Thursday, March 30, 2017

பிரத்யும்னனின் பூர்வ கதை!

வசுதேவர் கதி என்னனு தெரிஞ்சுக்க எல்லோரும் காத்திருப்பீங்க! ஆனால் சென்ற பகுதியுடன் முன்ஷி எழுதியவை முடிந்து விட்டது. இனி தொடர்ந்து மஹாபாரதம், பாகவதம், ஹரி வம்சம் ஆகியவற்றைப் படித்து மேலே தொகுத்து அளிக்கலாம் என எண்ணுகிறேன். இத்தனை வருடங்களாக இருந்த ருசிகரமான சம்பவங்களோ, நிகழ்வுகளோ, கற்பனைகளோ இருக்காது. ஏனெனில் அவை எல்லாம் திரு முன்ஷியின் கற்பனை வளத்தில் வந்தவை!  ஆகவே இனிமேல் எழுதப் போவதில் சாரம் இல்லை எனில் அது என் குற்றமே! மன்னிக்கவும்.


இது வரை படித்ததில் பிரத்யும்னனுக்கும் மாயாவதிக்கும் உள்ள தொடர்பை நினைத்து எல்லோருக்கும் ஆச்சரியம், அருவருப்பு, திகைப்பு என்று வரலாம். ஆனால் உண்மையில் மாயாவதி என்னும் பாத்திரம் பாரதம், ஹரிவம்சம் ஆகியவற்றில் வருகிறது. அவற்றின் படி கிருஷ்ணருக்கும் ருக்மிணீக்கும் பிறந்து ஐந்து அல்லது ஆறு நாட்களே ஆன குழந்தையாக இருக்கையிலேயே பிரத்யும்னன் சம்பாரா என்னும் பிசாசுகளின் அதிபதியால் கடத்தப்படுகிறான். சம்பாரா அவனைக் கடலுக்குள் வீசி விடுகிறான். பிரத்யும்னனை ஒரு மீன் விழுங்கி விடுகிறது. ஆனாலும் மீன் வயிற்றுக்குள் குழந்தை உயிருடன் இருக்கிறது. இந்தக் குழந்தையால் தான் தனக்கு மரணம் என்பதை சம்பாரா தெரிந்து கொண்டு குழந்தை இருந்தால் தானே மரணம், அதைக் கடத்திக் கொன்றுவிடுவோம் என்றே கடலில் வீசி எறிந்தான். ஆனால் பிரத்யும்னன் காமதேவன் என அழைக்கப்படும் மன்மதனின் அம்சம் என்று சொல்கின்றனர்.

காமனைப் பரமசிவன் எரித்ததும் அவன் மஹாவிஷ்ணுவுடன் ஐக்கியம் ஆகி விடுவதாக ஐதீகம். பின்னர் கிருஷ்ணாவதாரத்தின் போது காமன் ருக்மிணியின் கர்ப்பத்தில் ஆண் குழந்தையாகத் தோன்றிப் பிறக்கிறான். பார்க்கக் கிருஷ்ணனைப் போலவே இருப்பதால் இவனுக்கும் கிருஷ்ணனைப் போன்ற சக்திகள் கை கூடலாம் என்று எல்லோரும் அஞ்சியதைப் போல் சம்பாராவும் அஞ்சி இருக்கலாம். நினைத்த உருவம் எடுக்கக் கூடிய சம்பாரா குழந்தையைக் கடத்திக் கடலில் வீசியதும் அதை மீன் விழுங்கியதும் மேலே குறிப்பிட்ட மாதிரி நடந்தது.  அந்த மீனை ஒரு மீனவன் பிடித்து சம்பாராவின் சமையலறைக்கே வந்து சேர்கிறது.  மாயாவதி என்னும் சம்பாராவின் மனைவி அந்த மீனை சமையலுக்காக நறுக்குகையில் உள்ளே ஓர் அழகான குழந்தை இருப்பது தெரிய வருகிறது. சில புராணங்களின்படி மாயாவதி சம்பாராவின் தாசி என்றும் சமையலறைப் பொறுப்பில் இருந்தாள் என்றும் தெரியவருகிறது.

சம்பாராவுக்குத் தெரியாமல் அந்தக் குழந்தையை வளர்த்து வருகிறாள். அவளையே தன் தாய் என்று நீனைக்கிறது அந்தக் குழந்தை! ஆனால் மாயாவதி தான் ரதி தேவி என்றும் எரிந்த தன் கணவனை மீண்டும் உயிர்ப்பதாகச் சொன்னதால் கணவன் மீண்டு வரக் காத்திருந்தாள் என்றும் மாயாதேவியிடம் நாரத முனிவர் தோன்றிச் சொல்லுகிறார். மாயாவதிக்குத் தான் யார் என்பதும், குழந்தை தான் தன் கணவன் காமதேவன் என்பதும் தெரிந்ததும் குழந்தையை மிகவும் அன்புடன் வளர்த்து வருகிறாள். நாட்கள் செல்லச் செல்லக் குழந்தையின் அழகு  அங்கிருந்த அனைவரையும் கவர்ந்தது. உண்மையில் இவன் மன்மதனே என்று சொல்லும்படி அழகாகவும் இளமையாகவும் இருந்த பிரத்யும்னனைத் திருமணம் செய்து கொள்ள அனைவரும் துடித்தனர்.  மாயாவதிக்கும் இப்போது பிரத்யும்னனிடம் உண்மையைச் சொல்லும் தருணம் வந்து விட்டது என்பது புரிந்தது.

Wednesday, March 15, 2017

வசுதேவர் எங்கே?

பிரத்யும்னனுக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை.   அவனுக்கு ஆச்சரியமாகவும் இருந்தது. அதே சமயம் தான் வஜ்ரநபுக்கு இவ்வளவு அருகே இருந்தும், கிட்டத்தட்ட அவன் பிடியில் இருந்தும் அவன் ஏன் தன்னைக் கொல்ல இவ்வளவு தயங்குகிறான் என்பதைப் பிரத்யும்னனால் புரிந்து கொள்ள முடியவில்லை.  வஜ்ரநப் அவனிடம் மெல்லிய குரலில் பேசினான். “முட்டாள், முட்டாள்! நீ ஏன் இன்னமும் பார்த்துக் கொண்டு சும்மா இருக்கிறாய்? விரைவில் என்னைக் கீழே தள்ளு! முட்டாள், முட்டாள்! இன்னமும் என்னைப் பிடித்து உன் வசப்படுத்தாமல் பார்த்துக்கொண்டே நிற்கிறாயே!” என்றான்.

பிரத்யும்னனுக்கு வஜ்ரநபின் நோக்கம் தெளிவாகப் புரிந்தது. வஜ்ரநப் தன்னைக் கொல்வதற்கு வந்த கொலையாளியாக இல்லாமல் தன்னிடம் சிறைப்பட்டவனைப் போல் நடிக்க விரும்புகிறான். தான் தன்னுடைய திறமையாலும், வலிமையாலும் வஜ்ரநபைப் பிடித்தது போல் காட்டிக் கொள்ளச் சொல்கிறான்! பிரத்யும்னன் தயார் ஆவதற்குள்ளாக வஜ்ரநபே தன் ஒரு கையால் பிரத்யும்னனைப் பிடித்த வண்ணமும் இன்னொரு கையால் தன் வாளைக் கீழே தள்ளிய வண்ணமும் நின்றான். பிரத்யும்னனுக்கு இந்த விளையாட்டின் தன்மை முற்றிலும் பிடிபட்டது!  ஆகவே வஜ்ரநபின் வாள் கீழே விழும் முன்னரே அதைத் தன் கைகளால் பிடித்து விட்டான்.  வாள் இல்லை என்ற சாக்கை வைத்து வஜ்ரநப் பிரத்யும்னன் தன்னைத் தள்ளியது போல் பாவனை செய்த வண்ணம் அவனும் கீழே சாய்ந்தான்.  பிரத்யும்னன் அவன் மார்பில் ஏறி அமர்ந்தான். அங்கே காவலுக்கும் துணைக்கும் இருந்த அடிமைகள் கூட இதைப்பார்த்து வஜ்ரநபின் துணைக்கு வராமல் அதற்கான முயற்சிகளைக் கூடச் செய்யாமல் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர்.

வஜ்ரநப் பிரத்யும்னனைப் பார்த்துக் கெஞ்சினான். “என்னைக் கொன்று விடாதே, பிரத்யும்னா, கொன்று விடாதே!” என்றான். பிரத்யும்னன் வஜ்ரநப் சொல்வதை மேலும் தெளிவாகப் புரிந்து கொண்டு அவனுக்குத் தன் கைகளாலும் கால்களாலும் இரண்டு உதைகள் கொடுத்துவிட்டுப் பின்னர் அவனை மெல்ல எழுந்திருக்கச் சொன்னான். வஜ்ரநபும் எழுந்து கொண்டு ஒரு கயிறைப் பிரத்யும்னன் கைகளில் கொடுத்தான். அந்தக் கயிறு ஒரு பக்கம் வஜ்ரநபின் இடுப்பைச் சுற்றிக் கட்டி இருந்தது.  அதன் மறுமுனையைப் பிரத்யும்னனிடம் கொடுத்துவிட்டு வஜ்ரநப், “முட்டாள், இந்தக் கயிறை வைத்து என்னை நன்றாக இறுக்கிக் கட்டு!” என்று சொல்லிக் கொடுத்தான்.

அப்போது அங்கே தெரிந்த இருட்டிலிருந்து ஓர் உருவம் வெளிப்பட்டது. ஓர் காட்டுவாசிப் பெண்போல் காட்சி அளித்த அந்த உருவத்தின் கைகளில் ஓர்வாள் தென்பட்டது. பிரபாவதி அதிர்ச்சி அடைந்தாள். காட்டு வாசியைப் போல் காணப்பட்ட ஓர் வயதான பெண்மணி, தலையெல்லாம் அலங்கோலமாய்க் காட்சி தர, தன் கணவன் பிரத்யும்னனைத் தன் கைகளில் எடுத்து அணைத்ததைக் கண்டு திகைத்தாள் அந்தப் பெண்மணி பிரத்யும்னனிடம், “என் கண்ணே! கவலைப்படாதே! இது நான் தான்! சரியான சமயத்துக்கு நான் உன்னிடம் வந்துவிட்டேன்!” என்றாள்.

வஜ்ரநப் அப்போது குறுக்கிட்டு, “கவலைப்படாதே பிரத்யும்னா! எங்கள் மன்னாதி மன்னர் புஷ்கரவர்த்தம் சென்றிருக்கிறார்.  அந்தப் பகுதி முழுவதும் யாதவர்களின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. எங்கள் மன்னர் மட்ரிகோவட்டாக் கோட்டையின் பாதுகாப்பை என் பொறுப்பில் விட்டுச் சென்றிருக்கிறார்.  நான் பொறுப்பேற்றதும் செய்ய வேண்டிய முதல் வேலை இது தான்! அது தான் உன்னைப் பிடிப்பது!” என்றவன் சத்தமாகச் சிரித்தான். பின்னர் தொடர்ந்து, “எங்கள் மன்னாதி மன்னர் தொலைதூரத்தில் எட்ட முடியாத தூரத்தில் பத்திரமாக இருக்கட்டு. நீ இங்கிருந்து தப்பிச் செல்வதற்கான வழியைப் பார்!” என்றான்.

அப்போது பிரத்யும்னனைத் தேடி வந்த மாயாவதியைப் பார்த்த பிரபாவதி, “இந்தப் பெண்மணி யார்?” என்று கேட்டாள். “ஓ! இவள் தான் நான் சொன்ன என் “தாய்”! இவளைக் குறித்து நான் உன்னிடம் ஏற்கெனவே சொல்லி இருக்கிறேனே!” என்றான்.

அவளைப் பார்த்த பிரபாவதி, “நீ யாராக இருந்தாலும் எங்களை எங்கள் விருப்பம் போல் வாழவிட்டு விட்டுச் சென்றுவிடு!” என்று கூறிய வண்ணம் அழுதாள். அதற்கு மாயாவதி, “முதலில் அழுகையை நிறுத்து பெண்ணே! நீ இங்கே தானே நின்று கொண்டிருக்கிறாய்? உன்னை வேறெங்கும் அனுப்பவில்லையே! நீ என்ன குழந்தையா?” என்று கேட்டவண்ணம் அவள் கன்னத்தில் ஓங்கி அறைந்தாள்.  பிரபாவதிக்கு அவள் நடத்தையைக் குறித்தும் அவளுடைய பேச்சும் சரிவரப் புரியவில்லை. அதோடு அவளுக்கு இந்த பிரத்யும்னனின் “தாய்” பற்றிய செய்திகளும் சரி, அவளுடைய வழிமுறைகளும் சரி பிடிபடவே இல்லை. அவளுக்கு அதில் அனுபவங்களும் இல்லை. ஆகவே அவள் வாய் விட்டு அழுத வண்ணம், “நான் அவர் மனைவி!” என்று புலம்பினாள்.

“விரைவில் நீ என்னைப் பற்றி நன்கு புரிந்து கொள்வாய்! அது தான் உனக்கு நல்லது!” என்றாள் “தாய்” மாயாவதி! “நான் பல வருடங்களுக்கு மேலாக இவனுக்குத் தாயாக இருந்து வருகிறேன். அப்போது அவனுக்கு இவ்வுலகில் வேறு யாரும் இல்லை. நான் தான் தாய், தந்தை எல்லாமும்!” என்றாள். சற்று நேரம் நிறுத்திவிட்டு மௌனமாக இருந்தவள், “கவலைப்படாதே, பிரபாவதி! இவன் என்னையும் மணந்து கொண்டிருக்கிறான்!” என்றாள்.

அப்போது வஜ்ரநப் பிரபாவதியைப் பார்த்து, “பிரத்யும்னனைக் கொல்வதற்கென உனக்களிக்கப்பட்ட அரசாணையின் கதி என்ன? நான் மட்டும் சரியான நேரத்தில் வரவில்லை எனில் அவன் எப்போதோ இறந்து போயிருக்கக் கூடும். இப்போது என்ன கஷ்டம் எனில் இந்தப் பாலைவன மணல் பிரதேசத்தை விட்டு இவனை எவ்விதம் வெளியே அனுப்புவது என்பது தான்!” என்றான்.  அப்போது பிரபாவதி, “அப்படி அனுப்ப முடிந்தால் என்னையும் சேர்த்து அனுப்பி விடுங்கள்!” என்றாள்.

“நான் இந்த அரசாணையைப் பல சமயங்களில் பயன்படுத்தி இருக்கிறேன்.” என்றவன் பிரத்யும்னன் பக்கம் திரும்பி, “பிரத்யும்னா! உடனே என்னைக் கட்டிப் போடு! இறுக்கமாகவே கட்டு! என் ஆட்களில் சிலர் இந்த மலைக்குன்றின் அடிவாரத்தில் உனக்காகக் காத்திருப்பார்கள். சீக்கிரம் விரைந்து செயல்படு!” என்றான். “உங்கள் மன்னாதி மன்னரின் கட்டளைக்கு என்ன பதில்?” என்று கேட்டான் பிரத்யும்னன்.

“நீ இந்த அரசர்களைப் பற்றி எல்லாம் கவலைப்படாதே! அவர் தன்னைத் தானே கவனித்துக் கொள்வார்! எங்கள் பகுதியின் எல்லையைக்காப்பாற்ற வேண்டி நூற்றுக்கணக்கான ஒட்டகங்களுடனும் ஆட்களுடனும் அவர் புஷ்கர வர்த்தம் நோக்கிச் சென்று கொண்டிருக்கிறார்.” என்றான் வஜ்ரநப்!  அவன் தன்னுடைய உத்திகளைத் தயாராக வைத்திருந்தான். ஓட்டகங்களுடன் ஒட்டகங்களை ஓட்டுபவர்களும் தயாராகக் காத்திருந்தனர். மட்ரிகோவட்டாவை விட்டு பிரத்யும்னனை வெளியேற்றக் காத்திருந்தார்கள்.  பிரபாவதி பிரத்யும்னனை இறுக்கிக் கட்டிக் கொண்டாள். “என் தாய் பிரவிசியை இங்கேயே விட்டு விட்டுச் செல்ல வேண்டுமா?” என்று கதறினாள்.

“பிரபாவதி, நீ ஓர் முட்டாள் பெண்!” என்றாள் மாயாவதி! “அழுவதற்கு இதுவா நேரம்? அதற்கெனத் தனியான நேரம் இருக்கிறது. அதே போல் நம் வேலையைச் செய்வதற்கும் தனியாக நேரம் உள்ளது. மௌனமாகத் துன்பத்தை அனுபவிக்கவும் நேரம் தனியாக இருக்கிறது.  இப்போது இந்த மூன்றும் சேர்ந்து உன் எதிரே வந்து நிற்கவே நீ கிட்டத்தட்டப் பைத்தியமாக ஆகி விட்டாய்! நாம் எப்படிப் பட்ட பேராபத்தில் இருக்கிறோம் என்பதை நீ புரிந்து கொள்ளவில்லை! உங்கள் மன்னாதி எந்நேரமும் திரும்பி வரலாம். நாளையே கூட வந்துவிடலாம்!” என்றாள்.

பிரபாவதியோ செய்வதறியாது அழுது கொண்டே இருந்தாள்.  “இந்த யாதவன் என்னை இக்கட்டில் மாட்டி விட்டான். என் மனைவி ஒன்று விதவையாக இருக்க வேண்டும் அல்லது என் மகள் விதவையாக வேண்டும்! இந்த இரண்டில் ஒன்று நடக்க வேண்டும் என்ற கட்டாயத்துக்கு ஆளாக்கி விட்டான்!” என்றான் வஜ்ரநப்! அதைக் கேட்டப் பிரத்யும்னன் சிரித்தான். “ஆனால் உங்கள் மன்னரின் ஆணையை நிறைவேற்றுவதில் நீங்கள் தோற்றுப் போய் விட்டீர்கள்!” என்றான்.

அதற்கு வஜ்ரநப், “இப்போது நமக்கு நேரம் மிகக் குறைவு! நம்மை இப்போதைய பேராபத்திலிருந்து நீக்கிக் கொள்ள வேண்டும்! அதுவும் உதயத்திற்குள்ளாக! இங்கே பேசிப் பொழுதைக் கழித்தோமானால் எதற்கும் நேரம் இருக்காது! நாம் பிடிபடுவோம்! உடனடியாகக் கொல்லப்படுவோம்.” என்றான் வஜ்ரநப்! பின்னர் சற்று நேரம் கழித்து மீண்டும், “என்னால் எங்கள் மன்னரின் கொடூரத்தை எதிர்நோக்க முடியவில்லை! உன்னைக் கொல்லவும் முடியவில்லை! நான் இறக்கவும் விரும்பவில்லை! ஆகவே நீ செல்கையில் என்னையும் உன்னுடன் அழைத்துச் சென்று விடு! நாம் எல்லோரும் சேர்ந்து ஒன்றாகச் செல்வோம் அல்லது ஒன்றாக இறந்து படுவோம்!”

பிரத்யும்னன் சிரித்துக் கொண்டே குறுக்கிட்டான். “எல்லோருமே ஒரே மாதிரியான கஷ்டத்தில் மாட்டிக் கொண்டிருக்கிறோம். உங்கள் மன்னரின் கொடூரத்திலிருந்து நாம் தப்பிப்போம். உயிர்வாழ்வோம். ஆனால் எனக்கு இன்னொரு முக்கியக் கடமை ஒன்று இங்கிருக்கிறது. அது தான் என் தாத்தா வசுதேவர் அவர்கள் இன்னமும் உயிருடன் இருக்கிறாரா என்று கண்டு பிடிப்பது! அவர் உயிருடன் இருந்தால் அவரைத் திரும்ப துவாரகை அழைத்துச் செல்வது! இது தான் என் முக்கியக் கடமை! நான் இங்கே வந்ததும் அதற்காகவே!” என்றான்.  அதற்கு வஜ்ரநப், “அவர் இங்கே இல்லை! அவர் நிச்சயமாக மன்னரின் இந்தக் கோட்டையில் இருக்க வாய்ப்பே இல்லை. மண்ணால் ஆன சிறைச்சாலைக் கோட்டையில் சிறைக்கைதியாக அவர் இருக்கலாம்!” என்றான்.

Sunday, March 12, 2017

பிரத்யும்னன் எதிர்காலம்!

“உன்னால் முடியாது, பிரபாவதி!” என்றான் பிரத்யும்னன். “எனக்குத் தெரியும்! உன்னால் முடியாதென்று!” என்று மீண்டும் சொன்னவன் அவள் மடியிலிருந்து எழுந்தான். பிரபாவதி ஒரு சிறு குழந்தையைப் போல் தனக்குள் தான் மன்னனின் ஆணையை மீறியதால் தன் கணவன் பிரத்யும்னன் தன்னை விட்டு நிரந்தரமாகப் பிரிந்து விடுவானோ என்று கலங்கினாள்.  அவள் மடியிலிருந்து எழுந்த பிரத்யும்னன் அவளைப் பார்த்தான். அவள் அழுது கொண்டே இருந்தாள். தன்னிரு கரங்களால் கண்களையும் முகத்தையும் சேர்த்து மூடிக் கொண்டு தூங்கினாள். பிரத்யும்னன் அந்த மெல்லிய கத்திய ஒரு கையில் எடுத்துக் கொண்டு இன்னொரு கையால் பிரபாவதியை அள்ளி அணைத்தான்.

“பிரபாவதி, எனக்கு நன்றாகத் தெரியும். நீ மிகவும் அன்பு செலுத்தும் ஒருவனுக்குத் தீங்கிழைக்க உன்னால் இயலாது என்பதை நான் நன்கறிவேன்.” என்றான். மனம் கலங்கிய நிலையில் குழப்பமாகக் காட்சி தந்த பிரபாவதி அவனிடம் சொன்னாள். “பிரபுவே, நான் வாழக் கூடாது! உயிருடனே வாழவே கூடாது!” என்று கூறும்போதே அவள் தொண்டை அடைத்துக் கொண்டு விம்மல்கள் பெருகின. “எல்லோருக்கும் என் ஒருத்தியால் தான் எத்தனை துன்பங்கள்!” என்று மேலும் கூறினாள்.

“அழாதே, பிரபாவதி! அப்படி ஒரு வேளை நாம் இறக்க நேர்ந்தால் இருவரும் சேர்ந்தே இறப்போம்.” என்றான் பிரத்யும்னன். பிரபாவதி கடுமையான விரக்தியில் வெறுத்துப் போயிருந்தாள். அதைப் பார்த்த பிரத்யும்னன் சிரித்துக் கொண்டே அவள் முதுகில் தட்டிக் கொடுத்தான். “பிரபாவதி, உங்கள் தானவ குலத்து மன்னாதி மன்னரின் பரம்பரை வழக்கத்தை மீறுவதில் உனக்குள்ள மனோபலத்தையும் தைரியத்தையும் நான் பாராட்டுகிறேன்.  இனிமேல் என்ன நடக்குமோ என்று சிந்திப்பதை நிறுத்திக் கொள். அதைக் குறித்துக் கவலைப்படாதே!” பின்னர் தொடர்ந்து கூறினான். “இப்போதிலிருந்து காலைக்குள்ளாக நாம் இதிலிருந்து தப்புவதற்கு ஓர் வழியைக் கண்டு பிடிப்போம்.”

“என்ன செய்ய முடியும் நம்மால்? என்ன செய்யப் போகிறோம்? எந்த வழியும் கண்களில் படவில்லையே!” என்ற பிரபாவதி துயரம் தாங்காமல் அழுதாள். “நடு இரவு ஆகிறதல்லவா இப்போது! ஏதேனும் ஒரு வழி, தீர்வு கிடைக்கும்.  நடு இரவைக் குறிக்கும் பேரிகை சப்தம் எழுப்பும்போது இங்கிருந்து கிளம்பத் தயாராக இரு!” என்றான் பிரத்யும்னன். அவனை ஏளனமாகப் பார்த்த பிரபாவதி, “உங்கள் “தாய்” உங்களை எந்த நிலையிலும் கைவிட மாட்டாள் என்று சொல்லிக் கொண்டிருந்தீர்கள்!” என்றாள் கிண்டலாக. இந்தக் கஷ்டமான நேரத்தில் கூட அவளால் ஏளனம் செய்வதைத் தவிர்க்க முடியவில்லை.

“எனக்குத் தெரியும்! ஒரு மனிதன் என்ன செய்வான் என்பதைப் பற்றி! உடனே இங்கே மனித வேட்டை ஆரம்பிக்கும். நாம் தப்பி விட்டோம் என்பதை மன்னர் மன்னர் அறிந்து கொண்டாரெனில் சும்மா விட மாட்டார். இந்தக் கோட்டையையே அலசித் தேடுவார்!” என்றாள் பிரபாவதி! அப்போது பிரத்யும்னன்   “என் தந்தையிடம் நான் வைத்திருக்கிறதைப் போன்ற நம்பிக்கையை வை!. அவர் நம்முடைய உதவிக்கு வரவேண்டும் என்றும் நம்மை இங்கிருந்து தப்ப வைக்க வேண்டும் என்றும் நான் பிரார்த்தித்துக் கொண்டிருக்கிறேன்.” என்றான்.

“உங்கள் தந்தை! நம்முடைய உதவிக்கு வருவாரா? நம்மைத் தப்புவிப்பாரா? நடக்கவே முடியாதது! அவர் எங்கேயோ தூரத்தில் அல்லவா இருக்கிறார்! பிரபுவே, அவர் எவ்விதம் துவாரகையிலிருந்து வர முடியும்? மேலும் துவாரகை இப்போது இருக்கும் ஒழுங்கற்ற நிலையில் அவரால் அங்கிருந்து கிளம்பவே முடியாதே! நம்முடைய உதவிக்கும் நம்மைத் தப்புவிக்கவும் அவரால் எப்படி வர முடியும்?”

“பிரபாவதி! அவரால் என்ன செய்ய முடியும், என்ன செய்ய முடியாது என்றெல்லாம் பேசிக் கொண்டு நாம் நேரத்தைக் கடத்த வேண்டாம்!” என்றான் பிரத்யும்னன். “நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என்பதையே என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை!” என்றாள் பிரபாவதி!

“பிரபாவதி, கஷ்டத்தில் இருக்கும் மக்கள் தங்கள் உதவிக்காக என் தந்தையை நினைத்துப் பிரார்த்திப்பது இது முதல் முறை அல்ல! பல முறைகள் நடந்துள்ளன. அவரும் அவர்கள் உதவிக்குச் சென்றிருக்கிறார். ஆனால் ஒன்று! நமக்கு அவரிடம் அவர் சக்தியிடம் அளவிடமுடியாத அளவுக்கு முழு நம்பிக்கை இருக்க வேண்டும். அப்போது தான் அவர் வருவார்! நமக்கும் உதவி கிடைக்கும்!”

“என்னிடம் அவ்வளவு நம்பிக்கை எல்லாம் அவரிடம் இல்லை!” என்றாள் பிரபாவதி! “ ஒரு வேளை என் நம்பிக்கை பிசகினால், என்ன் பிரபு, நீங்கள் இறந்து விடுவீர்கள். அப்புறம் இங்கிருந்து தப்புவதற்கு எந்த வழியும் இல்லாமல் போய் விடும்! அப்படியே உங்கள் தந்தை வந்தாலும் அவர் எனக்கு ஏன் உதவி செய்யப்போகிறார்! அவர் மகனான உங்களுக்குத் தான் உதவி செய்வார்!” என்றாள் பிரபாவதி!  அளவிடமுடியாத துயரத்தில் ஆழ்ந்த பிரபாவதி வாய் விட்டு அழுதாள். கண்களில் கண்ணீருடன் வேறு வழி தெரியாமல், அவள் பிரத்யும்னன் அவன் தந்தைக்குச் செய்து கொண்டிருந்த பிரார்த்தனையில் கலந்து கொண்டாள்.  அப்போது திடீரென அங்கே வஜ்ரநப் வந்தான். அவன் கைகளில் பெரிய வாள் ஒன்று இருந்தது. “பிரபாவதி, நீ எங்கே இருக்கிறாயோ அங்கேயே இரு!  உன்னுடன் பிரத்யும்னன் இருந்தால் அவனையும் அவன் எங்கே இருக்கிறானோ அங்கேயே இருக்கச் சொல்! அவனுடைய நாட்கள் எண்ணப்பட்டு வருகின்றன.” பிரத்யும்னன் செய்வதறியாமல் திகைத்தான்.  வஜ்ரநபிடம் இருக்கும் பெரிய வாளைப் போன்ற ஆயுதங்கள் ஏதும் பிரத்யும்னனிடம் இல்லை. ஒரே ஒரு சின்னக் கத்தி தான் இருந்தது. அதை வைத்து வஜ்ரநபிடம் இருக்கும் ஆயுதத்தை அவனால் எதிர்த்துப் போராட முடியாது. அதோடு இரண்டு வலிமை வாய்ந்த  அடிமைகள் அவன் மேல் பாயத் தயாரான கோலத்தில் அங்கே வஜ்ரநபுக்கு அருகே நின்று கொண்டிருந்தனர்.

Thursday, March 9, 2017

பிரபாவதியின் புலம்பல்! பிரத்யும்னன் கிண்டல்!

அவளுக்கு எவ்விதமான அரசாணை பிறப்பிக்கப்பட்டிருக்கிறது என்பதைக் குறித்து அவளிடம் கேட்டு அவளை மனதளவில் துன்புறுத்த அவன் விரும்பவில்லை.  அவ்வப்போது அவள் சில பிரார்த்தனைகளைச் சொல்லிக் கொண்டிருப்பதை அவனால் தெரிந்து கொள்ள முடிந்தது. அவர்களின் குல தெய்வமான உமாதேவியைத் தான் அவள் பிரார்த்திக்கிறாள் என்றும் தெரிந்து கொண்டான்.  மிகவும் அதீதமான உணர்ச்சிப் பிரவாகத்தில் மூழ்கி அவள் அதில் திண்டாடித் திணறிக் கொண்டிருப்பதையும் பிரத்யும்னன் தெரிந்து கொண்டிருந்தான். அவள் கண்கள் கண்ணீரால் நிரம்பி இருந்தன. அவள் ஏதோ ஓர் முடிவை விரைந்து எடுக்கப் பிரயத்தனப் பட்டு முடிவையும் எடுத்திருக்கிறாள் என்பதைத் தெரிந்து கொண்டான்.

பிரபாவதி அவனைப் பார்த்தாள். தன் கைகளை அவன் மேல் வைத்தவள் என்ன நினைத்தாளோ அப்படியே அவனை இழுத்துத் தன் நெஞ்சோடு சேர்த்து அணைத்துக் கொண்டாள். “என்ன செய்வேன் நான்? என்ன செய்வேன் நான்?” இதுவே அவள் மனதில் ஓடிக் கொண்டிருந்தது. அவளுடைய ஒவ்வொரு நாடித் துடிப்பிலும் இதுவே  அவளுக்குக் கேட்டது.  சிந்தித்துச் சிந்தித்து அவளுக்குத் தன் முன்னே இருக்கும் ஒரே வழி பிரத்யும்னனைத் தியாகம் செய்வது தான் என்றே தோன்றியது. அதன் மூலமே அரசனின் கொடுங்கோன்மையிலிருந்து தப்பிக்கலாம். அவள் மேல் அவன் தன் கடுமையைக் காட்ட மாட்டான். அவள் குடும்பமும் தப்பிக்கும்.  உடனடியாக அவள் தன் மனதைத் தேற்றிக் கொண்டாள்.  பிரத்யும்னனுக்கு அவளுடைய முடிவு என்னவாக இருக்கும் என்பது புரிந்து விட்டது. ஆனாலும் ஓர் பச்சைக் குழந்தையைப் போல அவன் தன்னை அவளுடைய அணைப்பில் ஈடுபடுத்திக் கொண்டு அவளைத் தேற்றினான்.

அவளும் ஓர் நிராதரவான நிலையில் தான் தன்னை அணைத்துக்கொண்டு தொங்குகிறாள் என்பதையும் கண்டான்.  அவள் எந்தச் சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக் காலம் கடத்துகிறாள் என்பது புரியாமல் அவனும் காத்திருந்தான். அவள் அணைப்பிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டு அவள் மடியில் தலை வைத்துப் படுத்தான். அவள் முகத்தையே பார்த்தான்.  அவள் என்ன முடிவு எடுத்திருக்கிறாள் என்பதை அறியக் காத்திருந்தான்.  அப்போது அவனுக்குத் திடீரென ஓர் நினைவு வந்தது. வஜ்ரநப் அவனிடம் பேசுகையில் சொன்னதை அவன் இப்போது நினைவு கூர்ந்தான்.  வஜ்ரநபி சொன்னது என்னவெனில் அவர்கள் தானவ குலத்துப் பெண்கள் தாங்கள் அருமையாகக் காதலிக்கும் ஆண்களை மன்னனின் கட்டளையின் பேரில் கொல்லத் தயங்க மாட்டார்கள் என்பது தான்! அவர்கள் இருவரும் பேசிக்கொள்கையில் வஜ்ரநப் இதைச் சொல்லி இருந்தான்.  அதிலும் இம்மாதிரி மடியில் தலை வைத்துப் படுக்கும் கணவனையோ/ காதலனையோ அந்தச் சந்தர்ப்பத்தில் தான் கொல்வார்கள் என்றும் சொல்லி இருந்தான்!

இப்போது பிரத்யும்னனுக்கு எல்லாமும் புரிந்து விட்டது. அவள் அவனைக் கத்தியால் குத்திக்கொல்லத் திட்டமிட்டிருக்க வேண்டும். அதற்காகத் தன்னை அவள் தயார் செய்து கொண்டிருக்கிறாள். அவன் இப்போது எவருடைய உதவியும் இல்லாமல் தனிமையில் அவள் மடியில் படுத்துக் கொண்டிருக்கிறான்.  அவன் தன் நிலையை எண்ணித் தனக்குத் தானே சிரித்துக் கொண்டான். அவள் மனதின் எண்ணவோட்டம் எப்படி இருக்கும் என்பதையும் புரிந்து கொண்டான்.  அவள் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தான். அவள் தன் உதடுகளைக் கடித்துக் கொண்டாள்.  தன் தலையில் மறைத்து வைத்திருந்த ஆயுதத்தை எடுத்துக் கொண்டாள். அந்த ஆயுதத்தின் மூலமே அவள் தனக்கிடப்பட்டிருக்கும் அரசாணையை நிறைவேற்ற வேண்டும்.

பிரத்யும்னன் அவள் மடியில் தன் கைகளைப் பரவ விட்டான். அவள் தன் கண்களை மூடிக் கொள்கிறாளோ என்று அவன் நினைத்தான். அவள் மீண்டும் மீண்டும் தன் உதடுகளைக் கடித்துக் கொண்டாள். தனக்குத் தானே அவள் பேசிக் கொள்வதை அவன் கேட்டான். “இல்லை, இல்லை, என்னால் இதைச் செய்ய இயலாது!.......ம்ஹூம், இல்லை, இல்லை, நான் கட்டாயம் செய்ய வேண்டும்! ஆம் கட்டாயமாய்!.......”இவ்வாறு அவள் தனக்குள்ளாகப் புலம்பிக் கொண்டிருந்தாள். அவள் தனக்கிடப்பட்டிருக்கும் ஆணையை நிறைவேற்றப் போகிறாள் என்னும் எதிர்பார்ப்பில் பிரத்யும்னன் தன் கண்களைத் திறந்து அவளைப் பார்த்தான் சிரித்தான். கத்தியைப் பிடித்திருந்த அவள் கையைத் தானும் பிடித்துக் கொண்டான்.  அவளுக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. பிரத்யும்னன் அவள் கைகளை இறுகப் பிடித்துக் கொண்டு கையிலிருந்த கத்தியைப் பிடுங்கினான். பிரபாவதி வார்த்தைகளுக்கு அப்பாற்பட்ட பயத்திலும் ஆச்சரியத்திலும் மூழ்கினாள். கத்தி அவளையும் அறியாமல் கீழே விழ, “என்னால் முடியாது! என்னால் முடியாது!” என்று புலம்பினாள் பிரபாவதி!

Sunday, March 5, 2017

பிரபாவதி தவிப்பு! பிரத்யும்னன் சிரிப்பு!

அவள் தாயிடம் இதைக் குறித்தெல்லாம் அவளால் எதுவும் கேட்க முடியாது!  அவள் தாய் இளம்பெண்ணாக இருக்கையில் இதைக் குறித்துக் கேள்விப் பட்டிருக்கலாம். அதனால் அவள் தாய்க்குத் தெரிந்திருக்கலாம். அவள் தந்தை வஜ்ரநபைத் திருமணம் செய்து கொள்வதற்காக அவள் யாரையேனும் இம்முறையில் கொல்ல நேரிட்டிருக்கலாமோ! தெரியவில்லை. அவள் தந்தையும், தாயும் அடிக்கடி பொருள் பொதிந்த பார்வைகளைப் பரிமாறிக்கொள்வதை அவள் கண்டிருக்கிறாள். அதன் உட்பொருள் இதுவாக இருக்கலாமோ! அவள் தந்தை எதையும் ஒளித்து மறைத்துப் பேசுபவர் அல்ல! வெளிப்படையானவர். அவர் ஏன் இதைக் குறித்து மறைக்க வேண்டும்? ரகசியமாக வைத்திருக்க வேண்டும்?

இந்த தர்மசங்கடமான ஆணையிலிருந்து அவள் எப்படி வெளியே வரப் போகிறாள்? அவள் கணவனையும் எப்படி வெளியே கொண்டு வருவாள்? இதிலிருந்து தப்புவது எப்படி? அவள் தன் கணவனைக் கொல்லாமல் விட்டு விட்டாலும், இது தெரிந்து மன்னன் உடனே அவனைக் கொன்றுவிடுவான்.  கொல்வதைத் தள்ளிப் போடு என மன்னனிடம் போய்க் கேட்கவும் முடியாது!  அவளுக்கு இருப்பது இரு வழிகள் தான்! மன்னன் சொல்படி கேட்டுக் கணவனைக் கொல்ல வேண்டும். அல்லது அதைக் கேட்காமல் இருந்தால் மன்னனின் கொடூரத்தை மறுநாள் தைரியமாக எதிர்நோக்க வேண்டும்.  இரண்டிலுமே நஷ்டம் அவளுக்குத் தான்! அவளுக்குத் தப்பிக்க வேறு வழியில்லை!

அங்கே அவர்களைக் கண்காணிக்கவும், அவர்கள் தப்பாமல் அல்லது பிரத்யும்னனை அவள் தப்புவிக்காமல் பார்த்துக்கொள்ளவும் தான் அந்த அடிமைகள் நியமிக்கப்பட்டிருக்க வேண்டும்.  அப்படி அவர்கள் இருவரும் தப்பி ஓடினால், அவர்கள் யாருடைய ஆலோசனைகளைக் கேட்டு மேலே செல்வது? அவள் தாய் இதை எல்லாம் அவளுக்குத் தெளிவாக எடுத்துச் சொல்லவில்லை. அவளை இதிலிருந்து ஒதுக்கியே வைத்திருந்தாள். ஏனெனில் அவள் தாயும் தன் மகளும், மாப்பிள்ளையும் மன்னனால் கொல்லப்படுவதை விரும்பி இருக்கமாட்டாள். தன் மகளும் விரும்ப மாட்டாள் என்றே அவளுக்கும் தெரிந்திருக்கும்.  பிரபாவதி செய்வதறியாது தவித்தாள்.

பிரத்யும்னன் அவளை அணைத்துக் கொண்டான். அவளும் அந்த அணைப்பை ஏற்றுத் தான் இப்போது உலகிலேயே மிகவும் சந்தோஷம் நிறைந்த பெண்ணாக இருப்பதாக நினைத்துக் கொண்டாள். ஆனாலும் அவள் மனம் நிறைவடையவில்லை. அவளுக்கு எந்த சந்தோஷத்தையும் அந்த நினைப்பால் கொண்டு வர முடியவில்லை. அவள் மன்னனின் ஆணையை மீறினாள் என்பதை அவள் தாய் அறிந்தால் ஒருக்கால் அவளை மன்னிக்க மாட்டாள். ஆனால் அவளுக்குத் துணிவு வரவில்லையே! அவள் கணவன் அப்படி என்ன கொடுமைக்காரனா என்ன? அப்படி எல்லாம் இல்லை.

மன்னனின் ஆணை குறித்து அவன் அறிந்திருப்பானோ? இருக்கும். ஏதோ ஆபத்து காத்திருக்கிறது என்ற வரையில் தெரிந்திருக்கலாம். அதிலும் மன்னன் அவளைத் தன் தனி அறைக்கு அழைத்துச் சென்று பேசியதிலிருந்து கொஞ்சம் கொஞ்சம் புரிந்திருக்கலாம்.  இது என்னவாக இருக்கும் என்று யோசித்திருப்பான். பிரத்யும்னன் அவளை மிகவும் அன்புடன் பார்த்துக் கொண்டிருந்தான். அவளை அணைத்துக் கொண்டு மகிழ்ந்தான். அவன் கண்களில் அவள் மேல் அவன் கொண்டிருக்கும் அக்கறையும் கனிவும் தென்பட்டன. ஒரு தாய் தன் அருமை மகளை எவ்வாறு நடத்துவாளோ அவ்வளவு அருமையாகப் பிரத்யும்னன் அவளை அன்புடன் நடத்தினான்.  மன்னன் அவளைத் தனியே அழைத்துப் பேசிய போது அவளுக்குப் பிடிக்காத ஏதோ ஒன்றைச் சொல்லி இருக்க வேண்டும். அவளுக்குச் சிறிதும் பிடிக்காத காரியத்தைச் செய்யச் சொல்லி இருக்க வேண்டும். வார்த்தைகளால் விவரிக்க ஒண்ணாத துயரத்திற்கு அவள் ஆளாகி இருப்பதை அவன் புரிந்து கொண்டிருந்தான்.

பிரபாவதி தன்னால் இயன்ற வரை மன்னன் சொல்லிக் கொடுத்த மாதிரியில் பிரத்யும்னனிடம் நடந்து கொள்ள முயற்சித்தாள். ஆனால் அவளால் முடியவில்லை. பின்னர் நடப்பது நடக்கட்டும் என்று விட்டு விட்டாள். இன்று ஒரு நாள் மட்டும், ஒரே நாள் மட்டும் அவளால் சந்தோஷமாக இருக்க முடியும். இன்றைய நாள் அவள் சந்தோஷத்தின் கடைசி நாள். நாளை முதல் எல்லையற்ற துக்கத்தை அவள் காணப் போகிறாள்.  அவள் மன்னனின் கட்டளைக்குக் கீழ்ப்படிந்து நடக்கவில்லை எனில் அது அவள் கணவனை எவ்வகையிலாவது காப்பாற்றுமா? அப்படி ஏதும் நடக்காது. ஏனெனில் அவள் கொல்லவில்லை எனில் உடனே மறுநாளே மன்னன் அவனைக் கொன்று விடுவான்.  அவள் மன்னனின் ஆணையைச் சிரமேற்கொண்டால் அதனால் அவளுக்கு ஏதும் நன்மை கிட்டுமா? அதுவும் எங்கே கிடைக்கப் போகிறது! நிச்சயமாய்க் கிடைக்காது!

அவள் மனதின் உணர்ச்சிப் பிரவாகம் மேலெழுந்து மனம் விம்மியது. அந்த உணர்ச்சிப் பிரவாகத்தில் அவள் தங்கள் குலதெய்வமான உமாதேவியைப் பிரார்த்தித்தாள்.  தன்னையும், தன் அருமைக்கணவனையும் இந்தப் பேராபத்திலிருந்து அவள் காப்பாற்றுவாளா? அவள் மன்னனின் கட்டளையை நிறைவேற்றாவிட்டால் மன்னன் அவள் தந்தையையும் கொன்று விடுவானே! அதன் மூலம் மன்னனுக்கு என்ன உதவியோ, நன்மையோ கிட்டும் என்பது அவளுக்குப் புரியவே இல்லை! அவள் தந்தையை அவன் ஏன் மன்னிக்கவே மாட்டான் என்பதை அவளால் புரிந்து கொள்ள முடியவில்லை. தனிப்பட்ட முறையில் தந்தையும், மன்னனும் அவளிடம் பேசியதிலிருந்தும் நடந்து கொண்டதிலிருந்தும் இருவருமே ஒருவரை ஒருவர் எதிரிகளாக நினைக்கிறார்கள் என்பதை அவள் புரிந்து கொண்டிருந்தாள். ஆனால் இன்றிரவே மன்னனின் ஆணையை அவள் ஏற்று நடத்தவேண்டும் என்பது அவளால் முடியாது. தவிர்க்க வேண்டும் என்றே நினைத்தாள்.

பிரத்யும்னன் மிகவும் கெட்டிக்காரன்! அவள் மனப்போக்கை அவனால் புரிந்து கொள்ள முடிந்தது. சிரித்தான்! முதலில் சிறு புன்னகையாக இருந்தது பின்னர் சிரிப்பாக மலர்ந்தது! அவளைத் தட்டிக் கொடுத்து ஆறுதல் செய்தான். அவ்வப்போது அவளுக்கு ஆறுதல் கூறி அவளைத் தேற்றுவது தவிரத் தனக்கு வேறு வேலையே அந்த உலகில் இல்லை என்பது போல் நடந்து கொண்டான்.  அவள் மனதில் ஓடிக் கொண்டிருக்கும் எண்ண ஓட்டங்களால் அவளுக்கு ஏற்படும் சிரமங்களை அவன் தெள்ளத் தெளிவாகப் புரிந்து கொண்டான். அடுத்து அவள் செய்யப் போவதற்காகக் காத்திருந்தான்.

Thursday, March 2, 2017

பிரபாவதிக்கு இடப்பட்ட ஆணை!

பிரபாவதியும் பிரத்யும்னனும் அவர்களுக்கெனத் தனியாக அலங்கரிக்கப்பட்டிருந்த அழகான குடிசைக்கு வந்து சேர்ந்தார்கள். அப்போது பிரபாவதி கிட்டத்தட்ட மூர்ச்சித்து விழும் நிலைக்கு வந்திருந்தாள். அவள் மனதில் சந்தோஷமும் இல்லை, அமைதியும் இல்லை. கண்கள் நிறையக் கண்ணீருடனும் கொந்தளிக்கும் மனதுடனும் அங்கே அமர்ந்திருந்தாள்.  பிரத்யும்னனுக்கு அவள் நிலைமை புரிந்தாலும் காரணம் புரியவில்லை. மெல்ல மிருதுவாகத் தன் கைகளை அவள் தோள்களில் வைத்தான்.  இப்போது அவள் தன் மனைவியாகி விட்டாள். ஆகவே அவளை இறுக அணைக்கலாமே! அப்படியே அணைத்துக் கொண்டான். அவளும் தன்னைத் தேற்றுவாரில்லாமல் இந்த ஆறுதலான அணைப்பை மிகவும் விரும்பினாள்.

ஒரு மனைவியாகத் தன் கணவனுக்குச் செய்ய வேண்டிய கடமைகளைக் குறைவின்றிச் செய்தாள்.  அவனுடன் முழுமையாக ஒத்துழைத்தாள். அதன் பின்னர் இருவரும் நிதானமாக அமர்ந்துகொண்டு அப்போது அவர்கள் இருவரும் எதிர்நோக்கி இருக்கும் பிரச்னைகள் நிறைந்த சூழ்நிலையை எப்படி எதிர்கொள்வது எனச் சிந்திக்க ஆரம்பித்தார்கள்.

பிரத்யும்னன் பிரபாவதியிடம் கேட்டான், “என்ன விஷயம் பிரபாவதி? உங்கள் மன்னாதி மன்னரைச் சந்தித்து விட்டு வந்ததும் நீ மிகவும் அதீதமான துக்கத்தில் ஆழ்ந்து போயிருக்கிறாயே!”

“நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று அவர் எதிர்பார்க்கிறார் என்பதை நான் நன்கு புரிந்து கொண்டு விட்டேன்!” என்றாள் பிரபாவதி.

“நாம் மோசமானதொரு சோகமான சூழ்நிலையை எதிர்நோக்கிக் கொண்டிருக்கிறோம்!” என்றான் பிரத்யும்னன்.  பிரபாவதி தன் கணவனையே இமைக்காமல் சற்று நேரம் பார்த்தாள். அவள் கண்களில் நம்பிக்கையும் அவன் மேல் அவள் வைத்திருக்கும் அளவற்ற பாசமும் தெரிந்தன. அவனைப் பார்த்து, “இப்போது நாம் திருமணம் புரிந்து கொண்டு கணவன், மனைவியாக ஆகி விட்டோம். இனி இந்த உலகை நாம் இருவருமாகச் சேர்ந்து எதிர்த்துப் போராடலாம்!” என்றாள்.

பிரத்யும்னன் சொன்னான். “இந்த நிமிஷத்திலிருந்து நாம் நமக்கு அளிக்கப்பட்டிருக்கும் நேரத்தைக் கவனிக்க வேண்டும். உங்கள் மன்னாதி மன்னரால் அளிக்கப்பட்ட அந்த நேரத்துக்குள்ளாக நாம் நமக்குத் தேவையானதைச் சரியானபடி பயன்படுத்திக் கொள்ள வேண்டும். பிரச்னையே உங்கள் மன்னரால் எழுப்பப்பட்டிருக்கும் இந்த மோசமான சூழ்நிலையை ஆபத்தான சூழ்நிலையை எப்படி எதிர்கொள்வது என்பதில் தான் இருக்கிறது!”

சற்று நேரம் நிறுத்திவிட்டு யோசித்த பிரத்யும்னன் மீண்டும் பேசினான். “ இந்த பயங்கரமான சூழலில் இருந்து நாம் தப்பிப்பது கடினம். தப்ப முடியாது. உன்னிடம் தைரியம் இன்னும் அதிகம் வேண்டும் பிரபாவதி! தைரியமாக இரு! அதோடு உனக்கு நன்றாகத் தெரியும். உன் தந்தை உங்கள் மன்னர் மன்னரால் போடப்பட்ட இந்தத் திட்டத்தை ஏற்றுக் கொண்டதோடு நமது இந்தக் கல்யாணமே என்னை அழிப்பதற்கும் என்னோடு சேர்ந்து உன்னையும் அழிப்பதற்கான ஆயுதம் என்பதை நீ அறிய மாட்டாயா?”

“எவ்வளவு மோசமான நிலை நமக்கு! ஒரு வேளை நான் என் தந்தையை வேண்டிக் கேட்டுக் கொள்ளலாமோ! யாதவர்களுடன் போரிட வேண்டாம் எனக் கேட்டுக் கொண்டிருக்கலாமோ!  இப்போது அப்படிக் கேட்கலாமா? அப்போது அவர் என்ன சொல்வார்?”

“இது என்ன சிறுபிள்ளைத் தனமான விளையாட்டா பிரபாவதி? இப்போதைய முக்கியப் பிரச்னையே அவர் என்னை ஏன் இத்தனை அதிகப்பாராட்டுக்களுடன் வரவேற்க வேண்டும்? நம்முடைய இந்தக் கல்யாணத்தை அவர் ஏன் இத்தனை சிறப்பாக நடத்த வேண்டும்? நான் ஏன் இங்கேயே தங்க வேண்டும்? பிரபாவதி, அத்தனையையும் மறந்துவிடுவோம். இப்போது இன்றைய இரவை மட்டும் கவனிப்போம். நீ ஏற்கெனவே சொன்னாய் அல்லவா இந்த இரவு இடிகளையும், மின்னல்களையும் கொண்டு வரப் போகிறது என்றாய் அல்லவா? ஒரு வேளை அது உண்மையாகலாம். ஆனால் நீ ஒன்றை மறக்காதே! நம் வசம் கொடுக்கப்பட்டிருக்கும் நேரம் மிகக் குறைவு!”
மன்னனின் ஆணையைப் பெற்றதிலிருந்தே பிரபாவதி தன் வசத்தில் இல்லை.  சற்று நேரத்துக்கு ஒரு முறை தனக்கு அளிக்கப்பட்டிருந்த அந்த மெல்லிய கருவியை அவள் தொட்டுத் தொட்டுப் பார்த்துக் கொண்டாள். அவள் தன் தலையில் அதை மறைத்து வைத்திருந்தாள். மற்ற தானவப் பெண்களைப் போல அவள் இப்போதும் என்ன நடந்தாலும் தானவ குலத்தின் மரியாதையைக் காப்பாற்றி ஆகவேண்டும். அந்தக் கருவியைச் சரியான நேரத்தில் உபயோகிக்க வேண்டும். அது என்னவாக இருந்தாலும் சரி! ஏற்கெனவே அங்கே பலவிதமான வதந்திகள் உலவிக் கொண்டிருந்தன. ஒரு சில குறிப்பிட்ட தானவ குலப் பெண்களுக்கு மன்னனின் ஆணை பிறப்பிக்கப்பட்டதும் அதை அந்தப் பெண்கள் நிறைவேற்றியதும், ஆனால் அவை எத்தகைய ஆணைகள் என்பது எவரும் அறியாதது என்பதும் அவள் பலமுறை கேள்விப் பட்டிருந்தாள். இப்போது இவளுக்கே அது வந்து விட்டது.

இந்த ஆணை பிறப்பிக்கப்பட்டதின் உண்மையான காரணம் அவள் அறிய மாட்டாள். ஆனால் ஆணை நிறைவேறியாக வேண்டும்! அவளுக்குத் தன் தாயிடம் இதைக் குறித்துக் கேட்கப் பிடிக்கவும் இல்லை. தைரியமும் இல்லை. அவள் தாயிடம் இதைக் குறித்துப் பேச முடியாது! ஆனால் இது ஓர் பேரழிவைத் தான் கொண்டு வரப் போகிறது என்பதை மட்டும் நன்கறிவாள்.  இதை அவள் நிறைவேற்றினால் அவள் சொந்த வாழ்க்கை முற்றிலும் பாழ்பட்டுப் போகும். அவள் வீடு, அவள் கணவன்! அவள் மிகவும் மதித்துப் போற்றி வரும் அன்பு செலுத்தும் அவள் கணவன்! அவன் இல்லாமல் போவான்!

இதை அவளால் முழு மனதுடன் நிறைவேற்ற முடியுமா? அவள் செய்வாளா? அவளிடம் அதற்கான தைரியமும் மன உறுதியும் இருக்கிறதா? ஆனால் அவளால் அதை நிறைவேற்ற முடியாவிட்டால்! அவள் மன்னனின் ஆணைக்குக் கீழ்ப்படியவில்லை எனில்! அடுத்து நடப்பதை அவளால் நினைத்தும் பார்க்க முடியாது! அடுத்த நாளே அவள் தந்தை அவள் மொத்தக் குடும்பம் அனைவரும் மன்னர் மன்னரால் கொல்லப்படுவார்கள். எது பரவாயில்லை? அவள் ஒருத்தியின் வாழ்வா? அனைவரின் சாவா? தன் கணவனை மீண்டும் ஏறெடுத்துப் பார்த்தாள் பிரபாவதி.  அவள் அவ்வாறு பார்க்கும்போதெல்லாம் அவள் தொண்டை அடைத்துக் கொண்டு உணர்ச்சிப் பிரவாகத்தில் மூழ்கிவிடுகிறாள். எத்தனை அழகான இளைஞன்? எவ்வளவு புத்திசாலி!

Saturday, February 25, 2017

ஷால்வனின் சிரிப்பு!

பிரத்யும்னனை அருகில் அழைத்த ஷால்வன் அவனுடைய குத்துவாளைப் பிடுங்கிக் கொண்டான். அந்த வாளால் தன் தோள்பட்டையில் ஒரு கீறலைப் போட்டு ரத்தத்தை வரவழைத்தான். பிரத்யும்னனின் கையிலும் அதே போல் கீறல் போட்டு ரத்தத்தை வரவழைத்தான். பின்னர் இரண்டு பேரின் ரத்தமும் ஒன்றோடு ஒன்று கலக்கும்படியாகக் கைகளைச் சேர்த்து வைத்தான்.  இருவரின் ரத்தமும் ஒன்று கலந்தது. அப்போது அங்கிருந்த உயர் பதவி வகிக்கும் ராணுவ வீரர்களிடமிருந்தும், அதிகாரிகள், அமைச்சர்களிடமிருந்தும் சந்தோஷக் கூச்சல் எழுந்தது.  அந்தச் சப்தம் வெளியே பரவவும் அங்கே வெளியே கூடி இருந்த கூட்டமும் ஆரவாரித்தது.  அந்த சப்தம் ஓய்ந்ததும் பிரத்யும்னன் இதழ்களில் இகழ்ச்சியுடன் கூடிய சிரிப்பு மலர்ந்தது.  திருமண விழா முடிவுக்கு வந்தது.  மறுபடியும் அந்த தானவ வீரர்கள் அனைவரும் ஊர்வலமாகச் செல்லத் தயாராக நின்று கொண்டனர்.

பின்னர் ஒவ்வொருவராக வெளியேறத் தொடங்கும் சமயத்தில் வஜ்ரநபின் வேண்டுகோளுக்கும் அவனுடைய வழிகாட்டுதலுக்கும் ஏற்ப பிரத்யும்னன் ஷால்வன் எதிரே சென்று மண்டியிட்டு அமர்ந்து தன் வணக்கத்தைத் தெரிவிக்கிறான். அப்போது    ஷால்வன் சொன்னான். “வஜ்ரநப்! பிரத்யும்னன் தைரியமும் வீரமும் நிரம்பியதொரு மாவீரன்.  ஆனால் அவனுக்கு நம்முடைய கலாசாரமோ, பழக்கங்களோ தெரியாது. எனினும் அவன் நமக்கு உதவுவான் என்றே நினைக்கிறேன். “ என்றவன் பிரத்யும்னனுக்காகத் திரும்பிக் கொண்டு, “பிரத்யும்னா,  இப்போது நீ உடனே எங்கள் குலதெய்வமும் எவராலும் வெல்ல முடியாதவளுமான உமா தேவியை அவள் கோயிலில் சென்று பார்த்து உன்னுடைய வணக்கங்களையும், பக்தியையும் காட்டி விட்டு வா! “ என்று அனுப்பி வைத்தான்.

அங்குள்ள உயர் பதவி வகித்த அதிகாரிகளின் மனைவிமார்களும் அங்கே கூடித் தங்கள் பல்லக்குகளில் ஏறிக் கொண்டார்கள்.  அவர்கள் அனைவரும் மணமகள் வருவதற்கான சந்தர்ப்பத்தை எதிர்நோக்கி மலையடிவாரத்தில் காத்திருந்தார்கள். இம்முறை அந்தப் பல்லக்கைப் பிரவிசி, பிரபாவதியின் தாய் தலைமை வகித்து எடுத்து வந்தாள். மற்றப் பெண்மணிகள் அவளைக் கால்நடையில் தொடர்ந்து வந்திருந்தனர்.  அவர்கள் நெருங்க நெருங்கப் பெண்களின் பாடல்கள், ஆடல்கள் சப்தம் கேட்டன.  எல்லோரும் கோயிலுக்கு வந்து சேர்ந்தனர்.  அந்தக் கோயிலில் ஒன்பது புனிதமான கற்கள் காணப்பட்டன.  அந்த ஒன்பது கற்களுக்கும் நடுவில் சிவனின் திருவுருவம் காணப்பட்டது. அவரைப் பிரஜாபதியின் ரூபத்தில் அவர்கள் வணங்கி வந்தார்கள்.  அவரே சிருஷ்டிகர்த்தாவாகவும் தெய்விக நங்கை ஆன உமாதேவியின் கணவராகவும் வணங்கப்பட்டார்.

அங்கே வழிபாடுகள் நடந்தன. வழிபாடுகள் முடிந்ததும், மீண்டும் அனைவரும் மன்னனின் கோட்டையை நோக்கிச் சென்றார்கள். அங்கே அரசன் சார்பாக மாபெரும் விருந்து அனைவருக்கும் அளிக்கப்பட்டது.  பிரத்யும்னன் சீற்றம் அடைந்திருந்தான். அவனுக்குள்ளே ஓர் மாபெரும் போராட்டம் நடந்து கொண்டிருந்தது. அந்தக் கோட்டையில்  கடந்த பத்து நாட்களாக அவன் வாழ்ந்த வாழ்க்கையை நினைத்து நினைத்து அவன் வெட்கம் அடைந்தான். அவன் தந்தைக்கு அவன் அளித்த வாக்குறுதியை அவன் முற்றிலும் மறந்து விட்டான். அதை நிறைவேற்றத் தவறிவிட்டான். ஓர் மாபெரும் வெற்றியை அவன் பெறத் தவறி விட்டான். ஒரு சிறிய வெற்றி கூட அவனால் பெற முடியவில்லை. இப்படி ஓர் இழிவான வாழ்க்கையை வாழ்ந்ததற்காக அவன் தன்னையே முற்றிலும் தன் இனத்திலிருந்து விலக்கிக் கொள்ள வேண்டும்.

ஆனாலும் அவனுடைய திட்டங்களின் படி எல்லாம் நடப்பதற்காக அவன் இதைச் செய்தே தீர வேண்டும். ஓர் விசுவாசப் பிரமாணத்தை ஷால்வ மன்னனுக்கு அளிக்க வேண்டும்.  யாதவர்களின் முக்கியமான எதிரியிடம் அவன் இந்த விசுவாசப் பிரமாணத்தைக் கொடுத்தே ஆக வேண்டும். அதற்காகவே அவன் வஜ்ரநபின் மகளை மணக்க நேர்ந்தது. ம்ம்ம், இந்த வஜ்ரநப் தான் துவாரகையை மீண்டும் ஆக்கிரமித்து அவன் தந்தையையும் மற்ற உறவினர்களையும் அடியோடு அழிக்கப் போகிறான்.  அவன் என்ன செய்ய வேண்டும்?

அவன் தன் மனதிற்குள்ளே ஓர் ஆராய்ச்சி செய்தான். அப்போது அவனுக்குப் புலப்பட்டது என்னவென்றால் அவன் விரைவில் இறக்கப் போகிறான். ஆனால் க்ஷத்திரிய தர்மத்தைக் காப்பவனாக ஓர் மாபெரும் வீரனாக இல்லை.  ஆனால் ஒரு கோழையாக அவன் குலத்தையும், அவன் தந்தையையும் ஏமாற்றியவனாகவே இறக்கப் போகிறான்.  அதோடு அவன் “தாய்”க்கும் அவன் உண்மையானவன் இல்லை என்பதைக் காட்டப் போகிறான். அவளுடைய நன்மைக்காகவே அவன் இந்த மாபெரும் ஆபத்தைத் தேர்ந்தெடுத்தான். ஆனால் இந்த இழிந்த நிலைமையிலிருந்தும் மோசமான வாழ்க்கையிலில்ருந்தும் அவன் தப்பவே முடியாது. அது அவனுக்குத் தெரிந்து போய்விட்டது.  இந்த மோசமான வாழ்க்கையில் ஷால்வனால் அவ்வப்போது அளிக்கப்படும் சிறிது காலத்திற்கே ஆன சுதந்திரத்தைத் தான் அவனால் அனுபவிக்க இயலும்.  அவன் ஓர் தானவ குலப் பெண்ணான பிரபாவதியை மணக்க நேரிட்டு விட்டது. இதில் எந்தவிதமான புத்திசாலித்தனமான உணர்வுகளையும் அவனால் காண முடியவில்லை.

ஆனால் பிரபாவதி தைரியம் நிரம்பியவளாகவும் அவனுக்கு ஈடு கொடுப்பவளாகவும் காணப்பட்டாள். ஷால்வனால் அவனைச் சுற்றிப் போடப்படும் எந்த வேலியையும் உடைத்து எறிந்து விட்டு அவனுடன் வரத்தயாராக இருக்கிறாள். ஷால்வன் தன்னுடைய உத்திகளை மாற்றிக் கொண்டது குறித்துப் பிரத்யும்னன் திரும்பத் திரும்ப யோசித்தான். துவாரகையின் மீதும் யாதவர்கள் மீதும் படையெடுப்பை ஏன் நிறுத்தினான்? அந்த நோக்கத்தை ஏன் கைவிட்டான்?  அது தான் பிரத்யும்னனுக்குப் புரியவில்லை.

பிரபாவதியை அவன் மணக்க மறுத்தால் அவள் மனம் உடைந்து போவாள். மேலும் ஷால்வன் பிரத்யும்னனை உயிருடன் விட்டு வைக்க மாட்டான்.  வஜ்ரநபின் தலைமைத் தளபதிப் பதவிக்கும் ஆபத்து நேரிடும். அவன் உயிருக்கே ஆபத்து நேரிடலாம்.  அவன் மட்டும் ஓடிப் போனால் அவனைக் கொல்ல நேரலாம்.  அப்படி இல்லாமல் அவன் தற்கொலை செய்து கொண்டால்? அதிலும் ஓர் ஆபத்து இருக்கிறது! வஜ்ரநபுக்கும் அவன் குடும்பத்துக்கும் இது வாழ்நாள் முழுவதும் ஓர் குற்ற உணர்ச்சியை உண்டாக்கும் என்பதோடு அவர்களுக்குத் தண்டனையும் கிடைக்கும்.  பிரத்யும்னன் மனம் மீண்டும் மீண்டும் எல்லாவற்றையும் அலசி ஆராய்ந்தது. தெய்விகத் தாயான உமையின் கோயிலில் வழிபாடுகள் முடிந்ததும், மணமக்கள் வஜ்ரநபிடம் அழைத்துச் செல்லப்பட்டனர்.  அங்கே தன் படைத் தளபதிகள் புடைசூழ  ஷால்வன் அமர்ந்திருந்தான். இருபக்கமும் சேடிகள் நின்ற வண்ணம் மயிலிறகால் விசிறிக் கொண்டிருந்தனர்.

பிரத்யும்னனைப் பார்த்து ஷால்வன் கேட்டான். “வாசுதேவக் கிருஷ்ணனின் மகனே! நீ மிகவும் புத்திசாலித்தனமான காரியத்தைச் செய்திருக்கிறாய். உன்னுடைய பொல்லாத தகப்பனை அறவே வெறுத்து ஒதுக்கிவிட்டு புத்திசாலித்தனமாக வஜ்ரநபின் மகளைத் திருமணம் செய்து கொண்டாய்.  இப்போது நீ என்ன செய்யப் போகிறாய்?”

“நீங்கள் எனக்கு அளிக்கப் போகும் கடுகளவு சுதந்திரத்தையும் பயன்படுத்திக் கொண்டு வஜ்ரநபின் மகளோடு சந்தோஷமாக வாழப் போகிறேன்.” என்றான் பிரத்யும்னன்.

“வஜ்ரநப், வீரனே! உன்னுடைய மருமகனை நன்கு கவனித்துக் கொள்! கிருஷ்ணனும் அவனைச் சேர்ந்த யாதவர்களும் போரில் நம்மால் ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்களில் நுழைந்து ஆக்கிரமிப்புச் செய்யப் போவதாகக் கேள்விப் பட்டேன். “ என்றவன் சற்றே நிறுத்தி விட்டு மேலும் தொடர்ந்தான். “நாம் எல்லைக்குச் செல்வதற்கு அதிக பட்சமாகப் பத்து நாட்கள் ஆகலாம். அதற்கு மேல் ஆகாது! இதற்கு நடுவில் வஜ்ரநப், நீ, பிரத்யும்னனுக்கு நம் வாழ்க்கை முறையைப் பற்றியும் நாம் எப்படி வாழ்கிறோம் என்பது குறித்தும் சரியான பாடம் கற்பித்து விடு!”

பின்னர் ஷால்வன் தன் கை ஜாடையால் அங்கே குழுமியிருந்த மற்றவர்களை எல்லாம் வெளியேறச் சொன்னான். பின்னர் பிரபாவதியிடம் திரும்பி, “பிரபாவதி, நீ மட்டும் என்னுடன் வா! எனக்கு உன்னிடம் பேச வேண்டும்!” என்றான்.

பிரபாவதி காற்றில் அலைக்கழிக்கப்பட்ட சின்னஞ்சிறு இலை போல நடுங்கினாள். ஷால்வனுக்கு எதிரே நின்று கொண்டு பேசுவதற்கு அவளால் இயலவில்லை. மௌனமாக நின்று கொண்டிருந்தாள். பின்னர் நினைவு வந்தவளாகக் கீழே குனிந்து தரையைத் தொட்டு ஷால்வனை வணங்கினாள்.

அவளைப் பார்த்த ஷால்வன், “நீ ஓர் உண்மையான தானவப் பெண்! பிரத்யும்னனுக்கு விசுவாசமாக இரு! தானவப் பெண்களுடைய பாரம்பரியத்தையும் கலாசாரத்தையும் காப்பாற்றி வா!” என்றான். பிரபாவதிக்கு அவன் என்ன சொல்கிறான் என்பது நன்கு புரிந்து விட்டது. அவளால் வாய் திறக்கவே முடியவில்லை. அவள் தொண்டை அடைத்துக் கொண்டது. மௌனமாகவே நின்றாள். அந்த அறை முழுவதும் ஓர் இறுக்கமான சூழ்நிலையே நிலவியது.  அதைப் பார்த்துக் கொண்டிருந்த ஷால்வன் முகத்தில் திடீரென ஓர் மாறுதல் உண்டாயிற்று. அவன் சிரித்தான். சிரித்தான். சிரித்துக் கொண்டே இருந்தான்.

Thursday, February 23, 2017

பிரபாவதியின் திருமணம்!

பத்து நாட்கள் கழித்து மன்னர் மன்னர் என அழைக்கப்படும் ஷால்வன் பிரத்யும்னனுக்கும் பிரபாவதிக்கும் நடந்த திருமணத்தை முறைப்படி கொண்டாடினான்.  பலருக்கும் இது ஆச்சரியமான நிகழ்வாக இருந்தது. அதிலும் ஆரிய இனத்தின் பிரபலமான வீரனும், யாதவத் தலைவனும் ஆன வாசுதேவக் கிருஷ்ணனின் மூத்த மகன் ஆன பிரத்யும்னனுக்கும் தானவர்கள் அரசின் தலைமைத் தளபதி வஜ்ரநபின் மூத்த மகள் ஆன பிரபாவதிக்கும்  நடந்த இந்தத் திருமணத்தைக் குறித்து அனைவரும் ஆச்சரியப்பட்டார்கள் எனில் அதற்குக் காரணம் இருந்தது. ஏனெனில் ஷால்வனின் நெருங்கிய நண்பன் ஆன ஜராசந்தன், கம்சன் மற்றும் சிசுபாலன் ஆகியோர் வாசுதேவக் கிருஷ்ணனால் கொல்லப்பட்டிருந்தனர்.

ஒவ்வொரு முறையும் ஷால்வன் கிருஷ்ணனை அழிக்க நினைத்தபோதெல்லாம் அவனால் முடியவில்லை. அவனுடைய நட்பு வட்டத்தில் இருந்தவர்கள் அனைவரும் ஒவ்வொருவராகக் கொல்லப்பட்டு வந்தனர். அதிலும் இந்த வாசுதேவக் கிருஷ்ணனிடம் ஏதோ அதிசயமான சக்கரம் ஒன்று சுதர்சனச் சக்கரம் என்னும் பெயரில் இருந்தது. அதை வைத்து அவன் அனைவரையும் கொன்றான்.  அப்படிப் பட்ட கிருஷ்ணனின் மகனுக்கு வஜ்ரநபின் மகள் பிரபாவதியுடன் கல்யாணம்! ஷால்வன் அதைக் கொண்டாடுகிறான்!
திருமண ஊர்வலம் மிகப் பிரமாதமாக நடந்தது. வஜ்ரநபும், பிரத்யும்னனும் அந்த ஊர்வலத்தின் தலைமையில் சென்றனர். பேரிகைகள், எக்காளங்கள், சங்குகள் ஊதப்பட்டன. மத்தளங்கள் அடிக்கப்பட்டன.  கழைக்கூத்தாடிகள் வித்தைகள் காட்டியவண்ணம் ஊர்வலத்தின் முன்னணியில் சென்றனர். அதன் பின்னர் ஒட்டகங்கள் சவாரி வந்தன.  அவர்கள் குலத்தின் முக்கிய வீரர்களும் அதில் கலந்து கொண்டனர். அவர்கள் தங்கள் வாள்களை உயர்த்திப் பிடித்துக் கொண்டு வந்தனர்.  இந்த ஊர்வலத்தில் பெண்கள் அதிகம் கலந்து கொள்ளவில்லை. வஜ்ரநபின் வீட்டுப் பெண்கள் மட்டும் பல்லக்குகளில் ஊர்வலத்தைத் தொடர்ந்து வந்தனர்.

வஜ்ரநபின் மூத்த மனைவியும் பிரபாவதியின் தாயுமான பிரவிசி தன் மகளுடன் ஒரு பல்லக்கில் வந்தாள். அவள் தன் பிரியத்துக்கு உகந்த மகளைப் பிரிவதில் தனக்கிருந்த துக்கத்தை முகத்தில் காட்டிய வண்ணம் அமர்ந்திருந்தாள்.  அரண்மனையின் சபாமண்டபத்தில் ஷால்வன் உதட்டில் ஓர் புன்னகையுடனும், உள்ளத்தில் கொந்தளிப்புடனும் ஊர்வலத்துகாகக் காத்திருந்தான். அங்கிருந்த ஒவ்வொரு தானவனுக்கும் தங்கள் குலத்தின் முக்கியமான எதிரியின் மூத்தமகனைத் தங்கள் குலத்துக்கே மாப்பிள்ளை ஆக்கிக் கொண்டது குறித்து உள்ளுக்குள் மகிழ்ச்சி அடைந்தார்கள். அதோடு இத்தகைய அபூர்வமான விதத்தில் தங்களுக்குக் கிடைத்த இழப்பீடு குறித்தும் மகிழ்ந்தனர்.

ஆனால் ஷால்வன் வஜ்ரநபின் மகளைப் பிரத்யும்னனுக்குத் திருமணம் செய்விக்க நேரிட்டதில் உள்ளூரத் தான் அவமானப் பட்டதாகவே நினைத்தான்.  அதிலும் தன் பரம வைரியான வாசுதேவக் கிருஷ்ணனின் மகனுக்கு அல்லவோ திருமணம் செய்விக்க நேர்ந்திருக்கிறது! இது தான் தோல்வி அடைந்ததுக்கு ஓர் ஒப்புதல் வாக்குமூலமாகவும் ஆகிவிட்டது! மிகவும் மோசமான முறையில் தான் தோல்வி அடைந்து விட்டதை எடுத்துக் காட்டுகிறது!  ஆனாலும் இப்போதைய நிலைமையில் வேறு வழியே இல்லை. வீரர்கள் அனைவரும் நடந்த போரில் கிடைத்த தோல்வியில் மனம் வெறுத்துப் போய் திருப்தியின்றி இருக்கின்றனர். அவர்களைச் சமாதானம் செய்வதெனில் இதைத் தவிர வேறு வழியே இல்லை. இது ஒன்று தான் ஷால்வனால் செய்யக் கூடியது!

ஊர்வலம் சபாமண்டபத்தை வந்தடைந்தது.  அங்குள்ள அனைத்து வீரர்களும் தங்கள் வாள்களை உயர்த்திக் காட்டித் தங்கள் மகிழ்ச்சியைத் தெரிவித்தார்கள். இந்தத் திருமணம் நடந்ததில் தங்கள் குலத்துக்குக் கிடைத்த கௌரவத்தில் மகிழ்ந்தனர்.  வஜ்ரநபும், பிரத்யும்னனும் சபாமண்டபத்துக்குள் நுழைந்தனர்.  இருவரும் மன்னர் மன்னன் ஷால்வனுக்கு எதிரே மண்டியிட்டு அமர்ந்து தரையைத் தொட்டு வணங்கினார்கள்.  கூடவே வந்த மற்ற உயர் அதிகாரிகளான வீரர்களும் அவ்வாறே மன்னனுக்கு வணக்கம் தெரிவித்தனர்.

ஷால்வன் தன்னுடைய முக்கிய எதிரியான கிருஷ்ணனின் மகனுக்கு வஜ்ரநபின் மகளைத் திருமணம் செய்து வைத்தது குறித்துத் தன் மகிழ்ச்சியை ஜாடைகள் மூலம் வஜ்ரநபுக்குத் தெரிய வைத்தான். ஆனாலும் இது உண்மையான மகிழ்வாக வஜ்ரநபுக்குத் தெரியவில்லை.  வலுவில் ஏற்படுத்திக் கொண்டதாகவே இருந்தது.  வஜ்ரநபின் மனமும் வேதனையில் தான் ஆழ்ந்திருந்தது. அங்கிருந்த அனைவருக்கும் மனதில் ஒரு கசப்பான அவமான உணர்வு தலை தூக்கி இருந்தது. இதற்குக் காரணம் ஷால்வன் மட்டுமே என்பதும் அவர்கள் உணர்ந்திருந்தார்கள். ஆனாலும் யாரும் அதை வெளிக்காட்டவில்லை. ஷால்வன் அனைவரையும் வரவேற்றான்.

“உள்ளே வா, வஜ்ரநப், மாவீரனே உள்ளே வா! நமக்கு இது ஓர் முக்கியமான நாளாகும்.  ஏனென்று உனக்குத் தெரியுமே! இதைக் கொண்டாட வேண்டி நான் உனக்கு இந்த மோதிரத்தைப் பரிசளிக்கிறேன்!” என்றான். அதன் பின்னர் அவன் பிரத்யும்னனிடம் திரும்பி, “என்னுடைய வாழ்த்துகள் பிரத்யும்னா! இளம் யாதவனே! எங்கள் குடும்பத்தில் ஒருவனாக நீ ஆகி விட்டாய்!  உன் தந்தை பாவத்திலேயே வாழ்கிறான். அவனை விடு! உனக்கு எங்களிடம் பாராட்டுகளும், அன்பும் மட்டுமே தருகிறோம்!” என்றான்.

சற்று நேரம் மௌனமாக இருந்த ஷால்வன் மேலும் தொடர்ந்தான். “நீ இப்போது மிகவும் உயர்ந்த எங்கள் குலத்தின் மாணிக்கம் போன்றதொரு பெண்ணை மணக்கப் போகிறாய்! எங்கள் அருமைத் தளபதியான காலம் சென்ற வேகாவனின் குடும்பத்தில் ஒருவனாக ஆகப் போகிறாய்! உனக்கு நூறு பிள்ளைகள் பிறக்கப் போகிறார்கள். இவை தான் உன் திருமணத்துக்கு என்னுடைய ஆசிகள். நீ, அந்தப் பிசாசு கிருஷ்ணனின் பிள்ளையாக இருந்தாலும், இனிமேல் இந்தத் திருமணத்தின் மூலம் இந்தக் கோட்டையிலேயே நீ தங்கி இருக்க வேண்டும். எங்கள் பக்கமே நீ இனிப் போராட வேண்டும். எங்கள் எதிரிகள் உன்னுடைய எதிரிகள் ஆவார்கள். எங்கள் ரத்தமும் உங்கள் யாதவ குல ரத்தமும் ஒன்றாகப் போகிறது!” என்று நிறுத்தினான்.

Wednesday, February 22, 2017

வஜ்ரநப் மனம் விட்டுப் பேசுகிறான்!

அதன் பின்னர் சற்று நேரம் மௌனமாக இருந்தவன் தொடர்ந்தான். “ ஒருவேளை பிரத்யும்னன் உன்னைத் திருமணம் செய்து கொள்ள மறுத்தான் எனில் உடனே அவனைக் கொன்று விடுவான். அவன் உன்னைத் திருமணம் செய்து கொண்டால் இந்த இளம் யாதவனை அவன் இங்கேயே ஒரு பிணைக்கைதியாக உன்னுடன் இருத்திக் கொள்வான். இதன் மூலம் யாதவர்களை அவன் பழி வாங்க இயலும்!” என்றான் வஜ்ரநப். அதற்குள்ளாக அவன் கண்களில் இருந்து கண்ணீர் பெருகியது. கண்ணீரைத் துடைத்துக் கொண்ட வஜ்ரநப் தன் தொண்டையைச் சரி செய்து கொண்டான்.  பின் மேலும் தொடர்ந்தான்.

“அவர் உங்கள் இருவரையும் ஒருவரை ஒருவர் திருமணம் செய்து கொண்டு இல்வாழ்க்கையில் ஈடுபடும்படி கட்டாயப் படுத்துகிறார். ஆனால் அதோடு மட்டும் அவர் விடப் போவதில்லை. பிரத்யும்னா, வீரனே! நீ மட்டும் எங்களிடமிருந்து தப்பினாய் எனில் நாங்கள் அனைவரும் எங்கள் மன்னர் மன்னரால் கொல்லப்படுவோம். உனக்கு உதவி செய்ததற்காகவும் இந்தக் கோட்டையிலிருந்து உன்னைத் தப்புவித்ததற்காகவும் மட்டுமில்லாமல் அவருடைய திட்டத்தை நாங்கள் தோற்கடிக்க நேர்ந்ததற்காகவும் சேர்த்துக் கொல்லப் படுவோம். அவருடைய திட்டம் மட்டும் தோல்வி அடைந்தால் அவர் என் கழுத்தை அறுத்து விடுவார். தொண்டையை அறுப்பார்1” என்றான் வஜ்ரநப்.

மிகவும் அவமதிப்பும், இகழ்ச்சியும் கலந்து பார்த்தான் பிரத்யும்னன். “அவர் கட்டளை நம்மை என்ன செய்ய முடியும்? நாங்கள் ஏற்கெனவே ஒருவருக்கொருவர் உறுதிமொழி எடுத்துக் கொண்டு விட்டோம்!” என்றான். வஜ்ரநப் குறுக்கிட்டான். “பிரத்யும்னா, வாசுதேவக் கிருஷ்ணனின் மகனே! உனக்கு நன்றாகத் தெரியும். ஓர் மௌன யுத்தம் யாதவர்களுக்கும் சௌபநாட்டு அரசன் ஷால்வனுக்கும் இடையில் வெகுகாலமாக நடந்து வருகிறது என்பதை நீ அறிய மாட்டாயா?”

“இந்த மௌன யுத்தம் எப்போது ஆரம்பித்தது?” என்று கேட்டான் பிரத்யும்னன்.

“ஓ, அது பல வருடங்கள் ஆகின்றன. காசி தேசத்து இளவரசிகள்  மூவருக்கும் வெகு காலம் முன்னர் ஓர் சுயம்வரம் ஏற்பாடாகி இருந்தது.  அந்த சுயம்வரத்தில் உங்கள் அருமைப் பிதாமகர் பீஷ்மர் இளவரசிகள் மூவரையும் தன்னுடைய பேரனுக்காகக் கடத்திச் சென்று விட்டார். ஆனால் அவர்களில் மூத்தவளான அம்பா எங்கள் மன்னாதி மன்னரான ஷால்வனை மனதாரக் காதலித்து வந்தாள். ஆகவே அவள் பீஷ்மரிடம் குரு வம்சத்து இளவரசனைத் தான் திருமணம் செய்து கொள்ள முடியாது என்று மறுத்தாள். அதன் பேரில் பீஷ்மர் எங்கள் மன்னரிடம் அம்பையைத் திரும்ப அனுப்பித் திருமணம் செய்து கொள்ளச் சொன்னார். ஆனால் எங்கள் மன்னர் வேறொருவனால் கடத்தித் தூக்கிச் செல்லப்பட்ட அம்பையைத் திருமணம் செய்து கொள்ள முடியாது என்று சொல்லி விட்டார்.  அதோடு இல்லாமல் அம்பையை வெல்வதற்காக அவர் பீஷ்மரோடு நடத்திய போரில் பீஷ்மரால் தோற்கடிக்கப்பட்டிருந்தார். அதனாலும் அவமானம் அடைந்து அவர் அம்பையை ஏற்கவில்லை!”

நான் அப்போது மிகவும் இளைஞன். எங்கள் மன்னரோடு போர்க்களத்திற்குச் சென்று அங்கே ஊக்கத்துடனும், உற்சாகத்துடனும் போரில் ஈடுபட்டேன். பீஷ்மரை எதிர்த்துப் போரிட்டேன். ஆகவே என்னுடைய ஊக்கத்தையும் உற்சாகத்தையும் கண்டு தனக்கு இவ்வளவு அருமையாக சேவை செய்து வரும் என்னைத் தனக்குப் பிரியமானவனாக ஆக்கிக் கொண்டார்.”

“அப்படியா? தாத்தா வேகாவன் அவர்களால் இதைக் கட்டுப்படுத்தவே முடியவில்லையா?”

“மாட்சிமை பொருந்திய தந்தை வேகாவன் அவர்கள் ஆரிய வர்த்தம் முழுமையையும் எங்கள் மன்னரின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரவேண்டும் என்னும் எங்கள் மன்னரின் விருப்பத்திற்கு முழு ஆதரவு அளித்தார். அதற்காக ஒத்துழைத்தார். எங்கள் மன்னருக்கு எப்போதுமே ஆரியவர்த்தத்தின் மேலே ஒரு கண் உண்டு. எப்படியேனும் அதைத் தன் குடைக்கீழ் கொண்டு வந்து அரசாள வேண்டும் என்றே நினைத்தார். இது அவருடைய வாழ்க்கை லட்சியமாக வாழ்க்கையின் மாபெரும் கனவாக இருந்து வருகிறது!”

சற்று நேரம் மீண்டும் நிறுத்திய வஜ்ரநப் மீண்டும் தொடர்ந்தான். “எங்கள் மன்னரும் மகதச் சக்கரவர்த்தி ஜராசந்தனும் போட்டுக் கொண்ட ஒப்பந்தப்படி இருவரும் சேர்ந்து ஆரியவர்த்தத்து அரசர்கள் அனைவரையும் அடியோடு அழித்து விடவே எண்ணினார்கள்.  ஏனெனில் இத்தகைய மாபெரும் ஒப்பந்தம் மூலமே ஆரியர்களின் ஆக்கிரமிப்பையும் அடக்குமுறையையும் ஒழிக்கலாம் என எண்ணினார்கள்.”

“எங்களோடு, ஜராசந்தனின் மாப்பிள்ளையான கம்சனும் சேர்ந்து கொண்டான். ஆனால் அவனை யாதவர்களின் பெரும் அன்புக்குப் பாத்திரமான இளைஞன் கிருஷ்ணன், அவன் தானே உன் தந்தை! கொன்று விட்டான். அந்தக் கிருஷ்ணன் ஓர் மாட்டிடையன் தான்! என்னை மன்னித்துக் கொள்! அப்படித் தான் எங்கள் மன்னர் உன் தந்தையைக் குறிப்பிடுவார்.”

“ஜராசந்தனோடு சேர்ந்து எங்கள் மன்னர் உன் தந்தையை கோமந்தகத்திலும் எதிர்த்தார். கிருஷ்ணனும், பலராமனும் அங்கே தான் அடைக்கலம் புகுந்திருந்தார்கள். ஆனால் அவர்கள் தாக்குதல் தோல்வி அடைந்தது. ஜராசந்தனோடு சேர்ந்து எங்கள் மன்னர் ஒவ்வொரு முறையும் போரிட்டார். ஆனால் எல்லாப் போரிலும் அவர்களுக்குத் தோல்வியே கிட்டியது.  ஏனெனில் கிருஷ்ணன் ஆரியர்களை மட்டும் பாதுகாக்கவில்லை. மொத்த க்ஷத்திரிய தர்மத்தையே அரச தர்மத்தையே உலக தர்மத்தையே பாதுகாத்தான். தர்மத்தை ரக்ஷிப்பதற்காகவே பிறந்தவன் என அனைவரும் நம்பினார்கள்!"

“மத்ராவை எங்கள் மன்னர் ஜராசந்தனோடு சேர்த்து எரித்தபோதும் நான் உடனிருந்தேன். ஆனால் உன் தந்தை வாசுதேவக் கிருஷ்ணன் மிகவும் கெட்டிக்காரன். தந்திரக் காரன். தன் மக்கள் அனைவரையும் ஒருவருக்கும் தெரியாமல் அழைத்துக் கொண்டு சௌராஷ்டிரம் நோக்கிச் சென்று விட்டான். மத்ராவில் ஈ, காக்கை கூட இல்லை!”

“அதோடு நிறுத்தவில்லை உன் தந்தை! திரௌபதியின் சுயம்வரத்தில் ஜராசந்தனைப் பின்வாங்கிச் செல்ல வைத்தான். அதன் பின்னர் தன்னிடமிருக்கும் சிறந்த யாதவ வீரர்களோடும் வீரர் தலைவர்களோடும் சேர்ந்து இந்திரப் பிரஸ்தத்தில் யுதிஷ்டிரனால் நடத்தப்பட்ட ராஜசூய யாகத்துக்குச் சென்று விட்டான். ஆகவே எங்கள் மன்னர் இப்போது சௌராஷ்டிரத்தில் கிருஷ்ணன் இல்லாதிருக்கும் இந்த நேரமே அதைத் தாக்கச் சரியான நேரம் என முடிவெடுத்தார்! இதன் மூலம் யாதவர்களை ஒட்டுமொத்தமாக அழிக்க நினைத்தார்!”

“உனக்குத் தான் நன்றாகத் தெரியுமே! துவாரகையில் நடந்த போரில் அரசர்க்கரசர் ஷால்வனை நீ எவ்வாறெல்லாம் எதிர்கொண்டாய்! போர்க்களத்தை விட்டே எங்கள் மன்னரை ஓடும்படி செய்துவிட்டாய்! அதன் மூலம் அவர் தோல்வியை ஒப்புக்கொள்ளச் செய்தாய்!  ஆகவே போர்க்களத்தில் காயம் அடைந்த வீரனான பிரத்யும்னன் ஆகிய உன்னை நாங்கள் உயிருடன் பிடிக்கவேண்டும் அல்லது கொல்ல வேண்டும் என்று முடிவு செய்தோம்.  போரில் உன்னுடைய சகோதரன் சாருதேசனன் கொல்லப்பட்டதோடு இன்னொரு சகோதரன் சாம்பன் பலத்த காயம் அடைந்தான்.”

“எங்கள் தானவ வீரர்கள் போர்க்களத்தை விட்டு அகன்றதும் நாங்கள் அங்கே இறந்து கிடந்த எங்கள் தானவ வீரர்களின் பிணங்களை அகற்றி அப்புறப்படுத்தி எரியூட்டினோம். “ என்ற வஜ்ரநப் தன்நீண்ட பேச்சைச் சற்றே நிறுத்திவிட்டுப் பிரத்யும்னன் தோளில் தட்டிக் கொடுத்தான். “பிரத்யும்னா, நீ எங்கள் மன்னருடன் சரிக்குச் சரியாகப் போர் புரிந்தாய்! நீ மிகவும் தைரியசாலியும் வீரனுமாவாய்!” என்றான்.

“நாங்கள் இங்கே திரும்பி வருவதற்கு முன்னரே நாங்கள் தோல்வி அடைந்த செய்தி எங்கும் பரவி விட்டது! ஆனால் இங்கே தான் எங்கள் மன்னாதி மன்னரால் ரசவாதம் செய்யப்பட்டது. அவர் தான் தோல்வி அடைந்ததாகவே காட்டிக்கொள்ளாமல் ஓர் வெற்றி வீரனாகவே தன்னைக் காட்டிக் கொண்டார். எங்கள் நகரின் எல்லா வீடுகளும் சீரழிந்து கிடந்தன. அவற்றை எல்லாம் சரி செய்து என் மூலம் அவர் தானவ வீரர்களையும் ஒழுங்கு முறைக்குக் கொண்டுவரச் செய்தார்.  என் தந்தை வேகாவன், போரில் இறந்ததோடு அல்லாமல் விவிந்தனும் கொல்லப்பட்டான். எங்கள் மந்திரியான க்ஷேமவிருத்தி போர்க்களத்திலிருந்து ஓடி விட்டார். சாம்பனை எதிர்கொள்ள முடியாமல் அவர் ஓடித் தப்பித்துக் கொண்டார். ஆனால் நான் இத்தனையும் உன்னிடம் சொல்வது சரியா என்றே தெரியவில்லை. இது சரியல்ல என்றே எனக்குத் தோன்றுகிறது.  நடந்தவை அனைத்தையும் சொன்னதோடு அல்லாமல் போர்க்களத்தில் நிகழ்ந்தவற்றையும் சொல்லி விட்டேன். இதனால் நீ சந்தோஷம் அடையப் போவதில்லை! நீ இப்போது இருப்பதை விடவும் மோசமாக வருந்தப் போகிறாய்!” என்றான் வஜ்ரநப்!

Tuesday, February 21, 2017

வஜ்ரநபின் கவலை!

இரண்டு நாட்கள் சென்றதும் வஜ்ரநப் மட்ரிகோவடாவிலிருந்து கொஞ்சம் தாமதமாக வந்து சேர்ந்தான்.  தந்தை வந்ததும் அவர்கள் வழக்கப்படி தந்தைக்கு எதிரே பிரபாவதியும் அவளுடைய இரு சகோதரிகளும் முழங்காலிட்டு வணங்கினார்கள். அவர்கள் முதுகில் தட்டிக் கொடுத்து அதை அங்கீகரித்தான் வஜ்ரநப்! பிரபாவதிக்குத் தன் தந்தையின் மனோநிலை குறித்தும் அது எப்போது எப்படி மாறும் என்பதும் நன்கு தெரியும்.  அவருடைய கொந்தளிக்கும் மனதையும் அதில் ஏற்பட்டிருக்கும் குழப்பங்களையும் அவள் நன்கு புரிந்து கொண்டாள்.  வஜ்ரநப் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டிருந்தான். மன அமைதியின்றித் தவித்தான்.

வஜ்ரநப் வீட்டின் மற்ற உறுப்பினர்களைத் தன் அருகே அழைத்தான். அவர்கள் அனைவரும் அவன் அழைப்புக்கே காத்திருந்தனர். அவன் முதல் மனைவியான பிரவிசியிடம் அவன் கேட்டான். “நம் மரியாதைக்குரிய யாதவ குல விருந்தினர் பிரத்யும்னன் எங்கே?” என்று விசாரித்தான்.

“அவர் தனக்கென ஒதுக்கப்பட்ட வீட்டில் இருக்கிறார்.  உங்களுக்குச் சௌகரியமானபோது உங்களைச் சந்தித்துத் தன் வணக்கங்களையும் நன்றியையும் தெரிவிப்பதாகவும், உங்களைக் கேட்டுக் கொண்டு அதற்கான நேரம் குறிக்கும்படியும் சொல்லி இருக்கிறார்!” என்றாள் அவள்.  சற்று நேரத்தில் ஓர் அடிமை ஊழியன் வஜ்ரநபிடம் வந்து அவனை வணங்கி விட்டு யாதவ குல வீரன் ஆன பிரத்யும்னன் வஜ்ர்நபைச் சந்திக்க வந்திருப்பதாகக் கூறவே வஜ்ரநப் அவனை அங்கே அழைத்து வரும்படி அந்த அடிமையிடம் கூறினான்.

பிரத்யும்னன் வந்து வஜ்ரநபை வணங்கி விட்டு நின்றான். “என்னுடைய ஆசிகள்!” என்று அவனை ஆசீர்வதித்தான் வஜ்ரநப்.  பின்னர் உணர்ச்சி மிகுந்த குரலில், “இங்கே உனக்கு எப்படி பொழுது போகிறது?” என்று கேட்டான்.  பிரபாவதி தன் தகப்பன் மிக முக்கியமான அந்த விஷயத்தைப் பேசுவார் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தாள்.  தந்தை தானாகப் பேசாவிட்டால் தான் பேசலாம் என்பது அவள் எண்ணம். ஆனாலும் அவள் தந்தையின் மேல் வைத்திருந்த மரியாதையானது அந்த விஷயத்தைக் குறித்து அப்போது தந்தையிடம் பேச விடாமல் தடுத்தது.  அதன் பின்னர் அந்தக் குடும்ப நபர்கள் அனைவரும் உணவு உண்ணுவதற்காகச் சென்றார்கள்.  உணவை யாரும் ருசித்துச் சாப்பிடவில்லை. யாருக்கும் உணவு உண்பதில் மகிழ்ச்சி இல்லை. அனைவர் மனதிலும் ஏதோ பெரிய இடி தங்கள் தலையில் விழப் போவதாக ஓர் உணர்வு இருந்தது.

வஜ்ரநபின் மனைவி பிரவிசி அதை வாய் விட்டே கேட்டாள். “என்ன நடக்கப் போகிறது நமக்கெல்லாம்? ஏதேனும் பிரச்னையா? உங்களைப் பார்த்தால் ஏதோ பிரச்னை இருக்கிறாப்போல் தெரிகிறதே! இவ்வளவு மனச்சோர்வுடன் கவலையுடன் கூடிய உங்கள் முகத்தைப் பார்க்கவே முடியவில்லையே!” என்று கேட்டாள்.

“பிரவிசி, நம் மன்னர் மன்னரின் செய்தியை நீ பிரபாவதியிடம் தெரிவித்து விட்டாயா?” என்று கேட்டான் வஜ்ரநப்.  “என்ன,அப்படி ஒரு மாபெரும் பேரிடர் வந்திருக்கிறது? உங்களைப் பார்த்தால் ஏதோ அதிர்ச்சி தரும் செய்தியைக் கேட்டாற்போலிருக்கிறது!” என்றாள் பிரபாவதி தந்தையிடம்.

“அதை வெறும் அதிர்ச்சி என்று சொல்லிவிட முடியாது! என் உணர்வுகளையே மழுங்கச் செய்த ஒரு விஷயம்! பிரமிப்பாக இருக்கிறது.” என்றான் வஜ்ரநப்! “என்ன அது தந்தையே?” என்ற வண்ணம் அடக்கத்துடன் தலை குனிந்து கொண்டாள் பிரபாவதி!

“பிரபாவதி, நீ பிரத்யும்னனை மணக்கச் சம்மதம் தெரிவித்து விட்டாயா?” என்று கேட்டான் வஜ்ரநப்.  “உங்கள் விருப்பம் எங்களுக்குக் கட்டளை!” என்று மறுமொழி சொன்னாள் பிரபாவதி.

“அது ஒன்றும் என்னுடைய சொந்த விருப்பம் இல்லை. நம் மன்னர் மன்னரின் கட்டளை! அதை ஏற்பதை விட வேறு வழியில்லை என் குழந்தாய்!” என்றான் வஜ்ரநப்.  “என்னவென்று விளக்கமாகச் சொல்லுங்கள், பிரபுவே! நாம் இந்த ஆபத்தை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்வோம்!” என்றாள் பிரவிசி!

வஜ்ரநப் தன் தொண்டையைச் சரி செய்து கொண்டு மேலும் பேசினான். “ஓர் மாபெரும் இடி நம் தலையின் மேல் விழப் போகிறது!” இதைச் சொல்கையில் அவன் குரல் அளவற்ற வேதனையில் தழுதழுத்தது.  பிரபாவதிக்குக் கவலை உண்டானது.

“என்ன அது தந்தையே! என்னவென்று சொல்லுங்கள்!” என்றவள் கண்கள் கண்ணீரால் நிரம்பின.  வஜ்ரநப், சிறந்த வீரன் எனப் பெயர் பெற்றவன் அவன் கண்களும் கண்ணீரால் நனைந்தன. “கேள், என் குழந்தாய்! என் தந்தை, மாபெரும் வீரர் ஆன வேகவன் இந்த நாட்டுக்காகவும், அரசருக்காகவும் உயிர் வாழ்ந்தார். அரசருக்காகவே போரிட்டு மரணம் அடைந்தார்.  மன்னர் மன்னருக்கு அது போதவில்லை. நம் அனைவரையும் அவருக்காக இப்போது உயிர்த்தியாகம் செய்யச் சொல்கிறார்.” என்றான் வஜ்ரநப்!

பின்னர் தன்னிடம் விசுவாசம் உள்ள ஓர் அடிமையை அருகில் அழைத்தான். “வெளியே சென்று யாரானும் இங்கே நாங்கள் பேசுவதை ஒட்டுக்கேட்டாலோ, உளவு பார்த்தாலோ அவர்களைத் துரத்தி விடு!” என்றான்.  “அப்படியே பிரபுவே!” என்றான் அந்த அடிமை.  பின்னர் கீழே விழுந்து முழங்காலிட்டுத் தன் எஜமானனை வணங்கி விட்டு அந்த அறையை விட்டு வெளியேறினான். பிரவிசியைப் பார்த்து, “பிரபாவதியின் தாயே! உனக்கிருக்கும் தைரியத்தை எல்லாம் வரவழைத்துக் கொள்வாய்!” என்றான்.

நான்கு பேரும் அதிர்ச்சி கலந்த மௌனத்தில் உறைந்து போனார்கள். வஜ்ரநப் அடுத்து என்ன சொல்லப் போகிறான் என்று காத்துக் கொண்டிருந்தார்கள். வஜ்ரநப் பேசத் தொடங்கினான். “நேற்று நான் மன்னர் மன்னரைச் சந்திக்கச் செல்கையிலேயே ஏதோ ஓர் ஆபத்தான வேலையை ஏவி விடப் போகிறார் என்று அனுமானித்துக் கொண்டே சென்றேன். அதற்கேற்றாற்போல் மன்னர் மன்னர் பிரத்யும்னனைப் பிரபாவதி திருமணம் செய்து கொண்டே ஆகவேண்டும் என்று கட்டளை பிறப்பித்துவிட்டார்.” என்றான்.

“என்னைக் குறித்துக் கவலை வேண்டாம், தந்தையே!” என்றாள் பிரபாவதி!

“இது ஒன்றும் எங்கள் மேலோ அல்லது உன் மேலோ உள்ள அன்பினால் அல்ல, யாதவ இளம் வீரனே! இது எங்களை அடியோடு அழிக்க ஓர் வழி! அவ்வளவே!” என்று பிரத்யும்னனைப் பார்த்துச் சொன்னான் வஜ்ரநப்!

Monday, February 20, 2017

தொடரலாமா? வேண்டாமா?

பலருக்கும் பிரத்யும்னனின் இந்த நடவடிக்கைகள் புதிராகவும், புதிதாகவும்  ஏற்க முடியாமலும் ஜீரணிக்க முடியாமலும் இருக்கலாம். ஆனால் திரு முன்ஷிஜி அவர்கள் இப்படித் தான் எழுதி இருக்கிறார். மேலும் இது இன்னமும் 2 அல்லது 3 அத்தியாயங்களில் முடிந்தும் விடும். அதன் பின்னர் எப்படித் தொடர நினைத்தார் என்பதற்கான குறிப்புகள் இல்லை. ஆனால் நான் தொடர்ந்து எழுதிக் குருக்ஷேத்திரப் போர் மற்றும் அதன் பின் விளைவுகள் குறித்தும் எழுதி நிறைவு செய்யலாம் என நினைக்கிறேன். இது குறித்து அனைவர் கருத்தையும் அறிய விரும்புகிறேன். ஆனால் இத்தனை நாட்கள் எழுதியது வேறு. இனி நான் எழுதப் போவது மஹாபாரதம் மற்றும் பாகவதத்தில் உள்ளவை மட்டுமே! ஆகவே வேறுபாடுகள் நிச்சயமாய்த் தெரியும்.  உங்கள் கருத்தை அறிந்து மேலே தொடருவேன். 

Friday, February 17, 2017

கண்ணன் வருவான், குருக்ஷேத்திரம், பிரத்யும்னனும் பிரபாவதியும்

“நான் உன்னிடம் ஒரு உண்மையை ஒத்துக் கொண்டே ஆகவேண்டும், பிரபாவதி! நீ என்னைப் பற்றிய அனைத்தையும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பது என் விருப்பம். என்னுடைய வாழ்க்கைப் பாதையில் நீ அறியாத பல விஷயங்கள் உண்டு. அவற்றை நீ ஏற்க விரும்புவாயா மாட்டாயா என்பதும் கேள்விக்குறியே! ஆனால் நான் எப்போதும் சொல்லுவது போல் நான் கடவுளரின் விருப்பத்திற்கேற்ப நடக்கும், நடத்தி வைக்கப்படும் ஒரு பொம்மை. அவன் ஆட்டி வைக்கும் பொம்மலாட்டத்துக்கு ஏற்ப ஆடுபவன். என்னுடைய இந்த வாழ்க்கைப்பாதையில் நான் இந்த “அம்மா”வால் ஆட்கொள்ளப்பட்டேன். நான் இன்று என்ன நிலைமையில் இருக்கிறேனோ அப்படி என்னை உருவாக்கியதில் பெரும்பங்கு அவளுக்குத் தான்!” என்றான் பிரத்யும்னன்.

“இன்னும் சொல், உன்னுடைய அந்த அம்மாவைப் பற்றி! எனக்குப் பொறாமையாகத் தான் இருக்கிறது. அவள் எப்படி உன் வாழ்க்கையில் வந்தாள்?”என்று கேட்டாள் பிரபாவதி.

“தானவர்களின் தலைவன் ஷாம்பர் பற்றி நீ கேள்விப் பட்டிருக்கிறாயா பிரபாவதி? தானவர்களின் உலகத்தையே அவன் ஒருவன் அடக்கி ஆள்கிறான். அவன் ஒரு முறை ஓர் அநாதைப் பெண்ணைப் பார்த்தான். அவள் எவரிடமிருந்தும் எந்த உதவியும் கிடைக்காமல் தவித்துக் கொண்டிருந்தாள். அவளைத் தன் இடத்திற்குக் கொண்டு வந்தான் இந்த தானவர் தலைவன். பின்னர் அந்தப் பெண்ணைத் தன் மனைவியாகவே நடத்தவும் ஆரம்பித்தான். அவர்கள் கணவன், மனைவியாக வாழ்ந்தனர்.”

சற்று நிறுத்திய பிரத்யும்னன் தன் தொண்டையைக் கனைத்துச் சரி செய்து கொண்டு மீண்டும் ஆரம்பித்தான்.” அவளுடைய ஆரம்ப நாட்களில் தானவத் தலைவர்கள் அவளை மாற்றி மாற்றிப் பயன்படுத்தினார்கள் என்கின்றனர்.  ஆனால் அவள் வெகு நாட்களுக்குச் சிறுபெண்ணாகவே இருக்கவில்லை. விரைவில் வல்லமையும் சக்தியும் வாய்ந்ததொரு பெண்ணாக மாறிவிட்டாள். அவளுக்கென்று சொந்த வீடு ஏதும் இல்லை. அவளை ஆதரிப்பாரும் யாரும் இல்லை. ஆனால் தானவத் தலைவர்களை நன்கு கவனித்துக் கொண்டாள். ஆகவே விரைவில் அவர்களை அடக்கி ஆளும் சக்தி படைத்தவளாக மாறிப் போனாள்!”

“அப்படியா? அவளைக் குறித்து இன்னமும் சொல்லுங்கள்!” என்றாள் பிரபாவதி! தொடர்ந்த பிரத்யும்னன், “எந்த அளவுக்கு அவள் வல்லமை படைத்தவள் எனில் அவள் வாழ்க்கையில் குறுக்கிடும் எவரும் விரைவில் அவளால் ஆட்கொள்ளப்படுவார்கள். அவர்களையும் சேர்த்து அவள் அடக்கி ஆள ஆரம்பிப்பாள். அவள் ஒரு நாள் ஒரு சின்னஞ்சிறு சிறுவனைப் பார்த்தாள். அவன் கடலோரத்தில் ஒதுங்கி இருந்தான். அவனைத் தன்னுடைய இருப்பிடமாக இருந்த குகைக்கு எடுத்து வந்தாள் அந்தப் பெண்.”

“நீங்கள் தானா அந்தக் குழந்தை?” என்று கேட்டாள் பிரபாவதி!

“ஆம். நான் தான். அவள் என்னை ஒரு தாயைப் போலவே வளர்த்து வந்தாள் முதலில். நாங்கள் இருவரும் ஒரே குகையில் தான் தங்கினோம். உண்டோம். உறங்கினோம். அவள் என்னுடனும் நான் அவளுடனும் வாழ்ந்தோம். பின்னர் என்னில் அவளும், அவளில் நானும் அடைக்கலமானோம். என்னை அவள் சமயோசிதமுள்ள, நம்பிக்கைக்குரிய, அவளின் அன்புக்குரியவனாகப் பார்த்தாள். என்னில் அவள் மகிழ்ச்சியையும் கண்டு கொண்டாள்.”

“கேட்கவே ருசிகரமாக இருக்கிறது!” என்றாள் பிரபாவதி!”நானும் உங்களை என் நம்பிக்கைக்குரியவராக, சமயோசிதமுள்ளவராக, அன்புக்குரியவராகவே பார்க்கிறேன். “ என்ற பிரபாவதி, “தொடர்ந்து சொல்லுங்கள். உங்களைக் குறித்த அனைத்தையும் நான் கேட்டுத் தெரிந்து கொள்ள விரும்புகிறேன்.” என்றாள்.

அவன் பிரபாவதி பக்கம்திரும்பி உட்கார்ந்து தொடர்ந்து பேச ஆரம்பித்தான். “அவள் பலரிடமும் பேசியதிலிருந்தும் பழகியதிலிருந்தும் நான் கிருஷ்ண வாசுதேவனின் மகன் என்பதைப் புரிந்து கொண்டாள். ஆகவே என்னை அவள் க்ஷத்திரிய தர்மத்தைக் காப்பவனாக ஒரு வீரனாக, நல்ல க்ஷத்திரியனாக வளர்க்க எண்ணம் கொண்டாள். இதற்கு தானவத் தலைவர்களிடமிருந்து பயங்கர எதிர்ப்பு வந்தது. ஏனெனில் அந்தச் சிறுவனை அவர்கள் தானவர்களின் தலைவனாக ஆக்க நினைத்தனர். “

சற்று நேரம் நிறுத்தினான் பிரத்யும்னன். பின்னர் தொடர்ந்து, “என் சித்தப்பா உத்தவர் அடிக்கடி என் “தாயை”ப் பார்க்க வருவார். அவருக்குத் தெரிந்தது நான் அங்கே தான் வளர்ந்து வருகிறேன் என்பது. நான் வாசுதேவக் கிருஷ்ணனின் மகன் தான் என்பதையும் ஊர்ஜிதம் செய்ததோடு என்னைப் பெற்றெடுத்த என் உண்மைத் தாய்  விதர்ப்ப நாட்டு இளவரசி ருக்மினி என்றும் சொன்னார். பின்னர் என் சித்தப்பாவும் என்னை வளர்த்த “தாயும்” சேர்ந்து என்னை துவாரகைக்கு இப்போது அனுப்ப வேண்டாம் என்றும் நான் முழுமையாகப் போர் புரிவதிலும் அதே சமயம் சமாதானங்களுக்கான நடவடிக்கைகளிலும் ஈடுபட வேண்டும் என்றும் அவற்றில் சிறந்து விளங்கும்வரை துவாரகைக்கு என்னை அழைத்துச் செல்வதில்லை என்றும் முடிவு செய்தார்கள். என் சித்தப்பா உத்தவருக்கு நான் ஓர் சிறந்த மாணவனாக இருந்தேன். “என் தாயும்” என்னை ஊக்கப்படுத்தினாள். விரைவில் நானும் தாய் மாயாவதியும் எங்கள் உறவில் மாற்றத்தை ஏற்படுத்திக் கொண்டோம். கணவன், மனைவியாக வாழ ஆரம்பித்தோம்.”

“அது எப்படி உங்களால் முடிந்தது?” என்று பிரபாவதி ஆச்சரியத்துடன் கேட்டாள்.

“எங்கள் அவல நிலைமையைக் கொஞ்சம் நினைத்துப் பார் பிரபாவதி!  இங்கே ஓர் இளம்பெண் திருடர்களாலும் கொள்ளைக்காரர்களாலும் இழுத்து வரப்பட்டு அங்கே வாழ்ந்து வருகிறாள். அவள் ஒருத்தியே எனக்கு நினைவு தெரிந்ததில் இருந்து தாயும், தந்தையுமாக இருந்து வருகிறாள்.  அவள் இந்த உலகத்திலேயே மிகவும் விரும்பி அன்பு செலுத்துவது, செலுத்தியது என்னை மட்டுமே! என் வாழ்க்கைக்கு அவள் பொறுப்பு எடுத்துக் கொண்டாள். நாங்கள் எங்களுக்கிடையே சந்தோஷமாகவே வாழ்நாளைக் கழித்து வந்திருக்கிறோம். இந்த விஷயம் தலைவன் ஷாம்பருக்குத் தெரிந்ததும் அவன் என்னைக் கொல்ல நினைத்தான்.  ஆகவே நாங்கள் ஓர் மல்யுத்தப் போட்டியில் ஈடுபட்டோம். அந்தப் போட்டியில் நான் அவனைக் கொன்று விட்டேன்.  இத்தனைக்கும் எனக்கு அப்போது பதினாறு வயது தான் ஆகி இருந்தது.  நீ எப்போதேனும் அவளைச் சந்திக்க நேர்ந்தால் அவள் ஓர் சாதாரணப் பெண்மணி அல்ல என்பதைப் புரிந்து கொள்வாய். அவள் ஓர் பெண் தெய்வம், விதியால் கடுமையாக ஆகிவிட்டப் பெண் தெய்வம்.  அவள் இவ்வுலகிலேயே மிகவும் விரும்புவது என்னை மட்டுமே!” என்றான் பிரத்யும்னன்.

“அவள் இப்போது எங்கே இருப்பாள்? எங்கே இருக்கக் கூடும்?” என்று பிரபாவதி கேட்டாள்.

“எனக்குத் தெரியாது! ஆனால் தேவை இருக்கையில் அவள் எங்கிருந்தேனும் வந்து விடுவாள். அவளை என் தந்தை கிரிநகருக்குப் போகச் சொன்னார். அங்கே யாதவ குலப் பெண்மணிகள் அனைவரும் இருக்கின்றனர். அவர்களோடு சேர்ந்து இருக்கச் சொன்னார். ஆனால் அவள் மறுத்துவிட்டாள்.  அவள் என் தந்தையிடம், பிரத்யும்னன் எங்கே இருக்கிறானோ அங்கேயே நானும் இருப்பேன். வாழ்வானாலும் சரி, சாவென்றாலும் சரி நான் அவனுடனேயே இருப்பேன். என்று சொல்லிவிட்டாள்.” என்றான் பிரத்யும்னன்.

பிரபாவதி கேட்டாள். “அவள் இங்கே எப்படி வருவாள்? அது அவ்வளவு எளிதல்ல. கோட்டைக்குள் நுழைந்து  இந்தப் பகுதிக்கு வந்து உள்ளே நுழைய விரும்புபவர்களை எல்லாம் இங்குள்ள காவல் வீரர்கள் கொன்று விடுவார்கள். “

“அவள் இங்கே வருவாள் என்றே நான் எதிர்பார்க்கிறேன். எனக்கு அவளிடம் அளவற்ற நம்பிக்கை இருக்கிறது. விரைவில் விடிவெள்ளி உதயம் ஆகப் போகிறது. நீ உன் வீட்டிற்குச் சென்று விடு.” என்றான் பிரத்யும்னன். தொடர்ந்து, “உன் தந்தை வந்ததும் சொல். நான் அவருடன் பேச விரும்புகிறேன்.” என்றான்.

“நாம் இன்றைய பொழுதுக்கான கவலையை மட்டும் படுவோம். நாளைய கவலை நாளைக்கு!” என்ற பிரபாவதி பிரத்யும்னனை அணைத்துக் கொண்டாள்.  அப்போது எங்கிருந்தோ ஒரு மயில் அகவும் சப்தம் கேட்டது.  இதை ஒரு நல்ல சகுனமாக எடுத்துக் கொண்ட பிரபாவதி மகிழ்ச்சியில் துள்ளினாள்.  ஆனால் பிரத்யும்னனுக்கு முகம் வெளுத்தது. பிரபாவதியை அணைத்திருந்த கைகளை மெல்ல விலக்கினான். பிரத்யும்னன் அந்த மயிலின் அகவல் குரலுக்கு ஒரு பறவையைப் போல் பதிலுக்குக் குரல் கொடுத்துவிட்டுப் பிரபாவதியைப் பார்த்து, “இது அம்மா!” என்றான்.

Monday, February 13, 2017

கண்ணன் வருவான், எட்டாம் பாகம்! பிரத்யும்னன் ஆலோசனை!

“போகலாம். ஆனால் அடுத்த நாளே என் தந்தையும் மற்றும் உள்ள என் குடும்பத்தவர்கள் அனைவரும் கொல்லப்படுவார்கள்.” என்றாள் பிரபாவதி.

“உன்னை நான் மணக்கவில்லை எனில், நானும் தான் கொல்லப்படுவேன். அதோடு மட்டும் இல்லை. உனக்கு என்ன கதியாகும் என்பதும் எனக்குத் தெரியாது!” என்றான் பிரத்யும்னன்.

“என் அம்மாவுக்குத் தந்தையிடமிருந்து இந்தச் செய்தி வந்ததும் என் அம்மா உடனே என்னிடம் என்ன விஷயம் என்பதைச் சொல்லி விட்டாள். அதோடு இந்தக் கட்டளைக்கு நாம் கீழ்ப்படிந்தே ஆகவேண்டும் என்றும் தெரிவித்தாள்.  என் தந்தையால் உங்களை வற்புறுத்தி என்னை மணக்க வைக்க முடியவில்லை எனில் மன்னர் மன்னர் என் தந்தைக்கு என்ன தண்டனை கொடுப்பாரோ தெரியவில்லை!” என்றாள் பிரபாவதி!

“இந்த வழிமுறையின் மூலம் உங்கள் மன்னாதி மன்னர் யாதவர்களை வெல்வதற்கு ஓர் உபாயம் கண்டு பிடித்திருக்கிறார் என்றே நினைக்கிறேன்.” என்ற பிரத்யும்னன் மேலும் தொடர்ந்து, “என் தந்தையையே நான் ஏமாற்றிஅவருக்கு துரோகம் செய்ய வேண்டும் என்றும் இருக்கும் அனைத்து யாதவர்களையும் மனதைக் கெடுத்து விட வேண்டும் என்றும் உங்கள் அரசர்க்கரசர் நினைக்கிறார் போலும். அது சரி, நீ எப்படி உன் தாயின் பாதுகாப்பிலிருந்து தப்பப் போகிறாய்?”

“இந்தத் தனிமையான இடத்தில் உங்களைச் சந்திப்பதற்கு என் தாயிடம் அனுமதி வாங்குவது கடினமாக இல்லை. எளிதாகவே இருந்தது. நானும் என் தாயிடம் உங்களைத் திருமணம் செய்து கொள்வதற்கான ஏற்பாடுகளின் முதல் படி இது தான் என்று சொல்லி இருக்கிறேன்.  என் தாய் அவளுடைய சேடிப் பெண்களில் எவரையேனும் இங்கே அனுப்பி வைத்து நான் உங்களுடன் என்ன பேசுகிறேன் என்பதைக் கண்காணிக்கக் கூடச் சொல்லி இருக்கலாம். சரி, அதெல்லாம் போகட்டும். இப்போது வெளிப்படையாக உண்மையைச் சொல்லுங்கள்! நீங்கள் என்னை மணந்து கொள்வீர்கள் அல்லவா?”

பிரத்யும்னன் ஒரு நீண்ட பெருமூச்சு விட்டான். ஒரு நிமிடம் யோசித்தான். “ நான் உன்னிடம் ஏற்கெனவே சொல்லி விட்டேன். என் முக்கியக் குறிக்கோளே என் தாத்தாவுக்கு என்ன நடந்தது என்பதைக் கண்டு பிடிப்பது தான். நான் அதற்காகவே இங்கே வந்திருக்கிறேன்.  அதை நான் கண்டுபிடிக்கவில்லை எனில் என் தந்தை என்னை மன்னிக்கவே மாட்டார். உங்கள் மன்னரின் இந்தக் கட்டளையை ஏற்கும் முன்னால் நான் இறந்திருக்கலாமே என்றே அவர் நினைப்பார்.  ஆனால் உண்மையைச் சொல்லப் போனால் என் தந்தையைப் போல் அப்படி எல்லாம் துணிச்சலாக ஒரு முடிவை எடுப்பதற்கு வேண்டிய தைரியமோ தகுதியோ என்னிடம் இல்லை!” என்றான் பிரத்யும்னன்.

சற்று நேரம் மௌனம் நிலவியது. பிரத்யும்னன் மீண்டும் தொடர்ந்தான். “சரி, உன்னுடைய மன்னாதி மன்னரிடம் நம் திருமணத்துக்கான அனுமதியைக் கேட்டு வாங்கு. உன் தந்தையை விட்டு அதை முறைப்படியும் சம்பிரதாயப்படியும் கொண்டாடச் சொல்லலாம். அதன் மூலம் நாம் எப்போது எங்கே சந்திக்க வேண்டுமென்றாலும் நம் விருப்பப்படி சந்திக்கலாம்.”

“ஆஹா! நான் உங்களை அடிக்கடி சந்திக்க விரும்புகிறேன்.  எப்போதெல்லாம் முடியுமோ அப்போதெல்லாம் சந்திக்க விரும்புகிறேன். நீங்கள் வந்ததிலிருந்து உங்களையும் உங்கள் நடவடிக்கைகளையும் மிகவும் ரசித்துப் பாராட்டிப் போற்றி வருகிறேன். வாசுதேவக் கிருஷ்ணனின் குமாரரே! உங்களை அந்த அம்பிகை தான் என்னிடம் அனுப்பி வைத்திருக்க வேண்டும்.”

பிரத்யும்னனிடம் திடீரென ஓர் மாற்றம் தென்பட்டது. அவன் அவளைப் பார்த்துப் புன்னகைத்தான். பின்னர் சொன்னான். “ நாம் ஒரு வேளை திருமணம் செய்து கொண்டால், சரி திருமணம் செய்து கொள்ளவே போகிறோம் எனில், வா, என்னிடம்! நாம் முதலில் இருந்து ஆரம்பிக்கலாம். என்னிடம் வா! எனக்கு என்ன நடந்தாலும் அதிலிருந்து என்னை அந்தக் காதல் கடவுள் காப்பாற்றுவான்.” என்றான்.  அதற்கு பிரபாவதி, “நாம் எப்போதோ திருமணம் செய்து கொண்டுவிட்டோம். என்னை நீங்கள் தொட்டீர்களே அந்த நிமிடமே நம் திருமணம் நடந்து முடிந்து விட்டது! இந்த இனிய இரவு முழுவதும் இனி நம்முடையதே! நான் உங்களிடம் என்ன சொன்னேன்! இரவில் இடியும் மின்னலுமாக இருக்கப் போகிறது என்றேன் அல்லவா?”

“இடியும் மின்னலும்! இந்தக் க்‌ஷ்டங்களிலிருந்து வெளியே வரும் வழியை நாம் பார்ப்போம். ம்ம்ம்ம், “தாய் மாயாவதி” இங்கே இருந்திருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். அவளால் எவ்விதமான கஷ்டமான சூழ்நிலைகளிலும் அதிலிருந்து வெளியேற வழி கண்டுபிடிக்க முடியும்!” என்றான் பிரத்யும்னன்.

நிதானமாகவும், மென்மையாகவும் அதிகம் ஆரவாரமில்லாமலும் ஒரு காட்டுப் பறவையை மென்மையாகக் கையாளுவது போன்ற கவனத்துடனும் அவன் பிரபாவதியுடம் நடந்து கொண்டான்.  பிரபாவதியிடம் தர்மம் என்றால் என்ன என்றும் ஒரு க்ஷத்திரியன் எப்படி க்ஷத்திரிய தர்மத்துக்குக் கட்டுப்பட்டவன் என்பதையும் அவளுக்கும் அது எப்படிப் பொருந்தும் என்பதையும் எடுத்துச் சொன்னான்.  ஆனாலும் அவனுக்குத் தன் மீது அவ்வளவு நம்பிக்கை இல்லை! எனினும் பிரபாவதி மிகவும் ஆவலுடன் அவன் சொல்வதைக் கேட்டுக் கொண்டாள்.

ஆனால் அவன் அந்த விஷயத்தின் முக்கியத்துவத்தைச் சொல்ல ஆரம்பித்தான். அதை அவளுக்கு எப்படி அறிமுகம் செய்வது என யோசித்து யோசித்துத் தன் தந்தையின் தெய்விகத் தன்மையைக் குறித்துச் சொல்ல ஆரம்பித்ததும் அதைப் பிரபாவதியால் நம்பவே முடியவில்லை.  தான் நம்பவே இல்லை என்பதை வெளிப்படையாகவும் சொன்னாள். “ஆஹா! இதை என்னால் நம்ப முடியவில்லையே! எப்படி ஒரு மனிதன் கடவுளாக ஆக முடியும்?” என்று வியப்புடன் கேட்டாள்.

“பிரபாவதி, நீ என்னுடன் துவாரகைக்கு வா! அப்போது நேரில் பார்த்தாயானால் உனக்கே புரியும்.  நீ என் தந்தையை ஒரு கடவுள் என்று நினைப்பதோடு அல்லாமல் அவர் கடவுளே தான் என்பதை ஒத்துக்கொண்டு உணரவும் ஆரம்பிப்பாய்!” என்றான் பிரத்யும்னன்.

“அப்படி எனில் அவர் வானத்தில் பறப்பாரா? என் தந்தையிடம் உள்ளதை விடச் சிறப்பான விமானம் ஏதும் அவரிடம் உள்ளதா?” என்று வினவினாள் பிரபாவதி!

“அதெல்லாம் இல்லை. இவற்றை எல்லாம் விடச் சிறந்தது அவரிடம் உள்ளது. மிகவும் சக்தி வாய்ந்தது.  அதன் மூலம் ஒரு மனிதனின் தீய எண்ணங்களையும் தீய நடத்தைகளையுமே முழுவதுமாக நீக்கி அந்தச் சூழ்நிலையையே சுத்தமானதாகவும் நன்மைதரக் கூடியதாகவும் மாற்றி அமைப்பதைப் பார்க்கலாம். ம்ம்ம்ம், நான் இங்கே வந்ததிலிருந்து நீ ஒரு விஷயத்தைக் கவனித்திருக்க வேண்டுமே! இங்குள்ள அனைவருமே என் தந்தையின் சாகசங்களைக் குறித்தே பேசிக் கொள்வார்களே! அதை நீ கேட்கவில்லையா?” என்று கேட்டான் பிரத்யும்னன்.

“நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என்பதே எனக்குப் புரியவில்லை!” என்றாள் பிரபாவதி.

“உங்கள் மன்னர் மன்னர் என் தந்தையிடம் ஏன் விரோதம் பாராட்டுகிறார் என்பது உனக்குத் தெரியுமா?” என்று கேட்டான் பிரத்யும்னன்.

“தன் வாழ்நாள் முழுவதும் ஒரு மாபெரும் தானவ சாம்ராஜ்யத்தை உருவாக்கும் கனவிலேயே எங்கள் அரசர் இருந்தார்.  தன் சாம்ராஜ்யத்திற்குள் ஆரியவர்த்தம் முழுமையையும் கொண்டு வரும் எண்ணத்திலும் இருந்தார். அதற்கு வாசுதேவக் கிருஷ்ணன் மாபெரும் தடைக்கல்லாக இருப்பதாக அவர் உணர்ந்தார். தன் வழியை அவன் அடைப்பதோடு இல்லாமல் இடையூறாகவும் நிற்கிறான் என்பதையும் உணர்ந்தார். ஆரிய வர்த்தத்தை இதன் பாதிப்பெல்லாம் இல்லாமல் தனித்து நிற்கச் செய்து கொண்டிருந்தார் வாசுதேவக் கிருஷ்ணன். அது எங்கள் அரசருக்குப் பிடிக்கவில்லை. அது சரி, நீங்கள் உங்கள் தாயை அழைத்தீர்களே! அப்படி எனில் அவள் உங்கள் தந்தையைப் போல் மிகவும் சக்தி வாய்ந்தவளா?” என்று கேட்டாள் பிரபாவதி!

Friday, February 10, 2017

கண்ணன் வருவான், எட்டாம் பாகம்! நடு இரவில்!

பிரபாவதிக்கும் சரி, பிரத்யும்னனுக்கும் சரி, தாங்கள் இருவரும் தனித்திருப்பதும், சேர்ந்திருப்பதும் எத்தனை ஆபத்து என்பதை உணர்ந்தே இருந்தார்கள். பிரபாவதி மெல்லக் கிசுகிசுத்தாள். “நீங்கள் உங்கள் குடிசைக்குச் சென்று விடுங்கள். நான் சிறிது நேரம் கழித்து வருகிறேன். நாம் அங்கே விரிவாகப் பேசுவோம்.” என்றாள் பிரபாவதி! இந்த நிகழ்ச்சிகளின் முக்கியத்துவத்தை உணர்வதற்குப் பிரத்யும்னனால் இயலவில்லை. என்ன நடக்கிறது என்பதையே அவன் சிறிதும் புரிந்து கொள்ளவே இல்லை. அவன் இவ்வாறு அங்குமிங்கும் சுற்றிக் கொண்டிருப்பது எந்த ஊழியன் கண்களிலாவது பட்டால் அடுத்த கணமே அவன் உயிர் அவனிடம் இருக்காது. ஆனால் பிரபாவதியின் வேண்டுகோளை மீறுவது அவன் மனதையே உடைத்து விடும் போல் இருக்கிறது. அதையும் மீற முடியாது!

பிரத்யும்னன் அவனுடைய குடிலுக்குச் சென்றுச் சிறிதும் பொறுமையின்றிப் பிரபாவதியின் வரவுக்காகக் காத்திருந்தான்.  அவள் எடுத்திருக்கும் இந்த நடவடிக்கைகள் அவளை மட்டுமின்றித் தன்னையுமே அதிகம் பாதிக்கும் என்பதை அவன் உணர்ந்திருந்தான்.  அவள் எத்தனையோ கடுமையான சூழ்நிலைகளில் வேறு வழியின்றித் தான் இந்த முடிவை எடுத்திருக்கிறாள் என்பதும் அவனுடன் இரவில் இங்கே சந்திக்க ஏற்பாடுகளைச் செய்திருக்கிறாள் என்பதும் அவனுக்குத் தெளிவாகப் புரிந்தது. யோசனையில் இரவு கழிந்துவிடுமோ என நினைக்கையில் நடு இரவுக்குச் சற்று நேரம் கழித்துப் பிரபாவதி அவனுடைய குடிலுக்கு வருவதைப் பார்த்தான். அவள் அருகே வருகையில் அவள் ஏதோ புதியதொரு உணர்வுக்கும், உற்சாகத்துக்கும் ஆளாகி இருக்கிறாள் என்பதைக் கண்டு கொண்டான்.

“இந்த நடு இரவில் நீ உன் வீட்டை விட்டு எப்படி வெளியேற முடிந்தது?” என்று பிரத்யும்னன் அவளிடம் கேட்டான்.  அதற்கு அவ்ள் வாய் மூடிச் சிரித்த வண்ணம், “நீங்கள் எவ்வளவு அற்புதமானவர் என்பதை உங்களிடம் சொல்லச் சரியான நேரத்தை எதிர்பார்த்திருந்தேன்! ஆனால் இந்த முறை அதற்காகவெல்லாம் வரவில்லை. எங்கள் மன்னாதிமன்னரின் விருப்பத்தை நிறைவேற்றவே வந்திருக்கிறேன். அவர் கட்டளைக்குக் கீழ்ப்படிந்தே வந்திருக்கிறேன்.” என்றாள்.

“என்ன? நீ உன் மன்னர் மன்னரின் கட்டளைக்கிணங்க வந்திருக்கிறாயா? உங்கள் உலகத்தில் பல அதிசய நிகழ்வுகள் ஏற்பட்டிருக்கின்றனவே!” என்றான் ஆச்சரியத்துடன்.

“இங்கே எங்களிடம் இம்மாதிரி விசித்திரங்களையும், அதிசயங்களையும் தவிர வேறொன்றும் இல்லை! நான் அவற்றைக் குறித்து நாளை தான் அறிய முடியும். ஆனால் இப்போதைய நேரத்தில் எங்கள் மன்னரின் கட்டளை குறித்துச் சிந்திப்போம். யோசிப்போம்.” என்றாள் பிரபாவதி.  “என்ன கட்டளை? யார் அவ்வளவு தைரியமாகக் கட்டளையை அளித்தது?” என்று கேட்டான் பிரத்யும்னன்.

“இன்னும் பதினைந்து நாட்களுக்குள்ளாக நீங்கள் என்னை மணந்து கொள்ள வேண்டும்.” என்ற பிரபாவதி வெட்கத்துடன் அவனைப் பார்த்தாள். “இந்தக் கட்டளைகள் எல்லாம் அற்புதமானவை. அழகானவை. இந்தக் கட்டளைகளுக்கு நீங்கள் கீழ்ப்படியவில்லை எனில் எங்கள் அரசர்க்கரசரால் தக்க தண்டனை விதிக்கப்படுவீர்கள்!” என்றும் கூறினாள்.

பிரத்யும்னன் ஒரு புன்னகையுடன் கூறினான். “உன் தந்தை இதற்கு ஒப்புக் கொண்டாரா?”
“அவரால் வேறென்ன செய்ய முடியும்? அவரால் சொல்ல முடிந்தது எல்லாம் இது தான்.”மன்னர் மன்னா! உங்கள் கட்டளைக்கிணங்க செய்து முடிப்பேன்!” என்பது மட்டுமே. அதன்படியே செய்வார். அந்த ஒரே ஒரு பதிலைத் தான் அவரால் கொடுக்க முடியும். அவர் அதையே தான் கொடுப்பார்.”

“நான் கொல்லப்படுவேன் என்று அவர் குறிப்பிட்டாரா?” பிரத்யும்னன் கேட்டான். “இல்லை! மாறாக அவர் உங்களை மிகவும் புகழ்ந்து உயர்வாகப் பேசுகிறார். அப்படித் தான் முந்தாநாள் தந்தை சொல்லிக் கொண்டிருந்தார்.”

மேலும் தொடர்ந்த பிரபாவதி, “தானவ குலப் பெண்கள் தங்கள் கணவர், காதலர்கள் ஆகியோரை மடியில் இருத்தித் தூங்க வைத்து விஷத்தைக் கொடுத்து விடுவார்கள்!” என்றாள்.

“ஆஹா, எவ்வளவு மோசமானது இது!  ம்ம்ம்ம், சரி, நேரம் இப்போது இல்லை. மிகக் குறைவான நேரமே இருக்கிறது. என்றாலும் ஆபத்துக்களை நான் மிகவும் சந்தோஷமாக வரவேற்கிறேன். அவற்றை ஓர் புன்சிரிப்போடு எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறேன். இப்போது நம்மைப் பற்றி யோசிப்போம். நாம் ஒருவரை ஒருவர் அணைத்த வண்ணம் ஒரே படுக்கையில் உறங்குவோம். ஆனால் உங்கள் மன்னர் மன்னரின் ஒப்புதல் இல்லாமல் இங்கே வேறேதுவும் நடக்க முடியாது என்பதும் புரிகிறது!” என்றான் பிரத்யும்னன்.

“ம்ம்ம்ம்ம், நான் பதினைந்து நாட்களுக்கு மேலும் வாழ விரும்பினால்……….” பிரபாவதி பிரத்யும்னனை நம்பிக்கையுடன் பார்த்தாள்! “ அப்படி ஆனால், ………… ஒரு வேளை அப்படி நடந்தால்…………………… நீங்கள் என்னைத் திருமணம் செய்து கொள்வீர்களா?” என்று ஆவலுடன் கேட்டாள்.

“ஆகா, நிச்சயமாக! நான் உன்னைத் திருமணம் செய்து கொள்வேன். ஆனால் அதன் மூலம் சந்தோஷம் கிடைக்குமா என்பது கொஞ்சம் கஷ்டம் தான்! சந்தேகமும் கூட! “ என்றான் பிரத்யும்னன்.

“நான் எதிர்பார்க்கும் திருமணம் என்பது எப்படி நடக்குமோ தெரியவில்லை. கட்டாயத்தின் பேரில் நடக்கும் போல் தெரிகிறது.  ஆனால் எங்கிருந்தும் உதவியை எதிர்பார்க்க முடியாது!” என்றாள் பிரபாவதி! “ஆனால் ஒரு விஷயம்! மன்னரின் கட்டளையிலிருந்து நான் தெரிந்து கொண்டது என்னவென்றால் அவருக்கு நான் எப்போதும் இங்கேயே இருந்து உங்களுடன் வசிக்க வேண்டும் என்பதுவே!” என்று தொடர்ந்து கூறினாள் பிரபாவதி.

“ஓ, தயவு செய்து வேறு ஏதேனும் வழி கண்டு பிடியுங்கள்.  பிரபாவதி, நான் மனம் உடைந்து போய்விட்டேன். உன்னைப் பார்த்ததில் இருந்து நம்முடைய திருமணம் ஆட்டம், பாட்டம் கொண்டாட்டங்களுடனும், வாத்திய முழக்கங்களுடனும் நடப்பதை எதிர்பார்த்திருந்தேன்.  இம்மாதிரி ஒரு மோசமான சூழ்நிலையை எதிர்பார்க்கவில்லை. இதிலிருந்து வெளியேற ஒரு வழியைக் கண்டு பிடி! நாம் இங்கிருந்து ஓடிப் போய்விடலாமா?” என்று பிரத்யும்னன் சிரித்த வண்ணம் கேட்டான்.

Wednesday, February 8, 2017

கண்ணன் வருவான், குருக்ஷேத்திரம், உள்ளங்கள் இணைந்தன!

“நான் எப்படித் தங்க முடியும்? என் வாழ்நாள் முழுவதும் நான் இங்கேயே இருக்க முடியுமா என்ன? அது நடவாத ஒன்று. உன்னைக் கல்யாணம் செய்து கொண்டு நான் இந்த மட்ரிகோவடாவிலேயே தங்கினேன் எனில் என் தந்தைக்கு நான் செய்து கொடுத்த சத்தியம் என்ன ஆவது? அந்த வாக்குறுதியை நான் மீறிவிட்டேன் என்றாகி விடும் அல்லவா?” என்றான் பிரத்யும்னன். இரு கைகளையும் விரித்துக் கொண்டு தலையையும் மறுப்பாக அசைத்தான்.  பின்னர் சற்று நேரம் மௌனமாகச் சென்றது. மீண்டும் பிரத்யும்னன், “ஏன்? எங்கள் யாதவ இனமே என்னை வெறுத்து ஒதுக்கி விடும்! அது சரியானதும் கூட! அதோடு மட்டும் இல்லை. மாயாவதி, என் தாய் என்ன நினைப்பார்கள் என்னைக் குறித்து! வாழ்நாள் முழுதும் என்னுடன் இருக்கும் மாயாவதி அவள் என்னுடன் பாடுபட்ட நாட்கள் எல்லாம் வீணாகி விட்டது என்றும் நினைப்பாள். க்ஷத்திரிய தர்மத்தைக் காப்பாற்ற நான் ஓர் கூரிய ஆயுதமாக இருப்பேன் என அவள் எதிர்பார்த்தாள். அந்த நம்பிக்கை அற்றுப் போய்விடும். வெறுத்துப் போய் விடுவாள். என் நிலைமை மிகவும் இரங்கத்தக்கதாகத் துன்பம் நிறைந்ததாக ஆகிவிடும்.” என்றான்.

“ம்ம்ம், உன் தாய் வருந்துவது ஒன்றும் ஆச்சரியமே அல்ல. எல்லாத் தாய்மாரும் தங்கள் குழந்தைகள் தங்களை விட்டுப் பிரிந்தால் துன்புறுவார்கள். எல்லாம் சிலகாலம் மட்டுமே!” என்றாள் பிரபாவதி.

“உன் குடும்பம் வரவிருக்கும் பேரழிவு ஒன்றைக்குறித்து நினைத்துக் கவலையும் பயமும் கொண்டிருக்கிறது. அந்தப் பேரழிவு என்னுடைய எதிர்காலத்துடன் சம்பந்தப் பட்டிருக்கிறது என்பதையும் நான் நிச்சயமாக உணர்வேன்.  ஆனால் உன் குடும்பத்தில் எவரும் அதைக் குறித்து என் முன்னே பேசுவதில்லை. ஒரு வேளை, உன் தந்தை வலிமை மிக்க வஜ்ரநபுக்கு அதைக் குறித்துத் தெரிந்திருக்கலாம். எனக்கு என்ன நடக்கப் போகிறது என்பதை அவர் அறிந்திருக்கலாம். ஆனால் அவர் அதைக் குறித்து என்னுடன் பேசுவதற்குத் தயங்குகிறார். ஏன் என்று தான் தெரியவில்லை!”

“நீங்கள் எப்படி இந்தக் கோட்டையை விட்டு வெளியேறுவீர்கள்? அதுவும் மன்னர் மன்னனின் அனுமதி இல்லாமல் உங்களால் என்ன செய்ய முடியும்?” என்று கேட்டாள் பிரபாவதி!

“அது தான் நானும் அறிய விரும்புகிறேன்.  மேலும் நான் இங்கே வந்ததற்கான காரணமும் பூர்த்தி அடைய வேண்டும். அது நடக்கவில்லை எனில் நான் துவாரகைக்குத் திரும்பிச் செல்ல முடியாது.  ஆனால் இங்கே நடப்பது என்னவெனில் நான் இங்கேயே என் வாழ்நாளைக் கழிப்பதற்காக வந்திருக்கிறேன் என்பது போல் நீங்கள் அனைவரும் நடந்து கொள்கிறீர்கள்!” என்றான் பிரத்யும்னன்.

“ஆஹா! அது மட்டும் நடந்து விட்டால்! நீங்கள் மட்டும் இங்கே தங்கி விட்டால்! என்னை விட சந்தோஷம் அடைபவர்கள் வேறு எவரும் இருக்க மாட்டார்கள்!” என்றாள் பிரபாவதி!

“ஆனால் என்னால் இங்கே வசிக்க முடியாது. என் இடம் இதுவல்ல! நான் எதற்காக இங்கே வந்தேனோ அது நடக்கவில்லை எனில் நான் இறப்பதே மேல்! என் தாத்தாவுக்கு என்ன நடந்தது என்பதை நான் கண்டு பிடிக்க வேண்டும். என் தாத்தா வசுதேவர் உயிருடன் இருக்கிறாரா இல்லையா என்பதைக் கண்டறிய வேண்டும்.  அவர் உங்கள் மன்னாதி மன்னர் ஷால்வனிடம் இன்னமும் கைதியாக இருந்தாரெனில் அவரை எப்படி விடுவிப்பது என்பதைக் குறித்து நான் யோசிக்க வேண்டும். அவரை விடுவிக்க வேண்டும். ஆனால் அதை எவ்விதம் நடத்தப்போகிறேன் என்பது தான் தெரியவில்லை. ஏனெனில் நானுமே இங்கே இந்தக் கோட்டையின் சுவர்களுக்குள் அடைபட்ட ஓர் சிறைக்கைதியாகத் தானே இருக்கிறேன்.”

சிறிது நேரம் மீண்டும் மௌனமாக இருந்த பிரத்யும்னன் மேலும் தொடர்ந்தான். “பிரபாவதி, உனக்குத் தெரியாது! என்னுடைய இந்த வேலையைச் செய்ய முடியாமல், என் தாத்தாவை விடுவிக்காமல் நான் அதில் தோல்வி அடைந்தேன் எனில் அது எப்படி இருக்கும் என்பதை உன்னால் உணர முடியாது!  துவாரகையின் யாதவர்கள் அனைவருக்கும் அது ஓர் நீங்காக் கறையாக ஆகிவிடும்.”

“ஆனால் துவாரகையைத் தான் எரித்தாகி விட்டதே!” என்றாள் பிரபாவதி!

“ஆம், எரித்தீர்கள், எரித்தார்கள். ஆனால் நீ இப்போது பார்க்க வேண்டும் துவாரகையை. அது எப்படி இருக்கிறது என்று. அதற்குப் புத்தம்புதியதொரு சக்தியை என் தந்தை கொண்டு வந்து விட்டார். முன்னை விட மிக நன்றாகப் பரிமளிக்கிறது! ம்ம்ம்ம்ம். நான் என்னை மட்டும் காப்பாற்றிக் கொண்டால் போதாது பிரபாவதி! ஷால்வனின் கைகளில் அகப்பட்டுக்கொண்டிருக்கும் என் தாத்தாவின் தலைவிதியையும் மாற்றியாக வேண்டும்.”

“நீண்ட நாட்களுக்கு முன்னரே அவர் கொல்லப்பட்டிருக்கலாம்!” என்றாள் பிரபாவதி.

“பிரபாவதி! உனக்குத் தெரியுமா? உங்கள் மன்னர் மன்னர் என் தாத்தாவை எவ்விதம் நடத்தினார் என்பது குறித்து நீ ஏதேனும் அறிவாயா? அவர் உயிருடன் இருக்கிறாரா இல்லை இறந்துவிட்டாரா? அப்படி அவர் இறந்துவிட்டால் எப்படி இறந்தார்?”

“ம்ம்ம்ம்ம்… நீங்கள் இப்படிச் சொல்கிறீர்கள். ஆனால் என் தந்தையின் உயிரும் இங்கே ஆபத்தில் தான் இருக்கிறது.  உங்களை அவர் இங்கே அனுப்பி வைத்திருப்பதின் உண்மையான காரணமும் அது தான். என் தந்தையை ஒழிக்க வேண்டும் என்பதற்கு ஓர் காரணம் கற்பிக்க வேண்டுமே! அதனால் தான் உங்களை இங்கே அனுப்பி வைத்திருக்கிறார். அவருக்கு இரண்டு வேலையும் நடந்து விடும். உங்களையும் அழித்துவிடுவார். என் தந்தையையும் அழித்து விடுவார். என் தந்தையையும் அவர் நம்புவதும் இல்லை. அவர் மேல் பிரியமும் வைக்கவில்லை.  உங்களிடமும் எவ்விதமான பற்றும் அவருக்கு இல்லை. உங்களை இங்கே பிணைக்கைதியாகத் தான் அனுப்பி வைத்திருக்கிறார்.” என்றாள் பிரபாவதி.

“எதற்காக என்னைப்பிணைக்கைதியாக்கி இருக்கிறார்?”

“என் தந்தை நினைப்பது என்னவெனில் நான் உங்களைத் திருமணம் செய்து கொள்வதன் மூலம் உங்களை வாழ்நாள் முழுவதும் இங்கேயே தங்க வைக்கலாம் என்பதே! நீங்கள் இங்கே எங்களுடன் தங்கினீர்கள் எனில் என் தந்தைக்கு யாதவர்கள் மேல் ஓர் பிடிப்புக் கிடைக்கும். அவர்களுடன் ஓர் இணைப்பு இருந்து கொண்டே இருக்கும். ஆனால் அதற்கு மாறாக நீங்கள் மட்டும் தப்பிச் சென்று விட்டால் நீங்கள் மட்டுமல்ல எங்கள் மொத்தக் குடும்பமுமே அழிந்து விடும்!”

“ஆஹா, அது சரி! நான் இங்கே சௌக்கியமாக இருந்து வருகிறேன். ஆனால் என் தாத்தா? அவர் மட்டும் இறந்திருந்தார் எனில் நான் அவருக்குச் செய்ய வேண்டிய ஈமச் சடங்குகளை முறைப்படி செய்தாக வேண்டும். அவர் இறக்கவில்லை எனில் நான் எவ்வகையிலேனும் அவரைக் காப்பாற்றி ஆக வேண்டும்!” இதைக் கேட்ட பிரபாவதி கண்களில் கண்ணீருடன் சிறிது நேரம் பிரத்யும்னனையே பார்த்தாள். “நீங்கள் ஏன் என் தந்தையுடன் பேசக் கூடாது?” என்று கேட்டாள். “என் தந்தை மற்றவர்களைப் போல் இல்லை. ரொம்ப அன்பானவர். எங்களிடம் எல்லாம் மிகவும் பாசத்துடன் இருப்பார். கருணையுள்ளவர்.  என் தந்தையும் சரி, தாயும் சரி நீங்கள் என்னைத் திருமணம் செய்து கொண்டால் மிகவும் மகிழ்ச்சியுடன் இருப்பார்கள்.” என்றாள்.

“ஓஹோ! அதனால் தான் என்னை மிகவும் கௌரவத்துடன் நடத்துகிறார்களா? ஒரு வேளை உங்கள் மன்னர் மன்னர் எதிர்பார்க்கலாம். நான் உன்னைத் திருமணம் செய்து கொள்வதன் மூலம் இங்கேயே நான் தங்கிவிடலாம் என்று நினைக்கலாம்.  ஒருவேளை நான் உன்னைத் திருமணம் செய்து கொண்டேன் என்றாலோ உன்னை என் மனைவியை விட அதிகமாக நேசித்தேன் என்றாலோ அப்போது கூட என் தந்தை என்னிடம் வைத்திருக்கும் அன்பையும், நேசத்தையும் என்னால் ஒதுக்கித் தள்ள முடியாது. என் தந்தையின் அன்புக்காக நான் எதையும் செய்வேன்.” என்றான் பிரத்யும்னன்.

“ஓர் நிச்சயமற்ற தன்மை, நிலையற்ற சூழ்நிலை இங்கே தெரிகிறது. எல்லார் முகத்திலும் அது அப்பட்டமாகத் தெரிகிறது.  நீ எப்படியோ என் வாழ்க்கைக்குள் புகுந்து விட்டாய்! ஆனால் இங்கே நம் எவருக்கும் ஓர் நல்ல எதிர்காலம் தெரியவில்லை. பயங்கரமான எதிர்காலமே தெரிகிறது. அதிலும் நீங்கள் அனைவரும் தானவர்கள். யாதவர்களுக்கும் தானவர்களுக்கும் இடையில் என்ன சம்பந்தம் எப்படி ஏற்பட முடியும்?” என்றான் பிரத்யும்னன்.

“நீங்கள் ஏன் எங்கள் மன்னாதி மன்னரை ஓர் கொடுமைக்காரர் என்றெல்லாம் நினைக்க வேண்டும்?” என்று பிரபாவதி கேட்டாள்.

“ம்ஹூம், கொடுமைக்காரர் என்றா சொன்னேன்! அப்படி அல்ல! பல வருடங்களாக யாதவர்கள் மத்ராவில் இருந்த போதிலிருந்தே அவர்களை அழிக்கவேண்டும் என்றே ஷால்வன் நினைத்தார். என் தந்தை வாசுதேவக் கிருஷ்ணனை மட்டுமல்ல. யாதவர்கள் மொத்தப் பேரையும் அழித்துவிடுவதாகச் சபதம் செய்தார்.  இந்த உலகில் யாதவர்களே இருக்கக் கூடாது என்பது அவர் எண்ணமாக இருந்தது. “

இத்தகையப் பெரும் பிளவை அவர்கள் இருவருக்கும் இடையில் இருக்கும் என்பது பிரபாவதி அறியாத ஒன்று. அவனைக் கண்ணீருடன் பார்த்தாள்.  பிரத்யும்னன் தன் கைகளின் ஒன்றை நெற்றியின் மேல் வைத்துக் கொண்டு தன் உள்ளுணர்ச்சிகள் வெளித்தெரியா வண்ணம் மறைத்துக் கொண்டான்.  பிரபாவதி தன் கையால் பிரத்யும்னனின் இன்னொரு கையைப் பற்ற இருவர் கைகளும் தங்களையும் அறியாமல் இணைந்தன.

“கவலைப்படாதீர்கள். எவ்வளவு விரைவில் முடியுமோ அவ்வளவு விரைவில் நான் என் தந்தையிடம் இதைக் குறித்துப் பேசுகிறேன். அவர் இதற்கு ஒரு தீர்வை விரைவில் கண்டு பிடிப்பார்!” என்றாள் பிரபாவதி.  பின்னர் தொடர்ந்து, “அவருக்கு என் மேல் மிகவும் அன்பு உண்டு. நான் உங்களைத் திருமணம் செய்து கொண்டால் அவரை விட சந்தோஷப்படுபவர்கள் வேறு யாரும் இருக்க முடியாது!” என்றாள் பிரபாவதி.

“ம்ம்ம்ம், திருமணம் என்றால் என்ன என்பது அவருக்குப் புரியவில்லையா? ஒருவேளை அதன் தாக்கம் என்ன என்பதை அவர் அறிந்திருக்கவில்லை என்றே நினைக்கிறேன்.  உங்கள் மன்னர் மன்னரே இதற்கு ஒத்துக்கொள்ள மாட்டார். சூழ்ச்சி செய்து உன் தந்தை ஏமாற்றி விட்டதாக நினைப்பார்.” என்றான் பிரத்யும்னன்.

“நாளைய கவலையை நாளைக்குப் பட்டுக் கொள்வோம். எழுந்திருங்கள். மனதைத் தளர விடவேண்டாம்!” என்ற பிரபாவதி தன் கைகளைக் கொடுத்துப் பிரத்யும்னனைத் தூக்கியும் விட்டாள். தன்னையும் அறியாமல் அவளை அணைத்துக் கொண்டான் பிரத்யும்னன்.

“ம்ம்ம் இரவுகளில் எனக்கு ஒரு பெண்ணின் அருகாமை தேவைப்பட்டது தான். அடிக்கடி தோன்றும். ஆனால் இங்கே நீங்கள் அனைவரும் திரும்பத் திரும்ப அனுப்பிய அடிமைப் பெண்களை நான் வேண்டாம் என்றே நிராகரித்தேன். மன்மதனிடம் நான் பிரார்த்தித்துக் கொண்டேன். எனக்கு இப்படி ஓர் துராசை வேண்டாம். பிரபாவதியிடம் கொஞ்சமாவது எனக்கு அன்பு தோன்றினால் அதையும் வளர்த்து விட்டு விடாதே என்றெல்லாம் நினைத்துக் கொண்டேன். ஆனால் அது நடக்காது என்பது எனக்கு எப்போதோ புரிந்து விட்டது!”

“ஆஹா! அதற்காகவெல்லாம் வருந்தாதீர்கள். இந்த இரவு நமக்கானது. நம் இருவருக்கானது. என்னுடன் வாருங்கள். இன்றைய இரவு இடியும் மின்னலுமாக மழையுடன் கூடி இருக்கப் போகிறது என்று நினைக்கிறேன்.” என்ற பிரபாவதி பிரத்யும்னனை அழைத்துக்கொண்டு சென்றாள்.

Sunday, February 5, 2017

கண்ணன் வருவான், குருக்ஷேத்திரம், பிரபாவதியின் வேண்டுகோள்!

அந்தக் கோட்டையில் பிரத்யும்னனின் நாட்கள் கொண்டாட்டங்களில் கழிந்து ஒரு பக்கம் சந்தோஷத்தையும் இன்னொரு பக்கம் ஓயாத வேதனையையும் கொடுத்தது. அவனை விருந்தாளி என்னும் போர்வையில் முட்கள் நிறைந்த ரோஜாக்களினால் ஆன விடுதியில் சிறை வைத்திருந்தான் ஷால்வன்.  அது பிரத்யும்னனுக்கு நன்றாகப் புரிந்தது. பார்க்க மிகவும் அழகாக இருந்தாலும் அது ஓர் சிறைதான். வஜ்ரநபின் குடும்பம் கூட இந்தத் தன்னந்தனியான கோட்டையில் இருப்பதையும் பிரத்யும்னனை அங்கே கொண்டு வந்து வைத்ததும் சிறிதும்விரும்பவில்லை என்பதையும் அதை நினைத்து அவர்கள் வருந்துவதையும் பிரத்யும்னன் நன்கு புரிந்து கொண்டான்.  வஜ்ரநபின் பெரிய பெண் பிரபாவதிக்கு சுமார் 16 வயதிருக்கும். நன்கு செழித்து வளர்ந்திருந்த அவள் தன்னுடைய உடல் அசைவுகள் மூலமும், தன் கவர்ச்சிகள் மூலமும் பிரத்யும்னனை நெருங்க மிகவும் முயற்சிகள் செய்தாள். அவனைத் தனக்குக் கணவனாக ஆக்கிக் கொள்ள வேண்டும் என்று அவள் முயல்வது வெளிப்படையாகத் தெரிந்தது.

பிரபாவதியுடன் தனிமையில் இருப்பதும் ஒரு பக்கம் கவர்ச்சியாகவும் மனதைக் கவரும் வண்ணமும் இருந்தாலும் இன்னொரு பக்கம் மாபெரும் துன்பமாகவும் இருந்தது.  அவள் அருகே இருந்தால் தான் எதற்காக ஷால்வனைத் தேடி வந்தோம் என்பதையே பிரத்யும்னன் மறந்து விடுவான். அதோடு தன் தாத்தா வசுதேவர் குறித்த நினைவும் அவனுக்கு வராது! பிரபாவதியின் இரு தங்கைகள் முறையே எட்டு வயதும், ஐந்து வயதும் ஆன சிறு பெண்கள். அவர்கள் இருவருக்கும் பிரபாவதியும் பிரத்யும்னனும் தனிமையில் இருந்தால் அங்கே சென்று தொந்திரவு செய்ய வேண்டாம் என்று எச்சரிக்கப் பட்டிருப்பார்கள் என்று பிரத்யும்னன் ஊகித்தான். ஏனெனில் அவர்கள் வந்தால் பிரபாவதியுடன் பிரத்யும்னனைப் பார்த்தால் உடனே அவர்களைத் தனிமையில் விட்டு விட்டு வெளியே சென்று விடுவார்கள்.

ஒரு நாள் மதியவேளையில் வஜ்ரநப் அன்றிரவு கோட்டைக்குத் திரும்பப் போவதில்லை என்று செய்தி வந்தது. பிரபாவதியுடன் தனிமையில் இருப்பதைத் தடுத்து வந்த சமயங்களில் எல்லாம் அவனுக்கு அவள் மேல் மோகம் அதிகம் ஆகி வந்தது. ஆனால் அவ்ள் அருகே நெருங்கினால் அந்த மோஹம் காணாமல் போயிற்று. அன்று மாலை உணவுக்குப் பின்னர் பிரபாவதியின் இளைய சகோதரிகள் இருவரும் அவர்களைத் தனிமையில் விட்டு விட்டுச் சென்று விட்டனர்.  அங்கிருந்த இரண்டு அடிமைப் பெண்களைக் கூடக் காணவில்லை. திடீரென மறைந்து விட்டார்கள்.  அவர்களைப் பிரபாவதி தான் தன் ஜாடைகளால் வெளியே அனுப்பி இருக்க வேண்டும் என்று பிரத்யும்னன் ஊகித்தான்.

சற்று நேரம் மௌனத்தில் சென்றது. இருவருக்கும் முதலில் என்ன பேசுவது என்று புரியவே இல்லை. பின்னர் பிரபாவதி அந்த மௌனத்தை உடைத்தாள். “உங்களுக்கு என்னுடன் இருக்கப் பிடிக்கவில்லையா? ஏன் அப்படி? இப்போது சில நாட்களாகவே நீங்கள் மிகவும் துன்பத்துடனேயே காணப்படுகிறீர்கள்.  ஏன் மௌனமாகவும் இருக்கிறீர்கள்?” என்று கேட்டாள். “எனக்கு என்ன பேசுவது என்றே தெரியவில்லை!” என்றான் பிரத்யும்னன்.

“நான் என்ன சொல்ல விரும்புகிறேனோ அதை உங்களிடம் சொல்லவே பெரும் முயற்சிகள் எடுக்கிறேன். ஆனால் நான் அப்படி உங்களிடம் சொல்வது மன்னர் மன்னருக்குப் பிடிக்காது! அவருக்குக் கோபம் வந்து விடும்!” என்றாள் பிரபாவதி!

“ம்ம்ம்ம், வரவிருக்கும் ஏதோ ஓர் ஆபத்தைக் குறித்து நீங்கள் அனைவருமே பயப்படுகிறீர்கள். கவலைப்படுகிறீர்கள்!” என்றான் பிரத்யும்னன்.

“அதெல்லாம் சரி, ஆனால் நான் கேட்பது எல்லாம் உங்களை எது தொந்திரவு செய்கிறது? உங்களுக்கு என்ன மனக்கஷ்டம்?  ஏன் மிகுந்த மன இறுக்கத்தோடு இப்போதெல்லாம் காணப்படுகிறீர்கள்?” என்று புன்னகையுடன் கேட்டாள் பிரபாவதி. “நீங்கள் அனைவரும் ஏன் பயப்படுகிறீர்களோ, எதற்குக் கவலைப்படுகிறீர்களோ அதுவே தான் எனக்கும் காரணம்!” என்றான் பிரத்யும்னன்.

பிரபாவதி மனம் உடைந்து போனாள். “உங்களிடம் எல்லாவற்றையும் சொல்லிக் கொண்டிருக்க முடியாது. எந்த வழியில் நான் திரும்பினாலும் பேரழிவைத் தான் சந்திக்க வேண்டும். வேறு வழியே இல்லை!” என்றவள் கண்கள் கண்ணீரைப்பொழிந்தன. “ம்ம்ம்ம், நாங்கள் அனைவரும் மன்னர் விளையாடும் சதுரங்க விளையாட்டில் ஓர் காய்கள். மன்னர் தான் எங்களை நகர்த்துகிறார். அவருக்கு விரும்பிய இடத்தில் விரும்பிய வண்ணம் எங்களை நகர்த்தி வருகிறார்.” என்றாள்.

“விளையாட்டா? என்ன விளையாட்டு? எனக்கு எதுவும் புரியவில்லையே!” என்றான் பிரத்யும்னன். “நீர் இங்கே ஓர் அரச குடும்பத்து விருந்தாளியாக நடத்தப்படுகிறீர்கள். அல்லவா? அதைவிட வேறென்ன வேண்டும் உங்களுக்கு?” என்று பிரபாவதி கேட்டாள்.

“இதைவிடச் சிறந்த நகைச்சுவை கிடையாது. நான் ஓர் அரச விருந்தாளியாக இங்கே மதிக்கப் படுகிறேன் என்பதென்னமோ உண்மை. ஆனால் நான் சுதந்திரமாக எங்கும் செல்ல முடியாது. தங்கக் கூண்டில் அடைத்த கிளி நான்.  அதை விட என்னை உங்கள் மன்னாதி மன்னர் கொன்றிருந்தால் அதைப் புரிந்து கொண்டிருக்கலாம். “ என்றான் பிரத்யும்னன்.

“எப்போது எங்களிடமிருந்து நீங்கள் செல்வீர்கள்?” என்று கேட்டாள் பிரபாவதி.

“ஆஹா, நான் கேட்க வேண்டிய கேள்வியை நீ கேட்கிறாய்? எனக்கும் இப்போது அது தான் தெரிய வேண்டும். நீங்கள் அனைவருமே என்னை உங்கள் குடும்பத்தில் ஒருவனாகவே நடத்தி வருகிறீர்கள். அதிலும் நீ எப்படி எல்லாம் என்னிடம் நடந்து கொண்டிருக்கிறாய் தெரியுமா? உன் நடத்தைகளின் மூலம் உன் மேல் எனக்கு நல்லெண்ணம் மிகுதியாக ஆகி இருக்கிறது!”

“உங்களை இங்கேயே தக்க வைத்துக்கொள்ள வேண்டுமானால் நாங்கள் அதற்காக என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டாள் பிரபாவதி.

பிரத்யும்னன் ஒரு பெருமூச்சு விட்டான். “அதிகமாய் ஏதும் இல்லை.  இவ்வளவு அன்பான உங்களை விட்டு எல்லாம் பிரிந்து செல்வதை விட எனக்கு மனக்கஷ்டம் வேறில்லை!” என்றான்.

“அப்படி எனில், ஏன் நீங்கள் எங்களுடன் வசிக்கக் கூடாது? என் தந்தையும் தாயும் இதைக் கேட்டால் மிகவும் சந்தோஷப்படுவார்கள். நீங்கள் இங்கே இருக்கிறதாக முடிவெடுத்தால் அவர்கள் மகிழ்ச்சி அடைவார்கள்!” என்றாள் பிரபாவதி!

Saturday, February 4, 2017

கண்ணன் வருவான், குருக்ஷேத்திரம், ஷால்வனின் கோட்டையில்!

“நீ இப்போது இங்கிருந்து செல்லலாம் வஜ்ரநப்!” என்று சொன்ன ஷால்வன் பிரத்யும்னன் பக்கம் திரும்பினான். “ நீ, எங்கள் மரியாதைக்கு உரிய விருந்தாளி! நீயும் இப்போது வஜ்ரநபுடன் செல்!அவனும் அவன் குடும்பத்தாரும் மற்ற எவரையும் விட உன்னை மிக அருமையாய்ப் பார்த்துக் கொள்வார்கள். இல்லையா வஜ்ரநப்?” என்றான் ஷால்வன். “தங்கள் கட்டளைப்படியே மஹாராஜா!” என்று தலை குனிந்து பதில் சொன்னான் வஜ்ரநப். “இன்னும் எவ்வளவு காலம் நான் உன் விருந்தாளியாக இருப்பேன்?” என்று பிரத்யும்னன் ஷால்வனிடம் கேட்டான். “எங்கள் விருந்தோம்பலில் குறை கண்டு அற்பத்தனமாக நாங்கள் மாறும் வரை அல்லது நீங்களாகவே இங்கிருந்து செல்ல விரும்பும் வரை என வைத்துக்கொள்ளலாமே!” என்றான் ஷால்வன். சொல்லிவிட்டுப் பெரிதாகச் சிரிக்க, பிரத்யும்னன் பதிலுக்குத் தன் புன்னகை ஒன்றைப் பரிசாகக் கொடுத்தான்.

பிரத்யும்னனை வஜ்ரநப் தன்னுடைய குடியிருப்புப் பகுதிக்கு அழைத்துச் சென்றான். அங்கே இருந்த விருந்தாளிகளோடு அனைவரும் உணவு உண்டனர். “நம்முடன் மல்லன் பூர்ணாவை அழைத்துச் செல்வோம். மற்றவர்கள் இங்கேயே காத்திருக்கட்டும்.” என்றான் வஜ்ரநப்.  பிரத்யும்னனுக்குத் தான் ஆயுதம் எதுவும் பயன்படுத்தாமலேயே வெல்வதற்கான சந்தர்ப்பம் இப்போது தான் கிட்டி இருப்பதாகத் தோன்றியது.  வஜ்ரநபைப் பார்த்து, “என் உயிர் உன் கையில் இப்போது இருக்கிறது வஜ்ரநப்!” என்று கூறினான்.  மூன்றாம் நாள் விடிகாலையில் அவர்கள் அனைவரும் கோட்டையை நோக்கிப் பயணித்தார்கள்.

வஜ்ரநப் தன்னுடன் ஒரே ஒட்டகத்தில் பயணம் செய்யுமாறு பிரத்யும்னனை அழைத்தான். “என்னுடன் வா இளைஞனே!” என்று அழைத்தான்.  அடிவானத்தில் தூரத்தில் தெரிந்த மூன்று மலைக்கோட்டைகளில் ஒன்றிற்கு பிரத்யும்னனை அழைத்துச் சென்றான் வஜ்ரநப். “நாம் ஏன் அதை நோக்கிப்போகிறோம்?” என்று கேட்டான் பிரத்யும்னன்.

அதற்கு வஜ்ரநப்,”நாங்கள் எல்லோரும் கோட்டைகள் குறித்த தகவல்களை எவருடனும் பகிர்ந்து கொள்ள மாட்டோம் என்று உறுதிமொழி எடுத்திருக்கிறோம். அதோடு நீயே நேரில் பார்த்தாயல்லவா? அப்பயாவுக்கு எப்படிப் பட்ட தண்டனை கிடைத்தது! அவன் இந்தக் கோட்டைகள் குறித்த தகவல்களை இன்னொரு சௌப வீரனுடன் தான் கலந்து ஆலோசித்தான்.  அம்மாதிரி அவன் பேசி இருக்கக் கூடாது. அப்படி எவனாவது பேசினால் அவர்கள் மிகவும் கடினமான தண்டனைக்கு உள்ளாவார்கள்!” என்றான்.  ஆனால் வஜ்ரநபின் மனதில் இந்த இளம் யாதவன் இந்தக் கோட்டையைப் பார்ப்பது இதுவே கடைசித் தடவை என்ற எண்ணம் தோன்றியது.  ஆகவே இவனுடன் இந்தக் கோட்டையைக் குறித்த விஷயங்களையும் இவை எதற்காகக் கட்டப்பட்டது என்பதையும் பகிர்ந்தால் தப்பில்லை என்றே தோன்றியது.

“நடுவில் இருக்கிறதே, அந்தக் கோட்டை தான் மன்னர் மன்னரும் அவர் குடும்பத்தாரும் தங்கும் கோட்டை.  நம்பிக்கைக்கு உகந்த திறமைசாலியான வீரர்களால் அது எந்நேரமும் பாதுகாக்கப்படுகிறது. மன்னர் மன்னன் அனுமதியின்றி அந்தக் கோட்டைக்குள் எவரும் புகுந்து விட முடியாது!” என்றான்.  பின்னர் சற்று நேரம் மௌனமாகச் சென்றது. பின்னர் அவன் தொடர்ந்து, “இடப்பக்கம் இருப்பது தான் பிரபலமான கோட்டை. அந்தக்கோட்டையை என் தந்தை நிர்வகித்து வந்தார். அவர் அப்போது எல்லாப் படைகளுக்கும் தளபதியாக இருந்தார். அங்கேயே வசித்தும் வந்தார். மூன்றாவது கோட்டை, மிகவும் அதிகமாகக் கண்காணிக்கப்பட்டும் பாதுகாக்கப்பட்டும் வருகிறது.  அந்தக் கோட்டையில் தேசத் துரோகிகளாகக் குற்றம் சாட்டப்பட்டவர்களும், அதனால் மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களும் இருக்கிறார்கள்.  இந்தத் தகவல்களை எல்லாம் நான் உனக்கு அளிப்பதால் நீ என்னையும் இப்படி தேசத் துரோகியாக ஆக்கி மரணத்தை எதிர்பார்க்கும்படி செய்து விடமாட்டாய் என்று நம்புகிறேன். அப்பய்யாவின் திடீர் மரணம் எனக்குக் கொடுக்கப்பட்ட ஓர் எச்சரிக்கை ஆகும். உன்னை நான் இந்தக் கோட்டையில் இருந்து தப்ப விட்டேன் எனில் எனக்கும் அதே கதி தான் என்பதை மன்னர் மன்னர் சொல்லாமல் சொல்லி இருக்கிறார். எச்சரித்திருக்கிறார்.” என்றான்.

“இன்னும் கொஞ்சம் தகவல்களை அந்தக் கோட்டையைக் குறித்து நீ சொன்னாய் எனில் உனக்கு இதே மாதிரி தண்டனை தானே கிடைக்கும்? இதை விட அதிகமாகக் கிடைக்கப்போவதில்லையே! அது சரி, எனக்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம்? நான் என்ன அவ்வளவு பெரிய மனிதனா? எனக்குப் புரியவில்லை!”

வஜ்ரநப் மிகச் சிறிய குரலில் குறுக்கிட்டுப் பேசினான். “அதோ அந்தக் கோட்டையின் கதவுகளை நன்றாகப் பார். அவை எவ்வளவு வலுவாக இருக்கின்றன என்பதோடு எப்படிப் பாதுகாக்கப்படுகிறது என்பதையும் கவனி! நீ இங்கிருந்து வெளியேறக் கூடாது என்பதற்கான ஓர் முன்னெச்சரிக்கை அது என்பதைப் புரிந்து கொள்!” என்றான். பின்னர் அவன் மௌனத்தில் ஆழ்ந்தான்.  பிரத்யும்னனுக்கு வஜ்ரநபுக்கு மன்னன் ஷால்வன் தன்னைப் பாதுகாக்கும் பொறுப்பை அளித்தது பிடிக்கவில்லை என்றும் அதை அவன் உள்ளூர வெறுக்கிறான் என்பதும் புரிந்தது.  அவர்கள் தளபதியின் கோட்டைக்கு அருகே வந்ததும் அங்கே காவலுக்கு இருந்த வீரர்களில் பத்துப் பேர் முன்னே வந்தனர். அவர்கள் பூரண ஆயுதம் தரித்திருந்தார்கள். அருகே வந்தவர்கள் வஜ்ரநபைப் பார்த்ததும் வணக்கம் செலுத்தினார்கள்.

வஜ்ரநப் அவர்களை அழைத்துக்கொண்டு கோட்டையின் நிலா முற்றத்துக்குச் சென்றான். அப்போது அங்கே சில இளம்பெண்களின் கலீர் என்ற சிரிப்புச் சப்தம் கேட்டது. அந்தப் பெண்கள் கோட்டையின் மேல் தளத்தில் நின்று கொண்டு சிரித்துக் கொண்டிருந்தார்கள்.  அவர்கள் வஜ்ரநபின் பெண்கள் என்பது அவன் அவர்களை அங்கே அழைத்த போது புரிந்தது. பிரத்யும்னனுக்குத் தன் பெண்களை அவன் அறிமுகம் செய்து வைத்தான். அவர்கள் வஜ்ரநபுக்கும் பிரத்யும்னனுக்கும் வரவேற்புக்கூறி வணக்கம் தெரிவித்தனர். அவர்களில் யாருமே இன்று வரை ஒரு யாதவனை நேரில் பார்த்ததில்லை என்பதோடு இத்தனை அழகான வாலிபனையும் கண்டது இல்லை. அங்கிருந்து வஜ்ரநப் அவனை அங்கிருந்து கோட்டையின் மறுபக்கத்துக்கு அருகிலிருந்த ஒரு அழகான குடிலுக்கு அழைத்துச் சென்றான். பிரத்யேகமான விருந்தாளிகளுக்கென அது கட்டப்பட்டிருக்க வேண்டும் என்பதைப் பிரத்யும்னன் புரிந்து கொண்டான்.

Friday, February 3, 2017

கண்ணன் வருவான், குருக்ஷேத்திரம், சபையில் கொடூரம்!

சால்வன் மிகப் பெரிய தர்மசங்கடமான நிலையில் இருந்தான். சௌராஷ்டிரத்தில் இருந்து திரும்பியதில் இருந்து ஷால்வன் தன்னுடைய அணுகுமுறை மூலமும் பேச்சுக்கள் மூலமும் தன் நாட்டு மக்கள் மனதில் தான் சௌராஷ்டிரத்தில் இருந்து மிகப் பெரிய வெற்றியுடன் வந்திருப்பதாக நிரூபிக்க விரும்பினான். அதற்காக மிகவும் முயன்றான். உண்மையில் அவன் மிகவும் மன அழுத்தத்துடனேயே இருந்தான். மனம் வெறுத்துப் போயிருந்தான். சௌராஷ்டிரத்துடன் தொடர்ந்த போரில் துவாரகையில் அவனுடைய நம்பிக்கைக்கு உகந்த மூன்று தளபதிகளை அவன் இழந்து விட்டான். அவர்களில் வேகவன் மிகவும் நம்பிக்கைக்கு உரியவன் என்பதோடு எவரோடும் போட்டி போட மிக வல்லவன். விவிந்தன் என்னும் தானவ வீரன் மிகவும் பிரபலமானவன். அடுத்தவன் க்ஷேமவிருத்தி என்னும் அவன் மந்திரி! இம்மூவரையும் இழந்ததில் ஷால்வனுக்குத் தன் உடலின் ஒரு பாகமே இழந்து விட்டாற்போல் இருந்தது.

வெற்றி அடைவதற்கு முன்னரே அவனே அந்தப் போர்க்களத்தில் இருந்து திரும்ப வேண்டி வந்தது. அது மட்டுமல்ல மிகவும் அவமானமான சூழ்நிலையில் அல்லவோ அவன் திரும்ப வேண்டி வந்தது! அவசரம் அவசரமாக மேலும் அவமானம் ஏற்படும் முன்னர் திரும்பி விட்டான். அவனுடைய மொத்தப் படைகளுக்கும் தலைவனாக வேகவன் தான் இருந்தான். அவனுக்கு அடுத்து இப்போது அவன் மகன். வஜ்ரநப்! ஷால்வனின் படை வீரர்களுக்குத் தலைவனாக இருப்பதோடல்லாமல் அவர்களுக்கு இப்போது மிச்சம் இருப்பதை எல்லாம் அவன் தான் கவனித்துக் கொண்டிருந்தான்.  ஷால்வனுக்கு வஜ்ரநபிடம் கொஞ்சம் நம்பிக்கை இருந்தாலும் அவன் தகுதியில்லாதவன் என்றோ அல்லது விசுவாசமில்லாதவன் என்றோ சொல்வதற்கு எந்தவிதமான முகாந்திரமும் இல்லை. அவன் எவ்விதமான சூழ்ச்சியோ கிளர்ச்சியோ செய்ததாகத் தெரியவில்லை. அப்படி நடந்திருந்தால் அதில் பங்கெடுத்ததற்கான அறிகுறிகளும் இல்லை.

ஷால்வன் வஜ்ரநபைத் தன்னருகே அழைத்தான். ஷால்வனின் அருகே வந்த வஜ்ரநப் முறையான மரியாதைகளை மன்னனுக்குத் தெரிவித்தான். அவனைப் பார்த்து ஷால்வன், “வஜ்ரநப், நான் உன்னிடம் எல்லாவிதமான அதிகாரங்களையும் கொடுத்து இருக்கிறேன். உன் தந்தை எனக்கு எப்படி அருமையானவராக இருந்தாரோ அதே போல் நீயும் எனக்கு அருமையானவன். நெருக்கமானவன்.” என்றான். “உங்கள் கட்டளைக்குக் கீழ்ப்படிகிறேன், அரசே!” என்று வணக்கத்துடன் கூறினான் வஜ்ரநப்.

“ஆம், அதனால் தான் நான் உன்னையே மிகவும் நம்பி இருக்கிறேன். படைவீரர்களையும் உன்னை நம்பி ஒப்புவித்திருக்கிறேன். நமக்கு எதிரிகள் இருக்கின்றனர். அவர்களை நாம் தக்கபடி கவனிக்க வேண்டும். கவனிக்க வேண்டிய விதத்தில் கவனிக்க வேண்டும்.” என்றான் ஷால்வன்.  அதன் பின்னர் அவன் மீண்டும் வஜ்ரநபைப் பார்த்துச் சொன்னான். “ நீ பிரத்யும்னனுக்கு விருந்தோம்ப வேண்டும்.  இந்தக் கோட்டையே உன்னிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. உன்னுடைய குடும்பத்தை அங்கே மாற்றச் சொல்லிக் கட்டளைகள் ஏற்கெனவே பிறப்பிக்கப்பட்டுள்ளது!” என்றான் ஷால்வன். வஜ்ரநப் ஷால்வனுக்கு வணக்கம் தெரிவித்தான். “தங்கள் கட்டளைப்படியே பிரபு!” என்றான்.

“அவனுக்கு நன்றாக உணவளி! விருந்துகளைக் கொடு! இங்கே உள்ள பெண்களிலேயே சிறந்தவளை அவனுக்கு தாசியாக்கு!” என்றான். பின்னர் தன் கைகளைத் தட்டிவிட்டுக் கத்தினான். “”அப்பயா! இங்கே வா!” என்றான். அப்பயாவின் அருகே அமர்ந்திருந்த இரண்டு வீரர்கள் அவனைப் பிடித்து மன்னர் மன்னன் ஷால்வனின் எதிரே கொண்டு வந்து நிறுத்தினார்கள். அவன் தலைப்பாகையும் உடைவாளும் அவனிடமிருந்து எடுக்கப்பட்டு அவன் கைகள் பின்னால் கட்டப்பட்டுக் காணப்பட்டது.  ஷால்வனின் முகம் இறுக்கம் அடைந்தது. அவன் சீறினான். “எனக்கு விசுவாசமாக இல்லாதவர்களை நான் சிறிதும் சகித்துக் கொள்ள மாட்டேன். என்னால் பொறுக்க இயலாது. உனக்கு அது நன்றாகத் தெரியும். அல்லவா?” என்று கேட்டான்.

அந்தக் கைதி தனக்குத் தெரியும் என்பதாகத் தலையை ஆட்டினான். “அப்படித் தெரிந்திருந்தும் நீ அரசர்களின் கோட்டையைக் குறித்த தகவல்களை உன் நண்பர்களிடம் சொல்லிக் கொண்டிருக்கிறாய்!” என்றான் ஷால்வன் கடுமையாக. அப்பயா பயந்து விட்டான். நடுங்கிப் போனான். அவன் முழந்தாள்கள் மடிந்தன. அவனால் நிற்கக் கூட முடியவில்லை. ஷால்வனின் முகம் முற்றிலும் மாறியது. அவனை இப்போது பார்த்தால் ஓர் கோபம் கொண்ட புலியைப் போல் காணப்பட்டான். அப்பயாவை பார்த்து, “வா, இங்கே! உன் தலையைக் குனிந்து கொள்!” என்று கர்ஜித்தான்.

அப்பயா மிகவும் சிரமப்பட்டுத் தன்னை மன்னன் அருகே கொண்டு போனான்.  அவன் உடலைப் பின்னால் இழுத்துக் கொண்டு தலையை மன்னன் அருகே மிகவும் சிரமத்துடன் கொண்டு போனான். ஆனால் ஷால்வனோ கண் மூடித் திறக்கும் நேரத்துக்குள்ளாகத் தன் உடைவாளை உருவி அப்பயாவின் கழுத்தருகே கொண்டு சென்று விட்டான்.  ஒரே வெட்டு. அப்பயாவின் தலை அவன் உடலிலிருந்து தனியே வந்து கீழே உருண்டது. அவன் உடல் துடிதுடித்துக் கீழே சாய்ந்தது. ரத்த வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இப்போது ஷால்வன் வெற்றிப் புன்னகையுடன் பிரத்யும்னன் பக்கம் திரும்பினான். “எப்படி? நான் ஓர் நல்ல அரசனா? நான் வெறும் அரசன் மட்டுமல்ல! எனக்கு விசுவாசமாக இல்லாத மனிதர்களை எவ்வாறு நடத்த வேண்டும் என்பதையும் நான் நன்கறிந்திருக்கிறேன். “ பின்னர் வஜ்ரநபிடம் திரும்பி, “நினைவு வைத்துக்கொள் வஜ்ரநப்! இதனால் தான் நான் மன்னர் மன்னன். அரசர்க்கரசன்! இதை மனதில் வைத்துக்கொள்! என் சபையில் விசுவாசமாக இருப்பவர்கள் மதிக்கப்படுவார்கள். அவர்களுக்கு விரும்பியது விரும்பியவண்ணம் நடக்கும். எனக்கு விசுவாசமில்லாதவர்களுக்கு இது தான் நேரிடும்!” என்றான் ஷால்வன்.

ஷால்வன் தன் சிம்மாசனத்தில் இருந்து எழுந்திருக்க, அனைவரும் அவனைத் தொடர்ந்து எழுந்தார்கள்.  தன் வாளை உயரத் தூக்கித் தன் வீரர்கள் அனைவரிடமும் காட்டினான். அங்கிருந்த அனைவருக்கும் ஷால்வன் மாபெரும் வெற்றி ஒன்றைச் சந்தித்து விட்டாற்போல் தோன்றியது. அந்த சபாமண்டபமே அந்த வெற்றியைக் கொண்டாடுவதில் முனைந்தது.

Wednesday, February 1, 2017

கண்ணன் வருவான், எட்டாம் பாகம், குருக்ஷேத்திரம்! ஷால்வன் சபையில்!

மறுநாள் காலை ஓர் அடிமை வந்து பிரத்யும்னனும் மற்றவர்களுக்கும் குளிக்க ஏற்பாடுகள் செய்து வைத்துப் பின்னர்  பிரத்யும்னனுக்கு விலை உயர்ந்த ஒரு சால்வையை மன்னன் பரிசாக அனுப்பியதாகக் கொடுத்துச் சென்றான்.  அன்றைய தினமும் மன்னன் அழைக்கவில்லை. மறுநாள் காலை பிரத்யும்னன் எழுந்திருக்கையிலேயே அந்தக் கறுத்த பெரிய உடல் படைத்த அடிமை அவன் கட்டிலருகே முழங்காலிட்டு அமர்ந்து கொண்டிருந்தான்.  இன்னொரு அடிமை நுழைவாயில் கதவருகே நின்றிருந்தான்.  அவன் உள்ளே அருகே வந்து தலை குனிந்து வணக்கம் சொல்லிவிட்டு, “ பிரபுவே, தாங்கள் இந்த அடிமையைத் தொடர்ந்து வர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். உங்களை இந்த அடிமை அரசனின் அறைக்கு மன்னாதி மன்னனைச் சந்திக்க அழைத்துச் செல்கிறேன். உங்களை இன்று ராஜசபைக்கு அழைத்து வரும்படி மன்னாதி மன்னரின் கட்டளை!” என்றான்.

பிரத்யும்னன் தன்னுடன் வந்தவர்கள் அனைவரையும் தயாராகச் சொன்னான்.  மதிய நேரம். சூரியன் ஒளிவீசிப் பிரகாசித்துக் கொண்டிருந்தது. அவர்களுடன் வந்திருந்த மல்லன் பூர்ணா பிரத்யும்னன் அரசனைச் சந்திக்கப் போவதால் நல்ல உடை அணியத் தயார் செய்து கொடுத்து உதவினான். பிரத்யும்னன் தன் தோழர்களையும் அழைப்பதைக் கண்ட அந்த அடிமை மெதுவாக அதற்கு ஆக்ஷேபம் தெரிவித்தான். மிகப்பணிவுடனேயே அவன் அதை மறுத்தான். “என்னை மன்னியுங்கள், பிரபுவே!நீங்கள் மட்டும் தான் வரலாம். உங்களை மட்டும் அழைத்து வரும்படி எனக்குக் கட்டளை!” என்றான்.

அப்போது மல்லன் பூர்ணா பிரத்யும்னனிடம், “எதுவும் நடக்காது, குழந்தாய்! கவலைப்படாதே! அப்படி நம்மை ஏதாவது செய்ய வேண்டும் என்று அவர்கள் நினைத்திருந்தால் நம்மை இவ்வளவு மரியாதையுடனும் கௌரவமாகவும் பாலைவனத்தைத் தாண்டி அழைத்து வந்திருக்க மாட்டார்கள்.   ஏதோ குழப்பம் நேர்ந்திருக்கிறது என நினைக்கிறேன். ம்ம்ம்ம், இப்போது இந்தத் தலைவன் யார் என்பது எனக்குப் புரிந்து விட்டது. இவனை நான் ஏற்கெனவே பார்த்திருக்கிறேன். ஆனால் எங்கே என்று சொல்ல முடியாது. முடியவில்லை. வெகு விரைவில் நாம் இங்கே வந்திருப்பதின் உண்மையான அர்த்தத்தைப் புரிந்து கொள்வோம். இந்தப் புதிர் விரைவில் விடுபடும்!” என்றான்.

பிரத்யும்னன் அந்த அடிமையுடன் கூடச் சென்றான். அவன் ராஜசபைக்கு அவனை அழைத்துச் சென்றான். ஒரு சிறிய அளவிலான உயரம் குறைவானதொரு மேடையில் புலித்தோலால் மூடப்பட்டிருந்த அறைக்கு அவர்கள் சென்றார்கள்.  அந்த மேடைக்குப் பின்னால் சில சேவகர்கள் அசையாமல் நின்று கொண்டிருந்தனர். அவர்கள் கைகளில் உருவிய வாளுடன் காணப்பட்டனர்.  அங்கே பலர் அமர்ந்திருக்கையில் ஓர் மனிதன் மட்டும் கால் மேல் கால் போட்டுக் கொண்டு கம்பீரமாக அமர்ந்திருந்தான். மிக ஆடம்பரமாக உடை அணிந்து அமர்ந்திருந்த அவன் மேல் அனைவர் கண்களும் மொய்த்திருந்தன.  சுமார் ஐம்பது வயதிருக்கும் அவன் உட்கார்ந்திருக்கும் நிலையிலேயே மிகுந்த ஆகிருதியுடனும் அந்தஸ்து புலப்படும்படியும் காணப்பட்டான். பிரத்யும்னனுக்கு அவனைப் பார்த்ததுமே இவன் தான் தான் தேடி வந்த ஷால்வ மன்னன் என்பது புலப்பட்டது. இவன் தான் சௌராஷ்டிரத்தின் மேல் படை எடுத்து வந்தவன் என்பதும் புலப்பட்டது.  அவன் மிகவும் கர்வத்துடனும் வீரமாகவும் கம்பீரமாகவும் அவனுக்கு எதிரே நின்றான்.  இதழ்களில் மெல்லிய புன்னகை இழையோட நின்ற பிரத்யும்னனுக்குத் தான் யார் என்பதை ஷால்வனும் புரிந்து கொண்டு விட்டான் என்பது தெரிந்தது.

பிரத்யும்னனை ஓர் புன்சிரிப்புடன் பார்த்த ஷால்வன் அவனருகே இருந்த ஓர் இருக்கையைக் காட்டி அமரச் சொன்னான். பின்னர், “நீ இந்த மன்னாதி மன்னனின் ராஜசபைக்கு வரவேற்கப்படுகிறாய்! உனக்கு நல்வரவு!  இங்கே வா, இளைஞனே! இப்படி என்னருகே வந்து அமர்ந்து கொள்! பயப்படாதே!” என்றான். பிரத்யும்னன் சிறு பிள்ளை போல் சிரித்தான். அவனால் இதை நம்பவே முடியவில்லை. “மன்னாதி மன்னரே, நீங்கள் சொல்லி இருந்தால் நானே இங்கே வந்திருப்பேனே! ம்ம்ம் நீங்கள் மன்னாதி மன்னர் தான் என்றால், அதுவும் க்ஷத்திரிய தர்மத்தைக் கடைப்பிடிப்பவராகவும் இருந்து விட்டால், நீங்கள் என்னுடன் மல்யுத்தம் நேருக்கு நேர் செய்ய வேண்டும்!” என்றான்.

“ஆஹா, இப்போது எனக்கு நினைவுக்கு வருகிறது. நீ யார் என்பதைப் புரிந்து கொண்டு விட்டேன். நீ அந்த இளம் யாதவன், என்னால் அழிக்கப்பட்டிருக்க வேண்டியவன், ஆனால் உன்னை நான் விட்டு வைத்தேன்! உன்னை நான் நன்கறிவேன். இளைஞனே! நீ துவாரகையில் மிகவும் தீரத்துடன் என்னுடன் போரிட்டாய்! எனக்கு உன்னுடன் நேருக்கு நேர் எந்தச் சண்டையும் இல்லை! உன்னுடன் எனக்கு எந்தப் பகையும் இல்லை! உன் தந்தையுடன் தான் எனக்குப் பகை! அவனுடன் தான் நான் சண்டை இட வேண்டும்!” என்றான்.

“பின்னர் என்னை ஏன் பிடித்து வந்திருக்கிறீர்கள் அரசர்க்கரசே! என்னுடைய சிநேகிதத்தை விரும்பியா? அல்லது வேறு ஏதானும் காரணமா?” என்று கேட்டான் பிரத்யும்னன். அவனைப் பார்த்து இழிவாகச் சிரித்தான் ஷால்வன். “நாங்கள் விருந்தோம்புதலில் சிறந்தவர்கள். எங்கள் கடமை அது! அதிலிருந்து பின்வாங்க மாட்டோம்!” என்றான். பின்னர் அவன் ஆணையின் பேரில் அங்கே ஓர் அடிமைப்பெண் வந்தாள். அவளுடன் கூடவே பாடகர்கள் சிலரும் வந்தனர். “இவள் மிக அற்புதமான பெண்!” என்றான் ஷால்வன். அந்தப் பெண் கனவில் ஆடுவது போல் ஆடினாலும் அதில் சிற்றின்ப உணர்வைத் தூண்டும் விதமாகவே அசைவுகள் காணப்பட்டன. தன்னுடைய முகத்திரையை முதலில் அவிழ்த்த அவள் பின்னர் ஒவ்வொரு ஆடையாக அவிழ்த்துவிட்டுக் கடைசியில் ஓர் சிலையைப் போல் அசையாமல் நின்றாள்.

ஷால்வன் பிரத்யும்னன் பால் சாய்ந்தவண்ணம் கேட்டான். “எப்படி? இந்தப் பெண்? கவர்ச்சியாக இருக்கிறாள் அல்லவா? உனக்குப் பிடித்திருக்கிறதா?” என்று கேட்டான். பிரத்யும்னன் அதற்கு, “உண்மையில் இவள் அழகி தான்!” என்றான்.

“நான் இவளை சந்தோஷமாக உனக்கே அளிக்கிறேன். இவள் பழகுவதற்கு மிகவும் இனிமையானவள், பண்பானவள். ஒத்துப் போவாள். கீழ்ப்படியும் சுபாவம் உண்டு.  கலைகளில் தேர்ந்தவள்!” என்றான். அதற்குப் பிரத்யும்னன், “மன்னாதி மன்னருக்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.  ஆனால் இந்தப் பரிசு எனக்குச் சிறிதும் பயன்படாத ஒன்று.  நான் திருமணம் செய்து கொண்ட என் மனைவியைத் தவிர்த்து மற்ற எந்தப் பெண்ணையும் தொட மாட்டேன் என்று சபதம் செய்திருக்கிறேன்.  நான் க்ஷத்திரிய தர்மத்தைக் கடைப்பிடிக்க வேண்டி எடுத்த சபதங்களில் இது மிகவும் முக்கியமான ஒன்று!” என்றான் பிரத்யும்னன்.  ஷால்வன் அதற்கு மறுமொழி சொல்லாமல் தன் தலை அசைவால் அந்தப் பெண்ணை அங்கிருந்து போகச் சொன்னான். அந்தப் பெண்ணும் தன் துணிகளைச் சுருட்டி எடுத்துக் கொண்டு தன்னுடன் வந்த பாடகர்கள் பின் தொடர அங்கிருந்து சென்றாள்.