Saturday, February 28, 2015

பலியா வாய் திறக்கிறான்!

பலியாவின் பேரன் கோபுவிற்குத் தன்னுடைய எஜமானன் மீண்டும் உயிருடன் வந்ததிலும், அவன் பழைய மாதிரியே இருப்பதையும் காண மகிழ்ச்சியும் திருப்தியுமாக இருந்தது. பீமன் அவனை யுதிஷ்டிரனிடம் சென்று தான் சற்றுத் தாமதமாக அரண்மனைக்கு வருவதாகத் தெரிவிக்கச் சொல்லி அனுப்பி வைத்தான்.  அவன் சென்றதும் பலியாவைப் பார்த்து, “நீ உயிருடன் இருப்பாய் என்றோ, உன்னைப் பார்க்க முடியும் என்றோ நான் எண்ணிப் பார்க்கக் கூட இல்லை.” என்றான் பீமன். சந்தோஷத்துடன் அவனைத் தடவிக் கொடுத்துக் கொண்டே சிரித்தான் பலியா. “சின்ன எஜமான், கோபுவை உங்களுடன் வாரணாவதத்துக்கு அனுப்பினேன்.  அவன் திரும்பி வந்து நீங்கள் அனைவரும் உயிருடன் எரிக்கப்பட்டு விட்டீர்கள்; சாம்பல் தான் மிச்சம் என்று சொன்னான்.  ஆனால் நான் அதை முழுவதும் நம்பவே இல்லை. என் உள் மனது உங்களுக்கு ஒன்றும் ஆகியிருக்காது என்று உறுதியாக நம்பியது. என் நம்பிக்கை வீண் போகவில்லை.  அதோடு நான் இறந்து போவதற்கு முன்னர் உங்களைப் பார்ப்பேன் என்றும் எதிர்பார்த்திருந்தேன்;  அதுவும் நடந்துவிட்டது. இனி எனக்குக் கவலை இல்லை.” என்றான்.

பீமனை அன்புடன் மீண்டும் கட்டி அணைத்துக் கொண்ட பலியா, “சின்ன எஜமான், நீங்கள் இப்போது சுகமாகவும் பத்திரமாகவும் திரும்பி வந்த இந்த நல்ல வேளையைக் கொண்டாட வேண்டும். எங்கே உங்கள் தலை?  உங்கள் தலையை நீங்கள் குழந்தையாக இருந்தபோதிலிருந்து தடவிக் கொடுப்பேனே, நினைவிருக்கிறதா?  அதே போல் இப்போதும் தடவிக் கொடுக்க வேண்டும் என்று ஆசையாக இருக்கிறது.  அதுவும் நீங்கள் விளையாடும்போது என்னைப் பார்த்து உறுமுவீர்கள், கோபம் வந்தாலோ உங்கள் தலையால் என்னை முட்டுவீர்கள்! நினைவிருக்கிறதா இளவரசே!” இப்போது தன் மருமகளிடம் திரும்பியவன். “மாலா, சின்ன எஜமானுக்காக விரைவில் உணவு தயாராகட்டும்.  அவர் நன்றாகச் சாப்பிடுவார். வீட்டில் என்னவெல்லாம் இருக்கிறதோ எல்லாவற்றையும் வைத்து விரைவில் சமைத்து எடுத்து வா. “ என்று அவளை விரட்டினான்.

மாலா மிகவும் குண்டாக இருந்தாள்.  அவள் கால்கள் தூணைப் போல் இருந்தன. பெரிய வயிறோடு எழுந்திருக்க முடியாமல் எழுந்த அவளைப் பார்த்த பீமன், “விரைவில் உன் கால்களால் உன் உடலைத் தாங்க முடியாமல் போகப் போகிறது. இப்போது விரைந்து செல்!” என்றான். மாலா அதைக் கேட்டுச் சிரித்துக் கொண்டாள். மன்னிப்புக் கேட்கும் பாவனையில் பலியா பீமனைப் பார்த்து, “வீட்டில் உணவுப் பொருட்கள் நிறைய இல்லை. நாங்கள் அனைவரும் தாத்தாவும், மற்றும் மன்னர் திருதராஷ்டிரரும் உங்கள் அனைவரின் வரவுக்காகப் பொதுமக்களுக்கு அளிக்கப் போகும் விருந்தில் கலந்து கொள்ள இருக்கிறோம். ஆகவே அதிகம் சமைக்கவில்லை.” என்றவன், மறுபடி பீமனிடம், “சின்ன எஜமான், உங்கள் வயிற்றுப் பசி முன்னைப் போலுள்ளதா? அல்லது அதிகரித்துள்ளதா? குறைந்துள்ளதா?” என்று ஆவலுடன் வினவினான்.

“என்ன, குறைவதா? பலியா, முன்னை விட அதிகரித்திருக்கிறது.  அதிகரித்துக் கொண்டே போகிறது. பலியா, நான் எப்படி ராக்ஷசவர்த்தத்தின் அரசன் ஆனேன் என்பது தெரியுமா உனக்கு? ஒரு ராக்ஷசன் எவ்வளவு உணவு உண்பான் என்பது தெரியுமா?  அப்படி ஒரு ராக்ஷசன் என்னுடன் போட்டி போட்டான்.  அவன் உணவு உண்ணுவதில் நிபுணன்.  தலைவனாம். என்னுடன் சாப்பிடுவதில் போட்டி போட வந்தான். அப்படி நான் ஜெயித்தால் அவர்கள் தலைவனாகலாம் என்பதே போட்டியின் விதி. இருவரும் சாப்பிட ஆரம்பித்தோம்.  நான் சாப்பிட்டுக் கொண்டே இருந்தேன்.  சிறிது நேரத்திலேயே ராக்ஷசனுக்கு வயிறு வலிக்க ஆரம்பித்து விட்டது. அவனால் உண்ண முடியாமல் மயங்கி விழுந்து விட்டான். அவ்வளவு சாப்பிட்டும் என் பசி என்னமோ அடங்கவில்லை.” பீமன் சத்தம் போட்டுச் சிரித்தான். “பலியா, பலியா, அந்த ராக்ஷசன் மயங்கிக் கிடப்பதைப் பார்க்கப் பார்க்க வேடிக்கையாக இருந்தது.  தெரியுமா! பின்னர் அதிகம் உணவு உட்கொண்டதன் காரணமாக அவன் இறந்தே போய்விட்டான்.”

“எல்லாம் சரிதான் சின்ன எஜமான், நீங்கள் எவ்வளவு பேர் கையால் உணவு உண்டிருந்தாலும் உங்கள் வளர்ப்புத் தாய் உங்களுக்குச் சமைத்து அளித்த உணவைப் போல் ருசியாக இருக்காது.” என்றான் பலியா.

“ஓ, நான் அவரை மறந்தே போனேனே!  எங்கே அவர்?  உடல்நலமில்லாமல் இருக்கிறாரா?” என்று பீமன் கேட்க, பலியாவின் முகம் மாறியது. வருத்தத்துடன் கூறினான்:”அவள் எப்போதோ இறந்துவிட்டாள் என் எஜமானே! உங்களை மீண்டும் பார்க்க அவளுக்குக் கொடுத்து வைக்கவில்லை. அது வரை உயிருடன் இருக்க முடியவில்லை அவளால்.  ஆனால் கடைசி வரை உங்களை ஒரு முறை பார்க்க விரும்பினாள்.  மிக மோசமாக விரும்பினாள். அது நடக்கவே இல்லை.”

“பலியா, நீ அவளைத் திட்டித் திட்டியே கொன்றிருப்பாய்!” என்று அவனைப் பார்த்துத் தன் ஆள்காட்டி விரலை நீட்டிக் குற்றம் சாட்டினான் பீமன். “அதெல்லாம் இல்லை, எஜமான்.  அவள் அதிகம் சாப்பிட்டுக் கொண்டிருந்தாள்.  அதனால் தான் இறந்துவிட்டாள்..” என்று சொல்லிய பலியா தன் வயதான சுருங்கிய விரல்களால் பீமனின் உடலைத் தடவிக் கொடுத்தான்.  அவன் விரல்கள் பீமனின் தோள் பலத்தையும் மார்பின் அளவையும் அளப்பது போல் அங்குமிங்கும் சென்று தடவிக் கொடுத்தது. முன்னை விடத் தன் சின்ன எஜமான் வலுவானவனாகவும், பலம் பொருந்தியவனாகவும் இருப்பதைப் பார்த்து பலியாவுக்கு உள்ளூர சந்தோஷம் ஏற்பட்டது. “சரி, பலியா, நீ இப்போது நாங்கள் வாரணாவதம் சென்ற பின்னர் இங்கே நடந்தவற்றைச் சொல்!” என்றான் பீமன்.

தன் தலையை மேலும், கீழும் ஆட்டிக் கொண்டான் பலியா.”சின்ன எஜமான், உங்களிடம் சொல்வதற்கு என்னிடம் நிறையச் செய்திகள் உள்ளன.  ஆனால் அவற்றால் உங்கள் மனம் மகிழ்வுறாது. மெல்ல மெல்லச் சொல்கிறேன். முதலில் உணவு உண்ணுங்கள்.”என்ற வண்ணம் அடுக்களைப்பக்கம் திரும்பி மாலாவை அழைத்தான். “இன்னும் என்ன செய்கிறாய் பெண்ணே! விரைந்து வா! சின்ன எஜமான் இன்னும் எத்தனை நேரம் பசியுடன் காத்திருப்பார்? வா, சீக்கிரம், “என்ற வண்ணம் பீமனிடம் மறுபடி திரும்பி, “சின்ன எஜமான், முதலில் உணவு உண்ணுங்கள்.  உணவு உண்ணும்போது கெட்ட செய்திகளைக் கேட்டால் உங்கள் உடல்நலம் பாதிக்கப்படும். உண்ணும் உணவு செரிக்காது.” என்றான்.

“அதெல்லாம் ஒன்றும் இல்லை; பலியா, நீ சொல்! எதுவானாலும் சொல். என்னுடைய ஜீரண சக்தி நன்றாகவே இருக்கிறது.  அது நல்ல விஷயங்களையும் கிரகித்துக் கொள்ளும்; கெட்ட விஷயங்களையும் ஜீரணம் செய்யும்.” என்றான் பீமன். மாலா பீமனுக்கு உண்ண உணவை எடுத்து வந்தாள். சிறு தானியங்களால் செய்யப்பட்ட அப்பங்கள், ஒரு பானை நிறைய மோர், வெல்லக் கட்டிகள், போன்றவற்றை அவள் பரிமாறினாள். “சின்ன எஜமான், தற்சமயம் வீட்டில் இருப்பதை வைத்து உங்களை உபசரிக்க வேண்டியதாயிற்று.” என்று மீண்டும் மன்னிப்புடன் கேட்டுக் கொண்டான் பலியா.  மாலாவும் அதை ஆமோதித்தாள். தன் குடும்பத்து நபர்களை எல்லாம் அப்புறப் படுத்தினான் பலியா. அவனுடைய கொள்ளுப்பேரன்கள் மூவர் மட்டும் அவர்களையே கவனித்துக் கொண்டிருந்தனர்.

அந்தக் குழந்தைகள் இதுவரையிலும் அவர்கள் வீட்டில் எந்த இளவரசனும் வந்து பார்த்ததில்லை. தாங்கள் அனைவரும் பிரமிப்புடனும், பயபக்தியுடனும் பார்க்கும் தங்கள் கொள்ளுப்பாட்டன் இப்படி ஒரு ராக்ஷசன் போன்ற இளவரசனைக் கொஞ்சிக் கொண்டும் கட்டி அணைத்துக் கொண்டும் சீராட்டுவதை அவர்கள் நினைத்துக் கூடப் பார்க்கவில்லை. அவர்களுக்கு இதெல்லாம் வியப்பாக இருந்தது.

“இதோ பார் பலியா! என்னை அப்படிப் பார்க்காதே.  நான் ஒன்றும் உன்னையும் சேர்த்துத் தின்றுவிட மாட்டேன்.  இந்த அப்பங்களை நாமிருவரும் பகிர்ந்து கொள்வோம், வா!” என்றபடி பீமன் அந்தக் குழந்தைகளையும் அருகே அழைத்தான். ஆனால் அந்தக் குழந்தைகள் பீமனைக் கண்டு பயந்து கொண்டு நின்றிருந்தன.  அருகில் செல்லும் தைரியம் அவர்களிடம் இல்லை. பின்னர் பீமன் மீண்டும் மீண்டும் அழைத்ததும், அவன் புன்னகை கொடுத்த தைரியத்தில் மெல்ல மெல்ல ஒவ்வொரு அடியாக எடுத்து வைத்து பீமனிடம் சென்றனர்.  பீமன் அவர்கள் கைகளைப் பிடித்துக் கொண்டான். அவர்களைத் தன் பக்கம் இழுத்து அவர்கள் இடுப்பில் கிசு கிசு மூட்டிச் சிரிக்க வைத்தான். பின்னர் மாலாவும், குழந்தைகளும் அறையை விட்டு வெளியேறினர். பீமன் பலியாவைப் பார்த்து,


“இப்போது நான் பாட்டனாரையும், பெரியப்பா திருதராஷ்டிரரையும் சென்று பார்க்க வேண்டும்.  எல்லாவற்றையும் விட முக்கியமாகக் கொள்ளுப்பாட்டி ராணி சத்யவதியைச் சந்திக்க வேண்டும். ஆகவே நீ விரைவில் இங்கே நடந்தவைகளைப் பற்றிச் சொல்!” என்று அவசரப்படுத்தினான்.

Tuesday, February 24, 2015

பலியாவின் கதை! தொடர்ச்சி!

பலியாவின் துரதிருஷ்டம் என்னவெனில் பாண்டவர்கள் ஐவரும் ஹஸ்தினாபுரத்தை விட்டு நாடு கடத்தப்பட்டு வாரணாவதம் சென்ற சமயம் அவர்களுடன் அவனால் போக முடியவில்லை என்பதே! ஏனெனில் அப்போதே அவன் முதுமையை எய்தி இருந்ததோடு கிட்டப்பார்வை மட்டுமே படைத்திருந்தான்.  அவனால் நடக்கவும் இயலாமல் பிறர் கைகளை எதிர்பார்க்கும் நிலையில் இருந்து வருகிறான்.  ஆனால் அவன் பேரன் கோபு பீமனுடன் சென்றான். பீமனின் சரீரத்துக்குத் தேவையான சிகிச்சையை அங்கேயும் அவனே செய்து வந்தான்.  ஆனால் என்னே துரதிருஷ்டம்!  ஐந்து சகோதரர்களும் நெருப்பில் வெந்து இறந்துவிட்டார்கள் என்னும் துக்கச் செய்தியைத் தாங்கிக் கொண்டு திரும்பி வந்தான் அவன்.

ஆனாலும் பலியா அரச குடும்பத்தினரின் நம்பிக்கைக்கும், மரியாதைக்கும் உரியவனாகவே இருந்து வந்தான்.  அவன் குலத்தோரும் அவனிடம் மிகவும் மரியாதை செலுத்தியதோடு அவன் தலைமையை ஏற்றே வந்தனர். இப்போது இங்கே உள்ள குரு வம்சத்தினருக்கே அவனும், அவன் உறவின்முறை மக்களும் சேவை செய்து வந்தாலும் அதையும் முழு விசுவாசத்தோடு நம்பிக்கைக்கு உகந்த முறையில் செய்ய வேண்டும் என்பதில் அவன் மிகக் கண்டிப்புக் காட்டி வந்தான்.  அவன் இனத்து மக்களும் அவன் நம்பிக்கை பொய்யாகாவண்ணமே நடந்து கொண்டனர். ஆனாலும் பாண்டவர்களையும் அவர்களுக்கு நேர்ந்த துர்மரணத்தையும் அவனால் மறக்க இயலவில்லை.  அவர்களுக்கு நேர்ந்த துரதிஷ்டகரமான விபத்தைக் குறித்தும் அவன் அறிய நேர்ந்ததோடு அல்லாமல், தன் சின்ன எஜமான் ஆன பீமனும் அதில் இறந்தது குறித்து நினைத்து வருந்தினான்.

அங்கிருந்த குடியிருப்பில் ஒவ்வொரு மல்லனுக்கும் ஒரு குடில் இருந்தது.  அவரவர் குடும்பத்தோடு வாழ்ந்து வந்தனர்.  அவரவருக்கு எனக் குறிப்பிடப் பட்டிருந்த எஜமானர்களுக்கு அவர்கள் குடும்பம் சேவை செய்து கொண்டு வந்தது. அந்தக் குடியிருப்பு வளாகத்தின் மையத்தில் அவர்கள் மல்யுத்தம் செய்யும் மைதானம் இருந்தது.  அவர்கள் அரச சேவை முடிந்து ஓய்வில் இருக்கையில் இங்கு வந்து மல்யுத்தப் பயிற்சி செய்வார்கள். ஒருவருக்கொருவர் யுத்தம் செய்து கொள்வார்கள். பெண்களும் ஆண்களுக்குத் துணையாக அரச குடும்பத்துப் பெண்டிருக்குத் தம் சேவைகளை ஆற்றுவதோடு அல்லாமல் குடும்பத்தையும் பார்த்துக் கொண்டனர். பீமனுக்குத் தெரிந்தவரையில் இந்த அக்காடக்கா குழந்தைகள் அழுக்காகவும், நிர்வாணமாகவும் விளையாடும் இடமாகவே இருந்து வந்தது.  ஆங்காங்கே பசுக்கள் சுற்றிக் கொண்டிருக்கும். வயதான பெண்கள் நூல் நூற்றுக் கொண்டிருப்பார்கள்.  சளசளவென்று பேசிக் கொண்டும் இருப்பார்கள்.

ஆனால் இப்போது பலியாவின் தள்ளுவண்டியைத் தள்ளிக் கொண்டு பீமன் உள் நுழைகையிலேயே அந்த இடம் சுத்தமாகப் பராமரிக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது. சிறு வயதில் அந்த இடத்தில் மல்லர்களோடு தான் விளையாடிய நினைவுகளெல்லாம் பீமன் கண்ணெதிரே தோன்றி மறைந்தன.  இப்போது அங்கே ஊர்வலத்தில் கலந்து கொள்ளாத ஆண்களும், பெண்களும் பீமன் பலியாவின் வண்டியைத் தள்ளிக் கொண்டு வருவதைப் பார்த்துக் கூச்சலிட்டுக் கொண்டு ஓடி வந்து தங்கள் மகிழ்ச்சியைத் தெரிவித்தனர்.  பீமனும் தன் பங்குக்கு அவர்களைப் போல் கத்தித் தன் மகிழ்வைத் தெரிவித்துக் கொண்டதோடு அங்கிருந்த குழந்தைகளைப் பார்த்து விளையாட்டாக உறுமிக் காட்டினான்.  அவனுக்கு அடையாளம் தெரிந்த ஓரிருவரைப் பெயர் சொல்லி அழைத்த பீமன் தன்னுடைய உறுமலுக்குப் பயப்படாதவர்களைக் கண்டு மகிழ்ந்து அவர்களைத் தட்டிக் கொடுத்து உற்சாகப் படுத்தினான். பீமன் ஒருபோதும் தன்னை ஒரு அரசகுமாரனாக நினைத்துக் கொண்டதே இல்லை.

இப்போதும் அப்படியே நடந்து கொண்டான்.  அவன் தலையில் சூடி இருக்கும் கிரீடம், அரச குடும்பத்தினரின் நகைகள், பட்டாடைகள் போன்றவையே தவிர்க்க முடியாமல் அவன் அரச குலத்தவன் என்பதை உணர்த்திக் கொண்டிருக்கும். அவனுடைய அற்புதமான நடத்தையால் அவன் எவ்வளவு எளியவரையும் எளிதில் அணுகித் தன் வயப்படுத்தி விடுவான். அவர்களைத் தன்னில் ஒருவராக நினைக்கச் செய்வான்.  இப்போது அங்கிருந்த மக்களைத் திரும்பிப் பார்த்து,”இந்தக் கிழவன் உங்களை எல்லாம் மிக மோசமாக நடத்தி வருகிறான், இல்லையா?” என்று குறும்புடன் கேட்டான்.  பின்னர் அவனே சிரித்துக் கொண்டான். “கவலைப் படாதீர்கள்!  நான் தான் வந்து விட்டேனே! இவனை இனிமேல் நான் பார்த்துக் கொள்கிறேன். இவனுக்குச் சரியான தண்டனை தரப் போகிறேன்.” என்றான்.

வயதான பெண்கள் சத்தமாகச் சிரிக்க, இளம்பெண்கள் தங்கள் முகத்தைத் துணியால் மூடிக் கொண்டு கிளுகிளுவெனச் சிரித்து மகிழ்ந்தனர்.  பீமன் இப்போது அங்கிருந்த குழந்தைகள் பால் தன் கவனத்தைத் திருப்பினான்.  குழந்தைகள் அனைவரும் அவன் உருவத்தையும், குரலையும் அதிசயம் பொங்கப் பார்த்ததைக் கண்டான்.  வேண்டுமென்றே தன் முகத்தைக் கடுமையாக வைத்துக் கொண்டு கத்தினான். “நான் இப்போது பலியாவை கங்கையில் மூழ்க அடிக்கப்போகிறேன்.  இல்லை எனில் அவன் எளிதில் சாக மாட்டான்.  இப்போ நீங்க அனைவரும் இங்கிருந்து செல்லவில்லை எனில் உங்களையும் கங்கையில் மூழ்க அடிப்பேன்.” என்று சத்தமாகக் கத்தினான். ஆனால் அந்தக் குழந்தைகள் குதித்துக் கும்மாளமிட்டன.  அவர்களுக்கு அச்சமும், அதே சமயம் மதிப்பும் கொடுக்கிற பலியாவைக் கங்கையில் மூழ்க அடிப்பது என்பது விநோதமானதாகவும், ரசிக்கக் கூடியதாகவும் தோன்றியது அவர்களுக்கு.  கூச்சலிட்டுத் தங்கள் மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொண்டார்கள்.

பீமன் பலியாவைத் தன்னிரு கரங்களால் தூக்கிக் கொண்டு வீட்டுக்குள் சென்று அங்கிருந்த படுக்கையில் அவனை அமர வைத்தான்.  பின்னர் தன் அரைக்கச்சையைக் கழட்டிவிட்டு வாளை அங்கிருந்து எடுத்துக் கீழே போட்டான்.  தன் தலையிலிருந்த கிரீடத்தையும் கழட்டி ஒரு புறம் வைத்தான். பலியாவின் மருமகள் அவனுக்கு அமர அளித்த ஆசனத்தைப் புறம் தள்ளிவிட்டுக் கீழே அமர்ந்து கொண்டான்.

Saturday, February 21, 2015

பலியாவின் கதை!

அனைவரும் செல்லும் வரை காத்திருந்த பீமன் ஊர்வலத்திலிருந்து தன்னுடன் விலகி வந்திருந்த நகுலனைப் பார்த்து, தங்களுடன் வந்திருந்த உதவியாட்களுக்கான தங்குமிடம் சரிவரக் கிடைத்திருக்கிறதா என்று பார்க்கச் சொல்லி அவனை அனுப்பினான். பின்னர் அவன் தன் முன்னாள் ஆசான் ஆன பலியாவிடம் வந்தான்.  பலியா மிகவும் முதுமை எய்தி இருந்தான்.  கூனிக் குறுகிப் போய்த் தன் பேரன் துணையோடு நின்று கொண்டிருந்தான்.  அவனால் தனியாக எங்கும் செல்ல இயலாது என்பதோடு பார்வையும் சரியாக இல்லை.  கிட்டே வருபவர்களை மட்டுமே அடையாளம் காண முடிந்தது அவனால். காது கேட்கும் திறன் கொஞ்சம் இருந்ததால் குரலை வைத்து ஓரளவு புரிந்து கொள்வான். அவனருகே வந்த பீமன் எவ்விதமான முன்னறிவிப்பும் இல்லாமல் அவனை அப்படியே தன் பலமான கைகளால் தூக்கிக் கொண்டான்.  உரத்த குரலில், “பலியா, உன்னுடைய சிறிய எஜமான் வந்திருக்கிறேன்.” என்றான். பலியாவின் கண்களில் கண்ணீர் நிரம்பியது.  ஒரு தாயின் அன்போடு அவன் பீமனைக் கட்டி அணைத்துக் கொண்டான்.

அவன் நினைவுகள் பின்னோக்கிச் சென்றன.  பிறந்து சில வாரங்களே ஆகி இருந்த குழந்தையான அவனைக் குந்தி தன் பொறுப்பில் ஒப்படைத்ததும், அப்போதே பீமனின் வலுவான உதைகள் பட்டும், அழுகை கர்ஜனையைப் போல் இருந்ததையும் நினைத்துப் பார்த்து மகிழ்ந்தான். பற்களை இழந்த பொக்கை வாயுடன் அவன் சிரிப்பதைப் பார்க்க பீமனுக்கு வேடிக்கையாக இருந்தது.  இப்போதும் அவன் அதே சிறுவன் என்னும் நினைப்பிலேயே பலியா இருக்கிறானோ என்று சந்தேகப்படும் விதத்தில் அவன் முதுகை ஒரு குழந்தையைத் தட்டிக் கொடுப்பது போல் தட்டிக் கொடுத்தான் பலியா.  “சின்ன எஜமான், ஊர்வலம் ஆரம்பித்து விட்டது போலிருக்கிறதே?  நீங்கள் ஏன் ஊர்வலத்துடன் செல்லவில்லை?” என்றும் வினவினான்.

“என் மூத்த சகோதரனும், மற்றவர்களும் செல்கின்றனர்.  அது போதும். நான் உன்னை இப்போது உன் வீட்டிற்கு அழைத்துச் செல்கிறேன்.” என்றான் பீமன். ஒரு சில மல்லர்கள் ஊர்வலத்துடன் செல்லாமல் பின் தங்கி விட்டனர். அவர்கள் அனைவரும் பீமன் தங்களை மறக்காமல் நினைவு வைத்திருப்பது கண்டு மகிழ்ச்சியுடன் அவனையும், பலியாவையும் சூழ்ந்து கொண்டனர். பீமனை ஒரு கதாநாயகனாகவே அவர்கள் எண்ணிக் கொண்டிருந்தனர்.  அந்த நினைப்பில் இப்போதும் மாற்றம் ஏதும் இல்லை.  பீமன் பலியாவைத் தன் கரங்களில் எடுத்துக் கொண்டான். அவனைத் தள்ளுவண்டியில் ஏற்றி உட்கார வைத்தான்.  வெளியே செல்ல ஆசைப்படும் பலியாவை அவன் மகன்களும், பேரனும் இவ்விதமே வண்டியில் அமர வைத்துத் தள்ளிக் கொண்டு சென்றனர்.

“நீங்கள் ஏன் என்னைத் தூக்கி உட்கார வைத்துத் தள்ளிக் கொண்டு செல்ல விரும்புகிறீர்கள் இளவரசே!  அதுதான் என் பேரன் இருக்கிறானே!” என்றான் பலியா.  பீமன் கடகடவெனாச் சிரித்தான்.  “ஆஹா, பலியா, நான் இப்போது உன்னைப் பழிக்குப் பழி வாங்கப் போகிறேன்.  எனக்கு இரண்டு வயதாக இருக்கையில் நடக்க ஆசைப்பட்டபோதெல்லாம் நீ என்னை நடக்கவே விட்டதில்லை.  தூக்கிச் சுமந்து சென்றாயல்லவா?  அதற்குத் தான் இப்போது பழி வாங்குகிறேன்.” என்ற வண்ணம் மீண்டும் சிரித்தான் பீமன். சுற்றி இருந்த அனைவரும் சிரித்தனர். பீமன் வண்டியைத் தள்ளிக் கொண்டு போக மற்றவர்களும் உடன் நடந்தனர். பீமன் எப்போதுமே இப்படித் தான் பலியாவை வேடிக்கையாக வம்புக்கு இழுப்பான்.  விஷமங்கள் செய்வான்.  அதை எல்லாம் நினைத்து ரசித்தபடியும், தன்னை குரு வம்சத்து இளவரசன் வண்டியில் வைத்துத் தள்ளுவதை நினைத்தும் மகிழ்ந்தபடியும் பலியா சென்றான்.  அவனுக்கிருந்த அளவு கடந்த ஆசையால் பீமனின் கரங்களைத் தடவிக் கொடுத்தபடியே அந்தப் பயணத்தை மிகவும் ரசித்தான் பலியா.

வழியெங்கும் மக்கள் பலியா தள்ளு வண்டியில் அமர்ந்திருப்பதையும் பீமன் அதைத் தள்ளிக் கொண்டு செல்வதையும் பார்த்து ரசித்தனர்.  உற்சாகத்தில் கரங்களைத் தட்டினார்கள். கையை ஆட்டி விடைகொடுத்தனர்.  ஒரு சிலர் கூடவே வந்தனர். இப்படி வழியெங்கும் மகிழ்ச்சி வெள்ளம் கரை புரண்டு ஓட பீமன் அவனை அவனுடைய மல்யுத்தத் திடலுக்குக் கொண்டு சேர்த்தான்.  அது ஒரு காலத்தில் அகாடக்கா என அழைக்கப்பட்டது. அந்தத் திடலுக்கு அருகேயே இருந்த குடியிருப்பில் மல்லர்கள் அனைவரும் தங்கள் குடும்பத்துடன் குடியிருந்தனர்.  மல்யுத்த வீரர் குடியிருப்பு என்றே சொல்லலாம் அதை. பலியா ஒரு காலத்தில் பஹுபலி என அவன் வீரத்துக்காக அழைக்கப்பட்டிருந்தான்.

ஒரு காலத்தில் குந்திபோஜனிடம் வேலை செய்த இவர்கள் தங்களை பிராமணர்கள் என்றே அழைத்துக் கொண்டனர்.  இங்கே குரு வம்சத்து இளவரசர்களுக்கு மல்யுத்தப் பயிற்சி அளிப்பதற்காக அழைத்து வரப்பட்டார்கள்.  "ஜ்யேஸ்டி மல்" என இவர்கள் குலம் அழைக்கப்பட்டது. பலியா தான் இந்தக் குலத்தின் தலைவனாக அறியப்பட்டான். பிராமணர்களுக்கும், க்ஷத்திரியர்களுக்கும் மற்றவர்களுக்கும் மல்யுத்தப் பயிற்சி அளித்து வந்தார்கள்  இவர்கள்.  அவ்வப்போது மல்யுத்தப் போட்டிகள் நடத்தித் தங்கள் திறமையை வெளிக்காட்டி வந்தார்கள்.  இவர்கள் குடும்பப் பெண்கள் அரண்மனைவாசிகளுக்குச் சேவைகள் செய்து வந்தனர். குந்திபோஜனுக்கு ஸ்வீகாரம் அளிக்கப்பட்ட குந்தி தேவி பாண்டுவை மணந்து கொண்டு ஹஸ்தினாபுரம் வந்தபோது அவளுக்குச் சீராக அளிக்கப்பட்ட பரிவாரங்களுடன் பலியாவும் அவன் குடும்பத்தினர் சிலரும் ஹஸ்தினாபுரம் வந்தனர்.

அன்றிலிருந்து இவர்கள் தங்கள் விசுவாசத்தையும், உழைப்பையும் குரு வம்சத்தினருக்குக் காட்டி வந்தார்கள். இவர்களின் அதீத விசுவாசத்தையும், உழைப்பையும் கண்ட குரு வம்சத்து அரச குலத்தோர் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் இவர்கள் உறவின் முறையினரை  மேலும் மேலும் ஹஸ்தினாபுரத்துக்கு  வரவழைக்கும்படிச் செய்தார்கள். இவ்வாறே பலியாவின் உறவினரில் பலரும் ஹஸ்தினாபுரத்திலேயே குடியேற நேர்ந்தது.  பாண்டு தன் மனைவியரான குந்தியுடனும், மாத்ரியுடனும் இமயமலைப் பக்கம் சென்றபோது பலியாவும் அவர்களுடன் சென்றான். பீமன் பிறந்த சமயம் பலியாவுக்கும் ஒரு மகன் பிறந்திருந்தான்.  அவன் மனைவி பீமனின் வளர்ப்புத் தாயாகத் தேர்ந்தெடுக்கப்பட்டாள்.

பிறக்கும்போதே அதீத பலத்துடனும், பூரண ஆரோக்கியத்துடனும் பிறந்த இந்தக் குழந்தையின் மேல் பலியாவுக்கும் பாசம் மிகுந்திருந்தது.  தன் சின்ன எஜமானாக இவனை ஸ்வீகரித்துக் கொண்டான். இயல்பாகவே அனைவரிடமும் பாசம் கொண்ட பீமன் பலியாவையும், அவன் குடும்பத்தையும் மிகவும் நேசித்தான். பாண்டு இறந்து மாத்ரி அவனுடன் உடன்கட்டை ஏறியதும் குந்தி தன் குழந்தைகளுடனும், மாத்ரியின் மகன்களுடனும் ஹஸ்தினாபுரம் திரும்ப வேண்டி இருந்தது.  அப்போது பலியாவும் அவர்களுடன் திரும்பினான். அன்றிலிருந்து இன்று வரை பலியா ஜ்யேஸ்டி மல்லர்களின் தலைவனாக இருந்து வருகிறான். ஹஸ்தினாபுரத்து அரச குலத்தோருக்கும், மற்றும் படைத்தலைவர்களுக்கும் விசுவாசமிக்க ஊழியர்களாகப் பணி புரிந்து வருகின்றனர்.

Thursday, February 19, 2015

ஹஸ்தினாபுரத்தில் மணமக்கள்!

தன் முகத்தைத் திருப்பிக் கொண்டான் பீமன்.  இன்னும் வேறு யாரெல்லாம் வந்திருக்கிறார்கள் என்று கவனித்தான்.  அப்போது அங்கிருந்த மல்லர்கள், பயில்வான்கள் அவர்களுடன் வந்திருந்த பலியா என்றழைக்கப்பட்ட அவன் வேலையாள்(மல்யுத்தத்தின் போது உதவி செய்பவன்) ஆகியோரைப் பார்த்தான். தன் உதவியாள் இப்போது வயது முதிர்ந்து முதுமையில் இருப்பதையும் கண்டான். பீமனின் விளையாட்டுத் தோழன் ஆன தன்னுடைய பேரன் உதவியுடன் அவன் தன்னைப் பார்க்க வந்திருப்பதையும் அறிந்து கொண்டான் பீமன். அவனைக் கண்டு கொண்ட மகிழ்ச்சியைத் தன் கைகளை உயர்த்தி அவனை நோக்கி ஆட்டிய வண்ணம் தெரிவித்துக் கொண்டான் பீமன்.  முதலில் அவனைத் தெரிந்து கொள்ளாத பலியா தன் மகன்கள் சொற்களைக் கேட்டதும், பீமன் தன்னை அடையாளம் கண்டு கொண்டதை அறிந்து மகிழ்ந்தான்.  அவன் வளர்ச்சியில் தனக்கிருந்த பெரும்பங்கை நினைத்து  மகிழ்ந்தான். தான் வளர்த்த சிறுவன் இப்போது பலம் பொருந்திய இளைஞனாக வந்திருப்பதை என்ணி ஆனந்தித்தான்.

அவன் கண்களில் கண்ணீர் ததும்பியது.  அதைக் கண்ட அங்கிருந்த மல்யுத்த வீரர்கள் அனைவர் கண்களும் கண்ணீரில் மிதக்க, அனைவரும் ஒருசேர்த் தங்கள் தொடைகளில் பாராட்டுக்கும், வரவேற்புக்கும் அறிகுறியாகத் தட்டி ஒலி எழுப்பினர்.  அதை எல்லாம் கண்ட துரியோதனன் கோபம் கொழுந்து விட்டு எரிந்தது.  ஆனாலும் அப்போதைய சூழ்நிலையில் அவனால் இதைக் காட்டிக் கொள்ள முடியவில்லை. ஆனாலும் இது தனக்கு இழைக்கப்பட்ட அவமதிப்பு என்பதையும் வேண்டுமென்றே இது இழைக்கப்பட்டிருக்கிறது என்பதையும் புரிந்து கொண்டான். அவனுக்கு இருந்த ஆத்திரத்தில் பீமனின் கழுத்தை நெரித்துக் கொல்லவே தோன்றியது.  ஆனால் இங்கே இத்தனை ஆயிரக்கணக்கான மக்கள் கூடி இருக்கும் கூட்டத்தின் நடுவே இதை நிறைவேற்றுவது எவ்வாறு?

ஆனால் பீமனோ சும்மா இருக்கவில்லை. தன் முன்னாள் வேலையாளையும், அவன் மகன், பேரன் ஆகியோரையும் வரவேற்று வாழ்த்துச் சொன்ன அதே சமயம் மீண்டும் துரியோதனனை நோக்கித் திரும்பினான்.  துரியோதனன் தன்னை வரவேற்கும் வரை காத்திருக்காமல் அவனைத் தன்னிரு கரங்களாலும் அணைத்துக் கொண்டு அவன் முதுகில் ஓங்கித் தட்டினான்.  அப்படித் தட்டியவன் துரியோதனனுக்கு உடல் வலி ஏற்பட்டு அதன் வேதனை அவன் முகத்தில் தெரியும்வரை அவனை விடவில்லை. பின்னர் பெரிதாகச் சத்தம் போட்டுச் சிரித்த வண்ணம், “ ஆஹா, நாங்கள் வந்துவிட்டோம், என் அருமை சகோதரா! விதி எங்களை இங்கே இழுத்து வந்து நம்மை மீண்டும் ஒன்று சேர்த்து விட்டது.” என்றான். அதைக் கேட்ட அங்கிருந்த அனைவரும் சிரித்தனர். இதற்குள்ளாக அர்ஜுனன் முன்னே வந்து துரியோதனன் காலில் விழுந்து வணங்கி அவன் வரவேற்பையும், அணைப்பையும் பெற்றுக் கொண்டான்.

இங்கே ஆண்கள் அனைவரும் இப்படி ஒருவரை ஒருவர் முழு மனதோடும், மனமில்லாமல் வேறு வழியின்றியும் வரவேற்று முகமன் கூறிக் கொண்டிருக்கையில் திரௌபதியை துரியோதனன் மனைவி பானுமதி முழு மனதோடும், ஆர்வத்தோடும், மனப்பூர்வமாகவும் வரவேற்றாள். திரௌபதியும் அதை ஏற்றுக் கொண்டாள்.  பானுமதி தான் அவளுடன் மிகவும் சிநேகமாக இருக்க விரும்புவதாகச் சொன்னாள்.  அவள் முகம் களைப்பாகவும் கவலை நிறைந்தும் காணப்பட்டாலும் முழு மனதோடு இதைச் சொல்வதை திரௌபதி புரிந்து கொண்டாள். திரௌபதியின் இசைவைக் கண்ட பானுமதியின் முகம் மலர்ந்து பிரகாசித்தது.

இந்த சம்பிரதாய வரவேற்பு முடிவடைந்ததும், மணமக்களின் நகர்வலம் ஆரம்பம் ஆயிற்று. வாத்தியங்கள் வாசிப்பவர்கள் தங்கள் தங்கள் வாத்தியங்களை முழக்கிக் கொண்டு முன்னே சென்றனர்.  பின்னர் குழுக்களாகப் பிரிந்து ஆடிக் கொண்டும், பாடிக் கொண்டும் வந்தனர்.  இந்த இசைக்கலைஞர்கள் சென்றதும், வயது முதிர்ந்த சுமங்கலிப் பெண்கள் தங்கள் தலைகளில் தாமிரப் பானைகளை வைத்துக் கொண்டு அவற்றில் முளைப்பாரி வைத்து, திருமணம் சம்பந்தமான பாடல்களைப் பாடிக் கொண்டு வந்தனர்.  இவர்களுக்குப் பின்னால் பொறுக்கி எடுத்த பிராமணர்கள் சிலரால் வேத கோஷம் முழங்கப்பட்டது.  அனைவரும் யுதிஷ்டிரன், பலராமன், கிருஷ்ணன், துரியோதனன் ஆகியோர் தலைமை தாங்கச் சென்றனர். அரச குடும்பத்துப் பெண்கள் மங்கள இசைப்பாடல்களைப் பாடிக் கொண்டும், ஆடிக் கொண்டும் வர அவர்களை பானுமதியும் திரௌபதியும் வழி நடத்தினார்கள்.  வில்லாளிகள், காவல் வீரர்கள், மல்லர்கள் ஆகியோர் அவரவர் திறமையைக் காட்டிய வண்ணம் பின் தொடர்ந்து வர பீமனின் வேலையாள் பலியாவை அவன் பேரன் ஒரு தள்ளு வண்டியில் அமர்த்தித் தள்ளிக் கொண்டு வந்தான்.

ஊர்வலம் ஆரம்பம் ஆனதும் பீமன் யுதிஷ்டிரனிடம் சென்று அவனுக்கும், நகுலனுக்கும் இந்த ஊர்வலத்திலிருந்து விலக்கு அளிக்கக் கோரினான்.  ஏனெனில் அவர்கள் துரியோதனனின் இன்னொரு சகோதரன் விகர்ணனோடு சேர்ந்து ஊர்வலத்தில் வந்த கால்நடைகள், பசுக்கள், குதிரைகள், ஒட்டகங்கள் ஆகியவற்றைத் தக்க இடத்தில் கொண்டு சேர்க்கும் பொறுப்பை ஏற்றிருந்தனர்.  யுதிஷ்டிரன் அனுமதி கொடுத்ததும், தான் இவை எல்லாவற்றையும் உள்ளூர ரசிப்பதைக் கிருஷ்ணனுக்குத் தன் கண் ஜாடையின் மூலம் தெரிவித்த பீமன் அங்கிருந்து அகன்றான். சஹாதேவன் தங்கள் தாய் குந்தியை அழைத்துக் கொண்டு இவர்களுக்கு முன்னரே சென்று விட்டான். மங்கலகரமாக மணமக்கள் நகருக்குள் நுழைகையில் ஒரு விதவையான தான் அந்த ஊர்வலத்தில் கலந்து கொள்ள வேண்டாம் எனத் தனியான ஒரு பல்லக்கை வரவழைக்கச் சொன்ன குந்தி சஹாதேவன் துணையோடு அரண்மனைக்குச் சென்று விட்டாள்.

ஊர்வலம் நகர் முழுவதும் சுற்றிக் கொண்டு அரண்மனையை வந்தடைந்தது.  அங்கே காத்திருந்த ராணி சத்யவதி, தாத்தா பீஷ்மர், திருதராஷ்டிரன், மற்றும் காந்தாரி ஆகியோரைக் கண்டதும் யுதிஷ்டிரனும் மற்றோரும் அவர்களை வணங்கினார்கள். புது மணமக்கள் ஹஸ்தினாபுரத்தில் தங்கள் வாழ்க்கையைத் தொடங்கும் தருணம் துவங்கி விட்டது.


Tuesday, February 17, 2015

துரியோதனனின் முதல் எதிரி!

அங்கு அமர்ந்திருந்தவர்கள்,  மற்றும் கூடி இருந்த மக்கள் கூட்டம் அனைத்தும் யுதிஷ்டிரனைப் பார்க்கத் தங்கள் கழுத்தை வளைத்துக் கொண்டு மிகவும் சிரமப்பட்டார்கள்.  அத்தனை கூட்டத்துக்கு நடுவில் யுதிஷ்டிரன் வந்து கொண்டிருந்தான். அவன் ஏந்திய கைகளில் ஒரு முழுத் தேங்காய் இருந்தது.  பெரியோரைக் கண்டு வணங்க வேண்டிய முறைப்படியும், பல நாட்கள் கழித்து அனைவரையும் பார்க்க வேண்டிய சமயத்தில் இருக்க வேண்டிய முறைப்படியும் அவன் அந்தத் தேங்காயைத் தன் கைகளில் பிடித்திருந்தான். இரு கைகளையும் கூப்பிய முறையில் சேர்த்து வைத்துத் தேங்காயைப் பிடித்த வண்ணம் வந்த யுதிஷ்டிரனைக் கண்ட கூட்டத்தினர் அனைவருமே “யுதிஷ்டிரனுக்கு ஜெயம்! பாண்டவருக்கு ஜெயம்!” என வாழ்த்தொலி எழுப்பினார்கள். மக்களின் அந்தக் குரலைப் பல யானைகளின் பிளிறல் ஒலி ஒரே சமயத்தில் எதிரொலித்தது.

உடனே சங்கங்கள் ஆர்ப்பரிக்க, பேரிகைகள் முழங்க, எக்காளங்கள் ஊதப்பட்டன. யுதிஷ்டிரனின் வருகை முறைப்படி அறிவிக்கப்பட்டது.  அனைவரும் மலர்மாரி பொழிந்தனர்.  பாண்டவர்கள், பலராமன், கிருஷ்ணன் அனைவருமே மக்களின் இந்த மலர்மாரியில் நனைந்தனர். குரு வம்சத்தின் ஞானகுரு என அழைக்கப்பட்ட சோமதத்தர் தன் சீடர்களுடன் பாண்டவர்களை வரவேற்க முன்னேறினார்.  வேத மந்திரங்களை கோஷித்த வண்ணம், கைகளில் தங்கக்காசுகள் நிறைந்த பானைகளை ஏந்திய வண்ணம், வாய் நிறைய வெற்றிலை தரித்துக் கொண்டு, சுப நிகழ்ச்சிக்கு வந்திருப்பதை இம்மாதிரிச் சின்னச் சின்ன அடையாளங்களின் மூலம் அறிவித்த வண்ணம் யுதிஷ்டிரனை நெருங்கினார்கள். சோமதத்தருடன் தௌம்யரும் சேர்ந்து கொள்ள இருவரும் பாண்டவர்களுக்கும், புதிய மணமகளுக்கும், மற்றும் வந்திருந்தோர் அனைவருக்கும் தங்கள் ஆசிகளையும் நாட்டின் சுபிக்ஷத்திற்கான வாழ்த்துகளையும் தெரிவித்தனர். மனதைக் கவரும் வகையில் வேத மந்திரங்கள் ஓதப்பட்டன.

ஒரு நூறு இலையுதிர்காலங்களை நாம் பார்ப்போம்;
ஒரு நூறு இலையுதிர்காலங்கள் வரை நாம் வாழ்வோம்;
ஒரு நூறு இலையுதிர்காலங்கள் வரை நாம் கற்போம்;
அடுத்த நூறு இலையுதிர்காலங்களுக்கும் நாம் உயர உயரச் செல்வோம்;
அடுத்த நூறு இலையுதிர்காலங்களுக்கும் நாம் செழிப்பாக இருப்போம்;
அடுத்த நூறு இலையுதிர்காலங்களுக்கும் நாம் நாமாகவே இருப்போம்’
அடுத்த நூறு இலையுதிர்காலங்களுக்கும் நாம் இப்போது இருப்பதை விட இன்னமும் செழிப்பாகவும் இன்னமும் உயரத்திலும் செல்வோம்;
இல்லை; இல்லை; அது வெறும் நூறு இலையுதிர்காலங்களுக்கு மட்டுமில்லை, அதை விட அதிகமான ஆண்டுகளுக்கு நாம் நாமாக வாழ்ந்து கொண்டிருப்போம்.

இது முடிந்ததும் துரியோதனனும், மற்றவர்களும் தாங்கள் அமர்ந்திருந்த இடத்திலிருந்து எழுந்து கொண்டு கீழே இறங்கி வந்திருக்கும் உறவினர்களை வரவேற்க வந்தார்கள். வெகுநாட்கள் கழித்துச் சந்திக்கும் உறவினரை வரவேற்கும் முறைப்படி அனைவரையும் தன்னிரு கரங்களால் அணைத்து வரவேற்றான் துரியோதனன்.  பின்னர் பலராமன் அனைவரையும் விட வயதில் மூத்தவன் என்பதால் அவன் கால்களில் விழுந்து வணங்கினான். கூட்டம், “சாது! சாது!” என்று முழக்கமிட்டது. அனைவரும் தங்கள் கைகளில் இருந்த பூக்கள், மாலைகள், செண்டுகள் எனக் கைகளில் கிடைத்ததை துரியோதனன், பலராமன், யுதிஷ்டிரன் ஆகியோர் கழுத்தில் விழும்படி தூக்கி எறிந்தனர். அந்த மகிழ்ச்சிக் கோலாகலத்தில் கௌரவர்களுக்கும், பாண்டவர்களுக்கும் இடையில் எப்போதும் காணப்படும் விரிசல் கூட  அனைவருக்கும் ஒரு கணம் மறைந்தும், மறந்தும் போனது.  ஆனால்???? பீமன் தன் தலையை ஆட்டிக் கொண்டான்.  இவை எல்லாம் இன்று ஒரு நாளுக்கே! துரியோதனன் ஒருக்காலும் எதையும் மறக்கவும் மாட்டான்.  நட்புப் பாராட்டவும் மாட்டான்.

அர்ஜுனனும், இரட்டையர்கள் நகுலன், சகாதேவனும் பின் தொடர பீமன் தன் யானையிலிருந்து கீழிறங்கி துரியோதனன் இருக்கும் இடம் நோக்கிச் சென்றான்.  அவன் இதழ்களில் அதே பழைய சிறுபிள்ளைத் தனமான சிரிப்பு! கண்களில் குறும்பு! பீமன் மாறவே இல்லை!  அப்போது அங்கே வந்த கிருஷ்ணன் மேல் அனைவர் கண்களும்  நிலைத்து நின்றன.  அனைவருக்கும் ஓர் ஈர்ப்பு கிருஷ்ணனிடம் தோன்றியதோடல்லாமல் பிரமிப்பும் காணப்பட்டது. ஆவலும் மிகுந்திருந்தது. இவன் தான் கிருஷ்ண வாசுதேவனா?  ஆஹா! எப்படிப் பட்ட மனிதன்! அந்த ராக்ஷஸவர்த்தம், கிட்டத்தட்ட யமலோகம் என்றே சொல்லப்படும் இடம்.  அங்கிருந்து பாண்டவர்கள் ஐவரையும் உயிருடன் அப்படியே கொண்டு வந்து சேர்த்து விட்டானே!


 என்ன மாயம்! என்ன அதிசயம்! இது சாமானிய மனிதனால் முடிந்த ஒன்றல்ல!  அவன் நிறமே சொல்கிறதே!  நீலமா? கருநீலமா? கறுப்பா? என்ன நிறம் அது? ஆனால் இப்படிப் பளபளப்பும் காணப்படுகிறதே! மழைக்காலத்து வானின் ஈசான்ய மூலையில் காணப்படும் மழைமேகங்களை அன்றோ ஒத்திருக்கிறது இந்த நிறம்! அதோடு எவ்வளவு இளமையாகவும் காணப்படுகிறான்! அவன் தலையில் சூடி இருக்கும் கிரீடம் மிகச் சாதாரணமான ஒன்று என்றாலும் அதில் அவன் சூடி இருக்கும் மயில் பீலியின் அழகு அதற்கு ஒரு கம்பீரத்தைக் கொடுக்கிறது. மஞ்சள் நிறப் பீதாம்பரத்தை உடுத்திக் கொண்டு நெற்றியில் கஸ்தூரித் திலகம் அணிந்து கொண்டு!  ஆஹா! இவனுடைய இந்த அலங்காரங்களைக் குறித்தெல்லாம் எத்தனை எத்தனை நாடோடிப் பாடல்கள் கிடைக்கின்றன! ஆனால் அவை வெறும் வர்ணனைகள் அல்ல;  உண்மையே! கிருஷ்ணனைக் குறித்த வர்ணனைகளில் எதுவும் பொய்யல்ல!

கிருஷ்ணனைப் பார்த்துப் பார்த்து மக்கள் தங்களுக்குள்ளாகக் கிசுகிசுவென்று பேசிக் கொண்டிருந்தனர். அப்போது யுதிஷ்டிரனும், பலராமனும் மற்றப் பெரியோர்களைப் பார்க்க வேண்டிக் கொஞ்சம் வேறு பக்கம் நகர, துரியோதனன் சற்றே தயங்கினான்.  கிருஷ்ண வாசுதேவனைக் கட்டி அணைத்து வரவேற்க துரியோதனனுக்கு மனமில்லை.  அவன் யோசிக்கையிலேயே அவனால் தப்ப முடியாமல் கிருஷ்ண வாசுதேவன் துரியோதனன் தன்னை விட வயதில் மூத்தவன் என்பதால் அவன் கால்களில் விழுந்து வணங்கிவிட்டான். துரியோதனன் தன் உதடுகளைக் கடித்துக் கொண்டான்.  அவனுக்கு இப்போது கூட்டம் அனைத்தும் தன்னுடைய அடுத்த செய்கை என்னவாக இருக்கும் என்றே கண்காணிக்கும் என்பதை உணர்ந்தான். தன்னை இக்கட்டில் மாட்டி விட்ட கிருஷ்ணனை உள்ளூர சபித்தான்.

ஆர்யவர்த்தம் முழுதும் அறிந்திருக்கும் கிருஷ்ண வாசுதேவன், தன்னுடைய செய்கைகளால் அனைவரையும் கவர்ந்திருக்கும் கிருஷ்ண வாசுதேவன் இப்போது தன்னை மரியாதை நிமித்தம் விழுந்து வணங்கி விட்டான்.  இதை துரியோதனன் ஏற்கவில்லை எனில் இந்தக் கூட்டம் அவனை மன்னிக்கவே மன்னிக்காது.  ஏனெனில் விழுந்து வணங்கியவன் சாமானியன் அல்லவே! வேறு வழியின்றி துரியோதனன் கீழே குனிந்து கிருஷ்ணனைத் தூக்கி அணைத்துக் கொண்டு அவன் கழுத்தில் ஒரு மாலையைப் போட்டான்.  கூட்டம்,” ஜெய் ஶ்ரீகிருஷ்ணா! ஜெய் ஶ்ரீ கிருஷ்ணா”, “வாசுதேவ கிருஷ்ணனுக்கு மங்களம்!” என்று கோஷமிட்டது. இப்போது இன்னொரு தர்ம சங்கடம் துரியோதனன் முன்னே பீமன் உருவத்தில் நின்றது. அவனிடமிருந்து விலகிய கிருஷ்ணன் மற்றப் பெரியோரைப் பார்க்கச் சென்று விட்டான். ஆனால் இப்போது அவன் முன் நிற்பதோ பீமன்! ஒரு நிமிடம் தான் என்ன செய்ய வேண்டும் என்பதே புரியாமல் குழப்பத்தில் இருந்தான் துரியோதனன். சிறுபிள்ளையாக இருக்கையில் இருந்தே அவனுடைய எதிரி, முதல் எதிரி பீமன் தான்! இவனைத் தான் வரவேற்பதா? எப்படி?

தனக்கு வரவேற்பு அளிக்கவோ, தன்னைக் கட்டி அணைக்கவோ துரியோதனனுக்கு இஷ்டம் இல்லை என்பதை பீமன் புரிந்து கொண்டுவிட்டான். உள்ளூர நகைத்தான்.  அவன் இதழ்களில் குறும்புப் புன்னகை மலர்ந்தது. அவன் இன்னும் ஓரடி எடுத்து வைத்தால் போதும்; துரியோதனன் அவனைக் கட்டி அணைத்து வரவேற்றே ஆக வேண்டும்;  வேறு வழியில்லை.  ஆனால், அதில் என்ன வேடிக்கை இருக்கிறது? அதில் எந்த ருசியும் இருக்காதே!

Monday, February 9, 2015

பாண்டவர்களை வரவேற்க துரியோதனன்!

பீமன் மிகுந்த சந்தோஷத்தில் இருந்தான்.  அந்த மாபெரும் ஊர்வலத்தின் முன்னணியில் யானையின் மீது அம்பாரியில் அமர்ந்திருந்த பீமன் தனக்கெதிரே காணப்பட்ட காட்சிகளைக் கண்டு மிகவும் மகிழ்ந்திருந்தான். அவன் எதிரே ஹஸ்தினாபுரக் கோட்டை வாசல் தென்பட்டது.  கோட்டை வாசலுக்கு உள்ளே இருந்த பெரிய மைதானம் முழுவதும் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.  அதில் ஒரு பக்கமாய்ப் போட்டிருந்த அலங்கார மேடையில் அப்போதைய யுவராஜாவான துரியோதனன் அமர்ந்திருந்தான். தங்களை வரவேற்க துரியோதனன் வந்திருப்பது பீமனுக்குள் உவகையைத் தோற்றுவித்தது. தெள்ளிய வானத்திலிருந்து ஒளி வீசிப் பிரகாசித்த சூரியக் கதிர்களின் ஒளி அந்த மைதானத்தில்  விழுந்து மேலும் சோபையைக் கொடுத்துக் கொண்டிருந்தது.  ஹஸ்தினாபுரத்து அரச குடும்பமே அங்கே அமர்ந்திருப்பதைக் கண்டான் பீமன்.

துரியோதனனின் அருமை மாமன் ஷகுனி கூட அங்கு வந்திருப்பதைக் கண்டான்.  ஆனால் துஷ்சாசன், கர்ணன், அஸ்வத்தாமா ஆகிய மூவரையும் காணவில்லை. குரு வம்சத்தின் சிறந்த அமைச்சர்கள், தேர்ந்தெடுத்த படைத் தளபதிகள் அவரவர் பதவிக்கேற்ற ஆசனங்களில் அமர வைக்கப்பட்டிருந்தனர்.  அவர்களில் குரு வம்சத்துப் படைகளின் தலைவரான துரோணாசாரியாரும் தன் மைத்துனர் ஆன கிருபருடன் காணப்பட்டார். சோமதத்தரின் தலைமையில் வேத விற்பன்னர்கள் ஒரு பக்கம் அமர்ந்து வேத கோஷம் செய்து கொண்டிருந்தனர். அவர்களுடன் உத்தவனும் இருந்தான்.  ஆம், கண்ணனின் முன்னேற்பாட்டின்படி உத்தவன், சாத்யகியுடனும் நாகர்களின் தலைவன் மணிமானுடனும் முன் கூட்டியே அவர்கள் வரவை அறிவிக்க வேண்டிச் சென்று விட்டான்.

இவர்கள் அனைவரும் கூடி இருக்கும் இந்தக் கூட்டத்திலேயும் துஷ்சாசன், அஸ்வத்தாமா, கர்ணன் ஆகியோர் இல்லாதது கண்டு ஒரு வகையில் பீமனுக்கு மனத் திருப்தியே ஏற்பட்டது.  துஷ்சாசன் பொல்லாதவன்; மிகப் பொல்லாதவன். அவர்கள் இந்தப் புனிதமான வருகையின் போது வரவேற்புக்கு இல்லாததே ஒரு சுபசகுனமாகப் பட்டது பீமனுக்கு. ஆனால் அரசகுலத்துப் பெண்டிர் அநேகமாக வந்திருந்தனர். அவர்களில் துரியோதனன் மனைவி பானுமதியும் இருப்பதைக் கண்டான் பீமன்.  அவள் அருகே அவன் மனம் கவர்ந்த காசி தேசத்து இளவரசியான ஜாலந்திரா அமர்ந்திருப்பதையும் கண்டான்.  தாமரைப் பூப் போன்ற அவள் பாதங்கள் அவன் கண் முன்னே வந்து சென்றன.  பானுமதியின் அருகே மிகவும் மகிழ்ச்சியுடன் அமர்ந்திருந்த அவள் அங்கிருந்த ஒவ்வொருவரையும் அடையாளம் காட்டும்படி பானுமதியிடம் கேட்டுக் கொண்டிருக்கிறாள் என்பதையும் ஊகித்தான் பீமன்.

ஒரு சில முதிர்ந்த வயதுள்ள பெண்கள் அங்கே ஒரு பக்கமாக அமர்ந்து புதுமணத் தம்பதியரை வரவேற்கும் வரவேற்புப் பாடல்களைப் பாடிக் கொண்டிருந்தனர். இன்னொரு பக்கம் வணிகப் பெருமக்கள் தங்கள் கைகளில் விதம் விதமான பரிசுகளைப் புதுமணத் தம்பதிகளுக்காகக் கைகளில் ஏந்தியவண்ணம் நின்றிருக்க இன்னொரு பக்கம் தன்னுடைய நண்பர்களாக இருந்த மல்லர்களும் ஆவலுடன் அவர்களைப் பார்க்கக் காத்திருந்ததைக் கவனித்தான் பீமன். அவர்களும் பிராமணர்களாகவே இருந்தாலும் குரு வம்சத்து ராஜ குலத்துக்குச் சேவை செய்வதைத் தங்கள் லட்சியமாய்க் கொண்டவர்கள். தங்கள் குல வழக்கப்படி அலங்கரித்துக் கொண்டு கம்பீரமும், பெருமையும் ததும்ப நின்று கொண்டிருந்தனர்.  அவர்களுக்கு அருகே கோட்டை வாயில் காவலர்கள் வில்லையும் அம்புகளையும் ஏந்தியவண்ணம் காட்சி அளித்தனர். அவர்கள் ஊர்வலம் நெருங்க, நெருங்க வீர முழக்கம் இட்டவண்ணம் இருந்தனர். “பாண்டவர்களுக்கு ஜெயம்!”  பாண்டவர்கள் வரவு நல்வரவாகட்டும்!” என்றெல்லாம் கோஷித்துக் கொண்டிருந்தனர்.

வாத்தியங்களின் முழக்கம் காதுகளைப் பிளந்தது.  முரசுகள், பேரிகைகள் ஆர்ப்பரித்தன. எக்காளங்கள் ஊதப்பட்டன. மற்றும் இசைக்கருவிகள் இசைக்கப்பட்டன. சங்குகளை ஊதிப் பாண்டவர்களின் வருகையைத் தெரிவித்தனர். பீமன் மனதில் அளப்பரிய சந்தோஷம்.  எத்தனை கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தோம்.  அவை அனைத்தையும் ஈடு கட்டுவது போல் இப்போது இந்த வரவேற்பு.  இந்த வரவேற்புக்குத் தாங்கள் எல்லாவிதத்திலும் தகுதி வாய்ந்தவர்களே என்னும் எண்ணமும் பீமனின் மனதில் ஏற்பட்டது. ஹஸ்தினாபுரத்து மக்களின் அன்பு அவனை நெகிழ வைத்தது. அவர்கள் அனைவரின் மகிழ்ச்சியும் இயல்பானதாகவே தெரிந்தது அவனுக்கு. உள்ளார்ந்த அன்புடன் அவர்கள் தங்களை வரவேற்பதைப் புரிந்து கொண்டான் பீமன்.

ஹஸ்தினாபுரத்து மக்கள் அனைவரும் தங்கள் மூத்த சகோதரன் யுதிஷ்டிரனிடம் மாறாத அன்பும், நம்பிக்கையும் கொண்டிருப்பதையும் அவர் ஆட்சியில் தங்களுக்கு நீதியும், நேர்மையும், தர்மத்தை மீறாத பண்பும் கிடைக்கும் என்பதையும் புரிந்து வைத்திருக்கின்றார்கள் என்பதையும் பீமன் உணர்ந்தான். தன் சகோதரன் நேர்மையின் வடிவம், தர்ம தேவதையின் அவதாரம் என்பதையும் பீமன் அறிந்திருந்தான். அதோடு இல்லாமல் ஹஸ்தினாபுரத்து மக்களுக்கு துரியோதனனையும், அவன் சகோதரர்களையும் அவர்கள் செயலையும் அடியோடு பிடிக்காது என்பதும் அவனுக்குத் தெரிந்ததே!  துரியோதனனின் அராஜக ஆட்சியில் துன்பப் பட்டுக் கொண்டிருந்த மக்கள் இப்போது தங்களுக்கு யுதிஷ்டிரன் மூலம் ஒரு விடிவுகாலம் பிறக்கும் என எதிர்பார்க்கிறார்கள் என்பதையும் பீமன் அறிந்திருந்தான். ஆகவே தங்கள் வருகை அவர்கள் மனதில் ஏற்படுத்திய நிம்மதியையும், மகிழ்ச்சியையும் பீமன் புரிந்து கொண்டான்.  பீமன் யோசனையில் இருந்தபோதே யானை கோட்டை வாசலுக்கு அருகாமையில் வந்து நின்று விட்டது.  அவன் நின்றதும் பின்னால் வந்த ஊர்வலமும் நின்று விட்டது. யானைகள் மீதும், குதிரைகள் மீதும் அமர்ந்து பயணம் செய்தவர்கள் அனைவரும் கீழிறங்கினார்கள்.

ஊர்வலத்தின் கூடவே வந்த மற்ற அரசர்களும், மற்றப் பெரியோர்களும் குந்தியின் குடும்பத்தில் அப்போது மிக மூத்தவனாக இருந்த பலராமனுக்கு முன்னே செல்ல வழி ஏற்படுத்திக் கொடுத்தார்கள். பலராமன் அருகே யுதிஷ்டிரனும் காணப்பட்டான். யுதிஷ்டிரன் மணமகனின் உடையில் காணப்பட்டதோடு அல்லாமல் தலையிலும் அவன் மாமனார் துருபதன் அளித்த விலை உயர்ந்த கிரீடத்தைத் தரித்துக் கொண்டிருந்தான்.  அந்தச் சூரியஒளியில் அது பிரகாசித்தது. அவர்களின் ஞானகுருவான தௌம்யர் முன்னே வந்து அவர்கள் இருவரையும் அழைத்துக் கொண்டு முன்னேறினார்.

Friday, February 6, 2015

ஜாலந்திராவின் திட்டம்!

ஆனால், திரௌபதி கிருஷ்ண வாசுதேவனை அவள் சந்திக்க உதவுவாள் தான்.  இதை ரகசியமாகச் செய்ய அவளால் இயலுமா?  அதுவும் அவளுடைய 5 கணவர்களுக்கும் தெரியாமல் முடித்துத் தருவாளா?  அவள் மாமியார் குந்தியிடமும் சொல்லாமல் இருக்க வேண்டுமே! ம்ஹும், இது நிச்சயம் திரௌபதியால் இயலாது. இது வெளியே தெரிந்தால் பானுமதிக்குத் தான் பிரச்னை. யோசிக்க யோசிக்க அவள் தலையே வெடித்துவிடும் போல் இருந்தது ஜாலந்திராவுக்கு.  என்ன செய்யலாம்? ம்ம்ம்ம்….. இப்படிச் செய்தால் என்ன? எல்லா சாதாரண மக்களும் கிருஷ்ண வாசுதேவனின் ஆசிகளை வேண்டிச் செல்வது போல் நாமும் சாதாரணமாகப் போனால் என்ன? ஆனால் அப்படிப்போனால் கிருஷ்ணனிடம் தனிமையில் பேச முடியுமா?  அது சாத்தியமாகுமா?

அவள் மண்டையே வெடித்துவிடும் போல் இருந்தது.  என்ன செய்யலாம்! ஆஹா, அம்பிகே, பார்வதி தேவி.  ஈசனின் மறுபாதியே! எனக்கு உதவ வர மாட்டாயா? ஈசர்களுக்கெல்லாம் ஈசனான அந்த சாட்சாத் மஹேசன் மனைவியான உன்னால் முடியாததும் ஒன்று உண்டா? என் உதவிக்கு வருவாய்! விடிவெள்ளி மெல்ல மெல்லத் தெரியலாயிற்று.  அம்பிகையை வேண்டிக் கொண்டே ஜாலந்திரா தன்னையும் அறியாமல் உறங்க ஆரம்பித்தாள். அவள் தூக்கத்தில் அரசன் வ்ருகோதரன் வந்தான்.  ஆம், பீமனைத் தன் கனவில் அவள் கண்டாள்.  அவன் அவளைத் தன் கைகளில் அள்ளிக் கொண்டிருக்கிறான். அவளைத் தூக்கிக் கொண்டு எங்கோ தொலைதூரம் செல்கிறான்.  அங்கே துரியோதனனும் இல்லை;  ஹஸ்தினாபுரமும் இல்லை;  இந்த இடைஞ்சல்கள் எதுவும் இல்லை.

அதைக் கண்ட அவள் மனம் மகிழ்ச்சியில் கும்மாளமிட அவள் அவன் காதுகளில் மெல்லக் கிசுகிசுக்கிறாள்.  “ நீர் என்னைச் சந்திக்க வேண்டியே படகை நீரில் கவிழ்த்தீர் அல்லவா? படகைக் கவிழ்த்துவிட்டு என்னைத் தூக்கிக் கொண்டு தௌம்ய ரிஷியின் ஆசிரமத்துக்குச் செல்ல எண்ணினீர் அல்லவா?” அவன் காதுகளை மெல்லத் தன் இதழ்களால் கடிக்க விரும்பினாள் ஜாலந்திரா. அப்போது பார்த்து அவளைத் “தொப்” என்று கீழே போட்டுவிட்டான் வ்ருகோதரன். உடனே மறைந்தும் விட்டான்.  அவள் காதுகளில் விழுந்தது எல்லாம் அவள் சிரிப்பின் எதிரொலிகளே.

தூக்கத்திலிருந்து எழுந்தவள் எங்கோ வெறித்துப் பார்த்தாள். இன்னமும் அவள் உடல் கனவின் தாக்கத்திலிருந்து விடுபடவில்லை. ஆனாலும் அப்போது ஏற்பட்ட ஓர் எண்ணத்தின் மூலம் அவள் தன் பிரச்னைக்கு ஒரு தீர்வு கண்டு விட்டாள். கிருஷ்ணனைச் சந்திக்க வேண்டும்; அதுவும் ரகசியமாக என எண்ணி இருந்த அவள் எதிரே தெரிந்த கஷ்டங்கள் அனைத்தும் தீர்ந்தன. ஆஹா, வ்ருகோதரன் இருக்கிறானே!  கிருஷ்ண வாசுதேவனைச் சந்திக்க அவன் உதவுவான்.  அதுவும் ரகசியமாகவே சந்திக்கலாம் அவன் உதவியுடன்.

ஆனால்….ஆனா.  ஆஹா, அவள் மறந்தே போனாளே!  நடுங்கினாள் ஜாலந்திரா.  வ்ருகோதரனை மட்டும் அவள் எப்படிச் சந்திக்க முடியும்?  அது முடியுமா அவளால்? ஒருவருக்கும் தெரியாமல் அவனைச் சந்தித்துப் பேசுவது என்பது அவளால் இயன்ற ஒன்றா? ம்ஹூம், சாத்தியமே இல்லை.  அவனோ தன் சகோதரர்களுடனும், அவன் மனைவி திரௌபதியுடனும்,தாய் குந்தியுடனும் அல்லவோ தங்குவான்!  அங்கே செல்வது அவளுக்கு எளிதாகவா இருக்கும்?

“தாயே, பார்வதி தேவி, அவனைச் சந்திக்க நானாகவே சென்றேனானால் அவன் என்னைப் பற்றி என்ன நினைப்பான்? வெட்கமற்ற பெண் என நினைப்பானே! பொறுப்பற்றவள் என எண்ணுவானே! அதோடு மட்டுமில்லை.  தனிமையில் அவனைச் சந்தித்துக் கெஞ்சுவேன் எனவும் எதிர்பார்ப்பானே! என் கௌரவம் என்னாவது?  ஆனாலும், இதை எல்லாம் நினைத்துக் கொண்டிருந்தால் வேலை ஆகாது.  எப்படியேனும் வ்ருகோதரனைச் சந்தித்தே ஆகவேண்டும். எப்படி?

அவளுக்கு ஒரே புதிராக இருந்தது. பின்னர் ஒரு யோசனை தோன்றவே, “ஆம், அதுதான் சரி! வ்ருகோதரனை இப்படித் தான் சந்திக்க வேண்டும்.” என்று தன் தலையை ஆட்டிக் கொண்டே தனக்குள் முணுமுணுத்தாள். வ்ருகோதரனை மீண்டும் சந்திப்போம் என்னும் எண்ணமே அவள் உடலில் கிளர்ச்சியை உண்டாக்கியது.  அவள் மனமும் கிளர்ந்தெழுந்தது. தன் படுக்கையிலிருந்து எழுந்து ஒரு சின்ன அபிநயம் பிடித்து ஆடினாள். தன் மகிழ்ச்சியை இவ்விதம் வெளிப்படுத்தினாள். அப்போது பானுமதி எழுந்து கண்களைத் திறந்த வண்ணம்,”ஜாலா, என்ன விஷயம்? உனக்கு என்ன ஆயிற்று?” என்று கேட்டாள்.

“ஒன்றும் இல்லை, பானு. நான் நடனம் ஆடுகிறேன்.” என்றாள் ஜாலந்திரா.

“இவ்வளவு அதிகாலை இருட்டிலா?”

“ஆம், என் சகோதரியே, நான் எப்போதுமே அதிகாலை இருட்டில் தான் நடனம் ஆடுவேன். இப்போது நீ தூங்கப் போ.  என்னைக் குறித்துக் கவலை கொள்ளாதே.” என்று சிரித்த வண்ணம் சொன்னாள் ஜாலந்திரா. “நீ ஒரு பைத்தியம்.” என்ற வண்ணம் திரும்பிப் படுத்துக் கொண்ட பானுமதி மீண்டும் தூங்க ஆரம்பித்தாள். ஜாலந்திரா அப்படியே தன் படுக்கையில் படுத்த வண்ணம் யோசனையில் ஆழ்ந்தாள். பொழுது விடிந்தும் தன் இதழ்க்கடைச் சிரிப்பு மாறாமல் தூங்கிய வண்ணம் இருந்தாள் ஜாலந்திரா.

Monday, February 2, 2015

ஜாலந்திரா திட்டம் போடுகிறாள்!

“ஆர்யபுத்திரர் வாசுதேவனைச் சந்திப்பதிலிருந்து என்னைத் தடுத்துவிட்டதைச் சொல்லி அவனிடம் மன்னிப்புக் கேள் ஜாலா!  வாசுதேவன் புரிந்து கொள்வான்.”

“ஆம், பானு, ஆம்!  வாசுதேவன் உன் கஷ்டங்களை நன்கு புரிந்து கொள்வான். நான் அவனுடன் பேசியது இல்லை;  ஆனால் சுஷர்மா சொல்கிறான், இவ்வளவு பெருந்தன்மையுள்ள ஒரு மனிதனைக் காண்பது அரிது என்று!”

“ஓ, அவன் அற்புதமான மனிதன்! அருமையானவன்!” பக்திபூர்வமான அர்ப்பணிப்பு உணர்வில் பானுமதியின் கண்கள் ஒளி விட்டுப் பிரகாசித்தன.  அவள் மேலும் சொல்வாள்:” ஜாலா, நீ வாசுதேவனைக் கட்டாயமாய்ச் சந்திப்பாய்!  அவனிடம் சொல்! “வாசுதேவா! நீ உன் துரதிர்ஷ்டம் பிடித்த ஸ்வீகாரத் தங்கைக்கு மேன்மேலும் அன்பையும், பாசத்தையும் வாரி வாரி வழங்கி வருகிறாய். ஆனாலும் அவளுக்கு உன்னிடம் கேட்கவேண்டியது ஒன்றிருக்கிறது.  அதற்கு அவளுக்குத் தயக்கமாக இருக்கிறது. ஆனாலும் கேட்டே ஆக வேண்டும்;  இது தான் கடைசித் தடவையாக அவள் உன்னிடம் உதவி கேட்கப் போகிறாள். அது இதுதான்! ஆர்யபுத்திரரை ஹஸ்தினாபுரத்தை ஆட்சி செய்ய அனுமதிப்பாய்! அதன் பின்னரே என் மகன், அவனுக்குரிய நேரமும் காலமும் வரும்போது இந்தச் சிம்மாதனத்தை அலங்கரிக்க இயலும். இதுதான் நான் உன்னிடம் வேண்டுவது!”

ஹஸ்தினாபுரத்தின் உள்ளரசியல் தெரியாத ஜாலந்திரா மிகவும் அப்பாவியாகக் கேட்டாள்! “ ஏன்? பானு? என்ன ஆயிற்று? ஹஸ்தினாபுரத்தையும் குரு வம்சத்து சாம்ராஜ்யத்தையும் ஆள்வதிலிருந்து ஆர்யபுத்திரரை எவர் தடுக்கின்றனர்?”

“ஓ,ஓ,ஓ! உனக்கு எதுவும் தெரியாது, புரியாது ஜாலா! சில அதிசயமான வித்தியாசமான நிகழ்வுகள் இங்கே நடந்து வருகின்றன. இதிலிருந்து ஆர்யபுத்திரரை மீட்க கோவிந்தன் ஒருவனாலேயே முடியும்.  வேறு எவராலும் முடியாது!”

“எனக்கு இதைப் பற்றியெல்லாம் புரிந்து கொள்ளும் ஆர்வம் ஏதும் இல்லை, பானு. வாழ்க்கை இன்பமயமானது. ஒவ்வொரு நொடியும் விலை மதிப்பற்றது. இத்தகைய சூழ்ச்சிகளில் நம் வாழ்நாளை வீணடிக்க இயலாது.  நான் இத்தகைய அரசியல் சூழ்ச்சிகளை வெறுக்கிறேன்.” என்றாள்  ஜாலந்திரா.  கண்ணீர் வழிந்தோடும் பானுமதியின் முகத்தைத் துடைத்துக் கொண்டே அவள், “ஆனால் நீ என்னிடம் என்ன செய்யச் சொன்னாயோ அதைக் கட்டாயமாய்ச் செய்து விடுகிறேன்.”

“மதிப்புக்குரிய நம் தந்தையின் பெயரால் ஆணையிடு ஜாலா!  நான் சொன்னவற்றை அப்படியே கோவிந்தனிடம் சொல்வதாகச் சொல்!”

“நம் தந்தையின் பெயரால் ஆணையிடுகிறேன், பானு! நீ சொன்னவற்றைக் கட்டாயமாய்ச் செய்வேன்.”

மேலும் அங்கேயே தங்கிய ஜாலந்திரா, பானுமதியின் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு தான் அவள் அருகிலேயே இருக்க வேண்டும் என்று முடிவு செய்து கொண்டாள்.  அவள் அருகிலேயே அவள் படுக்கையைப் பகிர்ந்து கொண்டாள்.  அவள் தாதி ரேகாவும் அந்த அறையிலேயே அவர்களுடன் தங்கினாள்.  தன் சகோதரியை உற்சாகப்படுத்த வேண்டி காசி நகரத்து விஷயங்களையும், தந்தை, தாய், நண்பர்கள் குறித்தும், காம்பில்யத்தில் நடந்தவை குறித்தும் உத்கோசகத்தில் நடந்தவை குறித்தும் பானுமதியிடம் பேசினாள். பின்னர் பானுமதி உறங்கும் வரை காத்திருந்தாள்

பானுமதி உறங்கியதும், ஜாலந்திரா தான் இருக்கும் விசித்திரமான சூழ்நிலையை எண்ணி வியப்பும், கவலையும் ஒருங்கே அடைந்தாள்.  அந்த நேரத்தில் ஏற்பட்டதொரு மனவெழுச்சியில் அவள் தன் சகோதரிக்கு உறுதிமொழி கொடுத்துவிட்டாள்.  கோவிந்தனை எவரும் அறியாமல் சந்தித்து பானுமதியின் செய்தியை அவனிடம் சேர்ப்பிப்பதாக வாக்குக் கொடுத்துவிட்டாள்.  ஆனால் அது எவ்வாறு நடக்கப் போகிறது? அவள் கோவிந்தனை தூரத்திலிருந்து சில நிமிடங்களே பார்த்திருக்கிறாள்.  அவனிடம் பேசியதே இல்லை.  மேலும் அவள் திருமணம் ஆகாத இளம் கன்னிப் பெண். அவள் எப்படி அவனைத் தனிமையில் சந்திக்க இயலும்? அதிலும் அவனைத் தனிமையில் சந்தித்து ரகசியம் பேச வேண்டும்! ஆஹா! இது மட்டும் வெளியே தெரிந்தால்????

ஜாலந்திரா தானாகவே கிருஷ்ண வாசுதேவனைச் சந்திக்க விரும்பி ரகசியமாகச் சென்று அவனைச் சந்தித்துப் பேசுகிறாள் என்பதோ, பேசவேண்டிச் சென்றிருக்கிறாள் என்பதோ வெளியே தெரிந்தால்! இந்த ஆர்யவர்த்தமே இந்தச் செய்தியால் ஆட்டம் கண்டுவிடும்! அனைவரும் வியப்பின் உச்சிக்கே சென்றுவிடுவார்கள்.  ஏற்கெனவே சந்தேக புத்தியுள்ள துரியோதனன், இதை அறிந்தான் எனில்? பானுமதியை உயிரோடு விட்டு வைக்க மாட்டான்.  ஏனெனில் அவனுக்குப் புரிந்து விடும்.  பானுமதி தன் செய்தியைக் கிருஷ்ண வாசுதேவனிடம் சேர்ப்பிக்கத் தன் தங்கையைத் தூது அனுப்புகிறாள் என்பதைப் புரிந்து கொண்டுவிடுவான். தன் ஆணையை மீறி பானுமதி வெகு எளிதாகத் தங்கை மூலம் தன் பிரச்னையைத் தீர்த்துக் கொள்ள வழி தேடிவிட்டதாக நினைப்பான்.


அதோடு இல்லாமல் ஜாலந்திராவுக்கு பானுமதி கிருஷ்ண வாசுதேவனுக்குச் சொல்லச் சொன்ன செய்தியின் முழு அர்த்தமும் புரிபடவே இல்லை.  இதில் என்ன கஷ்டம்? இதில் என்ன பிரச்னை?  என்றே ஜாலந்திரா நினைத்தாள்.  ஏனெனில் இன்று வரை அவள் வாழ்வது ஒரு மகிழ்ச்சியான, சந்தோஷம் நிறைந்த உலகில்.  ஒளிவீசிப் பிரகாசிக்கும் ஓர் அழகான உலகில் தன் கனவுகளுக்கும், ஆர்வங்களுக்கும் எல்லையே இல்லை என்னும்படியான உணர்வுகளோடு வாழ்ந்து வருகிறாள். ஹஸ்தினாபுரத்து அரண்மனையில் நடக்கும் சூழ்ச்சிகள், சதித்திட்டங்கள், வெறுப்பு, உறவுகளின் மனக்கசப்பு ஆகியவை குறித்து அவள் சிறிதும் கவலைப்படவே இல்லை.  அவற்றை அப்படியே கடந்து சென்றுவிடவே நினைத்தாள்.

துரியோதனனின் வருத்தமோ, அவன் மகிழ்ச்சியாக இல்லை என்பதோ அவளுக்குப் புரியவில்லை.  அவன் வருத்தத்தின் காரணமும் தெரியவில்லை. ஆனால் துரியோதனன் பானுமதியைக் கிருஷ்ண வாசுதேவனைச் சென்று சந்திக்கக் கூடாது எனத் தடுத்தது மட்டுமே மிகக் கொடூரமான, கடுமையான உத்தரவு என்பது அவளுக்குப் புரிந்தது. ஆனால் கிருஷ்ண வாசுதேவனை ஏழை, எளியவரிலிருந்து மிகவும் உன்னத பதவியில் இருப்பவர்கள் கூடச் சென்று வெகு எளிதாகச் சந்திக்க முடிகிறதே! அது எப்படி?  எப்படியோ போகட்டும்!  நாம் எப்படியாவது கிருஷ்ண வாசுதேவனைத் தனியாகச் சந்திக்க வேண்டும்.  பானுமதியின் செய்தியை அவனிடம் சேர்ப்பித்தே ஆக வேண்டும்.

இரவு முழுவதும் இதை எப்படிச் செய்யலாம் என்று யோசித்துக் கொண்டு தூங்காமல் இருந்தாள் ஜாலந்திரா.  அவள் ஒரு வித்தியாசமான வீட்டில், அரண்மனையில் இப்போது இருக்கிறாள்.  இங்குள்ள சேடிகளோ, காவலாளிகளோ அவளுக்குப் பரிச்சயமற்றவர்கள்.  அவளிடம் விசுவாசம் இல்லாதவர்கள். ம்ம்ம்ம்ம்……..எல்லோரையும் சொல்ல முடியாது!  அதோ கீழே தூங்குகிறாளே, ரேகா! பானுமதியை எடுத்து வளர்த்த தாதி!  அவளைக் கொஞ்சமேனும் நம்பலாம். மற்றபடி நம் அண்ணன் சுஷர்மாவைக் கூட நம்ப முடியாது.  அவனுக்கு மட்டும் தெரிந்துவிட்டால் கிருஷ்ண வாசுதேவனைச் சந்திப்பதிலிருந்து அவளைத் தடுப்பான்.  துரியோதனனிடம் அவனுக்கு மிகவும் பயம். பயந்து நடுங்குவான்.

ம்ம்ம்ம்ம்…இப்படிச் செய்தால் என்ன? திரௌபதி மூலம் கிருஷ்ண வாசுதேவனைச் சென்று சந்திக்க முடிந்தால்???