Thursday, October 8, 2015

மந்திராலோசனை சபையில்!

இரு வருடங்கள் முன்னர் கிருஷ்ணனும், பலராமனும் மற்ற அதிரதர்களையும் வீரர்களையும் அழைத்துக் கொண்டு ஆர்யவர்த்தம் சென்றது ஒரு வகையில் சத்ராஜித்துக்கு நிம்மதியைத் தந்தது. தன்னுடைய உயர்நிலையைத் தக்கவைத்துக் கொள்வதோடு அல்லாமல், அதிரதர்களோ, மஹாரதர்களோ அல்லது எவருமே சாதாரணர்களாக இருந்தாலும் சரி அவர்களைத் தன் பக்கம் இழுத்துக் கொள்ள வேண்டிய முயற்சியை இப்போதே செய்ய நினைத்தான். ஒவ்வொரு முறையும் அவன் கப்பல் தூர தூர தேசங்களுக்குப் பயணம் செய்து அளவற்ற செல்வத்தை அள்ளிக் கொண்டு வந்தது. போதாதற்கு சூரியனால் அளிக்கப்பட்ட ச்யமந்தக மணியும் அவனுக்குக் குன்றாத தங்கத்தையும், நவரத்தினங்களையும் வாரி வழங்கியது. ஆகவே தன்னுடைய செல்வ நிலையில் பெருமை கொண்டிருந்த சத்ராஜித் அங்கே வந்திருந்த பலரையும் பார்த்துப் பெருமையுடனும், கர்வத்துடனும் தலையை அசைத்துத் தன் அங்கீகாரத்தைத் தெரிவித்ததன் மூலம் தன்னைவிடக் கீழ்நிலையில் இருப்பவர்களையும் தான் மதிப்பதையும் காட்டிக் கொண்டான். அரியணக்கு வலப்புறமாக இருந்த முதல் ஆசனத்தில் சத்ராஜித்தின் மகனும் அதிரதியுமான பங்ககரா வீற்றிருந்தான்.

சத்ராஜித் உள்ளே நுழையும்போதே அங்கே கிருஷ்ணன் அமர்ந்திருக்கிறானா என நோட்டம் விட்டான். அதோ! கிருஷ்ணன்! அதிரதர்களுக்கென அமைக்கப்பட்டிருந்த ஆசனங்களில் இரண்டாவதாக அமர்ந்தவண்ணம் தன் நண்பர் குழாத்துடன் ஏதோ முக்கியமாய்ப் பேசிக் கொண்டிருக்கிறானே! சத்ராஜித் மிகவும் சூட்சும புத்தி படைத்தவன். எதையும் சரியாகக் கணக்கிட்டுப் பார்ப்பதில் வல்லவன். இங்கே கூடி இருக்கும் அனைத்து யாதவர்களையும் விடப் பணம் படைத்தவன். ஆனாலும் அவனால் தன் நிலைமையில் திருப்தி அடைய முடியாமல் ஏதோ ஒன்று தடுக்கிறது. அதுதான் கிருஷ்ணனின் நினைவு. திரும்பத் திரும்பக் கிருஷ்ணனின் நினைவு அவனுள் வந்து கொண்டே இருக்கிறது! அவன் தன்னைப் பற்றி என்ன நினைக்கிறான்? அதுவும் அவன் இல்லாத இந்த இரு வருடங்களில் தான் இவ்வளவு பெரிய பணக்காரனாக ஆகி இருப்பதற்கு என்ன சொல்லுவான்? அதை எப்படி எடுத்துக் கொள்ளப் போகிறான்? மீண்டும் மீண்டும் கிருஷ்ணன் அமர்ந்திருக்கும் இடம் நோக்கிப் பார்ப்பதை அவனால் தவிர்க்க இயலவில்லை. கிருஷ்ணனையே பார்த்தான். அந்த ஆசனத்தில் அவன் அமர்ந்திருப்பதைப் பார்த்தான். எவ்விதமான ஆடம்பரமும், பகட்டும் இல்லாமல் வெகு இயல்பாக அந்த இடத்தில் அவன் பொருந்தி இருந்ததையும் கவனித்தான்.

கிருஷ்ணன் யாரையும் குறிப்பிட்டுக் கவனிக்கவில்லை. அப்படி இருந்தும் எல்லோரையும் நலம் விசாரித்தான். அனைவரிடமும் கவனம் செலுத்தினான். மிக எளிமையாக அதே சமயம் குறிப்பிடும்படியாகத் தன்னை அலங்கரித்துக் கொண்டிருந்தான். அவன் முகத்தில் புன்னகை எப்போதும் காணப்பட்டது. எவ்விதக்கவலையும் அற்ற பார்வை!  தன் நண்பர்களிடம் தனிப்பட்ட பரிவும், பாசமும் காட்டி வரும் போக்கு! அவர்களை அரவணைத்துச் செல்லும் விதம்! கனிவான பார்வை!  எல்லாவற்றுக்கும் மேல் அவனைச் சுற்றி உயர்ந்ததொரு நேர்த்தியுடன் கூடிய சூழ்நிலை தானாகவே அமைந்திருந்தது! அவன் இருக்கும் இடம் உயர்ந்ததாகத் தான் இருக்கும் என்பதோடு அவனே உயர்ந்தவன்! அவனால் இந்த இடம் உயர்வு பெற்றது என்னும்படியான நிலைமையும்! இது கொஞ்சம் பொறாமையை ஏற்படுத்தியது சத்ராஜித்துக்கு! இந்த இடையனுக்கு இவ்வளவு செல்வாக்கா?

உக்ரசேன மஹாராஜாவும், வசுதேவரும் வருவதைக் காவலாளிகள் கட்டியம் கூறி அறிவித்தனர். சத்ராஜித்தைத் தவிர அங்கிருந்த அனைவரும் எழுந்து நின்று மரியாதை செய்தனர். உத்தவனின் சகோதரனான ப்ருஹதபாலனின் தோள் மேல் கைபோட்டுக் கொண்டு உக்ரசேனர் அந்த முதுமைப் பிராயத்திலும் மெல்ல மெல்ல நடந்து வந்தார். அப்போது மட்டும் சத்ராஜித், உக்ரசேனரை வரவேற்கும் விதமாக மெல்லத் தன் ஆசனத்திலிருந்து எழுந்திருக்கும் பாவனை செய்துவிட்டுப் பின்னர் உடனே அமர்ந்துவிட்டான். அதற்குள்ளாக உக்ரசேனரும் தன் ஆசனத்தில் அமரவே, இவ்வளவில் சத்ராஜித்தும் தன் இடத்தில் ஸ்திரமாகச் சாய்ந்து அமர்ந்தான். ஒரு காலத்தில் மிக அழகாகவும், அனைவரையும் கவரும் வண்ணமும் இருந்த வசுதேவர் இப்போது முதுமையின் காரணமாக நரைத்த தலையுடனும், வெண்தாடியுடனும் காட்சி அளித்தார். எனினும் அவருக்கு அதுவும் ஒரு கம்பீரத்தையே கொடுத்தது.  அவருடைய நல்ல சுபாவமும், அனைவருக்கும் நன்மையே செய்யும் போக்கும், கண்ணியமான பார்வையும், நேர்மையைப் பிரதிபலிக்கும் கண்களும் அந்தச் சபையினரைப் பார்த்து அவர்கள் வரவேற்பிற்கு அவர் பதில் மரியாதை செய்த விதத்திலேயே அனைவரும் புரிந்து கொள்ளும்படி இருந்தது.

இவர்களுக்குப் பின்னர் கர்காசாரியார் மெல்ல மெல்ல நடந்து வந்தார். அங்கு கூடியிருந்த அனைவருக்கும் ஆசிகளைத் தெரிவிக்கும் விதமாகக் கைகளைத் தூக்கி ஆசீர்வதித்தபடி வந்தார். வயதானதால் சுருங்கிப் போன முகத்தோடும், கைகால்களோடும் காட்சி அளித்தார் அவர். பின்னர் அக்ரூரர் அனைவரையும் பார்த்து நட்புடன் சிரித்தவண்ணம் வந்து அமர்ந்தார். அவருக்குப் பின்னால் வந்த சாத்யகனோ இந்த வயதிலும் ஒல்லியாக, உயரமாக ஆனால் உரமாகக் காணப்பட்டான். அனைவரையும் ஆணையிடும் தோரணையில் அவன் பார்த்த பார்வையும், ஜொலிக்கும் கண்களும், நீண்ட கழுகு போன்ற மூக்கும், பெருமிதம் கொண்ட முகத்தோற்றமும், உருண்டு திரண்ட புஜங்களும் கொண்ட அவனைப் பார்க்கும்போதே மாபெரும் வீரன் இவன் என்ற எண்ணம் அனைவர் மனதிலும் எழுந்தது.

அனைவரும் அவரவர் ஆசனங்களில் அமர்ந்தனர். அப்போது உக்ரசேன மஹாராஜா அதிரதிகளைப் பார்த்தார்! “குழந்தைகளே! உங்கள் அனைவரையும் இந்த நாட்டின் சார்பாக வரவேற்கிறேன். எல்லா அதிரதிகள், மஹாரதிகள் அனைவரையும் வரவேற்கிறேன். ஆர்யவர்த்தத்தில் நீங்கள் அனைவரும் ஒன்று கூடி நிகழ்த்திய சாகசங்களைக் குறித்துக் கேட்டு அறிந்தேன். இப்போது இந்த ராஜசபையின் மாந்தர்கள் அனைவரும் அறியும்படி உங்கள் அனுபவங்களைச் சொல்லுங்கள்! எவ்வாறு அவை நிகழ்ந்தன! நீங்கள் அனைவரும் எப்படி அவற்றை எதிர்கொண்டீர்கள்? என்ன என்ன சாதனைகள் படைத்தீர்கள்! என்பதை எல்லாம் விவரமாக எடுத்துச் சொல்லுங்கள்!” என்ற வண்ணம் குறிப்பாகக் கிருஷ்ணனைப் பார்த்தார் உக்ரசேன மஹாராஜா. கிருஷ்ணனோ தான் எதுவும் பேசாமல் பலராமனைப் பேசச் சொன்னான்.

“மதிப்பிற்குரிய பெரியோர்களே! அனைவருக்கும் முதலில் என் வணக்கம். இந்த சௌராஷ்டிரத்தில் வாழும் யாதவர்களுக்குப் பெரும்புகழைச் சேர்க்கும் செய்திகளையே நாங்கள் கொண்டு வந்திருக்கிறோம்.!” என்ற வண்ணம் அனைவரையும் பார்த்துப் புன்னகை புரிந்த பலராமன், “முதலில் நாங்கள் சென்றது புஷ்கரத்திற்கு! அங்கே செகிதானாவுக்குப் புஷ்கரத்தை மீட்டுக் கொடுத்தோம். இது நடந்தது கிருஷ்ணனால் மட்டுமே! அவனுடைய திறமையால் மட்டுமே நடந்தது. இதற்கு நாங்கள் எவ்விதப் போரையும் செய்யவில்லை! எங்கள் ஆயுதங்களைக் கையில் எடுக்கவில்லை. எங்கள் விற்களும், அம்புகளும் கூடப் பயன்படுத்தப்படவில்லை. ஆயுதம் இல்லாமலேயே இவற்றைச் சாதித்தோம்!” என்றான் பலராமன். “சாது! சாது!” என்று கோஷித்தார் உக்ரசேனர். வசுதேவரோ தன் மகன்கள் இருவரையும் பெருமையுடனும் கர்வத்துடனும் பார்த்து ஆனந்தித்தார்.

பலராமன் தொடர்ந்தான். “அதன் பின்னர் எங்களுக்குப் பாண்டவர்கள் ஐவரும் துரியோதனன் ஆணையின் பேரில் உயிருடன் வாரணாவதத்தில் அரக்கு மாளிகையில் எரிக்கப்பட்டார்கள் என்னும் செய்தி கிடைத்தது! பாண்டவர்களுடன் அவர்கள் தாய் குந்தியும் எரிக்கப்பட்டாள் என்னும் செய்தியும் கிடைத்தது!”

“நீ நிச்சயமாக இதைச் செய்தது துரியோதனன் தான் என்பதை அறிவாயா?” வசுதேவர் வினவினார்.

“ஆம், நிச்சயமாக அறிவேன். இதைச் செய்ய ஏற்பாடு செய்தது துரியோதனனே தான். அவன் ஏற்பாடு செய்திருந்த யக்ஷன் அதன் பின்னர் காம்பில்யத்தில் சக்கரவர்த்தி துருபதனிடம் இந்த விஷயத்தைத் தானாகவே முன்வந்து ஒப்புக் கொண்டான்.”

“என்ன கொடுமை இது!” என்று கர்காசாரியார் மனம் வருந்தினார். “ஆனால் கண்ணனுக்கு இதில் நம்பிக்கை வரவில்லை. ஆகவே கண்ணன் சொன்னதின் பேரில் இதோ இருக்கிறானே, உத்தவன், அவன் ராக்ஷசவர்த்தம் சென்று பாண்டவர்கள் ஐவரையும் கண்டு பிடித்தான்!” என்ற வண்ணம் கிருஷ்ணன் அருகே அமர்ந்திருந்த உத்தவனைச் சுட்டிக் காட்டினான் பலராமன். பின்னர் தொடர்ந்து, “அவன் அங்கே எப்படிச் சென்றான்! அவனால் எவ்விதம் செல்ல முடிந்தது! ராக்ஷசவர்த்தத்தில் ராக்ஷசர்களிடமிருந்து உத்தவன் எப்படித் தப்பினான்! என்பதையெல்லாம் என்னால் விவரிக்க முடியவில்லை! என் விவரணைக்கு அப்பாற்பட்டது இவை!”

“உத்தவனுடைய மென்மையான சுபாவத்தால் நாகர்களைக் கவர்ந்ததோடு அல்லாமல் நாககன்னிகள் இருவரின் அன்பையும் பெற்றான். அவர்களை அவன் மணக்க நேரிட்டது. இருவரும் இரட்டையர்கள்! உத்தவனால் அவர்களை அடையாளமே கண்டுபிடிக்க முடியவில்லை! எது யார் என்பது அவனுக்கு இரவில் மட்டுமல்ல, பகலிலும் கண்டுபிடிக்க முடியவில்லை.”என்ற பலராமனுக்கு இதுவரை அடக்கி வைத்திருந்த சிரிப்புப் பொத்துக்கொண்டு வரச் சபையில் பேசுவதையும் மறந்துவிட்டுப் பெருங்குரலில் சிரித்தான். அவனுடைய சிரிப்பு சபையிலிருந்த அனைவரையும் தொற்றிக்கொள்ள அனைவரும் சிரித்தார்கள். சிரித்தவண்ணம் அனைவரும் உத்தவனைப் பார்க்க உத்தவன் தரையில் பதித்த தன் கண்களை மீட்டெடுக்காமல் அப்படியே பார்த்த வண்ணம் அடக்கமாக அமர்ந்திருந்தான்.

1 comment:

ஸ்ரீராம். said...

ஹா.ஹா....தொடர்கிறேன்.