Sunday, August 29, 2010

கண்ணன் வருவான், கதை சொல்லுவான் 2-ம் பாகம்!

புநர்தத்தனும், உத்தவனும்!

கிணற்றுக்குள் தள்ளப்பட்ட உத்தவன், சற்று நேரத்திலேயே அது கிணறு அல்ல, ஒரு குகை என்றும் பாதாளத்தில் போய்ப் பின்னர் மேலே செல்கிறது என்றும் புரிந்து கொண்டான். ஆனால் அவனால் எழுந்து நிற்க முடியவில்லை. தவழ்ந்தே செல்லவேண்டி இருந்தது. இன்னும் சற்று நேரம் தவழ்ந்து சென்ற உத்தவன் சிறிது நேரத்தில் எங்கிருந்தோ வெளிச்சம் வருவதைக் கண்டான். அந்த வெளிச்சம் சற்றேக் கீழே இறங்கிச் செல்லும் ஒரு வழியைக் காட்டியதையும் பார்த்து அதன் வழியே சென்றான். அந்தப்பாதையில் இருந்து வெளியே வந்த உத்தவன் ஒரு சமவெளிக்குத் தான் வந்திருப்பதையும், இரு பக்கமும் நீண்ட பெரிய கற் சுவர்களால் அது இரண்டு பக்கமும் மூடப் பட்டிருப்பதையும் கண்டான். திகைப்போடு சுற்றிச் சுற்றிப் பார்த்துக்கொண்டிருந்த அவன் சற்று நேரத்தில் ஒரு பள்ளத்தில் காலை வைத்தான். அந்தப் பள்ளம் அவனைக் கொண்டு சென்ற இடத்தைப் பார்த்தால் நரகம் என்பது இதுதானோ என்னும்படிக்குத் தோற்றியது. அங்கே வயது முதிர்ந்த பல ரிஷிகளும், முனிவர்களும் அமர்ந்து கொண்டு தங்கள் நித்தியக் கர்மானுஷ்டான்ங்களைச் செய்வதைப் பார்த்தான். சற்றுத் தூரத்தில் ஒரு ஊற்று ஒன்றில் இருந்து நீர் பொங்கிக் கொண்டிருந்தது. அதன் அருகே அமர்ந்த வண்ணம் சூரியனுக்கு அன்று கொடுக்கவேண்டிய அர்க்யத்தைக் கொடுத்துக் கொண்டிருந்தனர். உத்தவன் அவர்கள் அருகே சென்று கீழே விழுந்து வணங்கினான். பேசாமல் தங்கள் தலையை மட்டுமே ஆட்டி அவனுக்கு நல்வரவையும், ஆசிகளையும் தெரிவித்த அவர்களின் உடலில் எலும்புக் கூடு மட்டுமே தென்பட்டதையும் கிள்ளி எடுக்க்க் கூட சதை இல்லாமல் இளைத்துப் போயிருப்பதையும் கண்டான். அதே சமயம் அவர்கள் புத்தியிலும், விவேகத்திலும், ஞாநத்திலும் சிறந்து விளங்கினார்கள் என்பதையும், அதன் காரணமாக எவருக்கும் அடிமையாகும் எண்ணமே இல்லாமல் இருப்பதையும் கண்டு உணர்ந்து கொண்டான்.
“உத்தவா!’ பழக்கப்ப்பட்ட குரலோசை கேட்கவே உத்தவன் திரும்பிப் பார்த்தான். அங்கே நின்று கொண்டிருந்தது அவர்கள் குரு சாந்தீபனியின் ஒரே மகன் புநர்தத்தனே ஆகும். தூக்கிவாரிப் போட்டது உத்தவனுக்கு. “புநர்தத்தா, நீ எங்கே இப்படி?” என்று ஆச்சரியத்தோடு கேட்டான். ஒரு முதிய ரிஷியைக் காட்டிய புநர்த்த்தன் , “இவர் என்னுடைய தாய்வழிப் பாட்டனார்! “ என்றான். “விஷயத்தைச் சொல் புநர்தத்தா! நீ எப்படி இங்கு வந்து சேர்ந்தாய்?” என்று கேட்டான் உத்தவன். அதற்கு புநர்தத்தன், “முதலில் இந்த ஸ்ரீகாலவனின் கதையைக் கேள் உத்தவா!” என்று சொல்லிவிட்டுக் கூற ஆரம்பித்தான்.

“வாசுதேவனைத் தங்கள் குடும்பக் குலதெய்வமாக வழிபட்டு வந்த பல குடும்பங்கள் அந்நாட்களில் உண்டு. எல்லாக் குடும்பங்களுமே மஹாதேவரை வழிபாடு செய்தது இல்லை. சில குடும்பங்களில் வாசுதேவ வழிபாடும் உண்டு. அப்படிப்பட்ட வழிபாட்டு வம்சத்தில் காலவ ரிஷி என்பவர் இருந்தார். அவரைக் குருவாக வரித்துக்கொண்ட சில யாதவத் தலைவர்கள் தங்களுக்கெனத் தனியாக ராஜ்யம் அமைக்கவேண்டிக் கரவீரபுரம் வந்தனர். வரும்போது தங்களுடன் குரு காலவரையும் அழைத்து வந்தனர். காலவரின் போதனையால் அனைவருக்கும் வாசுதேவன் ஒருவனே பரம்பொருள் என்பதாக ஒரு கருத்து அமைந்தது. காலவரிஷியின் செல்வாக்கு அதிகரித்து வந்தது. அரசகுடும்பத்தினரோடு நெருங்கிய பழக்கமும் ஏற்பட்டது. அப்போது கரவீரபுரத்தின் மன்னனுக்கு ஒரு பிள்ளை பிறந்திருந்தது. அந்தக் குழந்தைக்கு காலவரிஷியின் பெயரால் ஸ்ரீகாலவலா என்று பெயர் வைக்கப் பட்டது. பையன் வளர்ந்தான். கூடவே வாசுதேவக் குடும்பத்தின் அங்கமாகவும் ஆனான். வயது முதிர்ந்த காலவரிஷியும் இளவரசன் பட்டத்துக்கு வரும் நேரம் மரணம் அடைந்தார்.
இதற்கெனக் காத்திருந்தாற்போல் ஸ்ரீகாலவன் அப்போது தான் அரியணை ஏறியவன் காலவரிஷியின் ஆசிரமத்தை முற்றிலும் அழித்தான். வாசுதேவக் குடும்பத்தின் தலைவன் அவனே என அறிவித்துக்கொண்டான். தன் பெயர் இனி ஸ்ரீகாலவ வாசுதேவன் எனவும், அவனே பரம்பொருள் எனவும், சாட்சாத் அந்த மஹாவிஷ்ணுவின் சொரூபமே தான் தான் எனவும், தன்னையே அனைவரும் வணங்கவேண்டும் எனவும் உத்தரவிட்டான். இந்தப் பூவுலகை ஒரு குடைக்கீழ் ஆள்வதற்கெனவே தான் விண்ணிலிருந்து மண்ணுக்கு வந்திருப்பதாயும் பிரசாரம் செய்தான். அவனுடைய தண்டனைக்குப் பயந்தும், அவன் கொடுத்த அளவற்ற செல்வத்தின் மீது ஆசை கொண்டும் மக்கள் கொஞ்சம் கொஞ்சமாய் அவன் பக்கம் பேச ஆரம்பித்தனர். அக்கம்பக்கம் உள்ள நாடுகளை எல்லாம் வென்ற அவன் தன்னைத் தானே, மஹாவிஷ்ணுவின் உருவே மனித உருவில் மண்ணுக்கு வந்திருப்பதாய்ச் சொல்லிக் கொண்டான். திரும்பத் திரும்பப்பிரசாரம் செய்து மக்கள் மனதைத் தன் பக்கம் திருப்பினான். அவனைத் தவிர வேறு எவரையும் யாரும் வணங்கக் கூடாது எனவும் உத்தரவு பிறப்பித்தான். பலவிதமான தந்திரங்கள் செய்தும், மக்களை மிரட்டியும் தன் பக்கம் சேர்த்ததால், மக்கள் அவனைக் குள்ளநரி எனவும் அழைத்தனர்.
சாதாரண மக்களைத் தன் பக்கம் அவனால் எளிதாய்த் திருப்ப முடிந்த்து. ஆனால் படித்துக் கற்றறிந்த பெரியோர் பலரும், ஆசாரியர்களும், மற்றக் குருமார்களும் அவனைக் கடவுள் என ஒப்புக் கொள்ள மறுத்தனர். ஒரு அரசனுக்குரிய மரியாதையும், உபசாரங்களையும் தரலாமே தவிர இவன் ஒருவனே கடவுள் என வணங்க மாட்டோம் எனத் திட்டவட்டமாய்த் தெரிவித்தனர். அப்படி மறுத்தவர்களில் ஒருவர் தான் ருத்ராசாரியார் எனப்படும் இந்தக் கிழவர். புநர்த்த்தனின் தாய்வழிப் பாட்டனார். அவரைப் பின் பற்றிப் பல ஆசாரியர்களும் குருமார்களும் ஸ்ரீகாலவனை எதிர்த்தனர். இதைக் கண்ட ஸ்ரீகாலவன் முதலில் ருத்ராசாரியாருக்கு ஆதரவு தெரிவித்தவர்களை அவரிடமிருந்து பிரித்தான். பின்னர் அவரின் சீடர்களைப் பயமுறுத்தி அவரிடமிருந்து வெளியே செல்ல வைத்தான். இதன் பின்னர் அவர் ஆசிரமத்தை அழிப்பது அவனுக்குப் பெரிய காரியமாக இல்லை. மேலும் சக்தி படைத்த விவேகம் உள்ள, அறிவாளியான, வேத பண்டிதர் ஆன ருத்ராசாரியாரை அடக்கி ஒடுக்குவதன் மூலம் மற்ற ஆசாரியர்களும் பாடம் கற்கலாம் என்ற எண்ணமும் ஸ்ரீகாலவனுக்கு இருந்தது. ஆனால் அவன் என்ன செய்தும், ருத்ராசாரியாரை எவ்வகையிலும் தனிமைப் படுத்தியும் அவர் அசைந்தே கொடுக்கவில்லை. அவனுக்கு அடி பணியவே இல்லை. மறுத்துவிட்டார்.
அவரின் மகன்களைத் தன் பக்கம் இணைக்க முயன்றான். ஒரு மகன் நாட்டை விட்டே ஓடிப் போக மற்றொரு மகன் அரை மனதோடு ஸ்ரீகாலவனோடு இணங்கிப்போனான். ருத்ராசாரியாரோ தன் வழிமுறைகளில் இருந்து சற்றும் மாறாமல் தன் தவத்தையும் அன்றாட அனுஷ்டானங்களையும் தொடர்ந்தார். ஸ்ரீகாலவனை மக்கள் வணங்கி வழிபாடு செய்ய வசதியாகத் தினம் இருமுறை மக்கள் முன்னிலையில் தோன்றித் தன்னை வழிபடச் செய்வான் ஸ்ரீகாலவன். அந்த வழிபாட்டில் ருத்ராசாரியாரும் கலந்து கொள்ள அவன் செய்த முயற்சிகள் எதுவும் பலனளிக்கவில்லை. தன்னை எதிர்க்கும் அனைத்து ஆசாரியர்களையும், ருத்ராசாரியோடு சேர்த்துச் சிறைக்கு அனுப்புவதே ஒரே வழி என்ற முடிவுக்கு வந்தான் ஸ்ரீகாலவன். முதலில் ருத்ராசாரியாரை அனுப்பினான். பின்னர் தொடர்ந்தனர் அனைத்து ஆசாரியர்களும். மொத்தம் பதினேழு பேர் ருத்ராசாரியாரையும் சேர்த்து இருக்கிறார்கள்.” என்றான் புநர்தத்தன்.
தன் தந்தையைக் காணத் தான் தந்தையின் ஆசிரமத்துக்குச் சென்ற போது அங்கே இந்த விஷயத்தைத் தன் தாய் மூலம் கேள்விப் பட்டதையும் உடனே ஸ்ரீகாலவனைப் பார்க்கத் தான் ஓடோடி வந்ததையும் தெரிவித்தான். தன்னையும் ஸ்ரீகாலவன் வணங்கச் சொன்னதையும் தான் மறுக்கவே, தன்னைப் பயமுறுத்திப் பணிய வைக்க முயன்றதையும் அதற்கும் இணங்காத தன்னை இங்கே தள்ளியதையும் கூறினான்.
“ஆனால் உத்தவா, ஒவ்வொரு முறை நான் கஷ்டத்தில் இருக்கும்போதெல்லாம் நம்பிக்கை தரும் ஒளியாக நீ எப்படியோ வந்துவிடுகிறாய்! இம்முறையும் உன்னால் நான் தப்பிப்பதோடு அல்லாமல் அனைத்து ஆசாரியர்களையும் தப்ப வைக்கலாம் என்ற நம்பிக்கை பிறந்துள்ளது.” என்றான்.
“ம்ம்ம்ம்?? வைவஸ்வதபுரியில் செய்தாற்போல் ஏதேனும் வழி கிட்டுமா எனப் பார்க்கலாம்.” என்றான் உத்தவன்.

Thursday, August 26, 2010

கண்ணன் வருவான், கதை சொல்லுவான் 2-ம் பாகம்!

ஸ்ரீகாலவன் போட்ட உத்தரவு!

ஸ்ரீகாலவன் போட்ட சத்தத்தால் அதிர்ச்சி அடைந்த உத்தவன், தனக்குக் கரவீரபுரத்தின் விதிமுறைகள் தெரியாதென்று கூறினான். உடனேயே ஸ்ரீகாலவன்,”எனில் ஏன் இங்கே வந்தாய்? என்னிடமிருந்து என்ன எதிர்பார்க்கிறாய்?” என்று மீண்டும் கோபத்தைக் காட்டினான்.

“கிருஷ்ண வாசுதேவன் அனுப்பியதாலேயே வந்தேன். அவன் தான் என்னை அனுப்பித் தங்களிடம் தன் வணக்கங்களைச் சமர்ப்பிக்கும்படி கூறினான்.” என்று சொன்னான் உத்தவன்.

“இவ்வளவு நேரம் கிருஷ்ண வாசுதேவன் மண்ணோடு மண்ணாகி இருப்பான். அவன் இருக்கிமிடமே தெரியாமல் போய்விட்டது.” என்று சிரித்தான் ஸ்ரீகாலவன்.

“அரசர்க்கரசே! கிருஷ்ணனாலும், அவன் அண்ணன் பலராமனாலும் ஜராசந்தன் தோற்கடிக்கப் பட்டு விரட்டி அடிக்கப் பட்டான். ருக்மிக்கு மரணகாயம் ஏற்பட்டுவிட்டது. அரசன் தாரதன் கொல்லப்பட்டான்.”

“பொய்களை அடுக்காதே!” சீறினான் ஸ்ரீகாலவன். “மகதச் சக்கரவர்த்தி எங்கள் விருந்தினனாக இங்கே வரப் போகிறான்.” ஸ்ரீகாலவன் உத்தவனுக்கு ஏதோ மனக்கோளாறோ என்றே நினைத்துக் கொண்டான்.

“மாட்சிமை பொருந்திய மன்னரே! ஜராசந்தன் தன் நாட்டை நோக்கி ஓடிக் கொண்டிருக்கிறான். அவன் ரதத்தின் குதிரைகளுக்கு இருக்கும் வேகமே போதவில்லையோ என்று எண்ணும்படியாக வேகமாய்ச் செல்ல நினைக்கிறான்.”

“சரி, உன் பெயர் என்ன சொன்னாய்?? உத்தவனா? உத்தவா, போய் உன் அந்தக் கிருஷ்ணனிடம் சொல். அவன் ஒரு முறை இங்கே வந்து என்னை வணங்கிவிட்டுச் செல்லலாம் என. மூவுலகுக்கும் ஒரே அதிபதியான ஸ்ரீகாலவ வாசுதேவனை வணங்கிச் செல்வதே அவன் பெருமை என்றும் எடுத்துச் சொல்லி அழைத்துவா! நான் மூவுலகுக்கும் அதிபதி என்பதை அவனை ஒரு போதும் மறக்கச் சொல்லாதே!” என்றான் ஸ்ரீகாலவன்.

“கிருஷ்ண வாசு……”

“நிறுத்து! நான் ஒருவனே இங்கு வாசுதேவன், பர வாசுதேவன், மஹாவிஷ்ணு, எல்லாமும். நான் தான் அனைத்தையும் அறிந்த, கடந்த ஒரே பரம்பொருள். எனக்கு நிகராக இன்னும் எவரும் தோன்றவும் இல்லை; தோன்றவும் முடியாது. ஆதியும் நானே, அந்தமும் நானே! இந்த மூவுலகிலேயே வாசுதேவன் என அழைக்கப் படுவது எப்போது என் ஒருவனையே!” சொல்லிவிட்டுப் பெருமையோடு தன்னைச் சுற்றி இருந்த மக்களை ஒரு கம்பீரப் பார்வை பார்த்தான் ஸ்ரீகாலவன். சுற்றி இருந்த மக்களும், அதிகாரிகளும், அமைச்சர்களும், “வாசுதேவனுக்கு மங்களம்!” என்று சொல்லிக் கொண்டே இரு கைகளையும் உயரத் தூக்கி அவனை வணங்கினார்கள். இந்த அசட்டுத் தனத்தைப் பார்த்து உத்தவனுக்குச் சிரிப்பு வந்தது. அவன் சகோதரனும், நண்பனும் ஆன கிருஷ்ணனோ அநாயாசமாகப் பல சாகசங்களைச் செய்து வருகிறான். எனினும் தன்னை ஒருபோதும் அவன் கடவுள் என அழைத்துக் கொண்டதே இல்லை. இந்தப் பணக்கார முட்டாள் அரசன் ஒரு மனிதனாகக் கூட நடந்துக்கத் தெரியவில்லை. அவன் தன்னைக் கடவுள், பரம்பொருள் என்கிறானே?

மனதுக்குள் இப்படி நினைத்துக்கொண்டே,” அரசே, அது எப்படி முடியும்? அவன் வசுதேவனின் குமாரன். வசுதேவன் ஷூரர்களின் தலைவன். வசுதேவனின் குமாரன் வாசுதேவன் தானே? அதை எப்படி இல்லை எனச் சொல்ல முடியும்?? மேலும் தாங்களும் ஒரு யாதவ வழித் தோன்றலே என்பதையும் கிருஷ்ண வாசுதேவன் ஒரு வகையில் உங்கள் உறவினன் என்பதையும் மறக்கவேண்டாம்.”

“ம்ம்ம்ம்ம்ம், ஆனால் இவ்வுலகில், இவ்வுலகில் என்ன?? மூவுலகிலும் கூட ஒரே ஒரு வாசுதேவன் தான் இருக்க முடியும். இரண்டு வாசுதேவர்கள் இருக்க முடியாது. “ உன்னுடைய கிருஷ்ணன் என்னை வாசுதேவன் என ஒத்துக்கொள்ளவில்லை எனில், நாம் அவனைப் பார்க்க முடியாது. “ திட்டவட்டமாய்ச் சொன்னான் ஸ்ரீகாலவன்.

“ஓ, அரசே, இரண்டு வாசுதேவர்கள் இருக்கின்றார்கள் என்றே சொல்லவேண்டும்! ஒரு வேளை நீங்கள் மஹாவாசுதேவன் என்று சொன்னாலும் கிருஷ்ணனும் வாசுதேவன் தான்!” உத்தவன் குரலிலும் அதே உறுதியும், நிச்சயத் தன்மையும் தொனித்தது.

“ஓஓஓ, யாதவனே! என்னுடைய புனிதத் தன்மையை நீ அவமதிக்கிறாய்! இதனால் நீ நரகத்துக்குத் தான் செல்வாய்! நானே உன்னை அனுப்புகிறேன். என்னை பரவாசுதேவன், மஹாவிஷ்ணு என நீ ஒப்புக்கொள்ளும்வரையிலும் நீ நரகத்தில் தான் இருக்கப்போகிறாய்!”

“பேரரசே! நான் உங்களிடமிருந்து விடைபெறும் தருணம் வந்துவிட்டது. ஆனால் செல்லும் முன் ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன். கிருஷ்ண வாசுதேவன் ஒரு போதும் தன்னைக் கடவுள் என அழைத்துக்கொள்ளவே இல்லை. ஆனால் என் கண்களுக்கு மட்டுமில்லை, பலருக்கும் அவன் கடவுளாகவே தென்படுகிறான். “ என்றான்.

“என்ன தைரியம் உனக்கு?? என் எதிரே இப்படி இன்னொருவனைக் கடவுள் என்பாயா?? யாரங்கே? இவனை நரகத்துக்கு அனுப்புங்கள்!” என்று கோபத்தால் உடல் துடிக்கக் கத்தினான் ஸ்ரீகாலவன். நீண்ட ஈட்டிகளோடு இருபது, முப்பதுபேர் உத்தவனைச் சூழ்ந்து கொண்டு, கயிற்றால் அவனைப் பிணைத்து அங்கே இருந்து அப்புறப்படுத்தி அழைத்துச் சென்றார்கள்.

உத்தவனுக்குத் தன் நிலைமையை விடக் கண்ணனுக்கு இந்த ஸ்ரீகாலவன் பற்றிய விஷயங்களையும், அவனின் கொடுங்கோல் தன்மையையும் எப்படித் தெரிவிப்பது என்பதே அதிகம் துன்பத்தைக் கொடுத்தது. என்னதான் பரசுராமர் கண்ணனை எச்சரித்திருந்தாலும் இந்த ஸ்ரீகாலவனின் கொடுங்கோன்மை இவ்வளவு மோசம் எனக் கண்ணன் புரிந்து கொள்ளவேண்டுமே என்று கவலைப் பட்டான். அதற்குள் வீரர்களால் வலுக்கட்டாயமாக அவன் அந்தக் கோட்டையின் இன்னொரு பக்கம் அழைத்துச் செல்லப் பட்டான். அங்கே ஒரு சிறிய குன்று போல் இருந்ததன் மேலே ஏற்றினார்கள். கயிற்றை அவிழ்க்காமலேயே மேலே ஏறிய உத்தவனை அங்கே இருந்து கீழே தள்ளினார்கள். ஒரு திறந்த கிணறு போன்ற தோற்றமளித்த பள்ளத்தில் உத்தவன் விழுந்தான்.

Sunday, August 22, 2010

கண்ணன் வருவான், கதை சொல்லுவான் 2-ம் பாகம்!

மன்னனா? மஹாவிஷ்ணுவா?


அங்கு நடமாடிய மக்களின் ஆடை, ஆபரணங்களைப் பார்த்த உத்தவன் கரவீரபுரத்தின் செழிப்பில் கொஞ்சம் திகைத்தே போனான். கடைகளிலும் தங்கம் என்னமோ செங்கற்களைப் போல் கட்டி, கட்டியாக விற்கப் பட்டுக்கொண்டிருந்தது. ஒரு பக்கம் வெள்ளியும் மலையாகக் குவிந்து கிடந்தது. விலை உயர்ந்த பழ வகைகளும், காய் வகைகளும், ஆடை வகைகளும் விற்கப் பட்டன. அனைத்து மக்களும் விலை உயர்ந்த ஆடைகளோடு யார் வரவையோ எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருந்த மாதிரி தெரிய வந்தது. உத்தவனோடு வந்த அதிகாரி ஜராசந்தனின் வரவை எதிர்பார்த்தே இவ்வளவு கோலாகலம் என்று சொன்னார். “நம் அரசர் உலகத்தின் கடவுள்” ஜராசந்தன் மகத நாட்டுச் சக்கரவர்த்தி அவரை நேரில் கண்டு தன் வணக்கங்களைச் சமர்ப்பிக்க வருவதாய் இருக்கிறான் என்றார். உத்தவனுக்குச் சிரிப்பு வந்தது. ஒரு பக்கம் அவர்களின் அரசனான ஸ்ரீகாலவ வாசுதேவன் தன்னைத் தானே கடவுள் என அழைத்துக்கொள்வது பற்றி என்றால் இன்னொரு பக்கம் ஜராசந்தன் கிருஷ்ணனால் உயிர்ப்பிச்சை அளிக்கப் பட்டு ஓடிப் போனான் என்னும் செய்தி கேட்டால் அதன் விளைவு இங்கே எவ்வாறு இருக்கும் என நினைத்துப் பார்த்தே சிரித்துக்கொண்டான்.

கோட்டைக்குள் இருந்த அந்தச் சிறிய கோட்டையில் நுழைந்த்துமே ஒரு பெரிய ரதத்தில் ஒரு மனிதன் அமர்ந்திருப்பதையும், அந்த ரதத்தைப்பல மக்கள் ஒன்று கூடி இழுத்து வருவதையும் கண்டான். ரதத்தில் அமர்ந்திருந்த மன்னனின் அலங்காரம் கோயில்களில் தெய்வங்களுக்கு அலங்காரம் செய்வது போல் காணப்பட்டது. தங்கத்தால் ஆன ரத்தினங்கள் பதிக்கப்பட்ட சிம்மாசனத்தில் அமர்ந்திருந்த அந்த மனிதன் கொஞ்சம் உயரம் குறைவாக இருந்தாலும் கட்டான உடலமைப்போடு காணப்பட்டான். அவனுடைய தாடி ஒழுங்காக அமைக்கப்பட்டிருந்தது. தலையில் பெரிய கிரீடம் ஒன்று ஒளி வீசும் கற்கள் பதிக்கப் பட்டுக் காட்சி அளித்தது. அவனுடைய கழுத்திலும், கைகளிலும், காதுகளிலும் காணப்பட்ட ஆபரணங்களில் இருந்து வீசிய ஒளியானது அந்த இடத்தையே பிரகாசப் படுத்திக் கொண்டிருந்தது என்றால் மிகையில்லை. தன் இடத் தோளில் ஒரு பெரிய வில்லையும் சுமந்து கொண்டிருந்தான் அவன். அவனையும், அவன் அலங்காரத்தையும் கண்டதுமே உத்தவனுக்கு இவன் தான் ஸ்ரீகாலவ வாசுதேவன் எனப் புரிந்து விட்டது. எனினும் கூடவே வந்த அதிகாரியிடம், “இவர் தான் உங்கள் மன்னரா?” என்று கேட்டான். அவர் அவனைக் கடுமையாகப் பார்த்து, “மன்னர் இல்லை. இவரே பரவாசுதேவன்! நம் அனைவருக்கும் இவரே கடவுள். இவரே பரம்பொருள். எல்லாம் வல்ல ஈசன் இவரே! நம் அனைவரையும் உய்விக்கவேண்டி மனித வடிவில் காட்சி தருகிறார்.” என்று பயம் கலந்த பக்தியோடு கூறினான்.

“வாசுதேவனா?? என்ன யாதவ குலத் தலைவன் வசுதேவனின் குமாரன் இல்லை அல்லவா?? எனில் இவர் அந்தப் பரவாசுதேவன் என்கிறீர்! பரம்பொருள், எல்லாம் வல்ல ஈசன். இல்லையா?” உத்தவனின் சிரிப்பு அடங்கவில்லை. “ஆஹா, நீ வெளிநாட்டில் இருந்து வந்துள்ளாய் அப்பனே! அதனால் நீ எதையும் புரிந்து கொள்ளவே இல்லை.” உத்தவனைப் பரிதாபமாய்ப் பார்த்த அந்த அதிகாரி, “இவர் நம் அனைவரையும் உய்விக்க வந்த மஹா சக்தி. பர வாசுதேவன். சாட்சாத் அந்த மஹாவிஷ்ணுவே இவர் தான்.” சொல்லிக் கொண்டே உத்தவன் செய்த தவறுக்குத் தான் மன்னிப்புக் கேட்பது போல் தன் கைகளால் கண்களில் ஒத்திக் கொண்டு மானசீகமாக அந்த ஸ்ரீகாலவனை வணங்கினான் அந்த அதிகாரி. அதற்குள் ஊர்வலம் உத்தவனும், அதிகாரியும் நின்று கொண்டிருந்த இடத்தைக் கடந்தது. அந்த அதிகாரி ஸ்ரீகாலவனைக் கீழே விழுந்து வணங்கினார். உத்தவனும் இப்போது நாம் எதிர்ப்பைத் தெரிவிக்கும் சமயம் இதுவல்ல என்று புரிந்து கொண்டு வணக்கம் தெரிவித்தான். ஊர்வலம் அவர்களைக் கடந்து சென்றது. செல்லும்போதே ஸ்ரீகாலவன் உத்தவனை ஒரு பார்வை பார்த்துக்கொண்டே மனதிற்குள் அவனைப் பற்றிய கணிப்பைச் செய்து கொண்டே போனான். ரதம் மேலே சென்றது.

கற்களால் ஆன ஒரு ஓய்வு விடுதிக்கு உத்தவன் அழைத்துச் செல்லப் பட்டான். அரசாங்க விருந்தினர்கள் தங்கும் விடுதி அது எனப் பார்த்ததுமே புரிந்தது. அன்று அங்கே தங்கிய உத்தவன் மறுநாள் அரசனால் அழைக்கப்பட்டுச் சென்றான். மன்னனின் மாளிகையும் கற்களாலேயே கட்டப் பட்டிருந்தது. மாளிகையில் நுழைந்து மன்னன் இருக்குமிடம் சென்றதுமே உத்தவன் ஸ்ரீகாலவன் நேற்றுப் பார்த்த அதே சிம்மாசனத்தில் அசையாமல் ஒரு கடவுள் சிலை அமர்ந்திருப்பதைப்போன்ற தோற்றம் காட்டிய வண்ணம் அமர்ந்திருந்தான். அவன் அருகே அவனின் ராணி பயத்துடன் அமர்ந்திருந்தாள். அவளுக்கு இது எதுவும் பிடிக்கவில்லை என்பதை அப்பட்டமாய் அவள் முகபாவமும், வேண்டாவெறுப்பாய் அவள் அமர்ந்திருக்கும் கோலமும் காட்டிற்று. ஆனால் அவள் அருகே…. ஆஹா, அது யார்?? மின்னலைப் பழிக்கும் தோற்றத்துடன் ஒரு அழகி?? அழகி என்றால் சாமானிய அழகியா?? ராணிக்கருகே அவளைப் பாதுகாப்பது போல் அவள் நின்றாலும் அவள் பார்வை முழுதும் ஸ்ரீகாலவன் மீதே பதிந்திருந்த்து. அதில் தெரிந்த மிதமிஞ்சிய பக்தியும், பாசமும், பெருமையும், தன்னை மறந்த மகிழ்ச்சியும், அவள் ஸ்ரீகாலவனுக்கும் அவனுடைய இந்தப்போலியான மகிமைக்கும் தன்னை மீறி அடிமையாகிவிட்டாள் என்பதைப் புலப்படுத்தின. அவள் அருகே ஒரு சிறுவன், அவன் தான் இளவரசனாய் இருக்கவேண்டும், கொஞ்சம் திருட்டுத் தனமாய்த் தன் தாயையே பார்த்துக் கொண்டிருந்தான். நடு நடுவில் எங்கே தான் கவனிக்கப் பட்டுவிடுவோமோ எனக் கவலைப்படுபவன் போல் அங்கே கூடி நின்ற கூட்டத்தையும் ஸ்ரீகாலவனையும் பார்த்துக் கொண்டான்.
உத்தவன் உள்ளே நுழையக் காத்திருந்த்து போலவே, ஆண்களும், பெண்களுமாய்ச் சிலர் கையில் ஆரத்தித் தட்டுக்களை ஏந்திக் கொண்டு வந்து, பாட்டுப் பாடிக்கொண்டும், ஆடிக்கொண்டும் ஸ்ரீகாலவனுக்கு ஆரத்தி எடுத்தனர். ஆரத்தித் தட்டுக்களில் ஏற்றப் பட்டிருந்த கற்பூரத்தின் ஒளியால் அந்தக் கூடம் பிரகாசித்தது. அவர்கள் பாடிய பாடலோ, பேசிய மொழியோ உத்தவனுக்குப் புரியவில்லை. ஸ்ரீகாலவனைச் சுற்றிலும் சில பெண்கள் சாமரம் வீசிக்கொண்டிருந்தனர். காவலுக்குக் கைகளில் வலுவான தடிகளோடு பயங்கரமான முரடர்கள் சிலரும் நின்று கொண்டிருந்தனர். எல்லாவற்றிலும் ஆச்சரியம் என்னவெனில் ஆசாரியர்கள் சிலர் மன்னனைச் சுற்றிச் சூழ்ந்து நின்றுகொண்டு அவன் புகழ் பாடித் துதித்துக் கொண்டிருந்தது தான். கர்காசாரியார், வேத வியாசர், குரு சாந்தீபனி போன்ற ஆசாரியர்களை மன்னர்கள் அவர்கள் இருப்பிடம் தேடிப் போய் வணங்கிப் பிரார்த்திப்பார்கள். இங்கேயோ நேர்மாறாக இருக்கிறதே! உத்தவனுக்கு இம்மாதிரியான காட்சியைக் கண்டதும் இன்னும் வியப்பு அதிகமாயிற்று.

அனைத்து வழிபாடுகளும் முடிந்து கோயில்களில் கொடுப்பது போலவே பிரசாதங்கள் வழங்கப் பட்டன. குழுமி இருந்த மக்கள் அனைவரும் அவற்றைப் பெரும் பயபக்தியோடு பெற்றுக்கொண்டு நகரவும், உத்தவன் மற்றொரு அதிகாரியால் ஸ்ரீகாலவனுக்கு அருகே அழைத்துச் செல்லப் பட்டான். அங்கே சென்றதும் உத்தவன் ஸ்ரீகாலவனை வணங்கினான். சற்று நேரம் தன் தாடியை நீவி விட்டுக் கொண்டே உத்தவனை முறைத்துப் பாரத்தான் ஸ்ரீகாலவன். உத்தவனுக்குச் சொல்ல முடியாத தர்ம சங்கடமாய்த் தோன்றிய சில நிமிடங்களுக்குப்பிறகு உத்தவனும், மற்ற ஆரிய வர்த்த மக்களும் பேசும் வடமொழியிலேயே ஸ்ரீகாலவன் உத்தவனைப் பார்த்து, "ம்ம்ம்ம்??? முற்றிலும் புதியவனாய்த் தெரிகின்றாயே? யார் நீ? உன் பெயர் என்ன?? என்ன காரணத்துக்காக இந்த நாட்டுக்கு வந்துள்ளாய்?? நான் உனக்கு என்ன உதவி செய்யமுடியும் அல்லது என்ன அருள் புரியவேண்டும் என நீ எதிர்பார்க்கிறாய்?" என்று கேட்டான். அவன் பேசியது வடமொழியானாலும் உச்சரிப்பில் கொஞ்சம் வித்தியாசம் இருந்தது. மேலும் சில உள்நாட்டு வார்த்தைகளும் கலந்திருந்தன போலும். என்றாலும் உத்தவன் புரிந்து கொண்டான்.

"நான் மதுராவில் இருந்து வருகிறேன். ஷூரர்களின் தலைவர் ஆன வசுதேவரின் தம்பியான தேவபாகனின் குமாரன். எனக்கு எந்த உதவியோ, அல்லது உங்கள் அருளோ தேவையில்லை. நான் என் பெரிய தந்தையின் மகன் ஆன கிருஷ்ண வாசுதேவனின் சார்பாக உங்களைச் சந்திக்க வந்துள்ளேன்."

"கிருஷ்ண வாசுதேவன்??மதுராவின் அந்த இடைச்சிறுவன்??? சாட்சாத் ஸ்ரீஸ்ரீஸ்ரீஸ்ரீ பரவாசுதேவனாகிய நாம் அவனுக்கு எவ்விதத்தில் அருள் புரியவேண்டும்??" அவன் குரலில் ஒரு கட்டளைத் தொனி தொனித்தது. மேலும் சொன்னான்." அந்த இடையனோடு எனக்கு என்ன வேலை??? அவன் தன் தாய் மாமனையே கொன்றுவிட்டான் எனவும் கேள்விப் பட்டேன். அதுவும் அந்தத் தாய் மாமன் கம்சன், என்னுடைய அபிமானத்துக்கும், பிரியத்துக்கும் உரிய மகத சாம்ராஜ்யத்து மாமன்னர் ஆன ஜராசந்தன் அவர்களின் ஒரே மருமகன். கொன்று போட்டுவிட்டு இங்கே கோமந்தக மலைக் காடுகளில் ஒளிந்து கொண்டு விட்டானாமே?? தைரியம் இருந்தால் யுத்த பூமியை விட்டு ஏன் ஓடுகிறான்?? இதற்குள் என் நண்பனும், என் பிரியத்துக்குகந்தவனும் ஆன ஜராசந்தன் அவனை அழித்து ஒழித்திருப்பான்." என்று மிகவும் மகிழ்வோடு கூறினான்.

"ஓஓ, மாட்சிமை தாங்கிய மாமன்னரே!" என்று உத்தவன் ஆரம்பித்தான்.

ஒரு உறுமல் சத்தம் கேட்டது. "யார் சொன்னார்கள் நான் வெறும் மாமன்னன் என??"ஸ்ரீகாலவனின் கோபம் அடக்க முடியாமல் இருப்பதைக் கண்டான் உத்தவன். "இங்கே மன்னன் என எவனும் இல்லை. பர வாசுதேவன். சாட்சாத் அந்த ஸ்ரீமஹாவிஷ்ணு! அது நான் தான்! வேறு எவரும் இல்லை!" சொல்லிக் கொண்டே சுற்றிக் கூடி இருந்த கூட்டத்தைப் பார்த்தான் ஸ்ரீகாலவன் பெருமையுடன். கூடி இருந்த மக்கள் கூட்டம் அதை ஆமோதித்த வண்ணம், "ஸ்ரீகாலவ வாசுதேவனுக்கு மங்களம்! பர வாசுதேவனுக்கு ஜயம்!" எனக் கோஷித்த வண்ணம் தங்கள் இரு கைகளையும் கூப்பிக் கொண்டு ஸ்ரீகாலவன் போதும் என்று சொல்லும் வரையிலும் கீழே விழுந்து நமஸ்கரித்தனர்.

Tuesday, August 17, 2010

கண்ணன் வருவான், கதை சொல்லுவான் 2-ம் பாகம்!

கரவீரபுரத்தில் உத்தவன்


ஜராசந்தனின் தப்பி ஓடிய வீரர்கள் சிலரைப் பிடித்து வந்தனர் கருடப் படை வீரர்கள். அனைவரும் கிருஷ்ணனின் வெற்றியால் சந்தோஷமடைந்து, தங்கள் மொழியில் கூக்குரலிட்டு மகிழ்ச்சியைத் தெரிவித்தனர். அவர்கள் கூக்குரல் மலை உச்சியில் இருந்து பார்த்துக்கொண்டிருந்த கருடத் தலைவனை எட்ட, சற்று நேரத்தில் அவன் தன் மெய்க்காப்பாளர்கள் சூழக் கீழே இறங்கி வந்தான். புதிய விருந்தினன் ஆன தாமகோஷனையும், உத்தவனையும் வரவேற்றான். தேங்காய்கள் உடைக்கப்பட்டு அவற்றின் நீர் பருக அளிக்கப் பட்டது. மேலும் பல உபசாரங்களையும் செய்த கருடத் தலைவன் அன்றிரவு மாபெரும் விருந்துக்கும் ஏற்பாடு செய்தான். ஆட்டம், பாட்டம், கொண்டாட்டத்தோடு வெற்றி விழா கொண்டாடப் பட்டது. சேதி நாட்டரசன் தாமகோஷன் மேலும் இரண்டு நாள் அங்கே தங்கி கருடர்களின் விருந்தோம்பலை அனுபவித்தான். அவன் கண்ணனைப்பற்றியும் அவன் சாகசங்கள் பற்றியும் செவிவழியாகவே கேட்டிருந்தான். இப்போது நேரில் பார்த்த்தும் அவனுக்கு மிகவும் திருப்தியாக இருந்தது. ஜராசந்தனின் வீரத்தையும், அவன் சர்வாதிகாரத்தையும் வீழ்த்த வல்ல ஒருவனாலும் முடியவில்லையே, தான் தன்னந்தனியே என்ன செய்தாலும் அதனால் அவனை முறியடிக்க முடியவில்லையே எனக் கவலைப்பட்டுக்கொண்டிருந்த அவனுக்கு இப்போது ஜராசந்தனையும் தோற்கடிக்கக் கூடிய ஒருவனாய் தன் மறுமகன் அமைந்ததில் பூரணத் திருப்தி.
அனைவரும் கலந்து ஆலோசித்துக் கொண்டு கண்ணன் உத்தவனை ஸ்ரீகாலவனைச் சந்திக்கக் கரவீரபுரத்துக்கு அனுப்புவதாய் முடிவு செய்தான். உத்தவனிடம் ஸ்ரீகாலவனைச் சந்தித்துத் தங்கள் வணக்கங்களையும், பெரியோர்களின் வாழ்த்துகளையும் தெரிவிக்க ஆசைப்படுவதாய்க் கூறும்படிக் கண்ணன் உத்தவனிடம் சொன்னான். ஆனால் பலராமனுக்கு இப்படித் தூது அனுப்புவது பிடிக்கவில்லை. கண்ணனிடம் தன் ஆக்ஷேபத்தைத் தெரிவித்தான். “கண்ணா, அவன் இழிபிறவி. நாம் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் அவன் ஜராசந்தனிடம் நம்மைக் காட்டிக் கொடுத்துவிட்டான். நீ போய்ச் சந்தித்து அவனை வணங்கிக் கொள். நான் வரப்போவதில்லை. என்னால் அங்கே எல்லாம் வர முடியாது!” என்றான் பலராமன்.

“ஓஓஓ, அண்ணா, அமைதி, அமைதி, சாந்தியடையுங்கள். நாம் இப்படி மரியாதையும், பண்பும் எப்போதும் கடைப்பிடிப்பதால் குறைந்து போகமாட்டோம். கீழேயும் போகமாட்டோம். இதில் தவறொன்றும் இல்லை. மேலும் நம் நண்பன் ஆவதற்கு ஸ்ரீகாலவனுக்கு ஒரு சந்தர்ப்பமேனும் கொடுக்கவேண்டும் அல்லவா? யார் கண்டார்கள்? ஒருவேளை அவன் நம் நட்பை விரும்பலாம். உண்மையிலேயே அவன் நல்லவனாயும் இருக்கலாம் அல்லவா?”
“கிருஷ்ணா, கிருஷ்ணா, என்ன இது?? குரு பரசுராமர் சொன்னதை எல்லாம் மறந்து போனாயா? நீ வேண்டுமானால் இப்படிப் பட்ட துஷ்டர்களைச் சந்தித்து உன்னுடைய நண்பர்களாய் ஆக்கிக் கொள். எனக்கு வேண்டாம் அப்பா. என்னை விட்டு விடு. அந்த ஸ்ரீகாலவன் பல ரிஷிகளையும், முனிவர்களையும் குருகுலம் நடத்த விடாமல் சிறைக்குள் அடைத்து வைத்திருக்கின்றான் என்றும், இவனைத் தான் பரவாசுதேவன் என ஒப்புக் கொள்ளவேண்டும் எனவும், எல்லாம் வல்ல பரம்பொருள், மஹாவிஷ்ணுவே தான் தான் என ஒப்புக் கொள்ளவேண்டும் எனவும், இல்லை எனில் வெளியே விடமுடியாது என்றும் சொல்லிக் கொண்டிருக்கிறான். இதை குரு பரசுராமர் சொல்லும்போது நீ கேட்கவில்லையா என்ன? “ பலராமன் ஆவேசத்தோடு பேசினான்.

“ம்ம்ம்ம்?? ஒரு வேளை….ஒருவேளை அந்த ரிஷி, முனிவர்களை என்னால் தப்புவிக்க முடிந்தால்? அதற்கு அந்தப் பர வாசுதேவன், எல்லாம் வல்ல பரம்பொருள், மஹாவிஷ்ணு உதவி புரிந்தால்?? எனக்கு மட்டும் கடவுள் அந்த அனுகிரஹத்தைச் செய்தால்??? அண்ணா, பல படித்த ஆசாரியர்களையும், ரிஷிகளையும், முனிவர்களையும் அப்படிச் சிறையில் கிடக்கும்படி விட்டுவிட முடியுமா என்ன?? என்னால் முடியாது அண்ணா! அவர்களை விடுவிக்க ஏதேனும் செய்தே ஆகவேண்டும்!’ யோசனையுடன் கண்ணன் பேசினான். இத்தனை வாதப் பிரதிவாதங்களுக்குப் பின்னர் உத்தவன் சேதிநாட்டு வீரர்கள் சிலரின் துணையோடும், கருடன் விநதேயனும் மற்ற கருடர்களும் முன்னால் சென்று வழிகாட்ட கரவீரபுரத்தை நோக்கிப் பயணம் ஆனான். கரவீரபுரத்தை அடைந்ததுமே கோட்டை வாசலில் காவலர்களால் தடுத்து நிறுத்தப்பட்டனர். காவலுக்கு இருந்த வீரர்கள் அனைவருமே இடுப்பில் கச்ச வேஷ்டி அணிந்த கறுத்த நிற வீரர்கள் அவர்கள். கழுத்தில் பெரிய, பெரிய வெள்ளி ஆபரணங்களை அணிந்து, கைகளில் வாகு, வலயங்களும் காணப்பட்டன. உத்தவன் தான் வந்திருக்கும் விஷயத்தையும், கொண்டு வந்திருக்கும் செய்தியையும் கூறவே, அவர்களின் தலைவன் போல் காட்சி அளித்தவன், கோட்டைக்கு உள்ளே சென்றான். ஒரு நாழிகை கழித்துத் தன்னுடன் ஒரு சிவந்த நிற அதிகாரியோடு வந்த அவன் உத்தவன் மட்டுமே உள்ள அநுமதிக்கப் படுவான் என்றான். கூடவே வந்த அதிகாரிக்கு உத்தவனும், கண்ணனும் பேசும் அவர்களின் தாய்மொழி நன்கு தெரிந்திருந்தது.
கோட்டைக்கு உள்ளே சென்ற உத்தவன் ஆயுதங்களை அங்கே ஒப்படைக்கும்படிக் கோரப்பட்டான். பின்னர் அவனை நடத்தியே அழைத்துச் சென்றனர். சற்று நேரத்தில் அரசனின் மாளிகை எனப்படும் இடத்திற்கு வந்து சேர்ந்தனர். மாளிகையா அது?? ம்ஹும், அப்படிச் சொல்ல முடியவில்லை. கோட்டைக்குள் இன்னொரு கோட்டை போல் அரண் போல் அது சுற்றிலும் பாதுகாக்கப் பட்டு விளங்கியது. ஏதோ கொண்டாட்டம் நடக்கப்போவதன் அறிகுறி எங்கும் காணப்பட்டது.

Sunday, August 15, 2010

கண்ணன் வருவான், கதை சொல்லுவான் 2-ம் பாகம்!

உத்தவன் போட்ட திட்டம்!

கண்ணன் குண்டினாபுரத்தை விட்டுச் சென்றதுமே உத்தவனுடைய மனமும் கண்ணன் பின்னாலேயே சென்றுவிட்டது எனலாம். உத்தவன் பிறந்த உடனேயே அவன் தந்தை தேவபாகன் அவனைக் கண்ணனோடு சேர்ந்து வளரட்டும் என அனுமதித்து அனுப்பி வைத்திருந்தான். உத்தவனும் கண்ணனைப் போலவே இடைச்சிறுவர்களோடு சேர்ந்தே வளர்ந்து வந்தான். கண்ணனோடு நெருங்கிப்பழகிய உத்தவனுக்குத் தான் வேறு, கண்ணன் வேறு என்றே தோன்றியதில்லை எனலாம். என்றாலும் கண்ணனின் சாகசங்களைக் கண்டு அவன் வியப்படைந்ததோடு தெய்வீகமான அன்பும் செலுத்தி வந்தான். கண்ணனுக்காகவே வாழ்ந்தான், கண்ணன் சாப்பிட்டால் சாப்பிட்டான், கண்ணன் சிரித்தால் சிரித்தான், கண்ணன் யுத்தம் செய்தால் பாதுகாப்புக்குச் சென்றான். கண்ணனின் நன்மைக்கெனவே வாழ்ந்து வந்தான் எனலாம். எப்போதும் கண்ணனின் செயல்கள் வெற்றியடையக் கடுமையாக உழைத்தான். நாளாவட்டத்தில் கண்ணன் மனம் என்ன நினைக்கும், எப்போது எந்தவிதமான உதவியைக் கண்ணன் எதிர்பார்ப்பான், என்ன சொல்லப்போகிறான் என்பது புரியும் அளவுக்குக் கண்ணன் மனதால் நினைப்பதைப் புரிந்து கொண்டு செயலாற்றினான்.


ஆகவே கண்ணன் சஹ்யாத்திரி மலைத் தொடருக்குச் சென்றதுமே அங்கிருந்து கண்ணன் வெற்றியோடு திரும்ப வேண்டிய அனைத்து ஏற்பாடுகளையும் உத்தவன் கவனிக்க ஆரம்பித்தான். விதர்ப்ப நாட்டு அரசன் பீஷ்மகனின் தந்தையான கைசிகனின் உதவி மட்டுமல்ல. பீஷ்மகனின் ஒரே மகளான ருக்மிணியின் மனமும் கண்ணன் பால் இளகி அன்பு ஊற்றெடுத்துக் கொண்டிருந்தது என்பதையும் புரிந்து வைத்திருந்தான் உத்தவன். சஹ்யாத்திரி மலைத் தொடரின் அடர்ந்த காடுகளில் அடைக்கலம் தேடிக் கண்ணன் சென்றதில் ருக்மிணி மனம் உடைந்து சோகத்தில் ஆழ்ந்தாள் என்பதையும் கண்டு கொண்டான். ஆகவே அவளும் கண்ணன் வெற்றியோடு திரும்புவதில் ஆர்வம் காட்டினால் என்பதைச் சொல்லவும் வேண்டுமா? ஆகவே உத்தவனின் திட்டங்களைத் தன் தாத்தாவிடம் விளக்கி, ஜராசந்தனை எவ்விதத்திலேனும் கண்ணனைக் கொல்லும் திட்டத்திலிருந்து தடுக்கவேண்டும் என்றே அவளும் முயன்று வந்தாள். அவர்கள் மனதுக்குள் தாங்கள் என்ன திட்டம் போட்டாலும் அதற்கு அச்சாணியாக, அதை நடத்தி வைக்கும் மூலகாரணமாக சேதி நாட்டு அரசன் தாமகோஷன் இருக்கவேண்டும் என்பதிலும் உறுதியாக இருந்தனர்.

அப்படியே கண்ணன் எதிர்பார்த்த அந்தச் சம்பவமும் அவன் எதிரே வந்துவிட்டது. ஜராசந்தன் வெறிநாய்களை வேட்டையாடிக் கொல்வதைப் போல எளிதாகக் கண்ணனையும், பலராமனையும் கொன்றுவிட உத்தேசித்திருந்தான். இருவரையும் கொன்றதைக் காணும் யாதவத் தலைவர்கள் எவருக்கும் மீண்டும் தன்னிடம் மோதும் துணிவு வரக்கூடாதென்றும் எதிர்பார்த்தான். பெயருக்கு ஒரு யாதவச் சிறுவனை அரியணையில் அமர்த்திவிட்டுத் தன்னிரு பெண்களையும் அங்கே ராணிகளாகத் தனக்குக் கீழ் இருந்து செயலாற்றும்படியாக அமைக்கவும் எண்ணியிருந்தான். இவற்றை எல்லாம் குண்டினபுரத்துக்கு வந்த ஒற்றர்கள் மூலம் தெரிந்து கொண்ட கைசிகன் உத்தவனிடம் சொல்ல, உத்தவனும், மாறுவேஷத்தில் சேதிநாட்டுக்குப் போய்ச் சேர்ந்தான். அங்கே தாமகோஷனிடம் மட்டுமே தன் உண்மை உருவத்தைக் காட்டினான்.

அப்போது ஜராசந்தன் குண்டினாபுரத்தில் தன் படைகளோடு பட்டத்து இளவரசன் ருக்மியின் விருந்து உபசாரங்களை அனுபவித்துக் கொண்டிருந்தான். தன்னுடைய திட்டத்தைச் சேதி நாட்டு அரசனுக்கு உத்தவன் விவரித்துச் சொன்னான். தாமகோஷன் உடனடியாகப் பதில் சொல்லவில்லை. தன் மனதுக்குள்ளாக அதைப் பற்றிப் பல விதங்களிலும் அலசி ஆராய்ந்தான். மிகக் கவனமாய் ஆராய்ந்ததில் அவனுக்குத் தோன்றியது இதுவே! வசுதேவனின் குமாரர்கள் தைரியசாலிகளாகவும், வீர்ர்களாகவும், சாகசங்களை நிகழ்த்துவதில் வல்லவர்களாயும் இருக்கின்றனர். மேலும் கண்ணன் அதிகம் தன் வீரத்தை விட புத்தியை நம்புகிறான். ஜராசந்தனோ அவசரக் காரன், வீரன் தான் என்றாலும் ஆணவக்காரன். தானும், தன் சாம்ராஜ்யமும், தன் மக்களும் ஓங்கி நிற்க எதுவேண்டுமானாலும் செய்வான். ஆகவே இப்போது அவனை வீழ்த்த ஒரு சந்தர்ப்பம் கிடைக்கிறதென்றால் அதை விடக் கூடாது. தாமகோஷன் ஒரு முடிவுக்கு வந்துவிட்டான்.


ஆகவே ரத சாரதியின் வேடத்தில் உத்தவனையும் அழைத்துக்கொண்டு சஹ்யாத்திரி மலை நோக்கி வந்து கொண்டிருந்த ஜராசந்தனோடு சேர்ந்து கொள்ள தாமகோஷனும் கிளம்பிவிட்டான். வந்த இடத்தில் தாமகோஷன் நினைத்த்தை விட வல்லவர்களாகக் கண்ணனும், அவன் தோழர்களும் செயல்பட்டனர். அவன் கண்ணனின் உயிரைக் காத்தது மட்டுமல்ல, ஜராசந்தனின் உயிரையும் காப்பாற்றி அங்கிருந்து தப்பி ஓடவும் காரணமாக அமைந்தான். ஜராசந்தனின் மற்ற நண்பர்கள் அனைவரும் ஜராசந்தன் சென்ற திசை நோக்கித் திரும்ப ஆரம்பிக்க தாமகோஷன் கண்ணனைத் தன் மனதாரக் கட்டித் தழுவித் தன் அன்பை வெளிப்படுத்தினான். மேலும் தானும், உத்தவனும் செய்த அனைத்து ஏற்பாடுகளையும் விபரமாய்ச் சொல்லி, எல்லாருமே ஜராசந்தனை கோமந்தக மலையில் தேடுவதை நிறுத்திவிட்டுத் திரும்பலாம் என வற்புறுத்தியதையும், ஜராசந்தன் அதற்கு இணங்காததையும் தெரிவித்தான். அப்போது தான் தான் தீ வைக்கும் திட்டத்தைச் சொன்னதாகவும், அதில் ஜராசந்தன் மனம் மகிழ்ந்தான் எனவும் தெரிவித்த தாமகோஷன் தனக்கு மட்டும் தீ மலை உச்சியைச் சென்றடையாது என்ற நம்பிக்கை இருந்ததாகவும் தெரிவித்தான்.


கண்ணன் சிரித்தான். “நெருப்பு உயரே வரும்வரையில் நாங்கள் சும்மாவா இருப்போம்?”என்று ஒரு சிரிப்போடு பதில் சொன்னான். அவன் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்த தாமகோஷன், “கண்ணா, உண்மையைச் சொல், அனைவரும் உன்னைக் கடவுள் என்கிறார்களே? நீ உண்மையில் கடவுளா? நீ கடலரசனைப் போய் உள்ளே நுழைய ஆணையிட்டாய், உடனே அவன் கீழ்ப்படிந்து விட்டானே? உன்னையும் ஜராசந்தனையும் பார்த்தால் அவனை விடவும் நீ ஒரு பேரரசனுக்கு உரிய சர்வ லக்ஷணங்களோடும் இருக்கிறாய். நீ தான் ஒரு சாம்ராஜ்யச் சக்கரவர்த்தியைப் போல் அவனைத் தப்பிச் செல்லக் கட்டளையிட்டாய்!” தாமகோஷனுக்கு இப்போது அடக்க முடியாமல் சிரிப்பும் வந்தது. “கண்ணா, ஜராசந்தன் தன் வாழ்நாளில் இப்படிப்பட்டதொரு அவமானத்தைக் கண்டிருக்கமாட்டான். அவனால் இதைப் பொறுக்கவும் முடியாது. நீ எதற்கும் தயாராக இருக்கவேண்டும்! ஒரு மாபெரும் சாம்ராஜ்யச் சக்கரவர்த்தி தன் மொத்தப் படைகளோடும், தன் நண்பர்களோடும், அவர்கள் படைகளோடும் உயிருக்குத் தப்பி ஓடி இருக்கிறான். அதுவும் யாரால்?? இரண்டு இடைச்சிறுவர்களால்! ஆஹா, இந்த நாள் ஒரு இனிய நாள். சுபதினம் இன்றைக்கு. அனைவரும் கொண்டாடவேண்டிய தினம்!” தாமகோஷன் உரத்துச் சிரித்து மகிழ்ந்தான்.

Wednesday, August 11, 2010

கண்ணன் வருவான், கதை சொல்லுவான் 2-ம் பாகம்!

தாமகோஷன் சற்றுத் தள்ளி இருந்து பார்த்துக் கொண்டிருந்தான். சூரியன் மேலே எழும்பி விட்டான். ஒளிக்கிரணங்கள் எங்கும் பரவி இருந்தன. அந்த வெளிச்சத்தில் வாசுதேவனின் இரு புதல்வர்களும் செய்திருந்த அதிசயம் காணக் காண வியப்பு மிகுந்தது. ரத சாரதிகளும் வில்லாளிகளும் அந்த இடத்தை விட்டு ஓடி விட்டிருந்தனர். காலாட்படை வீரர்கள், குதிரை வீரர்கள் அனைவரும் தங்கள் ஆயுதங்களை இழந்து தவித்தனர். குதிரைகள் அனைத்தும் காட்டுக்குள் ஓடி விட்டன. பல வீரர்கள் இந்தத் திடீர்த் தாக்குதலுக்குத் தயாராக இல்லை. அனைவரும் அதிர்ச்சியில் மூழ்கி இருந்தனர். கிருஷ்ணனும், பலராமனும் இதுவரை கண்டறியாத ஆயுதங்களைக் கையில் ஏந்திப் போரிட்டனர். ஆயுதங்களின் வேகத்துக்கும் அவற்றின் பலத்துக்கும் எவராலும் எதிர்கொள்ள முடியவில்லை.

தாமகோஷன் இதுவே தக்க சமயம் எனக் கருதினான். இதற்காகவே அவன் காத்துக்கொண்டிருந்தான் என்றும் சொல்லலாம். தன் வீர்ர்களைச் சேர்த்துக்கொண்டு, “வாசுதேவனுக்கு மங்களம்! கிருஷ்ணனுக்கு ஜயம்! பலராமனுக்கு ஜயம்!” என முழங்கியவண்ணம் கண்ணனோடு சேர்ந்து கொண்டான். அதுவரை பொறுமையாய்க் காத்திருந்த உத்தவனும் இப்போது ஆயுதம் ஏந்திக் கண்ணன் அருகே சென்று போரிட ஆரம்பித்தான். இன்னொரு பக்கத்தில் பலராமன் தன்னுடைய மிகப் பெரிய கலப்பையால் அனைவரையும் கதிகலங்க அடித்துக் கொண்டிருந்தான். சம்வர்த்தகா இது தான் பலராமன் தன் அருமைக்கலப்பைக்கு வைத்த பெயர். அந்த சம்வர்த்தகா இப்போது ஜராசந்தனின் ஆட்களை ஒரு வழி பண்ணிக் கொண்டிருந்தது. பார்த்தான் தாரதன்.

மிகவும் முட்கள் நிறைந்த ஒரு கதையை எடுத்துக்கொண்டு பலராமன் மேல் ஆக்ரோஷத்தோடு பாய்ந்தான். அவனை பலராமனின் கலப்பை இடியெனத் தாக்கியது. மண்டை உடைந்து கீழே விழுந்தான் தாமரன். பலராமன் இப்போது ஜராசந்தனுக்கு நேரடியாக அறைகூவல் விடுத்தான். “எங்கே இருக்கிறாய் ஜராசந்தா? வெளியே வா! என்னோடு நேருக்கு நேர் சண்டையிடுவாய்! அதற்கெனவே நான் வந்துள்ளேன்.” என்று தன் இடிமுழக்க்க் குரலில் கூவினான். க்ஷத்திரியர்கள் இப்படியான அறைகூவலைத் தவிர்க்க முடியாது. அவர்கள் வீரத்துக்கு அது இழுக்கு. ஜராசந்தன் இதை ஏற்றே ஆகவேண்டும். வேறு வழியில்லை. தன்னுடைய வலிமை பொருந்திய கதையை எடுத்துக்கொண்டு ஜராசந்தன் பலராமனோடு போரிட வந்தான்.

அதைப் பார்த்த பலராமனும் தன் கலப்பையைக் கருடன் ஒருவனிடம் கொடுத்துவிட்டுத் தானும் கதையை எடுத்துக் கொண்டான். இருவரும் ஒருவருக்கொருவர் சளைத்தவர்களாய்த் தெரியவில்லை. வயதில் சிறுவனாய் இருந்தாலும் பலராமன் ஆகிருதியில் மிகவும் வளர்ந்திருந்தமையால், ஜராசந்தனோடு சம்மாகவே தெரிந்தான். அனைவரும் சுற்றிச் சூழ்ந்து நின்ற வண்ணம் பார்க்க, இருவரும் சண்டைக்கு ஆயத்தம் ஆனார்கள். போட்டி மிகவும் விறுவிறுப்பாக நடந்தது. வெற்றி, தோல்வியை நிர்ணயிப்பதும் கடினம் எனப் புரிந்தது. ஜராசந்தனைப் போன்ற ஒரு மாபெரும் சக்கரவர்த்தி தோற்றால் அதைவிடப் பெரிய அவமானம் வேறு இல்லை. அவன் இறந்தாலோ ஒரு மாபெரும் சாம்ராஜ்யம் சின்னாபின்னமாகும். ஜராசந்தன் பலராமன் எதற்கும் சளைத்தவன் இல்லை என்பதை வெகு சீக்கிரம் புரிந்து கொண்டான்.

தன்னுடைய முட்டாள்தனத்தாலும், அறிவற்ற, யோசனையற்ற இந்த நடவடிக்கையால் தனக்குக் கிடைக்கப் போகும் அவமானத்தை எண்ணி மனம் வருந்தினான். இந்த இடைச்சிறுவன் மட்டும் என்னைக் கொன்றுவிட்டானால், என் கதை அனைவராலும் பரிகசித்துச் சிரிக்கும்படியான ஒன்றாகிவிடுமே? ஜராசந்தன் இதை எண்ணிய அந்த ஒரு நொடி கொஞ்சம் அலக்ஷியமாகவே இருந்துவிட்டான். அடுத்த நொடி பலராமனின் கதை ஜராசந்தனின் கதையைத் தூக்கி வீசி எறிந்தது. ஜராசந்தன் நிராயுதபாணியாக நிற்க, கண்ணனின் பாஞ்சஜன்யம் முழங்க ஆரம்பித்த்து.


பூம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

வெற்றிச்சங்கம் முழங்கக் கண்ணன் அந்த வட்டத்துக்குள் புகுந்தான். கூடவே தாமகோஷனும், உத்தவனும் வரக் கண்ணன் பலராமன் கைகளைப் பிடித்தான். “அண்ணா, சற்றுப் பொறுங்கள். இன்னும் இவனைக் கொல்ல நேரம் வரவில்லை.” என்றான். ஜராசந்தனின் மண்டையைப் பிளக்க இருந்த பலராமனின் கதை சற்றே தாழ்ந்த து. ஜராசந்தன் மனதில் அவனையும் அறியாமல் பக்தியோடு கலந்த பயம் தோன்றியது. இன்று வரை இந்த உணர்வை அவன் அனுபவித்ததில்லை. அது மட்டுமா? எல்லாரும் கண்ணனைப் பற்றிப் பேசி, வர்ணித்தக் கேட்டிருக்கிறானே தவிர, அவன் இன்று வரை கண்ணனை பார்த்த தில்லை. இப்போதோ, ஆஹா, இது என்ன? இந்த்ச் சிறுவன் இப்படி ஜகஜ்ஜோதியாய்ப் பிரகாசிக்கிறானே? அவன் நிறமும், அவன் உடலின் மென்மையும், அவன் குரலின் தண்மையும் பார்த்தால் இவனா அப்படிச் சண்டையிட்டான் எனத் தோற்றுகிறதே?

ஒரு வினாடிக்கும் குறைவான நேரத்தில் கண்ணனின் இருப்பின் நிச்சயத்தன்மையும், அவன் நிறத்தின் அழகும், கண்களின் வசீகரமும், மாறாத புன்னகையின் கவர்ச்சியும், குரலின் மென்மையும், அப்போதும் அதில் தெரிந்த உறுதியும், கண்டிப்பும் ஜராசந்தனின் மனதுக்குள் சென்று நுழைந்து அங்கே சிம்மாசனமிட்டு அமர்ந்துகொண்டது. அவனையுமறியாமல் அவன் உடல் நடுங்கத் தொடங்கியது. தன்னையுமறியாமல் கைகளைக் கூப்பிவிடுவோமோ என ஜராசந்தன் நினைக்கும் வேளையில் அமுதமெனக் கண்ணன் மீண்டும் பேசினான்.

“அனுவிந்தா, சக்கரவர்த்தியை அவர் ரதம் இருக்குமிடம் அழைத்துச் செல். அவர் உடல் சுகமில்லாமல் இருக்கிறார் பார். “ என்றான் புன்னகை மாறாமல். தன் வாழ்க்கையிலே முதல்முதலாக அவமானத்தை உணர்ந்தான் ஜராசந்தன். ஆஹா, எப்பேர்ப்பட்ட அவமானம்! ஜராசந்தன், மகதச் சக்கரவர்த்தி, ஆர்யவர்த்தம் மட்டுமின்றி பாரதம் முழுதுமே அவன் பெயரைக் கேட்டால் நடுங்குவார்கள். அப்படிப்பட்ட ஒருவன் இன்று இடைச்சிறுவன் ஒருவனால் உயிர்ப்பிச்சை அளிக்கப் பட்டுத் திரும்பிச் செல்கிறான். என் வாழ்க்கையின் மிக மோசமான நாள் இதுவே! ஜராசந்தன் மனம் பற்றி எரிந்த்து. அவமானத்தீயில் எரிந்து சாம்பலாகிவிடுவான் போல் பதறினான். ஆனால் கூடவே அவன் மனம் அவனை எச்சரித்த்து. இதுவல்ல சமயம்! பேசாமல் இரு! ஜராசந்தன் இப்போதைக்கு மனம் சொல்வதைக் கேட்டு நடப்பதே நன்மை என்ற முடிவுக்கு வந்தான். வேகமாய் அனுவிந்தனின் ரதத்துக்குச் சென்றான். ரதத்தில் ஏறி அமர்ந்தான். போர்க்களத்தில் சுற்றிக் கொண்டிருந்த குதிரைகளில் சில பிடித்து வரப்பட்டு தேரில் பூட்டப் பட்டது. ரதம் வேகமாய்ப் பறந்தது.

இளம் கருடன் வினதேயன் சந்தோஷத்தில் ,”க்ரீச்ச்ச்ச்ச்”சிட்டுக் கத்திக் கொண்டு ஆடிப் பாடினான்.

Saturday, August 7, 2010

கண்ணன் வருவான், கதை சொல்லுவான் 2-ம் பாகம்!

பலராமனின் கலப்பையும், கண்ணனின் சக்கரமும்


ஜராசந்தனும் பாதித் தூக்கத்திலே எழுந்திருக்க வேண்டிய கட்டாயம். அனைவரும் நல்ல தூக்கத்தில் இனி என்ன என்ற எண்ணத்தில் இருந்ததால் , திடீரென இப்படித் தண்ணீர் வேகமாய் ஒரு நீல நிறச் சுவரைப் போல் வரும் என எதிர்பார்க்கவில்லை. கண்ணனின் நிறத்தைப் பற்றி அனைவரும் அறிந்திருந்தபடியால், கண்ணனே நீராக மாறி வந்துவிட்டானோ என்னும்படிக்கு நீல நிறச் சுவர் அந்த மலையின் இரு பக்கங்களிலும் ஓடோடி வந்து கொண்டிருந்தது. ஒரு மாபெரும் அகழியைப் போல் அந்த மலைப் பிரதேசத்தைச் சுற்றி வளைத்துக் கொண்டது. அண்ணாந்து பார்க்கும் உயரத்தில் வந்து கொண்டிருந்த நீரின் வேகத்தால் அவர்கள் காய்ந்த புற்களில் வைத்த நெருப்பு அணைய ஆரம்பித்தது. மலையின் உச்சிக்குப் போகும் என எதிர்பார்த்த நெருப்பை மலையின் உயரத்துக்குச் சற்றும் குறையாமல் ஓடோடி வந்த நீர்ப்பெருக்கு அணைத்துக் கொண்டிருந்ததைக் கண்ணுற்ற அனைவரும் திக்பிரமை பிடித்து நின்றனர். இது எப்படி?? யாரால் இது நடந்தது? மலைக்குக் கீழே இருந்த சமுத்திரத்தின் நீர் எப்படி இம்மாதிரி வெள்ளமாய்ப் புகுந்து கொண்டு மலையை அரண்போல் காக்கிறது? ஜராசந்தனின் புருவங்கள் நெரிந்தன. கண்ணன் அற்புதங்களையும், ஆச்சரியங்களையும் நிகழ்த்துவான் என அனைவரும் பேசிக் கொண்டதும், அது உண்மைதான் எனச் சிலர் மூலம் அறிந்ததும் ஜராசந்தனின் நினைவுக்கு வந்து ஒருவேளை அனைவரும் சொல்வதில் ஏதேனும் உண்மை இருக்கக் கூடுமோ என யோசிக்க வைத்தது.

மற்றவர்களுக்குச் சந்தேகமே இல்லை. கண்ணன் சாமானியமான ஒரு மனிதன் அல்ல. இந்த அற்புதம் அவன் நிகழ்த்தியதே. கடலரசனும் அவனுக்கு அடி பணிந்து விட்டான். ஆகா, அவன் தெய்வம் என அனைவரும் கூறுவதில் உண்மையும் இருக்குமோ? ஆனால் ஜராசந்தனோ? இவன் மனிதனா? பிசாசா? என நினைத்தான். அடிவானத்தில் வெள்ளி முளைத்து விட்டது. இன்னும் சற்று நேரத்தில் பொழுது விடிந்து விடும். எங்கும் கருக்கிருட்டு படர்ந்திருந்தது. அப்போது திடீரெனப் பல நூறு கழுகுகள் சப்தமிடுவது போல் அனைவருக்கும் ஒரு பலத்த ஓசை கேட்கவே, அனைவரும் திரும்பிச் சுற்றும் முற்றும் பார்த்தனர். ஒரு மாபெரும் ராக்ஷதன் ஒருவன் என்னவென்றே இனம் காண முடியாததொரு ஆயுதத்தை எடுத்துக் கொண்டு அவர்கள் மேல் பாய்ந்தான். உற்றுக் கவனித்ததில் கலப்பை எனப் புரிந்தது. கழுகைப் போல் தோற்றமளித்த சில உருவங்களும் அவனைப் பின் தொடர்ந்து அவர்கள் மேல் பாய்ந்தன. வில்லாளிகளும், வாள் வீரர்களும் சடசடவென அந்தக் கலப்பையால் அடிக்கப் பட்டனர். கண்மூடித் திறப்பதற்குள் பல வீரர்கள் கீழே விழ, மற்றவர்கள் பயந்து ஓட, ஓடுபவர்கள் முன்னால் இருப்பவர்களைத் தள்ள, முன்னால் இருப்பவர்கள் கீழே விழ, அனைவரும் அவர்கள் மேல் விழ என ஒரே களேபரமாக ஆகியது. யாருக்கும் முதலில் என்ன செய்யவேண்டும் என்று புரியவில்லை. தாக்கியவர்களோ அவர்கள் புரிந்து கொண்டு செயலாற்ற இடமும் கொடுக்கவில்லை. ரதங்கள் உடைபட்டன. குதிரைகள் கட்டவிழ்த்து விடப் பட்டன. குதிரைகள் கனைத்துக்கொண்டு அடக்குவாரின்றி அங்குமிங்கும் ஓடியதில் பல வீரர்கள் மிதிபட்டனர். சில குதிரைகள் பயத்தில் தங்கள் மேல் இருந்த வீரர்களைக் கீழே தள்ளிவிட்டுக் காட்டை நோக்கி ஓடின. உடைந்த ரதங்கள் விழுந்து வீரர்களுக்கு அடிபட்டது. இத்தகையதொரு திடீர்த் தாக்குதலை எதிர்பார்க்காத ஜராசந்தனும், அவன் வீரர்களும் தங்களைச் சமாளித்துக் கொள்வதற்குள் இவை அனைத்தும் நடந்துவிட்டன. ஜராசந்தனும் அவன் நண்பர்களும் தங்கள் ஆயுதங்களை எடுத்துக் கொண்டு தயார் ஆவதற்குள்ளாகப் பலருடைய மண்டைகள் கதாயுதங்களால் உடைபடும் சப்தம் கேட்டது. கூடவே கழுகின் கீச்சுக்குரல்களும் கேட்கவே அந்த அதிகாலை கருக்கிருட்டில் தங்களைத் தாக்குவது யார் என்றே அவர்களால் அறிந்து கொள்ள முடியவில்லை.

குழப்பம் நீடித்தது. இங்கே நடந்து கொண்டிருக்கும் அதிசயங்களைப் பார்க்கும் ஆசையில் உதய சூரியனும் கொஞ்சம் பயத்துடனேயே மெல்ல மெல்லத் தன் சிவந்த கிரணங்களை வெளியிட்டான். செக்கச் சிவந்த சூரியனின் கிரணங்களின் பிரதிபலிப்பா? அல்லது அங்கே ரத்த ஆறு ஓடியதா? திகைத்த அவர்கள் அனைவரும் கண்டது அவர்களுக்கு எதிரே கையில் ஏர்க்கலப்பையோடு சத்தம் போட்டு உறுமிக் கொண்டும், கத்திக்கொண்டும், ஒரு ராக்ஷதன் போல் காட்சி அளித்த பலராமன் தான். பலராமனுக்குச் சற்றுத் தள்ளி மலைப்பாறை ஒன்றின் மேல் கையில் வில்லும், அம்புகளும் ஏந்திக்கொண்டு காற்றைவிடக் கடிதாக விரைந்து செல்லும் அம்புகளை ஏவிக்கொண்டிருந்தான் கிருஷ்ணன். ருக்மி கிருஷ்ணனை அடையாளம் கண்டு கொண்டு அவனைத் தெரியாத அனைவருக்கும் கண்ணனைச் சுட்டிக் காட்டினான். “அதோ, அவன் தான் கண்ணன்! விடாதீர்கள் அவனை!” என்று கத்தினான். அவந்தி நாட்டு இளவரசர்கள் விந்தன், அநுவிந்தன், மற்றும் கோனார்டின் இளவரசன் அனைவரும் தங்கள் கைகளில் கிடைத்த பாறைகளை எடுத்துக்கொண்டு கண்ணன் மேல் வீசி எறிந்தனர். கண்ணன் அவர்கள் மேல் ஒரு கண்ணை வைத்துக் கொண்டே தன்னுடைய வில்லையும் அம்புகளையும் கருடன் விநதேயனிடம் கொடுத்துவிட்டுத் தன்னுடைய சக்ராயுதமான சுதர்சனத்தைக் கையில் எடுத்தான்.

அது என்ன ஆயுதம் என எதிரிகள் நிதானிப்பதற்குள்ளாகக் கண்ணனின் கைகளில் இருந்து பறந்து வந்தது சக்கராயுதம். அது பறந்து வரும்போது ஒளிவீசிக் கொண்டு வந்ததையும், “ஓம்” என்ற ரீங்காரத்தையுமே கேட்டனர் அனைவரும். கண்ணைப் பறிக்கும் ஒளியுடன் வரும் அந்த ஆயுதத்தை அவர்கள் தடுப்பதற்குள்ளாக இளவரசன் கோனார்டின் தொண்டையை அது அறுத்துத் தள்ளியது. மீண்டும் அதே வேகத்தோடு கண்ணனின் கைகளுக்குள் சென்றுவிட்டது. இது என்ன புதுமையான ஆயுதம்?? எதிரியை வீழ்த்திவிட்டு மீண்டும் சொந்தக்காரர் கைகளுக்கே சென்று விடுகிறதே? ஜராசந்தனும், அவன் ஆட்களும் ஆயுதத்தின் புதுமையையும், வேகத்தையும், எதிரியை அது வீழ்த்திய வித்த்தையும் கண்டு ஆச்சரியப் பட்டார்கள் என்றால் கண்ணனின் ஆட்களோ, ஏற்கெனவே ஆயுதம் இப்படி வேலை செய்யும் எனக் கண்ணன் சொல்லி இருந்தாலும், அதை நேருக்கு நேர் கண்ட அதிசயத்தில் ஆழ்ந்து போனார்கள்.

அநுவிந்தன் கண்ணனைக் கொல்வதற்காக தன்னுடைய வில்லில் அம்பைத் தொடுத்து நாண் ஏற்றினான். கண்ணனோ அவனைப் பார்த்து, “அநுவிந்தா, நாம் இருவரும் ஒரே குருகுலத்தில் படித்தவர்கள். நாம் சகோதரர்கள் ஆவோம். நமக்கு குரு சாந்தீபனி எப்படி ஒரு தகப்பன் ஸ்தானத்தில் இருக்கிறாரோ, அப்படியே நாம் குருகுல சகோதரர்கள். அதை மறக்காதே! நாம் ஒருவரோடு ஒரு வர் சண்டையிடுவது நம் குருவிற்கு உவப்பாய் இராது!” சொல்லிக் கொண்டே கண்ணன் சும்மா இருக்கவில்லை. தன் சக்கரத்தை மீண்டும் ஏவினான். என்ன ஆச்சரியம்? அந்தச் சக்கரம் இப்போது அநுவிந்தனின் தலைக்கு மேலே விர்ர்ர்ர்ர்ரென்று சுழன்று கொண்டிருந்தது. தன் நடுங்கும் கைகளை மறைத்துக் கொண்ட அநுவிந்தன், அம்பை வில்லில் இருந்து எடுத்தான். உடனே சொல்லிக் கொடுத்தாற்போல் சக்கரம் கண்ணனின் கைகளுக்குப் போனது. அதைக் கண்ட ருக்மி ஆத்திரத்தோடு தன் வில்லில் இருந்து அம்பை உடனடியாகக் கண்ணன் மேல் ஏவ, கண்ணனின் சக்கரமோ அதை விட வேகமாய் வந்து அம்பைப் பொடிப் பொடியாக்கியதோடு அல்லாமல் ருக்மியின் கையில் இருந்த வில்லையும் பொடியாக்கிவிட்டுக் கண்ணனிடம் திரும்பியது.


கண்ணன் சிரித்துக் கொண்டே, “கைசிகனின் பேரனே, திரும்பிப் போ!” என்று கூறினான். பின்னர் தானும் ஒரு கதையை எடுத்துக் கொண்டு தங்களைத் தாக்க வருபவர்கள் மேல் பாய்ந்தான்.

Thursday, August 5, 2010

கண்ணனுக்காக இந்தப் புதிய பக்கத்தை ஆரம்பிக்க வேண்டிய கட்டாயம்!

விநாயகர் துணை! விநாயகனே வெவ்வினையை வேரறுக்க வல்லோன், விநாயகனே நீ தான் காப்பாற்றணும்!



நண்பர்களுக்கு ,
அனைவருக்கும் வணக்கம். அப்படி ஒண்ணும் பெரிசா எழுதறதில்லை.இரண்டு நாட்கள் முன்னாலே தான் தினசரிகளில் கூகிள் தனியாரின் வலைப்பக்கங்களை திடீரென மூடுவது குறித்துப் படிச்சேன். அப்போக் கூட எனக்கே இது வந்து சேரும்னு நினைக்கவே இல்லை. ஏனென்றால் நான் யாரையும் தாக்கியும் எழுதறதில்லை. தனிப்பட்ட நபரைக் குறித்தும் எதுவும் எழுதறதில்லை. யாரோடயும் சண்டை போட்டதில்லை. அந்தச் செய்தியில் சில நபர்களின் தனிப்பட்ட தாக்குதல்களைக் கண்டே மூடினதாய்க் கூறி இருந்தது. ஆனால் நான் பல பதிவுகளுக்கும் போனது கூட இல்லையே! எந்தவிதமான பிரச்னைகளும் நடப்பது தெரியாது. நான் பாட்டுக்கு ஏதோ எழுதிட்டு இருக்கேன். ஏன் இப்படி அடுத்தடுத்து சோதனை? ஒண்ணுமே புரியலை. கண்ணன் தொடரை முடிந்த வரைக்கும் பாக் அப் எடுக்க முயற்சி செய்யறேன். எந்த அளவுக்கு அதிலே வெற்றி கிடைக்கும்னு தெரியலை. போனது போகட்டும். இனி நடப்பவை நல்லதாக இருக்கப் பிரார்த்தனைகளுடன், விநாயகர் கிருபையில் அனைத்தும் இனி சரியாகவும் வேண்டுகிறேன். மற்ற சிநேகிதர்களும் சிநேகிதிகளும் கவனமாக இருக்கவும் பிரார்த்திக்கிறேன்.