Tuesday, May 31, 2016

த்வைபாயனரின் சாந்தம்! காங்கேயனின் கோபம்!

ஹஸ்தினாபுரம் வந்து சேர்ந்த த்வைபாயனர் நேரே கடவுளருக்கெல்லாம் கடவுளான பிரதிபேஸ்வரர் கோயிலுக்குச் சென்றார். இந்தக் கோயில் மஹாராஜா பிரதிப்பால் ஆரம்பிக்கப்பட்டு அவன் மகன் ஷாந்தனுவால் கட்டி முடிக்கப் பட்டது. முன்னொரு சமயம் பத்ரிநாதரை தரிசிக்கப் புனித யாத்திரை சென்றபோது த்வைபாயனர் தன் தந்தையுடன் இந்தக் கோயில் வளாகத்திலே தான் தங்கி இருந்தார். கோயிலுக்குள் நுழைந்ததுமே தான் தங்கி இளைப்பாறத் தக்க இடம் ஏதும் இங்கே இருக்கிறதா என த்வைபாயனர் விசாரித்தார். அவரை அங்குள்ள மாந்தோப்புக்கு அழைத்துச் சென்றனர். அங்கு பல துறவிகள், சந்நியாசிகள், வேத விற்பன்னர்கள், ஸ்ரோத்ரியர்கள் தங்கி இருந்தனர். அங்கே சென்றடைந்ததும் அவர் முதலில் கங்கையில் குளித்துவிட்டு மத்தியான நேரத்துக்கான அனுஷ்டானங்களை முடித்துக் கொண்டார். திரும்ப அவர் தோப்புக்கு வந்தபோது அனைவருக்கும் உணவு அளித்து முடிந்து விட்டது என்பதைத் தெரிந்து கொண்டார். உணவளிக்கும் நேரம் முடிந்து விட்டதால் இனி யாரிடமும் போய்த் தனக்கு உணவு வேண்டும் என்று கேட்பதை விடப் பட்டினியாக இருந்துவிடலாம் என்றும் முடிவெடுத்தார்.

த்வைபாயனர் மனதில் அவநம்பிக்கையே குடி கொண்டிருந்தது. ஏனெனில் அவர் ஹஸ்தினாபுரத்துக்கு வந்திருக்கும் இந்த நேரம் சரியல்ல. சக்கரவர்த்தி ஷாந்தனு மரணப்படுக்கையில் இருக்கிறான். இந்தச் சமயம் எவருக்குமே தர்மக்ஷேத்திரத்தைக் குறித்த கவலையோ அதை மீட்டெடுப்பது குறித்த யோசனையோ இருக்கப் போவதில்லை. தான் எவரிடமும் இதைக் குறித்துப் பேச முடியாது. ஷாந்தனுவைப் போன்ற மிக்க அதிகாரம் படைத்த சக்கரவர்த்திகளைச் சந்திக்கும் முறை குறித்தும் அதன் நியதிகள் குறித்தும் த்வைபாயனருக்கு எதுவும் தெரியாது.

ஆனால் அங்கே இருந்த சில ரிஷிகள், முனிவர்கள், துறவிகள் ஷாந்தனுவைத் தரிசித்து ஆசிகள் வழங்கச் சென்று கொண்டிருந்தனர். அவர்கள் அனைவரும் ஷாந்தனுவின் அரசவையின் இளைய மந்திரி குனிக் என்பவனால் இணைக்கப்பட்டு அங்கிருந்து அரச மாளிகை நோக்கிச் சென்று கொண்டிருந்தனர். த்வைபாயனர் தம்மையும் அந்தக் கூட்டத்தோடு இணைத்துக் கொண்டார். த்வைபாயனருக்குத் தன் தோற்றம் குறித்துக் கொஞ்சம் கவலையாகவே இருந்தது. அவர் தம் தோற்றம் சரியில்லை என்பது குறித்து நன்கு அறிந்திருந்தார். நாட்கணக்காக நடந்ததால் களைத்துப் போன முகம்! கிழிந்தும், அழுக்காகவும் போயிருந்த மான் தோல் ஆடை! நீண்ட நாட்கள் உணவு உண்ணாததால் பார்க்கும்போதே தெரிந்த பலஹீனம். அவர் கூட்டத்தில் சேர்ந்து  கொண்டதைப் பார்த்த மந்திரிக்கு இவர் தோற்றமே பிடிக்கவில்லை. ஆனாலும் இவர்களுக்கு மரியாதை கொடுத்தாகவேண்டும்.

“இளந்துறவியே! நீர் எங்கிருந்து வருகிறீர்?” என்று த்வைபாயனரிடம் வினவினார். அவர் குரலில் ஏதோ ஒரு இனம் தெரியாத கவலையும், சந்தேகமும் இருப்பது தெரிந்தது. இருந்தாலும் த்வைபாயனர் சற்றும் தயங்காமல், “தர்மக்ஷேத்திரத்திலிருந்து வருகிறேன்.” என்றார்.

“என்ன தர்மக்ஷேத்திரமா? அந்த ஓநாய்களின் உலகிலிருந்தா? அங்கிருந்து உயிருடன் எப்படி ஐயா வந்தீர்கள்?”

அவர் தம்மை மறைமுகமாகச் செத்து ஒழிந்திருக்க வேண்டியவன், உயிருடன் வந்திருக்கிறான் எனச் சொல்லாமல் சொல்வதைப் புரிந்து கொண்டாலும் த்வைபாயனர் அதைத் தள்ளி விட்டு விட்டார். “ஆம், நான் தர்மக்ஷேத்திரத்திலிருந்து தான் வருகிறேன். கடவுளர் கருணையால் உயிர் தப்பி வந்திருக்கிறேன்.”

“உம்முடைய கோத்திரம் என்ன?”

“பராசர கோத்திரம்!”

இந்த இளம் துறவி நம்மை ஏமாற்றுகிறான் என்றே எண்ணினான் அந்த மந்திரி. அவன் அவரிடம் கேட்டான். “பராசர முனிவர் இப்போது எங்கே இருக்கிறார் என்பதாவது உனக்குத் தெரியுமா? அவர் வசிஷ்டரின் பேரன் என்பதை அறிவாயா?”

“பராசர முனிவர் இப்போது பித்ரு லோகத்துக்குச் சென்றுவிட்டார்.”

“மதிப்புக்குரிய பராசர முனிவர் எங்கே இறந்தார்?”

“பராசர முனிவரின் தன் சொந்த ஆசிரமம் இருந்த இடமான சாம்பல் பிரதேசத்துக்குச் சென்ற போது அங்கிருந்த ஓநாய்களால் தாக்கப்பட்டு மரணம் அடைந்தார். அவர் ஆசிரமம் இருந்த அந்த இடம் சஹஸ்ரார்ஜுனனால் எரிக்கப்பட்டு இப்போது சாம்பல்பிரதேசமாகக் காட்சி அளிக்கிறது.”

“இதை எல்லாம் நீ எப்படி அறிந்தாய்?”

“நான் அப்போது அங்கே தான் இருந்தேன்!”

குனிக் என்னும் அந்த மந்திரி இன்னமும் அதிக சந்தேகத்துடன் த்வைபாயனரையே பார்த்தான். அவன் சந்தேகம் முற்றிலும் தீரவில்லை. ஆனால் இவர் ஒருவருக்காக மற்றத் துறவிகளைக் காக்க வைக்க முடியாது. ஆகவே வேறு வழியில்லாமல் அவரையும் சேர்ந்து கொள்ளச் சொல்லிச் சைகை செய்து விட்டு அனைவரையும் அரச மாளிகை நோக்கி அழைத்துச் சென்றான். அரசமாளிகையில் மன்னன் மரணப்படுக்கையில் படுத்திருந்த அறைக்குள்ளே அனைவரும் அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கே ஒரு பெரிய அக்னிகுண்டம் ஸ்தாபிக்கப்பட்டு அரண்மனையின் மிகச் சிறந்த வேத விற்பன்னர்களாலும், அரச குருவாலும் மாபெரும் யாகம் ஒன்று மன்னனின் உடல் நலத்துக்காக நடந்து கொண்டிருந்தது. அரசகுருவானவர் மன்னனின் படுக்கைக்கு அருகே இடப்பட்டிருந்த ஆசனம் ஒன்றில் கம்பீரமாக அமர்ந்திருந்தார். அந்த அறை பெரியதாகவும் காற்றோட்டமாகவும் இருந்தது. அனைவரும் அவரவருக்குத் தெரிந்த பிரார்த்தனை மந்திரங்களைச் சொல்ல, ஸ்ரோத்ரியர்கள் ஒரு பக்கம் அஸ்வினி தேவர்களை அழைத்து மன்னன் உடல் நலத்துக்காகப் பிரார்த்தித்துக் கொண்டிருந்தனர்.

மன்னன் அருகே யுவராஜா காங்கேயன் கடுமையான முகபாவத்துடன் நின்று கொண்டிருந்தான். மயக்க நிலையில் ஆழ்ந்திருந்த தன் தந்தையின் முகத்தையே ஆவலுடன் அவ்வப்போது பார்த்துக் கொண்டிருந்தான். படுக்கையின் மறுபக்கம் அரசனின் தலைமாட்டின் அருகே போடப்பட்டிருந்த ஆசனத்தில் மஹாராணி சத்யவதி அமர்ந்திருந்தாள். அவள் கண்கள் மன்னனின் நிலையை எண்ணிக் கண்ணீரைச் சொரிந்து கொண்டிருந்தன. ஆனால் அது தெரியாவண்ணம் அவள் முகம் ஒரு வேலைப்பாடுள்ள துணியால் மூடப்பட்டிருந்தது. அவள் கண்கள் மட்டுமே வெளியே சிறிதளவு தெரிந்தன. அவளருகே அவளுடைய இரு பிள்ளைகளான சித்திராங்கதனும், விசித்திர வீரியனும் அமர்ந்திருந்தார்கள்.

அவள் அருகே நின்றிருந்த இரு பெண்கள் அந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் இல்லை என்பது பார்த்த உடனே தெரிந்தது. அவர்கள் முகத்தை மூடி இருக்கவில்லை. அழகாகவும் வெண்மை நிறத்துடனும் இருந்தார்கள். தங்கள் கைகளில் இருந்த மயிலிறகு விசிறியினால் மன்னனுக்கு அவ்வப்போது விசிறினார்கள். த்வைபாயனரும் அவருடன் வந்தவர்களும் உள்ளே நுழைந்ததுமே காங்கேயன் தன்னிரு கரங்களைக் கூப்பி அவர்களை வரவேற்றான். அனைவரையும் மன்னனின் படுக்கைக்கு அருகே வந்து பிரார்த்திக்கச் சொன்னான். த்வைபாயனர் பக்கவாட்டில் தனியாக நின்று கொண்டார். அனைவரும் பிரார்த்தனை மந்திரங்களைச் சொல்லி மன்னனை ஆசீர்வதித்தார்கள். அது முடிந்ததுமே காங்கேயன் தன் கரங்களை மீண்டும் கூப்பிக் கொண்டு வந்திருந்தவர்கள் அனைவரையும் உடனே அறைக்கு வெளியே செல்லும்படி சைகையினாலேயே ஆணையிட்டான்.

அனைவரும் அறையை விட்டு வெளியேறினார்கள். ஆனால் த்வைபாயனர் மட்டும் வெளியேறாமல் அங்கேயே நின்றிருந்தார். ஏற்கெனவே இப்படிக் குழுக் குழுவாக ரிஷிகள், முனிவர்கள் என்று வந்து தந்தையைப் பார்த்து ஆசிகள் வழங்கிச் சென்றும் அதில் முன்னேற்றம் ஒன்றையும் காணோம் என்பதில் காங்கேயனுக்குக் கோபம் மிகுந்திருந்தது. ஆர்யவர்த்தத்தின் அனைத்து நாடுகளிலிருந்து வந்து பிரார்த்தனைகளும் ஆசிகளும் கொடுத்தும் எவ்வித நன்மையும் மன்னனுக்குக் கிட்டவில்லை. ஆகவே இப்போது அங்கேயே நின்று கொண்டிருந்த த்வைபாயனரைப் பார்த்ததும் காங்கேயனுக்கு எரிச்சலே மிகுந்தது. மேலும் த்வைபாயனரின் கிழிந்த அழுக்கான மான் தோல் வேறு காங்கேயனின் கோபத்தை அதிகப்படுத்தியது. அவர் பசியோடு பல நாட்கள் உண்ணாமல் இருந்திருப்பதை அவர் முகமும் கண்களும் சொன்னது.

ஆனாலும் த்வைபாயனர் எதையும் லட்சியம் செய்யாமல், “ யுவராஜா, நான் சக்கரவர்த்தியின் படுக்கைக்கு அருகே கொஞ்சம் செல்ல உங்கள் அனுமதி வேண்டும்!” என்று வேண்டினார். பொறுமையின்மை காங்கேயனின் முகத்தில் அப்பட்டமாகத் தெரிந்தது. அவர் சற்றும் தயங்காமல் உடனேயே, “இல்லை, அதெல்லாம் முடியாது. தயவு செய்து நீங்கள் இங்கிருந்து வெளியேறுங்கள்!” என்றார்.  மேற்பார்வைக்கு அவை வேண்டிக் கொள்வதைப் போல் தெரிந்தாலும் உள்ளூர காங்கேயன் தன்னை அவமதிப்பதைப் புரிந்து கொண்டார் த்வைபாயனர். த்வைபாயனரின் இன்முகமும், அடக்கமான நடவடிக்கைகளும், மென்மையான பேச்சும் கூட காங்கேயனின் மனதை அசைக்க முடியவில்லை. மற்றவர்கள் யாராக இருந்தாலும் அவர் மேல் ஏற்படும் கோபத்தைக் கொஞ்சமாவது குறைத்துக் கொள்வார்கள். ஆனால் காங்கேயனோ சிறிதும் மாற்றமின்றி, “உனக்கு என்ன வேண்டும்?” என்று அலட்சியமாகக் கேட்டார்.

Monday, May 30, 2016

ஹஸ்தினாபுரத்தில் த்வைபாயனர்!

த்வைபாயனர் புன்னகையுடன், “எனக்கு அந்த மந்திரங்கள் அனைத்தும் நன்றாகவே தெரியும். மஹா அதர்வ ரிஷி அவற்றை முதலில் நதிக்கரையில் பைலருக்காக ஓதிய போதும் பின்னர் இங்கே வந்தும் ஓதியபோதும் அவற்றை நன்கு கவனித்துப் பாடமாக்கிக் கொண்டு விட்டேன்.” வாடிகா ஆச்சரியத்துடன் தன் கண்களை விரித்தாள். “நீ மிகவும் அற்புதமான இளைஞன். எப்படிப்பட்ட நினைவு சக்தி உனக்கு இருக்கிறது! எனக்கு மட்டும் உன்னுடைய ஞாபக சக்தி இருந்தால்!” என்று தன்னையும் மீறிச் சொன்னாள்.

“அது சரி வாடிகா! நான் எப்படி இந்த இரவு நேரத்தில் வெளியேறுவது? இங்கிருந்து எங்கு செல்வதற்கும் ஆன வழி எனக்குத் தெரியாது. அதோடு உடல்நலமில்லாமல் இருக்கும் என் நண்பன்! அவனை எப்படி இங்கு விட்டுச் செல்வது?”

“ஓ, அவனைக் குறித்துக் கவலைப்படாதே, த்வைபாயனா! அவன் இன்னும் சில வாரங்கள் இப்படித் தான் மயக்கத்தில் ஆழ்ந்து இருப்பான். ஆனால் தந்தை அவன் சரியாகி விடுவான் என்று சொல்லி இருக்கிறார். நாங்கள் அவனைப் பார்த்துக் கொள்கிறோம். இப்போது என்னுடன் வா. நாங்கள் உன்னை மலை அடிவாரத்துக்கு அழைத்துச் செல்கிறோம். நக்ஷத்திரங்களின் உதவியோடு அடிவாரம் செல்வது எளிதாக இருக்கும். விரைந்து வா!” என்றாள் வாடிகா. அவர்களுடைய மரக்கட்டையால் செய்யப்பட்டுத் தோல் வார் பொருத்தப்பட்ட நடையன்களை அவர்கள் அணிந்து கொண்டனர். பக்கவாட்டுக் கதவைத் திறந்து கொண்டு வேகமாக வெளியேறினார்கள்.

அவர்கள் மூவரும் மலை அடிவாரத்தை அடைந்த போது த்வைபாயனர் அவர்களிடமிருந்து விடை பெற்றுக் கொண்டார். சுமாந்துவின் பக்கம் திரும்பிய அவர், “சுமாந்து, குருதான் சீடர்களை ஸ்வீகரித்துக் கொள்வார். ஆனால் என் விஷயத்தில் நான் உன் தந்தையை என் குருவாக ஸ்வீகரித்துக் கொண்டிருக்கிறேன். மஹா அதர்வ ரிஷி ஜாபாலி அவர்கள் என்னுடைய குரு. ஆகவே நாம் குரு வழிச் சகோதரர்களாகி விட்டோம். உன்னைக் கட்டித் தழுவி விடை பெறுகிறேன்.” என்ற வண்ணம் சுமாந்துவை ஆவலுடனும், அன்புடனும் கண்களில் நீர் வழியக் கட்டித் தழுவிக் கொண்டார். பின்னர் வாடிகாவைப் பார்த்துக் கைகளைக் கூப்பிய வண்ணம்,” வாடிகா, சகோதரி, உன்னுடைய அன்பையும், கருணையையும் நான் ஒரு நாளும் மறக்க மாட்டேன். நான் விரைவில் திரும்பி வருவேன். உன் தந்தையின் ஆசிகளைப் பெறுவேன். நாம் அனைவரும் சேர்ந்து தர்மக்ஷேத்திரத்தை மீட்டெடுப்போம்.” என்று கூறி விடை பெற்றார்.

வேதங்கள் மூன்றா அல்லது நான்கா என்பது குறித்து அந்தக் கால கட்டத்தில் வேத விற்பன்னர்களிடையே பெரும் வாக்குவாதங்கள் இருந்து வந்தன. அதர்வ வேதம் அவ்வளவு எளிதாக எவராலும் ஒத்துக்கொள்ளப்படவில்லை. மெல்ல மெல்ல நாளாக ஆகவே அது பழக்கத்துக்கு வந்ததாகத் தெரிகிறது. முக்கியமான இடத்தைப் பெற்றதாகவும் தெரிய வருகிறது. அதர்வ வேதத்தை நன்கறிந்தவர்கள் அதை வேதத்திலேயே மிக உயர்ந்ததொரு பிரம்ம வித்யை என்றே சொல்லி வந்தனர்.  இந்தப் பின்புலத்தை நினைவில் கொண்டு மேலே படிக்கவும்.  இப்போது நாம் த்வைபாயனரைப் பின் தொடர்வோம்.

த்வைபாயனர் ஹஸ்தினாபுரம் வந்தடைந்தார். அதில் அவருக்கு மிகவும் மகிழ்ச்சி ஏற்பட்டது. ஏனெனில் தர்மக்ஷேத்திரத்தைப் புனர் நிர்மாணம் செய்ய ஆவலுடன் இருக்கும் அவருக்கு இந்த ஹஸ்தினாபுரத்து மக்களின் இசைவு முக்கியத் தேவை என்பதோடு இந்நகரைச் சுற்றியே அனைத்து மாற்றங்களையும் ஏற்படுத்தவும் வேண்டி இருக்கும். இதை ஆண்டு வந்த குரு வம்சத்தின் சக்கரவர்த்தி ஷாந்தனு குருவம்சத்தினரைப் போரிலும், சமாதானத்திலும் ஈடுபடுத்தி ராஜ்யத்தை விஸ்தரித்திருந்தான். ஷாந்தனுவுக்கு இருபது வயது முடிவதற்கு முன்னரே அவன் அரியணை ஏறி விட்டான். அக்கம்பக்கத்து ஆரியர்களைத் தவிரவும் கூட்டம் கூட்டமாக வந்த ஹைஹேயர்களை முறியடிப்பதிலும் பல காலம் செலவிட்டிருந்தான். வருடக் கணக்காக யுத்தம் நடந்தது. ஒருவழியாக அவர்களை ஒழித்திருந்தான். தன்னுடைய இடைவிடா முயற்சியாலும், நல் ஆலோசனைகளாலும், மன உறுதியாலும் ஆர்யவர்த்தம் முழுமைக்கும் தன்னுடைய அதிகாரம் செல்லும்படி ஆக்கியதோடு பிரஜைகளுக்கும் அமைதியான வாழ்க்கையை நடத்தும்படியான சூழ்நிலையை ஏற்படுத்திக் கொடுத்திருந்தான். இப்போது 56 வயது ஆகும் ஷாந்தனு, கடந்த முப்பத்தைந்து வருடங்களில் பல்வேறு சாகசங்களையும் செய்து சாதனைகளைப் படைத்துத் தன்னைச் சக்கரவர்த்தியாக நிலைநாட்டிக் கொண்டிருந்தான். இதற்கு முன்னர் அவனின் முன்னோர்களில் பிரபலமான பரதச் சக்கரவர்த்தி தான் ஆர்யவர்த்தத்தின் சக்கரவர்த்தி என அறியப்பட்டிருந்தான்.

இந்த யுத்தம் ஏற்படுத்திய மாபெரும் குழப்பத்தில் ஆரியர்கள், நாகர்கள் மற்ற இனத்தவர்கள் அனைவருமே தங்கள் தங்கள் இனங்களையும் வேறுபாடுகளையும் மறந்துவிட்டு ஒன்றாகக் கூட்டுச் சேர்ந்து பொதுப்பகைவனை அழித்தொழித்தார்கள். அவர்களுக்குள்ளாகத் திருமண பந்தங்களும் ஏற்பட்டன. இதன் காரணமாக ஆரியக் கடவுளரின் கோயில்களில் மெல்ல மெல்ல மற்ற தெய்வங்களுக்கும் இடம் கொடுக்கப்பட்டன. இந்த யுத்தம் நடந்த சமயங்களில் அனைத்துப் பழமையான குருகுலங்களும் அழிக்கப்பட்டிருந்தன. அதிலும் தர்மக்ஷேத்திரம் ஒரு காலத்தில் வளத்தோடும் நிறைய ஆசிரமங்களாலும், குருகுலங்களாலும், பழைமையான பல ரிஷி, முனிவர்களாலும் அவர்களின் சீடர்களாலும் சிறப்பாகத் திகழ்ந்து வந்தது. உலகுக்கே தர்மத்தின் வழிகாட்டியாகத் திகழ்ந்தது என்றால் மிகை இல்லை. தர்மக்ஷேத்திரத்தின் ரிஷி, முனிவர்கள் சொல்லும் வாக்கையே வேத வாக்கு என்றும் அவற்றுக்கு மறு வாக்கு இல்லை என்றும் மக்கள் நம்பி இருந்தனர். ஆனால் அவை எல்லாம் இன்று பொய்யாய்ப் பழங்கதையாய்க் கனவாய் ஆகிவிட்டது. இப்போது நினைக்கையில் மனதில் வேதனையும் வலியுமே மிஞ்சுகிறது.

ஒவ்வொரு ஆரியனின் வீட்டிலும் எரிந்து கொண்டிருந்த அணையா நெருப்பு என்பது இப்போது தன் முக்கியத்துவத்தை இழந்து விட்டது. பல சமயங்களிலும் வருடக்கணக்காக நடக்கும் யாகங்கள், யக்ஞங்கள் ஆகியன நூற்றுக்கணக்கான ஸ்ரோத்ரியர்களால் மிக விமரிசையாகவும் விரிவாகவும் நடத்தப்பட்டு வந்தவை எல்லாம் இப்போது மாறி விட்டது. ஒரு மாபெரும் பல்கலைக் கழகம் போலத் திகழ்ந்த தர்மக்ஷேத்திரத்தின் புகழ் மங்கி விட்டது. ஆனால் ஷாந்தனு மெல்ல மெல்ல இவற்றை எல்லாம் மாற்றி வருகிறான். தாற்காலிகமாக இவை எல்லாம் மீண்டும் கொண்டுவரப்பட்டிருக்கிறது. அக்கம்பக்கத்து நாடுகளின் அரசர்கள் அனைவரும் இவற்றை ஆதரிக்க ஆரம்பித்திருக்கிறார்கள். ஷாந்தனுவும் தன் பங்குக்கு மிகவும் தாராளமாகவே ரிஷி, முனிவர்களுக்காகச் செலவு செய்தான். ரிஷிகளுக்கும், முனிவர்களுக்கும் மற்றத் துறவிகளுக்கும் தன் அதிகார எல்லைக்குட்பட்ட பிரதேசங்களின் நிலங்களை தானமாக எடுத்துக் கொள்ள வைத்தான். ஆனாலும் அவர்களுடைய பழைய கலாசாரம் முற்றிலும் ஒழிந்தும் போகாமல், புதியதொரு கலாசாரத்துக்கு மாறவும் மாறாமல் குழப்பமானதொரு கலாசாரமே நிலவி வந்தது. ஒரு சிலர் வயது வந்தோர் முன் காலத்தில் வாழ்ந்து வந்த மூத்த ஆசாரியர்கள் சொல்லிப் போயிருந்த சடங்குகளையும், சம்பிரதாயங்களையும் விடாமல் பின்பற்றி வந்தனர். மற்றவர்கள் அநேகமாக சிவனை வழிபட ஆரம்பித்திருந்தார்கள். சிவன் பயப்படுத்தும் கடவுளாக இருந்தாலும் அனைவருக்கும் நிறைய வரங்களையும் அதன் மூலம் பல பரிசுகளையும் கொடுத்தார்.

மற்றவர்கள் தங்களுக்குள்ளாக ஒரு நீதியை ஏற்படுத்திக் கொண்டனர். அதற்கெனத் தனி விதி ஏதும் இல்லை. சுயக் கட்டுப்பாடோ, ஆன்மக் கட்டுப்பாடோ இல்லாமல் இருந்தது. எந்தவிதமான மத்திய அதிகார வர்க்கமும் அவர்கள் மேல் எவ்விதமான கட்டுப்பாடுகளையும் விதிக்கவோ, அவர்களின் நடத்தைகளை ஒழுங்கு செய்யவோ அவர்களை ஒன்று சேர்த்து ஒரே விதமான நடத்தைகளைப் பின்பற்றுமாறு அறிவுறுத்தவோ முயலவில்லை. ஆனாலும் அவர்கள் அனைவரையும் ஒருங்கிணைத்த ஒரே ஒரு விஷயம் என்னவெனில் அது வேதம் தான். வேதம் காட்டிய வழியில் செல்ல வேண்டும் என்னும் ஒரே எண்ணமே அவர்களை ஒருங்கிணைத்தது. வேத விற்பன்னர்கள் அவற்றை நன்கு கற்றுச் சீடர்களுக்கும் கற்பித்து அது சொல்லும் வழியில் தர்மத்தின் பாதையில் தங்களை நடத்தும் என மனமார நம்பினார்கள்.




Sunday, May 29, 2016

த்வைபாயனருக்கு ஆபத்து!

“ஒருவன் வாழ்க்கையில் அவன் கடைப்பிடிக்கும் தர்மமே முக்கியம். அந்த தர்மத்தை நிலைநாட்டவேண்டிய பொறுப்பு மனிதனுக்கு ஒவ்வொரு மனிதனுக்கும் இருக்கிறது. அந்த மனிதனும் வேதங்களையே பிரமாணமாய்க் கொண்டு அதற்காகவே உயிர் வாழ்பவனாக, அதையே எப்போதும் நினைத்துத் தன் வாழ்க்கையை அர்ப்பணிப்பவனாக இருக்க வேண்டும். இந்தப் பரந்த உலகம் அத்தகைய மனிதர்களுக்காகவே காத்திருக்கிறது. ஆகவே தர்மக்ஷேத்திரத்தை எப்பாடுபட்டாவது மீட்டு அதில் மீண்டும் தர்ம சாம்ராஜ்யத்தை ஸ்தாபிக்க வேண்டும் என்பதே என் கனவு, லட்சியம் எல்லாம்!”

“நீ பேசுவதைப் பார்த்தால் பழங்காலத்தின் ரிஷிகளான பிருகுவும், ஆங்கிரஸும் இத்தகைய துணிகர முயற்சிக்குத் தங்கள் ஆசிகளைத் தெரிவித்து விட்டார்கள் போல் பேசுகிறாயே!”

“ஆசாரியரே! என் தந்தை பராசர முனிவர் சொல்லி இருப்பது என்னவெனில், “வேதங்களுக்காகத் தங்களை அர்ப்பணித்துக் கொள்பவர்களை அதன் தர்மத்தை வாழ்க்கை நெறியாகக் கடைப்பிடிப்பவர்களை அவர்களின் பிரார்த்தனைகளைக் கடவுள் அங்கீகரித்து ஆசிர்வாதங்கள் செய்கிறார்.” என்று சொல்வார்.”

“ஹூம், இருக்கலாம்! ஆனால் உன் கொள்ளுப் பாட்டன் வசிஷ்டன் மஹா ரிஷிகளான பிருகுவையும், ஆங்கிரஸ் அவர்களையும் அவமதித்து விட்டார். பிரம்ம வித்யையை இகழ்ந்ததன் மூலம் அவர்களின் சாபத்தைப் பெற்று விட்டார். அவர்கள் ஒருக்காலும் வசிஷ்டரை மன்னிக்கவில்லை; இனியும் மன்னிக்க மாட்டார்கள்! அவர்களின் வழியில் செல்பவர்களையும் மன்னித்து ஆசீர்வதிக்க மாட்டார்கள்.” கடுமையாகச் சொன்னார் ஜாபாலி.

“மதிப்புக்குரிய ரிஷியே, என்னை உங்கள் சீடனாக ஏற்றுக் கொள்ளவேண்டுகிறேன். நான் ஏற்கெனவே தர்மக்ஷேத்திரத்தைப் புனர் நிர்மாணம் செய்த பின்னர் அதர்வ வேதம் அறிந்த ஆசாரியர் ஒருவரிடம் சீடனாகச் சேர்ந்து அதர்வ வேதம் கற்க வேண்டும் என்று முடிவு எடுத்திருந்தேன். எல்லாம் வல்ல அந்தப் பரம்பொருளின் உதவியால் இப்போது நான் உங்களிடம் வந்து சேர்ந்து விட்டேன்.”

“நான் உன்னை என் சீடனாக ஏற்றுக் கொள்கிறேன். ஆனால் முட்டாள் தனமாக நீ தர்மக்ஷேத்திரத்தைப் புனர் நிர்மாணம் செய்ய வேண்டும் என்று நினைத்திருப்பதை விட்டு விட வேண்டும். அந்த எண்ணத்தையே விட்டு விட்டால் நான் உன்னை என் சீடனாக ஏற்கிறேன்.”

“ஐயா, என் தந்தையின் கனவு அது! அவர் அதற்காக சபதம் செய்திருக்கிறார். நானும் அவருடன் சேர்ந்து சபதம் செய்திருக்கிறேன். அதை எப்படி என்னால் விட முடியும்? என் சபதத்தை என்னால் துறக்க முடியாதே!”

முதிர்ந்த மஹரிஷி தன் வயதையும் மீறி கம்பீரமாக எழுந்து நின்றார். பின்னர் கடுமையான குரலில், “நீ மட்டும் அப்படி ஓர் முடிவுடன் இருந்தாயெனில் பின்னர் அதற்காக நீ வருந்த நேரிடும்! இது உனக்கு நான் விடுக்கும் எச்சரிக்கை!” என்று கடுமையான குரலில் சொன்னார்.

“ஆசாரியரே, என் சபதத்தை நான் நிறைவேற்றவில்லை எனில் நான் உயிருள்ள பிணமாகத் தான் இருப்பேன். மேலும் நான் மேலுலகம் செல்கையில் அங்கே என் முன்னோர்களை எந்த முகத்துடன் பார்ப்பேன்? அவர்கள் உன் சபதத்தை நிறைவேற்றவில்லையே என என்னைக் கேட்க மாட்டார்களா?”

வாடிகாவுக்குத் தன் தந்தையின் மனப்போக்கும், அவர் கோபமும் நன்கு அறிந்தது தான். ஆகவே அவள் மிக முயற்சி எடுத்துக் கண்களால் ஜாடைகள் காட்டி த்வைபாயனரைத் தன் தகப்பனைக் கோபம் கொள்ளும்படி பேச வேண்டாம் என்று எச்சரித்துப் பார்த்தாள். ஜாபாலிக்கு உடலெல்லாம் கண்கள். அவருக்கு இது தெரியாமல் போகவில்லை. ஆகவே மிகக் கடுமையாக த்வைபாயனரிடம், “ வாடிகாவும் சுமாந்துவும் என்ன தான் உன்னை எச்சரித்தாலும், என்னைக் கோபப்படுத்துமாறு பேச வேண்டாம் என ஜாடைகள் காட்டினாலும்”….. கோபத்துடன் சிரித்த ஜாபாலி மேலும் கூறினார். “இந்தக் குழந்தைகள் நான் உன்னுடைய மென்மையான பேச்சாலும், அப்பாவியான முகத்தாலும் கவரப்பட்டு உனக்கு வேண்டியதைச் செய்வேன் என நினைக்கிறார்கள். ஆனால் அப்படி எல்லாம் நடக்காது.”

பின்னர் மேலும் கடுங்கோபத்துடன், “ஆசாரியர்களான பிருகு முனிவர் மற்றும் ஆங்கிரஸின் கோபம் எப்போதும் இருந்து கொண்டே இருக்கும். உன் முயற்சிகளை எல்லாம் பாழ்படுத்தும்.” இதைச் சொல்லிக் கொண்டே சுமாந்து உதவி செய்ய ஜாபாலி வெளியே சென்றார். த்வைபாயனர் தன் தலையை இருகைகளாலும் பிடித்துக் கொண்டு செய்வதறியாது அமர்ந்திருந்தார். அங்கே வாடிகாவும், சுமாந்துவும் வந்தனர். தான் சுக்குச் சுக்காக நொறுங்கிப் போனதாக அவர் உணர்ந்தார். அவருக்குப் பெரிய குரலெடுத்து அழ வேண்டும் போல் இருந்தது. ஆனால் ஏதோ ஒன்று அவரைத் தடுத்தது. எங்கோ தொலைதூரத்தில் நம்பிக்கையின் ஒளிக்கீற்றுத் தெரிந்தது. வாடிகாவும், சுமாந்துவும் மூலிகையை அரைத்துக் கொண்டு வந்திருந்தனர். த்வைபாயனரின் காயத்தில் அதைப் பூசினார்கள். அதன் பின்னர் வாடிகா மூலிகைக் கஷாயத்தையும் த்வைபாயனருக்குக் குடிக்கக் கொடுத்துவிட்டுப் பின் வெளியே சென்றாள். சுமாந்து பைலருக்குக் கொஞ்சம் குடிநீர் கொடுத்துவிட்டுப் பின்னர் அவரைப் புரட்டிப் போட்டார். த்வைபாயனருக்கு அருகிலிருந்த இலைகளால் மெத்தெனப் போடப் பட்ட மெத்தையில் படுக்க வைத்தார். அதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த த்வைபாயனருக்கு மூலிகைக் கஷாயத்தின் தாக்கத்தால் மயக்கம் வந்தது. அப்படியே மயக்கத்தில் ஆழ்ந்தார். அப்போது அந்த மயக்கமான சூழ்நிலையில் அவருக்குத் தன் தாயின் குரல் தெளிவாகக் கேட்டது. “கிருஷ்ணா! கிருஷ்ணா! எங்கே இருக்கிறாய் நீ? ஏன் என்னிடம் வரவில்லை?” ஆஹா, இது அம்மாவின் குரலே தான்.

தன் கண்களைத் தேய்த்துவிட்டுக் கொண்டார் த்வைபாயனர். பக்கத்தில் பார்த்தார். பைலர் மயக்கத்தில் ஆழ்ந்திருந்தார். அவ்வப்போது ஒரு சிறு முனகல் குரலைத் தவிர அவரிடமிருந்து எவ்வித அசைவும் இல்லை. சுமாந்துவும் தூங்கி விட்டான். வெளியிலிருந்த அக்னி குண்டத்தில் எரிந்து கொண்டிருந்த அக்னியின் பரவலான வெளிச்சம் அந்தக்குடிலினுள்ளும் பரவிக் கிடந்தது. அதன் மெல்லிய வெளிச்சத்தில் ஓர் உருவம் அந்தக் குடிலுக்குள் நுழைவதைக் கண்டான். பெண் உருவமாக இருந்ததால் அது வாடிகா என்றும் தன் சகோதரனைப் பார்க்க வந்திருக்கிறாள் என்றும் புரிந்து கொண்டார் த்வைபாயனர். சுமாந்துவின் தோளில் கை வைத்து எழுப்பினாள் வாடிகா. சகோதரனும், சகோதரியும் கிசுகிசுவென மெல்லப் பேசிக் கொண்டனர். பின்னர் இருவரும் த்வைபாயனரின் அருகே வந்தனர்.

“த்வைபாயனா, விழித்திருக்கிறாயா?” த்வைபாயனர் எழுந்து கண்களைத் தேய்த்து விட்டுக் கொண்டு தான் கனவுலகில் இருக்கிறோமா அல்லது நினைவுலகில் இருக்கிறோமா என யோசித்தார். வாடிகா மெதுவாகச் சொன்னாள்:”த்வைபாயனா, நாளைக்கு உனக்கு என்ன நடக்கப் போகிறது என்பதை நீ அறிவாயா?” என்று கேட்டாள்.

“எனக்கு எப்படித் தெரியும்?” என்றார் த்வைபாயனர்.

“தந்தை உன்னை மரணத்தின் பிடியில் தள்ளப்போகிறார்.  உன்னை மரணம் சம்பவிக்கும்படி உன் மேல் அதற்காக மந்திரம் போட்டு வசியம் செய்யப் போகிறார். நாளை அக்னிக்கான வழிபாடுகள் முடிந்ததும் அது ஆரம்பிக்கப் போகிறது.”

“மரணம் சம்பவிக்க மந்திரமா? வசியமா? அப்படி என்றால் என்ன? எனக்கு இது குறித்து எதுவும் புரியவில்லையே!”

“அது ஒரு வசியம்! அந்த வசியத்தைப் போட்டால் நீ மூன்று நாளைக்குள் இறந்துவிடுவாய்!” சுமாந்து சொன்னான்.

“ஏன் என்னைக் கொல்ல வேண்டும்? அதில் அவருக்கு என்ன லாபம்?”

வாடிகா குறுக்கிட்டாள். “இதோ பார், த்வைபாயனா! இங்கே இப்போது பேசிக் கொண்டு நீ பொழுதைப் போக்கி விடாதே! இங்கிருந்து வெளியேறும் வழியைப் பார். என்னெதிரில் தான் அவர் இதைத் தன் சீடன் ஒருத்தனிடம் சொன்னார். அந்த வசியத்தை எப்படித் தயார் செய்ய வேண்டும் என்றும் மூன்று நாட்களுக்குள்ளாக நீ எங்கே இருந்தாலும் உனக்கு மரணம் சம்பவிக்க வேண்டுமென்றும் சொன்னார். அவர் சொன்னபடி வசியத்தைத் தயாரிக்கப் போகிறார்கள்.”

“அவர் ஏன் என்னைக் கொல்ல வேண்டும்? நான் எந்தத் தவறும் செய்யவில்லையே!”

“நேற்று உன்னிடம் பேசியதில் அவர் நீ ஓர் திடமான உறுதி படைத்த இளைஞன் என்றும் தன்னம்பிக்கையும், நன்கு படிப்பறிவும் கொண்டவன் என்றும் புரிந்து கொண்டார். ஆகவே அதன் பின்னர் அவர் கிரஹங்களை ஆய்வு செய்தார். அதன் பின்னரே உன்னை இவ்வுலகிலிருந்து வெளியேற்ற வேண்டும் என்னும் எண்ணம் கொண்டார். ஆனால் நாங்கள் நேரத்தை வீணடிக்காமல் உன்னை இங்கிருந்து கிளப்புவதற்கு உதவி செய்ய வேண்டும். எழுந்து போ! உடனே வெளியேறு! இதோ இந்த மூலிகைக் கஷாயத்தை உன்னுடன் வைத்துக் கொள். இதை நான் உனக்காகத் தயாரித்து எடுத்து வந்தேன். இந்தப் பையில் உன் நண்பன் பைலரின் சேகரிப்பான மூலிகைகள் இருக்கின்றன. மேலும் உன்னுடைய பையில் நான் முக்கியமான சஞ்சீவி மூலிகைகளான, ஜிவாலா, நாக-ரிஷா, ஜிவாந்தி ஆகியவற்றைப் போட்டு வைத்திருக்கிறேன். ஆனால் அதற்கென உரிய மந்திரங்களைச் சொல்லி உபயோகப்படுத்தினால் தான் அவற்றில் பலன் தெரியும்.” என்றாள் வாடிகா. அவள் மிகவும் ரகசியமாக இவற்றைச் சொன்னாள்.




Saturday, May 28, 2016

த்வைபாயனரின் சாந்தம்! ஜாபாலியின் கோபம்!

“ஐயா, நான் எப்போதும் உண்மையையே பேசி வந்திருக்கிறேன்; இனியும் அவ்வாறே உண்மையையே பேசுவேன்!” என அடக்கத்துடன் சொன்னார் த்வைபாயனர். மேலும், “ஐயா, நான் என் மறுபிறப்புக்கான உபநயனத்தின்போது இதற்காக உறுதி மொழியும் எடுத்துக் கொண்டிருக்கிறேன். வசிஷ்டர்களின் சபதத்தை நானும் எடுத்துக் கொண்டிருக்கிறேன். நான் எப்போது உண்மைக்காக உறுதியாக நிற்பேன் என்றும் கூறுகிறேன். என் பிரதிக்ஞையை நான் காப்பாற்றுவேன்.”

வசிஷ்டரின் பெயரைக் கேட்டதுமே ஜாபாலி முனி தலையை மிக இகழ்ச்சியாக அசைத்துக் கொண்டார். அவமதிப்பாகவும் தொனித்தது அது. “வருணனை எழுப்பி அழைக்கும் இந்த மந்திரங்களை உனக்கு யார் சொல்லிக் கொடுத்தார்கள்?” என்று அதிகாரமாகக் கேட்டார்.

“என் தந்தை” த்வைபாயனர் சொன்னார்.

“உன் தந்தை?” வில்லிலிருந்து வேகமாகக் கிளம்பும் அம்புகளைப் போல் அடுத்தடுத்துக் கேள்விகள் பிறந்தன மஹா அதர்வ ரிஷியிடமிருந்து. “உன் குடும்பப் பெயர் என்ன?”

“என் குடும்பப் பெயர் பராசரர்!”

“உன் தந்தையின் பெயர் என்ன?

“பராசர முனிவர்!”

ஜாபாலி முனிவரின் கண்களில் தெரிந்த வெறுப்புணர்ச்சி த்வைபாயனரை நடுங்க வைத்தது என்றால் மிகை அல்ல; அவர் குரல் இப்போது வெட்டி விடுவதைப் போன்ற வேகத்துடன் கிளம்பி வந்தது!” உன் தந்தை யாருடைய மகன்?”

த்வைபாயனருக்கு ஜாபாலி முனிவரின் கோபம் மெல்ல மெல்ல அதிகமாகி வருவதும், தன்னிடம் அவர் கொண்டுள்ள ஈர்ப்பு மறைந்து வெறுப்புக் கிளம்புவதையும் புரிந்து கொள்ள முடிந்தது. நிலைமை மெல்ல மெல்ல மோசமாகி வருவதையும் உணர்ந்தார். “என் தந்தை முனிவர் சக்தியின் மகன். சக்தி மஹாமுனிவர் வசிஷ்டரின் மகன்.”

“உன் தந்தைக்கு இந்த பிரம்ம வித்யா மந்திரங்கள் எல்லாம் இவ்வளவு தெளிவாகவும் அட்சர சுத்தமாகவும் எப்படித் தெரிய வந்தது?”

“எப்படி என எனக்குத் தெரியாது ஐயா! ஆனால் அவர் எனக்கு அதர்வ வேதத்தின் மந்திரங்கள் பலவற்றையும் சொல்லிக் கொடுத்திருக்கிறார்.”

“அவன் யாரிடமிருந்து அதர்வ வேதத்தைக் கற்றான்?”

“என்னிடம் சொன்னது இல்லை ஐயா. யாரிடமிருந்து கற்றார் என்பது தெரியாது. அவர் என்னிடம் சொன்னது எல்லாம் இவ்வளவே! அவர்கள் வேதத்தின் நான்காம் பகுதியைத் தொகுக்க முயன்று கொண்டிருந்தார்கள்.”

“இந்த பிரம்ம வித்யை அனைத்தும் எவரிடம் உள்ளது என்றும் யார் அவற்றைப் பாதுகாக்கின்றனர் என்பதையும் உன்னிடம் அவன் சொல்லி இருக்கிறானா?”

“எப்போவோ ஒரு முறை அல்லது இருமுறை அவர் உங்களைக் குறிப்பிட்டிருக்கிறார். நீங்களே அதர்வ வேதத்தின் ஆசாரியர் என்றும் வாழ்க்கைக்கும் மரணத்துக்கும் நீங்களே தலைவர் என்றும் உங்களால் உயிர்ப்பிக்கவும் முடியும் என்றும் அழிக்கவும் முடியும் என்றும் சொல்லி இருக்கிறார். இந்த நிமிடம் இப்போது உங்களிடம் என்னைக் கொண்டு வந்து சேர்த்ததற்காக எல்லாம் வல்ல அந்தப் பரம்பொருளுக்கு நன்றி சொல்லிக் கொண்டிருக்கிறேன்.”

ஜாபாலியின் உள் மனதில் என்ன நினைக்கிறார் என்பது தெரியாவண்ணம் அவர் முகம் கல்லைப் போல் இருந்தது. “இதோ பார் பிரமசாரி! உன் கொள்ளுப் பாட்டன் வசிஷ்டன் என்னுடைய எதிரி என்பதை நீ அறிவாயா? அதிலும் பிரம்ம வித்யை, வேதங்களிலேயே மிக மிக மிக உயர்ந்த பிரம்ம வித்யையை அவன் வெறுத்தான் என்பதும் உனக்குத் தெரியுமா?”

“இல்லை,…..”

“…….ம்ம்ம்ம்,….. அவன் கருத்துப்படி வேதங்கள் மூன்று தான் என்பதும் அவை ரிக், யஜுர், சாமம் என்பதும் உனக்குத் தெரியுமா?”

“இல்லை…..”

“அவன் இந்த அதர்வ வேதத்தின் ஆஹூதிகள் கொடுக்கும் பகுதிகளையும் அவற்றின் முதன்மைத் தனத்தையும் முழுவதும் ஏற்றுக் கொண்டதே இல்லை என்பதை அறிவாயா?” கேள்விகள் ஒவ்வொன்றும் கத்தியை விடக் கூர்மையாக அடுத்தடுத்துக் கேட்கப்பட்டன.

“இல்லை……”

“பின்னர் நான் தர்மக்ஷேத்திரத்துக்கு என்னுடைய சாபத்தை அளித்துவிட்டு அங்கிருந்து வெளியேறினேன். என்னுடைய சாபத்தினால் தான் ஹைஹேயர்கள் உன் கொள்ளுப்பாட்டனின் ஆசிரமத்தை முற்றுகையிட்டு அழித்து அவரையும் கொன்றார்கள்! அதை அறிவாயா, இல்லையா?”

“இல்லை…”

“ஒரு வேளை,,,, உன் தகப்பன் எவரும் அறியாமல் திருட்டுத் தனமாக என் மகனிடமிருந்து அதர்வ வேதத்தைக் கற்றானா?”

“இல்லை..”

“ம்ம்ம்ம்ம்ம்….இது வசிஷ்டருக்குத் தெரிந்த பின்னர் அவர் உன் தந்தையை இவற்றை ஓதக்கூடாது எனக் கட்டளை பிறப்பித்ததை அறிவாயா? அதனால் தான் உன் தந்தை தர்மக்ஷேத்திரத்தை விட்டு அகன்றார் என்பதையும் அறிவாயா?”

“இல்லை….”

த்வைபாயனருக்கு இப்போது தான் கொஞ்சம் கொஞ்சமாக எல்லாம் புரிய ஆரம்பித்தது. அவர் தந்தை தன் வாழ்க்கையின் பிரதான கட்டத்தில் தர்மக்ஷேத்திரத்தை விட்டு ஏன் சென்றார் என்பதையும் யமுனை நதிக்கரையில் தனக்கென ஒரு தனி ஆசிரமத்தை ஏன் ஸ்தாபித்தார் என்பதும் புரிந்தது.

“அவன் எங்கே சென்றான்?” என்று விடாமல் ஜாபாலி கேட்டார்.

“”என் தந்தை யமுனை நதிக்கரையில் ஒரு புதிய ஆசிரமத்தை ஏற்படுத்தினார்.” என்றார் த்வைபாயனர்.

“உன் தந்தையின் ஆசிரமத்தைப் பற்றி விளக்கமாகச் சொல்!”

“என் தந்தையின் ஆசிரமம் வளத்துடனும், செல்வத்துடனும் நன்றாகவே இருந்தது. ஆனால் இதைப் பொறுக்காத அந்தப் பொல்லாத அரசன் சஹஸ்ரார்ஜுனன், அந்த ஆசிரமத்தின் குடிமக்களையும் என் தந்தையின் பல சீடர்களையும் கொன்று ஒழித்துவிட்டு ஆசிரமத்தை முற்றிலும் அழித்து எரித்துச் சாம்பலாக்கி விட்டான்.”

“ஹூம், என் சாபம் உன் தந்தையையும் பின் தொடர்ந்து சென்றிருக்கிறது. சஹஸ்ரார்ஜுனனிடமிருந்து அவன் தப்பினானா?”

“ஆம். ஆசிரமம் எரிக்கப்பட்டு அதில் உள்ள பலரும் கொல்லப்பட்டனர். பெண்கள் மானபங்கம் செய்யப்பட்டனர். அவர், என் தந்தை ஆர்யவர்த்தத்தின் ராஜாக்கள் அனைவரிடமும் சென்று அனைவரும் ஒன்று சேர்ந்து கூட்டாக சஹஸ்ரார்ஜுனனை எதிர்க்க வேண்டும் என்று வேண்டிக் கேட்டுக் கொண்டார். ஆனால் எதுவும் நடக்கவில்லை. அவர் தன் ஆசிரமம் திரும்பினால் அழிக்கப்பட்ட ஆசிரமத்தையே கண்டார். மேலும் சஹஸ்ரார்ஜுனனும் அவன் வீரர்களும் என் தந்தையின் காலை வெட்டி விட்டார்கள். காலை உடைத்துவிட்டார்கள்.”

“ம்ம்ம்ம். எப்போது இறந்தான் உன் தந்தை?”

“சில மாதங்களுக்கு முன்னர்!”

“‘நீ ஏன் இங்கே வந்தாய்?”

“என் தந்தையும் நானும் தர்மக்ஷேத்திரத்தை மீட்டெடுத்துப் பழைய வளமும் வல்லமையையும் பெறச் செய்ய வேண்டும் என்று சபதம் செய்திருக்கிறோம். இப்போது அவர் இல்லை என்பதால் அதைப் பூர்த்தி செய்ய நான் வந்தேன்!”

“ஏன்?” என்று கேட்ட முனிவரின் குரலில் வெறுப்பு அதிகமாகவே தெரிந்தது.
இங்குள்ள அதிகார மையங்கள் மூலம் இங்கே மீண்டும் ஆசிரமங்களைத் தோற்றுவித்துக் கறை படிந்திருக்கும் தர்மத்தின் பாதையை, சத்திய லோகத்தை மீட்டுக் கொண்டுவருவதே என் நோக்கம். தர்மக்ஷேத்திரத்தை மீட்கவில்லை எனில், அங்கே மீண்டும் தர்மத்தைப் போதிப்பவர்கள் இல்லை எனில் இவ்வுலகில் தர்மத்தின் வழி செல்பவர்களே அரிதாகிவிடுவார்கள். தர்மமே அழிந்து விடும்!”

“அது உன்னால் முடியாது. தர்மக்ஷேத்திரத்தை உன்னால் மீட்டு எடுக்கவே இயலாது. என் சாபத்தின் தாக்கம் இன்னமும் உயிர்ப்புடன் இருக்கிறது!”

த்வைபாயனர் மிக அழகாக, வசீகரமாகப் புன்னகைத்தார். “உங்கள் சாபம் அதை ஒன்றுமில்லாமல் ஆக்கியது; ஆனால் உங்கள் ஆசிகளால் அது புத்துயிர் பெறும்.”

“அதெல்லாம் நடக்காத ஒன்று! நான் என் ஆசிகளை ஒரு போதும் தரப் போவதில்லை!”

“ஆனால்….ஆனால்….எல்லாம் வல்ல அந்தப் பரம்பொருள் உங்களைச் சம்மதிக்க வைப்பார் ஆசாரியரே!”

“ஏன் அப்படிச் சொல்கிறாய்?”

“ஏனெனில் ராக்ஷசர்களிடமிருந்து நீங்கள் என்னையும் பைலரையும் காப்பாற்றி உள்ளீர்கள். இது ஒன்றே போதுமே! நல்ல சகுனத்துக்கு அடையாளம் என்றும் கடவுளரின் கருணை இது தான் என்பதற்கும் இது ஒன்றே போதுமே!” த்வைபாயனரின் குரலில் உறுதி தெரிந்தது.

ஆனால் அந்த வயதான முனிவரின் கண்கள் அடுப்பில் எரியும் நெருப்பைப் போல் கனன்று ஒளிர்ந்தன. மிக மிக மெதுவாக அவர் பேசினாலும் குரலில் பயங்கரம் தொனித்தது. “தர்ம க்ஷேத்திரம்! ஹூம்! அதை ஒரு நாளும் மீட்டெடுக்க முடியாது! அது இயலாது! முன் காலத்தில் வாழ்ந்து வந்த மூத்த பழமையான ரிஷிகளான ஆங்கிரஸும், பிருகுவும் அப்படித் தான் திட்டம் செய்திருக்கின்றனர்.”

“ஆசாரியரே! எல்லாப் பழமையான ரிஷிகளுக்கும் பித்ருலோகத்திலிருந்து பார்க்கும் அனைவருக்கும் தர்ம க்ஷேத்திரம் மீட்கப்படுவது சந்தோஷத்தையே அளிக்கும்.” திடமாகச் சொன்னார் த்வைபாயனர்.

ஆனால் ஜாபாலி முனிவரோ, “நீ ஒரு பைத்தியக்காரனாக இருக்கிறாய், பிரமசாரி! அது சரி, உனக்கு தர்மக்ஷேத்திரத்தை மீட்டெடுப்பதில் இவ்வளவு உத்வேகம் ஏன்? அதில் உனக்கு என்ன கிடைக்கப் போகிறது?”

Friday, May 27, 2016

ஜாபாலிக்கு ஏற்பட்ட சந்தேகம்!

அந்த ஊர்வலம் நண்பகல் நேரத்திற்கு ஓர் அடர்ந்த காட்டுக்குள் சென்றது. அங்கே ஒரு சின்னக்குன்று காணப்பட்டது. அனைவரும் அந்தக் குன்றின் அருகே போய்ச் சேர்ந்தார்கள். அந்தக் குன்றின் உச்சியில் காணப்பட்ட பூமியில் ஒரு சில குடில்கள் தெரிந்தன. அது தான் அதர்வ ரிஷியின் ஆசிரமமாக இருக்கவேண்டும் என்று த்வைபாயனர் புரிந்து கொண்டார். அனைவரும் குன்றின் மேலேறி ஆசிரமத்தை அடைந்தனர். அங்கே நட்ட நடுவாகப் பெரிய அக்னிக் குண்டம் ஒன்று ஸ்தாபிக்கப்பட்டு அதில் இரவும், பகலும் அணையாத நெருப்பு இருக்கும்படியான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. உள்ளே நுழைந்ததும் அனைவரும் அந்த அக்னிக் குண்டத்தின் சாம்பலை எடுத்துத் தங்கள் நெற்றியில் பூசிக் கொண்டு அங்கிருந்து அவரவர் குடியிருப்புக்குக் கலைந்து சென்றனர். சுமாந்து த்வைபாயனரைத் தன் குடிலுக்கு அழைத்துச் சென்றான். அங்கே ஏற்கெனவே பைலரை இரு சீடர்கள் தூக்கிக் கொண்டு வந்து சேர்த்திருந்தனர். பைலர் இன்னும் மயக்கத்தில் ஆழ்ந்திருந்தார். குடிசைக்குள் நுழைந்த உடனேயே த்வைபாயனருக்குத் தனக்கு அதுவரை இருந்த சக்தியெல்லாம் இழந்து விட்டாற்போன்றதொரு உணர்வு ஏற்பட்டது. அதர்வ ரிஷி தன் மேல் செலுத்தி இருந்த வசியப் பிடி தளர்ந்து விட்டது என்றும் அதனால் இப்போது உடல் நோவு அதிகம் தெரிவதையும் த்வைபாயனர் உணர்ந்து கொண்டார். அவர் சக்தியே இல்லாமல் அப்படியே தளர்ந்து போய்த் தரையில் அமர்ந்து கொண்டார். உடலின் ஒவ்வொரு அங்கமும் வலித்தது.

சுமாந்துவோடு அவன் சகோதரி வாடிகாவும் அப்போது வந்து சேர்ந்து கொண்டாள். அவளைப் பார்த்தால் சுமாந்துவைப் பார்க்க வேண்டாம். அப்படியே அவர்கள் இருவரும் இரட்டையர் என்பதைப் பார்த்த மாத்திரத்திலேயே தெரிந்து கொள்ள முடிந்தது. தலை மயிரைத் தூக்கிக் கட்டிச் சிறு பின்னல்களாகப் போட்டிருந்த வாடிகா சாதாரணமாகப் பெண்கள் இருக்கும் உயரத்தை விட அதிக உயரமாக இருந்தாள். ஆனால் ரொம்பவே சகஜமாகவும் , சரளமாகவும் பழகினாள். அவள் நேரே த்வைபாயனரிடம் வந்தாள். அவரைக் கண்களை மூடிக் கொள்ளச் சொன்னாள். தெய்வீக மருத்துவர்களான அஸ்வினி தேவர்களை வேண்டிக் கொண்டு வழிபட்டு த்வைபாயனருக்கு சக்தியைக் கொடுக்கச் சொல்லிப் பிரார்த்தித்தாள். தன்னுடன் எடுத்து வந்திருந்த மூலிகைக் கஷாயத்தை த்வைபாயனரிடம் கொடுத்துக் குடிக்கச் சொன்னாள். அதைக் குடிக்கையில் த்வைபாயனரின் நாடி, நரம்பெல்லாம் சூடாக மிக மிக வெப்பமாக உணர்ந்தார். நெருப்பிலிட்டாற்போல் உணர்ந்தார். அவர் முதுகுக்காயம் வேறே அவரைப் பாடாய்ப் படுத்திக் கொண்டிருந்தது.

அதன் பின்னர் வாடிகா பைலரின் பக்கம் திரும்பினாள். அவர் இன்னமும் உணர்விழந்த நிலையிலேயே இருந்தார். ஈரத்தில் நனைத்த துணிகளை அவர் நெற்றியிலும், தலையிலும் வைத்தாள். பின்னர் அவர் வாயை நெம்பித் திறந்து த்வைபாயனருக்குக் கொடுத்த அதே கஷாயத்தைக் கொஞ்சம் போல் அவர் வாயிலும் புகட்டினாள். கஷாயத்தைக் குடித்திருந்த த்வைபாயனருக்குத் தலை சுற்றியது. மயக்கத்தில் ஆழ்ந்தார். மெல்லிய குரலில் சகோதரனும், சகோதரியும் பேசிக் கொண்டதை உணர முடிந்ததே தவிர என்ன பேசினார்கள் என்பதைப் புரிந்து கொள்ள முடியவில்லை. ஆனாலும் தங்கள் இருவரையும் கண்டெடுத்தது குறித்தும் இங்கே கொண்டு வந்து சேர்த்தது குறித்துமே சுமாந்து தன் சகோதரியிடம் சொல்லி இருக்க வேண்டும் என்று த்வைபாயனர் புரிந்து கொண்டார். அப்போது அங்கே எவரோ வரும் காலடிச் சப்தம் கேட்டது. அது தங்கள் தந்தையின் நடையன்கள் ஏற்படுத்திய ஒலிதான் என்பதைப் புரிந்து கொண்ட சகோதர, சகோதரி இருவரும் எழுந்து மரியாதையாக நின்று கொண்டனர். தங்கள் கரங்களையும் கூப்பிக் கொண்டனர். அவர்களுடன் கூட வந்திருந்த இரு உதவியாளர்களும் கதவுக்கு அருகே மரியாதையாக நின்று கொண்டனர்.

மஹா அதர்வ ரிஷியின் வருகை அங்குள்ள சூழ்நிலையையே மாற்றி விட்டது. அவர் வருகையை உணர்ந்து கண் விழித்த த்வைபாயனர் அவரைப் பார்த்ததும் மரியாதையுடன் எழுந்து அமர முயற்சி செய்தார். ஆனால் மஹா அதர்வ ரிஷி அவரைச் சைகையால் எழுந்திருக்க வேண்டாம் என்றும் படுத்திருக்குமாறும் சொல்லிவிட்டு பைலரின் பக்கம் திரும்பினார். அவர் இன்னமும் மயக்கத்திலேயே இருப்பதைக் கண்டார். தன்னுடன் வந்திருந்த உதவியாள் புனித நெருப்பிலிருந்து கொண்டு வந்திருந்த சாம்பலை பைலரின் உடல் முழுவதும் தடவி விட்டார். மரணத்தின் பிடியிலிருந்து பைலரை விடுவிக்கும் மந்திரங்களை உச்சரித்துக் கொண்டே சாம்பலையும் பூசிக் கொண்டிருந்தார்.  த்வைபாயனர் அந்த மந்திரங்களை உன்னிப்பாகக் கேட்டுக் கொண்டு அவற்றைத் தம் நினைவில் இருக்கும் மந்திரங்களோடு ஒப்பிட்டுப் பார்த்துக் கொண்டு உச்சரிப்பையும் கவனம் வைத்துக் கொண்டார். அப்போது தன்னுடன் வந்த சீடனைச் செல்லுமாறு சைகையில் உத்தரவிட்டார் மஹா அதர்வ ரிஷி. பின்னர் சீடன் ஒருவன் கொண்டு வந்த போட்ட பலகையில் த்வைபாயனருக்கு அருகே அமர்ந்து கொண்டு தன் தண்டத்தைச் செங்கோல் போல் பிடித்துக் கொண்டார்.

த்வைபாயனர் சுமாந்துவின் உதவியுடன் சுவரில் சாய்ந்த வண்ணம் அமர்ந்து கொண்டார். பின்னர் அதே போல் சைகையிலேயே தன் மகனையும், மகளையும் த்வைபாயனருக்கு அருகே அமரச் சொல்லிச் சொன்னார் ரிஷி.  அதன் பின்னர் த்வைபாயனரிடம் திரும்பி, “பிரமசாரியே, நீ வருணனை எழுப்பி வழிபடும் அதர்வ வேத மந்திரங்களை மிகவும் சரியாகவும் தவறின்றியும் சொன்னாய்!” என்றார். த்வைபாயனர் அதற்குத் தன் கரங்களைக் கூப்பிய வண்ணம், “மாட்சிமை பொருந்திய ரிஷியே, நீங்கள் அவ்வாறு என்னைச் சொல்ல வைத்ததன் மூலம் எனக்குப் பேருதவி செய்திருக்கிறீர்கள்.” என்றார். சிறிது நேரம் தன் பார்வையை த்வைபாயனரிடே வைத்திருந்தார் ரிஷி. அப்போது அதிசயமாக த்வைபாயனரின் வலி காணாமல் போய்விட்டது. “என்னிடம் உண்மையை மட்டுமே சொல்லுவேன் என்று சத்தியம் செய், இளைஞனே!” என்றார் மஹரிஷி.

Thursday, May 26, 2016

ஜாபாலியின் சக்தி!

இங்கே அதர்வ அல்லது அதர்வண வேதம் குறித்து ஒரு சின்னக் குறிப்பு. உபநயனம் ஏற்கெனவே நடந்தவர்கள் மூன்று வேதங்களையும் ஒரு சேரக் கற்கலாம், அதாவது அத்யயனம் செய்யலாம்; அல்லது ஒன்றைக் கற்ற பின்னர் மற்றதைக் கற்கலாம்; அல்லது கற்காமல் விடலாம். ஆனால் அதர்வ வேதம் கற்கவேண்டுமெனில் மீண்டும் உபநயனம் செய்து கொள்ள வேண்டும். இதைக் குறித்துப் பார்ப்பதற்கு முன்!

ரிக் வேத சம்ஹிதை முழுவதும் ஸ்தோத்திரங்களால் ஆனது! யஜுர்வேதமோ எனில் யக்ஞ சம்பந்தமான வழிபாட்டுக் காரியத்தில் உள்ள கிரமங்களை வரிசைப்படுத்திக் கொடுப்பது. ரிக் வேதத்தில் உள்ள ஸ்துதி ரூபமான மந்திரங்களை யக்ஞம் என்ற காரியத்தில் பொருத்துவது! ரிக்வேதத்தில் உள்ள பல மந்திரங்கள் யஜுர் வேதத்திலும் காணப்பட்டாலும் உரைநடையில் யக்ஞம் முதலான வேத கர்மாநுஷ்டானங்களைச் சொல்வது யஜுர்வேதம். யஜுர் வேதம் தனக்குள்ளேயே பல மாறுபாடுகளைக் கொண்டது. இரண்டு தனி வேதங்களாகப் பிரிந்துள்ளது.ஒன்று சுக்ல யஜுர் வேதம், மற்றது க்ருஷ்ண யஜுர் வேதம். ஸாமம் என்றால் மனதைச் சாந்தப்படுத்துவது என்று அர்த்தம். இப்படித் தான் தேவ சக்திகளையும் பரமாத்மாவையும் நமக்கு நெருங்கி வரச் செய்வது ஸாமவேதம். ரிக் வேதத்தில் உள்ள ஸ்துதிகளே சாம வேதத்தில் பாட்டாக வெளிப்படுகின்றன. ஸப்த ஸ்வர ஸங்கீதத்துக்கு மூலம் ஸாம கானம் தான்! ஆத்ம ஸ்ரேயஸையும், தேவதா ப்ரீதியையும் விசேஷமாக அளிப்பது ஸாம வேதம்.

இதல்லாமல் அதர்வன் என்றால் புரோகிதர் என்னும் பொருள் உண்டு. அதர்வ ரிஷியின் மூலம் வெளிப்பட்டுப் பிரபலமடைந்ததாலேயே அதர்வ வேதம் அல்லது அதர்வண வேதம் என்னும் பெயர். இதிலும் யஜுர் வேதம் போல உரைநடை, செய்யுள் என இருவடிவங்களும் இருக்கின்றன.  மற்ற வேத மந்திரங்களுக்கும் அதீத சக்தி உண்டென்றாலும் அதர்வ வேத மந்திரங்களின் சக்தி இன்னும் தனித்தன்மை பெற்றவை. மிக உயர்ந்த தத்துவங்களைக் கொண்ட மந்திரங்கள் எல்லாம் அதர்வத்தில் இருக்கின்றன. ஆனால் இன்றைய காலகட்டத்தில் இவற்றை அத்யயனம் செய்பவர்கள் மிகக் குறைவு!

 வட மாநிலங்களில் ஒரிசாவில் இருக்கும் ஆதர்வணிக பிராமணர்கள் அதர்வ வேதத்தைச் சேர்ந்தவர்களாகச் சொல்கின்றனர். இன்னும் குஜராத், சௌராஷ்ட்ரா, கோசலம் ஆகிய நாடுகளிலும் அதர்வ வேதத்தைச் சேர்ந்த சிலர் இருக்கின்றனர். நாம் உபநயனம் செய்விக்கையில் சொல்லப்படும் காயத்ரி மந்திரம் முதல் மூன்று வேதங்களின் ஸாரம் எனச் சொல்லப்படும். ஏனெனில் வேதங்கள் மூன்றே என்றொரு கருத்து இருந்ததால் அதில் அதர்வத்தைச் சேர்க்கவில்லை. ஆகையால் அதர்வ வேதம் பயிலும் முன்னர் அதர்வ காயத்ரியை உபதேசமாகப் பெற்றுக் கொள்ள வேண்டும். அதர்வ வேதத்தை அத்யயனம் பண்ண விரும்புவோர் புனர் உபநயனம் செய்து கொண்டு அதர்வ காயத்ரியை உபதேசமாகப் பெற வேண்டும். ஆனால் த்ரிபாதா எனப்படும் பொதுவான காயத்ரி மந்திரத்தை ஒரு முறை உபதேசம் பெற்றோர் ரிக், யஜுர், சாமம் மூன்றில் எந்த வேதத்தைச் சார்ந்தவர்களாக இருந்தாலும் அவர்கள் புனர் உபநயனம் செய்து கொள்ளாமலேயே மற்ற இரு வேதங்களை அத்யயனம் செய்யலாம். அதர்வ வேதம் அத்யயனம் செய்வதாக இருந்தால் மட்டுமே புனர் உபநயனம் செய்து கொண்டு அதர்வ காயத்ரி மந்திர உபதேசம் பெற வேண்டும்.

(நன்றி: தெய்வத்தின் குரல்)

இனி நம் த்வைபாயனர் என்ன ஆனார் என்பதைப் பார்ப்போம். முந்தைய பதிவில் சொன்னபடி வழிபாடுகள் முடிவடைந்ததும், மஹா அதர்வண ரிஷி, த்வைபாயனரைத் தன் பக்கம் திருப்பிக் கொஞ்ச நேரம் அவரையே பார்த்தார். அவர் புருவம் நெரிந்தது. த்வைபாயனரின் நெஞ்சுக்குள் ஊடுருவுவது போல அவரையே பார்த்தவண்ணம் இருந்தார். இந்த இளைஞன் சற்றும் அக்ஷரம் பிசகாமல், த்வனி மாறாமல் ஸ்ருதி மாறாமல் அதர்வ வேதத்தைச் சொல்கிறானே! அது எப்படி? பின்னர் திரும்பிய ரிஷி ஏரியை விட்டு வெளியேறினார். அங்கே ஏரிக்குள்ளாக ஒரு மாணவன் அழுத்திப் பிடித்துக் கொண்டிருந்த பைலரைப் பார்த்தார். அவர் மூச்சு விடுவதற்கு மட்டுமே தலையை மட்டும் வெளியே வைத்து அவர் முழு உடலும் நீருக்குள் கிடந்தது. பின்னர் திரும்பி சுமாந்துவைப் பார்த்து, “சுமாந்து, பையைத் திற!” என்றார். பை திறக்கப்பட்டதும் அதிலிருந்து சில மூலிகைகளை வெளியே எடுத்தார். சுமாந்துவைப் பார்த்து, “அக்னிக் குண்டத்திலிருந்து சாம்பலை எடுத்து வா!” என்றார். சுமாந்துவும் அப்படியே சென்று அக்னிக் குண்டத்திலிருந்து சாம்பலை எடுத்து வந்தான். அந்தச் சாம்பலைப் பைலரின் நெற்றி, கன்னங்கள், மார்பு, கால்கள் அனைத்திலும் பூசி விட்டார். அதன் பின்னர் யம தர்ம ராஜனை வழிபட்டு மந்திரங்களை உச்சரிக்க ஆரம்பித்தார்.

“ஏ, யமதர்மராஜனே, மரணத்தின் அதிபதியே
இந்த இளைஞனுக்குக் கொஞ்சம் கருணை காட்டு
கருணையின் பலன்களை இவன் அனுபவிக்கட்டும்!
ஏ,சூரியனே, ஒளிக்குக் கடவுளே, கண்ணெதிரே தோன்றும் கடவுளே!
இவ்வுலகைத் தன் ஒளியால் காப்பவனே!
விரைந்து வா! எழும்பி வா! மரணத்தின் பிடியிலிருந்து இவனை விடுவித்துவிடு!
இவனை மூழ்க அடித்துவிடாதே! நீயும் மூழ்கிவிடாதே!
இவ்வுலகிலிருந்து நீயும் சென்று விடாதே! இவனையும் செல்ல விடாதே!
அக்னியின் பார்வையிலிருந்தும் சூரியனின் பார்வையிலிருந்தும் இவனை
விலகிச் செல்லவிடாதே!
இவற்றைச் சொன்ன வண்ணம் அதர்வ ரிஷி சற்றே நிறுத்தினார். பைலரின் முகத்தில் மீண்டும் அந்தச் சாம்பலைப் பூசி விட்டார். மீண்டும் மந்திரங்களைச் சொல்ல ஆரம்பித்தார்.
“விண்ணிற்கும், மண்ணிற்கும் அதிபதிகளான சூரியனும் சந்திரனும் இவனைப் பாதுகாக்கட்டும்!
அகன்று விரிந்த இந்தப் பிரபஞ்சத்தின் விண்ணும், கடலும், நீரும் இவனைப் பாதுகாக்கட்டும்!
இவன் மேல் எறியப்பட்ட அந்த ஏவுகணை பயனற்றுப் போகட்டும்!
எப்போதும் கவனமாகவும் கண்காணிப்போடும் இருக்கும் அந்தக் கடவுளரின் பார்வை இவனைப் பாதுகாக்கட்டும்!
என்றென்றும் தூங்காமல் விழித்திருந்து நம்மை எல்லாம் பாதுகாக்கும் அந்தப் பரம்பொருளின் பார்வை இவனை பாதுகாக்கட்டும்!
என்றென்றும் விழிப்புடன் இருக்கும் அந்தப் பரம்பொருள் இவனைப் பாதுகாக்கட்டும்!
இந்த மனிதனை நம்முடன் இருக்கச் செய்வாய், ஏ, பரம்பொருளே!
இவ்வுலகை விட்டு இவனைச் செல்ல விடாதே!
நான், மஹா அதர்வன், பிருகு முனிவரின், மற்றும் ஆங்கிரஸ முனிவரின் ஆசிகளுடனும் கருணையுடனும்
இவனை மரணத்தின் பிடியிலிருந்து காப்பாற்றி உள்ளேன்.

அதன் பின்னர் மஹா அதர்வ ரிஷி சில மூலிகைகளைத் தண்ணீரில் நனைத்தார். அதிலிருந்து சில சொட்டுக்களைப் பைலரின் உதட்டில் விட்டார். விடும்போதும் மந்திரங்களைச் சொல்லிக் கொண்டிருந்தார்.

“இந்த மூலிகைகள் ஜிவாலா, நாகரிஷா மற்றும் ஜிவான்டி ஆகியவையால் எப்போதும் நன்மையே கிடைத்துள்ளது. வெற்றியே கிடைக்கும். இந்த வெற்றி அளிக்கும் மூலிகைகளைச் சேமிப்பதும் ஓர் ஆனந்தமே! ஏ, பரம்பொருளே, நீ எழுந்தருளி இந்த மனிதனின் உயிரைக் காப்பாற்றி அவனை ஆபத்திலிருந்து விலக்கியும் மரணத்தின் பிடியிலிருந்து விடுவித்தும் விடு!”

த்வைபாயனர் அனைத்தையும் பார்த்த வண்ணம் அங்கேயே நின்றிருந்தார். தன் கைகளைக் கூப்பியவண்ணம் மரியாதைக்குரியவகையில் ஜாபாலி ரிஷியை வணங்கிக் கொண்டு நின்றிருந்தார். எவ்விதமான சிரமங்களும் இல்லாமல் மஹரிஷியால் இப்போது சொல்லப்பட்ட மந்திரங்கள் அதற்குரிய உச்சரிப்புடனும், ஏற்ற, இறக்கங்களுடனும் அவர் மனதில் பதிந்தது. இது அதர்வ வேதத்தின் ஒரு பகுதி என்றும் இதை நம் தந்தை அறிந்திருக்கவில்லை என்பதையும் த்வைபாயனர் உணர்ந்தார். மந்திரங்களை உச்சரித்தவண்ணமே மஹா அதர்வ ரிஷி பைலரின் உடலில் முழுக்க முழுக்க அக்னிக் குண்டத்துச் சாம்பலைப் பூசி விட்டுக் கொண்டே இருந்தார். அது வரை மூச்சு விடக் கூடச் சிரமப்பட்டுக் கொண்டிருந்த பைலரின் மூச்சு ஒழுங்குக்கு மெல்ல மெல்ல வர ஆரம்பித்தது. அதன் பின்னர் அனைத்துக் கடவுளருக்கும் தங்கள் வணக்கஙக்ளையும் நன்றியையும் தெரிவித்துக் கொண்ட பின்னர் அனைவரும் காட்டில் இருந்து பறித்துவரப் பட்ட பழங்கள், கொட்டைகள் ஆகியவற்றை உணவாக உண்டனர்.

பின்னர் அந்தப் புனிதமான நெருப்பு முறைப்படியான சடங்குகளைச் செய்து அணைக்கப்பட்டது. அதன் பின்னர் ஜாபாலி ரிஷியின் சீடர்கள் அனைவரும் சங்குகளை ஊதிக் கொண்டு இருவர் இருவராக வரிசையாகச் செல்ல ஆரம்பித்தனர். ஒரு சின்ன ஊர்வலம் போல் இருந்தது அது. பைலரைத் தாற்காலிகமாகத் தயாரிக்கப்பட்டதொரு பல்லக்குப் போன்ற ஊர்தியில் அமரவைத்து இருபக்கமும் இருவர் அதைத் தூக்கியவண்ணம் வர ஊர்வலம் நகர ஆரம்பித்தது. த்வைபாயனரும் சுமாந்துவும் சேர்ந்து சென்றனர். அப்போது மீண்டும் ஜாபாலி ரிஷியின் வசியம் த்வைபாயனரிடம் வேலை செய்ய ஆரம்பித்துவிட்டாற்போல் உணர்ந்தார். தன்னையும் அறியாமல் இயந்திரத் தனமாக ஜாபாலி ரிஷியைப் பின் தொடர்ந்தார் த்வைபாயனர்.

Wednesday, May 25, 2016

அதர்வத்தின் ஆசாரியர் ஜாபாலி முனிவர்!

அதன் பின்னர் அந்த முனிவர் த்வைபாயனரைப் பார்த்து, “எழுந்திரு, பிரமசாரியே! எழுந்து நில்! நடப்பாய்!” என்று ஆணையிடும் தொனியில் கூறினார். ஆனால் த்வைபாயனருக்கோ எழுந்து நிற்கமுடியுமா என்பதிலேயே சந்தேகமாக இருந்தது. ஆனால் முனிவர் விடவில்லை. “எழுந்திரு, மகனே! எழுந்திரு!” என்ற வண்ணம் தன் ஒளி பொருந்திய கண்களை த்வைபாயனர் மேலேயே நாட்டியபடி நின்று கொண்டிருந்தார். த்வைபாயனரின் கண்களும், முனிவரின் கண்களும் ஒன்றுக்கொன்று சந்தித்துக் கொண்டன. த்வைபாயனரால் தன் கண்களை மீட்க முடியவில்லை. முனிவரின் கண்களோடு அவையும் ஒன்றிப் போனவை போல் உணர்ந்தார். மேலும் இந்த வயதான முனிவர் த்வைபாயனரின் எண்ணத்துக்கு ஏற்ப அவரை நடக்க விடமாட்டார் போலவும் தோன்றியது. அந்தக் கிழவர் என்ன சொல்கிறாரோ அதை மட்டுமே கட்டளையாக ஏற்று த்வைபாயனர் செய்தாக வேண்டும் என்று தோன்றியது. இயந்திரம் போல் எழுந்தார் த்வைபாயனர். இப்போது அவர் உடலில் எங்கும் ஒரு சின்ன வலி கூடத் தெரியவில்லை. அதை நினைத்து ஆச்சரியப்படும்போதே அந்த முனிவர் த்வைபாயனரை, “என்னைத் தொடர்ந்து வா!” என்று ஆணையிட்டார்.

எங்கோ விண்ணில் கால் பதித்து நடக்கிறாற்போல் உணர்ந்த த்வைபாயனர் அந்த ரிஷியைத் தொடர்ந்து சென்றார். அவரின் சீடர்கள் அனைவரும் மிகவும் மரியாதையுடன் அவருக்கும் த்வைபாயனருக்கும் வழி ஏற்படுத்திக் கொடுத்தார்கள். அவர்கள் நதிக்கரைக்கு வந்து விட்டார்கள். த்வைபாயனர் எதுவுமே சொல்ல முடியாமல் அவரைப் பின் தொடர்ந்து யந்திரத்தனமாகச் சென்று கொண்டிருந்தார். அவர் தலையைக் குனிந்த வண்ணம் கைகளைக் கூப்பிய வண்ணம் முனிவரைப் பின் தொடர்ந்தார். ஆனால் அவர் புத்தி தெளிவாக யோசித்தது. “எனக்கு என்னவோ ஆகி விட்டது! அதுவும் வித்தியாசமான முறையில்!” என்று நினைத்துக் கொண்டார். அவர் உணர்வைப் புத்தி சரியாக எடுத்துச் சொல்லியது. அதைத் தன்னோடு வந்த சுமாந்துவிடமும் சொன்னார். அவனோ பதிலுக்குச் சிரித்துக் கொண்டான். சுமாந்துவிடம் த்வைபாயனர், “இந்த மஹரிஷியின் பெயர் தான் என்னவோ!” என்று கேட்டார்.

“அட, அது கூட உனக்குத் தெரியாதா?” ஆச்சரியத்துடன் கேட்ட சுமாந்து, “அவர் ஆசாரியர்களுக்கெல்லாம் ஆசாரியர்! குருவுக்கெல்லாம் குருவானவர். இவர் பெயர் மஹா அதர்வண ஜாபாலி, மரணத்துக்கும் வாழ்க்கைக்கும் இவரே தலைவர் ஆவார்!” என்றான். த்வைபாயனர் ஆச்சரியம் தாங்க முடியாமல் வாயைத் திறந்து திறந்து மூடினார். இவரைக் குறித்துத் தான் பராசரர் அவ்வப்போது ரகசியமாகத் தன் மகனிடம் சொல்லி வந்திருக்கிறார். இவர் அதர்வ வேதத்தை முழுதும் அறிந்த முனிவர். அதிலேயே திறமை மிக்கவர் இப்போது இவர் ஒருத்தர் தான் இருக்கிறார். அதோடு இல்லாமல் பராசரர் மேலும் சொன்னது என்னவென்றால், இந்த முனிவரும் தர்மக்ஷேத்திரத்திலேயே ஆசிரமம் அமைத்து இருந்து வந்ததாகவும், வசிஷ்டரோடு ஏற்பட்ட சிறிய மனவேறுபாட்டால் தர்மக்ஷேத்திரத்தை விட்டுச் சென்று விட்டார் என்றும் பராசரர் சொல்லிக் கேட்டிருக்கிறார். தர்மக்ஷேத்திரத்தில் இரண்டு குழுக்கள் இருந்திருக்கின்றன. ஒன்று வசிஷ்டர்—விஸ்வாமித்திரர் ஆகியோரைக் கொண்ட குழு! இவர்களைப் பொறுத்தவரையிலும் வேதம் மூன்றே பகுதிகள் தான். ரிக், யஜுர், சாமம் ஆகியன அவை! மற்றவர்களைப் பொறுத்தவரையில் பிருகு முனிவரும் ஆங்கிரஸ முனிவருமே இதற்குத் தக்க அதிகாரம் படைத்தவர்கள். இவர்கள் மிகப் பழைய காலத்தைச் சேர்ந்தவர்கள் என்பதோடு அல்லாமல் அதர்வ வேதம் வேதங்களின் தொகுப்பில் பிரிக்க முடியாத பகுதி என்ற எண்ணமும் கொண்டவர்கள். அதர்வ வேதமும் சேர்த்து அவர்களைப் பொறுத்தவரையில் வேதங்களின் தொகுப்பு நான்கு பகுதிகளால் ஆனது.

பராசரர் வேதங்கள் மூன்றையும் நன்கு கற்றுத் தேர்ந்தவர்; வேதங்கள் மூன்று என்னும் கொள்கையும் கொண்டவர்; ஆனாலும் அதை வெளிப்படையாகச் சொன்னது இல்லை! அதர்வ வேதம் வேதங்களின் தொகுப்பைச் சேர்ந்தது இல்லை என்னும் கருத்தை ஏற்கவும் இல்லை; மறுக்கவும் இல்லை. மாறாக அவற்றின் துணையால் அவற்றில் சொல்லப்பட்டிருக்கும் மந்திரங்கள், வசிய மந்திரங்கள், தாயத்துகள், சூனிய வித்தைகள் இவற்றின் மூலமும், அவற்றில் சொல்லப்பட்டிருக்கும் மூலிகைகள் மூலமும் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கும், துன்பத்தால் அல்லல் உற்றவர்களுக்கும் மருந்துகளை அளித்து ஆசுவாசப்படுத்த முடியும் என்று நம்பினார். மேலும் மன்னர்களுக்கு வெற்றியை அளிக்கக் கூடிய மந்திரங்கள் மூலமாகவும் வசிய மந்திரங்கள் மூலமாகவும் பல சாதனைகளைச் செய்ய முடியும் என்றும் நம்பினார். இவற்றை எல்லாம் சிந்தித்த வண்ணம் ஜாபாலி முனிவரைப் பின் தொடர்ந்த த்வைபாயனரை ஜாபாலி, “நான் நதியில் இறங்கிக் குளிக்கப் போகிறேன். நான் எப்படிச் செய்கிறேனோ அதே போல் நீயும் செய்!” என்று சொன்னார். த்வைபாயனர் கீழ்ப்படிந்தார்.

தக்க முறையில் சடங்குகளைச் செய்து முடித்ததும் ஜாபாலியும் அவரின் சீடர்களும் சூரியனுக்கு அர்க்கியம் விட்டார்கள். சூரியனையும், வருணனையும் வழிபட்டார்கள். விண்ணிலிருந்து பூமியின் அனைத்து சிருஷ்டிகளையும் மேற்பார்வை பார்த்துக் கண்காணித்துக் கொண்டிருக்கும் வருணனுக்குத் தக்க வழிபாடுகள் செய்து அவரைத் திருப்தி செய்தார்கள். மந்திரங்களைச் சொல்ல ஆரம்பிக்கும்வரையிலும் ஏதோ ஓர் மயக்கத்தில் ஆழ்ந்திருந்த த்வைபாயனர் மந்திரத்தின் முதல் வார்த்தை காதில் விழுந்ததுமே தன் இனிமையான குரலினால் தானும் சேர்ந்து சொல்ல ஆரம்பித்தார்.
“கடவுளே, அனைத்திலும் பெரியவரே! அனைவரையும் பாதுகாப்பவரே! அனைத்தும் அறிந்தவரே!
எது தூரத்தில் உள்ளது? எது அருகே உள்ளது! அனைத்தும் அறிந்தவரே!
மனிதர்கள் தங்கள் நடவடிக்கைகளை மாறுவேஷத்தின் மூலம் மறைக்க நினைத்தாலும்
கடவுளே! நீ அனைத்தும் அறிந்தவன்! உனக்குத் தெரியாதது ஒன்றுமில்லை!

“ஒரு மனிதன் நின்றால், நடந்தால், அல்லது பதுங்கினால், எங்கானும் மறைந்தாலும்
மறைவிடத்துக்கே சென்று விட்டாலும்
அங்கே அவன் இருக்கிறான்! எல்லாம் வல்லவன்! அவனறியாமல் ஓரணுவும் அசையாது!

இரு மனிதர்கள் கூடி அமர்ந்து திட்டம் போட்டாலும், சூழ்ச்சிகள் செய்தாலும்
அவர்கள் தாங்கள் தனிமையில் அமர்ந்து இருப்பதாக நினைத்தாலும்
அது உண்மையல்ல! அங்கே அவன் இருக்கிறான்! எல்லாம் வல்லவன்! மூன்றாவது மனிதனாகக் கண்காணிக்கிறான்.
அவனறியாமல் ஓரணுவும் அசையாது!

அவனறியாமல் அவர்கள் திட்டமோ, சூழ்ச்சியோ செய்ய முடியுமா?
இந்த உலகமே, பிரபஞ்சமே அவனுடையது! அவனுக்கு மட்டுமே உரியது!
நாம் குடியிருக்க வந்தவர்கள்!
இந்தப் பரந்த உலகு மட்டுமில்லாமல் பரந்து விரிந்து அளக்க முடியாமல் இருக்கும் இந்த விண்ணும்
அவனுடையது! எல்லையற்றது! அதன் எல்லைகளை நம்மால் காணவே முடியாமல் எங்கோ இருக்கின்றன!

இந்தப் பரந்து விரிந்த பூமியில் இருக்கும் கடல்களும் அதன் எல்லையில்லாக் காட்சிகளும் அவனுள்ளே இருப்பன!
இந்தக் கடல் நீரின் ஒவ்வொரு துளியிலும் அவன் நிறைந்திருக்கிறான். அங்கே அவன் இருக்கிறான்! எல்லாம் வல்லவன்!
அவனறியாமல் ஓரணுவும் அசையாது!

நீ விண்ணில் மேலே மேலே சென்று உயர உயரப் பறக்க நினைத்தாலும்
அங்கே அவன் இருக்கிறான்! ஆயிரமாயிரம் நக்ஷத்திரக் கண்களைக் கொண்டு உன்னைக்
கண்காணித்துக் கொண்டு இருக்கிறான்.! எல்லாம் வல்லவன்! அவனறியாமல் ஓரணுவும் அசையாது!

இந்த விண்ணிலோ மண்ணிலோ எது இருந்தாலும் எது கிடைத்தாலும், அல்லது இவற்றைத் தாண்டி எது இருந்தாலும்
அவை எல்லாம் எல்லாம் வல்ல இறைவனின் முன்னே கட்டவிழ்க்கப்பட்டு விடும்.
ஏ, மனிதா, உன்னுடைய கணக்கற்ற எல்லையில்லாத் தடுமாற்றங்களை எல்லாம் அவன் கண்காணிக்கிறான்.
இந்தப் பிரபஞ்சமே அவன் கட்டளைப்படியே சுழல்கிறது!

சதுரங்க ஆட்டக்காரன் தன் காய்களை நகர்த்துவது போல்
நம்முடைய விதியானது பின்னிப் பிணைந்து அவன் கைகளில் இருக்கிறது.
ஏழுக்கு ஏழு என்றும் மூன்றுக்கு மூன்று என்றும் காய்களைப்போட்டாலும்
வலையில் சிக்கித் தான் தீர்வாய்! ஏ, எல்லாம் வல்லவனே! எது தவறு எது சரி என்பதை
யார் சொன்னாலும் சொல்லட்டும். ஆனால் உண்மை சொல்பவனைச் சொல்லவிடுவாய்!
அவனை எங்களுடன் இருக்க வைப்பாய். அதன் மூலம் எங்களை ஓர் உயர்ந்த வாழ்க்கை வாழ வைப்பாய்!
அங்கே அவன் இருக்கிறான்! எல்லாம் வல்லவன்! அவனறியாமல் ஓரணுவும் அசையாது!

Tuesday, May 24, 2016

யார், யார், யார் இவர் யாரோ?

மீண்டும் த்வைபாயனருக்கு நினைவு வந்த போது அவருக்குத் தான் எவ்வளவு நேரமாக நினைவிழந்து கிடந்தோம் என்றே புரியவில்லை. அவர் வேகமாக விழப் போகிறது என்று எதிர்பார்த்திருந்த அந்த அடி அவருக்கு விழவே இல்லை. இது மட்டும் நினைவிருந்த்து அவருக்கு. அவர் கண்களைத் திறக்க முயன்றார். அவரைச் சுற்றிலும் பல குரல்கள் கேட்டன என்பதோடு அவை பேசிய மொழியும் அவருக்கு மிகவும் பழக்கமான ஆரியர்களின் மொழியே! அவருடைய காயத்துக்கு எவரோ மருந்திட்டுக் கொண்டிருந்தார்கள். அந்தக் காயத்தின் விளைவான வலி அவருக்கு மிகுதியாக இருந்தது. மெல்லக் கண்களைத் திறந்தவர் தன்னெதிரே நாலைந்து அந்தணர்களைக் கண்டார்.

அவர்கள் அணிந்திருந்த பூணூலைக் கண்டதும் அவர்கள் அந்தணர்களே என்பதை த்வைபாயனர் உறுதி செய்து கொண்டார். அவர்கள் அவரைத் திரும்பவும் நினைவுலகுக்கு மீட்க முயன்று கொண்டிருந்தனர் என்பதையும் புரிந்து கொண்டார். அவர் எழுந்து உட்கார முயன்றார். அந்த முயற்சியில் தோல்வி அடைந்து மீண்டும் விழுந்தவர் மறுபடியும் நினைவை இழந்தார். சற்று நேரத்தில் மீண்டும் நினைவு வந்தது அவருக்கு.  மறுபடி எழுந்து அமர முயற்சித்தவரை இரு நபர்கள் உதவி செய்ய மெல்ல மெல்ல அமர்ந்தார்.
அங்கிருந்தவர்களைக் கவனித்தார். ஒருவர் இளைஞராக இருந்தார்.

கிட்டத்தட்ட த்வைபாயனரின் வயதே இருக்கலாம். மான் தோலை அரையில் உடுத்தி இருந்தார். அவர் முகம் பார்க்கவே சந்தோஷமாகவும், கனிவுடனும், கருணையுடனும் பொலிந்தது. த்வைபாயனர் எழுந்து அமர்ந்ததும், அவர் உரக்கக் கத்தினார்: “தந்தையே, தந்தையே, இந்த பிரமசாரி எழுந்து அமர்ந்திருக்கிறார். அவருக்கு நினைவு மீண்டு விட்டது!” என்று உரக்கக் கத்தினார். த்வைபாயனர் சுற்றும் முற்றும் பார்த்தார். அவரைச் சூழ்ந்திருந்தவர்கள் மிக்க வணக்கத்துடனும், மரியாதையுடனும் வழி உண்டாக்கிக் கொடுக்க ஒரு வயதான ரிஷி வந்து கொண்டிருந்தார்.

அவரைப் பார்க்கவே விசித்திரமாக இருந்தது. மிக மிக வயதானவராகத் தென்பட்ட அவரின் முகவாயில் இருக்கும் மயிர்களும், தலையில் தெரிந்த குடுமியின் மயிர்களும் மஞ்சள் நிறத்தில் ஒளிர்ந்தன. அதிலிருந்து அவர் மிகவும் மூப்பு அடைந்தவர் என்பது புரிந்தது. அவரால் நிமிர்ந்து நடக்க முடியவில்லை. உடல் சிறு கூடாக எளிதில் உடைந்து விடுவார் போலக் காட்சி அளித்தார். அவரால் அந்தத் தாடியின் எடையைத் தாங்க முடியுமா என்னும் சந்தேகம் பார்க்கிறவர்களுக்கு எழுந்தது. கொஞ்சம் கூனல் போட்டு நடந்தாலும் நடையில் வேகம் குறையவில்லை. தன் கையிலிருந்த தண்டத்தை உபயோகிக்காமல் நடந்து வந்தார்.

த்வைபாயனர் அவரைக் கண்டதும் நமஸ்கரிக்க எண்ணினார். ஆனால் அதில் அவருக்கு மிக்க சிரமமாக இருந்தது. இவர் மஹாப் பெரிய முனிவராக இருப்பார் போலிருக்கிறது என நினைத்த த்வைபாயனரிடம் அந்த மஹரிஷி, “முட்டாள் தனமாக நடந்து கொள்ளாதே!” என்று அதட்டல் போட்டார். த்வைபாயனரை அப்படியே சாய்ந்த வண்ணம் அமர வைக்கும்படி கட்டளை இட்ட அவர், தன்னருகே காணப்பட்ட இளைஞனிடம், “சுமாந்து, இவன் எப்படி இருக்கிறான்?” என்று வினவினார். த்வைபாயனரின் முதுகில் ஒரு சில மூலிகைகளை வைத்துக் கட்டிக் கொண்டிருந்த சுமாந்து என்ற அந்த இளைஞன், “விரைவில் இவர் குணம் அடைந்து விடுவார், தந்தையே! ஆனால் காயம் நன்றாக வீங்கிச் சிவந்து காட்சி அளிக்கிறது, மோசமாக இருக்கிறது. ” என்றான். த்வைபாயனரைப் பார்த்து அந்த ரிஷி, “எப்படி இருக்கிறாய்? மகனே? எப்படி உணர்கிறாய்? “ என்று கேட்டார். அவர் முகத்தைப் பார்த்தால் அவர்  புன்னகை புரிவதைப் போல் தெரிந்தது த்வைபாயனருக்கு!

“நான் நன்றாகவே இருக்கிறேன்.” என்ற த்வைபாயனர், தன் வலியையும் மீறிக் கொண்டு புன்னகை புரிய முயன்றார். பின்னர் தன் கரங்களைக் கூப்பிய வண்ணம்,”மதிப்புக்குரிய மஹரிஷி, என் நமஸ்காரங்களை ஏற்றுக் கொள்ளும். என்னை நீங்கள் காப்பாற்றி விட்டீர்கள்! ஆனால் என்னுடன் வந்தவர், பைலர்! அவர் எங்கே? அவருக்கு என்ன ஆயிற்று?”

:கவலைப்படாதே, மகனே! இப்போது தான் அவனை மரணத்தின் பிடியிலிருந்து மீட்டிருக்கிறோம். விரைவில் சரியாகிவிடுவான். ஆனால் நீங்கள் இருவரும் யார்? எங்கிருந்து வருகிறீர்கள்?”

“நாங்கள் ஸ்ரோத்ரியர்கள், வேதங்களுக்காக எங்களை அர்ப்பித்துக் கொண்டிருக்கிறோம்.”

“”ராக்ஷசர்கள் இவ்வளவு மோசமாக உங்களைத் தாக்கும்போது நீங்கள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள்?”

“நாங்கள் அப்போது தான் அன்றைய ஹோமத்தை முடித்திருந்தோம். எரிந்து கொண்டிருந்த நெருப்பைத் தணிக்க முயன்று கொண்டிருந்தோம்.

“இந்த சபிக்கப்பட்ட இடத்துக்கு நீங்கள் ஏன், எப்படி வந்தீர்கள்?”

த்வைபாயனர் அழகாகச் சிரித்தார். சிரிப்பில் வசியம் இருந்தது. “உங்களைப் போன்றதொரு தெய்விக முனிவர் இங்கே இருக்கையில் இது சபிக்கப்பட்ட இடம் என எப்படிச் சொல்ல முடியும்?” என்றார். ஆனால் த்வைபாயனரின் இந்தப் புகழ்மொழிகள் அந்த முனிவரிடம் எவ்வித மாற்றத்தையும் உண்டு பண்ணவில்லை. “ம்ம்ம்ம்ம்ம், நீ அக்னியை ஒழுங்காக அழைத்தாயா? அழைத்து முறையான வழிபாடுகளைச் செய்தாயா?” என்றவண்ணம் அந்த ஹோமகுண்டத்தையே பார்த்தார்

அதற்கு த்வைபாயனர், “ஆம், நாங்கள் முறையாகத் தான் செய்தோம். எல்லாச் சடங்குகளையும் பின்பற்றி அக்னியை அழைத்தோம். ஆனால் இந்தக் காட்டில் ராக்ஷசர்கள் சுற்றிக் கொண்டிருப்பார்கள் என்பதை நாங்கள் அறிந்திருக்கவில்லை!” என்றார். “ம்ம்ம்ம்ம், மகனே, இன்று அமாவாசை தினம். ஆகையால் நாங்கள் இங்கே வந்தோம். நீ ஒரு வகையில் அதிர்ஷ்டக் காரன் தான். அமாவாசை தினமாக இல்லாதிருந்து நாங்களும் இங்கே வரவில்லை எனில் உன் கதி? அமாவாசை இல்லை எனில் நாங்கள் இங்கே வந்திருக்கவே மாட்டோம்! போகட்டும், உன் பெயர் என்ன?”

“நான் க்ருஷ்ண த்வைபாயனன்.”

“உன் நண்பன் பெயர்?

“அவன் பெயர் பைலர்!”

“நீங்கள் இருவரும் முறையாக பிரமசரிய விரதம் மேற்கொண்டவர்களா?”

“ஆம், ஐயா!”

“இரண்டு பேரும் முட்டாள்கள்! முழு முட்டாள்கள். அதனால் தான் இங்கே வந்தீர்கள்!” என்று கடுமையாகச் சொன்னார் அந்த முனிவர்.

“ஐயா, மதிப்புக்குரிய முனிவரே, என் தந்தையும், நானும் தர்மக்ஷேத்திரத்தைப் பழையபடி மீண்டும் உன்னத நிலைக்குக் கொண்டு வருவதாக சபதம் செய்திருக்கிறோம். தந்தை இப்போது எங்களுடன் இல்லை; பித்ருலோகத்துக்குப் போய்விட்டார். இல்லை எனில் அவரும் இங்கே வந்திருப்பார். சபதத்தை முடிக்கத் தேவையான உதவிகளைச் செய்திருப்பார்.”

தன் பல்லில்லாப் பொக்கை வாயைத் திறந்து அந்த முனிவர் சிரித்தார். சிரிப்பில் உணர்ச்சிகளே இல்லை! “இந்த இடம் சபிக்கப்பட்டது என்பதை நீ அறிய மாட்டாயா இளைஞனே! இங்கே இறந்து போனவர்களின் ஆவிகள் இன்னமும் இங்கேயே சுற்றி அலைந்து கொண்டிருக்கிறதாகச் சொல்கிறார்கள்.”

அந்த முனிவரின் ஆணைப்படி அவருடன் இருந்தவர்களில் சிலர் த்வைபாயனரும், பைலரும் ஏற்படுத்திய அக்னி குண்டத்தில் இருந்து நெருப்பை உண்டாக்கி மந்திரங்களைச் சொல்ல ஆரம்பித்திருந்தனர். இப்போது அக்னி குண்டம் மிகப் பெரியதாகக் காட்சி அளித்தது. இத்தனை பெரிதாக அக்னி குண்டத்தை உண்டாக்கியதை த்வைபாயனர் ஆச்சரியத்துடன் பார்த்தார். விசிறிகளால் வீசப்பட்டு அக்னி மேலே எழும்பியது. இதற்குள்ளாக அந்த முனிவர் தன்னருகே இருந்த சுமாந்துவிடமிருந்து மரத்தினால் செய்யப்பட்ட ஒரு சின்ன தாயத்தை வாங்கி அதை தர்ப்பைப் புல்லுடன் சேர்த்துக் கட்டி த்வைபாயனரின் புஜத்தில் கட்டி விட்டார். கட்டும்போதே அதற்கென உரிய சில மந்திரங்களையும் அதற்கேற்ற ஏற்ற இறக்கங்களுடன் உச்சரித்துக் கொண்டிருந்தார்.

Sunday, May 22, 2016

ராக்ஷசத் தாக்குதலில் ரிஷிகள்!

“ஓஹோ, அப்படியா? அப்படி எனில் நம் உடல் சதை இந்த ஓநாய்களுக்கு நல்ல சுவையான உணவாக இருக்கும்.” என்ற வண்ணம் சிரித்த த்வைபாயனர் மேலும் தொடர்ந்து கூறினார். “நான் இப்போது நீங்கள் கோதுலி ஆசிரமம் செல்லவேண்டும் என்று விரும்புகிறேன். இங்கே தர்மக்ஷேத்திரத்தில் அனைத்தும் தயார் நிலைக்கு வந்ததும் உங்களுக்குச் சொல்லி அனுப்புகிறேன்.” என்றார். “ஏதோ நீ தவறாக உளறுகிறாய்! அல்லது உன் போக்கில் ஏதோ தவறு இருக்கிறது!” என்று தன் வெறுப்பைக் கொஞ்சம் கிண்டலாக மாற்றிக் கூறினார் பைலர். அதற்கு த்வைபாயனர், “இல்லை, இங்கே, இதோ இங்கே!” என்ற வண்ணம் தன் நெற்றிப் பொட்டைச் சுட்டிக் காட்டி, “இங்கே ஏதோ சரியாக அமைந்து விட்டது. நான் தந்தைக்கு தர்மக்ஷேத்திரத்தின் புனர் நிர்மாணத்துக்காக வாக்குக் கொடுத்திருந்தேன். அதை மீண்டும் சத்தியலோகமாக மாற்றுவதாக உறுதி கூறி இருந்தேன். இப்போது அதை எல்லாம் எப்படிச் செய்வது என்பது குறித்தத் தெளிவான பார்வையும், நோக்கும் எனக்குக் கிடைத்து விட்டது!” என்றார் த்வைபாயனர்.
“அப்படி எல்லாம் எதுவும் சரியாகவோ நன்றாகவோ நடக்க இங்கே வாய்ப்பே இல்லை த்வைபாயனா! நீ வெகு விரைவில் உன் முன்னோரிடம் போய்ச் சேர்ந்து விடுவாய்! அதன் பின்னர் நான் தனியாக இங்கே என்ன செய்ய முடியும்? ஏதேனும் ஒரு ஏரிக்குள் போய் விழுந்து மூழ்க வேண்டியது தான்! இங்கே எவருமே நிம்மதியாகவும் நன்றாகவும் வாழ இயலாது!” என்று ஏமாற்றமும், விரக்தியும் கலந்து பேசினார் பைலர்.  த்வைபாயனரோ மீண்டும் சிரித்துக் கொண்டே, “அதை எல்லாம் சரியாக ஆக்கத் தானே நாம் இங்கே வந்திருப்பதே! நம் நோக்கமே அது தானே!” என்ற வண்ணம் பைலரைப் பார்த்து அன்பு கனியச் சிரித்தார்.

“சரி, அப்பா! இப்போது நம் இருவரையுமே ஒன்றுமில்லாமல் பண்ண வேண்டும் என்று நீ இறங்கி விட்டாய்! சற்றுப் பொறு. நான் ஓர் ஆலோசனை கூறுகிறேன்.” என்ற பைலர் உடனே, “நான் யமதர்ம ராஜனை உடனடியாக இங்கே அனுப்பும்படிக் கேட்டுக் கொள்கிறேன். அப்போது தான் நான் உண்மையாக எங்கே இருக்கிறேன் என்பதை அறிந்து கொள்ள முடியும்!”  அவர் குரலிலேயே சர்வ நாசமாகி விட்டாற் போன்றதொரு தொனி!” ம்ம்ம், எங்கே சீக்கிரம் வா! என் தலையில் ஓங்கி ஓர் அடி அடித்து என்னைக் கொன்று விடு! எல்லாம் சரியாகிவிடும்!” என்றும் கூறினார்.

“இல்லை, பைலரே இல்லை! நான் நீங்கள் நெடுங்காலம் வாழ வேண்டும் என்று விரும்புகிறேன். அதனால் தான் நீங்கள் கோதுலிக்குப் போக வேண்டும் என்றும் விரும்புகிறேன்.” என்றார் த்வைபாயனர்.

பைலர் தன் நெற்றிப் பொட்டில் கையை வைத்து அமுக்கிக் கொண்டார். பின்னர் பரிதாபமான குரலில், “நான் ஒரு ஏழையும் கோழையுமான குரு. இப்போது மிகவும் அவலமானதொரு நிலையில் இருக்கிறேன். என்ன செய்ய முடியும்? இப்படி ஒரு பைத்தியக்காரத்தனமாக நடந்து கொள்ளும் குரு! ஆனாலும் அவரை விட்டு விட்டு வாழ்வதற்கு இந்தப்பைலருக்கு இஷ்டமில்லை. அந்த குருவோ தன் முட்டாள்தனமான காரியத்தால் அதை சாகசம் என்றும் எண்ணுவதால் மாபெரும் அபாயத்தை நோக்கிச் செல்கிறார். நிச்சயமாக இது நடக்கத் தான் போகிறது. அந்த ஓநாய்க் கூட்டம் என்னை வந்து கொன்று தின்னப் போகிறது. அதன் பின்னர் என்னை இங்கே அழைத்து வந்தது குறித்து நீ வருந்தத் தான் போகிறாய்!” என்றார் பைலர்.

அதற்கும் த்வைபாயனர் சிரித்துக் கொண்டே பைலரின் முதுகில் அன்போடு தட்டி ஆசுவாசப்படுத்தினார். “பைலரே, மனம் உடைந்து போகாதீர்! இது ஒன்றும் முட்டாள்தனமான காரியமும் அல்ல! இங்கே நாம் தர்மத்தையும், சத்தியத்தையும் வேதங்களாகச் சொல்லித் தர வேண்டுமானால் ஆரியர்களின் வாழ்க்கை முறையை நெறிப்படுத்த வேண்டுமெனில் அதற்கேற்ற அதிகார மையங்கள் நமக்குத் தேவை! அப்படி இருந்தால் தான் மீண்டும் நாம் தர்மக்ஷேத்திரத்தைப் புனர் நிர்மாணம் செய்ய முடியும்!” என்றார் த்வைபாயனர். “என்னுடைய நம்பிக்கையும், நிச்சயமும் உன்னிடம் இல்லை என்றும், நீ அவற்றை நம்பவில்லை என்பதையும் நான அறிவேன். அதற்காகவே கோதுலிக்கு நானே செல்ல நினைத்தேன், ஆனால் உன்னை இங்கே தனியாக விட வேண்டுமே!”

“சரி, சரி, நீ சொல்வதை ஒப்புக் கொள்கிறேன்.” அவரால் அவரது இறப்பைக் குறித்து நினைக்காமல் இருக்க முடியவில்லை! “த்வைபா, உனக்கு என்ன தோன்றுகிறதோ அதைச் செய்! உன் விருப்பம் போல் செய்! ஆனால் நான் மட்டும் இறந்துவிட்டேன் எனில் நீ தான் அதற்குப் பொறுப்பு. ஒரு பிரமசாரியைக் கொன்ற பாவம் உன்னை வந்து சேரும். விண்ணிலிருந்து இங்கே பூமியில் நாம் செய்யும் அனைத்தையும் கண்காணித்துக் கொண்டிருக்கும் வருண பகவான் உன்னை ஒரு போதும் மன்னிக்க மாட்டார்.” என்றார்.

“ஹா,ஹாஹா,” சிரித்த த்வைபாயனர், “பைலரே, நீர் சந்தேகத்துக்கு இடமின்றி யமதர்ம ராஜனிடம் காதல் கொண்டு விட்டீர். உமக்கு அங்கே போக  வேண்டுமெனில் நான் கட்டாயமாய் உம்மை அங்கே அனுப்பி வைப்பேன். முன்னோர்கள் இருக்கும் பித்ரு லோகத்துக்கு அதற்குத் தேவையான சடங்குகளுடன் அனுப்பி வைக்கிறேன். நீர் முன்னால் செல்வது எனக்கு நல்லது தானே! ஏனெனில் நான் அங்கே போகும்போது ஏற்கெனவே அங்கே சென்றிருக்கும் உம்முடைய துணை கிடைக்கும். வேதங்களைத் தனியாக ஓதவேண்டாம்! உம்மோடு சேர்ந்து  ஓதலாம் அல்லவா! சரி, சரி, வாரும் விரைவில். நேரத்தை நாம் வீணாக்க வேண்டாம்.” என்றார் த்வைபாயனர்.

“ஹூம், நம்முடைய மதிப்புக்குரிய பராசர முனிவர் மட்டும் இருந்திருந்தார் எனில், நான் உம்மை அவரை விட்டு அடித்து வீழ்த்தச் சொல்லி இருப்பேன். நீரும் அவர் காலடியில் வீழ்ந்து மன்னிக்கும்படி கெஞ்சி இருப்பீர்.”

“ஹூம், அப்படியா? அப்படி எனில் நீரே ஏன் அதைச் செய்யக் கூடாது? என்னை அடித்து வீழ்த்தும், பார்ப்போம்!”

“ஆஹா, அது எப்படி? உம்மை நான் அடித்து வீழ்த்துவதாவது? நீர் என் குருவாகப் போய்விட்டீரே! என்ன செய்யட்டும்? அது போகட்டும்! இப்போது நாம் கோதுலி ஆசிரமம் செல்லவில்லை எனில் எங்கே போகிறோம்?”

“அதைக் குறித்து எனக்கு இன்னும் தெளிவான நோக்கம் ஏற்படவில்லை, பைலரே! ஆனால் கடவுளரின் அருளால் நமக்கு விரைவில் நல்லதே நடக்கும். முதலில் நாம் நெருப்பை அணையாமல் மீண்டும் எரிய வைக்கலாம் வாரும்!”

த்வைபாயனரும், பைலரும் மீண்டும் நெருப்பை அணையாமல் எரிய வைக்க முயன்றபோது ஐந்து அல்லது ஆறு ராக்ஷசர்கள் க்ரீச்சென்ற குரலில் கத்திக் கொண்டும், ஓலமிட்டுக் கொண்டும் கைகளில் மூங்கிலால் ஆன தடிகளை ஏந்திக் கொண்டு புதர்களின் மறைவுகளிலிருந்து கிளம்பி வந்தனர். அனைவரும் எவ்விதத் துணியும் அணியாமல் நிர்வாணமாக இருந்தனர். என்ன நடக்கிறது என்பதை அவர்கள் புரிந்து கொள்ளும் முன்னரே ஒரு ராக்ஷசன் பைலரை அடித்துக் கீழே தள்ளி விட்டான். அவரும் நினைவிழந்து விழுந்து விட்டார். இன்னொருவன் த்வைபாயனரை அடிக்கப் பாய்ந்தான். அடி அவர் முதுகில் வேகமாக விழுந்தது. இன்னொருவன் நெருப்பை அணைக்க முயன்றான். முதுகில் அடி வாங்கிய த்வைபாயனர் தலை சுற்றிக் கீழே விழுந்தார். இன்னொரு அடி அடித்துத் தம்மைத் தீர்த்துக் கட்டி விடப் போகிறான் என்பதை எதிர்பார்த்த த்வைபாயனர் இன்னொரு அடிக்குக் காத்திருந்தார். ஆனால் அந்த அடி விழவே இல்லை. அரை மயக்கத்தில் கிடந்த அவருக்குச் சங்குகளின் முழக்கமும் ராக்ஷசர்கள் அனைவரும் சேர்ந்து தடதடவென ஓடி வரும் ஓசைகளும் கேட்டன. அதன் பின்னர் அவருக்கு நினைவே இல்லை. மயக்கத்தில் ஆழ்ந்தார்.

Friday, May 20, 2016

நண்பர்கள் ஆலோசனை!

இங்கே எங்கே அம்மா வந்தாள்? ஆனால் சந்தேகமே இல்லாமல் இது அம்மாவின் குரல் தான்.தன் கண்களைத் துடைத்துக் கொண்டு மீண்டும் மீண்டும் சுற்றும் முற்றும் பார்த்தார் த்வைபாயனர். அவர் அருகே பைலர் தான் அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்தார். சுற்றுவட்டாரத்தில் வேறு எவரையும் காணவே இல்லை. ஆனால் அந்தக் குரல்! மிகத் தெளிவாகவும், சற்றே பொறுமையின்மையும் கலந்து கேட்டது. அது அம்மாவின் குரலே தான்! அவள் எங்கே இருக்கிறாளோ தெரியவில்லை, ஆனால் இருக்கும் இடத்தில் இருந்து என்னை அழைக்கிறாள்! த்வைபாயனருக்கு மூச்சு விடுவது கூடக் கஷ்டமாக இருந்தது. அந்த அளவுக்கு அவர் மன எழுச்சியில் இருந்தார். “அம்மா, அம்மா, நீ எங்கே இருக்கிறாய்? எங்கிருந்து என்னை அழைக்கிறாய்? சூரிய பகவானே, அம்மா இருக்குமிடத்தை எனக்குக் காட்டுவாயாக!” என்று பிரார்த்தித்தார். அவருக்கு இருந்த அரைகுறைத் தூக்கமும் போய்விட்டது. நன்றாக விழிப்பு வந்துவிட்டது. அந்நிலையில் அவருக்குக் கண்ணெதிரே இரு பெரிய விழிகள் மிகக் கொடூரத்துடன் அக்னி குண்டத்திற்கு அப்பாலிருந்து அவரையே பார்த்துக் கொண்டிருப்பது தெரிய வந்தது.

காட்டில் வசிக்கும் கரடி அல்லது காட்டு மிருகங்களின் கண்களாக இருக்கலாம் என்றே நினைத்தார். அந்தக் கண்களைத் தவிரவும் கரியதொரு உருவம் அந்த அக்னி குண்டத்தை நோக்கி வந்தது; அல்லது அப்பால் சென்றது. என்னவென்று சரியாகப் புரியவில்லை. நன்கு கவனிப்பதற்காக உலர்ந்த சுள்ளிகளைப் போட்டுவிட்டு விசிறி எடுத்து நெருப்பை விசிறி எரியச் செய்தார். அவருடைய தாயின் குரல் மீண்டும் கேட்குமோ என்று அவர் காத்திருந்தார்; ஆனால் கேட்கவில்லை. அதில் அவருக்குக் கொஞ்சம் ஏமாற்றம் தான் எனினும் தன் தாய் தனக்காக எங்கேயோ காத்திருக்கிறாள் என்பது நிச்சயமாயிற்று. எங்கே என்று தான் அவருக்குத் தெரியவில்லை. ஏமாற்றத்திலும் தன்னால் எதுவும் செய்ய முடியவில்லையே என்னும் சுய பச்சாத்தாபத்திலும் அவர் கண்களில் கண்ணீர் பெருகிற்று. அம்மாவின் குரலைக் கேட்டதிலிருந்து அம்மாவின் அருகாமையும் அவள் நினைவும் அவரைத் துன்புறுத்தியது. அம்மாவைப் பார்த்தே ஆகவேண்டும் என்னும் எண்ணத்தில் பொறுமையின்றித் தவித்தார்.

அம்மாவைத் தேடிச் செல்வதும் வியர்த்தம் என்பதையும் அவர் அறிந்திருந்தார். எந்தப் பக்கம், எந்த நாட்டில் இருக்கிறாள் என்பதே தெரியாமல் எப்படிக் கண்டு பிடிப்பது? அவள் உயிருடன் இருக்கிறாளோ இல்லையோ! ஒருக்கால் இறந்திருந்தாளெனில்! ஆனால் அம்மாவை நினைக்க நினைக்க அவள் நினைவுகள் அவருக்கு மிக அதிகமாக வரவர, அம்மாவுக்குத் தன்னுடைய உதவி, தேவைப்படுகிறது என்னும் எண்ணத்தை அவரால் தவிர்க்க முடியவில்லை. மனம் முழுவதும் அதீத எதிர்பார்ப்புடன் அவர், “கடவுளே, கடவுளே, தயவு செய்! அம்மா இருக்குமிடத்தை எனக்குக் காட்டுவாய்!” என்று வாய் விட்டுப்புலம்பினார். அந்த நினைவுகளால் அவர் வேதனைதான் அதிகம் ஆயிற்று. மெல்ல மெல்ல விடியத் தொடங்கியது. அந்த அதிகாலை வேளையில் அவர் அக்னிகுண்டத்துக்கு அருகே முயல்கள் அமர்ந்து கொண்டு குளிர் காய்ந்து கொண்டிருப்பதைக் கவனித்தார். தங்கள் சிறிய கண்களால் அவரையே உற்றுப் பார்த்தவண்ணம் அவை அமர்ந்திருந்தன. மான்களும் நின்று கொண்டிருந்தன. மெல்லத்தங்கள் முகத்தை நிமிர்த்தி அவரைப் பார்த்தன. சற்றுத் தள்ளி ஓநாய்களும் அமர்ந்திருந்தன. நெருப்பின் முன்னர் தன் கைகளையும், கால்களையும் ஒன்றோடொன்று சேர்த்துக் கட்டிக் கொண்டு அமர்ந்திருந்த அந்த உருவம் நமக்கு ஆபத்தை விளைவிக்குமா அல்லது அதுவே ஆபத்தில் அகப்பட்டுக் கொண்டிருக்கிறதா?

பைலர் எழுந்து விட்டார். தங்கள் எதிரில் அமர்ந்திருந்த அனைத்து மிருகங்களையும் பார்த்த அவருக்கு இதயம் அடிப்பதையே நிறுத்திக் கொண்டது போல் இருந்தது. பயத்தில் தன் கண்களை இறுக மூடிக் கொண்டு த்வைபாயனரை இறுகக் கட்டிக் கொண்டார். த்வைபாயனர் சிறிதும் கவலைப்படாமல் நெருப்பில் மேலும் சுள்ளிகளை இட்டார். நெருப்பு கொழுந்து விட்டு எரிந்தது. அவர்கள் இருவரும் மான் தோலைத் தங்கள் இருவருக்கும் சேர்த்துப் போர்த்திய வண்ணம் ஒருவரை ஒருவர் அணைத்த வண்ணம் அங்கேயே அமர்ந்திருந்தார்கள். மெல்ல மெல்லக் காடும் விழிக்க ஆரம்பித்தது. பக்ஷிகளின் ‘சிர்ப், சிர்ப்’ என்னும் குரல் எங்கும் கேட்டது. அங்கே இருந்த ஓநாய்கள் தங்கள் மறைவிடத்துக்குச் சென்றுவிட்டன. த்வைபாயனரும், பைலரும் எழுந்து கொண்டு சோம்பல் முறித்துச் சோர்வைப் போக்கிக் கொண்டு அருகிலிருந்த ஏரிக்குக் குளிக்கச் சென்றார்கள். “நாம் வழக்கம் போல் நம் காலைக்கடமைகளை முடித்துவிட்டுக் காட்டில் பழங்களைப் பறிக்கச் செல்லலாம்.” என்றார் த்வைபாயனர்.

விரைவில் காலைக்கடமைகளை முடித்துக் கொண்டு அக்னியை வளர்த்தி ஆஹுதிகள் கொடுத்து இருவரும் காட்டில் பறித்து வந்த பழங்களை உண்டனர். பைலருக்கு மேலே செல்வதற்குக் கொஞ்சம் யோசனையாகவே இருந்தது. ஆகவே த்வைபாயனரிடம், “இனிமேல் நாம் இந்தப் பாதையில் எங்கே போவது? திரும்பி விடலாம்.” என்றார். த்வைபாயனருக்குக் கொஞ்சம் ஆச்சரியமாக இருந்தது. “நாம் ஏன் திரும்பவேண்டும்? எதற்காக?” என்று கேட்டார். “நாம் கொஞ்ச தூரம் எங்கேயானும் பொழுது போக்கப்போய் விட்டு வரலாம். ஆனால் மீண்டும் இங்கே வந்து தான் தர்மக்ஷேத்திரத்தைப் புனர் நிர்மாணம் செய்தாக வேண்டும்.” என்றார். “அது கடினமான காரியமாக இருக்கும்போலிருக்கிறதே! இந்த இடமே கடவுளராலும், ரிஷி, முனிவர்களாலும் சபிக்கப்பட்ட பிரதேசமாகத் தெரிகிறது. இங்கே நம் வேலையை ஆரம்பிப்பதில் பயனில்லை!” என்றார் பைலர்.

ஆனால் த்வைபாயனர் ஒத்துக்கொள்ளவில்லை!”இது தர்மத்தின் பிறப்பிடம்! சத்திய லோகம்! இங்கே ஓதப்பட்டு வந்த வேதங்களின் குரலொலியை பலவீனமானதொரு எதிரொலியாக என்னால் கேட்க முடிகிறது! பின்னணியில் வேத கோஷங்கள் ஒலித்தவண்ணமே இருக்கின்றன. இங்கே இருந்த நூற்றுக்கணக்கான அக்னி குண்டங்களிலிருந்து எழுந்த புகையின் மணத்தைக் கூட என்னால் நுகர முடிகிறது.” என்றார்.

“அவை எல்லாம் உன்னுடைய பிரமை! இங்கே எனக்கு ஓநாய்களின் ஊளைகளும், நரிகளின் ஊளைகளும் அவை முயல்களை உணவுக்காகத் துரத்தி வேட்டையாடுவதையும் தான் பார்க்கவும் கேட்கவும் முடிகிறது.” என்றார் பைலர்.

Thursday, May 19, 2016

காட்டில் கேட்ட குரல்!

ஹைஹேயர்களுடன் ஆன யுத்தம் நடந்தபோது இவர்கள் தங்கள் குழுவுடெஅன் காட்டின் உள்பகுதிக்கு யாராலும் நெருங்க முடியாத இடங்களுக்குச் சென்றனர். இதைக் குறித்துச் சொல்கையில் பராசரர் த்வைபாயனரிடம் ஓரிரு முறை ஒரு பெரிய மஹரிஷியின் பெயரைக் கூறி இருக்கிறார். அவர் பெயர் மஹா அதர்வண ஜாபாலி என்பதாகும். தர்மக்ஷேத்திரம் போய் அங்கே ஆசிரமம் அமைத்த பின்னர் த்வைபாயனர் அதர்வத்தில் சிறந்த குருமார்களிடமிருந்து இதை முழுவதும் கற்க ஆவல் கொண்டிருந்தார். இந்த மந்திரங்கள் எப்படிப்பட்ட அற்புதங்களை எல்லாம் நிகழ்த்துகிறது! இதை நாம் கற்றே ஆகவேண்டும் என்று எண்ணினார். அவர்கள் செல்லும் வழியில் கண்களில் பட்ட கிராமங்களில் அங்குள்ள மக்களிடம் இப்போது குருக்ஷேத்திரம் என அழைக்கப்படும் தர்மக்ஷேத்திரம் இன்னும் எவ்வளவு தூரம் என்று கேட்டுக் கொண்டு சென்றார்கள். சில சமயம் அவர்களால் தவறாகவும் வழிகாட்டப்பட்டார்கள். அதோடு இல்லாமல் அங்கே செல்லும் வழியில் இருக்கும் “ஓநாய்களின் உலகம்” என்னும் பகுதியைக் குறித்தும் அவர்கள் பயங்கரமான செய்திகளைத் தந்தார்கள். அவற்றைக் காதால் கேட்பதற்கே நடுக்கமாக இருந்தது.

பயணத்தில் அவர்கள் ஒரு பெரிய காட்டை அடைந்தார்கள். அங்கே முட்புதர்கள் அடங்கிய செடி, கொடிகள் மட்டுமின்றி உயரமாகவும் பருமனாகவும் வளர்ந்திருந்த பெரிய மரங்கள் காட்டை அடைத்துக் கொண்டு இருந்தன. பல்வேறு விதமான காட்டுக் கொடிகளும் ஆங்காங்கே படர்ந்து வளர்ந்திருந்தன. அடர்ந்த காடாகக் காணப்பட்டது அது! அங்கே உள்ளே செல்வதற்கு மனிதரால் உண்டாக்கப்பட்ட பாதை ஏதும் காணப்படவில்லை. அவ்வப்போது காட்டு மிருகங்கள் சென்றிருக்கக் கூடிய வழிகளே காணப்பட்டன. சரஸ்வதி நதிக்கரையோரமாகவே அவர்கள் நடந்தார்கள். அங்கே தான் அவர்கள், “மஹா சரஸ்வதி” என்றழைக்கக் கூடிய கல்விக்கடவுளுக்கு வழிபாடுகள் நடத்தினார்கள். அவளை வேண்டிக் கொண்டு அனைவரும் அறிவில் சிறந்தவர்களாக இருக்க சரஸ்வதியின் கடாட்சத்தைப் பெற்றார்கள். ஆனால் இப்போது அங்கே சரஸ்வதி ஒரு நதியாகப் பிரவாகம் எடுத்து ஓடவில்லை. மாறாக ஒரு சின்னஞ்சிறு வாய்க்காலாகக் காட்சி அளித்தது. அதிலிருந்து நீர் ஐந்து வெவ்வேறு ஏரிகளுக்குச் சென்றது. அவர்கள் நடுங்கினார்கள். இந்த ஐந்து ஏரிகளும் தான் “ச்யமந்தக பஞ்சகங்கள்” என அழைக்கப்படும் ஏரிகளாக இருக்க வேண்டும். இங்கே தான் பரசுராமர் யுத்தம் நடந்தபோது அவருடைய எதிரிகளின் ரத்தத்தால் இந்த ஏரிகளை நிரப்பி இருக்க வேண்டும்! இதை நினைத்து அவர்கள் மீண்டும் நடுங்கினார்கள்.

“நேர்மையின் களம்” “சத்தியத்தின் களம்” என்றெல்லாம் அழைக்கப்பட்ட அந்தப் பகுதி பார்க்கவே மிகக் கொடூரமாகக் காணப்பட்டது. த்வைபாயனரின் தந்தை பராசரரின் ஆசிரமம் இருந்த சாம்பல் பிரதேசத்தை விடவும் மோசமாகக் காணப்பட்டது. ஆங்காங்கே மனிதர்களின் எலும்புக்கூடுகளும், குதிரைகளின் எலும்புக்கூடுகளும் காணப்பட்டன. ரதங்கள் உடைந்து அதன் பாகங்கள் சிதறிக் கிடந்தன. கோரமான காட்சிகள் அவர்கள் கண்ணெதிரே காணக் கிடைத்தன. கண்ணுக்குத் தெரியாத பள்ளங்களும் நிறைந்து இருந்தன. ஒரு காலத்தில் குடிசைகளாக இருந்தவற்றின் மிச்சங்களைச் சில இடங்களில் கண்டனர். இப்போது அவை மூங்கில் குவியலாகக் காட்சி அளித்ததோடு அல்லாமல் மனிதர் வசிப்பதற்கான அறிகுறிகளும் சிறிதும் இல்லை. அவர்கள் அந்த ஏரியின் ஒரு பக்கக் கரையைத் தேர்ந்தெடுத்தார்கள். அங்கே சுத்தம் செய்தார்கள். உலர்ந்த சுள்ளிகளையும் கட்டைகளையும் சேகரித்தார்கள். ஓர் அக்னிகுண்டம் வெட்டினார்கள். அங்கே புனிதமான அக்னியை உண்டாக்கினார்கள். காட்டில் கிடைக்கும் பல்வேறு விதமான உண்ணக் கூடிய பழங்கள், கொட்டைகள் முதலியவற்றைச் சேகரித்து அவற்றை அக்னிக்கும் ஆஹுதி கொடுத்துத் தங்கள் உணவுக்கும் வைத்துக் கொண்டார்கள்.

இதை எல்லாம் செய்து முடிக்கும்போது மாலை ஆகி விட்டது. ஆகவே அவர்கள் உணவாகப் பழங்களையும் கொட்டைகளையும் உண்டபின்னர் தங்கள் மான் தோலை விரித்துக் கொண்டு அக்னி குண்டத்தின் அருகேயே படுத்துக் கொண்டார்கள். குளிர் தாங்கவில்லை. குளிர்காலம் ஆரம்பமாகி இருந்தது. தங்கள் மான் தோலாலேயே உடல் முழுவதையும் தலையோடு சேர்த்து மூடிக் கொண்டு இருவரும் தூங்க ஆரம்பித்தனர். களைத்திருந்த பைலர் உடனே தூங்கி விட்டார். ஆனால் த்வைபாயனருக்கு அவ்வளவு எளிதில் தூக்கம் வரவில்லை. தர்மக்ஷேத்திரத்தை எவ்வாறு பழைய நிலைமைக்குக் கொண்டு வருவது என்பது குறித்து யோசித்துக் கொண்டிருந்தார். அங்கே புனிதமான அக்னி எழுப்பப்பட்டு அதன் புகையால் விண்வெளி நிறைய வேண்டும். அங்குள்ள ஆசாரியர்களாலும் குருமார்களாலும் வேதங்கள் ஓதப்பட்டு அனைத்து மாணாக்கர்களுக்கும் வேதங்கள் கற்பிக்கப்பட்டு தர்மத்தின் படி வாழ்வது எப்படி என்பதைச் சொல்லிக் கொடுக்க வேண்டும். இவர் யோசனைக்குத் தடை ஏதுமில்லாமல் அங்கே மௌனம் குடி கொண்டிருந்தது. அந்த மௌனம் அவ்வப்போது இலைகளின் சரசரவென்ற ஒலியினாலும் இரவு நேரப் பறவைகள், மிருகங்களின் குரலாலும் மட்டுமே தடைப்பட்டுக் கொண்டிருந்தது. அவ்வப்போது நீர்ப்பிரவாகத்தின் சலசலவென்ற ஒலியும் இசைபோல் கேட்டது. மெல்ல மெல்ல அந்த இரவும் இரவின் கருமையும் த்வைபாயனரின் கண்களுக்குப் பழக்கம் ஆகி அங்குள்ள காட்டு மரங்கள் தூரத்தில் நடமாடிக் கொண்டிருந்த காட்டு மிருகங்கள் ஆகியவற்றின் உருவம் புகை படிந்த சித்திரம் போல் காணப்பட்டது.

அதன் பின்னர் த்வைபாயனருக்குத் தூக்கம் வந்தது. தூங்க ஆரம்பித்தார். எனினும் நல்ல தூக்கமாக இல்லை. அரைத்தூக்கத்திலேயே கனவு ஒன்றைக்கண்டார். துர்சொப்பனமாகத் தான் இருந்தது. அந்தக் காடும் அந்த இரவும் முழுவதும் வேதனைகளால் நிரம்பி விட்டது போல் இருந்தது. ஆங்காங்கே மனிதர்களின் புலம்பல்களும் வேதனையான முனகல்களும், பெண்களின் அழுகைச் சப்தமும் கேட்டன. அவர்களின் கைகளும் கால்களும் ஆங்காங்கே முறுக்கித் திருகிக் கொண்டன. யுத்தத்தில் இறந்த மனிதர்கள் அனைவரும் சேர்ந்து வந்து ஒப்பாரி வைத்து அழுவது போல் தோன்றியது அவருக்கு. அப்போது பார்த்துக் கடும் குளிர்காற்று வீசியது. அந்தக் காற்று ஊசியைப் போல் குத்தியது. குளிரில் நடுங்கிய பைலர் தூக்கத்திலேயே தன் கால்களைத் தூக்கிக் கொண்டு குறுகி மடிந்த வண்ணம் படுத்தார். முகத்தை முழங்காலில் புதைத்துக் கொண்டார். குளிர் தாங்க முடியாமல் பெருமூச்சும் விட்டார். த்வைபாயனர் தன்னிடமிருந்த மான் தோலையும் எடுத்துப் பைலருக்குப் போர்த்தி விட்டார். அவர் அந்த அக்னி குண்டத்தின் அருகே குத்துக்காலிட்டு அமர்ந்து கொண்டு முகத்தை முழங்காலில் புதைத்த வண்ணம் அக்னியின் மூலம் தன்னை வாட்டிய குளிரைப்போக்கிக் கொள்ள முயன்றார். அப்போது திடீரென ஒரு குரல், “கிருஷ்ணா, கிருஷ்ணா! எங்கே இருக்கிறாய்? அப்பா, குழந்தாய்! ஏன் நீ வரவில்லை? என்னிடம் வா அப்பா!” என்றது! த்வைபாயனருக்குத் தூக்கி வாரிப் போட்டது. அது அம்மாவின் குரல்!

Wednesday, May 18, 2016

வேதங்களைத் தொகுக்கும் வேத வியாசர்!

த்வைபாயனரும், பைலரும் படகை அவர்களுக்குத் தேவைப்பட்ட இடத்தில் நிறுத்தி இறங்கிக் கொண்டார்கள். அங்கிருந்து அவர்கள் நடந்து செல்வதாக நிச்சயித்துக் கொண்டார்கள். த்வைபாயனரின் மனோபலமும், அவருடைய ஈடுபாடான காரியங்களும் பைலர் மனதில் அவர் மேல் மிகுந்த நம்பிக்கையையும் மரியாதையும் உண்டாக்கி இருந்தது. த்வைபாயனரை மிக மரியாதையுடன் பார்த்தார் பைலர்.அவரைப் பொறுத்தவரை ஏதேனும் சரியில்லை எனில் அதற்காகக் குறைகள் சொல்லுவார். மற்றவர்கள் மேல் தவறைப் போட முயல்வார். கடவுளரை, ஆசாரியர்களை, மதத்தலைவர்களை என்று ஒவ்வொருவரையும் குற்றம் சொல்லிக் கொண்டிருப்பார். என்ன இருந்தாலும் பைலரும் அப்படி ஒன்றும் அதிகம் வயதானவர் அல்ல. இருவருமே இளைஞர்கள் தான்! ஆகவே வழியில் அவர்களுக்கு அலுப்புத் தட்டியபோதெல்லாம் ஒருவருக்கொருவர் நகைச்சுவையாகப் பேசிக் கொண்டார்கள். கேலி செய்து கொண்டனர். மரங்களின் மேல் ஏறிப் பழங்களைப் பறிப்பதில் போட்டி போட்டார்கள். ஓடிப் பிடித்து விளையாடினார்கள். பராசரரின் குருகுலத்தில் நடந்த நிகழ்வுகளை மீண்டும் நினைவூட்டிக் கொண்டு பேசினார்கள். இல்லை எனில் ஏதேனும் புதிய கதை புனைந்து கொண்டு புத்துணர்ச்சியை உண்டாக்கிக் கொண்டார்கள்.

செல்லும் வழியில் அவர்களுக்குச் சில இடங்களில் நல்ல விருந்தோம்பல் கிடைத்தது. சில இடங்களில் எவரும் கவனிக்கக் கூட இல்லை. அப்படி எதுவும் கிடைக்கவில்லை என்றாலும் அவர்கள் அதற்காகக் கவலைப்படாமல் காட்டிலுள்ள மரங்களிலிருந்து தின்னக்கூடிய பழங்களைப் பறித்துத் தின்றனர். சில சமயங்களில் அதுவும் கிடைக்காது! பசியோடு இருக்க நேரிடும். அப்போதெல்லாம் ஏதேனும் நகைச்சுவையாகப் பேசிப் பசியை மறக்கடித்துக் கொள்வார்கள். அதே நகைச்சுவையான விஷயத்தை ஏற்கெனவே பலமுறை பேசி இருந்தாலும் அதைக் குறித்துக் கவலைப்பட மாட்டார்கள். சில சமயங்களில் பைலர் வேண்டுமென்றே த்வைபாயனரிடம் சொல்வார்:”ரிஷிகளில் சிறந்தவரே, உம்முடைய சுரைக்குடுக்கை எப்போதும் உணவோடு நிறைந்திருக்கிறது. ஆனாலும் நீர் எனக்கு உணவளிக்காமல் எல்லாவற்றையும் நீரே உண்டு விடுகிறீரே! என்னுடன் பகிர்ந்து உண்ண வேண்டாமா?” என்று கேலியுடன் கேட்டுவிட்டு விண்ணைப் பார்த்து நிமிர்ந்து கொண்டு கைகளைக் கூப்பிய வண்ணம், “ஏ, சூரிய பகவானே! இப்படியா ஒரு சுயநலமிக்க குருவை எனக்குக் கொடுப்பாய்? இந்த குருவானவர் அவரே எல்லாவற்றையும் சாப்பிட்டுவிட்டு என்னைப் பசியோடு விடுகிறாரே!” என்பார்.

அதற்குப் பதிலாக த்வைபாயனர் ஒரு புனிதமான ஆசாரியராகத் தன்னை நினைத்துக் கொண்டு கொஞ்சம் கம்பீரமான குரலில், “மகனே, பைலா, நீ ஒரு நல்ல சீடனாக இருந்தால் தான் நல்ல குருவாக முடியும்! ஆகவே முதலில் நல்ல சீடனாக இருக்கக் கற்றுக்கொள்வாய்!!” என்று தன் தந்தை சொல்வது போல் சொல்வார். மேலும், “பார், இங்கே! என்னுடைய சுரைக்குடுக்கை உணவால் நிறைந்துள்ளது. கடவுளின் கருணை தான் என்னே! பைலா! உமக்கு வேண்டிய உணவை நீரே எடுத்துக் கொள்ளும்!” என்றும் கூறுவார். இதைச் சொல்லிய வண்ணம் தன்னுடைய சுரைக்குடுக்கையைப் பைலரிடம் நீட்டுவார். பைலரும் அதை வாங்கிக் கொண்டு உணவை அதிலிருந்து எடுத்து உண்ணுவது போன்ற பாவனைகள் செய்வார். அதன் பின்னர் வயிறு நிறைந்துவிட்டாற்போல் தன் வயிற்றைத் தடவிக் கொடுத்துக் கொண்டே, “ஆஹா, இன்று நான் தேவைக்கும் மேல் உண்டிருக்கிறேன்.” என்ற வண்ணம் ஒரு பெரிய ஏப்பத்தை விடுவது போல் பாவனை செய்வார். உடனே இருவருக்கும் சிரிப்பு வந்துவிடும். விழுந்து விழுந்து சிரிப்பார்கள்.

பைலருக்கு கோதுலி ஆசிரமத்தில் பசியோடிருந்த குழந்தைகளுக்கு சூரிய பகவான் உணவளித்ததைப் போல் இப்போது அளிக்கவில்லையே! அந்த அதிசயம் இப்போது ஏன் நடக்கவில்லை என்று புரியவே இல்லை! அவர் த்வைபாயனரிடம் கேட்பார்:” ஏன் இப்போது உங்கள் சுரைக்குடுக்கை உணவால் நிறையவில்லை? பசியோடிருந்த அந்த ஏழைக்குழந்தைகளுக்கு உணவளித்த சூரிய பகவான் இப்போது அப்படியே பசியோடிருக்கும் நமக்கு ஏன் உணவளிக்கவில்லை? இத்தனைக்கும் நாள் பூராவும் நாம் கடவுளரைத் தான் வழிபட்டு வருகிறோம். வேறெதுவும் செய்வதில்லை. அப்படி இருந்தும் நமக்குக் கடவுளரின் அருள் கிட்டவில்லை!” என்று கேட்டார்.  த்வைபாயனர் அந்தச் சமயங்களில் தன்னைத் தானே பைலரை விட வயதானவனாக நினைத்துக் கொள்வார். த்வைபாயனர் சொல்வார்:” என் மகனே! கடவுள் ஒரு போதும் சுயநலமாக நமக்கு உணவு வேண்டும் என்று பிரார்த்தித்துக் கொண்டால் உதவ மாட்டார். மற்றவருக்காக நாம் பிரார்த்திக்க வேண்டும். சுயநலக் கலப்பே இருக்கக் கூடாது!” என்று பராசரரின் குரலில் கூறுவார். இதைக் கேட்டுப் பைலர் சிரிக்க த்வைபாயனருக்கும் சிரிப்பு வந்து விடும்.

ஆனாலும் திரும்பத் திரும்ப ஒரு விஷயத்தை த்வைபாயனர் பைலரிடம் உறுதிபடக் கூறி வந்தார். “நாம் நமக்கென ஒரு ஆசிரமத்தை முதலில் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். அதன் பின்னர் பசியோடிருக்கும் ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும். அவர்களுக்கு நாம் உணவருந்தும் முன்னர் உணவளித்து அவர்கள் பசியை ஆற்ற வேண்டும். இதற்கெல்லாம் நாம் உயிரோடிருக்க வேண்டும். நம்மை உயிருடன் காப்பாற்றும் பொறுப்பை நாம் கடவுளரிடம் ஒப்படைப்போம். நாம் வேதங்களுக்காக வாழ்கிறோம். அவற்றைக் காப்பாற்றி அடுத்த தலைமுறைக்குச் சிறிதும் மாற்றமின்றிக் கொண்டு செல்லப் பாடுபடுகிறோம். ஆகவே வேதங்களுக்காக வாழும் நம்மைக் காக்கவேண்டியது அந்தப் பரம்பொருளின் பொறுப்பு! நம்மைச் சாகவிடாமல் அவன் காப்பாற்றுவான்!” என்றார். செல்லும் வழியில் வேதங்களை ஓதியவண்ணமே இருவரும் சென்றனர். கடவுளரை வழிபட்டுப் பிரார்த்தனைகள் செய்து கொண்டும், தர்மக்ஷேத்திரத்தின் புனர் நிர்மாணத்துக்கு உதவிகள் செய்யும்படியும் பிரார்த்தித்துக் கொண்டார்கள்.


செல்லும்போதும், வேதங்கள் ஓதும்போதும் அவற்றை ஒழுங்கு செய்து வரிசைப்படுத்தவும் முயன்று கொண்டு சென்றனர். சரஸ்வதி நதிக்கரையில் வசித்து வந்த ரிஷி, முனிகளால் ஓதப்பட்டுப் பாதுகாக்கப்பட்டு வந்த அந்த மந்திரங்களைச் சொல்லுவதும் அவற்றை வகைப்படுத்திப் பிரிப்பதும் அப்படி ஒன்றும் கஷ்டமான வேலையாக இல்லை அவர்களுக்கு. கடவுளரை அழைக்கும் மந்திரங்களும், பிரார்த்தனை மந்திரங்களும் நிறைந்த ரிக், கடவுளருக்குப் புனித வேள்விகளில் கொடுக்கும் ஆஹுதிகள் குறித்துச் சொல்லும் மந்திரங்கள் நிறைந்த யஜுர், சொற்களிலும் ஒலியிலும் ஏற்றத்தாழ்வுகளைக் கொண்டு ஒரு சங்கீதம் போல் தொனித்த மற்ற மந்திரங்களைச் சொல்லும் முறை சாமம், இவை மூன்று சேர்ந்து த்ரயி வித்யா எனப்பட்டது. மூன்று மடங்கான வேதங்கள்!

ஆனால் த்வைபாயனருக்கு அவற்றில் துண்டு துண்டாக இருந்தவற்றை ஒழுங்கு படுத்திச் சொல்வதில் சிரமங்கள் ஏற்பட்டன. இவற்றை முழுவதும் அறிந்து ஒழுங்கு படுத்தினால் அதர்வ வேதத்திலும் நிறைந்த அறிவு ஏற்படும். அப்படித் தான் த்வைபாயனரின் தந்தை பராசரர் சொல்லி இருந்தார். இந்த மந்திரங்கள் மூலிகைகளிலும், வசியங்களிலும், தாயத்துகள் போன்றவை கட்டும்போதும் மிகவும் பயன்பட்டன. அவற்றில் இந்த மந்திரங்களைச் சொல்லிச் செய்கையில் தக்க பலன்கள் கிடைத்து வந்தன. எதிரிகளை வெல்வதற்கும், எதிரிகளை அழிப்பதற்கும், அபாயங்களை நீக்குவதற்கும், சிதைவுகளைத் தடுக்கவும், காதலில் வெற்றி பெறவும், பேய், பிசாசு, குட்டிச்சாத்தான் போன்ற துர்சக்திகளை விரட்டவும் பயன்பட்டதோடு அல்லாமல் துல்லியமாக எதிர்காலத்தைக் கணித்துக் கூறவும் முடிந்தது. பல்வேறு விதமான நோய்களை விரட்டவும் பயன்பட்டது.

பராசரரின் கூற்றுப்படி இந்த மந்திரங்கள் எல்லாம் ஒரு குறிப்பிட்ட குழுவைச் சார்ந்த ரிஷிகளாலேயே சொல்லப்பட்டு வந்தன. அவர்கள் பிருகு—ஆங்கிரஸா அல்லது அதர்வா—ஆங்கிரஸா என அழைக்கப்பட்டனர். இவர்கள் தர்மக்ஷேத்திரத்தின் மற்ற ரிஷிகளோடு சேர்ந்து வாழாமல் தனிக்குழுவாகச் செயல்பட்டனர். அவர்களைப் பொறுத்தவரை வேதம் நான்கு பகுதிகளாக ஆனது. ரிக், யஜுர், சாமம், அதர்வம் ஆகியன.

Tuesday, May 17, 2016

வேதங்கள் துணை செய்ய வாழ்வேன்!

தன் தாய்க்கு ஏற்பட்ட அவப்பெயரை நீக்கவேண்டி இப்படிச் செய்தாலும் த்வைபாயனர் முழு மனதுடன் அந்தக் கிராமவாசிகளின் நலனை வேண்டினார். பின்னர் அவர் கேட்டுக் கொண்டதின் பேரில்ன் அந்தக் கிழவி ஒரு தண்ணீர்ப்பானையில் ஈரமண்ணை நிரப்பி அதை மூடி வைக்க ஒரு மூடியையும் அதன் வாய்க்கேற்றாற்போல் கொடுத்தாள்.கூடவே கொஞ்சம் வெல்லமும், எலுமிச்சையும் கொடுத்தாள். த்வைபாயனர் அங்கிருந்த அரசமரத்தில் இருந்து ஒரு இலையைக் கிள்ளினார். அந்த ஈரமண்ணால் நிரம்பி இருந்த பானையில் அந்த இலையைப் போட்டார். பின்னர் வெல்லத்தையும் எலுமிச்சைச்சாறையும் கலந்து குழைவாக்கி அந்தக் கிழவி கொடுத்த மூடியால் அந்தப் பானையை மூடி வெல்லக் கலவையால் சுற்றிலும் பூசினார். மூடி நன்கு உறுதியாகப் பதிந்து விட்டது என்பது உறுதியானதும் அதை மெதுவாக நதியில் மிதக்க விட்டார். பின்னர் ஒரு நீண்ட பெருமூச்சுடன் அதையே பார்த்துக் கொண்டிருந்தார்.

“என்ன இது, த்வைபாயனா? இதன் பொருள் என்ன?” என்று பைலர் கேட்டார். இப்படி ஒரு சடங்கை அவர் அன்று வரையில் பார்த்ததே இல்லை. த்வைபாயனரின் முகமும் வாடி இருந்தது. கண்களில் துக்கம் தெரிந்தது. பின்னர் அவர் உணர்ச்சி ததும்பினாலும் மெல்லப் பேசினார்:” அம்மாவுக்கும் எனக்கும் ஓர் உடன்படிக்கை இருந்து வந்தது. அம்மாவுக்கு என்னிடம் ஏதேனும் கோபம் வந்துவிட்டால் நான் அவளுக்கு ஓர் அரச இலையை என் மன்னிப்புக்கோரிக் கொடுப்பேன். அம்மாவுடன் அப்போது நான் பேச முடியாது. மௌனமாகவே இருக்க வேண்டும். ஆனால் அந்த இலையைப் பார்த்ததும் அம்மா என்னை மன்னித்துவிடுவாள். நான் அவளிடம் கோபமாக இருந்தேன் எனில் இதே போல் தான் அவள் எனக்கு ஓர் அரசிலையைக் கொடுப்பாள். நானும் கோபம் தணிந்து அம்மாவைப் புரிந்து கொள்வேன்.”

“அதெல்லாம் சரிதான் த்வைபாயனா! ஆனால் நீ அரசிலையை இந்தப் பானையில் போட்டு மூடி நதியில் அல்லவோ மிதக்க விட்டிருக்கிறாய்? இதன் பொருள் என்ன?”

“பைலரே, அம்மா எங்கே இருக்கிறாளோ, எனக்குத் தெரியாது! இங்கேயும் யாருக்கும் தெரியவில்லை.” என்றபடி யமுனையையே சிறிது நேரம் மிகுந்த பாசத்துடன் பார்த்தார் த்வைபாயனர். பின்னர் மீண்டும் சொன்னார்: “பைலரே, நான் இதை யமுனைத்தாயிடம் விட்டு விட்டேன். அம்மா இருக்குமிடத்தைக் கண்டு பிடிப்பது அவள் பொறுப்பு. அம்மா இருக்குமிடத்துக்கு இந்தப் பானையைக் கொண்டு செல்வதும் அவள் பொறுப்பு. இதைப் பார்த்ததும் அம்மாவும் புரிந்து  கொள்வாள். யமுனைத் தாயும் புரிந்து கொள்வாள். நான் அம்மாவை விட்டுச் சென்றதற்கு இருவருமே என்னை மன்னிப்பார்கள்.” மூன்றாம் நாள் காலையில் அந்தத் தீவிலிருந்து அவர்கள் திரும்பிச் செல்வதற்கான படகு வந்து விட்டது. அங்குள்ள மீனவர்கள் அனைவரும் ஒன்று கூடி அவர்களை வழியனுப்பி விட்டு மீண்டும் வருகை தருமாறு வேண்டிக் கொண்டார்கள்.

“நான் திரும்ப வருவேனா என்ன என்பது எனக்குத் தெரியாது! ஆனால் நான் திரும்பினாலும்………”என்ற த்வைபாயனர் அந்த வயதான கிழவியைப் பார்த்து, “தாயே, உன்னை நான் மீண்டும் சந்திப்பேனா என்ன என்பது எனக்குத் தெரியவில்லை! எனக்காக நீ ஒரு காரியம் செய்ய வேண்டுமே!” என்று வேண்டினார். “நான் உங்களுக்காக என்ன வேண்டுமானாலும் செய்வேன், சுவாமி!” என்றாள் அந்தக் கிழவி. ‘இந்தக் கிராமத்தில் விழுந்திருந்த சாபத்தை நீக்கி எங்களுக்கெல்லாம் நல்வழி காட்டியவர் நீரல்லவோ, சின்ன முனிவராக இருந்தாலும் உம்முடைய கீர்த்தி பெரிதாக இருக்கிறது. என்ன வேண்டுமோ சொல்லுங்கள்!” என்றாள் கிழவி.

“அப்படி எனில், தாயே, தயவு செய்து ஜாருத்தின் பெண்ணைக் குறித்துத் தவறாக நினைக்காதீர்கள்; தவறாகப் பேசாதீர்கள்!”

“அது எப்படி சிறுமுனியே, அவள் ஒரு வெட்கம் கெட்ட பெண்! எந்த அம்மாவும் தன் பிள்ளையை இப்படிப் பிரிந்து வாழச் சம்மதிப்பாளா? இவள் சம்மதித்திருக்கிறாளே!”

“தாயே, மச்சகந்தியின் அந்த மகன் நான் தான்!”

கிழவி அதிர்ச்சியில் கீழே விழுந்துவிடுவாள் போலிருந்தது. மிகவும் பயத்துடன் த்வைபாயனரைப் பார்த்து, “சிறுமுனியே, என்னை மன்னித்து விடும். என்னிடம் கோபம் கொண்டு சபித்து விடாதீர். உம் ஆசிகள் எனக்குத் தேவை!” என்றாள்.

“தாயே, உனக்கு எங்கள் ஆசிகள் எப்போதும் உண்டு; ஆனால், என் தாய் என்னைப் பிரிந்தது என் நன்மைக்காவே தான்! மனமொப்பி இல்லை.”

இதைச் சொல்லிவிட்டுப் படகில் ஏற ஆயத்தமானார் த்வைபாயனர். படகில் ஏறுமுன் கரை ஓரத்தில் நின்றவண்ணம் யமுனையையே மிக சோகத்துடன் பார்த்துக் கொண்டிருந்தார் த்வைபாயனர். இந்த யமுனை ஒரு தாயைப் போலவே என்னையும் தொட்டிலில் போட்டு ஆட்டி இருக்கிறாள். இவளுடன் நான் எப்படி எல்லாம் விளையாடி இருக்கிறேன். பெருமூச்சு விட்டார் த்வைபாயனர். சூரிய ஒளியில் நீர்ப் பிரவாகம் வெள்ளியைப் போல் பிரகாசித்தது. யமுனையின் இரு கரைகளையும் தன்னால் முடிந்தவரை திரும்பத் திரும்பப் பார்த்த த்வைபாயனர் அதிகம் மாற்றம் இல்லை என்பதைப் புரிந்து கொண்டார். பின்னர் தன் தந்தைக்காகக் காத்திருந்த நாட்களில் நீரின் பரப்பு விண்ணின் மேற்குப் பகுதியில் போய்ச் சேரும் அடிவானத்தையே உற்று நோக்கினார். அம்மாவை அங்கே தேடினாரோ? ஒரு கண நேரத்திற்கு அவர் தன் வாழ்க்கையில் தன் தந்தையைத் தான் தேடி நின்று கொண்டு இருக்கும் அந்தக் காலத்திற்கே சென்று விட்டார். மீண்டும் அப்படி நிற்பது போன்ற உணர்வு!

அவர் அப்படிக் காத்திருக்கையில் அவர் தாய் ஓர் உத்வேகத்துடன் வந்து அவரிடம் பேசுவது போலவும் அவருக்குத் தோன்றியது. ஆனால்….. ஆனால்….. அவர் இதயத்தில் மாபெரும் அடி விழுந்து விட்டது. இடியாக விழுந்த அந்த அடி அவர் மனதை நோக அடித்துவிட்டது. அவர் தாய் அங்கே இல்லை. எங்கேயோ போய்விட்டாள். எங்கே என்றே தெரியவில்லை! எங்கே சென்றாள் என்றோ யாருடன் சென்றாள் என்பதோ அவருக்குத் தெரியாது. அவர் தாய் தான் அவரை “கிருஷ்ணா” என அழைப்பாள். இனி யார் அப்படி அழைக்கப் போகிறார்கள்? அப்படி அம்மா தன்னை கிருஷ்ணா என அழைப்பதை இனி கேட்போமா? ஓர் வெறுமை அவரைப் பற்றிக் கொண்டது. தந்தைக்காவது வயதாயிற்று இறந்தார்; தாய் இருக்கிறாள் என நினைத்தால்! இருக்குமிடமே தெரியவில்லையே! தன் தந்தைக்காகக் காத்திருந்த சிறு பையன் அல்ல அவர் இப்போது! இளைஞனாகி விட்டார். அவர் தந்தையை அவர் இனி பார்க்க வேண்டுமெனில் த்வைபாயனராகிய அவரும் பித்ருலோகம் தான் செல்ல வேண்டும். ஆனால் தாயை எங்கு பார்ப்பது?

அவர் மனதிற்குள் வருணனை வழிபட்டு அவர் தாய் எங்கிருந்தாலும் மகிழ்ச்சியுடன் வாழ வேண்டும் எனப் பிரார்த்தித்துக் கொண்டார். ஒருவேளை அவள் பித்ருலோகம் போயிருந்தாலும் அங்கேயும் தந்தையைக் கவனித்துக் கொண்டு சந்தோஷமாக இருக்கட்டும். தன் தாயும், தந்தையும் மகிழ்வுடன் இருக்க வேண்டிய மந்திரங்களை அவர் சொல்ல ஆரம்பித்தார். சொல்லச் சொல்ல அவர் மனதில் சாந்தி பிறந்தது. நம்பிக்கையும் உண்டாயிற்று. அவர் தனியாக எங்கே இருக்கிறார்? அவருடன் வேதங்கள் இருக்கின்றனவே! அவற்றை அவர் தந்தை காட்டிய வழியில் தொகுக்க வேண்டும். அது மட்டுமா? தர்மக்ஷேத்திரம் புனர்நிர்மாணத்திற்காகக் காத்துக் கொண்டிருக்கிறதே! அதை அவர் கவனிக்க வேண்டாமா?

Monday, May 16, 2016

மச்சகந்திக்கு என்ன ஆயிற்று!

“ஆமாம், மகனே, பாங்கு முனி (நொண்டி முனி) என்றொருவர் இருந்தார். அவர் அடிக்கடி இந்தத் தீவுக்கு வந்து செல்வார். இந்தத் தீவின் மக்களை ஆசீர்வதிப்பார். அவருடைய ஆசிகளாலேயே இவர்கள் வாழ்க்கையில் முன்னேற்றமும் வந்தது.”  என்று சொன்ன அந்தக் கிழவி கொஞ்சம் நிறுத்தினாள். த்வைபாயனருக்குத் தன் தந்தையின் நினைவு வந்து மனதில் துக்கம் ஏற்பட்டது. எனினும் கிழவி மேலும் பேசக் காத்திருந்தார். கிழவி தொடர்ந்தாள். “ஆனால் இந்த மக்கள் நொண்டி முனியை அவமதித்து அவரை எரிச்சல் மூட்டி விட்டார்கள். அவர் மகன் இங்கே தன் தாயுடன் இருந்து வந்தான். அவனைத் துரத்தி விட்டு விட்டார்கள். ஆகவே யமுனைத் தாய் அவர்கள் குடும்பத்திற்கே சாபத்தைக் கொடுத்து விட்டாள்.” என்றாள்.

“பின்னர் என்ன நடந்தது?” என்று த்வைபாயனர் கேட்டார். அதற்கு அந்தக் கிழவி, “இது எல்லாவற்றுக்கும் காரணம் அவங்க பொண்ணு தான் சுவாமி. அவங்களுக்கு நடந்த துரதிர்ஷ்டமான கஷ்டங்களுக்கு எல்லாம் அவளே காரணம். அவள் ஒரு மோசமான கீழ்த்தரமான பெண். எந்த நல்ல மீனவனும் அவளை முழு மனதோடு திருமணம் செய்ய மாட்டான். அப்படி எவனாவது அவளைத் திருமணம் செய்து கொள்ள நேர்ந்தால் அந்த மனிதன் இந்த சாபத்துக்கு ஆளாகி விடுவான். அதற்குப் பயந்தே எவரும் அவளைத் திருமணம் செய்யத் துணியவில்லை.”

இதைக் கேட்ட த்வைபாயனருக்குக் கண்ணீரே வந்துவிடும் போல் இருந்தது. சமாளித்துக் கொண்டார். ஆனாலும் தொண்டையில் துக்கம் அமுக்கிற்று. மிக முயற்சி எடுத்துத் தன்னை சமாளித்துக் கொண்டவர், “அந்தப் பெண்ணுக்கு என்ன ஆயிற்று?” என்று கேட்டார்.

“ஆஹா, அது ஒரு பெரிய கதை! ஒருநாள் அந்தப் பெண் படகோட்டிக் கொண்டு போனபோது ஒரு அரசனுக்குப் படகு ஓட்டும்படி ஆயிற்று. அவன், அந்த அரசன் என்ன காரணத்திற்காகவே இந்தத் தீவுக்கு வந்தான். உண்மையில் அவன் அரசனா இல்லையா என்பதிலேயே எனக்குச் சந்தேகம் தான்! ஆனால் அவன் உடைகள் எல்லாம் ஒரு அரசனின் உடையைப் போல மிக ஆடம்பரமாகத் தான் இருந்தன. அரச குலத்துக்குரிய ஆபரணங்களையும் பூண்டிருந்தான். இடையில் நீண்ட வாளும் காணப்பட்டது. அதன் பின்னர் அவன் போய்விட்டான். பின்னர் ஒரு நாள் திரும்பி வந்தான். அப்போது ஓர் ரதத்தில் ஏறிக் கொண்டு வந்தான். இந்த வெட்கம் கெட்ட பெண்ணை அவன் அந்த ரதத்தில் அழைத்துச் சென்றுவிட்டான். அதன் பின்னர் அந்தப் பெண் திரும்பவே இல்லை!” என்றாள்.

“அப்படியா? அவள் பெற்றோர்? அவர்களுக்கு என்ன ஆயிற்று?” என்று த்வைபாயனர் கேட்டார். “ஓ, அவங்களும் அந்த அரசனோடு கூட வந்த பரிவாரங்களோடு அவங்க கொண்டு வந்த வண்டிகளில் ஏறிக் கொண்டு போய்விட்டார்கள்.” என்று வேண்டா வெறுப்பாகச் சொன்னாள் அந்தக் கிழவி. “அவர்கள் எங்கே போனார்கள் என்பதை நீ அறிவாயா?” என்று த்வைபாயனர் கேட்டார். “அவங்க எங்கே போனாங்களோ, என்னமோ, எங்களுக்கு எதுவும் தெரியாது. நாங்க அவங்களைக் குறித்துத் தெரிஞ்சுக்கவும் இஷ்டப்படலை!” என்றாள் அந்தக் கிழவி.

“ஏன் தாயே?” என்ற த்வைபாயனரிடம், “அந்த ஜாருத்துக்குப் புத்தி கெட்டுப் போய்விட்டது சுவாமி, புத்தி கெட்டுப் போய்விட்டது. அவன் தன் மகளை அந்த அரசனுக்கு விற்று விட்டான்.” என்று பொருமினாள். “ம்ம்ம்ம், தீவின் அந்தப் பகுதிக்கு அதன் பின்னர் இங்கிருந்து எவரும் செல்லவில்லையா? அங்கு போய் வசிக்கவேண்டும் என எவருக்கும் தோன்றவில்லையா?” என்று த்வைபாயனர் கேட்டார். “யாருக்கும் இஷ்டமில்லை, அங்கே போய் வசிப்பதற்கு. எவரும் பிரியப்படவில்லை. அது ஓர் சபிக்கப்பட்ட இடம். அங்கே போய் வசித்தால் இந்தக் கிராமத்திற்கும் அந்தச் சாபம் வந்துவிடும். பின்னர் நாங்களும் கஷ்டப்பட வேண்டும்.” என்றாள் கிழவி. “அப்படி ஏன் சொல்கிறாய், தாயே?” என்ற த்வைபாயனரிடம், “ஏனெனில் ஜாருத்தும் அவன் மனைவியரும் பாங்கு முனியையும் அவர் மகனையும் விரட்டி அடித்துவிட்டார்கள். ஜாருத்தின் மனைவி சண்டோதரி என்னுடைய சித்தி மகள் தான். ஆனாலும் அவளுக்கு என்னைப் பிடிக்கவே பிடிக்காது. என்னைக் கண்டாலே வெறுப்பாக இருக்கும் அவளுக்கு!”

“தாயே, பாங்குமுனியை நீ நேரில் பார்த்திருக்கிறாயா?”

“ஓ, மிக நன்றாகத் தெரியுமே! நான் நன்கறிவேன் அவரை! ஹூம், அவர் மட்டும் இப்போது இங்கு வந்தாரெனில்! ஒரு முறை வந்தாலும் போதுமே! இந்தத் தீவின் சாபத்தை நிமிடத்தில் எடுத்துவிடுவார். புனிதமான அக்னிகுண்டத்தில் தீ வளர்த்து யாகங்களைச் செய்து சாபத்தை எடுத்துவிடுவார்.   கடவுளருக்கு வழிபாடுகள் செய்வார்.” என்றாள் கிழவி.

“ஓ, அப்படியா? நம் மதிப்புக்குரிய பாங்கு முனிவர் பித்ருலோகத்துக்குப் போய்விட்டார். நான் அவருடைய சீடன் தான் தாயே! உனக்கு விருப்பமாக இருந்தால், நான் அந்த சாபத்தை எடுத்துவிடுகிறேன்.” என்றார் த்வைபாயனர். மாலை வந்தது. த்வைபாயனரும் பைலரும் அந்தத்தீவின் மற்றொரு பகுதிக்கு மீண்டும் சென்றனர். தன் தாயும், பாட்டனும் இருந்த பகுதிக்கு வந்த த்வைபாயனர் அங்கே இடிந்து, சிதைந்து போயிருந்த குடிசைக்கு அருகே இரவைக் கழிக்க விரும்பினார். அதிலும் த்வைபாயனருக்கு அவர் தாய் இருந்திருந்தால் தாம் எங்கே தூங்கி இருப்போமோ அதே இடத்தில் தூங்க வேண்டும் போல விருப்பம் வந்தது. ஆகவே அன்றிரவை அங்கே கழித்தனர். மறுநாள் காலை ஆனதும் கிராமத்தின் இன்னொரு பகுதியிலிருந்த மீனவர்களை எல்லாம் அழைத்தார் த்வைபயனர். அவர்களை அங்கே அமர வைத்து அவர்களுக்கு எதிரே புனிதமான அக்னிக் குண்டம் அமைத்துத் தீ வளர்த்து யாகங்களை முறைப்படி செய்தனர். வருணன், அக்னி, சூரியன் ஆகியோருக்கு ஆஹூதிகள் கொடுத்து வழிபட்டு யமுனைத்தாயிடமும் வேண்டிக் கொண்டு சடங்குகளை முறைப்படி செய்து அந்தத் தீவின் சாபத்தை நீக்கினார்கள்.

Sunday, May 15, 2016

கல்பி தீவுக்குக் கிட்டிய சாபம்!

பனிரண்டு நாட்கள் காரியங்களும் முடிந்து பதின்மூன்றாம் நாள் கௌதமர் த்வைபாயனரிடம், “த்வைபாயனா! நீ இங்கேயே இருக்கலாம். தர்மக்ஷேத்திரத்துக்குப் போக வேண்டாம். இதுவும் உன்னுடைய ஆசிரமம் தான். இந்த ஆசிரமம் இன்று இந்த அளவுக்கு வளர்ந்திருக்கிறது எனில் அதன் காரணம் உன் தந்தை தான். அவரால் தான் நானும் இன்று ஓர் ஆசாரியனாக இருக்கிறேன். நான் அவருக்கு மிகவும் கடமைப்
பட்டிருக்கிறேன். இந்த ஆசிரமத்தை நீயே எடுத்து நடத்துவாயாக! நானும் உனக்கு உதவி செய்கிறேன். உனக்கு வயது குறைவு என்றாலும் உன்னுடைய அறிவுக்கும், தகுதிக்கும் இந்த ஆசிரமப் பொறுப்பை ஏற்பது தவறில்லை. “ என்றார். அதற்கு த்வைபாயனர் தன்னிரு கரங்களையும் மிகவும் அடக்கத்துடன் கூப்பி கௌதமரை நமஸ்கரித்தார்.

“ஆசாரியர்களில் சிறந்தவரே! நான் உங்கள் மாணாக்கன். இந்த ஆசிரமம் தான் எனக்குப் பிறந்த வீடு ஆகும். ஆகவே தாங்கள் என்னை இருக்கச் சொன்னதில் தவறில்லை. ஆனால் குருவே, நான் என் தந்தையின் கடைசி ஆசையைப் பூர்த்தி செய்ய வேண்டும். தர்மக்ஷேத்திரத்தை புனர் நிர்மாணம் செய்யவேண்டும் என்பதை அவர் வாழ்நாள் ஆசையாகக் கொண்டிருந்தார். இப்போது அவர் பித்ருலோகத்துக்குச் சென்று விட்டாலும், அவரின் ஆசையை நான் பூர்த்தி செய்தே ஆகவேண்டும். அவர் ஆசை என்னை தர்மக்ஷேத்திரத்தின் பால் இழுக்கிறது. நான் கட்டாயமாய் அங்கே போயாக வேண்டும்!” என்றார். கௌதம ரிஷி விடாமல் மீண்டும் வேண்டுகோள் விடுத்தார். “த்வைபாயனா, அங்கே செல்வதில் உள்ள இடையூறுகளைக் குறித்து நீ சரியாகப் புரிந்து கொள்ளவில்லை. உனக்குத் தெரியவில்லை. அங்கிருந்து பயணம் செய்து வந்த பயணிகள் சொல்வதில் இருந்து வழியெங்கும் காட்டு மிருகங்களின் அட்டகாசம் அதிகம் இருப்பதாகத் தெரிகிறது. பகலில் இப்படி எனில் இரவில் அவற்றின் கூக்குரலும், ஊளையும் பயணிக்கவோ, ஓய்வு எடுக்கவோ விடுவதில்லை. அங்கே ஆசிரமங்கள் ஏதும் இல்லை, மகனே! அதே போல் அங்கே வேதங்களின் கோஷங்களும் கேட்காது! காட்டு மிருகங்களின் கூச்சல் தான் கேட்கும்.” என்றார்.

த்வைபாயனர் கீழே விழுந்து தன் குருவை நமஸ்கரித்துக் கொண்டார். பின்னர் பேசலானார்; “சர்வ மாட்சிமை பொருந்திய குருவே, நான் என் தந்தைக்கு உறுதி மொழி கொடுத்திருக்கிறேன். தர்மக்ஷேத்திரத்தைப் புனர் நிர்மாணம் செய்வதற்கு உதவுவதாகக் கூறியுள்ளேன். கடந்த பனிரண்டு வருடங்களாக நாங்கள் இருவரும் இதைக் குறித்தே பேசி வந்திருக்கிறோம். ஆகவே தந்தைக்குக் கொடுத்த உறுதிமொழியை என்னால் மீற முடியாது! அதைத் தவிர்க்க முடியாது. தயவு செய்து என்னை மன்னித்து என்னை என் வழியில் செல்ல அனுமதி கொடுங்கள்!” என்றார். ஆசாரியர் அப்படியும் மீண்டும் சந்தேகத்தைக் கிளப்பினார். “குழந்தாய்! உன் தந்தை பலவிதமான கொடுமைகளை எல்லாம் அனுபவித்த பின்னர் அவருடைய சீடர்கள் எவருக்கும் தர்மக்ஷேத்திரம் செல்லும் துணிவு ஏற்பட்டதில்லை!” என்றார்.

“ஆம், ஐயா, அவர்கள் வரையில் அவர்கள் செய்தது சரியே! நான் அவர்களைக் குற்றம் சொல்லவே இல்லை!”

“மகனே, நீ தனியாகவா போகப் போகிறாய்?”

“ஆம், ஐயா! என்ன நடந்தாலும் நான் அங்கே செல்லத் தான் போகிறேன். பார்க்கப்போனால் என் தந்தை போயிருக்க வேண்டும். உயிருடன் இருந்திருந்தால் கட்டாயம் சென்றிருப்பார் என்னையும் அழைத்துக் கொண்டு.” என்று சொன்ன த்வைபாயனர் அதன் பின்னர் துக்கத்தில் சற்று  மௌனமாகி விட்டார். அதன் பின்னர் மீண்டும் பேசினார்;” ஐயா, அப்படி எனக்கு ஏதேனும் நேர்ந்துவிடுமோ எனக் கவலைப்படுகிறீர்கள். பயப்படுகிறீர்கள். ஆனால் நான் அதற்கெல்லாம் அஞ்சவில்லை. தந்தையைப் போல நானும் பித்ருலோகம் செல்ல நேர்ந்தால் சந்தோஷமாகவே செல்வேன். அதைக் குறித்து எனக்குக் கவலை இல்லை. என் தந்தை தான் அங்கே இருக்கிறாரே! ஆகவே இவற்றுக்கெல்லாம் பயந்து நான் என் வாக்கைக் காப்பாற்றாமல் இருக்க முடியாது. நான் செய்து கொடுத்த சத்தியத்தைக் காப்பாற்றியே ஆக வேண்டும். என்னுடன் யாரும் வருவதையும் நான் விரும்பவில்லை. நான் நாளை இரவு இங்கிருந்து கிளம்பி தர்மக்ஷேத்திரம் செல்லுவதற்குரிய படகைப் பார்த்து அதில் கிளம்புகிறேன்.” என்றார்.

“எங்கே செல்வாய் நீ? நாளைக்கு இங்கே வரும் படகு நீரோட்டத்தோடு செல்லப் போகிறது. இது தர்மக்ஷேத்திரம் செல்லும் வழியில்லை. வேறு வழி!” என்றார் ஆசாரியர்.

“ஐயா, நான் உங்களுக்குக் கீழ்ப்படிந்து நடந்து கொள்வேன்; ஆனால் இப்போது இந்த விஷயத்தில் என் விருப்பம் போல் விடுங்கள்!” என்று ஆசாரியரிடம் கெஞ்சினார் த்வைபாயனர். “ஹூம், நம்முடைய மதிப்புக்குரிய ரிஷியின் மரணம் நமக்குக் கடவுளரால் அனுப்பப்பட்டதொரு எச்சரிக்கையாகவே நான் நினைக்கிறேன், த்வைபாயனா! உனக்கு அது புரியவில்லையா?” என்று கௌதமர் கேட்டார். “இருக்கலாம், ஐயா, ஆனால் நீங்கள் சொல்வதற்கு மாறாக அதன் மூலம் நான் வலிமை பெற்றிருப்பதாகவே நினைக்கிறேன். தந்தை என்னை இங்கே அழைத்து வந்த பின்னர் யமுனைக்கரையின் கல்பிக்கும், நான் பிறந்த தீவுக்கும் திரும்பிச் செல்லவே இல்லை. ஆனால் என்னிடம் சொல்லி இருந்தார். தர்மக்ஷேத்திரத்துக்கு நாம் பயணப்படும் முன்னர் கல்பிக்கு ஒருமுறை சென்று என் தாயையும், மற்ற உறவினரையும் பார்த்து விடை பெற்று வரலாம் என்று சொல்லி இருந்தார். நான் என் தாயை அவசியம் பார்க்க வேண்டும். அவளுடைய ஆசிகளைப் பெற வேண்டும். நாளைக் கழித்து இங்கிருந்து கிளம்பும் படகில் நானும் கிளம்புகிறேன். எனக்கு என்ன நேர்ந்தாலும் கவலை இல்லை ஐயா! ஆனால் தங்களுடைய ஆசிகள் மட்டும் எனக்கு வேண்டும். எனக்கு ஆசிகளைக் கொடுங்கள். தந்தை எண்ணிய காரியத்தை முடித்து வைக்கும் திடமனதும், தைரியமும், வலிமையும் எனக்குக் கிடைக்க ஆசிகளைக் கொடுங்கள். இறை அருளால் எனக்குக் கடவுளரின் ஆசிகள் கிடைக்கும் என்றே நம்புகிறேன்.”

குறிப்பிட்ட நாளில் தன் மான் தோலைச் சுருட்டிக் கொண்டு தன்னுடைய சுரைக்குடுக்கையையும்,  தண்டத்தையும் கையில் எடுத்துக் கொண்டு கௌதமர் உடன் வர த்வைபாயனர் நதிக்கரையை நோக்கிச் சென்றார். படகுக்காரன் இளம் ரிஷியை மிகவும் சந்தோஷத்துடன் வரவேற்றுத் தன் படகில் ஏற்றிக் கொண்டான். படகு கிளம்ப இருந்த சமயம் எவரோ நீரில் குதிக்கும் சத்தம் தொபுகடீர் எனக் கேட்டது. பின்னர் யாரோ படகை நோக்கி நீந்தி வந்தார்கள். மிக வேகமாக வந்தார்கள். படகோட்டிப் படகைக் கொஞ்சம் நிறுத்தினான். விரைவில் பைலர் படகின் ஒரு முனையைப் பற்றிக் கொண்டு ஏற முயன்றார். “த்வைபா, என்னை விட்டு விட்டுச் செல்லலாமா? இப்படி நீ செல்லக் கூடாது. நீ எங்கே சென்றாலும் நான் உன்னுடனேயே வருவேன்!” என்ற வண்ணம் பைலர் படகில் ஏறினார். நீரில் நீந்தியதால் நனைந்து  போயிருந்த பைலரை அதைக் குறித்துக் கவலைப்படாமல் த்வைபாயனர் ஆரத் தழுவிக் கொண்டார். மறுநாள் அதிகாலையிலே கல்பிக்குச் சென்று விட்டார்கள். அங்கே தன் பாட்டனின் குடிசையைத் தேடினார் த்வைபாயனர். அங்கே எதுவுமே இல்லை. திகைப்பும் அச்சமும் ஏற்பட்டது த்வைபாயனருக்கு. அந்தத் தீவில் மனிதர் வாழ்வதற்கான எந்தவிதமான அறிகுறிகளும் இல்லை.

படகோட்டியிடம் இரண்டு நாட்கள் கழித்து வந்து தங்களைத் திருப்பிக் கூட்டிச் செல்லும்படி த்வைபாயனர் கூறினார். பின்னர் படகிலிருந்து கீழே குதித்துப் பைலரும், த்வைபாயனரும் தீவை நோக்கி நீந்தினார்கள். த்வைபாயனரின் குடும்பத்துப் படகுகள் எல்லாம் கட்டி இருக்கும் தூணையே அங்கே காணவில்லை. இரண்டு குடிசைகள் சுத்தமாக இல்லை; மூன்றாவது குடிசை சிதைந்து போய்க் காணப்பட்டது. த்வைபாயனர் மனதுக்குள்ளே பிரார்த்தனைகளைச் செய்தார். அவருக்குக் கடவுளர் அனைவரும் அடுத்தடுத்து அவர் சந்திக்கப்போகும் சோதனைகளை முன்னிட்டு இப்போதே அவரைப் பக்குவப்படுத்துகின்றனர் என்றே தோன்றியது. பைலர் த்வைபாயனரின் தோளை ஆதுரத்துடன் தொட்டுத் தொடுகை மூலமாகவே ஆறுதல் கூறினார். த்வைபாயனரோ ஒரு வார்த்தை பேசவும் இல்லை; ஒரு சொட்டுக் கண்ணீர் சிந்தவும் இல்லை. அதன் பின்னர் அந்தத் தீவின் மற்றொரு பிரிவில் இருந்த கிராமத்தில் மீன் பிடிப்போர் வாழும் பகுதிக்கு இருவரும் சென்றார்கள். அதைப் பார்க்கும்போதே கடந்த பனிரண்டு வருடங்களாக அந்தக் கிராமத்திலோ அதன் மீனவர்கள் வாழும் பகுதியிலோ எவ்விதமான முன்னேற்றமும் ஏற்படவில்லை என்று புரிந்தது. கிராமத்தின் ஜனத்தொகை கூட அதிகரித்திருக்கும் என்று தோன்றவில்லை.

அங்கே இரு இளைஞர்கள் அமர்ந்து கொண்டு ஒருவன் மீனைச் சுத்தம் செய்து கொண்டும், இன்னொருவன் வலையைத் தைத்துக் கொண்டும் இருந்தனர். அவர்கள் இருவரும் இந்த இரு ரிஷிகளையும் பார்த்ததும் வணங்கினார்கள். ஆனாலும் த்வைபாயனருக்கு அவர்கள் யாரெனப் புரியவில்லை. த்வைபாயனர் அவர்களுக்கு ஆசிகளைக் கொடுத்தாலும் தன் குடும்பத்து மக்கள் என்ன ஆனார்கள் என்று அந்த இளைஞனைக் கேட்கவில்லை. அதற்கான தைரியம் அவரிடம் இல்லை. அவர் யோசிக்கையிலேயே ஒரு நடுத்தர வயது மனிதன் அங்கே வந்து அவர்களை வணங்கி, “ரிஷிகளே, உங்களுக்கு என்ன வேண்டும்? யார் நீங்கள்?” என்று கேட்டான். “ஒன்றுமில்லை!” என்ற வண்ணம் தன் கைகளை நீட்டி அவனை ஆசீர்வதித்தார் த்வைபாயனர். “நான் சாப்பாடு கொடுத்தால் சாப்பிடுவீர்களா? பசியோடு இருக்கிறீர்கள் போல் தெரிகிறது!” என்று அந்த மனிதன் அவர்களைக் கேட்டான். அவர்கள் அந்த அழைப்பை ஏற்று அவன் குடிசைக்குச் சென்றார்கள். அங்கே அந்த மனிதனின் வயதான தாய் இருந்தாள். வயதான காரணத்தால் அவள் கண்கள் சரியாகத் தெரியவில்லை. எனினும் தன் கண்களைச் சுருக்கிக் கொண்டு, நெற்றியில் கைகளை வைத்த வண்ணம் இவர்களையே உற்றுப் பார்த்தாள் அந்தக் கிழவி.

அவளையும் அவள் வயதையும் பார்த்த த்வைபாயனர் அவளிடம், “தாயே, இந்தத் தீவின் இன்னொரு பகுதியில் வசித்த மக்கள் அனைவரும் எங்கே சென்றார்கள்?” என்று கேட்டார். “ஓ, அவர்களா? அவர்கள் எல்லாம் போய்விட்டனர்! யமுனை அவர்களுக்குச் சாபம் கொடுத்துவிட்டாள்!” என்றாள் அந்தக் கிழவி. “என்ன, சாபமா?” என்று ஆச்சரியமாகக் கேட்டார் த்வைபாயனர்.

Saturday, May 14, 2016

பராசரரின் முடிவு!

த்வைபாயனர் இப்போது ஆசாரியராகி விட்டார். ஆகவே நாமும் இனி மரியாதையுடன் அழைப்போம். அடுத்து வந்த நாட்களில் பராசரர் தன் மகன் த்வைபாயனருடனும், அஸ்வல் மற்றும் பைலருடனும் தர்மக்ஷேத்திரத்தை நோக்கிப் பயணப்பட்டார். வழியில் தாங்கள் அனைவரும் எதிர்கொள்ள வேண்டிய சங்கடங்களைப் பற்றி எடுத்துக் கூறினார். என்றாலும் எடுத்த காரியத்தின் பின்வாங்கக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தார். அதோடு அல்லாமல் அவருக்குக் கடவுள் நம்பிக்கை அதிகமாகவே இருந்தது. அதிலும் சூரிய பகவானை வேண்டிக் கொண்டதும் த்வைபாயனரின் சுரைக்குடுக்கை அக்ஷயபாத்திரமாக மாறியதில் இருந்து அவருக்கு நம்மைக் கடவுள் ஒருக்காலும் கைவிடமாட்டார் என்னும் நம்பிக்கை இருந்தது. அதோடு தர்மக்ஷேத்திரத்தைப் புனர் நிர்மாணம் செய்வதில் கடவுளருக்கும் விருப்பமும் எதிர்பார்ப்பும் இருப்பதாக அவர் நம்பினார். அவர்களின் பயணத்தின்போது அங்கிருந்து வந்து கொண்டிருந்த பயணிகள் சிலரை அவர்கள் சந்திக்க நேர்ந்தது. அவர்களின் கூற்றின் பேரில் தர்மக்ஷேத்திரம் இப்போது ஒரு மாபெரும் காடாக, அடர்ந்த வனமாக மாறி விட்டது என்றும் சரஸ்வதி நதி வற்றிப்போய் விட்டாள் என்றும், ஆங்காங்கே ஒரு சில ஏரிகளில் மட்டும் இப்போது தண்ணீர் இருப்பதாகவும் கேள்விப் பட்டார். இப்போது அது குருக்ஷேத்திரம் என அழைக்கப்படுவதாகவும் சொன்னார்கள். ஏனெனில் குரு வம்சத்து அரசர்களால் ஹைஹேயர்கள் முழுதுமாக விரட்டி அடிக்கப்பட்டார்கள்.  சரஸ்வதி நதியிலிருந்தே ஏரிகள் பிரிந்து தோன்றி இருப்பதாகவும் அதிலிருந்து அதிக ஆழமில்லாத கால்வாய்கள் சில செல்வதாகவும் கூறினார்கள்.

அவர்கள் பயணத்தின்போதே தர்மக்ஷேத்திரத்தின் புனர் நிர்மாணத்தை எப்படி, எவ்வகையில் செய்ய வேண்டும் என்பதைக் குறித்துப் பேசிக் கொண்டு சென்றார்கள். கடவுளரிடம் வேண்டிக் கொண்டு பிரார்த்தனைகள் செய்து கொண்டு சரஸ்வதி நதியை மீண்டும் அங்கே முழுப் பிரவாஹம் எடுத்து ஓடும்படியும் செய்ய வேண்டும். அங்குள்ள காட்டு மிருகங்களிடமிருந்தும் ராக்ஷஸர்களிடமிருந்தும் பாதுகாக்கும் வழியையும் பார்த்துக் கொள்ள வேண்டும். ஆசிரமங்களை அழகுற அமைத்து ஆர்யவர்த்தத்து ஆசிரமங்களின் ஆசாரியர்களையும், அவர்களின் மாணாக்கர்களையும் அங்கே கவர்ந்து இழுக்க வேண்டும். மீண்டும் அங்கே சநாதன தர்மத்தை நிலை நாட்டி அதன் படி வாழ்க்கையை வாழ்வதற்கு அங்குள்ள மக்களைப் பழக்க வேண்டும். அது மட்டுமா? பராசரரின் தாத்தா வசிஷ்டர் இருந்தவரைக்கும் கடவுளருக்கும், இந்த ஆரிய மஹரிஷிகளுக்கும் நெருங்கிய தொடர்பு இருந்து வந்தது. நேரில் பார்த்துப் பேசும் வல்லமையை அந்த ரிஷிகள் பெற்றிருந்தார்கள். அத்தகைய வல்லமையை மீண்டும் பெற என்ன வழி என ஆராய வேண்டும். இவை எல்லாம் வேதத்தை முழுமையாகக் கற்றுக் கற்பிப்பதால் மட்டுமே நடக்கும். ஆகவே வேதங்களை நாம் சிரத்தையாக ஓத வேண்டும்.

இவை அனைத்தையும் கேட்டுக் கொண்டு வந்த அஸ்வலுக்கு இவை பெரிய தொல்லையாகவும் மிகவும் பிரச்னைகள் நிறைந்தும் இருந்ததாக நினைத்தார்; அதைச் சொல்லவும் சொன்னார். மற்றவர்கள் சிரித்தனர். ஏனெனில் அஸ்வலைப் பொறுத்தவரையிலும் எல்லாமுமே கஷ்டமான ஒன்றாக இருக்கும். எளிதான வேலையைக் கூட எப்படிச் செய்வது என்று கவலைப்படும் மனிதர் அவர். ஆனால் பராசரர் இவற்றால் எல்லாம் அசந்து போகவில்லை. அவரைப் பொறுத்தவரையில் இவை அனைத்துக்கும் ஒரே பதில் தான். அது தான் வேதம்! வேதத்தை இடைவிடாமல் ஓதிக்கொண்டே இருக்க வேண்டும். முழு மனதோடு நம்பவேண்டும். அவர்கள் உயிர் வாழ்வதே இந்த வேதங்களைப் புனருத்தாரணம் செய்வதற்காகவே. வேதங்களை அவர்கள் பாதுகாத்துப் பின்னர் வரும் சந்ததிகளுக்குக் கொடுத்துவிட்டால் வேதங்கள் அவர்களை எல்லாவிதமாக இக்கட்டிலிருந்தும் காப்பாற்றி விடும். இதில் பராசரருக்குக் கொஞ்சமும் சந்தேகம் இல்லை. தர்மக்ஷேத்திரத்துக்குக் கிளம்பும் முன்னால் பராசரர் தன் மகன் மற்றும் ஆசாரிய கௌதமர், சில சீடர்கள் எல்லோருமாகப் பராசரரின் பழைய ஆசிரமம் இருந்த இடமான சாம்பல் பிரதேசத்துக்குச் சென்றனர். அதைப் பார்த்ததுமே பராசரர் கண்களில் கண்ணீர் ததும்பியது. தன் ஆசிரமத்தில் வாழ்ந்து அங்கே கொடியவர்களால் கொல்லப்பட்டு இறந்து போன எண்ணற்ற சீடர்களை நினைத்துக் கண்ணீர் உகுத்தார். அங்கே மானபங்கப்படுத்தப்பட்ட பெண்களையும், அதற்கு இணங்காமல் நெருப்பில் தங்களைத் தாங்களே எரித்துக் கொண்ட பெண்களையும் நினைத்து நினைத்து வருந்தினார். அங்கிருந்து பிடித்துச் செல்லப்பட்ட பசுக்களையும் கொல்லப்பட்ட பசுக்களையும் நினைத்துக் கண்ணீர் விட்டார்.

அவருக்கு இப்போது வயது ஆகிவிட்டது. முதுமைப்பருவம் வந்து விட்டது. இனி இந்த இடத்துக்கு அவரால் வரமுடியும் என்று தோன்றவில்லை. ஆகவே இப்போது அவருடைய கவனம் எல்லாமும், அவருடைய லட்சியம் எல்லாமும் தர்மக்ஷேத்திரத்தைப் புனர் நிர்மாணம் செய்வது ஒன்றே தான். அங்கே அந்தப் பகுதியில் மீண்டும் மறு பிறப்பெடுத்த பிரமசாரிகளாலும், ரிஷிகளாலும் வேத கோஷங்கள் கேட்க வேண்டும். மந்திர கோஷங்கள் அங்கே உள்ள சூழ்நிலையைப் புனிதமாக்க வேண்டும். அனைவரும் வேதத்துக்குத் தங்கள் வாழ்க்கையை அர்ப்பணம் செய்ய வேண்டும். கோதுலிக்கு அவர்கள் திரும்பினார்கள். அப்போது ஓநாய்க்கூட்டம் ஒன்று ஊளையிட்டுக் கொண்டு ஓடி வந்தன. அதைக் கேட்டதும் அனைவரும் அவரவர் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டி ஓடினார்கள். ஆனால் பராசரரால் அவருடைய நொண்டிக்காலை வைத்துக் கொண்டு வேகமாக நடக்கவே முடியாது; ஆகவே அவர் அங்கேயே நின்றார். அவரால் ஓட முடியவில்லை. மற்ற எவரும் என்ன நடந்தது என்பதைப் புரிந்து கொள்ளும் முன்னரே ஓநாய்க் கூட்டம் முனிவரைத் தாக்கியது. அவருடைய தோலைக் கிழித்து தசைகளைக் கவ்விக் கொண்டு ச’ற்று தூரமாக அவரை இழுத்துச் சென்று விட்டன. அவர் உதவிக்காகக் கத்துகையில் ஒரு ஓநாய் அவர் தொண்டையில் தன்னுடைய கோரைப்பற்களை வைத்து நன்றாகக் கடித்து விட்டது. அனைவரும் அவரவர் தண்டங்களைத் தூக்கிக் கொண்டு முனிவரிடம் ஓடினார்கள். அவர்கள் தடியைத் தூக்கிக் கொண்டு ஓடி வருவதைக் கண்ட ஓநாய்க்கூட்டம் ஓடிப் போனது!  ஆனால் அங்கேயோ! மிச்சம் இருந்தது முனிவரின் சிதைந்து போன உடல் மட்டுமே. த்வைபாயனர் மனம் உடைந்து போனார். மிகப் பரிதாபமாகத் தந்தையைப் பார்த்துக் கதறி அழுத த்வைபாயனர் தந்தையின் உடல் மேல் விழுந்து புரண்டார். “தந்தையே, தந்தையே, தந்தையே!” என்று புலம்பிய வண்ணம் அவர் அழுததைக் கண்ட ஆசாரிய கௌதமர் மெல்ல அவரை எழுப்பினார். த்வைபாயனர் ஆசாரியரைத் தன் தந்தையின் உடலைத் தூக்க விடவில்லை.

ரத்தம் கொட்டிக் கொண்டிருந்த பராசரரின் உடலை மெல்ல மெல்ல மென்மையாகத் தூக்கினார் த்வைபாயனர். ஒரு குழந்தையின் உடலை எவ்வளவு மென்மையாகக் கையாள முடியுமோ அவ்வளவு மென்மையாகக் கையாண்டார் த்வைபாயனர். துக்கம் என்னமோ தாங்க முடியவில்லை தான்; ஆனால் அதற்காகத் தன் தந்தையின் உடலை மற்றவர் தூக்குவதா! கோதுலி ஆசிரமவாசிகள் அனைவரும் கூடி விட்டனர். அக்கம்பக்கம் உள்ள கிராமத்தினர் அனைவரும் நொண்டி முனியின் இந்த நிலைமையக் கேட்டு அதிர்ந்து போய்க் கூடி விட்டார்கள். அவர்கள் மிகவும் நேசித்த முனிவரின் உடலைக் கடைசியாக ஒரு முறை பார்க்க வேண்டும் என்று அவர்கள் கூடினார்கள். அழுதவண்ணம் த்வைபாயனர் தன் தந்தையின் உடலைச் சிதையில் வைத்துத் தீ மூட்டினார். அனைவரும் சேர்ந்து சொன்ன வேத மந்திரங்களின் வழிகாட்டுதலின் படி முறைப்படி தான் செய்யவேண்டியவற்றைச் செய்து முடித்தார் த்வைபாயனர். பனிரண்டு நாட்களுக்கு ஆசிரமத்திலும் சுற்றுப்புறங்களிலும் துக்கம் அனுஷ்டிக்கப்பட்டது. பனிரண்டாம் நாள் முறைப்படி செய்ய வேண்டிய கிரியைகளைச் செய்து பராசர முனிவரைத் தன் முன்னோர்களுடன் சேர்ந்து இருக்கப் பித்ரு லோகம் அனுப்பி வைத்தார் த்வைபாயனர். பனிரண்டு நாட்களும் ஒரு சொட்டுக் கண்ணீர் கூட விடாமல் த்வைபாயனர் மௌனமாகவே இருந்தார். அவர் உதடுகள் ஒட்டி வைக்கப்பட்டது போல் மூடிக் கொண்டன. அவர் வரையிலும் தெய்விக வாழ்க்கை வாழ்ந்து வந்த அவர் தந்தை இல்லாமல் இனி தனியாக வாழ்க்கையைத் தொடங்க வேண்டும்.