Tuesday, January 31, 2017

கண்ணன் வருவான், குருக்ஷேத்திரம், சௌபநாட்டுத் தலைநகரில்!

அவர்கள் மாட்ரிகோவட்டாவுக்குள் நுழைந்ததுமே அங்கே காணப்பட்ட பரந்து விரிந்த வீட்டையும் அந்த வீட்டின் சுவர்கள் ஆட்டுத் தோலால் அமைந்திருப்பதையும் கண்டு பிரத்யும்னன் ஆச்சரியம் அடைந்தான்.  அவர்கள் ஓர் பெரிய அறைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.  மிக ஆடம்பரமாக அலங்கரிக்கப்பட்டிருந்தது அந்த அறை. அவர்கள் எந்தத் திக்கில் சென்றாலும் அங்கே இருந்த பணியாட்கள் அவர்களை மிகுந்த கவனத்துடனும் அக்கறையுடனும் மரியாதையுடனும் கவனித்துக் கொண்டார்கள்.  அன்றிரவு பிரத்யும்னனுக்கும் அவனுடன் வந்தவர்களுக்கும் ஒரு பெரிய அறை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்த அறை அவர்களுக்கு விருந்தோம்பல் நடந்த சமூகக் கூடத்திற்குள்ளேயே அமைந்திருந்தது.

பிரத்யும்னன் தான் நன்கு உணவளிக்கப்பட்டுக் கொழுத்துச் செழித்த காட்டுப் பன்றியைப் போல் உணர்ந்தான்.  இப்படித் தனிப்பட்ட முறையில் தனக்கு அதிகக் கவனம் கொடுத்துக் கொண்டிருப்பது தன்னை முற்றிலும் கெடுப்பதற்காக என்று பிரத்யும்னன் புரிந்து கொண்டான். பிரத்யும்னன் மற்றும் அவனுடன் வந்தவர்கள் இன்னொரு அறையிலிருந்த ஒரு சிறிய நீச்சல் குளத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார்கள். அந்த அறைக்கு அப்போது யாருமே வராததால் அனைவரும் தங்கள் உடைகளைக் களைந்து நீராட ஆரம்பித்தனர்.  அப்போது அங்கே ஒரு பருத்த கொழுத்த வேலையாள் அந்த அறைக்குள் நுழைந்தான். வந்தவன் நேரே பிரத்யும்னன் அருகே வந்து வணங்கி விட்டுத் தன் இரு கரங்களையும் தட்டினான். உடனே ஏதோ அற்புதம் போல் ஆறு பெண்கள் உள்ளே நுழைந்தனர். பிரத்யும்னன் குளத்திற்குள் மீண்டும் பாய்ந்து நீந்த ஆரம்பிக்க அந்தப் பெண்களும் குளத்துக்குள் நுழைந்து அவனைப் பார்த்துச் சிரித்தனர். பிரத்யும்னன் வெறுப்பில் பின்னே சென்று விட்டான்.

குளித்து முடிந்ததும் வேலையாட்கள் அவர்களுக்கு உண்ண உணவும் குடிக்கப் பழச்சாறுகளும் கொண்டு வந்தனர்.  அதன் பின்னர் அவர்கள் தங்களுக்கு எனக் கொடுக்கப்பட்ட படுக்கைகளில் படுத்து உறங்க ஆரம்பித்தனர். தங்களிடமிருந்து வஜ்ரநப் விடை பெறு முன்னர் பிரத்யும்னன் அவனைப் பார்த்து, “உங்கள் வேலையாட்களால், ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி, அவர்களால் எல்லாவிதமான சௌகரியங்களையும் செய்து கொடுக்க இயலுமா?” என்று கேட்டான். மேலாடை அணியாத அங்கிருந்த பணிப்பெண்கள் இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்தனர்.  அந்தப் பெண்கள் அனைவரும் அடிமைகள். தாசிகள். அவர்களில் சிலர் மட்டுமே குடும்பம் உள்ளவர்கள். ஆகவே பிரத்யும்னன் மீண்டும் வஜ்ரநபைப் பார்த்துச் சொன்னான். “க்ஷத்திரிய தர்மத்தில் அடிமைகளை ஆதரிப்பதில்லை. அடிமைகள் என எவரும் இல்லை.  இங்கே யாருமே க்ஷத்திரிய தர்மத்தைக் கடைப்பிடிப்பதில்லை போலும்! உயர்குடிப் பிறப்பில் பிறந்த பெண்கள் உட்பட!” என்று கேட்டான்.

வஜ்ரநப் அதற்கு நக்கலாகச் சிரித்துவிட்டுச் சொன்னான். “இங்குள்ள பெண்களில் புனிதமானவள், கற்புள்ளவள் யார் என்று கண்டிபிடிப்பது கடினம். “ என்றவன் பிரத்யும்னனின் தோளின் மேல் தன்னிரு கரங்களையும் வைத்த வண்ணம்” நான் முன்னரே உன்னிடம் சொன்னேன். எங்களுடைய பழக்க, வழக்கங்கள் உனக்குப் பிடிக்காது என்று கூறினேன்.  ஆகவே இங்கு நடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடையாதே! எங்கள் பெண்கள் இப்படியெல்லாம் கண்டனங்கள் செய்வதை விரும்ப மாட்டார்கள்.” என்றவன் தன் குரலை மேலும் தழைத்துக் கொண்டு, “எங்கள் மன்னாதி மன்னருக்குச் சேவை செய்ய வேண்டித் தங்கள் பங்குக்குச் செய்ய வேண்டியதைச் செய்யாதவர்கள் தங்கள் உயிருக்குப் பயந்து வாழ வேண்டி இருக்கும்!” என்று கிசுகிசுப்பாகச் சொன்னான்.

பிரத்யும்னன் முகம் போன போக்கைப் பார்த்துவிட்டு அவன் மேலும் கூறினான். “ஒன்று உறுதியாகச் சொல்கிறேன். எல்லாமே இப்படி இருக்காது! இங்கே பல நூற்றுக்கணக்கான பெண்கள் இருக்கின்றனர். நல்லவர்கள்! அவர்களில் யாருமே இந்தப் பெண்களைக் குறித்து அவதூறாகவும் பேச மாட்டார்கள்.”

“அவர்கள் ஆண்களை எப்படி வழிக்குக் கொண்டு வருகின்றனர்?” என்று பிரத்யும்னன் கேட்டான்.  அதற்கு வஜ்ரநப் சிரித்த வண்ணம், “நம்மிடம் இருக்கும் ஆயுதங்களை விட வலிமையான ஆயுதம் அவர்களிடம் உள்ளது!” என்றான்.  பிரத்யும்னன் அதற்கு, “நம்மிடம் இல்லாத ஆயுதமா? அப்படி என்ன அவர்களிடம் உள்ள ஆயுதம்?” என்று கேட்டான்.  வஜ்ரநப் அதற்குச் சிரித்த வண்ணம், “விஷம், விஷம்! இந்த ஆண்கள் அனைவரும் அந்தப் பெண்களின் மடியில் படுக்கையில் நடக்கும்!” என்றான்.

“அதெல்லாம் என் வீரர்களிடம் நடக்காது!” என்ற பிரத்யும்னன், “ என் வீரர்களின் மன வலிமையையும் அவர்களிடம் தீரா நெருப்பாக எரியும் நம்பிக்கையையும் சிதைக்க நினைக்காதே!” என்றான்.

“நல்லது! உன் நம்பிக்கையை உன்னோடு பாதுகாத்து வைத்துக்கொள்! இளம் யாதவனே! பொக்கிஷம் போல் வைத்துக் கொள். பாதுகாத்துக்கொள்! ஆனால் எங்கள் இளம்பெண்களிடம் நீ கவனமாகவே இருந்தாக வேண்டும்.” என்றான் வஜ்ரநப்! வஜ்ரநபுக்கு பிரத்யும்னனை மிகவும் பிடித்து விட்டது. இவ்வளவு அழகான இளைஞன். நேர்மையானவனும் கூட.  மீண்டும் தன் குரலைத் தழைத்துக் கொண்டு வஜ்ரநப் சொன்னான். “ நீ ஓர் அர்ப்பணிப்பு உணர்வு நிறைந்த க்ஷத்திரியனாகத் தெரிகிறாய், இளைஞனே! என் குமாரனைப் போன்றவன் நீ!” என்று பாராட்டும் குரலில் தெரிவித்தான். வஜ்ரநப் சொன்ன விஷயங்களில் மனம் சிந்தனையில் ஆழ்ந்து போன பிரத்யும்னன் அதனால் பாதிக்கப்பட்டவனாகத் தனக்கென ஒதுக்கப் பட்ட அறைக்குச் சென்றான்.

Monday, January 30, 2017

கண்ணன் வருவான், குருக்ஷேத்திரம்! சௌப நாட்டில்!

பிரத்யும்னன் அந்த ஒட்டகங்களில் அமர்ந்து ஓட்டி வந்த வீரர்களைப் பார்த்தான். அவர்கள் அனைவருமே ஷால்வனின் படையில் மிக உயர்ந்த இடத்தைச் சேர்ந்தவர்கள் என்பது புரிந்தது. அவர்களில் ஒருவன் பிரத்யும்னனைப் பார்த்து, “நீ ஏன் இங்கே வந்தாய்?” என்று வினவினான். “நான் உங்களுடைய மன்னர் மன்னனைச் சந்திக்க வந்திருக்கிறேன். அவரைக் குறித்து நான் நிறையக் கேள்விப் பட்டிருக்கிறேன்.” என்றான் பிரத்யும்னன். “உன் பெயர் என்ன?” என்று அந்தத் தலைவன் கேட்டான். அதற்கு பிரத்யும்னன் நேரிடையாக பதில் கூறாமல், தலைவனிடம், “என்னை உங்கள் மன்னர் மன்னரிடம் அழைத்துச் செல் தலைவா! அவரிடம் நான் யாரென்று கூறுகிறேன். நான் ஏற்கெனவே சொன்னதைப் போல் நான் அவரிடம் நேரிடையாகச் சென்று அறிமுகப்படுத்திக் கொண்டு வந்த வேலையைக் குறித்துச் சொல்லும்படி ஆணையிடப் பட்டிருக்கிறேன்.” என்றான்.

“உங்கள் தரப்பு வீரர்களிடம் உன்னுடைய தகுதி எவ்வகைப்பட்டது? நீ தலைவனா? அல்லது வெறும் படை வீரன் மட்டுமா?” தலைவன் கேட்டான்.

“நான் ஓர் மஹாரதி! உங்கள் அரசன் ஷால்வன் சௌராஷ்டிரத்தை முற்றுகை இடாவிட்டால் நான் மஹாரதி என்னும் நிலையிலிருந்து அதிரதியாக ஆகி இருப்பேன்!” என்றான் பிரத்யும்னன்.

தலைவன் மற்றவர்களைப் பார்த்து, “நான் இன்று திரும்பிச் சென்று விட்டு நாளை மறுநாள் திரும்பி வருகிறேன். இவர்கள் அனைவரும் நம் விருந்தாளிகள். இப்போது நாம் அவர்களின் ஒட்டகங்களை மட்டுமல்லாமல் அவர்கள் சேமித்து வைத்திருந்த சாப்பாடையும் எடுத்துச் செல்கிறோம். ஆகவே அவர்களுக்கு உணவு கொடுத்துப் பாதுகாக்கவும்!” என்றான். அவர்கள் அந்த ஒட்டகங்களின் மேல் மேலும் இரு நாட்கள் பயணம் செய்தனர். முழுக்க முழுக்கப் பாலைவனமாக இருந்த அந்தப் பாதையில் எங்கெல்லாம் சோலைகள் தென்படுகின்றனவோ அங்கே அவர்கள் தங்கி ஓய்வெடுத்தனர். மூன்றாம் நாள் மாலை அவர்கள் ஓர் பெரிய பாலைவனச் சோலைக்கு வந்து சேர்ந்தனர். அன்றிரவை அங்கேயே கழித்தனர். நான்காம் நாள் அவர்கள் கிளம்பும்போது சில வீரர்கள் ஒட்டகங்களில் பயணம் செய்து கொண்டு அங்கே வந்தனர். அவர்களை நெருங்கினார்கள். அவர்களில் பலரிடமும் வில்லும் அம்புகளும் இருந்தன.  தலைவனாகக் காணப்பட்டவன் ஆயுதம் தரித்திருக்கவில்லை. அவர்கள் அருகே நெருங்கியதும் ஒட்டகங்களை நிறுத்திவிட்டு அதிலிருந்து கீழே இறங்கினார்கள்.

தொடர்ந்து சீராகத் தலைவன் அவர்கள் மேல் மரியாதை காட்டி வந்தாலும் அவர்களிடம் அக்கறையுடன் நடந்து கொண்டாலும், அவர்கள் செல்லுமிடம் குறித்த எந்தத் தகவலையும் அவன் பகிர்ந்து கொள்ள மறுத்தான்.  ஐந்தாம் நாள் அவர்கள் இன்னும் பெரியதொரு பாலைவனச் சோலைக்கு வந்து சேர்ந்தனர். அங்கே ஆயுதபாணியாகப் பல தலைவர்கள் அவர்களை வரவேற்றனர். அவர்களுடன் வந்த தலைவனின் யோசனைப்படியும் வழிகாட்டுதலின் பேரிலும் இரண்டு வீரர்கள் பிரத்யும்னனுக்குப் புதிய ஆடைகளைக் கொண்டு வந்து கொடுத்தனர். அவன் அணிந்திருந்த பழைய துணிகளை அவர்கள் வாங்கிக் கொண்டு விட்டனர். இது என்ன புதிய உத்தி என்னும் சிந்தனையில் பிரத்யும்னன் ஆழ்ந்தான்.

அப்போது தலைவன் அவனிடம், “எவ்விதத் தந்திரமும் செய்ய நினைக்காதே! நீ இப்போது அரசர்க்கரசர், மஹா சக்கரவர்த்தியைப் பார்க்கப் போகிறாய்! ஆகவே நீ உன்னுடைய இந்தப் பழைய ஆடை மண்ணும், புழுதியும் நிரம்பிக் காணப்படுவதால் அதை அணிந்து செல்ல முடியாது!” என்றான்.  ஆறாவது நாள் வந்தது. விடிகாலை வேளை!அவர்கள் ஓர் நகரத்துக்கு வந்து சேர்ந்திருந்தனர். அங்கே பல உயர் பதவிகளை வகிக்கும் அதிகாரிகள் தங்கி இருக்கிறார்கள் என்னும் வண்ணம் மாளிகைகள் காட்சி அளித்தன. தெருவின் இரு பக்கங்களிலும் மாளிகைகள் காணப்பட்டன. ஆனால் தெருக்கள் எல்லாம் குப்பைகள் மிகுந்து காணப்பட்டது. ஆடையே அணியாத சின்னஞ்சிறு குழந்தைகள் அங்குமிங்கும் ஓடிக்கொண்டு அந்தப் புழுதியில் விளையாடிக் கொண்டு இருந்தன. அவர்கள் தெருக்களைக் கடந்து செல்கையில் பிரத்யும்னனுக்கு இது ஒட்டகம் சார்ந்த பொருளாதாரம் என்பது திடீரென உதயம் ஆனது. சில ஒட்டகங்கள் அங்கே உள்ள கம்பங்களில் கட்டிப் போடப்பட்டிருந்தன. சிலவற்றிலிருந்து பால் கறந்து கொண்டிருந்தனர். இவற்றைத் தவிர அங்கே ஆடுகள், செம்மறியாடுகள், கோவேறு கழுதைகள் ஆகியனவும் காணப்பட்டன. ஆனால் அங்கே மாடுகளையோ பசுக்களையோ அல்லது குதிரைகளையோ காணமுடியவில்லை.

வீரர்களின் தலைவன் பிரத்யும்னனையும் மற்றவர்களையும் ஒரு முகாமுக்கு அழைத்துச் சென்று அவர்களுக்கு வயிறு நிரம்ப உணவளித்தான். ஆடம்பரமான உணவாக அது இருந்தது. மீண்டும் அவர்கள் பயணத்தைத் தொடங்குகையில் தெருக்கள் எல்லாம் அங்குமிங்கும் சென்று கொண்டிருந்த பல மேன்மையான மனிதர்கள் காணப்பட்டனர். அவர்களில் யாரேனும் ஒருவரிடம் பேசுவதற்கு பிரத்யும்னன் முயற்சி செய்தான்.  ஆனால் வீரர்களின் தலைவன் அவனைப் பிடித்து இழுத்து, “இப்போது நீயும் உன்னுடன் வந்தவர்களும் என் கைதிகள்!” என்று பேசுவதிலிருந்து அவனைத் தடுத்தான்.

“நாங்கள் கைதிகள் அல்ல! இங்கே என்ன யுத்தமா நடந்தது? யுத்தத்தில் தோற்பவர்களைத் தான் கைதிகளாகப் பிடித்துச் செல்வார்கள். நாம் எந்த யுத்தத்திலும் ஈடுபடவே இல்லையே! இங்கே எந்தப் போரும் நடைபெறவே இல்லையே!” என்று பிரத்யும்னன் அதை மறுத்தான்.

“நான் உன்னுடன் ஒத்துப்போகிறேன். போரினாலும் யுத்தத்தினாலும் என்ன கிடைக்கிறது! எதுவும் இல்லை. ஆகவே போரும் யுத்தமும் தேவையற்ற ஒன்று!” என்று சிரித்தான் அந்தத் தலைவன். “ஆனால் ஒன்று! எங்கள் மன்னாதி மன்னர் எனக்குச் சில தனிப்பட்ட முக்கியமான கட்டளைகளைப் பிறப்பித்திருக்கிறார்.  உன்னுடைய உடலின் எந்த பாகத்திலும் சின்னக் கீறல் கூட இல்லாமல் உன்னைக் கொண்டு சேர்க்கவேண்டும் என்பதே அது!  ஆகவே நான் உன்னைப் பாதுகாக்கவே வந்தேன்!” என்றான்.

“என் தோழர்கள்? அவர்கள் கதி என்ன?” பிரத்யும்னன் கேட்டான்.

“ஓ, அவர்கள் இல்லாமலா! அவர்களும் எங்கள் விருந்தினர்களே! சரி, சரி, சீக்கிரம் வா! நாம் இன்னமும் சில யோஜனை தூரம் பிரயாணித்துச் செல்ல வேண்டும்!” என்றான்.  அவர்கள் சூரிய உதயத்திற்கு முன்னால் சில மணி நேரங்கள் பயணம் செய்தனர்.  சூரிய உதயம் ஆகி வெப்பம் அதிகரித்ததும் அவர்கள் ஏதேனும் ஓர் பாலைவனச் சோலையில் தங்கி ஓய்வெடுத்தார்கள்.  இந்த சௌப நாட்டுக்காரர்களின் விசித்திரமான நடத்தையை பிரத்யும்னனால் புரிந்து கொள்ளவே முடியவில்லை. அவர்கள் எங்கே தங்கினாலும் சரி! அங்கே முன் கூட்டியே செய்திருந்த ஏற்பாடுகள் மூலம் அவர்களுக்கெல்லாம் நல்ல உணவும் மற்ற சௌகரியங்களும் தடையின்றிச் செய்து கொடுக்கப்பட்டது.  பார்க்கிறவர்கள் பிரத்யும்னன் தான் அந்த நாட்டின் இளவரசனோ என்று நினைக்கும் வண்ணம் அவர்கள் உபசாரம் இருந்தது.

ஓர் களிமண்ணால் கட்டப்பட்ட கோட்டை வந்தது. தன் ஒட்டகத்தை அதன் அருகே நிறுத்தினான் அந்த வீரர் தலைவன். “நாம் இப்போது மாட்ரிகோவட்டாவை அடைந்து விட்டோம். இது தான் நாம் வந்து சேரவேண்டிய இடம்.  நம் பயணம் இத்துடன் முடிவடைந்தது!” என்ற வீரர் தலைவன் சற்று நிறுத்தி யோசித்துவிட்டுத் தொடர்ந்தான். “உனக்கு என்னுடைய பெயர் தெரியவேண்டும் அல்லவா? என் பெயர் வஜ்ரநப் ஆகும். சௌபவீரர்களின் படைத்தலைவன் நான். ஹூம்! உன் பெயர் என்னவென்று நீ சொல்லவில்லை அல்லவா? அல்லது உனக்குத் தெரியாதா? நான் சொல்லட்டுமா? உன் பெயர் பிரத்யும்னன். கிருஷ்ண வாசுதேவனின் குமாரன். “ அதைக் கேட்ட பிரத்யும்னன் சிரிக்க தலைவனும் சிரித்துக் கொண்டே பிரத்யும்னன் இறங்க உதவி செய்தான். இருவரும் ஒருவரை ஒருவர் ஏமாற்ற நினைத்ததை எண்ணிச் சிரித்துக் கொண்டே பிரத்யும்னனும் கீழே இறங்கினான்.

Sunday, January 29, 2017

கண்ணன் வருவான்! எட்டாம் பாகம்! குருக்ஷேத்திரம்! ஷால்வனைத் தேடி!

ஷால்வனால் பிரத்யும்னன் பிடித்துக் கொல்லப்படக் கூடும் என்பதாலும் மற்ற பல்வேறு காரணங்களினாலும் கிருஷ்ணன் அவனருகே தான் இருக்க வேண்டும் என்று விரும்பினான். அதே சமயம் துவாரகையிலும் கிருஷ்ணன் இருந்தாக வேண்டி இருக்கிறது. தர்மசங்கடமான நிலையில் தவித்தான் கிருஷ்ணன்.  அப்போது பிரத்யும்னன் சொன்னான். “தந்தையே, நான் உங்களிடம் சொன்னதைப் போலவே ஷால்வன் இங்கிருந்து பறந்துவிட்டான். அதுவும் நான் அவனைக் கொன்று விடுவேன் என்று தெரிந்து கொண்டு ஓடி விட்டான். அவன் தன்னுடைய சௌப விமானத்தில் ஏறிப் பறந்து விட்டான். போர்க்களத்தை விட்டு ஓடி விட்டான்.  க்ஷத்திரிய தர்மத்தின்படி எதிர்ப்பைச் சமாளிக்க முடியாதவர்களை எதிர்த்து நான் சண்டை போட முடியாது!” என்றவன் தொடர்ந்து மேலும் குறும்பாக, “அதோடு இல்லை, தந்தையே! நீங்கள் யாதவ குலத்தையே தனி ஒருவனாகக் காப்பாற்றி வந்திருக்கிறீர்கள்! ஒரு முறை அல்ல, பல முறை! ஆகவே இது இப்போது என் முறை! இந்த பயங்கரத்திலிருந்து அனைவரையும் காப்பாற்றி எல்லோரையும் பாதுகாப்பாக உணர வைப்பது என் கடமை! ஒரேயடியாக இந்த பயங்கரத்தை அழிக்க வேண்டும்!” என்றான்.

கிருஷ்ணன் சிரித்தான். “நல்லது, குழந்தாய்! உன்னால் முடியும்!  இந்தக் கடுமையான பிரச்னையைக் கையில் எடுத்துக் கொண்டு தீர்த்து வைக்க முயல்வது உன்னுடைய மாட்சிமையைக் காட்டுகிறது. இதற்கு என்னுடைய ஆசிகள் எப்போதும் உனக்கு உண்டு!” என்றவன் மேலும் சிரித்த வண்ணம், “சீக்கிரமாய்த் திரும்பி வா மகனே! ஆனால் இன்னும் ஒரு வயதான பெண்ணை உன் மனைவியாகக் கொண்டு வந்து விடாதே! உன் தாய் இதிலே கவனமாக இருந்து வருகிறாள்.  அதோடு இல்லாமல் ஒரு திருமணம் ஆன இளைஞன் தன் தாயின் நன்மையையும் மறக்கக் கூடாது! தாயை முக்கியமாகக் கவனிக்க வேண்டும்.  அதோடு எப்போதுமே க்ஷத்திரிய தர்மத்தையும் மறக்கக் கூடாது!” என்றான்.

“நான் முயற்சி செய்கிறேன், தந்தையே!” என்றான் பிரத்யும்னன். கிருஷ்ணன் தொடர்ந்தான். “ இந்த அபாயகரமான வேலையில் நீ ஈடுபடுவதை நான் தடுத்திருக்கலாம். உன்னை இன்னும் கொஞ்சம் நிதானப்படுத்தி இருக்கலாம்.  ஆனால் நீ இளைஞன். தன்னந்தனியாகப் பல்வேறு சாகசங்களை நிகழ்த்த நீ விரும்புவாய்! விரும்புகிறாய்! நீயாகவே வெற்றித் திருமகளை உன்னிடம் சேர்த்துக் கொள்ள விரும்புகிறாய்! அதில் தான் நீ சந்தோஷமும் அடைவாய்! ஆகவே நான் உன்னைத் தடுக்கவில்லை!”

அதன் பின்னர் பிரத்யும்னன் தன்னுடைய இரண்டு தோழர்களுடன் லாவனிகா நதியைக் கடந்து பாலைவனத்துக்குள் நுழைந்தான்.  அங்கே ஓர் சோலையைக் கண்டு அங்கே சற்று அமர்ந்து அவர்கள் ஓய்வு எடுத்தார்கள். அங்கே போதிய தண்ணீர் கிடைத்ததோடு அல்லாமல் மரங்களும் சுட்டெரித்துக் கொண்டிருந்த சூரிய வெப்பத்திலிருந்து கொஞ்சம் இதமான பாதுகாப்பைக் கொடுத்தது.  அங்கே சில மாதங்கள் முன்னர் ஒரு மாபெரும் ஒட்டகப் படை வந்து இருந்து தங்கி விட்டுச் சென்றதற்கான அடையாளங்கள் இன்னமும் மிச்சம் இருந்தன.  பிரத்யும்னனுக்கு அந்தச் சோலையைப் பார்த்ததுமே இந்த வழியில் நேரே சென்றால் ஷால்வனின் தலைநகரை நாம் அடைவோம் என்பதில் சிறிதும் சந்தேகம் இருக்கவில்லை! பிரத்யும்னனும் அவன் படை வீரர்களும் அந்தச் சோலையில் இரவைக் கழித்தனர்.

அடுத்த நாள் விடிகாலையில் காலைக்கடன்களை முடித்துக் கொண்டு உணவு உண்டு விட்டு அவர்கள் மேலே தொடர்ந்து செல்ல ஆரம்பித்தனர். அந்தப் பாலைவனத்து மணற்பாங்கான பாதையில் சுட்டெரிக்கும் வெயிலில் தொடர்ந்து நடந்து செல்வதோ குதிரைகளைச் செலுத்துவதோ கடினமாகவே இருந்தது.  நேரம் ஆக ஆகச் சூரியனின் வெப்பமும் அதிகம் ஆகிக் கொண்டிருந்தது. அங்கே பத்தே பத்து குடிசைகள் நிறைந்த ஒரு சின்னக் கிராமத்தில் சற்றுத் தங்கினார்கள். அங்கே சில ஒட்டகங்களும், பல நூற்றுக்கணக்கான  ஆடுகளும் மேய்ந்து கொண்டிருந்தன.  அங்கே ஒரு ஆழமான கிணறும் அருகே ஓர் நீர்த்தொட்டியுடன் காணப்பட்டது. அந்தத் தொட்டியில் நிரப்பும் நீரைத் தான் அந்தக் கால்நடைகள் குடிக்கும் என்பது புரியும்படி இருந்தது.

அங்கிருந்த குடிசைகளிலிருந்து இவர்கள் வருகையைக் கண்டதும் இரு ஆண்கள் வெளிவந்தார்கள். அவர்களில் ஒருவன் கைகளில் வில்லும் அம்புகளும் காணப்பட்டன. அவர்கள் தங்கள் கைகளைத் தங்கள் காதுகளில் வைத்து ஜாடை காட்டினார்கள். தலையை ஆட்டினார்கள். பிரத்யும்னன் என்ன சொல்கிறான் என்பது தங்களுக்குப் புரியவில்லை என்பதை இதன் மூலம் தெரிவிக்கிறார்கள் என்பதை அவர்கள் புரிந்து கொண்டார்கள்.  அவர்கள் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள முயற்சித்துக் கொண்டிருந்த சமயத்தில், இன்னொரு வீரன் குடிசையிலிருந்து வெளியே வந்தான். அவன் பூரண ஆயுதபாணியாகக் காட்சி அளித்தான்.

ஈட்டி, வாள், கவசம், கேடயம் ஆகியவற்றோடு அவன் கைகளில் வில்லும் அம்புகளும் கூடக் காணப்பட்டன. அந்த வீரர்களின் தலைவனாக இருக்கலாம் என்று பிரத்யும்னன் எண்ணினான். அவன் பிரத்யும்னன் பக்கம் வந்து தன் கை, முகம் ஆகியவற்றால் ஜாடை காட்டி பிரத்யும்னனை அங்கிருந்து செல்லும்படி வற்புறுத்தினான். ஆனால் பிரத்யும்னன் தனக்குத் தெரிந்த சௌப மொழியில் பேச ஆரம்பித்தான். அவனுக்கு நன்றாகப் பேசத் தெரியாது என்றாலும் ஓரளவு பேசுவான். ஆகவே தனக்குத் தெரிந்த சௌப மொழியில், தான் கிருஷ்ண வாசுதேவன் சார்பில் வந்திருப்பதைத் தெரிவிப்பான். கிருஷ்ண வாசுதேவன் தர்மத்தின் பாதுகாவலன் என்றும் நீதி, நேர்மையில் சிறந்தவன் என்றும் அவற்றைப் பாதுகாப்பதைத் தன் வாழ்நாள் லட்சியமாகக் கொண்டிருப்பவன் என்பதையும் ஆரிய வர்த்தத்தின் அனைத்து அரசர்களையும் சந்தித்துத் தன் நோக்கத்திற்கு ஆதரவு திரட்டுகிறான் என்பதையும் இப்போது ஷால்வனையும் சந்திக்க வேண்டும் என்பதையும் கூறினான்.

ஷால்வனைச் சந்தித்துக் கிருஷ்ண வாசுதேவனின் செய்தியைத் தான் கூற விரும்புவதாகவும் தெரிவித்தான். ஆகவே அந்த இணையற்ற அரசன் ஷால்வனைத் தான் சந்திக்க வேண்டும் என்றும் கூறினான். அதைக் கேட்ட அந்த வீரர் தலைவன் ஏதோ நகைச்சுவையைக் கேட்டது போல் பெருங்குரலெடுத்துச் சிரித்தான். அதோடு தன் ஜாடை மொழியிலேயே அவர்களை அங்கேயே இருக்கச் சொல்லிக் கட்டளை இட்டான். மீறினால் அவர்கள் தன் வீரர்களினால் கொல்லப்படுவார்கள் என்றும் கூறினான். பிரத்யும்னன் மற்றும் அவன் கூட வந்தவர்களின் ஆயுதங்களை அந்தத் தலைவன் வாங்கிக் கொண்டான். பின்னர் பிரத்யும்னனும் அவன் நண்பர்களும் அதுவரை பயணித்து வந்த ஒட்டகங்கள் பால் தன் கவனத்தைத் திருப்பினான்.  அவற்றில் ஒன்றின் மேல் தான் ஏறிக் கொண்டு மற்றவற்றையும் அங்கிருந்து ஓட்டிக் கொண்டு சென்றான்.

Saturday, January 28, 2017

கண்ணன் வருவான், எட்டாம் பாகம்! குருக்ஷேத்திரம்! மாயாவதி!

பிரத்யும்னனுக்குத் தன் தந்தையை அழைத்துச் சென்று மாயாவதியின் பொறுமையைச் சோதிக்கத் தயக்கமாகவே இருந்தது. அதையும் மீறியே தந்தையை அழைத்துச் சென்றான். காட்டுக்குள்ளே சரியாகத்தெரியாத தடங்களிலேயே செல்லும்படியாக இருந்தது.  பின்னர் ஓர் வெற்றிடம் வந்து சேர்ந்தனர். அங்கே மாயாவதி உணவு தயாரித்துக் கொண்டு இருந்தாள். அவர்கள் மாயாவதியைப் பார்த்ததும் கிருஷ்ணன் அவளைப் பார்த்துக் கேட்டான். “இந்தக் குடும்பத்தின் மற்றப் பெண்களோடு நீயும் ஏன் கிரிநகர் செல்லவில்லை? ஏன் காட்டில் தங்கி இருக்கிறாய்?” என்றான்.  அதற்கு மாயாவதி, “நான் உங்கள் குடும்பத்தின் அகந்தை மிக்க பெண்களோடு சேர்ந்து தங்கி இருப்பேன் என நினைக்கிறீர்களா? அப்படி எதிர்பார்க்கிறீர்களா?  அவர்களில் எவரும் என்னை அங்கீகரிக்கவில்லை; நானும் அவர்களை அங்கீகரிக்கவில்லை!” என்றாள்.

“ஆனால் நீ ஏன் அவர்களுடன் செல்லவில்லை?” மீண்டும் அதே கேள்வியைத் தான் கிருஷ்ணன் கேட்டான். “என்னுடைய திட்டங்களை ஏற்கெனவே நான் போட்டுவிட்டேன்.” அவள் கொஞ்சம் ஏளனம் கலந்த வெறுப்புடன் பார்த்தாள். “எனக்குப் பிடித்த வகையில், பிடித்த வழியில் என் சொந்த வாழ்க்கையைத் திட்டம் செய்திருக்கிறேன்!” என்றாள்.

“ஆஹா, அது சரிதான்! ஆனால் நீ எப்படி பிரத்யும்னனுடன் செல்ல முடியும்? அவன் தன்னந்தனியாக ஆரியர்களின் முக்கிய எதிரியான ஷால்வனைச் சந்திக்கவன்றோ செல்கிறான். ஷால்வனின் தலை நகரத்துக்குள்ளே உன்னைப்போன்ற பெண்கள் பிரத்யும்னன் துணையாக இருந்தாலுமே செல்வது சரியல்ல!” என்றான்.

“இந்த விஷயத்தை இங்கே பேசுவது பொருளற்றது! நான் இதைக் குறித்து முதல் நாளே பிரத்யும்னனிடம் விரிவாகப் பேசிவிட்டேன். அன்று தான் பிரத்யும்னன் ஷால்வனைத் தேடிச் செல்வது குறித்த கேள்விகள் எழுந்தன!” என்றாள்.

“ஆனால் நீ எப்படி அவனுடன் போக முடியும்? நீ அவனுடன் சென்றால் அது பெரியதொரு பிரச்னையில் வில்லங்கத்தில் கொண்டு விடும். ஏனெனில் அவன் ஷால்வன், நமது எதிரியைச் சந்திக்கப் போகிரன். தெரியும் அல்லவா?” என்று கிருஷ்ணன் குறுக்கிட்டான்.

“பிரச்னை! வில்லங்கம்! ஆஹா! அதுவும் அப்படியா? நான் இல்லை எனில் பிரத்யும்னன் என்ன ஆகி இருப்பான் தெரியுமா? இன்று அவன் உயிருடன் இருப்பதே என்னால் தான். அவனுக்கு ஐந்து வயது தான் இருக்கும். அவன் திருடப்பட்டுக் கடத்திச் செல்லப்பட்டான். அவனுக்குத் தான் எங்கிருந்து வந்தோம் என்பதே தெரியாது! தன் பெற்றோர் யார் என்றும் தெரியாது! நான், நான், என்னை மட்டுமே அவன் அறிவான். நான் அவனுக்குத் தந்தையாக, தாயாக, ஒரு சகோதரியாக,ஒரு சகோதரனாக எல்லாமுமாக இருந்தேன்.  ஆனால் அதையும் மீறியதொரு பந்தம் எங்கள் இருவருக்கிடையே உருவாகி இருந்தது. இந்த உறவுகளுக்கெல்லாம் அப்பாற்பட்டதொரு பந்தம்!”

“நாங்கள் இருவரும் ஒருவரில் ஒருவர் அடங்கினவர்கள். ஈருடல், ஓருயிர்! நான் மட்டும் இல்லை எனில் பிரத்யும்னன் இருந்த இடமே தெரியாமல் போயிருப்பான். உயிருடன் இருந்திருக்க மாட்டான். அவன் என்னை ஒரு தாயை விட அதிகமாக நேசிக்கிறான். தாய் மாதிரியே நினைக்கிறான்.”

சற்றே நிறுத்திய மாயாவதி ஒரு பெருமூச்சுடன் தொடர்ந்தாள். “ஒரு நாள் இரவு! அந்த நாள்! அந்தக் கொடுமையான கொடூரமான கொலைகாரர்கள் தங்கள் புதிய தேடல்களில் சென்றிருந்த அந்த நாள்! நாங்கள் இருவரும் வழக்கம் போல் தூங்கச் சென்றோம். ஆனாலும் நான் நடு இரவில் திடீரென விழித்து விட்டேன். அப்போதிருந்த என் மனோநிலை என் அமைதியைக்குலைத்து விட்டது! நான் திடுக்கிட்டுப் போனேன். அப்போது தான் எனக்குப் புரிந்தது. பிரத்யும்னன் இன்னமும் ஓர் குழந்தை அல்ல! வளர்ந்த இளைஞன் என்றும் தனக்கான துணையைத் தேடுகிறான் என்பதையும் புரிந்து கொண்டேன்.”

“அப்போது தான் அப்போது தான் நான் புதியதொரு மனுஷியாக ஆனேன். புதியதொரு பெண்! முற்றிலும் புதியவள். நான் பாதி தான் விழித்திருந்தேன். அவன், பிரத்யும்னன் தன் கைகளை மெதுவாக மிகமிக மெதுவாக மென்மையாக என் மேல் போட்டிருந்தான். ஒருவேளை அவன் தூக்கத்தில் அது தற்செயலான ஓர் நிகழ்வாகக் கூட இருக்கலாம்.  ஆனால் அந்த நிமிடத்தில் நான் எல்லையற்ற பரவசத்தில் ஆழ்ந்து போனேன். பிரத்யும்னனும் அதே போல் அந்த நிமிடத்திலிருந்து தான் மாறிப் போனான். அவனுள்ளும் மாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன.  அவனும் எல்லையற்ற உணர்ச்சிப் பிரவாகத்தில் நடுங்கிக் கொண்டிருந்தான். அந்த நிமிடத்திலிருந்து தான் நாங்கள் இருவரும் ஒருவரை ஒருவர் வாழ்க்கைத் துணையாக ஏற்றுக் கொண்டோம். ஒன்றோடு ஒன்றாகக் கலந்து போனோம்.”

“எங்கள் திருமணத்தைக் கொண்டாட எங்களால் பெரிய அளவில் விருந்துகள் ஏதும் அளிக்க முடியவில்லை; முடியவும் முடியாது! அதே போல் எங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்க எந்த ஸ்ரோத்திரியர்களும் அங்கில்லை!  நானே எழுந்து அக்னியை மூட்டினேன்.  பின்னர் நாங்கள் இருவரும் அந்த அக்னியை ஏழு முறை வலம் வந்து வணங்கினோம். அதன் மூலம் எல்லாம் வல்ல அந்தப் பரம்பொருள் எங்களை இணைத்துவிட்டதாகவே நம்புகிறோம். ஆனால் அடுத்த நாள் தான் இந்தக் கஷ்டமான காரியத்தைச் செய்ததில் உள்ள எல்லையற்ற பிரச்னைகளைக் குறித்த அறிவு என் மனதுக்கு எட்டியது. என் கண்கள் திறந்தன!”

“ஆனால் உங்களுக்குத் தெரியாது! அந்த நாளிலிருந்து பிரத்யும்னன் என் வாழ்க்கையில் எவ்விதமான பாகத்தை ஏற்று வந்திருக்கிறான் என்பதை நீங்கள் அறிய மாட்டீர்கள்! நான் அன்றே முடிவு எடுத்து விட்டேன். பிரத்யும்னனை அந்தக் கொடுமைக்காரர்கள் கருணை காட்டி உயிருடன் விடும்படி வைக்கக் கூடாது. அவனை அந்தத் தளையிலிருந்து விடுவிக்க வேண்டும்.  ஏனெனில் பிரத்யும்னன் என் வாழ்க்கைத்துணை மட்டுமல்ல! என் உயிர், என் காதலன், என் நெஞ்சம், என் கண்ணின் மணி, என் பாதுகாவலன், எல்லாமும் அவனே! ஒவ்வொரு நாளும் அன்றிலிருந்து நான் வாளின் முனையில் நடப்பது போன்ற உணர்வுடன் இருக்கிறேன். எந்நேரமும் என் தலைக்கு மேல் கத்தி தொங்குவதைப் போல் உணர்கிறேன். அதன் பின்னரே நான் சித்தப்பா உத்தவரைச் சந்தித்தேன். அவர் தான் எங்களுக்கு ஒரு சின்ன வீட்டைக் கட்டிக் கொடுத்திருக்கிறார். அந்த வீட்டில் நாங்கள் எங்களால் முடிந்தவரை சந்தோஷமாக வாழ்ந்து வருகிறோம். எங்களுக்கென சிறியதொரு பரிவாரங்களையும் சித்தப்பா உத்தவர் அளித்திருக்கிறார். அவர்கள் எங்களைஆபத்திலிருந்து காப்பாற்ற உதவுகிறார்கள்.”

“”நீங்கள் அவரை முதன்மையான மஹாரதியாக ஆக்கி இருக்கிறீர்கள். அவர் மிகவும் அன்பானவர். நான் அவரை உங்களிடம் அழைத்து வந்திருக்கிறேன். ஏனெனில் உங்களால் அவருடைய கௌர்வத்தை இந்த ஆரிய வம்சத்து அரசர்களிடையே மீட்டுத் தர இயலும். அதிகாரத்தைப் பெற்றுத் தர முடியும். அவர் இன்னமும் பல இடங்களுக்கும் சென்று பல்வேறு சாகசங்களைப் புரிந்து நன்மைகளையும் நல்லவைகளையும் செய்ய வேண்டுமென்று விரும்புகிறேன்.  அவற்றைச் செய்வதற்காக அவர் சற்றுப் பொறுமை இல்லாமலேயே காத்திருக்க வேண்டி இருக்கிறது. பிரத்யும்னர் இவற்றை எல்லாம் முடிக்கும்படி நீங்கள் தான் உதவ வேண்டும்!”

“என் வாழ்க்கையே பிரத்யும்னனைச் சுற்றி அவரால் கட்டுண்டு இருக்கிறது! நீங்கள் ஏன் திரும்பத் திரும்ப ஒரே கேள்வியைக் கேட்கிறீர்கள்? அதையே நான் திரும்பத் திரும்பச் சொல்ல வேண்டும் என்று ஏன் விரும்புகிறீர்கள்? அவர் எங்கே சென்றாலும் நானும் அங்கேயே செல்வேன்! அவர் எங்கும் செல்லாமல் துவாரகையில் இருக்க விரும்பினால் நானும் இங்கேயே இருப்பேன். ஒரு வேளை அவரை ஷால்வன் கொன்று விட்டால், நீங்கள் பயப்படுவது போல் நடந்து விட்டால்! நானும் அவருடன் உடன்கட்டை ஏறி விடுவேன்.  நான் ஏன் இதை எல்லாம் உங்களிடம் சொல்கிறேன் தெரியுமா? இது வரை சித்தப்பா உத்தவரிடம் மட்டுமே சொல்லி இருக்கிறேன். அவரைத் தவிர நீங்கள் ஒருவர் மட்டுமே எங்கள் வாழ்க்கையைக் குறித்துச் சிறப்பாக நினைக்க முடியும். எங்கள் வாழ்க்கை எவ்வளவு அழகானது என்பதைப் புரிந்து கொள்ளவும் முடியும்!”

Wednesday, January 25, 2017

கண்ணன் வருவான், எட்டாம் பாகம், குருக்ஷேத்திரம்! பிரத்யும்னன் கதை!

பிரத்யும்னனுக்கு சுமார் இருபது வயது இருக்கும்.  அவனைப் பார்த்தால் காலத்திற்கு ஒவ்வாதவனாக, அராஜகவாதியாகத் தெரிவான். ஆனால் அவனுக்குத் தன்னுடைய யாதவ குலத்திடமும், யாதவ மக்களிடமும் ஆழ்ந்த அன்பும் அதீதமான கூட்டுறவும் இருந்தது. அவன் ஓர் நல்ல தலைவனாகப் பரிணமிப்பான் என்றே அனைவரும் நினைத்தனர். மேலும் சற்றும் பயமின்றி தர்மத்துக்காகப் போராடினான். அங்குள்ள அனைவராலும் மிகவும் விரும்பப்பட்டான். அனைவரும் அவனை மிகவும் நேசித்தனர். கடந்த ஐந்து வருடங்களாக அவன் க்ஷத்திரிய தர்மத்தைக் குறித்த பயிற்சிகளைப் பல்வேறு விதங்களில் கிருஷ்ணனின் மேற்பார்வையில் கற்று வந்தான்.  அவன் வரையில் கடவுளருக்கும் அசுரருக்கும் இடையில் முடிவுறாத பிரச்னைகள் இருந்து வந்தன.  அவன் கற்றுக்கொள்ளும் ஒவ்வொரு விஷயமும் அவனை ஓர் திடமான தைரியம் படைத்த க்ஷத்திரிய தர்மத்தைக் காப்பாற்றுவதில் முதன்மையானவனாகக் காட்டி வந்தது.  எதையும் முழு மனதுடன் தீவிரமாகக் கற்றுக்கொள்ளும் அவனுடைய இயல்பான சுபாவமும் தீரம் நிறைந்த உள்ளுணர்வும் அவனை இந்தப் பயிற்சிகளில் முழு மனதுடன் ஈடுபடச் செய்தது. அவனும் அதை நன்கு உணர்ந்திருந்தான்.

பிரத்யும்னன் முழு மனதுடன் இதில் ஈடுபட்டதோடு ஊக்கத்துடனும் உற்சாகத்துடனும் இருந்து வந்தான். இது வரையிலும் அவன் செய்தவை அனைத்தும் அவன் தந்தையாகிய கிருஷ்ணனின் தலைமைக்குக் கீழ் அவன் மேற்பார்வையிலேயே அவனுடைய நிழலிலேயே அவன் செய்து வரும்படி இருந்தது.  ஆனாலும் கிருஷ்ணன் அதைத் தன் மகனுக்கு உரியது என்றே சொல்லியும் அதை அப்படியே வெளிப்படையாகப் பாராட்டியும் வந்தான்.  உண்மையில் கிருஷ்ணனின் தூண்டுதலும், அவன் கொடுத்த ஊக்கமும் இல்லை எனில் பிரத்யும்னனால் இவ்வளவு தூரம் செய்ய முடியுமா என்பதும் சந்தேகம் தான்! இளைஞன் ஆன பிரத்யும்னன் மல்லன் பூர்ணாவின் மோசமான நடத்தையை வெறுக்கவோ அதற்காகச் சினம் கொள்ளவோ இல்லை.  ஏனெனில் அவன் பிரத்யும்னனின் இடத்தில் துவாரகையில் அமர்த்தப்பட்டிருந்தான். பூர்ணாவிடம் பாசமே அதிகம் காட்டி வந்தான் பிரத்யும்னன்.

அவன் தாய் ருக்மிணி, விதர்ப்ப நாட்டின் இளவரசி அவனை ஓர் ஆரியர்களின் தலைவனாகவே வளர்த்து வந்தாள்.  அவன் க்ஷத்திரிய தர்மத்தைக் கற்பதிலும் அதைக் காப்பதிலும் காட்டிய ஈடுபாட்டை அவள் ஊக்குவித்தாள். அதன் பின்னர் தான் அந்த எதிர்பாரா நிகழ்வுகள் நடந்தன!  பிரத்யும்னன் ஷாம்பர் என்பவனால் கடத்தித் திருடிக் கொண்டு செல்லப்பட்டான். மாதங்கள் ஓடின. ஏன் வருடங்கள் கூடச் சென்றன. மகன் எங்கே இருக்கிறான் என்பதே தெரியவில்லை ருக்மிணிக்கு! அவள் மனம் உடைந்தது. ஒரு முறை நடந்த சிறு போரில் பிரத்யும்னன் ஷாம்பாரைக் கொன்றான். அவன் அழிந்ததும் தன் மனைவி மாயாவதியுடன் துவாரகை திரும்பினான்.  அங்கு அவளைத் திருமணமும் செய்து கொண்டான். அவள் அவனை விடப் பத்து வயது பெரியவளாக இருந்த போதிலும் அவளையே திருமணம் செய்து கொண்டான். அவள் பிரத்யும்னனுக்கு மனைவியே அல்ல, தாய் என்று யாதவர்கள் அனைவரும் கேலி பேசியதோடு அல்லாமல் இப்படி நடந்ததற்கு வெட்கமும் அடைந்தனர்.

ருக்மிணி தன் மகன் இப்படி க்ஷத்திரிய தர்மத்திலிருந்து விலகி நடந்து கொண்டதை ஒருக்காலும் மன்னிக்கவே இல்லை. அவள் மனம் புண்பட்டது. அவள் மாயாவதியையும் தன் மருமகளாக ஏற்கவில்லை. பிரத்யும்னனையும் மகனாக ஏற்கவில்லை.  தற்செயலாக அவர்களைச் சந்திக்க நேர்ந்தால் கூடத் தாங்கொணா வெறுப்பில் முகத்தைத் திருப்பிக் கொள்வாள். பிரத்யும்னன் செய்த அனைத்து முயற்சிகளும் பலனற்றுப் போயின. அவன் தாயின் மனதை அவனால் மாற்ற முடியவில்லை. ஆனால் கிருஷ்ணன் இதை ஏற்கவில்லை. அவன் ருக்மிணியை மனதை மாற்றிக்கொள்ளும்படி கூறினான். நம் பையன் நம்மிடம் இருக்கிறான். நம்மிடம் அளவிலாப் பாசம் கொண்டிருக்கிறான். இளைஞன், கடவுள் நம்பிக்கை உள்ளவன், நன்றாகப் பேசக் கூடியவனும் ஆவான். இதை விட என்ன வேண்டும்! இப்போதும் கிருஷ்ணன் அதே மனோநிலையில் இருந்தான்.

அவர்கள் கடைசியில் தனிமையில் விடப்பட்டதும் கிருஷ்ணன் பிரத்யும்னனிடம் கேட்டான். “எங்கே உன் மனைவி மாயாவதி? அவள் இந்த அரச குடும்பத்தின் மற்றப் பெண்களோடு தங்கி இருக்கிறாளா? அல்லது பிருகுகச்சாவுக்கோ கிரிநகரத்துக்கோ சென்றிருக்கிறாளா? அனைவரும் அவளைக் குறித்துப் பேசிக்கொள்ளும் மர்மம் என்ன? என்ன ரகசியம்?”

“நீங்கள் அவளை ஒருக்காலும் கண்டுபிடிக்க முடியாது!” என்றான் பிரத்யும்னன்.

“ஓ, அப்படியானால் அவள் எங்கே இருக்கிறாள்?” கிருஷ்ணன் கேட்டான்.

“அவள் காட்டில் தங்க விரும்பினாள். “

“ஓ, அப்படியா? காட்டில் அவள் என்ன செய்கிறாள்?”

“அவள் ஷால்வனை நான் போய் சந்திக்கையில் என்னுடன் வருவதற்காகத் தன்னையும் தயார்ப் படுத்திக் கொண்டு இருக்கிறாள்.”

“மகனே, நீ மனைவியைத் தேர்ந்தெடுத்த விதம் மிகவும் துரதிர்ஷ்டவசமானது! போகட்டும்! நீ ஷால்வனைச் சந்திக்கப் போவது குறித்து உன் மனைவியுடன் கலந்து ஆலோசித்து விட்டாயா?”

“தந்தையே, தன்னால் விளைந்திருக்கும் பாவத்தை நிவர்த்தி செய்ய அதை இவள் ஓர் பரிகாரமாகச் செய்ய விரும்புகிறாள். அப்படித் தான் இதை அவள் பார்க்கிறாள்.” என்றான் பிரத்யும்னன்.

“அவள் இன்னமும் காட்டில் தான் இருக்கிறாளா? மகனே நீ அதை நிச்சயமாக அறிவாயா?”

“தந்தையே, நான் அவளுடன் கடந்த பதினைந்து வருடமாகச் சேர்ந்து வசித்து வருகிறேன்.”

“அவள் ஏன் இங்கே வந்து மற்ற அரசகுலப் பெண்டிரோடு சேர்ந்து இருக்கக் கூடாது?” என்று கிருஷ்ணன் கேட்டான்.

Tuesday, January 24, 2017

கண்ணன் வருவான், எட்டாம் பாகம், குருக்ஷேத்திரம்! துவாரகை மீண்டது!

கிருஷ்ணன் துவாரகைக்குத் திரும்பும் வழியில் கண்ட கோரமான காட்சிகள் அதிர்ச்சியை அளித்தன. வீடுகள் எரிக்கப்பட்டிருந்தன, மனிதர்களும் எரிக்கப்பட்டு ஆங்காங்கே எரிந்த உடல்கள் காணப்பட்டன. அவற்றில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள், மிருகங்கள் போன்றவற்றின் உடல்கள் காணப்பட்டன. பல குதிரைகளும், பசுக்களும் எரிக்கப்பட்டிருந்தன. கிருஷ்ணனும் மற்ற மஹாரதிகளும் சௌராஷ்டிரத்தில் இல்லை என்பதை ஷால்வன் நன்றாகப் பயன்படுத்திக் கொண்டு விட்டான்.  முழு வேகத்துடன் துவாரகையைத்தாக்க இறங்கி இருந்தான். எங்கெங்கு பார்த்தாலும் நெருப்பு வைக்கப்பட்டிருந்தது அல்லது வாளால் தாக்கி மனிதர்களும், மிருகங்களும் கொல்லப்பட்டிருந்தனர். இவற்றை எல்லாம் செய்து முடித்துவிட்டுக் கிருஷ்ணனுக்குச் செய்தி போய் அவன் சௌராஷ்டிரம் திரும்புவதற்குள்ளாக ஷால்வன் தன் நாட்டுக்குத் திரும்பி விட்டான்.

தான் துவாரகைக்குத் திரும்பி விட்டதைத் தன் பாஞ்சஜன்யத்தை ஊதி அறிவித்தான் கிருஷ்ணன்.  மற்ற மஹாரதிகளும் தங்கள் வரவை அவ்வண்ணமே அறிவித்ததோடு அல்லாமல் எதிரிக்குச் சவாலும் விட்டனர்.  ஆனால் அங்கே அந்தச் சவாலை எதிர்கொள்ள எந்த எதிரியும் இருக்கவில்லை என்பதே மாபெரும் சோகம். யாதவர்கள் தாங்கள் துணிவுடன் எதிரியை எதிர்கொண்டிருந்தாலும் அவனை எதிர்க்க முடியாமல் போய்விட்டதால் துவாரகையின் அருகே இருந்த அடர்ந்த காட்டுக்குள் தஞ்சம் புகுந்திருந்தவர்கள், இப்போது கிருஷ்ணன் துவாரகைக்குத் திரும்பி விட்டான் என்னும் செய்தியைக் கேட்டதும் வெளிவந்தனர்.  இன்னும் சிலர் காட்டுக்குள் மீண்டும் ஓடி அங்கே ஒளிந்திருந்த கிருஷ்ணனின் மகன் ஆன பிரத்யும்னனை அழைத்து வந்தனர். அவன் தன்னுடைய படை வீரர்களுடன் அங்கே வந்து கிருஷ்ணனுக்கும் மற்றப் பெரியோருக்கும் கீழே விழுந்து வணங்கினார்கள்.

அந்தப் படை வீரர்களின் பிரிவு கடற்கரையோரத்தில் முகாம் இட்டிருந்தது. ஆங்காங்கே தங்குவதற்குக் குடில்கள் எழுப்பி இருந்தார்கள்.  அந்தக் குடில்களில் அக்கம்பக்கமிருந்து வந்திருந்த குடிமக்கள் தங்கி இருந்தனர்.  கிருஷ்ணனும் மற்ற மஹாரதிகளுக்கும் உணவு படைக்கப்பட்டது. அதன் பின்னர் பிரத்யும்னன் ஷால்வன் தன்னுடைய ஒட்டகங்களைப் பயன்படுத்தி அதன் மேல் வீரர்களை ஏற்றி எப்படிக் கடந்து வந்து தங்களைத் தாக்கினான் என்பதையும் லாவனிகா நதியை எப்படிக் கடந்தான் என்பதையு விவரித்தான். அதன் பின்னர் அவன் சௌராஷ்டிரம் முழுமைக்கும் சென்று தாக்கியதையும் விவரித்தான்.

“நம்முடைய வீரர்கள் துணிச்சலாக அவனையும் அவன்படை வீரர்களையும் எதிர்கொண்டனர்.” என்றான் பிரத்யும்னன். “அதன் பின்னர் தான் சித்தப்பா உத்தவர் இரு தூதர்களை அனுப்பி உங்களை துவாரகைக்குத் திரும்பும்படி சொல்லி அனுப்பினார்.  காயம் பட்டவர்களை கிரிநகர்க் கோட்டைக்கு அனுப்பி வைத்து சிகிச்சை செய்யும்படி செய்தார்.  மற்ற யாதவத் தலைவர்களும் அவர்களின் தொண்டர்களும் தங்களை ஷால்வனின் வீரர்களிடமிருந்து மறைத்துக் கொள்ள வேண்டி அடரந்த காட்டில் தஞ்சம் புகுந்தனர்.”

“சில யாதவர்கள் தங்கள் ஆட்களை அனுப்பி எதிரியின் நிலைமையை உளவு பார்க்கச் சொன்னார்கள். அவர்கள் லாவனிகா நதியைக் கடக்கும்போது சௌப வாரியர்களின் ஒரு குழு நம் வீரர்களைப் பிடித்துவிட்டது. அவர்களில் தான் எங்கள் தாத்தாவும், உங்கள் தந்தையுமான மதிப்புக்குரிய வசுதேவரும் இருந்தார்.”

“நீங்கள் ஏன் தந்தையை அந்த உளவுக்குழுவுடன் அனுப்பி வைத்து அவரைப் பிடித்துக் கொண்டு போகும்படி செய்தீர்கள்?” கிருஷ்ணன் கேட்டான்.

“தந்தையே! நாங்க பெரு முயற்சி செய்தோம், அவர்கள் சென்ற வழியில் செல்லவும் முயன்றோம். ஆனால் அவர்கள் சென்ற வழியில் எங்களால் தொடர்ந்து செல்ல முடியவில்லை. “ என்றான் பிரத்யும்னன்.

“எங்களால் முடிந்ததைச் செய்துவிட்டோம், தந்தையே! ஆனால் அங்கே செல்ல, சௌப நாட்டுக்குச் செல்ல நமக்கு ஒட்டகங்கள் தேவை! அவை இல்லாமல் நம்மால் அவர்களைத் தொடர்ந்து அந்தப் பாலைவனைத்தில் செல்ல இயலாது!” என்று வருத்தத்துடன் கூறினான் பிரத்யும்னன்.

“சரி! கவலைப்படாதே! தந்தை உயிருடன் இருந்தாரானால், அது உண்மையானால், இன்னும் சில நாட்கள் தாமதிப்பதால் எதுவும் நடந்து விடாது! பொறுத்திருப்போம்.  ஆனால் அவரை ஷால்வன் மட்டும் கொன்றிருந்தான் எனில் அதற்குரிய தண்டனையை அவன் அனுபவித்தே தீர வேண்டும்.” என்றான் கிருஷ்ணன்.

“அது சரி, சாத்யகியைக் குறித்து ஏதும் தகவல் இல்லையா?” என்று கேட்டான் கிருஷ்ணன்.

“சாத்யகி மாமா நீங்கள் வழியில் ஆபத்துக்களைச் சந்திக்க நேரலாம் என்பதற்காக உங்களை எச்சரிக்க வேண்டும் என்று போயிருக்கிறார். நீங்கள் அவரை வழியில் சந்திக்கவே இல்லையா?  மாமா இங்கிருந்து சென்று ஐந்து நாட்களுக்கு மேலாகிறதே! ஆனால் அவரிடமிருந்து இன்னும் எந்தச் செய்தியும் வரவில்லை. ஒருவேளை ஷால்வன் அவரையும் பிடித்துக் கடத்திச் சென்றிருப்பானோ!”

ஒரு கண நேரம் அப்போதைய சூழ்நிலையைக் குறித்துக் கண்ணன் ஆழ்ந்து சிந்தித்தான். பின்னர் மீண்டும், “நம்முடைய ராஜ்யத்துக்குள் அத்து மீறிப் புகுந்த ஷால்வனைத் தடுப்பது மிகவும் கடினமாகி விட்டது.  இப்போது நாம் அவனை அவனுடைய சொந்த நாட்டிலேயே சென்று தாக்க வேண்டும். ம்ம்ம்ம்ம் அவன் நாடு ஒரு பக்கம் லாவனிகா நதியாலும் இன்னொரு பக்கம் நீளமான பாலைவனத்தாலும் காக்கப்படுகிறது. இதைத் தாண்டிச் சென்று தான் நாம் அவனைத் தாக்கியாக வேண்டும். அவனிடமிருந்து தப்பி ஓடுவதன் மூலம் நாம் ஷால்வனை அழிக்கவோ, ஒழிக்கவோ முடியாது.  அவனை அவன் வழியிலேயே சென்று தக்க த்ண்டனை கொடுப்பதன் மூலம் அவனை ஒழிக்க வேண்டும். ம்ம்ம்ம், நல்லது! சௌபப் படையின் வீரர்கள் இன்னும் யாரேனும் சௌராஷ்டிரத்தில் இருக்கிறார்களா? அது குறித்து ஏதும் தெரியுமா?” என்று கண்ணன் கேட்டான்.

“இல்லை, தந்தையே! லாவனிகா நதிக்குத் தெற்கே ஒரு சின்ன சௌப வீரனைக் கூட நம்மால் பார்க்க இயலாது! நான் அப்படி நினைக்கவில்லை!” என்றான் பிரத்யும்னன். “ஆஹா! அப்படியா! யாதவர்கள் எத்தனை பேர் சௌராஷ்டிரத்தில் இருக்கின்றனர்?” என்று கண்ணன் கேட்டான்.

“ஓ, அவர்கள் நிறைய இருக்கின்றனர். அவர்கள் மெல்லத் திரும்புவதோடு தங்கள் பசுக்களையும், குதிரைகளையும் மற்றக் கால்நடைகளையும் திரும்ப இங்கே கொண்டு வருகின்றனர்.  இப்போது அவர்களுக்கு உண்ண உணவு பழங்கள், வேர்கள், கொட்டைகள், காய்கள் போன்றவை தான். மாதா அன்னபூரணியின் கிருபையால் அவை தாராளமாகக் கிடைக்கின்றன.” என்றான் பிரத்யும்னன்.

“சரி, தந்தையே! நீங்கள் இப்போது இங்கே துவாரகைக்குத் திரும்பி விட்டதால் நான்  பாட்டனார் வசுதேவரைத் தேடிச் செல்ல விரும்புகிறேன்.” என்றான் பிரத்யும்னன்.

“அவசரமாகவும், மூர்க்கத்தனமாகவும் நடந்து கொள்ளாதே, மகனே!” என்றான் கிருஷ்ணன்.

“ஓ, என்னுடைய மூர்க்கத் தனத்தைக் குறித்து நீங்கள் கவலைப்பட வேண்டாம், தந்தையே! நீங்கள் எப்போதுமே என்னை அவசரக்காரன் என்றே சொல்லி வருகிறீர்கள். ஆனால் பின்னர் நான் என்ன செய்கிறேனோ அதைச் சரி என ஒப்புக் கொள்வீர்கள்!” என்றான் பிரத்யும்னன் சிரித்துக் கொண்டே. அவன் கண்களில் தந்தையிடம்   கொண்டிருக்கும் அளவற்ற பாசமும், மரியாதையும் ஒளிர்ந்தன.  கிருஷ்ணனும் அன்புடன் தன் மகனின் கன்னத்தைத் தட்டிக் கொண்டே சொன்னான். “அதனால் தான் பெண்களுக்கு  உன்னை மிகப் பிடித்திருக்கிறது போலும்!” என்றான். “உன் மூளை எங்கள் அனைவ்ரின் மூளையை விட நூறு யோஜனை தூரம் முன்னோக்கிச் செல்கிறது! “ என்றும் குறும்புடன் பாராட்டினான் மகனை!

துவாரகையின் மாளிகைக் கட்டிடங்கள் இடிந்து விழுந்தவற்றை எடுக்கையில் அனைவரின் மனங்களும் கனத்தன.  அனைத்து அழகான கட்டிடங்களும் இடிக்கப்பட்டோ, எரிக்கப்பட்டோ காட்சி அளித்தன. அனைவருக்கும் குடி இருக்கக் குடில்கள் தேவை. குறைந்தது நூற்றுக்கணக்கான குடில்கள் உடனடித் தேவை. ஆனால் குடில்களை நிர்மாணிக்கத் தேவையான பொருட்கள் கிடைப்பது தான் கஷ்டமாக இருந்தது.  உணவுக்காக மக்கள் கூடிய கூட்டமும் போட்ட ஆரவாரங்களும் கேட்கவும் பார்க்கவும் பரிதாபத்தைக் கொடுத்தது. அவர்கள் தேவைக்கு வேண்டிய உணவு அவர்களுக்குக் கிடைக்கவில்லை. அதில் கால்பங்கே கிடைத்தது. குழந்தைகள் பாலுக்கு அழுதன. ஆனால் பாலே கிடைக்கவில்லை!

அங்கே இருந்த சில குதிரைகளையும் கண்காணிக்கவோ அவற்றைப் பழக்கவோ மனிதர்கள் இல்லை. அவற்றைப் பிடித்துக் கட்டிப்போடவும் யாரும் முயலவில்லை.  ஆகவே அவை இஷ்டத்துக்கு அங்குமிங்கும் அலைந்தன.  பெண்களில் வயது முதிர்ந்தவர்கள் ஆனாலும், இளம்பெண்கள் ஆனாலும் சரி, வருத்தத்துடன் அமர்ந்திருந்தனர். தங்கள் தலையில் கைகளை வைத்துக் கொண்டு துயரத்தில் புலம்பிக்கொண்டும் அழுது கொண்டும் ஏமாற்றத்தில் மூழ்கி  அமர்ந்து கொண்டிருந்தனர்.  அவர்களில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு இழப்பு. சிலருக்குக் கணவன், சிலருக்கு மகன், சிலருக்குத் தந்தை, சிலருக்கு சகோதரன்.  அந்த இழப்பின் தாக்கம் அவர்களுக்குப் பெரிதாக இருந்தது.

அங்கே தாக்குவதற்கும் மக்களைச் சோதனை இடுவதற்கும் வந்த ஷால்வனின் படை வீரர்கள் வீடுகளுக்குத் தீ வைத்திருந்தார்கள். ஆனால் அங்கே தங்கினால் தங்களுக்கும் தங்கள் ஒட்டகங்களுக்கும் தேவையான உணவு கிடைக்காது என்பதால் உடனே சென்று விட்டிருந்தனர்.  கிருஷ்ணன் அனைவரையும் சந்தித்துப் பேசினான். அவன் பேச்சினால் அனைவரின் மனமும் அமைதி அடைந்தது.  அங்கே நடந்த நடவடிக்கைகளுக்கு உயிரும் உணவும் கொடுத்தது கிருஷ்ணன் தான்.  தன் இனிமையான பேச்சினால் அனைவரின் துன்பத்தையும் அகற்ற முயன்றான்.  அவன் அங்கே இருந்ததே அனைவரின் மனதிலும் அளவற்ற நிம்மதியை உண்டாக்கியது.  அவனுடைய உற்சாகம் அனைவரையும் தொற்றிக் கொண்டது.

“சோம்நாத் கோயிலிற்கும் அதன் மூர்த்திக்கும் பாதிப்பு ஏதும் இல்லையே? அதைக் குறித்த தகவல்கள் ஏதும் உண்டா?” என்று கேட்டான் கிருஷ்ணன். “ஓ, ஷால்வனின் படைகள் அவற்றை அழித்து விட்டனர்!” என்றான் பிரத்யும்னன். “ம்ம்ம்ம்ம்” என்று ஆழ்ந்த பெருமூச்சு விட்ட கிருஷ்ணன், “அந்தக் கோயிலை நாம் திரும்பவும் கட்டுவோம். இம்முறை வெள்ளியால் கோபுரங்கள், கலசங்கள் அமைத்துக் கட்டுவோம்!” என்றான். கிருஷ்ணனின் இடைவிடா முயற்சியினால் துவாரகை மீண்டும் உயிர்த்தெழுந்தது.

Sunday, January 22, 2017

கண்ணன் வருவான், எட்டாம் பாகம், குருக்ஷேத்திரம்!

இந்திரப் பிரஸ்தத்திலிருந்து துவாரகை செல்லும் வழியிலேயே கிருஷ்ணன் தன்னுடன் நட்புப் பாராட்டி வரும் மன்னர்களுக்கு தூது அனுப்பி இந்த முறையற்ற ஆக்கிரமிப்பை அகற்றவும், தன் தந்தையை விடுவிக்கவும் உதவி செய்யுமாறு வேண்டிக் கொண்டான். எங்கும் செய்திகள் அனுப்பப்பட்டன. தர்மம் காப்பாற்றப் பட வேண்டுமெனில் ஷால்வன் அழிய வேண்டும் என்பது உறுதியாகி விட்டது. கிருஷ்ணனை இப்போது அனைவருமே தர்மகோப்தாவாகவே பார்க்க ஆரம்பித்தனர். தர்மத்தின் பாதுகாவலன் கிருஷ்ணன் ஒருவன் மட்டுமே என உறுதியாக நம்பினார்கள்.  ஷால்வனுக்கு எதிராக ஓர் புனிதமான போர் நடக்கப் போகிறது என்பதைக் குறித்து அனைவரும் அறிந்ததோடு அதற்கு உதவி செய்யவும் சம்மதித்தார்கள். கிருஷ்ணனின் தூதுக்கு பதில் கிடைத்தது. ஆரியவர்த்தத்தின் இளைஞர்கள் அனைவரும் ஒற்றுமையாகக் கை கோர்த்துக் கொண்டு கிருஷ்ணனுக்கு உதவ ஆயத்தமானார்கள்.

அனைவரும் தங்கள் கரங்களை உயர்த்திக் கொண்டு, “எங்கே தர்மம் நிலைத்திருக்கிறதோ, அங்கே வெற்றி கிட்டும்!” என்று கோஷங்களைச் செய்தார்கள். ரதங்களை வேகமாக ஓட்டி வரும் குதிரைகளின் கனைப்புக் குரலும் ரதச் சக்கரங்களின் உருண்டோடும் சப்தமும் ஒன்றுடன் ஒன்று போட்டி போட்டுக் கொண்டு கேட்டவண்ணம் இருந்தன. அவர்களில் ஆடம்பரம் மிகுந்த ராஜாக்கள் மட்டுமில்லாமல் சாதாரணக் குறுநில மன்னர்களும் இருந்தனர். ஸ்ரோத்திரியர்கள் பலரும் தங்கள் பங்குக்குக் கிராமங்களுக்குச் சென்று மக்களிடம் ஆதரவு திரட்டினார்கள். அவர்களில் பெண்கள் பலரும் இருந்தனர். சாதாரணக் கிராமத்து விவசாய மக்கள் தங்கள் வாழ்க்கையை மிகுந்த சிரமத்துடன் நடத்துபவர்கள் தங்கள் கணவனுக்குப் பின்னால் ஸ்திரமாக நின்று ஆதரவைக் கொடுத்தனர். கிருஷ்ணனின் வேண்டுகோள் செவிமடுக்கப்பட்டது. ஆரியவர்த்தத்தின் ஒவ்வொரு மூலையிலிருந்தும் அவர்கள் வந்தனர்.

கிருஷ்ணனனால் நடத்தப்பட்ட அதிசய நிகழ்வுகளான கம்சனின் மரணம், ஜராசந்தனின் மரணம் மற்றும் சிசுபாலனை அழித்தது ஆகியவை ஏற்கெனவே மக்கள் மனதில் பெரியதொரு எழுச்சியை ஏற்படுத்தி இருந்தது. கடல் அலை  கரைக்கு வந்து மோதிக்கொண்டே இருப்பது போல்  மீண்டும் மீண்டும் மக்கள் கூட்டம் அலையென மோதியது. பல அரசர்களும் க்ஷத்திரிய தர்மத்தைக் காப்பது என உறுதி எடுத்திருந்தார்கள். என்றாலும் அவர்களால் அவர்கள் ராஜ்யத்தின் எல்லைக்குட்பட்ட ஆசிரமங்களைப் பாதுகாக்க முடியாமல் இருந்தது.  அவர்கள் முதலில் தங்கள் பாதுகாப்பையும் தங்கள் ராஜ்யத்தின் பாதுகாப்பையும் உறுதி செய்யும் விதமாகத் தங்களைக் காத்துக் கொள்ளவே முனைந்தனர். ஆகவே கிருஷ்ணனைப் போன்ற ஒருவர் எந்த விதமான ராஜ்யத்துக்கும் ஆசைப்படாமல், ராஜ்யபாரத்தைச் சுமக்காமல் இத்தகைய பாதுகாப்பை அளிக்க வந்தது அவர்களுக்கு ஒரு விதத்தில் நிம்மதியையே தந்தது.

முதலில் கிருஷ்ணனும் அக்ரபூஜையைத் தனக்குச் செய்ததினால் விளைந்த எதிர்ப்பின் தாக்கங்களைக் குறித்துச் சரிவரப் புரிந்து கொள்ளவில்லை என்றே சொல்ல வேண்டும்.  உண்மையில் வேத வியாசரின் முக்கியமான குறிக்கோள் இந்த அக்ரபூஜையில் எவ்விதத்தில் இருந்தது என்பதை எவரும் சரியாகப் புரிந்து கொள்ளவே இல்லை. அவர் கிருஷ்ணனைத் தான் அக்ரபூஜைக்கு அழைக்கப் போகிறார் என்னும் விஷயம் அவர் கிருஷ்ணனை நோக்கிச் செல்கையிலேயே அனைவருக்கும் தெரிய வந்தது. அந்த சபாமண்டபமே அமைதியில் ஆழ்ந்தது. வேத வியாசர் பல்லாண்டுகளாக ஆசிரமங்கள் தோறும் சென்று விஜயம் செய்து ஆரியக் கோட்பாடுகளைக் குறித்துக் கற்பித்து, ஆரியர்களையும் மற்ற ஆரிய அரசர்களையும் ஒருங்கிணைக்கும் முயற்சியில் ஈடுபட்டார்.ஸ்ருதி, ஸ்ம்ருதி மற்றும் தெய்விகமான வேதங்கள் அவர்கள் வாழ்க்கைக்கு வழிகாட்டியாகவும் குலதெய்வமாகவும் விளங்கிற்று.  ஆசிரமங்கள் அனைத்துமே அநேகமாக சுயக் கட்டுப்பாட்டுக்கும், தவங்கள் செய்து வாழ்க்கையில் மேம்படவும் உதவின. இதைத் தான் அங்கே வசித்த பெரும்பாலான ஸ்ரோத்திரியர்கள் வியாசரின் வழிகாட்டுதலில் செய்து வந்தனர்.

வாழும் தெய்வீக மந்திரங்களான வேதங்கள் இவ்வுலகைப் போலவே மிகவும் பெரியதாகவும், அகண்டு, ஆழமாகவும் இருப்பதாகவும் வேத வியாசர் நம்பினார். அவற்றின் பொருளை அறிவது என்பது அவ்வளவு சுலபம் அல்ல என்றும் புரிந்து கொண்டார். ஆனால் உண்மையில் மக்கள் வாழும் வாழ்க்கையோ தனி மனிதனின் குறுகிய மனத்தைப் போல் இருந்தது. ஆகவே மனிதனின் பார்வையை விசாலமாக ஆக்கவேண்டி, தினம் தினம் அக்னி மூட்டி அந்த அக்னியில் ஆஹுதிகள் செய்து மந்திர கோஷங்கள் மூலம் மனித மனதை நிலைப்படுத்த முயன்றனர். விரைவில் ஆசிரமங்கள் மூலம் தார்மீக ரீதியிலும் ஆன்மிக ரீதியிலும் முன்னிலை பெற்று அனைவரையும் ஈர்த்தன. ஆசிரமவாசிகள் வேத மந்திரப் பிரயோகங்களின் மூலம் அக்னிக்கடவுளைப் பிரார்த்தித்து மக்களுக்கு புனிதமானதொரு அறவாழ்க்கைக்கு வழிகாட்டினார்கள். இதன் மூலம் பல கொடூரமான அரசர்களின் மனங்கள் மாற்றப்பட்டு நிம்மதியும் அமைதியும் நிறைந்த ஆட்சிக்கு வித்திட முடிந்தது.

ஒவ்வொரு சமயங்களிலும் காடுகளிலிருந்து ராக்ஷசர்கள் வெளியேறி ஆசிரமங்களையும் ஆசிரமவாசிகளையும் அழிக்க முயன்றனர். ஸ்ரோத்திரியர்களைத் தாக்கி அவர்கள் அக்னிக்குண்டத்தை நொறுக்கி அவர்களின் பூணூலை அறுத்து அவர்களைக் கொன்று பெண்களை மானபங்கப்படுத்தி என்று பல்வேறு விதங்களிலும் அவர்களுக்குத் தொந்திரவு அளித்தனர்.  ஆனால் ராஜசூய யாகத்தின் போது நடந்த சம்பவங்களின் மூலம் அனைவர் மனதிலும் உற்சாக ஊற்றுப் பெருக்கெடுத்தது.  கிருஷ்ணனின் சாகசங்களை அறிந்தோர் மனதில் அவன் மேல் பயபக்தியும் பிரமிப்பும் உண்டானது. அவனுடைய ஒவ்வொரு சாதனைகளையும் மக்கள் போற்றிப் பாடி வந்ததோடு அல்லாமல் அவன் சாதனைகளையே ஓர் தெய்விகமாகக் கருதி வணங்கி வந்தனர்.  எதிர்பாராவிதமாக கிருஷ்ணனுக்கு அக்ரபூஜை நடத்தப்பட்டபோது அவனுள்ளும் பல்வேறு விதமான பொறுப்புக்கள் தன்னைச் சூழ்ந்து விட்டதாகத் தோன்றியது. ஏனெனில் ஒரு சக்கரவர்த்திப் பதவியை விட அவனுக்கு அளிக்கப்பட்ட “தர்மகோப்தா”  “தர்ம ரக்ஷகன்” என்னும் பட்டம் மிகப் பெரியதும் பொறுப்புக்கள் நிறைந்ததும் ஆகும்.  அவனுடைய தர்மசாம்ராஜ்யம் அவனுக்கு வந்தாலும் அது கண்ணுக்குத் தெரியாமல் மறைந்திருந்தது.  ஆனாலும் அவன் தன்னை வலிமை மிக்கவனாகவே உணர்ந்தான். ஏனெனில் அது அவன் மனதுக்கிசைந்த யாதவர்களால் மட்டும் அளிக்கப்படவில்லை. ஆரிய வர்த்தத்து அனைத்து ஆரியர்களும் மட்டுமில்லாமல் நாகர்கள், ராக்ஷசர்கள் இன்னும் சொல்லப் போனால் வேட்டுவ அரசர்களான நிஷாதர்களால் கூட ஆதரிக்கப்பட்டது.


Friday, January 20, 2017

கண்ணன் வருவான், கதை சொல்லுவான், எட்டாம் பாகம்,குருக்ஷேத்திரம்!

இரண்டு நாட்கள் கழித்து சாத்யகியும் கிருஷ்ணனும் தங்கள் தங்கள் படை வீரர்களுடன் விடிகாலையிலேயே சௌராஷ்டிரத்தை நோக்கிப் பயணப்பட்டனர். அடிக்கடிப் பயணப்பட்டதாலும், தொடர்ந்த பயன்பாட்டினாலும் இந்திரப் பிரஸ்தத்திலிருந்து பாலைவனம் வழியாக சௌராஷ்டிரத்தை நோக்கி வந்த அந்தப் பாதை இப்போது அனைத்துப் பாதசாரிகளாலும், ரத சாரதிகளாலும் பயன்படுத்தப்படும் ஓர் ராஜபாட்டையாக மாறி இருந்தது.  அதன் இருபக்கங்களிலும் புதிது புதிதாகப் பல கிராமங்களும், ஆசிரமங்களும் முளைத்திருந்தன.  கிராமத்து மக்களும், பெண்டிரும் கிருஷ்ண வாசுதேவன் அந்த வழியாகச் செல்வதை அறிந்து கொண்டு அவனைக் காண வழக்கம்போல் கூடினார்கள். வாசுதேவனுக்கு வரவேற்பு அளித்து அவனிடம் ஆசிகளையும் பெற்றுக் கொண்டார்கள். ஆண்கள் பூரண கும்பத்தில் தேங்காயை வைத்து அவனை வரவேற்றார்கள். பெண்கள் விதவிதமான நீர்ப்பானைகளுடன் வந்திருந்தனர்.

அந்தப் பயணத்தில் கிருஷ்ணன் தானே ரதத்தை ஓட்டிக் கொண்டு சென்றான். அப்போது கிருஷ்ணனுக்கு அவனுடைய வாழ்க்கையானது எப்போதுமே மற்றவரிலிருந்து தனித்து இருப்பதையும் ஓர் கட்டாயமான பணியாகவும் இருந்ததை உணர்ந்தான். அனைவரையும் தீமைகளிலிருந்து காப்பாற்றும் ஓர் கடவுளாகவே தான் இருக்க வேண்டிய நிர்ப்பந்தத்தை உணர்ந்தான். தர்மத்தை மீண்டும் நிலைநாட்டுவதிலும் க்ஷத்திரிய தர்மத்தைப் பேணிக்காப்பதிலும் தன் பங்கு மிக முக்கியமான ஒன்று என்பதை உணர்ந்தான். அவன் கண் முன்னர் கடந்த காலம் விரிந்தது.

பிறந்தது முதல் மத்ராவை விட்டு கோகுலத்திலும் பிருந்தாவனத்திலும் பதினாறு வயது வரை வளர்ந்த அவன் தன் பதினாறாம் வயதில் தன்னைப் பெற்ற தந்தை வசுதேவராலும் மற்ற யாதவத் தலைவர்களாலும் மத்ராவுக்கு அழைக்கப்பட்டான். அங்கே கம்சனை எதிர்த்துப் போராடும்படி அறிவுறுத்தப்பட்டான். அதை ஏற்று மத்ரா வந்த கிருஷ்ணன் கம்சனை மல்யுத்தத்தில் தோற்கடித்ததோடு அல்லாமல் அவனைக் கொன்றும் போட்டான்.  அதிலிருந்து ஆரம்பமானது தான் ஜராசந்தனுக்கும், கிருஷ்ண வாசுதேவனுக்கும் இடையில் ஏற்பட்ட வாழ்வா, சாவா என்னும் போராட்டம். பல வருடங்கள் தொடர்ந்தது. ஜராசந்தன் மகதத்தில் ஈடு இணையற்ற சக்கரவர்த்தியாக இருந்தான் என்பதோடு ஆரியவர்த்தம் முழுமையையும் தன் கட்டுப்பாட்டிற்குள் அடக்கிக் கொண்டு வரவேண்டும் என்னும் தணியா ஆவலுடனும் இருந்தான். கம்சனுக்குத் தன் பெண்கள் இருவரையும் மணம் முடித்துக் கொடுத்திருந்த ஜராசந்தன் இப்போது தன் மாப்பிள்ளைக்காகக் கிருஷ்ணனைப் பழி வாங்கத் துடித்தான்.

கம்சன் கிருஷ்ணனால் கொல்லப்பட்டதுமே ஜராசந்தன் பலராமனையும், கிருஷ்ணனையும் அடியோடு அழித்துவிடுவதாகச் சபதம் செய்திருந்தான். அதற்காக மத்ராவை முற்றுகையும் இட்டான். மத்ராவின் யாதவர்கள் அனைவரிடமும் கிருஷ்ணனையும் பலராமனையும்  தன்னிடம் சரண் அடையும்படி கூறுமாறு அறை கூவினான். ஆனால் கிருஷ்ணனும், பலராமனும் அங்கிருந்து எப்படியோ தப்பித்து கோமந்தகம் நோக்கிச் சென்று விட்டனர்.  ஜராசந்தன் விடாமல் கோமந்தகத்துக்கு வந்து அவர்களைத் துரத்தினான். அந்த மலையின் உயரத்தை எட்ட முடியாமல் போனதால் அவன் மலையின் பசுமைத் தாவரங்களுக்குத் தீ வைத்துக் கொளுத்தி அப்படியே கிருஷ்ணனையும், பலராமனையும் தீயில் எரிக்க நினைத்தான். ஆனால் அதிலிருந்தும் இருவரும் தப்பினார்கள்.

சில ஆண்டுகளிலேயே மீண்டும் ஜராசந்தன் மத்ராவை நோக்கிப் படை எடுத்துச் சென்றான். அப்போது யாதவர்களுக்கு இரண்டே வழிகள் திறந்திருந்தன. ஒன்று பலராமனும், கிருஷ்ணனும் சரண் அடைவது அல்லது அனைத்து யாதவர்களும் ஒன்றாக அழிந்து போவது.  ஜராசந்தனின் இந்தக் கொலைவெறித் தாக்குதலில் இருந்து தப்பிக்கக் கிருஷ்ணன் அனைத்து யாதவர்களையும் அங்கிருந்து வேறு ஓர் நாட்டுக்குக் குடியேற்றினான்.  யாதவ குலத்து ஆண்கள், பெண்கள், முதியோர், குழந்தைகள், அனைவரையும் அவரவர் எடுத்துச் செல்ல முடிந்த பொருட்களோடும், கால்நடைச் செல்வங்களோடும் சௌராஷ்டிரத்துக்கடற்கரையோரம் அழைத்துச் சென்று அங்கே துவாரகை நகரை உருவாக்கி அங்கிருந்த கிரிநகர் மலையில் ஓர் அழகான கோட்டையும் கட்டிப் புதியதோர் நாட்டை உருவாக்கினான்.

அதன் பின், அதன் பின்னர் தான் விதர்ப்ப தேசத்து இளவரசி ருக்மிணியின் சுயம்வரம் நடந்ததும், அவள் கிருஷ்ணனுக்கு அனுப்பிய மடலும் அதை வைத்துக் கிருஷ்ணன் அவளைத் தூக்கி வந்ததும் திருமணம் செய்து கொண்டதும் நடந்தது. ஜராசந்தன் ருக்மிணியின் சுயம்வரத்தில் வந்திருந்து பங்கு பெற்ற போதும் அந்த சுயம்வரத்தில் பங்கு பெற முடியவில்லை. ஏனெனில் வந்திருந்த பெருவாரியான அரசர்கள் ஜராசந்தனுக்கு விரோதமாகவே இருந்தார்கள். ருக்மிணியின் சகோதரன் ஆன ருக்மி எவ்வளவோ முயற்சிகள் எடுத்து ருக்மிணியைக் கிருஷ்ணனின் பிடியிலிருந்து விடுவித்துத் திரும்பக் கொண்டு வர எடுத்த முயற்சிகள் பலனில்லாமல் போயின.  அதன்பின் சில ஆண்டுகள் கழிந்தன.

பாஞ்சால இளவரசி திரௌபதியின் சுயம்வரத்தின் எப்படியேனும் அவளைத் தன் பேரனுக்கு மணமுடிக்க ஜராசந்தன் திட்டம் போட்டு வந்திருக்கையில் கிருஷ்ணன் அவனைத் திரும்பிக் கூடப் பார்க்காமல் அங்கிருந்து ஓடச் செய்தான்.  ஜராசந்தன் இழிவு படுத்தப்பட்டாலும் அதைக் குறித்துப் பேசமுடியவில்லை. திரௌபதி பாண்டவர்களை மணந்ததன் மூலம் அவர்களுக்கும், பாண்டவர்களுக்கும் ஓர் பிணைப்பும் ஆதரவும் ஏற்பட சாத்தியம் ஆகியது.  அதன் பின்னரே கிருஷ்ணன் யுதிஷ்டிரனை ராஜசூய யாகம் செய்யச் சொன்னான். ஆரியர்களிடையே யுதிஷ்டிரனின் சக்கரவர்த்திப் பட்டத்தை அதன் மூலம் தக்கவைத்துக் கொள்ளலாம் என்றும் ஆலோசனை கூறினான். ஆனால் அதற்குத் தடையாக இருந்தவன் ஜராசந்தன். அவன் ஏற்கெனவே நூறு ஆரிய அரசர்களைப் பிடித்து வைத்துக் கொண்டு யாகத்தில் நரபலி கொடுத்தால் தான் ஆரியவர்த்தத்தின் ஏகபோகச் சக்கரவர்த்தி ஆகிவிடலாம் என்று ஏற்பாடுகள் செய்து 99 அரசர்கள் வரை பிடித்துச் சிறையில் அடைத்திருந்தான்.  இப்போது அவனை அழிப்பதைத் தவிர கிருஷ்ணனுக்கு வேறு வழியில்லாமல் இருந்தது.

கிருஷ்ணனை முதல் முதல் அவன் தந்தையும் மற்றவர்களும் மதுராவிற்கு அழைத்தபோது அந்தச் சமயம் அவர்களுக்கு எதிரிகள் அதிகமாக இருந்தனர்.  நாலா திசைகளிலும் எதிரிகள். கிழக்கே ஜராசந்தன், தெற்கே சேதி நாட்டில் சிசுபாலன், மேற்கே பாலைவனத்தைத் தாண்டி ஷால்வன், துரியோதனனின் மாமனார் சபல் என்பவர் வடக்கே. ஆக நான்கு திசைகளிலும் எதிரிகள் இருந்தனர். அவர்கள் நால்வரும் ஒன்று சேர்ந்திருந்தால் பின்னர் ஆரியவர்த்தம் அவர்கள் கைகளில் நசுங்கிச் சின்னாபின்னமாகி விடும். எவரும் தப்ப இயலாது.  ஆகவே யுதிஷ்டிரன் ராஜசூய யாகத்தைத் தொடங்கும் முன்னர் இப்படி அக்கம்பக்கம் விரோதமாக இருக்கும் அரசர்களை எல்லாம் ஒன்று அழிக்க வேண்டும். இல்லை எனில் நம் வழிக்குக் கொண்டு வர வேண்டும். ஆகவே இதற்கெல்லாம் மூலகாரணம் ஆன ஜராசந்தனை முதலில் அழிக்க வேண்டும் என்று நினைத்த கிருஷ்ணன் யுதிஷ்டிரனிடம் அதைத் தெரிவித்தான். ஆனால் யுதிஷ்டிரன் போரையோ, ஆயுதப் பிரயோகத்தையோ விரும்பாததால் ஜராசந்தனையும் மல்யுத்தம் மூலம் கொல்வதற்கு முடிவு செய்தான்.

ஜராசந்தனுக்கு மல்யுத்தத்தில் மிகவும் பிரியம் உண்டு. மேலும் க்ஷத்திரிய அரசர்களுக்கு இந்த மல்யுத்தப் பயிற்சி ஓர் முக்கியமான பயிற்சி ஆகும். இது வெறும் உடல் பயிற்சியாக மட்டும் பார்க்கப்படவில்லை. ஆனால் இரு மன்னர்களுக்கிடையே போர் ஏற்படாமல் ஒருவரை ஒருவர் எதிர்கொள்ளவும் இதன் மூலம் மன்னர்களின் கௌரவம் பாதிக்கப்படாமல் வெற்றி, தோல்வியை நிர்ணயிக்கவும் பயன்பட்டது. ஆகவே கிருஷ்ணன் பீமனுடனும், அர்ஜுனனுடனும் கிரிவ்ரஜம் சென்று அங்கே பீமன் மூலம் ஜராசந்தனை அழித்தான். அங்கிருந்து வந்ததும் ராஜசூய யாகத்தின் அக்ரபூஜையின்போது அதை எதிர்த்த சிசுபாலனைத் தன் சக்கராயுதத்தால் கிருஷ்ணன் அழித்தான். ராஜசூய யாகம் முடிந்தாலும் அரசர்களுக்குள் இருந்த மனக்கசப்பு அகலவே இல்லை. அதிலும் கிருஷ்ணனுக்கு உதவியர்களுக்கும் அவர்கள் எதிரிகளுக்கும் இடையே இருந்த தீராப்பகை விஸ்வரூபம் எடுத்து விட்டது.

Sunday, January 15, 2017

கண்ணன் வருவான், எட்டாம் பாகம் குருக்ஷேத்திரம்!

ராஜசூய யாகம் முடிந்து பூர்ணாஹுதியும் முடிந்த பின்னர் பாண்டவர்கள் ஐவரும் கிருஷ்ணனை இந்திரப் பிரஸ்தத்தில் சில நாட்கள் தங்கிச் செல்லும்படி கேட்டுக் கொண்டனர்.  அந்த அரச குடும்பத்தில் அனைவரும் சிறியவர் முதல் பெரியவர் வரை கிருஷ்ணன் பால் மாறாத அன்பு கொண்டிருந்தனர். கிருஷ்ணன் அங்கே இருக்கையில் மிக மோசமான ஒரு நிகழ்வு நடந்து விட்டது.  ஷால்வன் என்னும் மிலேச்ச அரசன் சௌராஷ்டிரத்தை முற்றுகை இட்டு துவாரகையை வீழ்த்தினான். உத்தவனால் அனுப்பப்பட்ட தூதுவன் இந்தச் செய்தியைக் கொண்டு வந்ததோடு மேலும் அச்சமூட்டும்படியாகப் பலவிதமான பேரழிவுகளைச் சொன்னதோடு கிருஷ்ணனை உடனே துவாரகைக்குத் திரும்புமாறு உத்தவன் கூறியதாகவும் சொன்னான். தூதுவன் மேலும் கிருஷ்ணனை வணங்கிவிட்டுக் கூறியதாவது!

“பிரபுவே! ஷால்வன் லவனிகா நதியைத் தாண்டி வந்து விட்டான். சௌராஷ்டிரம் முழுவதும் அவனால் பீதியுடன் உறைந்து போயிருக்கிறது. யாதவர்களின் மாளிகைகளும், கிராம மக்களின் குடிசைகளும் சாம்பலாகி விட்டன. பெண்கள், குழந்தைகள் என எவரையும் விட்டு வைக்கவில்லை.  ஷால்வனின் படை வீரர்கள் துவாரகையை நெருங்குவதைக் கண்டு வ்ருஷ்ணி குலத்து யாதவத் தலைவர்கள் அனைவரும் அவனை எதிர்த்துப் போராட முடிவு செய்தனர். முதல் முதல் நடந்த மோதலில் ஷாம்பன்   ஷால்வனின் அமைச்சரும் படைத்தலைவரும் ஆன க்ஷேமவ்ருத்தியைத் தாக்கினான். ஷாம்பனின் வில் வித்தைத் திறமைக்கு முன்னால் நிற்க முடியாமல் அவன் போர்க்களத்தை விட்டே ஓடினான்.”

“அதன் பின்னர் வேகாவன் என்னும் ஷாம்பனின் முக்கியப் படைத்தலைவன் ஷாம்பனை எதிர்கொண்டான். ஷாம்பன் அவன் மேல் சுழலும் தண்டாயுதத்தை ஏவி விட அதில் தாக்குண்ட அவன் கீழே விழுந்தான். அதன் பின்னன் விவினிதா என்னும் பிரபலமான தானவன் உங்கள் மகன் சாருதேஷ்னாவை எதிர்கொண்டான்.  கோபத்துடன் அவன் சாருதேஷ்னா தாக்கிய தண்டாயுதத்தை எதிர்கொள்ள முடியாத அவனும் இறந்து விழுந்தான். தன்னுடைய படை வீரர்களும், படைத்தலைவர்களும் தாக்கப்பட்டு விழுந்ததாலும் படைவீரர்களின் ஒழுங்கு முறை கெட்டுப் போனதாலும் ஷால்வன் வேறு வழியின்றித் திரும்பினான். அதன் பின்னர் இளவரசர் பிரத்யும்னர் விரைந்து சென்று போரைத் துவங்கினார். இருவருக்கும் நடுவே ஒரு கடுமையான யுத்தம் மூண்டது. இளவரசர் ஒரு பயங்கரமான அம்பால் தாக்கினார். ஷால்வன் கீழே விழுந்து உணர்விழந்தான். அவனுடன் தொடர்ந்து வந்த வீரர்கள் அனைவரும் அங்கிருந்து ஓடினார்கள்.”
சிறிது நேரம் கழித்து தூதுவன் மீண்டும் தொடர்ந்தான். “உணர்வு மீண்டதும் ஷால்வன் இளவரசன் பிரத்யும்னன் மேல் அம்புகளை ஏவினான். பிரத்யும்னன் மயக்கமுற்றுக் கீழே விழுந்தான். அவனுடைய ரதசாரதி அவனை அங்கிருந்து அப்புறப்படுத்தி எடுத்துச் சென்றான். ஷால்வன் அவனுடைய படை வீரர்கள் அங்கிருந்து ஓடி விட்டதை அறிந்து கொண்டு அவன் மனம்  உடைந்து அவனுடைய ரதத்தில் ஏறிக் கொண்டு புகை மண்டலத்தில் அங்கிருந்து மறைந்து சென்றான். அதன் பின்னர் பிரத்யும்னன் அங்கிருந்த மற்ற யாதவர்களுடன் அடர்ந்த காட்டுக்குள் ஓடி மறைந்தான். “

“ம்ம்ம், அப்படியா? மற்ற ஸ்ரோத்திரியர்கள், பெண்கள், குழந்தைகள் சுகமாகவும் சௌகரியமாகவும் இருக்கின்றனரா?” என்று கிருஷ்ணன் கேட்டான். அதற்கு தூதுவன் பதில் சொன்னான்.”அவர்கள் அனைவரு கிரிநகர் கோட்டையில் புகலிடம் தேடிச் சென்றடைந்திருக்கின்றனர். கிரிநகர்க்கோட்டை மிகப் பாதுகாப்பானதாகவும் எல்லாவிதமான வசதிகளும் நிறைந்தும் இருக்கிறது!”

“மாட்சிமை தாங்கிய அரசர் உக்ரசேனர் பாதுகாப்பாக இருக்கிறாரா? அரச குடும்பத்துப் பெண்டிர்?”

“ஓ, அவர்கள் அனைவரும் கப்பல்களில் பிருகுகச்சாவுக்கு அனுப்பப்பட்டு விட்டனர்.”

“ம்ம்ம்ம், என் தந்தை, மாட்சிமை பொருந்திய வசுதேவர் எப்படி இருக்கிறார்?”

தூதுவனால் பதில் சொல்ல முடியவில்லை. தயங்கினான்.  சிறிது நேரம் மேலும் கீழும் பார்த்தான். அதன் பின்னர் மெதுவாகத் தொண்டையைச் செருமிக் கொண்டான். பின்னர் மெல்ல மெல்லச் சொன்னான். “மாட்சிமை பொருந்திய வசுதேவர் ஷால்வனால் கடத்தப்பட்டு சௌபதேசத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.”

“ஆஹா! என் அருமைத் தந்தை!........... அப்படிப்பட்டப் புனிதமான என் தந்தை மேல் கை வைத்துவிட்டானா அந்த ஷால்வன்?” என்ற கிருஷ்ணன் சற்று நேரம் கடுமையான மௌனத்தில் ஆழ்ந்தான். கிருஷ்ணன் சௌராஷ்டிரத்தை முற்றுகை இட்டதை ஓர் சவாலாக எடுத்துக் கொண்டான். தான் தர்மத்தைக் காப்பாற்றும் முயற்சியில் தனக்கிடப்பட்ட சவாலாகவே எண்ணினான். தன்னுடன் அங்கு வந்த யாதவ வீரர்களை அழைத்து உடனே கிளம்பத் தயாராகும்படி ஆணையிட்டான்.  படை வீரர்கள் தயாரானதும் கிருஷ்ணன் தன் அத்தை குந்தி மற்றும் பாண்டவர்கள், திரௌபதி ஆகியோரிடம் விடைபெற்றுக் கொண்டு கிளம்பினான்.  அர்ஜுனன், நகுலன் அல்லது சஹாதேவன் ஆகியோரை உதவிக்கு அழைத்துச் செல்லும்படி யுதிஷ்டிரன் கிருஷ்ணனிடம் கேட்டுக் கொண்டான். ஆனால் கிருஷ்ணன் மறுத்து விட்டான். “மூத்தவனே, எனக்கு நன்றாகத் தெரியும். பீமன், அர்ஜுனன்,நகுலன், சஹாதேவன் ஆகியோர் என்னுடன் வந்தால் மிகவும் உதவியாக இருப்பார்கள் தான். ஆனால் அந்த எதிரி ஷால்வன் இருக்கிறானே அவனுக்கு அந்தப் பகுதியின் ஒவ்வொரு அங்குலமும் மிக நன்றாக அறிவான். ஆகையால் அவன் எங்கே ஒளிந்தாலும் கண்டு பிடிக்க எனக்கோ, உத்தவனுக்கோ அல்லது சாத்யகிக்கோ தான் முடியும். அந்தப் பாலைவனத்தின் அடர்ந்த புதர்க்காடுகளில் மறைந்திருப்போரைக் கண்டு பிடிக்கப் புதியவர்களால் இயலாது. அன்னியர்களால் முடியாது. ஆகவே பீமனோ, அர்ஜுனனோ, நகுலனோ, சஹாதேவனோ வந்தால் அவர்களுக்குப் பிரச்னை தான்!” என்றான்.

“அத்துடன் இல்லாமல் இப்போது நிலைமை முற்றிலும் மாறியுள்ளது. இது வெறும் சௌராஷ்டிரத்தை முற்றுகையிடுவது மட்டுமல்ல. மேலும் என்னுடைய தந்தையை விடுவிப்பது மட்டுமே என் முக்கிய நோக்கமும் அல்ல. இது தர்மத்திற்கே விடப்பட்டிருக்கும் ஓர் சவால்! இந்தச் சவாலை நான், நாம் ஏற்காவிடில் நாம் அத்தோடு அழிந்தோம். நாம் என்ன செய்தாலும் சரி, எப்படி நடந்தாலும் சரி! அதெல்லாம் ஒன்றுமில்லாமல் போய்விடும்.  மேலும் இது தற்காப்புக்காகவோ, எங்களைப் பாதுகாத்துக் கொள்ளவோ செய்யப் போகும் யுத்தம் அல்ல. இது ஓர் முழு யுத்தம்! நிச்சயமாய்ச் சொல்கிறேன்! பார்த்துக் கொண்டே இரு!” என்றான்.

Saturday, January 14, 2017

எட்டாம் பாகம்! குருக்ஷேத்திரம்!

யுதிஷ்டிரன் அதற்குச் சம்மதம் தெரிவித்தான். தான் சக்கரவர்த்தியாக வேண்டும் என்பதற்காக ஒரு போரை நடத்தி அதில் பல க்ஷத்திரிய வீரர்களைக் கொலைசெய்யவோ, அந்த நாட்டுப் பெண்களை மானபங்கப்படுத்தித் துன்புறுத்தவோ தான் விரும்பவில்லை என்று கூறினான். தான் அப்படி எல்லாம் சக்கரவர்த்தி ஆக விரும்பவில்லை என்றும் அதைவிட ராஜ சூய யாகம் செய்யாமல் என்ன முறையில் இந்தப் பிரச்னையைத் தீர்க்கலாம் என்று யோசிப்பதாகவும் கூறினான்.  கிருஷ்ணன் அதற்கு, “மூத்தவனே, உன்னை நான் நன்கறிவேன். நாம் யுத்தம் நடத்தி ஆரியவர்த்தத்து அரசர்களை வென்று அதன் மூலம் ராஜசூய யாகத்தை நடத்துவது எனில் நீ அதற்கு ஒப்புக் கொள்ள மாட்டாய் என்பதைப் புரிந்தே வைத்திருக்கிறேன். ஆனால் அப்படி ஆயுதங்களைப் பயன்படுத்தாமல் இந்தப் பிரச்னையைத் தீர்க்க முடியும் என்றால் நீ அதற்கு ஒத்துக் கொண்டே ஆகவேண்டும்!” என்றான் கிருஷ்ணன். யுதிஷ்டிரன் அதற்குச் சத்தமாகச் சிரித்து விட்டு, “இது ஏதோ மந்திரத்தால் தான் நடக்க வேண்டும்.” என்றான்.
“இல்லை மூத்தவனே! என் மாமன் கம்சனை நான் மல்யுத்தத்தின் மூலமே கொன்றேன். அங்கே ஆயுதப் பிரயோகமே நடக்கவில்லை!” என்றான்.

“ஆயுதங்களைப் பயன்படுத்தாமல் எப்படி நாம் வெல்வது? அதற்கு என்ன வழி?” என்று யுதிஷ்டிரன் கேட்டான். “இதற்கு ஒரே ஒரு வழிதான் இருக்கிறது! பீமனையும், அர்ஜுனனையும் என்னோடு ராஜகிருஹத்துக்கு அனுப்பி வை. அங்கே ஜராசந்தனை நாங்கள் எதிர்கொள்கிறோம்!” என்றான். யுதிஷ்டிரன் அவர்கள் மூவரையும் ராஜகிருஹம் செல்ல அனுமதி கொடுத்தான். அங்கே ஜராசந்தனை மல்யுத்தம் மூலம் இரண்டாகக் கிழித்துப் போட்டான் பீமன். பின்னர் அவர்கள் இந்திரப்பிரஸ்தம் வந்ததும் ராஜசூய யாகம் நடப்பதற்கான ஏற்பாடுகள் ஆரம்பிக்கபட்டது.  அப்போது யுதிஷ்டிரன் ராஜ சூய யாகத்தின் முக்கியமான நிகழ்வு என்று அக்ரபூஜை நடத்துவது எனவும் அதை யாரேனும் ஓர் முனிவருக்கோ, ரிஷிக்கோ நடத்த வேண்டும் என்றும் அவர் மிக உயர்ந்தவராக இருத்தல் வேண்டும் என்றும் கூறினான். மேலும் தர்மத்தைத் தன் உயிராய் மதிப்பவராகவும் தர்மத்தைக் காக்கவெனத் தன் உயிரையும் கொடுப்பவராகவும் இருக்க வேண்டும் என்றும் கூறினான்.

பின்னர் சற்று நிறுத்திவிட்டு மேலும் தொடர்ந்தான் யுதிஷ்டிரன். “இந்த அக்ரபூஜைக்கு அனைவரிலும் மிக உயர்ந்தவன் நீ ஒருவனே கிருஷ்ணா! “ என்றும் கூறினான். கிருஷ்ணன் அதற்கு, “மூத்தவனே, நான் உண்மைகளைப் புறம் தள்ளுபவன் அல்ல. உண்மைகளை அறியாதவன் அல்ல! இந்த அக்ரபூஜையை ஏற்கும் தகுதி எனக்கு இல்லை. ஏனெனில் நான் பிறப்பால் ஓர் அரசன் அல்ல. எனக்கென ஓர் நாடு இல்லை. நான் அதற்குத் தலைவன் இல்லை. எனக்கெனப் படைகள் ஏதும் கிடையாது. அதோடு என்னுடைய முக்கியக்குறிக்கோளே பல நாடுகளையும் அரசர்களையும் வெல்வது இல்லை. ஓர் மஹாச் சக்கரவர்த்தியாக ஆகவேண்டும் என்னும் எண்ணமும் என்னிடம் இல்லை. அரசர்களை எல்லாம் அவர்கள் நிலையில் இருந்து மிக உயர்த்த வேண்டும் என்பதே என் நோக்கம். அதற்கு பிரமதேஜஸ் தான் அவர்களுக்கு உதவும். அத்தகைய பிரமதேஜஸோடு இந்த அரசர்களின் க்ஷத்திரிய தேஜஸும் சேர்ந்தால் ஆரியவர்த்தம் உலகுக்கே ஓர் வழிகாட்டியாக இருக்கும்!” என்றான் கிருஷ்ணன்.
அதற்கு யுதிஷ்டிரன் பதில் சொன்னான். “வாசுதேவா! இந்த மஹா சபையில் பிரசன்னம் ஆகி இருக்கும் பல முனிவர்களுக்கும், ரிஷிகளுக்கும், மற்றும் அரசர்களுக்கும் இந்த அக்ரபூஜையை நீ ஏற்பது தான் சிறந்தது என்னும் எண்ணம் இருந்து வருகிறது. நீ ஓர் அரசனோ, சக்கரவர்த்தியோ இல்லை தான். ஆனால் நீ தர்மத்தின் பாதுகாவலன் என்னும் நிலையை எப்போதோ அடைந்து விட்டாய். நீ ஒருவனே தர்ம ரக்ஷகன் என்பதை இங்குள்ள அனைவரும் நம்புகின்றனர். உன்னை “தர்மகோப்தா”வாகப் பார்க்கின்றனர். இந்த கௌரவம் இங்குள்ள எந்த அரசனுக்கும் கிட்டாத ஒன்று. ஆகவே அக்ரபூஜையை உனக்குத் தான் செய்யப் போகிறோம்.”

க்ருஷ்ண த்வைபாயனரின் ஆசிகளுடனும், ராஜவம்சத்து குருவான தௌமியரின் ஆசிகளுடனும், பீஷ்மரின் அனுமதி மற்றும் ஆசிகளுடனும் மற்ற அரச குலத்தவரின் சம்மதங்களுடனும் கிருஷ்ணனுக்கு அக்ரபூஜை அளிக்கப்பட்டது.  இது கிருஷ்ண வாசுதேவனின் அத்தையும் பாண்டவர்களின் சித்தியுமான ஸுஸ்ரவதாவின் மகனான சேதி நாட்டரசன் சிசுபாலனுக்குப் பிடிக்கவில்லை. அவனுக்குச் சிறு வயது முதலே கிருஷ்ணனின் மேல் ஆத்திரம் அதிகம். அவனைக் கண்டால் பிடிக்காது. மேலும் அவன் ஜராசந்தனுக்கு நெருங்கிய நண்பன்.  ருக்மிணியின் சுயம்வரத்தின் போது அவளை மணக்க முடியாமல் போனதும் சிசுபாலனுக்குக் கோபம் இருந்தது. அதனால் அவன் கிருஷ்ணன் மேல் ஏற்கெனவே இருந்த கோபம் இப்போது ஜராசந்தன் அழிக்கப்பட்டதும் அதிகம் ஆகிக் கிருஷ்ணனைக் கொன்றுவிடும் ஆத்திரத்தில் இருந்தான். மேலும் பாண்டவர்களின் தாய்வழியில் சகோதரன் என்பதால் தனக்குத் தான் அவர்கள் முன்னுரிமை கொடுப்பார்கள் என்றும் எதிர்பார்த்திருந்தான்.  இந்த மாபெரும் சபையில் தனக்குக் கிடைக்கப் போகும் கௌரவத்திற்காக ஆவலுடன் காத்திருந்தான்.

ஆனால் ஏமாற்றம் அளிக்கும் வகையில் கிருஷ்ணனுக்கு அக்ரபூஜை கொடுக்கவும், அதுவும் பீஷ்மர் அதற்கு அளித்த ஆதரவும் சிசுபாலனுக்கு ஆத்திரத்தை மூட்டி விட்டது. அத்தனை பேர் நிறைந்த மஹாசபையில் அவன் கிருஷ்ணனை மாட்டிடையன் என்று திட்டினான். மேலும் அவதூறு நிறைந்த சொற்களால் கிருஷ்ணனை அவமதித்தான். பீஷ்மரையும் அவமதித்தான்.  எவ்வளவு மோசமான வார்த்தைகளால் அவர்களை அவமதிக்க முடியுமோ அவ்வளவு மோசமாக அத்தனை பேர் நிறைந்த மாபெரும் சபையில் அவமானம் செய்தான். மோசமாகக் கீழ்த்தரமாக நடந்து கொண்டான். இந்தப் பரந்த பாரத கண்டமே மதித்துப் போற்றும் பீஷ்மரை சிசுபாலன் மோசமான வார்த்தைகளால் பேசியதைக் கேட்டு அந்த மாபெரும் சபையே அதிர்ந்தது. மேலும் கிருஷ்ணனுக்கு நடந்த அவமரியாதையையும் கண்டு திகைத்துப்போனார்கள்.  என்றாலும் சிசுபாலன் நூறு முறை தன்னைக்குறித்து அவதூறு பேசும்வரை அவனைக் கொல்வதில்லை என்று தன் அத்தைக்குத் தந்திருந்த வாக்குறுதி காரணமாகக் கண்ணன் அவன் பேசுவதைப் பொறுத்துக் கொண்டிருந்தான். ஆனால் சிசுபாலன் அந்த எல்லையையும் தாண்டிக் கிருஷ்ணனை அவமதிக்க ஆரம்பித்தான்.

உடனே கிருஷ்ணன் தன்னுடைய அபூர்வமான ஆயுதமான சக்கராயுதத்தை எடுத்து சிசுபாலன் மேல் பிரயோகம் செய்தான்.  சிசுபாலன் தலை அறுபட்டுக் கீழே விழுந்து இறந்தான்.  ராஜசூய யாகம்இந்த ஒரு நிகழ்வைத் தவிர வேறு எந்தவிதமான பேரழிவும் இல்லாமல் கிருஷ்ணன் உதவியினாலும் க்ருஷ்ண த்வைபாயனரின் ஆசிகள் மற்றும் உதவியினாலும் சுமுகமாக நடந்து முடிந்தது.  த்வைபாயனர் கிருஷ்ணனை க்ஷத்திரிய தர்மத்தை மட்டுமல்லாமல் ஆரிய வர்த்தத்தின் நெறிகளையும் தர்மத்தையும் காப்பாற்ற வல்லவனாகவே பார்த்தார்.  அதே போல் ஆரியவர்த்தத்தின் பல அரசர்களும் ஸ்ரோத்திரியர்களும் கிருஷ்ணனை ஓர் கடவுளாகவே நினைத்து மதித்துப் போற்றினார்கள்.  அவனிடம் உள்ள தெய்விக சக்தியினாலேயே அந்த சுதர்சன சக்கரத்தை அவனால் காற்று வெளியிலிருந்து கொண்டு வந்து சிசுபாலனை வதம் செய்ய முடிந்தது என்று நம்பினார்கள்.  ஜராசந்தன் வதத்தின் காரணமாகவும் சிசுபாலன் வதத்தின் காரணமாகவும் கிருஷ்ணன் இப்போது அனைவருக்கும் ஓர் புதிய மனிதனாகத் தோற்றமளித்தான். இதுவரை மக்களுக்குத் தங்கள் நாட்டை வெல்லும் தங்களை ஆக்கிரமிக்கும் மனிதர்களையே பார்த்து வழக்கமாக இருந்து வந்தது. ஆனால் இப்போது கிருஷ்ணன் எந்த நாட்டையும் ஆக்கிரமிக்காமல் போரிடாமல் அனைவரையும் வெல்லும் கிருஷ்ணனின் புதிய போக்கு அவர்களுக்கு மிகவும் ஆச்சரியத்தையும் வியப்பையும் அளித்தது.

இன்னொரு பக்கம் கிருஷ்ணனுக்கு இயல்பாகவே ஓர் சக்கரவர்த்திக்குரிய எல்லாவிதமான தகுதிகளும் அமைந்திருந்தது. போரிடாமலேயே ஆயுதப் பிரயோகம் செய்யாமலேயே அவன் தர்மத்திற்காகப்போராடி அதைக் காக்கும் முயற்சிகளைச் செய்து வந்தான்.  அரசர்களின் தார்மிக ஆதரவையும் ஸ்ரோத்திரியர்களின் தார்மிக ஆதரவையும் பெற்றே அவன் தர்மத்தின் காவலனாக இருந்தானேயன்றி ஆயுதம் எடுத்துப் போரிடவில்லை. கொடிய அரசர்களையோ, தலைவர்களையோ மட்டுமே தண்டித்தான். அனைவரையும் அல்ல! ஆக்கிரமிப்பு என்பதையே அவன் செய்யவில்லை. இந்த அவனுடைய நடைமுறையால் கிருஷ்ணன் சென்ற இடமெல்லாம் மக்கள் அவனைக் காணவும், அவனை வழிபடவும் கூட்டம் கூட்டமாகக் கூடினார்கள். அவர்களுக்கிடையே இருக்கும் சின்னச் சின்ன விரோதங்கள், மனஸ்தாபங்கள் எல்லாம் கிருஷ்ணன் முன்னிலையில் தீர்த்து வைக்கப்பட்டன. தர்மத்தைப் பாதுகாக்கக் கிருஷ்ணனோடு சேர்ந்து போராடவேண்டும் என்னும் பொறுப்புணர்வு அவர்கள் அனைவரின் மனதிலும் ஓரு நெருப்புப் போல் கிளர்ந்தெழுந்தது.  கிருஷ்ணனின் க்ஷத்திரிய தேஜஸோடு, த்வைபாயனரின் பிரம்ம தேஜஸும் சேர்ந்து ஆரியவர்த்தத்தை ஓர் பிரபலமான பகுதியாக மாற்றிக் கொண்டு வந்தது.

Thursday, January 12, 2017

கண்ணன் வருவான், கதை சொல்லுவான், எட்டாம் பாகம், குருக்ஷேத்திரம்!

ஆரியவர்த்தம் முழுவதும் ஏகக் கொந்தளிப்பாக இருந்தது. ஆரிய வர்த்தத்தின் மிகச் சிறந்த குலமான பரத வம்சத்தின் வாரிசுகளான குருவம்சத்தின் இரு மாபெரும் கிளைகள் இரண்டும் இரண்டாகப் பிரிந்து விட்டன. திருதராஷ்டிரன் மக்களான கௌரவர்கள் ஒரு பக்கமும் பாண்டவர்கள் இன்னொரு பக்கமுமாகப் பிரிந்து விட்டதோடு இருவரும் ஒருவருக்கொருவர் தாயாதிச் சண்டையிலே மூழ்கிவிட்டனர். ஷாந்தனு இருந்தவரையில் ஒன்றாக இருந்த குடும்பம் இப்போது இரண்டாக உடைபட்டு விட்டது. ஷாந்தனுவின் இரு மகன்களான சித்திராங்கதனும், விசித்திர வீரியனும் மிக இளம் வயதிலேயே இறந்து விட்டனர். சக்கரவர்த்தி ஷாந்தனுவின் குலம் அதன் பின்னர் தழைக்காமல் போய்விடுமோ என்னும் அச்சத்தின் பேரில் முனிவர்களில் மிகச் சிறந்தவரான வேத வியாசர் மூலம் நியோக முறையில் விசித்திர வீரியனின் இரு மனைவியரான அம்பிகையும், அம்பாலிகையும் ஆளுக்கொரு பிள்ளையைப் பெற்றெடுத்திருந்தனர்.


துரதிருஷ்டவசமாக அம்பிகாவுக்குப் பிறந்த குழந்தை பிறவிக்குருடாகப் பிறந்து விட்டது. அம்பாலிகாவின் குழந்தையோ பிறக்கையிலேயே பலஹீனனாகப் பிறந்திருந்தான். ஆகவே ஆரியர்களின் பழமையான வழக்கப்படி பிறவிக்குருடான திருதராஷ்டிரன் பட்டமேற முடியாது என்பதால் இளையவன் ஆன பாண்டுவுக்குப் பட்டம் கட்ட நேர்ந்தது.  பாண்டுவால் மனைவியுடன் சேர்ந்து குழந்தை பெற முடியாமையால் அவன் மூத்த மனைவி குந்தி தேவி நியோக முறையில் மூன்று பிள்ளைகளைப் பெற்றெடுத்தாள், மூத்தவன் யுதிஷ்டிரன் என்னும் பெயரிலும், அடுத்தவன் பீமன் என்னும் பெயரிலும் மூன்றாமவன் அர்ஜுனன் என்னும் பெயரிலும் வளர்க்கப்பட்டனர்.  பாண்டுவின் இரண்டாவது மனைவி மாத்ரிக்கு நகுலன், சஹாதேவன் என்னும் இரட்டையர்கள் குழந்தைகளாகப் பிறந்திருந்தனர். பாண்டு இறக்கையில் அவன் இளைய மனைவி மாத்ரி தன்னிரு குழந்தைகளையும் குந்தியின் பொறுப்பில் ஒப்படைத்து விட்டுத் தான் பாண்டுவோடு உடன்கட்டை ஏறிவிட்டாள்.


குந்தி தன் கணவனின் இளைய மனைவியின் குழந்தைகளைத் தன் குழந்தைகளாகப் பாவித்து வளர்த்தாள். ஐவருக்கும் வித்தியாசம் சிறிது கூடக் காட்டவில்லை. ஐவருமே பாண்டவர்கள் என அழைக்கப்பட்டனர். ஐவரின் ஒற்றுமையையும் குந்தி கட்டிக் காத்துப் பராமரித்தாள். எந்தக் காரணத்திற்காகவும் ஐவரும் பிரியக்கூடாது என்றும் எது கிடைத்தாலும் ஐவரும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்றும் சொல்லிக் கொடுத்திருந்தாள். திருதராஷ்டிரனுக்குப் பல பிள்ளைகள் இருந்தனர். அவர்கள் கௌரவர்கள் என அழைக்கப்பட்டனர். மூத்தவன் துரியோதனன் என அழைக்கப்பட்டான். அவனுக்கு இளையவன் துஷ்சாசனன் என்று அழைக்கப்பட்டான்.


இறந்த தன் சக்கரவர்த்திக்கணவன் ஷாந்தனுவின் மூலம் ஹஸ்தினாபுரத்தின் ராணிமாதாவாகக் கௌரவத்துடன் வாழ்ந்து கொண்டிருந்த ஷாந்தனுவின் மனைவி சத்யவதியும் ஷாந்தனுவுக்கு கங்கையின் மூலம் பிறந்த மகன் தேவ விரதன் என்னும் பீஷ்மரும் குந்தியின் மக்கள் ஐவரையும் பாண்டுவின் புத்திரர்களாக அங்கீகரித்து அவர்களில் மூத்தவனான யுதிஷ்டிரனுக்கு யுவராஜாவாகப் பட்டாபிஷேஹம் செய்து வைத்தனர்.  இது துஷ்சாசனனுக்குப் பிடிக்காத காரணத்தால் அவன் மனதில் கசப்புணர்ச்சி வளர்ந்தது. ஆகவே அவர்களுக்கிடையிலே மறைமுகமாக அதிகாரத்தைக் கைப்பற்றப் பல்வேறு முயற்சிகள் நடந்தன.  இது இப்படி இருக்கையில் மத்ராவில் வசித்து வந்த யாதவர்கள் அங்கிருந்து சௌராஷ்டிரம் சென்றதும் மிகுந்த வல்லமை பெற்றவர்கள் ஆனார்கள்.

அங்கே வல்லமை பெற்ற யாதவர்களின் தலைவன் ஆன வாசுதேவக் கிருஷ்ணன், தன் அத்தை மகன்களான பாண்டவர்கள் ஐவருக்கும் ஆரிய வர்த்தத்தில் குறிப்பிட்ட இடம் கிடைக்கும்படி செய்யப் பல்வேறு முயற்சிகளைச் செய்தான். குறிப்பாக பாஞ்சால இளவரசியான திரௌபதியின் சுயம்வரத்தில் பாண்டவர்களைக் கலந்து கொள்ள வைத்துக் குறிப்பாக அர்ஜுனனை அதில் வெற்றி பெற வைத்துத் திரௌபதியைப் பாண்டவர்கள் ஐவரும் திருமணம் செய்து கொண்டதன் மூலம் அவர்களுக்கு நல்ல வலிமையான துணையைத் தேடிக் கொடுத்தான்.


அதன் பின்னர் பாண்டவர்கள் இந்திரப் பிரஸ்தத்தில் தங்கள் ராஜ்யத்தை நிறுவிக்கொண்டு அரசாளுமாறு அனுப்பி வைக்கப்பட அங்கேயும் வாசுதேவக் கிருஷ்ணன் அவர்களுக்கு உதவி செய்தான். பின்னர் யுதிஷ்டிரனை ராஜசூய யாகம் செய்ய ஏற்பாடுகள் செய்ய வைத்தான்.  அப்போது மகதத்தின் அதிபதியாக இருந்த ஜராசந்தன் அழிக்கப்படும் வரை ராஜசூய யாகம் செய்வதின் நோக்கம் நிறைவேறாது என யுதிஷ்டிரனிடம் கிருஷ்ணன் எடுத்துரைத்தான். யுதிஷ்டிரனும் ஜராசந்தன் ஆரியவர்த்தம் முழுவதையும் தன்னுடைய ஆளுமைக்குக் கீழ் கொண்டு வர முயற்சிப்பதைப் புரிந்து கொண்டிருப்பதாகக் கூறினான். மேலும் வாசுதேவக் கிருஷ்ணனும், பலராமனுமே ஆரியவர்த்தத்தின் இயற்கையான தலைவர்கள் என்றும் அவர்கள் இருவரின் மேலும் அவன் காட்டிய அளவற்ற வெறுப்பின் காரணமாகவே அவனுடைய அனைத்து முயற்சிகளும் அவர்கள் இருவரால் முறியடிக்கப்பட்டது என்பதையும் சுட்டிக் காட்டினான்.


அதற்குக் கிருஷ்ணன் யுதிஷ்டிரனை ராஜசூய யாகத்தை வெற்றிகரமாக முடித்துவிட்டால் அதன் பின்னர் அவனே ஆரிய வம்சத்தின் மஹா சக்கரவர்த்தியாக அங்கீகரிக்கப்படுவான் என்றும் எடுத்ஹ்டுச் சொன்னான். ஆனால் இந்த ராஜசூய யாகம் ஆரிய வர்த்தத்தின் அனைத்து அரசர்களையும் அழைத்து அவர்களாலும் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்றும் கிருஷ்ணன் கூறினான். ஜராசந்தன் இருக்கும்வரை இது நடக்கவிடாமல் தடுக்கவே முயற்சிப்பான் என்றும் கூறினான். யுதிஷ்டிரன் கவலை அடைந்து இது மாபெரும் போருக்கு வழி வகுக்கும் என்று கூறினான்.  அதற்குக் கிருஷ்ணன் யுதிஷ்டிரனிடம் அவன் சமாதானத்தையே விரும்புவதைத் தான் அறிந்திருப்பதாகக் கூறினான்.  அதே போல் தானும் போரை விரும்புவதில்லை என்றும் ஜராசந்தனைப் போரில்லாமல் எதிர்கொள்ள இருப்பதாகவும் கூறினான். இதற்கு யுதிஷ்டிரன் தடை ஏதும் சொல்ல மாட்டான் என்றும் கிருஷ்ணன் எதிர்பார்த்தான்.

Sunday, January 1, 2017

வனவாசம் ஆரம்பம்!

தொடர்ந்தான் துரியோதனன். “தந்தையே, நீங்கள் திரௌபதியைத் துகில் உரியும்போது அவள் கண்களில் எரிந்த நெருப்பைக் கவனித்தீர்களா?  பாரத்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். அவள் தந்தை பாஞ்சால நாட்டு அரசனுக்கு இந்த விஷயம் தெரிய வந்தால் சும்மா இருப்பான் என்று நினைக்கிறீர்களா? அவன் மகளை நிறைந்த சபையில் மானபங்கம் செய்ய நாம் முற்பட்டது அவனுக்குத் தெரிய வந்தால் பாஞ்சால அரசன் சும்மாவா இருப்பான்? அவன் மகன் பட்டத்து இளவரசன் த்ருஷ்டத்யும்னனுக்கு அவன் சகோதரிக்கு நேர்ந்த கதி தெரிய வந்தால் அவன் சும்மாவா இருப்பான்? அவன் சகோதரியை நாம் கேவலமாக நடத்தியதை அவன் அறிய நேர்ந்தால்?”

திருதராஷ்டிரன் சொன்னான். “குழந்தாய், நான் எல்லாவற்றையும் உன் நன்மை ஒன்றுக்காகவே செய்து வருகிறேன்.” என்றான்.  துரியோதனன் அதற்குத் திரும்ப பதில் சொன்னான். “ தந்தையே, அப்படிச் செய்வதாகச் சொல்லிக் கொண்டு நீங்கள் எங்களை அழிக்க முயல்கிறீர்கள்!” என்றான் கோபத்துடன்.  குருட்டு அரசன் சொன்னான். “அப்படிச் சொல்லாதே, குழந்தாய்! இந்த உலகிலேயே நான் எல்லோரையும் விட உன்னைத் தான் அதிகம் நேசிக்கிறேன். எப்படி நடந்து கொண்டால் உனக்குச் சரியாக இருக்கும் என்பதை எனக்குத் தெரிவி! நான் அவ்வாறே நடந்து கொள்கிறேன்.” என்றான்.

துரியோதனன் அதற்கு, “தந்தையே, இது ஒன்று தான் ஒரே வழி! நான் என் தாய் மாமன் ஷகுனியுடன் கலந்து ஆலோசித்து விட்டேன். இன்னும் ஓர் விளையாட்டு, சூதாட்டம் ஆட வேண்டும். ஆடுவோம். அந்த விளையாட்டில் தான் இறுதியான வெற்றி, தோல்வி நிர்ணயிக்கப்பட வேண்டும். அதில் வென்றவர் இந்தப் பரந்து விரிந்த சாம்ராஜ்யம் முழுவதுக்கும் சக்கரவர்த்தியாக அறிவிக்கப்படுவார். இதில் தோற்பவர் நாட்டை விட்டுக் காட்டிற்குச் செல்ல வேண்டும். காட்டில் பனிரண்டு ஆண்டுகள் வசிக்க வேண்டும். பதின்மூன்றாம் ஆண்டில் எவர் கண்களிலும் படாமல், எவராலும் கண்டுபிடிக்கப்படாமல் இருக்க வேண்டும். அப்படிக் கண்டுபிடிக்கப்பட்டால் மீண்டும் இன்னொரு பனிரண்டு ஆண்டுகள் காட்டு வாசம் தான்! இதைச் சொல்லிப் பாண்டவர்களை மீண்டும் வரவழையுங்கள். இந்தச் சூதாட்டத்தில் நிச்சயம் நாங்கள் தான் ஜெயிப்போம். அவர்களை மறுபடி ஹஸ்தினாபுரம் அழையுங்கள்!” என்றான்.

அதற்கு திருதராஷ்டிரன், “குழந்தாய், இம்மாதிரி நான் எவ்வாறு செய்ய முடியும்? இப்படி எல்லாம் செய்ய முடியாதே! அதோடு அவர்களை மீண்டும் வரவழைக்கவும் முடியாதே!” என்றான். “தந்தையே, நீங்கள் யுதிஷ்டிரனை அழையுங்கள். உங்கள் அழைப்பை அவனால் ஒரு நாளும் மீற முடியாது. கட்டாயம் வந்துவிடுவான்.” என்றான் துரியோதனன். மேலும் தொடர்ந்து, “எங்கள் தாய்மாமன் ஷகுனி இருக்கையில் வெற்றி எங்கள் பக்கம் தான்! நிச்சயம் நாங்கள் வெல்வோம். பாண்டவர்கள் பனிரண்டு வருஷம் காட்டு வாசம் முடிந்து வருவதற்குள்ளாக எங்கள் நிலைமை இன்னமும் வலுவடைந்து விடும்! நாங்கள் வேண்டிய பலத்தைச் சேகரித்து விடுவோம்.” என்றான்.

அப்போது அங்கே இவ்வளவு நேரம் பேசாமல் இருந்த காந்தாரி குறுக்கிட்டாள். “குழந்தாய், நாம் விதுரனிடம் இதைக் குறித்துப் பேசி ஆலோசனை கேட்டிருக்க வேண்டும். அவன் தான் நீ பிறந்ததுமே உன்னை அழிக்கச் சொன்னான். நாங்கள் அப்போது அதைக் கேட்டிருக்க வேண்டும். இந்தப் பிரச்னையின் ஆணிவேரே நீ தான். எங்களுடைய அனைத்து துரதிர்ஷ்டங்களுக்கும் நீயே காரணம். இதோ பார், மகனே, இப்போதும் ஒன்றும் தாமதம் ஆகிவிடவில்லை. நீ மன்னிப்பைக் கோரிப் பெறலாம். நடந்தவற்றுக்காக வருத்தம் தெரிவிக்கலாம். பாண்டவர்கள் ஐவரும் நல்லவர்கள். பெருந்தன்மை மிகுந்தவர்கள். அவர்கள் நிச்சயம் உன்னை மன்னிப்பார்கள். உன் தந்தையைத் தவறான பாதையில் செல்லும்படி அனுமதிக்காதே!” என்று கெஞ்சிக் கேட்டுக் கொண்டாள்.

அதற்கு திருதராஷ்டிரன் எப்போதும் போல் தன் பலஹீனமான குரலில், “என் மகன் என்னிடம் கேட்பதை என்னால் ஒருக்காலும் மறுக்க முடியாது! நான் அவனை மிகவும் விரும்புகிறேன். அவனிடம் அதிகம் அன்பு செலுத்துகிறேன். அவன் இப்போது கேட்பது போல் தான் நான் செய்யப் போகிறேன்.” என்றான்.

கௌரவர்கள் விரைவில் ஒரு தூதனை இந்திரப் பிரஸ்தம் அனுப்பி வைத்தார்கள்.  அந்த தூதன் யுதிஷ்டிரனிடம் வந்து அவனை வணங்கிப் பின்னர் திருதராஷ்டிரனின் செய்தியைச் சொன்னான். “மகனே, தயவு செய்து ஹஸ்தினாபுரத்துக்குத் திரும்பி வா! துரியோதனன் இன்னொரு ஆட்டம் உன்னுடன் ஆட விரும்புகிறான். இந்த ஆட்டத்தின் மூலமே உங்கள் எதிர்காலம் நிச்சயிக்கப்படும். உங்களுக்குள் தாயாதிச் சண்டை வந்து போர் மூளாமல் இருக்க வேண்டுமானால் இது ஒன்றே வழி!” என்றான்.  துரியோதனன் சொன்ன நிபந்தனை குறித்து தூதனிடம் எதுவும் தெரிவிக்கவில்லை. ஆனாலும் யுதிஷ்டிரன் தவிர மற்ற சகோதரர்கள் நால்வரும், திரௌபதியும் ஹஸ்தினாபுரம் செல்ல ஆக்ஷேபம் தெரிவித்தார்கள்.  திரும்பவும் கூப்பிட்டிருப்பதில் ஏதோ சூழ்ச்சி இருக்கும் என்ற சந்தேகத்தைப் பகிர்ந்து கொண்டார்கள். ஆனால் யுதிஷ்டிரனோ ஹஸ்தினாபுரம் செல்வதில் உறுதியாக இருந்தான். அவன் சொன்னான். “நான் என் பெரியப்பாவின் ஆணையை மீற முடியாது.  அவர் கட்டளைக்குக் கட்டாயம் கீழ்ப்படிவேன்.  இதன் மூலம் ஏதேனும் இறுதி முடிவு ஏற்படவில்லை எனில், போர் தான் ஒரே வழி!” என்றான்.

ஐவரும் மீண்டும் ஹஸ்தினாபுரம் வந்தனர். அதே தர்பார் மண்டபம். அதே மேடை. அதே ஷகுனி! அதே சதுரங்கப் பலகை. பாய்ச்சிக்காய்கள். தன்னுடைய இகழ்ச்சியான சிரிப்புடன் ஷகுனி அமர்ந்திருக்கப் பக்கத்தில் துரியோதனன். வயதில் மூத்த பெரியோர்களையோ, மற்ற அரச குலத்தவரையோ, பாண்டவர்களுக்கு ஆதரவான குரு வம்சத் தலைவர்களோ அழைக்கப்படவில்லை.  ஏனெனில் துரியோதனன் மீண்டும் யுதிஷ்டிரனைச் சூதாட்ட அரங்குக்கு அழைத்திருப்பதைக் கேட்ட அவர்களில் நியாயத்துக்கும், நேர்மைக்கும் அஞ்சும் அரச குலத்தவர் ஆக்ஷேபணை தெரிவித்தனர். அவர்களிடம் துரியோதனன், “இதில் என்ன தவறு இருக்கிறது? இதில் அசாதாரணமாக எதுவும் இல்லை! ஒரு மோசமான ரத்தக்களறியாக ஆகக்கூடிய போர் ஒன்றை நாங்கள் தவிர்க்க விரும்புகிறோம்.  அதைச் செய்ய வேண்டியது தான் இப்போது முக்கியமான வேலை. நாங்கள் மூச்சு விடக் கொஞ்சம் அவகாசம் தான் கேட்கிறோம். இதன் மூலம் யார் ராஜ்யத்தை இழக்கிறார்களோ அவர்கள் பனிரண்டு வருஷம் காட்டில் வாசம் செய்வதன் மூலம் எல்லோருடைய எல்லாவிதமான உணர்வுகளும் அமைதி அடைய நேரிடும்!” என்று கூறினான். இங்கே வந்ததும் பாண்டவர்களுக்கும் இந்தச் செய்தி தெரிவிக்கப்பட்டது.

பாய்ச்சிக்காய்கள் உருட்டப்பட்டன. எப்போதும் போல் ஷகுனி தந்திரத்தால் இப்போதும் வென்றான். பாண்டவ சகோதரர்கள் இதற்கு ஆக்ஷேபணை தெரிவித்தனர். ஆனால் வழக்கம் போல் யுதிஷ்டிரன், தான் போட்டியில் தோற்று விட்டதால், காட்டிற்குச் செல்ல சம்மதம் தெரிவிப்பதாகவும் பனிரண்டு வருஷம் காட்டு வாசம் முடிந்ததும், பதின்மூன்றாம் வருஷம் எவருக்கும் தெரியாமல் மறைந்து வாழவும் சம்மதிப்பதாகவும் தெரிவித்தான்.  பதின்மூன்றாம் வருஷம் முடியும் முன்னர் அவர்கள் கண்டுபிடிக்கப்பட்டு விட்டால் மீண்டும் இன்னொரு பனிரண்டு வருஷம் காட்டு வாசம் செய்யவும் சம்மதம் தெரிவித்தான். துஷ்சாசனன் பீமனை எருமை மாடு என்று திட்டினான். அவர்களின் ஆதரவாளர்கள் இதைப் புரிந்து கொண்டு பீமனை மேலும் மேலும் கேலி செய்தனர்.

துஷ்சாசனன் மேலும் மேலும் மிகக் கேவலமாக அவர்களைத் திட்டினான். பொறுக்க முடியாமல் போன பீமன், “ஹூம், நீ என்ன நேர்மையான வழியில் ஜெயித்தாயா என்ன? உன்னுடைய தாய்மாமன் செய்த மோசமான தந்திரத்தால் அல்லவோ வென்றாய்? உன் அண்ணன் விளையாடினானா எங்களுடன்?  அவனுக்குப் பதிலாக தந்திரமாக உன் மாமன் விளையாடியதால் அன்றோ நாங்கள் தோற்றோம்! நான் மீண்டும் சபதம் செய்கிறேன், துஷ்சாசனா! நான் உன்னைக் கொல்வேன். நிச்சயம் கொல்வேன்.  உன்னைக் கிழித்து உன் குடலை மாலையாகப்போட்டுக் கொள்வேன். உன் நெஞ்சைப் பிளப்பேன். பொறுத்திருந்து பார்! இன்னும் பதினான்கே வருடங்கள். அதன் பின்னர் நீங்கள் எல்லோரும் கூண்டோடு அழிவீர்கள்!” என்றான். அதன் பின்னர் அனைத்தும் வேகமாக நடந்தேறின.

யுதிஷ்டிரன் அங்கிருந்த பெரியோர் அனைவரிடமும் விடைபெற்றுக் கொண்டான்.  உண்மையில் அவன் சந்தோஷமாகவே இருந்தான். குறைந்தது பனிரண்டு வருடங்களுக்காவது அவனால் சமாதானத்தை வாங்க முடிந்ததே! இதை நினைத்துத் தான் அவனுக்கு சந்தோஷம்! அவர்கள் விடைபெறுகையில் விதுரர் கண்ணீருடன் அவர்களை ஆசீர்வதித்து விடை கொடுத்தார். “உங்களை எல்லாம் வல்ல அந்தப் பரம்பொருள் காப்பாற்றி ரக்ஷிப்பான். நீங்கள் உங்கள் சபதத்தை நிறைவேற்றவும் அவன் உதவி செய்வான். திருதராஷ்டிரனின் மக்கள் அனைவரும் சபிக்கப்பட்டவர்கள். உங்கள் தாய் குந்தியை என் பொறுப்பில் விட்டுச் செல்லுங்கள். அவள் மிகவும் பலஹீனமாக இருக்கிறாள். ஆகையால் இந்தக் கடினமான பிரயாணத்தை அவள் உடல் தாங்காது!” என்றார். அதற்குள்ளாக நகரம் முழுவதும் பாண்டவ சகோதரர்கள் காட்டிற்குச் செல்லும் செய்தி பரவியது.

அரண்மனை வாயிலிலும் நிலாமுற்றத்திலும் மக்கள் கூட்டம் கூடியது. அனைவருக்கும் கண்ணீர் பொங்கியது. அதிலும் அரச குமாரர்கள் மட்டுமின்றி திரௌபதியும் மரவுரி தரித்திருந்ததைக் கண்டதும் அனைவரும் அவளுடைய அரசகுலப்பாரம்பரியத்தையும் இப்போதிருக்கும் நிலையையும் நினைத்து நினைத்து வருந்தினர். முடியப்படாத அவள் தலைமுடி அவள் முகத்தையும் தோள்களையும் மூடி இருந்ததையும் கண்டார்கள். அவள் செய்திருந்த சபதத்தையும் நினைத்துக் கொண்டு அவளை இந்நிலைக்கு ஆளாக்கின கௌரவர்களைத் தூஷித்தார்கள்.  தன்னுடைய அழகும் பெருமையும் வாய்ந்த மருமகளின் இந்நிலையைப் பார்த்துக் குந்தி அவளுடைய துரதிர்ஷ்டமான நிலையைக் கண்டு மனம் உடைந்தாள். அவளை அணைத்துக் கொண்ட குந்தி அவளிடம், “ என் மகன்களிடம் அன்பாக இரு! அவர்களைக் கடிந்து கொள்ளாதே! இப்போது நடந்தவற்றுக்கு எல்லாம் அவர்களே பொறுப்பு என்பதை நான் நன்கறிவேன். அவர்கள் இன்று உயிருடன் இருப்பதற்குக் காரணமே உன் மீது அவர்களுக்கு உள்ள அன்பினாலும் நீ அவர்களிடம் வைத்திருக்கும் அன்பினாலும் தான்!” என்றாள்.

தங்கள் ராஜகுருவான தௌமியர் உடன் வரப் பாண்டவர்கள் ஐவரும் ஹஸ்தினாபுரத்தையும் இந்திரப் பிரஸ்தத்தையும் விட்டு விட்டுக் காட்டை நோக்கிக் கால்நடையாகப் பயணப்பட்டார்கள். பீமன் கோபத்தில் கொதித்துக் கொண்டிருந்தான். அர்ஜுனர் போர் எப்போது ஆரம்பிக்கும் என நாட்களை எண்ண ஆரம்பிக்க, நகுலன் தன் பிரியமான குதிரைகளைப் பழக்கப்படுத்தத் தயாராக, சஹாதேவனோ எப்போதையும் விட இப்போது யாருடைய புலனுக்கும் எட்டாதவாறு நடந்து கொள்ள, யுதிஷ்டிரன் இது எதையும் குறித்துக் கவலைப்படாமல் வர, ராஜகுரு தௌமியரோ துயரத்தினால் பரிதாபமாகவும் வருத்தத்துடனும் அவர்களுடன் நடந்தார்.
ஹஸ்தினாபுரம். சஞ்சயன் திருதராஷ்டிரன் அருகே அமர்ந்திருந்தவனால் தன்னுடைய உணர்வுகளையும் எண்ணங்களையும் அடக்கி வைக்க முடியாமல் தவித்தான். திருதராஷ்டிரனிடம் அவன், “அரசே, உங்கள் நடத்தை தர்பார் மண்டபத்தில் மிகவும் மோசமாகவும் மன்னிக்க முடியாததாகவும் இருந்தது.  உங்கள் மகன்களை விட நீங்கள் மிக மோசமானவராக இருக்கிறீர்கள். இனிமேல் உங்களுக்கு ஒரு மோசமான துயரமும் துன்பமும் நிறைந்த வாழ்க்கை காத்திருக்கிறது. அதை நீங்கள் எதிர்கொள்ள வேண்டும்.” என்று கடுமையாகச் சொன்னான். திருதராஷ்டிரன் அதற்கு பதில் சொல்லாமல் விதுரரிடம் பாண்டவ குமாரர்கள் காட்டை நோக்கிப் பயணப்படுகையில் ஹஸ்தினாபுரத்தில் எப்படி இருந்தது என்று கேட்டான். விதுரர் அதற்கு, “ஹஸ்தினாபுரத்து மக்கள் அனைவரும் பாண்டவர்களுடன் செல்லத் தயாராக இருந்தனர். ஆனால் யுதிஷ்டிரன் அவர்களை அவரவர் வீட்டுக்குச் செல்லும்படி கட்டளை இட்டான். அதனால் திரும்பினார்கள்.” என்றார்.

இத்துடன் ஏழாம்பாகம் யுதிஷ்டிரர் குறித்த பதிவுகள் முடிவடைந்தன. அடுத்து ஆரம்பிக்கப் போவது குருக்ஷேத்திரம்!