Wednesday, May 11, 2016

பிரமசரியத்தில் த்வைபாயனன்!

மழைக்காலம் ஆரம்பித்து விட்டது. ஆகவே பராசரர் தன் மகனுடன் கோதுலி ஆசிரமத்திலேயே தங்கினார். மழைக்காலம் முடிந்ததும் மகனுடன் ஆசிரமங்களுக்குச் சென்று தன் விட்டுப் போன பணிகளைத் தொடங்கினார் பராசரர். தன் மாணாக்கர்களைச் சந்தித்து சந்தேகங்களுக்குத் தக்க பதில் சொல்லி தெளிவு  ஏற்படுத்தினார். பனிரண்டு முழு வருடங்கள் பிரமசரியம் அநுஷ்டிக்க வேண்டும் என்பதைத் தெரிந்து கொண்டும் த்வைபாயனன் அதற்காகச் சோர்ந்தெல்லாம் போகவில்லை. மகிழ்ச்சியே உண்டாயிற்று. முழு மனதோடு பிரமசரிய முறை வாழ்க்கையைத் தொடர்ந்தான். நாளாக ஆகத் தன் தந்தையிடம் மதிப்புக் கூடிக் கொண்டே போயிற்று. அவருடைய தவ வாழ்க்கையை நினைத்துப் பெருமையும் உண்டாயிற்று.

அவர்கள் ஒரு சில ஆசிரமங்களுக்குக் கால்நடையாகவும், சில ஆசிரமங்களுக்குப் படகுகளிலும் பயணம் செய்தார்கள். எங்கு சென்றாலும் தங்களுடைய நித்திய கர்மானுஷ்டானங்களைக் கைவிடாமல் அந்த அந்தக் கிராமத்து மக்களால் என்ன உணவு அளிக்க முடியுமோ அதை ஏற்று அவர்கள் செய்து கொடுக்கும் வசதிகளில் மனம் நிறைவுடன் தங்கள் பயணங்களைத் தொடர்ந்தார்கள். வழியில் சில சமயங்களில் காடுகளைக் கடந்து செல்ல வேண்டி இருக்கும். அப்போதெல்லாம் பராசரர் வேதங்களின் பவித்திரமான மந்திரங்களை ஓதியபடியே வருவார். மற்றவர்களில் எவருக்கு அந்த மந்திரங்களை உச்சரிக்கத் தெரிந்திருந்ததோ அவர்கள் கூடவே சேர்ந்து சொல்வார்கள். தெரியாதவர்கள் கற்றுக் கொள்வார்கள். அவற்றில் அவர்கள் நிபுணத்துவம் பெறும்வரை விடாமல் பராசரரும் சொல்லிக் கொடுப்பார். த்வைபாயனன் தனக்கு இருக்கும் அபூர்வ ஞாபக சக்தியால் அந்த மந்திரங்களை ஒருதரம் அல்லது இரண்டு தரம் கேட்டதுமே புரிந்து கொண்டு தன் தந்தை சொல்லி வரும் பாணியிலேயே தானும் கூடவே ஓதுவான்.

இவ்விதம் தினம் தினம் புதிய புதிய மந்திரங்களைக் கற்கையில் த்வைபாயனன் முன்னே ஓர் அற்புதமான உலகம் விரிந்து பரந்து காட்சி அளித்தது. சில மந்திரங்கள் நல்ல மகிழ்ச்சியான இல்வாழ்க்கைக்காகவும், சந்தோஷத்துக்காகவும் இருந்தனவெனில் வேறு சில போர்களில் வெல்லவும், நேர்மையான வாழ்க்கையை வாழவும் இருந்தன.  சில குறிப்பிட்ட மந்திரங்கள் குறிப்பிட்ட கடவுளரின் வழிபாட்டுக்கு என ஏற்பட்டிருந்தது. வேறு சில மந்திரங்களின் மூலம் அனைத்துக் கடவுளரின் பாதுகாப்பையும் ஒருங்கே பெறத்தக்க விதத்தில் இருந்தது. சில மந்திரங்கள் கடவுளரைச் சாந்தப்படுத்தித் திருப்தி செய்யவும், இந்திரனுக்கான மந்திரங்கள் அவனிடமிருந்து வலிமையைப் பெற்று எதிரிகளைத் தோற்கடிக்கவும், இருந்தனவெனில் மாருதியை வணங்குவதன் மூலம், அவனுக்கான மூல மந்திரங்களைச் சொல்லுவதன் மூலம் காற்று, புயல் ஆகியவற்றை எதிர்கொள்ளவும் இருந்தன. எல்லாவற்றுக்கும் மேல் விண்ணும், நீருக்கும் அதிபதியான வருணனை வணங்குவதற்காகச் சிறப்பான மந்திரங்கள் இருந்தன. வருணனே விண்ணின் ஒழுங்கைக் கட்டுப்படுத்துகிறான் என்பதை த்வைபாயனன் தந்தையின் மூலம் அறிந்திருந்தான்.  அவனே நேற்று, இன்று, நாளை என முக்காலங்களுக்கும் பொறுப்பாகத் தன் ஆயிரக்கணக்கான கண்களால் பூமியை உற்று நோக்கி இவ்வுலகத்து மாந்தரின் வாழ்க்கையை கிரஹ நிலைகளுக்கேற்ப உருவாக்குகிறான்.

அத்துடன் மட்டுமா? யமபயத்தை விரட்ட வல்லும் மந்திரங்கள், பாம்பு, தேள் போன்றவை கடித்தால் அதன் விஷத்தை இறக்கும் மந்திரங்கள், உடல் நலத்தைச் சீராக்கும் மந்திரங்கள், கன்னிப்பெண்ணுக்கு நல்ல கணவனை அடைவதற்கான மந்திரங்கள், பிரமசாரிக்கு நல்ல மனைவியை அடைவதற்கான வழியைக் காட்டும் மந்திரங்கள் என பல இருந்தன. பகல் முழுவதும் த்வைபாயனன் தந்தை காட்டும் பல்வேறு பறவைகளைக் குறித்து அறிந்து கொண்டான். காட்டிலும், நாட்டிலும் பூக்கும் பல்வேறு பூக்களைக் குறித்தும், ஆங்காங்கே கிடைக்கும் மூலிகைகளையும் குறித்து அறிந்து கொண்டான். எந்த மூலிகை எந்த நோய்க்கு சிறந்தது என்பதையும் தந்தை மூலம் தெரிந்து கொண்டான். அந்த மூலிகைகளைப் பயன்படுத்தும்போது சொல்ல வேண்டிய தக்க பலன் அளிக்கும் மந்திரங்களையும் தெரிந்து கொண்டான். மூலிகையையும் சரியான முறையில் பயன்படுத்திக் கொண்டு, தக்க பலன் அளிக்கும் மந்திரங்களையும் சரியான விதத்தில் உச்சரித்து வைத்தியம் செய்ய வேண்டும் என்பதையும் புரிந்து கொண்டான். மூலிகைகளைக் கண்டெடுத்து பராசரரின் சீடரான அஸ்வல் அவற்றைத் தன் தோளிலிருந்து தொங்கிய பைகளில் போட்டுக் கொள்வார்.

ஒவ்வொரு நாள் இரவிலும் அனைவரும் ஆகாயத்தின் கீழேயே மரத்தடிகளில் படுத்துக் கொள்வார்கள். ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக மான் தோல் இருந்தது. அதை விரித்துப் படுப்பார்கள். இரவு படுக்கும் முன்னர் அக்னியை வணங்கி அவர்களை மட்டுமில்லாமல் உலகத்து மக்களை எல்லாம் ரக்ஷிக்கும்படி வேண்டிக் கொண்டு அக்னி குண்டத்தைச் சுற்றியே படுப்பார்கள். படுக்கும் முன்னர் த்வைபாயனன் தினம் தினம் தன்னுடைய மான் தோலில் அமர்ந்து கொண்டு அருகிலிருக்கும் தந்தையிடம் விண்ணில் ஒளிரும் நக்ஷத்திரங்களைக் குறித்த மர்மங்களை விளக்கும்படி கேட்பான். அவர்கள் பயணத்தில் ராஜபாட்டையில் பயணிப்பதையும், பெரிய பெரிய நகரங்களையும் அவற்றுக்குள் செல்வதையும் தவிர்த்தார்கள். சஹஸ்ரார்ஜுனனின் வீரர்களில் சிலர் அப்படியான நகரங்களைப் பிடித்துக் கொண்டு அங்கேயே ஒரு சிறு ராஜ்யத்தை ஸ்தாபித்துக் கொண்டு வாழ்ந்து வந்ததும் ஒரு காரணம். பராசரர் இப்படி ஆசிரமம் ஆசிரமமாகத் தன் மகனை அழைத்துக் கொண்டு சுற்றி வந்ததற்கு முக்கியக் காரணமே யமுனைக்கரையில் ஆசிரமங்கள் ஏற்படுத்தி இருப்பவர்கள் அனைவரும் அவருடைய சீடர்கள் என்பதாலும் இதன் மூலம் தன் தந்தைக்கு இருக்கும் சீடர்களைக் குறித்து அறிந்து கொள்ளவுமே ஆகும். சஹஸ்ரார்ஜுனனின் கொடுங்கோன்மையிலிருந்து தப்பிப் பிழைத்தவர்கள் இந்தச் சீடர்கள் என்றும் மகனுக்கு எடுத்துக் கூறினார்.

ஆகவே அந்த யமுனை நதி தீரத்திலே உள்ள எந்த ஆசிரமத்துக்கு அவர்கள் சென்றாலும் அங்கே இவர்கள் மிகவும் மரியாதையுடனும், கௌரவமாகவும் வரவேற்கப்பட்டனர். ஏனெனில் அவர்கள் அனைவருமே பராசரரை மிகவும் நேசித்ததோடு அவர் வருகையையும் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்தனர். ஆகவே அவர்கள் அங்கே சென்றதன் மூலம் அங்கிருந்த அனைத்து ஆசிரமங்களுமே ஒரு பந்தத்தின் மூலம் கட்டுப்பட்டிருப்பதையும் அனைத்து ஆசிரமங்களுக்கும் சேர்த்துப் பொதுவான ஒரு கட்டுப்பாட்டு நியதி இருப்பதையும் த்வைபாயனன் உணர்ந்து கொண்டான். அவன் வளரும்போதே தந்தையின் பெருந்தன்மையான வழிமுறைகளின் மூலம் ஆசிரமவாசிகளின் அன்பைப் பெற்றிருப்பதையும் அவர்களுக்கு நேர்மையான தர்மம் தவறாமல் வாழ்க்கையை வாழ்வதற்கான வழியைப் போதிப்பதையும் பார்த்துப் பெருமிதம் அடைந்தான்.

ஒவ்வொரு ஆசிரமத்திற்கும் ஒரு குரு இருந்தார். அவர் பராசரரின் முக்கிய சீடர்களில் ஒருவராக இருப்பார். மற்றவர்கள் சஹஸ்ரார்ஜுனன் ஆசிரமங்களை எரித்து அழித்தபோது தப்பிய பெரியோர்களில் சிலராக இருப்பார்கள்; அவர்களைத் தவிர ஒரு சில பிரமசாரிகள் வயது வாரியாகக் காணப்படுவார்கள். அவர்கள் அவரவர் வயதுக்கும் திறமைக்கும் ஏற்பப் பல்வேறு விதமான பயிற்சிகளில் இருப்பார்கள். இவர்களைத் தவிர குரு பத்னியும் ஆசிரமத்தில் இருக்கும் பெரியோர்களின் மனைவிமார்களும் இருப்பார்கள். பெரும்பாலான பெண்கள் அக்கம்பக்கத்துக் கிராமங்களிலிருந்து இந்த ஆசிரமவாசிகளை மணம் புரிந்தோர்களாக இருப்பார்கள். அவர்களின் குழந்தைகள், அவர்களைச் சார்ந்து இருப்போர் எனச் சிலரும் இருப்பார்கள்.

குருவின் முக்கியமான குடிலுக்கு எதிரே ஓர் பள்ளம் தோண்டப்பட்டு அங்கே தினம் அக்னி வளர்க்கப்படும். இரவும், பகலும் இடைவிடாமல் அந்த அக்னி எரிந்து கொண்டே இருக்கும். அந்தக் குடிலின் பின்புறம் கோசாலை அமைந்திருக்கும். அங்கே ஆசிரமத் தேவைகளுக்காகப் பசுக்கள் வளர்க்கப்படும். ஆசிரமவாசிகளின் வாழ்க்கை அந்த அக்னியைச் சுற்றியும், வேத கோஷம் செய்து கொண்டே இருப்பதிலும் அடங்கும்.  அதைச் சுற்றியே அவர்கள் வாழ்க்கையை நடத்தினார்கள். தக்க ஆசாரியனால் ஒரு ஆசிரமம் நடத்தப்படவில்லை எனில் அங்கு படிக்க வரும் மாணவனும் சோம்பேறியாகவும். எதிலும் பிடிப்பில்லாமலும், ஆரியர்களின் பாரம்பரியச் சடங்குகளையும் பழக்க வழக்கங்களையும் பின்பற்றாதவனாகவும் இருப்பான்.  வேதங்களைச் சரியான முறையில் ஓதமாட்டார்கள். அதன் மூலம் பாவம் சம்பவிப்பதோடு உலகில் இயற்கை உத்பாதங்களும் ஏற்படும். ஆசிரமவாசிகள் செய்யும் தவறைத் தன் தந்தை எப்படி எதிர்கொள்கிறார் என்பதை நுணுக்கமாகக் கவனித்துக் கொண்டான் த்வைபாயனன். எவ்வளவு அழகாக, மென்மையாகக் கையாளுகிறார் தந்தை! ஆச்சரியமாகப் பார்ப்பான் த்வைபாயனன். அவர் எவரிடமும் தவறே காணமாட்டார். எவரையும் கடுமையான வார்த்தை சொல்லவும் மாட்டார். தவறுகளைச் சுட்டிக்காட்டவும் மாட்டார். அவர் செய்ததெல்லாம் ஒன்றே ஒன்று தான். ஒவ்வொரு ஆசிரமத்துக்குள்ளும் அவர் நுழைந்ததுமே தன் வரையில் சரியானபடி, நியம நிஷ்டைகளைக் கடைப்பிடித்து, வழிபாடுகளைச் செய்து, சரியான முறையில் சரியான உச்சரிப்புக்களோடு வேதங்களை ஓதிக் கொண்டு வருவது ஒன்று தான். ஆசிரமவாசிகள் தாங்களாகவே அவரைப் பின்பற்ற ஆரம்பித்து விடுவார்கள்.

2 comments:

வல்லிசிம்ஹன் said...

எத்தனை அருமையாக இருக்கிறது வேத காலம்.
யாரையும் குறை சொல்லாத குரு.
தந்தையை வழிபடும் மகன்.

பொழுதும் வளரும் அக்னி வழிபாடு.
கோசாலை.
மீண்டும் அந்த ஆஸ்ரம காலத்துக்கே போய்விட ஆவல் வருகிறது. அதற்கான
பக்குவம் இல்லையே. மிக நன்றி கீதா.

ஸ்ரீராம். said...

என்ன ஒரு கல்விமுறை... இன்று சற்றே நீளமான பதிவு!