கு திரெளபதியை மணமுடித்துத் தரும்படி கேட்டிருக்கிறான்.  அவன் மட்டும் என் பக்கம் நின்றான் எனில் குரு வம்சத்தினரை ஒரு கை பார்த்துவிடுவேன். அவர்களின் பலம் எனக்குத் துச்சம்!” என்றான் துருபதன்.

“மாட்சிமை பொருந்திய மன்னரே!  ஜராசந்தனோடு ஒரு உறவு ஏற்படுத்திக் கொள்வதும், அவனுடைய துணையை நாடுவதும் எதில் கொண்டு விடும் என்பதை நீங்கள் நன்கு அறிந்திருக்கிறீர்களா?  சேதி நாட்டு மன்னன் தாமகோஷனுக்கும், விதர்ப்ப நாட்டு மன்னன் பீஷ்மகனுக்கும் நேர்ந்தது தெரியுமா உங்களுக்கு?  ஜராசந்தனோடு உறவு ஏற்படுத்திக் கொள்வது நம்மை நாமே மரித்துக் கொள்வதற்குச் சமம்.  அவன் அதர்மத்தின் வழியிலேயே செல்கிறான்.”

“ஆஹா, வாசுதேவா, பீஷ்மர் மேலுலகம் சென்ற பின்னர் துரியோதனன் மாறுபட்டு வித்தியாசமாக நடந்து கொள்வான் என எதிர்பார்க்கிறாயா?” பின் ஏதோ நினைத்துக் கொண்டவனாகத் திடீரென சந்திப்பு முடிவடைந்தது என்பதைக் குறிக்கும் விதமாகக் கண்ணனிடம், “சரி, கண்ணா, நீ செல்லலாம்;  நான் நீ கூறியவற்றை நினைவில் வைத்துக் கொள்கிறேன்.  என்னால் இயன்றதைச் செய்கிறேன்.  என்னுடைய பிரதிக்ஞைக்கு மாறாக எதையும் செய்ய மாட்டேன் என நீ நம்பலாம்.”  என்று முடித்தான்.

ஆனால் கண்ணன் தயங்கினான்:  பின்னர் துருபதனைப் பார்த்து, “மன்னரே, ஜராசந்தனின் பேரனை மணந்து கொண்டு கிருஷ்ணா சந்தோஷமாகக் குடும்பம் நடத்துவாள் என நீங்கள் நினைக்கிறீர்களா?” என்று கேட்டான்.
“எனக்குத் தெரியவில்லை கண்ணா!  ஏன், நீயே திரெளபதியிடம் நேரில் சந்தித்துக் கேட்டுவிடேன்.  எனக்கு ஒன்றும் ஆக்ஷேபணை இல்லை.  அவளும் நீ என்னுடைய கோரிக்கையை ஏற்பதில் தான் என் சபதம் நிறைவேறும் என பரிபூர்ணமாய் நம்புகிறாள்.”  என்றான் துருபதன்.

கண்ணன் ஆச்சரிய வசப்பட்டதோடு அல்லாமல் துருபதன் தன் மேல் வைத்திருக்கும் நம்பிக்கையைக் கண்டு உணர்ச்சி வசப்பட்டான். அவன் கண்களில் நீர் கோத்தது.  “மாட்சிமை பொருந்திய மன்னரே, நீர் என் மேல் வைத்திருக்கும் அதீதமான நம்பிக்கையில் நான் நெகிழ்ந்து போனேன்.  உங்களுக்கு உதவி செய்ய நான் தயாராக இருக்கிறேன்.  எவ்வகையிலும் உதவவும் நினைக்கிறேன்.  ஆனால் நான் இப்போது எடுத்திருக்கும் முடிவு சரியானதே என என் உள் மனம் சொல்கிறது.  ஆனால் உங்கள் மனம் மிகவும் கசந்து போய் இருக்கிறதோ என எண்ணுகிறேன்.  தயவு செய்து நான் வெளிப்படையாய்க் கேட்பதற்கு மன்னிக்கவும் மன்னரே. அதனால் தான் ஒரு கொடூரனின் பேரனுக்கு உங்கள் அருமை மகளைத் திருமணம் செய்து கொடுக்கும் அளவுக்கு நீங்கள் துணிந்துவிட்டீர்களோ என நினைக்கிறேன்.”

“இல்லை கண்ணா, இல்லை.  எங்களுக்கு அன்பும் இல்லை, வெறுப்பும் இல்லை.  எல்லாமே போய்விட்டது.  இப்போது எங்கள் அனைவரின் வாழ்க்கையிலும் ஒரே ஒரு லக்ஷியம் தான்.  அது தான் துரோணரை எவ்விதத்திலாவது பழி வாங்குவது.  எனக்கும் என் நாட்டு மக்களுக்கும் அவர் செய்த துரோகத்தை எங்களால் மறக்க இயலவில்லை.   தகுதியில்லா ஒன்றுக்கு ஆசைப்பட்டு துரோணர் செய்த துரோகத்திற்குப் பழிவாங்கவேண்டும் என்றே நாங்கள் உயிர் வாழ்கிறோம்.  அதைத் தவிர எங்களுக்கு வேறு நினைப்பு இல்லை. இரவிலும், பகலிலும், தூங்குகையிலும் விழித்திருக்கையிலும் அது ஒன்றே எங்கள் கனவு, எங்கள் விருப்பம், வாழ்க்கையின் குறிக்கோள்.  இதை அடைவதற்காக எங்கள் வாழ்க்கையில் எதை வேண்டுமானாலும் நாங்கள் தியாகம் செய்யும் அளவுக்குப் பக்குவம் அடைந்திருக்கிறோம்.”

“மன்னரே, அதற்காக, அழகியும், இளமையானவளும், புத்திசாலியும் தன் வாழ்க்கையைத் தானே தீர்மானிக்கும் உறுதியும் கொண்ட ஒரு இளவரசியை, கொடூரனும், காமாந்தகாரனும், அனைவரையும் அடிமையாக்கி வாழ்பவனும் ஆன ஜராசந்தனின் பேரனுக்குத் திருமணம் செய்து கொடுத்து அவள் வாழ்க்கையை ஒன்றுமில்லாமல் ஆக்குவது சரியல்ல.  இது எவ்வகையிலும் கிருஷ்ணாவுக்கு மகிழ்ச்சியைத் தராது.  அந்த எண்ணமே என்னுள் நடுக்கத்தைத் தோற்றுவிக்கிறது.”

“கண்ணா, என் மகளை நான் நன்கறிவேன்.  அவள் எப்போதும் என் எண்ணப்படியே நடப்பாள்.  எனக்கு ஏதேனும் ஒன்று எனில் அதற்குப் பரிகாரம் தேட முற்படுவாள்.  எங்கள் எண்ணம் ஈடேறாமல் நாங்கள் மரிக்க நேர்ந்தால் அவளும் எங்களுடன் சேர்ந்து தன்னைத் தானே எரித்துக் கொள்வாள்.  உடலாலும், மனத்தாலும் அவள் என் எண்ணத்தை ஈடேற்றுவது தவிர வேறெதையும் நினைப்பதில்லை.  அதோடு கூடத் திருமணம் என்று ஆனபின்னர் மேஹசந்தியும் மனம் மாறலாம் அல்லவா?  மேலும் திரெளபதியால் ஒரு நல்ல மனைவியாக இருக்க இயலும்.  ஒரு நல்ல மனைவி தன் கணவனை மாற்ற முடியுமே!  இப்போதே என்ன கூற முடியும்?”

“இவை எல்லாம் என்று முடியும்?” கண்ணன் மனம் மிகவும் நொந்து போனது அந்த வார்த்தைகளில் தெரிந்தது.

“துரோணர் அழிய வேண்டும்;அல்லது நாங்கள் அழிய வேண்டும்.  அதுவரை இது இப்படித்தான் கண்ணா!” திட்டவட்டமாய்த் தெரிவித்த துருபதன், “உனக்கு திரெளபதி இந்தத் தியாகம் செய்யத் தயாராக இருக்கிறாளா என்பதில் சந்தேகம் இருக்கிறது அல்லவா?  நீ ஏன் அவளை நேரில் சந்தித்துப் பேசக் கூடாது?  ஒருவேளை அதன் பின்னர் உன் வழியை, உன் முடிவை நீ தீர்மானிக்கலாமோ என நினைக்கிறேன்.  அவள் மிகவும் மன உறுதி படைத்த ஒரு பெண்மணி.  தைரியமான பெண்.  ஆஹா, அவளும் ஒரு மகனாக இருந்திருக்கக் கூடாதா என நினைக்கிறேன்.”  பெருமூச்சு விட்டான் துருபதன்.
Thursday, January 10, 2013

கண்ணன் மறுக்கிறான்!


ஆம், துரோணர் தன் மகனை துரியோதனனுக்கு அளித்து வரும் ஆதரவில் இருந்து விலகச் சொல்லிக் கேட்டிருக்கலாம்;  ஏன் அவனிடம் அதிக அன்பும், பாசமும் மிகுந்த துரோணர் குமாரனை வற்புறுத்தி இருக்கலாம்.  தன் ஆதரவு யுதிஷ்டிரனுக்கும் அவன் சகோதரர்களுக்கும் எனத் திட்டவட்டமாகக் கூறி இருக்கலாம்.  ஆனால்??? அவர் அவ்விதம் செய்யவில்லை.  கிருஷ்ணனுக்கு இப்போது நிலைமை தெள்ளத் தெளிவாகப்புரிந்தது.  மெல்ல யோசனையுடன் அவன் பேசினான்.

"நான் தாத்தா பீஷ்மரைச் சந்தித்தேன்.  குரு வம்சத்தினரின் தாயாதிச் சண்டையைத் தவிர்க்க வேண்டியே பாண்டவர்களை ஹஸ்தினாபுரத்தில் இருந்து வாரணாவதம் அனுப்பியதாகவும், இதன் மூலம் பாண்டவர்களின் உயிர் காக்கப்படும் என நம்பியதாகவும் தெரிவித்தார்.  "

"ஆஹா, வாசுதேவா, நீ இன்னமும் துரோணரைப் புரிந்து கொள்ளவே இல்லை என்பது இதன் மூலம் தெரிகிறது." எனச் சொன்னான் துருபதன்.

"இது ஒரு கஷ்டமான சூழ்நிலை என்பதைப்புரிந்து கொள்கிறேன். குழப்பமானதும் கூட.  மாட்சிமை பொருந்திய மன்னரே, எப்படி இருந்தாலும் என்னால் உமக்கு எந்தப் பலனும் இருக்கப் போவதில்லை.  கங்கைக்கரையிலும், யமுனைக்கரையிலும் என் வாழ்நாள் முழுதும் கழிவதற்கும் நான் விரும்பவில்லை.  யாதவர்களுக்கு துவாரகை நகரம் மிகப் பிடித்துவிட்டது.  அங்கிருந்து அவர்களை இனி வெளியேற்றுவது மிகக் கடினம்.  மேலும் நான் குரு வம்சத்தினருடன் போர் செய்யப் போவதில்லை.  அது மிகவும் அதர்மமான ஒன்று."

"உன்னுடைய தர்மம் என்பது தான் என்ன, வாசுதேவா?" கொஞ்சம் எரிச்சலுடனேயே கேட்டான் துருபதன்.

"முறைகேடில்லா நேர்மையான, நீதிக்குக் கட்டுப்படும் அரசுகளையும், அரசர்களையும் ஊக்குவிப்பது;  அவர்களுக்கு ஆதரவளிப்பது.  நேர்மை எங்கே இல்லையோ அங்கே ஒழுக்கமும் இருக்காது. "

அவ்வளவு நேரமும் அடக்கி வைத்திருந்த கோபம் மிக வேகத்துடன் கிளம்பியது துருபதனுக்கு.  அடுத்து வந்த அவன் பேச்சிலிருந்து அது வெளிப்பட்டது.   ஆவேசம் கொண்ட அலைகடலின் அலைகள் கரையில் வந்து வேகமாய் மோதுவதைப் போல அவனுடைய வார்த்தைகள் சீற்றத்துடன் வெளிப்பட்டன. "வாசுதேவா, நேர்மையற்ற ஒன்றை நான் இன்று வரை, இந்த நிமிடம் வரை செய்ததில்லை.  என்னுடைய அரச தர்மம் எதுவோ அதை நான் இந்த நிமிடம் வரை கடைப்பிடித்தும் வருகிறேன்.  பிராமணர்களையும், மஹரிஷிகளையும் மிகவும் மதித்துப் போற்றி வணங்கி வருகிறேன்.  பழைய சம்பிரதாயஙகளையோ, சடங்குகளையோ இகழாமல் பின்பற்றி வருகிறேன்.  என் தேசத்து மக்கள் மகிழ்வுடனும் திருப்தியுடனும் இருக்கிறார்களா என்பதைக் கண்காணீத்து வருகிறேன்.  அவர்கள் மகிழ்ச்சியில் நான் திருப்தி அடைகிறேன்.  என் அரசாட்சியில் என்னுடைய குடிமகன்கள் எவரும் பட்டினி கிடக்காமல் பார்த்துக் கொள்கிறேன். நீ மட்டும் என் உதவிக்கு வந்தாயானால், நாம் இருவரும், நம் பலமும் சேர்ந்து ஆர்யவர்த்தத்தைச் சொர்க்கபுரியாக்குவதோடு உன்னதமான நிலைக்கும் கொண்டு செல்லலாம். " தன்னுடைய பேச்சை எல்லாம் பரிதாபம் கலந்த நோக்குடன் கேட்டுக் கொண்டிருக்கும் கண்ணனிடம் தன் மனதைத் திறந்து காட்டிய துருபதன் அவனுடைய உடனடியான பதிலையும் எதிர்பார்த்தான்.

"மாட்சிமை பொருந்திய மன்னரே, எங்கோ தொலைதூரத்தில் இருக்கும் யாதவர்கள் எந்த வகையில் பாஞ்சாலத்துக்கு உதவ முடியும் என்பதை என்னால் இன்னமும் புரிந்து கொள்ள இயலவில்லை."

"நீ என் பக்கம் எனக்கு ஆதரவு மட்டும் காட்டி நில் கிருஷ்ணா!  உன் வலுவான துணையுடன் நான் அதர்மத்தை இன்னமும் வலுவாக எதிர்த்து நிற்பேன்.  துரியோதனனுக்கும், அவன் சகோதரர்களுக்கும் துரோணர் கொடுக்கும் ஆதரவு தர்ம விரோதமான ஒன்று.  நியாயத்துக்குப் புறம்பானது.  நீ மட்டும் எங்கள் வேண்டுகோளுக்குக் கட்டுப்பட்டு ஒத்துக்கொண்டால், பாஞ்சாலம் வலிமை பொருந்தியதாக விளங்கும்.  அதன் பின்னர் பீஷ்மர் என்னுடன் சமாதான உடன்படிக்கை செய்து கொண்டு துரோணரை விலக்கி வைக்கவும் முன் வரலாம்."

"துரோணரை மாற்ற வேறு வழியே இல்லையா?"  கண்ணன் கேட்டான்.

"ஹா,"  மிகுந்த மனக்கசப்புடன் சிரித்த துருபதன், "துரோணரை மாற்றுவதா?  நான் மிகச் சிறு வயதிலிருந்து அவரை நன்கறிவேன். மிகவும் அகந்தையுள்ளவர் மட்டுமல்ல; எவரையும் எதற்காகவும் எளிதில் மன்னிக்காதவரும் கூட.  அது மட்டுமா? அவருக்குக் கோபம் வந்துவிட்டால், ஒருவர் மேல் வெறுப்பு வந்துவிட்டால், எளிதில் அவரை அமைதியடையச் செய்யவும் இயலாது.  அவரால் இயன்றால், முடிந்தால், அவருக்கு இது தான் ஒப்பும் எனத் தோன்றினால், இவ்வுலகை எரிக்கக் கூடத் தயங்க மாட்டார்."

"மன்னரே, மன்னரே, மன்னரே, அமைதி அடையும்.  ஒருவேளை நீங்கள் மிகவும் கடுமையாகப் பேசி விட்டீர்களோ?" கிருஷ்ணன் சாந்தமாய்க் கேட்டான்.  "எவ்வளவு கடின மனதுள்ளவனாக இருந்தாலும் அந்த மனிதனுக்குள்ளும் எங்கோ ஓர் ஓரத்தில் மென்மையும் இருக்கும்.  ஏதோ ஒன்றுக்கு மனம் இளகுவான். அது ஒரு மகத்தான காரணத்துக்காகவும் இருக்கலாம்."

"ம்ஹூம், வாசுதேவா, உன்னுடைய இந்தப் பேச்சுக்களின் மூலம் துரோணர் போன்ற ஒரு மனிதனை நீ இன்று வரை சந்திக்கவே இல்லை என நினைக்கிறேன்.  சரி, இதன் மூலம் நீ என்னுடைய வேண்டுகோளை மறுத்துவிட்டாய் என்றே கொள்ளலாமா?"

"என் மனம் இதை ஏற்க மறுக்கிறது மாட்சிமை பொருந்திய மன்னரே.  இதை ஒத்துக்கொள்ளத் தகுதி உனக்கு இல்லை என்றும் கூறுகிறது.  நான் தக்க காரணத்தைத் தேடிக் கொண்டிருக்கிறேன்."

"அப்படி என்றால், நீ திரெளபதியை மணக்க ஒத்துக்கொள்ளவில்லை எனில், நான் வேறு வழிகளை நாடத்தான் வேண்டும்." கண்ணனின் முன்னால் வயதில் மிகவும் இளையவன் முன்னால் தன் தோல்வியை ஒத்துக்கொள்ள வேண்டி இருக்கிறதே என்ற வருத்தம் துருபதன் குரலில் தெரிந்தது.

"நிச்சயமாய்!  நீங்கள் திரெளபதி போன்ற அழகு வாய்ந்த இளவரசிக்கு உகந்த மணாளனைத் தேர்ந்தெடுங்கள். அது தான் நன்மை பயக்கும்."

"எனில் நான் ஜராசந்தனின் வேண்டுகோளை ஏற்கும்படியாய் இருக்கும்."  துருபதன் இதைக் கூறிக்கொண்டே கிருஷ்ணனின் ஜன்ம விரோதியான ஜராசந்தனின் வேண்டுகோளைத் தான் ஏற்கப் போவதாய்க் கூறுவது கண்ணனை எந்த விதத்தில் பாதிக்கிறது என்பதைக் கூர்ந்து கவனித்தான்.


Sunday, January 6, 2013

துருபதன் மனம் திறக்கிறான்.


ஹூம், கிருஷ்ணா!  நீ சொல்வது சரியே!  எனினும் துரோணரும், அவருடைய சீடர்களும்  எதிர்பாராமல் எவருடைய தூண்டுதலும் இல்லாமல் என்னைத் தாக்கிய போதும்  சரி,  என்னைச் சிறைப்படுத்தி, என்னிடமிருந்து என் நாட்டைப் பிடுங்கியபோதோ, என் நாட்டு மக்களை ஓட ஓட விரட்டியப்போதோ எவரும் இது குறித்துச் சிந்திக்கக் கூட இல்லை.  நான் தன்னந்தனியனாக நின்றேன்!”  துருபதனின் மனக்கசப்பு அவன் குரலில் தெரிந்தது.

“அது முற்றிலும் தவறே!  “ கண்ணன் தன் சொல் வன்மையால் துருபதனின் மனக்கசப்பை நீக்க முயன்றான் எனலாம்.  “தனக்கு ஏற்பட்ட தனிப்பட்ட அவமானத்தை துரோணர் பெரிய மனதோடு மன்னித்து மறந்திருக்க வேண்டும்.  அதைப் பெரிது படுத்தி இருக்கக் கூடாது.  ஹூம்,  ஆயுதப் பயிற்சி பெற்ற ஒரு  சிறந்த அந்தண ரிஷியான அவர் இப்படி நடந்திருக்கவே கூடாது.  உண்மையான சிறந்த ப்ராமணனுக்கு கோபத்தை வெல்வது தான் சிறந்தது எனத் தெரிந்திருக்கும்.  துரோணருக்கும் தெரியாமல் இருந்திருக்க முடியாது.  ஆனாலும் அவர் தன் ஆயுதப் பயிற்சியை இவ்விதம் பயன்படுத்தித் தன் கோபத்தைக் காட்டி இருக்கக் கூடாது.  பிராமணர்கள் ஆயுதப் பயிற்சி பெற்றாலும் மற்றவருக்கெதிராக ஒரு நாளும் ஆயுதப் பிரயோகம் தேவையில்லாமல் செய்யக் கூடாது என்பதை மறந்துவிட்டார்.  மற்றவர்கள் கண்ணெதிரே நல்லதொரு குருவாக, வழிகாட்டியாக அமைய வேண்டியவர் கோபத்தில் தன்னை, நிதானத்தை இழந்து விட்டார்.  ஆனால் ஒரு விஷயம் மட்டும் நிச்சயமாக நான் அறிவேன் மன்னரே!  தன் குருவின் ஆணை இல்லை எனில் அர்ச்சுனன் ஒருக்காலும் உங்களை இவ்விதம் நடத்தி இருக்க மாட்டான்.  வேறு எவரும் உங்களைக் கேவலப்படுத்த அனுமதித்திருக்கவும் மாட்டான்!”

சிறிது நேரம் வரை தீர்க்கமாகத் தரையையே பார்த்த வண்ணம் அமர்ந்திருந்தான் துருபதன்.  பின்னர் தலை நிமிர்ந்து மீண்டும் நெரிந்த புருவங்களோடு கிருஷ்ணனைப் பார்த்தான்.  “துரோணரும் அவருடைய சீடர்களும் ஹஸ்தினாபுரத்தை ஆண்டு வரும் வரையில் பாஞ்சாலத்துக்கும், குரு வம்சத்துக்கும் இடையில் அமைதி என்னும் பேச்சுக்கே இடமில்லை!” எனத் தன் தீர்மானமான குரலில் அறிவித்தான்.  பின்னர் திடீரெனக் கிருஷ்ணனிடம் கடுமையான குரலில், “ நீ திரெளபதியை மணக்கச் சம்மதிக்கவில்லை எனில் நான் வேறு எந்த ராஜகுமாரனையாவது பார்க்க வேண்டும்!” என அறிவித்தான்.

“மாட்சிமை பொருந்திய மன்னா!  உங்கள் வேண்டுகோள் மிகவும் அற்புதமானது.  பெருந்தன்மை கொண்டது.  தங்கள் உதாரகுணத்தையும் எடுத்துக் காட்டுவது.  ஆனால் யாதவர்களுடன் நீங்கள் செய்து கொள்ள ஆசைப்படும் இந்த உறவினால் என்ன பலன் விளையும்?  நீங்கள் எங்களை மத்ராவிலேயே மீண்டும் குடியேற உதவினால், எங்கள் உதவிகள் எதுவும் உங்களுக்குத் தேவையில்லை எனும் பக்ஷத்தில்,  மகத நாட்டுப் பேரரசன் ஜராசந்தனின் கோபத்தை உங்கள் மேல் திருப்பி விடுவோம்.  அது ஒன்று தான் கிடைக்கப் போகும் ஒரே நன்மை!”  அனைவரையும் கவர்ந்திழுக்கும் சிரிப்பு கண்ணனின் முகத்தில் படர்ந்தது.

துருபதன் தனக்குத் தானே தலையை ஆட்டிக் கொண்டான்.  “அப்படி ஜராசந்தன் பாஞ்சாலத்தை ஊடுருவினால், பீஷ்மர் பார்த்துக் கொண்டு சும்மா இருக்க மாட்டார்.  ஹஸ்தினாபுரத்தைக் காக்க வேண்டி அவர் ஜராசந்தனை எவ்வகையிலும் தடுப்பார்.  துரோணரைக் குறித்தோ, அவருடைய பகை குறித்தோ அச்சமயம் அவர் சிந்திக்கக் கூட மாட்டார்.  ஆகவே நாங்கள் வலிமையோடு தான் இருக்கிறோம்!”  என்றான் துருபதன்.  மேலும் தொடர்ந்து, “ஆனால் நான் பீஷ்மரின் உதவியை விரும்பவில்லை.  அதைக் குறித்துக் கவலைப்படவும் இல்லை.  நீ மட்டும் என் வேண்டுகோளை ஏற்றுக் கொண்டாயானால், நான் எதைக் குறித்தும் கவலை கொள்ள மாட்டேன்.  இருவரையும் ஒரு கை பார்த்துவிடுவேன்.”

“மன்னரே, நாம் பீஷ்மருடன் உடன்படிக்கை செய்து கொள்வது நல்லது அல்லவா?  ஜராசந்தனைக் குறித்தும் கவலைப் பட வேண்டியதில்லை.  பீஷ்மருக்கும் இது சம்மதமாக இருக்கும்.”

“நீ தவறு செய்கிறாய் வாசுதேவா!  துரோணருக்கு அங்கே உள்ள செல்வாக்கின் ஆழம் உனக்குப் புரியவில்லை.  ஆகவே என்னுடன் எந்த உடன்படிக்கையும் செய்துகொள்ள துரோணர் விட மாட்டார்.  அதே சமயம் நானும் அதே மனநிலையில் தான் உள்ளேன்.  எதற்காகவும், எப்போதும், எந்நிலையிலும் துரோணருடன் எந்த உடன்படிக்கையும் ஏற்பட நான் சம்மதிக்க மாட்டேன்.  ஹஸ்தினாபுரத்துடன் உடன்படிக்கை என்பது துரோணருடன் உடன்படிக்கை செய்து கொள்வதாகும்!”  துருபதன் உறுதியாகக் கூறினான்.

“ஆஹா, பாண்டவர்கள் மட்டும் உயிருடன் இருந்திருந்தால்!”  கண்ணன் தன் கருத்தைக் கூறினான்.

“அப்படி ஒன்றும் பெரிய வித்தியாசம் ஏற்பட்டுவிடப் போவதில்லை, வாசுதேவா!  பாண்டவர்கள் ஐவரும் ஒருநாளும் என்னுடன் சிநேகிதமாக இருந்திருக்கப் போவதில்லை.  அவர்கள் துரோணருக்கு மிகவும் கடன்பட்டவர்கள்.  குரு பக்தியில் சிறந்தவர்கள்.  அவருக்கு துரோகம் நினைக்க விரும்ப மாட்டார்கள்.  ஒருவேளை நியாயம், அநியாயம் புரிந்து கொண்டு அவர்கள் என்னுடன் சிநேகிதம் பாராட்டினாலும் துரோணர் அவர்களை சும்மா விட மாட்டார்.  துரியோதனன் மூலம் பாண்டவர்களை எப்படியேனும் அழித்துவிடுவார்.  அவருக்கு என்னுடைய பகைமை தான் முதல் இடத்தில் உள்ளதே தவிர, ஐந்து சகோதரர்களைக் குறித்து அவர் கவலைப்பட மாட்டார். “ என்ற துருபதன் மேலும் தொடர்ந்தான்.

“எனக்குக் கிடைத்த தகவல்களின் படிப் பார்த்தால் துரோணருடைய ஆதரவைப் பெற்றதாலேயே துரியோதனனை எதிர்க்க முடியாமல் பீஷ்மர் அவர்களை நாட்டை விட்டு வெளியேற்றியதன் மூலம் அவர்கள் இறக்கக் காரணமாகிவிட்டார் எனச் சொல்கின்றனர்.”   கிருஷ்ணன் துருபதன் எவ்வளவு கெட்டிக்காரனாகவும் திறமைசாலியாகவும், செய்திகளை உடனுக்குடன் பெறுவதில் வல்லவனாகவும் இருப்பதைப் புரிந்து கொண்டான்.  ஆம், துருபதன் சொல்வது சரியே.  துரோணர் மட்டும் ஐந்து சகோதரர்களையும் முழு மனதோடு ஆதரித்திருந்தாரானால் அவர்கள் நாட்டை விட்டு வெளியேற்றப் பட்டிருக்க மாட்டார்கள்தான். அஸ்வத்தாமாவுக்கும் துரியோதனனுக்கும் உள்ள ஆழ்ந்த நட்பின் காரணமாக, அஸ்வத்தாமாவின் வற்புறுத்தலுக்கு இணங்கி துரோணர் ஐந்து சகோதரர்களையும் நிர்க்கதியாய் விட்டு விட்டார்.

Friday, January 4, 2013

துருபதனின் வேண்டுகோளும், கண்ணனின் மறுப்பும்!


திரெளபதியின் அழகைக் கண்டதுமே கண்ணன் ஸ்தம்பித்துப் போய்விட்டான் என்று சொன்னால் அது மிகையில்லை.  அழகைக் கண்டவிடத்தில் ஆராதிக்கும் மனமுள்ள கண்ணனுக்கு இந்தப் பெண்ணின் அழகைக் கண்டதும் ஏற்பட்ட வியப்பு மிக அதிகம் தான்.  திரெளபதி உயரமாகவும், அழகாகவும் மட்டுமில்லாமல், எழில் வாய்ந்த உடலமைப்பும், நளினமான நடையுடனும் விளங்கினாள்.  அவளது ஒவ்வொரு அசைவிலும் அவளின் எழில் மட்டும் புலப்படவில்லை.  அவளுடைய தன்னம்பிக்கையும், மன உறுதியும் கூடவே பிரதிபலித்தது.  இத்தனையும் இருந்தும் அவள் காட்டிய அடக்கமும் அவள் சீரான முறையில் சிறப்பாக வளர்க்கப்பட்ட உயர்குடிப் பெண் என்பதை நிரூபித்தது.  

விருந்தின் தரம் மிகவும் உயர்வாகவே இருந்தாலும் மன்னன் துருபதனோ, அவன் மகன்களோ அளவோடு தான் உண்டனர்.  அங்கிருந்த விருந்தாளிகளில் பெரும்பாலோர் மது அருந்தினாலும் துருபதனும், அவன் மகன்களும் அதைத் தொடக் கூட இல்லை.  ஷ்வேதகேது கண்ணன் காதுகளில் மட்டும் விழும்படியாக,  “ மன்னனும் அவன் மக்களும் பாஞ்சாலத்துக்கும் அதன் மன்னனுக்கும் ஏற்பட்ட அவமானத்தை மீட்டு எடுத்து சுய கெளரவத்தை மீண்டும் நிலைநாட்டும் வரை குடிப்பதில்லை என சபதம் செய்திருக்கிறார்கள்.” என்று கூறினான்.   கிருஷ்ணன் முகத்தில் எந்தச் சலனமுமில்லாமல் அதைக் கேட்டுக்கொண்டான்.  அன்றிரவு முழுதும் பாஞ்சால மன்னனின் திறமையான ஆட்சியையும், அவன் மக்கள் நடந்து கொள்ளும் பண்பட்ட நாகரிகமான பழக்கங்களையும் கண்டு மனதுக்குள் வியந்தான்.  அதோடு மட்டுமில்லாமல் அவனுடைய இரு மூத்த இளவரசர்களும் அதே போல் கண்டிப்புடனும், கட்டுப்பாட்டுடனும் வளர்க்கப்பட்டு இருக்கிறார்கள்.  விபரம் தெரிந்த இந்த வயதிலும் இரு இளவரசர்களும் தந்தையின் பேச்சை மீறாதவர்களாக நடந்து கொள்கின்றனர்.  ம்ம்ம்ம்ம்ம்??? மூன்றாவது இளவரசன் ஆன ஷிகண்டினுக்குத் தான் ஏதோ பிரச்னை.  என்னவெனத் தெரியவில்லை!  அவன் ஏன் அப்படி பயப்படுகிறான்?  தைரியமும், வீரமும் நிறைந்த இரு சகோதரர்களுக்கு நேர் எதிரிடையாக நடந்து கொள்கிறான்.  அவ்வளவு ஏன்?  இளவரசியான கிருஷ்ணா என்னும்பெயர் கொண்ட பாஞ்சாலி கூட தைரியமான இளம்பெண்ணாக உறுதி படைத்த பெண்மணியாக, முடிவுகளை சுயமாகத் தீர்மானிக்கும் தன்மை கொண்டவளாகத் தெரிய வருகிறாளே!  இந்த ஷிகன்டினுக்கு என்ன ஆயிற்று?

மறுநாள் காலை உணவுக்குப் பின்னர் அரண்மனையின் பின்னால் இருந்த மாந்தோப்பில் கண்ணனை மன்னன் துருபதன் சந்தித்தான்.  இப்போது அங்கே இவர்கள் இருவரைத் தவிர வேறெவரும் இல்லை.  நெரித்த புருவங்களுடனும், தீர்க்கமான யோசனையைக் காட்டும் கண்களோடும் கண்ணனையே கூர்ந்து கவனித்தான் துருபதன்.  பின்னர் ஒரு கோணல் சிரிப்புடன், எந்தவிதமான முன்னறிவிப்பும் இல்லாமல் எடுத்த எடுப்பிலேயே, “வாசுதேவா, உன்னிடம் ஒரு விசித்திரமான வேண்டுகோளை வைக்கவே இங்கே அழைத்தேன்!” என்றான்.

“நான் தங்கள் ஆணைக்குக் கட்டுப்படுவேன், மஹாராஜரே, தாங்கள் தங்கள் மனதில் உள்ளதை என்னிடம் சொல்லுங்கள்.” என்றான் கண்ணன் தன்னிரு கரங்களையும் கூப்பிக் கொண்டு துருபதனை வணங்கிய வண்ணம்.  தான் தனக்குள்ளே ஏற்படுத்திக் கொண்டதொரு தனித்தன்மையை விலக்கிக் கொண்டு இயல்பாகக் கண்ணனிடம் உரையாட துருபதன் மிகவும் போராடுகிறான் என்பது அவன் முகத்திலிருந்து தெளிவாகப்புரிந்தது.  அவன் மனதில் உள்ளதை வெளிப்படையாகச் சொல்லவிடாமல் அவன் சுய கெளரவம் அவனைத் தடுத்தது.  ஆனால் தன்னைத் தானே கட்டுப்படுத்திக்கொள்ளும் ஆற்றல் பெற்றிருந்த துருபதன் விரைவில் தன்னைச் சமாளித்துக் கொண்டான்.

“குரு சாந்தீபனி மூலம் உனக்குத் தெரிய வந்திருக்கும் கிருஷ்ணா!” என்று தன் உறுதியான குரலில் கூறியவன் மேலே தொடர்ந்து, “என் அருமை மகள் கிருஷ்ணாவை நீ மனைவியாக ஏற்பாயா?  நான் இந்த வேண்டுகோளை உன்னிடம் வைப்பதில் மிகவும் வெட்கப் படுகிறேன். தர்மசங்கடமான சூழ்நிலையில் இருக்கிறேன்.” என்றான். துருபதனைப் பார்த்தால் கண்ணனுக்கே பரிதாபமாக இருந்தது.  பரம்பரையான மன்னர் குலத்தைச் சேர்ந்தவன் ஆன துருபதன் மிக மிக நேர்மையானவன் கூட.  மிகப் பெரிய அரசனும் ஆவான்.  அப்படிப்பட்டவன் தன் சுய கெளரவத்தை விட்டுவிட்டு, தன் பரம்பரைக் குலப் பெருமையை விட்டுவிட்டு இப்படி ஒரு வேண்டுகோளை வைக்க வேண்டுமெனில் எவ்வளவுக்கு அவன் தன்னைத் தானே தாழ்த்திக் கொண்டுள்ளான் என்பதைக் கண்ணன் முழுவதும் உணர்ந்தான்.  துருபதனுக்காக வருந்தினான்.  “மாட்சிமை பொருந்திய மன்னரே!  உம் வேண்டுகோள் எனக்கு குரு சாந்தீபனி மூலம் தெரிவிக்கப் பட்டது.  நான் ஏற்கெனவே உம் வேண்டுகோளை அறிவேன்.” என்றான் கிருஷ்ணன்.  துருபதன் முகத்தில் வெளிப்படையாகவே ஏமாற்றக் குறி காணப்பட்டது.

“எனில் நீ அதை ஏற்கவில்லையா கண்ணா?” பட்டெனக் கேட்டுவிட்டான் துருபதன்.

“நான் அதை மறுக்கவும் இல்லை; ஏற்கவும் இல்லை.  என்னிடம் மிகப் பெருந்தன்மையுடன் கேட்கப் பட்ட அந்த வேண்டுகோளை நான் மறக்கவும் இல்லை!”  கிருஷ்ணன் முகத்தில் அவன் வழக்கமாகச் சிரிக்கும் குறும்புச் சிரிப்பு எங்கிருந்தோ வந்து ஒட்டிக் கொண்டது.  “ மாட்சிமை பொருந்திய மன்னரே!  நான் வெளிப்படையாகப் பேசுவதற்கு என்னை மன்னிக்கவும்.  நான் இதற்குத் தகுதி வாய்ந்தவனே அல்ல.  மேலும் இதன் மூலம் நீங்கள் நிறைவேற்றிக்கொள்ள விரும்பும் காரியங்களை என்னால் நடத்தித் தர முடியுமா என்பது எனக்குப் புரியவில்லை.  என்னால் இயலாத காரியங்களே அவை என எனக்குத் தோன்றுவதால் இந்த வேண்டுகோளை ஏற்பதன் மூலம் ஏற்படும் தர்ம சங்கடமான நிலைமையை நான் தவிர்க்க விரும்புகிறேன்.”

“”நீ துரோணரைப் பார்த்து பயப்படுகிறாயா?” என துருபதன் வினவினான்.

“இல்லை, பிரபுவே, குரு வம்சத்துக்கும், பாஞ்சாலத்துக்கும் ஒரு மாபெரும் யுத்தம் ஏற்படுவதற்கு நான் காரணமாக விரும்பவில்லை.” கிருஷ்ணன் வெளிப்படையாகக் காரணத்தைக் கூறினான்.

“ஏன்?” அடக்கிக் கொண்ட பொறுமையின்மையுடன் துருபதன் கேட்டான்.


“தர்மம் என்பது  என்றென்றும் வளம் பெற்று நிலைத்து நிற்க வேண்டுமானால் குரு வம்சத்தினரும் சரி, பாஞ்சால நாட்டினரும் சரி அதைக் காக்கவேண்டியே போராடலாம்.  நீங்கள் இருவரும் அதை விட்டு விட்டு ஒருவர் மேல் ஒருவர் கசப்புக் கொண்டு தீராப் பகையுடன் போரிட்டால்?? நாமெல்லாம் எங்கே இருப்போம்?  என்ன செய்வோம்?