Tuesday, July 19, 2016

வாடிகாவுக்குக் கிடைத்த தண்டனை!

தன்னைத் தானே அவள் மன்னித்துக்கொள்ள மாட்டாள். என்ன செய்யலாம்? த்வைபாயனர் மீண்டும் மீண்டும் யோசித்தார். அவர் ஓர் கஷ்டமான சூழ்நிலையில் சிக்கிக் கொண்டிருக்கிறார். மிகவும் தர்மசங்கடமான நிலைமை! அவர் மஹாராணியிடம் இந்த சூனியத்தை வைத்தது யார் என்று சொல்லக் கூட முடியாது. வைத்தது வாடிகாதான் என்பதை மஹாராணி அறியக் கூடாது! அவர் சொல்லிவிட்டால் மஹாராணிக்கு வாடிகாவிடம் மனத்தாங்கல் ஏற்பட்டு விடும். அல்லது வாடிகாவைக் கீழான ஒரு பெண்ணாக நினைப்பாள்; அப்படியே பார்க்கவும் பார்க்கலாம். ம்ஹூம், எக்காரணம் கொண்டும் வாடிகாவின் நிலையை கௌரவத்தைச் சிதைக்கக் கூடாது. வாடிகா என் மனைவி. அவளுக்கு என்னுடைய பாதுகாப்புத் தேவை! அவள் ஏதோ முட்டாள் தனமாக சிறுபிள்ளைத் தனமாக செய்து விட்ட குற்றத்துக்காக நான் அவளைத் தண்டிக்கவோ, புண்படுத்தவோ அல்லது அவள் கௌரவத்தைச் சிதைக்கும் வேலையையோ மேற்கொள்ளக் கூடாது. என் மனைவியை ஒருக்காலும் விட்டுக் கொடுக்கக் கூடாது! பின்னர் என்னதான் செய்யலாம்?

ம்ம்ம்ம், இந்தப் பதினேழு நாட்களாகத் தன்னையும் மஹாராணியையும் மாறி மாறிப் பார்த்த வண்ணம் எப்படி எல்லாம் எண்ணமிட்டிருப்பாள் வாடிகா? பாவம்! அவள் மனம் பொறாமைத் தீயில் வெந்து பொசுங்கிக் கொண்டிருந்திருக்கும். இதெல்லாம் எதனால்? அவர் மேல் அவள் வைத்திருக்கும் மாறா அன்புக்காக. அந்த அன்பைப் பங்கு போட்டுக் கொள்ள ஒருத்தி வந்துவிட்டாளோ என்னும் எண்ணத்தினாலே! அவளுக்கு உண்மை தெரியாதே! நான் வாடிகாவை விட்டுக் கொடுக்கவே கூடாது. அவளைக் கீழான ஓர் நிலையில் அனைவரும் பார்க்கும்படி வைக்கக் கூடாது. மஹாராணிக்கும் வாடிகாவுக்கும் இடையே உணர்வு பூர்வமானதொரு மாசற்ற அன்பு உருவாக வேண்டும் என்றே நான் நினைக்கிறேன். அதற்கு பங்கம் வரக் கூடாது! ஓர் முடிவுக்கு வந்த த்வைபாயனர் எழுந்து கொண்டு வாடிகா படுத்திருந்த அறைக்கதவைத் தட்டினார். வாடிகா உடனேயே குரல் கொடுத்தாள். “பிரபுவே, தாங்களா அழைத்தது? என்னால் என்ன ஆகவேண்டும்?”

“வாடிகா, ஜாபாலியின் மகளே, கொஞ்சம் எழுந்து வா! ஒரு அசாதாரணமான நிகழ்வு நடந்து விட்டது. நான் அதற்கு உன்னுடைய ஆலோசனையைக் கோருகிறேன்.”

வாடிகா எழுந்து கொண்டு தன் புடைவையைத் திருத்திக் கொண்டு, தலையைக் கோதிக் கொண்டு கதவைத் திறந்தாள். அவளுக்கு உள்ளூர ஒரு பயம் இருந்தது. அதனால் அவள் உடல் நடுங்கிக் கொண்டிருந்தது. அதிலும் அவள் தான் இந்த சூனிய வசியத்தை மஹாராணியின் படுக்கையிலும் த்வைபாயனரின் படுக்கையிலும் வைத்தாள் என்பது மட்டும் அவருக்குத் தெரிந்து விட்டால்? ஒருக்காலும் அவளை த்வைபாயனர் மன்னிக்கவே மாட்டார்!  ஆனால் த்வைபாயனர் சாவதானமாக அவளைப் பார்த்து, மிகவும் அன்பு தொனிக்கும் குரலில், “ஏன் இப்படி வேர்த்து விறுவிறுத்துப் போய் நடுங்கிக் கொண்டு நிற்கிறாய்? வேலைகள் அதிகமோ? ஏன் நின்று கொண்டிருக்கிறாய்? இப்படி உட்கார்ந்து கொள்!” என்று அன்புடன் உபசரித்தார். வாடிகா அவர் எதிரே அமர்ந்தாள். எந்த நேரம் இடியைப் போல் அவர் கேள்வி இறங்குமோ என எதிர்பார்த்த வண்ணம் அமர்ந்திருந்தவளுக்கு ஏமாற்றமே மேலிட்டது.  த்வைபாயனரோ தொடர்ந்து சகஜமாகவே பேசினார். “ஒரு விசித்திரமான சம்பவம் நடந்து விட்டது, வாடிகா! அதை உனக்குக் கட்டாயமாய்த் தெரிவிக்க வேண்டும் என்றே உன்னை அழைத்தேன். இந்த விஷயத்தின் மர்மத்தை அவிழ்க்க உன்னுடைய உதவி எனக்குத் தேவை!” என்றார் நிதானமாக!

வாடிகா பயந்து கொண்டிருந்த நேரம் வந்துவிட்டதை உணர்ந்தாள். “என்ன அது, பிரபுவே!” என்று தீனமான குரலில் கேட்டாள். “யாரோ, எவரோ, தெரியவில்லை. மஹாராணியின் படுக்கையில் மந்திர வளையத்தைப் பால் பொருட்களால் வரைந்துவிட்டுப் பின்னர் அவள் படுக்கையிலும் இந்த மந்திர மூலிகை பதாவைப் போட்டிருக்கிறார்கள். இதோ அந்த இலைகள்!” என்று எடுத்துக் காட்டினார். அவர் தான் முடிவெடுத்தபடியே தன் படுக்கையில் தான் கண்டெடுத்த மந்திர மூலிகைகள் குறித்து வாயே திறக்கவில்லை. பின்னர் அது சொந்த விஷயமாக ஆகிவிடும் என்பதும் ஒரு காரணமாக இருந்தது. வாடிகாவுக்கோ குழப்பமாக இருந்தது. அவர் முகத்தை நிமிர்ந்து பார்க்கவே முடியவில்லை அவளால். அவருக்குக் கோபம் வரும் என்பதை அவள் அறிந்திருந்தாள். ஒரேயடியாக அவளை அவர் வெறுக்கவும் செய்யலாம். ஆனால் அதன் பின்னர் த்வைபாயனர் ரகசியம் பேசுவது போன்ற குரலில் பேசினார். “ நான் இந்த மந்திர மூலிகைகளை நன்கறிவேன். என் தந்தையோடு நடைப்பயணம் மேற்கொண்டிருந்த சமயங்களில் தந்தை அவற்றைக் காட்டிச் சொல்லி விளக்கம் கொடுத்திருக்கிறார். ஆனால் இவை உன் தந்தையின் மூலிகைத் தோட்டத்திலிருந்து தான் வந்திருக்க வேண்டும்..”

“நாம் விரைவில் இந்த மோசடியை நிகழ்த்தியவர் யார் என்பதைக் கண்டு பிடிப்போம். இப்போது நாம் செய்ய வேண்டியது எல்லாம் மஹாராணிக்கு எவ்விதமான ஹானியும் ஏற்படாமல் அவளைப் பாதுகாப்பது ஒன்றே! நீ இந்த இலைகளை எடுத்துச் சென்று உன் தந்தையிடம் காட்டு. ஒருவேளை இந்த வேலையைச் செய்தது யார் என்பதை அவர் அறிந்திருக்கலாம். அதன் மூலம் நமக்கு ஏதேனும் ஓர் உதவி கிட்டலாம்.” என்றார். தன் நடுங்கும் கரங்களால் அந்த இலைகளை வாங்கிக் கொண்டாள் வாடிகா. அவளால் தன்னைக் கட்டுப்படுத்திக்கொள்ள முடியவில்லை. எனினும் ஒரு வார்த்தை கூட வாயிலிருந்து வர மறுத்தது. த்வைபாயனரைப் பார்த்து அந்தச் சூனியத்தை வைத்தது தான் தான் என்பதையும் அதையும் அந்த மஹாராணிக்கு த்வைபாயனர் மேல் அளவிடமுடியாக் காதல் இருப்பதாலேயே செய்ததாகவும் சொல்லி விட வேண்டும் என்றும் த்வைபாயனரிடம் கத்தவேண்டும் என்றும் அவள் மனம் துடித்தது. மிகவும் சிரமப்பட்டுத் தன்னை அடக்கிக் கொண்டு மௌனம் காத்தாள். ஆனால் அவள் தான் அதைச் செய்தாள் என்பதையும் பொறாமை வசப்பட்டு செய்தாள் என்பதையும் அவளால் தன் கணவனிடம் சொல்ல முடியவில்லை. ஏனெனில் அவள் மேல் அவ்வளவு நம்பிக்கை வைத்திருந்தார் த்வைபாயனர். ஆகவே அவளுக்குள் குற்ற உணர்ச்சி குத்தி எடுக்க ஆரம்பித்தது.

“ஜாபாலியின் மகளே, வாடிகா, நீ தான் எனக்கு இந்த விஷயத்தில் உதவி செய்ய வேண்டும். இந்த மாபெரும் சதியைச் செய்தவர் யாரெனக் கண்டுபிடிக்க உதவ வேண்டும். ஏனெனில் இதே ஆள் இப்போது தன் சூனியம் பலிக்காமல் போனதினால் வேறு விதத்தில் மஹாராணியைத் துன்புறுத்தலாம். ஆகவே நீ ஒரு வேலை செய்ய வேண்டும். இனிமேல் நீ தான் மஹாராணியைக் கவனித்துக் கொள்ள வேண்டும். மற்ற எவரையும் அருகில் விடாமல் இந்த மாதிரியான யது வித்தைகளிலிருந்து மஹாராணியைக் காப்பாற்ற உன்னால் தான் முடியும்! “ என்றார் த்வைபாயனர்.

மீண்டும் ஓங்கிக் குரலெடுத்துக் கத்த வேண்டும்போல் தோன்றியது வாடிகாவுக்கு. “நான் இதைச் செய்ய மாட்டேன். அந்தப் பெண்மணியைப் பார்க்கக் கூட நான் விரும்பவில்லை!” என்று கத்தி விடலாமா என நினைத்தாள். ஆனால் மிகவும் அன்பாகவும், அன்பைத் தூண்டி விடும் விதமாகவும் பேசிய த்வைபாயனரின் அணுகுமுறை அம்மாதிரி நடக்காமல் அவளைத் தடுத்தது. அவள் மேல் அவர் கொண்டிருந்த நம்பிக்கை அவளைத் துடிக்க வைத்தது. ஆகவே அவள் வேறு வழியின்றித் தலையைக் குனிந்த வண்ணம், “நான் முயல்கிறேன்.” என்று தனக்குத் தானே பேசிக் கொள்வது போல் சொன்னாள். ஆனால் த்வைபாயனர் விடவில்லை! “இல்லை, வாடிகா! அது மட்டும் போதாது! நாளைக் காலை நாம் இருவருமே சென்று மஹாராணியைப் பார்ப்போம். அவர்களிடம் நீ நாள் முழுவதும் இரவும் பகலும் அவருடன் இருந்து அவரைப் பாதுகாப்பாய் என்று சொல்லி விடலாம்!” என்றார்.

“என்ன, தினம் தினமுமா? இரவும் பகலுமா? அங்கே இருந்து நான் என்ன செய்வது?” வெடித்தாள் வாடிகா! “ஆஹா, திரும்பத் திரும்பக் கேட்கிறாயே! வாடிகா, வாடிகா! நீ அங்கே இருந்து இம்மாதிரி சூனியம், மந்திரம், தந்திரங்களிலிருந்து மஹாராணியைக் காப்பாற்ற வேண்டும். இந்த யது வித்தை தெரிந்தவர்கள் எவரேனும் மஹாராணியிடம் தம் வித்தையைக் காட்டாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அதோடு உனக்குத் தான் இந்த மாதிரி சூனியங்களை எல்லாம் முற்றிலும் எடுத்து சுத்தமாக ஆக்கும் அதர்வ மந்திரங்கள் எல்லாம் தெரியுமே! ஆகவே உன்னுடைய மந்திர வித்தையின் மூலம் மஹாராணியை உன்னால் காப்பாற்ற முடியும்!” என்றார். இப்போது வாடிகாவால் தன்னை அடக்கிக் கொள்ளவே முடியவில்லை.

“உங்களுக்கு மஹாராணியின் மேல் ஏன் இவ்வளவு அக்கறை, பிரபுவே!அதோடு சக்கரவர்த்தி தான் உடல் நலம் குன்றி இருக்கிறார். மஹாராணி நன்றாகத் தான் இருக்கிறார்.” என்றாள். அதற்கு த்வைபாயனர், “வாடிகா, ஒருவனுக்குக் கல்யாணம் ஆகிவிட்டது என்றால் அதற்காக அவன் தாயை அவன் கவனிக்காமல் ஒதுக்க முடியாது. அதே போல் ஒரு மனைவி தன் கணவனுக்கும் அவன் தாய்க்கும் நடுவில் தலையிடக் கூடாது! இதை நான் சொல்லவில்லை, ஜாபாலியின் மகளே! என் தந்தை அடிக்கடி சொல்வார்!” என்றார். வாடிகாவுக்குத் தன் காதுகளை நம்பவே முடியவில்லை! “என்ன? தாயா? மஹாராணி உங்கள் தாயா? அது எப்படி முடியும்? அப்படி எல்லாம் இருக்காது!” என்றாள்.

“அவள் என் தாய் தான் வாடிகா! அவள் என்னைப் பெற்றெடுத்த என் தாய். என் தந்தை பராசர முனிவருக்கும் அவளுக்கும் பிறந்த பிள்ளை தான் நான். எனக்குப் பாலூட்டித் தாலாட்டிச் சீராட்டி என்னை ஏழு வயது வரை வளர்த்தவள் அவளே! அப்போதெல்லாம் அவள் எனக்காகவே வாழ்ந்து வந்தாள். என் முன்னேற்றமே அவள் வாழ்க்கையின் குறிக்கோளாக இருந்தது. ஆகவே என்னுடைய நன்மைக்காகவே என் ஏழாம் வயதில் அவள் என்னைப் பிரியச் சம்மதித்து என் தந்தையுடன் என்னை அனுப்பி வைத்தாள். இது எல்லாம் சக்கரவர்த்தி அவளைப் பார்த்து அவளை மணக்கும் முன்னர் நடந்தவை!” என்றார்.

“அப்போது அவள் என்னவாக இருந்தாள்?” வாடிகா கேட்டாள்.

“அவள் ஓர் மீனவப் பெண்மணி!” த்வைபாயனர் புன்னகையுடன் கூறினார். தன்னைக் குறித்தும், தான் பிறந்த குலத்தைக் குறித்தும் தன் முன்னோர்களான பிருகு ஆங்கிரஸ் ஆகியோர் குறித்தும் மிகவும் பெருமை அடைந்திருந்த வாடிகாவுக்கு இதைக் கேட்டதும் தலை சுற்றிக் கீழே விழுந்துவிடுவோம் போல் இருந்தது. இப்படிப் பட்ட குலத்தில் பிறந்த தான் என்ன காரியம் செய்ய இருந்தோம்! குலத்து முன்னோர்களுக்கே அபகீர்த்தி அல்லவோ உண்டாகி இருக்கும்! மயங்கி விடுவாள் போல் காணப்பட்ட வாடிகா தன்னைச் சமாளித்துக் கொள்ளப் பாடுபட்டாள். த்வைபாயனர் மேலே தொடர்ந்தார். “அதன் பின்னர் அவளைப் பிரிந்த பின்னர் கிட்டத்தட்ட பதினைந்து வருடங்களுக்கு அவளை நான் பார்க்கவே இல்லை. எங்கே இருக்கிறாள் என்பதும் தெரியவில்லை. தற்செயலாகத் தான் தெரிந்து கொண்டேன். மஹா அதர்வர் வாய் விட்டுச் சொல்லாமல் இருந்த அவருடைய விருப்பத்தைத் தெரிந்து கொண்ட நான் அதைப் பூர்த்தி செய்வதற்காக ஹஸ்தினாபுரம் வந்தடைந்தேன். அப்போது தான் அவள் அங்கே சக்கரவர்த்தினியாக இருப்பது தெரிந்தது. தன் கணவனை ஒரு பைத்தியத்தைப் போலப் பார்த்த வாடிகா மீண்டும் தன் தலை சுற்றுவதைக் கண்டு இரு கைகளாலும் இறுக்கிப் பிடித்துக் கொண்டாள்.

3 comments:

வல்லிசிம்ஹன் said...

அழகாகச் செல்கிறது.சிக்கல் தீரட்டூம்.

ஸ்ரீராம். said...

.

பித்தனின் வாக்கு said...

ஆஹா, அதுக்குள்ள கிளைமாக்ஸ் வந்துருச்சு. இதுவே டி.வீ சீரியலா இருந்தா ஒரு பத்து எபிசோடு ஓட்டி இருப்பாங்க. அருமை.