Wednesday, September 28, 2011

பண்பிலே தெய்வமாய், பார்வையிலே சேவகனாய்!

“ இனி நமக்கு இருப்பது ஒரே ஒரு வழிதான். உறுதியாகப் போரை எதிர்கொண்டு வீரமரணம் அடைவதே சரியான வழி!” வசுதேவர் குரலிலும், உறுதி; கண்களிலும் அது தெரிந்தது. சத்ராஜித் இதைக் கேட்டதும் கோபவெறியுடன், “ நாம் வீரமரணம் அடைவோம்; சரிதான். ஆனால் நம் பெண்டு, பிள்ளைகள்?? அவர்கள் கதி என்ன?? அந்தக் கொடுங்கோலர்கள் கைகளில் மாட்டிக்கொண்டு அவமானப்பட்டு, மானம் இழந்து சித்திரவதைப் பட விட்டுவிட்டு நாம் வீரமரணம் அடைவோமா?? “ யாதவர்களின் ஒரு குழுவுக்குத் தலைவன் ஆன சத்ராஜித் கம்சனின் மரணத்திற்குப் பின்னர் மதுரா திரும்பிய முக்கியத் தலைவர்களுள் ஒருவன். அவன் பேச்சைப் புறக்கணிக்க முடியாது. மேலும் தொடர்ந்து சத்ராஜித், “ இந்த ஒன்றுமில்லா உதவாக்கரை இளைஞர்களை நம்பி அவர்களின் கைகளில் நம் நகரத்தையும், எதிர்காலத்தையும் ஒப்படைத்தபோதே இதை நான் எதிர்பார்த்தேன்.” என்றும் கூறினான்.

“கோழை! கோழை! வீரமில்லாதவன், தைரியமில்லாதவன்!” பலராமனால் தன்னைக் கட்டுப்படுத்திக்கொள்ள இயலவில்லை. சத்ராஜித் மேல் பாய்ந்தான். அதைக் கண்ட சிலர் பலராமனைத் தடுக்க, சத்ராஜித் மேலும் இரைய சிறிது நேரம் அங்கே கூச்சலும், குழப்பமுமாக இருந்தது. யார் என்ன பேசுகிறார்கள், யார் யாரை அடக்குகிறார்கள் என்பதே புரியாமல் தவித்த உக்ரசேனர் மிகுந்த பிரயத்தனத்துடன் ஒருவாறு அந்தக் கூச்சலை அடக்கி அமைதியை நிலைநாட்டினார். “தப்பிக்க என்ன வழி கிருஷ்ணா?” என்று கிருஷ்ணனைப் பார்த்து உக்ரசேனர் கேட்க, “நம்பிக்கை ஒன்றே நமக்கு நல்வழிகாட்ட முடியும், அரசே, என்னால் அது இயலாது.” என்றான் கிருஷ்ணன். உள்ளூர அனைவருக்குமே கிருஷ்ணன் ஏதேனும் வழி கண்டு பிடித்து இந்த இக்கட்டில் இருந்து நம்மை எல்லாம் காப்பாற்றுவான் எனத் தோன்றினாலும், கிருஷ்ணனின் இந்தப் பேச்சு அனைவரையும் யோசிக்க வைத்தது, மேலும் கண்ணன் கூறினான்:” நம் நம்பிக்கை தான் அடியோடு ஆட்டம் கண்டு விட்டதே!” என்றும் வருத்தத்தோடு கூறினான்.

“நம்பிக்கை! எங்கே இருந்து வரும்! அதுதான் அடியோடு நிர்மூலமாக்கப் போகிறானே ஜராசந்தன்!” கத்ருவின் குரல் சொல்லும்போதே நடுங்கியது. சத்ராஜித் இதுதான் சமயம் என மீண்டும் எழுந்து கொண்டு, “இந்த இடையன் கிருஷ்ணனே இந்த சர்வநாசத்துக்குக் காரணம்; அவ்வளவு ஏன்! நம் அனைத்துத் துன்பங்களுக்கும், துயரங்களுக்கும் இவனே காரணம்!” என்று ஆவேசத்தோடு கூற, அக்ரூரர் அவனைச் சமாதானம் செய்தார். “அப்படி எல்லாம் சொல்லாதே சத்ராஜித். சில மாதங்கள் முன்னரே கண்ணனை நாம் அனைவரும் மிகவும் போற்றி அவனில்லை எனில் யாதவ குலமே இல்லைஎனச் சொன்னோம்.” என்றார். “ஹா, நீங்கள் அனைவரும் அவனைப் போற்றினீர்கள்; அவன் காலடியில் விழுந்தீர்கள்! ஆனால் நான்! நான் அந்த பஜனையில் சேரவில்லை.” சத்ராஜித் கர்வத்தோடு கூறினான். பின்னர் தன்னுடைய நெருக்கமான தோழர்கள் புடை சூழ அங்கிருந்து எவரிடமும் கூறாமல் வெளிநடப்புச் செய்தான். இதற்குள் அங்கே எவரோ, ப்ருஹத்பாலன் ஜராசந்தனை நேரில் பார்த்துக் கெஞ்சிக் கேட்டுக்கொண்டால் நம்மை எல்லாம் காக்க முடியும்; இதற்கு முன்னரும் அவன் அவ்வாறு நம்மைக் காத்திருக்கிறான் என்று சொல்ல அங்கே மீண்டும் குழப்பம் ஏற்பட்டது. பல பெரியவர்களுக்கும் ப்ருஹத்பாலனிடம் நம்பிக்கை இல்லை; என்ன சொல்வதெனத் தெரியாமல் அமைதி காத்தனர்.

வேறு வழியில்லாமல் வசுதேவரின் ஆலோசனையின் பேரில் அந்தக் கூட்டத்தை மறுநாளைக்கு ஒத்திப்போட்டார் உக்ரசேனர். அன்றிரவு மதுராவின் ஒவ்வொரு வீட்டிலும் கலவரமான மனநிலையில் மக்கள். அனைவரும் ஜராசந்தனையும் அவன் கொடூரத்தையும் நினைத்து அஞ்சினார்கள். ஆட்டு மந்தைக் கூட்டம் தண்ணீர் குடித்துக்கொண்டு சாவகாசமாக இருக்கையில் தூரத்திலிருந்து கேட்கும் சிங்கத்தின் கர்ஜனைக்குரலைக் கேட்டு எங்கே எப்படி ஓடுவது! எப்படித் தப்பிப்பது எனப் புரியாமல் திகைப்பது போல மதுராவின் அனைத்து யாதவர்களும் தவித்துக்கொண்டிருந்தனர். கண்ணன் தனக்குக் கிடைத்த தனிமையில் அமைதி காணவில்லை. அவன் மனம் துயரத்தில் ஆழ்ந்திருந்தாலும் யாதவர்களை நினைத்து நினைத்து பரிதாபம் அடைந்தான். அவர்களின் தற்போதைய நிலைமை மிகவும் மோசமானது. ஜராசந்தனின் கொடுமையை நினைத்து பயப்படும் அவர்களுக்கு இப்போது தர்மம் என்றால் என்ன என்பது குறித்த எந்தக் கவலையும் இல்லை. பயத்தால் நடுங்கிக் கொண்டிருக்கும் அவர்களில் சிலர் எப்பாடுபட்டேனும் தங்கள் உயிரை எந்த விலை கொடுத்தாவது காப்பாற்றிக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் உடையவர்களும் ஆவார்கள். இவர்களிடம் போய் தர்மத்தைக் குறித்துப்பேசுவது சரியாக இராது. தர்மம் தலைகாக்கும் என்பதை இப்போது அவர்கள் நம்பப் போவதில்லை. தர்மத்தின் மேலுள்ள நம்பிக்கையை இழந்துவிட்டார்கள். “யதோ தர்ம: ததோ ஜெய” என்ற சத்திய வாக்கை மறந்துவிட்டார்கள். அதன் பொருள் இப்போது இவர்களுக்கு அர்த்தமற்ற ஒன்றாகிவிட்டது.

ஒவ்வொருவர் கண்களிலும் மரணபயத்தைக் கண்டான் கிருஷ்ணன். அவன் சொந்தக் குடும்பத்தினரும் அவ்வாறே பயத்தோடு இருந்தனர். அவர்களை அறியாமல் அனைவரும் கிருஷ்ணனுக்குத் தங்கள் பாதுகாப்புத் தேவை என்பதை உணர்ந்தவர்கள் போல் நடந்து கொண்டனர். அவன் தந்தையும் அப்படி உறுதி அளிக்கும் எண்ணத்தைத் தம் பார்வையால் வெளிப்படுத்த, தேவகி அம்மாவோ தன் கவலையின் மூலம் அதைத் தெரிவித்தாள். பலராமனோ தான் மூத்தவன் என்ற எண்ணம் தோன்றும்படி நடந்து கொண்டான். அக்ரூரரும் தன் பற்றறுத்த நிலையைத் துறந்து நடந்து கொள்ள உத்தவன் கண்ணன் எங்கே சென்றாலும் வாய் திறவாமல் நிழல் போல் தொடர்ந்து கண்ணன் என்ன செய்தாலும் தான் எப்போதும் கண்ணன் பக்கமே என்பதைச் சொல்லாமல் சொன்னான். அனைவருமே கிருஷ்ணனுக்காகத் தாங்கள் என்ன வேண்டுமானாலும் செய்யத் தயாராக இருப்பதாய்க் கூறாமல் கூறினர். கண்ணனுக்கு இதை எல்லாம் பார்த்து மேலும் துக்கம் பொங்கியது. தான் பயப்படுவதாக அன்றோ அனைவரும் நினைத்திருக்கின்றனர். அவர்கள் அல்லவோ பயப்படுகின்றனர். தைரியத்தை எனக்கு ஊட்டுவதாக நினைக்கின்றனரே! அவர்களுக்கு அன்றோ தேவை! எல்லாவற்றிற்கும் மேல் தர்மத்தின் மேல் அவர்களுக்கு நம்பிக்கை இல்லையே. ம்ம்ம்ம்ம் அவர்கள் தான் என்ன செய்ய இயலும்! அவர்கள் கண்களில் நான் ஒரு குழந்தைப் பிள்ளைதான்; நாலாபக்கமும் ஆபத்துச் சூழ்ந்து கொண்டிருக்கும் ஒரு சிறுவன். என் மேல் இவர்கள் வைத்திருக்கும் அன்பை விட தர்மத்தை இவர்கள் நம்பினால்! நான் உள்ளூர வலுவுடனும், நம்பிக்கையுடனும் தைரியமாகவே இருக்கிறேன் என்பதைத் தெரிந்து கொண்டார்களானால், ஆஹா, நான் வேண்டுவதெல்லாம் இவர்கள் என் மேல் மட்டுமல்ல; எப்போதுமே தர்மத்தின் பாதைதான் வெற்றிக்கான வழி என்பதில் இவர்களுக்கு அசைக்க முடியாத நம்பிக்கை வேண்டும் என்பதே.

தர்மம் ஒன்றே ஜெயிக்கும். ஆனால் என்னுடைய நெருங்கிய உறவினர்களாய் இருந்தாலும் இவர்களுக்கு நான் எப்படிப் புரியவைப்பேன்! எவ்வாறு இந்த நம்பிக்கையை ஊட்டுவேன்! பிருந்தாவனத்தில் இருந்த போதே என்னுள் ஊறிய இந்த நம்பிக்கை ஊற்றை எந்நாளும் வற்றாத ஊற்றை எவ்வாறு காட்டுவேன்! இந்த நம்பிக்கை என்னும் நீரைப்பருகினாலே அவர்களின் பயம் என்னும் தாகவிடாய் தீரும் என எவ்வாறு சொல்லப் போகிறேன். இந்த தேவகி அம்மா யமுனையில் குளிக்கக் கூடப் போகாதே எனத் தடுக்கிறார் என்னை. அங்கே வரும் மற்ற யாதவர்களால் எனக்கு ஏதேனும் தொல்லை நேரப் போகிறதே எனப்பயப்படுகிறார். இந்த யாதவர்களுக்கு இருக்கும் ஆத்திரத்திலும், கோபத்திலும் என்னை ஏதேனும் சொல்லிவிடுவார்களோ, அல்லது ஏதேனும் செய்துவிடுவார்களோ என்று பயப்படுகிறார். ஆனால் நான் போவேன்; பீமன் இன்று ஹஸ்தினாபுரம் திரும்புகிறான். யமுனையில் அவனோடு நீச்சல் அடிக்க வேண்டும்; நீச்சலில் என்னோடு போட்டியிடப் போவதாய்ச் சொல்லி இருக்கிறான் பீமன். அதை இழக்க முடியுமா? பலராமன், உத்தவன், பீமன் பின் தொடரக் கிருஷ்ணன் யமுனைக்கரையை அடைந்தான்.

கோபத்திலும், ஆத்திரத்திலும், பீதியிலும் குழுக்களாய்ச் சேர்ந்து கொண்டு ஒருவருக்கொருவர் உரையாடிக்கொண்டிருந்த யாதவர்கள் அனைவரும் கிருஷ்ணனைக் கண்டதும் பேச்சை நிறுத்தினார்கள். கொல்லும் அமைதியில் அவர்கள் பார்வையில் தெரிந்த வெறுப்பும், கோபமும் கிருஷ்ணனைக் கொன்றது.

Monday, September 26, 2011

இடையன், வீரமிலாதவன், என்றவர் ஏச்சிற்கு நாணிலான்!

ஆபத்து சூழ்ந்து வருவதும், பொறியில் சிக்கிய எலியைப் போல் நாம் மாட்டிக்கொண்டிருப்பதும் எனக்கு மட்டுமே தெரியும்; இதை நான் எவரிடமும் சொல்லிவிடாமல் அதி கவனமாக இருக்க வேண்டும். இதிலிருந்து தப்பும் வழியையும் நானே கண்டுபிடிக்கவேண்டும். யாதவர்களில் எவரேனும் அறிந்தால் நிலைமை படுமோசமாகிவிடும். மதுராவின் மென்மையான வாழ்க்கைமுறையே மாறிவிடும். அனைவரும் பயந்து பீதியில் உறைந்து போவார்கள். அப்போது திடமானதொரு முடிவையும் என்னால் எடுக்க இயலாமல் போகும். ஆனால்…..ஆனால்….. இது ஒரு மலையை நெஞ்சில் சுமக்கிறாப்போல் பாரமாக என்னை அழுத்துகிறதே! இமயத்தையே என் நெஞ்சில் சுமக்கிறாப் போல் இருக்கிறதே! மஹாதேவா! நான் கடந்து வந்த இந்தப் பாதையில் இன்று வரை என் தர்மம் என்ன; நான் செய்ய வேண்டியது என்ன என்பதை நீ தெளிவாகச் சுட்டிக்காட்டி அதன்படியே நான் செல்ல எனக்கு உதவி வந்திருக்கிறாய். இனி வரும் நாட்களிலும் என் தர்மத்தின்படியே நான் செல்ல நீதான் அருள் புரிய வேண்டும். சம்போ மஹாதேவா! நீயே சரணம்!

தர்மம் என்னமோ மெல்ல மெல்லக் குறைந்தும் அழிந்தும் தான் வருகிறது. ஹஸ்தினாபுரத்தையே எடுத்துக்கொண்டால் அங்கே என்ன நடக்கிறது! அதர்மத்தின் துணை கொண்டு துரியோதனாதியர் செய்வதை எல்லாம் பார்த்துக்கொண்டு பீஷ்ம பிதாமஹரும், சித்தப்பா விதுரரும், பெரியப்பா திருதராஷ்டிரரும் சும்மாத் தான் இருக்கின்றனர்; அவ்வளவு ஏன்! ஆசாரியர் துரோணர் பாண்டவர்களிடம் மிகவும் பிரியம் கொண்டவர். அவருமன்றோ சும்மா இருக்கிறார். துரோணரைவிடவும், தவங்களிலும், ஜபங்களிலும் நியம நிஷ்டைகளிலும் சிறந்தவரும், பர வாசுதேவகிருஷ்ணனின் மறு அவதாரம் எனப்படுபவருமான மஹாமுனியும், ரிஷி முனிகளுக்குள் சிரேஷ்டரும் ஆன வேத வியாசரே இதில் தலையிட்டுப் பாண்டவர்களின் பக்கம் பேசவே இல்லையே! அப்படி இருக்கையில் கொடூரன் ஆன ஜராசந்தனைக் குறித்து என்ன சொல்வது! ஜராசந்தன் கால யவனனின் துணையோடு தன் பழைய வழிமுறைப்படி, கொலை, கொள்ளை, கற்பழித்தல், உயிரோடு எரித்துக்கொல்லுதல், அடிமைப்படுத்துதல் எனத் தன் கொடுங்கோலாட்சியை நிலை நிறுத்தப் போகிறான் போலும். அதுதான் நடக்கப் போகிறது.

ஒரு சிலநாட்கள் இந்த மாபெரும் சுமையைக் கிருஷ்ணன் தாங்கிக்கொண்டு அமைதியற்ற முறையில் தன் நாட்களைக் கழித்துக்கொண்டிருந்தான். கோகுலத்திலும், விருந்தாவனத்திலும் அவனையே நம்பி கோபர்களும், கோபியர்களும் கழித்த நாட்கள் எல்லாம் அவன் நினைவில் மோதின. கோவர்தன மலையைத் தூக்கியதன் மூலம் கோபர்களையும், அவர்கள் குடியிருப்பையும் காப்பாற்றியதையும், கோமந்தக மலையில் நடந்தவையும், கம்சனைக் கொன்ற முறையையும் எண்ணி எண்ணிப் பார்த்த கிருஷ்ணன், அவை எல்லாம் தன் முன் பிறவிக் கனவோ என்றே எண்ணினான். தன்னாலா இவ்வளவு நடந்தது என உள்ளூர வியப்பும் கொண்டான். அவை எல்லாம் கழிந்து போன இன்ப நாட்கள்; இனி அவ்விதம் வராதோ எனவும் எண்ணிக்கொண்டான். இவ்விதம் பலவும் யோசித்து யோசித்து மனம் தளர்ந்து போன கிருஷ்ணனுக்குத் திடீரெனத் தன் மீதே வெட்கம் வந்தது. ஆஹா! நாம் இவ்வளவு கோழையா என நினைத்து வெட்கம் அடைந்தான். அதர்மத்தை வேரோடு அறுத்து தர்மத்தை நிலைநாட்டுவதென்றால் இவ்விதம் தன்னிரக்கம் கொண்டு சும்மாப் புலம்புவதில் அர்த்தம் இல்லை! இப்போது உடனடியாக அடுத்து என்ன செய்வது என்பதை யோசிக்க வேண்டும்; என் யாதவக் குடிமக்களையும், உறவின் முறையினரையும் காக்க வேண்டும். உடனடியாக உறுதியானதொரு, உயர்ந்த முடிவினை எடுப்பதன் மூலமே என் மக்களை நான் காக்க முடியும். அதற்கான மன உறுதியே இப்போதைய முக்கியத் தேவை! நானே இப்படிச் சுயப் பச்சாத்தாபம் கொண்டு புலம்பிக் கொண்டிருந்தால் மற்றவர்கள் என்ன செய்ய முடியும்! வாழ்க்கையே ஒரு போராட்டம் தான்; அனைத்தையும் எதிர்கொண்டே ஆகவேண்டும். இது தவிர்க்க இயலாத நியதி! அந்தப் போராட்டத்தில் நானே சோர்ந்து போய் உட்கார்ந்துவிட்டால் என் மக்கள் என்ன செய்வார்கள்! நான் உறுதியாகத் தலைமை ஏற்று அவர்களை ஜராசந்தனின் கொடூரத்திலிருந்து காக்க வேண்டும். அவன் ஆயுதங்களையும், அவன் கொடுமைகளையும் நிர்மூலமாக்கவேண்டும். ஆனால் அது எங்கனம்! எப்படி! அதற்கான வழி எங்கிருந்து வரப் போகிறது!

மழைக்காலம் முடிந்ததுமே ஜராசந்தன் மாபெரும் படையுடன் மத்தியப் பிரதேசத்தின் வழியாக மதுராவை நோக்கி அணி வகுத்து வருகிறான் என்ற செய்தி ஒற்றர்கள் மூலம் கிடைத்தது. இம்முறை ஆர்ய வர்த்தத்தின் எந்த அரசர்கள் உதவியையும் அவன் நாடவில்லை. எந்தப் படைகளும் கூட அணிவகுப்பில் கலந்து கொள்ளவும் இல்லை. இதன் உண்மையான பொருள் கண்ணன் ஒருவன் மட்டுமே அறிந்திருந்தான். காலயவனன்! கொடூரன்! கொடியவன்! பிசாசைப் போன்றவன். சற்றும் மனசாட்சி இல்லாமல் அனைவரையும் ஈவிரக்கம் இல்லாமல் கொல்லக்கூடியவன். அவன் கடுமையான பாலைவனங்களைக் கடந்தும், கடலோரப் புதைமணலைக் கடந்தும் ஜராசந்தனுக்கு உதவியாக மாபெரும் ராக்ஷசப் படையோடு வந்து கொண்டிருக்கிறான். கண்ணனை சுக்கு நூறாகக் கிழித்துக் கழுகுகளுக்கும், ராஜாளிகளுக்கும் இரையாகப் போட ஜராசந்தனோடு அவனும் துடித்துக்கொண்டிருக்கிறான். சால்வனும் அவர்களோடு சேர்ந்து கொண்டு மதுராவை அழிக்கக் காத்திருக்கிறான். இப்படை தோற்கின் எப்படை வெல்லும் என்ற தைரியமே ஜராசந்தனைத் தனியாக மகதப் படைகளோடு மதுராவை நோக்கி வரச் செய்திருக்கிறது.

மதுராவின் யாதவத் தலைவர்களுக்கு பீதியும், பயமும் ஏற்பட்டாலும் கண்ணன் உத்தரவுப்படி அனைவரும் உக்ரசேனரின் தலைமையில் ஆலோசனை நடத்தினார்கள். அனைவருக்கும் இந்த இக்கட்டிலிருந்து தப்பும் விதம் தான் தெரியவில்லை; புரியவில்லை. மஹான் ஆன அக்ரூரரே ஆடிப் போய்விட்டார் என்பது அவர் பேச்சிலிருந்து புரிந்தது. பாஞ்சாலத்துக்கும், ஹஸ்தினாபுரத்துக்கும் உடனடியாகச் செய்திகளை அனுப்பி பீஷ்ம பிதாமகரையும், துருபதனையும் தங்கள் உதவிக்கு உடனே வரச் சொல்லலாம் என ஆலோசனை தெரிவித்தார். கண்ணனிடம் அக்ரூரரும் நம்பிக்கை இழந்துவிட்டாரா?

கண்ணன் நிதானமாக, பீஷ்ம பிதாமகரே பிரச்னைகளில் மூழ்கி இருப்பதையும் ஹஸ்தினாபுரமும், அதன் அரசாட்சியும் உடையாமல் பார்த்துக்கொள்வது அவர் கடமை எனவும், சகோதரச் சண்டையில் ஹஸ்தினாபுரம் அழிந்துவிடாமல் பாதுகாக்கவே அவருக்கு நேரம் சரியாய் இருக்கிறது எனவும் தெரிவித்தான். துருபதனோ துரோணரால் ஏற்பட்ட அவமானத்தில் மனம் புழுங்கிக்கொண்டிருப்பதாய்க் கூறினான். இருவராலும் தற்சமயம் எந்த உதவியும் செய்ய இயலாது என்பதையும் திட்டவட்டமாய்க் கூறினான். உக்ரசேனர் என்ன செய்வது எனத் தெரியாமல் தவிக்க, வசுதேவரோ, சேதிநாட்டரசன் தாமகோஷன் இத்தகையதொரு நடவடிக்கை எடுப்பதைத் தடுக்காமல் என்ன செய்து கொண்டிருந்தான் எனப்ப் புரியவில்லை என்று வருந்தினார்.

கண்ணனோ சேதி நாட்டரசருக்கு எந்த விஷயமும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்றும், இந்தச் சமயம் ஆர்ய வர்த்தத்தின் எந்த அரசர்களையும் ஜராசந்தன் நம்பவில்லை எனவும், காலயவனனையும், சால்வனையும் மட்டுமே நம்பி இந்த மாபெரும் படையெடுப்பை ஆரம்பித்துள்ளான் எனவும் கூறினான். நாம் எவ்வகையில் தப்பி ஓட முடியாதபடிக்கு அவர்கள் வழியை அடைத்துக்கொண்டு முற்றுகையில் ஈடுபடுவார்கள் என்ற தனது கருத்தையும் கூறினான்.

"ஆஹா! அடியோடு ஒழிந்தோம்! இனி தப்ப வழியே இல்லை!" ஷங்கு என்னும் யாதவத் தலைவன் கூற கிருஷ்ணன் பதிலே பேசவில்லை.

Saturday, September 24, 2011

கண்ணனைக் காப்பாற்றுங்கள்!

“அத்தையார் இவை அனைத்தையும் அறிய நேர்ந்தது எவ்வாறோ?” கண்ணன் வினவினான்.

“கோவிந்தா, சிசுபாலனிடம் நான் ருக்மிணியை மணமுடிக்கும் உத்தேசத்தைக் கைவிடுமாறு வற்புறுத்தினேன். அப்போது அவனே இவற்றை என்னிடம் கூறினான். கண்ணா, சக்கரவர்த்தி ஜராசந்தனை நீ அவமானப் படுத்தி ஓட ஓட விரட்டியதையும், வலுக்கட்டாயமாக சுயம்வரத்தைத் தள்ளிப்போடச் செய்ததையும், அவன் அணியை இரண்டாக உடைத்ததையும் அவன் ஒரு நாளும் மறக்கமாட்டான் என்றும் சிசுபாலன் என்னிடம் கூறினான். அவன் வாழ்நாளிலேயே இவ்வளவு பெரிய அவமானத்தைக் கண்டதில்லையாம். கண்ணா, ஜராசந்தன் உன்னைக் குறித்துச் சொல்கையில், கண்ணன் உயிருடன் இருந்தாலும் சரி,இல்லை எனினும் சரி என்று குறிப்பிட்டது எனக்கு என்னவோ நல்லதொரு சகுனமாய்ப் படவில்லை. “ சேதி நாட்டரசிக்கு முகம் வாடியது.

“எனக்கும் பிடிக்கவில்லைதான் அத்தையாரே! ஆனால் அது எப்படிப்பட்ட பொருளில் சொல்லப்பட்டிருக்கிறது என்பதைப் புரிந்து கொள்கிறேன்.” கண்ணன் யோசனையுடன் கூறினான். கண்ணனின் உடல் ஒரு முறை குளிர் சுரம் வந்தது போல் நடுங்கியது. தன்னைச் சுதாரித்துக்கொண்டான். ஜராசந்தனின் திட்டம் என்னவாக இருக்கும் என்பதை அவனால் புரிந்து கொள்ள முடிந்தது. கண்ணனுக்கெதிராக அணி திரட்டவோ, சதி செய்யவோ இப்போது அவன் முனையப் போவதில்லை. ஆர்ய வர்த்தத்தின் அரசர்களையும் பிரிக்கப் போவதில்லை. ஏனெனில் சேதி நாட்டரசன் தாமகோஷன், அவந்தி நாட்டரசன், போஜ நாட்டரசன் பீஷ்மகன் ஆகியோரிடம் அவனுக்கு இப்போது நம்பிக்கையும் இல்லை. ஷால்வன் ஒருவன் துணையுடன் இப்போது தன்னந்தனியாகத் தன் வேலையை ஆரம்பிக்கப் போகிறான். வேறு எவரையும் இப்போது அவன் நம்பவில்லை. ம்ம்ம்ம்ம்ம்…… சரிதான்…… இப்போது புரிகிறது. சித்தப்பா விதுரர் பீமனிடம் ரகசியமாய்க் கூறி அனுப்பிய செய்தி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததே! இரண்டுக்கும் உள்ள தொடர்பும் இப்போது விளங்குகிறது. சால்வனோடு ஜராசந்தனின் தனிப்பட்ட சந்திப்புக்கும், சால்வன் கால யவனனைச் சந்தித்ததற்கும், இப்போது கால யவனன் படை திரட்டுவதில் முனைந்திருப்பதற்கும் இதுதான் அர்த்தமா?? ஆஹா!

தன்னுடைய பழைய திட்டத்தைக் கையில் எடுத்துவிட்டான் ஜராசந்தன். ஒரு எதிரியை அடியோடு நசுக்க வேண்டுமென்றால் அவனை நாற்புறமும் சூழ்ந்து கொள்ள வேண்டும் என்று ஆரம்பித்துவிட்டான். இதன் மூலம் எதிரியை வேரோடு அறுத்து அழித்து ஒன்றுமில்லாமல் பண்ணிவிடலாம். கிழக்கிலிருந்து ஜராசந்தன் வந்தானெனில் தெற்கு மற்றும் மேற்குத்திசைகளிலிருந்து முறையே சால்வனும், காலயவனனும் வருவார்கள். எந்தவிதமான வெளி நாட்டு உதவிகளும் மதுராவின் யாதவர்களுக்குக் கிட்டாமல் செய்வதற்கு இதைவிடச் சிறந்ததொரு திட்டம் இல்லை. இதன் மூலம் யாதவர்களை அடியோடு அழித்துவிடலாம். இது நிச்சயமாய்க் காட்டுமிராண்டித்தனமே. ஆனால் ஜராசந்தனிடம் வேறு எதையும் எதிர்பார்க்க இயலாது. ஆர்ய அரசர்கள், சக்கரவர்த்திகள் போன்றோரிடம் நெருங்கிய தொடர்பு, மண உறவு வைத்துக்கொண்டாலும் ஜராசந்தனுக்கு ஆரியர்களையோ அவர்கள் அரசாட்சி முறைகளையோ, அரச தர்மத்திற்கும், நீதிக்கும், நேர்மைக்கும் அவர்கள் கொடுக்கும் முக்கியத்துவமோ குடிமக்களை மதிக்கும் மாண்போ சிறிதும் பிடிக்காது என்பதைப்பல முறை கிருஷ்ணன் உணர்ந்திருக்கிறான். கால யவனனைத் தூண்டி விட்டதன் மூலம், அவனுக்கு மேற்குப் பிராந்தியம் முழுவதும் அவனே ஆட்சி செய்து கொள்ளலாம் என்ற ஆசையைக் கொடுத்திருப்பான். இதன் மூலம் மேற்குப் பிராந்தியத்தின் ஆர்ய வம்சத்து அரசர்களை இந்தப் பிசாசு அரசன் கொடுமைக்கு ஆளாக்கலாம். மேலும் மதுராவின் கடைசி யாதவன் வரை அழித்து ஒழித்தும் விடலாம்.

மதுரா! என் அருமைத் தாய் நகரம்! என்னை இவ்வுலகுக்கு அளித்த நகரம்! என்னைப் பெற்ற தாய், தந்தையர் அவர்களின் மூதாதையர் எனப் பரம்பரை பரம்பரையாக வாழ்ந்து வரும் அற்புத நகரம்! இது தான் தன்னுள் எத்தனை எத்தனை சந்தோஷங்களையும், துக்கங்களையும் அடக்கி உள்ளது! இதன் ஒவ்வொரு கட்டிடமும், ஒவ்வொரு கல்லும் எத்தனை எத்தனை உணர்ச்சிகளைப் பிரதிபலிக்கிறது. நகரின் ஒவ்வொரு மூலை முடுக்கும் எத்தனை எத்தனை காதலர்களையும், எத்தனை எத்தனைப் புதுமணத் தம்பதிகளையும் கண்டிருக்கும்? அவர்களின் தனிமையையும், உல்லாசத்தையும் கண்டு ஆனந்தப் பட்டிருக்கும்? இந்த நகரின் யாதவர்கள் எவற்றில் குறைந்தவர்கள்? யாருக்கும் எந்தக் கெடுதலும் செய்யாமல் மாபெரும் சக்கரவர்த்தியின் வம்சத்தில் வந்தாலும் தங்களுக்கு விதிக்கப்பட்டதை அப்படியே ஏற்றுக்கொண்டு மக்கள் தொண்டே முக்கியம் எனக்கருதி வாழ்ந்து வருகின்ற என் மூத்தோர், என் குலப் பெரியோர்! அனைவருக்கும் நான் செய்யும் கைம்மாறு இதுதானா? என்னை அன்றோ அனைவரும் தங்களைக் காப்பாற்ற வந்த ரக்ஷகனாய்க் கருதுகின்றனர்! அந்த ரக்ஷகன் ஆன என்னால் அல்லவோ இவ்வளவு பெரிய அபாயம் இந்த நகருக்கும், நாட்டிற்கும் அனைத்து யாதவக் குலத்துக்குமே ஏற்பட்டுள்ளது!

இதை எப்படி நான் முறியடிப்பேன்! எந்த வழியும் தெரியவில்லையே! யாரிடம் உதவி கேட்பது?? ம்ம்ம்ம்ம்…இல்லை,….இல்லை….. யாரிடமும் கேட்க முடியாது; கேட்கவும் கூடாது. என்னால் ஏற்படப் போகும் இம்மாபெரும் விபத்து என்னாலேயே நிகழாமல் தடுக்கப்படவேண்டும். இதை இப்போது உடனடியாகத் தணிக்கவோ குறைக்கவோ முற்படாமல் இருப்பதும், எவரிடமும் இது குறித்துப் பேசாமல் இருப்பதுமே நல்லது. ம்ம்ம்ம்விதி! விதி எவரை விட்டது. நடப்பது நடக்க வேண்டியதுதான். அந்த நேரம் வரும்வரை காத்திருக்கத்தான் வேண்டும். ஹஸ்தினாபுரத்திலிருந்து எந்த உதவியையும் எதிர்பார்க்க முடியாது. அங்கே அவர்களுக்குள்ளேயே ஒருவருக்கொருவர் பொறாமை, கோபம், பழி வாங்கல்! என்னுடைய அத்தை வழி சகோதரர்களான பாண்டவர்களுக்குத் தங்களை இவற்றிலிருந்து காத்துக்கொள்ளவே நேரம் சரியாக இருக்கும். பாஞ்சால அரசன் துருபதனுக்கோ பாண்டவர்களால் ஏற்பட்ட அவமானத்தின் காரணமாய் அவர்களின் உறவின்முறை எவருடனும் தொடர்பு வைத்துக்கொள்ளப் பிடிக்காது. மற்ற எந்த அரசர்களுக்கும், சிற்றரசர்களுக்கும் ஜராசந்தனை எதிர்க்கும் அளவிற்குத் துணிவும், வல்லமையும் இல்லை.

Friday, September 23, 2011

கண்ணனைத் தொடரும் ஆபத்து!

அந்நாட்களில் பலராமன் கதாயுதத்தை வைத்து யுத்தம் செய்வதில் வல்லவனாக இருந்தான். ஆகவே பீமன் தன்னுடைய திறமையை இன்னும் மேம்படுத்திக்கொள்ள பலராமனிடம் பயிற்சி எடுக்க வந்திருந்தான். ஒரு புயலைப் போல் நுழைந்த பீமன் உண்மையில் இமயத்தை விடவும் உயர்ந்த உள்ளத்தை உடையவன். சந்திக்கும் அனைவரையும் தனக்கு நண்பர்களாக்கிக்கொண்டான் அவன். அவனுடைய பேச்சுக்களும், நடவடிக்கைகளும் ஒரு நியமத்துக்குக் கட்டுப்பட்டிருந்த வசுதேவரின் அரண்மனை ஒழுங்கை நிறையவே மாற்றியது. தன்னைக் குறித்தும் தன் நான்கு சகோதரர்கள் குறித்தும் அடிக்கடி பேசினான். தங்கள் எதிர்காலம் குறித்துப் பேசினான். குரு துரோணாசாரியாரிடம் அவர்கள் ஐவரும் குருகுலப்பயிற்சியை முடித்து விட்டதைக் குறித்துக் கூறினான். தானும், அர்ஜுனனும் தேர்ந்தெடுத்த ஒரு சபையின் முன்னர் தங்கள் திறமையையும் வலிமையையும் நிரூபித்துக் காட்டியதைக் கூறி ஆனந்தப் பட்டான். அதன் பின்னர் குரு துரோணாசாரியாரின் வேண்டுகோளின்படி பாஞ்சால நாட்டு மன்னன் துருபதனை வென்று அவனைக் கட்டி இழுத்து வந்த சாகசச் செயலைக் கூறினான்.

ஹஸ்தினாபுரத்தின் மக்கள் அவர்கள் ஐவரையும் எவ்வாறு நேசிக்கிறார்கள் என்றும், பிதாமகர் பீஷ்மர் அவர்கள் ஐவரிடமும் காட்டும் அளப்பரிய அன்பையும் கூறினான். தாங்கள் ஐவரும் ஹஸ்தினாபுரத்தின் தெருக்களில் சென்றால் மக்கள் கூட்டம் கூடுவதையும் அன்பால் தங்களைத் திணற அடிப்பதையும் கூறினான். இவ்வளவு இருந்தும்….. ஆனால்,,,,,,, பீமன் குரலில் வருத்தம். அவர்கள் சொந்தப்பெரியப்பாவின் மகன்கள் எவருக்கும் அவர்களைக் கண்டாலே பிடிக்கவில்லை என்றான். பாண்டுவின் புத்திரர்கள் ஐவரையும் திருதராஷ்டிரனின் புத்திரர்கள் நூற்றுவரும் அடியோடு வெறுக்கின்றனர் என்றான். இவ்வளவுக்கும் இடையில் தங்கள் மூத்த சகோதரன் ஆன யுதிஷ்டிரன், அனைவருக்கும் மூத்தவன் என்பதாலும் அனைத்து வித்தைகளையும் முறையாகக் கற்றுத் தேர்ந்ததாலும், பட்டத்துக்கு உரியவன் என்பதாலும் யுவராஜாவாக பட்டாபிஷேஹம் செய்யப்பட்டான் என்றும் ஹஸ்தினாபுரத்து மக்கள் அனைவரும் இதற்கு ஆதரவு அளித்தனர் என்றும் கூறினான். ஆனாலும் தொடர்ந்து நடக்கும் விஷயங்கள் எதுவும் மனம் மகிழ்ச்சி அடையும் வண்ணம் இல்லை. எதிர்பார்த்த வண்ணம் அடுத்த அரசனாக யுவராஜா யுதிஷ்டிரன் முடிசூட்டிக்கொள்ளப் பல இடைஞ்சல்கள் ஏற்படும்போல் தெரிகிறது. அந்த இடைஞ்சல்களை ஏற்படுத்துவது தங்கள் பெரியப்பாவின் மகன்களில் மூத்தவனான துரியோதனனின் மேற்பார்வையில் அவன் விருப்பத்தின் பேரில் அவர்களின் தாய் மாமன் ஆன காந்தார நாட்டு இளவரசன் சகுனி என்பான் ஏற்படுத்தி வருகிறான் என்றான்.

வெளியே தெரியாமல் ஒரு மெளன யுத்தம் ஹஸ்தினாபுரத்து இளவரசர்களிடையே நடக்கிறது எனவும், அது இப்போது உச்சக்கட்டத்திற்கு வந்துவிட்டது என்றும் கூறினான். பிதாமகர் பீஷ்மராலேயோ, அல்லது நீதிமானும், நேர்மையாளனுமான சித்தப்பா விதுரராலேயோ இதற்கு எதிராக எதுவும் செய்ய இயலவில்லை என்றும் கூறி வருந்தினான். இவ்வளவும் கேட்டுவிட்டு வசுதேவர் மனம் வருந்தினார். அதன் பின்னர் பீமன் கண்ணனைத் தனியாகச் சந்திக்கச் சந்தர்ப்பம் ஏற்படுத்திக்கொண்டான். இருவரும் தனிமையில் சந்தித்ததும் பீமன் கண்ணனைப்பார்த்து, “கோவிந்தா, சித்தப்பா விதுரர் உன் காதுகளுக்கு மட்டும் எட்டவேண்டும் என ஒரு செய்தியை அனுப்பி உள்ளார். நான் இங்கே வந்ததன் முக்கிய காரணமே அந்தச் செய்தி தான். இதை வேறு யாரோடும் பகிர்ந்து கொள்ளாதே. உனக்கு மட்டும் வைத்துக்கொள்.” என்றான்.

வேத வியாசர், ரிஷிகளுக்குள் சிறந்தவர், தன் தாயின் மற்றோர் கணவன் மூலம் பிறந்த தன் சகோதரன் வாரிசுகளின்றி இறந்து போகவே அக்கால வழக்கப்படி தன் விந்துகளைத் தானமாய்க் கொடுத்து அவன் விதவை மனைவிகளைக் குழந்தைகள் பெறச் செய்தார். அப்போது அந்த அரசனின் நெருங்கிய தாசியாக இருந்த ஒரு பெண்ணிற்கும் அவளின் வேண்டுகோளின்படி அவர் விந்து தானம் செய்ய நேர்ந்தது. மற்ற இரு மனைவியரில் ஒருத்தி வியாசரைக் கண்டு கண்களை மூடிக்கொள்ள அவளுக்குப் பிறவிக்குருடான கண்கள் இல்லாமல் பிறக்க, மற்றொருத்திக்கோ பயத்தில் உடல் வெளுக்க, அவளுக்குப் பாண்டு ரோகத்துடன் பாண்டு பிறந்தான். ஆனால் இந்தச் சேடியோ சற்றும் பயமோ அருவருப்போ இல்லாமல் வியாசரை வரவேற்க, அவளுக்குத் தர்ம தேவதையே குழந்தையாகப் பிறந்தது. அந்தக் குழந்தைதான் விதுரர். நேரடியாக இல்லாவிட்டாலும் தாசியான சேடியும் திருதராஷ்டிரன், பாண்டு இருவரின் தகப்பனுக்கு மனைவி என்பதால் விதுரரும் அவர்களுக்கு ஒரு வகையில் சகோதரர் ஆனார். இவரின் நீதி, நேர்மை, ஞானம் ஆகியவற்றைக் குறித்து வியந்த பீஷ்மர் இவரை அரசவையில் முக்கிய மந்திரியாக்கினார். தன் தாயின் பெயரைக் காக்கவும், தான் பிறந்த குலத்தைக் காக்கவும் வேண்டி விதுரர் ஹஸ்தினாபுரத்தின் மேன்மையே தனக்கு முக்கிய லக்ஷியமாக வாழ்ந்து ஹஸ்தினாபுரத்திற்கு மேலும் மேலும் பெருமைகள் சேர்க்கப் பாடுபட்டார். இப்போது இவரைக்குறித்தே பீமன் கூறக் கண்ணனும் செய்தியைக் கேட்க ஆவலானான்.

“கோவிந்தா, சித்தப்பா விதுரர் திரும்பத் திரும்ப இந்த ரகசியத்தை உன்னிடம் மட்டுமே கூறச் சொல்லி இருக்கிறார். ஏனெனில் என்னால் ரகசியத்தைக் காப்பாற்ற முடியாதாம். ஹாஹாஹா, ஆனால் இந்த ஒரு ரகசியத்தை மட்டும் எப்படியோ காப்பாற்றிக் கொண்டு வந்துவிட்டேன்.”

“ஆஹா, நீயே முனைந்து காப்பாற்றியதெனில் அது நிச்சயம் ரகசியம் தான். சொல், கேட்போம்.”

தன் குரலை மிகவும் தாழ்த்திக்கொண்டு அக்கம்பக்கம் பார்த்துக்கொண்டே பீமன், “கோவிந்தா, செளப நாட்டரசன் சால்வன், கால யவனனைக் கண்டானாம். அவன் யாரென அறிவாய் அல்லவா? சிந்துவுக்கு அப்பால் உள்ள நிலப்பகுதியை ஆண்டு வருகிறான் அல்லவா?? அவன் தான். மக்களை ஒரு பேயைப் போல் துன்புறுத்தி வருகிறான், அதையும் அறிவாய் அல்லவா? அந்தப் பிசாசு இப்போது ஒரு மாபெரும் படையைச் சேகரித்துக்கொண்டிருக்கிறதாம். ஆர்ய வர்த்தத்தில் எங்கேயோ படையெடுப்புச் செய்யப் போகிறானாம் அவன். சித்தப்பாவுக்கு அவன் மதுராவைத் தாக்கவே இவ்வளவு பெரிய படையைச் சேகரிக்கிறான் என்று தோன்றுகிறதாம். அதனால் தான் உன்னிடம் இதைக் கூறி எச்சரிக்கச் சொன்னார்.”

கண்ணன் மெளனமாகவே கேட்டுக்கொண்டான். பின்னர் பீமனைப் பார்த்து, “சகோதரா, இப்படி ஒரு செய்தியை உன் மூலம் சித்தப்பா விதுரர் எனக்கு அனுப்பி இருப்பதை அடியோடு மறந்துவிடு. இனி இது குறித்து எவரிடமும் பேசாதே. கனவில் கூட இதைக் குறித்து சிந்திக்காதே!” கண்ணன் பீமனை வலியுறுத்திக் கூறினான்.

பீமன் தன் வழக்கமான இயல்புக்குத் திரும்பி விட்டான் போலும். “கோவிந்தா! கோவிந்தா! என்னோட பிரச்னையே நான் தூக்கத்தில் கனவு கண்டு உளறுவது தான். என்னால் அதைத் தடுக்க முடியவில்லை. ஆனால் இந்தச் செய்தியை ரகசியம் ரகசியம் என உருப்போட்டுக்கொண்டே இருப்பதால் ஒருவேளை என்னை அது தடுக்கலாம்.”

“சரி, தூங்கிக்கனவும் கண்டுகொள்! ஆனால் இதைக் குறித்து உனக்கே நீ ஏதேனும் சொல்லிக்கொண்டாயானால்! “ கண்ணன் ஆள்காட்டிவிரலைக் காட்டி பயமுறுத்தினான். “அப்பாடா! இதைச் சொன்னதும் தான் என் மனப்பாரமே குறைந்தாற்போல் உள்ளது. நான் வந்த வேலை முடிந்தது. கிருஷ்ணா, உன்னைக் குறித்து நாங்கள் அனைவரும் மிகவும் பெருமைப் படுகிறோம். எவ்வளவு அற்புதங்களை நிகழ்த்தி வருகிறாய்! உன்னுடன் கூடவே இருந்து உன் எதிரிகளின் மண்டைகளை உடைக்க வேண்டும் என ஆசைப்படுகிறேன்.” இதைச் சொல்லிக்கொண்டே போன பீமன் திடீரென என்ன நினைத்தானோ கண்ணன் முதுகில் ஓங்கி அறைந்து, “கவலைப்படாதே! ரகசியம் காக்கப்படும்!” என உத்திரவாதம் அளித்தான்.

சிலநாட்களில் சேதி நாட்டரசியும், கண்ணனின் இன்னொரு அத்தையும் வசுதேவரின் சகோதரியுமான ஷ்ருதஷ்ரவா தன் பிறந்த வீட்டிற்கு வந்தாள். அவளுக்குக் கண்ணன் செய்த சாகசக் கதைகள் எட்டியிருந்தன. அளப்பரிய பெருமையிலும், சந்தோஷத்திலும் கண்ணனைப் பார்த்து மகிழ்ந்து அவள் கணவன் தாமகோஷன் எவ்வாறு கண்ணன் பெருமையை அவன் வீரத்தை சாகசத்தைத் தனக்குக் கூறினான் என்பதை எடுத்துச் சொன்னாள். மேலும் தாமகோஷன் ஜராசந்தன் கண்ணனைக் கண்டு ஓடியதைக் குறித்துக் கூறியதையும் சொன்னாள். அவள் சொந்த மகன் சிசுபாலன் ருக்மிணியைத் திருமணம் செய்து கொள்ள முடியாமல் சுயம்வரம் தடைப்பட்டு ஏமாற்றத்தில் மூழ்கி இருப்பதையும் கூறினாள். ஜராசந்தன் கண்ணனாலேயே சுயம்வரத்தைத் தள்ளிப்போட இசைந்ததையும் கூறினாள். இவை அனைத்தும் கண்ணனின் பெருமையை மேலும் மேலும் அதிகமாக்கி உள்ளது என்றும் கூறினாள். மேலும் அவள் கூறியதாவது:

“கிருஷ்ண வாசுதேவா, எது எப்படியானாலும் முக்கியமான ஒரு நிகழ்வு நடந்தே விட்டது; அதுதான் என் கணவரான சேதி நாட்டரசருக்கும், விதர்ப்ப நாட்டரசர் பீஷ்மகருக்கும் ஜராசந்தனிடம் நம்பிக்கை போனது. நாங்கள் அனைவருமே இப்போது ஒருவருக்கொருவர் அரசியல் எதிரிகளைப் போல் உள்ளோம். என் குமாரன் ஆன சிசுபாலனோ தன் சொந்தத் தகப்பனிடம் கூடப் பேசுவதில்லை. ஜராசந்தன் எவ்வளவு சாமர்த்தியசாலி என்பதை நீ நன்கறிவாய். அவன் இப்போது செளப நாட்டரசன் சால்வனிடம் மட்டுமே நம்பிக்கை வைத்துள்ளான். விதர்ப்பாவில் இருந்து கிளம்புகையில் என் மகனை அழைத்து ஜராசந்தன் கூறினான்: “இளவரசே, கவலைப்படாதே. அடுத்த வருஷம் மாக மாதம் முடிவதற்குள்ளாக உன் திருமணம் ருக்மிணியோடு நடந்தே தீரும். அந்தக் கிருஷ்ணன் உயிரோடு இருந்தாலும் சரி; இல்லை எனினும் சரி உனக்கும் ருக்மிணிக்கும் திருமணம் உறுதி!” என்று கூறி இருக்கிறான்.

Wednesday, September 21, 2011

கண்ணன் என் நண்பன்! கண்ணன் என் தோழன்!

“வாசுதேவ கிருஷ்ணா! நாம் பெரிய வெற்றியை அடைந்திருக்கிறோம். அதற்கான கொண்டாட்டங்கள் நடைபெற்று வரும் இந்தச் சுபவேளையில் அசுபமாக அழிவைக்குறித்து நீ பேசலாமா?? அதிலும் இந்த வெற்றியால் நாம் நம் குலத்தின் மேன்மையின் உச்சகட்டத்தை எட்டிவிட்டோம். “உக்ரசேனர் கூறினார். கண்ணன் தயக்கமும், யோசனையும் கலந்து ஒரு கணம் பேசாமல் இருந்தான். பின்னர் தன்னைத் திடப்படுத்திக்கொண்டு,”ஜராசந்தனின் திட்டத்தை நாம் நொறுக்கிவிட்டோம் தான்; ஆனால் அவன் அதற்குப் பதிலடியாக மதுராவை சர்வநாசமாக்கிவிட்டுத் தீ வைத்துச் சாம்பலாக்கிவிடுவான்.” இதைச் சொல்கையிலேயே கண்ணன் குரலில் கவலையுடன் கூடிய தடுமாற்றம். அனைவருக்கும் இந்தப் பேருண்மை மனதில் உரைக்க அவர்களும் கவலையுடன் அவரவர் ஆசனத்தில் சாய்ந்தார்கள். மந்திரி கத்ரு, “உறுதியாகச் சொல்கிறாயா கண்ணா? “ என்று கேட்கக் கண்ணனும் அதை ஆமோதித்தான். மற்றவர்களையும் பார்த்து,”நான் சொல்வது சரியாகவும் இருக்கலாம், தவறாகவும் போகலாம். என்றாலும் யாதவர்களின் உணர்வுகளை, வீரத்தை நான் குறை கூறவோ அதை அழிக்கவோ நினைக்கவில்லை. இன்னமும் பலமாக, வலுவானவர்களாக மாறவேண்டும். தன்னம்பிக்கையும் மிகுந்தவர்களாக ஆகவேண்டும். “

“அப்படி என்றால் குண்டினாபுரம் போனதே தவறெனத்தோன்றுகிறதே!” முதியவர் கடன் கூற, கண்ணன் அவரைப் பார்த்து, “ மரியாதைக்குரிய மாமா, பழைய விஷயங்களைக் கிளறவேண்டாம். அது யாருக்கும் எந்த உதவியும் செய்யப்போவதில்லை. அதிலும் நம்முடைய மானத்தையும் கெளரவத்தையும் காப்பதில் நீங்களே துடிப்புடன் முனைந்து நின்றீர்கள் என்பதையும் மறக்க வேண்டாம். அனைத்தையும் என்னிடம் ஒப்படைத்திருந்தீர்கள்.” கண்ணன் தனக்குள்ளேயே வார்த்தைகளை அளப்பது போல் பேசினான். “ நானும் என்னால் இயன்றதைத் தான் செய்திருக்கிறேன். இதுதான் நம்மால் இயலும். நாம் மட்டும் எதுவும் செய்யாமல் இருந்திருந்தோமானால் நம்முடைய மானம், மரியாதையைக் குழிதோண்டிப் புதைத்திருப்பார்கள். ஜராசந்தன் நாம் கவலையும், அச்சமும் கொள்ளத்தக்க விதத்தில் ஓர் பேரணியை உருவாக்கி வைத்திருந்தான்; அல்லது உருவாக்கியிருப்பான். ஒரு போலியான சுயம்வரத்தை நம்மால் தடுக்க இயலாமல் போயிருந்திருக்கும். அதுவும் நம்முடைய சொந்தக் குடும்பத்திலேயே நடந்திருக்க வேண்டியதாய் இருந்தது. மரியாதைக்குரிய தகப்பனாரின் சகோதரியும் எங்கள் அத்தையுமான ஷ்ருதஸ்ரவாவின் அருமை மகன் சிசுபாலன் நம் குடும்பம் தானே! அவனும் ஒரு பாதி யாதவன் ஆவானே!”

“நான் நன்கறிவேன். கண்ணா! ஜராசந்தன் எப்போதுமே ஆபத்துக்குரியவனே. அவ்வளவு எளிதில் நம்மால் அவனிடமிருந்து தப்ப இயலாது. எப்போது வேண்டுமானாலும் அந்த ஆபத்து நம்மை நோக்கிவரும். அதை எதிர்நோக்க நாம் தயாராக இருக்கவேண்டும்.” அக்ரூரர் கூறினார். “எல்லாம் வல்ல அந்த மஹாதேவனே நம்மை எல்லாம் ரக்ஷிக்கவேண்டும். உன்னோடு கூடவே அவர் இருந்து உனக்கு மட்டுமல்லாமல் நமக்கும் நல்வழிகாட்டி இந்தப் பேரிடரிலிருந்து நம்மை மீட்கவேண்டும்.”

“ஆம், கிருஷ்ணன் நமக்குத்தலைமை வகித்தால் போதுமானது; எப்படிப்பட்ட ஆபத்தானாலும் அதிலிருந்து மீண்டு விடுவோம்.” உக்ரசேன ராஜா கூறினார். அவர் குரலின் பாசமும், கனிவும், அதில் தெரிந்த நம்பிக்கையும் அனைவரையும் உலுக்கியது. வசுதேவர் அப்போது,”எவ்வகையில் அவன் நம்மைத் தாக்குவான்? விதர்ப்ப நாட்டு அரசன் பீஷ்மகனோ, சேதி நாட்டரசனோ அல்லது அவந்தி நாட்டரசனோ இப்போது அவனுடன் அணியில் சேர யோசிப்பார்கள் அல்லவா?”

“ஆம், தந்தையே, அவனுடைய பேரணியை ஓரளவுக்கு நாம் உடைத்துப் பலஹீனமாக்கி விட்டோம். இனி ஜராசந்தன் என்ன நடவடிக்கை எடுப்பான் என்பதை என்னால் நினைத்துப் பார்க்க இயலவில்லை. ஆனால் ஒரு விஷயம் நிச்சயம்; அவன் ஒரு வலுவான உறுதியான முயற்சியை எடுத்து நம்மைக் கட்டோடு அழிக்க முயல்வான். ஆனால் இந்த விஷயம் நம்முள்ளே இருக்கட்டும்.” கண்ணன் இறைஞ்சினான். அனைவரும் அதற்கு ஒத்துக்கொண்டு உண்மையைத் தங்கள் நெஞ்சினுள்ளே புதைக்க, கண்ணனோ இளைஞர்களைத் தேர்ந்தெடுத்துப் பயிற்சி கொடுப்பதிலும் தேர்ச்சி பெற வைப்பதிலும் முனைந்தான். சில மாதங்கள் எந்தவித மாற்றமும் இல்லாமல் ஓடின. அப்போது ஓர் நாள் அஸ்தினாபுரத்திலிருந்து ஓர் விருந்தாளி அங்கே வந்தான். அவனுடன் ஒரு சில பரிவாரங்களும் வந்தன. முன்னறிவிப்புச் செய்யாமல் எந்தவிதமான வரவேற்பு ஏற்பாடுகளும் செய்யப்படாமல் வந்த அந்த விருந்தாளி தன் தேரை நேரே வசுதேவரின் மாளிகைக்கு ஓட்டினான். நல்ல ஆஜானுபாகுவாகவும், நல்ல உயரமாகவும் இருந்தான் அவன். உறுதியான உரமுள்ள கைகளும், கால்களும் அவன் மிகுந்த பலவான் என்பதைக் காட்டியது. அவன் இதழ்களில் எப்போதும் ஒரு மென்னகை தவழ்ந்தது. வசுதேவரின் மாளிகையின் முன்னால் தன் ரதத்தை நிறுத்திய அவன், அதிலிருந்து குதித்து இறங்கி, வெளி முற்றத்தை அடைந்தான்.

அங்கிருந்து ஓங்கிய குரலில் கத்தினான்: “வசுதேவ மாமா, என் அருமை மாமா, தேவகி அத்தை, எங்கே மறைந்துள்ளீர்கள்? வெளியே வாருங்கள்! சகோதரா பலராமா, கிருஷ்ணா, உத்தவா, நான் வந்துவிட்டேன். இன்னமும் ஏன் ஒளிந்து கொள்கிறீர்கள்? எங்கே யாரையும் காணோம்? கிருஷ்ணா, வாசுதேவ கிருஷ்ணா! எங்கேப்பா மறைந்து கொண்டாய்? “ முற்றத்தின் நான்கு சுவர்களும் வந்தவனின் குரலை எதிரொலித்தன. அதிசயமாயும் பார்த்தன. ஏனெனில் இன்றுவரை வசுதேவரின் மாளிகையில் இப்படி ஒரு அதிகாரமான குரலை அந்தச் சுவர்கள் மட்டுமன்றி மாளிகையே கேட்டதில்லை. ஆகவே சுற்றுப்புறமும் சேர்ந்து வியப்பான மெளனத்தில் ஆழ்ந்திருந்தது.

புதுக்குரலைக் கேட்ட கிருஷ்ணன் தான் முதல்முதல் வெளியே வந்தான். வந்து யாரெனப் பார்த்தான். ஒரு குட்டி ஆனையே வந்துவிட்டதோ என்னும்படிக் காட்சி அளித்தான் பீமன். ஆம், பாண்டவர்களில் இரண்டாமவன் ஆன பீமனே வந்திருந்தான். கண்ணன் அவனைக் கண்டதுமே புரிந்துகொண்டுவிட்டான். இளையவனான கண்ணன் நமஸ்கரித்து வணங்கும் முன்னர் அவனைக் கட்டித் தழுவினான் பீமன். தன்னிரு கரங்களாலும் ஒரு குழந்தையைத் தூக்குவது போல் எளிதாகக் கண்ணனை மேலே தூக்கிவிட்டான். அப்படியே கண்ணனை வைத்துக் குலுக்கித் தன் அன்பை வெளிப்படுத்தினான். மழை நீரை உள்ளடக்கிக்கொண்டு கருங்கும்மெனக் காட்சி அளிக்கும் கருநீல மேகத்தினூடே திடீரென உதய சூரியனின் செங்கிரணங்கள் படுவதைப் போல் கண்ணனின் முகம் சிவந்துவிட்டது.

அவனைக்கீழே இறக்கிய பீமன், “ நீ துளிக்கூட மாறவே இல்லையப்பா; அப்படியே இருக்கிறாயே! என்னைப் பார்! எவ்வளவு பெரியவனாகவும் பலவானாகவும் வளர்ந்துவிட்டேன். ஆனால் ஒன்று; பிரபலமடைவதில் நீ என்னை விட அதிகம் வளர்ந்துள்ளாய்! எங்கே பார்த்தாலும் உன் பேச்சுத்தான்; உன் சாகசக்கதைகள் தான். உண்மையைச் சொல்லட்டுமா! ஹஸ்தினாபுரம் முழுக்க உன்னுடைய சாகசக் கதைகளையே பேசிக்கொண்டிருக்கின்றனர். எனக்கு அலுத்துவிட்டது அப்பா! அட, எங்களையும் குறித்து இம்மாதிரிப் புகழ்ந்து பேசக் கொஞ்சம் இடம் கொடு அப்பா! எவ்வளவு நாட்கள் தான் உன்னையே புகழ்ந்து கொண்டிருப்பார்கள்?”

“சகோதரா, பீமா! எவ்வளவு பலவானாக வளர்ந்துவிட்டாய்! உன்னைப் பார்க்கவே சந்தோஷம் மிகுந்துவிட்டது. அத்தை குந்தியும் மற்ற சகோதரர்களும் நலம் தானே? என்ன செய்தி கொண்டு வந்தாய்?”

“ஹா,ஹா, ஹஹ்ஹா! நான் இருக்கும்வரை அவர்களுக்கு என்ன கேடு நடந்துவிடும்? ஒரு கை அல்ல இரண்டு கையாலும் பார்த்துவிட மாட்டேனா?? ஆனால்……இப்போது நான் இங்கே வந்துவிட்டதால் கொஞ்சம் யோசிக்கணும் தான். எல்லாமே தலைகீழாக மாறி இருக்கும். “ இதைச் சொல்லிக்கொண்டே தன் வழக்கப்படி சத்தமாய்ச் சிரித்தான் பீமன். கிருஷ்ணன் அவனை மாளிகையினுள்ளே அழைத்துச் சென்றான்.

Sunday, September 18, 2011

கண்ணன் என்னைக் கண்டு கொண்டான்!

கண்ணன் இலையில் பாயச வெள்ளம் ஓடிக்கொண்டிருந்ததைக் கண்ட ருக்மிணி செய்வதறியாது திகைத்தாள். அவளையும் அறியாமல், மெல்ல ஒரு தீனக்குரலில் கத்திய அவள் அடுத்துச் செய்வதறியாது கீழே சாய்ந்தாள். கீழே சாயும் முன்னர் அவள் இரு கண்களிலிருந்தும் ஓர் மின்னல் கிளம்பிக் கண்ணன் முகத்தில் பாய்ந்து அவன் கண்களை ஊடுருவி அவன் இதயத்தில் போய்த் தைத்தது. கண்ணன் அசரவில்லை. அரண்மனைப் பெண்டிருக்கு நடுவே ருக்மிணியின் இந்தச் செய்கையும் அதன் காரணமாக அவள் கீழே விழுந்ததும் தெரிய வர, அவர்களில் சிலர் முன்னால் வந்து ருக்மிணியைத் தூக்கிக்கொண்டு அவளுடைய அந்தப்புரம் சென்றனர். கெளசிகன் கண்ணனைப் பார்த்து நடந்தவற்றுக்கு மன்னிப்புக் கேட்டார். கண்ணனுக்குப் பாயச வெள்ளம் நிறைந்த இலையை அகற்றிவிட்டு வேறு இலையைப் போடச் சொன்னார். கண்ணனோ மறுத்த வண்ணம், உங்கள் நாட்டுப் பெண்களின் இனிமையான இந்த வரவேற்பின் வெள்ளத்தில் தான் மூழ்கித் திணறுவதாகவும், அருமையானதொரு வரவேற்புக் கிட்டியதாகவும் உற்சாகத்தோடு மறுமொழி கூறினான்.

அங்கே ருக்மிணியின் அந்தப்புரம்; அவள் அருகே சுவ்ரதா! ருக்மிணிக்குச் செய்த சைத்தியோபசாரங்களால் அவள் விரைவில் கண் விழித்தாள். கண் விழித்த ருக்மிணியைக் கண்டதும் சுவ்ரதாவுக்கு மனம் நிம்மதி அடைந்தாலும் இன்னொரு பக்கம் ருக்மிணியின் இந்தச் செயலைக் கேலிசெய்யத் தோன்றியது. அவள் முகத்தைத் தன்னிரு கரங்களால் நிமிர்த்தினாள். அவள் காதுகளைச் செல்லமாய்த் திருகிய வண்ணமே, “அடி, போக்கிரிப் பெண்ணே! உனக்குத் தடுமாற்றம் ஏற்பட்டதா? நிஜமாகவா? யாரை நம்பச் சொல்கிறாய்?? இது நீ வேண்டுமென்றே நடத்திய நாடகம் தானே?? நீ ஏதோ தந்திரம் செய்யப் போகிறாய் என நான் நினைத்தேன். அப்போதே தெரியும் எனக்கு! கண்ணனின் கவனத்தைக் கவரவென நீ வேண்டுமென்றே அவன் இலையில் பாயசப் பாத்திரத்தைக் கவிழ்த்துவிட்டாய் அல்லவா?”

ருக்மிணியின் உடலே நாட்டியமாடியது. அவள் கண்களோ குதூகலத்தில் கூத்தாடின. முகமோ ஆனந்தபரவசத்தில் மலர்ந்திருந்தது. தன் அண்ணியைப் பார்த்து: “இன்று காலை என்ன நடந்தது தெரியுமா?” ருக்மிணி உடனே தன் குரலை ஆண்குரலில் மாற்றிக்கொண்டாள். கண்ணன் பேசுவது போலவே, “போஜ மன்னா! நான் இங்கே உன் மகளை சுயம்வரத்தில் வென்று அடைவதற்காக வரவில்லை!” அப்படியே கண்ணன் மாதிரியே பேசிய ருக்மிணியின் செயலைக் கண்டு சுவ்ரதா விழுந்து விழுந்து சிரித்தாள். ருக்மிணி மேலும் தொடர்ந்து, “ அண்ணி, அவன் அப்படிச் சொன்னால் என்ன? நான் அவன் இலையில் பாயச அன்னத்தைக் கவிழ்த்ததின் மூலம், “கண்ணா, நீ வராவிட்டால் என்ன?? நான் உன்னை வென்று அடையவே வந்திருக்கிறேன்.” என்று கூறாமல் கூறிவிட்டேன். சற்றுப் பொறுத்திருந்து பார்ப்போம் வெற்றி யாருக்கு என!” என்றால் ருக்மிணி. “அடி, வெட்கங்கெட்டவளே!” ருக்மிணியைத் திட்டுவது போல் தெரிந்தாலும் சுவ்ரதாவின் குரலில் கோபம் இல்லை. மாறாக மகிழ்ச்சியே தெரிந்தது. ருக்மிணியின் இந்தச் செயல் ருக்மிணியை மட்டுமல்லாமல் தன்னையும் ஒரு சக்கரவர்த்தியின் பேத்திக்குச் சக்களத்தி ஆவதிலிருந்து தடுக்கும் என்ற நம்பிக்கையும் அவள் மனதில் எழுந்தது. சுவ்ரதாவும் மனம் மகிழ்ந்தாள்.

*************************************************************************************

யாதவ வீரர்கள் மதுரா திரும்பியதும் மக்கள் அனைவரும் ஒன்று கூடிப் பெரும் வரவேற்பு அளித்தனர். எங்கெங்கும் திருவிழாக் கொண்டாட்டங்கள் நடந்தன. ஒருவரை ஒருவர் கட்டித் தழுவிக்கொண்டு வாழ்த்துகளைப் பரிமாறிக்கொண்டனர். குண்டினாபுரத்திற்குச் சென்ற கண்ணனும் மற்ற வீரர்களும் எந்தவிதமான யுத்தமும் செய்யாமல் சுயம்வரத்தை நிறுத்தி ஜராசந்தனின் முகத்தில்கரியைப்பூசியது குறித்துக் கதையாகப் பேசிக் கொண்டார்கள். மதுராவின் கெளரவத்தை மீட்டெடுத்தது குறித்துத் திரும்பி வந்த வீரர்களிடம் மக்கள் திரும்பத் திரும்பக் கேட்டுத் தெரிந்து கொண்டனர். வீரர்களும் சளைக்காமல் எத்தனை முறை வேண்டுமானாலும் அந்த நிகழ்வுகளை மிக அழகாக வர்ணனைகள் செய்து சொன்னார்கள். கிருஷ்ணன் உக்ரசேன மஹாராஜாவின் பாதங்களில் வீழ்ந்து வணங்கியபோது சுற்றியும் குழுமியிருந்த யாதவத் தலைவர்கள் அனைவர் கண்களிலும் கண்ணீர் பெருக்கெடுத்தது. வசுதேவருக்குப் பேச்சே வரவில்லை. தன் இன்னுயிர் மகனை ஆரத்தழுவிக்கொண்டு கண்ணீர் பெருக்கித் தன் மகிழ்ச்சியைத் தெரிவித்தார் எனில் தேவகி அம்மாவோ கண்ணனைக் கட்டிக்கொண்டு கதறித்தீர்த்தாள். மதுராவின் இளைஞர்களான பலருக்கும் நடுவில் கண்ணன் ஒரு கதாநாயகனாக, மாபெரும் வீரனாக, பின்பற்றத்தக்கதொரு தலைவனாகத் தோன்றினான்.


கண்ணன் செல்லுமிடமெல்லாம் அவர்கள் அவனைப் பின்பற்றினார்கள். அவன் நடக்கும் மண்ணைக்கூட வழிபட்டார்கள். அவன் திரும்பிப் பார்த்தால் ஓடிவந்து என்னவெனக் கேட்டார்கள். அவனுக்கு என்ன தேவை, எப்போது என்பதை அறிந்து கொண்டு அதற்குத் தக்க ஏற்பாடுகளை உடனுக்குடன் செய்து முடித்தார்கள். ஆனால் மக்களின் இத்தனை பிரியத்தையும், அன்பையும் கண்டும் கண்ணன் முகத்தில் எந்தவிதமான பிரதிபலிப்பும் தெரியவில்லை. அவன் மெளனமாகவே இருந்தான். வாயைத் திறக்கவே இல்லை. உணர்வுகளே அற்ற கல்லைப் போல் காணப்பட்டான். தன் நெருங்கிய சகாவும், சகோதரனும் ஆன உத்தவனிடம் கூட தன் மனதைத் திறந்து காட்டியவன் இல்லை. உத்தவனுக்கோ இது ஆச்சரியத்தைத் தந்தது.

மறுநாள் யாதவத் தலைவர்களில் முக்கியமானவர்கள் ஒன்று கூடிக் கண்ணன் வாயால் குண்டினாபுர நிகழ்ச்சிகளை மீண்டும் கேட்டறிந்தனர். அடுத்துச் செய்ய வேண்டியது என்ன என யோசித்தனர். உக்ரசேனரோ கண்ணனின் மீது தனக்குள்ள நம்பிக்கையை மீண்டும் கூறினார். யாதவர்களுக்குள்ளே அரிய ரத்தினம் போன்ற கண்ணனின் இந்த சாகசத்தினால் யாதவ குலத்தின் கெளரவமே உயர்ந்திருக்கிறது என்று முழு மனதோடு பாராட்டுத் தெரிவித்தார். மதுராவின் இழந்த கெளரவத்தை மீட்டுக்கொடுத்த கண்ணனை எவ்வளவு பாராட்டினாலும் தகும் என்றார். அங்கிருந்த பலரும், "சாது! சாது!" என்று கோஷித்து ஆமோதித்தார்கள். ஆனால் கண்ணனோ வருத்தமுடனேயே காணப்பட்டான். அனைவரையும் வணங்கிவிட்டு, "நம் கெளரவம் மீட்கப் பட்டதென்னவோ உண்மைதான்! ஆனால் இதன் மூலம் மாபெரும் அழிவைத் தேடிக்கொண்டிருக்கிறோம் என எனக்குத் தோன்றுகிறது!" என்றான்.

வசுதேவர், அக்ரூரர், உத்தவர் ஆகிய மூவரும் கண்ணன் சொல்ல வந்ததைப் புரிந்து கொள்ள மற்றவர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர்.

Saturday, September 17, 2011

இங்கிவனை யான் பெறவே என்ன தவம் செய்துவிட்டேன்!

ஜராசந்தன் என்ன நினைத்தாலும், கண்ணனை எவ்வளவு வெறுத்தாலும் குண்டினாபுரத்து மக்கள் அவனுக்கு அளித்த மாபெரும் வரவேற்பை அவனால் நிறுத்த முடியவில்லை. தன் ஆயுதப் படைகளின் மூலம் கண்ணனை எதிர்க்கலாமா என்று கூட யோசித்த ஜராசந்தனுக்கு அது மாபெரும் கலவரத்தில் முடியும் என்று அவன் உள்மனமே அவனை எச்சரித்ததால் அந்த எண்ணத்தைக் கைவிட்டான். மிகக் கஷ்டப்பட்டே தன் ஏமாற்றங்களையும், உள்ளூரப் பொங்கி எழுந்த கோபத்தையும் வெளியே காட்டாமல் அடக்கிக்கொண்டான். தன் நண்பர்களாகிய மற்ற அரசர்களிடம், கண்ணன் இங்கே சமாதானத்தையும், அமைதியையும் நாடி வந்துள்ளான்; அவனுக்கு உதவ வேண்டியது நம் கடமை; இப்போது அவனுடன் நாம் சண்டையிடக் கூடாது.” என்று மிகப் பெருந்தன்மை உள்ளவன் போல் காட்டிக்கொள்ள நேர்ந்தது. கண்ணன் அங்கே வந்தது ஏதோ ஒன்றுமில்லாத சாதாரணமான ஒரு விஷயம் என்பது போல் காட்டிக்கொள்ளவே அவன் உள்மனதில் உள்ள வஞ்சகமும், சூழ்ச்சியும் புரியாமல் அவன் நண்பர்களாகிய அரசர்கள் வியந்து ஜராசந்தனைப் பாராட்டினார்கள். அவன் பெருந்தன்மையான குணத்தை வியந்தனர்.

ஜராசந்தனே வலுவில் அனைத்து அரசர்களையும் கிருஷ்ணனுக்கும், அவன் பரிவாரங்களுக்கும் அளிக்கப்போகும் வரவேற்பு வைபவத்தில் கலந்து கொண்டு அவனைப் பெருமைப் படுத்தும்படி வற்புறுத்தினான். இது மற்ற அரசர்களுக்கெல்லாம் கொஞ்சம் நிம்மதியைக் கொடுத்தது. ஜராசந்தன் என்ன நினைப்பானோ என்ற கவலையும், அச்சமும் இல்லாமல் தைரியமாய்க் கலந்து கொள்ளலாம் என்ற நிலைப்பாடு அவர்களுக்கு மகிழ்ச்சியையே கொடுத்தது. ஒரு சில அரசர்களுக்கு பீஷ்மகன் கோழைத்தனமாக நடந்து கொள்வதாய்த் தெரிந்தாலும் இதற்கு நாம் எதுவும் செய்ய இயலாது என்றும் புரிந்து வைத்திருந்தனர். யாதவர்கள் அவர்களின் முழு பலத்தோடு இங்கே வந்திருப்பதை எவராலும் தடுக்க இயலவில்லை என்பதையும் அறிந்தனர். ஆனால் குண்டினாபுரத்தின் பட்டத்து இளவரசன் ஆன ருக்மிக்கும், ருக்மிணியின் கைபிடிக்கக் காத்திருக்கும் சேதிநாட்டு இளவரசன் ஆன சிசுபாலனுக்கும் இது உவப்பானதாய் இல்லை. இருவரும் ஒருவரும் அறியாமல் தனியாகச் சந்தித்துக்கொண்டு, ருக்மி தனது வாக்குறுதியைத் தான் எவ்வாறேனும் நிறைவேற்றுவதாய் உறுதிமொழி அளிக்கவே, இருவருமே அவரவர் தந்தையரின் கோழைத்தனத்தையும், கண்ணனைக் கண்டதும் மாறிய அவர்கள் மனதையும் வெறுத்துக்கொண்டே அவரவர் இருப்பிடம் திரும்பினர். ஜராசந்தனும், தனக்கு மிக மிக நெருங்கிய தன் அரச குடும்பத்து நண்பர்களோடு மூடிய கதவுகளுக்குள் சதியாலோசனை செய்தான். ஆரம்பத்தில் கவலையுடனும், சுருக்கங்களுடனும் காணப்பட்ட அவன் முகம் ஆலோசனை முடிவடைந்ததும், பிரச்னைகள் தீரப் போகின்றன அல்லது தீர்ந்துவிட்டன என்ற நிம்மதியைக் காட்டியது.

வசந்த பஞ்சமி தினம். வசந்தோற்சவம் குண்டினாபுர மக்களால் சிறப்பாகக் கொண்டாடப் படும். இந்த வருடம் கண்ணன் வருகையால் அனைவருக்கும் உற்சாகமும் கூட. பாட்டனார் கெளசிகரின் மாளிகை மிக அழகாகவும் நேர்த்தியாகவும் அலங்கரிக்கப்பட்டுக் காணப்பட்டது. கெளசிகன் தன்னுடைய பிரியத்துக்கும், மரியாதைக்கும் உகந்த கிருஷ்ண வாசுதேவனைப் பலவிதமான அபிஷேகக் கொண்டாட்டங்கள் மூலம் வரவேற்புக் கொடுத்தான். இம்மாதிரியான வரவேற்பு ஆரிய அரச குடும்பத்தினரின் சம்பிரதாயம் என்பதோடு கடவுள் நேரில் வந்து அவர்களின் மரியாதைக்குரிய விருந்தாளிக்கு ஆசிகளையும், வாழ்த்துகளையும் வழங்கி அவர்களைக் கெளரவப் படுத்துகிறார்கள் என்பது ஐதீகம். இதைக் காணப்பொதுமக்கள் பெருமளவில் குவிந்திருந்தனர். அனைவருக்கும் ஏற்கெனவே கண்ணனின் வீரதீர சாகசங்கள் குறித்தப் பல கதைகள் கிடைத்திருந்ததாகையால் கண்ணனை ஒருமுறையேனும் காணவேண்டி வந்திருந்தனர்.

கொண்டாட்டங்கள் முடிவடைந்ததும் கண்ணன் அங்கே குழுமியிருந்த அனைத்து அரசர்களுக்கும் தன் வணக்கங்களையும், மரியாதையையும் தெரிவித்துக்கொண்டான். அரசகுல முறைப்படி இந்த சம்பிரதாயங்கள் நடந்து முடிந்தன. ஜராசந்தனும், ருக்மியும் சிசுபாலனும் அங்கே காணப்படவில்லை என்பதும் புரிந்து கொள்ளக்க்கூடியதே. அப்போது கெளசிகன் திடீரென, “வாசுதேவக் கிருஷ்ணனுக்கு மங்களம்! ஜெய மங்களம்!” என்று பெருங்குரலெடுத்துக் கூவ அனைத்து அரசர்களும், இளவரசர்களும் அதை அப்படியே எதிரொலிக்கப் பித்துப்பிடித்த மக்கள் கூட்டமும் சேர்ந்து விண்ணளாவக் குரல் எழுப்பியது. தவிர்க்க முடியாமல் பீஷ்மகன் எழுந்து கண்ணனை அணைத்துக்கொள்ள, தாமகோஷன் உண்மையான பாசத்துடனும், நேசத்துடனும் கண்ணனைக் கட்டித் தழுவினான். நகரெங்கும் குதூகலம், ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம். ஆங்காங்கே மல்யுத்தப் போட்டிகள், வாள் வித்தைகள், வில் வித்தைகள், என நடக்கத் தொடங்க, ஆடல் தெரிந்த யுவர்களும், யுவதிகளும் தங்கள் ஆட்டத்திறமையைக் காட்டி நடனமாடத் தொடங்கினார்கள். சுழன்று சுழன்று ஆடிய அவர்களோடு ஆடத் தெரிந்த மக்களும் சேர்ந்து கொள்ள குதூகலக் கூச்சல்களுடன் ஆட்டமும், பாட்டுக்களும் போட்டியிட்டன. கிருஷ்ணன் கூட்டத்தினுள் புகுந்து தன் கண்களில் பட்ட அனைவரையும் தனித்தனியாக விசாரித்தான்.

அவனுடன் பாட்டனார் கெளசிகர், ஷக்ரதேவன், கருடன், உத்தவன், சாத்யகி ஆகியோரும் சேர்ந்து கொண்டனர். கண்ணனால் விசாரிக்கப்பட்டவர்கள் குதூகலத்தில் கூத்தாட, அவன் தங்களைக் கவனிக்கவில்லையே என்ற விசனத்தில் மூழ்கியவர்களோ, அவர்களைப் பாராட்டி மகிழ்ந்தனர். கண்ணனின் கால்களில் பெரியவர், சிறியவர் என்ற வித்தியாசம் இல்லாது அனைவரும் விழுந்து வணங்க, குழந்தைகளைக் கண்ணன் கைகளில் கொடுத்து ஆசீர்வதிக்கச் சொல்லிப் பெண்கள் கேட்டுக்கொண்டனர். இத்தனை அமர்க்களத்திலும் அன்றுதான் சுயம்வரம் நடக்க இருந்தது என்ற முக்கியமான விஷயமே அனைவராலும் மறக்கப் பட்டது.

மதியம் ஒரு பெரிய அரசவிருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தான் கெளசிகன். அந்த விருந்தைத் தவிர்க்க முடியாமல் ஜராசந்தனும் வந்திருந்தான். ஜராசந்தனின் சக்கரவர்த்திப் பதவியை உத்தேசித்து அவனுக்கு நடுவில் ஆசனம் போட்டுச் சிறப்பித்திருந்தான் கெளசிகன். ஜராசந்தனுக்கு எதிர்ப்பக்கமாக அரசகுடும்பத்தில் பிறந்திருந்தாலும் இளவரசர்களாகவோ, அரசர்களாகவோ இல்லாத மற்றவர்கள் இடம்பெற்றனர். இந்த வரிசையிலேயே நடுவில் கண்ணனும், கெளசிகனும் அமர்ந்திருந்தனர். மற்ற யாதவர்களும் இருபக்கமும் அமர்ந்தனர். கண்ணனோடு வந்த ஆசாரியர்களுக்கும், குண்டினாபுரத்து ஆசாரியர்களுக்கும் தனியாகப் பந்தி போட்டு உபசரிப்பு நடந்தது. அனைவரும் அரச குடும்பத்தினர் என்பதாலும், முக்கிய விருந்தாளிகள் அனைவருமே அரசர்கள், இளவரசர்கள், சக்கரவர்த்திகள் என்பதாலும் அவரவருக்கு உரிய மரியாதை முறையாக அளிக்கப்பட வேண்டும் என்பதால் குண்டினாபுரத்து அரச மகளிரே முன்னின்று உணவு பரிமாறத் தொடங்கினார்கள். ருக்மியின் மனைவி சுவ்ரதாவும், இளவரசியும், சுயம்வர மணப்பெண்ணான ருக்மிணியும் முன்னின்று தலைமை வகிக்க ருக்மிணியின் கைகளில் பாயசப் பாத்திரம் கொடுக்கப்பட்டது.

பாயசத்தை எடுத்துக்கொண்டு அனைவருக்கும் பரிமாற ஆரம்பித்தாள் ருக்மிணி. முறைப்படி முதலில் ஆசாரியர்களுக்கு உணவு பரிமாறப்பட்டது. அதன் பின்னரே அரசர்களின் வரிசைக்கிரமப்படி அமர்ந்திருவர்களுக்குப் பரிமாற ஆரம்பித்தாள். அரசகுல வழக்கப்படித் தன் தலையைக் குனிந்து இலையை நோக்கிய வண்ணமே பரிமாறி வந்தாள் ருக்மிணி. ஆனால் அரசர்களிடையே கண்ணன் அமரவில்லை என்பதையும், அவன் அரசகுலச் சாமானியர்களிடையே அமர்ந்திருப்பதையும் அவள் கண்கள் தெரிந்து வைத்திருந்தன. ஆகையால் அந்த வரிசைக்குப் பாயசம் பரிமாற ஆரம்பிக்கையிலேயே அவள் இதயம் போட்ட சப்தம் அவள் காதுகளைத் துளைத்தது. எங்கே எல்லார் காதுகளையும் அந்தச் சப்தம் எட்டிவிடுமோ எனப் பயந்தாள். சுற்றும் முற்றும் கவனித்துக்கொண்டாள். தன் இதயத்தை அமுக்கிப் பிடித்துக்கொண்டாள். அதற்கும் மேல் அவள் கைகள் நடுங்க ஆரம்பித்தன. ஒருவாறு சமாளித்துக்கொண்டு மற்றவர்களுக்குப் பரிமாறிய ருக்மிணி மெல்ல மெல்லக் கண்ணன் அமர்ந்திருந்த இருக்கைக்கு வந்ததும் கண்ணன் இலையில் ஒரு கரண்டிப் பாயசத்தைப் பரிமாறுகையில் கை நடுக்கம் அதிகம் ஆகி பாத்திரமே பாயசத்தோடு கண்ணன் இலையில் கவிழ்ந்தது.

Friday, September 16, 2011

எங்கிருந்தோ வந்தான்! இடைச்சாதி நான் என்றான்!

“கோவிந்தா, இது விளையாடும் நேரம் இல்லை; ருக்மிணி உண்மையாகவே தீவிரமாக இருக்கிறாள். மணந்தால் வாசுதேவ கிருஷ்ணன்; இல்லை எனில் மரணம்! இது தான் அவள் ஒரே முடிவு. அவள் தகப்பன் முடிவையும், அண்ணன் முடிவையும் முழுமையான தீவிரத்துடன் எதிர்க்கிறாள். கண்ணா! நீ எப்படியாவது சரியான நேரத்துக்குச் சென்று அவளைத் தூக்கிக் கொண்டு போய் மணந்து கொள்வாய் என எதிர்பார்க்கிறாள்.”

கண்ணனும் இப்போது தீவிர சிந்தனையில் ஆழ்ந்தான். “திரிவக்கரை! நான் ருக்மிணியைத் தூக்கிச் செல்வதெல்லாம் நடைமுறைக்கு ஒவ்வாத ஒன்று. நடக்கவும் நடக்காது.” என்றான். ஆனாலும் அவன் மனம் இன்னமும் தீவிர சிந்தனையிலேயே ஆழ்ந்திருந்தது. “ஏன் கோவிந்தா ஏன்? அரச குடும்பங்களில் இது நடக்கும் ஒரு விஷயம் தானே! எத்தனை அரசர்கள் அவர்களுக்குப் பிடித்த அரச குமாரிகளைத் தூக்கிச் சென்று கந்தர்வ மணம் புரிந்து கொண்டிருக்கின்றனர். அதைப் பின்னர் அவர்கள் இருவரின் பெற்றோரும் ஏற்றுக்கொண்டதில்லையா??” திரிவக்கரை தீர்மானமாய்க்கூறினாள். கண்ணன், அவளைப் பார்த்து, “திரிவக்கரை! நான் சொல்லும் விஷயத்தை ருக்மிணியிடம் போய்ச் சொல்வாய்!:

“ருக்மிணி, என் மாமன் கம்சனை நான் கொன்ற சமயம் நீ என்னை முதல் முதல் மதுராவில் பார்த்தாய். அன்றிலிருந்து இன்று வரையிலும் நீ என்னிடம் மாறாத தீவிர அன்பு பூண்டிருக்கிறாய் என்பதை நான் நன்கறிவேன். அவ்வளவு ஏன்? என்னைப் பெற்ற தாயான தேவகிக்கும் நான் உன்னை மணந்து கொள்வது உவப்பான ஒரு விஷயமே! “

திரிவக்கரை குறுக்கிட்டாள்.”கண்ணா! அப்புறம் என்ன கவலை! தேவகி அம்மாவின் சொல்லுக்கும், அவர்கள் விருப்பத்திற்கும் மறுப்பு ஏதும் உண்டா? நீ நடத்து உன் வேலையை!”

கண்ணன் இப்போது சற்றுக்கடுமையாகவே திரிவக்கரையிடம் சொன்னான்: “இதோ பார், நான் சொல்வதை மட்டும் நீ ருக்மிணிக்குத் தெரிவித்தால் போதுமானது:

ருக்மிணி, நான் இங்கே வந்திருப்பது உன்னை மணந்து கொள்ளவோ, அல்லது தூக்கிச் சென்று காந்தர்வ விவாஹம் செய்யவோ அல்ல. தர்மத்தை நிலைநாட்ட வந்துள்ளேன். தர்மத்திற்கும், நியாயத்துக்கும் விரோதமாக இங்கே நடக்கப் போகும் சம்பவங்களையும், நடைபெற்றுக்கொண்டிருப்பதையும் தடுக்க வேண்டியது என் கடமை. அதற்காகப் போர் செய்ய வேண்டுமென்றாலும் நான் தயாராக வந்துள்ளேன். இந்த என் கடமையை முடிக்காமல், நான் உன்னை மணந்து கொண்டு நான் வந்திருக்கும் வேலையை விட்டு விட்டு சுயநலமுள்ளவனாக என்னை மாற்றிக்கொள்ள விரும்பவில்லை.”

திரிவக்கரை குறிக்கிட்டாள். “கண்ணா, உன்னை என்னால் புரிந்துகொள்ளவே முடியவில்லை!”

“திரிவக்கரை, என்னுடன் பழகி, என்னுடன் கூடவே இருக்கும் நீயும் என்னைப் புரிந்துகொள்ளவில்லை என்றால் அது என் துரதிர்ஷ்டம் தான்! எனக்காகவோ, என் சொந்த நலனுக்காகவோ எதையும் செய்ய நான் விரும்பவில்லை; நான் இங்கே வந்திருப்பது தர்மத்தைக் காக்க வேண்டியே! அதர்மமாய்ச் சென்று கொண்டிருக்கும் இந்த அரசர்கள் அனைவரும் அவரவருக்கு என விதித்ததர்மத்தை மதிக்கக் கற்றுக்கொள்ளவேண்டும்.”

“நீ இப்படியே பேசிக்கொண்டிருந்தால், கிருஷ்ணா, இந்தச் சுயம்வரம் நடந்தே தீரும்!”
“இல்லை திரிவக்கரை! நிச்சயம் நடைபெறாது.”

“ஆஹா, அப்படி என்றால் நீ ருக்மிணியைத் திருமணம் செய்து கொள்ளலாம். ஒருவரை ஒருவர் விரும்பும் நீங்கள் இருவரும் சேர்ந்து மணந்து கொண்டு இல்வாழ்க்கை நடத்தத் தடையாக இருப்பது எது? “

“தர்மம்! அது தான் எங்களைத் தடுக்கிறது.” கண்ணன் தொடர்ந்து பேசினான்:”ஜராசந்தன் என்னை எவ்வாறேனும் கொல்ல வேண்டும் எனத் திட்டமிடும் இந்த நேரத்தில் விதர்ப்ப இளவரசியை மட்டும் அல்ல; வேறு எவரானாலும் என்னால் திருமணம் செய்து கொள்ள இயலாது. நான் மணந்து கொண்டால் இப்போது என் மனைவிக்கு என்னால் என்ன கொடுக்க இயலும்?? என் மனைவிக்கென ஒரு அழகான வீடும், அந்த வீட்டில் அவள் எவ்வாறு இருந்தால் சந்தோஷமாகவும், நிம்மதியாகவும் இருக்க இயலுமோ அவ்வாறான ஒரு வாழ்க்கையை அமைத்துக்கொடுக்க விரும்புகிறேன். அதற்கென நான் தயாராக வேண்டும். இப்போது மணந்தால் அவளை எங்கே கொண்டு வைத்துக்கொள்வேன்? ஆகவே திரிவக்கரை! நீ ருக்மிணியிடம் சொல்! என்னால் மேற்கண்ட செயல்கள் செய்து முடிக்கும்வரை திருமணம் செய்து கொள்ள முடியாது; வேறு எந்த மணப்பெண்ணையும் நான் தேர்ந்தெடுக்கப் போவதில்லை; இதையும் சொல்லிவிடு. ஆனால் ருக்மிணி சர்வ சுதந்திரமாக அவளுக்குப் பிடித்த மணமகன் கிடைத்தால் தாராளமாய் மணக்கலாம். நான் அதில் தலையிட மாட்டேன். தர்மத்தை நோக்கிச் செல்லும் என் நீண்ட நெடிய இந்தப் பிரயாணத்தில் இறை அருள் கூட்டினால் அப்போது ருக்மிணியை என் துணைவியாகக் கொள்ள முடியும் எனில் எனக்கு மகிழ்ச்சியே. அதை என் பேரதிர்ஷ்டம் என்றே கருதுவேன்.”

இதற்குள்ளாக ஜராசந்தனும் அவன் நண்பர்களுமாய்க் கூடிப் பேசி சுயம்வரத்தைத் தள்ளிப் போடுவது என்ற முடிவிற்கு வந்தனர். யாதவர்களின் மாபெரும் படையே இங்கு வந்திருக்கையில், கிருஷ்ணனும் தலைமை தாங்கி வந்திருக்கையில் ஏதேனும் கலகம் நடைபெற வேண்டாம் என்பதே அனைவரின் விருப்பமாக இருந்தது. ஆகவே ஜராசந்தன் மிகக் கஷ்டப்பட்டுத் தன் போக்கை, மனநிலையை மாற்றிக்கொள்ள நேர்ந்தது. மேலும் அவன் நண்பர்களாக அவனால் அழைக்கப்பட்டு வந்திருந்த அரசர்கள் அனைவருக்கும் கண்ணனைப் பார்க்கவும் அவனுக்குக் கெளசிகன் கொடுக்கப் போகும் மாபெரும் வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவும் ஆவலும் இருந்தது. ஆகவே ஜராசந்தன் இப்போது இதிலிருந்து ஒதுங்கி இருப்பதே நலம் என எண்ணினான்.

நிலைமை மிகவும் மோசமாய்த் தான் காணப்பட்டது. பீஷ்மகன் மனதளவிலும், உடலளவிலும் மிகப்பலஹீனனாய்க் காணப்பட்டான். மேலும் தாமகோஷனோ, தன் மனைவி வழி உறவினர்களால் பெரிதும் கொண்டாடப்படும் கண்ணனை, அவர்களைப் போலவே மிகவும் மதித்தான். யாதவர்களின் கண்ணின் கருமணியான கண்ணனுக்கு எதிராக எதுவும் நினைக்க முடியவில்லை அவனால். அவ்வளவு ஏன்? போஜ நாட்டின் முக்கியத் தலைவர்களும், மற்ற பிற மூத்தவர்களுமே கண்ணனின் புகழ் பாடுவதில் ஒருவருக்கொருவர் போட்டியில் சளைத்தவர்களாய்த் தெரியவில்லை. இந்த மாட்டிடையனுக்கு இவ்வளவு கெளரவமா? ஜராசந்தன் உள்ளூரக் கொதித்தான். எங்கிருந்தோ வந்து இந்த இடையன் நம் அனைத்து முயற்சிகளையும் கெடுத்துக் குட்டிச் சுவர் செய்து விட்டானே!

ஆனால்…. ஆனால்…… இதை ஒப்புக்கொள்ளத் தான் வேண்டும். கண்ணன் அனைவரையும் கவர்ந்திருக்கிறான் என்பது உண்மை எனினும், அதிலும் ஒரு மரியாதையும், கெளரவமும் சேர்ந்தே காணப்பட்டது. கண்ணனை அனைவரும் பயபக்தியோடு மட்டுமில்லாமல் உள்ளார்ந்த ஈடுபாட்டுடன் கூடிய மரியாதையும் கெளரவும் கொடுத்தே உபசரித்தனர். கண்ணனோ மாபெரும்படையுடன் வந்திருந்தான்; ஆனால் உடனடிப் போருக்கெல்லாம் இறங்கவே இல்லை. சண்டையிட வரவில்லை எனத் தெளிவாய்க் கூறுகிறான். இதிலிருந்து அவன் எண்ணம் சுயம்வரத்தை நிறுத்துவது என்பது தான். எப்படியோ இது போலி என்பதை அறிந்து கொண்டே வந்துள்ளான். மணப்பெண்ணைத் தானே மணந்து கொள்ளும் எண்ணமும் இருப்பதாய்த் தெரியவில்லை. வயதான கிழவன் கெளசிகனுக்குக் கூடப் பரிசுகள் கொண்டுவந்துள்ளான். மணப்பெண்ணான ருக்மிணிக்கும் தனியாகப் பரிசுகளாம்! அனைவர் மனதையும் கவர்ந்துவிட்டானே இந்த இடையன்.

Monday, September 12, 2011

தாளாத துயர் தீர்க்கக் கண்ணன் வந்தான்!

கண்ணனின் வார்த்தைகள் பீஷ்மகனை வெகு நுட்பமான இடத்தில் அடித்திருக்கிறது என்பதை அவன் வேதனை கலந்த முகபாவம் தெரியப்படுத்தியது. கண்ணன் அதைக்கவனிக்காதவன் போலத் தொடர்ந்தான். “யாதவர்களின் பரம வைரியை உங்கள் நண்பர்களாக்கிக்கொண்டு, விட்டதால் உங்களுக்கு எந்தப் பயனும் ஏற்படப் போவதில்லை. உக்ரசேன மஹாராஜாவை இந்தச் சுயம்வரத்திற்கு முறைப்படி அழைத்திருந்தால் நடந்திருப்பதே வேறு விதமாக இருக்கும். இந்தப் போலியான சுயம்வரமே நடக்கவிட்டிருக்க மாட்டார். “ “போலி சுயம்வரம்!” எதிரொலித்தான் பீஷ்மகன். எனினும் அவன் குரலில் வலுவிருக்கவில்லை. மிகவும் உடல்நலமில்லாதவன் போல் திடீரெனக் காட்சி அளித்த அவன் அப்படியே தன் கட்டிலில் சாய்ந்து கொண்டான். தன் கண்களை மூடிக்கொண்டு, “வாசுதேவா, வாசுதேவா! உனக்கு எவரோ தவறான செய்தியைக் கொடுத்திருக்கின்றனர்.” என்றான். பரிதாபமும், கருணையும் பொங்க பீஷ்மகனையே பார்த்துக்கொண்டிருந்தான் கண்ணன். பீஷ்மகன் மீண்டும் கண்களைத் திறக்கும் வரையிலும் பொறுமையுடன் காத்திருந்தான்.

பீஷ்மகன் கண்களைத் திறந்ததும், “போஜ அரசர்களில் சிறந்தவரே! நான் இங்கே உம்முடைய இந்தச் சுயம்வரத்தில் வலுவில் கலந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தோடு வரவில்லை. நான் ஒரு அரச குடும்பத்தில் மணமகளை அடைய முடியாது என்பதை நன்கறிவேன். ஆம், இருக்கலாம், போஜரே, நான் ராஜ வம்சத்து, க்ஷத்திரிய வம்சத்து ரத்தத்தில் பிறந்திருக்கலாம். ஆனால் நான் வளர்ந்ததோ மாட்டிடையர்கள் மத்தியிலே. நான் ஓர் மாட்டிடையனாகவே இன்று வரையிலும் எண்ணப்படுவதும் அறிந்திருக்கிறேன். அவ்வாறே நானும் உணர்கிறேன். இங்கு வந்திருக்கும் மாட்சிமை பொருந்திய மன்னர்களோடு சரிசமமான ஆசனத்தில் அமரும் தகுதி எனக்கு இல்லை என்பதையும் அறிந்துள்ளேன். அதிலும் சுயம்வரத்தில் போட்டியிட்டு மணமகளை வெல்லும் தகுதி படைத்த அரசர்களோடு நான் சமானமாக நினைக்கக் கூட முடியாதவன் என்பதைப் புரிந்தே வைத்திருக்கிறேன்.”

தன் வார்த்தைகளை பீஷ்மகன் மிக உன்னிப்பாகக் கவனிப்பதையும், மனதில் இருத்துவதையும் புரிந்து கொண்டான் கிருஷ்ணன். மேலே கூறினான்:” ஆனால் எனக்கு இங்கே ஓர் கடமை உள்ளது. ஆரியனான நான் தவறாமல் கடைப்பிடிக்க வேண்டியதொரு தர்மம் அது. போஜ மன்னா! நீர் நடத்தப் போகும் இந்தச் சுயம்வரத்தில் மணமகன் ஏற்கெனவே தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்டான் என்பதை அறிவேன். மணமகளுக்கு அவள் விருப்பம் போல் அவளுக்கேற்ற மணமகனைத் தேர்ந்தெடுக்கும் சந்தர்ப்பத்தை அளிக்கவே இல்லை. சக்கரவர்த்தி ஜராசந்தன் உம் மகளுக்கான மணமகனைத் தேர்ந்தெடுத்திருக்கிறான். அவன் விருப்பத்துக்கு நீர் துணை போகிறீர். இந்த அநியாயமான சுயம்வரத்திற்கு இதற்கு வந்திருக்கும் அரசர்களும் துணை போகின்றார்கள். ஆம், இதற்குச் சம்மதம் கொடுத்த அரசர்கள் மட்டுமே அழைக்கப்பட்டிருக்கிறார்கள். இந்தச் சுயம்வரத்தின் மூலம் நீர் அடையப் போகும் லாபம் என்ன?? யாதவர்களை அடக்கி ஒடுக்க நினைக்கும் ஜராசந்தனுக்குத் துணை போவதன் மூலம் மாபெரும் ராணுவத்தை யாதவர்களுக்கு எதிராக உருவாக்க நினைப்பதன் மூலம் உமக்குக் கிடைக்கப் போகும் அரசியல் நன்மை என்ன?? “ உணர்ச்சிகள் ததும்பப் பேசிய கண்ணன் மேலே தொடர்ந்தான்.

“ ஐயா, நீர் ஓர் ஆரியர்! தர்மத்தை அதுவும் ராஜ தர்மத்தை முறையாகக் கடைப்பிடிக்க வேண்டியவர். தர்மம் உம்மால் காப்பாற்றப்படவேண்டும். அதை உம்மிடம் யாசித்துப் பெறவே நான் இங்கு வந்துள்ளேன். ஐயா, போஜ மன்னரே! உம் மகள் ருக்மிணி போஜ நாட்டு அரசகுலப் பெண்களில் ஜொலிக்கும் வைரம் போன்றவள். உம்முடைய அரசக் கிரீடத்தின் வைரங்களை விட இவள் நாட்டுக்கே ஒளிதரும் கண்மணி போன்றவள்; அத்தகையதொரு பெண்ணை, உம்முடைய அரசியல் சதுரங்கத்தில் ஓர் பகடைக்காயாகப் பயன்படுத்துவது தகுமா?? அதிலும் யாதவர்களை அழிக்கவெனப் புறப்பட்டிருக்கும் ஜராசந்தனின் தோழமைக்காக உம்முடைய ஒரே குமாரியின் வாழ்க்கையைப் பணயம் வைத்தது சரியா?? உண்மையைச் சொல்லுங்கள் ஐயா. உம் மகளின் வாழ்க்கையை விடுங்கள். நாங்கள் யாதவர்கள் உமக்கு என்ன கெடுதி செய்தோம்?? ஏன் எங்களை உம்முடைய முதல் எதிரியாகக் கருதுகிறீர்கள்? நீர் செய்வதை சரியா??”

“போதும், போதும், வாசுதேவா! உன்னையோ அல்லது மற்ற யாதவர்களையோ, அவ்வளவு ஏன் யாதவக் குலத்தையோ நான் ஒருபோதும் எதிரியாக நினைக்கவில்லை. இது தவறான செய்தி. அதிலும் தாமகோஷன், சேதி நாட்டரசர், உன்னுடைய சொந்த அத்தை புருஷர், உங்களுக்கெதிரானதொரு சதியில் இறங்குவார் என நீ நம்புகிறாயா?? இதில் அரசியல் சதி ஏதும் இல்லை கண்ணா! என்னை நம்பு. இங்கே எந்தச் சதியும் நடைபெறவே இல்லை. இம்மாதிரியான சுயம்வரங்கள் அரச குலத்தில் புதியது அல்லவே. அரசியல் காரணங்களுக்காகவும், அரசியல் ஒற்றுமைகள் நீடிக்கவும் அரசகுமாரிகள் இம்மாதிரியான திருமணங்கள் செய்து கொள்வதும் புதியது அல்லவே!” பீஷ்மகன் என்னதான் கூறினாலும் அவன் குரலில் வலு இல்லை என்பதை அனைவருமே அறிந்தனர். கிருஷ்ணன் புன்னகை புரிந்தான். “போஜ மன்னரே! நீர் மிகவும் கெட்டிக்காரர்; அது மட்டுமல்ல. புத்திசாலியும் கூட. ஒரு தகப்பனாகத் தன் மகளுக்கு என்ன செய்ய வேண்டும் என்பதை ஆரியரான நீர் அறியாமல் இருக்க முடியாது. உம்முடைய கடமையை நீர் மறந்திருக்க மாட்டீர். ஒரு சுயம்வரம் என்றால் மணமகள் தனக்கேற்ற மணாளனைத் தானே சொந்தமாகத் தன் சுயநினைவோடும், சுய ஒப்புதலோடும் தேர்ந்தெடுக்க வேண்டும். தகப்பனான அரசர்கள் அரசகுமாரர்களையும், அரசர்களையும் சுயம்வரத்திற்கு அழைப்பதோடும், அவர்களைத் தன் மகளுக்கு அறிமுகம் செய்வதோடும் நின்று கொள்ள வேண்டும். நம் ஆரிய சம்பிரதாயங்களும், இன்றளவும் நடைபெறும் சாத்திர சம்பந்தமான நூல்களும், ரிஷி, முனிவர்கள் கூறி வருவதும் இதுவே. ஒரு பெண்ணை பலவந்தமாக அவளுக்கு இஷ்டமில்லாத ஒருவனுக்கு மணமுடிக்கக் கூடாது என்பது ஆரியர்களான நாம் கட்டாயமாகக் கடைப்பிடித்து வருகிறோம்.”

“தெரியும்!” மெல்லிய குரலில் முணுமுணுத்தான் பீஷ்மகன்.

“கிருஷ்ணன் தன் கைகளைக் குவித்த வண்ணம் பீஷ்மகனை வணங்கினான். “ ஆகையால் நான் இங்கே இப்போது வந்திருப்பது, என் தாத்தாவான உக்ரசேனா மஹாராஜா, என் தந்தையும் ஷூரர்களின் தலைவரும் ஆன வசுதேவர், ஆகியோரின் விருப்பமும் வேண்டுகோளும் மணமகளுக்கு விருப்பமில்லாத இந்தச் சுயம்வரத்தைத் தடுக்க வேண்டும் என்பதே! அவர்களின் விருப்பத்தைத் தெரிவிக்கவேண்டியே நான் இங்கே வந்துள்ளேன்.”

பீஷ்மகனுக்கு என்ன செய்வது எனப் புரியாமல் ஒரு நொடி தவித்தான். பின்னர் தன்னைச் சமாளித்துக்கொண்டு, “இவ்வளவு ஏற்பாடுகளும், திட்டங்களும் போட்டு விருந்தினர்களும் வந்து சேர்ந்திருக்கும் வேளையில் இந்தச் சுயம்வரத்தைத் தடுத்து நிறுத்துவது என்பது இயலாத ஒன்று. சுயம்வரத்தைத் தள்ளியும் போடமுடியாது. போஜர்களாகிய எங்கள் குலத்திற்கு இது அவப்பெயரைத் தேடிக்கொடுக்கும்.”

“எனில் அரசே, நீர் இதை யாதவர்களாகிய எங்கள் பொறுப்பில் ஒப்படைக்கச் சம்மதிக்கிறீர்களா? இந்தச் சுயம்வரத்தைத் தடுக்கும் பொறுப்பு எங்களுடையது. அதர்மமான முறையில் நடைபெறப்போகும் சுயம்வரத்தைத் தடுக்கிறோம். நம் பாரம்பரியமான சம்பிரதாயங்களையும் விதிகளையும் பின்பற்றி தர்மத்தை நிலை நாட்டுகிறோம். என்ன சொல்கிறீர்கள்?” கிருஷ்ணன் குரலில் இப்போது எச்சரிக்கை மணி ஒலித்தது. அவன் குரலே பயங்கரமாக ஒலித்தது.

“ஐயகோ! நான் என் செய்வேன்! அது இன்னும் கொடுமையாகிவிடுமே! பயங்கரமானதொரு நாசத்திற்கு வழிகோலுமே! ஒழிந்தோம், நாங்கள் அடியோடு அழிந்தோம்! எல்லாம் வல்ல, சர்வ வல்லமை பொருந்திய மஹாதேவன் தான் எங்களையும், எங்கள் போஜ குலத்தையும் காத்து ரக்ஷிக்கவேண்டும். அனைத்து தெய்வங்களும் எங்களுக்குத் துணையாக வரவேண்டும்.” தீனக்குரலில் கதறிய பீஷ்மகன் மீண்டும் அவன் படுக்கையில் சாய்ந்துவிட்டான். கிருஷ்ணன் ஏதும் பேசாமல் கெளசிகன் அவனுக்கென ஏற்பாடு செய்திருந்த விருந்தினர் மாளிகைக்கு வந்தான். அங்கே காத்திருந்த திரிவக்கரை கிருஷ்ணனைக் கண்டதும் ஓடோடி வந்தாள். கிருஷ்ணன் தனிமையில் வந்ததும், அவனிடம்,” கோவிந்தா! இளவரசி ருக்மிணி உனக்குச் செய்தி அனுப்பி உள்ளாள்.” என்று பரபரப்புடன் கூறினாள். “உன் முகமே சொல்கிறதே, இப்படி ஏதோ ஒன்று உள்ளது என! எங்கே சொல் பார்ப்போம்! “ என்றான் கண்ணன். மீண்டும் கள்ளச் சிரிப்பு விளையாடியது அவன் முகத்தில்.

சுற்றும் முற்றும் ஒருமுறை பார்த்துக்கொன்ட திரிவக்கரை," கண்ணா, ருக்மிணியின் செய்தி இதுவே:"கோவிந்தா, நான் உன்னைத் தவிர வேறு எவரையும் மணக்க மாட்டேன். இந்தப் பிறவியில் மட்டுமல்ல; இனி வரும் எல்லாப் பிறவிகளிலும். ஜன்மஜன்மாந்தரங்களுக்கும் உன்னையே தொடர்ந்து வருவேன். நீ எங்கிருந்தாலும் எந்த உருவில் இருந்தாலும் தேடிக்கண்டு கொண்டு உன்னையே மணந்து கொள்வேன். வேறு எவரையும் எவ்வளவு உன்னதப் பதவியில் இருந்தாலும் மணக்கச் சம்மதியேன்."

கண்ணன் வாய்விட்டுச் சிரித்தான். "திரிவக்கரை, ருக்மிணியை முதன்முதல் பார்த்ததில் இருந்து இதற்காகவே நீ பல வேலைகள் செய்து வந்துள்ளாய் அல்லவா? இப்போதும் என் அன்னை, மற்றும் யாதவகுல மகளிர் சார்பாகப் பரிசுகளை நீ எடுத்துக்கொண்டு வந்ததும் இதை எல்லாம் நிறைவேற்ற வேண்டி அல்லவா? நீ மிகவும் கெட்டிக்காரி. உன்னுடைய வேலைகளுக்கு நடுவே அரச மாளிகைகளின் அந்தப்புர ரகசியங்களையும் அறிந்து கொண்டு விடுகிறாய். உன் வயதைப் போலவே இதுவும் அதிகமாகிக்கொண்டு வருகிறது."

திரிவக்கரை, "கண்ணா, நான் உன்னைத் தெய்வமாக நினைப்பதை நீ நன்கறிவாய். உனக்குச் சேவை செய்வதே என் நோக்கம். இந்தச் சேவைகளைக் கேலி செய்யாதே! நான் என்ன செய்தாலும் அதை உனக்காகவே அர்ப்பணித்துவிட்டு அர்ப்பணிப்பு உணர்வோடு செய்கிறேன். உனக்காகவே நான் வாழ்கிறேன் என்பதை அறிவாயாக!" என்றாள்.

"ம்ம்ம்ம் இருக்கட்டும்; செய்தி அவ்வளவுதானா? இன்னம் இருக்கிறதா??"

"போஜ இளவரசி நீ மட்டும் அவளை மணக்கவில்லை எனில் உயிர்த்தியாகம் செய்யப் போவதாய்ச் சொல்லிக் கொண்டு இருக்கிறாள். கண்ணா, அவள் நினைத்ததைச் செய்து முடிப்பாள்."

"திரிவக்கரை, பல அரச குடும்பப் பெண்களும் இப்படிச் சொன்னவர்களே; பின்னர் வேறொருவனை மணந்து பிள்ளை, குட்டிகள் பெற்றுக்கொண்டு அரசியல் சூதுகளில் கலந்து கொண்டு செளக்கியமாகவே இருக்கின்றனர்."

திரிவக்கரையின் முகம் வேதனையைக் காட்டியது.

Saturday, September 10, 2011

கேள்வியே பதிலாகக் கண்ணன் வந்தான்!

மரியாதைக்குரிய பாட்டனாரே! என்னை மிக அதிகமாய்ப் புகழ்கிறீர்களே! என்னுடைய அறிவின்மையை இந்தப் புகழ்ச்சி வெளிச்சம் போட்டுக் காட்டப் போகிறது.” கண்ணன் சிரித்தவண்ணமே அடக்கமான, விநயம் கூடிய குரலில் கூறினான். ஆனால் அதை லக்ஷியம் செய்யாமலேயே கெளசிகன் மேலே பேசினான். “கோவிந்தா! நான் சொல்வதைக் கேட்பாயாக! நான் இந்த போஜநாட்டின் சாம்ராஜ்யத்தைத் துறக்கும்படி நேர்ந்த சமயம் எனக்கென ஒரு தனி சிற்றரசை என் நேரடிக் கண்காணிப்பிலே வைத்துக்கொண்டேன். ஆகவே நான் இப்போதும் ஒரு நாட்டின் அரசனே! உன்னை அந்த நாட்டின் அரசனாக முடிசூட்டப் போகிறேன். நீயும் அதன் பின்னர் முறையாக ஓர் அரசனாக இந்தச் சுயம்வரத்தில் கலந்து கொள்ளலாம். அப்போது உன்னை யாரும் எதுவும் சொல்லவும் முடியாது! வந்திருக்கும் அரசர்களோடு நீ சரிசமனாக ஆகிவிடுவாய். உன் வீரதீரப் பிரதாபங்களில் அவர்களை விட நீ பெரியவன் எனினும், இந்த அரசப் பட்டம் உன்னை அவர்களோடு சமானமாக்கும். அதன் பின்னர் நீ அவசியம் இந்தச் சுயம்வரத்தில் கலந்து கொண்டே ஆகவேண்டும்.”

“தாத்தா, தாத்தா!” கண்ணன் போஜனின் இந்தப் பரந்த மனது கண்டு அதிசயமும், உவகையும் ஒருங்கே அடைந்தான். ஆனாலும் ராஜ்யத்தை ஏற்க அவன் மனம் சம்மதிக்கவில்லை. ஆகவே போஜனின் கோரிக்கையை நிராகரிக்கும் முறையில் வெகு வேகமாய்த் தலையை ஆட்டினான். மேலும் கூறினான்:” மாட்சிமை பொருந்திய பாட்டனாரே! அரசே! என்னிடம் நீர் காட்டும் கருணையும், அன்பும் மிகப் பெரியது. இதற்கு நான் என்ன கைம்மாறு செய்யமுடியும் எனத் தெரியவில்லை. ஆனால் அரசே, நான் பிறவியால் அரச பரம்பரையில் பிறந்தேனல்லேன்; எனக்கு அரசனாகும் ஆசையும் இல்லை. அதுவும் இவ்வாறெல்லாம் குறுக்கு வழியில் அரசனாகச் சம்மதிக்கவே மாட்டேன். ஆம், பாட்டனாரே! எனக்கு தர்மம் மிக முக்கியம். அதை நான் தீவிரமாய்க் கடைப்பிடிக்க விரும்புகிறேன். என்னுடைய தர்மம் என்னவென்று நான் புரிந்து கொண்டிருக்கிறேன். அது நிச்சயமாக இந்த ராஜதர்மம் அல்ல! அரச பதவி என்ற தங்கக் கூட்டுக்குள் நான் சிக்கவும் விரும்பவில்லை. நான் அரசனாகி ராஜதர்மத்தைக் கடைப்பிடிக்கவென நான் பிறக்கவும் இல்லை!” திட்டவட்டமாய்க் கண்ணன் கெளசிக போஜனின் உதவியை மறுத்தான்.


“கோவிந்தா, கிருஷ்ண வாசுதேவா! எனக்கு வேறு வழி தெரியவில்லையே! பின்னர் நீ எவ்வாறு அந்தச் சுயம்வரத்தில் கலந்து கொள்ள இயலும்?? நீ இல்லாமல் இந்தச் சுயம்வரம் நடைபெறுவதை நான் விரும்பவே இல்லை!”

“தாத்தா! நடக்கப் போவது சுயம்வரமா? இல்லை! இல்லை! இல்லவே இல்லை! சுயம்வரம் என்ற பெயரில் அவரவர் அபிலாஷைகளைத் தீர்த்துக்கொண்டு அரசியல் ஆதாயம் தேடப் போகின்றனர். இதை நான் எப்பாடு பட்டேனும் நிறுத்தியே தீர்வேன்! நான் இங்கு வந்த காரணமும் அதுவே!” கண்ணன் உறுதி தொனிக்கக் கூறினான். “ஓஹோ, வாசுதேவா, நாம் க்ஷத்திரியர்கள். க்ஷத்திரியர்களிடையே இத்தகைய ஏற்பாடுகள் சகஜமான ஒன்றல்லவோ! புதிது இல்லை! எங்கும் நடப்பது தானே!” என்றான் கெளசிகன். “தாத்தா! இதிலிருந்து என்ன புரிகிறது? அரசர்கள் அனைவரும் தங்களுக்கென விதித்திருக்கும் கடமைகளை மறந்து அரச தர்மத்தை மறந்து அதர்மத்திற்குத் துணை போவது புலனாகின்றது அல்லவா? இந்த அரசர்கள் அதர்மத்தோடு நட்புப் பூண்டிருப்பதைத் தகர்க்க வேண்டும்! அவர்களை மீட்க வேண்டும்.”

கெளசிகன் கண்கள் மின்னக் கண்ணன் பேசியதைக் கண்டு உள்ளூர மனம் பூரித்தான். ஆஹா, இந்த வயதில் எத்தனை தெளிவு! மன உறுதி! கண்ணனிடம் வெளிப்படையாகக் கீழ்க்கண்டவாறு கூறினான்:” கிருஷ்ண வாசுதேவா! நீ இங்கே வந்திருப்பதை நான் முறைப்படி அறிவிப்புச் செய்து உன்னை சகல மரியாதைகளோடும் ஒரு வரவேற்புக் கொடுத்து உபசரிக்கப் போகிறேன். ஒரு அரசனை விட நீ தாழ்ந்தவன் அல்ல; அவர்களை விடப் பலமடங்கு நீ மேம்பட்டவன் என்பதை என் உபசரணைகளின் மூலம் அனைவருக்கும் எடுத்துச் சொல்லப் போகிறேன். நீ வீரமும், பலமும் மட்டும் கொண்டவன் அல்ல; அதே சமயம் விவேகமும், ஞானமும் உள்ளவன் என்பதையும் அனைவரும் அறியும்படிச் செய்வேன்.” என்றான் கெளசிகன்.


“தாத்தா, நான் மறுப்புச் சொல்ல மாட்டேன். ஆனால்…..ஆனால்…… இதன் மூலம் நீர் ஜராசந்தனின் வெறுப்பைச் சம்பாதிப்பதோடு அல்லாமல் அவன் கொடுங்கோன்மை உங்களிடம் அதிகரிக்கும். யோசியுங்கள்.” என்றான் கண்ணன். “ கண்ணா, நான் ஜராசந்தனை லக்ஷியம் செய்யப் போவதில்லை. மேலும் இப்போது நான் போஜநாட்டு அரசனும் அல்ல; என் குமாரன் பீஷ்மகன் தான் போஜ நாட்டு அரசன். அவனுக்கும் ஜராசந்தனுக்கும் நடுவேதான் பேச்சுவார்த்தை, உடன்படிக்கை எல்லாம். என்னை எந்த விதத்திலும் அது கட்டுப்படுத்தாது. அதோடு நான் ஓர் ஆரியன். ஆரியர்கள் விருந்தோம்பலில் சிறந்தவர்கள். அதுவும் தகுதியான நபர்களுக்குத் தகுதியான உபசாரங்கள் செய்வதில் தேர்ந்தவர்கள். அத்தகையதொரு உபசாரத்தை உனக்கு அளிக்கப் போகிறேன். இது என் கடமையும் கூட.”


அடுத்த நாள் போஜநாட்டு அரசன் பீஷ்மகன் தன் அந்தரங்க அறையில் கண்ணனைச் சந்திக்க ஏற்பாடுகள் செய்தான். பீஷ்மகனோடு அவன் பிரதம மந்திரியும், மற்ற போஜத் தலைவர்களும் உடன் இருந்தனர். சந்தேகம் அளிக்கும் விதத்தில் ருக்மி மட்டும் இதில் கலந்து கொள்ளாமல் மாயமாய் ஒளிந்திருந்தான். கண்ணன் தன் சகாக்களான உத்தவன், சாத்யகி போன்றோரையும், அவர்களோடு அரசன் ஷக்ரதேவன், புநர்தத்தன், அக்ராவன நாட்டின் அரசன் த்யூனன், கருட நாட்டரசனான வைநதேயன் ஆகியோருடன் வந்தான். கருடனின் கூரிய மூக்கும், இறைக்கைகளைப் போன்ற அலங்காரங்களும் அனைவர் கண்களையும், கருத்தையும் கவர்ந்தது. பீஷ்மகன் கண்ணனைக் கண்டதும் வரவேற்றான். பரஸ்பர வணக்கங்கள் முடிந்தவுடன் பீஷ்மகன் கண்ணனைச் சுயம்வரத்திற்கு அழைக்க முடியாததற்குத் தன் வருத்தங்களைத் தெரிவித்துக்கொண்டான்.


கண்ணன் குரலில் உறுதியும், அதே சமயம் கடுமையும் காட்டியவண்ணம் கூறினான்:”மாட்சிமை பொருந்திய மன்னா! என்னிடம் நீங்கள் மன்னிப்புக் கேட்டுக்கொண்டது உங்கள் பெருந்தன்மையைக் காட்டுகிறது. அதுவும் நான் நேரில் இங்கேயே வந்ததும் கூறுகிறீர்கள். போகட்டும்; என்னை அழைக்கவில்லை எனில் தவறில்லை. ஆனால் உக்ரசேன மஹாராஜாவைத் தாங்கள் மறந்தது ஏனோ? உம்முடைய குமாரன் கண்களுக்கு அவர் அரசராகப் படவில்லையோ? அவர் தாம் உமக்கு இந்த விஷயத்தில் மாபெரும் வழிகாட்டி எனக் கேள்விப்பட்டேனே!”


பீஷ்மகன் செய்வதறியாது திகைத்தான். “ கண்ணா, நான் எல்லாவற்றையும் என் மகனான ருக்மியின் பொறுப்பில் ஒப்படைத்துவிட்டேன். எனக்கும் வயதாகிவிட்டது பார்! என்னாலும் முன்னைப் போல் தேகபலத்தோடும், மனோபலத்தோடும் நடமாடமுடியவில்லை. எனக்கும் மகன் வந்து பொறுப்புக்களைச் சுமந்தது வசதியாகவே இருக்கிறது.” என்றான்.

“போஜ மன்னரே! உள்ளதை உள்ளபடி பேசுவோமா? உண்மையைச் சொல்லுங்கள்!” என்றான் கண்ணன்.