Saturday, May 14, 2016

பராசரரின் முடிவு!

த்வைபாயனர் இப்போது ஆசாரியராகி விட்டார். ஆகவே நாமும் இனி மரியாதையுடன் அழைப்போம். அடுத்து வந்த நாட்களில் பராசரர் தன் மகன் த்வைபாயனருடனும், அஸ்வல் மற்றும் பைலருடனும் தர்மக்ஷேத்திரத்தை நோக்கிப் பயணப்பட்டார். வழியில் தாங்கள் அனைவரும் எதிர்கொள்ள வேண்டிய சங்கடங்களைப் பற்றி எடுத்துக் கூறினார். என்றாலும் எடுத்த காரியத்தின் பின்வாங்கக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தார். அதோடு அல்லாமல் அவருக்குக் கடவுள் நம்பிக்கை அதிகமாகவே இருந்தது. அதிலும் சூரிய பகவானை வேண்டிக் கொண்டதும் த்வைபாயனரின் சுரைக்குடுக்கை அக்ஷயபாத்திரமாக மாறியதில் இருந்து அவருக்கு நம்மைக் கடவுள் ஒருக்காலும் கைவிடமாட்டார் என்னும் நம்பிக்கை இருந்தது. அதோடு தர்மக்ஷேத்திரத்தைப் புனர் நிர்மாணம் செய்வதில் கடவுளருக்கும் விருப்பமும் எதிர்பார்ப்பும் இருப்பதாக அவர் நம்பினார். அவர்களின் பயணத்தின்போது அங்கிருந்து வந்து கொண்டிருந்த பயணிகள் சிலரை அவர்கள் சந்திக்க நேர்ந்தது. அவர்களின் கூற்றின் பேரில் தர்மக்ஷேத்திரம் இப்போது ஒரு மாபெரும் காடாக, அடர்ந்த வனமாக மாறி விட்டது என்றும் சரஸ்வதி நதி வற்றிப்போய் விட்டாள் என்றும், ஆங்காங்கே ஒரு சில ஏரிகளில் மட்டும் இப்போது தண்ணீர் இருப்பதாகவும் கேள்விப் பட்டார். இப்போது அது குருக்ஷேத்திரம் என அழைக்கப்படுவதாகவும் சொன்னார்கள். ஏனெனில் குரு வம்சத்து அரசர்களால் ஹைஹேயர்கள் முழுதுமாக விரட்டி அடிக்கப்பட்டார்கள்.  சரஸ்வதி நதியிலிருந்தே ஏரிகள் பிரிந்து தோன்றி இருப்பதாகவும் அதிலிருந்து அதிக ஆழமில்லாத கால்வாய்கள் சில செல்வதாகவும் கூறினார்கள்.

அவர்கள் பயணத்தின்போதே தர்மக்ஷேத்திரத்தின் புனர் நிர்மாணத்தை எப்படி, எவ்வகையில் செய்ய வேண்டும் என்பதைக் குறித்துப் பேசிக் கொண்டு சென்றார்கள். கடவுளரிடம் வேண்டிக் கொண்டு பிரார்த்தனைகள் செய்து கொண்டு சரஸ்வதி நதியை மீண்டும் அங்கே முழுப் பிரவாஹம் எடுத்து ஓடும்படியும் செய்ய வேண்டும். அங்குள்ள காட்டு மிருகங்களிடமிருந்தும் ராக்ஷஸர்களிடமிருந்தும் பாதுகாக்கும் வழியையும் பார்த்துக் கொள்ள வேண்டும். ஆசிரமங்களை அழகுற அமைத்து ஆர்யவர்த்தத்து ஆசிரமங்களின் ஆசாரியர்களையும், அவர்களின் மாணாக்கர்களையும் அங்கே கவர்ந்து இழுக்க வேண்டும். மீண்டும் அங்கே சநாதன தர்மத்தை நிலை நாட்டி அதன் படி வாழ்க்கையை வாழ்வதற்கு அங்குள்ள மக்களைப் பழக்க வேண்டும். அது மட்டுமா? பராசரரின் தாத்தா வசிஷ்டர் இருந்தவரைக்கும் கடவுளருக்கும், இந்த ஆரிய மஹரிஷிகளுக்கும் நெருங்கிய தொடர்பு இருந்து வந்தது. நேரில் பார்த்துப் பேசும் வல்லமையை அந்த ரிஷிகள் பெற்றிருந்தார்கள். அத்தகைய வல்லமையை மீண்டும் பெற என்ன வழி என ஆராய வேண்டும். இவை எல்லாம் வேதத்தை முழுமையாகக் கற்றுக் கற்பிப்பதால் மட்டுமே நடக்கும். ஆகவே வேதங்களை நாம் சிரத்தையாக ஓத வேண்டும்.

இவை அனைத்தையும் கேட்டுக் கொண்டு வந்த அஸ்வலுக்கு இவை பெரிய தொல்லையாகவும் மிகவும் பிரச்னைகள் நிறைந்தும் இருந்ததாக நினைத்தார்; அதைச் சொல்லவும் சொன்னார். மற்றவர்கள் சிரித்தனர். ஏனெனில் அஸ்வலைப் பொறுத்தவரையிலும் எல்லாமுமே கஷ்டமான ஒன்றாக இருக்கும். எளிதான வேலையைக் கூட எப்படிச் செய்வது என்று கவலைப்படும் மனிதர் அவர். ஆனால் பராசரர் இவற்றால் எல்லாம் அசந்து போகவில்லை. அவரைப் பொறுத்தவரையில் இவை அனைத்துக்கும் ஒரே பதில் தான். அது தான் வேதம்! வேதத்தை இடைவிடாமல் ஓதிக்கொண்டே இருக்க வேண்டும். முழு மனதோடு நம்பவேண்டும். அவர்கள் உயிர் வாழ்வதே இந்த வேதங்களைப் புனருத்தாரணம் செய்வதற்காகவே. வேதங்களை அவர்கள் பாதுகாத்துப் பின்னர் வரும் சந்ததிகளுக்குக் கொடுத்துவிட்டால் வேதங்கள் அவர்களை எல்லாவிதமாக இக்கட்டிலிருந்தும் காப்பாற்றி விடும். இதில் பராசரருக்குக் கொஞ்சமும் சந்தேகம் இல்லை. தர்மக்ஷேத்திரத்துக்குக் கிளம்பும் முன்னால் பராசரர் தன் மகன் மற்றும் ஆசாரிய கௌதமர், சில சீடர்கள் எல்லோருமாகப் பராசரரின் பழைய ஆசிரமம் இருந்த இடமான சாம்பல் பிரதேசத்துக்குச் சென்றனர். அதைப் பார்த்ததுமே பராசரர் கண்களில் கண்ணீர் ததும்பியது. தன் ஆசிரமத்தில் வாழ்ந்து அங்கே கொடியவர்களால் கொல்லப்பட்டு இறந்து போன எண்ணற்ற சீடர்களை நினைத்துக் கண்ணீர் உகுத்தார். அங்கே மானபங்கப்படுத்தப்பட்ட பெண்களையும், அதற்கு இணங்காமல் நெருப்பில் தங்களைத் தாங்களே எரித்துக் கொண்ட பெண்களையும் நினைத்து நினைத்து வருந்தினார். அங்கிருந்து பிடித்துச் செல்லப்பட்ட பசுக்களையும் கொல்லப்பட்ட பசுக்களையும் நினைத்துக் கண்ணீர் விட்டார்.

அவருக்கு இப்போது வயது ஆகிவிட்டது. முதுமைப்பருவம் வந்து விட்டது. இனி இந்த இடத்துக்கு அவரால் வரமுடியும் என்று தோன்றவில்லை. ஆகவே இப்போது அவருடைய கவனம் எல்லாமும், அவருடைய லட்சியம் எல்லாமும் தர்மக்ஷேத்திரத்தைப் புனர் நிர்மாணம் செய்வது ஒன்றே தான். அங்கே அந்தப் பகுதியில் மீண்டும் மறு பிறப்பெடுத்த பிரமசாரிகளாலும், ரிஷிகளாலும் வேத கோஷங்கள் கேட்க வேண்டும். மந்திர கோஷங்கள் அங்கே உள்ள சூழ்நிலையைப் புனிதமாக்க வேண்டும். அனைவரும் வேதத்துக்குத் தங்கள் வாழ்க்கையை அர்ப்பணம் செய்ய வேண்டும். கோதுலிக்கு அவர்கள் திரும்பினார்கள். அப்போது ஓநாய்க்கூட்டம் ஒன்று ஊளையிட்டுக் கொண்டு ஓடி வந்தன. அதைக் கேட்டதும் அனைவரும் அவரவர் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டி ஓடினார்கள். ஆனால் பராசரரால் அவருடைய நொண்டிக்காலை வைத்துக் கொண்டு வேகமாக நடக்கவே முடியாது; ஆகவே அவர் அங்கேயே நின்றார். அவரால் ஓட முடியவில்லை. மற்ற எவரும் என்ன நடந்தது என்பதைப் புரிந்து கொள்ளும் முன்னரே ஓநாய்க் கூட்டம் முனிவரைத் தாக்கியது. அவருடைய தோலைக் கிழித்து தசைகளைக் கவ்விக் கொண்டு ச’ற்று தூரமாக அவரை இழுத்துச் சென்று விட்டன. அவர் உதவிக்காகக் கத்துகையில் ஒரு ஓநாய் அவர் தொண்டையில் தன்னுடைய கோரைப்பற்களை வைத்து நன்றாகக் கடித்து விட்டது. அனைவரும் அவரவர் தண்டங்களைத் தூக்கிக் கொண்டு முனிவரிடம் ஓடினார்கள். அவர்கள் தடியைத் தூக்கிக் கொண்டு ஓடி வருவதைக் கண்ட ஓநாய்க்கூட்டம் ஓடிப் போனது!  ஆனால் அங்கேயோ! மிச்சம் இருந்தது முனிவரின் சிதைந்து போன உடல் மட்டுமே. த்வைபாயனர் மனம் உடைந்து போனார். மிகப் பரிதாபமாகத் தந்தையைப் பார்த்துக் கதறி அழுத த்வைபாயனர் தந்தையின் உடல் மேல் விழுந்து புரண்டார். “தந்தையே, தந்தையே, தந்தையே!” என்று புலம்பிய வண்ணம் அவர் அழுததைக் கண்ட ஆசாரிய கௌதமர் மெல்ல அவரை எழுப்பினார். த்வைபாயனர் ஆசாரியரைத் தன் தந்தையின் உடலைத் தூக்க விடவில்லை.

ரத்தம் கொட்டிக் கொண்டிருந்த பராசரரின் உடலை மெல்ல மெல்ல மென்மையாகத் தூக்கினார் த்வைபாயனர். ஒரு குழந்தையின் உடலை எவ்வளவு மென்மையாகக் கையாள முடியுமோ அவ்வளவு மென்மையாகக் கையாண்டார் த்வைபாயனர். துக்கம் என்னமோ தாங்க முடியவில்லை தான்; ஆனால் அதற்காகத் தன் தந்தையின் உடலை மற்றவர் தூக்குவதா! கோதுலி ஆசிரமவாசிகள் அனைவரும் கூடி விட்டனர். அக்கம்பக்கம் உள்ள கிராமத்தினர் அனைவரும் நொண்டி முனியின் இந்த நிலைமையக் கேட்டு அதிர்ந்து போய்க் கூடி விட்டார்கள். அவர்கள் மிகவும் நேசித்த முனிவரின் உடலைக் கடைசியாக ஒரு முறை பார்க்க வேண்டும் என்று அவர்கள் கூடினார்கள். அழுதவண்ணம் த்வைபாயனர் தன் தந்தையின் உடலைச் சிதையில் வைத்துத் தீ மூட்டினார். அனைவரும் சேர்ந்து சொன்ன வேத மந்திரங்களின் வழிகாட்டுதலின் படி முறைப்படி தான் செய்யவேண்டியவற்றைச் செய்து முடித்தார் த்வைபாயனர். பனிரண்டு நாட்களுக்கு ஆசிரமத்திலும் சுற்றுப்புறங்களிலும் துக்கம் அனுஷ்டிக்கப்பட்டது. பனிரண்டாம் நாள் முறைப்படி செய்ய வேண்டிய கிரியைகளைச் செய்து பராசர முனிவரைத் தன் முன்னோர்களுடன் சேர்ந்து இருக்கப் பித்ரு லோகம் அனுப்பி வைத்தார் த்வைபாயனர். பனிரண்டு நாட்களும் ஒரு சொட்டுக் கண்ணீர் கூட விடாமல் த்வைபாயனர் மௌனமாகவே இருந்தார். அவர் உதடுகள் ஒட்டி வைக்கப்பட்டது போல் மூடிக் கொண்டன. அவர் வரையிலும் தெய்விக வாழ்க்கை வாழ்ந்து வந்த அவர் தந்தை இல்லாமல் இனி தனியாக வாழ்க்கையைத் தொடங்க வேண்டும்.

No comments: