Tuesday, February 17, 2015

துரியோதனனின் முதல் எதிரி!

அங்கு அமர்ந்திருந்தவர்கள்,  மற்றும் கூடி இருந்த மக்கள் கூட்டம் அனைத்தும் யுதிஷ்டிரனைப் பார்க்கத் தங்கள் கழுத்தை வளைத்துக் கொண்டு மிகவும் சிரமப்பட்டார்கள்.  அத்தனை கூட்டத்துக்கு நடுவில் யுதிஷ்டிரன் வந்து கொண்டிருந்தான். அவன் ஏந்திய கைகளில் ஒரு முழுத் தேங்காய் இருந்தது.  பெரியோரைக் கண்டு வணங்க வேண்டிய முறைப்படியும், பல நாட்கள் கழித்து அனைவரையும் பார்க்க வேண்டிய சமயத்தில் இருக்க வேண்டிய முறைப்படியும் அவன் அந்தத் தேங்காயைத் தன் கைகளில் பிடித்திருந்தான். இரு கைகளையும் கூப்பிய முறையில் சேர்த்து வைத்துத் தேங்காயைப் பிடித்த வண்ணம் வந்த யுதிஷ்டிரனைக் கண்ட கூட்டத்தினர் அனைவருமே “யுதிஷ்டிரனுக்கு ஜெயம்! பாண்டவருக்கு ஜெயம்!” என வாழ்த்தொலி எழுப்பினார்கள். மக்களின் அந்தக் குரலைப் பல யானைகளின் பிளிறல் ஒலி ஒரே சமயத்தில் எதிரொலித்தது.

உடனே சங்கங்கள் ஆர்ப்பரிக்க, பேரிகைகள் முழங்க, எக்காளங்கள் ஊதப்பட்டன. யுதிஷ்டிரனின் வருகை முறைப்படி அறிவிக்கப்பட்டது.  அனைவரும் மலர்மாரி பொழிந்தனர்.  பாண்டவர்கள், பலராமன், கிருஷ்ணன் அனைவருமே மக்களின் இந்த மலர்மாரியில் நனைந்தனர். குரு வம்சத்தின் ஞானகுரு என அழைக்கப்பட்ட சோமதத்தர் தன் சீடர்களுடன் பாண்டவர்களை வரவேற்க முன்னேறினார்.  வேத மந்திரங்களை கோஷித்த வண்ணம், கைகளில் தங்கக்காசுகள் நிறைந்த பானைகளை ஏந்திய வண்ணம், வாய் நிறைய வெற்றிலை தரித்துக் கொண்டு, சுப நிகழ்ச்சிக்கு வந்திருப்பதை இம்மாதிரிச் சின்னச் சின்ன அடையாளங்களின் மூலம் அறிவித்த வண்ணம் யுதிஷ்டிரனை நெருங்கினார்கள். சோமதத்தருடன் தௌம்யரும் சேர்ந்து கொள்ள இருவரும் பாண்டவர்களுக்கும், புதிய மணமகளுக்கும், மற்றும் வந்திருந்தோர் அனைவருக்கும் தங்கள் ஆசிகளையும் நாட்டின் சுபிக்ஷத்திற்கான வாழ்த்துகளையும் தெரிவித்தனர். மனதைக் கவரும் வகையில் வேத மந்திரங்கள் ஓதப்பட்டன.

ஒரு நூறு இலையுதிர்காலங்களை நாம் பார்ப்போம்;
ஒரு நூறு இலையுதிர்காலங்கள் வரை நாம் வாழ்வோம்;
ஒரு நூறு இலையுதிர்காலங்கள் வரை நாம் கற்போம்;
அடுத்த நூறு இலையுதிர்காலங்களுக்கும் நாம் உயர உயரச் செல்வோம்;
அடுத்த நூறு இலையுதிர்காலங்களுக்கும் நாம் செழிப்பாக இருப்போம்;
அடுத்த நூறு இலையுதிர்காலங்களுக்கும் நாம் நாமாகவே இருப்போம்’
அடுத்த நூறு இலையுதிர்காலங்களுக்கும் நாம் இப்போது இருப்பதை விட இன்னமும் செழிப்பாகவும் இன்னமும் உயரத்திலும் செல்வோம்;
இல்லை; இல்லை; அது வெறும் நூறு இலையுதிர்காலங்களுக்கு மட்டுமில்லை, அதை விட அதிகமான ஆண்டுகளுக்கு நாம் நாமாக வாழ்ந்து கொண்டிருப்போம்.

இது முடிந்ததும் துரியோதனனும், மற்றவர்களும் தாங்கள் அமர்ந்திருந்த இடத்திலிருந்து எழுந்து கொண்டு கீழே இறங்கி வந்திருக்கும் உறவினர்களை வரவேற்க வந்தார்கள். வெகுநாட்கள் கழித்துச் சந்திக்கும் உறவினரை வரவேற்கும் முறைப்படி அனைவரையும் தன்னிரு கரங்களால் அணைத்து வரவேற்றான் துரியோதனன்.  பின்னர் பலராமன் அனைவரையும் விட வயதில் மூத்தவன் என்பதால் அவன் கால்களில் விழுந்து வணங்கினான். கூட்டம், “சாது! சாது!” என்று முழக்கமிட்டது. அனைவரும் தங்கள் கைகளில் இருந்த பூக்கள், மாலைகள், செண்டுகள் எனக் கைகளில் கிடைத்ததை துரியோதனன், பலராமன், யுதிஷ்டிரன் ஆகியோர் கழுத்தில் விழும்படி தூக்கி எறிந்தனர். அந்த மகிழ்ச்சிக் கோலாகலத்தில் கௌரவர்களுக்கும், பாண்டவர்களுக்கும் இடையில் எப்போதும் காணப்படும் விரிசல் கூட  அனைவருக்கும் ஒரு கணம் மறைந்தும், மறந்தும் போனது.  ஆனால்???? பீமன் தன் தலையை ஆட்டிக் கொண்டான்.  இவை எல்லாம் இன்று ஒரு நாளுக்கே! துரியோதனன் ஒருக்காலும் எதையும் மறக்கவும் மாட்டான்.  நட்புப் பாராட்டவும் மாட்டான்.

அர்ஜுனனும், இரட்டையர்கள் நகுலன், சகாதேவனும் பின் தொடர பீமன் தன் யானையிலிருந்து கீழிறங்கி துரியோதனன் இருக்கும் இடம் நோக்கிச் சென்றான்.  அவன் இதழ்களில் அதே பழைய சிறுபிள்ளைத் தனமான சிரிப்பு! கண்களில் குறும்பு! பீமன் மாறவே இல்லை!  அப்போது அங்கே வந்த கிருஷ்ணன் மேல் அனைவர் கண்களும்  நிலைத்து நின்றன.  அனைவருக்கும் ஓர் ஈர்ப்பு கிருஷ்ணனிடம் தோன்றியதோடல்லாமல் பிரமிப்பும் காணப்பட்டது. ஆவலும் மிகுந்திருந்தது. இவன் தான் கிருஷ்ண வாசுதேவனா?  ஆஹா! எப்படிப் பட்ட மனிதன்! அந்த ராக்ஷஸவர்த்தம், கிட்டத்தட்ட யமலோகம் என்றே சொல்லப்படும் இடம்.  அங்கிருந்து பாண்டவர்கள் ஐவரையும் உயிருடன் அப்படியே கொண்டு வந்து சேர்த்து விட்டானே!


 என்ன மாயம்! என்ன அதிசயம்! இது சாமானிய மனிதனால் முடிந்த ஒன்றல்ல!  அவன் நிறமே சொல்கிறதே!  நீலமா? கருநீலமா? கறுப்பா? என்ன நிறம் அது? ஆனால் இப்படிப் பளபளப்பும் காணப்படுகிறதே! மழைக்காலத்து வானின் ஈசான்ய மூலையில் காணப்படும் மழைமேகங்களை அன்றோ ஒத்திருக்கிறது இந்த நிறம்! அதோடு எவ்வளவு இளமையாகவும் காணப்படுகிறான்! அவன் தலையில் சூடி இருக்கும் கிரீடம் மிகச் சாதாரணமான ஒன்று என்றாலும் அதில் அவன் சூடி இருக்கும் மயில் பீலியின் அழகு அதற்கு ஒரு கம்பீரத்தைக் கொடுக்கிறது. மஞ்சள் நிறப் பீதாம்பரத்தை உடுத்திக் கொண்டு நெற்றியில் கஸ்தூரித் திலகம் அணிந்து கொண்டு!  ஆஹா! இவனுடைய இந்த அலங்காரங்களைக் குறித்தெல்லாம் எத்தனை எத்தனை நாடோடிப் பாடல்கள் கிடைக்கின்றன! ஆனால் அவை வெறும் வர்ணனைகள் அல்ல;  உண்மையே! கிருஷ்ணனைக் குறித்த வர்ணனைகளில் எதுவும் பொய்யல்ல!

கிருஷ்ணனைப் பார்த்துப் பார்த்து மக்கள் தங்களுக்குள்ளாகக் கிசுகிசுவென்று பேசிக் கொண்டிருந்தனர். அப்போது யுதிஷ்டிரனும், பலராமனும் மற்றப் பெரியோர்களைப் பார்க்க வேண்டிக் கொஞ்சம் வேறு பக்கம் நகர, துரியோதனன் சற்றே தயங்கினான்.  கிருஷ்ண வாசுதேவனைக் கட்டி அணைத்து வரவேற்க துரியோதனனுக்கு மனமில்லை.  அவன் யோசிக்கையிலேயே அவனால் தப்ப முடியாமல் கிருஷ்ண வாசுதேவன் துரியோதனன் தன்னை விட வயதில் மூத்தவன் என்பதால் அவன் கால்களில் விழுந்து வணங்கிவிட்டான். துரியோதனன் தன் உதடுகளைக் கடித்துக் கொண்டான்.  அவனுக்கு இப்போது கூட்டம் அனைத்தும் தன்னுடைய அடுத்த செய்கை என்னவாக இருக்கும் என்றே கண்காணிக்கும் என்பதை உணர்ந்தான். தன்னை இக்கட்டில் மாட்டி விட்ட கிருஷ்ணனை உள்ளூர சபித்தான்.

ஆர்யவர்த்தம் முழுதும் அறிந்திருக்கும் கிருஷ்ண வாசுதேவன், தன்னுடைய செய்கைகளால் அனைவரையும் கவர்ந்திருக்கும் கிருஷ்ண வாசுதேவன் இப்போது தன்னை மரியாதை நிமித்தம் விழுந்து வணங்கி விட்டான்.  இதை துரியோதனன் ஏற்கவில்லை எனில் இந்தக் கூட்டம் அவனை மன்னிக்கவே மன்னிக்காது.  ஏனெனில் விழுந்து வணங்கியவன் சாமானியன் அல்லவே! வேறு வழியின்றி துரியோதனன் கீழே குனிந்து கிருஷ்ணனைத் தூக்கி அணைத்துக் கொண்டு அவன் கழுத்தில் ஒரு மாலையைப் போட்டான்.  கூட்டம்,” ஜெய் ஶ்ரீகிருஷ்ணா! ஜெய் ஶ்ரீ கிருஷ்ணா”, “வாசுதேவ கிருஷ்ணனுக்கு மங்களம்!” என்று கோஷமிட்டது. இப்போது இன்னொரு தர்ம சங்கடம் துரியோதனன் முன்னே பீமன் உருவத்தில் நின்றது. அவனிடமிருந்து விலகிய கிருஷ்ணன் மற்றப் பெரியோரைப் பார்க்கச் சென்று விட்டான். ஆனால் இப்போது அவன் முன் நிற்பதோ பீமன்! ஒரு நிமிடம் தான் என்ன செய்ய வேண்டும் என்பதே புரியாமல் குழப்பத்தில் இருந்தான் துரியோதனன். சிறுபிள்ளையாக இருக்கையில் இருந்தே அவனுடைய எதிரி, முதல் எதிரி பீமன் தான்! இவனைத் தான் வரவேற்பதா? எப்படி?

தனக்கு வரவேற்பு அளிக்கவோ, தன்னைக் கட்டி அணைக்கவோ துரியோதனனுக்கு இஷ்டம் இல்லை என்பதை பீமன் புரிந்து கொண்டுவிட்டான். உள்ளூர நகைத்தான்.  அவன் இதழ்களில் குறும்புப் புன்னகை மலர்ந்தது. அவன் இன்னும் ஓரடி எடுத்து வைத்தால் போதும்; துரியோதனன் அவனைக் கட்டி அணைத்து வரவேற்றே ஆக வேண்டும்;  வேறு வழியில்லை.  ஆனால், அதில் என்ன வேடிக்கை இருக்கிறது? அதில் எந்த ருசியும் இருக்காதே!

1 comment: