Friday, October 30, 2015

கண்ணன் கேள்வி! பாமா தவிப்பு!

மீண்டும் தன் கண்களை உருட்டி விழித்தான் சத்ராஜித்! தான் அடிக்கடி அப்படிச் செய்வதால் அனைவரும் பயப்படுவார்கள் என்ற எண்ணம் அவன் உள் மனதில் இருந்தது. பின்னர் பேச ஆரம்பித்தான். “வாசுதேவா, நான் வெளிப்படையாகவே சொல்கிறேன். கேள்! நான் ஏன் சாத்யகியின் திமிர்த்தனத்தைக் குறித்து வெளிப்படையாகக் குறை கூற ஆரம்பித்தேன் என்பதை நீ அறிவாயா? சூரியபகவானின் கட்டளை அது! அவரின் உரிமைக்கட்டளை! ஆணை! அதை ஏற்காமல் அவன் மறுதலித்தான்,. இதன் மூலம் சூரிய பகவானையே அவமதித்திருக்கிறான். என்னையும் இவ்வுலகுக்கு முன்னர் அவமானம் செய்து விட்டான். அவன் மனதில் என்ன நினைக்கிறான்? என் மகளுக்கு அவன் மகனைத் திருமணம் செய்து வைப்பதன் மூலம் என் மகளுக்கு மாபெரும் பரிசு கிட்டும் என்ற எண்ணமோ? அவ்வளவு உயர்வானவனா அந்த யுயுதானா சாத்யகி? ஹூம்! இதைத் தவிர வேறே என்ன எண்ணமோ, காரணமோ அந்த சாத்யகனுக்கு இருக்க முடியும். மனதில் குமுறும் எண்ணங்களைக் கட்டுப்படுத்திய வண்ணம் சத்யபாமா கதவுக்குப் பின்னால் கிருஷ்ணனின் பதிலுக்குக் காத்திருந்தாள்.

“சத்ராஜித் அவர்களே! கொஞ்சம் யோசியுங்கள்! உங்கள் மகளை நீங்கள் எவ்வாறு வளர்த்திருக்கிறீர்கள் என்பதை நினைவு கூருங்கள். எங்களுக்கு அளிக்கப்பட்ட வரவேற்பு நிகழ்ச்சியில் சில நிமிடங்களே நான் அவளைப் பார்த்தேன். அவள் அழகாகப் பார்க்க லட்சணமாக இளம்பெண்ணாகவும் இருக்கிறாள் தான்! அங்கே கதவின் வெளியே நின்றிருந்த சத்யபாமாவின் இதயம் படபடவென அடித்துக் கொண்டது. நாணம் அவள் முகத்தில் செம்மையைப் போர்த்த அவள் குனிந்து தன் செல்லப் பூனையான ஊரியின் காதில், “ஊரி, ஊரி, கேட்டாயா? வாசுதேவக் கிருஷ்ணன் என்ன சொல்கிறான் கேட்டாயா? நான் அழகான லட்சணமான இளம்பெண்ணாம்! கேட்டாயா?” அதற்குள்ளாக உள்ளே கண்ணன் தொடர்ந்து பேசவே அதைக் கவனித்தாள் பாமா.

“ஐயா, உங்கள் மகளை நீங்கள் மிக ஆடம்பரத்திலும், மிதமிஞ்சிய செல்வத்திலும் வளர்த்திருக்கிறீர்கள். உங்களிடம் இருக்கும் செல்வத்தை வெளிச்சம்போட்டுக் காட்டும் நீங்கள், உங்கள் அதே நடைமுறையை உங்கள் பெண்ணிற்கும் பழக்கப்படுத்தி இருக்கிறீர்கள்.”

“எதனால் அப்படிச் சொல்கிறாய்?”

“அன்று வரவேற்புக்கு வந்த யாதவகுலப் பெண்டிர், எளிமையான ஆடைகளோடும் அனைவரின் தலையிலும் செப்புப் பானைகளையே சுமந்து வந்திருந்தார்கள். ஆனால் உங்கள் பெண்ணோ ஆடை, ஆபரணங்களினாலும் தன்னை அலங்கரித்துக் கொண்டிருந்ததோடு அல்லாமல் தங்கப்பானையைச் சுமந்து வந்திருந்தாள். அத்தனை பெண்களுக்கு நடுவே இவள் ஒருத்தி மட்டும் தங்கப்பானையைச் சுமந்து வருவது அனைவர் மனதையும் புண்படுத்தாதா? அவர்களின் சுய கௌரவத்தைப் பாதிக்காதா?” வெளியே இருந்த சத்யபாமாவுக்குத் தன் கன்னத்தில் கிருஷ்ணன் ஓங்கி ஓர் அறை கொடுத்தாற்போல் இருந்தது. தன் கன்னத்தைத் தன்னையுமறியாமல் பிடித்துக் கொண்டாள்.

“ஐயா, நாம் போர் வீரர்கள். இந்த ஆர்யவர்த்தத்தின் பொறுக்கி எடுக்கப்பட்ட தேர்ந்தெடுத்த க்ஷத்திரியர்கள் ஆவோம். க்ஷத்திரிய தர்மத்தைக் கடைப்பிடிப்பதில் சிறந்தவர்கள். அதற்கென ஒரு தனிப்பாரம்பரியமே நமக்கு உள்ளது. நேர்மையோடு கூடிய ஒரு அற்புதமான வீரம் நிறைந்த முடிவையே நாம் எதிர்பார்க்கிறோம். அதற்காகவே வாழ்கிறோம். நம் வாழ்க்கையை அந்த வீரம் செறிந்த தினத்துக்காகவே அர்ப்பணித்தும் வருகிறோம். நாம் அப்படி வாழ்வதோடு அல்லாமல், நம் குழந்தைகளையும் அத்தகையதொரு வாழ்க்கைக்கே பழக்கப்படுத்திக் கொண்டு வருகிறோம். இப்போது கொஞ்சம் நினைத்துப் பாருங்கள். ஆடம்பரத்திலும் மிதமிஞ்சிய செல்வ வாழ்க்கையிலும் பழகிய உங்கள் பெண்ணுக்கு ஒரு வீரனுக்குப் போருக்குச் செல்லும்போது  விடை கொடுத்து அனுப்பும் மனைவியால் பாடப்படும் “பிரியாவிடைப்பாடல்” ஒன்று இருப்பதாவது தெரியுமா? இந்தப் பாடலைப் பாடித் தான் தன் கணவனை, தன் மகனை ஒவ்வொரு யாதவகுல க்ஷத்திரியப் பெண்ணும் மிகவும் கர்வத்துடனும், பெருமையுடனும் போர்க்களத்துக்கு அனுப்புவதை அவள் அறிவாளா? இதைப் பாடும்போது அவர்கள் அடையும் பெருமிதம் குறித்து அவள் உணர்ந்திருக்கிறாளா?”

அவமதிப்பைக் காட்டும் வகையில் ஒரு சீற்றம் மிகுந்த ஒலியை எழுப்பினான் சத்ராஜித். “இப்படி எல்லாம் சொல்வதன் மூலம், நீங்கள் மட்டுமே மிகவும் ஒழுங்காகவும், கட்டுப்பாடுடனும் வளர்க்கப்பட்டிருப்பதாகச் சொல்கிறாய்! அல்லவா? அப்படியே இருக்கட்டும்! மேலே சொல்! கேட்போம். உன் மனதிலுள்ளதை வெளிப்படையாகக் கூறு!”

கிருஷ்ணன் தொடர்ந்தான்.”ஐயா, சாத்யகரைக் குறித்துத் தாங்கள் அறிவீர்கள் அல்லவா? மாட்சிமை பொருந்திய சாத்யகர் க்ஷத்திரிய தர்மத்திற்கே ஓர் எடுத்துக்காட்டாக வாழ்ந்து வருவதை அறிவீர்கள் அல்லவா? அவருடைய நேர்மையும் வீரமும் இந்த ஆர்யவர்த்தம் முழுவதும் பேசப்படுவதை அறிவீர்களா? அவர் தன் வாழ்நாள் முழுவதையும் இந்த க்ஷத்திரிய தர்மத்தைக் கடைப்பிடிப்பதற்கெனவே அர்ப்பணித்திருக்கிறார். நாங்கள் அனைவரும் அவரை எங்கள் முன் மாதிரியாகக் கொண்டிருக்கிறோம். எங்களுக்கு மானசிகத் தலவர் அவரே!”
“ஹா! எனக்குத் தெரியாதா அவனைப் பற்றி? அவன் ஓர் ஏழை! பரம ஏழை!” என்றான் சத்ராஜித் ஏளனம் தொனிக்க. “ஏழையாக இருப்பது மாபெரும் மன்னிக்கவே முடியாத குற்றம் அல்ல ஐயா! அது கீழான ஒன்றும் இல்லை. ஆனால் அவர் இப்படி ஓர் நிலைக்கு ஏன் வந்தார் என்பதை நீங்கள் அறிவீர்கள்! அவர் ஒன்றும் இல்லாமல் இருந்து விடவில்லை! அவருடைய இந்நிலைக்கு நீங்களே காரணம்! நீங்களே பொறுப்பு!”

“நானா? ஹூம், நான் தான் காரணம் எனில் அதற்குத் தகுந்த மறுக்கமுடியாத காரணம் ஒன்று இருந்தாக வேண்டும்.”

“இல்லை ஐயா, அவர் உங்களுக்கும் மற்றவர்க்கும் தக்க பாடத்தைப் புகட்டி இருக்கிறார். க்ஷத்திரிய தர்மத்தைக் கைவிடாமல் இருந்ததன் மூலம், அவருடைய வீரத்தின் மூலம், நேர்மையின் மூலம் அனைவருக்கும் ஓர் நல்ல பாடத்தைக் கற்பித்திருக்கிறார். அது மட்டுமா? தன்னுடைய செல்வம் முழுவதையும் பாண்டவர்களின் ராஜ்யம் நிலைபெற்று நிற்பதற்காகக் கொடுத்துவிட்டார். அதுவும் நீங்கள் கொடுக்காமல் மறுத்ததால் ஏற்படுத்தப்பட்ட செல்வக் குறைவை ஈடுகட்ட தன்னுடைய அனைத்தையும் கொடுத்தார். அவருடைய இந்தச் செய்கையால் தான் மற்ற யாதவர்களால் அவரளவுக்கு இல்லாவிட்டாலும் ஓரளவுக்குக் கணிசமான செல்வத்தைக் கொடுக்க முடிந்தது. அவர் கொடுப்பதைப் பார்த்துவிட்டே அவர்களும் மனமுவந்து கொடுத்து உதவினார்கள். செல்வக் குறைவினால் ஏற்பட்டிருந்த இடைவெளியை இட்டு நிரப்பினார்கள்.”

“போனதெல்லாம் போகட்டும்! நான் அவனுக்கு ஓர் வாய்ப்புக் கொடுக்கிறேன். என் மகளை அவன் மகனுக்கு மணமுடிப்பதன் மூலம் அவன் மீண்டும் பணக்காரன் ஆகலாம்! இதற்கு அவன் ஒத்துக்கொள்ள வேண்டும்.”

“உங்கள் செல்வத்துக்கு ஈடாகத் தன் மகனைப் பேரம் பேசி விற்க சாத்யகர் ஒருநாளும் சம்மதிக்க மாட்டார்.”

“இது உனக்கும் அவனுக்கும் உள்ள தற்பெருமை! அதனால் விளைந்த அகந்தை! உங்களுடன் பிறந்தது!”

“ஐயா, இந்தத் தற்பெருமையினால் விளைந்த அகந்தை வீரர்களுக்கே உரியது. பணத்துக்கு அடி பணிய மாட்டோம் என்பவர்களுக்கே உரியது. ஒரு பெண், தன் வாழ்நாளில் பணத்தைத் தவிர, செல்வத்தையும் அது அளித்த சுகபோகங்களையும் தவிர வேறொன்றையும் அறியாதவள்! இப்படிப்பட்ட ஒரு பெண்ணால் கடுமையான கட்டுப்பாடுகளும், நியம, நிஷ்டைகளும் கொண்டதொரு பாரம்பரியத்தைக் கடைப்பிடிக்கும் குடும்பமான சாத்யகன் குடும்பத்து மருமகளாக எப்படிப்பொருந்தி வருவாள்? அவளால் அங்கே நிலைத்து வாழ இயலுமா?


“அது மட்டும் இல்லை! சாத்யகன் மட்டுமில்லாமல் அவர் குடும்பத்தின் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் அனைவரும் க்ஷத்திரிய தர்மத்தை விடாமல் கடைப்பிடிப்பவர்கள். அதற்காகத் தங்கள் உயிரையும் அர்ப்பணிப்பவர்கள். அர்ப்பணிக்கத் தயாராக இருப்பவர்கள். போர்க்களத்திற்கு எந்நேரமும் சென்று தங்கள் நாட்டுக்காகவும், நட்புக்காகவும் போரிட்டு மரணத்தைப் புன்னகையுடன் வரவேற்பவர்கள்! அவர்கள் வீட்டுப் பெண்களோ எனில் இத்தகைய ஆண்களைப் போர்க்களத்திற்குப் புன்னகையுடன் அனுப்பி வைப்பதோடு அல்லாமல் அவர்களுக்குத் தங்கள் வாழ்நாள் முழுவதும் விசுவாசத்துடன் வாழ்பவர்கள். இப்படிப்பட்ட ஆண்களையும், பெண்களையும் கொண்ட அந்தக் குடும்பத்தில் உங்கள் மகளால், ஆடம்பரமாகச் செல்வ போகத்தில் வளர்க்கப்பட்டவளால் ஒத்திசைவுடன் வாழ முடியுமா? அவர்களுக்குள் ஒத்துப் போகுமா?”

“என் மகள் மாறலாம். அல்லது அவளுடைய செல்வாக்கைப் பயன்படுத்தி யுயுதானா சாத்யகியைத் தன் பக்கம் அவள் மாற வைக்கலாம். எதுவேண்டுமானாலும் நடக்கலாம்.” என்றான் சத்ராஜித்!

Thursday, October 29, 2015

கண்ணா! எனக்கு வாழ்வு கொடு!

“ஐயா, நீங்கள் உங்களைத் தவிர மற்றவர் எவரைக் குறித்தேனும் எப்போதேனும் சிந்தித்திருக்கிறீர்களா?” என்று சாந்தமாகக் கேட்டான் கிருஷ்ணன். “ஏன்? எதற்காக நான் மற்றவரைக் குறித்துக் கவலைப்பட வேண்டும்?” சத்ராஜித் கோபத்துடனும், திமிருடனும் கேட்டான். “ஆம், அதைத் தான் நானும் காண்கிறேன். உங்கள் பார்வையில், உங்கள் சொந்த சந்தோஷத்தைவிடவும் வேறெதுவும் உயர்வாகத் தெரியவில்லை.” என்ற கிருஷ்ணன் குரலில் கவலையின் தீவிரம் தெரிந்தது. “நான் என்னுடைய சந்தோஷத்தை மட்டும் தான் நினைக்க முடியும். அதைக் குறித்தே கவலைப்படவும் முடியும். மற்றவர் சந்தோஷத்தைக் குறித்து எனக்கு என்ன? அவர்களைக் குறித்து அவர்களே கவலைப்படவேண்டும்! நான் ஏன் கவலைப்பட வேண்டும்?”
“ஐயா, நீங்கள் எதைத் தேடி அலைகிறீர்கள்? ஏற்கெனவே உங்களிடம் இருப்பது போதுமென உங்களுக்குத் தோன்றவில்லையா? தெரியவில்லையா?”
“சூரிய தேவன் எனக்கு இந்த ச்யமந்தக மணியை அளித்தான். இது ஒவ்வொரு நாளும் பொன்னை வாரி வழங்கக் கூடியது. இதன் மூலம் என் கௌரவமும் என் சந்தோஷமும் அதிகரிக்கிறது. என்னையும் என் குடும்பத்தையும் எப்போது சந்தோஷத்தில் வைத்திருக்கிறது. மற்றவர்களை விட நாங்கள் சந்தோஷமாக இருக்கிறோம் இங்கே வந்து யாகங்கள் செய்யும் வேத பிராமணர்களுக்கு மற்றவர்களை விட அதிகமாகப்பொன்னையும், பொருளையும் நான் வழங்குகிறேன். ஆகவே அவர்கள் என்னுடைய வாழ்க்கை செம்மையாகவும், சிறப்பாகவும், அமைதியாகவும் இருக்க வேண்டிப் பிரார்த்தனைகள், வழிபாடுகள் செய்கின்றனர். ஒவ்வொரு யாகத்திலும் நான் கொடுக்கும் அர்க்கியங்களைப் போல் இந்த சௌராஷ்டிரத்தில் எவரும் அளிக்க முடியாது. அவ்வளவு சிறப்பாக இதுவரை கண்டிராத அளவுக்குப் பிரம்மாண்டமாகச் செய்கிறேன்.” என்றபடி தன் உதடுகளைக் கோணலாக மடித்துக் கொண்டான். வக்கிரமான அவன் மனபாவத்தை முகம் காட்டியது. அதே கோபத்தோடு அவன் மேலும் பேச ஆரம்பித்தான். அப்போது அவன் முன்பற்களில் சில இல்லை என்பதைக் கிருஷ்ணன் கண்டான். அது வேறு அவன் வாயைத் திறக்கையில் மேலும் பயங்கரத்தை ஏற்படுத்தியது.
“ஹூம், என்னுடைய எதிரிகளை அழித்தொழிக்க வேண்டி நான் செய்வது……..” என்று இழுத்தவன் கிருஷ்ணனைப் பார்த்து, “ நீ செல்வத்தை இகழ்ச்சியாகக் கருதுகிறாய். நான் அப்படி அல்ல! அதை உயர்வாகக் கருதுகிறேன்.” என்றான். கிருஷ்ணன் அவனைப் பார்த்துப் புன்னகைத்தான்.
“நான் ஒருபோதும் செல்வத்தை இகழ்வாகக் கருதியதில்லை; இனியும் கருத மாட்டேன். நான் செல்வத்தைத் தன்னுடைய சொந்த சுகபோகங்களுக்கு மட்டும் பயன்படுத்துபவர்களை மட்டுமே இகழ்ச்சியாகக் கருதுகிறேன். ஒருவரிடம் சொத்துக்கள் இருப்பது அவர்கள் மட்டுமே பயன்படுத்துவதற்கு அல்ல. அப்படிப் பயன்படுத்துவதை முட்டாள்தனம் என்றே நான் கருதுகிறேன். அவர்களைப் பார்த்துப் பரிதாபப்படுகிறேன். ஒரு வேளை உங்களுக்குத் தெரியாமல் இருக்கலாம்; அல்லது தெரிந்திருக்கலாம்.கடவுளால் நமக்கு அளிக்கப்பட்ட இந்த மாபெரும் செல்வத்தின் மீது தர்மத்திற்கும் ஒரு பங்கு இருக்கிறது என்றும் தர்மத்திற்காகவும் இந்தச் செல்வம் செலவிடப்படவேண்டும் என்றும் அதற்கான உரிமை தர்மத்திற்கும் உண்டெனவும் உங்களுக்குத் தெரிந்திருக்கலாம்; புரிந்திருக்கலாம்; அதை ஒப்புக்கொள்ளலாம்.” என்றான் கிருஷ்ணன்.
“வாசுதேவா, நான் என்னுடைய நிலையைத் தெளிவாக உன்னிடம் கூறிவிட்டேன். என்னுடைய தர்மம் என்னவென்று எனக்குத் தெரியும். அது என் செல்வத்தை நான் பெருக்கிக் கொள்வது மட்டுமே ஆகும். எவருடைய கற்பனைக்கும் எட்டாத உயரத்திற்கு என் செல்வம் என்னைக் கொண்டு சேர்க்கும். மற்ற எவரையும் விட நானும் என் குடும்பமும் வாழ்க்கையை மிக நன்றாக ஆனந்தமாக அனுபவிப்போம்.” என்று சொன்ன சத்ராஜித்தின் குரலில் தெரிந்த மிதமிஞ்சிய கர்வம் கிருஷ்ணனுக்கு ஆச்சரியத்தை அளித்தது. சற்று நேரம் அவன் எதுவும் பேசாமல் மௌனமாகவே இருந்தான். அவன் முகத்தில் எப்போதும் நிலை கொண்டிருக்கும் சிரிப்புக் காணாமல் போனது. பின்னர் மெல்ல சத்ராஜித்தை ஏறிட்டுப் பார்த்தான்.

“ஐயா, உங்கள் தற்பெருமையை விடவும், சுயப் புகழ்ச்சியை விடவும் உயர்ந்ததாக ஒன்று இவ்வுலகில் இருப்பதைத் தாங்கள் உணர்வீர்களா? அதைக் குறித்து அறிவீர்களா?” என்று கிருஷ்ணன் சத்ராஜித்தைப் பார்த்துக் கேட்டான். கிருஷ்ணனையே கோபத்துடன் முறைத்துப் பார்த்தான் சத்ராஜித். சில நிமிடங்கள் சஎன்றன. அதன் பின்னர் கிருஷ்ணனைப் பார்த்து, “வாசுதேவா! நீ மற்றவர்க்கு வேண்டுமானால் ஒரு கடவுளாக இருக்கலாம். உன்னைப் புகழ்ந்து போற்றித் துதித்துக் கொண்டு உன் பின்னே வருபவர்களுக்கு நீ ஒரு கடவுளாக இருக்கலாம். ஆனால் உன்னைப் போன்ற ஒருவன் வாயால் என்னைக் குறித்த விமரிசனங்கள் செய்யப்படுவதை நான் சிறிதும் விரும்பவில்லை. ஆகவே நீ என்னைக் குறித்து எதுவும் பேசாதே!” என்றான். அவன் முகத்தில் தெரிந்த கோபத்தை வேடிக்கை பார்க்கும் மனோபாவத்திலேயே கிருஷ்ணன் எதிர்கொண்டான். “ஐயா, உங்களைக் குறித்த விமரிசனங்களை நீங்கள் தீவிரமாக எதிர்கொள்ள வேண்டும். அதுவே உங்களுக்கு நன்மை பயக்கக் கூடியது! இது தான் உங்கள் கடைசி பதிலா? அப்படி எனில், நான் இங்கே உட்கார்ந்து கொண்டு வெட்டிப் பேச்சுக்களைப் பேசிப் பொழுதைக் கழிக்க விரும்பவில்லை. ஆனால் ஒன்றை மட்டும் உங்களுக்கு நினைவு படுத்துகிறேன்.  யாதவர்களால் தர்மம் நிலைநாட்டப்படும். அது மட்டும் நிச்சயம்!” என்றான்.

பின்னர் தன் தலைப்பாகையைச் சரி செய்து கொண்டான் கிருஷ்ணன். தன் ஆசனத்திலிருந்து விடை பெறும் பாவனையில் எழுந்து கொண்டான். அப்போது திடீரென சத்ராஜித்தின் முகம் மாறியது. அவன் மொத்த உடல் மொழியும் மாறத் தொடங்கியது. ஒரு தேர்ந்த நடிகனைப் போல் தன்னுடைய மனோபாவத்தை அவன் மாற்றிக் கொண்டிருக்கிறான் என்பதைக் கிருஷ்ணன் புரிந்து கொண்டான். அவன் முகத்தில் இதுவரை இல்லாத சிரிப்பு மலர, கிருஷ்ணனைப் பார்த்து ஆசனத்தில் அமரும்படி வேண்டிக் கொண்டான். அதைப் பார்த்து வியந்த கிருஷ்ணன் ஆசனத்தில் அமர்ந்தான். அப்போது சத்ராஜித் பேச ஆரம்பித்தான்.

“வாசுதேவா, யாதவர்களுடைய தர்மம் என்னவென்று எனக்குத் தெரியாது; உன்னுடைய சொந்த தர்மம் என்னவென்றும் நான் அறியேன். அது எனக்குத் தெரியவும் வேண்டாம். தெரிந்து கொள்ளவும் விரும்பவில்லை. ஆனால் மற்ற யாதவர்களால் கொடுக்கப்பட்ட என்னுடைய பங்குச் செல்வத்தை வேண்டியே நீ வந்திருக்கிறாய் என்பதைப் புரிந்து கொண்டேன்.” என்றான் சத்ராஜித். “உங்களுக்கு அது புரிந்திருப்பது குறித்து எனக்கு மகிழ்ச்சி ஐயா!” என்றான் கிருஷ்ணன்.

“வாசுதேவா, நீ உன்னுடைய தர்மம் என்று எதைச் சொல்கிறாயோ அதை நிறைவேற்ற நிலை நாட்ட என்ன செய்ய வேண்டும் என்பதற்கான வழிமுறைகளை நான் சொல்லுகிறேன் கேள்! உன் எதிரே இரண்டு வழிகள் இருக்கின்றன. முதல் வழியில் நீ எனக்கும் மற்ற யாதவத் தலைவர்களுக்கும் இடையே மோதல்களை உருவாக்கலாம். நீ துவாரகைக்குத் திரும்புகிறாய் என்னும் செய்தி கிடைத்த அந்த நாளில் இருந்தே இதற்கான சந்தர்ப்பம் உருவாகும், நீ உருவாக்குவாய் என்பதை எதிர்பார்த்து நான் அதற்கான தக்க ஏற்பாடுகளைச் செய்து வருகிறேன்.” இந்த இடத்தில் சற்று நிறுத்திய சத்ராஜித் தன் கர்வம் பொங்கும் முகத்தில் புன்சிரிப்போடு கிருஷ்ணனைப் பார்த்தான். அதோடு நிற்காமல் எதிரே தெரிந்த பச்சைப்பசும்புற்கள் நிறைந்த மைதானத்தைச் சுட்டிக் காட்டினான். அங்கே அவனுடைய விலை உயர்ந்த குதிரைகள் மேய்ந்து கொண்டிருந்தன. இதன் மூலம் தன் குதிரைப்படை வளத்தைச் சொல்கிறான் என்பதைக் கிருஷ்ணனும் அறிந்தான்.

“ஆம், நீங்கள் ஒரு மோதலுக்குத் தயாராகி வருகிறீர்கள் என்பதை நானும் அறிவேன்.” என்றான் கிருஷ்ணன். பின்னர் மெல்லத் தனக்குத் தானே பேசிக் கொள்வது போல் பேச ஆரம்பித்தான். ஆனால் அவன் குரலில் உறுதியும் தெரிந்தது. ஆழ்ந்து ஆராய்ந்து ஏற்கெனவே தீர்மானிக்கப்பட்டதைச் சொல்லும் தொனியும் தெரிந்தது. தன் ஒவ்வொரு வார்த்தைகளையும் திட்டமிட்டு அளந்து பேசினான். யாதவர்களின் மேல் மோதல் ஏற்படுத்தப்பட்டால் அதை நாங்கள் எதிர்கொள்வோம். தைரியமாக எதிர்கொள்வோம். தர்மத்தைக் காக்கவேண்டி அது ஏற்பட்டால், அதை நாங்கள் எதிர்த்து நிற்போம். தர்மம் அதைத் தேவை எனக் கருதினால் நாங்கள் அதை எதிர்கொள்வோம். நான் சொல்வது சத்தியமான வார்த்தை! அதை நீங்கள் உறுதியாக நம்பலாம். இறுதியில் வெல்லப்போவது நீங்கள் அல்ல! அதுவும் நிச்சயம்!” என்றான். பின்னர் திடீரென நினைத்துக் கொண்டவன் போல, “அது என்ன இன்னொரு வழி? அதைக் குறித்து நீங்கள் எதுவுமே சொல்லவில்லையே?” என்றும் கேட்டான்.

“அடுத்த வழியா? அது என்னவெனில் என்னுடைய பங்குச் செல்வத்தை நான் இழந்தே ஆகவேண்டுமெனில் அதற்கான விலையைக் கொடுத்தே ஆகவேண்டும்! அதைக் கொடுங்கள்!” என்றான் சத்ராஜித். “விலை? என்ன விலை? அதைச் சொல்லுங்கள்! யாதவர்கள் உங்களுக்கு என்ன விலை கொடுத்தால் நீங்கள் உங்கள் பங்குச் செல்வத்தைப் பகிர்ந்தளிப்பீர்கள்? அது சரி, ஒன்றை நினைவில் கொள்ளுங்கள் சத்ராஜித் அவர்களே! இந்த பேரத்தைப் பேசுவதன் மூலமாக நீங்கள் மற்ற யாதவர்களோடு ஓர் ஒப்பந்தம் செய்து கொள்ள நினைக்கிறீர்கள்! அதை நினைவில் இருத்தவும்!” என்றான் கிருஷ்ணன்.

“ஆம், அப்படித்தான், என் விலையும் அப்படி ஒன்றும் கடினமான ஒன்றல்ல! எளிதில் கொடுக்கக் கூடிய ஒன்றே! என் ஒரே மகள், அருமை மகள் சத்யபாமாவை உன் அருமைச் சிநேகிதன் சாத்யகி, யுயுதானா சாத்யகி மணந்து கொள்ள வேண்டும். சாத்யகனிடம் உனக்கும், உன் தந்தை வசுதேவனுக்கும் உள்ள செல்வாக்கை நான் நன்கறிவேன். சாத்யகனை என் மகளை மருமகளாக ஏற்றுக்கொள்ளும்படி வற்புறுத்துங்கள். அவனை இந்தத் திருமணத்திற்கு ஒப்புக்கொள்ள வையுங்கள்!”

கதவுகளுக்குப் பின்னர் நின்று கொண்டு அனைத்தையும் கேட்டுக் கொண்டிருந்த சத்யபாமா மயக்கமுறும் நிலைக்குப் போய்விட்டாள். அவள் தந்தையின் பேரம் அவளை அதிர வைத்தது. அவள் மெல்லக் கதவைக் கொஞ்சம் உள்ளே பார்க்கும்படியாகத் திறந்தாள். அப்போது தான் இந்தப் பேச்சுவார்த்தையின் முடிவைச் சிறிதும் விடாமல் கேட்க முடியும். அவள் தலைவிதியையே நிர்ணயிக்கும் இந்தப் பேச்சு வார்த்தையின் முடிவை அறிய அவள் மிகவும் ஆவலுடனும், ஆத்திரத்துடனும் காத்திருந்தாள்.

“சாத்யகி உங்கள் மகளை மணக்க விரும்பவில்லை. அவன் தற்சமயம் திருமணத்தையே விரும்பவில்லை!” என்றான் கிருஷ்ணன். “அது உங்கள் சொந்த விஷயம்! எனக்கு அதில் சம்பந்தம் ஏதும் இல்லை! என்ன இருந்தாலும் அவன் உன்னுடைய சிறந்த சிநேகிதன்!” என்று கொஞ்சம் வித்தியாசமான குரலில் கூறினான் சத்ராஜித். மேலும் தொடர்ந்து, “சத்யபாமாவை மனைவியாக ஏற்கும்படி அவனிடம் கூறு. உன் நட்பை வைத்து அவனை வற்புறுத்து. நிச்சயமாக என் மகள் ஓர் நல்ல மனைவியாக இருப்பாள். அதற்கு நான் உறுதிமொழி தருகிறேன்.” என்றான் சத்ராஜித்.

கிருஷ்ணன் இதற்குத் தரப்போகும் பதிலில் தான் தன் வாழ்க்கையே அடங்கி இருப்பதாக வெளியே காத்திருந்த சத்யபாமா நினைத்தாள். தன் மனதினுள் மானசிகமாகப் பிரார்த்தனைகள் செய்தாள். “கிருஷ்ணா, கிருஷ்ணா, ஓ, கோவிந்தா! நீ ஒரு கடவுள் என அனைவரும் சொல்கின்றனரே! அது மட்டும் உண்மையானால், தயவு செய்து, ஆம், தயவு செய் கிருஷ்ணா! என்னுடைய இந்தப் பிரார்த்தனைகள் உன் செவிகளில் விழட்டும்! சாத்யகியின் மனைவியாக நான் ஆவதைத் தடுப்பது இப்போது உன் கரங்களில் தான் இருக்கிறது!” என்று மௌனமாகப் பிரார்த்தித்தாள்.

கிருஷ்ணனோ சத்ராஜித்தையே சற்று நேரம் உற்றுப் பார்த்துவிட்டுப் பின்னர் ஏற்கெனவே தீர்மானிக்கப்பட்ட விஷயத்தைச் சொல்லும் தொனியில் பேச ஆரம்பித்தான். “மாட்சிமை பொருந்திய சத்ராஜித் அவர்களே! சாத்யகி ஏன் உங்களை மணக்க மறுக்கின்றான் என்பதற்கான காரணத்தை நீங்கள் கண்டு பிடித்தீர்களா? அதற்கான முயற்சிகளைச் செய்தீர்களா?” என்று கேட்டான்.

“ஓ, எனக்கு அது நன்றாகவே தெரியும். அந்த முட்டாள் சாத்யகன், என்னை விட அவன் மிகப் பெரிய தலைவன், சிறந்த தலைவன் என்று நினைக்கிறான். அதனால் என்னை அவமானப்படுத்துவதற்காகவே இந்தத் திருமணத்தை ஏற்க மறுக்கிறான்.  அவன் கண்களின் முன்னால் நான் தீண்டத்தகாதவனாகத் தெரிகிறேன். என் மகள் உயர்ந்த யாதவ குலத்தில் தான் பிறந்திருக்கிறாள் என்பதை அவன் ஏற்க மறுக்கிறான். அவன் கண்களுக்குத் தெரியவில்லை. அவன் மகனைப் போல் என் மகளும் ஒரு யாதவகுலப் பெண் தான் என்பது! அவனுடைய இந்தச் சூழ்ச்சியை நான் முறியடிப்பேன். அவன் தற்பெருமையை அடியோடு அழிப்பேன்!” என்றான் சத்ராஜித். கிருஷ்ணன் சிரித்தான். “நிச்சயமாக நீங்கள் தவறு செய்கிறீர்கள் என்பதை நான் அறிவேன். இந்தத் திருமணம் நடைபெறாமல் போனதற்கு இதைவிட வேறு காரணங்கள் நிச்சயம் இருக்க வேண்டும் என்பது உங்களுக்குத் தெரியவில்லையா? நிச்சயமாய் வேறு காரணங்கள் தான்!” என்றான் கிருஷ்ணன்.

Wednesday, October 28, 2015

சத்ராஜித்தின் உறுதி!

“என்ன அஸ்வமேத யாகமா? நீங்கள் என்ன மாபெரும் சக்கரவர்த்தி பதவிக்கு ஆசைப்படுகிறீர்களா? சக்கரவர்த்தியாகும் எண்ணமா?” என்று கிருஷ்ணன் கொஞ்சம் ஆச்சரியத்துடனேயே கேட்டான். “ஹா, அது சூரியதேவனின் உரிமையுடன் கூடிய கட்டளை ஆகும். இதற்கெனவே நான் இரு குதிரைகளைக் கருத்துடன் வளர்த்து வருகிறேன். அவற்றிற்கு சாஸ்திரபூர்வமாக அபிஷேஹ ஆராதனைகள் நடத்தி யாகம் செய்யத் தயார் செய்து விடுவேன். இன்னும் இரு வருடங்களில் அவை நடந்து விடும். அவற்றால் எனக்கு ஒரு சக்கரவர்த்திக்குக் கிடைப்பதை விட அதிகமான அதிகாரமும், பலமும், செல்வமும் கிடைத்துவிடும்.” என்றான் சத்ராஜித்.  சத்ராஜித்தின் தற்புகழ்ச்சியான பேச்சுக்களைப் பார்த்தும், கேட்டும் கிருஷ்ணன் மனதுக்குள் சிரித்துக்கொண்டான். வெளிப்படையாக ஒரு புன்னகையை மட்டுமே காட்டினான். அவர்கள் அந்தத் தாழ்வாரத்தின் இன்னொரு பகுதிக்குச் சென்று கொண்டிருந்தனர். அங்கே தான் கரடித் தோலால் ஆன விரிப்புகள் விரிக்கப்பட்டிருந்தன.

சத்ராஜித் கிருஷ்ணனை அங்கிருந்த ஓர் ஆசனத்தில் அமரச் செய்தான். அதன் பின்னர் தனக்கு உரிய ஆசனத்தில் அவனும் அமர்ந்து கொண்டான். இரு ஆசனங்களிலும் சாய்ந்து அமரும் வண்ணம் திண்டுகள் வெல்வெட் துணீயால் தைக்கப்பட்டுப் போடப்பட்டிருந்தன. சத்ராஜித்தின் கழுத்தில் இருந்த ச்யமந்தக மணியானது மிகச் சிறந்ததொரு ஒளியை வீசிக் கொண்டு அதன் பிரதிபலிப்பை அந்த அறை முழுவதும் பாய்ச்சிக் கொண்டிருந்தது. அந்த ச்யமந்தக மணியின் மேல் சூரியக் கதிர்கள் பட்டுப் பிரதிபலிக்கையில் இன்னொரு சூரியன் இங்கே உதித்து விட்டானோ என்னும்படியாக ரத்தவண்ண ஒளிக்கதிர்கள் அறை முழுவதையும் ரத்தச் சிவப்பாக்கிக் கொண்டிருந்தது. சற்று நேரம் இருவரும் எதுவும் பேசவில்லை. அமைதி நிலவியது.

அப்போது சத்ராஜித் கிருஷ்ணனைப் பார்த்து ஆதரவும், தயவும் நிரம்பிய குரலில் திடீரெனப் பேச ஆரம்பித்தான். “வாசுதேவா! நேற்று ராஜசபையில் நீ என்னுடன் பேசுவதற்கு மிகவும் ஆர்வம் காட்டினாய்! என்ன காரணம்? அதோடு என்ன காரணத்தால் நீ இங்கே வந்து என்னைக் காண வந்திருக்கிறாய்! உண்மையை ஒளிக்காமல் சொல்!” என்றான்.

“ஓஹோ, உங்களுக்குக் காரணம் வேண்டுமெனில் அதை நான் சொல்கிறேன், கேளுங்கள்.” என்ற கிருஷ்ணன், சத்ராஜித் தன்னை உயர்வாகக் கருதிக்கொண்டு கேட்ட கேள்வியின் மூலம் அங்கு உருவாக்கப்பட்ட சூழ்நிலையைச் சிறிதும் லட்சியம் செய்யாமல் பேச ஆரம்பித்தான். இது சத்ராஜித்துக்குக் கொஞ்சம் ஏமாற்றத்தையே தந்தது! “ஒரு விதத்தில் நான் உங்களைச் சந்திக்க ஆர்வமாகத் தான் இருந்தேன். ஏனெனில் உங்களுக்கும் மற்ற யாதவத் தலைவர்களுக்கும் இடையே ஒரு பரிபூரணப் புரிதலோடு கூடிய ஒத்திசைவு ஏற்பட வேண்டும் என்பதில் எனக்கு ஆர்வம்!”

“அது அப்படி ஒன்றும் முக்கியமானது அல்லவே! அதற்கு இன்னும் நேரம் எவ்வளவோ இருக்கிறதே! ஆகையால் நிச்சயமாக வேறொரு காரணம் இருந்தே ஆக வேண்டும். அதன் காரணமாகவே நீ இவ்வளவு அவசரமாக என்னை வந்து பார்க்கிறாய்!” என்றான் சத்ராஜித்.

“நீங்கள் சரியாகவே சொல்கிறீர்கள்! மாட்சிமை பொருந்திய சத்ராஜித் அவர்களே, நான் இங்கே மிகவும் அவசரமாகவும், அவசியமாகவும் உங்களை வந்து சந்திப்பதற்கு ஒரு முக்கியக் காரணம் இருக்கிறது தான். ஆனால் அது உங்களை நிச்சயம் பாதிக்கும்.” என்றான் கிருஷ்ணன் நட்பு தொனிக்க!

“என்ன? என்னைப் பாதிக்கும் விஷயமா?” என்று கேட்ட சத்ராஜித்தின் முகம் சற்றே மாறியது. அவன் முகத்தில் ஒரு தீவிர பாவனை தோன்றியது. “என்னை எதுவும் பாதிக்காது! பாதிக்கும்படி நான் அனுமதிப்பதில்லை!” என்று தீர்மானமாகச் சொன்னான். புன்னகை புரிந்த கிருஷ்ணன் அவனைப் பார்த்துத் தன் இனிமையான மயக்கும் குரலில் பேசத் துவங்கினான். “ ஒரு வேளை நான் உங்களுக்கு உதவலாம்! அல்லவா? உங்களுக்கும் மற்ற யாதவத் தலைவர்களுக்கும் இடையே இருக்கும் வேறுபாடுகளைக் களைய நான் உதவி செய்யலாம். என் உதவி உங்களுக்குத் தேவைப்படலாம்! அதிலும் முக்கியமாக மாட்சிமை பொருந்திய சாத்யகரோடு உங்களுக்கு ஏற்பட்டுள்ள வேறுபாடுகள்! அவற்றைக் களைய என் உதவி தேவைப்படலாம்!” என்றான்.

“உதவி! அதுவும் உன்னிடமிருந்து! ஹூம்!” வெறுப்பும், இகழ்ச்சியும் கலந்த குரலில் கத்தினான் சத்ராஜித். “இப்போது எனக்குப் புரிகிறது.  நீ ஏன் இங்கு வந்திருக்கிறாய் என்பதை நான் புரிந்து கொண்டேன். உன்னுடைய உணர்ச்சிகரமான வெற்றிகளில் ஒன்றை இங்கும் வந்து பெற்றுச் செல்லவே நீ வந்திருக்கிறாய்! அது நிச்சயம் நடக்காது!”

ஆனால் கிருஷ்ணன் அதற்கெல்லாம் அசைந்து கொடுக்கவில்லை. “ஆம், ஐயா!” என்று வெளிப்படையாக ஒத்துக் கொண்டவன்.”நான் உங்கள் மனதை, உங்கள் இதயத்தை வெற்றி கொள்ளவே வந்துள்ளேன்! அது உண்மை தான்! அதற்கு நீங்கள் என்னை அனுமதிப்பீர்கள் அல்லவா?” என்றும் வினவினான். வெளியே இருந்து கேட்டுக் கொண்டிருந்த சத்யபாமாவின் இதயம் வெகு வேகமாக அடித்துக் கொண்டது. அவள் வாய் வழியாக வெளியே வந்துவிடுமோ என்னும் வண்ணம் துடித்தது. அவளும் மிகவும் ஆவலுடனும், நம்பிக்கையுடனும் பார்த்தாள். கிருஷ்ணன் அவள் தந்தையை மிகுந்த நட்புடனும், நம்பிக்கையுடனும் பார்த்து மேற்கண்டவாறு கேட்டபின்னர் அவர் முகத்தையே ஆவலுடன் உற்று நோக்கிய வண்ணம் அமர்ந்திருப்பதைக் கண்டாள் பாமா. கிருஷ்ணனின் இந்த நட்புக்கரத்துக்கு அவள் தந்தை எதிர்க்கரம் நீட்ட வேண்டும் என்றும் அவள் எதிர்பார்த்தாள்.

ஆனால் சத்ராஜித் தன் சுட்டுவிரலைக் கிருஷ்ணன் முகத்துக்கு நேரே நீட்டி ஆட்டிய வண்ணம் பேச ஆரம்பித்தான். “ஆஹா! இப்போது அறிந்து கொண்டேன். நீ கடைசியில் எதற்கு வருகிறாய் என்று இப்போது  புரிந்து கொண்டேன். யாதவத் தலைவர்களுக்கு ஏற்பட்ட நஷ்டத்தை ஈடு கட்ட நினைக்கிறாய்! அந்த நஷ்டம் நானும் அந்தப் பங்கீட்டில் பங்கேற்காத காரணத்தால் ஏற்பட்டது அல்லவா? ஆகையால் இங்கே வந்து என்னிடம் இருந்து நல்லவற்றைப் பெற்று யாதவர்களுக்கு அளித்து அவர்களுக்கு இழப்பீடு கொடுக்க வைக்க முயல்கிறாய்! உன்னுடைய ஆணைகளுக்கு நான் கட்டுப்படவில்லை என்பதால் இப்போது நேரிலேயே வந்து அவற்றை நிறைவேற்றிக் கொள்ள நினைக்கிறாய்!” அவன் குரலில் இருந்த கிண்டல் அவன் கிருஷ்ணனைப் பார்த்துச் சிரிக்கிறான் என்பதைச் சொல்லாமல் சொல்லியது.

“அது என்னுடைய ஆணையே அல்ல ஐயா! என்னுடைய தாழ்மையான வேண்டுகோள்! “ என்ற கிருஷ்ணன் தொடர்ந்து, “நீங்கள் இழப்பீடு கொடுத்தால் அது எனக்கு வெற்றி அல்ல! தர்மத்தின் வெற்றி! எனக்குத் தனிப்பட்ட முறையில் அதனால் எவ்வித பலனும் இல்லை.” என்றான் கிருஷ்ணன். அகந்தையுடன் சிரித்தான் சத்ராஜித்! “நீ வெளிப்படையாகப் பேசுவதைப் பாராட்டுகிறேன், வாசுதேவா! சில உண்மைகளை நீ என்னிடமிருந்தும் இப்போது கேள்!” என்றான். “ஆம், நான் அதற்குத் தான் வந்தேன். வெளிப்படையாகப் பேசுவதற்கு! வேறேதும் வெற்றுரையைக் கேட்டுக் கொண்டு உட்கார்ந்திருப்பதற்கு வரவில்லை. இதற்காகவே வந்தேன். வேறெதற்கும் இல்லை!” என்றான் கிருஷ்ணன்.

“அப்படி எனில் கேள்!” என்ற சத்ராஜித் முகத்தில் தீர்மானமும் உறுதியும் தென்பட்டது. “என்னுடைய செல்வங்கள் அனைத்தும் சூரிய தேவனின் அருளால் கிடைத்தது.” என்ற வண்ணம் தன் கழுத்தில் இருந்த ச்யமந்தக மணியை மெல்லத் தடவிக் கொடுத்தான். அதை அப்படியே எடுத்துத் தன் கண்களில் ஒற்றிக் கொண்டான். “இப்படி எனக்குக் கடவுள் அருளால் கிடைத்த செல்வத்தை எக்காரணம் கொண்டும் நான் இழக்க விரும்பவில்லை.” என்றும் கூறினான். “நீங்கள் உங்கள் மனதை மாற்றிக் கொள்ள வேண்டும். அதைத் தான் நானும் விரும்புகிறேன். உங்களுக்கு நான் சொல்லும் ஆலோசனையும் அதுவே!” என்றான் கிருஷ்ணன்.

“நான் அடிக்கடி மனதை மாற்றிக் கொள்பவன் அல்ல! ஒரு முறை முடிவெடுத்தால் எடுத்தது தான். ஒரே முறை தான் சிந்திப்பேன்! பலமுறை குழப்பிக்கொள்ள மாட்டேன். இதில் இரண்டாவது சிந்தனைக்கே இடமில்லை. என்னுடைய செல்வங்கள் எல்லாம் நான் சம்பாதித்தவை! அவற்றை எக்காரணம் கொண்டும் நான் எவருக்கும் கொடுக்க மாட்டேன். யாரும் என்னிடம் கேட்கவும் முடியாது!” என்ற சத்ராஜித்தின் கண்கள் அங்குமிங்கும் பயங்கரமாக உருள அவன் உதடுகளும் அவன் மனதின் உறுதியைப் பிரதிபலிக்கும் வண்ணம் சற்றே கீழ் நோக்கி மடிந்தன.


Saturday, October 24, 2015

கண்ணன் வந்தான்!


சத்யபாமா மிகவும் உணர்ச்சிவசப்பட்டும், ஆச்சரியவசப்பட்டும் மெய் சிலிர்த்துப் போயிருந்தாள். அவள் படுக்கைக்குச் சென்றும் அன்றிரவில் அவளால் நன்றாகத் தூங்க முடியாது போல் இருந்தது. அவளுக்கு இருந்த உணர்ச்சிகளின் தாக்கத்தால் அவளால் தன் கண்களை மூடவே முடியவில்லை. அவள் தன் செல்லப் பூனையின் காதுகளில் கிசுகிசுத்துக் கொண்டே இருந்தாள். அது என்னமோ அவள் என்ன சொன்னாள், சொல்கிறாள் என்பதை எல்லாம் சிறிதும் லட்சியம் செய்யவில்லை. ஆனால் பாமா மீண்டும், மீண்டும், “அவன் வருகின்றான்! அவன் வருகின்றான்! ஊரி, அவன் வருகின்றான்!” என்று முணுமுணுத்தாள்  ஏனெனில் ராஜ்ய சபையிலிருந்து திரும்பிய சத்ராஜித் தன் குடும்ப நபர்களிடம் மட்டுமின்றி அங்கே யாகங்களைச் செய்து வரும் பிராமணர்களையும் அழைத்து மறுநாள் காலை  சத்ராஜித்தைக் காணக் கண்ணன் வருவதைத் தெரிவித்தான். அதோடு மட்டுமில்லாமல் கண்ணன் வருகையால் அவன் கருத்து எதுவும் மாறப்போவதில்லை என்பதையும் தன் முறையில் தன் வழியில் கண்ணனைத் தான் சமாளித்துக் கொள்ளப் போவதாகவும் ஒளிவு, மறைவின்றிச் சொல்லி இருந்தான். கண்ணனுக்கு அது தேவை என்றும் அப்போது தான் அவன் ஒரு சாதாரண மனிதன் என்பதை அவன் புரிந்து கொள்வான் என்றும் சத்ராஜித் கூறினான்.

ஆனால் சத்ராஜித்தின் குடும்பம் முழுவதும் பரபரப்பில் ஆழ்ந்தது. அனைவரும் ஓர் எதிர்பார்ப்புடன் இருந்தனர். பெரும்பாலோரின் எண்ணம் கண்ணன் இங்கே வந்து சூழ்நிலைகளைப் புரிந்து கொண்டு சாத்யகனுக்கும், சத்ராஜித்துக்கும் நடுவில் இருந்த பிணக்கைத் தீர்த்து வைத்து யுயுதானா சாத்யகியோடு பாமாவின் திருமணம் எளிதாகவும், நன்றாகவும் நிறைவேற ஏற்பாடுகள் செய்வான் என்றும் நம்பினார்கள். ஒருவழியாக விடியும் நேரத்தில் கொஞ்சம் உறங்கிய பாமாவுக்கு அப்போதும் அவள் காதுகளில் யாரோ, “கண்ணன் வருகின்றான்! கண்ணன் வருகின்றான்!” என்று கூவுவதைப் போல் இருந்தது. அந்தக் கூவல் அவளை நிம்மதியாகத் தூங்க விடவில்லை. பொழுதும் மெல்ல மெல்ல விடிந்தது. பாமாவின் காலைக்கடன்களும், காலை அவள் செய்யவேண்டிய வழிபாடுகளும் முடிந்த பின்னர் அவள் முக்கிய வாயிலுக்குச் சென்று கண்ணன் வருகைக்குக் காத்திருக்கலாமா என யோசித்தாள். ம்ஹூம், பாமாவால் அப்படிச் செய்ய முடியாது. அவள் அப்படிச் செய்ய இயலாது! அது முறை அல்ல! அனைவரும் தவறாகக் கருதுவார்கள்.

நேரம் நெருங்க நெருங்க அவளுக்குள் பொறுமை இல்லை. அவள் செய்வதறியாமல் தவித்தாள். அந்தப் பெரிய மாளிகை முழுதும் சுற்றினாள். அவள் மனதுக்கு இசைந்த பாடல்களை மெல்லப் பாடினாள். அவள் கண்களுக்கு அனைத்தும் பிரகாசமாகவும், ஆனந்தமயமாகவும், அழகாகவும் தோன்றியது. இவ்வுலகில் வாழ்வதிலேயே அவள் ஆனந்தம் அடைந்தாள். அந்த மாளிகையின் ஒவ்வொரு தூண்களும் அவளோடு ஆனந்த கீதம் பாடி மகிழ்ச்சியில் நர்த்தனம் இடுவதாகத் தோன்றியது அவளுக்கு. அன்றைக்கு என்ன நிறத்தில் உடை அணியலாம் என யோசித்தாள். பாமா பலமுறை கவனித்திருக்கிறாள், வெண்ணிற ஆடைகள் அவளுக்கு மிகவும் பொருந்தி வருவதோடு அவள் அந்த நிறத்து ஆடைகளை அணியும்போது தனிப்பட்ட அழகோடும் காணப்படுவாள். ஆகவே வெண்ணிறப் பட்டால் ஆன ஆடைகளை அணிந்த அவள் அதற்குப் பொருத்தமான ஆபரணங்களைத் தேடித் தேடி அணிந்து கொண்டாள். அவள் மனதில் பொறுமை எல்லையற்றுப் போனது! கண்ணனுக்காக இன்னும் எவ்வளவு நேரம் காத்திருப்பது?
அவனுக்காகக் காத்திருக்கும் ஒவ்வொரு நிமிடமும் அவளைப் பொறுத்தவரையில் ஓர் யுகமாகத் தோன்றியது. அப்போது திடீரென அவள் மனதில் ஓர் எண்ணம் தோன்றியது. அவர்களுக்குள் சமாதானத்தை உண்டாக்குவதற்காக அவள் தந்தையே ஏன் அவளைக் கிருஷ்ணனுக்கு மனைவியாக்குவதாகக் கூறக்கூடாது? இதன் மூலம் இரு குடும்பங்களின் உறவும் பலப்படுமே! ஆஹா! எவ்வளவு அற்புதமான எண்ணம்! இது மட்டும் நடந்துவிட்டால்!! சாத்யகன் அவளைத் தன் மருமகளாக ஏற்க மறுத்து விட்டான் எனில் என்ன? அதனால் என்ன? வசுதேவர் நிச்சயம் ஏற்றுக் கொள்வார்.

திடீரென அவள் மனதில் குழப்பம், பிரளயமே உருவானாற்போன்றதொரு தோற்றம். அவளுக்கு உதவ எவராலும் இயலாது! யாரும் உதவப் போவதில்லை. அவள் தந்தைக்கு இப்படி ஓர் எண்ணமே தோன்றப்போவதில்லை. அவள் சகோதரனோ எல்லாம் தெரிந்திருந்தும் உதவப் போவதில்லை. அந்த சாத்யகியைத் தான் பாமா பெரிதும் நம்பினாள்! அவனால் கூட உதவ முடியாது! ம்ஹூம், அவனும் உதவி செய்யப் போவதில்லை. அவள் ஓர் தன்னந்தனியான வாழ்க்கைக்குத் தான் செல்லப் போகிறாள். அப்படித் தான் வாழப் போகிறாள். இல்லை, இல்லை, அவள் வாழ்க்கை அதை விட மோசமாக இருக்கப் போகிறது! அவள் தந்தை அவளைத் தன் அருமைச் சிநேகிதர்களான ஜயசேனனுக்கோ அல்லது ஷததன்வாவுக்கோ திருமணம் செய்து வைக்கப் போகிறார். கடவுளே, மஹாதேவா! அதைவிடக் கொடுமை வேறெதுவும் வேண்டாம். அதைவிட அவள் தற்கொலை செய்து கொண்டு விடலாம்.

அவள் காத்திருந்தாள்; மேலும் காத்திருந்தாள்; தன் அருமைச் செல்லப் பூனையைக் கடிந்து கொண்டாள். தன் எஜமானிக்கு என்ன நேர்ந்தது என்று அது குழம்பும் அளவுக்கு அதைக் கடிந்து கொண்டாள். ஒரு வழியாகக் கண்ணன் வந்தான். மாளிகையின் பிரதான வாயிலின் வழியாக அவன் உள்ளே நுழைவதை பாமா கண்டாள். அவள் இதயம் ஆனந்தத்தில் நிரம்பி வழிந்தது. அவனை வரவேற்க உடனே ஓடிச் செல்ல வேண்டும் என்பது அவள் எண்ணம். உள்ளூர எழுந்த இந்த எண்ணத்தை மிகக் கஷ்டப்பட்டு அவள் கட்டுப்படுத்திக் கொண்டு அமர்ந்திருந்தாள். அப்போது சத்ராஜித்தும், அவன் மகன் பங்ககராவும் பிரதான வாயிலுக்கே சென்று கிருஷ்ணனை எதிர்கொண்டு அழைத்தார்கள். எனினும் அவர்கள் வரவேற்பில் சிறிதும் மகிழ்ச்சியோ, நட்போ தெரியவில்லை. சம்பிரதாயமான வரவேற்பாகவே திகழ்ந்தது. கிருஷ்ணன் சம்பிரதாயமாகத் தன்னை அலங்கரித்துக் கொள்ளாமல் இயல்பாகவே ஆடைகள் அணிந்து கொண்டு வந்திருந்தான். அணிந்திருந்த ஆபரணங்களும் சொல்பமாகவே இருந்தது. ஆயுதங்களும் அணியவில்லை. அவனுடைய பிரியமான ஆயுதமான சுதர்சன சக்கரத்தைக் கூட எடுத்துவராமல் நிராயுதபாணியாக வந்திருந்தான். சுதர்சன சக்கரத்தை அவன் வெளியே செல்கையில் பிரிந்ததே இல்லை என்பதை பாமா அறிந்திருந்தாள். இவை அனைத்துமே அவன் சமாதானத்தை நாடி வந்திருப்பதை சூசகமாகத் தெரிவிப்பதை பாமா உணர்ந்து கொண்டாள். அவள் தந்தைக்கும் மற்ற யாதவத் தலைவர்களுக்கும் இடையே இருந்த இடைவெளியை அகற்றவே அவன் முயல்கிறான் என்பதையும் உணர்ந்தாள்.

அவள் தந்தையின் வணக்கத்தை அவன் பிரதிபலித்தான். ஆனால் இருவரும் கட்டித் தழுவிக் கொள்ளவில்லை. இருவருமே அதைத் தவிர்த்தார்கள். அங்கிருந்த வேத பிராமணர்கள் எழுந்து வந்து ஆசீர்வாத மந்திரங்களைச் சொல்லிக் கிருஷ்ணன் மேல் அக்ஷதைகளைத் தூவி ஆசீர்வதித்தார்கள். கிருஷ்ணனும் தன் பங்குக்கு யாகத்தில் ஆவிர்ப்பவிக்க ஒரு தேங்காயைக் கொடுத்தான். அதன் பின்னர் அவள் தந்தை தான் வழக்கமாக அனைவரையும் சந்திக்கும் தாழ்வாரத்தை ஒட்டிய அறைக்குக் கிருஷ்ணனை அழைத்துச் சென்றார். பெண்கள் எவரையும் அழைக்கவே இல்லை. இதில் பெண்மணிகள் அனைவரும் ஏமாற்றம் அடைந்தனர். மேலும் சத்ராஜித்தும், கிருஷ்ணனும் அனைவரின் எதிரேயும் அமர்ந்து பேசவில்லை. என்றாலும் பெண்மணிகளில் சிலரும் மற்றக் குடும்ப அங்கத்தினர்களும் சென்று அவ்வப்போது அந்தத் தாழ்வாரத்தின் திறந்த சாளரங்கள் வழியாகக் கிருஷ்ணனைப் பார்ப்பதும், சத்ராஜித்தும் கிருஷ்ணனும் என்ன பேசுகின்றார்கள் என்பதைக் கவனிப்பதுமாக இருந்தனர்.

பாமாவும் மெல்ல மெல்ல தைரியமாகத் தன் செல்லப் பூனையை அழைத்துக் கொண்டு தாழ்வரையின் திறந்திருந்த பாகத்திலிருந்து உள்ளே அறைக்குள் அமர்ந்திருந்த கிருஷ்ணனையும் தன் தந்தையையும் பார்த்தாள். அவள் தந்தை அறையின் மற்றொரு சாளரத்தின் வழியே தூரத்தில் தெரிந்த மாட்டுக் கொட்டில்களையும், குதிரை லாயங்களையும், யானைகள் கட்டுமிடங்களையும் கிருஷ்ணனிடம் மிகவும் பெருமையுடனும் கர்வத்துடனும் காட்டிக் கொண்டிருந்ததைக் கவனித்தாள். தந்தை இப்படிச் செய்வதை அவளால் ரசிக்க முடியவில்லை. அதுவும் இல்லாமல் நட்பு என்பதே அவர் முகத்தில் காணக்கிடைக்கவில்லை. “தந்தை ஏன் நட்புப் பாராட்டிப் பேசாமல் இப்படிக் கடமைக்குப் பேசுகிறார்!” என்று தனக்குள்ளே கடிந்து கொண்டாள். அப்போது சத்ராஜித் கூறியது அவள் காதுகளில் விழுந்தது.

சத்ராஜித் கிருஷ்ணனிடம் கூறிக் கொண்டிருந்தான். “வாசுதேவா, பார்த்தாயா என் செல்வச் செழிப்பை? என்னிடம் எத்தனை எத்தனை பசுக்கள், காளைகள், யானைகள், குதிரைகள் இருக்கின்றன என்பது எனக்கே தெரியாது! எண்ணிலடங்காக் கால்நடைச் செல்வங்கள், ஏராளமான தங்கம், வைர, வைடூரியங்கள், ரத்தினங்கள் என உள்ளன. ஒரு நாள், ஆம், விரைவில் ஒரு நாள் நான் அசுவமேத யாகம் செய்வதையும் நீ காண நேரிடும்.” என்றான் சத்ராஜித்!


Sunday, October 18, 2015

சபை கலைந்தது!

“செல்வம் மிகுதியாக இருந்தால் அதைத் துறக்கும் மனோபாவம் இல்லை எனில் அங்கே தர்மத்திற்கு இடமில்லை! தர்மத்திற்கு அது நன்மையைச் செய்யாது!” என்றான் கிருஷ்ணன்! சத்ராஜித் இதைக் கவனமாகக் கேட்டுக் கொண்டிருந்தான்; அவனுக்கு மட்டுமின்றி அங்கிருந்த அனைவருக்குமே இந்த வார்த்தைகள் சத்ராஜித்துக்காகக் கிருஷ்ணன் சொன்னான் என்பது நன்கு புலப்பட்டது. சபையினர் அனைவரும் கிருஷ்ணனின் வார்த்தைகளைக் கொஞ்சம் பயத்துடனேயே கேட்டனர். அவர்களில் சிலருக்கு நன்மை நடக்கலாம் என்னும் நம்பிக்கை இருந்தாலும் எந்நேரமும் ஒரு பிரளயம் உண்டாகலாம் என்றும் எதிர்பார்த்தனர். இவ்வளவு நாட்களாக சத்ராஜித் தனது அலட்சியமான, கொடூரமான போக்காலும், அவமதிப்புக் கொடுக்கக் கூடிய வார்த்தைகளைப் பேசியும் அனைவர் மனதையும் புண்படுத்தி வந்தான். அதோடு இல்லாமல் தன் நடத்தையைக் குறித்து யாரும் எங்கும் எதுவும் பேசக் கூடாது என்பதை மறைமுகமாக அறிவுறுத்தியும் வந்தான். ஆனால் இங்கே ராஜசபையில் அவனைக் குறித்து மறைமுகமாகப் பேச்சுக்கள் நடக்கின்றன. அதோடு கிருஷ்ணன் நேரடியாகவே சொல்ல ஆரம்பித்து விட்டானே!

சாத்யகன் இப்போது குறுக்கிட்டு, “இது வேறு ஒருத்தரால் ஏற்படுத்தப்பட்டிருந்தது எனில்? என்ன செய்ய முடியும்? இன்னொருவர் இவற்றைப் பிடுங்கித் தம் கைப்பொருளாக, கைப்பாவையாகச் செயல்பட வைத்தால்?”

“மாட்சிமை பொருந்திய மாமா அவர்களே, சொத்துக்கள் இருப்பதை நான் குற்றம் சொல்லவில்லை. அவை நேர்வழியில் வந்தால்! நல்லமுறையில் செலவிடப்பட்டால்! அதன் மூலம் அனைவருக்கும் நன்மை கிட்டினால்!” என்றான் கிருஷ்ணன் மறுமொழியாக.

“சொத்து நல்லொழுக்கத்தின் மூலம் அடைந்திருக்கலாம். ஆனால் சொத்தின் மூலம் நல்லொழுக்கம் பிறப்பதில்லை. எவருக்கும் அது சொத்தின் மூலம் கிடைப்பதில்லை!” என்று மிகுந்த மனக்கசப்புடன் சாத்யகன் கூறினான். சத்ராஜித்தின் முகத்தில் சந்தேக ரேகைகள் ஓடின. ஆனாலும் அவன் இந்த விஷயத்தைக்குறித்து ராஜசபையில் அனைவரும் இருக்கும் நேரம் அனைவருக்கும் தெரியும்படி விவாதிக்க விரும்பவில்லை. ஆனால் சாத்யகன் தொடர்ந்து பேசினான். “நான் நன்றாகத் தெரிந்து கொண்டேன். எனக்குப் பல கசப்பான அனுபவங்கள் ஏற்பட்டிருக்கின்றன. நல்லொழுக்கமும், மிகை மிஞ்சிய செல்வமும் ஒன்றுக்கொன்று ஒத்துப் போனதில்லை. மிகை மிஞ்சிய செல்வம் இருக்குமிடத்தில் நல்லொழுக்கம் இருப்பதில்லை!” என்றான். மேலும் தொடர்ந்து, “ சொத்துக்களை அதிகம் சம்பாதித்து விட்டதாலேயே ஒருவன் தன்னை அனைவருக்கும் மேலானவனாக, அவ்வளவு ஏன் கடவுளாகக் கூட நினைப்பது  தெரியுமா உனக்கு? அவனைக் குறித்து நீ என்ன நினைக்கிறாய்?” சாத்யகின் மனக் கசப்பும் வருத்தமும் முழுவதுமாக இந்த வார்த்தைகளில் வெளிப்பட்டன. சத்ராஜித் தன்னுடைய பாகத்திலிருந்து தன் சொத்தைப் பிரிக்க மறுத்ததால் ஏற்பட்ட குறைபாடு சாத்யகியின் வார்த்தைகளில் வெளிப்பட்டன. இது சத்ராஜித்துக்கு ஒரு பலமான அடியாகவும் விழுந்தது.

அனைவரும்சத்ராஜித்தையே பார்த்தனர். அவன் இகழ்ச்சியுடன் நகைத்தான். “அவனை நான் அசுரன் அல்லது பிசாசு என்பேன்!” என்று கூறிய கிருஷ்ணன் சிரித்தான். அங்கே கூடிய மற்ற அனைவருக்கும் என்ன சொல்வதென்று தெரியாமல் அமைதி காத்தனர். அனைவரும் ஊமையாகிவிட்டனரோ என எண்ணும்படியாக அமைதி!  ஆனால் உள்ளுக்குள் அனைவருக்கும் கிருஷ்ணனின் வார்த்தைகளால் சந்தோஷமே ஏற்பட்டது. கிருஷ்ணனின் வெளிப்படையான விமரிசனத்தால் ஒரு பக்கம் கவலையும் ஏற்பட்டது. அங்கே ஒரு மாபெரும் கலவரம் ஏற்படப் போகிறது என்று அஞ்சினார்கள். “பாண்டவர்களை வளப்படுத்த வேண்டித் தங்கள் செல்வங்களை இழந்து ஏழையான யாதவர்களுக்கும், சொத்து இருந்து கொண்டிருப்பதால் ஒருவன் கடவுளோ அல்லது சாத்தானாகவோ ஆகிறான் என்பதற்கோ என்ன வித்தியாசம் இருக்கிறது? பெரிய அளவில் ஒன்றும் இல்லை. சொத்து இருக்கிறவன் இதனால் எல்லாம் பிசாசாக ஆகிவிட மாட்டான். சொத்தில்லாதவன் பெரிய பதவியையும் அடையப் போவதில்லை!” என்று முன்னர் பேசிய அந்த வயதான யாதவத் தலைவர் கூறினார்.

“அப்படியா?” என்று கிருஷ்ணன் புன்முறுவலுடன் கேட்டான். “நீங்கள் அங்கே தான் தப்புச் செய்கிறீர்கள். பாண்டவர்களை வளப்படுத்தியதால் நாம் செல்வத்தில் வேண்டுமானால் ஏழையாகி இருக்கலாம். ஆனால் நேர்மைக்கும், நீதிக்கும் முன்னால் நாம் மாபெரும் முதலீடைச் செய்தவர்கள் ஆகிறோம். நாம் கொடுத்த செல்வங்கள் அனைத்தும் தர்ம சாம்ராஜ்யம் அமைக்க வேண்டிச் செய்த முதலீடு. சாவை விடக் கொடியதானதொரு கஷ்டத்தில் அவர்கள் தவிக்கையில் நேர்மைக்காகப்பாடுபட்டுக் கொண்டிருக்கையில் நாம் சரியான சமயத்தில் செய்த உதவி அது. தர்மசாம்ராஜ்யம் நிறுவுவதற்காகவே அவர்கள் இந்திரப் பிரஸ்தத்தையே நிர்மாணித்தார்கள். இப்போது அந்த தர்ம சாம்ராஜ்யம் நிறுவுவதில் அவர்களுடன் நாமும் துணை போகிறோம். நாமும் அவர்களுடைய கூட்டாளிகளாகி இருக்கிறோம். தர்மத்தை நிலை நாட்டுவதில் அவர்களோடு நாமும் பயணிக்கிறோம்.”

சத்ராஜித்துக்கு இப்போது தன்னுடைய நிலைமையை இந்த சபையில் தெளிவாக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டிருப்பதாகத் தோன்றியது. யாதவர்களை மிரட்டியும், பயமுறுத்தியும், கட்டாயப்படுத்தியும் தான் தன்னை ஓர் உயர்ந்த நிலையில் வைத்திருப்பதை இவர்கள் கேள்விக்கு உள்ளாக்குவதைப் புரிந்து கொண்டான். அதைக் குறித்தே கேள்விகள் எழுப்பப்படுகின்றன என்பதையும் தன்னுடைய நிலைக்குச் சவால் விடுவதையும் புரிந்து கொண்டுவிட்டான்.  ஆகவே தன் கண்களைப் பயங்கரமாக உருட்டிக் கொண்டு, மிக உரத்த குரலில் பேச ஆரம்பித்தான். “இந்தப் பாண்டவர்களோடு நமக்கு என்ன வந்தது? அவர்களுடன் கூட்டுச் சேர்ந்து நாம் அடையப் போகும் லாபம் தான் என்ன? நாம் நம்முடைய சுக வாழ்க்கைக்காகவே மாபெரும் செல்வத்தை ஈட்டினோம்; ஈட்டி வருகிறோம். அதை நாம் நமக்காவே பயன்படுத்திக் கொண்டு அனுபவிக்க வேண்டுமே அல்லாது தாரை வார்க்கக் கூடாது!”

“மாட்சிமை பொருந்திய சத்ராஜித் அவர்களே! பணத்தை அதீத செல்வத்தைத் தன் சொந்த விருப்பு வெறுப்புகளுக்காகவோ, தனக்கு முக்கியத்துவம் கிடைக்கவேண்டும் என்பதற்காகவோ, நாமே அனுபவித்துக் கொள்வதற்கோ பயன்படுத்துவது மாபெரும் தவறு! அது நல்லதற்கில்லை! திருட்டுக்குச் சமானமானது!” என்று கிருஷ்ணன் கடுமையும், கண்டிப்பும் கலந்த குரலில் தீர்மானமாகக் கூறினான். சத்ராஜித்திற்குச் சவால் விடும் தோரணையில் பலராமன் அப்போது குறுக்கிட்டு, “நன்கு கூறினாய், கோவிந்தா! நன்கு கூறினாய்!” என்று அவனைப் பாராட்டினான். சத்ராஜித் கொஞ்சம் யோசித்தான். இவ்வளவு பெரிய ராஜசபையில் இத்தனை பெரிய மனிதர்கள் இருக்கையில் கடுமையான சட்டதிட்டங்களும், நன்னடத்தைகளும் மட்டுமே அனுமதிக்கப்படும் இடத்தில் இப்போது அவன் சொல்லும் எத்தகைய சொற்களும் அவனுக்குப் பேரிழிவையே உண்டாக்கும். அவனை தர்மசங்கடத்தில் ஆழ்த்தும். ஆனாலும் உள்ளுக்குள் எழுந்த கோபத்தை அடக்கிய வண்ணம் அவன் பேசினான்:” எனக்கு எவ்விதக் கட்டாயமும் எழவில்லை. எவரும் என்னைக் கேட்கவும் இல்லை. குரு வம்சத்தினருக்குக் கப்பம் கட்டும்படியான சூழ்நிலை ஏதும் எனக்கு ஏற்படவில்லை. நான் யாருக்கும் நன்றிக்கடன் பட்டிருக்கவில்லை. எனக்குக் கடமைகளும் ஏதும் இல்லை. அவர்களுக்கோ அல்லது மற்ற எவர்களுக்குமோ எனக்கு எவ்விதமான கடமைகளும் ஏற்படவில்லை.” என்று கொஞ்சம் இகழ்ச்சி தொனிக்க அவமதிப்பாகப் பேசினான்.

சத்ராஜித் எவ்விதமான சட்டதிட்டங்களுக்கும் கட்டுப்படாமல் அவன் மனதில் தோன்றியதைப் பேசியதைக் கேட்டுக் கொண்டிருந்த பலராமனுக்குக் கோபம் வந்தது. அவன் முகம் கோபத்தில் சிவந்தது. அவன் பேச ஆரம்பிப்பதற்குள்ளாகக் கிருஷ்ணன் குறுக்கிட்டான். “கப்பமா? கப்பம் எங்கிருந்து வந்தது? நாம் குரு வம்சத்தினருக்குக் கப்பம் ஏதும் செலுத்தவில்லை! துவாரகையின் இந்த யாதவர்களால் பாண்டவர்களிடம் ஒரு அருமையான முதலீடு செய்யப் பட்டிருக்கிறது. ஆரிய வர்த்தத்தின் வாழ்க்கை முறையை வலுப்படுத்தவும், ஆர்யர்களின் வாழ்க்கையை மேம்படுத்தவும் செய்யப்பட்ட மாபெரும் முதலீடு அது!” என்றான் கிருஷ்ணன்.

சத்ராஜித் சீறினான்! “உன் மக்களை நீ வளம் குன்றச் செய்திருக்கிறாய்! நீ இதயமில்லாதவன்! உன் சொந்த மக்களை உன் சொந்த யாதவ குலத்தை நீ ஏழையாக்கி இருக்கிறாய்!” என்ற சத்ராஜித் தன்னைக் கொஞ்சம் கஷ்டப்பட்டு அடக்கிக் கொண்டு, “சரி, சரி, இப்போது இது போதும்! நாம் இன்னொரு நாள் இதைக் குறித்து இன்னும் விரிவாகப்பேசுவோம்.” என்றான்.  கிருஷ்ணன் அப்போது அமைதியாக, ஆனால் கண்டிப்பான குரலில், “இவ்வளவு நேரமாக நான் என்ன செய்து கொண்டிருந்தேன்? உங்களிடம் பேசிக் கொண்டு தானே இருக்கிறேன்?” என்றவன், “சரி, நீங்கள் இந்த விஷயத்தைக் குறித்து மேலும் என்னிடம் தனியாகப் பேச விரும்பினால் நாளைக் காலை நான் என்னுடைய நித்ய கர்மானுஷ்டானங்கள் முடிந்ததும் உங்களை வந்து பார்க்கிறேன். அப்போது உங்களுக்குப் புரியும். நீங்கள் உங்கள் சொத்தை இழக்க விரும்பாததால் தான் மற்ற யாதவர்களுக்கு அதை இட்டு நிரப்ப வேண்டி அவர்கள் சொத்தை இழக்க வேண்டி இருந்தது என்பதைப் புரிந்து கொள்வீர்கள். “ என்றான்.

சத்ராஜித் தன்னுடைய ஆசனத்திலிருந்து எழுந்து நின்றான்.தன் கண்களை உருட்டிய வண்ணம் மீண்டும் உரத்த குரலில் கத்தினான். “என்னுடைய நடத்தை குறித்த விமரிசனம் எதுவும் மற்றவர்கள் செய்வதை நான் விரும்புவதில்லை. அதை நான் அனுமதிக்கவும் மாட்டேன்!” என்றான்.

“மஹாராஜா உக்ரசேனர் முன்னிலையில் நீங்களும் மரியாதைக் குறைவாக நடந்து கொள்வதை நாங்களும் அனுமதிக்கப் போவதில்லை!” என்ற வண்ணம் பலராமனும் தன்னுடைய ஆசனத்திலிருந்து எழுந்தான். அப்போது கிருஷ்ணா தன் கைகளால் அவன் கைகளை அழுத்திய வண்ணம் தான் இவனுக்குத் தக்க பதில் சொல்வதாய்க் குறிப்பால் உணர்த்தினான். கிருஷ்ணனும் பலராமனைப்போல் அல்லது சத்ராஜித்தை விடவும் அதிகக் கோபத்துடன் கத்தப் போகிறான் என்றே சபையினர் அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் அனைவரும் ஏமாந்ந்தனர். சத்ராஜித்தின் வார்த்தைகளால் தான் அதிகம் மனதில் சந்தோஷம் அடைந்தவனைப் போல் அவனைப் பார்த்துச் சிரித்தான். “மதிப்புக்குரிய சத்ராஜித் அவர்களே! நான் உங்களுடன் பேசிய பின்னர் நீங்கள் ஒருவேளை சற்று மாறுபட்டுச் சிந்திக்கலாம்.” என்றான் கிருஷ்ணன்.

அப்போது வசுதேவர் உக்ரசேனரின் காதுகளில் ஏதோ மெதுவாகச் சொல்லவே உக்ரசேனர் அமைதியை நிலைநாட்ட வேண்டித் தன் கைகளை உயர்த்தி அனைவரையும் அமைதி காக்கச் சொன்னார். “ இப்போது இந்த சபையை இத்துடன் முடித்துக் கொள்ள நினைக்கிறேன்.  அடுத்த மாதம் பௌர்ணமி தினத்தன்று ரதப் போட்டி நடைபெறும் என அறிவிக்கிறேன்.” என்றார்.

அவ்வளவில் சபை கலைந்தது!

Wednesday, October 14, 2015

சத்ராஜித்தின் வெறுப்பும், கண்ணனின் விருப்பும்!

“இந்தப் பிரச்னை எப்படித் தீர்க்கப்பட்டது?” எனக் கேட்டார் உக்ரசேனர்.

“கிருஷ்ணன் தலையீட்டில் தான்! எல்லாப் பக்கங்களிலும் வாக்குறுதிகளை அள்ளித் தந்தான். பாண்டவர் பக்கமும் வாக்குறுதிகள் அளிக்கப்பட்டன! கௌரவர் பக்கமும் வாக்குறுதிகள் அள்ளித் தரப்பட்டன. துரியோதனனின் மனைவி இறக்கும் தருவாயில் இருந்தாள். அவளிடம் ஹஸ்தினாபுரத்தை துரியோதனன் தான் ஆட்சி செய்வான்; வேறு யாரும் ஆட்சிக்கு வரமாட்டார்கள்! என்னும் வாக்கைக் கொடுத்தான். அதோடு மட்டுமா? பாண்டவர்களின் இரண்டாமவன் ஆன பீமனுக்கு அவன் தான் அடுத்த யுவராஜா என்னும் வாக்கையும் கொடுத்தான். அது அவனுக்கு வாரிசுரிமையாகக் கிடைக்கும் என்றும் சொன்னான். கடைசியில் எல்லா வாக்குறுதிகளையும் கிருஷ்ணன் நிறைவேற்றி விட்டான். ஒரு மாபெரும் சகோதரச் சண்டை தவிர்க்கப்பட்டது. ஐந்து சகோதரர்களும் மிகவும் சந்தோஷத்துடனும், மன நிறைவுடனும் காண்டவப்ரஸ்தம் நோக்கிச் சென்றனர். “

“அதோடு விடவில்லை கிருஷ்ணனின் திறமையும், சாமர்த்தியமும். குரு வம்சத்துச் சொத்தில் சரிபாதி பாண்டவர்களுக்கு அளிக்கப்பட்டது! அதைத் தவிரவும் துருபதன் தன் மருமகன்கள் ஐவருக்கும் அளித்த பரிசுகள், அனைத்தும் அப்படியே காண்டவப்ரஸ்தம் சென்றன. நாங்களும் அவர்களுடன் சென்றோம். அவர்கள் நாடு கடத்தப்பட்டுக் காட்டுக்கு வசிக்கச் சென்றிருப்பதாக இருந்திருக்க வேண்டியதை கோவிந்தன் தலையீடு முற்றிலும் மாற்றியமைத்தது. அழகான ஓர் நகரை நிர்மாணித்து அதற்கு இந்திரப்ரஸ்தம் என்னும் பெயரையும் இட்டு அவர்களின் தோல்வியாக இருக்க வேண்டியதை மாபெரும் வெற்றியாக மாற்றியமைத்தான் கிருஷ்ணன்.”

“ஆம், ஆம்! ஆனால் அனைத்தும் யாதவர்களின் செலவில்! அவர்களால் கொடுக்கப்பட்ட பொருள், ரதங்கள், குதிரைகள், நவரத்தினங்கள், பொன், கால்நடைச்செல்வங்கள் போன்றவற்றால்!” என்று சத்ராஜித் குறுக்கிட்டுச் சீறினான். பலராமன் முகம் கோபத்தால் சிவந்தது. அவன் கோபத்தில் தன்னையுமறியாமல் வெடிக்க இருந்த அந்தச் சமயத்தில், கிருஷ்ணனின் மென்மையான குரல் குறுக்கிட்டது. யார் எப்போது கோபமாகப் பேசினாலும் அதைக் கிருஷ்ணன் மென்மையான தன் பேச்சாலேயே எதிர்கொள்வான். அதே போல் இப்போதும் பேசினான். “ஐந்து சகோதரர்களும் என் தந்தையின் சகோதரி வழிச் சகோதரர்கள் ஆவார்கள். அவர்களுக்கு நாங்கள் செய்யாமல் யார் செய்வார்கள்? அவர்களுக்கு எங்கள் சார்பில் பரிசுகள் அளித்தே ஆக வேண்டும்!” என்றான்.

“ஹா! இப்போது தான் உன் அண்ணன் சொன்னான். குருவம்சத்துச் சொத்தில் சரிபாதி அவர்களுக்குக் கொடுக்கப்பட்டது என்று! அது போக துருபதனால் அளிக்கப்பட்டவை வேறு இருந்திருக்கின்றன. இவ்வளவுக்கும் மேல் நாம் வேறு தனியாக அவர்களுக்குக் கொடுத்திருக்க வேண்டுமா என்பது தான் என் கேள்வி! அது தேவையில்லை! இவ்வளவு விலை உயர்ந்த ஆடம்பரமான பொருட்களை நாம் ஏன் அவர்களுக்குக் கொடுக்க வேண்டும்?” என்று சத்ராஜித் விடாமல் மேலும் கூறினான்.

“அவசியம்! ஆம்! இருந்தது!” என்றான் பலராமன். அவன் சத்ராஜித் இருந்த பக்கமே திரும்பாமல் பேசினான்.”யாதவ அதிரதிகள் என்னவெல்லாம் செய்திருக்கிறார்கள், இந்த ஆர்யவர்த்தத்திலே அவர்களால் பல அற்புதங்கள் நிகழ்த்தப்பட்டன! குரு வம்சத்தினருக்கும், பாஞ்சால நாட்டினருக்கும் இடையே நட்பை ஏற்படுத்தி இருக்கின்றனர். அதோடு மட்டுமா? பாண்டவர்களுக்காக ஒரு மாபெரும் சாம்ராஜ்யத்தையே உருவாக்கித் தந்திருக்கின்றனர். “ என்ற பலராமன் சற்று நிறுத்தி விட்டு மேலும் தொடர்ந்தான். “ஆர்யவர்த்தத்து அரசர்களுக்கிடையே நாம் யாதவர்கள் நடுநிலை வகித்து வந்தோம்; வருகிறோம்; இனியும் அவ்வாறே இருப்போம். இருவருமே நமக்கு வேண்டியவர்களே! அப்படி இருக்கையில் நாம் இந்தச் சின்ன விஷயத்தில் கருமிகளைப் போல் நடந்து கொள்வது சரியல்லவே! நம் பெருந்தன்மையைக் காப்பாற்ற வேண்டாமா? கோவிந்தன் நம்முடைய சொத்துக்களின் மொத்த மதிப்பில் ஐந்தில் ஒரு பாகம் பாண்டவர்களுக்குக் கொடுக்க விரும்பினான்.”

“அது சரி அப்பா! அவன் உன்னைக் கேட்டானா? உன்னைக் கலந்து ஆலோசித்தானா?” என்று மீண்டும் கேட்டான் சத்ராஜித்.

“ஆம், அவன் என்னைக் கேட்டு ஆலோசித்தான். என்னைக் கேட்காமல் செய்யவில்லை. எதுவுமே அவன் என்னைக் கேட்காமல் அவனாகச் செய்யவும் மாட்டான். ஆனால் உக்ரசேன மஹாராஜா! கோவிந்தனைக் குறித்து நானும் ஒரு குறை தெரிவிக்க வேண்டி உள்ளது! குறை கூறியே ஆகவேண்டும்.” என்றான் பலராமன். “என்ன அது?” என வினவினார் உக்ரசேனர். “கிருஷ்ணனால் எனக்கு ஏற்பட்ட ஆச்சரியங்களிலிருந்து நான் இன்னமும் விலகவில்லை. ஒவ்வொரு கணமும் அதில் மூழ்கி இருக்கிறேன்.” என்ற பலராமன் கிருஷ்ணனை அன்பு ததும்பும் கண்களோடு பார்த்தான். பின்னர் உக்ரசேனரைப் பார்த்து மேலும் பேச ஆரம்பித்தான்.

“உங்களால் சொல்ல முடியாது! அவனோடு நீங்கள் எங்கே இருப்பீர்கள் என்றோ அல்லது எங்கே செல்வீர்கள் என்பதோ நிச்சயமாய்ச் சொல்ல முடியாது. சங்கடங்கள் அவனால் உருவாவது போல் இருக்கும். ஆனால் அனைத்தும் சூரியனைக் கண்ட பனி போல் விலகிவிடும். ஏராளமான வாக்குறுதிகளை அளிப்பான். ஆனால் எதையும் மறக்காமல் நிறைவேற்றி வைப்பான். எனக்கு ஒன்றுமே தெரியாது. ஆனால் எல்லாவற்றிலும் என்னை முன்னிறுத்தி அவன் பின் நிற்பான். நடந்த நன்மைகள் அனைத்துக்கும் காரணம் நானே என அனைவரும் அறியும்படி கூறி அவன் ஒதுங்கி விடுவான். உண்மையில் எனக்கு அதைக் குறித்து ஏதுவுமே தெரிந்திராது. அவனுக்குத் தக்க தண்டனை கொடுக்கவேண்டும், மாட்சிமை பொருந்திய அரசே!” என்று முடித்த பலராமன் கிருஷ்ணன் தோள் மேல் தன் கைகளை வைத்து அழுத்திக் கொடுத்துத் தன் அன்பைத் தெரிவித்தான்.

“என்னால் இன்னமும் ஏன் இத்தனை விலை உயர்ந்த பொருட்கள் நம்மால் பாண்டவர்களுக்குப் பரிசளிக்கப்பட்டது என்பதைப் புரிந்து கொள்ளவே முடியவில்லை. அதிலும் யாதவர்களின் சொத்தை அழித்து அவர்களை நாம் ஏன் வாழ வைக்க வேண்டும்?” சத்ராஜித் கோபத்தில் கத்தினான்.

கிருஷ்ணன் குறிப்பாக பலராமன் கைகளை அழுத்தினான். அதைப் புரிந்து கொண்டான் பலராமனும். பின்னர் கிருஷ்ணனையே அதற்கு பதில் கூற அனுமதித்தான். “ஆர்யவர்த்தத்தில் தர்ம சாம்ராஜ்யத்தை நிலை நாட்ட நாம் கொடுத்த மாபெரும் விலை அது!” என்றான் கிருஷ்ணன். “அதனால் பரவாயில்லை, கிருஷ்ணா!” என்றான் சாத்யகன். “ஆனால் யாதவர்களிடமிருந்தும், யாதவப் பெண்களிடமிருந்தும் நாம் பரிசுகளைப் பெற்று அளித்திருக்கக் கூடாது. இதன் மூலம் துரதிர்ஷ்டவசமாகப் பல யாதவர்கள் ஏழையாகி விட்டனர்.யாரெல்லாம் அப்போது இந்தப் பரிசளிப்பைச் செய்யவில்லையோ அவர்கள் அனைவரும் நல்ல வசதியோடும் செல்வத்தோடும் இருக்கின்றனர். “ என்றான் சாத்யகன்.

“அதெல்லாம் போகட்டும்! இப்போது நமக்கு என்ன நடக்கப் போகிறது?” என்று தன் கொடூரமான குரலில் சத்ராஜித் கேட்டான். “நாம் எதற்குத் தகுதியானவர்களோ அது நமக்குக் கிடைக்கும்.” என்றான் கிருஷ்ணன் உறுதியான குரலில்.

“நம்முடைய வளங்கள் அனைத்தையும் நீ முடக்கிவிட்டாய்! ஒருவேளை ஷால்வன் படையெடுத்து வந்தானானால் நம்மை எல்லாம் நொறுக்கித் தள்ளிவிடுவான். நம்மை நாம் எங்கே ஒளித்துக் கொள்வது? இந்தப் பரந்த பூமியில் நமக்கு இடமே இல்லை! எங்கேயும் நாம் சரண் அடைய முடியாது. எங்கே போய் ஒளிந்து கொள்வோம்?” என்றான் சத்ராஜித் வெறுப்பான குரலில்!

“நாம் தர்மத்திற்காகப் போரிட்டு தர்ம சாம்ராஜ்யத்திற்காக உயிரையும் கொடுக்கத் தயாராக இருந்தோமெனில் நம்மை எதிர்ப்பவர் யார்?” என்றான் கிருஷ்ணன்.  “அதெல்லாம் சரி அப்பா! ஆனால் நாம் எதை வைத்துப் போரிடுவோம்? நம்மிடம் என்ன இருக்கிறது? நம்மிடம் இருக்கும் வசதிகளை வைத்து என்ன செய்ய முடியும்? பாண்டவர்களுக்குக் கொடுத்தது போக எஞ்சியவற்றில் எதுவும் செய்ய இயலாது!” என்று சத்ராஜித் பக்கம் அமர்ந்திருந்த ஒரு வயதான யாதவத் தலைவர் கூறினார்.

Sunday, October 11, 2015

பலராமன் சிரிப்பு! சத்ராஜித் கொதிப்பு!

பலராமன் மேலும் பேசினான்:”கோவிந்தன் தன் வாக்கைக் காப்பாற்றினான். பாஞ்சால நாட்டின் மன்னன் துருபதனுக்கு அவன் மகளான கிருஷ்ணாவுக்கு ஏற்ற மணாளனைத் தேடிக் கொடுப்பேன் என வாக்குறுதி அளித்திருந்தான். அந்த வாக்கைக் காப்பாற்றிவிட்டான். அதிலும் சுயம்வரத்தின் மூலமே தேர்ந்தெடுக்கப்படுவான் என்றும் சொல்லி இருந்தான். அதன்படியே திரௌபதியின் சுயம்வரத்திலேயே போட்டியில் வென்று அவள் கரம் பிடித்தான் அர்ஜுனன்!”

“ஆஹா, ஆஹா! அற்புதம்! இது எப்படி நிகழ்ந்தது!” உக்ரசேனர் கேட்டார்.

“இன்னும் கேளுங்கள்! அங்கே யார் யாரெல்லாம் வந்திருந்தார்கள் தெரியுமா? நம் ஜன்ம வைரி ஜராசந்தனும் வந்திருந்தான். போட்டியில் வென்று திரௌபதியை மணக்கத் தன் பேரனை அழைத்து வந்திருந்தான். அவனால் இயலாவிட்டால் அவனே போட்டியில் கலந்து கொள்ளும் எண்ணத்திலும் இருந்தான். அப்படியும் இல்லை எனில் திரௌபதியைத் தூக்கிச் சென்று தன் எண்ணத்தை நிறைவேற்றிக் கொள்ளவும் தயாராக இருந்தான். ஆனால் அவன் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை; அவன் பேரனும் போட்டியில் கலந்து கொள்ளவில்லை; திரௌபதியையும் தூக்கிச் செல்லவில்லை. மாறாகப் போட்டி நடைபெறும் முன்னரே அதற்கு முதல்நாளே அவன் அந்த இடத்தை விட்டு அகன்று விட்டான். அது எப்படி நடந்தது தெரியுமா? அதுவும் கிருஷ்ணனால் தான்!”

“போட்டிக்கு முன்னாலேயே இரவில் ஜராசந்தனைச் சந்தித்தான் கிருஷ்ணன். அவனுடன் என்ன பேசினானோ, எப்படி இதைச் சாதித்தானோ! ஒன்றும் புரியவில்லை! ஆனால் கிருஷ்ணன் இதைச் சாதித்தான்! சாதித்துக் காட்டிவிட்டான். இன்னமும் என்னால் இதைப் புரிந்து கொள்ளவே முடியவில்லை! கிருஷ்ணன் எப்படி இதைச் சாதித்தான் என்று யோசித்து யோசித்து ஒன்றும் புரியவில்லை!”

“ஆஹா! நான் ஒரு விஷயத்தை மறந்துவிட்டேனே! அதுவும் முக்கியமான விஷயம்!” என்றபடி தனக்குள் முகிழ்த்த சிரிப்புடன் பலராமன் மேலே பேச ஆரம்பித்தான். “நம் சகோதரன் பீமன் இருக்கிறானே! அவன் ஒரு ராக்ஷச இளவரசியைக் கல்யாணம் செய்து கொண்டு அதன் மூலம் ராக்ஷச வர்த்தத்தின் அரசனாக ஆகிவிட்டான். அவள் மூலம் அவனுக்கு ஒரு மகனும் பிறந்திருக்கிறான்.” என்ற பலராமனுக்குச் சிரிப்பை அடக்க முடியாமல் சிரித்துக் கொண்டே, “அவன் இப்போது மாட்சிமை பொருந்திய மஹாராஜா! தெரியுமா!” என்ற வண்ணம் மீண்டும் சிரித்தான்.

“ஆஹா, எங்களுக்கு இந்த விஷயம் தெரியாதே!” என்றார் உக்ரசேனர்.

“ம்ம்ம்ம், பீமனின் மகன் தான் அவனுடைய தலைமுறையில் அனைத்துக் குழந்தைகளுக்கும் மூத்தவனாக இருக்கிறான். ஆகவே ஒருவேளை ஷாந்தனு மஹாராஜாவின் பாரம்பரியமான சிங்காதனத்துக்கு அவனே வாரிசாகவும் ஆகலாம்.” என்ற பலராமன் தன் சிரிப்பை மீண்டும் அடக்கிக் கொண்டு,”ஆர்யவர்த்தத்தின் வல்லமையும் வலிமையும் பொருந்திய பாரம்பரியங்கள் பலவற்றை உள்ளடக்கிய சிங்காதனத்தில் ஒரு ராக்ஷசியின் மகன் அரசன்!” என்ற வண்ணம் சிரிக்கவே அந்தச் சிரிப்பு அங்கிருந்த அனைவரையும் தொற்றிக்கொள்ள ஒரு கணம் சபையே சிரிப்பில் ஆழ்ந்தது.

“ஆனால் அதிலே ஒரு கஷ்டம் இருக்கிறது!” என்று உள்ளார்ந்த களிப்புடன் பேசினான் பலராமன். “ஹா!ஹா!ஹா! அந்தக் குழந்தையின் தலையில் மயிரே இல்லை! வழுக்கையாக உள்ளது. ஷாந்தனுவின் அந்த வழிவழியாக வந்த கிரீடம் அந்த வழுக்கைத் தலையில் எப்படிப் பொருந்தும்? தலையில் மயிரே இல்லாதபடியால் அவன் பெயரைக் கூட கடோத்கஜன் என வைத்திருக்கின்றனர். அதற்குப் பொருள் தலைமயிரே இல்லாமல் கடம் போன்ற பானை போன்ற தலையை உடையவன் என்ற பொருளாம்!”

மீண்டும் சபையில் சிரிப்பலை எழுந்தது. அது அடங்கிய பின்னர் வசுதேவர் தன் மகனைப் பார்த்து, “ உனக்குத் தெரிந்ததையும், நீ செய்ததையும் குறித்தும் மேலும் ஏதேனும் கூறு!” என்றார்.

“அதன் பின்னர் என்ன? எதுவுமில்லை! அர்ஜுனன் போட்டியில் வென்றான். மற்ற அரசர்கள் அனைவரும் ஒன்று கூடி அவனைத் தாக்கக் கிளம்பினார்கள். ஆனால் நானும் கோவிந்தனும் அவனுடைய பாதுகாப்புக்குச் சென்றோம். ஆனாலும் அங்கே இன்னொரு சங்கடமும் இருந்தது!” என்று நிறுத்தினான் பலராமன்.  சத்ராஜித்துக்குக் கோபம் வந்து பற்களைக் கடித்துக் கொண்டு, “உன்னுடைய சங்கடங்களுக்கும் கஷ்டங்களுக்கும் அளவே இல்லை! பிரத்யட்சமாய்க் காண்கிறோம்!” என்று சீறினான். அவனை இகழ்ச்சியாகப் பார்த்தான் பலராமன். “நாம் ஒன்றும் இங்கே துவாரகையில் யாதவப் பெண்களின் முந்தானைக்குப் பின்னால் ஒளிந்து கொண்டு வாழ்க்கை நடத்தவில்லை! நம் வாழ்வின் ஒவ்வொரு கணமும் ஆபத்தால் சூழப்பட்டு நம்மால் வெற்றி காணப்பட்டிருக்கிறது.” என்றான்.  அப்போது சபையிலிருந்தவர்களின் கண்கள் அவர்களையும் அறியாமல் சத்ராஜித்தின் மகன் பங்ககராவையும் அவன் தோழன் ஷததன்வாவையும் பார்த்தன. இரு அதிரதிகளும் மற்றவர்களுடன் செல்லாமல் துவாரகையிலேயே தங்கிவிட்டனரே!

இதைப் பார்த்த சத்ராஜித் கோபத்துடன் ஏதோ பேச முனைய, வசுதேவர் குறுக்கிட்டு, “சரி, சரி, இனி ஆகவேண்டியதைப் பார்ப்போம். நடந்தவை அனைத்தையும் சொல்லி முடி!” என மகனுக்கு ஆணையிட்டார். பலராமன் சத்ராஜித் இருந்த பக்கமே திரும்பவில்லை! மேலே பேசினான். “அதன் பின்னர் பலத்த ஆலோசனைகளுக்குப் பின்னர் பாஞ்சால இளவரசி பாண்டவர்கள் ஐவரையும் மணந்து கொண்டாள். “ என்றான். சத்ராஜித் இதைக் கேட்டதும் தன் பற்களைச் சத்தம் வரும்படி கடித்துக் கொண்டான். கடித்த பற்களிடையே அவன் பலராமனைப் பார்த்து, “துருபதன் இந்த அநியாயத்திற்கு எப்படி ஒப்புக் கொண்டான்?” என்றும் கேட்டான். அதற்கு பலராமன், “இது ஒன்றும் பாவமான ஒரு திருமணம் அல்ல! நடக்கக் கூடாததும் நடக்கவில்லை!”சத்ராஜித்தின் குறுக்கீடு அவனுக்குக் கோபத்தை வரவழைத்திருந்தது.

“குலகுருவான வேத வியாசர் வரவழைக்கப்பட்டார். தர்ம சாஸ்திரங்களில் அவரை விட வல்லுநர் யார் இருக்கின்றனர்? அவருக்குத் தான் அனைத்தும் தெரியும். எது செய்யலாம், எது செய்யக் கூடாது என்பதை அவர் நன்கறிவார். அவர் தான் இந்த யோசனையை அங்கீகாரம் செய்ததே! இமயமலைப்பக்கம் உள்ள ஆரியப் பழங்குடியினர் சிலரிடம் இன்னமும் இந்த வழக்கம் இருந்து வருவதாகவும் சொன்னார். அதன் பின்னர் கோவிந்தனும் இதை அங்கீகரித்தான்.”

சத்ராஜித் மிக மோசமான நிகழ்வு நடந்துவிட்டது என்பதைத் தெரிவிக்கும் விதமாகச் சீறினான். அவனுடைய வெறுப்பு முழுவதும் அந்தச் சீற்றத்தில் வெளிப்பட்டது. வசுதேவர் மீண்டும் குறுக்கிட்டார். “அதெல்லாம் சரி, மகனே! குருவம்சத்தினருக்கும், பாஞ்சால நாட்டினருக்கும் இடையே நட்பு எப்படி உருவாயிற்று? இருவருக்கும் நட்பாக இருக்கச் சம்மதம் இருந்ததா?” என்று கேட்டார். “ஆம், இது கொஞ்சம் கஷ்டமான ஒன்றுதான்! இங்கே தான் நம் கோவிந்தனின் திறமை மீண்டும் வேலை செய்தது.” என்ற பலராமன் தன் அருகிலிருந்த தன் தம்பியின் முதுகை அருமையாகத் தட்டிக் கொடுத்தான். “விதுரர், மிகவும் புத்திசாலியும், நீதி, நேர்மையில் வல்லவருமான குரு வம்சத்து அமைச்சர், பாஞ்சாலத்துக்கு அநேகவிதமான பரிசுப் பொருட்களோடு வந்து சேர்ந்தார். அந்தப் பரிசுகள் அரசன் திருதராஷ்டிரன் சார்பாகவும், அரசுக்கட்டில் ஏறாமலேயே ஆட்சி புரிந்து வரும் பீஷ்மர் சார்பாகவும் அளிக்கப்பட்டன. அதோடு இல்லாமல் புது மணம் புரிந்து கொண்ட பாண்டவர்களையும், அவர்களோடு துணையாக இருந்த எங்களையும் சேர்த்தே ஹஸ்தினாபுரத்துக்கு வரும்படி அழைப்பும் விடுத்தனர். நாங்கள் யாரும் நினைத்துக் கூடப் பார்க்கவில்லை. குரு வம்சத்தினருக்கும், பாஞ்சால நாட்டினருக்கும் இடையில் நட்பு ஏற்படும் என! கோவிந்தன் தான் அதைச் சாதித்தான். அவனாலும் இது முடியும் என நாங்கள் எவரும் முதலில் எண்ணவில்லை. ஆனால் அவன் இதைச் செய்து காட்டினான்.”

சற்று நேரம் நிறுத்திய பலராமன் மீண்டும் தொடர்ந்தான்!” அதன் பின்னர் நாங்கள் அனைவரும் ஹஸ்தினாபுரம் சென்றோம். மிகப் பெரிய அளவில் ஆடம்பரமாகவும், அதே சமயம் அன்பைக் காட்டியும் அங்கே வரவேற்புக் கொடுத்தனர்.  துரியோதனன் துக்கத்தில் ஆழ்ந்துவிட்டான். அவன் தான் தற்கொலை செய்து கொள்வதாகக் கூறினான். அவன் சகோதரர்கள் அனைவரையும் ஹஸ்தினாபுரத்தை விட்டு நீங்கி காந்தாரம் செல்லும்படி கூறினான். யுதிஷ்டிரன் வந்துவிட்டான். அவன் ஹஸ்தினாபுரத்தின் சிங்காதனத்தில் சக்கரவர்த்தியாக முடி சூடினான் எனில் தாங்கள் எவரும் ஹஸ்தினாபுரத்தில் இருக்க மாட்டோம் என்று மிரட்டினான்.”


Thursday, October 8, 2015

மந்திராலோசனை சபையில்!

இரு வருடங்கள் முன்னர் கிருஷ்ணனும், பலராமனும் மற்ற அதிரதர்களையும் வீரர்களையும் அழைத்துக் கொண்டு ஆர்யவர்த்தம் சென்றது ஒரு வகையில் சத்ராஜித்துக்கு நிம்மதியைத் தந்தது. தன்னுடைய உயர்நிலையைத் தக்கவைத்துக் கொள்வதோடு அல்லாமல், அதிரதர்களோ, மஹாரதர்களோ அல்லது எவருமே சாதாரணர்களாக இருந்தாலும் சரி அவர்களைத் தன் பக்கம் இழுத்துக் கொள்ள வேண்டிய முயற்சியை இப்போதே செய்ய நினைத்தான். ஒவ்வொரு முறையும் அவன் கப்பல் தூர தூர தேசங்களுக்குப் பயணம் செய்து அளவற்ற செல்வத்தை அள்ளிக் கொண்டு வந்தது. போதாதற்கு சூரியனால் அளிக்கப்பட்ட ச்யமந்தக மணியும் அவனுக்குக் குன்றாத தங்கத்தையும், நவரத்தினங்களையும் வாரி வழங்கியது. ஆகவே தன்னுடைய செல்வ நிலையில் பெருமை கொண்டிருந்த சத்ராஜித் அங்கே வந்திருந்த பலரையும் பார்த்துப் பெருமையுடனும், கர்வத்துடனும் தலையை அசைத்துத் தன் அங்கீகாரத்தைத் தெரிவித்ததன் மூலம் தன்னைவிடக் கீழ்நிலையில் இருப்பவர்களையும் தான் மதிப்பதையும் காட்டிக் கொண்டான். அரியணக்கு வலப்புறமாக இருந்த முதல் ஆசனத்தில் சத்ராஜித்தின் மகனும் அதிரதியுமான பங்ககரா வீற்றிருந்தான்.

சத்ராஜித் உள்ளே நுழையும்போதே அங்கே கிருஷ்ணன் அமர்ந்திருக்கிறானா என நோட்டம் விட்டான். அதோ! கிருஷ்ணன்! அதிரதர்களுக்கென அமைக்கப்பட்டிருந்த ஆசனங்களில் இரண்டாவதாக அமர்ந்தவண்ணம் தன் நண்பர் குழாத்துடன் ஏதோ முக்கியமாய்ப் பேசிக் கொண்டிருக்கிறானே! சத்ராஜித் மிகவும் சூட்சும புத்தி படைத்தவன். எதையும் சரியாகக் கணக்கிட்டுப் பார்ப்பதில் வல்லவன். இங்கே கூடி இருக்கும் அனைத்து யாதவர்களையும் விடப் பணம் படைத்தவன். ஆனாலும் அவனால் தன் நிலைமையில் திருப்தி அடைய முடியாமல் ஏதோ ஒன்று தடுக்கிறது. அதுதான் கிருஷ்ணனின் நினைவு. திரும்பத் திரும்பக் கிருஷ்ணனின் நினைவு அவனுள் வந்து கொண்டே இருக்கிறது! அவன் தன்னைப் பற்றி என்ன நினைக்கிறான்? அதுவும் அவன் இல்லாத இந்த இரு வருடங்களில் தான் இவ்வளவு பெரிய பணக்காரனாக ஆகி இருப்பதற்கு என்ன சொல்லுவான்? அதை எப்படி எடுத்துக் கொள்ளப் போகிறான்? மீண்டும் மீண்டும் கிருஷ்ணன் அமர்ந்திருக்கும் இடம் நோக்கிப் பார்ப்பதை அவனால் தவிர்க்க இயலவில்லை. கிருஷ்ணனையே பார்த்தான். அந்த ஆசனத்தில் அவன் அமர்ந்திருப்பதைப் பார்த்தான். எவ்விதமான ஆடம்பரமும், பகட்டும் இல்லாமல் வெகு இயல்பாக அந்த இடத்தில் அவன் பொருந்தி இருந்ததையும் கவனித்தான்.

கிருஷ்ணன் யாரையும் குறிப்பிட்டுக் கவனிக்கவில்லை. அப்படி இருந்தும் எல்லோரையும் நலம் விசாரித்தான். அனைவரிடமும் கவனம் செலுத்தினான். மிக எளிமையாக அதே சமயம் குறிப்பிடும்படியாகத் தன்னை அலங்கரித்துக் கொண்டிருந்தான். அவன் முகத்தில் புன்னகை எப்போதும் காணப்பட்டது. எவ்விதக்கவலையும் அற்ற பார்வை!  தன் நண்பர்களிடம் தனிப்பட்ட பரிவும், பாசமும் காட்டி வரும் போக்கு! அவர்களை அரவணைத்துச் செல்லும் விதம்! கனிவான பார்வை!  எல்லாவற்றுக்கும் மேல் அவனைச் சுற்றி உயர்ந்ததொரு நேர்த்தியுடன் கூடிய சூழ்நிலை தானாகவே அமைந்திருந்தது! அவன் இருக்கும் இடம் உயர்ந்ததாகத் தான் இருக்கும் என்பதோடு அவனே உயர்ந்தவன்! அவனால் இந்த இடம் உயர்வு பெற்றது என்னும்படியான நிலைமையும்! இது கொஞ்சம் பொறாமையை ஏற்படுத்தியது சத்ராஜித்துக்கு! இந்த இடையனுக்கு இவ்வளவு செல்வாக்கா?

உக்ரசேன மஹாராஜாவும், வசுதேவரும் வருவதைக் காவலாளிகள் கட்டியம் கூறி அறிவித்தனர். சத்ராஜித்தைத் தவிர அங்கிருந்த அனைவரும் எழுந்து நின்று மரியாதை செய்தனர். உத்தவனின் சகோதரனான ப்ருஹதபாலனின் தோள் மேல் கைபோட்டுக் கொண்டு உக்ரசேனர் அந்த முதுமைப் பிராயத்திலும் மெல்ல மெல்ல நடந்து வந்தார். அப்போது மட்டும் சத்ராஜித், உக்ரசேனரை வரவேற்கும் விதமாக மெல்லத் தன் ஆசனத்திலிருந்து எழுந்திருக்கும் பாவனை செய்துவிட்டுப் பின்னர் உடனே அமர்ந்துவிட்டான். அதற்குள்ளாக உக்ரசேனரும் தன் ஆசனத்தில் அமரவே, இவ்வளவில் சத்ராஜித்தும் தன் இடத்தில் ஸ்திரமாகச் சாய்ந்து அமர்ந்தான். ஒரு காலத்தில் மிக அழகாகவும், அனைவரையும் கவரும் வண்ணமும் இருந்த வசுதேவர் இப்போது முதுமையின் காரணமாக நரைத்த தலையுடனும், வெண்தாடியுடனும் காட்சி அளித்தார். எனினும் அவருக்கு அதுவும் ஒரு கம்பீரத்தையே கொடுத்தது.  அவருடைய நல்ல சுபாவமும், அனைவருக்கும் நன்மையே செய்யும் போக்கும், கண்ணியமான பார்வையும், நேர்மையைப் பிரதிபலிக்கும் கண்களும் அந்தச் சபையினரைப் பார்த்து அவர்கள் வரவேற்பிற்கு அவர் பதில் மரியாதை செய்த விதத்திலேயே அனைவரும் புரிந்து கொள்ளும்படி இருந்தது.

இவர்களுக்குப் பின்னர் கர்காசாரியார் மெல்ல மெல்ல நடந்து வந்தார். அங்கு கூடியிருந்த அனைவருக்கும் ஆசிகளைத் தெரிவிக்கும் விதமாகக் கைகளைத் தூக்கி ஆசீர்வதித்தபடி வந்தார். வயதானதால் சுருங்கிப் போன முகத்தோடும், கைகால்களோடும் காட்சி அளித்தார் அவர். பின்னர் அக்ரூரர் அனைவரையும் பார்த்து நட்புடன் சிரித்தவண்ணம் வந்து அமர்ந்தார். அவருக்குப் பின்னால் வந்த சாத்யகனோ இந்த வயதிலும் ஒல்லியாக, உயரமாக ஆனால் உரமாகக் காணப்பட்டான். அனைவரையும் ஆணையிடும் தோரணையில் அவன் பார்த்த பார்வையும், ஜொலிக்கும் கண்களும், நீண்ட கழுகு போன்ற மூக்கும், பெருமிதம் கொண்ட முகத்தோற்றமும், உருண்டு திரண்ட புஜங்களும் கொண்ட அவனைப் பார்க்கும்போதே மாபெரும் வீரன் இவன் என்ற எண்ணம் அனைவர் மனதிலும் எழுந்தது.

அனைவரும் அவரவர் ஆசனங்களில் அமர்ந்தனர். அப்போது உக்ரசேன மஹாராஜா அதிரதிகளைப் பார்த்தார்! “குழந்தைகளே! உங்கள் அனைவரையும் இந்த நாட்டின் சார்பாக வரவேற்கிறேன். எல்லா அதிரதிகள், மஹாரதிகள் அனைவரையும் வரவேற்கிறேன். ஆர்யவர்த்தத்தில் நீங்கள் அனைவரும் ஒன்று கூடி நிகழ்த்திய சாகசங்களைக் குறித்துக் கேட்டு அறிந்தேன். இப்போது இந்த ராஜசபையின் மாந்தர்கள் அனைவரும் அறியும்படி உங்கள் அனுபவங்களைச் சொல்லுங்கள்! எவ்வாறு அவை நிகழ்ந்தன! நீங்கள் அனைவரும் எப்படி அவற்றை எதிர்கொண்டீர்கள்? என்ன என்ன சாதனைகள் படைத்தீர்கள்! என்பதை எல்லாம் விவரமாக எடுத்துச் சொல்லுங்கள்!” என்ற வண்ணம் குறிப்பாகக் கிருஷ்ணனைப் பார்த்தார் உக்ரசேன மஹாராஜா. கிருஷ்ணனோ தான் எதுவும் பேசாமல் பலராமனைப் பேசச் சொன்னான்.

“மதிப்பிற்குரிய பெரியோர்களே! அனைவருக்கும் முதலில் என் வணக்கம். இந்த சௌராஷ்டிரத்தில் வாழும் யாதவர்களுக்குப் பெரும்புகழைச் சேர்க்கும் செய்திகளையே நாங்கள் கொண்டு வந்திருக்கிறோம்.!” என்ற வண்ணம் அனைவரையும் பார்த்துப் புன்னகை புரிந்த பலராமன், “முதலில் நாங்கள் சென்றது புஷ்கரத்திற்கு! அங்கே செகிதானாவுக்குப் புஷ்கரத்தை மீட்டுக் கொடுத்தோம். இது நடந்தது கிருஷ்ணனால் மட்டுமே! அவனுடைய திறமையால் மட்டுமே நடந்தது. இதற்கு நாங்கள் எவ்விதப் போரையும் செய்யவில்லை! எங்கள் ஆயுதங்களைக் கையில் எடுக்கவில்லை. எங்கள் விற்களும், அம்புகளும் கூடப் பயன்படுத்தப்படவில்லை. ஆயுதம் இல்லாமலேயே இவற்றைச் சாதித்தோம்!” என்றான் பலராமன். “சாது! சாது!” என்று கோஷித்தார் உக்ரசேனர். வசுதேவரோ தன் மகன்கள் இருவரையும் பெருமையுடனும் கர்வத்துடனும் பார்த்து ஆனந்தித்தார்.

பலராமன் தொடர்ந்தான். “அதன் பின்னர் எங்களுக்குப் பாண்டவர்கள் ஐவரும் துரியோதனன் ஆணையின் பேரில் உயிருடன் வாரணாவதத்தில் அரக்கு மாளிகையில் எரிக்கப்பட்டார்கள் என்னும் செய்தி கிடைத்தது! பாண்டவர்களுடன் அவர்கள் தாய் குந்தியும் எரிக்கப்பட்டாள் என்னும் செய்தியும் கிடைத்தது!”

“நீ நிச்சயமாக இதைச் செய்தது துரியோதனன் தான் என்பதை அறிவாயா?” வசுதேவர் வினவினார்.

“ஆம், நிச்சயமாக அறிவேன். இதைச் செய்ய ஏற்பாடு செய்தது துரியோதனனே தான். அவன் ஏற்பாடு செய்திருந்த யக்ஷன் அதன் பின்னர் காம்பில்யத்தில் சக்கரவர்த்தி துருபதனிடம் இந்த விஷயத்தைத் தானாகவே முன்வந்து ஒப்புக் கொண்டான்.”

“என்ன கொடுமை இது!” என்று கர்காசாரியார் மனம் வருந்தினார். “ஆனால் கண்ணனுக்கு இதில் நம்பிக்கை வரவில்லை. ஆகவே கண்ணன் சொன்னதின் பேரில் இதோ இருக்கிறானே, உத்தவன், அவன் ராக்ஷசவர்த்தம் சென்று பாண்டவர்கள் ஐவரையும் கண்டு பிடித்தான்!” என்ற வண்ணம் கிருஷ்ணன் அருகே அமர்ந்திருந்த உத்தவனைச் சுட்டிக் காட்டினான் பலராமன். பின்னர் தொடர்ந்து, “அவன் அங்கே எப்படிச் சென்றான்! அவனால் எவ்விதம் செல்ல முடிந்தது! ராக்ஷசவர்த்தத்தில் ராக்ஷசர்களிடமிருந்து உத்தவன் எப்படித் தப்பினான்! என்பதையெல்லாம் என்னால் விவரிக்க முடியவில்லை! என் விவரணைக்கு அப்பாற்பட்டது இவை!”

“உத்தவனுடைய மென்மையான சுபாவத்தால் நாகர்களைக் கவர்ந்ததோடு அல்லாமல் நாககன்னிகள் இருவரின் அன்பையும் பெற்றான். அவர்களை அவன் மணக்க நேரிட்டது. இருவரும் இரட்டையர்கள்! உத்தவனால் அவர்களை அடையாளமே கண்டுபிடிக்க முடியவில்லை! எது யார் என்பது அவனுக்கு இரவில் மட்டுமல்ல, பகலிலும் கண்டுபிடிக்க முடியவில்லை.”என்ற பலராமனுக்கு இதுவரை அடக்கி வைத்திருந்த சிரிப்புப் பொத்துக்கொண்டு வரச் சபையில் பேசுவதையும் மறந்துவிட்டுப் பெருங்குரலில் சிரித்தான். அவனுடைய சிரிப்பு சபையிலிருந்த அனைவரையும் தொற்றிக்கொள்ள அனைவரும் சிரித்தார்கள். சிரித்தவண்ணம் அனைவரும் உத்தவனைப் பார்க்க உத்தவன் தரையில் பதித்த தன் கண்களை மீட்டெடுக்காமல் அப்படியே பார்த்த வண்ணம் அடக்கமாக அமர்ந்திருந்தான்.

Wednesday, October 7, 2015

துவாரகையில் மந்திராலோசனை!

மத்ராவிலிருந்து துவாரகை வந்து புதிய வாழ்க்கையைத் தொடங்கி அதில் வெற்றியும் கண்டிருந்த யாதவர்கள் எத்தகைய கடினமான சூழ்நிலையையும் தங்களுக்குச் சாதகமாக மாற்றிக்கொள்ளும் வல்லமை படைத்திருந்தார்கள். போர்க்களம் செல்ல வேண்டிய அவசியம் இல்லாத சமயங்களில் அவர்கள் தங்கள் நேரத்தை வீணாகச் செலவழிக்காமல் விவசாயத்திலும், கால்நடைகளைப் பெருக்கி வளர்ப்பதிலும் செலுத்தினார்கள். அதில் வெற்றியும் கண்டார்கள். குதிரைகளைப் பழக்குவதில் வல்லவர்களாக இருந்தனர். குதிரைகள் அவர்கள் வாழ்க்கையின் உச்சநிலைக்கு ஓர் அடையாளமாக மட்டும் இல்லாமல் போர்க்காலங்களிலும், போக்குவரத்திலும் மிகவும் பயன்பட்டன.ஆகவே அவ்வப்போது ரதங்களில் குதிரைகளைப் பூட்டி போட்டிகள் நடத்தி அதிலும் மிகவும் வல்லுநர்களாக இருந்தனர். யாதவத் தலைவர்களின் தலைமைப் பதவியும் அவரவருக்கான தகுதியும் குலத்தின் தலைவர்கள் மற்றும் ரதம் ஓட்டுவதில் அதிரதிகள், மஹாரதிகள் என்று வரிசைப்படுத்தப்பட்டிருந்தது.  இந்த அதிரதிகளும், மஹாரதிகளும் அவ்வப்போது அவர்கள் நிகழ்த்திக்காட்டிய போர் சாகசங்கள் மூலமும், ரதப் போட்டிகள் மூலமும் மாறி மாறி வந்தன. அதிரதிகள் ஒரு சின்ன ரத சாரதிகள் நிறைந்த குழுவுக்குத் தலைவராகச் செயல்பட்டார்கள். அவர்களில் மஹாரதிகள், ரதிகள் இருந்தனர். இவர்கள் அனைவரும் யாதவக் குடும்பங்களின் இளைஞர்களாக இருந்து வந்தனர். பொறுக்கி எடுக்கப்பட்ட இளைஞர்களால் இந்தப் படை பலமும், சக்தியும் வாய்ந்ததாக இருந்து வந்தது.  இந்த யாதவர்களின் இப்போதைய தலைவன் ஆன உக்ரசேன மஹாராஜா யாதவத் தலைவர்களின் மிகப் பெரிய சந்திப்புக்கு ஏற்பாடு செய்திருந்தார். ராஜசபையில் அனைத்து யாதவர்களும் கூடும்படி உத்தரவிட்டிருந்தார்.

பலராமனும், கிருஷ்ணனும் கூட அதிரதியாக அறியப்பட்டிருந்தனர். மிகச் சிறப்பான முறையில் பயிற்சி பெற்ற அவர்கள் அந்தப் பகுதி முழுதும் அறியப்பட்டிருந்தனர். மத்ராவில் இருந்தபோது அவர்களின் பிரதம எதிரியாக இருந்து வந்த மகத நாட்டு மஹாராஜாவான ஜராசந்தனை விரட்டி அடித்தனர். மத்ராவைச் சூழ்ந்து கொண்டு அவன் முற்றுகை இட்டு அதைத் தீயிட்டுக் கொளுத்த இருந்தபோது அந்தத் தகவலை முன்கூட்டியே அறிந்து கொண்ட இவர்கள் இருவரும் அனைத்து யாதவர்களையும் பத்திரமாகவும், அவரவர் சொத்துக்களோடும் சௌராஷ்டிராவை நோக்கிப் பயணம் செய்ய வைத்துக் காப்பாற்றிக் கொடுத்தனர். அங்கே துவாரகை நகரை நிர்மாணித்து யாதவர்களின் நகரமாக மாற்றினார்கள். யாதவர்களின் சாம்ராஜ்யமாக சௌராஷ்டிரப் பகுதி மாறியது. இரு வருடங்கள் முன்னர் கிருஷ்ணனும், பலராமனும் தேர்ந்தெடுத்த சில அதிரதிகளுடன் ஆர்யவர்த்தம் நோக்கிச் சென்றனர். அவர்களின் நண்பர்களில் சிலரும் அவர்களுடன் பயணப்பட்டனர். ஆனால் அதிரதிகளில் ஒருவனான சத்ராஜித்தின் மகன் பங்ககராவும் அவனுடைய நெருங்கிய நண்பனும் ஆன ஷததன்வாவும் உடன் செல்லவில்லை.

சத்ராஜித், தன்னுடைய சிறு வயதிலேயே மஹாரதியாக ஆகிவிட்டான். ஆனால் அவனால் ஒரு அதிரதியாக ஆகமுடியவில்லை. அந்தகர்களின் வம்சத்து அரசனான உக்ரசேன மஹாராஜா கிருஷ்ணனையும், பலராமனையும் அவர்கள் இருவருடன் சேர்ந்து ஆர்யவர்த்தம் சென்று வெற்றிக்கொடி நாட்டி வந்த இளைஞர்களையும் வரவேற்க மட்டுமே இந்த ராஜ்ய சபையைக் கூட்டவில்லை; அவர்கள் ஆர்யவர்த்தத்தில் செய்த சாகசங்களின் உண்மையான நம்பக்கூடிய தகவல்களையும் பரிமாற்றம் செய்து கொள்ளவே கூட்டி இருக்கிறார். இப்போது துவாரகையில் ஓர் ரதப்போட்டியும் நடைபெற வேண்டும். அதிரதிகள் நாடு திரும்பி விட்டதால் அதற்கான தேதியையும் குறிப்பிடலாம். எவ்வளவு விரைவில் ரதப்போட்டி நடைபெறுமோ அவ்வளவு விரைவில் நடத்தியாக வேண்டும். உக்ரசேன மஹாராஜாவின் மாளிகையிலேயே சபாமண்டபத்தில் இந்தக் கூட்டம் நடைபெற்றது. குருவம்சத்து அரசமாளிகையில் ஹஸ்தினாபுரத்தில் நடைபெற்ற மந்திராலோசனைக் கூட்டத்தின் அளவுக்கு இதில் பகட்டோ, ஆடம்பரமோ, ஒரு திருவிழா போலவோ காணப்படவில்லை. அவ்வளவு ஏன்? பாஞ்சால நாட்டுக் காம்பில்யத்தில் கூட இன்னமும் பகட்டாக, ஆடம்பரமாகவே ராஜசபைக் கூட்டம் நடந்தேறியது. ஆனால் இங்கே எளிமையாகவே இருந்தது.

தரை எங்கும் கரடித்தோலாலும், முதலைத் தோலாலும் ஆன விரிப்புகள் போடப்பட்டிருந்தன.  நுழைவாயிலுக்கு எதிரே ஒரு சிங்காதனம் போடப்பட்டிருந்தது. அதில் சிங்கத்தோலால் அலங்கரிக்கப்பட்டு விளங்கியது. அதில் தான் மஹாராஹா உக்ரசேனர் அமருவார் என்பதும் தெரிய வந்தது. அந்த சிங்காதனத்துக்கு இரு புறமும் வலப்பக்கம் இரண்டும், இடப்பக்கம் இரண்டுமாக நான்கு ஆசனங்கள் போடப்பட்டிருந்தன. வலப்பக்கம் கிருஷ்ணனின் தந்தையும், ஷூரர்களின் தலைவனும் ஆன வசுதேவருக்கு என ஓர் ஆசனமும், அவருக்கு அடுத்தபடியாக குலகுரு கர்காசாரியாருக்கு ஓர் ஆசனமும் போடப்பட்டிருந்தது.  இடப்பக்கம் போடப் பட்டிருந்த ஆசனங்களில் ஒன்று ரிஷிகளைப் போல் புனித வாழ்க்கை வாழ்ந்து வந்த யாதவத் தலைவர் ஆன அக்ரூரருக்கும், அடுத்தது விருஷ்ணிகளின் தலைவனும், யுயுதானா சாத்யகியும் தந்தையுமான சாத்யகனுக்கு ஓர் ஆசனமும் போட்டிருந்தது. இந்த நான்கு யாதவத் தலைவர்களும் அவர்களின் இள வயதில் அதிரதர்களாக இருந்தவர்கள். குலகுருவான கர்காசாரியாருக்கு எல்லாவற்றிலும் முன்னுரிமை உண்டு.

அங்கு வந்து அந்த மந்திராலோசனைக் கூட்டத்தில் கலந்து கொள்ள அனுமதி படைத்த பிராமணர்களில் சிலர் கர்காசாரியாருக்கு அடுத்தபடியாக இருந்த இடங்களில் அமர வைக்கப்பட்டனர். அரச சிங்காதனத்திலிருந்து சற்றுத் தள்ளி மற்றத் தலைவர்களின் ஆசனங்கள் போடப்பட்டிருந்தன. இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு ஆசனங்கள் போடப்பட்டிருந்தன. ஒவ்வொரு பகுதியிலும் முதல் வரிசையின் ஆசனங்கள் அனைத்தும் அதிரதர்களுக்காக எனப் போடப்பட்டிருந்தன.  அவர்களுக்குப் பின்னால் உள்ள வரிசையில் மஹாரதிகள் அமர்ந்தார்கள். இடப்பக்கம் உள்ள ஆசனங்கள் மஹாரதிகளில் மூத்தவர்களுக்கும், சிறந்தவர்களுக்கும் எந்த அதிரதிக்கும் கீழே வராத மஹாரதர்களுக்கும், மற்ற முக்கியமான யாதவத் தலைவர்களுக்கும் என அமைக்கப்பட்டிருந்தது.

உக்ரசேன மஹாராஜா வருவதற்குச் சற்று முன்னர் சபாமண்டபத்தின் நடுவில் போடப்பட்டிருந்த ஆசனங்களின் ஒன்றில் தன் மூத்த மகனான பங்ககராவும், அவன் நண்பர்கள் ஆன ஷததன்வாவும், ஜயசேனனும் உதவி செய்ய சத்ராஜித் சபாமண்டபத்தினுள் வந்து ஆசனத்தில் அமர்ந்து கொண்டான். தன்னுடைய பிரியமான ச்யமந்தக மணி மாலையை அணிந்து வந்திருந்தான் சத்ராஜித். அதைத்தவிரவும் அவன் வீட்டுப் பொக்கிஷத்தில் இருந்த தங்கமெல்லாம் அவன் உடலில் அமர்ந்து கொண்டதோ என்னும் வண்ணம் தங்க ஆபரணங்களால் ஜொலித்தான். ச்யமந்தக மணியை மூன்று தங்கச் சங்கிலிகள் ஒன்று சேர்ந்து தாங்கி நின்றன. அது ஒவ்வொரு நேரம் ஒவ்வொரு நிறம் காட்டி அனைவரையும் மயக்கியது. கண்ணைப் பறிக்கும் ஒளியுடன் மிகப்பெரிய வைரமான அது அனைவரின் உணர்ச்சிகளையும் தூண்டி விட்டுக் கொண்டிருந்தது. குவிந்த கோபுர அமைப்பிலுள்ள கிரீடங்கள் அதிரதிகளுக்கு அனுமதிக்கப்பட்டிருந்தது. அவரவர் விருப்பம் போல் அணியலாம். ஆனால் மஹாரதிகளுக்குக் கோபுர அமைப்பில்லாமல்  சாதாரணக் கிரீடங்களுக்கே அனுமதி! சத்ராஜித் அதிரதி இல்லை. மஹாரதி தான். அவன் கிரீடத்தில் கோபுர அமைப்பு இல்லை. ஆனால் அனைவரின் கருத்தையும், கண்களையும் கவரும் வண்ணம் ரத்தினங்களாலும், வைர, வைடூரியங்களாலும் அலங்கரிக்கப்பட்டு தகதகவெனப் பிரகாசித்தது.

Thursday, October 1, 2015

பாமாவின் துக்கம்!

“அப்படி எனில் கேள், பாமா! உனக்குத் தெரிந்திருக்கும் எப்படி என! நாங்கள் உன் தந்தை, உறவினர்கள் மற்றும் அவர்களின் நண்பர்களை அணுகினோம். அப்போது அவர்கள் தங்கள் சொத்துக்களை சம்பாதித்த சொத்துக்களை எக்காரணம் கொண்டும் இழக்க முடியாது எனத் தெரிவித்து விட்டனர்.”

“ஆம், எனக்குத் தெரியும், மதிப்புக்குரிய அக்ரூரரும், நீயுமாகத் தான் என் தந்தையைச் சந்தித்தீர்கள். அந்த அறைக்குப் பின்னர் இருந்து தான் நான் அனைத்தையும் கேட்டுக் கொண்டிருந்தேன். அதற்கு என்ன இப்போது? உத்தவன் என்ன சொன்னான் கண்ணனிடம்?” என்று கேட்டாள் பாமா.
“உன் தந்தையும், மற்றவர்களும் எதுவும் கொடுக்க விரும்பவில்லை என்பதை உத்தவன் எடுத்துச் சொன்னான். ஆகவே அதை ஈடுகட்டவேண்டி சில யாதவத் தலைவர்கள் தாங்கள் ஏற்கெனவே கொடுத்ததை விட அதிகமாகக் கொடுக்க வேண்டி இருந்தது. அது அவர்கள் மொத்த சொத்து மதிப்பில் பாதியாகி விட்டது. அதே சமயம் எங்கள் குடும்பம், ராஜா உக்ரசேனரின் குடும்பம், வசுதேவரின் குடும்பம் ஆகியோர் மொத்த சொத்தையும் கொடுத்துவிட்டோம். அப்போது தான் மதிப்பிடவேண்டிய அளவு செல்வம் பாண்டவர்களுக்குப் போய்ச் சேரும். அது மட்டுமா? தேவகி அன்னை, வைதர்பியான ருக்மிணி, ஷாய்ப்யா ஆகியோர் தங்கள் நகை, ஆபரணங்கள், ரத்தினங்கள் அனைத்தையும் கொடுத்துவிட்டனர்.  கிருஷ்ணன் அளித்த வாக்குறுதி எழுத்துக்கு எழுத்து அப்படியே நிறைவேறியாக வேண்டும் என்பதில் அவர்கள் திடமாக இருந்தனர்.”

“ஆஹா, மஹாதேவா! மஹாதேவா! அப்படியா நடந்தது?” பெருங்குரலில் ஓலமிட்டாள் பாமா. “ஏன், நீ பார்க்கவில்லை? யாதவத் தலைவர்களின் பெண்கள், மனைவிமார், குழந்தைகள் அனைவரும் குறைவாக மிகக் குறைவாகவே ஆபரணங்களை அணிந்திருந்தார்கள் என்பதைக் கண்கூடாகக் காணவில்லையா நீ? அதே சமயம் நீ? எப்படி இருந்தாய்? நினைவில் இருக்கிறதா?” என்று கேட்டான் சாத்யகி.

“அதற்குக் கிருஷ்ணன் என்ன சொன்னான்?”

“கிருஷ்ணன் உத்தவன் சொன்னதை எல்லாம் பொறுமையாகக் கேட்டுக் கொண்டான். அவன் முகம் இறுகி உதடுகளும் அழுத்தமாக மூடிக் கொண்டன. உத்தவன் ஏன் அதை முதலிலேயே சொல்லவில்லை என்று கேட்டான்! அதாவது யாதவர்கள் அளித்த பொருளோடு உத்தவன் இந்திரப் பிரஸ்தம் வந்தபோதே இதைக் குறித்து ஏன் சொல்லவில்லை என்று கேட்டான். அதற்கு உத்தவன் அக்ரூரரும், உத்தவனும் யாதவர்களின் இந்தக் குறைபாட்டைக் குறித்து ஆர்யவர்த்தத்து மனிதர்கள் முன்னர் சொல்லிக் கொள்ள விரும்பவில்லை என்றும் யாதவர்களில் சிலர் கண்ணன் சொல்வதைக் கேட்காமல் இருப்பதை வெளிப்படையாகத் தெரிவிக்க விரும்பவில்லை என்றும் சொன்னான்.”

“அப்படியா? அவன், அதுதான் கிருஷ்ணன், என் தந்தையிடம் மிகவும் கோபமாக இருக்கிறானா?” இதைக் கேட்கையிலேயே சத்யபாமாவின் மனம் வெதும்பி சோகத்தில் ஆழ்ந்தது. “அதெல்லாம் தெரியவில்லை! அவன் சொன்னதெல்லாம் இது தான்: “இப்போது எனக்கு எல்லாம் புரிகிறது!” என்றான். “ என்று சாத்யகி மறுமொழி கூறினான்.  “எனக்கு? என் விஷயத்தில் என்ன நடக்கப் போகிறது?” என்று வினவினாள் பாமா. “அதன் பிறகு எங்களில் ஒருவருக்கும் உன்னைக் குறித்து எதுவும் பேசத் தோன்றவில்லை”

“ஆனால் இன்று காலை, கிருஷ்ணன் என்னிடம் அன்பாகவே பேசினான்!” என்றால் பாமா யோசனையுடன். அவள் குரலில் எங்கோ தொலைதூரத்தில் தெரியும் சின்னதொரு நம்பிக்கைக் கோட்டைப் பற்றிக்கொள்ளும் ஆவல் தொனித்தது. ஆனால் சாத்யகி அடுத்துச் சொன்னது அவளை நம்பிக்கை இழக்க வைத்தது. “அதெல்லாம் அவனுக்கு இங்குள்ள நிலைமை பற்றித் தெரியும் முன்னர் பேசினது!” என்றான் சாத்யகி. “இப்போது என்ன செய்யலாம்! நான் என்ன செய்தால் சரியாக இருக்கும்?” சற்றும் நம்பிக்கை இல்லாமல் ஏமாற்றத்தின் எல்லையில் நின்று கொண்டு சத்யபாமா கேட்டாள்.

“ம்ம்ம்ம்ம்? பாமா! இப்போது உள்ள நிலைமையில் நம்மால், அதாவது என்னால் எதுவும் நிச்சயமாகச் சொல்லமுடியவில்லை. என்னால் எதுவும் செய்ய முடியும் என்று தெரியவில்லை. உன் இடத்தில் நான் இருந்தேன் எனில் எப்போதோ கிருஷ்ணனை அடையும் எண்ணத்தையே விட்டு விடுவேன்.”  சத்யபாமாவின் மனம் சுக்குச் சுக்காக உடைந்தது.

அவ்வளவில் அவள் அங்கிருந்து தன் வீட்டிற்குச் சென்றாள். அவள் மனமும் உடலும் பரிதவித்தன. தன் கனவுகள் அனைத்தும் நொறுங்கிவிடுமோ எனப் பயந்தாள். கண்ணன் அவளை ஏற்கப் போவதில்லை. நிரந்தரமாக ஏற்க மாட்டான்! இந்த உண்மை அவளைச் சுட்டெரித்தது. அவள் தந்தையால் வந்தது அனைத்தும். அவளுக்கிருந்த அனைத்து நம்பிக்கைகளையும் தகர்த்து எறிந்துவிட்டார். அவனை அடையும் அனைத்து வழிகளையும் மூடிவிட்டார். அவள் மனதில் அப்போதிருந்த நிலைமையில் அவள் செல்லப் பூனையான ஊரியின் மெல்லிய “மியாவ்” குரல் கூட அவளுக்குக் கேட்கவில்லை. ஆனால் அந்தப் பூனையோ அவளுக்காகப் பொறுமையுடன் காத்திருந்தது. அவளுடன் இரவு உணவை உண்ணக் காத்திருந்தது. ஆகவே பாமா சமையலறைக்குச் சென்று ஊரிக்காகக் கொஞ்சம் பாலை எடுத்து வந்தாள். அவளுக்குப் பசியே இல்லை. அல்லது சாப்பிடும் மனநிலையில் இல்லை. அவளுடைய கிருஷ்ணன் அவளுக்குக் கிடைக்க மாட்டான்! இதை விடப்பெரிய கொடுமை வேறென்ன வேண்டும்! அவள் மனமே வெறுமையாகத் தோற்றியது


அவளுக்கு. அவள் இதயத்தையே காலி செய்து விட்டாற்போல், ஏன் இதயம் இருந்த இடமே காலியானாற்போல் தோன்றியது அவளுக்கு. வேறு எதுவும் செய்யத் தோன்றாமல் படுக்கச் சென்றாள்; ஆனால் தூக்கம் வரவில்லை.
அவள் அருகே படுத்திருந்த அவள் செல்லப் பூனை ஊரி நன்கு உறங்கிக் கொண்டிருந்தது. ஆனால் பாமா விம்மி விம்மி அழ ஆரம்பித்ததும் அது தன் கண்களைத் திறந்து அவளையே பார்த்தது. எழுந்து தன் பின்னங்காலில் நின்றவண்ணம் முன்னங்கால்களில் ஒன்றை அவள் கைகள் மேல் ஆறுதல் சொல்லும் பாவனையில் வைத்தது. பாமா அதைத் தட்டிக் கொடுத்தாள். ஊரியும் மீண்டும் அவளருகே படுத்தது. ஆனால் பாமாவின் உடல் அடுத்தடுத்த விம்மல்களால் குலுங்கியது. அவளால் தன் சோகத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை. அவளையும் அறியாமல் ஊரியைக் கட்டி அணைத்த வண்ணம், “ஊரி, ஊரி, இனி எனக்குக் கல்யாணம் என்பதே இல்லை! கிருஷ்ணன் கிடைக்கவில்லை எனில் திருமணத்தால் என்ன பயன்? ஊரி, ஊரி! இந்த உலகமே கிருஷ்ணன் ஒருவன் இல்லாமல் எப்படிக் காலியாக மனிதர்களே இல்லாமல் ஆகிவிட்டது! பார்த்தாய் அல்லவா?” என்றாள்.

அப்போது அந்த அறைக்கு வெளியே இருந்த தாழ்வாரத்தின் வழியே சென்று கொண்டிருந்த பங்ககராவுக்கு பாமா அவள் அறையில் விம்மி விம்மி அழும் சப்தம் கேட்டது. பதறிய அவன் உடனே அந்த அறைக்கதவைத் திறந்து கொண்டு உள்ளே சென்றான். பாமாவின் தோள்களின் மேல் அன்பாகத் தன் கைகளை வைத்துக் கொண்டு, “பாமா, என்ன ஆயிற்று உனக்கு? ஏன் இப்படி அழுகிறாய்?” என்று கேட்டான்

“நான் செத்துப் போக விரும்புகிறேன்.” என்ற பாமா தன் இதயமே நொறுங்கி விட்டாற்போல் அழுதாள்! “சகோதரா! அவன்,கிருஷ்ணன் என்னை இனி நிமிர்ந்து கூடப் பார்க்க மாட்டான்!” என்றாள் விம்மும் குரலில். “முட்டாள், முட்டாள்! நான் எத்தனை முறை உனக்கு எச்சரிக்கை கொடுத்தேன்! நீ தான் கேட்காமல் கனவுலகத்தில் மிதந்து கொண்டிருந்தாய்! கிருஷ்ணனை நீ அடைய வேண்டுமெனில் நாம் என்ன செய்ய வேண்டும் என்பது எனக்குப் புரியவில்லை. நான் யோசிக்க வேண்டும். அது அவ்வளவு சுலபமானது இல்லை. “ என்றான். “தெரியும், தெரியும்! எனக்கு நன்றாகத் தெரியும்!” என்ற வண்ணம் பாமா இன்னும் சோகத்துடன் தலையணையில் தன் முகத்தைப் புதைத்துக் கொண்டு விம்மி விம்மி அழ ஆரம்பித்தாள்.