Saturday, June 30, 2012

துரியோதனனுடன் ஒரு சந்திப்பு


கண்ணா, நான் உத்கோசகத்தில் இருக்கையில் உன்னுடைய செய்தி எனக்குக் கிடைத்தது.   நம்முடைய தாய்வழியில் கொள்ளுப் பாட்டன் ஆன நாக நாட்டரசன் ஆர்யகனின் அந்தப் பிரதேசத்தைக் கடக்க எனக்கு ஒரு வழித்துணை அனுப்பப் பட்டது.  அங்கிருந்து நான் மத்ராவிற்கு அருகே யமுனையைக் கடந்தேன். “
“மத்ராவில் இப்போது மக்கள் வசிக்கின்றனரா?” கண்ணன் கேட்டான்.


“கண்ணா, மத்ராவைப் பார்க்கையிலேயே எனக்கு மனம் வேதனைப் படுகிறது.  அவ்வளவு மோசமாக இருக்கிறது. பயங்கரமாகவும் காண்கிறது.  நம்முடைய மாளிகைகள், வீடுகள் எல்லாம் எரிந்து சாம்பலாக்கி விட்டனர்.  எங்கெங்கு பார்த்தாலும் அழிவின் அடையாளங்களே.  ஒரு சில யாதவர்கள், பிரயாணம் செய்ய முடியாதவர்கள், மத்ரா திரும்பித் தங்கள் வீடுகளை அடைந்து அதைப் புதுப்பித்துக் கொண்டு நிலங்களில் பயிரும் செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள்.  சில நாகர்குல மக்களும் அங்கு வந்து குடியேறி இருக்கின்றனர்.  நிஷாதர்களையும் அங்கே காண முடிந்தது.  சுற்றி உள்ள காடுகளில் வசிக்கிறார்கள் போல!” என்றான் உத்தவன்.

“என்றாவது ஓர் நாள், மத்ராவைப் பழையபடி அழகும், உன்னதமும் நிறைந்த நகராக மாற்றவேண்டும்.  உத்தவா, எனக்கு அந்த ஆசை இன்னமும் இருக்கிறது;  ஆனால் அதற்குத் தக்க வேளை வரவேண்டும்.” என்றான் கண்ணன்.



“கண்ணா, நான் துருபதனிடம் தூது செல்ல வேண்டியிருக்குமா?” ஷ்வேதகேது கேட்டான்.


“கட்டாயம்; கட்டாயமாய் செல்ல வேண்டும்.  நான் துருபதனைச் சந்தித்தே ஆகவேண்டிய கட்டாயம் இப்போது.  தவிர்க்க இயலாது.  நீ உத்தவன் வந்த வழியே செல்.  எங்கள் கொள்ளுப்பாட்டன் ஆர்யகனிடம் எங்கள் சார்பில் எங்கள் வணக்கங்களைத் தெரிவித்துவிடு.  இப்போது நூறு வயதையும் கடந்திருப்பார் அவர்.  எப்படியேனும் நான் திரும்பிப் போகும்போதாவது அவரை வந்து சந்தித்து என் நமஸ்காரங்களைத் தெரிவிப்பதாய்ச் சொல்.”


இப்போது நாம் துரியோதனனை முதல்முறையாகச் சந்திக்கப் போகிறோம்.  எல்லாரும் அதற்குத் தயாராகுங்கள்.  கங்கைக்கரை ஹஸ்தினாபுரத்திலிருந்து ஒரு யோஜனை தூரத்தில் இருந்தது.  அந்தக் கரையில் மூன்று ஆண்கள், பார்த்தால் உயர்குடியைச் சேர்ந்தவர்கள் என்பதோடு உயர் பதவியும் வகிப்பவர் எனத் தெரிந்தது.  அமர்ந்து மிகவும் கவனத்துடனும், முக்கியத்துவத்துடனும் ஏதோ பேசிக் கொண்டிருந்தனர்.  இல்லை; விவாதித்துக் கொண்டிருந்தனர்.  அவர்கள் மூவரும் இப்போதுதான் காட்டிலிருந்து வேட்டை முடிந்து திரும்பி இருக்கிறார்கள். அதற்கு அடையாளமாக அவர்கள் மூவரின் அருகேயும், வில், அம்புகள், காணப்பட்டதோடு அல்லாமல் சில அம்புகள் ரத்தம் தோய்ந்தும் காணப்பட்டது.  சற்றுத் தூரத்தில் நிறுத்தப்பட்டிருந்த அவர்கள் மூவரின் ரதங்களும், அவற்றின் குதிரைகள் அவிழ்த்து விடப்பட்டு இளைப்பாறிக் கொண்டிருந்தன என்பது அங்கே மேய்ந்து கொண்டிருந்த குதிரைகள் மூலம் தெரிந்தது.  ரதசாரதிகள் மூவரும் அருகருகே அமர்ந்து தங்கள் எஜமானர்களைப் போல் ஆழ்ந்த பேச்சில் ஈடுபட்டிருந்தாலும், அவ்வப்போது எஜமானர்கள் மேலும் கண் வைத்துக்கொள்ளத் தவறவில்லை.  எஜமானர்கள் எப்போது வந்து அழைத்தாலும் கிளம்பச் சித்தமாக ரதத்தின் அருகேயே அமர்ந்திருந்தனர்.

ரதத்தோடு உடன் வந்திருந்த மாட்டு வண்டியில் கரையில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்த மூவரின் வேட்டையில் சிக்கிய மான்கள் ரத்தம் ஒழுகத் தங்கள் மூச்சுக்குப் போராடிக் கொண்டு இருந்தன.  மூவரின் பெரியவனாகக் காணப்பட்டவன், ஒழுங்கு செய்யப்பட்ட சிறிய தாடியுடனும்,  கொஞ்சம் உயரம் கம்மியாகவும், ஆனால் நல்ல வசீகரமான முக அமைப்புடனும், குண்டுக்கன்னங்களோடும் காணப்பட்டான்.  அவன் முகத்தில் மட்டுமில்லாமல் உதடுகளிலும் ஏதோ ஒரு விதத்தில் திருப்தி அடைந்திருக்கிறான் என்பதற்கான ஆனந்தப் புன்னகை காணப்பட்டது.  பணியாட்களால் அளிக்கப்பட்ட பானத்தை நிதானமாக அருந்திக் கொண்டு எதிரே அமர்ந்திருந்த இரு இளைஞர்களையும் பார்த்துக் கொண்டிருந்தான்.  இவன் தான் சகுனி.  காந்தார நாட்டு இளவரசன்.  திருதராஷ்டிரன் மனைவி காந்தாரியின் சகோதரன். ஹஸ்தினாபுரம் முழுக்க அவனை அறிந்திருந்தாலும் ஒருவரும் அவனை அன்போடு நேசிக்கவில்லை.  அனைவராலும் வெறுக்கப்பட்டான். 

அவன் அருகே உயரமாகவும், ஆஜாநுபாகுவாகவும் அமர்ந்திருந்தது திருதராஷ்டிரனின் மூத்த மகன் துரியோதனன்.  நல்ல கம்பீரமாகவே காணப்பட்டான்.  வழிவழியாக வந்த அரசகளையோடு அல்லாமல் சமீபத்தில் யுவராஜா பட்டாபிஷேஹம் செய்து வைக்கப்பட்டதால் அதுவும் சேர்ந்து கொண்டு இப்போதே அரசனைப்போல் நடந்து கொள்ள ஆரம்பித்திருந்தான்.  பலம் வாய்ந்த புஜங்களும், தோள்களும் அவன் மல்யுத்தம், கதைப் பயிற்சி போன்றவற்றில் மிகச் சிறந்த பயிற்சி பெற்றவன் என்பதை எடுத்துக் காட்டியது.  பேசுகையில் தன் வார்த்தைகளுக்கு அழுத்தம் கொடுத்துப் பேசினான்.  அப்போது அவன் கண்கள் பளிச்சிட்டதோடு அல்லாமல் அவன் இயல்பாகவே புத்திசாலி என்பதையும் எடுத்துக் காட்டியது.  அரசர்களுக்கு உரிய ஆடை, ஆபரணங்களோடு காட்சி அளித்த அவனுடைய யுவராஜா கிரீடம் அவனருகே காணப்பட்டது.

Thursday, June 28, 2012

கண்ணன் கிளம்பி விட்டான்.


தனக்குத் தானே பேசிக் கொள்வது போல் கண்ணன் தொடர்ந்தான். “நம்முடைய திட்டங்கள் அனைத்தும் தவறாகப் போய்விட்டன.  எதுவும் சரியாக நடைபெறவில்லை.  பாண்டவர்களை நாடு கடத்தியது குறித்த தகவல் எனக்கு எட்டியதுமே ஹஸ்தினாபுரம் சென்று பீஷ்மரை பார்த்து இது குறித்துப் பேச விரும்பினேன்.  இவர்கள் தாயாதிச் சண்டைக்கு ஒரு முடிவு கட்டவும் விரும்பினேன்.  வேறு சில எண்ணங்களும், திட்டங்களும் கூட இருந்தன.  ஆனால்????ஆனால்??? இப்போதோ?? பாண்டவர்களே உயிருடன் இல்லை.”  கண்ணன் குரலின் ஆழ்ந்த வருத்ததைப் புரிந்து கொண்ட மற்றவர் அனைவரும் அவனுடைய வருத்தத்தையும், துயரத்தையும் பங்கு போட்டுக் கொள்ளும் விதம் அமைதி காத்தனர். 

“””ம்ம்ம்ம்…கடைசிவரை நீ அவர்களோடு இருந்து ஆறுதல் சொல்லி இருக்கலாமோ உத்தவா?  நீ அவர்களோடு கடைசி வரை இல்லை; விரைவில் கிளம்பி விட்டாய்!” என்றான் கண்ணன். 

கண்ணன் குரலில் குற்றம் சாட்டும் தொனி சிறிது கூட இல்லை எனினும், அவன் முகமும் உத்தவனிடம் இணக்கமாகவே காணப்பட்டது எனினும் உத்தவனுக்குத் தூக்கிவாரிப் போட்டது.  வாரணாவதத்தில் அவர்களுக்கு ஆபத்து காத்திருக்கும் செய்தி உத்தவன் நன்கு அறிவான்.  ஆபத்துச் சமயத்தில் அவர்களைத் தன்னந்தனியே விட்டு விட்டு அவன் கிளம்பி வந்துவிட்டானே! என்ன சுயநலக்காரனாக இருந்திருக்கிறேன் நான்! இதை நினைத்த உத்தவனுக்குக் கண்ணீர் ததும்பியது. நெஞ்சம் விம்மியது.  அவன் முகமே ஆழ்ந்த சோகத்தில் மூழ்கியது. 

கிருஷ்ணன் அவனையே அன்புடனும், ஆறுதல் சொல்லும் விதமாகவும் கவனித்துக் கொண்டிருந்தான்.  உத்தவன் செய்த தவறை உணர்ந்துவிட்டான் என்பதையும் கிருஷ்ணன் புரிந்து கொண்டான்.  அவன் மனதை அப்படியே படித்தவன் போல, “நீ அங்கேயே இருந்திருக்க வேண்டும், உத்தவா!” என்றான் மென்மையாக.

“கிருஷ்ணா, கிருஷ்ணா, என்னைப் போன்ற முட்டாள்களும் இவ்வுலகில் இருப்பரோ?  நான் ஆபத்துச் சமயத்தில் அவர்களைத் தன்னந்தனியே விட்டு வந்துவிட்டேனே! என்னை விடச் சுயநலக்காரனும் உண்டோ?” என்று புலம்ப ஆரம்பித்தான்.

“நீ அங்கே அவர்களோடு இருந்திருக்க வேண்டும் உத்தவா!  அதைத் தான் நான் உன்னிடம் எதிர்பார்த்தேன்.  ஆனால் நீ அவர்களைத் தன்னந்தனியே விட்டு வந்துவிட்டாய்!  சரி, போகட்டும்; நடந்தது நடந்ததே!  அதை எவரால் மாற்ற இயலும்! நடந்தது நடந்ததாகவே இருக்கட்டும்! பழசை நினைத்துக் கொண்டே இருக்க வேண்டாம்.” என்றான் கிருஷ்ணன். தன் நினைவுகளை மீண்டும் ஒன்று சேர்த்தவன் போல, “பாண்டவர்கள் இல்லாமல் குரு வம்சம் கெளரவர்களின் ஆட்சியில் கடுமையான நிகழ்வுகளைச் சந்திக்கும்.  அதுவும் அவர்களின் மாமன் காந்தார தேசத்து இளவரசன் சகுனியின் மேற்பார்வையில் அது நிச்சயம் தர்மத்தின் பாதையாக இருக்காது.  தர்மத்தை விட்டு விலகியே செல்வார்கள். பாண்டவர்கள் உயிருடன் இருந்தவரைக்கும் கொஞ்சம் நம்பிக்கை இருந்தது.” என்றான்.

“இப்போது நாம் அடுத்துச் செய்யவேண்டியது என்ன கிருஷ்ணா?” உத்தவனும் மற்றவர்களும் கேட்க, கிருஷ்ணனும், அந்தக் கேள்வியையே திரும்பச் சொன்னான். “என்ன செய்ய வேண்டும்?” சற்று நேரம் மெளனமாகவே அமர்ந்திருந்தான் கிருஷ்ணன்.  சற்று நேரம் கழித்து அவன் நிமிர்ந்து பார்த்தபோது முன்னிருந்த குழப்பம் ஏதுமில்லாமல் அவன் முகம் அமைதியாகவும், முன்னைப் போல் புன்னகையுடனும் ஒளிர்ந்தது.  கிருஷ்ணன் ஏதோ முடிவு எடுத்திருக்கிறான் என்பதை அனைவரும் புரிந்து கொண்டு அவன் பேசக் காத்திருந்தார்கள்.

“நான் இப்போது துக்கம் விசாரிக்கும் நிமித்தம் ஹஸ்தினாபுரம் செல்லப் போகிறேன்.  மரியாதைக்குரிய பீஷ்மரைச் சந்திக்கப் போகிறேன்.  அங்கேயே இருந்து கொண்டு ஐந்து சகோதரர்களையும் அழித்த விதம் எப்படி எனக் கண்டு பிடிக்கப் போகிறேன்.” என்ற கிருஷ்ணன் உத்தவனைப் பார்த்து, “நீ எவ்வழியில் வந்தாய்?” என வினவினான்.

Tuesday, June 26, 2012

கண்ணன் யோசிக்கிறான்.


“ஆம், துரியோதனன் எப்பாடு பட்டாவது யுவராஜா பதவியைக் காத்துக்கொள்ளவே முயற்சிப்பான்.  நீ சொல்வது சரிதான்.  பாண்டவர்கள் நாடு கடத்தப்பட்ட தகவலை ஷ்வேதகேது எனக்கு ஏற்கெனவே தெரிவித்தான்.  அந்தச் சமயம் அவன் ஹஸ்தினாபுரத்தில் இருந்திருக்கிறான். ஆனால் நீ எப்படி அறிந்தாய்? பாண்டவர்கள் ஐவரும் இறந்த செய்தி உனக்கு எப்படிக் கிடைத்தது?”

“நான் உத்கோசகத்தில் இருக்கையில் செய்தி வந்தது.  வாரணாவதத்தில் அரசிளங்குமரர்கள் தங்கி இருந்த மாளிகையில் தீப்பற்றியதாகவும், கடுமையான அந்தத் தீ விபத்தில் ஐந்து அரசகுமாரர்களோடு சேர்ந்து அவர்கள் அன்னையும் எரிந்து சாம்பலாயினர் என்றும் பேசிக் கொண்டனர்.  உண்மை என்னவென அறிய வேண்டி நான் வாரணாவதத்துக்கே சென்றேன்.  அங்கே மாளிகை இருந்த இடம் முற்றிலும் சாம்பலாய்க் கிடந்தது.  வெறும் வெளியாகக் காட்சி அளித்தது.  மாளிகை இருந்ததற்கான சுவடே இல்லை.  நான் ஏற்கெனவே சந்தேகப்பட்ட மாதிரி எரியக் கூடிய ஏதோ ஒரு பொருளைக் கொண்டு அந்த மாளிகை கட்டப்பட்டிருக்க வேண்டும்.  புரோசனன் என்னும் அந்த வீரனும் அந்தத் தீ விபத்தில் எரிந்து சாம்பலாகிவிட்டான்.  பின்னர் ஐந்து சகோதரர்களின் மிச்சங்களும், அவர்கள் தாயின் மிச்சங்களும் அரச மரியாதையுடன் எரிக்கப்பட்டன. “

கண்ணன் யோசனையில் ஆழ்ந்தான். ஷ்வேதகேது, “பாண்டவர்களுக்குத் துளிக்கூட சந்தேகம் வரவில்லையா?  அப்படி வந்திருந்தால் சரியான சமயத்தில் தப்பிச் சென்றிருக்கலாமே?”
“ஓ, அவர்கள் எந்தவிதமான அவசரமான சூழ்நிலையையும் எதிர்கொள்ளத் தயாராகவே இருந்தனர்.  விதுரருக்கும் சந்தேகம் தான்.  சூழ்ச்சியும் சதியும் நடந்திருக்கிறது என ஊகித்திருந்தார். ஆகையால் சுரங்கம் தோண்டுவதில் வல்லவன் ஒருவனைக் கொண்டு புரோச்சனன் இல்லாத நேரத்தில் சுரங்கம் தோண்டும்படி கூறி இருந்தார்.  புரோச்சனன் தான் எப்போதுமே அங்கே காவல் இருந்திருக்கிறானே?  ஆகையால் அந்தச் சுரங்க வழி முழுமையானதா என்ன என்பது குறித்து நான் அறியேன்.  ஆனால் ஐந்து சகோதரர்களும் தப்பிச் சென்றிருக்க வழியே இல்லை.  இது நிச்சயம்.” என்றான் உத்தவன்.

“இது ஒரு மரண அடியாக நம்மிடையே விழுந்திருக்கிறது.  நிச்சயமாய் இப்படி ஒன்றை நாம் யாரும் எதிர்பார்க்கவே இல்லை.  ஐந்து சகோதரர்களையும் நாம் எவ்வளவு பாசத்தோடும், நேசத்தோடும் விரும்பினோம் என்பதும், அவர்களுக்கு நாமும், நமக்கு அவர்களும் உதவுவார்கள் என்ற நம்பிக்கையும் கொண்டிருந்தோம் என்பதையும் அனைவரும் அறிவோம்.  ஒரே ஒரு நல்ல விஷயம் என்னவெனில், அத்தை குந்தி தேவியும் அவர்களுடனேயே இறந்ததுதான்.  ஏனெனில் அவளுக்கு ஐந்து பிள்ளைகளுமே உயிர் மூச்சாக இருந்து வந்தனர்.  பிள்ளைகள் இல்லாமல் அவளால் ஒரு நொடி கூட இருக்க முடியாது.  ஆனாலும் இத்தனை நல்லவர்கள் இறந்ததைச் சகிக்க முடியவில்லைதான்.”  கண்ணன் ஆழ்ந்த வருத்தத்துடன் பேசினான். 

“இப்போது நாம் என்ன செய்யவேண்டும்?” ஷ்வேதகேது கேட்டான்.

“துவாரகை திரும்ப வேண்டியது தான்.  கண்ணன் ஹஸ்தினாபுரத்துக்கு இப்போது செல்வது உசிதமாய்த் தோன்றவில்லை.  அதுவும் துரியோதனன் யுவராஜாவாகப் பட்டம் சூட்டிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் செல்வது முற்றிலும் உசிதம் இல்லை.  அதோடு கூட தாத்தா பீஷ்மருக்கும் இப்போது முன்னத்தனை செல்வாக்கு குரு வம்சத்து வாரிசுகளிடம் இருப்பதாயும் தெரியவில்லை.  அவரையோ, அவரின் வார்த்தைகளையோ கெளரவர்கள் மதிப்பதே இல்லை.”

“உத்தவா, யோசனை செய்!  நாம் இப்போது துவாரகை திரும்புவது அத்தனை நல்லது என உனக்குத் தோன்றுகிறதா?” கண்ணன் மெதுவாய் யோசித்தவண்ணம் கேட்டான்.

Sunday, June 17, 2012

உத்தவன் பேசுகிறான்!


“பாண்டவர்கள் ஐவரையும் கொல்லச் சதித்திட்டம் தீட்டி இருந்தனர். அதைக் கேள்விப் பட்டதும் பீமன் பதிலடி கொடுக்கத் தயார் செய்து கொண்டிருந்தான்.  தாத்தா பீஷ்மருக்கு விஷயத்தின் முக்கியத்துவம் புரிந்து, திருதராஷ்டிரனோடு நீண்ட நேரம் கலந்து ஆலோசித்திருக்கிறார்.  அதன் பின்னரே யுதிஷ்டிரனை திருதராஷ்டிரன் அழைத்திருக்க வேண்டும்.” உத்தவன் கூறினான்.  

“ஓஹோ, திருதராஷ்டிரன் யுதிஷ்டிரனின் என்ன கூறினாராம்?”

“திருதராஷ்டிரன், துரியோதனன் கடுமையான நடவடிக்கை எடுக்கத் தயார் செய்து கொண்டிருப்பதாகவும், குரு வம்சம் சகோதரச் சண்டையில் அழிந்துபடும் எனத் தான் கவலையில் இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்.”

இடையில் ஷ்வேதகேது, “துரியோதனன் எதையும் செய்வான்; செய்யக் கூடியவனே!” எனத் தன் கருத்தைக் கூறினான்.  

உத்தவன் தொடர்ந்து, “ குரு வம்சத்தைக் காக்கவும், பேரழிவில் இருந்து தடுக்கவும், யுதிஷ்டிரன் தன் யுவராஜா பட்டத்தையும், பதவியையும் துறக்க வேண்டியது தான் ஒரே வழி என திருதராஷ்டிரனால் சுட்டிக் காட்டப்பட்டிருக்கிறது.” என்றான்.

“யுதிஷ்டிரன் அதற்கு ஒத்துக்கொண்டானா?”

“சற்றும் தயங்கவில்லை கண்ணா! உடனே ஒத்துக்கொண்டிருக்கிறான்.” உத்தவன் குரலில் இப்போது லேசாய்க் கோபம் தெரிந்தது. “ஆனால் அந்த அரசனுக்கு இது போதவில்லை;  அவன் மனம் சமாதானம் ஆகவில்லை.  ஏனெனில் பாண்டவர்களை நாட்டுக் குடிமக்கள் கண்ணின் கருமணியாக நேசிக்கின்றனர்.  அவர்கள் மேல் மிகுந்த மதிப்பும், மரியாதையும் காட்டி வருகின்றனர்.  யுதிஷ்டிரனோ, பாண்டவ சகோதரர்களோ ஹஸ்தினாபுரத்தில் இருக்கும்வரையிலும் துரியோதனனால் யுவராஜா பட்டத்தை ஏற்க முடியாது.  யுதிஷ்டிரன் எப்போதுமே நாட்டு மக்களுக்கும், படை வீரர்களுக்கும் கண்ணைப் போன்றவனாகவே இருந்து வருவான். அதைத் தாங்கும் சக்தி துரியோதனனுக்கு இல்லை.”

“ஆகவே?”

“யுதிஷ்டிரன் தன் சகோதரர்களுடனும் தாயுடனும் வாராணவதத்தில் போய்ச் சில மாதங்களைக் கழிக்குமாறு கேட்டுக் கொள்ளப் பட்டான். அங்கே இப்போது ஒரு மாபெரும் திருவிழா நடைபெறப் போகிறது.  அந்தச் சாக்கில் சென்று அங்கே சில மாதங்கள் தங்கும்படி அறிவுறுத்தப் பட்டிருக்கிறான். இதற்கும் யுதிஷ்டிரன் மறுப்புச் சொல்லவில்லை; ஒத்துக்கொண்டு விட்டான்.”

“பீஷ்மர் என்ன சொன்னாராம் இதற்கு?  பாண்டவர்களிடம் அவர் மிகப் பிரியமும், பாசமும் காட்டுகிறார் என்றல்லவோ எண்ணினேன்?”

“தாத்தா பீஷ்மர் கடுமையான முகபாவத்துடனும், வாய் திறந்து எதுவும் பேசாமலும் அந்தப்பேச்சு வார்த்தைகளில் கலந்து கொள்ளாமலும், அதே சமயம் பேச்சு வார்த்தையின் சாரத்தை உள்வாங்கிக் கொண்டும் இருந்ததாக யுதிஷ்டிரன் கூறினான்.  ஆனால் அவர் பேசிய ஒரே வார்த்தை, “யுதிஷ்டிரா, உங்களை எவராவது தாக்க வந்தால் பதிலுக்கு நீங்களும் பதிலடி கொடுத்து உங்களைக் காத்துக்கொள்ளுங்கள்! ” என்பதே என்று யுதிஷ்டிரன் கூறினான்.”

“பீமனும், அர்ஜுனனும் இதற்கு ஒத்துக் கொண்டனரா?” கண்ணன் கேட்டான்.

“முதலில் பிடிவாதமாக மறுத்தனர்.  பீமனுக்குக் கடுங்கோபம்.  அர்ஜுனன் எதிர்ப்புத் தெரிவித்தான். நகுல, சகாதேவர்களுக்கு இந்த யோசனையே பிடிக்கவில்லை.  ஆனால் யுதிஷ்டிரன் மன்னனுக்கு வாக்குக் கொடுத்துவிட்டு வந்து விட்டான்;  ஆகவே குந்தி தேவி யுதிஷ்டிரனுடைய வாக்குறுதியைக் காப்பாற்ற வேண்டியது நம் கடமை என்று கூறி விட்டாள்.  பிறகென்ன?  எவரும் மறுப்புச் சொல்லவில்லை. வெகு அருமையான, அற்புதமான குடும்பம் அவர்களுடையது. ஒவ்வொருவரும் மற்றவரின் அங்கமாகவே இருக்கின்றனர். தனித்துத் தெரிவதில்லை.”

“அவர்களுடைய பலமே அது தான்!  அதுவே அவர்களுக்கு வெற்றியையும், புகழையும் கொடுக்கும்.  உத்தவா, உன்னுடைய கதையை முழுக்கச் சொல்.”

“ஹஸ்தினாபுரத்து மக்களுக்கு எப்படியோ விஷயம் தெரிந்து விட்டது.  ஐந்து சகோதரர்களும், குந்தி தேவியும் வாரணாவதம் திருவிழா எனச் செல்லப்போகிறார்கள் என்பதைக் கேட்டதும், அவர்களுக்கு நம்பிக்கையே வரவில்லை. இதில் ஏதோ சூது இருப்பதாகவே பேசிக் கொண்டனர். யாருமே பாண்டவர்கள் வலுவில் வந்து தங்கள் பதவியையும், செல்வத்தையும், அரச போகத்தையும் துறந்துவிட்டுச் செல்வார்கள் என்பதை எதிர்பார்க்கவில்லை.  இரண்டு நாட்களில் அவர்கள் கிளம்புகையில் மக்கள் வெள்ளமாகத் திரண்டு அவர்களுக்குப் பிரியாவிடை கொடுத்தனர்.  அனைவரும் கண்ணீர் விட்டனர்.”

“நீ என்ன செய்தாய்?”

“நானும் அவர்களுடன் வாரணாவதம் சென்றேன். அவர்களோடு சில நாட்கள் தங்கினேன்.  பாண்டவர்கள் செல்லும் இடமெல்லாம் மக்கள் கூட்டமாக வந்து அவர்களை வாழ்த்தி வணங்கி ஆர்ப்பரித்தனர்.  ஆனால்…ஆனால் ஏதோ ஒன்று அந்த மாளிகையில் எனக்குப் புரியாத ஏதோ ஒன்று என்னை நெருடிக் கொண்டே இருந்தது.  ஏதோ பேரிழப்பு, அல்லது பேரிடர் வரப்போகிறது என்றே நினைத்தேன்.  அரசமாளிகை எத்தனை வலுவாக இருக்கவேண்டுமோ அத்தனை வலுவாக அது இல்லை.  எதை வைத்துக் கட்டினார்கள் என்று தெரியாவண்ணம் சுவரெல்லாம் மிக மெலிதாகக் கைகளால் தட்டினாலே விழுந்து உடையும் போல் இருந்ததாய் எனக்குத் தோன்றியது.  புரோசனன் என்னும் மிலேச்சப் படை வீரன் பாண்டவர்களின் தேவைகளைக் கவனிப்பதற்காக நியமிக்கப் பட்டிருந்தான்.  ஆனால் எனக்கோ அவன் அவர்களை ஒற்றறிவதாகவே பட்டது. இரவும் பகலும் அவர்களைக் கண்காணிக்க வீரர்களை நியமித்திருந்தான்.”

“இதில் சூது இருப்பதாய்த் தெரிந்ததுமே பாண்டவர்கள் ஹஸ்தினாபுரம் சென்றிருக்கலாமே?” கண்ணன் கேட்டான்.

“அவர்களால் திரும்ப முடியாது.  யுதிஷ்டிரன் வாக்குக்கொடுத்துவிட்டான்.  அப்படியே அவர்கள் அழைப்பு ஏதும் இல்லாமல் அவர்களாகத் திரும்பினாலும் உடனடியாக அவர்கள் கொல்லப் படுவார்கள். துரியோதனன் அதில் மிகவும் கெட்டிக்காரன்.  ஆகவே கவனமாக இருப்பான்.”



Friday, June 15, 2012

தர்மத்தின் வாழ்வதனைச் சூது கவ்வும்!


வழி நெடுக அவர்களை அக்கம்பக்கத்துக் கிராம மக்கள் வரவேற்று உபசரித்தனர்.  இந்த வழியில் தான் மூன்று வருடங்கள் முன்னால் யாதவர்கள் மதுராவை விட்டு துவாரகை நோக்கிய நீண்ட நெடும் பயணம் செய்திருந்தனர்.  ஷால்வ அரசன் கூட இப்போது யாதவர்களின் நண்பனாக மாறி இருந்தான்.  கண்ணனை மிகவும் உபசரித்து அவன் நாட்டைக் கண்ணனின் பரிவாரங்கள் கடக்குமிடம் எல்லாம் எந்தவிதமான இடையூறுகளும் நேரிடாவண்ணம் பாதுகாப்புக் கொடுத்தான்.  ஆகவே புஷ்கர க்ஷேத்திரத்தை நெருங்கியதும். அனைவரும் தண்டு இறங்கினார்கள்.  கண்ணனின் ரதம் கருடக் கொடியைப் பறக்கவிட்டுக் கொண்டு வந்து நின்றது.  அங்கேயே அனைவரும் தங்க, உணவு உண்டு ஓய்வு எடுக்க, எனக் கூடாரங்கள் அமைக்கப்பட்டன.  கண்ணன் ஏற்கெனவே உத்தவனை எதிர்பார்த்துக் கொண்டிருந்தான்.  ஹஸ்தினாபுரத்திற்குச் சில குதிரை வீரர்களை விரைவாய்ச் சென்று உத்தவனை அழைத்து வரவும் ஏற்பாடு செய்திருந்தான்.  ஆகவே உத்தவன் அநேகமாய் இங்கே சந்திக்கலாமோ எனக் கண்ணனின் எதிர்பார்ப்பு இருந்தது.

கண்ணன் எதிர்பார்ப்பை விட வேகமாய் உத்தவன் வந்து சேர்ந்தான்.  ஹஸ்தினாபுரத்திலிருந்து குதிரைகளை விரட்டிக் கொண்டு வந்திருந்தான் என்பதைக் குதிரைகள் வாயில் நுரை தப்ப மூச்சு விட்டுக் கொண்டு நின்று கொண்டிருந்ததில் இருந்து தெரிந்தது.  உத்தவனும் இந்த அதிவேகப் பயணத்தில் களைத்துச் சோர்ந்திருந்தான்.  அவனுடைய பரிவாரங்களால் உத்தவனின் வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல் பின் தங்கி விட்டனர்.  ஆகவே உத்தவன் மட்டுமே வந்திருந்தான்.  உத்தவனின் வேகமான பிரயாணத்தைக் குறித்து அறிந்த சாத்யகிக்கும், ஷ்வேதகேதுவுக்கும் விஷயம் மிகவும் முக்கியமானது என்பதோடு கவலை தரக்கூடியது என்பதும் புரிந்தது.  விஷயம் என்னவெனத் தெரிந்து கொள்ள வேண்டி அவர்களும் அங்கே வந்து சேர்ந்தனர்.

“கிருஷ்ணா, கிருஷ்ணா, நான் என்ன சொல்வேன்! எப்படிச் சொல்வேன்! மாபெரும் விபத்து நடந்திருக்கிறது.  பிரளயமே வந்துவிட்டதோ என அஞ்சுகிறேன்.  கண்ணா, கண்ணா, உன் அத்தையின் மக்கள் ஐவரும் இறந்துவிட்டனர்.  எவரும் உயிருடன் இல்லை.” இதை இவ்வளவு தொடர்ச்சியாக உத்தவனால் கூற முடியவில்லை. இடையிடையே மூச்சு விட்டுக் கொண்டு வார்த்தைகளை நிறுத்தி நிறுத்திப் பேசினான்.  எனினும் அவனுடைய தாங்கொணா சோகம் அந்தக் குரலில் தெரிந்தது. 

அனைவரும் அதிர்ந்தனர். “என்ன?”கிருஷ்ணனும் அதிர்ந்து போனான் என்பது அவனைக் கட்டி அணைத்த வண்ணம் இருந்த உத்தவனுக்குப் புரிந்தது.  ஆனால் உடனேயே சமாளித்துக் கொண்டு, “உத்தவா, சற்று ஆற அமர உட்கார்ந்து கொள்வாய்.  கொஞ்சம் நிதானப் படுத்திக் கொண்டு பின்னர் பேசலாம்.” என்றான்.  பதிலே சொல்லாத உத்தவன் கண்ணன் பிடியிலிருந்து விடுவித்துக்கொள்ள முயன்றான்.  முடியாமல் அப்படியே கீழே அங்கிருந்த ஒரு மரத்தடியில் பொத்தென விழுந்தான். கண்ணனும் அருகே அமர்ந்த வண்ணம் அவனைத் தேற்ற முயன்றான். ஷ்வேதகேதுவும் அருகே அமர்ந்து கொள்ள, சாத்யகி உத்தவனுக்குக் குடிக்க நீர் கொண்டு வரச் சென்றான். “உத்தவா, நிதானமாய் நடந்தவைகள் அனைத்தையும் தெரிவி!” என்றான் கண்ணன்.

“பாண்டவர்கள் ஐவரும் இறந்தனர்.”  மீண்டும் இதையே சொன்ன உத்தவன், வாரணாவதத்தில் அரக்கு மாளிகையில் அவர்கள் அனைவரும் தாய் குந்தியோடு சேர்த்து எரிக்கப்பட்டதைக் கூறினான்.  எவரும் இப்போது உயிருடன் இல்லை என்பதைத் தெரிவித்தான்.  கண்ணனால் இந்தச் செய்தியை நம்பமுடியவில்லை.  ஆனால் உத்தவன் பொய் கூற மாட்டான்.  அதுவும் இம்மாதிரியான விஷயத்தில். “கொஞ்சம் நிதானப்படுத்திக் கொள் உத்தவா.  மெல்ல மெல்ல ஒவ்வொன்றாய் ஆரம்பத்தில் இருந்து கூறு. அவசரம் ஒன்றுமில்லை.” என்றான்.  அதற்குள்ளாக சாத்யகி குடிநீர் கொண்டு வர அதை வாங்கிக் குடித்த உத்தவன், பேச ஆரம்பித்தான்.

“கண்ணா, நான் ஹஸ்தினாபுரக் கோட்டை வாயிலை அடைந்ததும், பீமனும், அர்ஜுனனும் அங்கு வந்து என்னை வரவேற்று அழைத்துச் சென்றனர்.  நான் அங்கே சென்று குந்தி தேவியை வணங்கி விபரங்கள் சொல்கையில் யுதிஷ்டிரனும், இரட்டையர்களான நகுல, சகாதேவரும் அங்கிருந்தனர்.  குந்தி தேவி அனைவரையும் மிகவும் விசாரித்தார்.  நாங்கள் பேசுகையிலேயே அவசரம் அவசரமாக அங்கே வந்த முதலமைச்சர் விதுரர் யுதிஷ்டிரரை திருதராஷ்டிரன் அழைப்பதாகவும், மிகவும் அவசரம் எனவும் கூறினார்.  உடனே யுதிஷ்டிரன் அவர்களோடு சென்றார்.”

“அவர்கள்,…… பாண்டவர்கள் அங்கே எப்படி இருந்தனர்? மகிழ்வாகத் தானே?” கண்ணன் கேட்டான்.

“இல்லை, துரியோதனனும், அவன் சகோதரர்களும் அந்த ரத சாரதியின் மகன் கர்ணன், மற்றும் துரியோதனன் மாமன் சகுனி ஆகியவர்களின் தூண்டுதலின் பேரில் இவர்கள் ஐவரையும் கொன்றுவிடத் திட்டம் தீட்டி இருப்பதாய் உளவுச் செய்தி கிடைத்திருந்தது.  எல்லாவற்றுக்கும் மேலே இவர்களோடு ஆசாரியர் துரோணரின் ஒரே மகன் அஸ்வத்தாமாவும் சேர்ந்திருந்தான். “

“ஆம், நான் இதை அறிவேன். ஒற்றர்கள் மூலம் அறிந்தேன்.” என்ற கண்ணன், “என்ன திட்டம் தீட்டி இருந்தனர்?” என்று கேட்டான்.

Monday, June 11, 2012

திருதராஷ்டிரனுக்கு நிம்மதி!


திருதராஷ்டிரன் பெரிதும் நிம்மதி அடைந்தான் என்பது அவன் பேசியதில் இருந்து புரிந்தது.  “குழந்தாய், அங்கே உனக்கு ஒரு அழகான மாளிகைக் கட்டப்பட்டிருக்கிறது.  எந்தவிதமான தொந்திரவுகளும், வேலைகளும் இல்லாமல் நீ நிம்மதியாய்ப்பொழுதைக் கழிக்கலாம்.  ஆனால்,….ஆனால்…… பீமனும், அர்ஜுனனும் சம்மதிப்பார்களா?  அவர்களுக்கு ஹஸ்தினாபுரத்தை விட்டுச் செல்ல சம்மதமாய் இருக்குமா?  ஏதேனும் தொந்திரவுகளை….ம்ம்ம்ம் தடங்கல்களை உருவாக்கப்போகிறார்கள்.” திருதராஷ்டிரன் குரலில் தெரிந்த ஆர்வத்தைக் கண்டு யுதிஷ்டிரன் மனதுக்குள் சிரித்துக் கொண்டான்.  என்றாலும் தன் தம்பிகளைக் குறித்து நன்கு அறிந்திருந்த அவன், “பெரியப்பா, அவர்களுக்குச் சம்மதம் இராதுதான்;  நிச்சயம் எதிர்ப்பார்கள்.  ஆனால் நான் உங்களுக்கு வாக்குக் கொடுக்கிறேன், அரசே, உங்கள் கட்டளையை நாங்கள் நிறைவேற்றுவோம்.” என உறுதி மொழி கொடுத்தான் யுதிஷ்டிரன்.

“குழந்தாய், நீ மிகப் பெரியவன்! உயர்ந்த உள்ளம் உனக்கு.  என் தம்பி பாண்டுவைப்போலவே உயர்ந்த உள்ளமும், அனைவரையும் அரவணைத்துச் செல்லும் போக்கும், பெருந்தன்மையான மனமும் உனக்கும் வாய்த்திருக்கிறது.  இந்தக்குரு வம்சத்தைப் பேரழிவில் இருந்து நீ இப்போது காப்பாற்றி உள்ளாய்.” திருதராஷ்டிரன் உண்மையாகவே இதை உணர்ந்து கூறினான் என்பது புலப்பட்டது. 

“அரசே, இப்போது எனக்கு விடைகொடுங்கள்.” யுதிஷ்டிரனுக்கு உடனே சென்று தம்பிகளையும், தாயையும் பார்க்க ஆவல் மிகுந்தது.  திருதராஷ்டிரன் கால்களில் விழுந்து வணங்கியவன், பீஷ்மர் கால்களிலும் விழுந்து வணங்கினான்.  அவனைத் தூக்கி அணைத்துக் கொண்டார் பீஷ்மர்.  இவ்வளவு நேரமும் எதுவும் பேசாமல் இறுகிய முகத்தோடு அமர்ந்திருந்தார் அவர்.  யுதிஷ்டிரனைத் தூக்கி நிறுத்திய பீஷ்மர், “ யுதிஷ்டிரா, தர்மமே நீ தான்.  நீயே தர்மம். நீ வேறு அது வேறல்ல.  அனைவரையும் காத்து ரக்ஷிக்கும் அந்த மஹாதேவன் உன்னையும், உன் தம்பிமார்களையும் காப்பாற்றுவான்.  நீ இப்போது செல்லும் பாதை அந்த மஹாதேவரால் ஆசீர்வதிக்கப்பட்டதாய் இருக்கும்.” அவனை மீண்டும் அணைத்துக் கொண்ட பீஷ்மரின் கண்களிலிருந்து உதிர்ந்த கண்ணீர் முத்துக்கள் யுதிஷ்டிரனின் உச்சந்தலையில் அக்ஷதைகள் போல் விழுந்தன.  கிழவரின் மனதைப் புரிந்து கொண்ட யுதிஷ்டிரனுக்கு ஒரே சமயத்தில் நன்றி உணர்வு, அன்பு, பாசம், கிழவரை விட்டுப் பிரிய வேண்டுமே என்ற வருத்தம் எல்லாம் ஏக காலத்தில் தாக்கியது.  தன் கையாலாகாத் தனத்தை நினைந்து நொந்து கொண்டான்.  அவன் தொண்டை அடைத்துக் கொண்டு பேச்சுக் கிளம்பவில்லை.

பாண்டவர்கள் வாரணாவதம் செல்லட்டும்.  நாம் இப்போது கண்ணன் எங்கே வந்து கொண்டிருக்கிறான், என்ன செய்கின்றான் என்பதைப்பார்ப்போமா!

ஹஸ்தினாபுரத்துக்கு வந்து கொண்டிருந்த கண்ணனுக்கும், அவன் பரிவாரங்களுக்கும் சாத்யகியின் பிள்ளையான யுயுதானா பொறுப்பேற்றுக் கொண்டிருந்தான்.  அவர்கள் அப்போது புஷ்கர க்ஷேத்திரத்தை நெருங்கிக் கொண்டிருந்தனர்.  சாத்யகி ஒரு மாபெரும் ரதப் படைக்குத் தலைவனாகப்பொறுப்பேற்று வழி நடத்திக் கொண்டிருந்தான். சாத்யகியே ஒரு அதிரதன்.  ரதப் படையின் மிக உயர்ந்த பொறுப்பில் இருந்தான். ஒவ்வொரு ரதமும் எந்தவிதமான சூழ்நிலைகளுக்கும் ஈடு கொடுக்கும் வகையில் தயாரிக்கப்பட்டிருந்தது.  ஒவ்வொரு ரதமும் இரண்டு அதிரதர்களைக் கொண்டிருந்ததோடு இரண்டு சாரதிகளும் இருந்தனர்.  அதே போல் மாற்றுக் குதிரைகளும் ஒவ்வொரு ரதத்துக்காகவும் தயார் நிலையில் கூடவே வந்து கொண்டிருந்தன. இதைத் தவிர பல மாட்டு வண்டிகளில் ஆயுதங்கள், உணவுப்பொருட்கள், கூடாரம் அடித்துத் தங்குவதற்கான பொருட்கள், மருத்துவ வசதிகள் என வரிசையாக வந்து கொண்டிருந்தன.  எல்லாம் புஷ்கர நகரை நெருங்கி விட்டது.  புஷ்கரம் அப்போது யாதவர்களின் ஆட்சியில் தான் இருந்தது.


Saturday, June 9, 2012

யுதிஷ்டிரனின் பெருந்தன்மை!


திருதராஷ்டிரனைப்போல் யுதிஷ்டிரன் எதற்கும் தயங்கவில்லை.  அவன் எந்த அளவுக்கு வேண்டுமானாலும் விட்டுக் கொடுக்கத் தயாராக இருந்தான்.  அதனால் குடும்பத்தில் முக்கியமாய் ஹஸ்தினாபுரத்தின் அரசியல் வாழ்வில் நிம்மதியும், அமைதியும் கிடைக்குமானால் அவன் விரைவில் ஒரு முடிவு எடுக்க வேண்டும்.  அதற்கு அவன் தாத்தா பீஷ்மரின் உதவியைக் கூட எதிர்பார்க்கவில்லை.  அவன் எதற்கும் தயாராகிவிட்டான்.  திருதராஷ்டிரனைப் பார்த்து, “நான் என்ன செய்யவேண்டும் அரசே?  நான் ஏற்கெனவே ஒரு முறை கூறியதையே மீண்டும் கூறுகிறேன்.  நீங்கள் கட்டளையிடுங்கள்; நாங்கள் அதை நிறைவேற்றுகிறோம்.  அரசே, உங்கள் அனைவரின் முழுச் சம்மதத்துடனேயே தாத்தா பீஷ்மர் என்னை யுவராஜாவாக்கினார்.  அப்போது நீங்கள் முழு மனதோடு சம்மதம் தெரிவித்தீர்கள்.  நானாக இதைக் கேட்கவில்லை;  நீங்கள் பெரியோர்கள் பார்த்து யுவராஜாவின் அலுவல்களைக் கவனிக்கச் சொல்லிக் கவனித்தேன்;  இப்போது அது கூடாதெனில் சொல்லுங்கள்.  இப்போது, இந்த நிமிடமே நான் யுவராஜா பதவியிலிருந்து விலகி விடுகிறேன்.  தாராளமாக துரியோதனனே யுவராஜாவாக ஆகிக் கொள்ளட்டும்.  இதன் மூலம் அவன் மனம் கொஞ்சமானும் சாந்தம் அடைந்தால் நல்லதே!  அவனும், அவன் சகோதரர்களும் சந்தோஷமாய் இருந்தாலே போதுமானது.”

திருதராஷ்டிரனுக்கு உள்ளூற மகிழ்ச்சி என்பது அவன் குரலில் தெரிந்தாலும், அவன் மிகக் கஷ்டப்பட்டு முகத்தில் வருத்தத்தை வரவழைத்துக் கொண்டு, யுதிஷ்டிரன் சொல்வது தனக்கு மிகவும் வருத்தத்தை அளிக்கும் செய்தி எனக் காட்டிக் கொண்டான்.  “இது மட்டும் போதாது யுதிஷ்டிரா! இதனால் எல்லாம் இந்த சகோதரச் சண்டை முடிவுக்கு வந்துவிடும் எனத் தோன்றவில்லை.  ஹஸ்தினாபுரத்து மக்கள் உன்னையும், உன் சகோதரர்களையும் தங்கள் உயிராக நினைக்கின்றனர்.  தர்மமே அவதாரம் செய்திருக்கிறது உன் மூலமாக என எண்ணுகின்றனர்.  நீ தர்மத்தின் தேவதை எனப்போற்றுகின்றனர். துரியோதனன் வலுக்கட்டாயமாய் உன்னிடமிருந்து யுவராஜா பதவியைப் பிடுங்கிக் கொண்டான் என்பது தெரிய வந்தால் மக்கள் புரட்சி செய்வார்கள்.  அவர்களை அடக்குவது அவ்வளவு எளிதல்ல.” திருதராஷ்டிரன் எப்படியேனும் யுதிஷ்டிரன் மூலமே இந்தப் பிரச்னைக்கு முடிவு கட்ட விரும்பினான்.

“மாட்சிமை பொருந்திய அரசே,  மனம் விட்டுச் சொல்லுங்கள்.  ஆணையிடுங்கள்.  நாங்கள் இப்போது என்ன செய்ய வேண்டும்?  என்ன செய்தால் பரதச் சக்கரவர்த்தியால்  ஸ்தாபிக்கப் பட்ட இந்த மாபெரும் சாம்ராஜ்யம் நிலைத்து நிற்கும்?  இந்த ராஜ்யத்தின் மேன்மைக்காக நான் எதுவேண்டுமானாலும் செய்வேன்; என் தம்பிகளும் அதற்கு உடன்படுவார்கள்.” என்றான்.

“அது சரி, அது சரி” திருதராஷ்டிரன் கைகளைப் பிசைந்து கொண்டான்.  அரியணையில் கை முஷ்டிகளால் ஓங்கிக் குத்தினான்.  என்ன செய்வது எனப்புரியாமல் தவித்தான். பின்னர் யுதிஷ்டிரனிடம், “குழந்தாய், நீ பதவியை விட்டு விலகினாலும் ஹஸ்தினாபுரத்தில் உன்னால் நிம்மதியாக வாழ முடியாது.  துரியோதனன் வாழ விடமாட்டான். அதுதான் என்ன செய்வதெனப் புரியாமல் தவிக்கிறேன்.”

திருதராஷ்டிரனின் தர்மசங்கடத்தைக் குறைக்க உதவினவன் போல யுதிஷ்டிரன் நகைத்தான்.  தனக்கு இதெல்லாம் ஒன்றும் புதிய விஷயமில்லை, ஏற்கெனவே எதிர்பார்த்ததுதான் என இதன் மூலம் அனைவருக்கும் தெரிவித்தான். “அரசே, நாங்கள் ஹஸ்தினாபுரத்தை விட்டே, இந்த நாட்டை விட்டே சென்று விடுகிறோம். காட்டுக்குச் சென்றுவிடுகிறோம்.” என்றான்.

“இல்லை, இல்லை, அதெல்லாம் வேண்டாம்.” திருதராஷ்டிரன் குரல் நடுங்கியது.  மீண்டும் பீஷ்மரை உதவிக்கு அழைப்பவன் போல் அவர் பக்கம் பார்த்தான்.  பின்னர் அதே நடுக்கமான குரலில், “நீங்கள் காட்டுக்கெல்லாம் போக வேண்டாம்.  வாரணாவதம் போய்ச் சில மாதங்கள் அங்கே தங்கி இருங்கள்.  அங்கே கடவுள்களுக்கெல்லாம் கடவுளான மஹாதேவருக்கு ஒரு விழா நடைபெறப் போகிறது. ஆயிரக்கணக்கான மக்கள் அந்த விழாவில் பங்கெடுக்க வருகின்றனர்.  நீங்கள் அதில் கலந்து கொண்டாற்போலவும் இருக்கும்.  அந்த விழாவுக்காக உழைத்தாற்போலவும் இருக்கும்.  சில மாதங்கள் நீங்கள் இங்கிருக்கவில்லை எனில் துரியோதனனும் மனம் அமைதியடைவான்.  அவர்களுடைய சந்தேகமும் நீங்கும். அதன் பின்னர்…..பின்னர்……. நீங்கள் ஹஸ்தினாபுரம் திரும்பலாம்.”

“பெரியப்பா,” முதல்முறையாக உறவுப் பெயர் சொல்லி அழைத்த யுதிஷ்டிரன், “எனக்குப்புரிந்து விட்டது. நாங்கள் என்ன செய்யவேண்டுமென நீங்கள் நினைக்கிறீர்களோ அதை உங்கள் உத்தரவாக எண்ணித் தலைமேல் சுமந்து அதை நிறைவேற்றுவோம். கவலைப்படாதீர்கள்.  நான் இன்றே யுவராஜா பதவியைத் துறந்துவிட்டேன்.” இதைச் சொல்கையில் யுதிஷ்டிரன் குரலில் எந்தவிதமான வருத்தமும் தெரியவில்லை.  “எங்கள் தாய் குந்தியுடனும், என் மற்ற சகோதரர்கள் நால்வருடனும், நான் நாளை மறுநாள் வாரணாவதம் கிளம்பி விடுகிறேன்.”