Sunday, July 31, 2016

அம்பாவின் ஆவேசம்! சத்யவதியின் கண்ணீர்!

மறுநாள் காலை அனுஷ்டானங்கள் முடிந்தன. ஆசாரியர் பரசுராமரும் மஹா அதர்வரும் அருகருகே அமர்ந்து அளவளாவிக் கொண்டிருந்தனர். அப்போது சுமாந்து இளவரசர் காங்கேயரையும், மஹாராணி சத்யவதியையும் அழைத்துக் கொண்டு அங்கே வந்து சேர்ந்தார். மஹாராணியின் முகத்தில் சோகம் கப்பி இருந்தாலும் ஒரு கம்பீரமும் தெரிந்தது. இருவரும் ஆசாரியர் பரசுராமரை வணங்கினார்கள். ஆசாரியர் அவர்களுக்கு ஆசிகளை அளித்துவிட்டு அங்கிருந்த இரு ஆசனங்களில் அமரச் சொன்னார். அப்போது ஷௌனகர் முதல்நாள் மாலை அங்கே வந்திருந்த காசி தேசத்து இளவரசியை அழைத்துக் கொண்டு வந்தார். அவளுடன் த்வைபாயனரின் மனைவி வாடிகா, மந்திரி குனிகர், ஹோத்ரவாஹனர் என்னும்  இளவரசி அம்பாவின் தாய்வழிப் பாட்டன் ஆகியோரும் வந்திருந்தனர். அனைவரும் அங்கே அழைத்து வரப்பட்டனர். இளவரசி அம்பா நல்ல உயரமாக ஒரு அழகிய பொற்சிலை போல் காணப்பட்டாள். அவள் இன்னமும் அடங்காக் கோபத்தில் இருந்ததாலோ என்னமோ தெரியவில்லை! தலை மயிர் பரந்து விரிந்து கிடந்தது. கண்கள் ரத்தக்களறியாகச் சிவந்து முகம் அடங்கொணாக் கோபத்தில் ஜொலித்துக் கொண்டிருந்தது.

ஆசாரியர் பரசுராமரின் அருகே அமர்ந்திருந்த இளவரசர் காங்கேயரைப் பார்த்ததுமே அம்பாவின் உடல் முழுதும் தலையோடு கால் வரையில் கோபத்தில் நடுங்கியது. அவளால் தன் உணர்வுகளைக் கட்டுக்குள் கொண்டு வர இயலவில்லை. அவள் காங்கேயரைப் பார்த்த பார்வையில் அவர் பொசுங்கிச் சாம்பலாகாதது அதிசயம் எனத் தோன்றியது. பாயும் புலி தன் இரையின் மேல் பாய இருக்கும் வேகம் அவளிடம் காணப்பட்டதோடு அல்லாமல் கட்டுக்கடங்காத கோபத்துடன் அவரைப் பார்த்துப் பற்களைக் கடித்தாள். அதே கோபம் அடங்காமல் அவள் பரசுராமரைப் பார்த்து, “பிரபுவே, அதோ உங்கள் அருகே அமர்ந்திருக்கும் அந்த மனிதன் தான் என் வாழ்க்கையைக் கெடுத்துக் குட்டிச்சுவர் ஆக்கியவன்!” என்றாள். காங்கேயரைத் தன் கைகளால் சுட்டியும் காட்டினாள். பின்னர் மேலும் தொடர்ந்து, “என் வாழ்க்கையைக் கெடுத்ததோடு அல்லாமல் என்னை வீடற்றவளாக, நாடற்றவளாகவும் ஆக்கினான். ஷால்வ மன்னனை நான் திருமணம் செய்து கொள்ள இருந்தேன். அதற்கான சந்தர்ப்பத்தையே எனக்காக உருவாக்காமல் என்னை எதுவும் கேட்காமல் என்னை நாசம் ஆக்கிவிட்டான். என் சந்தோஷத்தின் ரேகைகள் முற்றிலும் அழிந்து போயின. என் நம்பிக்கை எல்லாம் நாசமாக ஆகி விட்டது. என்னை எதற்கும் பயனற்றவளாக எவருக்கும் உபயோகமில்லாதவளாக ஆக்கி விட்டான்!”

பரசுராமர் சைகையின் மூலம் அவளை உட்காரும்படி கூறினார். பின்னர் “குழந்தாய்! உன்னை நீ தான் அமைதிப் படுத்திக் கொள்ள வேண்டும். இப்போது நாம் அனைவரும் பேசி ஒரு முடிவுக்கு வருவோம். அனைத்தையும் சரி செய்து விடலாம்!” என்றார் சாந்தமாக. அம்பாவின் சீற்றம் கொஞ்சம் தணிந்தாற்போல் காணப்பட்டது. “ஆசாரியரே, அவன் என்னை மணந்தே ஆகவேண்டும். ஆம். அவனுடைய தவறுகளை வேறு எவ்வகையிலும் சரி செய்ய முடியாது. இது தான் அவன் செய்த தவற்றுக்கான பரிகாரமும் கூட!” என்றாள். அதைச் சொல்கையிலேயே தன் நிலைமை இப்படி ஆகி விட்டதே என்னும் சுய பச்சாத்தாபத்தில் அவள் தொண்டை அடைத்துக் கொண்டது. சமாளித்துக் கொண்டு பேசினாள். கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தது. தன்னையுமறியாமல் மனம் உடைந்து பெரிதாக அழுதாள். தன் கைகளை உயர்த்தி அவளைச் சமாதானம் செய்தார் பரசுராமர். “குழந்தாய்! உன்னுடைய இந்த சோகக் கதையைப் பலமுறை நீ என்னிடம் சொல்லி விட்டாய்! காங்கேயன் தான் இதற்குத் தக்க பரிகாரம் செய்ய வேண்டும் என்று நீ சொல்வதை நான் ஏற்றுக் கொள்கிறேன். அது காங்கேயனின் பொறுப்புத் தான்!” என்றவர் காங்கேயரின் பக்கம் திரும்பி, “காங்கேயா, நீ ஏன் அம்பாவைத் திருமணம் செய்து கொள்ளக் கூடாது?” என்று கேட்டார்.

காங்கேயர் தன் ஆசாரியரைப் பார்த்துக் கைகளைக் கூப்பி வணங்கிய வண்ணம் பேச ஆரம்பித்தார். “ ஆசாரியரே! நான் சுயம்வர மண்டபத்தில் காசி தேசத்து அரசகுமாரிகள் மூவரையும் கடத்தி வந்தது உண்மை தான். க்ஷத்திரியர்களின் தர்மப்படி சுயம்வரத்தில் அரசகுமாரிகளை, கன்னிகைகளைக் கவர்ந்து வருவது பாவம் என்று சொல்லவில்லை. அது ஏற்கப்பட்டே வந்திருக்கிறது. நாங்கள் அவளை ஹஸ்தினாபுரத்தின் சக்கரவர்த்தினியாக இருக்க வேண்டினோம். ஆனால் அவள் விசித்திரவீரியனைத் திருமணம் செய்து கொள்ள மறுத்துவிட்டாள். ஷால்வன் ஒருவனே அவள் மணாளன் என்று கூறினாள். ஆகவே தக்க மரியாதைகளுடன் அங்கே அனுப்பி வைத்தோம். ஒரு குரு வம்சத்து இளவரசிக்கு நாங்கள் என்ன சீர் வரிசைகள் செய்வோமோ அதைக் கொஞ்சமும் குறைக்காமல் தகுதிக்கு ஏற்றவாறு தக்க பரிசுப் பொருட்களுடன் அனுப்பி வைத்தோம். ஆனால் ஷால்வன் அவளைத் திருமணம் செய்து கொள்ள மறுத்துவிட்டான். இது நாங்கள் சிறிதும் எதிர்பாராதது. அப்போது தான் மாட்சிமை பொருந்திய மஹாராணி, ராஜ மாதா, சத்யவதி அவர்கள்……….”

அப்போது தன் கடுமை சிறிதும் குறையாமல் குறுகிட்டாள் அம்பா. “மாட்சிமை பொருந்திய ராஜமாதா! ஹூம்!.... உண்மைதான்!...... ஏளனமாகச் சிரித்தாள் அம்பா. அவள் முகம் கடுமையான கோபத்தில் மேலும் சிவந்தது. “அவள் யாரென நான் இப்போது நன்றாக அறிவேன். அவள் ஓர் மாயக்காரி; சூனியக்காரி; என்னுடைய எல்லாக் கஷ்டங்களுக்கும் அடிப்படைக் காரணமே அவள் தான்!” என்றாள். உணர்ச்சிவசப் பட்டிருந்த அம்பா தன்னையுமறியாமல் எழுந்து நின்று தன் தலை முக்காடைச் சரி செய்து கொண்டாள். மஹாராணி சத்யவதியின் பக்கம் கையை நீட்டி அவளைச் சுட்டிக் காட்டியவண்ணம், “ இவள் மிகப் பொல்லாதவள், ஆசாரியரே! பொல்லாதவள். என்னால் மட்டும் முடிந்தால் அவள் கண்களை நோண்டி எடுத்து விடுவேன்; ஏன் எடுத்து இருப்பேன்!”

அம்பாவின் இந்த வெளிப்படையான தாக்குதலைக் கண்டு அங்கிருந்த அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். வாடிகா தன்னையுமறியாமல் தான் அமர்ந்திருந்த இடத்திலிருந்து எழுந்து மஹாராணி சத்யவதியின் அருகே வந்து அவளுக்குப் பாதுகாப்புக் கொடுப்பது போல் அமர்ந்து கொண்டாள். ஆனால் பரசுராமரோ இதற்கெல்லாம் கலங்கவே இல்லை. “நீ அவள் கண்களைத் தோண்டி எடுக்கலாம்; எப்போது தெரியுமா? நாங்கள் எல்லோரும் குருக்ஷேத்திரத்தை விட்டுச் சென்ற பிறகு!” என்ற வண்ணம் சிரித்தார். பின்னர் மீண்டும் அமர்ந்து கொள்ளும்படி அம்பாவிடம் சொன்னார். “குழந்தாய், அமைதியாக இரு!” என்றார். அம்பா தலை அசைத்துத் தன் மறுப்பைத் தெரிவித்தாள். “நான் ஏன் அமைதியாக இருக்க வேண்டும்? என் முக்கிய எதிரி, பரம வைரி இதோ இவள் தான்! இந்த மஹாராணி சத்யவதிதான்! எனக்கு விளைவிக்கப்பட்ட தீமைகளுக்கு மூலகாரணம் இவள் தான். காங்கேயர் செய்த அனைத்துக்கும் மூலகாரணம் இவளுடைய போதனைகள் தான்!” என்றாள்.

மஹாராணி சத்யவதி உண்மையாகவே அதிர்ச்சியில் உறைந்து போயிருந்தாள். அவள் வாழ்நாளில் இத்தகைய கடுஞ்சொற்களைக் கேட்க நேரிட்டதே இல்லை. அவளுக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை. “நான் யார் வழியிலும் எப்போதும் குறுக்கிட்டதில்லை. எத்தகைய தீய போதனைகளையும் யாருக்கும் சொன்னது இல்லை!” என்று தனக்குத் தானே பேசிக் கொள்வது போன்ற குரலில் சொன்னாள். ஆனால் அது அம்பாவின் காதுகளில் நன்றாகவே விழுந்தது. “நீ ஒருத்தி தான், ஆம், நீ ஒருத்தி தான் என் வழியில் நின்று என்னைப் பாழாக்கினாய்! என்னுடைய இந்த நிலைமைக்கு நீ தான் காரணம்!” என்று ஓங்கிக் குரலெடுத்துக் கத்தினாள். “ஹூம், உன்னைப் பற்றி எனக்கு எதுவும் தெரியாது என்று நினைக்கிறாயா? காங்கேயரின் இந்த நிலைமைக்கே நீ தான் காரணம். உன்னை சக்கரவர்த்தி ஷாந்தனு திருமணம் செய்து கொள்கையில் யுவராஜாவாக இருந்த காங்கேயர் திருமணமே செய்து கொள்ள மாட்டேன்; அரியணையில் ஏற மாட்டேன் என்று சபதம் ஏற்க நேர்ந்தது! யாரால்? உன்னால் தான்!  அவர் இந்த சபதத்தைக் கட்டாயமாக ஏற்க நேரிட்டது!” என்றாள்.

அனைவர் முன்னிலையிலும் தன் மேல் சாட்டப்பட்ட இந்தக் குற்றச்சாட்டைக் கேட்ட மஹாராணி சத்யவதிக்கு மனம் பொறுக்க மாட்டாமல் கண்ணீர் வந்தது. விம்மி விம்மி அழ ஆரம்பித்தாள். வாடிகா ஆறுதலாக அவள் தோள் மேல் தன் கைகளை வைத்தாள். அவளைத் தன் மேல் சாய்த்துக் கொண்டு ஆறுதல் சொன்னாள். அம்பாவோ நிறுத்தவில்லை! “இவளுடைய சூழ்ச்சியின் காரணமாக சூனியக்காரியின் வசியம் காரணமாக காங்கேயர் மேலும் அவள் வசியம் பாய்ந்து இருக்கிறது. அவர் இவளுக்கு அடிமையாக ஆகி விட்டார்.” இந்தக்குற்றச்சாட்டை மீண்டும் மீண்டும் கடுமையாகக் கோபமான குரலில் அம்பா கூறியபோது கொஞ்சம் புரியாமல் உளறுவது போல் இருந்தது. ஆனால் உடனே தன்னைத் திருத்திக் கொண்டு, “இவள் தன்னுடைய இந்த வசியத்திலிருந்து காங்கேயரை வெளியேறச் சம்மதிக்க மாட்டாள். அவரை அவருடைய சபதத்திலிருந்து உடைத்துக் கொண்டு மீண்டு வர விடமாட்டாள்!”

இப்போது காங்கேயருக்கே கோபம் வந்தது. ஆனால் தன்னைச் சமாளித்துக் கொண்டார். பின்னர், “ஆசாரியரே, காசி தேசத்து இளவரசியால் என் அன்னை மஹாராணி சத்யவதியின் மேல் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் அனைத்தும் ஆதாரமற்றவை! உண்மையானவை அல்ல! சற்றும் நியாயம் இல்லாதவை! விஷம் தோய்ந்தவை! என்னைப் பெற்ற தாயை விட அதிகப் பாசத்துடனும் அன்புடனும் மஹாராணி சத்யவதி அவர்கள் என்னைக் கவனித்துக் கொள்கிறார்கள். என் அன்னையை விடப் பாசம் அதிகம் காட்டி வருகிறார்கள். எத்தனை முறை என்னிடம் கெஞ்சி இருப்பார்கள்! என்னுடைய சபதத்தைக்கை விடும்படி மீண்டும் மீண்டும் என்னிடம் வேண்டுகிறார்கள். இது எதுவும் காசி தேசத்து அரசகுமாரிக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. காசி தேசத்து அரசகுமாரியை மணந்து சுகவாழ்க்கை வாழும்படி என்னை வேண்டிக் கொண்டே இருக்கிறார்கள்!” என்றார்.

“ஆஹா! எப்படிப்பட்டதொரு தாய்! அதை விடப் பாசம் நிறைந்த மகன்!” ஏளனமாகச் சிரித்தாள் அம்பா. “ஹூம், அவளுக்குத் தெரியாதா என்ன! நான் காங்கேயரை மணந்து கொண்டேன் எனில் எனக்கும் அவருக்கும் பிறக்கப் போகும் மகன் தான் ஹஸ்தினாபுரத்தின் பாரம்பரியமான பரத வம்சத்து அரியணைக்கு உரியவன் ஆவான். இவளுடைய அருமை மகன் விசித்திர வீரியன் ஒன்றுமில்லாதவனாக, அதிகார பலமற்றவனாக ஆகிவிடுவான்! அதற்கு இவள் ஒப்புவாளா? இவளுடைய கெட்ட எண்ணத்தால் தான் கடவுளரே இவளுக்குத் தக்க தண்டனை கொடுத்திருக்கிறார்கள். இவளுடைய மூத்த மகன் சித்திராங்கதன் கொல்லப்பட்டுவிட்டான். இதோ இந்த விசித்திர வீரியனும் விரைவில் உடல்நலமின்றித் தன் முன்னோர்களின் இருப்பிடமான பித்ருலோகம் போய்ச் சேருவான்! அது தான் இவளுக்குத் தக்க தண்டனை!”

ஆசாரியர் மீண்டும் அம்பாவை ஆசனத்தில் அமரச் சொன்னார். பின்னர் காங்கேயரைப் பார்த்துத் திரும்பினார். “காங்கேயா, சத்யவதி உன்னுடைய சபதத்தை உடைத்துவிட்டு அம்பாவைத் திருமணம் செய்து கொள்ளச் சொல்வது உண்மை எனில் நீ ஏன் அப்படிச் செய்யக் கூடாது?” என்று கேட்டார். காங்கேயர் தன் தலையைக் குனிந்து கொண்டார். ஓரிரு நிமிடங்கள் தரையைப் பார்த்த வண்ணம் அமர்ந்திருந்த அவர் பின்னர் நிமிர்ந்து ஆசாரியரைப் பார்த்தார்! “ஆசாரியரே, என்னை விட நீங்கள் வயது, அனுபவம், சக்தி அனைத்திலும் பெரியவர். என்னுடைய குரு நீங்கள் உங்களுக்குத் தெரியாததையா நான் சொல்லப் போகிறேன். ஒரு மனிதன் அதுவும் க்ஷத்திரியன் தன்னுடைய சபதத்தை உடைத்தான் எனில் அவன் உயிருடன் நடமாடும் பிணத்திற்குச் சமம் அன்றோ! அவன் ஆன்மாவே சாகடிக்கப்பட்டு விட்டதாகத் தானே அர்த்தம்! என்னுடைய இந்த வாழ்க்கை என்னும் படகைச் செலுத்தும் நங்கூரம் இந்த சபதம். என் வாழ்க்கையின் ஆதாரமே அதுதான். எத்தனை இரவுகள்! எத்தனை பகல்கள்! இந்த சபதத்தை உடைக்க எண்ணும் என் மனதை நான் நிலைப்படுத்தப் போராடி வந்திருக்கிறேன் என்பதை நீங்கள் புரிந்து கொள்வீர்கள் என நினைக்கிறேன். மனித மனம் எத்தனை பலஹீனமானது என்பதையும் அறிவீர்கள்! இயற்கையை வெல்வதும் கடினமான ஒன்றே. அத்தகைய நிலைக்கு வர நான் எவ்வளவு போராடி இருப்பேன்!  என்னை நானே உணர்ச்சிகளிலிருந்து வெல்ல நான் மிகவும் கடினமான போராட்டத்தில் ஈடுபட்டிருந்தேன். ஒரு சபதம்! என் தந்தைக்கு நான் கொடுத்திருக்கிறேன்! அது சத்தியமானது. கடவுளருக்கும், என் முன்னோர்களுக்கும் கூட உண்மையாக நான் கட்டுப்பட்டு அந்த சபதத்தை எடுத்திருக்கிறேன். இப்படி சபதம் எடுத்த நான் அதற்கு உண்மையாக இல்லாமல் சபதத்தை உடைத்தால் நான் மனிதனே அல்ல! அதை விட நான் இறந்துவிடுவேன் ஆசாரியரே! ஆம் நான் இறக்கத் தயார்!”

Saturday, July 30, 2016

பரசுராமரின் வருகை!

ஆர்யவர்த்தத்தின் உள்ளே நுழைந்து ஆக்கிரமித்தவர்களை ஒருசேர அகற்றினார் பரசுராமர். ஆனால் அவர் ஒரு பிராமண ரிஷி என்பதால் என்ன தான் ஆயுதப் பயிற்சி அளித்து வந்தாலும், ஆயுதங்களைப் பிரயோகித்து வந்தாலும் பிராமணன் எவ்விதமான சொத்துக்களுக்கும் சொந்தம் கொண்டாடக் கூடாது என்பதால் அவர் தன்னால் வெல்லப்பட்ட பகுதிகளை மீண்டும் அந்த அரசர்களுக்கே அளித்தார். அரசர்கள் இல்லாத பகுதிகளில் அவர்கள் வாரிசுகளுக்கு அளித்தார். தான் மட்டும் மேலைக் கடற்கரைக்குச் சென்று தவ வாழ்க்கையை மேற்கொண்டார். வருடம் ஒரு முறை ஆர்யவர்த்தம் வந்து செல்வார். அவர் ஆசிரமம் ஷுர்பரகா அல்லது சோபரா என்று அழைக்கப்பட்ட பகுதியில் மேலைக்கடற்கரையில் இருந்தது. அங்கிருந்து ஒவ்வொரு வருடமும் நர, நாராயணர்களின் ஆசிரமம் இருப்பதாகச் சொல்லப்பட்ட பத்ரிநாத் என்னும் இமாலயப் பகுதிக்கு தீர்த்த யாத்திரையாகச் செல்வார். அப்படியே குருக்ஷேத்திரமும் செல்வார். குருக்ஷேத்திரத்தில் தான் அவர் தந்தை ஜமதக்னி முனிவரை ஹைஹேய நாட்டு மன்னன் கார்த்தவீர்யாஜுனன் கொன்றான். அவர் ஆசிரமும் அவனால் எரிக்கப்பட்டது.  ஆகவே அந்த நினைவுகளைப் போற்றும் விதமாக அங்கே சென்று அஞ்சலி செலுத்துவார்.

ஆசாரியரான பரசுராமர் ஆர்யவர்த்தம் வரும்போதெல்லாம் இங்கிருக்கும் அவருடைய மாணாக்கர்கள் தங்கள் ஆசிரமங்களுக்கு அவரை வரவேற்பார்கள். பரசுராமரின் பெயரில் பல ஆசிரமங்கள் இருந்தன. அங்கே எல்லாம் வேதப் பயிற்சியோடு ஆயுதப் பயிற்சியும் யுத்தப் பயிற்சியும் சொல்லிக் கொடுக்கப்பட்டன. அவர்கள் அனைவருமே இப்போது பரசுராமர் ஆர்யவர்த்தத்தில் சுற்றுப் பயணம் செய்கையில் அவருடன் கலந்து கொள்வார்கள். திறந்த ரதத்திலேயே பெரும்பாலும் அவர்கள் பயணிப்பார்கள். ஆங்காங்கே அவர்கள் செல்லும் பகுதியை ஆண்டு வரும அரசர்களால் கௌரவிக்கப்படுவார்கள். சுற்று வட்டாரத்தில் உள்ள மக்கள் பரசுராமரை தரிசனம் செய்வதற்கு என்று கூட்டம் கூட்டமாக வந்து தரிசித்து அவர் ஆசிகளைப் பெற்றுச் செல்வார்கள். தம் தவத்துக்கு மட்டுமல்லாமல் வீரத்துக்கும் தைரியத்துக்கும் வலிமைக்கும் பெயர் பெற்றவராக இருந்தார் பரசுராமர். அப்படி ஒருமுறை ஆர்யவர்த்தம் வந்த போது தான் மஹா அதர்வரின் ஆசிரமத்திலும் தங்கினார் பரசுராமர். அவருடைய தாத்தா ரிகிக் என்பவர் ஜாபாலிக்கு முன்னால் மஹா அதர்வராக இருந்தார். அவரைப் பரசுராமருக்கு நன்றாகத் தெரியும். ஆகவே அங்கே தங்கி இருந்து விட்டுப் பின்னர் குருக்ஷேத்திரமும் செல்லுவார்.

இந்தச் சமயத்தில் அதே போன்றதொரு பயணத்தின் விளைவாக இங்கே வந்த பரசுராமர் இம்முறையும் மஹா அதர்வரைச் சந்திக்கவும் அங்கே உள்ளவர்களைச் சந்திக்கவும் வந்தார். அனைவரும் மலை அடிவாரத்துக்கே வந்து பரசுராமரை வரவேற்றார்கள். பரசுராமரின் ரதம் வெகு வேகமாகப் புழுதியைக் கிளப்பி விட்டுக் கொண்டு வந்ததைப் பார்த்தால் புயல் காற்று வீசுவதைப் போல் தோன்றியது. அப்படிப் புழுதி கிளம்பிய ரதத்தில் வேகமாக வந்த பரசுராமர் பார்க்கவும் மிகவும் பெரிய உடலுடன் ஆகிருதியாக இருந்தார். தன் இடையில் புலித்தோலைக் கட்டிக் கொண்டிருந்தார். அவர் வயதானவர் என்றாலும் அதனால் அவர் வலிமை குன்றிக் காணப்படவில்லை. இப்போதும் அவர் தசைகள் இறுகிக் கெட்டிப்பட்டுக் கல் போன்ற வஜ்ரதேகம் படைத்திருந்தார். அவருடைய பரந்த முகத்தில் காணப்பட்ட தாடி இழுத்துக் கட்டப்பட்டிருந்தது. தலை மயிரும் உச்சந்தலையில் தூக்கி முடியப்பட்டிருந்தது. அதைப் பார்க்கையில் கயிலை மலையின் வெண்பனி படர்ந்த சிகரத்தைப் போல் காட்சி அளித்தது. அடர்ந்த புருவங்களுக்குக் கீழே தெரிந்த விசாலமான கண்கள் அவருக்கு நகைச்சுவையும் வரும் என்று காட்டியது. கண்கள் பளிச்சென்று ஒளி வீசிப் பிரகாசித்தன.

அவர் தன் வலக்கையில் ரதத்தில் பூட்டப்பட்டிருந்த குதிரைகளின் கடிவாளத்தைப் பிடித்திருந்தார். இடக்கையில் அவருடைய ஆயுதமான கோடரி காட்சி அளித்தது. அவர் அங்கும் இங்கும் அசையும்போதெல்லாம் அந்தக் கோடரியின் மேல் சூரிய வெளிச்சம் பட்டு அதன் கூர்மையான கத்தி போன்ற வெட்டும்பாகம் தகதகவெனப் பிரகாசித்தது. ரதத்தை இழுத்துப் பிடித்து நிறுத்திய பரசுராமர் அதிலிருந்து வேகமாகக் கீழே குதித்தார். அப்போதும் அவர் தோள் மேல் கிடந்தது கோடரி. அனைவரும் அவர் கீழே இறங்குகையில் நமஸ்கரித்தனர். அதைப் பார்த்த பரசுராமர் தன் வலக்கையை உயர்த்தி அனைவரையும் தீர்க்காயுசுடன் இருக்குமாறு வாழ்த்தினார். பின்னர் மஹா அதர்வரை இறுகத் தழுவிக் கொண்டார். காங்கேயர் பரசுராமரை நமஸ்கரிக்கத் தன் மாணாக்கனைப் பார்த்துப் புன்சிரிப்புடன் அவர் முதுகில் தட்டிக் கொடுத்தார்.

பின்னர் பெரிய குரலில் சிரித்தவண்ணம், “வந்துவிட்டாயா? காங்கேயா? நிஜமாகவே வந்துவிட்டாயா?” என்ற வண்ணம் மீண்டும் பெருங்குரலில் சிரித்தார். “நாளைக் காலை அனுஷ்டானங்களை முடித்த பின்னர் என்னை வந்து சந்தித்துப் பேசு!” என்றும் கட்டளை பிறப்பித்தார். “தங்கள் உத்தரவுப்படியே ஆசாரியரே!” என்று தலை குனிந்து பணிவாகக் கூறினார் காங்கேயர். பின்னர் ஜாபாலியின் பக்கம் திரும்பினார் பரசுராமர். “ஜாபாலி ரிஷியே! உங்கள் மகள் காசி தேசத்து அரசகுமாரியுடனும் அவர்களைக் கவனித்துக் கொள்ளும் மந்திரியுடனும் விரைவில் வருகிறாள். இங்கிருந்து எவரையேனும் அனுப்பி வைத்து அவர்கள் வருவதைத் தெரிந்து கொண்டு வரும்போது வரவேற்று இங்கே அழைத்து வர ஏற்பாடு செய்யுங்கள்!” என்றார்.

“ஆசாரியர் கட்டளைப்படியே!” என்று மஹா அதர்வர் தலை வணங்கினார். பின்னர் அவர்கள் மலை மேல் ஏறுவதற்கான பகுதியை வந்தடைந்தனர். அப்போது பரசுராமர் திரும்பினார். கூட்டத்தைப் பார்த்து, “நீங்கள் அனைவரும் இனி அவரவர் இடத்துக்குச் செல்லுங்கள். உங்களுக்கெனக் குறிப்பிட்டிருக்கும் வேலையைப் பாருங்கள். மஹா அதர்வர் என்னைக் கவனித்துக் கொள்வார்.” என்று கூறி அனைவரையும் விடைபெற்றுச் செல்லுமாறு கூறினார். ஓர் அடி எடுத்து வைத்தவர் ஏதோ நினைத்தவர் போல் திடீரெனத் திரும்பி, “காங்கேயா, உன் தாய், அது தான் சத்யவதி, அவளும் வந்திருக்கிறாளா?” என்று கேட்டார். “ஆம், ஆசாரியரே!” என்றார் காங்கேயர். “அப்படி எனில், அவளையும் உன்னுடன் அழைத்து வா, காங்கேயா!” என்றவர் ஜாபாலியின் பக்கம் திரும்பினார். “ஜாபாலி, உங்கள் மகள் மிகக் கெட்டிக்காரி, சாமர்த்திய சாலியும் கூட!” என்றார். பின்னர் அதை ரசித்துத் தனக்குள் சிரித்த வண்ணம், “அவளை மணந்தவன் யாரோ? அந்த பாக்கியசாலியான பாலமுனியைக் குறித்துக் கூட அதிகம் பேசுகின்றனரே! அப்படிப் பட்டவன் யார்?” என்று வினவினார்.

த்வைபாயனர் தன் கைகளைக் குவித்த வண்ணம்  முன்னே வந்தார். “ஆசாரியரே, நான் தான் அவன். இதோ இங்கே தான் இருக்கிறேன்.” என்று அறிமுகம் செய்து கொண்டார். “ஓ, பாலமுனி, நீ பராசரரின் புதல்வனா?” என்று வினவினார் பரசுராமர். “ஆம், குருவே!” என்றார் த்வைபாயனர். “ம்ம்ம்ம், உன் மனைவி மிகக் கெட்டிக்காரி! சாமர்த்தியசாலி!” என்றவர் மீண்டும் தன் கண்களில் கேலிச்சிரிப்புத் தெரிய, “ஷைகவத்யாவின் ஆசிரமத்தில் அவளைச் சந்தித்தேன். அவள் முழுக்க முழுக்க உன்னைக் குறித்துத் தான் பேசினாள். உன்னைப் பற்றி அவள் புகழ்ந்து பேசியதைக் கேட்டதில் இருந்து உன்னைச் சந்திக்க ஆவலாய் இருந்தேன்!”

“ஆம், ஆசாரியரே, மஹா அதர்வர் ஜாபாலி ரிஷியின் புதல்விக்கு இன்னமும் என்னுடைய குறைபாடுகள் எதுவும் தெரியவரவில்லை. ஆகவே புகழ்மாலை சூட்டி வருகிறாள்.” என்ற த்வைபாயனரின் கண்களிலும் பரசுராமருக்கு இணையான கேலிச்சிரிப்புக் காணப்பட்டது. அதைப் புரிந்து கொண்ட பரசுராமர், “ஜாக்கிரதையாக இரு பாலமுனி! ஜாக்கிரதை!” என்று தன் ஒற்றை விரலை நீட்டி எச்சரிக்கும் பாவனையில் ஆட்டினார். “உன்னைத் தொழுது வழிபாடு செய்கிறேன் என்னும் சாக்கில் உன்னை இழுத்து விட்டு விடப் போகிறாள்!” என்ற வண்ணம் குறும்புடன் சிரித்தார். “ஆசாரியரே, கணவனை விமரிசிக்கும் மனைவி அந்த விமரிசனங்களால் அவனைத் திணற அடித்து மூழ்கடித்துவிடுவாள்!” என்றார் த்வைபாயனர். இந்த சாதுரியமான பதிலைக் கேட்ட பரசுராமரும், ஜாபாலியும் மனம் விட்டுச் சிரித்தனர். அவர்கள் இருவரின் சிரிப்பு மற்றவர்களையும் தொத்திக் கொண்டது. “நீ சரியாகச் சொல்கிறாய், இளைஞனே!” என்ற வண்ணம் பரசுராமர் ஜாபாலியின் தோள்களைப் பிடித்த வண்ணம் மஹா அதர்வரின் ஆசிரமத்துக்காக மலை ஏறினார்.


Friday, July 29, 2016

இருதலைக்கொள்ளியாக காங்கேயர்!

த்வைபாயனர் முகம் ஒரு சிறுவனைப் போல் மலர்ந்தது. தன் தாயின் நினைவுகளில் அவரும் பங்கு கொண்டார். அதே மாறாத புன்னகையுடன் தாயிடம், “இப்போதும் நீ அதைத் தான் செய்கிறாயா அம்மா? மூழ்குவதைப் போல் நடிக்கிறாயா? நான் வந்து காப்பாற்ற வேண்டுமென்பது தான் உன் எண்ணமா?” என்று கேட்டார். பின்னர் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து நகைத்துக் கொண்டனர். ஆனால் உடனடியாகத் தற்கால நிகழ்வுகள் அவர்களை துக்கத்தில் ஆழ்த்தி விட்டது. த்வைபாயனர் யோசனையுடன் பேசினார். “அம்மா, என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. உங்கள் வருத்தத்தை உணர்கிறேன். காங்கேயன் இல்லை எனில் க்ஷத்திரிய தர்மத்தைக் காப்போரும் இல்லை. அவருடைய வலிமையான தோள்களில் தான் அரச தர்மமும் க்ஷத்திரிய தர்மமும் இடம் பெற்றுக் காக்கப்பட்டு வருகின்றன. ம்ஹூம், அவர் இல்லை எனில் க்ஷத்திர்ய தேஜஸோடு பிரம தேஜஸும் இணைந்து பங்காற்றுவது என்பதும் கனவாகி விடும். ஆன்ம ஒளி பெறுவதும் நடைபெறாத ஒன்றாகும்.” என்றவர் தன் தாயிடம், “காங்கேயர் இங்கே எப்போது வருகிறார்?” என்று விசாரித்தார்.

“இன்னமும் மூன்று நாட்களுக்குள்ளாக இளவரசன் காங்கேயன் இங்கே வருவான். ஒரு வேளை அவனால் திரும்ப முடியவில்லை எனில் என்ன செய்வது? அதற்காகத் தக்க ஏற்பாடுகளைச் செய்து வர வேண்டியே அவன் அங்கே தங்கி இருக்கிறான். அவன் இப்போதெல்லாம் பேசுவதில்லை. மௌனமாகவும் அதே சமயம் கடுமை நிறைந்த முகத்துடனும் காணப்படுகிறான். காங்கேயன் மட்டும் வெளியேறிவிட்டான் எனில்! ஹஸ்தினாபுரம் சுக்கு நூறாகி விடும்! அடுத்து என்ன நடக்கும் என்றே சொல்ல முடியாது!” இதைக் கேட்ட த்வைபாயனர் மௌனமாக யோசிக்க சத்யவதியும் மௌனம் காத்தாள். பின்னர் ஏதோ நினைவுக்கு வந்தது போல் நிமிர்ந்து தாயைப் பார்த்தார் த்வைபாயனர். “அம்மா, நீங்கள் கவலைப் பட வேண்டாம். அனைத்தையும் சூரிய பகவானிடம் ஒப்படைத்து விடுங்கள். நீங்கள் நிம்மதியாக இருங்கள். எல்லா விஷயங்களும் அவை எப்படி நடக்க வேண்டுமே அப்படியே தான் நடக்கின்றன. நம் விருப்பம் இதில் எதுவும் இல்லை. எல்லாம் அவன் விருப்பம். அவன் செயல்!” என்றார்.

மூன்று நாட்களில் காங்கேயர் குறிப்பிட்டுச் சொல்லக் கூடிய சில மஹாரதிகளும் தன்னுடைய போருக்கான ரதத்தில் அங்கே வந்து சேர்ந்தார். அவருடன் ஓர் ரதப்படையே வந்திருந்தது. பராசர ஆசிரமத்தின் வாசலிலேயே த்வைபாயனர் அவரை வரவேற்றார். தக்க மரியாதைகள் செய்து அவரை வரவேற்றார் த்வைபாயனர். காங்கேயரும் த்வைபாயனருக்குத் தக்க மரியாதைகள் செய்தார். அவர் கண்கள் கடுமையைக் காட்டின. முகம் கல்லைப் போல் இறுகிக் கிடந்தது. உதடுகள் ஓர் தீர்மானத்தில் உறைந்து கிடந்தன. அவருக்கெனத் தயாரிக்கப்பட்ட குடிலுக்கு த்வைபாயனர் அவரை அழைத்துச் சென்றார். பின்னர் இருவருமாக சத்யவதியைச் சென்று பார்த்தார்கள். பூரண ஆயுதபாணியாக வந்திருந்த காங்கேயர் ஆயுதங்களை நீக்கிவிட்டு சத்யவதியைப் பார்க்கச் சென்றார். சத்யவதியை நமஸ்கரித்து முடிக்கும் வரையில் பேசாமல் இருந்த காங்கேயர் உடனே பேசத் தொடங்கினார்.

“பாலமுனி, அம்மா உங்களிடம் அனைத்தையும் சொல்லி இருப்பார்கள் என்று எண்ணுகிறேன். இந்தப் பிரச்னையைக் குறித்து நன்கு அறிவீர்கள் அல்லவா?”

“ஆம்,” என்றார் த்வைபாயனர். “என்ன செய்ய உத்தேசித்திருக்கிறீர்கள், இளவரசே?” என்றும் கேட்டார். காங்கேயர் தன் தொண்டையைக் கனைத்துச் செருமிக் கொண்டார். “என்னுடைய வழி தெளிவாக இருக்கிறது. நான் என்னுடைய சபதத்தை உடைத்துக் கொண்டு திருமணம் செய்து கொள்ளும் உத்தேசத்தில் இல்லை. என் குருவுக்குக் கீழ்ப்படிய வேண்டும் என்பதற்காகக் கூட நான் என் சபதத்தை உடைக்கப் போவதில்லை. என்னால் அது இயலாத காரியம்!”

“அது சரி இளவரசே! ஆனால் நீங்கள் இல்லை எனில் குரு வம்சம் என்னாவது? இந்த மாபெரும் சாம்ராஜ்யம் என்னாவது? உங்கள் உதவி இல்லாமல் இந்த சாம்ராஜ்யம் இனி எப்படி முன்னேற முடியும்?”

“பாலமுனி, நான் என் சபதத்தை உடைத்தேன் எனில்! நான் இறந்தவனை விட, பிணத்தை விட மோசமானவன் ஆவேன். என்னால் அப்படி நடக்க இயலாது! ஆனால் என் குருநாதர் நேரம் குறித்துவிட்டார். ஆணை இட்டுவிட்டார். அப்போது நீங்கள் யாராக இருந்தாலும் கீழ்ப்படியாமல் இருக்க முடியாது. கீழ்ப்படியவில்லை எனில் போரிட்டு உயிரைத் துறக்க வேண்டியது தான் ஒரே வழி!”

“காங்கேயா!.........” என்று ஆரம்பித்த சத்யவதியால் மேலே பேசமுடியாமல் தொண்டையை அடைத்துக் கொண்டது. அதைக் கண்ட காங்கேயர், “தாயே, தாயே, கலங்காதீர்கள்! என்னைக் குறித்துக் கவலைப்பட வேண்டாம்.” என்று வேண்டினார். அதற்குள்ளாகத் தன்னைச் சுதாரித்துக் கொண்ட சத்யவதி, “காங்கேயா, நீ என்ன நினைக்கிறாய்? உன் மனம் என்ன நினைக்கிறது என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. நீ ஓர் சத்யபிரதிக்ஞை எடுத்தவன். நீ உயிர் வாழ்வதும் அந்த சத்தியத்துக்கே! அதற்காகவே நீ இருக்கிறாய்! உன்னுடைய வீரதீர சாகசங்கள் நிறைந்த இந்த வாழ்க்கைக்கு நீ எடுத்த சத்தியப் பிரதிக்ஞை ஓர் கிரீடமாக அணிகலனாக விளங்குகிறது. நீ இறந்தாயெனில் கூட அது மாபெரும் விஷயமாகப் பேசப்படும். அரசகுமாரர்கள் மத்தியிலும் அரசர்கள் நடுவிலும் நீ ஓர் அணையாத கலங்கரை விளக்கமாகத் தோன்றுவாய்! அவர்கள் நினைவில் நீ என்றென்றும் வாழ்வாய்! ஏன் எனில் எடுத்துக் கொண்ட சபதத்துக்காக நீ உன் இன்னுயிரையும் தியாகம் செய்யத் தயாராக இருக்கிறாய்! ஆனால் நீயும் உன் தந்தையும் இன்று வரை கட்டிக்காத்து வரும் அரச தர்மம்? அது எங்கே போகும்? அதற்கு என்னாகும்? அந்த தர்ம சாம்ராஜ்யம் உடைந்து சுக்குச் சுக்காகிவிடுமே!”

காங்கேயர் வருத்தத்துடன் தன் தலையை ஆட்டினார். “தாயே, எடுத்துக் கொண்ட சபதத்தை நிறைவேற்றாவிட்டால் தர்மம் என்னிடம் எப்படி வாழும்? நானும் அதைக் காப்பாற்ற எங்கனம் முயல்வது? தர்மம் வாழ வேண்டுமெனில் என் சபதத்தை நான் மீறக் கூடாது!” இதைக் கேட்ட சத்யவதியின் கண்கள் கண்ணீரைப் பொழிந்தன. என்ன சொல்வது எனப் புரியாமல் அழுதாள். அதற்குள்ளாக அந்த ஆசிரமத்திலும் சுற்று வட்டாரத்திலும் செய்தி கசியத் தொடங்கியது. மேன்மை பொருந்திய பரசுராமர் ஜாபாலியின் ஆசிரமத்திற்கு வந்திருக்கிறாராம். பார்கவ கோத்திரத்தைச் சேர்ந்த பரசுராமர், கோடரியைத் தன் ஆயுதமாய்க் கொண்டவர், சாட்சாத் விஷ்ணுவின் அவதாரம் என்ப்படுபவர் தர்மக்ஷேத்திரத்தை நோக்கி வந்து கொண்டிருக்கிறாராம். அவருடைய வாழ்நாளிலேயே பரசுராமர் அனைத்துப் பதவிகளையும் ஒருசேரப் பெற்று விட்டார். அவர் தெய்விகத் தன்மையையும் அடைந்து விட்டார். அனைவராலும் மிகவும் மரியாதையுடனும் பக்தியுடனும் பார்க்கப்பட்டார். பலராலும் அவர் கடவுளாகவே வணங்கப் பட்டார். சாக்ஷாத் அந்தப் பரமசிவனே பூலோகத்துக்குவந்து விட்டார் என்னும்படி போற்றப் பட்டார்.

மிகவும் மரியாதையுடன் போற்றப் படும் ஜமதக்னி முனிவரின் மகன் பரசுராமர் தன் தந்தையை சஹஸ்ரார்ஜுனன் கொன்றதைச் சகிக்காமல் துயரில் ஆழ்ந்ததோடு அல்லாமல்.அதற்காகப் பழியும் வாங்கினார். மாஹிஷ்மதி நகரின் அரசனான சஹஸ்ரார்ஜுனன் அவன் படையெடுத்து வந்தபோது ஆரிய வர்த்தத்தையே நாசமாக்கினான். பல அரசர்களைக் கொன்று சாம்ராஜ்யங்களை அழித்தான். பல ரிஷிகளையும் முனிவர்களையும் கொன்று ஆசிரமங்களைத் தீக்கிரையாக்கினான். பெண்களை மானபங்கப் படுத்திப் பசுக்களையும் மற்றக் கால்நடைச் செல்வங்களையும் கவர்ந்து சென்றான். அந்தச் சமயம் தான் பரசுராமர் அனைத்துக்குமாகச் சேர்த்துப் பழிவாங்கவென்று வீறு கொண்டு எழுந்தார். இந்தப் படையெடுப்பை முற்றிலும் பூண்டோடு அறுத்து ஒழித்தார். சஹஸ்ரார்ஜுனனைப் பூண்டோடு ஒழித்துக் கட்டி ஆர்யவர்த்தத்தை விட்டு விரட்டி அடித்தார். அவருடைய வீர, தீர சாகசங்கள் அனைத்தும் சாமானிய மக்களால் நாட்டுப்பாடல்களாகவும், கதைகளாகவும் ஆங்காங்கே பாடப்பட்டும் சொல்லப்பட்டும் வந்தன. சஹஸ்ரார்ஜுனனைத் தன் வெறும் கைகளால் அவர் வென்றதைக் குறித்து அனைவரும் கதை கதையாகச் சொல்லுவார்கள்.. ஓர் தடுக்க இயலாத படையை உருவாக்கி சஹஸ்ரார்ஜுனனை அடியோடு ஒழித்தார். அவருடைய தலைமையின் கீழ் குருக்ஷேத்திரத்தில் போர் புரிந்து சஹஸ்ரார்ஜுனனை ஆரியர்கள் ஒன்று கூடி அழித்தொழித்தனர். அதன் பின்னரே அங்கே ஐந்து ச்யமந்தக ஏரிகள் இந்தப் படையெடுப்பின் நினைவாகத் தோற்றுவிக்கப்பட்டது. அகோரிகள் என அழைக்கப்பட்ட சைவ சமயத்தின் இணையற்ற தலைவராகவும் கருதப்பட்டார்.


Monday, July 25, 2016

ஆவேசம் அடைந்தாள் அம்பா!

“இன்னும் சிறிது மோர் குடியுங்கள் தாயே!” என்ற த்வைபாயனர் அந்தக் குடுவையில் மேலும் மோரை விட்டுத் தாயிடம் அளித்தார். மெல்ல மெல்லத் தன்னை ஆசுவாசம் செய்து கொண்டாள் சத்யவதி. “நாங்கள் என்ன நடக்கவேண்டும் என்று நினைத்தோமோ அது நடக்கவே இல்லை! மூன்று அரசகுமாரிகளில் இருவர் தான் விசித்திர வீரியனைத் திருமணம் செய்து கொண்டனர்.”

“அப்படியா? ஏன்? மூன்றாவது பெண் ஏன் மறுத்துவிட்டாள்?” த்வைபாயனர் கேட்டார்.

“அவள் மூன்றாவது பெண் இல்லை. முதல் பெண் அம்பா! அவள் விசித்திரவீரியனை மணக்க மறுத்துவிட்டாள். அவள் தன் தந்தையின் சம்மதத்துடன் சால்வதேசத்து மன்னன் சால்வனைத் திருமணம் செய்து கொள்வதாக இருந்தாளாம். அதற்குத் தன் தந்தையிடம் சம்மதமும் வாங்கி இருக்கிறாள். இந்த சுயம்வரத்தில் அவனைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று காத்திருந்திருக்கிறாள். அப்போது தான் காங்கேயன் வந்து மிகவும் முரட்டுத்தனமாக அவர்களைக் கடத்தி இங்கே கொண்டு வந்து விட்டதில் அவள் வாழ்க்கையே வீணாகி விட்டதெனச் சொல்கிறாள். “  மஹாராணி தன் கண்களைத் துடைத்துக் கொண்டு கொஞ்சம் போல் மோரைக் குடித்துக் கொண்டாள். “காங்கேயன் மேல் தவ’று சொல்ல முடியாது. எப்போதும் போல் அவன் பெருந்தன்மையுடன் தான் நடந்து கொண்டான். இப்போதும் அவன் தன் தவறை ஒத்துக் கொண்டு அம்பாவின் தனிப்பட்ட உரிமையை மதிப்பதாகச் சொன்னான். ஆகவே அவளைத் தன் சொந்த சகோதரியைப் போல் நினைத்துக் கொண்டு குரு வம்சத்து இளவரசியைப் புக்ககம் அனுப்புகையில் செய்வது போல் சிறப்பான ஏற்பாடுகளைச் செய்து அவளைப் பரிவாரங்களும், பரிசுப் பொருட்களும் புடை சூழ சால்வனிடம் அனுப்பி வைத்தான். மந்திரி குனிகரின் தலைமையில் சிறப்பான பரிசுப் பொருட்கள் அனுப்பப்பட்டன. நான் மிகவும் கேட்டுக் கொண்டதன் பேரில் அம்பாவுடன் துணைக்காக வாடிகாவும் சென்றாள்.”

“என்ன ஆயிற்று அந்த இளவரசிக்கு?” இடைமறித்தார் த்வைபாயனர்.

“கடவுளே, கடவுளே!” என்று தன் தலையில் ஓங்கி அடித்துக் கொண்டாள் மாட்சிமை பொருந்திய மஹாராணி சத்யவதி. பின்னர் தொடர்ந்து, “சால்வன் அவளை மணக்க மறுத்துவிட்டான்.”மஹாராணியின் உருவமே ஏமாற்றத்தின் மறு உருவமாகக் காட்சி அளித்தது த்வைபாயனருக்கு.
அவன் சொன்னானாம். அவன் காங்கேயரால் தோற்கடிக்கப்பட்டு விட்டான். அந்த சுயம்வரத்தில் நடந்த போரில் சால்வனை காங்கேயன் தோற்கடித்து இருக்கிறான். அதுவும் பலர் கண்களுக்கு முன்னால் நடந்திருக்கிறது. ஆகவே வென்ற ஒருவன் அனுப்பி வைக்கும் பரிசாக வரும் எதையும் தோற்றவன் ஏற்க முடியாது என்னும்போது உயிருள்ள பெண்ணான உன்னை நான் எப்படி ஏற்பேன்? என்ன இருந்தாலும் உன்னை காங்கேயர் வென்றிருக்கிறார். ஆகவே என்னால் உன்னை ஏற்க முடியாது! ஒரு க்ஷத்திரிய வீரனாக என்னால் இப்படி ஒரு அவமானத்தை சகிக்க முடியாது!” என்று சொல்லி விட்டானாம்.

“அதன் பின்னர் என்ன நடந்தது?”

“ஒவ்வொரு துரதிருஷ்டமாக அடுத்தடுத்துத் தொடர்ந்து வந்தது!” என்ற சத்யவதியின் கண்கள் மீண்டும் கண்ணீரைப் பொழிந்தன. சற்று நேரம் கழித்து மீண்டும் தொடர்ந்தாள். “அம்பா அங்கிருந்து திரும்பி ஹஸ்தினாபுரம் வந்தாள். வரும்போதே கடும் கோபத்தில் குமுறிக் கொண்டு வந்தாள். காங்கேயனைக் கண்டபடி வசை பாடினாள். நிந்தித்தாள். அவள் வாழ்க்கையையே வீணாக்கிவிட்டதைத் திரும்பத் திரும்பச் சொல்லிக் காட்டியவள், அவன் தன்னைத் திருமணம் செய்து கொண்டாக வேண்டும் என்றும் வற்புறுத்தினாள். அவன் செய்த தவறுக்கு அது தான் பரிகாரம் என்றும் கூறினாள். “ஆஹா, கடவுளே, கடவுளே!” என்றார் த்வைபாயனர். ஆனால் காங்கேயன் அசைந்து கொடுக்கவில்லை. அவள் என்னையும் சேர்த்துத் திட்டினாள். அதையும் தன்னைத் திட்டியதையும் சிறிதும் லட்சியம் செய்யாமல் தான் திருமணமே செய்து கொள்ளப் போவதில்லை என்னும் உறுதி மொழி அனைவரும் நிறைந்த சபையில் எடுத்திருப்பதைச் சுட்டிக் காட்டினான். ஆகவே விசித்திர வீரியனைத் திருமணம் செய்து கொள்ளுமாறு அவளை வேண்டினான். இல்லை எனில் வேறு தக்க மணாளன் பெயரை அவள் தெரிவித்தால் அவனோடு அவள் திருமணத்தை நடத்தித் தருவதாக உறுதி கூறினான். “ சற்றே நிறுத்திவிட்டு மூச்சு வாங்கிக் கொண்டாள் சத்யவதி.

தன் கண்களைத் துடைத்துக் கொண்டாள் சத்யவதி. பின் மேலும் தொடர்ந்து, “நானும் அவளை என்னோடு ஹஸ்தினாபுரத்திலேயே என் மகளாகத் தங்கி இருக்கும்படி வேண்டினேன். ஒரு குரு வம்சத்து ராஜகுமாரிக்கு என்னென்ன சலுகைகள், உரிமைகள் உண்டோ அனைத்தையும் அவள் அனுபவிக்கலாம் என்றும் உறுதி கூறினேன். இங்கேயே சில காலம் சௌகரியமாகத் தங்கி இருந்து பின் தனக்குப் பிடித்த மணாளனைத் திருமணம் செய்து கொள்ளலாம் என்றும் கூறினேன்.”

“அவள் அதற்கு ஒத்துக்கொள்ளவில்லையா?”

“ஓ, மகனே, மகனே, அவள் ஒரு சாதாரணப் பெண்ணாக இருந்தால் அல்லவோ ஒத்துக்கொள்வாள்! வெடிக்கும் எரிமலையாக இருந்தாள். எந்நேரம் வெடிக்குமோ என எல்லோரும் அஞ்சினோம். நெருப்பை உமிழும் வார்த்தைகளை என் மேலும் காங்கேயன் மேலும் வீசினாள்.”சற்றே நிறுத்துவிட்டுக் கொஞ்ச நேரம் மௌனமானாள் சத்யவதி. பின்னர் தொடர்ந்தாள். “அதன் பின்னர் அவள் தன்னைத் தன் தாய்வழிப் பாட்டன் இருக்குமிடம் அனுப்பி வைக்கச் சொன்னாள். ஹோத்ர வாஹனா என்னும் அவர் இமயமலைப் பகுதியில் தன் முதுமைக்காலத்தைக் கழித்து வருகிறார். வானப் பிரஸ்தத்தில் இருக்கிறார். காங்கேயன் அவளை மணந்து கொள்ளவேண்டும் அல்லது அவன் கொல்லப்படவேண்டும் என்பதே அவள் முடிவு என்பதையும் தெரியப்படுத்தினாள்.”

“ஆஹா, எப்படிப் பட்ட பெண்! அது சரி, தாயே, அவள் கோரிக்கைக்கும் விருப்பத்துக்கும் நீங்கள் சம்மதித்தீர்களா?”

ஒரு நீண்ட பெருமூச்சு விட்ட சத்யவதி, “வேறு வழியில்லையே மகனே!” என்று ஆற்றாமையுடன் கூறினாள்.

“ம்ம்ம்ம், குனிகர் மற்றும் வாடிகா இருவரும் அவளுடன் தான் சென்றிருக்கின்றனரா?” என்று கேட்டார் த்வைபாயனர். “ஆம், மகனே!” என்றாள் தாய். “கடைசியாக வாடிகாவிடமிருந்து கிடைத்த செய்திப்படி அவர்கள் ரிஷி ஷைகவத்யரின் ஆசிரமத்தில் தங்கி இருப்பதாகவும் ஹோத்ர வாஹனர் என்னும் அம்பாவின் தாய்வழிப் பாட்டனாரும் அங்கே தான் இருப்பதாகவும் வந்தது. அவள் முடிவை மாற்றிக்கொள்ள அவளிடம் பேசிக் கடும் முயற்சிகள் செய்வதாகவும் செய்தி வந்தது.”

“வாடிகா எப்போது திரும்பி வருவாள்?”

“விரைவில் திரும்பி இருக்க வேண்டும். ஆனால் அதற்குள்ளாக சூழ்நிலையே முற்றிலும் மாறிவிட்டது மகனே! மிகவும் மோசமாக ஆகி விட்டது.” என்ற வண்ணம் அவள் கண்களிலிருந்து அருவியாகக் கொட்டிய கண்ணீரைத் துடைத்துக் கொண்டாள் சத்யவதி. “சென்ற வாரம், அக்ருதவர்னா, மஹாரிஷியான பரசுராமரின் அத்யந்த சீடர் ஹஸ்தினாபுரத்துக்கு வந்தார். பரசுராமரிடமிருந்து செய்தியைக் கொண்டு வந்திருப்பதாகவும் சொன்னார். அவர் அந்த ஆசிரமத்துக்கு வந்திருக்கிறார். அம்பா தன் கதையை அவரிடம் சொல்லி அவர் இதில் தலையிட்டுச் சரியான முடிவு வாங்கித் தர வேண்டும் என்று கூறி இருக்கிறாள். ஏனெனில் காங்கேயனின் ஆசாரியர் பரசுராமர் அல்லவா? குரு சொன்னால் அவர் ஆக்ஞையை காங்கேயன் மீற மாட்டான் என்று எண்ணம்.” என்றாள்.

“ஆசாரியரின் செய்தி தான் என்ன?”

“ஆசாரியரின் செய்தி! நான் அவருடைய வார்த்தைகளை அப்படியே சற்றும் பிசகாமல் சொல்கிறேன் க்ருஷ்ணா! “காங்கேயா, நான் மஹா அதர்வர் ஜாபாலியின் ஆசிரமத்திற்கு அமாவாசை கழிந்த பின்னர் இரண்டு நாட்கள் சென்றதும் வந்து சேருகிறேன். நீ என்னை அங்கே வந்து பார்! உன்னால் வாழ்க்கையையே இழந்த அம்பாவைத் திருமணம் செய்து  கொள்ளத் தயாராக இரு! அல்லது என்னுடன் போருக்கு வா!” இது தான் ஆசாரியரின் செய்தி, க்ருஷ்ணா!” என்றாள் சத்யவதி கலக்கத்துடன். மீண்டும் மனம் உடைந்து அழ ஆரம்பித்தாள் அவள்.

“அம்மா, மாட்சிமை பொருந்திய இளவரசர் இந்தச் செய்தியின் முழு தாத்பரியத்தையும் புரிந்து கொண்டுவிட்டாரா?” த்வைபாயனர் கேட்டார். அவர் குரலில் பதட்டம் காணப்பட்டது. “மகனே, செய்தியில் உள்ள முக்கியத்துவம் தான் நன்றாகத் தெளிவாகத் தெரிகிறதே! காங்கேயன் தான் திருமணம் செய்து கொள்ளப் போவதில்லை என்று செய்த சபதத்தை உடைத்தாகவேண்டும். அல்லது தன் குருவோடு போரிட்டு உயிர் துறக்க வேண்டும். இது தான் நடக்கவேண்டும் என்று அம்பாவின் விருப்பம். கிருஷ்ணா, கிருஷ்ணா, இரண்டில் எது நடந்தாலும் ஹஸ்தினாபுரத்துக்கு நன்மை பயக்காது. ஹஸ்தினாபுரம் சபிக்கப்பட்ட நகராக மாறிவிடும்!” என்று புலம்பினாள் சத்யவதி. மீண்டும் கண்ணீர் சொரிந்தவளால் மேற்கொண்டு பேச முடியவில்லை. திக்கித் திணறிய வண்ணம் தன் தலையில் நெற்றியில் என்று மாறி மாறி அடித்துக் கொண்டு அழுதாள்.

“ம்ம்ம், இதற்கு மேலும் நீங்கள் வேறெதுவும் பேசவேண்டிய அவசியமே இல்லை தாயே! எனக்கு எல்லாம் நன்றாகத் தெளிவாகத் தெரிகிறது. ஆசாரியருடன் போரிட்டு காங்கேயர் ஒருவேளை கொல்லப்பட்டால் குரு வம்சத்துத் தலைவர்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் இரு பிரிவாகப் பிரிந்து நின்று போரிட்டுக் கொள்வார்கள். ஒரு சாரார் காங்கேயர் பக்கமும் இன்னொரு சாரார் விசித்திரவீரியனுக்காகவும் குரல் கொடுப்பார்கள். காங்கேயர் பக்கமே அதிகமான ஆட்கள் இருப்பார்கள் அவர்களில் எவரும் விசித்திர வீரியனை மன்னனாக ஏற்க மாட்டார்கள். விசித்திர வீரியனோ உடல் அளவில் மட்டுமில்லாமல் மன அளவிலும் பலஹீனனாக இருக்கிறான். சஞ்சல புத்தி கொண்டவன். எவரையும் எளிதில் நம்ப மாட்டான். எவர் சொல்வதையும் கேட்கவும் மாட்டான். அவனால் தன்னந்தனியாக இத்தனை களேபரங்களையும் அடக்கி எவரையும் தன் வயப்படுத்த முடியாது! அவ்வளவு வலிமை அவனிடம் இல்லை!” என்றார் த்வைபாயனர்.

“மகனே, என் எதிர்காலமே இருட்டாகத் தெரிகிறது! நம்பிக்கையின் கீற்றொளி கூடக் கண்களில் படவில்லை! தர்மத்திற்கென நாம் எழுப்பும் அழகிய மாளிகை இடிந்து விழுந்து சுக்கு நூறாகிவிடும் போல் உள்ளது. அவ்வளவில் தர்மமே அழிந்து விடும்!” என்ற வண்ணம் தன் கண்களைத் துடைத்துக் கொண்டு எங்கே சூனியத்தைப் பார்த்தவண்ணம் இருந்தாள் சத்யவதி!

பின்னர் மேலும் தொடர்ந்து, “கிருஷ்ணா! நான் ஏன் அரசியானேன்? ஒரு மீனவப் பெண்ணாகக் கல்பியிலேயே இருந்திருக்க மாட்டேனா? நான் இப்போதெல்லாம் இதைத் தான் அடிக்கடி நினைத்துக் கொள்கிறேன். நான் அங்கேயே இருந்து கொண்டு உன்னை வளர்த்துக் கொண்டு வருவதில் மட்டுமே கவனம் செலுத்தி இருக்க வேண்டும். யமுனைத் தாயை வணங்கி வாழ்த்திக் கொண்டு எத்தனை சந்தோஷமாக இருந்தோம் அங்கே நாம்! அந்த நாட்களில் இருந்திருக்க வேண்டும்.”

த்வைபாயனருக்குத் தன் தாய் கடந்து சென்ற சந்தோஷமான நாட்களை நினைத்துக் கலங்குவது புரிந்தது. அவளையே பார்த்த வண்ணம் அமர்ந்திருந்தார். அவள் முகத்தில் ஓர் புன்னகை அலங்கரித்தது. அந்தக் கனவு காணும் கண்களை மாற்றாமலேயே அவள் மேலும் பேசினாள்;”கிருஷ்ணா உனக்கு நினைவில் இருக்கிறதா? நான் உனக்கு யமுனையில் நீந்துவதற்குக் கற்றுக் கொடுத்தேனே! நீ மிகவும் பயப்படுவாய் மகனே! அந்த பயத்தில் நீயாகவே நீருக்குள் சென்று நீச்சலடிக்க மிகவும் தயங்குவாய்! ஆகவே நான் தந்திரங்கள் பலவும் செய்வேன். நான் நீருக்குள் மூழ்கி விட்டாற்போல் நடிப்பேன்; என்னைக் காப்பாற்ற வேண்டும் என்பதற்காக நீ உன் பயத்தை எல்லாம் உதறிவிட்டு நீருள் மூழ்கி நீந்திக் கொண்டு வந்து என்னைக் கண்டு பிடிப்பாய்!” அவள் முகம் மேலும் புன்னகையில் விகசித்தது.

Saturday, July 23, 2016

மஹாராணியின் கலக்கம்!

ஆனால் இப்போது விசித்திர வீரியன் அப்படி இல்லை. அவன் இயல்பாக பிறந்ததில் இருந்தே பலஹீனமாகவே இருந்தான். அவன் ஆயுதப் பயிற்சி எல்லாம் மேற்கொள்ளவும் இல்லை. அதோடு ஒரு நிலையான எண்ணமும் அவனிடம் காணப்படவில்லை. நிமிஷத்துக்கு நிமிஷம் மாறும் சுபாவம் கொண்டவனாகவும் இருந்தான். மனிதர்களை எப்படிக் கையாள்வது என்பதில் அவனுக்குச் சிரமங்கள் இருந்தது. இதனால் அவன் தாய்வழிப் பரம்பரை குறித்து அனைவரும் அடிக்கடி பேசினார்கள். அவன் தாய்வழியைக் கொண்டு பிறந்திருப்பதாக நினைத்தனர். அரசகுமாரனுக்கு இருக்க வேண்டிய லக்ஷணங்கள் அவனிடம் இல்லை என்று ரகசியமாகப் பேசிக் கொண்டனர். ஆகவே இது வெளியே பரவப் பரவ மற்ற நாடுகளில் இருந்து எந்த அரசனும் தன் பெண்ணையோ, சகோதரியையோ அவனுக்கு மணமுடிக்க விரும்பவில்லை. இதெல்லாம் மஹாராணி சத்யவதியின் மனதைப் புண்படுத்தியது. அவள் வேதனையில் ஆழ்ந்தாள். தன் மகனுக்குத் திருமணம் ஆகவில்லை எனில் குரு வம்சம் வாரிசின்றி முடிவடைந்து விடுமே எனக் கவலைப் பட்டாள். ஆனால் இதற்கெல்லாம் இளவரசர் காங்கேயர் ஒரு முடிவு கட்ட முனைந்தார்.

காசி தேசத்து அரசன் தன் மூன்று பெண்களுக்கும் ஒரே நேரத்தி சுயம்வரம் ஏற்பாடு செய்திருந்தான். அம்பா, அம்பிகை, அம்பாலிகை ஆகிய அவர்கள் மூவரும் தங்களுக்கு இஷ்டப்பட்ட கணவனைத் தேர்ந்தெடுக்கும் உரிமையைப் பெற்றிருந்தனர். இதில் அம்பா மட்டும் சால்ய தேசத்து மன்னனைத் தன் மணாளனாக ஏற்க இஷ்டப்பட்டுத் தன் தந்தையிடமும் அது குறித்துத் தெரிவித்திருந்தாள். ஆனால் காங்கேயர் வலிமை வாய்ந்த ஓர் படையுடன் காசி தேசத்துக்குச் சென்று சுயம்வர மண்டபத்துக்குள் புகுந்து மூன்று பெண்களையும் தூக்கி வந்தார். இது ஓர் அசாதாரணமான நிகழ்வாக இருந்தது. காசி தேசத்து அரசன் எதிர்த்துப் போர் புரிந்தாலும் அவனை வெல்ல அதிக நேரம் பிடிக்கவில்லை காங்கேயருக்கு. மற்ற அரசர்கள் எதிர்த்தவர்களையும் புறம் காட்ட வைத்தார்.  இது குருவம்சத்தினருக்கு ஓர் மாபெரும் வெற்றி என்றாலும் சத்யவதிக்கு தர்மசங்கடமாகவே இருந்தது. ஏனெனில் இத்தனை வருடங்களாகக் குரு வம்சத்தினரின் புகழ், கௌரவம் எல்லாம் அவளாலும் மஹாராஜா ஷாந்தனுவாலும் கட்டிக் காப்பாற்றப் பட்டு வந்ததற்கு இப்போது இடையூறு நேரிட்டுவிட்டதாகவும் மாபெரும் களங்கம் ஏற்பட்டு விட்டதாகவும் உள்ளூர அஞ்சினாள். மனம் பதைத்தாள்.

அந்தச் சமயம் தர்மக்ஷேத்திரம் வந்திருந்த வாடிகா இந்தச் செய்தி கிடைத்ததும் உடனடியாக ஹஸ்தினாபுரத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டாள். அங்கே விசித்திரவீரியனுக்குத் திருமண ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. திருமணமும் நிறைவேறியது.  த்வைபாயனரால் செல்ல முடியவில்லை. அவருக்கு இங்கே ஸ்ரோத்திர சத்ரா அதை விட மிக முக்கியம். ஆகவே வாடிகா மட்டும் சென்றிருந்தாள். திருமணமும் நடைபெற்றது. த்வைபாயனர் இங்கே தன் வேலைகளைக் கவனித்துக் கொண்டிருந்த சமயத்தில் ஒரு நாள் அனைத்து ஆசாரியர்களும் ஒரு சேர அமர்ந்த வண்ணம் வேதங்களைக் குறித்த விவாதங்களையும், ஆலோசனைகளையும் செய்து கொண்டிருந்தனர். மந்திர கோஷம் விண்ணைப் பிளந்தது, அதை முறியடிக்கும் வண்ணம் வேகமாய் வந்த ரதம் ஒன்றின் சக்கரம் கிரீச்சிட்டுக் கொண்டு நின்றது அனைவர் காதுகளிலும் விழுந்தது. குதிரைகளின் குளம்படிச் சப்தமும், அவை கனைக்கும் சப்தமும் கேட்டன. மந்திர கோஷம் அப்படியே நின்றது. அனைவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். ஏதோ அசாதாரணமான நிகழ்வு நடந்திருக்கிறது.

தொடர்ந்து ரதங்கள் வரும் சப்தமும் கேட்டது. அனைவரும் உன்னிப்பாகக் கவனிக்கையிலேயே முதலில் வந்து நின்ற ரதத்திலிருந்து மந்திரி கௌண்டின்யர் என்பவர் இறங்கி த்வைபாயனர் இருக்கும் இடத்தைக் கேட்டுக் கொண்டு வந்தார். வந்தவர் த்வைபாயனரிடம் மாட்சிமை பொருந்திய மஹாராணி வந்திருப்பதைத் தெரிவித்தார். த்வைபாயனருக்குத் திக்கென்றது. எனினும் தன்னைச் சமாளித்துக் கொண்டு வேகமாக வெளியே நின்று கொண்டிருக்கும் மஹாராணியை வரவேற்கச் சென்றார். மற்றவர்களும் அவரைப் பின் தொடர்ந்தனர். முதலில் வந்த ரதத்துக்குப் பின்னர் ஓர் ரதத்தில் சிலர் அமர்ந்திருக்க மூன்றாவதாக மஹாராணியின் ரதம் நின்றிருந்தது. சுற்றிலும் திரைச்சீலைகளால் மூடப்பட்டிருந்த அந்த ரதத்தின் சீலைகளை ஊழியர்கள் விலக்க முதலில் தாவி இறங்கினாள். பின்னர் அவள் கை கொடுத்து மஹாராணியை இறக்கி விட்டாள். த்வைபாயனரின் மனம் கலங்கியது. ஏதோ அவசரமான, அவசியமான விஷயம் இருப்பதால் தான் பிரச்னை ஏற்பட்டிருப்பதால் தான் தானே கிளம்பி வந்திருக்கிறாள் சத்யவதி! இல்லை எனில் வந்திருக்க மாட்டாள். இப்படி எல்லாம் எவருக்கும் சொல்லாமல் வருபவள் அல்ல அவள். த்வைபாயனர் தாயை நமஸ்கரிக்கத் தன் அருமை மகனின் முதுகில் தட்டிக் கொடுத்தாள் சத்யவதி!

சத்யவதி கணவன் இருக்கையில் ஒரு அழகோடு இருந்தாள் எனில் இப்போது கணவன் இறந்த பின்னரும் இந்தச் சங்கடமான சூழ்நிலையிலும் சற்றும் அழகு குறையாமலேயே இருந்தாள். ஆனால் இப்போது அவள் பார்க்கக் கவர்ச்சியாக மட்டும் இல்லை. கௌரவமான ஒரு அரசகுல மாதாவாகக் காட்சி அளித்தாள். பார்ப்பவர் அவளைக் கை எடுத்துக் கும்பிடும் வண்ணம் மரியாதைக்குரியவளாக இருந்தாள். மஹாராணிக்குரிய கிரீடம் வைத்துக் கொண்டிருந்தபோது இருந்ததை விட இப்போது அவள் தூக்கிக் கட்டி இருக்கும் அவள் கூந்தல் இயற்கையான கிரீடமாக அவளுக்கு அணி செய்தது. இப்போதும் அவளைப் பார்க்கிறவர்கள் பார்க்கும் கண்களை எடுக்கத் தயங்கினார்கள் தான்! ஆனால் அவர்கள் மனதில் மரியாதையே நிரம்பி இருக்கும். ஆபரணங்களைப் பூண்டு இருந்த கோலத்தை விட இப்போது ஆபரணங்கள் பூணாமலேயே அவள் இயற்கையான அழகில் ஜொலித்தாள். ஒரு மன முதிர்ச்சி வாய்ந்த மரியாதையுடன் அனைவரும் வணங்கக் கூடிய பெண்மணியாகவே காட்சி அளித்தாள். துயரம் கூட அவளுக்கு அழகு கொடுத்தது.

த்வைபாயனர் அவளைத் தம் குடிசைக்கு அழைத்துச் சென்றார். மற்ற ஆசாரியர்கள் அனைவரும் அவளுக்கு ஆசிகளை வழங்கி விட்டு அவரவர் இடத்துக்குச் சென்றனர். பைலரிடம் தொடர்ந்து தன் வேலையையும் சேர்த்துக் கவனிக்கச் சொல்லிவிட்டுத் தாயைத் தன்குடிலுக்கு அழைத்துச் சென்றார் த்வைபாயனர். ஒரு மாணவனை அழைத்து வாஜ்பேய யக்ஞத்தின் போது மஹாராணியும் மஹாராஜாவும் தங்கி இருந்த குடிலைச் சுத்தம் செய்து சத்யவதி தங்குவதற்கு ஏதுவாக இருக்கும்படி செய்யச் சொன்னார். பின்னர் அவளை உட்காரச் செய்து ஓர் மண் குடுவையில் குடிக்க மோரும் கொடுத்தார். சற்று ஆசுவாசம் செய்து கொண்ட சத்யவதி தன்னுடன் வந்த ஊழியர்களை அப்புறம் போகச் சொல்லி சைகை செய்தாள். தாவியைத் தவிர மற்றவர் வெளியேறினார்கள். த்வைபாயனர் காட்டிய ஆசனத்தில் அவள் அமர்ந்ததும் த்வைபாயனர் அவளைப் பார்த்து, “தாயே, எங்கே என் மனைவியும் ஜாபாலியின் மகளுமான வாடிகா? உங்களுடன் வரவில்லையா?” என்று கேட்டார்.

அதற்கு சத்யவதி அவளை அம்பாவுடன் அனுப்பி இருப்பதாகச் சொன்னாள். இதைச் சொல்லும்போதே மனம் உடைந்து பெரிதாக அழ ஆரம்பித்தாள் சத்யவதி. உதடுகள் நடுங்க, “க்ருஷ்ணா, துரதிர்ஷ்டம் ஓர் பெரிய இடியைப் போல் எங்கள் குடும்பத்தில் விழுந்து விட்டது! அதிலிருந்து மீளத் தெரியாமல் தவிக்கிறோம்.” என்றாள்.

“என்ன ஆயிற்று அம்மா? இடி விழுந்ததா? என்ன சொல்கிறீர்கள்?”

“க்ருஷ்ணா, அந்த இடி என் மேல் மட்டும் விழவில்லை. காங்கேயன் மேல், குரு வம்சத்தின் மேல், எங்கள் குடும்பத்தின் மேல்! ஏன் நாங்கள் கடைப்பிடிக்கும் தர்மத்தின் மேலும் விழுந்து விட்டது!”சொல்லும்போதே அவளால் அழுகையைக் கட்டுப்படுத்த முடியவில்லை.

“என்ன ஆயிற்று? நீங்கள் அனைவரும் விசித்திர வீரியனுக்குக் காசி தேசத்து அரசகுமாரிகளோடு மணம் முடிந்த பின்னர் சந்தோஷமாக இருப்பதாகவன்றோ நினைத்து வந்தேன்!”

“இல்லை மகனே! இந்தக் கல்யாணம், ஆம், கல்யாண விஷயமே ஒரு கோரமான, கொடூரமான விவகாரமாகப் போய் முடிந்து விட்டது!” என்று சொன்ன மஹாராணி தன் உடல் குலுங்க அழ ஆரம்பித்தாள்.

Friday, July 22, 2016

ஹஸ்தினாபுரத்தில் குழப்பம்!

த்வைபாயனரின் அறிவு, ஞானம், அவரின் மலர்ந்த முகம் ஆகியவற்றால் கவரப்பட்டப் பல சிறுவர்கள் அவரிடம் வேதம் கற்கவென்று வந்து சேர்ந்திருந்தனர். ஆகவே அவர்களைக் கட்டுப்பாடான வாழ்க்கையும் தவம் செய்து தங்களை முன்னேற்றிக் கொள்ளவும் த்வைபாயனர் உழைக்க வேண்டி இருந்தது. ஆசிரமத்தில் அவருடைய பொறுப்புகள் அதிகம் ஆயின. மெல்ல மெல்ல தர்மக்ஷேத்திரம் தன் தந்தை எதிர்பார்த்தாற்போன்றதொரு தர்ம சாம்ராஜ்யத்தைப் பயில்விக்கும் இடமாக மாறி வருவது குறித்து த்வைபாயனர் சந்தோஷம் அடைந்தார். காலையில் விடிவெள்ளி தோன்றும்போதே த்வைபாயனர் அதர்வரின் ஆசிரமத்துக்குச் சென்று அதர்வ வேதத்தைப் படித்துக் கொண்டு வருவார். வரும் வழியிலேயே உடல்நலமின்றித் தன்னைக் காண வந்திருக்கும் மக்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்துவிட்டுக் குழந்தைகளுக்கு உணவும் அளிப்பார். பின்னர் மதிய உணவு முடிந்ததும் மற்ற ஆசாரியர்களுடன் வேதத்தின் உட்பொருள் குறித்தும் அதைத் தொகுக்கும் முறை குறித்தும் ஆலோசனைகள் கூறுவார்.

இமயத்தில் மட்டுமே கிடைக்கும் அதிசய மூலிகையான சோமன் என்னும் ராஜ மூலிகையை வைத்து சோம யாகங்கள் அடிக்கடி செய்யப்படும். ஆசிரமத்தின் பெண்களோ பசுக்களைப் பராமரிப்பதும் பால் கறப்பதும் குழந்தைகளைப் பாத்துக் கொள்ளுவதுமாகத் தங்கள் வேலைகளில் ஈடுபடுவதோடு கணவன்மார்களுக்கு உதவிகளும் புரிந்தனர். அனைவரும் தங்கள் கணவன்மாரிடம் மாறாத விசுவாசத்துடன் வாழ்ந்து வந்தனர். எட்டு வயதாகும் குழந்தைகளுக்கு அவர்கள் ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் அவரவர் தகப்பன்மாரின் விருப்பத்தோடு உபநயனம் செய்வித்து பிரமசரிய விரதத்தில் ஈடுபடுத்தினர். அந்தக் குழந்தைகள் அதன் பின்னர் வேதத்தை முழு நேரமும் கற்க ஆரம்பிப்பார்கள். ஏற்கெனவே இப்படிக் கற்றுப் பிரமசரிய விரதத்தை முடித்த இளைஞர்கள் தனியாக ஆசிரமம் அமைத்துக் கொள்ளச் சொல்லி அனுமதி கொடுக்கப்படும். அவர்களும் தங்களுக்குப் பிடித்த இடங்களுக்குச் சென்று ஆசிரமங்களை அமைத்து வேத அப்பியாசங்களைச் சொல்லிக் கொடுப்பதோடு தவ வாழ்க்கையில் ஈடுபடுவதின் பெருமையைக் குறித்தும் சொல்லிக் கொடுப்பார்கள். ஸ்ரோத்திரியர்களின் தவ வாழ்க்கையே அனைத்து மக்களின் நலனுக்காகவே தான் என்பதையும் எடுத்து உரைப்பார்கள்.

இங்கே ஆசிரமம் இப்படி நடைபெற்றுவருகையில் ஹஸ்தினாபுரத்தில் விரும்பத் தகாத பல சம்பவங்கள் அடுத்தடுத்து நிகழ்ந்தன. வாஜ்பேய ஹோமம் முடிந்த பின்னர் ஷாந்தனு மஹாராஜா ஒன்றரை வருடங்களே உயிருடன் இருந்தார். அதன் பின்னர் இவ்வுலகை நீத்து முன்னோர்களுடைய பித்ரு லோகத்துக்குச் சென்று விட்டார். சத்யவதியின் நிலைமையைச் சொல்லி முடியாது. எனினும் இளவரசர் காங்கேயர் தான் கொடுத்த வாக்கை நிறைவேற்றினார். ஷாந்தனுவுக்கான துக்கம் அனுஷ்டிப்பது எல்லாம் முடிவடைந்ததும் ஓர் நல்ல நாளில் சித்திராங்கதனுக்குப் பட்டம் சூட்டி ஹஸ்தினாபுரத்தின் அரியணையில் அமர்த்தினார். ஆனால் வருந்தத்தக்க விதத்தில் சித்திராங்கதன் ஓர் எல்லைப் போரில் உயிர் நீத்தான். சத்யவதி மனம் உடைந்து போனாள். அவளுக்கு இது மரண அடியாக விழுந்து விட்டது. எனினும் மக்கள் இப்போது சத்யவதியை மிகவும் மதிப்புடன் நடத்தினார்கள். மதிப்புக்குரிய தாய் என்றே அழைக்கப்பட்டாள். ராஜமாதா என்னும் பெயரிலும் அழைத்தனர். சித்திராங்கதனின் இழப்பிலிருந்து மீண்டு வரச் சில காலம் ஆயிற்று சத்யவதிக்கு. ஆகவே த்வைபாயனர் ஷாந்தனு இறந்ததில் இருந்தே அடிக்கடி ஹஸ்தினாபுரம் சென்று தாயைப் பார்த்து வருவார். ஆனால் ஒவ்வொரு முறை அவர் அங்கே சென்று வரும்போதும் ஆசிரமத்தின் தன் வேலைகளை ஆரம்பிக்கும் முன்னர் தக்க பிராயச்சித்தம், பரிகாரங்கள் செய்து கொள்ள வேண்டி இருந்தது. இல்லை எனில் ஷ்ரௌத்த சத்ராவில் திரும்பக் கலந்து கொண்டு பணியாற்ற முடியாது. இது அவருக்குக் கொஞ்சம் சிரமமாகவே இருந்ததால் அதன் பின்னர் வாடிகாவை ஹஸ்தினாபுரத்துக்கு அனுப்ப ஆரம்பித்தார்.

சித்திராங்கதனின் மரணத்திற்குப் பிறகு அவன் தம்பி விசித்திர வீரியனுக்குப் பட்டம் சூட்டப்பட்டது. அவன் பிறவியிலேயே நோய்வாய்ப்பட்டவன். அவ்வளவு வலிமை உள்ளவன் அல்ல. ஆகவே குருவம்சத் தலைவர்கள் எவருக்கும் இதில் ஆர்வம் இல்லை. அனைவரும் வேறு வழியின்றியே விசித்திர வீரியனைத் தங்கள் அரசனாக ஏற்றனர். ஆனால் ஹஸ்தினாபுரம் செய்த அதிர்ஷ்டம் காங்கேயர் வலுவுடனும் வலிமையுடனும் இருந்தது தான். ஆகவே அவர் குரு வம்சத்து சாம்ராஜ்யத்தின் நிர்வாகத்தைத் தானாகவே முன்வந்து ஏற்றுக் கொண்டதுடன் அதை விஸ்தரிக்கவும் செய்தார். இப்படியான கடுமையான நேரங்களில் எல்லாம் வாடிகா ஹஸ்தினாபுரத்தில் தான் இருந்தாள். அவளுக்கும் ஓர் ஆண் குழந்தை பிறந்து சுகர் என்னும் பெயரிடப்பட்டு வளர்ந்து வந்தது. அந்தக் குழந்தையைத் தன் அத்தை உர்வியிடம் விட்டு விட்டுச் செல்வாள் வாடிகா. இரு வாரங்களுக்கு ஒரு முறை ஆசிரமத்துக்கு வந்து த்வைபாயனரிடம் ஹஸ்தினாபுரத்தின் நிலைமையை விவரிப்பாள். சத்யவதி சொல்லும் செய்திகளை வந்து சொல்லுவாள். இந்த நேரங்களில் எல்லாம் அளவு கடந்த துன்பத்தை அனுபவித்தாள் சத்யவதி. அவளுக்கு இது வேதனை நிறைந்த நாட்களாக இருந்தது. கண்ணுக்குத் தெரியாததோர் சக்தி தன்னையும் தன் பிள்ளையையும் ஹஸ்தினாபுரத்தையும் அதோடு சேர்த்துக் குரு வம்சத்தையும் இழுத்துச் சென்று மூழ்கடித்து விடப்போகிறது என்னும் அச்சத்தில் இருந்தாள். அந்த சக்தியிடமிருந்து தன்னை விடுவிப்பவர் யார்?

சத்யவதியின் அச்சம் பொய்யாகவில்லை. அதில் உண்மை இருந்தது. ஏனெனில் விசித்திர வீரியனின் உடல்நிலை மோசமாகிக் கொண்டு தான் இருந்தது. அவனுக்கு ஏதேனும் நேர்ந்து விட்டால்? பின்னர் குரு வம்சத்தில் அடுத்துப் பட்டம் ஏற எவரும் இல்லை! அரச பரம்பரையே வாரிசின்றித் தவிக்கும். பரதனால் நிர்மாணிக்கப்பட்ட இந்த மாபெரும் வம்சம் சந்ததியின்றி ஒழிந்து அழிந்து போய்விடும். என்ன செய்யலாம்? இதற்குள்ளாக ஹஸ்தினாபுரத்திலும் மற்றும் மற்ற அரசர்கள், தலைவர்கள் எல்லோருக்கும் பாலமுனியாகிய த்வைபாயனர் சத்யவதி பெற்றெடுத்த பிள்ளை தான் என்னும் செய்தி பரவி இருந்தது. அனைவரும் அவர்களுக்குள்ளாக இதைப் பேசினார்களே தவிர எவருக்கும் சத்யவதியிடம் இருந்த மதிப்போ, பாலமுனி த்வைபாயனரிடம் இருந்த மதிப்போ சற்றும் குறையவில்லை. முன்போலே அவர்களை மிகவும் மதித்தார்கள். இதை ஒரு பெரிய விஷயமாக எவரும் கருதவில்லை.

சத்யவதிக்கு இயல்பாகவே நற்குணங்கள் இருந்தன. அவள் அனைவரிடமும் நல்லவளாகவே நடந்து கொண்டாள். வேண்டியவருக்கு வேண்டியன செய்து கொடுத்தாள். பெருந்தன்மையாக நடந்து கொண்டாள். உதவி நாடி வந்தவருக்கு உதவிகளைச் செய்தாள். த்வைபாயனரோ தன் அறிவாலும் ஞானத்தாலும் வேதத்தை அறிந்து அதன்படி ஒழுகுபவர் என்பதாலும் அதிகம் அனைவராலும் கவரப்பட்டார். மேலும் அவர் எப்போதும் உலக க்ஷேமத்தையே  நினைத்து வந்தார். அதற்கேற்றபடி வாழ்வதற்கு அனைவருக்கும் பயிற்சி அளித்து வந்தார். நோயுற்றவர்களுக்குத் தக்கபடி மூலிகைகள் மருந்துகள் அளித்துக் காப்பாற்றினார். அன்றாடம் குழந்தைகளுக்கு உணவளித்துத் தான் உண்டார். எல்லாவற்றிற்கும் மேல் யமன் வாய்க்குப் போன ஷாந்தனுவை மீட்டு ஒன்றரை வருடங்கள் வாழ வைத்தார்.

Thursday, July 21, 2016

வேதங்கள் பகுக்கப்பட்டன!

வாஜ்பேய யக்ஞம் வெற்றிகரமாக நிறைவு பெற்றது. எந்த நோக்கத்துக்காக யக்ஞம் செய்யப்பட்டதோ அந்த நோக்கத்தில் அது முழுமையாக வெற்றி அடைந்தது. ஸ்ரோத்திரியர்கள் அனைவரும் ஒருங்கு திரண்டு ஒற்றுமையாக நடத்தியதோடல்லாமல் இனி வரும் நாட்களிலும் இதே ஒற்றுமையைக் கடைப்பிடிப்போம் என பிரதிக்ஞை எடுத்தனர். மஹாராஜா ஷாந்தனுவின் கௌரவம் மற்ற அரசர்களிடையே மிக உயர்ந்தது. ஆரியர்களின் மனசாட்சி துருப் பிடித்துப் போயிருந்ததை இந்த யக்ஞம் சாணை பிடித்துக் கூர் தீட்டி வைத்தது. சஹஸ்ரார்ஜுனனோடு நீடித்து நடந்த போரில் மழுங்கிப் போயிருந்த அவர்கள் மனசாட்சி இப்போது நன்கு கூர் தீட்டப்பட்டது. ஓநாய்களின் ராஜ்ஜியமாக இருந்த அந்தக் காடு இப்போது மீண்டும் இழந்த தன் பழைய கௌரவத்தைப் பெற்று தர்ம க்ஷேத்திரமாக, தர்மம் உதயமாகும் இடமாக மாறியது. யாகத்திற்கு வந்திருந்த மாபெரும் கூட்டம் மறுநாளில் இருந்து மெல்ல மெல்லக் கரைய ஆரம்பித்தது. ஆசாரிய விபூதி மிகவும் முயன்று அந்த யாகத்தை முறையாகவும், சம்பிரதாயங்களை மீறாமலும் உரிய சடங்குகளைச் சரிவரச் செய்ய வைத்தும் நடத்திக் கொடுத்திருந்தார். ஆகவே அனைத்து ஸ்ரோத்திரியர்களிடமும் தன் கௌரவமும் உயர்ந்து விட்டதை நன்றாகவே புரிந்து கொண்டிருந்தார். அந்த சந்தோஷத்துடனேயே அவர் ஹஸ்தினாபுரம் திரும்பினார்.

வந்திருந்த மற்ற அரசர்கள், இளவரசர்கள், தலைவர்கள் அனைவரும் ஒவ்வொருவராகத் தங்கள் பரிவாரங்களோடு திரும்ப ஆரம்பித்தனர். அவர்கள் செல்லும் முன்னர் த்வைபாயனரைக் கண்டு தங்கள் வணக்கங்களைத் தெரிவித்துக் கொண்டனர். அவர் தானாகவே தன்னிச்சையான ஓர் முனிவராக அனைவராலும் ஒப்புக் கொள்ளப் பட்டிருந்தார். இது பொதுவாக அனைவருக்கும் கிடைக்காதது. அனைத்திலும் சிறந்தவருக்கும் சிறப்பாகத் தவங்களில் ஈடுபட்டவருக்குமே கிடைக்கக் கூடியது. அதிசயங்களை நிகழ்த்தக் கூடியவருக்குக் கிடைக்கக் கூடியது. த்வைபாயனரும் அத்தகைய அதிசயங்களை நிகழ்த்தி இருப்பதாகவே அனைவரும் நம்பினார்கள். ஆகவே அவருக்கு உரிய மரியாதையைச் செலுத்தினார்கள். மந்திரி குனிகர் அதுவரை இயங்கிக் கொண்டிருந்த சமையலறை, அனைவருக்கும் இலவச உணவு அளிக்கப்படுவதற்காக ஏற்படுத்தப் பட்டிருந்த சமயலறை இரண்டு நாட்களுக்குத் தான் இயங்கும் எனவும் அதன் பின் அதை மூடுவதாகவும் அறிவித்திருந்தார். ஆனால் மன்னன் கட்டளைப்படி உணவு, தானியங்கள் பராசர ஆசிரமவாசிகளுக்கும், மற்றும் அங்கே தங்கி பனிரண்டு வருட ஸ்ரௌத்த சாஸ்திரம் படிப்போருக்கும் விநியோகிக்கப்படும் என்றும் அவர்கள் தங்கு தடையில்லாமல் வேதங்களைக் கற்று மற்றவர்க்கும் அதன்படி வாழக் கற்பிக்க எல்லாவிதமான வசதிகளும் செய்து கொடுக்கப்படும் என்றும் அறிவித்தார்.

ஆடுகளை மேய்க்க வந்திருந்த ஆட்டிடையர்கள், காட்டுவாசிகள், வியாபாரிகள் மற்றும் யாகத்தைக் காண வந்திருந்த பயணிகள் அனைவரும் அங்கிருந்து கிளம்ப ஆரம்பித்தனர். த்வைபாயனரை வணங்கிவிட்டுச் சென்றார்கள். கடைசியாக உடல் நலமின்றி வைத்தியத்துக்காக வந்திருந்தவர்களும் அங்கிருந்து கிளம்ப ஆரம்பித்தனர். அவர்கள் கிளம்பும்போது மிகவும் உணர்ச்சி வசப்பட்டுக் கண்ணீரைப் பொழிந்து விடை பெற்றார்கள். பாலமுனியின் அதிசய சக்தியினால் தங்கள் உடல்நிலையை மேம்படுத்திக் கொள்ள வந்தவர்கள் அவர்கள் அனைவரும். தங்கள் கைகளை நீட்டி பாலமுனியை அணைத்துத் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியவர் பலர். ஆனால் பாலமுனியான த்வைபாயனரோ தன்னிடம் அப்படி ஏதும் சக்தி இல்லை என மறுத்தார். அனைத்தும் வேத மந்திரங்களின் மூலமாகவே நடந்தது என்றும் வேதம் ஒன்றே அனைத்துக்கும் காரணம் என்றும் சொன்னார். எவர் ஒருவர் நம்பிக்கை வைத்து வேதத்தில் சொல்லி இருப்பதைக் கடைப்பிடிக்கிறார்களோ அவர்களை அது காப்பாற்றுகிறது என்றும் கூறினார்.

அனைவரும் ஆண், பெண்,குழந்தைகள் உட்பட பாலமுனியைச் சூழ்ந்து கொண்டு தங்கள் கைகளில் ஒரு சின்ன மண்பானையில் பாலோடு அமர்ந்து கொண்டனர். தக்க மந்திரங்களை அவரவர் உடல்நிலைக்கு ஏற்ப உச்சரித்த வண்ணம் பாலமுனியானவர் தன் கையிலிருந்த மூலிகைச் சாறை அந்தப் பாலில் விட்டார். அவர்கள் அனைவரும் அந்தப் பாலை உட்கொண்ட பின்னர் அனைவரையும் தனித்தனியாக சந்தித்து ஆசிகளை வழங்கினார். அவருக்கு எனத் தனியாக ஆசி கூறும் முறை இருந்தது. “அனைவரும் வேதத்தை நம்புங்கள். அது ஒன்றே நம்மைக் காக்கும். நம் உடல் நிலையையும் அதுவே சரியாக்கும்!” இதுவே அவர் திரும்பத் திரும்பக் கூறுவது. ஒவ்வொருவரிடமும் தனித்தனியாக அவரவர் தனிப்பட்ட பிரச்னைகள் குறித்தும் கேட்டுத் தெரிந்து கொண்டு தக்க ஆலோசனை கூறுவார். அவர்கள் இல்லற வாழ்க்கை குறித்தும் கேட்டுத் தெரிந்து கொள்வார். அவர்களின் கால்நடை வளர்ப்புக் குறித்தும் ஆலோசனைகள் கூறுவார். அந்த நோயாளி ஒருவேளை பெண்ணாக இருந்தால் அவர்களின் மக்களைக்குறித்தும், மருமகன் அல்லது மருமகள் குறித்தும் கேட்டுத் தெரிந்து கொள்வார்.

எல்லாரையும் விட அங்கே வந்திருந்த குழந்தைகள் தாம் அவரைப் பிரிவதற்கு மிகவும் மனம் வருந்தினார்கள். அவர்களிடம் அவர் தாம் யமுனைக்கரையில் இருக்கையில் அங்கே யமுனையில் இருந்த மீன்களைக் குறித்துக் கதைகள் சொல்லுவார். அவற்றோடு தாம் பேசி இருப்பதாகவும் அவற்றின் மொழி தமக்குத் தெரியும் என்றும் கூறினார். அதைக் கேட்ட ஒரு குழந்தை அவரிடம் வந்து தனக்கும் மீன்களின் மொழியைக் கற்றுக் கொடுக்கச் சொல்லிக் கேட்டது. அதற்கு அவர் , அடுத்த முறை அந்தக் குழந்தை வரும்போது சொல்லித் தருவதாகவும் இப்போது பெற்றோருடன் ஊருக்குச் செல்லும்படியும் கூறி சமாதாம் செய்தார். பின்னர் அனைவரையும் அழைத்துக் கொண்டு ஆசிரம வாயில் வரை சென்றார். ஒருவழியாக அனைவரும் பிரியும் நேரம் வந்து விட்டது. அனைவரின் கண்களிலும் கண்ணீர் பொங்கியது. அவரைப் பிரியும் வருத்தம் இருந்தாலும் அனைவர் மனமும் நிறைந்து போயிருந்தது. ஏனெனில் அனைவர் மனதிலும் நம்பிக்கை என்னும் விதையை விதைத்திருந்தார் அவர். என்ன இருந்தாலும் அவர்கள் அனைவரும் மனமே இல்லாமல் தான் அவரைப் பிரிந்து அவரவர் இருப்பிடம் சென்றார்கள்.

அங்கே யாகத்தில் கலந்து கொள்ள வேண்டி வந்திருந்த சில ஸ்ரோத்திரியர்களும் கிளம்பினார்கள். அனைவரும் பாலமுனியை வணங்கிச் சென்றனர். யமுனைக்கரையில் இருந்த பராசரரின் ஆசிரமத்திலிருந்து வந்திருந்த ஆசாரியர்களும் கிளம்பினார்கள். என்றாலும் விடைபெறும் முன்னர் அவர்கள் த்வைபாயனரிடம் அவருடைய பனிரண்டு வருட ஸ்ரௌத்த சத்ரா முடிவடைந்ததும் கட்டாயமாய் யமுனைக்கரைக்கு வந்து அவர்கள் அனைவரையும் பார்த்துவிட்டுச் செல்லவேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். இதற்கு முன்னர் பாங்கு முனி என்றும் நொண்டி முனி என்றும் அழைக்கப்பட்ட பராசர முனிவர் எப்படி எல்லோரையும் வந்து பார்த்துக் கொண்டிருந்தாரோ அதே போல் இப்போது பாலமுனியும் செய்ய வேண்டும் என்பது அவர்கள் ஆசை! அவர்கள் கிளம்புகையில் த்வைபாயனர் கடைசி எச்சரிக்கை ஒன்றை விடுத்தார்.

“வேதம் ஒன்றே சரியான வாழ்க்கை முறையைக் காட்டும்; நேர்மையாக வாழ வழி வகுக்கும். அறவழியில் வாழ வழி ஏற்படுத்தும். ஆகவே வேதவழியைக் கடைப்பிடிக்கும் ஸ்ரோத்திரியர்களான நாம் பேராசைப் படக் கூடாது. தவ வாழ்க்கையே மேற்கொள்ள வேண்டும். அறவழியிலேயே வாழ்வதையே முக்கியமாகக் கருத வேண்டும். வறுமை ஏற்பட்டால் கலங்காமல் இருக்கவேண்டும். எளிமையான வாழ்க்கையையே வாழவேண்டும். கடுமையான சுயக் கட்டுப்பாடுகளைக் கடைப்பிடிக்க வேண்டும். தவம் இல்லாமல் நம்மால் எதையும் எப்போதும் எங்கும் சாதிக்க முடியாது!”

பின்னர் அவர் பிரார்த்தனை செய்தார்!
ஏ, கடவுளே, எங்களுக்குப் பாதுகாப்புக் கொடு!
ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு ஆர்வம் குறையாமல் தபம் செய்ய வழிகாட்டு
அப்படிப்பட்டதொரு புரிதலால் உண்மையை சத்தியத்தை நாங்கள் உணர்வோம்
சத்தியத்தைக் குறித்த ஞானம் எங்களுக்கு ஏற்படும்.
அந்த ஞானத்தினால், அறிவினால் நேர்மையான அறவழியிலான வாழ்க்கையை நாங்கள் வாழ்வோம்
அதற்கான உறுதி எங்களுக்கு ஏற்படும்
அந்த உறுதியினால் அனைத்துப் பொருட்கள் மேலும் அனைத்து மனிதர்கள் மேலும் எங்களுக்கு மாறா அன்பு ஏற்படும்
அந்த அன்பு எங்களுக்கு ஏற்பட்டால் வேதத்தின் மேல் எங்களுக்கு உள்ள நம்பிக்கை இன்னும் அதிகம் ஆகும்!
அது தான் விண்ணில் ஏற்படும் கிரஹ மாறுதல்களால் பூமியில் வாழும் நமக்கு ஏற்படும் தாக்கத்தை சமப் படுத்த முடியும்.
விண்ணின் ஒழுங்குமுறை மாறாமல் செயல்படும். செயல்பட வைப்போம்.  இந்தப் பிரபஞ்சத்தை அதன் போக்கில் இயங்க வைப்போம்

த்வைபாயனர், கௌதமர், பைலர், சுமாந்து ஆகியோர் சேர்ந்து ஒரு மாபெரும் ஆசிரமத்தை ஏற்படுத்தினார்கள். அப்போது இருந்தவர்களிடையே பராசர கோத்திரத்தில் மூத்தவராக கௌதமரே இருந்ததால் அவர் தலைமையில் இதை நடைபெற வைப்பதாகவும் முடிவு செய்தனர். ஆனால் அதற்கான வழிகாட்டுதல் அனைத்தும் நம் பாலமுனி த்வைபாயனரே செய்து வந்தார். அவர் பைலரை ரிக் வேதத்தின் குருவாகவும் தலைவராகவும் நியமித்தார். கௌதம முனிவர் சாம வேதத்தின் தலைவர் ஆனார். சுமாந்து அதர்வ வேதத்தலைவராக ஆனார்.


Wednesday, July 20, 2016

யாகம் நிறைவு பெற்றது!

வாடிகாவைப் பார்த்து த்வைபாயனர் மேலும் சொன்னார். “வாடிகா, நீ மட்டும் அவர்களுடன் தொடர்பு வைத்துக் கொண்ட பின்னர் பார்! அவள் எவ்வளவு நல்லவள் எனவும், பெருந்தன்மையானவள் என்பதும், எவ்வளவு அருமையானவள், உன்னதமானவள் என்பது புரியும். இப்போது அவளுக்கு ஏதோ கண்ணுக்குத் தெரியாத எதிரியின் மூலம் ஆபத்து காத்திருக்கிறது. நீ தான் அவளைப் பாதுகாக்கவேண்டும். அது உன் கடமை! அவளுக்கு ஏதேனும் ஆபத்து ஏற்பட்டுவிட்டால் அது மிகவும் முக்கியமானதொரு பாவம் ஆகிவிடும். பெரிய பாவம். “ என்றார் த்வைபாயானர். “அவள் என் தாய்! நான் அவளுக்கு மூத்த மகன். ஒரு தாய் தன் மூத்த மகன் பால் எவ்வளவு அன்பு செலுத்துவாளோ அதே அன்பைத் தான் என்னிடமும் அவள் காட்டி வருகிறாள். இதை விட அதிகமாக எந்தத் தாயாலும் அன்பு செலுத்த முடியாது. உன்னிலும் அவள் ஓர் மகளையே காண்கிறாள். மருமகளை அல்ல!” என்றார்.

வாடிகா மனதில் குழப்பம் சூழ்ந்தது. கண்கள் கண்ணீரைப் பெருக்கின. “ஓஹோ, என் முன்னோர்களான ஆங்கிரஸ ரிஷியும், பிருகு முனிவரும் என்னுடைய இந்தக் காரியத்தைப் பற்றி என்ன நினைப்பார்கள்! என்ன செய்துவிட்டேன் நான்!” என்று மனதிற்குள்ளாக வருந்தினாள். இந்த நினைப்புத் தாங்க முடியாமல் விம்மி விம்மி அழவே ஆரம்பித்தாள் வாடிகா. த்வைபாயனர் ஏதும் பேசாமல் எழுந்து ஒரு சொம்பில் தண்ணீரை நிரப்பிக் கொண்டு வந்து அவளிடம் கொடுத்துக் குடிக்கச் செய்தார். “இந்த நீரை அருந்து வாடிகா. இப்போது உன் அறைக்குப் போய்த் தூங்கு! நாளை அதிகாலையில் நாம் மஹாராணியைச் சந்திக்கலாம். மஹாராணிக்கு அவள் மகனும், அவன் மனைவியும் தன்னைப் பாதுகாக்க இருப்பதைக் கண்டால் சந்தோஷமாக இருக்கும்.” என்றார்.

வாடிகா தன் அறைக்குத் திரும்பினாள். ஆனால் அதன் பின்னர் அவளுக்குத் தூக்கம் வரவில்லை. மஹாராணியின் மேல் சூனியம் வைத்து ஏவல் செய்ய இருந்த தன் முட்டாள் தனத்தை நினைத்து நினைத்து தன்னைத் தானே நொந்து கொண்டாள். இதைச் செய்ததின் மூலம் அவள் கணவனின் நற்குணத்தையும் சேர்த்து அல்லவோ அவள் தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறாள்! இது எத்தகைய அநீதி! அவள் கணவனின் படுக்கையில் அவள் வைத்திருந்த பதா இலைகளை அவர் கண்டெடுத்தாரா இல்லையா என்பதைக் குறித்து அவளுக்கு நிச்சயமாக ஏதும் தெரியவில்லை. ஆனால் இப்படிப் பட்டதொரு தர்மசங்கடமான சூழ்நிலையிலிருந்து மிகவும் கண்ணியமாகத் தன்னை விடுவித்த தன் கணவனை நினைத்துப் பெருமிதப் பட்டாள். ஆறுதலும் அடைந்தாள். கணவன் மேல் நன்றியும் கொண்டாள். மறுநாள் வாஜ்பேய யாகத்தின் உச்சகட்டமான “சொர்க்கத்தின் படிகளில் ஏறுதல்” என்னும் நிகழ்வு நடக்க இருந்தது.

ஆகவே காலை எழுந்ததுமே த்வைபாயனரும் வாடிகாவும் அரசனும், அரசியும் தங்கி இருந்த முகாமுக்குச் சென்றனர். அவர்கள் வந்திருப்பதை அறிந்த மஹாராணி அவர்களைத் தன் அறைக்கு வரவழைத்தாள். அப்போது மஹாராணிக்கு அலங்காரம் நடந்து கொண்டிருந்தது. த்வைபாயனர் வாடிகாவுடன் சென்று மஹாராணியின் பாதங்களைத் தொட்டு வணங்க மஹாராணி ஓர் அன்பான புன்னகையுடன் இருவருக்கும் ஆசிகளை வழங்கினாள். வாடிகாவுக்கு மஹாராணியின் இந்த அன்புப் பிரவாகத்தைக் கண்டு அதிலேயே தான் மூழ்கிவிட்டாற்போல் இருந்தது. தன்னைத் தானே கடிந்து கொண்டாள். தன் முட்டாள் தனத்தை நினைத்து நினைத்து நொந்து கொண்டாள். மஹாராணி அங்கிருந்த சேடிப் பெண்களை எல்லாம் தன் ஒரே சைகையால் அப்புறம் போகச் சொன்னாள். தார்வி மட்டும் அங்கே இருந்தாள்.

“க்ருஷ்ணா, இந்த சூனிய மந்திரத்தை என் மேல் ஏவியவர் யாரெனக் கண்டு பிடித்து விட்டாயா?” என்று ரகசியமாக த்வைபாயனரிடம் வினவினாள். “இல்லை, அம்மா. அதை நான் ஜாபாலியின் புத்திரியான உங்கள் மருமகளிடம் விட்டு விட்டேன். அவளுக்கு அவள் தந்தை ஏவும் மந்திரங்கள், அதற்கான மாற்று மந்திரங்கள் என அனைத்தும் நன்கு தெரியும். அவளும் ஓர் அதர்வ ஸ்ரோத்திரியர் தானே, அதை நீங்களே அறிவீர்கள் அல்லவா? அவள் இனிமேல் உங்களுடனேயே நாள் முழுவதும் இருக்கப் போகிறாள். உங்களுக்கு ஏதேனும் துன்பம் நேராமல் பாதுகாப்பாள்!” என்றார் த்வைபாயனர். வாடிகாவைத் திரும்பிப் பார்த்துப் புன்னகைத்த மஹாராணி, “அப்படியா, வாடிகா, என்னுடன் இருப்பாயா?” என்று ஆவலுடனும் அன்புடனும் அவளைக் கேட்டாள். வாடிகா தலை அசைத்துத் தன் சம்மதத்தைத் தெரிவித்தாள்.

‘ஆஹா, என்னுடன் நீ நாள் முழுவதும் இருப்பாய் என்னும் எண்ணமே என்னைச் சந்தோஷத்தில் ஆழ்த்துகிறது. அத்தனை கூட்டத்தினரின் கண்களும் என்னையே மொய்க்கின்றன. எனக்கு எங்கேயானும் காணாமல் போய்விடமாட்டோமா என்று  தோன்றுகிறது. எனக்கு எதிராகச் சதி செய்பவர்கள் யார் என்பதைக் கண்டுபிடி!” என்றாள் மஹாராணி. பின்னர் தொடர்ந்து, “அது மட்டும் யாரெனத் தெரியட்டும். நான் அந்த மனிதனிடம் கேட்பேன். எப்படி நீ என்ன காரணத்துக்காக என் மேல் சூனியத்தை ஏவினாய் என்று கேட்பேன். அப்படியே நான் அவனுக்கு ஏதேனும் தவறு செய்திருந்தாலோ, தீமை இழைத்திருந்தாலோ அதைச் சரி செய்வேன். அவனிடம் மன்னிப்புக் கேட்பேன். இதுவரை நான் அறிந்து எவருக்கும் தீங்கு செய்ததில்லை. செய்ய நினைத்ததும் இல்லை!” என்றாள். வாடிகாவின் கண்களில் இருந்து கண்ணீர் பெருகியது.

“வாடிகா, ஜாபாலியின் மகளே,” என்ற வண்ணம் அவள் கன்னத்தைத் தட்டிக் கொடுத்தாள் சத்யவதி. பின்னர் த்வைபாயனர் பக்கம் திரும்பி, “கிருஷ்ணா!” என்று ஆரம்பித்தவள், பின்னர் பரிகசிக்கும் தோரணையில், “இல்லை, இல்லை, நான் பாலமுனி என்றல்லவோ சொல்லி இருக்க வேண்டும்! இல்லையா வாடிகா! இந்த பாலமுனி உன்னைப் போன்றதொரு அருமையான மனைவியைப் பெற்றதற்கு மிகவும் சந்தோஷம் அடைந்திருக்கிறான்.” என்று சொல்லிவிட்டுச் சிரித்தாள். வாடிகாவால் தன் உணர்ச்சிகளை மறைக்கவோ அடக்கவோ முடியவில்லை. அப்படியே மஹாராணியின் பாதங்களில் விழுந்து அழுத வண்ணம், “அம்மா, அம்மா!” என்றாள். அவளால் மேலே பேச முடியவில்லை. அவளைத் தூக்கி அணைத்துக் கொண்ட சத்யவதி, “எனக்கு ஒரு பெண் குழந்தை பிறக்கவில்லையே என்னும் வருத்தம் இருந்தது. இன்று அது தீர்ந்தது. நீ என் அருமைப் பெண்!” என்று சொல்லிவிட்டு அவளை இறுக அணைத்தாள்.

அனைவரும் அன்றைய யாகத்தை முடிக்க வேண்டி யாகசாலைக்குச் சென்றனர். யாகசாலையின் சடங்குகள் அனைத்தும் முறைப்படி முடிவடைந்ததும் ஆசாரிய விபூதியை அழைத்துக் கொண்டு அவர் துணையுடன், மஹாராஜா ஷாந்தனு யூபம் நாட்டப்பட்டிருக்கும் இடத்திற்கு ஏறிச் செல்லும் படிகளில் ஏறினான். பின்னணியில் மந்திரங்கள் உச்ச ஸ்தாயியில் ஒலித்தன. வாடிகாவின் கைகளைப் பிடித்த வண்ணம் அன்றைய அலங்காரத்தில் எழிலுடன் காட்சி அளித்த மஹாராணியும் மன்னன் பின்னால் தானும் ஏறினாள். இதைப் பார்த்த த்வைபாயனருக்கு வாடிகாவின் மனதில் இருந்த அவநம்பிக்கை போய் நம்பிக்கை குடி புகுந்திருப்பது கண்டு சந்தோஷம் அடைந்தார். வாடிகா முழுவதும் மேலே ஏறாமல் மஹாராணியைப் போகவிட்டுத் தான் கீழே நின்று கொண்டு ஒருவேளை மஹாராணிக்கு ஏற முடியவில்லை என்றாலோ அவளுக்குத் தடுக்கினாலோ உடன் உதவி செய்யத் தயாராக நின்று கொண்டாள்.

அந்த யூபத்தின் மேல் கட்டப்பட்டிருந்த அறைக்குள் மஹாராஜாவும் மஹாராணியும் நுழைந்தனர். குறிப்பிட்ட மந்திரங்கள் முழுவதும் சொல்லி முடிக்கும்வரையிலும் அங்கேயே இருவரும் தங்கினார்கள். அதன் பின்னர் அத்வர்யூ தலைமை தாங்க ஆசாரிய விபூதி துணை செய்யக் கூடி இருந்த மக்கள், “பரத குலச் சக்கரவர்த்தியான ஷாந்தனுவுக்கு மங்களம், ஜெய மங்களம்! மஹாராணிக்கு மங்களம், ஜெய மங்களம்!” என்று உச்சஸ்தாயியில் மக்கள் கோஷம் போடக் கீழே இறங்கி வந்தனர். எஞ்சி இருந்த சோமபானம் அங்கு வந்திருந்த அனைத்து சமயச் சடங்குகள் செய்தவர்களிடையே பகிர்ந்து அருந்தப்பட்டது. மீதம் இருந்தது அங்கிருந்த அனைவருக்கும் பகிர்ந்து அளிக்கப்பட்டது. அதன் பின்னர் ஓர் மணை போடப்பட்டு அதில் அரசனும் அரசியும் அமரப் புனித மந்திரங்கள் ஓதி ஜெபிக்கப்பட்ட புனித நீரால் இருவருக்கும் அபிஷேஹம் செய்யப்பட்டது. அதற்கேற்றவாறான மந்திரங்களை அங்கு வந்திருந்த ஸ்ரோத்திரியர்கள் உச்சரித்துக் கோஷித்தனர். அவர்கள் இருவரும் சாதாரண மனிதர்கள் அல்ல இப்போது; இருவருமே உன்னதமான கடவுள் பதவியை, சொர்க்கத்தை மனித உடலுடன் அடைந்து விட்டனர்.

அக்னிக் குண்டத்தின் அருகே இருவரும் அமர்ந்து கொண்டனர். அரசர்களுக்கே உரித்தான வெண்கொற்றக் குடை இருவரின் தலைக்கு மேலும் பிடிக்கப்பட்டது. அங்கு குழுமி இருந்த அனைவரும் வந்திருந்த அரசர்கள், குரு வம்சத் தலைவர்கள், ஸ்ரோத்திரியர்கள் என அனைவரும் அங்கே வந்து மன்னன் பாதத்தையும் ராணி பாதத்தையும் தொட்டு வணங்கினார்கள். மஹா அதர்வர் மட்டும் மஹாமுனிவர் என்பதால் அவர் மட்டும் வரவில்லை. “பரத வம்சத்துச் சக்கரவர்த்திக்கு ஜெயம் உண்டாகட்டும்!” என்று அனைவரும் வாழ்த்தினார்கள். த்வைபாயனரால் மஹாராணிக்கு ஏற்பட்டிருந்த சந்தோஷத்தையும் வாடிகாவின் நிம்மதியான முகத்தையும் அதில் தெரிந்த மகிழ்ச்சியையும் கவனிக்காமல் இருக்க முடியவில்லை. இந்த யாகத்தின் முடிவு கடைசியில் இளவரசன் காங்கேயனால் அறிவிக்கப்பட்ட ஓர் உணர்ச்சி பூர்வமான அறிவிப்புடன் முடிவடைந்தது.

“கூடி இருக்கும் மக்களே, ஸ்ரோத்திரியர்களே, ரிஷி, முனிவர்களே! இதனால் பரத வம்சத்துச் சக்கரவர்த்தியான ஷாந்தனு மஹாராஜா அறிவிப்பது என்னவெனில் இனி இந்த தர்மக்ஷேத்திரத்தின் ஒவ்வொரு ஆசிரமத்தையும் மஹாராஜா ஆதரிக்கிறார். இவை அனைத்துமே தர்ம சாம்ராஜ்யம் ஸ்தாபிக்கும் நோக்கத்தைக் கொண்டவை. இங்கு இருக்கும் ஒவ்வொரு ஸ்ரோத்திரியனும் வேத வாழ்க்கைக்கும் வேத வாக்குக்கும் கட்டுப்பட்டு வாழ்வான்; வாழ்கிறான். அதே போல் இங்கு இருக்கும் ஒவ்வொரு பெண்மணியும் அவள் கணவனுக்குக் கட்டுப்பட்டு அவனுக்கேற்ற இல்லாளாக வாழ்வாள்; வாழ்கிறாள். தன் குடும்பத்திற்காகவும், குடும்பத்தின் க்ஷேமத்திற்காகவும் பசு, பக்ஷிகளையும் அவள் ஆதரித்து வருகிறாள். பேணிப் பாதுகாக்கிறாள். இத்தகைய அற வாழ்க்கையின் மூலமே இல்லறம் நல்லறமாகி தர்ம சாம்ராஜ்யமும் ஏற்படும்.”

“அதோடு இல்லாமல் சக்கரவர்த்தி ஷாந்தனு எனக்கு மேலும் ஓர் ஆணை இட்டிருக்கிறார். அது அவர் எவ்வகையிலேயும் எப்படியேனும் பராசர முனிவரின் ஆசிரமத்தின் பால முனியாகிய க்ருஷ்ண த்வைபாயனர் ஏற்படுத்தி இருக்கும் ஸ்ரௌத சாஸ்திரம் எனப்படும் பனிரண்டு வருட பிரமசரிய விரதம் காத்துப் படிக்கும் படிப்பை ஆதரிக்கவும், அதற்காக ஆவன செய்யவும் சம்மதித்திருக்கிறார். இங்கு க்ஷத்திரியர்களில் இருந்து அனைவரும் பனிரண்டு வருட பிரமசரியம் ஏற்று வேத அத்யயனமும் மற்றக் கலைகளும் கற்கலாம். அதற்கான ஏற்பாடுகள் மன்னரால் செய்து தரப்படும். இதன் மூலம் நாம் அனைவரும் கடவுளரின் கருணைக்கும் அருளுக்கும் பாத்திரர் ஆவதோடு வேதங்களை முன்னேற்றவும் உத்வேகம் கொண்டு செயலாற்றுவோம். வேதத்திற்காகவே வாழ்வோம்!”

Tuesday, July 19, 2016

வாடிகாவுக்குக் கிடைத்த தண்டனை!

தன்னைத் தானே அவள் மன்னித்துக்கொள்ள மாட்டாள். என்ன செய்யலாம்? த்வைபாயனர் மீண்டும் மீண்டும் யோசித்தார். அவர் ஓர் கஷ்டமான சூழ்நிலையில் சிக்கிக் கொண்டிருக்கிறார். மிகவும் தர்மசங்கடமான நிலைமை! அவர் மஹாராணியிடம் இந்த சூனியத்தை வைத்தது யார் என்று சொல்லக் கூட முடியாது. வைத்தது வாடிகாதான் என்பதை மஹாராணி அறியக் கூடாது! அவர் சொல்லிவிட்டால் மஹாராணிக்கு வாடிகாவிடம் மனத்தாங்கல் ஏற்பட்டு விடும். அல்லது வாடிகாவைக் கீழான ஒரு பெண்ணாக நினைப்பாள்; அப்படியே பார்க்கவும் பார்க்கலாம். ம்ஹூம், எக்காரணம் கொண்டும் வாடிகாவின் நிலையை கௌரவத்தைச் சிதைக்கக் கூடாது. வாடிகா என் மனைவி. அவளுக்கு என்னுடைய பாதுகாப்புத் தேவை! அவள் ஏதோ முட்டாள் தனமாக சிறுபிள்ளைத் தனமாக செய்து விட்ட குற்றத்துக்காக நான் அவளைத் தண்டிக்கவோ, புண்படுத்தவோ அல்லது அவள் கௌரவத்தைச் சிதைக்கும் வேலையையோ மேற்கொள்ளக் கூடாது. என் மனைவியை ஒருக்காலும் விட்டுக் கொடுக்கக் கூடாது! பின்னர் என்னதான் செய்யலாம்?

ம்ம்ம்ம், இந்தப் பதினேழு நாட்களாகத் தன்னையும் மஹாராணியையும் மாறி மாறிப் பார்த்த வண்ணம் எப்படி எல்லாம் எண்ணமிட்டிருப்பாள் வாடிகா? பாவம்! அவள் மனம் பொறாமைத் தீயில் வெந்து பொசுங்கிக் கொண்டிருந்திருக்கும். இதெல்லாம் எதனால்? அவர் மேல் அவள் வைத்திருக்கும் மாறா அன்புக்காக. அந்த அன்பைப் பங்கு போட்டுக் கொள்ள ஒருத்தி வந்துவிட்டாளோ என்னும் எண்ணத்தினாலே! அவளுக்கு உண்மை தெரியாதே! நான் வாடிகாவை விட்டுக் கொடுக்கவே கூடாது. அவளைக் கீழான ஓர் நிலையில் அனைவரும் பார்க்கும்படி வைக்கக் கூடாது. மஹாராணிக்கும் வாடிகாவுக்கும் இடையே உணர்வு பூர்வமானதொரு மாசற்ற அன்பு உருவாக வேண்டும் என்றே நான் நினைக்கிறேன். அதற்கு பங்கம் வரக் கூடாது! ஓர் முடிவுக்கு வந்த த்வைபாயனர் எழுந்து கொண்டு வாடிகா படுத்திருந்த அறைக்கதவைத் தட்டினார். வாடிகா உடனேயே குரல் கொடுத்தாள். “பிரபுவே, தாங்களா அழைத்தது? என்னால் என்ன ஆகவேண்டும்?”

“வாடிகா, ஜாபாலியின் மகளே, கொஞ்சம் எழுந்து வா! ஒரு அசாதாரணமான நிகழ்வு நடந்து விட்டது. நான் அதற்கு உன்னுடைய ஆலோசனையைக் கோருகிறேன்.”

வாடிகா எழுந்து கொண்டு தன் புடைவையைத் திருத்திக் கொண்டு, தலையைக் கோதிக் கொண்டு கதவைத் திறந்தாள். அவளுக்கு உள்ளூர ஒரு பயம் இருந்தது. அதனால் அவள் உடல் நடுங்கிக் கொண்டிருந்தது. அதிலும் அவள் தான் இந்த சூனிய வசியத்தை மஹாராணியின் படுக்கையிலும் த்வைபாயனரின் படுக்கையிலும் வைத்தாள் என்பது மட்டும் அவருக்குத் தெரிந்து விட்டால்? ஒருக்காலும் அவளை த்வைபாயனர் மன்னிக்கவே மாட்டார்!  ஆனால் த்வைபாயனர் சாவதானமாக அவளைப் பார்த்து, மிகவும் அன்பு தொனிக்கும் குரலில், “ஏன் இப்படி வேர்த்து விறுவிறுத்துப் போய் நடுங்கிக் கொண்டு நிற்கிறாய்? வேலைகள் அதிகமோ? ஏன் நின்று கொண்டிருக்கிறாய்? இப்படி உட்கார்ந்து கொள்!” என்று அன்புடன் உபசரித்தார். வாடிகா அவர் எதிரே அமர்ந்தாள். எந்த நேரம் இடியைப் போல் அவர் கேள்வி இறங்குமோ என எதிர்பார்த்த வண்ணம் அமர்ந்திருந்தவளுக்கு ஏமாற்றமே மேலிட்டது.  த்வைபாயனரோ தொடர்ந்து சகஜமாகவே பேசினார். “ஒரு விசித்திரமான சம்பவம் நடந்து விட்டது, வாடிகா! அதை உனக்குக் கட்டாயமாய்த் தெரிவிக்க வேண்டும் என்றே உன்னை அழைத்தேன். இந்த விஷயத்தின் மர்மத்தை அவிழ்க்க உன்னுடைய உதவி எனக்குத் தேவை!” என்றார் நிதானமாக!

வாடிகா பயந்து கொண்டிருந்த நேரம் வந்துவிட்டதை உணர்ந்தாள். “என்ன அது, பிரபுவே!” என்று தீனமான குரலில் கேட்டாள். “யாரோ, எவரோ, தெரியவில்லை. மஹாராணியின் படுக்கையில் மந்திர வளையத்தைப் பால் பொருட்களால் வரைந்துவிட்டுப் பின்னர் அவள் படுக்கையிலும் இந்த மந்திர மூலிகை பதாவைப் போட்டிருக்கிறார்கள். இதோ அந்த இலைகள்!” என்று எடுத்துக் காட்டினார். அவர் தான் முடிவெடுத்தபடியே தன் படுக்கையில் தான் கண்டெடுத்த மந்திர மூலிகைகள் குறித்து வாயே திறக்கவில்லை. பின்னர் அது சொந்த விஷயமாக ஆகிவிடும் என்பதும் ஒரு காரணமாக இருந்தது. வாடிகாவுக்கோ குழப்பமாக இருந்தது. அவர் முகத்தை நிமிர்ந்து பார்க்கவே முடியவில்லை அவளால். அவருக்குக் கோபம் வரும் என்பதை அவள் அறிந்திருந்தாள். ஒரேயடியாக அவளை அவர் வெறுக்கவும் செய்யலாம். ஆனால் அதன் பின்னர் த்வைபாயனர் ரகசியம் பேசுவது போன்ற குரலில் பேசினார். “ நான் இந்த மந்திர மூலிகைகளை நன்கறிவேன். என் தந்தையோடு நடைப்பயணம் மேற்கொண்டிருந்த சமயங்களில் தந்தை அவற்றைக் காட்டிச் சொல்லி விளக்கம் கொடுத்திருக்கிறார். ஆனால் இவை உன் தந்தையின் மூலிகைத் தோட்டத்திலிருந்து தான் வந்திருக்க வேண்டும்..”

“நாம் விரைவில் இந்த மோசடியை நிகழ்த்தியவர் யார் என்பதைக் கண்டு பிடிப்போம். இப்போது நாம் செய்ய வேண்டியது எல்லாம் மஹாராணிக்கு எவ்விதமான ஹானியும் ஏற்படாமல் அவளைப் பாதுகாப்பது ஒன்றே! நீ இந்த இலைகளை எடுத்துச் சென்று உன் தந்தையிடம் காட்டு. ஒருவேளை இந்த வேலையைச் செய்தது யார் என்பதை அவர் அறிந்திருக்கலாம். அதன் மூலம் நமக்கு ஏதேனும் ஓர் உதவி கிட்டலாம்.” என்றார். தன் நடுங்கும் கரங்களால் அந்த இலைகளை வாங்கிக் கொண்டாள் வாடிகா. அவளால் தன்னைக் கட்டுப்படுத்திக்கொள்ள முடியவில்லை. எனினும் ஒரு வார்த்தை கூட வாயிலிருந்து வர மறுத்தது. த்வைபாயனரைப் பார்த்து அந்தச் சூனியத்தை வைத்தது தான் தான் என்பதையும் அதையும் அந்த மஹாராணிக்கு த்வைபாயனர் மேல் அளவிடமுடியாக் காதல் இருப்பதாலேயே செய்ததாகவும் சொல்லி விட வேண்டும் என்றும் த்வைபாயனரிடம் கத்தவேண்டும் என்றும் அவள் மனம் துடித்தது. மிகவும் சிரமப்பட்டுத் தன்னை அடக்கிக் கொண்டு மௌனம் காத்தாள். ஆனால் அவள் தான் அதைச் செய்தாள் என்பதையும் பொறாமை வசப்பட்டு செய்தாள் என்பதையும் அவளால் தன் கணவனிடம் சொல்ல முடியவில்லை. ஏனெனில் அவள் மேல் அவ்வளவு நம்பிக்கை வைத்திருந்தார் த்வைபாயனர். ஆகவே அவளுக்குள் குற்ற உணர்ச்சி குத்தி எடுக்க ஆரம்பித்தது.

“ஜாபாலியின் மகளே, வாடிகா, நீ தான் எனக்கு இந்த விஷயத்தில் உதவி செய்ய வேண்டும். இந்த மாபெரும் சதியைச் செய்தவர் யாரெனக் கண்டுபிடிக்க உதவ வேண்டும். ஏனெனில் இதே ஆள் இப்போது தன் சூனியம் பலிக்காமல் போனதினால் வேறு விதத்தில் மஹாராணியைத் துன்புறுத்தலாம். ஆகவே நீ ஒரு வேலை செய்ய வேண்டும். இனிமேல் நீ தான் மஹாராணியைக் கவனித்துக் கொள்ள வேண்டும். மற்ற எவரையும் அருகில் விடாமல் இந்த மாதிரியான யது வித்தைகளிலிருந்து மஹாராணியைக் காப்பாற்ற உன்னால் தான் முடியும்! “ என்றார் த்வைபாயனர்.

மீண்டும் ஓங்கிக் குரலெடுத்துக் கத்த வேண்டும்போல் தோன்றியது வாடிகாவுக்கு. “நான் இதைச் செய்ய மாட்டேன். அந்தப் பெண்மணியைப் பார்க்கக் கூட நான் விரும்பவில்லை!” என்று கத்தி விடலாமா என நினைத்தாள். ஆனால் மிகவும் அன்பாகவும், அன்பைத் தூண்டி விடும் விதமாகவும் பேசிய த்வைபாயனரின் அணுகுமுறை அம்மாதிரி நடக்காமல் அவளைத் தடுத்தது. அவள் மேல் அவர் கொண்டிருந்த நம்பிக்கை அவளைத் துடிக்க வைத்தது. ஆகவே அவள் வேறு வழியின்றித் தலையைக் குனிந்த வண்ணம், “நான் முயல்கிறேன்.” என்று தனக்குத் தானே பேசிக் கொள்வது போல் சொன்னாள். ஆனால் த்வைபாயனர் விடவில்லை! “இல்லை, வாடிகா! அது மட்டும் போதாது! நாளைக் காலை நாம் இருவருமே சென்று மஹாராணியைப் பார்ப்போம். அவர்களிடம் நீ நாள் முழுவதும் இரவும் பகலும் அவருடன் இருந்து அவரைப் பாதுகாப்பாய் என்று சொல்லி விடலாம்!” என்றார்.

“என்ன, தினம் தினமுமா? இரவும் பகலுமா? அங்கே இருந்து நான் என்ன செய்வது?” வெடித்தாள் வாடிகா! “ஆஹா, திரும்பத் திரும்பக் கேட்கிறாயே! வாடிகா, வாடிகா! நீ அங்கே இருந்து இம்மாதிரி சூனியம், மந்திரம், தந்திரங்களிலிருந்து மஹாராணியைக் காப்பாற்ற வேண்டும். இந்த யது வித்தை தெரிந்தவர்கள் எவரேனும் மஹாராணியிடம் தம் வித்தையைக் காட்டாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அதோடு உனக்குத் தான் இந்த மாதிரி சூனியங்களை எல்லாம் முற்றிலும் எடுத்து சுத்தமாக ஆக்கும் அதர்வ மந்திரங்கள் எல்லாம் தெரியுமே! ஆகவே உன்னுடைய மந்திர வித்தையின் மூலம் மஹாராணியை உன்னால் காப்பாற்ற முடியும்!” என்றார். இப்போது வாடிகாவால் தன்னை அடக்கிக் கொள்ளவே முடியவில்லை.

“உங்களுக்கு மஹாராணியின் மேல் ஏன் இவ்வளவு அக்கறை, பிரபுவே!அதோடு சக்கரவர்த்தி தான் உடல் நலம் குன்றி இருக்கிறார். மஹாராணி நன்றாகத் தான் இருக்கிறார்.” என்றாள். அதற்கு த்வைபாயனர், “வாடிகா, ஒருவனுக்குக் கல்யாணம் ஆகிவிட்டது என்றால் அதற்காக அவன் தாயை அவன் கவனிக்காமல் ஒதுக்க முடியாது. அதே போல் ஒரு மனைவி தன் கணவனுக்கும் அவன் தாய்க்கும் நடுவில் தலையிடக் கூடாது! இதை நான் சொல்லவில்லை, ஜாபாலியின் மகளே! என் தந்தை அடிக்கடி சொல்வார்!” என்றார். வாடிகாவுக்குத் தன் காதுகளை நம்பவே முடியவில்லை! “என்ன? தாயா? மஹாராணி உங்கள் தாயா? அது எப்படி முடியும்? அப்படி எல்லாம் இருக்காது!” என்றாள்.

“அவள் என் தாய் தான் வாடிகா! அவள் என்னைப் பெற்றெடுத்த என் தாய். என் தந்தை பராசர முனிவருக்கும் அவளுக்கும் பிறந்த பிள்ளை தான் நான். எனக்குப் பாலூட்டித் தாலாட்டிச் சீராட்டி என்னை ஏழு வயது வரை வளர்த்தவள் அவளே! அப்போதெல்லாம் அவள் எனக்காகவே வாழ்ந்து வந்தாள். என் முன்னேற்றமே அவள் வாழ்க்கையின் குறிக்கோளாக இருந்தது. ஆகவே என்னுடைய நன்மைக்காகவே என் ஏழாம் வயதில் அவள் என்னைப் பிரியச் சம்மதித்து என் தந்தையுடன் என்னை அனுப்பி வைத்தாள். இது எல்லாம் சக்கரவர்த்தி அவளைப் பார்த்து அவளை மணக்கும் முன்னர் நடந்தவை!” என்றார்.

“அப்போது அவள் என்னவாக இருந்தாள்?” வாடிகா கேட்டாள்.

“அவள் ஓர் மீனவப் பெண்மணி!” த்வைபாயனர் புன்னகையுடன் கூறினார். தன்னைக் குறித்தும், தான் பிறந்த குலத்தைக் குறித்தும் தன் முன்னோர்களான பிருகு ஆங்கிரஸ் ஆகியோர் குறித்தும் மிகவும் பெருமை அடைந்திருந்த வாடிகாவுக்கு இதைக் கேட்டதும் தலை சுற்றிக் கீழே விழுந்துவிடுவோம் போல் இருந்தது. இப்படிப் பட்ட குலத்தில் பிறந்த தான் என்ன காரியம் செய்ய இருந்தோம்! குலத்து முன்னோர்களுக்கே அபகீர்த்தி அல்லவோ உண்டாகி இருக்கும்! மயங்கி விடுவாள் போல் காணப்பட்ட வாடிகா தன்னைச் சமாளித்துக் கொள்ளப் பாடுபட்டாள். த்வைபாயனர் மேலே தொடர்ந்தார். “அதன் பின்னர் அவளைப் பிரிந்த பின்னர் கிட்டத்தட்ட பதினைந்து வருடங்களுக்கு அவளை நான் பார்க்கவே இல்லை. எங்கே இருக்கிறாள் என்பதும் தெரியவில்லை. தற்செயலாகத் தான் தெரிந்து கொண்டேன். மஹா அதர்வர் வாய் விட்டுச் சொல்லாமல் இருந்த அவருடைய விருப்பத்தைத் தெரிந்து கொண்ட நான் அதைப் பூர்த்தி செய்வதற்காக ஹஸ்தினாபுரம் வந்தடைந்தேன். அப்போது தான் அவள் அங்கே சக்கரவர்த்தினியாக இருப்பது தெரிந்தது. தன் கணவனை ஒரு பைத்தியத்தைப் போலப் பார்த்த வாடிகா மீண்டும் தன் தலை சுற்றுவதைக் கண்டு இரு கைகளாலும் இறுக்கிப் பிடித்துக் கொண்டாள்.

Monday, July 18, 2016

த்வைபாயனரின் தர்ம சங்கடம்!

த்வைபாயனரின் குடில். த்வைபாயனர் இன்னமும் குடிலுக்குத் திரும்பவில்லை. வாடிகா அவருக்காகப் படுக்கையை அமைத்துவிட்டுப் பக்கத்து அறைக்குத் தூங்கச் சென்றாள். உள்ளே தாழ்ப்பாள் இட்டுக் கொண்டாள். த்வைபாயனர் அனைவரும் அவரவர் இடத்துக்குப் போய்ச் சேர்ந்தார்களா என்பதைத் தெரிந்து கொண்டு வந்தார். மான் தோல்களால் தைக்கப்பட்ட படுக்கைக்குச் சென்று படுக்கவேண்டும் என்று ஆயத்தம் செய்து கொண்டார். என்ன தான் வாடிகா படுக்கையை விரித்து வைத்திருந்தாலும் த்வைபாயனருக்குத் தினமும் அதை எடுத்து ஓர் உதறு உதறிவிட்டுப் பின்னரே திரும்பப் போட்டுப் படுக்கும் வழக்கம் உண்டு. அன்றும் தினம் போ தனக்கென விரிக்கப் பட்டிருந்த மான் தோல் படுக்கையைத் தூக்கி ஓர் உதறு உதறினார். அதிலிருந்து நான்கு சின்னச் சின்ன இலைகள் கீழே விழுந்தன. ஆச்சரியம் அடைந்த த்வைபாயனர் அந்த இலைகளைப் பொறுக்கித் தன் கையில் வைத்துக் கொண்டு அந்த அறையில் எரிந்து கொண்டிருந்த ஒரே தீபத்தின் அருகே வந்து விளக்கைத் தூண்டி விட்டு எரியச் செய்தார். பின் கைகளில் உள்ள இலைகளை ஆராய்ந்தார். ஆஹா! இந்த இலைகள் மந்திர சக்தி வாய்ந்த வசிய மருந்துக்கான பதா இலைகள் அல்லவோ! இது எப்படி இங்கே வந்தது? அதிர்ச்சி அடைந்தார் த்வைபாயனர். ம்ம்ம்ம்ம்? இது யாரோ அதர்வனின் வேலை தான். யது வித்தை என்னப்படும் சூனிய, மந்திர, தந்திரங்களில் நிபுணனான ஒருவனின் வேலையாகத் தான் இது இருக்க வேண்டும்.

மஹா அதர்வரிடமிருந்து இவற்றை எல்லாம் கற்கும் முன்னரே தன் தந்தை வாயிலாக பதா இலைகள் மந்திர சக்தி வாய்ந்தவை எனவும், வசியத்தில் பயன்படுத்தப்படும் என்பதையும் அவர் அறிந்திருந்தார். இதை முறையாக சரியான மந்திர உச்சரிப்புக்களோடும், ஏற்ற இறக்கங்களோடும் முழு மனதையும் செலுத்தி ஒருவர் மேல் பிரயோகம் செய்தால் பிரயோகம் செய்யப்பட்டவர் மிகவும் அசிங்கமானவராகவோ அல்லது கொடூர புத்தி படைத்தவராக ஆகி விடுவார். மிகக் கடுமையான சக்தி வாய்ந்த இலைகள் இவை. இவற்றைக் கொண்டு வந்து தன் படுக்கையில் வைத்திருப்பது யாராக இருக்கும்? யோசித்தார் த்வைபாயனர்! மஹா அதர்வர் நிச்சயமாக இதைச் செய்திருக்க மாட்டார். ஆகவே சந்தேகத்தின் பார்வையிலிருந்து அவரை விலக்கி விட வேண்டும். மேலும் அவர் அங்கு அப்போது வந்திருக்கும் ரிஷிகள் முனிவர்கள் ஆகியோரிடம் தான் நல்ல பெயர் எடுத்துச் சிறப்பாக இருக்க வேண்டும் என்றும் தான் அனைவராலும் போற்றத் தக்கவனாக இருக்க வேண்டும் என்பதையே விரும்புகிறார். அது தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது. ஆகவே அவர் நிச்சயமாக இதைச் செய்திருக்க மாட்டார்.

ஷௌனகரோ, சுமாந்துவோ கூட இதைச் செய்திருக்க மாட்டார்கள். இருவரும் அவரிடம் மிக இணக்கமாகவும் அன்பாகவும் பழகுகின்றனர். வேறு அதர்வன் யாருக்கோ அவரிடம் பொறாமை இருக்கிறது. த்வைபாயனருக்கு நல்ல பெயர் கிட்டுவதை அவனால் பொறுக்க முடியவில்லை. ஆகவே அவரை ஒழிக்க வேண்டியே இதைச் செய்திருக்கிறான். இதைக் குறித்து மேலும் மேலும் யோசித்துக் கொண்டிருந்த அவர் திடீரென வாயிலில் யாரோ வருவதைக் கண்டதும் யார் எனப் பார்த்தார். அதிர்ச்சி அடைந்தார். வந்தது மஹாராணியின் அந்தரங்கச் சேடியான தார்வி! இந்த நேரத்தில் இவள் எங்கே வந்தாள்? மஹாராணியிடமிருந்து செய்தி கொண்டு வந்திருப்பதாகச் சொன்னாள் அவள். அவள் சொன்ன செய்தி இது தான்! “மாட்சிமை பொருந்திய முனிவரே, என்னுடைய யஜமானியும் மஹாராணியுமான சத்யவதி அவர்கள் தங்களிடம் இதைச் சொல்லும்படி என்னைப் பணித்திருக்கிறார். இன்றிரவு சற்று நேரத்துக்கு முன்னர் அவர் படுக்கைக்குச் சென்றபோது படுக்கையில் ஓர் வட்ட வடிவமான வட்டத்தை யாரோ வரைந்திருக்கக் கண்டார். அது ஏதேதோ பால் பொருட்களால் வரையப் பட்டிருந்தது. மேலும் மஹாராணியின் படுக்கையிலும் இந்த இலைகள் காணப்பட்டன.”

அவள் கைகளிலிருந்து அந்த இலைகளை வாங்கிப் பார்த்த த்வைபாயனர் மேலும் அதிர்ச்சியே அடைந்தார். தார்வி தொடர்ந்து, “என்னுடைய மதிப்புக்குரிய மஹாராணி இதில் ஏதோ சூதும், சதியும் இருப்பதாகச் சொல்கிறார்.” என்றாள். த்வைபாயனர் இதுவும் தன் படுக்கையில் வைக்கப் பட்டிருந்த பதா இலைகளே என்பதைக் கண்டு கொண்டார். தார்வியைப் பார்த்து, “தார்வி, உன் மஹாராணியிடம் போய்ச் சொல்! இந்த விஷயத்தை நான் பார்த்துக் கொள்கிறேன். நாளைக்காலை நான் அவரைக் கண்டு பேசுகிறேன் என்பதைத் தெரிவி!” என்றார். தார்வி சென்றதும் த்வைபாயனர் மேலும் மேலும் யோசனையில் ஆழ்ந்தார். ம்ம்ம்ம், சந்தேகமே இல்லை. அவர் மேல் சூனியம் வைக்க நினைத்தவர்களே தான் மஹாராணியின் மேலும் சூனியத்தை வைக்க முயன்றிருக்கிறார்கள். அதில் சந்தேகம் இல்லை. ஆனால் அவரை விட அவளுக்கு அதிகம் துன்பம் கொடுக்கவும் விரும்பி இருக்கின்றனர். ஏனெனில் அவள் படுக்கையில் வரையப்பட்டிருந்த மந்திர வட்டம் அதைத் தான் சுட்டிக் காட்டுகிறது.  மஹாராணி சரியாகக் கவனிக்காமல் அந்த மந்திர வட்டத்திற்குள் சென்று படுத்திருந்தால் இந்த வசிய மந்திரத்தின் அடிமையாகி மீள முடியாமல் சிக்கி இருப்பாள்.

யாராக இருக்கும் அது? இதை மஹாராணியின் மேல் ஏவியவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு த்வைபாயனரிடமும் மாற்றங்கள் வந்தாக வேண்டும் என்னும் எதிர்பார்ப்பு இருக்கிறது. ஒவ்வொருவராக நினைத்துப் பார்த்தார் த்வைபாயனர். மஹா அதர்வரோ, சுமாந்துவோ, ஷௌனகரோ நிச்சயமாக இல்லை. அவருக்கும் மஹாராணிக்கும் ஒரே சமயத்தில் சூனியம் வைக்கும்படியாக என்ன இருக்கிறது என்று நினைத்தார்களோ! அவருக்கும் மஹாராணிக்கும் இடையிலே உள்ள சம்பந்தம் என்னவாக இருக்கும்? சூனியம் வைக்கும்படியான சம்பந்தம் ஏதுமே இல்லையே! இத்தகைய கொடூரத்தைச் செய்தவர் யார்? யோசித்த த்வைபாயனருக்குச் சட்டெனப் பொறி தட்டியது! இதை யார் செய்திருக்க முடியும் என்பதைக் கிட்டத்தட்டக் கண்டு பிடித்துவிட்டார். ஆம் அவளாகத் தான் இருக்க வேண்டும். அது வாடிகா தான். இந்த வேலையைச் செய்தது வாடிகாவே தான். ஏனெனில் அவரும் பார்த்துக் கொண்டு தான் இருந்தார். இருக்கிறார். மஹாராணி வந்ததில் இருந்து வாடிகாவின் முகமே சரியாக இல்லை. தன்னுள் தானே மூழ்கி விடுகிறாள் அல்லது அந்த இடத்தை விட்டு விலகி விடுகிறாள். மஹாராணி இருக்கையில் அந்த இடத்தில் அவளும் இருப்பதை அவள் விரும்பவே இல்லை. ஆனால் இதை எல்லாம் கவனிக்காத மஹா ராணியோ அவளைத் தன்னிடம் நட்புடன் இருக்கும்படி செய்ய விழைகிறாள். ஆனால் அந்த நட்புக் கரத்தை வாடிகா உதாசீனம் செய்கிறாள். ஆனால் வெளிப்பார்வைக்கு இதெல்லாம் தெரியாதபடி நடந்து கொள்கிறாள். எனினும் வாடிகாவை உள்ளும், புறமும் நன்கு அறிந்திருந்த த்வைபாயனருக்கு இதெல்லாம் தெரிந்தே இருந்தது.

அதுவும் மஹாராணி ரதத்தில் ஏறும்போது தானாகவே ஏற முடிந்தாலும் வாடிகாவின் கரத்தைப் பிடித்த வண்ணம் அவளைக் கண்டு நட்புடனும் பிரியத்துடனும் சிரித்த வண்ணம் ஏற விரும்பினாள். வாடிகாவின் கன்னத்தைப் பிரியத்துடன் மஹாராணி தட்டிக் கொடுத்தாள். ஆனால் வாடிகாவோ அதனால் முகம் சுருங்கி வெளுத்துப் போய் பீதியுடன் நின்றாள். இதை எல்லாம் திரும்பத் திரும்ப யோசித்த த்வைபாயனருக்கு இதைப் பிடித்த வண்ணமே முன்னேறியதில் பல சம்பவங்கள் நினைவில் வந்தன. மஹாராணியின் நட்பை அவள் நிராகரித்தே வந்திருக்கிறாள். ஏற்றுக் கொள்ளவே இல்லை. இதை யோசித்த த்வைபாயனருக்குக் காரணம் பிடிபட ஆரம்பித்தது. ஆம், அப்படித் தான் இருக்க வேண்டும். மஹாராணி த்வைபாயனர் தன் மகன் என்பதால் அவர் முன்னிலையில் எவ்விதமான சம்பிரதாயங்களையும் கடைப்பிடிக்காமல் சாதாரணமாக நடந்து கொள்கிறாள். அதுவும் கல்பியில் அவளால் அவர் வளர்க்கப்பட்டபோது எப்படி நடந்து கொண்டாளோ அப்படியே நடந்து கொள்கிறாள். அதிலும் மீனவர்களோடு பழகிப் பழகி சற்றும் நாகரிகமற்ற வெளிப்படையான அவர்களின் நடவடிக்கைகள், பேச்சுகள் அவளிடமிருந்து முற்றிலும் மறையவில்லை. ஆகவே மற்ற ஆரியர்களை விட இதில் அவள் சுதந்திரமாகவே நடந்து கொண்டாள். வெளிக்கட்டுப்பாடுகள் அவளைப் பிணைக்கவில்லை. சாமானிய மக்கள் இதனால் மஹாராணியைக் கொண்டாடினாலும்,  ஒருவேளை ஆரியர்களின் தலைவர்களான குரு வம்சத் தலைவர்களுக்கு மஹாராணி இப்படி இயற்கையான சுபாவத்துடன் நடந்து கொள்வது பிடிக்காமல் இருக்கலாம். ஏனெனில் அவர்கள், ஆரியர்கள் தங்கள் நடவடிக்கைகள் குறித்தும் சம்பிரதாயங்கள் குறித்தும் பெருமை அடைபவர்கள்.

த்வைபாயனருக்கு இப்போது தான் கொஞ்சம் வெளிச்சம் தெரிகிறாற்போல் இருந்தது. ஆம், நம் தாய் மிக அழகு! பெண்களே பார்த்துப் பொறாமைப்படும் வண்ணம் அழகானவள். அவள் புன்னகை அனைவரையும் அவர்கள் பால் ஈர்க்கும். அவளை நெருங்குபவர்கள் யாராக இருந்தாலும் அவளுடைய மென்மையான அதே சமயம் இயல்பான நடவடிக்கைகளால் கவரப் படுகிறார்கள். மக்களிடம் அதனாலேயே மஹாராணி சத்யவதி மிகப் பிரபலமாகவும் இருந்தாள். ஆகவே வாடிகாவுக்கு அவளைப் பிடிக்காமல் போனதில் ஆச்சரியம் இல்லை. இது நிச்சயமாய் வாடிகாவின் வேலையே தான். மஹாராணி அனைவர் முன்னும் அவர் மேல் காட்டும் அன்பு வாடிகாவுக்குப் பிடிக்கவில்லை. மஹா ராணியிடம் பொறாமை கொண்ட வாடிகா தான் இதைச் செய்திருக்க வேண்டும். இந்த இலைகள் மஹா அதர்வரின் மூலிகைத் தோட்டத்திலிருந்தே எடுக்கப் பட்டிருக்க வேண்டும். ஹூம்!

வாடிகா ஒரு முட்டாள்! தன்னையும் தவறாக நினைத்துத் தம் தாயையும் தவறாக நினைத்து விட்டாளே! நான் என் தாயிடம் இயல்பாகக் காட்டும் பாசத்தைத் தவறாகப் புரிந்து கொண்டதோடு அல்லாமல் தாயையும் என்னைக் காதலிப்பதாகப் புரிந்து கொண்டிருக்கிறாளே! இதை என்னவென்று சொல்வது? யோசிக்க யோசிக்க த்வைபாயனருக்குக் கோபம் வந்தது. வாடிகாவுக்கு இதற்காகத் தக்க தண்டனை தர வேண்டும் என்றே எண்ணினார். பின்னர் அவர் எண்ணம் மாறியது. தனக்குத் தானே சிரித்துக் கொண்டார். வாடிகா யார்? என் மனைவி அல்லவா? என்னை அவள் மிகவும் விரும்புகிறாள். என்னிடம் மாறாத அன்பு செலுத்துகிறாள். அதனால் அன்றோ இத்தகைய மோசமான வேலைக்கு முனைந்து விட்டாள்! அவள்  மனது சமநிலையை இழந்து விட்டது. ஆகவே இதை வெகு கவனமாகக் கையாள வேண்டும். வாடிகாவுக்கு தண்டனை அளிப்பது என் கடமை அல்ல.  அவளிடம் கோபம் கொள்ளவும் கூடாது. பார்க்கப் போனால் இது நம் தவறு தான். நான் முதலிலேயே அவளிடம் மஹாராணி என் தாய், என்னைப் பெற்றெடுத்தவள் என்பதைச் சொல்லி இருக்க வேண்டும். அதைச் சொல்லாமல் விட்டது என் தவறு தான். நல்லவேளையாக, அம்மாவும் கவனமாக இருந்ததால் அந்த மந்திர வட்டத்துக்குள்ளே புகுந்துவிடவில்லை. படுக்கையிலிருந்த இலைகளையும் அகற்றி இருக்கிறாள்.

இல்லை எனில் எப்படி மஹாராணியைக் காப்பாற்றி இருக்க முடியும்! அது மிகக் கடினமான ஒரு விஷயமாகப் போயிருக்கும்! வாடிகாவின் முட்டாள் தனத்தால் மஹாராணி மட்டும் வசியத்தில் அகப்பட்டிருந்தால் அவரைக் காப்பாற்றுவதே கடினம்! ஆனால் வாடிகா தான் இந்த சூனியத்தைச் செய்தாள் என்பதை நான் தெரிந்து கொண்டே என்பதை வாடிகா அறியக் கூடாது. அவளுக்குத் தெரிந்து விட்டால் அவமானத்திலும் துக்கத்திலும் தன்னைத் தானே மாய்த்துக் கொள்வாள். துன்பம் மிகவும் அடைவாள். நான் மட்டும் அவளைச் சூனியம் வைத்திருந்ததற்காக அவளைக் குற்றம் சாட்டினால் ஒருக்கால் ஒத்துக் கொள்ளலாம். அல்லது இல்லை என மறுக்கலாம். எது எப்படி ஆனாலும் மஹாராணியையோ அல்லது அவரையோ மன்னிக்கவே மாட்டாள். எப்படி ஆனாலும் வாடிகாவுக்கு அவள் தான் சூனியம் வைத்தாள் என்பதை நானோ, மஹாராணியோ அறிந்து கொண்டு விட்டோம் என்பது தெரிந்தால்! அவளால் தன்னைத் தானே மன்னிக்கவும் முடியாது. இந்தக் குற்ற உணர்ச்சி அவளைத் துன்பத்தில் ஆழ்த்தும்.

Sunday, July 17, 2016

மஹாராணியின் படுக்கையில் சூனிய மந்திர வட்டம்!

காங்கேயர் ரதத்தில் ஏற ஆயத்தமாக இருந்தார். அப்போது த்வைபாயனர் அவரைச் சற்றே இருக்கச் சொல்லி ஜாடை காட்டினார்.  தன் தகப்பனுக்கு உதவி செய்து கொண்டு இருந்த காங்கேயர் கொஞ்சம் ஆச்சரியத்துடன் த்வைபாயனரைப் பார்த்தார். அவருடைய வேண்டுகோள் மிகவும் பணிவாகவே இருந்தது. ஆகவே ஏதும் சொல்லாமல் சற்று விலகி நின்று கொண்டார். மன்னன் எதிரே வந்தார் த்வைபாயனர். அவர் உடல் விரைப்பாக இருந்தது. மன்னனையே தன் கண்களால் நேருக்கு நேர் பார்த்துக் கொண்டிருந்தார். அந்தப் பார்வையின் மூலம் அவர் ஏதேதோ உயிருள்ள உற்சாகம் நிறைந்த மனோ அலைகளை மன்னன் மேல் செலுத்துவதாக மன்னன் உணர்ந்தான். அவன் உடலில் புதியதொரு சக்தி புகுந்தாற்போல் காணப்பட்டது. த்வைபாயனரும் மன்னனைப் பார்த்து, “மாட்சிமை பொருந்திய மன்னா! நீங்களே உங்கள் ரதத்தைச் செலுத்துங்கள்!” சற்றே அதிகாரத்தொனியில் இருந்தது அவர் குரல்.

“என்னால் இயலாது த்வைபாயனரே! முடியவே முடியாது!”: என்ற வண்ணம் ஓர் நம்பிக்கையற்ற சிரிப்பைக் காட்டினான் மன்னன். “அதெல்லாம் இல்லை! உங்களால் முடியும்!” என்ற வண்ணம் தன் கண்களை மீண்டும் மன்னன் மேல் நாட்டினார் த்வைபாயனர். மன்னனை முழுவதும் தன் வசம் கொண்டு வர முயற்சி செய்து கொண்டிருந்தார். இந்த மனோ வசியத்தின் மூலம் மன்னன் தன் பலத்தை உணர்வான் என்றும் நம்பிக்கை கொண்டிருந்தார். விடாமல் மன்னனைப் பார்த்த வண்ணம், “ஆம், உங்களால் முடியும்! மன்னா, உங்களால் முடியும்!” என்று மீண்டும் மீண்டும் சொன்னார் த்வைபாயனர். த்வைபாயனரின் கண்களோடு மோதிய மன்னன் கண்கள் அதிலிருந்து மீள முடியாமல் தவித்தன. மன்னன் கஷ்டப்பட்டுக் கண்களை விலக்கிக் கொண்டு சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டு தன் ஆதரவற்ற நிலையைச் சுட்டுவது போல் மீண்டும் சிரித்தான். ஆனால் த்வைபாயனர் விடாமல், “ஆம், மன்னா, உங்களால் முடியும்!” என்ற வண்ணம் மன்னன் ரதத்தின் மேல் ஏறுவதற்குத் தானே உதவினார். த்வைபாயனரின் ஸ்பரிசம் மன்னன் மேல் பட்டதுமே தன் உடலிலும் மனதிலும் ஏற்பட்ட மாபெரும் மாற்றத்தை மன்னன் உணர்ந்தான். த்வைபாயனரைப் பார்த்துச் சிரித்த வண்ணம் அவர் உதவியுடன் ரதத்தில் ஏறினான். நடுங்கிய கால்கள் ஸ்திரமாக நின்றன. த்வைபாயனரின் உதவியையும் மறுத்துவிட்டுத் தன் தோள்களை விரித்த வண்ணம் நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு அனைவரும் பார்த்து அதிசயிக்கும் வண்ணம் தானே ரதத்தில் ஏறினான்.

தந்தையைத் தொடர்ந்து அதே ரதத்தில் ஏறப் போன காங்கேயரை மீண்டும் பணிவன்புடன் தடுத்த த்வைபாயனர், “இளவரசே, மன்னர் தானே ரதத்தை ஓட்டுவார்!” என்று பணிவாக அதே சமயம் திடமாகச் சொன்னார். மன்னனும் ஒரு காலத்தில் அதிரதனாக இருந்தவன் தான். நீண்ட நாட்களுக்குப் பின்னர் குதிரைக் கயிறுகளைத் தன் கைகளில் பிடித்தான் மன்னன்.  இடக்கைக்கு ரதத்தின் குதிரைகளின் கயிற்றை மாற்றிக் கொண்ட மன்னன் வலக்கையால் கட்டப்படாத குதிரையின் கயிறுகளைப் பிடித்துக் கொண்டான். அந்தக் கயிறே சாட்டையாகவும் பயன்பட்டது. ஆசாரிய விபூதி மஹாராணியின் பக்கம் திரும்பி, “மஹாராணி, மஹா அதர்வரின் மகள் வாடிகாவின் துணையுடன் நீங்களும் ரதத்தில் ஏறிக் கொள்ளுங்கள்!” என்றார். வாடிகாவுக்கு இந்த நிகழ்வில் பங்கெடுக்கச் சிறிதும் விருப்பமில்லை. ஆனால் பலர் முன்னிலையில் இதை மறுக்கவும் முடியாது. ராஜ குற்றமாகக் கருதப்படும். ஆகவே அரை மனதாகத் தன் ஒரு கையை மஹாராணிக்காகக் கொடுத்தாள். மஹாராணி அவள் நீட்டிய கரத்தைப் பற்றிய வண்ணம் ரதத்தில் ஏறினாள். வாடிகாவின் கன்னத்தில் செல்லமாகத் தட்டிக் கொடுத்துவிட்டு உற்சாகத்துடனும் வேகத்துடனும் ஏறினாள் மஹாராணி சத்யவதி.

வாடிகா அவள் கணவன் அந்த ரதத்தின் அருகேயே நின்ற வண்ணம் மஹாராணி கீழே விழுந்துவிட்டால் உடனடியாக அவளுக்கு உதவ வேண்டும் என்னும் எண்ணத்துடன் காத்திருப்பதைக் கண்டாள். “ஆஹா, எத்தனை பொல்லாத பெண்மணி இவள்!” அவள் மனதுக்குள் என்ன தான் ரகசியமாக இதை நினைத்தாலும்  அவள் மனக்குரல் அவள் காதுகளையே செவிடாக்கிவிடுமோ என்று அஞ்சினாள். “விரைவில் இதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும். நான் விரைந்து வேலை செய்ய வேண்டும்.” என்று தனக்குள்ளேயே சொல்லிக் கொண்டாள். இது எதையும் அறியாத சத்யவதி தன் கணவனுக்கு அருகே கண்களில் உற்சாகமும் வெற்றியும் பிரகாசிக்க மிக்க சந்தோஷத்தோடு நின்று கொண்டாள். பதினேழு பேரிகைகளும் கொட்டி முழக்கின. ரதப் போட்டி ஆரம்பம் ஆயிற்று. குழந்தைகள் குதியாட்டம் போட 68 சிறந்த குதிரைகள் இந்தப் போட்டியில் கலந்து கொண்டு ஓட ஆரம்பித்தன. மக்கள் கூட்டம் ஆர்ப்பரித்தது. அனைவரும் ஒரு ஆவேசத்தோடு இந்தப் போட்டிக்குத் தங்கள் ஆதரவைத் தெரிவித்தனர். மூச்சுக்கூட விடாமல் அனைவரும் இந்தப் போட்டியில் மூழ்கி இருக்க வாடிகா ஒருவரும் அறியாமல் மறைந்தாள்.

ஒரு ரதத்தில் கட்டப்பட்டிருந்த குதிரை ஒன்று கட்டுக்கடங்காமல் போகவே அது ஒரு பக்கம் இழுக்க சாரதி வேறு பக்கம் கொண்டு போக ரதமே கவிழ்ந்தது. சாரதி ரதம் போன வேகத்தில் தூக்கி எறியப்பட்டான். அனைவரும் உணர்ச்சி வசப்பட்டு இந்த விபத்தை நினைத்து வருந்தினர். வேறு இரண்டு ரதங்களை ஓட்டியவர்களோ ஒருவருக்கொருவர் போர் புரியவே ஆரம்பித்து விட்டனர். மிகவும் மோசமாகக் கொலைவெறித் தாக்குதலோடு ஒருவருக்கொருவர் அடித்துக் கொண்டனர். கடித்துக் கொண்டனர். ரதங்கள் கன்னாபின்னாவென்று ஆட்டம் கண்டன. அவற்றை ஓட்டிய பல அரசர்களும் தாங்கள் உயிர் பிழைத்திருப்பதை நினைத்து ஆச்சரியப்பட்டனர். அவர்களுக்கு உதவச் சென்ற ஊழியர்களால் மிகக்கஷ்டப்பட்டே இந்தக் கலகத்தை அடக்க முடிந்தது.

ஆனால் ஷாந்தனுவோ ஒரு காலத்தில் தான் அதிரதியாக இருந்ததை நினைத்தும் இப்போது இயலாமல் போய்விட்டதையும் நினைத்து நினைத்து வருந்தியவன் இன்று புத்துணர்வு பெற்றிருந்தான், அவனுடைய இழந்த உற்சாகம், வலிமை எல்லாம் அவனுக்குத் திரும்பி விட்டது. முன்னை விட ஆக்ரோஷமாக ரதத்தை ஓட்டினான். அவனோடு சேர்ந்து குதிரைகளும் ஒத்துழைத்தன. அதிலும் அந்தக் கட்டப்படாத குதிரை ஷாந்தனுவின் லாயத்திலேயே விலை உயர்ந்த மிகவும் உயர் இனத்தைச் சேர்ந்த அந்தக் குதிரை தான் இப்போது தன் எஜமானனின் கைகளில் இருப்பதை எப்படியோ உணர்ந்து கொண்டது போல வேறு எந்த ரதத்தையுமோ அல்லது குதிரையையுமோ தன்னைத் தாண்டிச் செல்ல அனுமதிக்கவே இல்லை. தன் பிடரி மயிரைச் சிலிர்த்துக் கொண்டது, ஓர் கனைப்புக் கனைத்தது. அது விரைவில் மற்ற மூன்று குதிரைகளின் வேகத்தை எட்டிப் பிடித்து விட்டது, மற்ற ரதங்களைப் பின்னுக்குத் தள்ளி விட்டு மன்னனின் ரதமே முன்னே சென்றது. கடைசியில் மன்னனே ரதப் போட்டியில் வாகை சூடினான். அங்கே அதைப் பார்த்துக் கொண்டிருந்த அனைவரும், “சாது, சாது!” என்று கோஷித்தவண்ணம் கைகளைத் தட்டியும் ஆடிப் பாடியும் ஒருவரை ஒருவர் கட்டி அணைத்துக் கொண்டும் இந்த வெற்றியைக் கொண்டாடினர்.

ரதப் போட்டி முடிவடைந்த பின்னர் தானங்கள் அளிக்கப்பட்டன. புனித அக்னிக்கு ஆஹுதிகள் வேத ஸ்ரோத்திரியர்களால் அளிக்கப்பட்டது. பின்னர் மாபெரும் விருந்து படைக்கப்பட்டது. அனைவரும் ஒருங்கே அமர்ந்து உண்டார்கள். பின்னர் அரசனும், அரசியும் தங்கள் இருப்பிடத்துக்குச் சென்றார்கள். கூடாரத்தை அடைந்த உடனே ராணி ஷாந்தனுவைப் பார்த்து, “பிரபுவே, தாங்கள் இன்று அற்புதமாக ரதம் ஓட்டினீர்கள்!” என்று பாராட்டுகளைத் தெரிவித்தாள். “ஓ, அதற்கான நன்றி எல்லாம் உன் மகனுக்கே போய்ச் சேரவேண்டும், சத்யவதி! அவன் இல்லை எனில் இது எப்படி நடைபெற்றிருக்கும்! எனக்கு இப்போது பத்துப் பனிரண்டு வயது குறைந்துவிட்டது போல் உணர்கிறேன்.” என்றான்.
“ஆம், ஆம், உங்களுக்கும் தான்!” என்று மெல்ல முணுமுணுத்தாள் சத்யவதி! மன்னன் படுக்கைக்குச் செல்லத் தயாரானான். சத்யவதி அவன் படுக்கையைச் சரி செய்து மெத்தையைத் தூசி தட்டி ஒழுங்கு செய்து அவனைப் படுக்கச் செய்து பின்னர் அவனை வணங்கி விடைபெற்று அந்த அறையின் விளக்குகளைத் தணிக்கும் வரை காத்திருந்து பின்னர் அங்கே காவலுக்கு இருந்த மல்லனிடமும் மன்னனின் அந்தரங்க ஊழியனிடமும் மன்னனைக் கவனித்துக் கொள்ளச் சொல்லி உத்தரவிட்ட பின்னர் தான் படுக்கும் பகுதிக்குச் சென்றாள்.

அவளுக்காகத் தயாராய்க் காத்திருந்த சேடிப் பெண்கள் அவள் அணிந்திருந்த ஆபரணங்களையும், தலையில் செய்திருந்த அலங்காரங்களையும் கலைத்தனர். கிரீடத்தை அவளிடமிருந்து வாங்கித் தனியாக வைத்துவிட்டு அவள் அணிந்திருந்த ராணிக்குரிய சம்பிரதாய உடைகளைக் களைய வைத்து இரவு உடையை அணியச் செய்தனர். பின்னர் மற்ற அனைவரையும் படுக்கப் போகச் சொன்ன மஹாராணி தன் அந்தரங்கத் தோழியான தார்வியை மட்டும் அங்கே இருக்கச் செய்தாள். அவள் ராணியின் அறை வாயிலில் படுத்துத் தூங்குவாள். சத்யவதி தன் படுக்கைக்குச் சென்றவள் சட்டென அசையாமல் நின்று எதையோ கவனித்தாள். பின்னர் , “தார்வி, விளக்கை எடுத்துக் கொண்டு வா!” என்று ஆணையிட்டாள். தார்வி விளக்கை எடுத்துக் கொண்டு வந்து படுக்கைக்கு அருகே ராணி நன்கு பார்க்கும்படி வெளிச்சம் தெரியும் வண்ணம் பிடித்துக் கொண்டு நின்றாள். அப்படி மஹாராணியின் கவனத்தைக் கவர்ந்தது ஒரு வட்டம். அந்த வட்டம் படுக்கையின் நட்ட நடுவே வரையப்பட்டிருந்தது. ஏதேதோ பால்பொருட்களைக் கொண்டு வரையப்பட்ட மாதிரி தெரிந்தது. மஹாராணிக்குத் தூக்கி வாரிப் போட்டது. தன் படுக்கையில் இப்படி வட்டம் வரைந்திருப்பவர் யாராக இருக்கும்? இதன் முக்கியத்துவம் என்னவாக இருக்கும்? இந்த வட்டம் ஓர் மந்திர வட்டமாக இருக்குமோ?

ஆகவே தன் படுக்கைக்கே சென்று அதன் விளைவு என்னவாக இருக்கும் என்று பார்க்க விரும்பாத சத்யவதி படுக்கையில் தான் போர்த்திக்கொள்ள வைத்திருந்த கரடித் தோலால் ஆன போர்வையை மட்டும் மெல்லத் தன் பக்கம் இழுத்தாள். அதை நன்கு பிரித்து உதறினாள். ஏதோ ஓர் செடியின் நாலைந்து சின்னஞ்சிறிய இலைகள் அதிலிருந்து விழுந்தன. அதைக் கையில் எடுத்து நன்கு ஆராய்ந்து பார்த்தாள் சத்யவதி. ம்ம்ம்ம், இவை ஏதோ மந்திர மூலிகையின் இலைகளாக இருக்க வேண்டும். ஆம் அப்படித் தான் இருக்க வேண்டும். யாரோ அவளுக்கு சூனியம் வைத்துத் துன்பம் விளைவிக்க விரும்புகிறார்கள். யாராக இருக்க முடியும்? இந்த மந்திர வசியத்தை அவள் மேல் ஏவுவதன் உண்மையான காரணம் தான் என்னவாக இருக்கும்? அன்றைய நாள் முழுவதும் அவள் அனுபவித்த சந்தோஷமெல்லாம் சிறிதும் அவளிடம் இப்போது இல்லை. அனைத்தும் தொலைந்து போயிற்று.

“தார்வி, இன்றைய பகல் பொழுதில் இந்தக் குடிலைப் பாதுகாத்தவர்கள் யார்?”

தார்வி தன் தவறுக்காக வருந்துபவள் போல் காட்சி அளித்தாள், “மஹாராணி, மன்னிக்கவேண்டும். நான் ஊழியர்களை ரதப் போட்டியைப் பார்க்கச் செல்ல அனுமதித்து விட்டேன்.” என்றாள்.

“அப்போது நீ நாள் முழுவதும் இங்கே தான் இருந்தாயா?”

கைகள் நடுங்க அவற்றைக் கூப்பி மஹாராணியிடம் மன்னிப்பை வேண்டினாள் தார்வி. “மன்னிக்கவும் மஹாராணி. மஹாராஜாவே ரதத்தை ஓட்ட மஹாராணியும் அதில் பயணம் செய்யப் போவதை அறிந்ததும் என்னால் அந்த ரதப் போட்டியைப் பார்க்காமல் இருக்க முடியவில்லை!”

“சரி, இந்த மந்திர வட்டம் உனக்குத் தெரிகிறது அல்லவா?”

“மஹாராணி, நான் கரடித் தோல் போர்வையை வெயிலில் காய வைத்திருந்தேன். அதையும் நான் இங்கிருந்து கிளம்பும் முன்னரே போட்டேன்.  அதை நான் தான் உள்ளே கொண்டு வந்து படுக்கையில் விரித்து வைத்தேன். நான் கிளம்புகையில் மந்திர வட்டம் இந்தப் படுக்கையில் இல்லை.”

“சரி, தார்வி, எனக்குப் படுக்கையைக் கீழே விரித்து விடு! நான் இந்த மந்திர வட்டம் வரைந்த படுக்கையில் படுத்துத் தூங்கப் போவதில்லை.” மஹாராணிக்குத் துக்கம் பொங்கியது! அவள் துன்பத்தில் ஆழ்ந்தாள். யாராக இருக்க முடியும் இந்த எதிரி? அவள் ஹஸ்தினாபுரம் வந்ததிலிருந்து இன்று வரையிலும் அனைவரோடும் நட்புப் பாராட்டவே செய்கிறாள். யாரையும் எதிரியாக நினைத்ததில்லை. அனைவர் பேச்சையும் கூடியவரை கேட்டுக் கொள்வாள். அவளுடைய உணர்ச்சிகளை அதிகம் வெளிக்காட்டிக் கொண்டதில்லை என்பதோடு கோபம் அவளை நெருங்கவும் விட்டதில்லை. அவளுக்கு இப்படி எளிதில் தோற்கடிக்க முடியாத, சமாதானம் செய்ய முடியாத எதிரிகள் இருக்கின்றனர் என்பதை அவளால் நம்பவும் முடியவில்லை. மெல்லக் கீழே அமர்ந்து யார் அந்த எதிரி என்பதை யூகம் செய்ய முடியுமா என்று யோசிக்க ஆரம்பித்தாள். அவள் மேல் கோபம் உள்ளவர் யார்? “எனக்கு எதிரிகள் இல்லை. நான் எவரையும் எதிரியாக ஆக்கிக் கொள்ளவே இல்லை. யாரையும் வருந்தச் செய்ததில்லை. யாருக்கும் எப்போதும் துன்பம் கொடுத்ததும் இல்லை. சக்கரவர்த்திக்கு என்னைப் பூரணமாக அர்ப்பணம் செய்து அவருக்கு உண்மையான மனைவியாகவும் நல்லதொரு மஹாராணியாகவுமே இருந்து வருகிறேன்.காங்கேயன் என்னைச் சிறிய தாயார் என்று எண்ணும்படி நடந்து கொள்வதே இல்லை.”

“எனக்கென நியமிக்கப்பட்ட ஊழியர்களையும் சரி, மற்ற அரசாங்க ஊழியர்களையும் சரி கௌரவக் குறைவாக நடத்தியதே இல்லை. அவர்களின் நல்வாழ்வில் அக்கறையுள்ள எஜமானியாகத் தான் இருந்து வருகிறேன். ஹஸ்தினாபுரத்தின் மக்களின் நல்வாழ்வையே விரும்புகிறேன். அப்படி இருக்கையில் இந்த எதிரி யார்? எனக்கு மட்டும் அவன் பெயர் தெரிந்தால் நான் என்ன தவறு செய்திருந்தாலும் மன்னிக்கும்படி வேண்டுவேன்.” என்று எண்ணினாள் மஹாராணி. பின்னர் சற்று தூரத்தில் தூங்காமல் பயத்துடனும் கவலையுடனும் நின்று கொண்டிருந்த தார்வியை அழைத்தாள். அவளிடம், ரகசியமாக, “தார்வி, பால முனி இருக்கும் இடம் தெரியுமல்லவா? அங்கே செல்! அவரிடம் என் மேல் ஏவப்பட்டிருக்கும் சூனியத்தைக் குறித்துச் சொல். இந்த மந்திர மூலிகை இலைகளை அவரிடம் காட்டு! யார் இந்த சூனியத்தை என் மேல் ஏவி இருக்கிறார்கள் என்பதைக் கண்டுபிடிக்கச் சொல்! அவரை நாளை அதிகாலையிலேயே என்னை வந்து பார்க்கச் சொல்லு! இதில் ஏதோ சூதும் ,சதியும் இருக்கிறது என்று எனக்குத் தோன்றுகிறது!” என்றாள்:.

Saturday, July 16, 2016

வாஜ்பேய யக்ஞத்தில் வாடிகா!

வாடிகா தன் கணவன் யாகம் சிறப்பாக நடைபெற வேண்டிச் செய்த ஏற்பாடுகளைக் கண்டு பிரமித்துப் போனதோடு அல்லாமல் தன் மனதையும் கணவன் பால் அதிகம் பறி கொடுத்தாள். நான்கு ஸ்ரோத்திரியர்கள் இந்த யாகத்தில் முக்கியப் பங்கு வகிக்கின்றனர். ஆசாரிய விபூதி அத்வர்யூவாகவும், ஆசாரிய கௌதமர் ஹோதாவாகவும், ஆசாரிய தேவயானர் உத்கதாவாகவும் ஆசாரிய ஷௌனகர் பிரம்மனாகவும் இருந்து இந்த யாகத்தை நடத்தித் தரப் போகின்றனர். அனைவரும் இதற்கான ஏற்பாடுகளைத் திறம்படச் செய்வதில் மும்முரமாகத் தங்களை ஈடுபடுத்திக் கொண்டிருந்தனர். பதினேழு என்னும் எண் மறைபொருளாக இருந்து கொண்டு இந்த யக்ஞத்திற்கான அற்புதமான புனிதத் தன்மையை ஏற்படுத்திக் கொண்டிருந்தது. ஆகவே பதினேழு வேதிகள் (அக்னி குண்டங்களைச் சுற்றிய மேடை) ஏற்படுத்தப்பட்டன. நடுவில் உள்ளது மிகப் பெரிதாக இருந்தது. அது அக்னி தேவனுக்கானது. தலைமை தாங்கி நடத்தும் ஆசாரியர்களால் அங்கே வழிபாடுகள் நடத்தப்படும். மற்றவற்றிற்கும் ஒவ்வொரு வேதிக்கும் ஒவ்வொரு ஆசாரியன் தலைமை தாங்குவார்.

சடங்குகளைச் செய்யும் ஸ்ரோத்திரியர்கள் பதினேழு மந்திரங்களைச் சொல்லவும் பதினேழு ஸ்தோத்திரங்களைச் சொல்லவும் பதினேழு சாஸ்திரங்களைச் செய்யவும் பயிற்சி கொடுக்கப்பட்டிருந்தார்கள். பதினேழு ஆடுகள் சரியான நிறத்திலும் உருவ அமைப்பிலும் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தன. யுபம் எனப்படும் கம்பம் ஒன்று பலி கொடுக்கப்படும் மிருகத்தைக் கட்டிப் போடுவதற்காக ஏற்படுத்தப்பட்டது. இது மஹாராணியாலும் மஹாராஜாவாலும் பயன்படுத்தப்படும். அந்த ஸ்தம்பமும் பதினேழு முழ உயரத்தில் இருந்ததோடு அல்லாமல் பதினேழு துண்டுத் துணிகளால் சுற்றப்பட்டிருந்தது. விடிகாலையில் யாகம் நல்ல நேரத்தில் ஆரம்பிக்கப்பட்டது. மன்னனும் மஹாராணியும் வந்திருந்து சோமன் எனப்படும் ராஜ மூலிகையை வரவேற்றனர். புனிதமான அந்த மூலிகை இமயமலைப் பிராந்தியத்திலிருந்து கொண்டு வரப் பட்டிருந்தது. எட்டு வெள்ளைக் காளைகளால் இழுக்கப்பட்ட மாட்டு வண்டியில் அவற்றின் கொம்புகள் தங்க நிற இலைகளால் அலங்கரிக்கப்பட்டிருக்க வந்து சேர்ந்திருந்தது. இந்த “அரசன்” சோமன் மஹாராஜா ஷாந்தனுவால் வரவேற்கப் பட்டு அவனுடைய பிரதிநிதியான அத்வர்யூவிடம் ஒப்படைக்கப்பட்டது.

அவர் அதை தக்க மந்திர உச்சாடனங்களுடன் ஹோதாவிடம் கொடுத்தார். அதன் பின்னர் அந்த மூலிகைச் செடி நன்கு நசுக்கப்பட்டு அதன் சாறு பதினேழு பாத்திரங்களில் எடுக்கப்பட்டது. மற்ற சில குறிப்பிட்ட மூலிகைகளிலிருந்தும் சாறு எடுக்கப்பட்டு வேறு பதினேழு பாத்திரங்களில் சேகரிக்கப் பட்டது. மஹாராஜாவும் மஹாராணியும் யாகத்தை நடத்துபவர்கள் ஆதலால் இருவருமே பதினேழு தங்கச் சங்கிலிகளை அணிந்திருந்தனர். அதோடு அல்லாமல் நான்கு தலைமை ஆசாரியர்களுக்கும் முறையே பதினேழு சங்கிலிகளும் மற்ற வேதிகளில் இருந்தவர்களுக்கு ஆளுக்கு ஒவ்வொன்றும் கொடுத்தனர். தக்க மந்திரங்களை முறைப்படியான உச்சரிப்போடு ஓதி எல்லா வேதிகளிலும் ஒரே சமயத்தில் அக்னி உருவாக்கப் பட்டது. சோமரசம் பதினேழு பாத்திரங்களிலிருந்து அனைத்துக் கடவுளருக்கும் ஆஹுதியாகக் கொடுக்கப்பட்டது. நூற்றுக் கணக்கான ஸ்ரோத்திரியர்களின் வாயிலிருந்து எழுந்த மந்திர கோஷம் அந்த இடத்தை நிறைத்தது.

இவை எல்லாம் ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்கையில் வாடிகாவோ இது எதையுமே கவனிக்காமல் தன் கணவனையும், மஹாராணியையுமே மாறி மாறிப் பார்த்துக் கொண்டிருந்தாள். த்வைபாயனரோ மிகவும் சந்தோஷத்துடனும் அனைவரையும் ஊக்கப்படுத்தியும் உற்சாகப் படுத்தியும் யாகத்தில் பங்கெடுத்துக் கொண்டிருந்தார். ஆனால் கூட்டம் எல்லாம் அவர் செல்லுமிடமெல்லாம் சென்று கொண்டிருந்தது. அவரைச் சிறிது நேரம் தனிமையில் விடவே இல்லை. குழந்தைகள் அனைவரும் அவர் கொடுக்கப் போகும் உணவை எதிர்பார்த்து அவரைச் சூழ்ந்து கொண்டனர். பெண்களோ தங்களுக்கும் தங்கள் குழந்தைகளுக்கும் ஆசிகளை வேண்டி அவரிடம் வந்தனர். நோயுற்றவர்கள் நோய் தீர்க்கக் கோரி வந்தனர். குனிகருக்கும் அவருடைய ஊழியர்களுக்கும் இந்தக் கூட்டத்திலிருந்து த்வைபாயனரைக் காப்பாற்றுவது பெரும்பாடாக இருந்தது.

வாடிகாவுக்கு முதலில் தன் கணவன் இந்த யாகத்தின் முக்கியப் பொறுப்புக்களிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டது பிடிக்கவே இல்லை. அவரும் இதில் பங்கெடுத்திருக்க வேண்டும் என்றே நினைத்தாள். இந்த யாகம் நடத்துவது குறித்து யோசனை சொன்னதே அவர் தானே! ஆகவே அவரே அத்வர்யூவாக இருந்திருக்க வேண்டும். ஆனால் அவர் வயதில் இளைஞர் என்பதால் அனைவரும் ஒத்துக்கொள்ளும் வண்ணம் ஓர் முதியவரைத் தேர்ந்தெடுத்து விட்டார். இதன் மூலம் அவர் இளையவராக இருந்தாலும் உலக அளவில் பாராட்டுகளைப் பெற்று விட்டார். அதிலும் அவர் பராசர முனிவரின் மகன் என்னும் ஒரே காரணத்தால் அல்ல! அவரே ஓர் தக்க ரிஷியாகவும், முனிவராகவும் இருப்பதாலேயே! இதை நினைத்து அவள் மிகவும் பெருமையும் கர்வமும் அடைந்தாள்.இந்த யாகம் நடக்கும் பதினேழு நாட்களும் கணவன், மனைவி ஆகியோர் பிரிந்திருக்க வேண்டும். ஆகவே அவளுக்குத் தன் கணவனைச் சந்திக்க வாய்ப்புக் கிடைக்காது. தினம் இரவு வெகு நேரம் சென்று அவர் தூங்க வரும் அந்தச் சில நொடிகளிலேயே அவரைக் கொஞ்சம் பார்த்துக் கொள்ளலாம். அதுவும் அவர் மிகவும் களைப்பாக இருப்பார்.

வாடிகா எவ்வளவு தான் நினைத்துப் பார்த்தாலும் அவர் மேல் புகார் சொல்லுமளவுக்கு எதுவும் இல்லை. அவரைச் சந்திக்கும்போதெல்லாம் அவர் முகம் மலரும். கண்கள் அவளைப் பார்த்துச் சிரிக்கும். ஆனாலும் அந்த மஹாராணி தன் கணவனிடம் எப்படி நடந்து கொள்கிறாள் என்பதையும் அவளால் கண்காணிக்காமல் இருக்க முடியவில்லை! அப்படிப் பார்க்கையில் எல்லாம் இருவருக்கும் இடையில் ஏதோ மறைபொருள் இருக்கிறது! அது அவர்கள் இருவருக்கு மட்டுமே தெரியும், புரியும் என்னும்படியான பார்வையாக இருக்கும். இது வாடிகாவின் மனதை வருத்தியது. மஹாராணிக்கும் அவள் கணவனுக்கும் இடையில் என்ன ரகசியம்? இந்த மஹாராணி மிகப் பொல்லாதவளாக இருக்கிறாள். அவள் கண்களை வாடிகா சந்திக்கும்போதெல்லாம் அந்த மஹாராணி சிரிக்கிறாளே! என்ன அர்த்தம் அதற்கு? வாடிகாவே அவளுடைய சொந்தச் சொத்து என்னும்படியாக அல்லவோ நினைக்கிறாள் போல! அந்தச் சிரிப்பில் உண்மை இல்லை. பாசாங்குத் தனம் நிறைந்திருக்கிறது. இதில் ஏதோ மோசடி இருக்கிறது. அல்லது அந்த மஹாராணி நினைக்கலாம்; “பார்த்தாயா, பெண்ணே! உன் கணவன் என் வசம்! அவன் அன்பெல்லாம் எனக்கே எனக்கு!” என்னும் எண்ணமும் இருக்கலாம். வாடிகா ஓர் முடிவுக்கு வந்துவிட்டாள்.

வாடிகாவும் உபநயனம் முடிந்து பிரமசரியம் அனுஷ்டிக்கையில் மிகக் கடுமையான நியம, நிஷ்டைகளைச் சந்தித்திருக்கிறாள். அது மிகவும் முக்கியமானதொரு கட்டுப்பாடு ஆகும். சிறிதும் பாலுணர்வு என்பதே அவள் மனதில் தோன்றியதில்லை. கடுமையான கட்டுப்பாடுகளைக் கடைப்பிடித்திருக்கிறாள். அது எல்லாம் த்வைபாயனரைச் சந்திக்கும் வரை தான். அவரைச் சந்தித்ததுமே அவள் மனம் கட்டுடைத்துக் கொண்டு வெளியே பாய்ந்து விட்டது. அன்பெனும் ஊற்று பிரவாகமெடுத்து அவளையும் த்வைபாயனரையும் மாபெரும் வெள்ளத்தில் மூழ்கடித்துத் திணற வைத்து விட்டது. ஆனால் இப்போதோ! எங்கிருந்தோ ஓர் மஹாராணி வந்து அவள் அன்பான கணவனை கண்ணுக்குக் கண்ணான கணவனைத் தன் பால் திரும்ப யத்தனிக்கிறாள்! அவள் பால் இருந்த அவள் கணவனின் இதயத்தைத் தன் பால் திருப்புகிறாள். வாடிகாவின் மனதில் பொறாமை கொழுந்து விட்டு எரிந்தது. இந்த வயதிலும் இவ்வளவு கவர்ச்சியுடன் காணப்படும் இந்த் அமஹாராணியை என் இல்லற வாழ்விலிருந்து, வாழ்க்கைப் பாதையிலிருந்து முழுவதுமாக அகற்ற வேண்டும். அவள் மனம் அவளிடம் சொன்னது.

யாகத்தின் பதினாறாம் நாள் யாகசாலை கூட்டத்தால் நிரம்பி வழிந்தது. சூரியன் சுட்டெரிப்பதைக் கூடச் சட்டை செய்யாமல் மக்கள் கூட்டம் திரண்டிருந்தது. ஆயிரக்கணக்கான மக்கள் கூடி இருந்து யாகத்தின் முக்கியக் கட்டம் நெருங்குவதைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். புனித ஸ்தம்பத்தில் ஒரு சக்கரம் பதினேழு ஆரங்களோடு அங்கே கட்டப்பட்டிருந்தது. அந்த ஸ்தம்பத்தின் ஒரு பக்கம் பதினேழு நபர்கள் அமர்ந்து கொண்டு பதினேழு முறை பேரிகைகளைக் கொட்டி முழக்கினார்கள்.. இது ஒவ்வொரு நாளும் நடந்தது, ரதப் போட்டி நடக்கும் பாதை பதினேழு அம்புகள் விழும் தூரத்தில் அமைந்திருந்தது. ஆரியர்களுக்கு ரதப் போட்டியும் குதிரைகளும் மிகவும் தெய்வீகமான ஒன்று. குதிரை என்பது வேதங்களில் மிகவும் போற்றப்படும் தெய்விகமான ததிக்ரவஸ் என்னும் குதிரையின் மூலம் வந்த வம்சாவளி என்றே நினைத்தார்கள். அது வாழ்க்கைக்கு ஓர் பொருளைக் கொடுத்ததோடு வலிமையையும், உற்சாகத்தையும் கொடுத்தது. ஒரு போர் எனில் நான்கு குதிரைகள் பூட்டிய ரதத்தை ஓட்டி வந்து போர் புரிபவன் கட்டாயம் வெற்றி அடைவான் என்னும் நம்பிக்கையும் இருந்தது. ரதங்களில் இருந்து போர் புரிந்தால் அழிவு நிச்சயம் என்னும் எண்ணமும் இருந்தது. போரில்லா நாட்களில் ஒருவருக்கொருவர் ரதப் போட்டிகள் நடத்துவார்கள். அதில் உற்சாகம் அடைவார்கள்.

க்ஷத்திரியர்களுக்குக் குதிரைகளை வளர்ப்பதிலும் போஷிப்பதிலும் முக்கியக் கடமையாக இருந்து வந்தது. ஒவ்வொரு அரசனிடமும் மாபெரும் குதிரை லாயம் ஒன்று கட்டாயமாக இருக்கும். க்ஷத்திரியர்களுக்குள்ளே ரதம் ஓட்டியில் திறமைசாலிகளாக இருப்பவர்களைக் கீழ்க்கண்டவாறு அழைப்பார்கள். ரதம் ஓட்டுபவன் சாரதி அல்லது ரதி என்றும், மிக நன்றாய் ஓட்டுபவன் மஹாரதி என்றும் அதைவிடச் சிறந்தவன் அதிரதி என்றும் அழைக்கப்படுவார்கள். இந்த யாகத்தில் முடிவில் நடைபெறப் போகும் ரதப் போட்டிக்கெனப் பதினேழு ரதங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தன. அவற்றில் பதினாறு ரதங்களை நான்கு சிறந்த ஆண் குதிரைகள் ஒவ்வொரு ரதத்தையும் இழுக்கும். ஒவ்வொன்றுக்கும் நான்கு என்று குதிரைகள் தெரிவு செய்யப்பட்டிருந்தன. பதினேழாவது ரதத்தில் மஹாராணியும் மஹாராஜாவும் பயணிக்கப் போவதால் அதற்கு மூன்று ஆண் குதிரைகளே தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தன. அவற்றை ரதத்தின் நுகத்தடியில் பிணைத்திருந்தனர். அந்த ரதத்தின் நான்காவது குதிரையைக் கட்டவில்லை. அப்படியே விட்டிருந்தனர். அதைப் பார்க்கவே கொஞ்சம் பயமாக இருந்தது. மற்றக் குதிரைகளை விட அது எல்லாவற்றிலும் சிறந்ததாக இருந்தது. ரத சாரதியும் அதைக் கண்காணிக்க நியமிக்கப்பட்டிருந்தான். ரதம் ஓடும்போது கட்டப்படாத இந்தக் குதிரையையும் சேர்த்து அவன் ஓட்டி வரவேண்டும், அதற்கென இரு லகான்கள் தனியே இருந்தன. இந்த நான்காம் குதிரையை மிகவும் தெய்விக சக்தி உள்ளதாக நம்பிக்கை இருந்தது.

ஷாந்தனுவின் உடல்நிலையை உத்தேசித்து அனைவரும் இளவரசர் காங்கேயர் அந்த ரதத்தை ஓட்டட்டும் என்று முடிவு செய்திருந்தனர். மஹா அதர்வரும் த்வைபாயனரும் இது எல்லாவற்றையும் பார்த்து ரசித்துக் கொண்டும் மனதில் மகிழ்ச்சிபொங்கவும் அந்த ரதப் போட்டி துவங்கும் இடத்தருகே நின்று கொண்டிருந்தனர். அங்கே மற்ற தலைமை ஆசாரியர்களும் நின்று கொண்டிருக்க மன்னன் மெல்ல மெல்லத் தன் நடுங்கும் கால்களுடன் அந்த இடத்தை அடைந்தான். காங்கேயன் தன் தகப்பன் ரதத்தில் ஏறி அமர்வதற்கு உதவி செய்தார். மஹா அதர்வரும் த்வைபாயனரும் அப்போது ஒருவருக்கொருவர் பொருள் பொதிந்த பார்வையைப் பார்த்துக் கொண்டனர். பின்னர் மஹா அதர்வர் கண்களால் சம்மதம் சொல்ல த்வைபாயனர் காங்கேயன் பக்கம் திரும்பினார்.