Monday, February 9, 2015

பாண்டவர்களை வரவேற்க துரியோதனன்!

பீமன் மிகுந்த சந்தோஷத்தில் இருந்தான்.  அந்த மாபெரும் ஊர்வலத்தின் முன்னணியில் யானையின் மீது அம்பாரியில் அமர்ந்திருந்த பீமன் தனக்கெதிரே காணப்பட்ட காட்சிகளைக் கண்டு மிகவும் மகிழ்ந்திருந்தான். அவன் எதிரே ஹஸ்தினாபுரக் கோட்டை வாசல் தென்பட்டது.  கோட்டை வாசலுக்கு உள்ளே இருந்த பெரிய மைதானம் முழுவதும் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.  அதில் ஒரு பக்கமாய்ப் போட்டிருந்த அலங்கார மேடையில் அப்போதைய யுவராஜாவான துரியோதனன் அமர்ந்திருந்தான். தங்களை வரவேற்க துரியோதனன் வந்திருப்பது பீமனுக்குள் உவகையைத் தோற்றுவித்தது. தெள்ளிய வானத்திலிருந்து ஒளி வீசிப் பிரகாசித்த சூரியக் கதிர்களின் ஒளி அந்த மைதானத்தில்  விழுந்து மேலும் சோபையைக் கொடுத்துக் கொண்டிருந்தது.  ஹஸ்தினாபுரத்து அரச குடும்பமே அங்கே அமர்ந்திருப்பதைக் கண்டான் பீமன்.

துரியோதனனின் அருமை மாமன் ஷகுனி கூட அங்கு வந்திருப்பதைக் கண்டான்.  ஆனால் துஷ்சாசன், கர்ணன், அஸ்வத்தாமா ஆகிய மூவரையும் காணவில்லை. குரு வம்சத்தின் சிறந்த அமைச்சர்கள், தேர்ந்தெடுத்த படைத் தளபதிகள் அவரவர் பதவிக்கேற்ற ஆசனங்களில் அமர வைக்கப்பட்டிருந்தனர்.  அவர்களில் குரு வம்சத்துப் படைகளின் தலைவரான துரோணாசாரியாரும் தன் மைத்துனர் ஆன கிருபருடன் காணப்பட்டார். சோமதத்தரின் தலைமையில் வேத விற்பன்னர்கள் ஒரு பக்கம் அமர்ந்து வேத கோஷம் செய்து கொண்டிருந்தனர். அவர்களுடன் உத்தவனும் இருந்தான்.  ஆம், கண்ணனின் முன்னேற்பாட்டின்படி உத்தவன், சாத்யகியுடனும் நாகர்களின் தலைவன் மணிமானுடனும் முன் கூட்டியே அவர்கள் வரவை அறிவிக்க வேண்டிச் சென்று விட்டான்.

இவர்கள் அனைவரும் கூடி இருக்கும் இந்தக் கூட்டத்திலேயும் துஷ்சாசன், அஸ்வத்தாமா, கர்ணன் ஆகியோர் இல்லாதது கண்டு ஒரு வகையில் பீமனுக்கு மனத் திருப்தியே ஏற்பட்டது.  துஷ்சாசன் பொல்லாதவன்; மிகப் பொல்லாதவன். அவர்கள் இந்தப் புனிதமான வருகையின் போது வரவேற்புக்கு இல்லாததே ஒரு சுபசகுனமாகப் பட்டது பீமனுக்கு. ஆனால் அரசகுலத்துப் பெண்டிர் அநேகமாக வந்திருந்தனர். அவர்களில் துரியோதனன் மனைவி பானுமதியும் இருப்பதைக் கண்டான் பீமன்.  அவள் அருகே அவன் மனம் கவர்ந்த காசி தேசத்து இளவரசியான ஜாலந்திரா அமர்ந்திருப்பதையும் கண்டான்.  தாமரைப் பூப் போன்ற அவள் பாதங்கள் அவன் கண் முன்னே வந்து சென்றன.  பானுமதியின் அருகே மிகவும் மகிழ்ச்சியுடன் அமர்ந்திருந்த அவள் அங்கிருந்த ஒவ்வொருவரையும் அடையாளம் காட்டும்படி பானுமதியிடம் கேட்டுக் கொண்டிருக்கிறாள் என்பதையும் ஊகித்தான் பீமன்.

ஒரு சில முதிர்ந்த வயதுள்ள பெண்கள் அங்கே ஒரு பக்கமாக அமர்ந்து புதுமணத் தம்பதியரை வரவேற்கும் வரவேற்புப் பாடல்களைப் பாடிக் கொண்டிருந்தனர். இன்னொரு பக்கம் வணிகப் பெருமக்கள் தங்கள் கைகளில் விதம் விதமான பரிசுகளைப் புதுமணத் தம்பதிகளுக்காகக் கைகளில் ஏந்தியவண்ணம் நின்றிருக்க இன்னொரு பக்கம் தன்னுடைய நண்பர்களாக இருந்த மல்லர்களும் ஆவலுடன் அவர்களைப் பார்க்கக் காத்திருந்ததைக் கவனித்தான் பீமன். அவர்களும் பிராமணர்களாகவே இருந்தாலும் குரு வம்சத்து ராஜ குலத்துக்குச் சேவை செய்வதைத் தங்கள் லட்சியமாய்க் கொண்டவர்கள். தங்கள் குல வழக்கப்படி அலங்கரித்துக் கொண்டு கம்பீரமும், பெருமையும் ததும்ப நின்று கொண்டிருந்தனர்.  அவர்களுக்கு அருகே கோட்டை வாயில் காவலர்கள் வில்லையும் அம்புகளையும் ஏந்தியவண்ணம் காட்சி அளித்தனர். அவர்கள் ஊர்வலம் நெருங்க, நெருங்க வீர முழக்கம் இட்டவண்ணம் இருந்தனர். “பாண்டவர்களுக்கு ஜெயம்!”  பாண்டவர்கள் வரவு நல்வரவாகட்டும்!” என்றெல்லாம் கோஷித்துக் கொண்டிருந்தனர்.

வாத்தியங்களின் முழக்கம் காதுகளைப் பிளந்தது.  முரசுகள், பேரிகைகள் ஆர்ப்பரித்தன. எக்காளங்கள் ஊதப்பட்டன. மற்றும் இசைக்கருவிகள் இசைக்கப்பட்டன. சங்குகளை ஊதிப் பாண்டவர்களின் வருகையைத் தெரிவித்தனர். பீமன் மனதில் அளப்பரிய சந்தோஷம்.  எத்தனை கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தோம்.  அவை அனைத்தையும் ஈடு கட்டுவது போல் இப்போது இந்த வரவேற்பு.  இந்த வரவேற்புக்குத் தாங்கள் எல்லாவிதத்திலும் தகுதி வாய்ந்தவர்களே என்னும் எண்ணமும் பீமனின் மனதில் ஏற்பட்டது. ஹஸ்தினாபுரத்து மக்களின் அன்பு அவனை நெகிழ வைத்தது. அவர்கள் அனைவரின் மகிழ்ச்சியும் இயல்பானதாகவே தெரிந்தது அவனுக்கு. உள்ளார்ந்த அன்புடன் அவர்கள் தங்களை வரவேற்பதைப் புரிந்து கொண்டான் பீமன்.

ஹஸ்தினாபுரத்து மக்கள் அனைவரும் தங்கள் மூத்த சகோதரன் யுதிஷ்டிரனிடம் மாறாத அன்பும், நம்பிக்கையும் கொண்டிருப்பதையும் அவர் ஆட்சியில் தங்களுக்கு நீதியும், நேர்மையும், தர்மத்தை மீறாத பண்பும் கிடைக்கும் என்பதையும் புரிந்து வைத்திருக்கின்றார்கள் என்பதையும் பீமன் உணர்ந்தான். தன் சகோதரன் நேர்மையின் வடிவம், தர்ம தேவதையின் அவதாரம் என்பதையும் பீமன் அறிந்திருந்தான். அதோடு இல்லாமல் ஹஸ்தினாபுரத்து மக்களுக்கு துரியோதனனையும், அவன் சகோதரர்களையும் அவர்கள் செயலையும் அடியோடு பிடிக்காது என்பதும் அவனுக்குத் தெரிந்ததே!  துரியோதனனின் அராஜக ஆட்சியில் துன்பப் பட்டுக் கொண்டிருந்த மக்கள் இப்போது தங்களுக்கு யுதிஷ்டிரன் மூலம் ஒரு விடிவுகாலம் பிறக்கும் என எதிர்பார்க்கிறார்கள் என்பதையும் பீமன் அறிந்திருந்தான். ஆகவே தங்கள் வருகை அவர்கள் மனதில் ஏற்படுத்திய நிம்மதியையும், மகிழ்ச்சியையும் பீமன் புரிந்து கொண்டான்.  பீமன் யோசனையில் இருந்தபோதே யானை கோட்டை வாசலுக்கு அருகாமையில் வந்து நின்று விட்டது.  அவன் நின்றதும் பின்னால் வந்த ஊர்வலமும் நின்று விட்டது. யானைகள் மீதும், குதிரைகள் மீதும் அமர்ந்து பயணம் செய்தவர்கள் அனைவரும் கீழிறங்கினார்கள்.

ஊர்வலத்தின் கூடவே வந்த மற்ற அரசர்களும், மற்றப் பெரியோர்களும் குந்தியின் குடும்பத்தில் அப்போது மிக மூத்தவனாக இருந்த பலராமனுக்கு முன்னே செல்ல வழி ஏற்படுத்திக் கொடுத்தார்கள். பலராமன் அருகே யுதிஷ்டிரனும் காணப்பட்டான். யுதிஷ்டிரன் மணமகனின் உடையில் காணப்பட்டதோடு அல்லாமல் தலையிலும் அவன் மாமனார் துருபதன் அளித்த விலை உயர்ந்த கிரீடத்தைத் தரித்துக் கொண்டிருந்தான்.  அந்தச் சூரியஒளியில் அது பிரகாசித்தது. அவர்களின் ஞானகுருவான தௌம்யர் முன்னே வந்து அவர்கள் இருவரையும் அழைத்துக் கொண்டு முன்னேறினார்.

1 comment:

ஸ்ரீராம். said...

//ஆனால் துஷ்சாசன், கர்ணன், அஸ்வத்தாமா ஆகிய மூவரையும் காணவில்லை.//

எவ்வளவு துல்லிய வர்ணனைகளைத் தருகிறார் முன்ஷிஜி!