Sunday, January 29, 2017

கண்ணன் வருவான்! எட்டாம் பாகம்! குருக்ஷேத்திரம்! ஷால்வனைத் தேடி!

ஷால்வனால் பிரத்யும்னன் பிடித்துக் கொல்லப்படக் கூடும் என்பதாலும் மற்ற பல்வேறு காரணங்களினாலும் கிருஷ்ணன் அவனருகே தான் இருக்க வேண்டும் என்று விரும்பினான். அதே சமயம் துவாரகையிலும் கிருஷ்ணன் இருந்தாக வேண்டி இருக்கிறது. தர்மசங்கடமான நிலையில் தவித்தான் கிருஷ்ணன்.  அப்போது பிரத்யும்னன் சொன்னான். “தந்தையே, நான் உங்களிடம் சொன்னதைப் போலவே ஷால்வன் இங்கிருந்து பறந்துவிட்டான். அதுவும் நான் அவனைக் கொன்று விடுவேன் என்று தெரிந்து கொண்டு ஓடி விட்டான். அவன் தன்னுடைய சௌப விமானத்தில் ஏறிப் பறந்து விட்டான். போர்க்களத்தை விட்டு ஓடி விட்டான்.  க்ஷத்திரிய தர்மத்தின்படி எதிர்ப்பைச் சமாளிக்க முடியாதவர்களை எதிர்த்து நான் சண்டை போட முடியாது!” என்றவன் தொடர்ந்து மேலும் குறும்பாக, “அதோடு இல்லை, தந்தையே! நீங்கள் யாதவ குலத்தையே தனி ஒருவனாகக் காப்பாற்றி வந்திருக்கிறீர்கள்! ஒரு முறை அல்ல, பல முறை! ஆகவே இது இப்போது என் முறை! இந்த பயங்கரத்திலிருந்து அனைவரையும் காப்பாற்றி எல்லோரையும் பாதுகாப்பாக உணர வைப்பது என் கடமை! ஒரேயடியாக இந்த பயங்கரத்தை அழிக்க வேண்டும்!” என்றான்.

கிருஷ்ணன் சிரித்தான். “நல்லது, குழந்தாய்! உன்னால் முடியும்!  இந்தக் கடுமையான பிரச்னையைக் கையில் எடுத்துக் கொண்டு தீர்த்து வைக்க முயல்வது உன்னுடைய மாட்சிமையைக் காட்டுகிறது. இதற்கு என்னுடைய ஆசிகள் எப்போதும் உனக்கு உண்டு!” என்றவன் மேலும் சிரித்த வண்ணம், “சீக்கிரமாய்த் திரும்பி வா மகனே! ஆனால் இன்னும் ஒரு வயதான பெண்ணை உன் மனைவியாகக் கொண்டு வந்து விடாதே! உன் தாய் இதிலே கவனமாக இருந்து வருகிறாள்.  அதோடு இல்லாமல் ஒரு திருமணம் ஆன இளைஞன் தன் தாயின் நன்மையையும் மறக்கக் கூடாது! தாயை முக்கியமாகக் கவனிக்க வேண்டும்.  அதோடு எப்போதுமே க்ஷத்திரிய தர்மத்தையும் மறக்கக் கூடாது!” என்றான்.

“நான் முயற்சி செய்கிறேன், தந்தையே!” என்றான் பிரத்யும்னன். கிருஷ்ணன் தொடர்ந்தான். “ இந்த அபாயகரமான வேலையில் நீ ஈடுபடுவதை நான் தடுத்திருக்கலாம். உன்னை இன்னும் கொஞ்சம் நிதானப்படுத்தி இருக்கலாம்.  ஆனால் நீ இளைஞன். தன்னந்தனியாகப் பல்வேறு சாகசங்களை நிகழ்த்த நீ விரும்புவாய்! விரும்புகிறாய்! நீயாகவே வெற்றித் திருமகளை உன்னிடம் சேர்த்துக் கொள்ள விரும்புகிறாய்! அதில் தான் நீ சந்தோஷமும் அடைவாய்! ஆகவே நான் உன்னைத் தடுக்கவில்லை!”

அதன் பின்னர் பிரத்யும்னன் தன்னுடைய இரண்டு தோழர்களுடன் லாவனிகா நதியைக் கடந்து பாலைவனத்துக்குள் நுழைந்தான்.  அங்கே ஓர் சோலையைக் கண்டு அங்கே சற்று அமர்ந்து அவர்கள் ஓய்வு எடுத்தார்கள். அங்கே போதிய தண்ணீர் கிடைத்ததோடு அல்லாமல் மரங்களும் சுட்டெரித்துக் கொண்டிருந்த சூரிய வெப்பத்திலிருந்து கொஞ்சம் இதமான பாதுகாப்பைக் கொடுத்தது.  அங்கே சில மாதங்கள் முன்னர் ஒரு மாபெரும் ஒட்டகப் படை வந்து இருந்து தங்கி விட்டுச் சென்றதற்கான அடையாளங்கள் இன்னமும் மிச்சம் இருந்தன.  பிரத்யும்னனுக்கு அந்தச் சோலையைப் பார்த்ததுமே இந்த வழியில் நேரே சென்றால் ஷால்வனின் தலைநகரை நாம் அடைவோம் என்பதில் சிறிதும் சந்தேகம் இருக்கவில்லை! பிரத்யும்னனும் அவன் படை வீரர்களும் அந்தச் சோலையில் இரவைக் கழித்தனர்.

அடுத்த நாள் விடிகாலையில் காலைக்கடன்களை முடித்துக் கொண்டு உணவு உண்டு விட்டு அவர்கள் மேலே தொடர்ந்து செல்ல ஆரம்பித்தனர். அந்தப் பாலைவனத்து மணற்பாங்கான பாதையில் சுட்டெரிக்கும் வெயிலில் தொடர்ந்து நடந்து செல்வதோ குதிரைகளைச் செலுத்துவதோ கடினமாகவே இருந்தது.  நேரம் ஆக ஆகச் சூரியனின் வெப்பமும் அதிகம் ஆகிக் கொண்டிருந்தது. அங்கே பத்தே பத்து குடிசைகள் நிறைந்த ஒரு சின்னக் கிராமத்தில் சற்றுத் தங்கினார்கள். அங்கே சில ஒட்டகங்களும், பல நூற்றுக்கணக்கான  ஆடுகளும் மேய்ந்து கொண்டிருந்தன.  அங்கே ஒரு ஆழமான கிணறும் அருகே ஓர் நீர்த்தொட்டியுடன் காணப்பட்டது. அந்தத் தொட்டியில் நிரப்பும் நீரைத் தான் அந்தக் கால்நடைகள் குடிக்கும் என்பது புரியும்படி இருந்தது.

அங்கிருந்த குடிசைகளிலிருந்து இவர்கள் வருகையைக் கண்டதும் இரு ஆண்கள் வெளிவந்தார்கள். அவர்களில் ஒருவன் கைகளில் வில்லும் அம்புகளும் காணப்பட்டன. அவர்கள் தங்கள் கைகளைத் தங்கள் காதுகளில் வைத்து ஜாடை காட்டினார்கள். தலையை ஆட்டினார்கள். பிரத்யும்னன் என்ன சொல்கிறான் என்பது தங்களுக்குப் புரியவில்லை என்பதை இதன் மூலம் தெரிவிக்கிறார்கள் என்பதை அவர்கள் புரிந்து கொண்டார்கள்.  அவர்கள் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள முயற்சித்துக் கொண்டிருந்த சமயத்தில், இன்னொரு வீரன் குடிசையிலிருந்து வெளியே வந்தான். அவன் பூரண ஆயுதபாணியாகக் காட்சி அளித்தான்.

ஈட்டி, வாள், கவசம், கேடயம் ஆகியவற்றோடு அவன் கைகளில் வில்லும் அம்புகளும் கூடக் காணப்பட்டன. அந்த வீரர்களின் தலைவனாக இருக்கலாம் என்று பிரத்யும்னன் எண்ணினான். அவன் பிரத்யும்னன் பக்கம் வந்து தன் கை, முகம் ஆகியவற்றால் ஜாடை காட்டி பிரத்யும்னனை அங்கிருந்து செல்லும்படி வற்புறுத்தினான். ஆனால் பிரத்யும்னன் தனக்குத் தெரிந்த சௌப மொழியில் பேச ஆரம்பித்தான். அவனுக்கு நன்றாகப் பேசத் தெரியாது என்றாலும் ஓரளவு பேசுவான். ஆகவே தனக்குத் தெரிந்த சௌப மொழியில், தான் கிருஷ்ண வாசுதேவன் சார்பில் வந்திருப்பதைத் தெரிவிப்பான். கிருஷ்ண வாசுதேவன் தர்மத்தின் பாதுகாவலன் என்றும் நீதி, நேர்மையில் சிறந்தவன் என்றும் அவற்றைப் பாதுகாப்பதைத் தன் வாழ்நாள் லட்சியமாகக் கொண்டிருப்பவன் என்பதையும் ஆரிய வர்த்தத்தின் அனைத்து அரசர்களையும் சந்தித்துத் தன் நோக்கத்திற்கு ஆதரவு திரட்டுகிறான் என்பதையும் இப்போது ஷால்வனையும் சந்திக்க வேண்டும் என்பதையும் கூறினான்.

ஷால்வனைச் சந்தித்துக் கிருஷ்ண வாசுதேவனின் செய்தியைத் தான் கூற விரும்புவதாகவும் தெரிவித்தான். ஆகவே அந்த இணையற்ற அரசன் ஷால்வனைத் தான் சந்திக்க வேண்டும் என்றும் கூறினான். அதைக் கேட்ட அந்த வீரர் தலைவன் ஏதோ நகைச்சுவையைக் கேட்டது போல் பெருங்குரலெடுத்துச் சிரித்தான். அதோடு தன் ஜாடை மொழியிலேயே அவர்களை அங்கேயே இருக்கச் சொல்லிக் கட்டளை இட்டான். மீறினால் அவர்கள் தன் வீரர்களினால் கொல்லப்படுவார்கள் என்றும் கூறினான். பிரத்யும்னன் மற்றும் அவன் கூட வந்தவர்களின் ஆயுதங்களை அந்தத் தலைவன் வாங்கிக் கொண்டான். பின்னர் பிரத்யும்னனும் அவன் நண்பர்களும் அதுவரை பயணித்து வந்த ஒட்டகங்கள் பால் தன் கவனத்தைத் திருப்பினான்.  அவற்றில் ஒன்றின் மேல் தான் ஏறிக் கொண்டு மற்றவற்றையும் அங்கிருந்து ஓட்டிக் கொண்டு சென்றான்.

1 comment:

ஸ்ரீராம். said...

தொடர்கிறேன்.