Sunday, June 30, 2013

உத்தவனைக் காத்த ராக்ஷஸன்!

கருணையான புன்சிரிப்பு ஆசாரியரின் முகத்தில் காணப்பட்டது.  “இதிலிருந்து எங்கனம் வெளியேறுவது என்பதைக் குறித்து நாம் நிதானமாய்ச் சிந்திக்கலாம்.” என்ற வியாசர், உத்தவனைப் பார்த்து, “உத்தவா, நீ ஏன் இந்தப் பெண்களை மணந்து கொள்ளக் கூடாது?” என்று வினவினார். நம்முடைய குலாசாரப்படி மணந்து கொள்வாயாக.  இந்தப்பெண்களுக்கும் இதில் சம்மதம் இருக்கும் என்றே நினைக்கிறேன்.   உன் தாத்தா ஷூரன் மரிஷாவைத் தூக்கிச் சென்றது போல் நீயும் இவர்களை துவாரகைக்கு அழைத்துச் சென்றுவிடு!” என்றார் வியாசர்.  உத்தவன் நடுநடுங்கிப் போனான்.  தன்னுடைய மகத்தானதொரு சபதம், அதுவும் ஷாய்ப்யா போன்றதொரு பெண்ணைத் துறந்ததின் பின்னர் மிகுந்த மனக்கட்டுப்பாடுடன் இருக்கப் போவதாய்ச் செய்த சபதம் உடைந்து விடுமோ என்று பயந்தது மட்டுமல்ல;  தன் யாதவ குலத்தினருக்கு முன்னர் இரு நாககன்னிகளைத் தன் மனைவியராய்க் கொண்டு செல்லவும் அவன் விரும்பவே இல்லை.  அந்த எண்ணமே அவனைக் கொன்றுவிடும் போல் இருந்தது.

“ஆனால், ஆசாரியரே, நான் திருமணமே செய்து கொள்ளப் போவதில்லை என சபதம் செய்திருக்கிறேன். அதோடு பார்க்கும் பெண்களை எல்லாம் அந்த சாக்ஷாத் அம்பிகையின் திருவுருவாகவே பார்த்து வருகிறேன்.  எல்லாப் பெண்களும் என்னைப் பொறுத்தவரை அம்பிகையின் திருவுருவே!” என்றான் மிக இரக்கமான குரலில்.  விஷமத்தனமானதொரு சிரிப்பும் ஒளியும் ஆசாரியரின் கண்களில் படர்ந்தது.  உத்தவன் மேலும் தொடர்ந்து, “குருவே, உங்களை விடச் சிறந்ததொரு தபஸ்வி இவ்வுலகில் இல்லை.  நான் ஆணவத்துடனோ, வெட்கம் கெட்டோ பேசுவதாக நினைக்காதீர்கள்.  நான் இம்மாதிரியான ஒரு சபதம் எடுத்திருக்கிறேன் என்பதை அறிந்தும் அதை உடைத்துத் திருமணம் செய்து கொள்ளும்படி நீங்கள் என்னை எப்படிக் கேட்டீர்கள் என்பது எனக்கு வியப்பை அளிக்கிறது.”  மிகப் பணிவான குரலிலேயே சொன்னான் உத்தவன். 

“நான் ஒரு தபஸ்வியாக இருக்க முயற்சிக்கிறேன்; முயற்சித்தேன்; முயல்வேன்.  ஆனால் காமதேவனை வெல்வது என்பது எல்லோராலும் முடியக் கூடிய ஒன்றல்ல மகனே!  நான் தபஸ்வியாக இருக்க நினைப்பதினாலேயே அதைக் குறித்து அதிகம் அறிந்திருக்கிறேன்.  எனக்கும் சுகன் என்ற பெயரில் ஒரு மகன் இருப்பதை அறிவாய் அன்றோ!  காமதேவனை சாமானியர்கள் அனைவரும் வெல்லலாம் என நினைப்பது முட்டாள்தனம் மகனே!  உலகில் சிருஷ்டி நடப்பது எவ்வாறு?  மிகச் சிலருக்கே இறைவனால் அத்தகையதொரு பாக்கியம் கிடைக்கிறது.  மிக மிகச் சிலருக்கே.  மற்றவர்கள் அனைவருமே இவ்வுலக வாழ்க்கையில் உழன்றே ஆகவேண்டும்.  காமனை எதிர்கொள்ள முடியாமல் அவனுக்கு ஆட்பட்டே வாழ்க்கையை நடத்த வேண்டும்.  ஆனால் மகனே, அதிலும் மிகச் சிலர், தங்கள் திருமணத்தின் மூலம் எது நடக்கவேண்டும் என்பதைச் சரியாகப் புரிந்து கொண்டு அதன்படி நடந்து தங்கள் இல்லறவாழ்க்கையை முடித்துக் கொண்டு ஞானமார்க்கத்தை நாட வருகின்றனர்.  அப்படி வருபவர்கள் எங்களில் ஒருத்தராக ஆவதோடு அல்லாமல் எங்களைப் போன்ற தபஸ்விகளை வலிமை மிக்கவர்களாகவும் ஆக்குகின்றனர்.”

ஆசாரியரின் வார்த்தைகளைப் பணிவுடனும், விநயத்துடனும் கேட்டு வந்த உத்தவன் அதே சமயம் தன்னைக் குற்றம் செய்ததாகவும் கருதிக் கொள்ளாமல் இயல்பாகவே இருந்தான்.  நாகர்கள் அனைவரும் ஆசாரியர் உத்தவன் மனதை மாற்றச் செய்த முயற்சிகளைக் கண்டு உள்ளூர மகிழ்ந்தாலும் உரையாடலின் போக்கு அவர்களைத் திகைக்க வைத்தது.  அதன் முக்கியத்துவம் என்ன என்பதையும் அவர்களால் புரிந்து கொள்ள இயலவில்லை.  அவர்கள் புரிந்து கொண்டது எல்லாம் ஒரு ஆரிய இளவரசன் தங்கள் குல மகளிரை மணந்து கொள்ளும்படி வற்புறுத்தப்படுகிறான் என்பது மட்டுமே.  ஆனால் உத்தவனோ இதிலிருந்து தப்பும் வழியைத் தேட விரும்பினான்.  அதற்கு அவனுக்குக் கால அவகாசம் தேவைப்பட்டது. 

“ஆசாரியரே, உங்கள் ஆலோசனைகள் அனைத்தும் எனக்கு நீங்கள் இட்ட கட்டளையாகவே கருதுகிறேன்.  ஆனாலும் ஆசாரியரே, எனக்குச் சிந்திக்கக் கொஞ்சம் நேரம் தேவை.  இப்போதே என்னால் எந்த முடிவையும் எடுக்க இயலாது.  தாத்தா ஆர்யகன் அவர்களுக்குத் தன் வணக்கத்தையும், தன் குல முன்னோர்களின் விசாரிப்புக்களையும் தெரிவிக்கக் கண்ணன் இங்கே வரப்போகிறான்.  குருவே, கண்ணன் வந்து சேரட்டும்.  நான் அவனைக் கலந்துஆலோசித்துச் சொல்கிறேன்.” என்றான் உத்தவன்.

ஆனால் கார்க்கோடகனுக்கு இதில் துளிக்கூட சம்மதமில்லை.  “இது மாபெரும் அவமானம்.  நம் குலப்பெண்களுக்கும்,  நம் திருமண முறைக்கும் இழைக்கப்பட்டதொரு மாபெரும் துரோகம்.  இது எல்லாம் நடவாத ஒன்று!” எனத் தீர்மானமாகச் சொன்னான்.

“ஆம், கார்க்கோடகா, நீ சொல்வது சரியே!” என்ற வியாசர், அவன் மனைவியைப் பார்த்து, “ரவிகா, நீ என்னை நம்புகிறாயல்லவா?” என்று வினவினார்.  உத்தவனுக்கு முதுகுத் தண்டில் சில்லிட்டது. கைகால்கள் செயலற்றுப்போயின.  அந்த இரு பெண்களையும் மணந்து கொள்ளுமாறு வியாசர் தன்னிடம் சொல்லிவிட்டால்?  என்ன செய்வது?  ஆசாரியரின் வார்த்தைகளை எவ்வாறு மீறுவது? உத்தவன் மனம் வேகமாகச் சிந்தித்தது.  “ஆசாரியரே!” என ஏதோ சொல்ல ஆரம்பித்தான் உத்தவன்.  அப்போது திடீரென அங்கே கூக்குரலும் சப்தமும், அழுகையுமாகக் கேட்டது.  மனிதர்கள் ஓட்டமாக ஓடிவரும் காலடிச் சப்தங்கள்.  ஓடி வருகிறார்களா?  ஓடித் தப்பிக்கிறார்களா என்பதே புரியவில்லை.  ஒரே கூச்சலும் குழப்பமுமாக நிலவியது அந்தச் சூழ்நிலை.   அரசனின் மாளிகைச் சுற்றுச் சுவருக்கு வெளியே, “ராக்ஷசன், ராக்ஷசன்!” என்ற கூக்குரல், கூப்பாடு.  மக்கள் பயந்து ஓடும் ஓசை.  அலறும் குரல்கள்.

அச்சத்தில் ஆழ்ந்த அங்கிருந்த அரசகுலப்பெண்கள் குழப்பத்தில் ஒருவரை ஒருவர் நெருக்கிக் கட்டிப் பிடித்துப் பாதுகாப்புத் தேடிக் கொண்டனர்.  கார்க்கோடகன், மணிமான், இன்னொரு உறவினர் மூவரும் தங்கள் ஈட்டிகள், கேடயங்கள் ஆகியவற்றை எடுத்துக் கொண்டு வெளியே ஓடினார்கள்.  தன்னைச் சுற்றி ஏற்படுத்தப்பட்டதொரு தவிப்பும், கலக்கமும் நிறைந்த சூழலை உதறி எறிந்துவிட்டுத் தன் வில்லையும், அம்புகளையும் எடுத்துக்கொண்டு உத்தவனும் உதவி செய்ய ஓடினான். 


புயல் ஒன்று வெளியே நர்த்தனமாடியதோ!

உத்தவன் தப்புவானா?

உத்தவன் மீண்டும் தன் பற்களை இறுகக்கடித்துக் கொண்டான்.  தன் உடலை விறைப்பாக வைத்துக் கொண்டான். எவ்விதமான உணர்வுகளுக்கும் இடம் கொடுக்காவிதத்தில் தன் நாடி, நரம்புகளை மாற்றிக் கொண்டான். தன் உடலை விட்டுத் தான் தனியே சென்றுவிட்டதாக உணர்ந்து கொண்டான். அவன் மனம் பரந்த வெளியில் சென்று அங்கே காணக்கிடைக்காப் பேரின்பத்தில் ஆழத் துடித்தது.  உத்தவன் தன்னை மறந்தான்.  தன் மதிப்புக்கும், மரியாதைக்கும் உரிய மூதாதையர்களின் பெருமையை மட்டுமே நினைவு கூர்ந்தான்.  அவர்கள் அனைவரும் அவன் உதவிக்கு வர வேண்டினான்.  விரைவில் அவன் உடல் விறைத்துக்கொள்ள வந்திருந்த இரட்டையரில் இன்னொருத்தி செய்த முயற்சிகளும் தோற்றுப் போயின.  இவளும் விம்மி, விம்மி அழ ஆரம்பித்தாள்.  ஏமாற்றம் தாங்க முடியாமல் எழுந்து அழுது கொண்டே ஓடிப் போனாள்.   கண் இமைக்கும் நேரம் அவளைத் திரும்ப அழைக்க எண்ணிய உத்தவன் உடனடியாக ஆரியர்களின் உயர்ந்த நோக்கத்தை நினைவு கூர்ந்தான்.  தன் மனைவி அல்லாத மற்றொரு பெண்ணிடம் எந்தவிதமான நெருக்கத்தையும் ஆரியர்கள் காட்டுவதில்லை என்பதை நினைத்த உத்தவனுக்கு அவளைத் தான் அழைப்பது மாபெரும் தவறு எனப் புரிந்து அமைதி காத்தான்.

“ஆஹா, மஹாதேவா, கடவுளே, இதெல்லாம் என்ன?  நான் ஏன் இங்கே வந்தேன்?  எனக்கு ஏன் இப்படி எல்லாம் நடக்கிறது!  என்னுடைய புனிதமான கொள்கையைக் கடைப்பிடிக்க வேண்டி ஷாய்ப்யாவை நான் ஏற்க வேண்டாம் என முடிவெடுத்ததோடு அல்லாமல், ஆரியர்களின் திட வைராக்கியத்தோடு ஒரு துறவிக்குரிய புனிதமான வாழ்க்கையையும் வாழ ஆரம்பித்து விட்டேன்.  ஆனால்….. ஆனால்…. இதன் மூலம் நான் இந்த இளம்பெண்களின் மனதைச் சுக்கு நூறாக்கி இருக்கிறேன்.  என்ன செய்ய முடியும்?? பாட்டியார் மரிஷாவின் யோசனையைக் கேட்டு நான் இங்கே வந்திருக்க வேண்டும். “  அதன் பின்னர் உத்தவன் படுக்கையில் புரண்டு கொண்டே இருந்தான்.  அன்றிரவு முழுதும் சரியாகத் தூங்கவில்லை.  அதிகாலை வழக்கம் போல் எழுந்த போதும் அவனிடத்தில்  வித்தியாசமானதொரு மனநிலையே காணப்பட்டது.  அந்தப் பெண்களின் பரிதாபமான நிலையை எண்ணி மனம் வருந்தினாலும் தனக்கு வைக்கப்பட்ட அக்னிப் பரிக்ஷையில் தான் தேறியது குறித்து சந்தோஷமும் அடைந்தான்.  நதிக்கரைக்குச் சென்று தன் அன்றாட நித்ய கர்மாநுஷ்டானங்களைச் செய்து கொண்டான்.   சற்று நேரத்தின் மணிமான் அவனை வந்து சந்தித்தான்.  ஆனால் அவன் நடத்தையில் பெருமளவு மாறுதல் காணப்பட்டது.  அதோடு அவன் உத்தவனைப் பார்த்த பார்வை.  அடிபட்ட பறவை ஒன்றின் வருத்தம் அவன் கண்களில் தெரிந்தது.  நேற்று வரை அந்நியோன்னியமாகப் பழகிய மணிமானின் இன்றைய நடத்தை அவன் யாரோ, உத்தவன் யாரோ என எண்ணும்படி மாறுதல்கள் இருந்தது.  ஆஹா, தன் இரட்டைச் சகோதரிகளை உத்தவன் அவமானம் செய்துவிட்டான் என்று மணிமான் தெரிந்து கொண்டுவிட்டான்.  அதனால் அவன் உத்தவன் மேல் மிகக் கோபமாக இருக்கிறான். 

நாகர்களின் வாழ்க்கை முறைக்கும், ஆரியர்களின் வாழ்க்கை முறைக்கும் உள்ள இந்த வித்தியாசம் தெள்ளத் தெளிவாய் உத்தவனுக்குப் புரிந்தது.  நாக கன்னிகள் இம்முறையில் தான் தங்கள் வாழ்க்கைத் துணையைத் தேடிக் கொள்வார்கள் போலும்!  இது அவர்கள் வழக்கமாகவே இருக்க வேண்டும்.  ஆனால் ஆரியர்கள் மத்தியில் இது மிகக் கேவலமான ஒன்று.  ம்ம்ம்ம்ம் யமனின் உலகம் என்னும் லோகத்தில் புனர்தத்தனை மீட்கச் சென்ற போது ஆசிகா இப்படித் தானே கண்ணனைப் பார்த்ததுமே அவன் மேல் காதல் கொண்டாள்.  ஒரு விஷயம் தெளிவாகப் புரிந்தது உத்தவனுக்கு.  இந்த இரட்டையர்கள் இருவரும் அனைவருக்கும் தெரிந்தே தான் உத்தவனை அணுகி இருக்க வேண்டும்.  அவர்கள் சகோதரனும், பெற்றோரும் இதற்கு ஒப்புதல் அளித்திருக்க வேண்டும்.  அவர்களின் அழைப்பை அவன் நிராகரித்தது அவர்களை அவன் மதிக்கவில்லை என்று பொருள் படுமோ?  அவர்களின் விரோதத்தை அவன் சம்பாதித்துக் கொண்டுவிட்டானோ?  அவர்களின் குல வழக்கப்படி நடந்த ஒன்றை மதிக்காததன் மூலம் அவன் அவர்களின் தர்மத்தை மீறிவிட்டானோ!  அல்லது பொதுவானதொரு தர்மத்தை மீறி விட்டானோ! அவர்கள் மிகவும் மதிக்கும் சம்பிரதாயங்களை மீறிவிட்டானோ!

கிட்டத்தட்ட மதிய உணவு நேரத்துக்கு உத்தவன் ஆசாரியர் ஜைமினியால் வியாசரும், ஆர்யகனும் இருக்கும் இடத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டான்.  கொலைக் களத்துக்குச் செல்லும் பலி ஆடு போல் உணர்ந்தான் உத்தவன்.  தன் பல்லக்கிலிருந்து பிரிக்க முடியாத ஆர்யகனை ஆசாரியர் அருகே பார்த்தான் உத்தவன்.  ஆர்யகனின் மகன் கார்க்கோடகன் நெரித்த புருவங்களுடன் தீவிர யோசனையில் இன்னொரு பக்கம் பார்த்தவாறு நின்று கொண்டிருந்தான்.  அவன் முகத்திலிருந்து ஏதோ விரும்பத் தகாத விஷயம் நடந்திருப்பதை உணர்ந்தான் உத்தவன்.  கார்க்கோடகன் மனைவி, இன்னும் சில நாக குலப் பெண்டிரில் மூத்தவர்கள், மணிமானின் மனைவி, அட, இது என்ன?  இரட்டைச் சகோதரிகளுமே அங்கே காணப்பட்டனர்.  அந்தப் பெண்கள் அழுது அழுது வீங்கிய முகத்தோடும் இன்னமும் கண்ணீர் கொட்டும் கண்களோடும் காணப்பட்டதோடு அல்லாமல் உத்தவன் ஏதோ கொலைக்குற்றம் செய்துவிட்டானோ என அனைவரும் எண்ணும்படியாக அவனைக் குற்றவாளியாகப் பார்த்தனர்.  தான் செய்தது தன் வரையில் குற்றம் அல்ல என்பதை உத்தவன் உணர்ந்திருந்தான்.  ஆனால் தன்னை மிகவும் அருமையாக உபசரித்து அன்பு காட்டிய குடும்பத்தினருக்குத் தன் நன்றியை இவ்விதத்தில் இல்லாமல் வேறுவிதத்தில் தான் காட்டலாமே என்றும் எண்ணிக் கொண்டான்.  அவர்களைக் குடும்பத்தோடு தான் இவ்விதம் அவமரியாதை செய்துவிட்டோமே என்றும் வருந்தினான்.  தனக்கு நேரிடப் போகும் துன்பத்தை எண்ணி வருந்தியவன் அல்ல.  ஆனால் அந்தப் பெண்களுக்கு இழைத்தததாய்க் கருதப்படும் துன்பத்துக்கு அவன் காரணகர்த்தா என்பதோடு அதன் விளைவுகள் என்னவாக இருக்குமோ எனவும் எண்ணிக் கலங்கினான். குறிப்பாக அந்த இரு இளம்பெண்களின் நிலைமையையும் பார்த்தால் பரிதாபமாகவே இருந்தது.  உத்தவன் மனம் வருந்தியது.

ஆனால் அவர்கள் அனைவரிலும் அங்கே முழு திடத்தோடும் உத்தவனை நன்கு புரிந்து கொண்டும், அவன் செயலை உள்ளூரப் பாராட்டிக் கொண்டும் இருந்தவர் வியாசர் ஒருவரே.  உத்தவனைப் பார்த்து அர்த்தபுஷ்டியுடன் சிரித்தார்.  இப்போதும், இந்த நிலைமையிலும் அவரின் இந்தப் புன்னகையானது உத்தவன் மனதுக்கு ஆறுதலையும், சாந்தியையும் அளித்தது.  சரமாரியாக அவர்கள் அனைவரும் தனக்குக் கொடுக்கப் போகும் சாபங்களை எதிர்பார்த்த உத்தவனை ஆசாரியர் மிருதுவாக அழைத்துத் தனக்கருகே அமரச் சொன்னார்.  அவருடைய புன்னகை உத்தவனுக்கு உற்சாகமும் நம்பிக்கையும் ஊட்டியது.  இம்மாதிரியான ஒரு இக்கட்டான சூழ்நிலையில் உத்தவன் மாட்டிக் கொண்டதை ஏதோ விளையாட்டாகக் கருதுபவர் போல் இருந்தார் வியாசர்.  உள்ளூர ரசிக்கிறாரோ என்றும் உத்தவன் எண்ணினான். ஆசாரியர் உத்தவனை நோக்கிக் கேள்விகள் கேட்க ஆரம்பித்தார்.

“உத்தவா, இது என்ன நீ செய்தது? நாகர்களின் இணையற்ற தலைவனை,  உன் தவறான செயல்களின் மூலம் நீ மிகவும் வருந்தச் செய்துவிட்டாய்!  ஹூம், தலைவனை மட்டுமல்ல, அவரின் மொத்தக் குடும்பத்தையும்!”

“நான் என்ன செய்ய முடியும், ஆசாரியரே!’ உத்தவன் பரிதாபமாகக் கேட்டான்.  “என்ன தவறு செய்தேன்?” உத்தவன் காதுகளில் அந்தப் பெண்களின் அழுகை சப்தம் கேட்டது.  அவன் மனம் படபடவென அடித்துக் கொண்டது.  அவனுடைய இன்னொரு மனம் அவனை ஒரு இரக்கமற்றவன் எனக் குற்றம் சாட்டியது.


“நீ இந்தப் பெண்களைத் திருப்பி அனுப்பி விட்டாய்!” ஆசாரியர் இதைச் சொல்கையில் ஆர்யகன் தலையை ஆட்டித் தன் அதிருப்தியைத் தெரிவித்தான்.  ஒருவருக்கும் தெரியாமல் திருடும் ஒரு சிறுவன் அகப்பட்டுக் கொண்டுவிட்டதைப் போல்  முகத்தை வைத்துக் கொண்டு மிகவும் வெகுளியாக உத்தவன் பதில் சொன்னான். “ஆனால், ஆசாரியரே, நான் அவர்களை அழைக்கவில்லையே!”

Monday, June 24, 2013

அக்னிப் பரிக்ஷையில் உத்தவன்!

நடுங்கி விட்டான் உத்தவன்.  யார் இது?  பிங்கலையா?  கபிலாவா? யாராக இருந்தாலும் இந்த நேரம் இங்கே ஏன் வந்தார்கள்? உடலே ஆடியது உத்தவனுக்கு. அன்று வரையிலும், அவன் தாய், சகோதரிகள், கிருஷ்ணனின் சின்னத் தங்கை சுபத்ரா ஆகியோரைத் தவிர வேறெவரும் அவனைத் தொட்டுக் கூடப் பேசியதில்லை.  பிற பெண்களின் தொடுதலைக் குறித்து எதுவும் அவன் அறிந்திருக்கவில்லை.  ஆம், சில வருடங்கள் முன்னர் கரவீரபுரத்தின் இளவரசியான ஷாயிபாவை மணந்து இல்வாழ்க்கை நடத்தக் கனவு கண்டவன் தான் உத்தவன்.  ஆனால் அது எத்தனை முட்டாள் தனம் என்பதை உணர்ந்துவிட்டான். அதோடு ஷாயிபாவோ கண்ணனை அல்லவோ விரும்பினாள்!  கண்ணன் உத்தவனின் உயிருக்கும் மேலானவன்.  அவனுக்குக் கொடுக்கக் கடைசியாக உத்தவனின் உயிர் என்றால் அதையும் அன்றோ அவன் கொடுக்கச் சித்தமாக இருக்கிறான். ஒருதலையாக அன்றோ அவன் ஷாயிபாவைக் காதலித்தான்!  கண்ணன் அல்லவோ அவன் கண்களைத் திறந்தான்!

அதன் பின்னரே அவன் ஷாய்பாவை ஒரு வணங்கத் தக்க பெண்ணாக நினைக்கத் தலைப்பட்டான்.  தூரத்தில் இருந்து வணங்கும் ஒரு பெண் தேவதை.  அதன் பின்னரே தன் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தத் தொடங்கிய உத்தவன் அதில் வெற்றி கண்டதோடு அல்லாமல், இவ்வுலகத்துப் பெண்கள் மூலம் கிடைக்கும் இன்பத்தைக் குறித்துச் சிந்திப்பதும் இல்லை;  பெண்களோடான தன்னுடைய மனப்பாங்கையும் நடத்தையையும் மாற்றிக் கொண்டதோடு அல்லாமல் உறவுகளையும் அறவே துண்டித்துக் கொண்டுவிட்டான்.  அவனைப் பொறுத்தவரை எல்லாப் பெண்களுமே வணங்கத்தக்கவர்கள், தள்ளி நிறுத்திப் பார்த்து ஆராதிக்கப்படவேண்டியவர்கள்.  மேலும் கண்ணனிடம் இருந்த அவன் மாறா பக்தியானது, காமதேவனை அவனருகில் கூட நெருங்க விடாமல் தடுத்து வந்தது.  காமன் கணைகள் உத்தவனை எவ்விதத்திலும் பாதிக்கவில்லை.

உத்தவனுக்குத் தான் இப்போது ஒரு அக்னிப் பரிக்ஷையில் இருப்பதாகத் தோன்றியது.  இத்தனை நாட்களாகக் கண்ணன் முன்னிலையில் அடங்கிக் கிடந்த அவன் உணர்வுகளை இப்போது இங்கே இத்தனை தொலைவில் கண்ணனும் அருகில் இல்லாமல் தட்டி எழுப்பக் காமன் முயல்கிறான்.  அவன் வெல்வானா?  உத்தவன் வெல்வானா?  ஆர்யகன் குடும்பமே அவனை நல்முறையில் வரவேற்றுக் கவனித்து உபசரித்து வருகின்றனர்.  இரட்டைச் சகோதரிகளுமே அவனை நல்ல முறையில் தான் கவனிக்கின்றனர். அவர்கள் இருவரின் வெளிப்படையான பேச்சும், நடவடிக்கைகளும், அவன் பெண்களுக்கு எனத் தன் மனதில் எழுப்பி இருக்கும் உயர்ந்ததொரு பீடத்திலேயே அவர்களை வைத்தது.  அதில் மாற்றம் இல்லை.  ஆனால், ஆனால், இந்த இருவரில் ஒருவர் இப்போது நாங்கள் நீ வணங்கும் அந்தச் சிலையான பெண் தெய்வம் இல்லை;  உயிரும், சதையும் ரத்தமும் உள்ள பெண் எனச் சொல்ல வந்திருக்கிறாள்.  யார் இது?

"கிருஷ்ணா, கிருஷ்ணா, இது என்ன ஒரு அருவருப்பான சூழ்நிலையில் என்னைக் கொண்டு வந்து விட்டிருக்கிறாயே!  இவ்வுலகத்துப் பெண்கள் அனைவரின் மேலும் நான் வைத்திருக்கும் பக்தியும், அளப்பரிய மரியாதையும் இப்போது அதல பாதாளத்தில் வீழ்ந்துவிடும் போல் இருக்கிறதே.  என்னுடைய நன்னடத்தைக்குப் பாதகம் விளைந்துவிடுமோ?  கிருஷ்ணா, கிருஷ்ணா, நீ எங்கே இருக்கிறாய்?  என் இப்படி ஒரு சோதனை எனக்கு?  இம்மாதிரியான ஒரு இக்கட்டான சூழ்நிலையில் எனக்கு உதவ நீ இங்கே இருக்க வேண்டாமா?  நான் ஒரு நாககன்னியில் வளையங்களில் மாட்டிக் கொண்டு சிக்கித் தவிக்கிறேனே! "  சத்தமின்றி உத்தவன் கண்ணீர் விட்டு அழுதான்.  ஒரு நிமிஷம் அவனுக்குத் தான் காண்பது எல்லாம் கனவோ எனத் தோன்றியது.  ஆம்; ஆம்; இது கனவு தான்.  என்னுடைய பாட்டி வீட்டின் பெண்டிர் இத்தனை நாணமில்லாதவர்களாக இருக்கவே முடியாது. ஆஹா, இவை எல்லாம் கனவே.  நனவில்லை.

மறுபடியும் மெல்லிய கரங்கள் அணைக்க, "கிருஷ்ணா, இது கனவில்லை;  நனவே தான்.  உண்மையாகத் தான் நடக்கிறது.  நான் என்ன செய்வேன்!" தன் பற்களைக் கடித்துக் கொண்ட உத்தவன், என்ன நடந்தாலும் தான் நெகிழ்ந்து கொடுக்காமல் இருக்க வேண்டும் எனத் தீர்மானித்துக் கொண்டான்.  மெல்லிய கரங்கள் மீண்டும் அவனை அணைத்தவண்ணம் அவன் முகத்தைத் தன் பக்கம் திருப்ப முயன்றது.  உத்தவன் அசைந்தே கொடுக்கவில்லை.  நேரம் சென்று கொண்டிருந்தது.  அந்த இளம்பெண் செய்த முயற்சிகள் அனைத்தும் தோற்றுப் போயின.  நேரம் ஆக ஆக, அவளுக்கு வெறுப்புத் தான் மேலோங்கியது.  திடீரென அவள் விம்மி விம்மி அழ ஆரம்பித்தாள்.  அதைக் கேட்ட உத்தவன் மனம் கரைந்தது.  அடுத்த ஒரு நொடியில் உத்தவன் மனம் நெகிழ்ந்து தன் கரங்களில் அவளை அள்ளி அணைக்க நினைத்தான்.  ஆனால் இமை கொட்டும் நேரத்தில் அவன் மனம் மீண்டும் கடினப்பட்டது.  அவன் அசையவே இல்லை.  எல்லாம் வல்ல ஈசனைத் தனக்கு மன உறுதியையும், சக்தியையும் கொடுக்கும்படி பிரார்த்தித்துக் கொண்டே இருந்தான்.  ஈசனும் அவன் பக்கம் இருந்தார்.  பொறுத்துப் பொறுத்துப் பார்த்த அந்தப் பெண் சற்று நேரத்தில் எழுந்து சென்றுவிட்டாள்.

ஆனாலும் உத்தவன் மனம் அமைதியடையவில்லை.  காமனை அண்டவிடாமல் அவன் தடுத்துவிட்டான் தான்.  ஆனாலும் அவன் மனதில் நிம்மதியில்லாமல் அப்படியே தூங்கிப் போனான்.  தூக்கத்தில் மீண்டும் அதே போல் கனவுகள்;  கனவுகள்! கனவிலிருந்து விழித்த உத்தவனுக்குத் தான் கண்டது கனவல்ல என்பது உடனேயே புரிந்துவிட்டது.  ஆஹா, மீண்டும் ஆபத்து!  இப்போது வந்திருப்பது இரட்டையரில் மற்றொருத்தி.  "ஈசனே, என் ஈசனே, எனக்கு நீ வைக்கும் அக்னிப் பரிக்ஷை இன்னமுமா முடிவடையவில்லை?  இன்றிரவு முழுதுமே இப்படியா?  இதற்கு ஒரு முடிவில்லையா?"  உத்தவன் தன் மனதிற்குள் புலம்பினான்.

Sunday, June 23, 2013

கண்ணன் துணை இருப்பான்! சந்தோஷமான செய்தி!

ஒரு பத்துநாட்களாகவேக் கடுமையான உழைப்பு. :))) கண்ணன் கதையின் முதல் பாகத்தை எடிட் செய்து தொகுத்துக் கொண்டு அவற்றைப் பிரின்ட் அவுட் எடுக்க ஆரம்பித்தேன்.  பாரதீய வித்யா பவன் சென்னை அலுவலகத்தில் 22 ஜூன் சனிக்கிழமை மதியம் டைரக்டர் என்னைச் சந்திக்க நேரம் ஒதுக்கி இருந்தார்.  ஆகவே குறைந்த கால அவகாசத்தில் முடிக்கணும். பிரிட் அவுட் எடுத்துக் கொண்டு எதுக்குத் தொந்திரவு?  பென்டிரைவிலோ சிடியோ போடலாம்னு சொல்றவங்களுக்கு!  போடலாம் தான்.  அது தெரியும்.  ஆனால் அதைக் கணினியில் தான் போட்டுப் பார்க்க முடியும். சிலர் பிடிஎப் கோப்பாக அனுப்பி வைனும் சொன்னாங்க.  அதைப் பார்ப்பாங்களா உடனடியாகனு சந்தேகம்.  ஆகவே நம் கையே நமக்கு உதவினு வீட்டிலேயே பிரின்ட் அவுட் எடுக்க ஆரம்பித்தேன்.

எடிட்டிங் வேலை முடியவே மூணுநாள் ஆச்சு.  அப்படியும் வேர்ட் நிறைய ஸ்பெல்லிங் தப்புப் பண்ணி இருக்கேனு திட்டிட்டும் இருந்தது.  கூடியவரை எல்லாத்தையும் சரி பண்ணினேன்.  பிரின்ட் அவுட் எடுக்கிறச்சே இரண்டு முறை இங்க் தீர்ந்து போய், ஒரு தரம் இங்க் திரும்ப நிரப்பினது சரியா வராமல் போய், அதுக்குள்ளே சென்னை கிளம்பும் நாளும் வந்துவிட்டது. சனிக்கிழமை சென்னை கிளம்பணும்.  வியாழனன்று பிரின்டர் வேலை நிறுத்தம் மெகானிக்கைக் கூப்பிடவும் என் அவசரம் தெரிந்ததால் அவரும் வந்து கிட்டேயே இருந்து வேலையை முடிக்கிற வரை பிரின்டரைத் தட்டிக் கொடுத்து கவனித்துக் கொண்டார்.  பின்னர் அன்னிக்கே சாயந்திரமாப் போய் பைன்டிங் செய்யக் கொடுத்து வெள்ளிக்கிழமை ஈரம் காயும் முன்னே வாங்கி வந்து கொண்டு போகும் பையில் அடியில் வைத்து மேலே அழுத்தம் கொடுத்துவிட்டோம்.

சனிக்கிழமை காலை பல்லவனில் கிளம்பினோம்.  அன்னிக்குனு வண்டி தாமதம். அரை மணி நேரம்.  ஒரு மணிக்குள்ளாக வித்யாபவனின் இருக்கணும். ஒரு வழியா மாம்பலத்தில் இறங்கி ஆட்டோ வைத்துக்கொண்டு வித்யாபவன் போகையிலே பனிரண்டே முக்கால்.  டைரக்டர் மீட்டிங்கில் இருந்தார் எனினும் நான் வந்திருக்கும் செய்தி சொல்லப்பட்டுக் காத்திருக்கச் சொன்னார்.  பின்னர் அவரே வெளியே வந்து காத்திருக்கச் சொல்லிவிட்டு வந்தவர்களை வழி அனுப்பிட்டு, மற்றவர்களைக் கவனித்துவிட்டு எங்களை அழைத்தார்.  கொண்டு போன புத்தகத்தைக் கொடுத்தோம்.  படித்ததில் அவருக்குத் திருப்தி என்பது முகத்திலேயே தெரிந்தாலும் அவர் வாய் மூலம் சொல்லணும்னு இருந்தோம்.

 பப்ளிஷிங் பத்திப் பேசிவிட்டுப் பின்னர் என்னிடம் உங்கள் ஆர்வமும், எழுதி இருக்கும் நடையும் தேர்ந்த எழுத்தாளரின் எழுத்தைப் போல் இருக்குனு பாராட்டிவிட்டு எங்களுக்கு நேரேயே பவன் மூலம் பப்ளிஷ் பண்ணலாமா, அல்லது நாங்க இன்வெஸ்ட் பண்ணிட்டு பவன் மூலம் வெளியீடு பண்ணலாமானு இரண்டு கருத்தையும் அவங்களுக்கு அனுப்பி இருக்கார். எப்படி இருந்தாலும் பவன் மூலம் வெளியீடு செய்வதில் அவருக்கு ஆக்ஷேபணை இல்லைனு தெரிந்தது.  மேலும் இப்போது முன்ஷிஜி அவர்களின் 125 ஆவது பிறந்த நாளுக்கான கொண்டாட்டங்களுக்கான வேலைகள் வேறு செய்வதால் அதை ஒட்டி வெளியிடலாம் என்றும் கூறி உள்ளார்.  இனி எல்லாம் கண்ணன் கையில்.  அடுத்து இரண்டாம் பாகம் எடிட்டிங் செய்து அதைப் பென்டிரைவ் அல்லது, சிடியில் எடுத்துடலாம்னு எண்ணம்.  அதோடு டைரக்டர் அறையிலோ ரிசப்ஷனிலோ கணினியோ, மடிக்கணினியோ இல்லை.  ப்ரின்டிங் செக்‌ஷனில் மட்டும் இருக்குமோ என்னமோ!  நல்லவேளையா பென் டிரைவ் கொண்டு போகலை.  போட்டுப் பார்க்கிறேன்னு சொல்லி இருப்பாரே! :))))

போகப் போகத் தெரியும்.  கண்ணன் துணை இருப்பான் என்ற நம்பிக்கையில் இருக்கிறேன்.  இதன் முழுப் பலனும் திவாகரையே சேர்ந்தது.  அவருடைய தூண்டுதல் இல்லை எனில் இந்த மொழிபெயர்ப்பு வேலையை ஆரம்பித்திருப்பேனா என்பது சந்தேகமே.  அதே போல் இப்போது வித்யாபவனை நாடுவதற்கும் பெருமளவு உதவிகள் செய்தார்.  மொத்தத்தில் இந்த மொழிபெயர்ப்பே அவருக்குச் சமர்ப்பிக்க வேண்டிய ஒன்று.

Friday, June 21, 2013

உத்தவன் அருகில் ஒரு நாக கன்னி!

மணிமானின் இரட்டைச் சகோதரிகள் ஆன பிங்கலை, கபிலா இருவரும் அழகும், எழிலும் நிரம்பியவர்களாக ஒரே உயரத்திலும் பருமனிலும், இதய வடிவ முகத்தைக் கொண்டவர்களாகவும் இருந்தனர்.  அவர்கள் கன்னங்களில் விழுந்த அழகான குழி அவர்கள் முகத்தைப் பிரகாசப் படுத்தியது.  யார் பிங்கலை, கபிலா யார் எனக் கண்டுபிடிப்பதும் முதலில் கஷ்டமாகவே இருந்தது.  ஒரே மாதிரியாக மஞ்சள் நிற உடை, தலை அலங்காரம், தலையில் பூச்சுடி இருப்பதும் இருவருமே தாமரை மலர்கள்,  ஒரே மாதிரி பாவனைகளும். சிரிப்பது கூட ஒரே சமயம் சிரித்தனர்.   

ஆரிய இளவரசிகளின் நாகரிகமான நடத்தைகள் இல்லைதான்.  ஆனாலும் தங்கள் குடும்பத்தைச் சேர்ந்த உத்தவனின் வருகை அவர்கள் மகிழ்ச்சியைக் குறைக்கவில்லை.  இயல்பாக அவனை ஏற்றுக் கொண்டதோடு அவனும் மகிழ்வோடு இருக்கத் தங்களால் இயன்றதைச் செய்தனர்.  அவன் என்ன சொன்னாலும் அதை ரசித்தனர். அவன் சொல்வதை வேத வாக்காக நினைத்தனர். அவர்களால் இயன்ற அளவுக்கு அவனை சந்தோஷமா வைத்திருக்கவும் முயன்றனர்.  தங்கள் கண்கள் வியப்பால் விரிய அவன் சொல்லும் விஷயங்களைக் கேட்டார்கள்.  மெல்ல மெல்ல உத்தவனை அவனின் இயல்பான கூச்சத்திலிருந்து சகஜ நிலைக்குக் கொண்டு வந்துவிட்டனர்.  அவன் தன்னைப் பற்றிய செய்திகளைக் கூறும்படி கேட்டார்கள்.  உத்தவன் எப்படி ஆரம்பித்தாலும் அது கடைசியில் கிருஷ்ணன் செய்த சாகசங்களைக் குறித்துக் கூறும் ஒன்றாகவே ஆயிற்று என்பதையும் கண்டார்கள்.

கிருஷ்ணனும், உத்தவனும் சேர்ந்த செய்த சாகசங்கள் குறித்துக் கேட்டு அறிந்து கொண்டதோடு அல்லாமல், விருந்தாவனத்தில் கோபியருடன் ஆடிய ராஸலீலை குறித்தும் கேட்டார்கள்.  கம்சனைக் கிருஷ்ணன் கொன்ற விதம், உத்தவனாக இருந்தால் தன்னுடைய வாழ்க்கையே ஒரு கேள்விக்குறியாக இருக்கையில் இப்படிப் பட்ட ஒரு காரியத்தைச் செய்வானா எனக் கேட்டார்கள்.  சாந்தீபனியின் ஆசிரமத்தில் அவர்கள் படித்தது, நாகலோகம் சென்று புநர்தத்தனை மீட்டுக் கொண்டு வந்தது, கோமந்தக மலைக்குச் சென்று ஜராசந்தனிடமிருந்து தப்பியதோடு இல்லாமல், அவனை ஓட ஓட விரட்டியது ஆகியவற்றையும் கேட்டார்கள்.  ஜராசந்தன் குறித்து அவர்கள் அதிகம் அறிந்திருக்கவில்லை என்பதை உத்தவன் கண்டான்.  துவாரகைக்கு அவர்கள் சென்ற விதம், கிருஷ்ணன், பலராமன், உத்தவன் மூவரும் துவாரகையை எப்படி வென்றனர் என்பதோடு, கிருஷ்ணன், ருக்மிணி கல்யாணம் குறித்தும், ருக்மிணியைத் தூக்கிவரக் கிருஷ்ணன் போட்ட திட்டமும், உத்தவனின் உதவியையும் குறித்துக் கேட்டு அலுக்கவில்லை அவர்களுக்கு.  கிருஷ்ணனின் இன்னொரு மனைவியான ஷாயிபா பற்றி அறிந்ததும் இருவருக்கும் வியப்பு.  அதிலும் இருவரும் ஒற்றுமையுடன் இருப்பதையும் கேட்டு வியந்தனர். 

இம்மாதிரியான சாகசங்களை அவர்கள் வாழ்நாளில் எவரும் நடத்தியதைப் பார்க்கவும், நடந்ததைக் கேட்டு அறிந்ததும் இல்லை. கிருஷ்ணனை ஒரு கடவுளாகவே நினைத்துக் கொள்ள ஆரம்பித்தனர்.  தங்கள் இருவருக்குள்ளேயே கிருஷ்ணன், உத்தவன் இருவரைக் குறித்தும் பேசிக் களிப்படைந்தனர்.  இம்மாதிரியான  ஆர்வத்துடன் எல்லா விஷயங்களையும் கேட்டு அறியும் மக்களை உத்தவன் இத்தனை நாட்கள் பார்த்தது இல்லை.  தன்னுடைய சில சாகசங்களும் கிருஷ்ணனுக்கு உதவியாக இருந்ததை நினைத்து மகிழ்ந்த உத்தவன் அவற்றைக் குறித்தும் கூற முடிந்தது.  தன்னை இவற்றிலிருந்து வேறுபடுத்திப் பார்க்க முடிந்தது உத்தவனால்.  அந்த இரு பெண்களையும் மிக அற்புதமான குழந்தைகளாகவே உத்தவன் நினைக்க அவர்களோ இருவரும் சேர்ந்தே உத்தவனைத் தங்கள் கணவனாக அடைய வேண்டும் என நினைத்தனர்.


நாகர்களையும், அவர்களின் உபசாரங்களையும் உத்தவன் மிகவும் ரசித்தான்.  அவர்களின் வெகுளித்தன்மையால் கவரப் பட்டான்.ஆர்யகனும் அவன் குடும்பமும் தன்னைக் கவனித்துக் கொண்ட விதத்தில் நெகிழ்ந்து போன உத்தவன், இளவரசன் மணிமானுக்குத் தனக்குத் தெரிந்த ஆயுதப் பயிற்சிகளைக் கற்பித்தான். கார்க்கோடகனும், அவன் மனைவியும், இரு இளவரசிகளும் காட்டிய அன்பிலும் இன்ப நிகழ்ச்சிகளிலும் மனதைப் பறி கொடுத்தான்.  அதோடு உத்தவனுக்கு மேலும் மகிழ்ச்சியை அளிக்கும் விதமாக ஐந்து சகோதரர்கள் காட்டுக்குள் இருக்கலாம் என்ற செய்தி கிடைத்துள்ளது.  அவன் இனி அவர்களைத் தேடிக் காட்டுக்குச் செல்ல வேண்டும். இந்தப் புதிய சாகசத்தில் உடனடியாக ஈடுபட அவன் மனம் துடித்தது.  அன்று இரவு மிகவும் நிம்மதியாகவும் சந்தோஷமாகவும் உத்தவன் உறங்கினான்.  கிருஷ்ணனும், மணிமானும், இரட்டையர்களான இளவரசிகளும் அவன் கனவில் வந்தனர்.  அவனோடு பேசிக் களித்தனர்.  திடீரெனக் கனவு மாறியது. மெல்லியதொரு கரங்களால் அவன் அணைக்கப்பட்டான்.  இது என்ன?? உத்தவன் திடுக்கிட்டு விழித்தான்.  அவன் அருகே நாககன்னி ஒருத்தி படுத்திருக்கிறாள்.  உத்தவனுக்கு முழுக்க விழிப்பு வந்துவிட்டது.  யார் இது??

Friday, June 14, 2013

காட்டுக்குள்ளே பாண்டவர்களா?

பெண்கள் அனைவரும் உத்தவனைப் பார்த்த பார்வையிலும், செய்த ஆராய்ச்சியிலும் மிகவும் வெட்கம் கொண்ட உத்தவனுக்கு அங்கிருந்து ஓடிவிடலாமோ என்ற எண்ணமே தோன்றியது.  அவனுடைய இத்தனை வருட வாழ்க்கையில் இத்தனை பெண்களால் ஒரு போதும் முற்றுகை இடப்பட்டதில்லை. அதிலும் இளம்பெண்களாலும் சூழப்பட்ட உத்தவன், அந்தப் பெண்கள் மிக இயல்பாக இருந்ததைக் கண்டு ஆச்சரியமும் அடைந்தான்.  அவர்கள் உடல் மிக அழகான வடிவமைப்பெற்றிருந்ததும், ஆரியர்களைப் போல் அவ்வளவு சிவந்த நிறம் இல்லை எனினும், தொடர்ந்த மஞ்சள் தேய்ப்பால் தங்கம் போல் பளபளத்த மேனியும் அவன் கண்களைக் கவர்ந்தது.  அவர்களில் அரச குடும்பத்தைச் சேர்ந்த இளவரசிகளும் இருந்தனர்.  அனைவரும் மிகவும் நட்புடனும், ஆத்மார்த்தமான அன்புடனும் உத்தவனோடு பேசினார்கள்.  நடக்கையில் அவர்கள் நடையில் தெரிந்த வளைவுகளும், நெளிவுகளும், அவர்கள் நாககன்னிகள் என்பதை நினைவூட்டும் வகையில் அமைந்திருந்தது. 

உத்தவன் அவன் மாமனான கார்க்கோடகனிடம் அழைத்துச் செல்லப்பட்டான்.  கார்க்கோடகனோ உத்தவனைப் பிறந்தது முதல் அறிந்தவன் போல் நடந்து கொண்டான்.  எள்ளளவும் தயக்கமின்றி மிகவும் வெளிப்படையாகவும், அதைக் காட்டும் முகபாவத்துடனும் பேசினான்.  அவன் மகனான மணிமான் என்பவனோ உத்தவனை விடச் சில ஆண்டுகள் சிறியவனாக இருந்தான்.  அதோடு உத்தவனின் வில், அம்பு, அம்புறாத்தூணி அவனின் வாள் போன்றவை அவனை மிகவும் கவர்ந்தது என்பது அவன் பேச்சில் இருந்து தெரிந்தது.  அடுத்த பட்டத்து இளவரசன் அவன் தான் என்பதற்கான அடையாளம் அவன் உடை அலங்காரத்தின் மூலம் தெரிந்தது.  மணிமானுக்கு உத்தவனுக்குத் தெரிந்த எல்லாப் போர்க்கலைகளையும் தானும் கற்றுத் தேற வேண்டும் என்ற ஆசை மிகுந்ததோடு அதை உத்தவனிடமும் கூறினான். 

ஆயிற்று!  அடுத்து வந்த பெளர்ணமி தினத்தன்று உத்தவன் நாக கூடம் வந்ததற்கான கொண்டாட்டங்களோடு கூடிய தினமாக அமைந்தது.  மிகப் பெரிய விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.  ஆர்யகனும், வியாச முனிவரும் சாதாரணப் பொதுமக்களோடு தாங்களும் ஒருவராக விருந்துண்ண அமர்ந்தனர்.  வியாசர் அந்த மாபெரும் கூட்டத்தில் தனித்துத் தெரிந்ததோடு அல்லாமல் மிகப் பெரிய குடும்பத்தின் வயது முதிர்ந்த பாட்டனாரைப் போன்ற அன்புடன் அனைவரையும் நலம் விசாரித்துக் கொண்டு முகமன் கூறி வரவேற்று அமரச் சொல்லி உபசரித்தும் கொண்டிருந்தார். விருந்து முடிந்ததும் ஆரம்பமான நாட்டியங்கள் மறுநாள் காலை விடியும் வரை நீண்டது.  பல வண்ண போர்க்குறிகளைக் கொண்ட வண்ணங்களை உடலில் தீட்டிக் கொண்டு, கைகளில் ஆயுதங்களை ஏந்திய வண்ணம், தலையில் இறகுகளால் ஆன கிரீடத்தைச் சூட்டிக்கொண்டு ஆண்கள் அலங்கரித்துக் கொண்டு ஆட வந்தனர்.  கூடவே பெண்களும் ஆடினார்கள்.  மணிக்கட்டிலிருந்து ஆரம்பித்து முழங்கை வரை வளையல்களை அணீந்திருந்தார்கள் அந்தப் பெண்கள்.  கால்களிலோ தண்டைகளும் கொலுசுகளும் முழங்கால் வரை வந்திருந்தன. 

கார்க்கோடகனும், மணிமானும் உத்தவனையும் தங்களோடு ஆட்டத்துக்கு இழுத்துவிட்டனர்.  மிக அழகாக ஆடிக் கொண்டிருந்த அந்த நாக கன்னியர்களின் முன்னே தன்னுடைய ஆட்டத்தின் மோசமான தன்மை உத்தவனுக்கே புரிந்தது.  இயற்கையாகவே போர்க்குணம் மிகுந்திருந்தும் அவர்களிடம் ஆடல், பாடல் போன்ற கலைகளை அப்யசிக்கவும் நேரமும், விருப்பமும் இருப்பதை உணர்ந்து உத்தவன் ஆச்சரியமும் அடைந்தான்.  போருக்கெனச் சிறப்பாகத் தயாரிக்கப்பட்ட தாமிரத்தினால் ஆன பல்வகை ஆயுதங்களையே அவர்கள் பயன்படுத்தினார்கள்.  அவற்றில் சிறிய குத்தீட்டிகளும், ஈட்டிகளுமே பிரதானமாக இருந்தன.  ஆனாலும் அவர்கள் பெரும்பாலும் மிருகங்களை வேட்டையாடுகையில் கைகளையே பயன்படுத்தியதாகவும் அவர்கள் பேச்சிலிருந்து அறிந்து வியந்தான்.  அது தான் உண்மையான வீரனின் அடையாளமாக அவர்கள் நினைப்பதையும் புரிந்து கொண்டான்.  விற்களையும், அம்புகளையும் பயன்படுத்திப் போரிடுவதை உண்மையான வீரத்துக்கு ஏற்றதாகக் கருதவில்லை என்பதை அறிந்தும் வியப்படைந்தான்.  அவனால் இதைப் புரிந்து கொள்ள முடியவில்லை.  கிருஷ்ணனையும், அர்ஜுனனையும் போன்ற சுத்தமான, வலிமையும், வல்லமையும் பொருந்திய வில் வீரர்கள் கூட இதில் அடங்குவார்களா என்பதையும் எண்ணி வியந்தான்.  அவர்களுக்கெல்லாம் இது பொருந்தாது என்றும் நினைத்தான்.  ஆனால் நாகர்களின் சமூகச் சூழ்நிலைகளுக்கும், பழக்க, வழக்கங்களுக்கும் இது ஏற்றதாக இருக்கலாம்.   அடிக்கடி நடந்த ஆரியர்களோடான அவர்களின் யுத்தங்களின் போதெல்லாம் நாகர்களுக்குப் பெரும் நஷ்டமே விளைந்து வந்திருக்கிறது.   அதனாலேயே இவர்கள் இன்னமும் காட்டுக்கு உள்ளே சென்று இப்படியான ஒரு வாழ்க்கையை நடத்துகின்றனரோ!


தன் சொந்த யாதவ குலத்து வாழ்க்கையையும், தன் பாட்டியார் வந்த நாக குலத்து வாழ்க்கையையும் பார்த்த  உத்தவனுக்கு அதிலிருந்த வேறுபாடுகள் புரிந்ததோடு இருவரையும் ஒருங்கிணைத்த முனி வேத வியாசரின் அரும்பெரும் தொண்டையும் குறித்துப் புரிந்து கொண்டான்.  மேலும் அவர் இருவரையும் தனித்தனியாக வேறுபடுத்திப் பார்க்காமல் அனைவரையும் ஒன்றாகவே கருதியதோடு தாமும் அவர்களில் ஒருவராகவே கருதிக் கொண்டார்.  இந்த இயல்பு அவரிடம் வெகு சாதாரணமாக அமைந்திருந்தது.  இதன் காரணமாகவே குரு வம்சத்தினர்களின் பிதாமகரும், அனைவரும் கண்டு அஞ்சும் பீஷ்மர் முதல் குரு சாந்தீபனி, மேலும் நாகர்களின் தலைவன் ஆர்யகன் வரை ------அவ்வளவு ஏன்?  மிகவும் தாழ்ந்த நிலையில் இருக்கும் ஒரு சாதாரணக் குடிமகன் கூட அவரைத் தங்களில் ஒருவராகவே கருதிக் கொண்டனர்.  பிரமனால் படைக்கப்பட்ட உலகை விட அதி அற்புதமான ஒரு உலகை வியாசமுனி அவர்களுக்குக் காட்டிக் கொடுத்தார் எனலாம். 

உத்தவன் கார்க்கோடகனோடு தங்க வைக்கப்பட்டான்.  மூன்று மனைவியரைக் கொண்ட கார்க்கோடகன் தன் பெரிய குடும்பத்துடன் அங்கிருந்த சில குடிசைகளில் வசித்து வந்தான்.   மணிமான், அவன் மனைவி, மணிமானின் இரட்டைச் சகோதரிகள் பிங்கலை, கபிலை ஆகியோர் உத்தவனுக்கு வேண்டிய வசதிகளைச் செய்து கொடுத்தார்கள்.   அவர்களின் தனிப்பட்ட அக்கறை உத்தவனுக்குப் புரிந்தாலும் இப்படியான கவனிப்புகளுக்குப் பழக்கமில்லாத காரணத்தால் அவன் தர்மசங்கடமாகவே உணர்ந்தான்.  ஆனால் இதன் விளைவாகவோ என்னமோ, உத்தவனுக்குள்ளாக மறுநாளே பெரிய மாற்றம் தெரிந்தது.   இதுகாறும் தன்னை ஒரு துறவியாகவே கருதி வந்த உத்தவன் தன்னுடைய சுயக்கட்டுப்பாடுகள் தன்னை விட்டு நீங்கி விடுமோ என அச்சமும் கொண்டான்.  ஷாயிபாவை மனதில் நினைத்துப் பின்னர் கிருஷ்ணனிடம் தன்னை வெளிப்படுத்தியபின்னர் உத்தவன் மனதில் எத்தகைய உல்லாச உணர்வுகளும் தோன்றியதில்லை.  தன்னுடைய வாழ்க்கையை இத்தனை எளிமையாகக் கழித்ததில் அவனுக்குக் கொஞ்சம் அதிருப்தி கூடத் தோன்றி ஒரு நீண்ட பெருமூச்சு விட்டான்.  அவனால் அதைக் கட்டுப்படுத்த இயலவில்லை.  தன் வாழ்க்கையில் எதையோ இழந்துவிட்டதாய் உணர்ந்தான்.

ஆனாலும் தான் மேற்கொண்டு வந்த வேலையை விரைவில் முடிப்பதற்கு ஆர்வம் காட்டினான்.  மூன்றுநாட்கள் கழிந்ததும், மெல்ல வியாசமுனியிடம் தான் அவரோடு வந்ததின் காரணத்தை விளக்கினான். பெரிதாகச் சிரித்த வியாசர், “உத்தவா, இதைக் கூடவா என்னால் புரிந்து கொள்ள இயலாது?  நான் அன்றே தெரிந்து கொண்டுவிட்டேன்.  கார்க்கோடகனும் ஏற்கெனவே அவன் ஆட்களை அனுப்பிக் காட்டின் உள்ளே புதிதாக ஐந்து சகோதரர்களும், அவர்களின் தாயும் வந்திருக்கின்றனரா எனப் பார்க்கச் சொல்லியுள்ளான்.” என்றார்.

“நாம் கட்டாயமாய் அவர்களைக் கண்டுபிடிக்க வேண்டும், முனிவரே!  கிருஷ்ணன் திரும்பிச் செல்கையில் அவர்கள் ஐவரும் தங்கள் தாய் குந்தியுடன் எங்களுடன் துவாரகை வந்தால் நல்லது!” என்றான் உத்தவன்.

“என்னால் அதிக நாட்கள் இங்கே தங்க இயலாது.  இன்றிலிருந்து பத்தாம் நாள் நான் அகிசத்ராவில் இருந்தாக வேண்டும்.  நீ இங்கே தங்கி இருந்து கிடைக்கும் செய்திகளைச் சேகரித்து வா.  உனக்குத் துணைக்கும், உதவிக்கும், என் மாணாக்கர்களில் சிலரை விட்டுச் செல்லவா?” என்றார் வியாசர்.

“வேண்டாம், மஹரிஷியே, என் மாமன் கார்க்கோடகன் அளித்து வரும் உதவியே போதுமானது!”அப்போது கார்க்கோடகன் உள்ளே வந்து, வியாசரை நமஸ்கரித்தான்.  “ஆசாரியரே, ஒரு செய்தி! உத்தரவு கொடுங்கள்!” எனக் கேட்க, வியாசரும் அனுமதி கொடுத்தார்.  “எங்கள் தலைவர்களில் ஒருவனான சிகுரி நாகன் அனுப்பிய செய்தி இது. நம் எல்லைக்குட்பட்ட கிராமம் லஹூரியாவின் ஒரு நாகன் அனுப்பிய செய்தியாம்.  சில மாதங்கள் முன்னர் ஐந்து ஆரியர்களைக் காட்டின் உட்பக்கத்தில் பார்த்திருக்கிறான்.  அவர்களில் ஒருவன் மிகுந்த பலவானாகக் காணப்பட்டதோடு ஒரு வயதான பெண்மணியைத் தன் தோள்களில் சுமந்தும் சென்றானாம். "

"ஆஹா, அவர்கள் சகோதரன் பீமனும், அவர்கள் தாய் குந்தியுமாகவே இருக்கவேண்டும்." உத்தவன் கூறினான்.

"ஆனால் அவர்கள் எங்கேதான் சென்றனராம்?" வியாசர் கேட்டார்.

"சிகுரி அனுப்பிய செய்தி என்னவெனில் முதலில் வேற்று மனிதர்களைத் தங்கள் பிராந்தியத்தில் பார்த்த அதிர்ச்சியில் அந்த நாகன் ஓட்டமாக ஓடி ஒளிந்துவிட்டானாம்.  ஆகையால் அவர்கள் எங்கே சென்றனர் என்பது அவனால் கூற முடியவில்லை.  ஆனால் ஆசாரியரே, கவலை வேண்டாம்.  லஹூரியாவுக்கு சிகுரியே நேரில் சென்றிருக்கிறான்.  கட்டாயமாய் நல்ல செய்தி கொண்டு வருவான்."


Friday, June 7, 2013

நாகர்களின் நடுவே உத்தவன் தொடர்ச்சி!

நீங்கள் மத்ரா நகருக்குச் சென்றிருக்கீறீர்களா?” என்று உத்தவன் கேட்டான்.

உன் பாட்டியைத் திருமணம்செய்து கொள்கையில் உன் தாத்தா மத்ராவில் குடியிருக்கவில்லை.  பின்னர் நான் மத்ரா ஒரே ஒருமுறை உன் பெரியப்பா வசுதேவன் பிறந்த போது போனேன்.”   ஆர்யகனோடு பேசிக் கொண்டே நாகர்களையும் கவனித்த உத்தவனுக்கு  இந்த நாகர்கள் மிகவும் எளிமையானவர்கள் என்பது புரிந்தது. அதோடு ஆரியர்கள் அளவுக்கு  நாகரிகம் தெரியாதவர்கள். இங்குள்ள மண்ணாலான குடிசைகளிலும், செங்கற்களால் கட்டப்பட்ட வீடுகளிலும் வசிக்கின்றனர் . இவர்களுக்குக் காட்டில் தானாகவே விளையும் பார்லி, பருப்பு வகைகள், பழங்கள், காய்கள் போன்றவையே உணவு. அதோடு மிருகங்களையும் அவ்வப்போது வேட்டையாடுகின்றனர்.   அவர்களின் உடைப்பழக்கமும் ஆரியர்களிலிருந்து மாறுபட்டு இருந்தது.  அங்கிருந்தபெண்களில் பலருக்கு மேலாடை இல்லை.  ஆண்களும் மேலாடை ஏதுமின்றி இடுப்புக் கீழ்ப்பாகத்தை மட்டுமே மறைத்துக் கொண்டுள்ளனர்.   ஆரியர்களிடம் இம்மாதிரியான வழக்கம் பாபம் எனக் கருதப்படும்.  ஆகவே முதலில் உத்தவன் மேலாடை இல்லாத பெண்கள் சர்வ சகஜமாக உலா வருவதும், ஆண்களோடு எந்தவிதமான கூச்சமும் இன்றிக் கலந்து பழகுவதும் காணவே அதிர்ச்சி அடைந்தான்.  இது மன்னிக்க முடியாத குற்றமாக ஆரியர்களிடையே கருதப்படும். ஆனால் இந்த மக்கள் வெகுளியானவர்கள், வாழ்க்கையை சந்தோஷமாகக் கழிப்பவர்கள், எல்லாரும் சொல்வது போல் எந்தவிதமான கெட்ட எண்ணங்களும் இல்லாதவர்கள் என்பதைப் புரிந்து கொண்டான் உத்தவன். 
பழகவும் எளிமையானவர்களாக இந்த நாகர்கள் இருப்பதை உத்தவன் கவனித்தான்.  அவர்களின் மதகுருமார்கள் வேத வியாசருக்குப் பெரிய மரியாதை கொடுத்து வரவேற்றதையும் கண்டு ஆச்சரியம் அடைந்தான்.  இருவரின் வழிபாட்டு முறைகளிலும் காணப்படும் பெருத்த வேறுபாடுகளையும் கண்டான்.  நாகர்களின் மாபெரும் கடவுளான பசுபதியை அவர்கள் முறைப்படி மலர்கள், இலைகள், நீர் போன்றவை அளித்து வழிபட்ட நாகர்கள், இன்னொரு பக்கம் வேத வியாசரும் அவரின் சீடர்களும் ஹோமகுண்டத்தில் அக்னி வளர்த்து ஹோமம் செய்து யாகங்கள் செய்வது எதற்கும் தடை சொல்லவில்லை. அவரவர் வழக்கப்படி அவரவர் செய்தனர்.  திறந்தவெளியில் அமைக்கப்பட்டிருந்த நாகர்களின் கடவுள் பசுபதியின் கோயிலுக்கு  முன்னால் வேத வியாசர் மந்திரங்களைச் சொல்லி அக்னி வளர்த்து தினசரிக் கடமையான ஹோமம் செய்கையில் நாகர்களின் மத குருமார்கள் அங்கேயே அருகே அமர்ந்து உற்சாகத்துடனும், முழுக் கவனத்துடனும் அனைத்தையும் கவனித்து வந்தார்கள்.  


அவர்களுக்குள்ளேயே இருந்த தந்திர மந்திரங்களில் சிறந்த மதப் பூசாரிகள் கூட வியாசரிடம் தங்கள் நோய் குணமாக நாகர்கள் மருந்து கலந்த பாலை வாங்கிக் கொண்டதற்குத் தடை சொல்ல வில்லை.  அனைத்தும் நடந்து முடியும் வரை வயதான மன்னன் ஆர்யகன் தன் பல்லக்கிலேயே அமர்ந்து அனைத்தையும் கவனித்துக் கொண்டு இருந்தான்.  இது ஒரு வேளை வேத வியாசரின் வசீகரத்தால் இருக்குமோ?  எங்கு சென்றாலும் மக்கள் கூட்டம் கூட்டமாக அவரைக் காண தூர தூரங்களிலிருந்தெல்லாம் ஓடோடி வருகின்றனர்.  அவரின் பாதத்தில் நமஸ்கரிப்பதையே பெரிய விஷயமாகக் கருதுகின்றனர்.  அவரைப்போற்றி ஆராதிக்கின்றனர்.  ஏகச்சக்கரத்துக்கு அவர் வந்து விட்டதை அறிந்ததுமே மன்னன் அவருக்கு நாககூடம் வரும்படி அழைப்பு விடுத்தான்.  வியாசர் வரும்போதெல்லாம் தன்னுடைய பழைய சக்தி அனைத்தும் மீண்டும் தனக்குள் திரும்புவதாக உணர்வதோடு அல்லாமல் அவன் பெரிய குடும்பத்தினரும் அனைவருமாகச் சேர்ந்து சில காலம் கழிக்க முடியும்.  மேலும் நாகர் குடிமக்களும் வேத வியாசரை ஒரு ஆரியனாக, அந்நியராகக் கருதவில்லை.  தங்களில் ஒருவராகவே கருதினர். 

ஒவ்வொரு நாளும் தூரதூரங்களில் இருந்தெல்லாம் மக்கள் கூட்டம் வந்து வியாசரைத் தரிசித்து அவர் ஆசீர்வாதங்களைப் பெற்றுச் சென்றது.  தினசரி பெரிய அளவில் ஹோமங்கள் நடந்தன.  பால் சேகரிக்கப்பட்டு மண் குடுவைகளில் ஊற்றப்பட்டு மூலிகை இலை போடப்பட்டு மக்களுக்குக் கொடுக்கப் பட்டது.  அதோடு அல்லாமல் வேத வியாசர் தன் கரங்களால் அனைவருக்கும் நெற்றியில் புனிதச் சாம்பலைத் திருநீறாக இட்டுவிட அதிசயங்கள் நடக்க ஆரம்பித்தன.  கண் தெரியாதவர்களுக்குக்கண் தெரிய ஆரம்பித்தது.  நடக்க இயலாதவர்கள் நடக்க ஆரம்பித்தனர்.  உடலில் ஒருவித ரோகம் பிடித்துப் பேய் பிடித்தது போல் காணப்பட்டவர்கள் ஒளியுடன் கூடிய முகத்தையும் ரோகம் அற்ற தேகத்தையும் பெற்றனர்.  அன்றாடம் நடக்கும் விருந்துகளின் போது வேத வியாசரே தன் கரஙக்ளால் மக்களுக்கு உணவு பரிமாறினார்.  மக்களின் சந்தோஷக் கூச்சலைக் கேட்டு அனுபவித்த் வண்ணம் ஆர்யகனுடனும், கார்க்கோடகனுடனும் அமர்ந்திருப்பார் வேத வியாசர்.

அனைவருக்கும் உத்தவன் மரிஷாவின் பேரன் என்ற செய்தி எட்டியது.  உத்தவனைச் சுற்றி நாகர்களின் சிறந்த தலைவர்கள் உடலில் போருக்கான வண்ணங்களைத் தீட்டிய வண்ணம் கைகளில் பல ஆயுதங்களை ஏந்தி அவனுக்கு மெய்க்காவலர்கள் போல் சூழ்ந்து கொண்டு உத்தவன் எங்கு சென்றாலும் கூடவே சென்றனர்.  இது உத்தவனுக்கு மிகுந்த தர்ம சங்கடமாக இருந்தது.  அனைவரும் அவனை அன்புடன் நடத்தினாலும், வீரர்களில் இளையவர்கள் அனைவரும் உத்தவனைத் தங்கள் கதாநாயகனாகவே நினைத்தனர்.  உத்தவனின் அழகான கட்டமைப்புடன் கூடிய உடலும், அவனின் விசாலமான கண்களும், தலையில் அணிந்திருந்த கிரீடமும், கைகளில் அவன் சுமந்திருந்த வில்லும், அம்புகளோடு கூடிய  அம்புறாத்தூணியும் பார்த்துப் பார்த்து ஆச்சரியப்பட்டனர்.   பெண்களோ எனில் வெகுநாட்களாகக் காணாமல் போய்த் திரும்பக் கிடைத்திருக்கும் ஒரு மகனைக் கண்டால் தாய்மார்கள் எவ்வளவு உவகை கொள்வார்களோ அவ்வளவு உவகையுடனும், பாசத்துடனும் அவனை நடத்தினார்கள்.  மொத்தத்தில் நாகர்களிலிருந்து வித்தியாசமானவனாகத் தெரிந்தாலும் அவர்களுக்குள்ளே இவன் தங்கள் ரத்தம் என்னும் உணர்வு மிகுந்திருந்தது.


Tuesday, June 4, 2013

நாகர்களின் நடுவே உத்தவன்!

நாகர்களின் முக்கியக் கடவுளான பசுபதியிடம் இருந்து நேரடியாக உத்தரவுகளை ஆர்யகன் பெற்று வருவதாகவும் ஒரு நம்பிக்கை அந்த மக்களிடம் இருந்து வந்தது.  ஆகவே அவன் தங்களுக்கு அரசன் எனச் சொல்வதை விடக் கடவுளாகவே அம்மக்கள் நினைத்தனர்.  மஹரிஷி உத்தவனைக் காட்டி, ஆர்யகனிடம் இவன் உன் பெண்ணின் பேரன்;  உனக்குக் கொள்ளுப் பேரன் என்றதும் ஆர்யகன் மனம் மகிழ்ந்து உத்தவனை அருகே அழைத்து உச்சி முகர்ந்து தன் மூத்த பேரனும், தன் மகன்  கார்க்கோடகனின்  மூத்தமகனுமான மணிமானிடம் உத்தவனைக் கவனித்துக்கொள்ளுமாறு ஒப்படைத்தான்.  ஐம்பது வயதான கார்க்கோடகனும், இருபத்தி ஐந்து வயதிருக்கும் மணிமானும் நாகர்களில் சிறந்த வீரர்களாகக் காணப்பட்டனர்.   உடல் முழுதும், சிவப்பு, வெள்ளை நிறங்களில் கோடுகள் தீட்டி இருந்தது.  தலையில் இறகுகள் கொண்ட கிரீடமும், அரச குலத்தவரான நாகர்களின் பாரம்பரிய ஆயுதமான ஈட்டியும், கேடயமும் கைகளில் ஏந்தி இருந்தனர். 

புனர்தத்தனை மீட்க வேண்டிக் கடலுக்கு அப்பால் இருந்த நாகலோகத்துக்குக் கிருஷ்ணனுடன் சென்றிருந்தான் உத்தவன்.  எனினும் இப்போது தான் தன் தந்தையின் தாயார் எங்கிருந்து வந்தாளோ அவர்களுக்கு நடுவே இருக்கிறான்.  அவர்களைச் சந்திப்பதில் உற்சாகம் கொண்டான். ஆர்யகன் உத்தவனைத் தன் பல்லக்கின் அருகிலேயே கூடவே வரச் சொல்லி வற்புறுத்தினான்.  அங்கே  பல்லக்கின் இரு பக்கங்களிலும் பசுபதி நாதருக்கு வழிபாடுகள் செய்து வரும் பூசாரிகள் கைகளில் பெரிய தண்டத்தைத் தூக்கிக் கொண்டு மழுங்க மொட்டை அடித்த தலையோடு வந்து கொண்டிருந்தனர்.   செல்கையில் உத்தவனிடம் ஆர்யகன் உத்தவனோடு பேசிக் கொண்டே வந்தான்.  உத்தவனின் தாத்தா ஷூரன் எப்படித் தன் பெண்ணைத் திருமணம் செய்து கொள்ள நேரிட்டது என்பது தெரியுமா என்றும் கேட்டான்.  உத்தவன் அதைக் குறித்துத் தனக்குத் தெரியாது என்றதும், ஆர்யகன் தன் மகள் மரிஷா எப்படி யாதவர் தலைவன் ஷூரனைத் திருமணம் செய்து கொள்ள நேர்ந்தது என்பதைச் சொல்ல ஆரம்பித்தான்.

“அது நடந்து பல வருடங்களுக்கும் மேல் இருக்கும்.  யமுனைக்கரையில் யாதவக் குடிமக்களான விருஷ்ணி குலத்தவர், ஷூரர்கள், அந்தகர்கள் அனைவரும் காடுகளை அழித்துத் தாங்கள் குடியிருக்க ஒரு நகரத்தை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தனர்.  ஷூரன் மிகவும் தைரியசாலியான தலைவன்.னொரு முறை வேட்டைக்குச் சென்ற அவன் மிகக் கொடூரமான காட்டு ஓநாய்களால் சூழப்பட்டான்.  அந்த ஓநாய்களோடு போரிட்டதில் கிட்டத்தட்ட அவை அவனைக் கொன்றே போட்டிருக்கும்.  அப்போது தான் அதிசயம் நிகழ்ந்தது.  நாகர்கள் அங்கே வந்தனர்.  ஒரு குழுவாக வந்த நாகர்கள் ஷூரனைக் காப்பாற்றினார்கள்.   என்றாலும் ஓநாய்களின் தாக்குதலால் காயமடைந்த ஷூரன் மயக்கமாகவும் கிடந்தான்.  அங்கிருந்த நாகத் தலைவர்கள் தங்கள் அரசன் ஆன ஆர்யகன் இருக்கும் இடத்துக்கு அவனைத் தூக்கி வந்தனர்.  “

இது வரை கதை போல் சொல்லி வந்த ஆர்யகன் இப்போது நேரிடையாக உத்தவனிடம், “நான் பார்த்ததுமே அவன் மஹா வீரன் என்பதைப் புரிந்து கொண்டு விட்டேன்.  என் சொந்தக் குடிலுக்கே அவனை எடுத்துச் சென்று என் குடும்பத்தினரை விட்டே மருத்துவமும் பார்க்கச் செய்தேன்.   அப்போது தான், மரிஷா, என் மூத்த மகள், உடல்நலமின்றி இருந்த ஷூரனை மிகக் கவனமாகப் பாதுகாத்தாள்.”  தன் மகளைப் பற்றிய நினைவுகளில் மூழ்கியவாறே தொடர்ந்து, “ மரிஷா ஒரு அழகான பெண் மட்டும் இல்லை; விவேகம், புத்தி சாதுர்யம், தைரியம் அனைத்தும் நிரம்பியவள்.  எழில் நிரம்பிய அவளின் நடை, உடை, பாவனைகள் அனைத்துமே ஒரு அழகான பெண் பாம்பைப் போல் இருக்கும்.  அவள் மனதில் யாதவத் தலைவன் ஷூரன் நிரம்பி விட்டான்.  அவனையே மணக்கவேண்டும் என நினைத்தாள்.  ஷூரனுக்கும் மெல்ல மெல்ல நினைவு திரும்பியது.  மரிஷா தன்னைக் கவனித்துக் கொண்டதோடு அல்லாமல் தன் மேல் வைத்திருக்கும் அன்பையும் நினைத்து அவனும் அவள் பால் ஈர்க்கப் பட்டான்.”

சற்றே நிறுத்தி விட்டு மேலே தொடர்ந்தான் ஆர்யகன்:” யாதவத் தலைவர்கள் வேட்டைக்குச் சென்ற ஷூரனைக் காணவில்லை எனத்  தேடிக் கொண்டு வந்தார்கள்.  அப்போது அவர்களுடன் ஷூரன் சென்றாலும் அவன் மனமெல்லாம் மரிஷாவிடமே.  யாதவர்களின் இருப்பிடம் சென்ற ஷூரன் தன் உடல்நிலை நன்கு தேறியதும் மீண்டும் என்னைத் தேடி வந்தான்.  மரிஷாவைத் தான் திருமணம் செய்து கொள்ளப் போவதாய்க் கேட்டான்.  ஆனால் யாதவர்கள் எவருக்கும் இதில் சம்மதமே இல்லை;  மிகக் கோபம் அடைந்தனர்.  அவர்கள் தங்களைக் குறித்தும், தங்கள் குலம் குறித்தும் மிகவும் கர்வம் கொண்டவர்கள்.  அப்படிப் பட்ட குலத்தின் தலைவன் நாகர்களின் மகளையா திருமணம் செய்து கொள்வது?  ஆனால் ஷூரன் கெட்டிக்காரன் மட்டுமல்ல; திறமைசாலியும் கூட.  என்னுடன் நாககூடத்துக்கு வந்து என் மகளை முறைப்படி திருமணம் செய்து கொண்டு பின்னர் அவளையும் தன்னுடன் அழைத்துச் சென்றுவிட்டான்.”


சற்று நேரம் மூச்சு விட்டுக் கொண்ட, ஆர்யகன்,”ஆஹா, அது எத்தனை பெரிய விழாவாக நடந்தது தெரியுமா?  யாதவர்கள் ஒரு பக்கம், நாகர்கள் இன்னொரு பக்கம், பெரிய பெரிய விழாக்களை எடுத்து விருந்து வைத்துக் கொண்டாடினார்கள்.  என் மரிஷாவைப் பற்றிக் கேட்கவே வேண்டாம்.  அருமையான பெண் அவள்!  விரைவில் பல திறமையான கெட்டிக்காரர்களான மகன்களைப் பெற்றாள்:  அவளைப் போன்ற அழகான பெண்களையும் பெற்றாள்.”  ஆர்யகன் குரலில் தன் மகளைக் குறித்த கர்வம் மேலோங்கியது.

கண்ணன் தடையின்றி வருவான்!

கண்ணன் கதைகளை மொழி பெயர்த்து வந்தாலும் உள்ளூரக் கொஞ்சம் நம நமவென இருந்தது.  எல்லாம் காப்பிரைட் குறித்தே.  ஏப்ரலில் வந்த சம்பந்தியும் அதையே சொல்ல, அதுக்கப்புறமா மேற்கொண்டு மொழி பெயர்ப்பையே நிறுத்தி வைத்துவிட்டு திரு திவாகரின் ஆலோசனையின் பேரில் பாரதீய வித்யா பவன் மும்பை அலுவலகத்தைத் தொடர்பு கொண்டேன்.  அவங்க தற்சமயம் முன்ஷிஜியின் 125 ஆவது பிறந்த நாள் கொண்டாட்ட ஏற்பாடுகளில் இருப்பதால் தங்களால் ஏதும் செய்ய இயலாது என்றும், சென்னை அலுவலகம் தான் தமிழ் மொழிபெயர்ப்புக்களைக் கவனிக்கணும் என்றும் சொல்லிச் சென்னை அலுவலகத்தைத் தொடர்பு கொள்ளச் சொன்னார்கள்.  சென்னை அலுவலகத்தைத் தொடர்பு கொண்டேன்.  காப்பிரைட் பிரச்னை பப்ளிகேஷன்ஸ் மூலமாகத் தான் வரும்னு சொன்னதோடு, மொழிபெயர்க்கத் தடை இல்லைனும் சொல்லிட்டார்.  தமிழில் பப்ளிஷ் பண்ணினால் மார்கெட்டில் விற்பனை ஆகுமானு தெரியலையேனு திரு ராமசாமி சொல்கிறார்.  அதே சமயம் சொந்தமாக என்னை பப்ளிஷ் பண்ணிக்கோ அதுக்கு அநுமதி தரோம்னு சொல்றார்.  மொத்தத்தில் மொழிபெயர்ப்புத் தொடரலாம் என்பதே எனக்கு சந்தோஷமான விஷயம்.  மற்றவை போகப் போக.  மொழி பெயர்த்ததை அவங்களுக்கு அனுப்பி வைக்கச் சொல்லி இருக்கார்.  அதுக்குக் கொஞ்சம் நகாசு வேலை இருக்கு. செய்துட்டு ஒரு வாரத்தில் அனுப்பி வைக்கிறேன்.   நேரிலேயும் வந்து பார்க்கச் சொல்கிறார்.  போகணும்.  கண்ணன் தொடர்ந்து உதவுவான் என்ற நம்பிக்கையுடன் இனி தொடர்ந்து கண்ணன் வந்து அனைவரையும் மகிழ்விப்பான் என்றும் சொல்லிக்கிறேன்.